வியாழன், 11 ஆகஸ்ட், 2022

என் உயிர் நான்தானே... உன் உயிர் நான்தானே

 முன்னர் வயிற்று வலியால் அவதிப்பட்ட ஒரு நண்பர் பற்றி எழுதி இருந்தேன்.  செய்வினை, அதன் நீக்கம் பற்றிய அனுபவத்தையும் எழுதி இருந்தேன்.  அந்த சம்பவத்தில் அந்த நபருக்கும் (சட்டென) குணமாக,  இயல்பு நிலைக்குத் திரும்பினார்.

இது நடந்து சில மாதங்களுக்குப் பின் என் ஒரு நண்பரின் மகனுக்கு கிட்டத்தட்ட இதே பிரச்னை ஏற்பட்டது.

ஒன்றும் சாப்பிட முடியவில்லை, அப்படியே கொஞ்சம் சாப்பிட்டாலும் உடனே வாந்தி வந்து விடும்.  தண்ணீரைக் கூட உடல் ஏற்றுக்கொள்ள மறுத்தது.  மருத்துவமனையில் சேர்த்து சோதனைகள் அனைத்தும் செய்தார்கள்.  ஒன்றும் குறையில்லை மறைமூர்த்தி கண்ணா என்று பாடாத குறையாக மருத்துவர்கள் விழித்தனர்.

ஒன்றுக்கு மூன்று நான்கு மருத்துவமனைகள் பார்த்தாயிற்று.  சின்ன மருத்துவர் முதல் பெரிய மருத்துவர் வரை பார்த்தாயிற்று.  ஊ..  ஹூம்.  இளைத்துக் கொண்டே போனான்.

அப்போதுதான் வாணலியிலிருந்த எடுத்த போண்டா மாதிரி இருப்பவன், தினத்தந்தி பேப்பரில் அமுக்கி பிழியப்பட்ட வாழைக்காய் பஜ்ஜி போலானான்.  பார்க்கவே திடுக் என்றது.

ஒட்டிய கன்னங்கள், சூம்பிய வயிறு, ஒடுங்கிய மார்பு என்று ஆளே மாறிப் போனான்.  ஆனால் முகத்தில் சிரிப்பும் உற்சாகமும் மட்டும் குறையவில்லை.

மருத்துவமனை செல்வதும் ட்ரிப் ஏற்றுவதும், திரும்புவதும், கொஞ்சம் சரியானது போல தோன்றுவதும், திரும்புவதும், கொஞ்ச நாட்கள் கழித்து மறுபடி வருவதும்...

நொந்துதான் போனார்கள்.  அப்பாவும் அம்மாவும் திருத்தலங்களுக்குப் போனார்கள். மசூதியில் போய் ஓ(ஊ)திக் கொண்டு வந்தார்கள்.  ரொம்ப நாட்களாய் போகாமல் இருந்த குலதெய்வம் கோவில் சென்று வந்தார்கள்.  ராமேஸ்வரம் சென்று  முன்னோர் கடன் தீர்த்தார்கள்.  ஒன்றும் பயனில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.  அல்லது உயிருக்கு ஆபத்தில்லை என்று ஆனதுதான் பயனோ என்னவோ..  நிலைமை அப்படியே இருந்தது.  அவனைப்பார்த்த என் பாஸ் 'புதிதாய்ப் போட்ட பன் மாதிரி இருந்த இளைஞன் சப்பிப் போட்ட மாங்கனி போலானானே ' என்று வருந்தினார்..

ஒரு மருத்துவமனையில் ஹெச் பைலோரியால் பாதிக்கப் பட்டிருப்பார் என்று சொல்லி மருந்து கொடுத்துப் பார்த்தார்கள்.  இதற்குப்பின் கேன்ஸர் செல் இருக்கிறதா என்று அந்த டெஸ்ட்டும் எடுத்துக் பார்த்தார்கள்.  ஒன்றும் இல்லை.  எல்லாம் நார்மல்.

இப்போது அவன் வெறுத்துப்போய் ஓய்வெடுப்பபதை நிறுத்தி அப்பாவுக்கு உதவியாய் மறுபடி கடமையைத் தொடங்கி விட்டான்.  அவனுக்கு  நாங்கள் உட்பட ஆளாளுக்கு மருத்துவம், பரிகாரம் சொன்னோம்..  ஓரளவு அவைகளையும் கடைப்பிடித்துப் பார்த்தான்.  அவனுக்கு தெய்வ நம்பிக்கை என்பது கொஞ்சம் கம்மி.

நான் அந்த என் இன்னொரு நண்பரின் அனுபவம் பற்றிச் சொல்லி அதைத் தீர்க்கும் வண்ணம் யாராவது இருக்கிறார்களா என்று பார்க்கச் சொன்னேன்.  ஆனால் பணம் பிடுங்க ஆளிருந்தார்களே தவிர, உருப்படியாய் யாரும் இல்லை.  யாரையாவது சென்று பார்த்தால் 'செய்வினை இருக்கிறது' என்று சொல்ல தயங்காத ஆளே  இல்லை.  அப்புறம் அதை எடுக்கிறேன், 20,000 கொடு, 25,000 கொடு என்று கிளம்பினார்கள்.  அவர்களைத் தவிர்த்து விட்டான்.  எனக்கும் அதில் உடன்பாடே.  

எங்கள் வீட்டில்தான் அவன் கொஞ்சம் மனம் விட்டு பேசுவான்.  சென்ற ஞாயிற்றுக்கிழமை வந்தவன் கொஞ்சம் படபடப்பாய் இருந்தான்.

என்ன ஆச்சு என்று கேட்டதும் "போன வாரம் வியாழக்கிழமை இங்கு ஆஞ்சநேயர் சந்நதி ஒன்றில் குறி சொல்வதாய் நானும் அப்பாவும் வந்தோம் இல்லையா?  அவங்க சண்டே வரச்சொன்னாங்கன்னு இன்னிக்கி போனோம்.."

"சரி.."

"நானே விருப்பமில்லாமதான் போனேன்.  அப்பாவும் அம்மாவும் ரொம்ப மனவேதனைப் படறாங்க..கஷ்டப்படறாங்கன்னுதான் போனேன். கோவில் எல்லாம் இல்லை அது.  உள்ளே ஆஞ்சநேயர் படம் வச்சிருக்காங்க...   முன்னாலேயே பணம்  கட்டிடணும்.  ரெண்டு ரெண்டு பேரா உள்ளே போகணும்..  எனக்கு முன்னால் போனவர்களை உள்ளே அழைச்சுட்டு போனதும் அதுல பாதிக்கப்பட்டவரை அங்கே இருந்த ரெண்டு மூணு பேர்ல ஒருத்தர் என்ன ஏதுன்னு கூட கேட்காம விட்டாரு பாருங்க கன்னத்துல பொளேர்னு ஒரு அறை..  பார்த்துக்கிட்டிருந்த எனக்கு கலங்கிப்போச்சு.  திரும்பி வரவும் முடியாது.  கதவை மூடி வச்சிருக்காங்க..  அப்பாவுக்கும் பதட்டமா ஆயிருச்சு.  பின்ன கண்முன்னால் இப்படி மண்டகப்படி நடந்தா..

"அய்யய்யோ..  அப்புறம்.."

"ஒரு வழியா அவனை அடிச்சு உதைச்சு அனுப்பிட்டு என்னைக் கூப்பிட்டாங்க...   நான் உள்ளே போனதும் ஒருத்தன் என் ரெண்டு காதையும் பிடிச்சு முறுக்கித் திருக ஆரம்பிச்சுட்டான்.  நாம ஏதாவது பேசினாதான் அதிலிருந்து லீட் எடுப்பாங்கன்னுட்டு சும்மாவே நின்னேன்.  அடுத்தவன் மண்டைல குட்டு குட்டுன்னு குட்டறான் ..  வலி உயிர் போகுது..  கடுப்பாவும் இருக்கு..'பேசு பேசு..  யார் நீ...  உள்ளேருந்து வெளியே போயிடு..  .அவ்வளவு அழுத்தமா உனக்கு..  பேசு பேசு" ன்னு மூணு பேரும் படுத்தறாங்க...'  இப்போ நான் என்ன சொன்னாலும் அது ஆவியோட அட்டகாசம்ன்னுடுவாங்க..  பேசாம இருந்தாலும் கொடுமைப்படுத்தறாங்க...  எனக்கு கோபம் அப்பா மேலதான் வந்தது..  தலையை அழுத்திப் பிடிச்சு குனிய வச்சிருந்தாங்களா..  அப்படியே நிமிர்ந்து அப்பாவைப் பார்த்தேன்..  'தேவையா இதெல்லாம்னு கேட்கறா மாதிரி..  பார்த்தா அவர் கண்ணு கலங்கி இருந்துச்சு..   இத்தனை வருஷங்களில் அவர் என்னை அடித்ததே இல்லை..."

"அப்புறம்.."

"அவங்க கையை விலக்கி அப்பாவே என்னை வெளில கூட்டிட்டு வந்துட்டார்.  அவங்க "ஒரு வாரம் பாருங்க..  மறுபடி அடுத்த வாரம் அழைச்சுட்டு வாங்க..  இன்னொரு ஐயாயிரம் ஆகும்.  பெரிய பூஜை ஒண்ணு போட்டுடலாம்"னாங்க..  அப்பா ஒன்னும் சொல்லாம வெளில வந்து 'நான் தாண்டா தப்பு அண்ணிட்டேன்..  விடு..  இனி இதெல்லாம் வேணாம்..   பார்த்துப்போம்...  நான் அப்படியே வீட்டுக்குப் போறேன்..  நீ அங்கிளைப் பார்க்கணும்னு சொன்னியே..  பார்த்துட்டு வீடு வந்து சேரு'ன்னுட்டு போயிட்டார்.  அப்பா மேல நான் கோபப்படணும்னு நினச்சதுக்கு மாறா எனக்கு கண்ணு கலங்கிடுச்சு அங்கிள்..    பேசாம இங்கே வந்துட்டேன்.."

கேட்டுக்கொண்டிருந்த பாஸ் குறுக்கிட்டார்.

"சரி..  தோசை இருக்கு.. சாப்பிடுறியா?"

"நிமிர்ந்து பரிதாபமாகப் பார்த்தவன் 'உங்க வீட்டு தோசை, மிளகாய்ப்பொடின்னா எனக்கு அப்படி பிடிக்கும்.  எங்கே ஆண்ட்டி சாப்பிட முடியுது..?  ஆனாலும் ஒரு வாய் காஃபி குடுங்க..  சாப்பிட்டுட்டு கிளம்பறேன்.  உங்க வீட்டு ஃபில்டர் காஃபியும் பிடிக்கும்" என்றான்.

=========================================================================================================================

"அனைவருக்கும் ஒரே மருத்துவ முறை என்பது, பல பூட்டுக்கு ஒரே சாவி பயன்படுத்துவது போன்று அர்த்தமில்லாதது..."


ஒருங்கிணைந்த மருத்துவ முறைகளின் முக்கியத்துவம் பற்றி கூறும், 'கான்செப்ட் வெல்னஸ்' நிறுவனர் மற்றும் மருத்துவர் சங்கர் மோகன்செல்வன்: தற்போதைய மருத்துவ அறிவியல் வளர்ச்சியை, 50 ஆண்டுகளுக்கு முந்தைய காலத்துடன் ஒப்பிட்டால் மலைப்பு ஏற்படும்.


ஆனால், அதற்கு சற்றும் சளைக்காமல் நோய்களும் அதிகரித்து உள்ளன. காரணம், தவறான வாழ்வியல் மாற்றங்கள். அதனால் குற்றவாளிகள் நாம் தான்!உடலின் எந்த இடத்தில் நோய் இருக்கிறதோ, அந்த இடத்துக்கு மட்டும் சிகிச்சை தரும் நவீன சிகிச்சை முறைகளை மட்டுமே நம்பி வாழ்ந்து வருகிறோம். ஒருங்கிணைந்த மருத்துவ முறைகளின் நோக்கமே, நோயின் மூலத்தை அறிந்து, அவற்றை உடலில் இருந்து நீக்குவது மட்டுமின்றி, மனதில் ஆழமான எதிர்மறை எண்ணங்களை மாற்றி மகிழ்ச்சியையும், தன்னிறைவையும் வழங்குவதே ஆகும்.'அக்குபஞ்சர், சுஜோக், குவாண்டம் பயோபீட்பேக், யோகா, ஓசோன் தெரபி, ரைப் தெரபி, ஐவி நியூட்ரிஷன்' போன்ற எண்ணற்ற மாற்று மருத்துவ முறைகள் மூலம், உடல்நலத்தை பேண முடியும். ஒற்றைத் தலைவலி எனும் 'மைக்ரேன்' நோய்க்கு வாழ்நாள் முழுதும் மாத்திரை எடுத்துக் கொள்ள வேண்டி இருக்கிறது. அதற்கு மாற்றாக, 'குவாண்டம் பயோபீட்பேக்' எனும் மருந்தில்லா மருத்துவ முறை மூலம், மைக்ரேனின் காரணத்தை அறிந்து அதன் வீரியத்தை படிப்படியாக குறைக்க முடியும்; இதனால் மனநலமும் மேம்படுவது குறிப்பிடத்தக்கது.பல்வேறு வலிகள், குடலில் உள்ள நுண்ணுயிர் கூட்டத்தை காத்தல் மற்றும் காரணத்தை கண்டறிய முடியாத நோய்களுக்கு, ஒருங்கிணைந்த மருத்துவ முறைகள் மூலம் நிவாரணம் வழங்க முடியும்; வாழ்நாள் முழுக்க வேதனையை அனுபவித்து வருபவர்களுக்கு, புதிய பாதையை காட்ட முடியும்.நான் எம்.பி.பி.எஸ்., டாக்டர். இருப்பினும் ஒருங்கிணைந்த மருத்துவ முறைகளையும் வழிமொழிகிறேன். காரணம், ஒவ்வொருவரின் உடலும் தனித்துவமானது; அதனால் ஒவ்வொருவரின் தேவையும் வேறாக இருக்கிறது. அனைவருக்கும் ஒரே மருத்துவ முறை என்பது, பல பூட்டுக்கு ஒரே சாவி பயன்படுத்துவது போன்று அர்த்தமில்லாதது. அப்படியெனில் நவீன மருத்துவம் வேண்டாமா... நிச்சயம் வேண்டும். உதாரணமாக, கேன்சருக்கு அறுவை சிகிச்சையே சிறந்தது என்பது தான் என் கருத்து. இதுபோல, பல நோய்களுக்கு நவீன மருத்துவ முறைகள் தீர்வை வழங்கி உயிர் காக்கின்றன. இருப்பினும் அனைவருக்கும் சர்ஜரியும், மருந்து மாத்திரைகளும் முழு பலன் அளிப்பதில்லை. இப்படிப்பட்டவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பை வழங்குகின்றன, பக்கவிளைவில்லாத ஒருங்கிணைந்த மருத்துவ முறைகள்.நவீன மருத்துவ முறையின் முக்கிய குறைபாடு, வேற்று மருத்துவ முறைகளை புறக்கணிக்கும் மனப்பாங்காகும். நோயாளிக்கு என்ன மருத்துவ முறை சரியாக இருக்குமோ, அதை வழங்குவதே மருத்துவரின் தலையாக கடமை!

====================================================================================================================================

ஒரு வித்தியாசமான பறவை டான்ஸ் பார்க்கிறீர்களா?  எதற்கு அப்படி நாட்டியமாடுகிறது?  துணியை பயமுறுத்தவா, அகவரவா, திறமையாக காட்டவா?  அதுபற்றிய விவரங்களும் காணொளியின் கீழே பகிர்ந்திருக்கிறார்கள்.

==========================================================================================================

ரசித்த படம்!  இதை ஒரு டிக்டாக் காணொளியிலிருந்து ஸ்க்ரீன் ஷாட்டாக எடுத்தேன்!  இதற்கு ஏதாவது இரண்டு வரிகள் எழுதத் தோன்றுகிறதா?


==============================================================================================================

சமீபத்தில்தான் நண்பர்கள் தினம் கடந்து போனதோ....  



===========================================================================================================

சென்ற வாரம் கீதா அக்கா மதுரை சோமு பற்றியும் சொல்லி இருந்தார் இல்லை?

நாங்கள் சென்னையில் இருக்க, அண்ணன் குடும்பமும், அப்பாவும் மதுரையில் எம் எஸ் அம்மா குடியிருந்த வீடு இருந்த தெருவில் குடியிருந்தார்கள்.  அங்கு தினசரி அதிகாலை ஒரு பெண்மணி வந்து  இரண்டு குடம் தண்ணீர் பிடித்துத் தந்து விட்டுப் போவார்.  அவர் மதுரை சோமுவின் உறவினர் என்று சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன்.



=============================================================================================================================================

இடது பக்கம் சில எழுத்துகள் மறைந்திருந்தாலும் மனம் அவற்றையும் சேர்த்து படித்து விடும்! இல்லையா?





84 கருத்துகள்:

  1. இந்த செய்வினை, எடுப்பு வியாபாரம்தான் இன்று ஜோராக நடக்கிறது.

    இதற்காகவே அரசே தலையிட்டு இந்த வகையான பூசாரிகளை பொடாவில் கைது செய்தால்.

    பல லட்சம் ஆசாமிகளை தூக்க வேண்டியது வரும்.

    பதிலளிநீக்கு
  2. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் எவ்வித கலக்கங்களும் இல்லாத நல்ல நாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா.. வணக்கம். பிரார்த்திப்போம்.

      நீக்கு
  3. நல்லதொரு காலைப் பொழுது..

    அன்பின் வணக்கங்களுடன்

    வாழ்க நலம்..
    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
  4. தொலைக்காட்சியைத் தான் தொலைத்துக் கட்டியாயிற்றே என்று வானொலியின் சத்தத்தைக் கேட்டால்

    அங்கே வலி இருந்தால் இதுவா இருக்கலாம்.. இங்கே வலி இருந்தால் அதுவா இருக்கலாம்.. வாட்சாப்புக்கு
    வாங்க..

    உங்களுக்காகவே நாங்க ... என்றெல்லாம் மருத்துவமனை விளம்பரங்கள்..

    குழந்தை இல்லாத பிரச்சினைக்கு உடனடித் தீர்வு.. இப்போது உங்க ஊர்.. லயும் டேரா போட்டாச்சு...

    அப்டின்னு -
    ஓயாத விளம்பரம்!..

    ரேடியோ பிளக்கைப் புடுங்கிப் போட்டுட்டு சும்மா இருக்க வேண்டியது தான்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரேடியோ பிளக்கைப் புடுங்கிப் போட்டுட்டு சும்மா இருக்கிறேன்!..

      நீக்கு
    2. ரேடியோ கேட்டு கொள்ளை நாளாச்சு துரை செல்வராஜூ ஸார்...!

      நீக்கு
  5. மருத்துவ ஸ்பெசல் கதம்பம். ஒரு சிறு யோசனை. நான் மருத்துவர் அல்ல. ஒரு கேசின் அடிப்படையில் சொல்லுகிறேன். நண்பரின் பையரை barium thorough x-ray எடுத்து பார்க்க சொல்லலாம். சிறுகுடலில் முடிச்சு ஏதாவது இருந்தால் தெரிய வரும். 

    ஒருங்கிணைந்த என்ற பெயரில் என்னன்னவோ புரியாத மருத்துவ முறைகளை கூறியிருக்கிறீர்கள். ஒவ்வொன்றும் என்ன என்று கொஞ்சம் விளக்கி இருக்கலாம். உதரணமாக குவாண்டம்? 

    பறவை டான்ஸ் அழகு. 

    கெட்டில் படம் வியப்பு.எப்படி காண்டிலீவராக அமைத்து தண்ணீர் மேலே ஏறும் வழியையும் அமைத்து அருமையாக வடித்து இருக்கிறார்கள். இந்திய சாமியார் அந்தரத்தில் அமர்ந்திருக்கும் பழைய மாஜிக் நினைவுக்கு வந்தது. 

    இந்த வார ஜோக்குகள் முழுதும் மரத்தடி ஜோசியர் ஜோக்குகளாக உள்ளன. ஆனால் தற்போது சாலைகளில் மரத்தையும் காணோம், ஜோஸ்யரையும் காணோம்.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ஆனால் தற்போது சாலைகளில் மரத்தையும் காணோம், ஜோஸ்யரையும் காணோம்.//

      சாலையோர மரங்களை அகற்றுவதில் அழிப்பதில் குறியாக இருக்கின்றார்கள்..

      நீக்கு
    2. // நண்பரின் பையரை barium thorough x-ray எடுத்து பார்க்க சொல்லலாம். //


      அந்தச் சோதனையும் செய்து விட்டார்களாம்.  செய்வதற்கு இனி சோதனை ஏதுமில்லை!  என்ன மாயமோ...  

      // ஒருங்கிணைந்த என்ற பெயரில் என்னன்னவோ புரியாத மருத்துவ முறைகளை கூறியிருக்கிறீர்கள் //

      நான் இல்லை.  அது ஒரு மருத்துவர்.

      மரத்தடி ஜோசியர்கள் சில இடங்களில் இன்னும் ஜீவிக்கிறார்கள்!!

      நீக்கு
    3. //ஒரு மருத்துவமனையில் ஹெச் பைலோரியால் பாதிக்கப் பட்டிருப்பார் என்று சொல்லி மருந்து கொடுத்துப் பார்த்தார்கள். இதற்குப்பின் கேன்ஸர் செல் இருக்கிறதா என்று அந்த டெஸ்ட்டும் எடுத்துக் பார்த்தார்கள். ஒன்றும் இல்லை. எல்லாம் நார்மல்.//கிட்டத்தட்ட எங்க பெண் இப்போ இந்த நிலைமை தான். இரண்டு வருஷங்கள் ஆகின்றன. எதுவும் பலன் அளிக்கவில்லை. அவங்க மருத்துவரே குழம்பிப் போய் என்ன செய்யறதுனு தெரியலைனு சொல்றாங்களாம். இன்னிக்கு ஒத்துக்கும் இட்லி நாளைக்கு ஒத்துக்காது. நாளைக்கு ஒத்துக்கும் தோசையை அதன் பின்னர் சாப்பிட முடியாது. சப்பாத்தி, பூரியெல்லாம் சாப்பிட்டு 2 வருஷங்கள் ஆகின்றன. அதே போல் சாம்பார், ரசம், மோர் என்று சாப்பிட்டும் 2 வருஷங்கள். வெறும் அசிடிட்டினு ஆரம்பிச்சது. அதுக்கு ஏதோ தப்பா மருந்து கொடுத்திருப்பாங்களோ என்னமோ! இங்கே வரச் சொன்னோம். முதலில் கோவிட்னால வரமுடியலை. இப்போ அப்புவுக்குப் படிப்பு வீணாயிடும்னு வர முடியலை.

      நீக்கு
    4. அந்தப் பையன் நிலைமையை நினைச்சால் கண்ணீர் வருது. கண்ணீர் விட்டுக் கொண்டே தான் படிச்சேன்.

      நீக்கு
    5. கீதா சாம்பசிவம் மேடம்... உங்கள் பின்னூட்டத்தைப் படிக்கும்போது வருத்தமே வந்தது. எப்படி இப்படீல்லாம் நடக்குது? எனக்கும் ஏதோ வட இந்திய மசால் ஒத்துக்கொள்ளுவதில்லை. அதனால் குருமா வட இந்திய சப்ஜி எதையுமே சாப்பிட்டாலும் ஒரு மணி நேரம் வரை நான் ரொம்பவே டென்ஷனாக இருப்பேன். ஆனால் உங்கள் பெண்ணுக்கு காரணமே தெரியாமல் ஒவ்வொரு உணவும் ஒத்துக்கொள்வதில்லை என்று படிக்கவே கலக்கமா இருக்கு. ஒரு மாதம் ஸ்ரீரங்கத்துக்கு வந்தால் சரியாயிடுமோ?

      நீக்கு
    6. நான் முதலில் சொன்ன பையர் கதையின்போதே உங்கள் பெண் பற்றி நீங்கள் சொல்லி இருந்தீர்கள் கீதா அக்கா.  நினைவிருக்கிறது.  இன்னமும் சரியாய் போகவில்லை என்பது படிக்க கஷ்டமா இருக்கு.    இது புதுவிதமான வந்து ஒரு வியாதி படுத்துகிறது போல..   என்னன்னு சொல்ல என்றே தெரியவில்லை.

      நீக்கு
    7. இங்கே வரமுடியலையேனு கவலை/வருத்தம் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் திருஷ்டியாய் இருக்குமோனும் எங்களுக்குத் தோணும். வீட்டைக் கண்ணாடி மாதிரி வைச்சுப்பா! சமைச்சால் சமைச்ச சுவடே தெரியாது. உப்பு, காரம் எல்லாமும் சரியாக இருக்கும். ரொம்ப அலட்டிக்காம எளிமையாக ஆனால் நல்ல உணவாகச் சமைப்பாள். இப்போ வீட்டில் பல நாட்கள் சமைக்க முடியலை. வெளியே இருந்து வாங்கிக்கறாங்க. இவளுக்கும் மட்டும் தனிச்சமையல் என்பதால் அதை மட்டும் சமைச்சுக்கறா. வீடு சுத்தம் செய்ய ஆள் போட்டிருக்காங்க. மாசம் இரு முறை வந்து சுத்தம் செய்து கொடுத்துட்டுப் போவாங்க. :( பல நாட்கள் இரவில் தூக்கமே இல்லாமல் போகிறது. நாங்க அங்கே வரோம்னப்போ வேண்டாம், கோவிட் சமயம், அலைச்சல் கூடாதுனா. இப்போக் கூப்பிட்டாலும் போய்ச் செய்து கொடுக்கிறாப்போல் என்னோட உடல்நிலை இல்லை! :( இங்கே வந்தால் எப்படியோ பார்த்துக்கலாம்.

      நீக்கு
  6. செய்வினை.... இதைச் செய்ய யாருக்கேனும் நேரமிருக்கிறதா என்ன?

    கானாடு காத்தான் குட்டிச் சாத்தான் விளம்பரங்கள் மனதில் வந்துபோயின

    செய்வினை வச்சிருக்காங்க என்று மனதில் தோன்றிவிட்டால் அதற்குப் பரிகாரம் என மனது அலைகாய்வது தவிர்க்கமுடியாது. கே பி சுந்தராம்பாள் தன் கடைசி சில நாட்கள் அதனை நம்பித் தளர்வுற்று மடிந்தாராம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சுந்தராம்பாள் பற்றி படிக்கவில்லை.  ஆனால் செய்வினையை ஒரு பிழைப்பாக நடத்துவோர் பலருண்டு.  நம்பி ஏமாறுவோரும் பலருண்டு.  நிஜத்தில் நடந்தததாகச் சொல்வோரும் சிலருண்டு!

      நீக்கு
    2. அவருக்கு தலை நிற்காமல் சாய்ந்துகொண்டே இருந்ததாம். இதற்குச் செய்வினை காரணம் என்று ஒருவரைத் தேடிப்போய், அவர் வந்து வீட்டில் வைக்கப்பட்டிருந்த செய்வினையை எடுத்தாராம் (கேபிஎஸ் அவர்களின் உறவினர்களின் வேலையாம் அது). பிறகும் முழுவதுமாகச் சரியாகவில்லை. கடைசி சில நாட்கள் கஷ்டப்பட்டாராம். அவர் மறைந்த பிறகு, அவரது சொத்தை அவரது உறவினர்கள் பங்குபோட்டு எடுத்துக்கொண்டனர் (பிறர் சொத்துக்கு ஆசைப்படும் ஈனச்செயல் செய்ய எப்படித்தான் மனம் வந்ததோ)

      நீக்கு
    3. சொத்துக்காக - பணத்துக்காக என்ன வேண்டுமானாலும் செய்யத் தயாராய் இருக்கும் மக்கள், உறவுகள்.  செய்வினையில் நம்புவதற்கு இடமிருக்கிறது.

      நீக்கு
  7. தோசை மிளாப்கொடி பற்றிப் படித்ததும் ஶ்ரீராம் தி பதிவு எழுதி ரொம்ப மாதங்களானது நினைவுக்கு வந்தது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எதையோ சொல்லப்போக எதன்மீதோ பழி!   எதுவும் சமீபத்தில் நிகழவில்லை!  அதுதான்!

      நீக்கு
  8. எந்த மருந்துக்கும், உணவுக்கும் பக்க விளைவு உண்டு. இரண்டு வாரங்களாக வயிறு அன்கம்ஃபர்டபிள். தள்ளித் தள்ளிப் போட்டு, இன்று மருத்துவரைப் கார்க்கலாம் என்று யோசிக்கிறேன். நேரம் சரியில்லை என்றால் சட் என்று உடல் நிலை தளர்வடைவதும், அப்படியிருந்த நாம்.. என்ற எண்ணம் வருவதும் தவிர்க்க முடியாது.

    எனக்கும் குழம்பு சாதம், ரசம் போன்றவற்றில் இரண்டு வாரங்களாக வெறுப்பு.. நினைத்தாலே மனதுக்குப் பிடிக்காத நிலை. மோர் சாதம், விருப்பப்படும் டிபன் என்று ஓட்டிக்கொண்டிருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வயிறு சரியில்லாமல் போவது அடிக்கடி எனக்கும் நிகழ்கிறதுதான்.  இரண்டொரு நாளில் தானாகவே சரியாகி விடும்.

      //எனக்கும் குழம்பு சாதம், ரசம் போன்றவற்றில் இரண்டு வாரங்களாக வெறுப்பு..//

      இந்த வார்த்தையில் 'ம்'விகுதி ஏன் வந்தது என்று தெரியவில்லை, ஆயினும் எனக்கும் அப்படிதான் இருக்கிறது!

      நீக்கு
    2. என் பசங்களுக்கு நம்ம ரெகுலர் உணவே பிடிப்பதில்லை. (நல்லவேளை..முழுதும் இல்லை... ஓரளவு). இக்காலத்து இளைஞர்களின் வியாதி அது.

      நீக்கு
    3. என் மகன்களுக்கும்!  எனக்கும் தயிர் சாதம் பிடிக்கும் அளவு மற்றவை பிடிப்பதில்லை.  கொஞ்சநாள் காயப்போட்டால் சரியாகிவிடும்!

      நீக்கு
  9. நாலு வருடங்களுக்கு முன், படுக்கையிலிருந்து எழுந்தால் கால்களைத் தரையில் வைக்க முடியாத நிலைமை ;ஜிம், நடைப் பயிற்சி என பத்து வருடங்களுக்கு மேல் ஆக்டிவ் ஆக இருந்தவன்). ஒரு வருடம் கஷ்டப்பட்டேன். இப்போ பாத சனியில் மீண்டும் பிரச்சனை. இதையெல்லாம் காரண ரீதியாக மருத்துவர்களால் விளக்க முடிவதில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏன் அப்படி?  என்ன கோளாறால்?

      நீக்கு
    2. உங்களுக்குத்தான் தெரிந்திருக்குமே.. குதிகால் தசைநாண் அல்லது என்னவோ... அது தன்னால வருமாம். எம்சிஆர் செப்பல் எப்போதும் போட்டுக்கணுமாம். சிறிது மாதங்களில் தன்னாலேயே சரியாயிடுமாம். அந்தச் சமயத்தில், கோவிலுக்குச் செல்லக்கூடாது (பாரம்பர்யக் கோவில்களில் செருப்பு இல்லாமல் தரையில் கிலோமீட்டர்களில் நடக்கவேண்டியிருக்கும்) என்று சொல்லியிருந்தார்கள்.

      இதில் ஒரு சுவாரசிய நிகழ்வு. அடையார் காந்திநகரில் புகழ்பெற்ற ஒரு மருத்துவர் (அங்கேயே வீட்டில் மூட்டு சம்பந்தமான பெரிய கிளினிக் வைத்திருக்கிறார்) ஒருவரைப் பார்க்கச் சென்று, ஒரு மணி நேரம் காத்திருந்து..அவரிடம் விஷயத்தை விளக்கியதும், இது என் ஏரியா அல்ல.. இதற்கு இந்திரா நகரில் இருக்கும் இன்னொரு மருத்துவர் பெயரைச் சொல்லி அவரிடம் செல்லுங்கள் என்று சொல்லி, பணம் எதுவும் வாங்கிக்கொள்ளவில்லை.

      நீக்கு
    3. எனக்கு இப்போக் குதிகாலில் வலி ஒரு மாதமாக. ஊன்றக் கஷ்டமா இருக்கு. நடக்கையில் பிரச்னை. ஏற்கெனவே நடை ரொம்ப அழகு. இப்போ இன்னமும் அழகு! :(

      நீக்கு
    4. சமீப காலங்களில் எனக்கு கால்வலி பரவாயில்லை.  ஆனால் முதுகு, அடிமுதுகு எல்லாம் வலி!  இடம்தான் மாறுகிறது.  வலி மாறுவதில்லை!

      நீக்கு
  10. இனி இன்று பிசி... மதியத்துக்கு மேல் பார்ப்போம். கீசா மேடமும் பிசியாகத்தான் இருக்கணும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என் பிசி காலை முடிந்தது!

      நீக்கு
    2. குஞ்சுலு வந்திருப்பதால் நான் பிசி. மத்தபடி எங்க ஆவணி அவிட்டம் மாசக்கடைசியில் வருது. பிள்ளையார் சதுர்த்திக்கு முதல் நாள்.

      நீக்கு
    3. குஞ்சுலு வந்திருப்பதால் நான் பிசி. மத்தபடி எங்க ஆவணி அவிட்டம் மாசக்கடைசியில் வருது. பிள்ளையார் சதுர்த்திக்கு முதல் நாள்.

      நீக்கு
    4. ஓ... சாமவேதம்! ஆனால் எல்லோருக்கும் நாளைத்தான் காயத்ரி!

      நீக்கு
  11. முதலில் தவறு ஏமாறுகிறவர்கள் மீது தான்...

    ஓ மருத்துவம் மட்டுமா...? "ஒரே ஒரே" என்றாலே சர்வ நாசம் தான்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் குறி சொல்லும் விஷயத்தில் மட்டும் சொல்கிறீர்கள் DD.  உடல்நிலை ஏன் இப்படி இருக்கிறது என்று குழம்பும் அவருக்கு என்ன பதில்?

      நீக்கு
  12. முதல் பகுதிக்கு விடையாக இரண்டாவது ஒருங்கிணைந்த மருத்துவம் !!!! பொருத்தமாக இருக்கிறது, ஸ்ரீராம்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா.. ஹா.. ஹா... யதேச்சையாக இப்படி அமைந்து விடுகிறது!

      நீக்கு
  13. முதலாவது பகுதியில், எனக்கென்னவோ சரியான மருத்துவர் அமைந்து சரியான டயக்னாஸிஸ் இல்லையோன்னு ஒரு சந்தேகம். மற்றொன்று அவங்க வேறு வைத்திய முறைகள், ஆயுர்வேதம், சித்தா இதில் நல்ல மருத்துவர் அமையலையோ என்றும் தோன்றியது.

    //உடலின் எந்த இடத்தில் நோய் இருக்கிறதோ, அந்த இடத்துக்கு மட்டும் சிகிச்சை தரும் நவீன சிகிச்சை முறைகளை//

    உண்மைதான் நாம் தான் குற்றவாளிகள் சில நேரங்களில் - சில நேரங்களில் என்பது கருத்தில் கொள்ளுங்கள்!!!

    இதில் சித்தா ஆயுர்வேதம் இரண்டுமே அந்தக் குறிப்பிட்ட நோய்க்கு மருந்து என்றில்லாமல் //நோயின் மூலத்தை அறிந்து, அவற்றை உடலில் இருந்து நீக்குவது மட்டுமின்றி, மனதில் ஆழமான எதிர்மறை எண்ணங்களை மாற்றி மகிழ்ச்சியையும், தன்னிறைவையும் வழங்குவதே//

    அதே...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர்கள் அனைத்து வைத்திய முறைகளையும் ஆலோசித்து விட்டார்கள்.  அப்பலோ முதல் அன்னாடங்காய்ச்சி ஆஸ்பத்திரி வரை சென்று வந்து விட்டார்கள்.  கடைசியாக அவனுக்கு சொல்லபப்ட்டிருப்பது ஒரு மனோதத்துவ ரீதியிலான சிகிச்சைதான்!

      நீக்கு
    2. ஆமாம் இந்தக் கருத்தை கீழே பார்த்தேன் ஸ்ரீராம்...ஏகாந்தன் அண்னாவுக்கு நீங்கள் கொடுத்த பதிலில்....

      என் கருத்தும் போட்டிருக்கிறேன் அங்கு

      கீதா

      நீக்கு
  14. 'குவாண்டம் பயோபீட்பேக்' //

    இது இப்போது அதிகம் பேசப்படுகிறது. நம் உடலின் இயக்கம் அறிந்து அதற்கு ஏற்ப நம் இதயத்தின் இயக்கம்/துடிப்பு, இரத்த அழுத்தம் எல்லாம் சரி செய்வது என்று கட்டுரை வாசித்தேன். ஆனால் இன்னும் அறிவியல் ரீதியாக கணிசமான ஆதாரங்கள் இல்லை என்றும் சொல்லப்படுகிறது

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பகிர்ந்தேன்.  அவ்வளவே...   வேறொன்றும் அறியேன்!

      நீக்கு
  15. என் தம்பியின் மகள் ஆயுர்வேத மருத்துவம் டிகிரி முடித்திருக்கிறாள். அவள் இடையில் கோவிட் சமயத்தில் அந்த கேம்ப்களுக்குச் சென்று பல நாட்கள் தங்கி கோவிட் பாதித்தவர்களுக்கு ஆயுர்வேத முறைப்படியும் சிகிச்சை அப்போது அலோபதி மருத்துவமும் தெரிந்து கொண்டிருக்கிறாள். அதன் பின் அலோபதி அறுவை சிகிச்சை முடிந்த பின் post operative care ல் ஆய்ர்வேத மருந்துகள் வழி தீர்வு கொடுப்பதிலும் கூட அவள் கல்லூரி இன்டெர்ன்ஷிப்பில் செய்திருக்கிறார்கள்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிச்சயம் இந்த புதிய வழிமுறை நாளை உலகாளும்.

      நீக்கு
    2. நிச்சயம் இந்த புதிய வழிமுறை நாளை உலகாளும்.

      நீக்கு
  16. ஒருங்கிணைப்பு மருத்துவம் - கட்டுரை மிக நன்று

    கீதா

    பதிலளிநீக்கு
  17. ஆ ஆ! வடை போச்சே! நானும் இந்தப் பறவை - vogelkop பற்றி எடுத்து வைத்திருந்தேன் சில்லு சில்லாய் இல் சொல்ல!!!!! இந்த வீடியோ நடனம் ....அதில் நான் சொல்லியிருந்தது இந்தப் பறவையின் நடனம், கிட்டத்தட்ட நம் கேரளத்து கதகளி, அப்புறம் நம் கிராமீய ஒயிலாட்டம் காவடி போன்று இருக்கிறது என்று..

    என்ன அழகு டான்ஸ். இப்படி வினோதமான பறவைகள் சில எடுத்து வைத்திருக்கிறேன். இதனை மீண்டும் ரசித்தேன் ஸ்ரீராம்.

    எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காது..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா.. ஹா.. ஹா... இந்த வீடியோ சில வருடங்களாக என் டிராஃப்டில் கிடப்பது!

      நீக்கு
    2. அவருடைய டிராஃப்டில் பல வருடங்களாகக் கிடந்திருக்கும். ஹா ஹா

      நீக்கு
    3. ஹை ஸ்ரீராம் ஹைஃபைவ்!!!!!!

      ஹாஹாஹாஹா நிஜமாகவே நெல்லை!!! சிரித்துவிட்டேன்....பாருங்க திருவண்பரிசாரம் போய் வந்து இதோ ஒரு வருஷம் ஆகப் போகுது....இன்னும் படங்கள் போடலை....சென்ற இடங்களின் படங்கள் போடலை அதுக்கு முன்ன விசாகப்பட்டினம் இன்னும் போடலை...ஹாஹாஹா

      இன்னும் இப்படி நிறைய....என்னவோ மனசு ஒத்துழைக்க மாட்டேங்குது நெல்லை

      கீதா

      நீக்கு
  18. ரசித்த படம் - நானும் ரசித்தேன் செம படம் இல்ல?

    பாலருவி
    சாக்லேட் பாறை
    சாக்கோ மில்க் ஷேக்

    பால் அருவியாய் சாக்கலேட் பாறைகளின் மீது விழுந்து சாக்கோ ஷேக் ஆக!
    படம் பார்த்தா அப்படித்தான் தெரிகிறது!!!!! ஹாஹாஹா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்.  நம்ப முடியாத காட்சி.  வல்லிம்மா வீட்டில் சிங்கம் இப்படி ஒரு வேலைப்பாட்டைச் செய்து வைத்திருந்தார்.  பார்த்தேன்.

      நீக்கு
    2. ஓ வல்லிம்மா வீட்டில் இருக்கிறதா சிங்கப்பா செய்தது...!! படம் எடுத்துப் போடச் சொல்லணும் அம்மாகிட்ட

      கீதா

      நீக்கு
  19. அட! இங்கும் புலி!

    ஹாஹாஹா நல்ல நண்பன்!

    கீதா

    பதிலளிநீக்கு
  20. மதுரை சோமு தகவல் சுவாரசியம்!

    ஜோக்ஸ் எல்லாமே ஜோசியம் அதும் மரத்தடி ஜோஸ்யம். புன்னகைக்க வைத்தன.

    சமீபத்தில் கூட மரத்தடி ஜோஸ்யர் ஒருவரைப் போகிற போக்கில் பார்த்தேன் கையை நீட்டிக் கொண்டு ஒருவர் இருந்தார்.... எங்கு பார்த்தேன் என்பது டக்கென்று நினைவுக்கு வரவில்லை.

    அது போல கிளி ஜோஸ்யக்காரர் என்று நினைக்கிறேன் கிளிக்கூண்டைத் தூக்கிக் கொண்டு நடந்துகொண்டிருந்தார். ஒரு வேளை தோதான இடம் தேடி அலைந்தாரோ என்னவோ. பல வருடங்களுக்குப் பிறகு பார்த்தேன் எங்கள் ஊரில் அங்கு போயிருந்த போது...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மரத்தடி ஜோசியமும், கிளி ஜோசியமும் ஆங்காங்கே பார்க்க முடிகிறது.

      நீக்கு
  21. செய்வினை கட்டுரை படிக்கும் போது மிகவும் வருத்தமாய் இருக்கிறது.
    அந்த பையன் நிலை சரியாக வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன். உங்க வீட்டு பிடித்த உணவை சாப்பிட முடியவில்லை என்று அந்த பையன் சொன்னது படிக்கவே கஷ்டமாக இருக்கிறது.
    விரைவில் நலபெற வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனது தினசரி காலை பிரார்த்தனையில் முதலிடம் அவனுக்குத்தான்.  சீக்கிரம் நார்மலாக வேண்டும் என்று பிரார்த்திப்பேன்.

      நீக்கு
  22. நோயாளிக்கு என்ன மருத்துவ முறை சரியாக இருக்குமோ, அதை வழங்குவதே மருத்துவரின் தலையாக கடமை!//

    நோயாளியின் மனநிலை, உடல் நிலை, உணவு பழக்க வழக்கத்தை அறிந்து வைத்தியம் செய்யும் முறையே நல்ல வைத்தியம்.
    எல்லோருக்கும் ஒரே வைத்தியம் என்பது சரியில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குடும்ப மருத்துவர் என்று ஒருவரையே பார்த்தால் இது சாத்தியம்.  அவருமே கூட பொறுமையாய் நமக்கு காது கொடுக்க வேண்டும்!

      நீக்கு
  23. பறவை காணொளி முன்பே பார்த்து இருக்கிறேன்.
    அதன் நடனம் அருமை.
    நண்பன் புலியிடம் தள்ளி விடுவான் என்று நினைப்பா?
    மற்ற பகிர்வுகளும் நன்றாக இருக்கிறது.
    மரத்தடி ஜோசியம் பார்ப்பவர்கள் இன்னும் இருக்கிறார்கள், நான் பார்த்து இருக்கிறேன் மதுரையில் (அவர்கள் மரத்தடியில் இருப்பதை பார்த்து இருக்கிறேன்,நான் கையை காட்டவில்லை)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்.  ஆங்காங்கே ஜோசியர்களை காணமுடிகிறதுதான்.  நன்றி கோமதி அக்கா.

      நீக்கு
  24. பறவை காணொளி பார்த்தேன் என நினைக்கிறேன் இல்லைனா தொலைக்காட்சியில் பார்த்தேனோ என்னமோ! நினைவில் இல்லை. அந்தப் பையர் பற்றிப் படிச்சதும் மனதில் அதுவே இருக்கு. வேறே விஷயங்கள் மனதில் பதியவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பையனுக்கு அவன் குடும்பத்தைவிட எங்களிடம் ஓட்டுதல் அதிகம்.  ஞாயிற்றுக்கிழமை வந்து அரைமணி நேரமாவது எங்களுடன் பேசிக் சென்றால்தான் அவனுக்கு உற்சாகமாக இருக்கிறதாம்.

      நீக்கு
  25. அந்தப் பையனுக்கு விரைவில் உடல்நலம் சரியாகப் ப்ரார்த்திக்கிறேன்

    பதிலளிநீக்கு
  26. Coffee break! கடைசியில் அந்தப் பையனுக்கு என்னதான் ஆச்சு? அடுத்த வாரம் வெளிவருமோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லை.  ஒரு மாதிரி மனரீதியான பிரச்னை என்று இப்போது கண்டறிந்திருக்கிறார்கள்.  அவனை எதற்கும் கட்டாயப்படுத்தக் கூடாது என்கிறார்கள்.  பார்ப்போம்.

      நீக்கு
    2. ஓஹோ....நேற்று ரொம்ப நேரம் கழிச்சு தோன்றியது ஒரு வேளை மனப்பிரச்சனையாக இருக்குமோன்னு ....ஆனால் மீண்டும் இங்கு வந்து சொல்லலை....நான் மருத்துவர் இல்லையே சும்மா எதையாவது சொல்லி வைக்கக் கூடாதுன்னுட்டு!!!!!

      கீதா

      நீக்கு
    3. எங்க பெண்ணுக்கும் அப்படித்தான் மனரீதியிலான பிரச்னையாக இருக்குமோனு எங்களுக்கு மட்டுமில்லை. நான் ஆலோசனைகள் பெற்ற இரு இந்திய மருத்துவ நண்பர்களும் அப்படித்தான் கூறுகின்றனர். அதிலும் ஒருத்தர் அடிச்சுச் சொல்கிறார். இது மனோரீதியிலான பிரச்னை என. இன்னொருவரோ யோகா, தியானம் செய்யச் சொல்லுங்கள், சரியாகிவிடும் என்கிறார். அவளோ எதிலும் மனம் பதியவில்லை என்கிறாள். நாங்களும் கோயில் கோயிலாகப் பலவிதங்களில் பரிகாரங்கள் செய்து கொண்டிருக்கோம். கடந்த ஆறு மாதத்துக்கும் மேல் இதான் வேலையே!

      நீக்கு
  27. செய்வினை சூனியம் என்ற ஏமாத்துக்காறர் படுத்தும் பாடு அடிப்பது.....அய்யோ கொடுமை.

    பதிலளிநீக்கு
  28. வயிற்றுப் பிரச்சனைக்கு அந்தப் பையனுக்கு இத்தனை மருத்துவர்கள் பார்த்தும் எதுவும் தீர்வு இல்லையா? ஆச்சரியமாக இருக்கிறது. இத்தனைக்கும் நம் நாடு மருத்துவத்தில் சிறந்து விளங்கும் நாடு அதுவும் சென்னையில் இப்படி என்பது ஆச்சரியம்.

    ஒருங்கிணைந்த மருத்தவம் பற்றி மருத்துவர் கூறியிருப்பது நல்ல தகவல்கள். நாமுமே ஆங்கில மருத்துவ மருந்துகள் எடுத்துக் கொண்டாலும் வேறு மருத்துவத்தில் தீர்வு இருக்கிறதா என்றும் பார்ப்பதுண்டே.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  29. அந்தப் பறவையின் நடனம் மிக அற்புதமாக இருக்கிறது.

    காணொளியிலிருந்து எடுத்த படத்தை ரசித்தேன்.

    நகைச்சுவைத் துணுக்குகளையும் ரசித்தேன். அரசியல்வாதியை உட்படுத்திய ஜோக் அருமை

    துளசிதரன்

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  30. வணக்கம் சகோதரரே

    இன்றைய வியாழன் பதிவும்
    அருமை.

    முதல் பகுதியில் குறிப்பிட்டவரை பற்றி படிக்கும் போது மனது கனத்தது. அவர் கூடிய விரைவில் நலமாக வேண்டுமென நானும் பிரார்த்தித்துக் கொள்கிறேன். பறவையின் நடனம், ரசித்தப்படம் அனைத்தும் அருமை.

    பாயும் புலியின் முன்பாக உயிர் பறப்பதற்கு முன் நட்பும் பறப்பது இயற்கைதானே..

    ஜோக்குகள் அனைத்தும் அருமை. ரசித்தேன்.

    வீட்டின் வேலைகள் காரணமாக முன்பு போல் உடனுக்குடன் வர இயலவில்லை மன்னிக்கவும். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!