சனி, 6 ஆகஸ்ட், 2022

எளிமை டாக்டர் + மற்றும் நான் படிச்ச கதை (JC)

 பெரம்பலுார்:பெரம்பலுார் மாவட்டத்தைச் சேர்ந்த இன்ஜினியர் ஒருவர், பெற்றோரை இழந்த ஏழை பிள்ளைகளை தத்தெடுத்து, படிக்க வைத்து வருகிறார்.

பெரம்பலுார் மாவட்டம், அரும்பாவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கலைநாதன், 61; சிவில் இன்ஜினியர்.பெரம்பலுார் மாவட்டம் முழுதும் அரசு பள்ளிகளுக்கு சென்று, பெற்றோரை இழந்த மற்றும் ஆதரவற்ற ஏழை மாணவ - மாணவியர் கல்வி பயில தேவையான கல்விக் கட்டணம், பாட புத்தகம், நோட்டு, பேனா, புத்தகப்பை மற்றும் உணவு, உடை போன்றவற்றை வழங்கி வருகிறார்.

'உன்னை அறிந்தால்' என்ற மாணவர் கல்வி மேம்பாட்டு மையம் வாயிலாக, தன்னார்வலர்களிடம் நிதியுதவி பெற்றும், தன் வருமானத்தில் ஒரு பகுதியை செலவழித்தும் அனைத்து வித உதவிகளையும் செய்து தருகிறார். இதே போல், 15 ஆண்டுகளாக, 50க்கும் மேற்பட்டோரை தத்தெடுத்து படிக்க வைத்துள்ளார்.இவ்வாறு படித்த மாணவர்கள், ஐந்து பேர் வெளிநாட்டிலும், 15க்கும் மேற்பட்டோர் பல்வேறு மாநிலங்களிலும் பல்வேறு துறைகளில் நல்ல சம்பளத்தில் பணியாற்றி வருகின்றனர்.

அவர்களும், உன்னை அறிந்தால் கல்வி மேம்பாட்டு மையத்திற்கு, நிதியுதவி வழங்கி வருகின்றனர். இவரால் தத்தெடுத்து வளர்க்கப்பட்டவர்கள், கலைநாதனை 'அப்பா' என்றே அழைக்கின்றனர். இவர் வளர்த்து, வழிகாட்டிய மாணவ - மாணவியர் பலர், 'யூ ஷீடு' என்ற அமைப்பாக ஒன்றிணைந்து, ஆதரவற்றவர்களை ஊக்கப்படுத்தி, நம்பிக்கையூட்டி வெற்றியாளர்களாக உருவாக்கி வருகின்றனர்.

பெற்ற பிள்ளைகளையே படிக்க வைக்க மிகவும் சிரமப்படும் இந்த காலத்தில், தன்னலம் கருதாமல் பெற்றோரை இழந்த மற்றும் ஆதரவற்ற ஏழை குழந்தைகளை கண்டறிந்து தேவையான உதவிகளை செய்து வருகிறார் இன்ஜினியர் கலைநாதன்.இவரை 96778 52443 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொண்டு பாராட்டலாம்.
===========================================================================================================================================

சிறு வயது முதலே நம்மால் முடியாதது எதுவுமே இருக்கக்கூடாது என்றுகடுமையாக உழைக்கக்கூடியவர் தான் ஒரு ஊனமுற்றவன் என்று யாரும் அனுதாபம் காட்டக்கூடாது தனது உழைப்பிற்கு மதிப்பு கொடுத்தால் போதும் என்று சொல்பவர்.
மூன்று வயதாகும் போது இளம்பிள்ளை வாதம் காரணமாக கால்கள் முடங்கிப்போனது ஆனால் அதையே காரணமாக வைத்து முடங்கிப்போகாமல் நண்பர்கள் உதவியுடன்இயற்கையை அனுபவித்து வருகிறார் கணேசன்.
கடந்த வாரம் பழைய குற்றாலத்தில் குளிப்பதற்கு கூட்டமான கூட்டம், அந்த கூட்டத்தில் குளிப்பதற்காக கால்கள் முடங்கிப்போன ஒரு இளைஞரை இன்னோரு இளைஞர்முதுகில் சுமந்து கொண்டு வந்தார்,ஆனால் கூட்ட நெரிசலைப் பார்த்து இதில் எப்படி குளிப்பது என தயங்கி நின்று கொண்டிருந்தார்.

இந்த காட்சியைப் பார்த்ததும், உடனடியாக அங்கு இருந்த போலீசாரிடம் நாம் உதவி கேட்க, அவரும் கூட்டத்தை ஒதுக்கி ஊனமுற்றவரை ஆசைதீர குளிக்கவைத்தார் அவரதுகுளியல் ஆனந்தத்தைப் பார்த்த பொதுமக்களும் அவரை தொந்திரவு செய்யாமல் தள்ளிநின்று குளித்தனர்.
குளித்து முடித்து சந்தோஷமாக வந்தவரை விசாரித்தோம்
திருச்செந்துார் பக்கம் உள்ள உடன்குடிதான் கணேசனுக்கு சொந்த ஊர் பூ வியாபாரம் செய்கிறார் சிறு வயது முதலே நம்மால் முடியாதது எதுவுமே இருக்கக்கூடாது என்றுகடுமையாக உழைக்கக்கூடியவர் தான் ஒரு ஊனமுற்றவன் என்று யாரும் அனுதாபம் காட்டக்கூடாது தனது உழைப்பிற்கு மதிப்பு கொடுத்தால் போதும் என்று சொல்பவர்.
இவருக்கு இயற்கை மீது அலாதி பிரியம் அதிலும் சீசன் நேரத்தில் குற்றாலத்தில் உள்ள அருவிகளில் குளிப்பது என்றால் அப்படியொரு ஆன;ந்தம் ஒவ்வொரு சீசனில் இரண்டுமூன்று முறை குற்றாலம் வந்து விடுவார்.
இவருக்கு உள்ளூரில் நண்பர்கள் பெரிய பலம் கணேசன் ஆசைப்பட்டால் அதை நிறைவேற்றிவைக்க உடனே தயராகிவிடுவர், கணேசனால் நடந்து போகமுடியாத இடத்திற்குமுதுகில் சுமந்து செல்வர் அன்று அவரை முதுகில் சுமந்துவந்தவர் அவரது நண்பர் இசக்கியாவார்.
இயற்கை குற்றாலத்தில் மட்டும்தான் அருவியாக விழுந்து ஆனந்தத்தை அள்ளி அள்ளிதருகிறது இதனை நாம் மட்டுமல்ல வரக்கூடிய தலைமுறையும்அனுபவிக்கவேண்டும் அதற்கேற்ப குற்றாலத்தின் சுற்றுச்சுழலை மக்கள் பாதுகாக்க வேண்டும் என்பதே தன் ஆசை என்றார்.
-எல்.முருகராஜ்.
========================================================================================================================================



===========================================================================================================================================



=============================================================================================================================================================================================

 

நான் படிச்ச கதை 

ஜெயகுமார் சந்திரசேகரன்

 **************************************

என்ஜினீயரும் சித்தனும்

கு. அழகிரிசாமி

 

முன்னுரை

தலைப்பில் காணப்படும் சித்தன் மனிதன் இல்லை. மனதில் உறையும் சித்தம். குறிக்கோளை அடைய எழும் அடங்காத விருப்பம்கனவு காணுங்கள் என்றார் அப்துல் கலாம். அதே போல் இந்த சித்தன் என்ஜினீயர் ஆவதே குறிக்கோள் என்று கனவு காண வைக்கிறான். அந்த கனவு எப்படி நனவானது என்பதே கதை.

என்ஜினீயரிங் கல்லூரிகள் ஒரு சில நகரங்களில் மாத்திரம் இருந்த காலம். சாதாரண கலைக் கல்லூரியிலேயே இடம் கிடைப்பது கடினம். அதை விடக் கடினம் என்ஜினீயரிங் கல்லூரிகளில் இடம் கிடைப்பது. அப்படிப்பட்ட காலத்தில் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்தபள்ளி இறுதி தேர்வு இருமுறை எழுதி பாஸ் ஆனவன் என்ஜினீயர் ஆன கதை.

 முழுக் கதையும் தரப்பட்டுள்ளது. கதை  சுருக்கம் வேண்டுமென்றால் இந்த கலரில் உள்ள வாக்கியங்களைப் படித்தால் போதும். கதை மாந்தர்கள் இருவரே. ஒருவர் கதை சொல்ல மற்றவர் கேட்பது. நேர் கோட்டில் செல்வது.

 எஞ்சினியரும் சித்தனும்

சார், கங்கிராஜுலேஷன்ஸ், நீங்க ரிட்டைர்டு ஆயிட்டதா சொன்னாங்கபாலுசாமி அரசு மருத்துவ மனையில் என்னைப் பார்த்ததும் புன்னகை மலர இப்படி ஆரம்பித்தார் பேச்சை என்னிடம். நான் அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்றதை உள் வாங்கிக் கொள்வதை இன்னும் ஒத்திப் போடுவதாய்போன மாதம் சார், ரிட்டைர்டு ஆனேன்என்றேன். போன மாதமானாலென்ன, போன தினமாலென்ன. மனம் அவ்வளவு வேகமாகவா மாறுதலுக்குத் தயாராகிறது. பாலுசாமி நான் பணி செய்த துறையிலேயே எஞ்சினியராய்ப் பணி செய்து பத்து வருடங்களுக்கு முன்னாலேயே ஓய்வு பெற்றவர். அவரைப் போலவே நானும் இப்போது ஒரு ஓய்வு பெற்ற ஆசாமி என்பதில் அவருக்கு ஒரு வேளை திருப்தியோ என்று எனக்கு ஒரு ஐயம். “சார், வாங்க உங்க ரிட்டைர்மெண்ட் ஞாபகமா ஒரு காபி சாப்பிடலாம்என்று பாலுசாமி தொடர்ந்தார். என் ஒப்புதலை அவரே என் சார்பாகச் சொல்வது போல்சார், சரவணாவுக்குப் போலாமாஎன்று சொல்லவும் நானும் அவரும் மெல்ல அண்ணா நகர் சாலையில் சரவண பவன் ஓட்டலை நோக்கி நடக்கத் தொடங்கினோம்.

நடந்து போய்க் கொண்டிருக்கும் போதே, பாலுசாமியின் கொஞ்சம் கொஞ்சமாகக் கால மணலில், தான் நடந்து வந்த காலடித் தடயங்கள் வழி, பின் தொடர்ந்து போய்க் கொண்டிருந்தது. “சார், நான் எப்படி எஞ்சினியர் ஆனேன்னு தெரியுமாஎன்று அவர் சரவணபவன் ஓட்டலுக்குள் நுழையும் போது சொன்ன போது புரிந்தது எனக்கு. இருவரும் மின்விசிறிக்கு நேராகக் கீழிருக்கும் இருக்கைகளைப் பார்த்து அமர்ந்து கொண்டோம்.

சார், நான் எஞ்சினியர் ஆனதே என் ஸ்கூல் வாத்தியார் தான் காரணம். அவரு திடீர்னு ஒரு நாள் வகுப்பில நான் இனி மேல் உங்க வாத்தியாரில்ல, வேற வேலக்கிப் போறேன்னார்,

நானு என்னா வேலக்கி போறீங்க சார்னுகேட்டேன்.

அவர் சொன்னார்: ‘எஞ்சினியர் வேலக்கி

எனக்குப் புரியில. “எஞ்சினியர் வேலன்னு என்ன வேல சார்

வாத்தியார் சொன்னார்: “வாத்தியார் வேலயிலக் காட்டிலும் எஞ்சினியர் வேலயில சம்பளம் அதிகம்

எனக்குப் புரிஞ்சதெல்லாம் எஞ்சினியர்னா, எஞ்சினியர் வேலயில சம்பளம் அதிகம்னு தான். நானும் எஞ்சினியராக முடிவு செஞ்சேன் அப்போஎன்று கதையை எடுத்தவுடனே களை கட்டுமாறு ஆரம்பித்தார். காத்துக் கொண்டிருக்கும் ஓட்டல் பையனிடம் இரண்டு காபி ஆர்டர் பண்ணி விட்டு சார் போரடிக்கிறேனாஎன்று கேட்டுக் கொண்டே கதையைத் தொடரலானார். ஆரம்பத்தில் இருந்த அசுவாராசியம் கொஞ்சம் கொஞ்சமாக என்னிடமிருந்து விடை பெற்றுக் கொண்டிருந்தது.

அந்த வருஷத்தில எஸ்.எஸ்.எல்.சி யில பெயிலாயிட்டே.ன். ஆனா என் வாத்தியார் மாதிரி நானும் எஞ்சினியராகணுமுனு நெனப்பு மட்டும் போகல. இந்தக் கட்டத்தில் பாலுசாமி ஆட்கொண்டது போல குரலில் உணர்ச்சி கூடிப் பேசினார். அவரது கரு மேனி மினுமினுத்தது. கண்களில் காந்தம் ஏறியது. சித்தன் கோயில்ல போயி உட்கார்ந்திட்டேன். சித்தனைப் பாத்தேன். சித்தன் என்னப் பாத்தான். அவன் கல் யானையையே கரும்பு தின்ன வச்சவன். சித்தன் இருக்கும் போது சித்தம் ஏன் கலங்குகிறாய் என்று சித்தன் என் கிட்ட சொல்றாப் போல இருந்திச்சி. மறுபடியும் அதே வகுப்பில சேர்ந்து படிக்கிறதா முடிவு செஞ்சேன்என்று பாலுசாமி கடந்த காலத்தையே கட்டி இழுத்துக் காண்பிப்பது போல என்னைப் பார்த்தார். இது வரைக்கும் எனக்குத் தெரியாத அவரின் ஆளுமையை அவர் இப்போது எனக்கு வெளிப்படுத்திய விதம் எனக்குப் பிடித்திருந்தது.

எங்க ஸ்கூல் கெட்மாஸ்டர் ரொம்ப பொல்லாதவர்.” அவரு மனசு வைக்கனுமே. அந்த வருஷ அட்மிஷன் நாளனக்கி அவர் ரூம் முன்னாடி ஒரே கூட்டம். நான் அவர் கண்ணுல படுறாப் போல காத்துக்கிட்டே இருந்தேன். பியூன் கிட்டப் போய்சார்தான் அவர வந்து என்னைப் பாக்க சொன்னார்னு ஒரு பொய் சொன்னேன் என்று பாலுசாமி அவர் சொன்ன பொய்க்கு என் ஒப்புதலை எதிர்பார்ப்பது போல் என்னைப் பார்த்தார்.பியூன்கிட்ட பேசிக்கிட்ட இருந்த என்னப் பாத்திட்டு என்ன உள்ள விடுமாறு கெட்மாஸ்ட்டர் சொல்லவும் உள்ள போனேன். “ஏண்டா, நீ தான் பெயிலாயிட்டேயே. ஏன் பழையபடி வந்து உயிரெடுக்கிறேஎன்று கெட்மாஸ்டர் சொன்னதும் தான் தாமதம், நான்சார் இன்னொரு தரம் அதே வகுப்பில படிக்கனும்னு ஆச சார்னு சொன்னதும் அவருக்கு சுர்ர்ன்னு கோபம் வந்திருச்சு. “பெயிலான முகரக்கட்டக்கி இன்னொரு தரம் படிக்கனுமோ, போடான்னு விரட்டவும், நான் சார், நான் எஞ்சினியராகனும்’’னேன். அதைக் கேட்டதும் நாற்காலியில் உட்கார்ந்திருந்த அவர் நின்றிருந்த என்னை கணுக்காலிலிருந்து உச்சந்தலை வரை ஏற இறங்கப் பார்த்தார். பார்த்து விட்டுபோடா, சேர்ந்து படின்னு அட்மிஷன் போட்டுக் கொடுத்தார்”. “ஏற இறங்க என்னயா பார்த்தாரு? என் சித்தனைப் பார்த்தாரு என்று அவர் சொல்லும் போது அவர் வார்த்தைகள் உண்மையே அன்றி, எதையும் கண்டு கொள்ளாது நகரும் காலத்தையும் ஆட்கொண்டது போல் தெறித்தன. ஓட்டல் பையன் இரண்டு குவளைகளில் காபி கொண்டு வைக்கவும் அவர் கதை தடைப்பட்டது.

காபி ஒரு மடக்கு அவர் தொண்டையில் இறங்கியது. அது அவர் கதையைத் தொடர உற்சாகப்படுத்தியது.எஸ்.எஸ்.எல்.சி பாஸ் ஆயிட்டேன். காலேஜில சேர்ந்து படிக்கனும்னு எங்க அப்பாகிட்ட கேட்டேன். அவர் என்ன சொன்னார் தெரியுமா என்று ஒரு புதிர் போட்டார். “வேணாம்னு சொல்லிட்டாரா, ஒங்க அப்பாஎன்று நான் வழக்கமாய்க் கேட்பேன் என்பதை அவர் எதிர்பார்த்திருக்க வேண்டும். “அப்படிச் சொல்லியிருந்தாப் பரவாயில்லயே. “ஏண்டா, நம்மெல்லாம் காலேஜ்ல சேர்ந்து படிக்கிற ஜாதியாடா?” ன்னு கேட்டாரு. நான் காலேஜ்ல் சேர்ந்து படிப்பேன்னு ஒத்தக் கால்லே நின்னேன். அக்கம் பக்கத்துக்காரங்க பையன் பட்டணம் பாக்க ஆசப்படுறான். காலேஜ்ல சேர்த்து விடுங்க. இவன் எங்க படிக்கப் போறான். பெயிலாட்டு ஊர் வந்து சேரப் போறான்என்று என் அப்பாகிட்ட சொல்லி சமாதானப்படுத்தினார்கள். அவரும் ஒரு வகையா கடைசியில் ஒத்துக் கொண்ட போது காலேஜ்ல சேர இன்னக்கின்னா நாளைக்கி கடைசி நாள். அப்ளிகேஷனில் ஜாதி சர்டிபிகேட் வாங்கிட்டு கிராமத்திலிருந்து திருவண்ணாமலை போயி, அங்கிருந்து மெட்ராஸுக்கு காலேஜ்ல கொண்டு போயி மறு நாளக்கி குடுக்கனும். முடியிற காரியமா? எங்க ஊரு பெரிய மனுஷன் ஒருத்தர் ஞாபகம் வந்துச்சு. அவர் தனக்கு வர்ற லெட்டர் எல்லாம் என் கிட்ட கொடுத்து படிக்கச் சொல்வார். அப்பப்ப அவருக்கு லெட்டரும் எழுதிக் குடுப்பேன். அவர் அந்தரங்கங்கள் கொஞ்சம் எனக்குத் தெரியும். நேரா அவர் கிட்ட போனேன். விஷயத்தைச் சொன்னதும் ஏண்டா, ஒரு நாள் முன்னாடி வந்திருக்கக் கூடாதா. தாசில்தார் ஒருத்தர் தெரியும். அவர் கிட்ட பேசுறேன் என்று தாசில்தாருக்கு போன் செய்தார். தாசில்தார் ஆபிஸ் விட்டு வெளியே செல்லும் சமயம். தாசில்தாரிடம் நமக்குத் தெரிஞ்ச பையன். காலேஜ்ல சேர்ந்து படிக்கனும்னு ஆசப்படுறான். ஜாதி சர்டிபிகேட் வேணும். நாளைக்கி கடசி நாள். பையன அனுப்பி வைக்கிறேன்என்றதும் தாசில்தாரும்வெளியே டூட்டி இருக்கு. பதினஞ்சு நிமிஷத்தில வரச் சொல்லுங்கஎன்றார். நான் தாசில்தார் ஆபிஸிக்கு தபதபன்னு ஓடுனேன். தாசில்தார் பார்த்து சர்டிபிகேட் வாங்கினதும் மறுநாள் பஸ் பிடிச்சு மெட்ராஸ் நியூ காலேஜ்ல கொண்டு போய் கொடுத்திட்டேன்.

காலேஜ்ல நாங்க படிக்கவா செஞ்சோம் என்று அடுத்த பீடிகை போட்டார் பாலுசாமி. “காபி ஆறிடும். குடிங்கஎன்று நான் அவரை நினைவு படுத்தினேன். “நான் இராயப் பேட்டையில ஆஸ்டலில் தான் தங்கியிருந்தேன். என்னோட ரெண்டு மூனு ஃபிரண்ட்ஸ். பீச் ரோட்டில தான் எங்க வாழ்க்கைஎன்று நிறுத்தினார். கதையைக் கேட்கும் ஆவல் நிழல் போல் நீண்டது எனக்கு.பீச் ரோடு நெடுக நாங்க பிரிச்சுகிட்டோம். அந்தந்தப் பிரிவுகளில் வந்து போற பொண்ணுகள நாங்க ஃபாலோ பண்ணுவோம். இது எங்களுக்குள்ள ஒரு ஒப்பந்தம்.” என்று சொல்லிவிட்டு இப்படியிருந்தா எப்படி உருப்பட்டிருப்போம்னு பாருங்க என ஒரு சுய விமர்சனத்தையும் இணைத்தார்.

காலேஜ் பைனல் பரீட்சை. தேறுவோமான்னு சந்தேகம். மறுநாள் கணக்குப் பரீட்சை. என் ஃபிரண்டு கிட்டடே. இன்னக்கி நான் ஒரு பொண்ண ஃபாலோ பண்ண போறேன். என்னோட கூட துணைக்கி வாஎன்றேன். அவனோபோடா. பயமா இருக்கு நாளைக்கி பரிட்சையில பாஸ் பண்ணுவோமான்னுஎன்று பயந்தான். அவன் கணக்கில் வீக். எனக்கு கணக்கு நல்லா வரும்.  நான் அவன் கிட்டடே. என்னோட ஒரு மணி நேரம் வந்தா நான் உனக்கு ரெண்டு மணி நேரம் கணக்கு சொல்லிக் கொடுக்கிறேன் நாளைக்கி பரீட்சைக்குஎன்றதும் என்னோட கூடப் புறப்பட்டான். நானும் அவனும் அந்த பொண்ண ஃபாலோ பண்ணிக்கிட்டே போணோம். கடசியில் அந்தப் பொண்ணு மயிலாப்பூர் கோயிலோட குருக்களோட பொண்ணுன்னு கண்டுபிடிச்சோம்என்று தனது இளமைக் கால கண்டுபிடிப்பை பாலுசாமி சொல்லும் போது அந்தத் தேடுதல் இப்போது பேதைமையாய் இருந்தாலும் அதில் ஒரு தீரச்செயல் தரும் மகிழ்ச்சி இருந்ததை அவர் இன்னும் மறக்கவில்லை என்பது போல் இருந்தது.

அந்த குரூப்ல நான் ஒருத்தன் தான் பாஸ் பண்ணினேன். அதுவும் தேர்டு கிளாஸ்ல. சப்ஜெக்ட்ஸ்ல ஃபர்ஸ்ட் கிளாஸ் மார்க் வாங்கினாலும் இங்கிலீஸ் கால வாரி விட்டிருச்சுஊர் வந்து சேர்ந்தேன். நான் பாஸ் பண்ணுவேன்னு யாரும் எதிர்பார்க்கல. எஞ்சினியர் ஆகனும்னு ஆச மட்டும் விடல. ஆனா தேர்டு கிளாஸ வச்சுகிட்டு எப்படி எஞ்சினியர் படிப்பில் சேர்வது. அப்பாவிடம் பழையபடி தொணதொணக்க ஆரம்பிச்சேன் எஞ்சினியர் ஆகனும்னு. எங்க அப்பா எப்படியோ பி.யு.சி யில தப்பித் தவறி தேர்டு கிளாஸ்ல பாஸ் பண்ணிட்டான். எஞ்சினியர் படிப்பில சேர்ந்தாலும் ஒரு வருஷம் படிப்பான். பெயிலாயிட்டு ஊர் வந்து சேர்ந்துருவான் என்று தனது பழைய எண்ணத்தில் நான் எஞ்சினியர் படிப்புக்கு அப்ளிகேஷன் போடுவதற்கு சம்மதித்தார்.

இண்டர் வியூக்கு மெட்ராஸுக்குப் போகணும் என்று சொல்லி நிறுத்தி விட்டு ஆறிப் போன காபியின் மிச்சத்தை ஒரே மடக்கில் குடித்தார். என் முகத்தைப் பார்த்துபோரடிக்கிறானா என்றார். நானோஒரு பெரிய போராட்டம் தான் ஒங்க வாழ்க்கைஎன்று சொன்னதும் அவர்எல்லாம் அந்த சித்தன் பாத்துகிட்டான்என்று கதையைத் தொடர்ந்தார். எங்க ஊரில அப்பா ஃபிரண்டு ஒருத்தரோ காருல மெட்ராஸுக்குப் போனாரு. அவரோட எங்க அப்பா கோத்து விட்டாரு. அவர் காருல மெட்ராஸுக்கு வரந் தொட்டும் தொண தொணன்னு பேசிக்கிட்டே வந்தார். சும்மா பேசிட்டு வந்தாலும் பராவயில்ல. ‘ஏண்டா நீயெல்லாம் எஞ்சினியராயிட முடியுமா? பேசாம ஒரு வேலக்கிப் போயிடு. ஒங்க அப்பாவுக்கும் ஒத்தாசையா இருக்கும். ஒனக்கு மெட்ராஸுல ஒரு வேலக்கி ஏற்பாடு செய்றேன்என்று வழியெல்லாம் ஒரு பாட்டு பாடிக் கொண்டே வந்தார். அவரோட பசங்க சரியாப் படிக்கலன்னு பின்னே தான் எனக்கு தெரிய ந்துச்சு. மெட்ராஸுல ஒரு லாட்ஜுல நானும் அவரும் தங்குனோம். மறு நாள் காத்தால இண்டர்வியூ.

இண்டர்வியூ போர்ட்ல என்ன கேட்பாங்களோ. தேர்டு கிளாஸ வச்சுக்கிட்டு தேற முடியுமான்னு உள்ளுக்குள்ளேயே சந்தேகம். என்னய கூப்பிட்டாங்க. மொதல கேட்ட கேள்வியே பயமாப் போச்சு. ‘தேர்டு கிளாஸ வாங்கிட்டு எந்த நம்பிக்கையில எஞ்சினியர் சீட்டு கிடைக்கும்னு இண்டர் வியூக்கு வந்தஎன்று கேட்டார் முதலில் கேள்வி கேட்டவர். விடல நான். “மொத்த மார்க்ல தான் சார் தேர்டு கிளாஸ். மேத்ஸ், ஃபிஸிக்ஸ், கெமிஸ்ட்ரி மார்க் பாருங்க சார். ஃபர்ஸ்ட் கிளாஸ் மார்க்என்றேன். கேள்வி கேட்டவர்அப்படின்னா இந்த சப்ஜெக்ட்ஸ்லா கேள்வி கேட்டா பதில் சொல்வயாஎன்று மடக்கினார். எனக்கு உள்ளூர பயம். கணக்கில அவர் கேட்ட கேள்விக்குப் பதில் எனக்குத் தெரியல. “இந்தக் கணக்கெல்லாம் எங்களுக்கு நடத்தல சார்என்று ஒரு அடி அடிச்சேன். “தேறுவோமா”- உள்ளுக்குள்ள குடைச்சல். அடுத்த கேள்வி கேட்டவர் ஸ்ட்ரவுஜர் எக்ஸ்சேஞ் வேலை செய்யும் விதம் பற்றிக் கேட்டார். சொல்லி விட்டு பாலுசாமி என்னைப் பார்த்த கண்கள் அவர் இண்டர்வியூ செல்லும் போது இப்படித்தான் விரிந்திருக்குமோ என்று ஊகம் செய்ய வைப்பது போல் இருந்தது. “சார் அவர் கேட்டது எனக்குத் தெரிஞ்சதாப் போச்சு. என்ன வேடிக்கையின்னா. லாட்ஜுல முத ராத்திரியில இண்டர்வியூக்கு கொஞ்சம் படிக்கலாம்னு பக்கங்களப் பொரட்டுற போது ஸ்ட்ரவுஜர் எக்ஸ்சேஞ்ர் வேலை செய்யும் விதம் பத்தி இருந்த பக்கங்களப் படிச்சுட்டுத் தூங்கிட்டேன். அதுவே கேள்வியாய் வந்ததும் மட மட வென்று பதில் சொல்லவும் கேள்வி கேட்டவர்க்குத் திருப்தியாகி விட்டது.

இண்டர்வியூ முடியிற சமயம். “சார் நான் எஞ்சினியர் ஆகிறது தான் என் லட்சியம்என்றேன். இண்டர்வியூ கமிட்டி சேர்மன்அப்படியான்னு கணுக்காலிலிருந்து உச்சந்தலை வரை என்னை ஏற இறங்கப் பார்த்தாரு. “என்னையா பார்த்தார். அந்தச் சித்தனைப் பார்த்தார்என்று சொல்லி விட்டு பாலுசாமி ஒரு விநாடி அசைவற்று சமாதியில் இருப்பவர் போலக் கண்களை மூடி இருந்தார். கண்களைப் பின்னர் திறந்து போ. ஒனக்கு சீட்டு கிடச்சிருச்சுஎன்று நான் எழுந்த போது என் காதில் சேர்மன் சொன்னது என் சித்தன் என் கிட்ட சொன்னாப் போல இருந்துச்சு. என்று அவர் முடிக்கும் போது தான் கவனித்தேன், காபி கொடுத்த சர்வர்காபிய குடிக்க வந்தாங்களா. இல்ல அரட்ட அடிக்க வந்தாங்களான்னு கேட்பது போல எங்களைப் பார்ப்பது தெரிந்தது.

சர்வரை நான் கூப்பிட்டேன். “பாலுசாமி சார். இன்னொரு காபி சாப்பிடலாம்என்றதும் தலையசைத்தார். சர்வர் சந்தோஷமாய்ச் சென்று காபி கொண்டு வந்தான். அவருக்குக் காபி கொடுக்கும் போது அவரை ஏற இறங்கப் பார்த்தான். சார். உங்கள எங்கயோ பாத்தாப்புல இருக்குஎன்றான். பாலுசாமி சிரித்துக் கொண்டே தலையசைத்தார். சர்வருக்கு சித்தன் தலையசைப்பது போல் தெரிந்ததா? காபி குடித்து முடிந்ததும் சர்வர் வாசல் வரை வந்தான். பாலுசாமியும் நானும் ஓட்டல் வாசலில் நின்று பேசாமல் மாறி மாறிப் போய்க் கொண்டிருக்கும் சாலைக் காட்சிகளைப் பார்த்துக் கொண்டிருந்தோம். ஏற இறங்க பாலுசாமியைப் பார்த்தேன் நான். எனக்கு என்னைப் போல் பத்து ஆண்டுகளுக்கு முன்னால் ஓய்வு பெற்ற ஆனால் இன்னும் சித்தம் உறுதியான அதேபாலுசாமிதான். சித்தன் தான்.

என்னுரை

சனிக்கிழமை பாசிட்டிவ் செய்திகளுக்கு இணையாக இது  ஒரு பாசிட்டிவ் சிறுகதை எனலாம் அல்லவா?

 சித்தம், சித்தி என்பது பல அர்த்தங்களை உள்ளடக்கியது. விதி, இலக்கு, சாதிக்க முடியாததை  சாதிப்பது, கடவுள் அனுக்கிரஹம் என்று பலவகையான பொருள் கூறலாம். இக்கதையில் பாலுசாமி என்ஜினீயர் ஆகவேண்டி முயற்சி செய்தது இலக்கு. ஆனால் அந்த இலக்கை அடைய கடவுள் என்ற சித்தனும் உதவி செய்தார். இந்த இரண்டு சித்தங்களும் ஒன்று சேர்ந்து பாலுசாமியை இயக்கின. அவ்வியக்கத்தையே சித்தன் என்று ஆசிரியர் குறிப்பிடுகிறார்.

பெயில் ஆக்கியதும் அவனே. படிப்படியாக முன்னேற்றியதும் அவனே. சிவம் போக்கு சித்தம் போக்கு என்பார்களே அதுவே இது.

இன்டர்வியூவில் ஸ்ட்ரவுஜர் எக்ஸ்சேஞ் பற்றி கேட்டது, அதைப் பற்றி முதல் நாள் லாட்ஜில் தங்கியிருக்கும்போது படித்தது போன்ற சில நிகழ்வுகள் எப்படி நடந்தது என்று வியக்க வைக்கின்றன. ஒரு வேளை அதுவும் சித்தன் செயல் தானோ!

சர்வர்சார். உங்கள எங்கயோ பாத்தாப்புல இருக்குஎன்றான். பாலுசாமி சிரித்துக் கொண்டே தலையசைத்தார் என்று ஆசிரியர் ஒரு புதிரை எழுப்பி உள்ளார்.

//மறுநாள் கணக்குப் பரீட்சை. என் ஃபிரண்டு கிட்டடே. இன்னக்கி நான் ஒரு பொண்ண ஃபாலோ பண்ண போறேன். என்னோட கூட துணைக்கி வாஎன்றேன். அவனோபோடா. பயமா இருக்கு நாளைக்கி பரிட்சையில பாஸ் பண்ணுவோமான்னுஎன்று பயந்தான். அவன் கணக்கில் வீக். எனக்கு கணக்கு நல்லா வரும். நானும் அவனும் அந்த பொண்ண ஃபாலோ பண்ணிக்கிட்டே போணோம்.//

இந்த பிரெண்ட்தான் சர்வர் என்று ஊகிக்க வைக்கிறார். இது சரியோ தப்போ தெரியாது. ஆயினும் பொருந்துகிறது.

ஆசிரியர் பற்றிய குறிப்பு 


கு. அழகிரிசாமி (1923 - 1970) கி ரா வின் இடைசெவல் கிராமத்தைச் சார்ந்தவர். சிறுகதை, கட்டுரை, புதினங்கள், நாடகங்கள், மேடை நாடகங்கள், கவிதைகள், கீர்த்தனைகள், மொழிபெயர்ப்புகள் என்று பல துறைகளில் சாதனை புரிந்துள்ளார்மலேசியாவில், கு. . பரம்பரை என அடக்கமாகக் கூறிக்கொள்ளும் பல எழுத்தாளர்கள் இவருடைய பாணியில் தோன்றி இன்றும் கதை படைத்து வருகின்றனர்.

இவர் எழுத்தாளர் கி. ராஜநாராயணின் இளமைக் கால நண்பர். 1970 இல், இவரது அன்பளிப்பு என்னும் சிறுகதைத் தொகுப்பிற்கு சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது. ஆனால் அவர் அதை நேரில் பெறுவதற்கு முன்பே இறந்து விட்டார்.. அன்பளிப்பு எஸ்ராவின் தேர்ந்தெடுத்த  நூறு சிறந்த சிறுகதைகளில் ஒன்று.

 நன்றி விக்கி

20 கருத்துகள்:

  1. தவறாக நினைக்காதீர்கள். அவர் எழுதிய கதையில் தேவையான வரி தேவையில்லாத வரி என்று பிரிக்க நமக்கென்ன உரிமை? அது அவர் செதுக்கிய சிலை. அப்படியே இருக்கட்டுமே?
    அருமையான கதை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //முழுக் கதையும் தரப்பட்டுள்ளது. கதை  சுருக்கம் வேண்டுமென்றால் இந்த கலரில் உள்ள வாக்கியங்களைப் படித்தால் போதும். //

      தேவை, தேவை அல்லாதவை என்று பிரிக்கவில்லை. விரிவான கதை, சுருக்கமான கதை என்ற முறையில் கதை தரப்பட்டுள்ளது. படிக்க பொறுமை இல்லாதவர்களுக்காக இரண்டு வண்ணங்களில் கதை அச்சிடப்பட்டுள்ளது. சுருக்கமான கதையை ஆசிரியரின் எழுத்துக்களாலேயே சுட்டிக் காட்டப்பட்டிருக்கின்றன. இதுவும் ஒரு உத்தியே.  அவ்வளவே. கருத்துக்களுக்கு நன்றி. 

      Jayakumar

      நீக்கு
  2. அரும்பாவூர் கலைநாதனை போற்றுவோம். வாழ்க அவரது தொண்டு.

    பதிலளிநீக்கு
  3. அனைவருக்கும் காலை/மாலை.மதியம் வணக்கம். நல்வரவு. வாழ்த்துகள். பிரார்த்தனைகள். அனைவர் வாழ்விலும் மன அமைதியும் ஆரோக்கியமும் மேலோங்கி நிற்கப் பிரார்த்திக்கிறோம்.

    பதிலளிநீக்கு
  4. கர்நாடகா மருத்துவர் தவிர்த்து மற்றச்செய்திகள் ஏற்கெனவே படிச்சேன். :) அனைவருக்கும் பாராட்டுகள். கு.அழகிரிசாமியின் கதைகள் படிச்சிருந்தாலும் இந்தக் கதை படிச்சேனா தெரியலை. கதையை இனித் தான் படிக்கணும். படிச்சுட்டு வரேன்.

    பதிலளிநீக்கு
  5. கதையைப் படிச்சேன். முன்னால் படிக்காத கதை தான். எல்லாம் சரி. சென்னையில் அண்ணாநகர் ஏற்பட்டதே அங்கே எக்ஸ்போ வந்தப்புறமா அறுபதுகளின் கடைசியில் தான். சரி, அப்போ கு.அழகிரிசாமி இருந்திருப்பார் என்றாலும் சரவணபவன் எப்படி? சரவணபவன் எண்பதுகளில் தான் ஆரம்பிச்ச நினைவு. மற்றபடி கு.அழகிரிசாமியின் மற்றக் கதைகளைப் படிச்சால் இந்தக் கதை ஓகே ரகம் தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. https://puthu.thinnai.com/%e0%ae%8e%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/


      https://www.sirukathaigal.com/tag/%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF/

      எஞ்சினியரும் சித்தனும்
      கதையாசிரியர்: கு.அழகர்சாமி
      கதைத்தொகுப்பு: சமுகநீதி
      கதைப்பதிவு: May 15, 2012
      பார்வையிட்டோர்: 10,189


      கதை sirukathaigal.com இல் இருந்து எடுக்கப்பட்டது.

      ஒருவேளை இதுவும் சித்தன் செயலோ, 1981 இல் வரவிருக்கும் சரவணபவனை 1970 க்கு முன்னரே கற்பனை செய்திருப்பார்???


      Jayakumar

      நீக்கு
  6. தத்துவ விளக்கங்களையும் படிச்சேன். எல்லோருக்கும் இது புரியுமா?

    பதிலளிநீக்கு
  7. இனிய காலைப் பொழுது..

    அன்பின் வணக்கங்களுடன்

    வாழ்க வையகம்
    வாழ்க வளமுடன்..

    பதிலளிநீக்கு
  8. பெரம்பலூர் பொறியாளர் திரு.கலையரசன்
    பெற்றோரை இழந்த மற்றும் ஆதரவற்ற ஏழை மாணவ - மாணவியர் கல்வி பயில தேவையான கல்விக் கட்டணம், பாட புத்தகம், நோட்டு, பேனா, புத்தகப்பை மற்றும் உணவு, உடை போன்றவற்றை வழங்கி வருகிறார்.

    இவர்களைப் போன்றோர் இப்படியிருக்க - பால் பாக்கெட்ல அளவு குறைவா பால் நிரப்புதாம் எந்திரம்... காலக் கொடுமை..

    நல்லவர்களுக்கு என்றும் காலம் உண்டு..

    பதிலளிநீக்கு
  9. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  10. செய்திகள் எல்லாம் மனித நேயத்தை சொல்லும் அருமையான செய்திகள்.
    அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  11. கதை பகிர்வு நன்றாக இருக்கிறது. படித்த நினைவு இல்லை.
    அழகிரி சாமியின் நிறைய கதைகள் படித்து இருக்கிறேன்.
    "ராஜா வந்து இருக்கிறார்" என்ற கதை மிக நன்றாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
  12. ஆதரவற்ற மாணவர்களுக்கு உதவும் கரம் வாழ்த்துவோம் தொடரட்டும் சேவை.
    கதை இப்பொழுதுதான் படித்தேன் .

    பதிலளிநீக்கு
  13. மாண்டியா மருத்துவர் பற்றி செய்தி வந்தது கூகுளில். அது போல குக் வித் கோமாளி பாலா நிறைய உதவிகள் செய்து வருவதும் சமீபத்தில் அறிய நேர்ந்தது.

    கலைநாதன் அவரின் செயல் மிகவும் உயர்வான செயல். கணேசனுக்கு நல்ல நட்புகள் கிடைத்திருக்கிறார்கள் மனித நேயம்மிக்க நட்புகள். செய்திகளும். நல்ல செய்திகள்

    கீதா

    பதிலளிநீக்கு
  14. கு அழகிரிசாமி அவர்களின் இந்தக் கதையை வாசித்ததில்லை. கதை ஓகேதான்.

    தன் கருத்தாகச் சொல்லியிருப்பதில்

    //பெயில் ஆக்கியதும் அவனே. படிப்படியாக முன்னேற்றியதும் அவனே. சிவம் போக்கு சித்தம் போக்கு என்பார்களே அதுவே இது.//

    எல்லாம் அவன் செயல் என்று சொல்லி மனதை வைத்துக் கொள்வது என்பது மிகக் கடினமான ஒன்று ஆனால் அது எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. அப்படி நினைத்து மனதை எந்தவிதப் பதட்டமும் இல்லாமல் வைத்துக் கொள்வது அரிய கலை.

    //இன்டர்வியூவில் ஸ்ட்ரவுஜர் எக்ஸ்சேஞ் பற்றி கேட்டது, அதைப் பற்றி முதல் நாள் லாட்ஜில் தங்கியிருக்கும்போது படித்தது போன்ற சில நிகழ்வுகள் எப்படி நடந்தது என்று வியக்க வைக்கின்றன. ஒரு வேளை அதுவும் சித்தன் செயல் தானோ!//

    தற்செயலாக நடப்பதை நாம் இப்படிப் பொருத்திப் பார்ப்பது பலரும் செய்வதுதானே...எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம் அவரவர் மனதைப் பொருத்து.

    கீதா

    பதிலளிநீக்கு
  15. கதையை விட, ஜெகெ அண்ணாவின் கருத்து நன்றாக இருக்கிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
  16. கதை பற்றியும் கதை விமரிசனத்தையும் பற்றி  கருத்துரைகள் கூறிய அனைவருக்கும் நன்றி. 
    Jayakumar

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!