கீதா சாம்பசிவம் :
1. உள்ளுணர்வு சொல்லுவது உங்களுக்குப் பலித்திருக்கிதா? அதில் நம்பிக்கை உண்டா?
$ உள்ளுணர்வும் நடப்பும் நிறைய தடவை ஒத்துப் போயிருந்தாலும் நம் கையில் control இல்லை என்பதும் நிதர்சனம்.
# சில சமயம் முன்பே எதோ ஒன்று பற்றிய முன் உணர்வு நமக்கு இருந்ததாக ஒரு எண்ணம் தோன்றுவது உண்டு . இது உண்மையாக இருக்கலாம் அல்லது நமது பிரமையாகவும் இருக்கலாம் என்பது என்னுடைய கணிப்பு.
உதாரணமாக உள்ளுணர்வு என்று எனக்கு தோன்றிய உடன் ஒரு காகிதத்தில் குறித்து வைத்துக்கொண்டு , " இது இப்படியே 40 நிமிடங்களுக்குப் பின் நடந்தது " என்று நான் எழுத முடியுமானால் அதை நம்பலாம்.
# சில சூசகமான கனவுகள், மனதில் தோன்றிய சில திடீர் flash pictures - ஒரு மணி நேரத்திற்குள் அல்லது அதிகபட்சம் ஒரு வருடத்துக்குள் நடந்துள்ளன.
2. சிலருடைய உள்ளுணர்வில் எதிர்கால நிகழ்ச்சிகள் குறித்தும் தோன்றும் என்பதும் உண்மையா?
$ மணி அல்லது நிமிடக் கணக்கில்தான் கென்னடி, நேரு, ஜாகிர் ஹுசேன் மரணங்கள் என் பிராயணங்களை ஓத்திப் போடவைத்தன.
அண்ணா மரணம் அன்று தேவகோட்டையில் புறப்பட்டு கூனூர் வரை டவுன் பஸ்ஸில் மட்டுமே பிரயாணம் செய்து கடைசி 4 km taxi. காலை cordite factory gate_ இல் தான் சொன்னார்கள்.
ஆபத்துகளைத் தவிர்த்தது உண்டு.
3. எனக்குச் சிலவற்றில் பலித்திருக்கிறது. சிலவற்றில் பலிப்பதில்லை. உதாரணமாக நேற்றிரவு படுத்துக்கும்போது எப்போவும் சொல்லும் ஸ்ரீராமஜயத்தோடு "நாளைக்காலை பிரச்னை இல்லாமல் விடியணுமே!" என்றும் தோன்றியது. அப்போது அதுக்கு முக்கியத்துவம் கொடுக்கலை. ஆனால் இன்று காலை எழுந்துக்கும்போதே எந்தக் குழாயிலும் தண்ணீர் வரலை. காலை இயற்கைக்கடன்களைக் கழிக்கக் கூட ஒரு தம்பளர் தண்ணீர் இல்லை. இது தற்செயலா இல்லை எனில் எனக்குத் தோன்றிய உள்ளுணர்வின் விளைவா?
அதே போல் வெளியே போய்ச் சாப்பாடு வாங்கப் போறேன்னு (இன்னிக்கும் நடந்தது) சொன்னார்னா அன்னிக்கு எனக்கு மனதில் ஏதோ தோன்றும். வேண்டாம் என்பேன். அதற்கேற்றாற்போல் அந்த ஓட்டலே அன்று திறந்திருக்க மாட்டாங்க. அல்லது சாப்பாடு இல்லைனு சொல்வாங்க. இதெல்லாம் நடக்கும் வாய்ப்பு உண்டா? அல்லது தற்செயலாக நடப்பதை நான் இப்படித் தொடர்பு படுத்திக்கிறேனா?
$ எதுவும் பிரத்தியேக முயற்சிகள் இன்றி சகோதர சகோதரிகள் கேட்கும் முன்னரே பதில் சொல்வது உண்டு.
# மிகவும் பொதுப்படையாக இல்லாமல் , வரப்போகிற நிகழ்ச்சி பற்றி தெளிவான ஒரு முன் உணர்வு இருந்தால் மட்டுமே அதைக் குறித்துப் பேச முடியும்.
" அபசகுனம் பிடிச்ச மாதிரி ஏதாவது சொல்லித் தொலைக்காதே " வகையான பேச்சுக்கள் இதில் அடங்காது.
பானுமதி வெங்கடேஸ்வரன் :
ஒரு விஷயத்தை பாராட்ட கை தட்டும் பழக்கம் எங்கே எப்போது துவங்கியது? நம் நாட்டில் இருந்ததாக தெரியவில்லை.
# சிறு அளவில் பாராட்டு விரல் சொடுக்கு, கொஞ்சம் அதிகம் உள்ளங்கையால் அதிக ஒலி - ரோமானியர்கள் வழக்கமாம்.
& ரோமாபுரி சிற்றரசன் Applauda Claps என்பவர் கி பி முதல் நூற்றாண்டில், தன்னுடைய அரசவையில் இருந்தவர்களுக்கு ஒரு கட்டளை இட்டான். அரசவையில், அவர் பேசி முடித்ததும், அரசவையில் உள்ள எல்லோரும் கைகளால் ஒலி எழுப்பி, அவர் பேசியதை பாராட்டவேண்டும் என்பதுதான் அது. அப்படி ஆரம்பித்த பழக்கத்கைத்தான் நாம் இன்றும் Applause என்றும் Claps என்றும் அழைக்கிறோம். (ஹி ஹி - சும்மா ஒரு டூப் அடிச்சேன். பதிலுக்கு என்னை அடிக்காமல், கை தட்டுங்க!!)
சாதாரண ரயில் நிலையங்களைப் போல் இல்லாமல் மெட்ரோ ரயில் நிலையங்கள் ஏன் இத்தனை ஆடம்பரம்?
# ரயில் வண்டி சொகுசு அதற்கேற்ப நிலையமும் இருக்க வேண்டாமா ? மேலும் மேலை நாடுகளுக்கு இணையாக இருக்க வேண்டும் என்ற எண்ணமும் இருக்கலாம்.
& ஆரம்ப நாட்களில் 'திருமயிலை' மெட்ரோ ஸ்டேஷனைப் பார்த்து, ஆஹா என்று அதிசயித்தேன். சில வருடங்கள் கழித்தபின் பார்த்தால், ஸ்டேஷன் முழுவதும் அழுக்கு, கூரையில் ஒட்டடை, படிகள் உள்ள பகுதிகளில் மூத்திர நாற்றம் + வெற்றிலைச்சாறு உமிழல்கள் - சென்னை போன்ற நகர் பகுதிகளிலேயே இப்படி என்றால் .. .. ஊஹூம் மெட்ரோ எல்லாம் இந்திய மக்களுக்கு சரிப்படாது.
PS 2 கல்கிக்கு பெருமை சேர்க்கும் என்று நினைத்தால், அதற்குப் பிறகு பலரும் அவர் மீது சேற்றை வாரி இறைக்கிறார்களே??
# கல்கி ஒரு மிகப் பெரிய ஆளுமை - பன்முகத் திறன் கொண்ட மேதை. அவரது புகழை மலிவான கருத்துரைகளைப் பரப்புவதன் மூலம் சிதைப்பதைக் கடந்து நிற்கிறது அவரது மேன்மை. எல்லாவற்றையும் பார்ப்பன சூழ்ச்சி என்று கொச்சைப் படுத்தி திருப்தி காண்பவர்களை காலம் கடந்து செல்லும்;
தமிழகத்தின் சேர சோழ பாண்டிய மன்னர்கள் தமிழ் மன்னர்கள் ஆனாலும், ஒருவரை ஒருவர் எதிரியாகவும் பார்த்து வந்திருக்கிறார்கள். கசப்பான உண்மை. பாண்டியர்களை வில்லன்களாக சித்தரிப்பது, படம் சில பிரதேசங்களில் ஓடுவதை பாதிக்கும் என்ற எண்ணம் கதையை படமாக்குவதில் சில மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கலாம் என்பது எனது எண்ணம்.
= = = = = = = = =
KGG பக்கம்:
எண்ணெய்க் குளியல்.
ஐந்தாம் வகுப்புக் காலம் தொடர்கிறது.
வகுப்பில் அவ்வப்போது circular வரும். அதை ஆசிரியர் படித்துவிட்டு, மாணவர்களுக்கு சொல்லுவார்.
" நாளைக்கு .. .. காரணமாக எல்லோருக்கும் லீவு. " இதைக் கேட்டவுடன் எல்லா மாணவர்களும் காரம் சாப்பிட்டவர்கள் போல " ஸ் ஸ் ஸ் ஸ் .. " என்று ஒலி எழுப்புவார்கள். அது ஏன் என்று எனக்கு இன்றும் புரியவில்லை.
ஒரு திங்கட்கிழமை அன்று ஒரு circular வந்தது. ஆசிரியர் சொன்னார் - " வருகின்ற வெள்ளிக்கிழமை நம் பள்ளிக்கூடத்திற்கு இன்ஸ்பெக்டர் வருகிறார். மாணவர்கள் அனைவரும், சுத்தமான உடை அணிந்து, நேரத்தில் பள்ளிக்கு வரவேண்டும். வகுப்பறை சுத்தமாக இருக்கவேண்டும். மாணவர் அணிகள் அமைக்கப்பட வேண்டும். "
அந்தக் காலத்தில் எனக்கு போலீஸ் என்றாலே பயம். (நான் திருடனில்லை !!) இப்போ இன்ஸ்பெக்டர் வருகிறார் என்று கேட்டவுடன் எனக்கு அடி வயிறு வலிப்பது போன்று இருந்தது. அப்புறம்தான் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேறு, ஸ்கூல் இன்ஸ்பெக்டர் வேறு என்று தெரிந்துகொண்டேன்.
வகுப்பில் இருந்த 20 மாணவர்களும், 12 மாணவிகளும் - குழு பிரிக்கப்பட்டோம்.
மாணவர்கள் மூன்று அணி : மகாத்மா காந்தி அணி, ஜவஹர்லால் நேரு அணி, பாரதியார் அணி.
மாணவிகள் இரண்டு அணி : கஸ்தூரிபாய் அணி, சரோஜினி நாயுடு அணி
ஒவ்வொரு குழுவிற்கும் ஒரு தலைவர், ஒரு உப தலைவர். மற்றவர்கள் சாதாரண உறுப்பினர்கள்.
ஒவ்வொரு குழுவிற்கும் சில குறிப்பிடப்பட்ட பணிகள். குழுவில் உள்ள ஒவ்வொருவரும், அணி வேலைகளுக்காக ஆளுக்கு பத்து பைசா செலுத்தவேண்டும். எங்கள் அணியின் மொத்த கலெக்ஷன் 7 X 10 = 70 பைசா.
என்னுடைய பெயர், மகாத்மா காந்தி அணியில் சேர்க்கப்பட்டது. எங்கள் அணியின் பணிகளில் முக்கியமானது வகுப்பறை சுத்தம் பராமரிப்பது. காந்தி அணியின் தலைவர் & உப தலைவர் இருவரும் கடைக்குச் சென்று கலர் காந்தி படம் வாங்கி வந்தனர் அதை அட்டையில் ஒட்டி, அணி தலைவர், உப தலைவர், உறுப்பினர்கள் பெயர்களை அழகாக எழுதினார்கள். அணி செய்யவேண்டிய பணிகளை எழுதி, பார்டர் வரைந்து, ஜிகினா ஒட்டி அந்த அட்டையை வகுப்பில் தொங்கவிட்டார்கள்.
வெள்ளிக்கிழமை காலையில், ஒரு மணி நேரம் முன்னதாகவே எங்கள் காந்தி குழு உறுப்பினர்கள் - தலைவர், உப தலைவர் தவிர்த்து மற்றவர்கள் - (அவர்களின் வேலை, அட்டை தயாரித்ததோடு முடிந்துவிட்டது) வகுப்புக்கு வந்துவிட்டோம். ஒரு பையன், துடைப்பத்தை எடுத்துக்கொண்டு, வகுப்பறையை பெருக்க ஆரம்பித்தான். ஒரு பையன், ஆசிரியர் அமர்கின்ற நாற்காலி, அவருடைய மேஜை, பையன்கள் உட்காரும் பெஞ்சு ஆகியவற்றைத் துடைக்க ஆரம்பித்தான்.
வகுப்பில் உள்ள கரும்பலகையை கழுவி சுத்தம் செய்வது அணியில் மீதி உள்ள மூன்று பேர்களின் வேலை என்று தீர்மானிக்கப்பட்டது. அந்த மூவரில் நானும் ஒருவன். மூவரில் ராஜு என்ற பையன் சொன்னான். " நம்ம வீட்டுல வாரத்திற்கு ஒருநாள், நமக்கு எண்ணெய் தேய்த்து குளிப்பாட்டுகிறார்கள் அல்லவா? என்னுடைய பாட்டி சொல்லுவா- அப்போதான் உடம்பு சுத்தமாக இருக்கும், உடம்புக்கு நல்லது என்று "
நான் ஆச்சரியமாக அவனைப் பார்த்தேன். 'அட! நான் எப்போதும் வெறுக்கும் எண்ணெய்க் குளியல் இவ்வளவு பயன் உள்ள விஷயமா! '
" நாம நம்முடைய போர்டுக்கு இன்றைக்கு எண்ணெய் குளியல் செய்துவிடுவோம். போர்டு சுத்தமாக இருக்கும். " காந்தி குழுவில் இருந்த எனக்கும் மற்ற பையனுக்கும் இது சரியான யோசனை என்று பட்டது.
ராஜு ஓடிச் சென்று ஸ்கூல் பக்கத்தில் இருந்த செட்டியார் கடையிலிருந்து கொஞ்சம் நல்லெண்ணை & சீயக்காய் பொட்டலம் வாங்கி வந்தான். நான் பக்கத்தில் இருந்த பள்ளிக்கூட குழாயிலிருந்து தண்ணீர் பிடித்து வந்தேன்.
கரும்பலகைக்கு நாங்கள் மூவரும் சேர்ந்து, தண்ணீர், அப்புறம் எண்ணெய், அப்புறம் தண்ணீர், அப்புறம் சீயக்காய்ப் பொடி , அப்புறம் தண்ணீர் என்று மாற்றி மாற்றி ஸ்நானம் செய்வித்தோம். பிறகு ராஜு தன்னுடைய சட்டையைக் கழட்டி ( எப்பொழுதும் போர்டு துடைக்கும் டஸ்டர், சாக் பீஸ் பவுடர் மேக் அப்புடன் சரோஜா தேவி முகம் போல இருந்ததால் ) கரும்பலகையைத் துடைத்தான்.
முதல் பீரியட்.
வகுப்பாசிரியர் வந்தார்.
கரும்பலகையின் வட மேற்கு பிராந்தியத்தில் சாக் பீஸ் கொண்டு 'வந்தே மாதரம்' என்று எழுத முற்பட்டார்.
வழுக்கிய சாக் பீஸ், வந்தே பாரத் ரயில் போல வட, மேற்கு பிராந்தியத்திலிருந்து, மத்தியப் பிரதேசம் வழியாக, தென் கிழக்குப் பகுதிக்கு விரைந்து வந்து நின்றது .
எண்ணெய்க் குளியல் யோசனை சொன்ன ராஜு ( இல்லை இல்லை - இந்தப் பையன் செல்லூர் ராஜு இல்லை) பெஞ்சு மீது ஏறி நிற்கவேண்டியதாயிற்று.
நல்லவேளையாக - அன்று நடக்க இருந்த இன்ஸ்பெக்ஷன் மறு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டதால், எங்கள் பள்ளியின் மானம் 'எஸ் எஸ் ரஜூலா'வில் ஏறாமல், ராஜுவின் பெஞ்சு 'ஏறுதலோடு' காப்பாற்றப் பட்டது.
== = = = = = = = =
அப்பாதுரை பக்கம் :
கருணை
அதிகாலை இரண்டு மணி. "விடிந்ததும் போ" என்ற தோழியைத் தடுத்து "இல்லபா, ஏழு மணிக்கெல்லாம் எக்ஸேம் ஹாலுக்கு ஓடணும்" என்ற லியா, அருகிலிருந்த மற்ற இரு தோழிகளை அணைத்து "பிறந்த நாள் பார்ட்டிக்கு தேங்க்ஸ்" என்றாள். "துணைக்கு வரவா?" என்ற தோழியரை மறுத்து, "கவலை வேண்டாம். அடுத்த தெருக்கோடி தானே.. சிட்டா போயிருவேன்" என்றாள். வரப்போகும் பேராபத்தை அறியாதவளாய்.
லியா மூன்றாமாண்டு மாணவி. இருபது வயதைத் தொட்ட இளைய நிலா. மறு நாள் காலை கணித இறுதித் தேர்வு என்றாலும் தோழிகள் கொடுத்த பிறந்தநாள் பார்ட்டிக்கு மறுக்காமல் வந்திருந்தாள். குடி, சாப்பாடு, சிகரெட், அரட்டை என்று பறந்து போன நேரத்தைச் சலித்தபடி நடந்தாள். தெருமுனை திரும்பி அடுத்த தெருவில் அடியெடுத்ததும் காத்திருந்தாற் போல் மூவர் அவளை அணுகினர்.
ஒருவன் லியாவின் பின்னேயும் இன்னொருவன் அவள் எதிரிலும் நின்று மறித்தனர். சரேலென விலகிப் பின்னால் நின்ற ஆளை எட்டி உதைத்து விலக முயன்றவளின் கைகளை இழுத்து கன்னத்தில் கை வைத்து அழுத்திக் கீழே தள்ளினான் மூன்றாமவன். கத்திக்குரல் கொடுக்க முடியாமல் முழங்காலால் அவள் தலையை அழுத்தினான். கெஞ்சினாள். கொஞ்சம் கூட சப்தம் செய்ய முடியாமல் அவள் தலையை முழங்காலால் அழுத்திக் கொண்டிருந்தான். ஒருவன் லியாவின் ஆடைகளைக் களையத் தொடங்கிய போது அழுதாள், கும்பிட்டாள். "அப்பா, அம்மா, கடவுளே!" என்று மனதுள் கதறினாள்.
திடீரென ஒரு கார் தெருமுனையில் திரும்ப மூவரும் லியாவைப் பிடியில் வைத்தபடி சற்றே விலகினர். அவர்களைத் தாண்டி சில அடிகள் சென்ற கார் சட்டென்று நின்றது. ஒரு தம்பதி இறங்கி லியாவை அணுகினர். "எல்லாம் ஓகேவா?" என்று அவர்கள் கேட்டபடி அருகே வந்தனர். இந்தத் தருணத்தைப் பயன்படுத்தி மூன்றாமவன் பிடியிலிருந்து உதறி விலகிய லியா தலைதெறிக்க ஓடினாள்.
மூன்று அடாவடி இளைஞர்களை ஒரு நடுத்தர வயதுத் தம்பதி அடித்து நொறுக்கியது பற்றி மறுநாள் கேம்பஸ் வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டு ஆச்சரியப்பட்டாள்.
இது நடந்தது 1994ல்.
லியாவுக்கு இப்போது ஐம்பது வயதாகிறது. தன்னைக் காப்பாற்றியவர்கள் பற்றி இன்று வரை எதுவும் அறியாதிருப்பதில் மிகுந்த வருத்தம். "அன்றைக்கு என் தாய், தந்தை, அவர்கள் தினம் வணங்கும் கடவுள் மூவரையும் வலிந்து கதறி அழைத்தது மட்டும் என் நினைவிலிருந்து அகலவேயில்லை" என்று பாட்காஸ்டில் நெகிழும் லியா, "உங்களை அன்றாடம் நினைத்துக் கொள்கிறேன்" என்று அந்தத் தம்பதியருக்கு நன்றி சொல்லி தினம் உறங்குமுன் சில வரிகள் தன் டைரியில் எழுதுகிறாராம்.
- The Hidden Brain தயவில் ஒவ்வொரு செவ்வாயும் வெளிவரும் 'My Unsung Hero' podcastலிருந்து.
வால்:
ஏதோ சிக்கல் என்று கணத்தில் யூகித்து இன்னொருவருக்கு உதவ என்ணி அந்த இரவில் காரை நிறுத்தி இறங்கி வந்த இருவரின் துணிச்சலை வியப்பதா அல்லது 'அந்த நடுத்தர வயது இருவரால் மூனறு ரவுடிகளை எப்படி அடித்துப் புரட்ட முடிந்தது? ஒரு வேளை கடவுளும் சேர்ந்து கொண்டாரோ?' என்று சிலிர்ப்பதா?
கொசுறு:
இரண்டு மூன்றானதை எடுக்காதீர்கள். நான் கணக்கில் வீக்.
= = = = = = =
கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு மாடல்ல மற்றை யவை..
பதிலளிநீக்குதமிழ் வாழ்க..
வாழ்க.
நீக்குகாக்க காக்க
பதிலளிநீக்குகனக வேல் காக்க..
நோக்க நோக்க
நொடியில் நோக்க..
இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
பிரார்த்திப்போம்..
எல்லாருக்கும் இறைவன்
நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..
நலம் வாழ்க..
பிரார்த்திப்போம்.
நீக்குஉள்ளுணர்வு என்றால் என்ன? சகுனங்கள் தானே? "நான் அப்பவே நினைச்சேன். இந்தக் காரியம் நடக்காது என்று." இப்படி ஒரு வினையை வினை நடப்பதற்கு முன் தோன்றிய எதோ ஒரு எண்ணம் அல்லது செயலுடன் முடிச்சுப் போட்டு உள்ளுணர்வு என்று சொல்வது சரியா? இது காக்கை உட்கார பழம் விழுந்தது கதை தான்.
பதிலளிநீக்குகரும்பலகையின் எண்ணெய் குளியல் சிரிப்பு மூட்டியது.
Jayakumar
கருத்துரைக்கு நன்றி.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள. அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருப்பார். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நன்றி.
நீக்குஎண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்..
பதிலளிநீக்குகண்ணுக்கு எண்ணெய் குளியல் நல்லது..
எண்ணுக்கும் எழுத்துக்கும் எண்ணெய் தேய்ப்பது எப்படி?..
கரும்பலகைக்கு தேய்த்து விட்டால் முடிந்தது கதை!..
பள்ளிகளில் சிறப்புப் பாடமாக வைக்கலாம் இதை!..
:)))
நீக்குஅப்பாதுரை ஐயா
பதிலளிநீக்குஅவர்களது பக்கம்
கருணையுடன் வந்திருக்கின்றது..
அ சா நன்றி.
நீக்குஉள்மனம் சரியாகத் தான் சொல்லும். ஆனால் வெளிமனம் விடாதே...!
பதிலளிநீக்கு:)))
நீக்கு..அந்தத் தம்பதியருக்கு நன்றி சொல்லி தினம் உறங்குமுன் சில வரிகள் தன் டைரியில் எழுதுகிறாராம்.//
பதிலளிநீக்குயார் அந்த மர்ம தம்பதி! வனத்தில் வசமாக மாட்டிக்கொண்டு வழி தெரியாமல் திணறிய இளம் ராமானுஜருக்கு வழிகாட்டிய திவ்ய தம்பதியேதானோ...
இருக்கலாம். திக்கற்ற வர்களுக்கு தெய்வமே துணை.
நீக்குஎண்ணைக் குளியல் :)
பதிலளிநீக்குதிரு. அப்பாதுரை அவர்கள் பக்கம் மனதை தொட்டது.
நன்றி.
நீக்குஉள்ளுணர்வு என்பதை சைகிக் பவர் என்பார்கள். இது ஒருவருக்கு ஏன் எப்படி கிடைக்கிறது என்று விள+க்க முடியாது. ஒருவருடைய முன் ஜென்மத்தில் செய்த ஆன்மீக பயிற்சிகளின் விளைவாக கிடைக்கலாம். ஆனால் சில சமயங்களில் நம்முடைய பயங்களை உள்ளுணர்வு என்று தவறாக நினைக்க வாய்ப்பு உண்டு. இதைத் தவிர தீர்க்க தரிசனம் என்று ஒன்று உண்டு. அது திங்கிங்க் அஹெட் ஆஃப் டைம். துக்ளக் படித்து வந்தால் தெரியும்,சோ சில விஷயங்களை சொல்வார், சில மாதங்கள் அல்லது வருடங்கள் கழித்து அது நடந்திருக்கும். உடனே துக்ளக்கில் நாங்கள் அப்போதே சொன்னோம் என்று அந்த செய்தியை எடுத்து போடுவார். இது ஒரு வகையான கணக்கு. மனிதர்களை எடை போடுவதைப் போல சமூகத்தை, சூழலை எடை போட முடியும். இதற்கு ஓபனாக இருக்க வேண்டும் அதாவது இது உசத்தி, இது மட்டம் போன்ற மதிப்பீடுகள் இருக்கக்கூடாது. சயின்ஸ் ஃபிக்ஷன்ஸ் ஒரு வகையில் இந்த வகையைச் சேர்ந்தவைதான். இதில் முக்கியமான விஷயம் தீர்க்கதரிசிகளை வீடோ, சமுதாயமோ, உலகமோ கண்டுகொள்ளாது.
பதிலளிநீக்குநல்ல கருத்து. நன்றி.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய கேள்வி பதில்கள் அனைத்தும் எப்போதும் போல் அருமை. கேள்விகளை கேட்டவர்களுக்கும் பதில்களை சாதுர்யமாக தந்தவர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள். நன்றிகள்.
தங்கள் பக்கம் வெகு சுவாரஸ்யமாக இருந்தது. கரும் பலகைக்கு எண்ணெய் குளியலை அழகாக தந்துள்ளீர்கள். சாக்பீஸ் (சுண்ணாம்பு வகைதானே.. ) தினமும் பயன்படுத்தும் அதற்கும் உடல் சூடு குறைந்து அன்று குளிர்ச்சியாக இருந்திருக்கும். அந்த சந்தோஷத்தில் அது தன் மேல் சாக்பீஸால் எழுதுவதை மறுத்திருக்கும்... :)))
சகோதரர் அப்பாதுரை பக்கமும் அருமை. கடவுள் கண்ணுக்கு தெரியாவிடினும், தன் கண்பட்ட இடங்களில் நடக்கும் அக்கிரமத்தை தடுக்க ஓடி வருவார்... பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
கருத்துரைக்கு நன்றி.
நீக்கு