ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2024

நான் தரிசனம் செய்த கோயில்கள் – ஐந்து துவாரகைகள் யாத்திரை – பகுதி 33 : நெல்லைத்தமிழன்

 

நந்தகோபர் மாளிகையை அடைந்தது வரை சென்ற வாரத்தில் குறிப்பிட்டிருந்தேன். சென்ற வாரத்தில் பகிர்ந்த யமுனை நதி, அதே ஆண்டு மார்ச் மாதத்தில் சென்றிருந்தபோது எப்படி இருந்தது என்பதைக் கீழே பாருங்கள். தொழிற்சாலையிலிருந்து வந்து சேரும் கழிவுகளால் நுரைத்துக்கொண்டு கெமிக்கல் நுரைகள் நீரை மறைக்க, யமுனை பாய்கிறது.

 

இதை எழுதும்போதே, ஜீன்ஸ் துணிகள், சாயப்பட்டறைகள் போன்றவற்றிர்க்காக நீர் அளவுக்கு அதிகமாகச் செலவழிகிறது என்ற காரணத்தால் இத்தகைய தொழிற்சாலைகளை, வளர்ந்த நாடுகள் இந்தியா, பங்களாதேஷ் போன்றவற்றில் வைத்துக்கொள்கிறது (அல்லது அவர்களுக்கு பிஸினஸ் கொடுக்கிறது). பண வரவா இல்லை நீர் நிலை பாதுகாப்பா என்பதில் நம் அரசியல்வாதிகள் தேர்ந்தெடுப்பது நம் நாட்டின் நிலைமைக்கு முக்கியக் காரணம். சரி.. அரசியலை விட்டுவிட்டு யாத்திரைக்கு வருவோம்.

 

கோகுலம்யமுனை ஆறு (மார்ச் மாதத்தில்)

 

நீரையே மறைக்கும் அளவு கெமிக்கல் நுரை

 


நந்தகோபர் மாளிகையின் முதல் தளத்தில்தான் ஸ்ரீகிருஷ்ணர், குழந்தையாக இருந்த இடம் இருக்கிறது (இதையெல்லாம் ஒரு குறியீடாகத்தான் நாம் பார்க்கவேண்டும்). அந்தச் சன்னிதியில் ஸ்ரீகிருஷ்ணர் தன் பரிவாரங்களுடன் இருந்தாலும், சிறிய தொட்டிலில் குழந்தைக் கிருஷ்ணரை வைத்திருக்கிறார்கள். பக்தர்கள் அந்தத் தொட்டிலை ஆட்டவும் வாய்ப்பு தருகிறார்கள். நன்கொடை வாங்கிக்கொண்டு ரசீதும் கொடுக்கிறார்கள் (பல தலைமுறைகளாக அந்த நன்கொடைப் புத்தகங்கள் காப்பாற்றப்பட்டு வருகின்றன என்று சொல்கிறார்கள்)

 


 


 

இந்தச் சுவற்றின் எதிரே உள்ளது நந்தபவன் .

 




சில படிகளைக் கடந்து ஏறினால், முதல் தளத்தில் இடதுபுறம் நந்த கிலா என்று சொல்லப்படும் நந்த அரசின் குழந்தை கிருஷ்ணரின் சன்னிதி. அதன் எதிரே, மூன்று நான்கு சிறிய சன்னிதிகள் இருக்கின்றன.

 

குழந்தை கிருஷ்ணர் சன்னிதி

 


 

குழந்தை கிருஷ்ணர் இருக்கும் சன்னிதி (மண்டபம்) எதிரே சிறு சிறு சன்னிதிகள் உள்ளன. அவற்றில் க்ருஷ்ணன் கோகுலத்தில் இருந்தபோது நட ந்தவைகளுள் சிலவற்றை சிற்பமாக வைத்துள்ளார்கள். அங்கு இரண்டு மூன்று பண்டாக்கள் இருக்கின்றனர்.  முதல் தடவை அந்தச் சன்னிதிகளை நான் பார்த்தேன். அப்போது எடுத்த படங்களை இங்கு பகிர்கிறேன்.

 



இவற்றையெல்லாம் தரிசனம் செய்த பிறகு தொட்டில் கிருஷ்ணர் இருக்கும் மண்டபத்துக்குச் சென்றோம். கருவறையில் ஸ்ரீகிருஷ்ணருடைய பரிவாரங்கள் இருக்கின்றார்கள் (பெரிய சிலை வடிவத்தில்). கருவறையின் முன்பகுதியில் சிறிய தொட்டிலில் குழந்தை கண்ணன் இருக்கிறார். தொட்டிலின் இரு கயிறுகள் நெடிதாக இருக்கின்றன.

 



சன்னிதியில் சிறிது நேரம் காத்திருந்த பிறகு, இரண்டு இரண்டு பேராக முன் சென்று கருவறையில் ஸ்ரீகிருஷ்ணரின் சிறு தொட்டிலை ஆட்டினோம். எப்போதும் போல டொனேஷனுக்கு (நிஜமாகவே டொனேஷன்) 50-200 ரூபாய் கொடுப்பவர்களுக்கு பிரசாதம் தந்தார்கள். அது சரி.. மூடியிருக்கும் சன்னிதியைக் காண்பித்தேன். (அதுதான் கருவறை). அதில் உள்ள மூலவர்களைக் காண்பிக்கவில்லையே என்று பார்க்கிறீர்களா?

 

 

ஸ்ரீகிருஷ்ணர் பரிவாரங்களுடன். கீழே தெரிவது ஊஞ்சலில் குழந்தை கிருஷ்ணர்.

 


படங்கள் எடுக்கக் கூடாது என்று ரொம்பவே ஸ்டிரிக்டா இருக்கிறார்கள். எப்படியோ நான் படங்கள் எடுத்தேன்.

 

தொட்டிலை ஆட்டி பிரசாதம் பெற்றுக்கொண்ட பிறகு, கருவறையை வலம் வந்தோம். கருவறையின் வலது புறத்தில் கல்கண்டு பிரசாதம் தருகிறார்கள். அந்த இடமும் திறந்திருப்பதால் கருவறையை நெருக்கமாக தரிசிக்க முடியும்.

 

மண்டபத்தை விட்டு வெளியில் வந்த பிறகு, அங்கிருக்கும் பெரிய சாளரத்தின் வழியாகப் பார்த்தால் யமுனை ஆறு ஓடுவது தெரியும். யமுனை ஆற்றை அங்கிருந்து சில படங்கள் எடுத்துக்கொண்டேன்.



மார்ச் மாதங்களில் யமுனையின் நிலை. பனிப்பாளங்கள் செல்வதுபோல கெமிக்கல் நுரைகள். தண்ணீர் முழுமையாக மாசடைந்திருக்கிறது.

 

இது இன்னொரு வருடம் மார்ச் மாதத்தில்

 


மே மாதத்தில் சிறிது பரவாயில்லையோ?  இரண்டு சமயத்திலும் படகுகள் யமுனை ஆற்றில் செல்வதைக் காணலாம்.  அது சரிநான் யமுனை ஆற்றில் படகுப் பயணம் மேற்கொண்டேனா என்ற சந்தேகம் வருகிறதா?  யமுனையில் படகில் சென்றேன், ஆனால் கோகுலத்தில் அல்ல, விருந்தாவனத்தில். அதைப் பிறகு காணலாம்.

 

 நந்தகீலாவில் குழந்தை கிருஷ்ணரை தரிசனம் செய்த பிறகு, நாங்கள் பலராமர் அவதார இட த்தை (கோகுலத்தில்) தரிசிக்கச் சென்றோம்.  ஸ்ரீ கிருஷ்ணரின் ந ந்த பவனமும், பலராமர் அவதாரத் தலமும் மிகவும் ப்ராசீனமான (புராதானமான) இடங்கள் என்று போட்டிருந்தார்கள். வழிவழியாக அந்த இடங்களில் கோவில்கள் இருந்திருக்கும். அதனைப்பற்றி அடுத்த வாரம் காணலாமா?

 (தொடரும்) 

61 கருத்துகள்:

  1. //சரி, அரசியலை விட்டு விட்டு... //

    விடுவானேன்? அது பாட்டுக்க அது. இது பாட்டுக்க இது.

    இரண்டும் சேர பொழுது தான் கவிஞனின் பாட்டும், திரை இசையும் ஒன்றுக்கு ஒன்று பின்னிப் பிணைகிற உற்சாகம் மனதில் பிறக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல உவமை. அளவாய்ச் சொன்னால் அனைத்தும் இனிக்கும்!

      நீக்கு
    2. உண்மைதான் ஜீவி சார். நாம் அனைவருமே கட்சி அரசியல் மதச் சார்பு உடையவர்கள். அதனால் அரசியல் பேசினால் நட்பு பாதிக்கும். பலர் பெர்சனலாக எடுத்துக்கொள்வர்.

      எனக்குத் தெரிந்து கீதா சாம்பசிவம் மேடம் மாத்திரம்தான் இத்தகைய கருத்து மோதல்களால் பாதிப்புறாமல், உங்கள் கருத்து உங்களுக்கு, என் கருத்து எனக்கு என சுமுகமாக எதிர்கொள்வார்.

      நீக்கு
  2. //நீரையே மறைக்கும் அளவுக்கு.//

    ஹி..ஹி.. தமிழகம் பரவாயில்லை போலிருக்கே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமோதிக்கிறேன்.  தமிழக நதிகளில்தான் தண்ணீரே இருக்காதே...   சு த்தமாக இருக்கும்!

      நீக்கு
    2. தமிழக ந்திகளில் திருப்பூர் கோயமுத்தூர் பகுதி நீர்நிலைகள் சாயப்பட்டறைகளினால் பாதிப்புக்கு உள்ளாகியருக்கு. மற்ற ஆறுகளில் மணற்கொள்ளையாலும் கட்டாந்தரையாகப் போனதால் மரங்கள் வளருவதாலும் பாதிக்கப்பட்டிருக்கிறது. கேரளாவில் ஆற்றில் மணல் அள்ள முடியாது, பொதுச் சொத்து என்பதால்

      நீக்கு
    3. ஹி..ஹி.. தமிழகம் பரவாயில்லை போலிருக்கே!//

      இல்லை, நொய்யல் ஆற்றை பார்த்தால் தெரியும், ஏன் சென்னையில் பக்கிங்க் கால்வாயைப் பார்த்தால் தெரியும். கால்வாய் இருந்ததா என்று கேட்கலாம். கூவம் அடையார் எல்லாமே கழிவுகள் பெருகித்தான் இருக்கின்றன. வட சென்னை வெளிப்புறத்தில் இருக்கும் சில தொழிற்சாலைக் கழிவுகள் ஆற்றில் கலந்து மிகவும் மோசமான நிலையில் இருந்தது. படங்களோடு பெரிய கட்டுரையே வந்தது சில வருடங்களுக்கு முன்னர். இப்பவும் நிலைமை மாறவில்லை.

      கீதா

      நீக்கு
    4. கேரளாவில் ஆற்றில் மணல் அள்ள முடியாது, பொதுச் சொத்து என்பதால்//

      நெல்லை கேரளத்திலும் இருந்தது. sand mining இருந்தது. இப்ப 6 நதிகளின் மணலை எடுக்கக் கூடாது என்றும் வேறு சில நதிகளின் கரைகளில் குறிப்பிட்ட அளவு எடுத்துக் கொள்ளலாம் என்றும் விதிகள் போட்டிருக்காங்க. அம்புட்டுத்தான்.

      கீதா

      நீக்கு
    5. பம்பா நதி(?) அதாவது திருவிற்றக்கோடு அந்த நதிக்கரையில்தான் இருக்கிறது, மணல் அள்ள அனுமதி கிடையாது. இதில் ஊர் மக்களும் அரசாங்கமும் ஸ்டிரிக்டா இருக்காங்களாம். இதனைக் கேட்டபின்புதான் எனக்கு அந்த மாதிரி அபிப்ராயம் வந்தது. ஆற்று மணல், கனிம வளங்கள் தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு ஏற்றுமதி ஆகிறது. அதற்குப் பதில் அங்கிருந்து மருத்துவக் கழிவுகள், குப்பை கூளங்கள் கோயமுத்தூர் பகுதிக்கு இறக்குமதி ஆகிறது

      நீக்கு
    6. ஆமோதிக்கிறேன். தமிழக நதிகளில்தான் தண்ணீரே இருக்காதே... சு த்தமாக இருக்கும்!//

      ஹாஹாஹா இப்பம், அங்கன கொண்டு கழிவு குப்பைய கொட்டறாங்கவே!!!!!!!

      இங்க பெங்களூரில் எல்லா ஏரிகளின் கரைகளிலும் குடியிருப்புகள் அங்கருந்து வர கழிவு எல்லாம் ஏரிகளுக்குள்!!!! பல கழிவுகள் மிதப்பதைப் பார்க்கலாம்.

      அப்படி ஒரு காலத்தில் மல்லேஸ்வரம் பகுதியில் இருந்த பெரிய நன்னீர் ஏரி, மழைத்தண்ணீர் வடிகால் இருந்த ஏரி ஆங்கிலேயர் காலத்தில் உருவாக்கப்பட்டு பெங்களூருக்கே தண்ணி விநியோகித்த ஏரி - Sankey tank இப்ப பல காலமாக மக்களின் ஆக்ரமிப்பால், மழைநீர் வடிகால் ஓடைகளில் கழிவுகள் போடப்பட்டு அவை ஏரியில் விடப்பட்டு, உருக்குலைந்து இப்ப எஞ்சி இருக்கற பகுதிய இன்னமும் ஏரின்னு சொல்லிக்கிட்டு சுத்தி பூங்கா அமைச்சிருக்காங்க நடைபாதையுடன். பறவைகள் வருவதும் குறைந்துவிட்டது. ஆங்கிலேயர் காலத்திலிருந்தே தண்ணீ மோசமாகத் தொடங்கியதாம்.

      கீதா

      நீக்கு
    7. பம்பா நதி(?) அதாவது திருவிற்றக்கோடு அந்த நதிக்கரையில்தான் இருக்கிறது, மணல் அள்ள அனுமதி கிடையாது. //

      அரசு குறிப்பிட்டிருக்கும் அளவிற்குள் அள்ளலாம் என்ற விதிமுறைக்குள் இருக்கு பம்பை.

      என் நினைவு சரியாக இருந்தால் 2015 என்று நினைக்கிறேன்.....அப்ப நெய்யார், கபினி, கல்லடா, வாமனபுரம், குட்டியாடி, சந்திரகிரி இப்படி 6 ஆறுகளில் மணல் எடுக்கக் கூடாதுன்னு..

      அரசு சொல்லும் அளவிற்குள் குறிப்பிட்ட கால இடைவெளியில் எடுக்கலாம்ன்ற விதிமுறைக்குள் சாலியாறு - (இப்ப வயநாட்டில் வெள்ளம் ஏற்பட்ட ஆறு) பம்பை, பெரியாறு இன்னும் இரண்டு உண்டு நினைவில் இல்லை இவை அந்த லிஸ்டில்.

      இப்ப கூட சில நாட்களுக்கு முன், மணல் கொள்ளை கேஸ் - ஆலப்புழை அருகில் பீச் மணல் கொள்ளை ஒன்று கேரள கோர்ட்டில் வந்திருக்கு. அரசு மீண்டும் இந்த மினரல் மண்ணை எடுக்க அனுமதி கொடுத்ததை எதிர்த்து மக்கள் குரல் கொடுக்கறாங்கன்னு செய்தி.

      கீதா

      நீக்கு
    8. 2015 ல் கூட மூன்று வருடங்களுக்குத்தான் அந்த ஆர்டர் போட்டிருந்தாங்க. அப்புறம் 23 ல மீண்டும் ஆற்று மண்ணை எடுக்கலாம்னு அரசு அனுமதி வழங்கியிருக்கு. அப்ப ஏன் ஆறுகள் பொங்காது!!

      இதெல்லாம் நான் ஒரு பதிவுக்காக எடுத்து வைத்திருந்தேன். ஹூம் எங்க எழுதினேன்?

      கீதா

      நீக்கு
    9. ஆற்று மணல், கனிம வளங்கள் தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு ஏற்றுமதி ஆகிறது.//

      ஹாஹாஹா நெல்லை அங்கு இருக்கறவங்களும் மனுஷங்கதான், அங்கும் பீச் மணலில் கனிம வளத்திற்காக மணலை சுரண்டறாங்களே!

      God's own country ன்னு அவங்க சொல்லிக்கலாம் ஆனா அங்கயும் சுரண்டல்கள் இருக்கு. உதாரணம் சமீபத்து வயநாட்டில் ஆக்ரமிப்புகள். மலைக்கு மேல ரெசார்ட், கேளிக்கைகள் அது இதுன்னு தனியார் புகுந்ததுனாலதானே இத்தனை சீரழிவு!

      கீதா

      நீக்கு
    10. கேரளாவில் நடப்பதை நிறைய எழுதியிருக்கீங்க. உங்களுக்கு நிறைய விஷயம் தெரிந்திருக்கிறது.

      ஆக்கிரமிப்புகள், கேளிக்கை விடுதிகள் என்று பல அத்துமீறல்கள் அங்கு உண்டு. அதனால்தான் பெரியாறு அணையின் உயரத்தைக் குறைக்கவேண்டும் என்று குரல் நிறைய எழுகிறது (காரணம் அதைச்சுற்றியுள்ள ஆக்கிரமிப்பு). இருந்தாலும் தமிழகத்தை நோக்கும்போது கேரள மக்கள் கொஞ்சம் உஷாரானவர்கள், அரசியல் தெளிவு நிறைந்தவர்கள், பொது நன்மை என்பதைப் பார்ப்பவர்கள், ஆட்சியாளர்களைக் கேள்வி கேட்கத் தெரிந்த்வர்கள் என்பது உண்மை.

      நீக்கு
  3. நந்தலீலா தெரியும்.

    நந்தகீலா?.. கீலா என்றால் என்ன நெல்லை?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோட்டை, துறைமுகம், மாளிகை என்றெல்லாம் பொருள் கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.  இங்கு மாளிகை!

      நீக்கு
    2. கிலா என்பது கோட்டை, மாளிகை என்ற அர்த்தத்தில் வரும் என நினைக்கிறேன் ஜீவி சார்.

      நீக்கு
  4. கோகுலம் என்பதால்
    குழந்தை கிருஷ்ணர் எல்லா இடங்களிலும்...
    புரிகிறது.

    இருந்தாலும்
    மஹாபாரத கிருஷ்ணர்
    சந்நிதி எங்குமே இல்லையா?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜீவி சார். பஞ்சதுவாரகை யாத்திரையில் அனேகமாக பல நிலைகளில் இருந்த ஶ்ரீகிருஷ்ணரின் வாழ்விடங்களைப் பார்த்துக்கொண்டு வருகிறோம். அதில் கோவர்தன், மதுரா முடிந்ததும் குருக்‌ஷேத்திரம்தான்.

      நீக்கு
  5. முருகன் திருவருள் முன் நின்று காக்க...

    பதிலளிநீக்கு
  6. யமுனை கெட்டு எத்தனையோ காலம் ஆகிவிட்டது.

    இதே போன்றுதான் திருப்பூர் மற்றும் திருப்பூரைச் சுற்றி உள்ள தொழிற்சாலைகளும் நொய்யல் ஆறும்.

    //பண வரவா இல்லை நீர் நிலை பாதுகாப்பா என்பதில் நம் அரசியல்வாதிகள் தேர்ந்தெடுப்பது நம் நாட்டின் நிலைமைக்கு முக்கியக் காரணம்//

    நெல்லை, பணவரவும் வேணும், நீர் நிலைகளையும் பாதுகாக்க முடியும். ஒரு தொழிற்சாலையைக் கொண்டு வரும் முன், அதை எப்படி ஆக்க பூர்வமாகக் கொண்டு வரமுடியும்? அதனால் வரும் பாதிப்புகள் என்ன அதை எப்படிச் சரி செய்ய வேண்டும் என்று எதிர்கால நோக்கில் அதாவது தொழிற்சாலை விரிவடைந்தாலும் இந்தப் பாதிப்புகள் ஏற்படாமல் செய்ய முடியும் என்று யோசித்து திட்டமிட்டுச் செயல்படுத்த வேண்டும்.

    நம் நாட்டில் எனக்குத் தெரிந்தவரை பல தொழிற்சாலைகளைத் துவக்கும் போது தற்காலிகமாகத் தேவைகளை மனதில் கொண்டே துவங்குகிறார்கள்.

    5 ஆண்டுத் திட்டம்னு வந்தப்ப கூட அந்த 5 ஆண்டுகளில் என்ன வருமானத்தைப் பெருக்கலாம் என்றுதான் யோசனைகள் வைக்கப்பட்டனவே அல்லாமல் சுற்றுச் சூழல் பாதிப்புகளைப் பற்றி பேசப்பட்டது மிகவும் குறைவு அதை சீரியஸாக எடுத்துக் கொள்ளவும் இல்லை என்பதே நான் படித்த வரையில் புரிந்து கொண்டது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் கீதா ரங்கன். மேற்கத்தைய நாடுகளில் எல்லாவற்றையும் holistic approachஆகப் பார்க்கிறார்கள். நம்ம நாட்டில் எல்லாத் தொழில்களிலும் அரசியல் கட்சிகள் லஞ்சம் பெற்றுக்கொள்வதால் (அதிகாரிகளும்தான்) சட்டம் பின்னுக்குத் தள்ளப்பட்டுவிடுகிறது. இதுபற்றி எழுத ஆசை, வம்பாகிடுமோ என யோசிக்கிறேன்.

      நீக்கு
    2. ஆமாம், கூடவே நம்ம நதிகளில் குளிக்க அனுமதிக்கறாங்க இல்லையா? ஆனால் மேற்கத்திய நாடுகளில் எல்லா இடங்களிலும் அப்படிக் குளிக்க முடியாது என்பதோடு சோப்பு ஷாம்பூ எதுவும் பயன்படுத்தக் கூடாது என்பதும் உண்டு.

      இங்கு அப்படி இல்லையே இந்த கெமிக்கல் நுரைகளில் துணி துவைக்கும், குளிக்கும் நுரையும் உண்டு.

      எத்தனை பேர் நதிகளில் குளிக்கும் போது உச்சா அடிக்காம குளிப்பாங்க சொல்லுங்க?

      கீதா

      நீக்கு
    3. கீதா ரங்கன்(க்கா), நாம் நதியைப் பார்ப்பதற்கும், மேற்கத்தையவர்கள் பார்ப்பதற்கும் பெரிய வித்தியாசம் உண்டு. அவர்கள் நதியை பொதுச் சொத்தாகப் பாவித்து, அந்தத் தண்ணீரின் அருமையைப் புரிந்துகொண்டு யாரையும் அசுத்தம் செய்யவோ இல்லை உபயோகிக்கவோ அனுமதிக்க மாட்டாங்க. நாம் அப்படி இல்லை. கொஞ்சம் தூரம் தள்ளி எருமைகள் குளித்துக்கொண்டிருக்கும், எதிர்க்கரையில் நம்ம ஆள் கால் கழுவிட்டிருப்பான். அதன் பக்கத்துப் படித்துறையில் துணி தோய்ப்பாங்க. நாம இங்கனக்கா குளிச்சுக்கிட்டே இருப்போம்.

      //உச்சா அடிக்காம // - சில பெரிய ஹோட்டல்களில் அறைகளில் இந்த அறிவிப்பு இருக்கும். நீச்சல் குளத்தில் கெமிக்கல் கலந்திருப்பதால், சூசூ போனால், நம் உடம்பில் சிவப்புக் கறை படியும் என்று. ஹா ஹா ஹா

      நீக்கு
  7. யமுனை புண்ணிய நதி!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

    என்னைப் பொருத்தவரை எல்லா நீர் நிலைகளும் புனிதமானவை. காக்கப்பட வேண்டும். நான் மதம் சம்பந்தப்படுத்தி எதையும் பார்ப்பதில்லை. பிள்ளையார்பட்டி பிள்ளையாரும், நடைபாதையில் தேமேன்னு இருக்கும் பிள்ளையாரும் ஒன்றே என்பது என் தனிப்பட்ட சிந்தனை கருத்து!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீர்நிலைகள் புனிதம் என்பதற்காகத்தான் ஒவ்வொரு ந்திக்கும் ஒரு சம்பந்தத்தைக் கோர்த்துவிட்டிருக்கிறார்கள்.

      அப்பாவை எங்கு பார்த்தாலும் அப்பாதான். இருந்தாலும் கடைத் தெருவில் சந்தித்து ஹாய் சொல்லிவிட்டுப் போவதைக் காட்டிலும், அப்பாவின் வாழ்விடத்துக்குச் சென்று காண்பது மேலானது அல்லவா? அதே அப்பாவைத் தன் வீட்டிற்கு அழைத்துப் பாதுகாப்பதைப் போன்றதுதான் நாம் வீட்டில் தினம் செய்யும் பேசை, ஆராதனம்(கோயிலாழ்வாருக்கு, நம் நித்ய பூசைப் பெட்டிக்கு)

      நீக்கு
    2. நெல்லை என் கருத்து இதில் முரண்படுகிறது. அப்பாவின் கருத்து இதில் பொருந்தாது. நாம் பேசுவது பொதுச் சொத்துகளை. எலல மக்களுக்குமான சொத்துகளை. எல்லாமே இந்த பிரபஞ்ச சக்தியால் உருவாக்கப்பட்டவை. எல்லாவற்றையும் புனிதமாகப் பார்க்கும் போதுதான் நமக்கும் அடிப்படை மரியாதை எழும். எங்கப்பாவை எல்லாரும் மதிக்கணும்னு நான் நினைக்க மாட்டேன்.

      கங்கை, யமுனை, காவிரி புனிதம்னு சொல்றோம் ஆனால் நொய்யல் ஆற்றிற்கு அப்படி எதுவும் இல்லையே. பக்கின்காம், கூவம் அடையாறு எதுக்கும் அப்படியான முக்கியத்துவம் கொடுக்கலையே. அதுவும் புனிதமாகக் கருதப்பட்டால் ஒவ்வொரு நதியின் கிளைகளும் புனிதமாகக் கருதப்பட்டால் கங்கைக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவ்ம் கொடுக்கப்படும்.

      கீதா

      நீக்கு
    3. இன்னும் இருக்கு ஆனால் நான் தவிர்க்கிறேன்.

      கீதா

      நீக்கு
    4. இந்த இடத்தில் ஸ்ரீராம், எழுதிய ஒரு விஷயம் நினைவுக்கு வருது. அவர் முன்பிருந்த பகுதியில் சுவற்றின் அருகில் இருந்த மரத்தில் பலரும் உச்சா அடிச்சதும், நாறியதும், அவர் என்ன செய்தார் என்பதும்!!!

      கீதா

      நீக்கு
    5. /எங்கப்பாவை எல்லாரும் மதிக்கணும்னு நான் நினைக்க மாட்டேன்.// கான்சப்டை நீங்க புரிஞ்சுக்கலைனு நினைக்கிறேன் கீதா ரங்கன். நமக்கு நம் அப்பா மாதிரி, நம் நாகரீகத்துக்கு நதி. நதிக்கரையில்தான் நாகரீங்கங்கள் உதித்தன. அதனால் நமக்குப் பெற்றோர் மாதிரி, நம் இடத்து நதி.

      அடையாறு, அங்கிருக்கும் மக்களுக்குப் புனிதமாக இருந்திருக்கவேண்டும். நொய்யல் ஆறு மற்றும் எல்லா ஆறுகளும் அந்த அந்த வாழ்விட மக்களுக்குப் புனிதமாக இருந்திருக்கவேண்டும். அப்படி அந்த மக்கள் நினைத்திருந்தால் அசுத்தப்படுத்தியிருக்க மாட்டார்கள்

      நீக்கு
    6. கங்கையின் புனிதமாய காவிரி என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதன் அர்த்தம் எல்லா நதிகளும் புண்ணிய நதிகள்தாம். கங்கையே பலவித ஆறுகளின் சேர்க்கைதான் அல்லவா?

      நீக்கு
  8. படங்கள் எல்லாம் நல்லாருக்கு நெல்லை,

    பழைய புராதான இடங்கள் என்று தெரிகிறது.

    அப்பலாம் நந்தகோபன் மாளிகைக்கு எதிரில் இப்படி அடைசலாக வீடுகள் இருந்திருக்காது என்று நினைக்கிறேன், தெருக்களும் பெரிசா இருந்திருக்கும் சின்ன கிராமமாக நில புலன்களோடு இருந்திருக்கும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்க சொல்வது போன யுகம். பெங்களூர்ல பல இடங்கள்ல பார்த்தால் உங்களுக்குத் தெரியும். கோவில், அதனை ஒட்டி குடியிருப்புகள். ஒட்டி என்றால் அதன் சுவற்றோடு ஒட்டி. நான் ஏராளமான புராதனமான (400 ஆண்டுகளுக்கும் முன்பிருந்த) கோவில்களை கே ஆர் மார்க்கெட் அருகிலிருக்கும் சாலையில் பார்க்கிறேன். ஆனால் அங்கு கோவில் இருக்கிறதா என்பது நீங்கள் நன்றாக கவனித்தால்தான் தெரியும். சுவற்றையொட்டியே கமர்ஷியல் கடைகள், வளாகங்கள்.

      நீக்கு
  9. படங்கள், தகவல்கள் வழக்கம் போல அருமை.

    அரசியல் நமது வாழ்வில் பிரிக்க‌ முடியாதது எங்கும், எதிலும் அரசியல் சார்ந்தே நாம் பேச, எழுத முடியும்.

    இதே யாத்திரையில் தங்களுக்கு எல்லா சௌகரியங்களும் கிடைத்தால் மகிழ்சியாக அதை எங்களோடு பகிர்ந்து கொள்ள முடியும்.

    அப்பொழுது ஆட்சியாளர்களை நாம் பெருமையாக சொல்வோம்.

    இங்கு பலரும் அரசியல் பேச தயங்குவது தவறாகும்.

    அரசியல் அலசல் நல்லது அது நமது தனிப்பட்ட வாழ்க்கையை பாதிக்காமல் விவாதிக்கலாம்.

    என்னைப் பொருத்த வரையில் தமிழக மக்களில் பலருக்கும் அரசியல் ஞானம் இல்லை.

    எந்த நாட்டிலும் சிறந்த ஆட்சியாளர்களை ஒருபோதும் மக்கள் குறை சொல்லமாட்டார்கள்.

    அரசியல் முழுமையாக தெரியாத கூட்டத்திலிருந்து கில்லர்ஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கில்லர்ஜி.... யாத்திரையில் சௌகரியக் குறைவு என்று சொல்லமுடியாது. வட நாட்டையோ இல்லை மற்ற இடங்களையோ பார்க்கும் வாய்ப்பு வரும்போது அங்குள்ள நல்லது கெட்டது கண்ணில் படுகிறது.

      //சிறந்த ஆட்சியாளர்களை ஒருபோதும் மக்கள்// - செத்த பிறகு பெருந்தலைவர் காமராசர் என்று புகழ் பாடி என்ன பிரயோசனம் கில்லர்ஜி? தோற்கடித்தது அவரது மக்கள்தானே

      நீக்கு
    2. தமிழக மக்களுக்கு வடபுலத்தினரை விட அரசியல் உணர்வு அதிகம் என்பது என் எண்ணம். அதனால் தான் தமிழக அரசியல் கட்சிகளோடு கூட்டு வைத்துக் கொண்டு தங்கள் இருப்பை தமிழகத்தில் குறைந்த பட்சம் தெரிவிக்கவாவது முடிகிறது. அவர்கள் தனித்து பெரும்பான்மை பெருவது என்பது சாத்தியமில்லாமலேயே இருப்பதற்கான காரணங்கள் நிலைத்து இருக்கும் வரை இந்த நிலையே நீடிக்கும்.

      கேரள, மேற்கு வங்க நிலைமைகள் வேறு மாதிரி.

      நீக்கு
    3. கேரளாவிலும் பல பிரிவு கம்யூனிஸ்டுகள் இணைந்துதான் கூட்டாக அரசமைக்கிறார்கள். அரசியல் கட்சிகள் கூட்டணியாக இருப்பதால் அவர்களின் இருப்பு தெரிகிறது என்றாலும், அவர்கள் மக்களுக்காகப் பணி செய்யாமல், கூட்டணி தலைமைக்கு அடிமையாக இருப்பது பெரிய பலவீனம் என்று எனக்குத் தோன்றுகிறது. அதனால் ஆக்கபூர்வமான விமர்சனம் எதையும் அவர்களால் செய்யமுடியாது போகிறது, அடுத்த எலெக்‌ஷனில் சீட்டு கிடைக்கணுமே என்ற எண்ணத்தால்.

      நீக்கு
    4. மக்கள் பணி என்பது இப்பொழுதெல்லாம்
      பொதுவான விஷயங்களின் உள்ளடக்கமாகி விட்டது.

      அரசு ஊழியர்களின் வேலை பாதுகாப்பு, வங்கிகளின் மக்கள் நலனுக்கான பங்களிப்பு, மக்களின் சொத்தான அ.இ.பிர்மாண்ட நிருவனங்களை தனிப் பெரும் செல்வந்தர்கள் வசமாக்காது அவற்றின் வளத்தை நேரடியாக அரசின் மக்கள் நல திட்டங்களுக்கு அடிப்படை வருமானமாக்குவது -- அதன் மூலம் மக்களின் வரிச்சுமையைக் குறைப்பது, மொழி வாரி மாகாணங்கள் அமைந்து விட்ட காலகட்டத்தில் அந்தந்த மாநிலத்தில் அந்த மானிலம் சார்ந்த மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்தல், எல்லா மாநில மக்களையும் சம அந்தஸ்த்தில் வைத்து அவர்களை போஷிக்கும் மனப்பான்மை, இந்தியத் திரு நாட்டின் சொத்துக்களுக்கு
      நேர்மையான பாதுகாவனாய் இருப்பது என்று இப்படி வெகுஜன மக்கள் சார்ந்தவை பல. மக்கள் சார்ந்த அரசு என்ற உணர்வினை ஏற்படுத்துதல் முக்கியமாகிறது.

      நீக்கு
  10. தமிழக அரசியலில் மொழி முக்கிய பங்களிப்பது புரிந்து கொள்ளக் கூடியதே.
    அந்தப் பிடிப்பு அறுந்து விட்டால் எல்லாவற்றையும் இழந்தவர்களாகி விடுவோம் என்ற அவர்கள் உள்ளுணர்வும் நியாயமானதே. இதை அ.இ.அ.கட்சிகள் புரிந்து கொண்டால் பெருவாரியான மக்கள் மனத்தில் இடம் பெறுவது சுலபமாகிப் போகும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த மொழிப் பிடிப்பு ஒவ்வொரு மாநிலத்திலும் இருக்கிறது. ஆனால் தமிழகத்தில் இருந்ததைப்போல இந்தி எதிர்ப்பு பல மாநிலங்களில் இருந்ததில்லை. இது அரசியலா அல்லது உண்மையான உணர்வா என்பதில் எனக்குச் சந்தேகம் உண்டு. இந்தி எதிர்ப்பு என்றால், தங்கள் சொந்தப் பள்ளிகளில் மாத்திரம் இந்தியைப் போதிப்பது, தமிழக அரசு பாடமுறையை உள்ளே கொண்டுவராமல் இருப்பது என்பது தன்னலம்தானே.

      நீக்கு
    2. ஒரு மாநிலத்தில் பெருவாரியான மக்கள் பேசும் மொழி என்பது அவர்கள் அடிப்படை உரிமை சம்பந்தப்பட்டது. வேற்று மொழி புழக்கத்துக்கு வந்தால் அன்றாட ஜீவனத்தையே அவரால் நடத்த முடியாது. மற்றவர் என்ன சொல்கிறார் என்ன கேட்கிறார் அதற்கு தான் என்ன பதில் சொல்ல வேண்டுமென்றே என்றே தெரியாத பரிதாப நிலை ஏற்படும். அவனை சுலபத்தில் ஏமாற்றி அடிமை கொண்டு விடலாம். நீ அடிமையாகாதிருக்க வேண்டுமானால் மற்ற மொழிகளையும் கற்றுக் கொள்ள வேண்டும் என்று எளிய மக்களை வற்புருத்துவதும் நியாயமாகாது.
      இந்த கோணத்தில் மொழிப் பிரச்சனையை அணுக வேண்டும்.
      தவறை யார் செய்தாலும் அது தவறு தான்.

      நீக்கு
    3. //வேற்று மொழி புழக்கத்துக்கு வந்தால் அன்றாட ஜீவனத்தையே அவரால் நடத்த முடியாது.// அப்படி எனக்குத் தோன்றவில்லை ஜீவி சார்.. காரணம் பிஸினெஸ் செய்பவர்களுக்கு மொழி ஒரு தடை அல்ல. பிரச்சனை என்னவென்றால், மொழி என்பது உணர்வுபூர்வமானது. நான் மலையாளிகளிடம் பேசும்போது அவங்க மலையாளத்தில்தான் பெரும்பாலும் பேசுவாங்க. நமக்கு நம் அமிழ்தினும் இனிய தமிழ் மொழி. ஹிந்தி கற்றுக்கொள்வதிலோ இல்லை பேசவேண்டிய நிலையில்தான் இருந்தால் அடிச்சுப் பிடிச்சுப் பேசுவதிலோ தவறில்லை, ஆனால் நம் தாய்மொழி நமக்கு உயர்ந்தது. அதில் மாற்றுக் கருத்து யாருக்குமே இருக்காது.

      நீக்கு
    4. நான் சாதாரண மக்களை குறிப்பிட்டுச் சொன்னேன். பிஸினஸ் செய்பவர்களை அல்ல.

      நீக்கு
  11. யமுனை நதியில் கெமிக்கல் நுரைகள். பார்த்ததும் மனதிற்கு மிகவும் வேதனையாக இருக்கிறது. இப்படியான நதிகளை எல்லாம் பாதுகாக்க வேண்டியது நமது கடமை. அதுவும் கோயிலுக்கு வருபவர்கள் நதிகளில் முங்கி எழ விரும்புவார்கள் தானே. இப்படி தொழிற்சாலை கழிவுகளை நதிகளில் தள்ளுவது என்பது மனதிற்கு மிகவும் வேதனை தருகிறது. இப்படியான தவறுகள்தான் பேரிழப்புகளை நமக்கு உண்டாக்குகிறது என்பதோடு, எதிர்கால சந்ததியினருக்கும் நல்ல தண்ணீர் கிடைக்காமல் செய்கிறோம் அல்லது தண்ணீரே இல்லாமல் செய்கிறோம் என்பது கொடூரம் அல்லவா?

    படங்கள் எல்லாம் மிக நன்றாக இருக்கின்றன. குறிப்பாக எடுக்கக் கூடாது என்று தடை இருக்கும் இடத்தில் ரிஸ்க் எடுத்து கிருஷ்ணர் படங்களை எங்களோடு பகிர்ந்தமைக்கும் மிக்க நன்றி.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க துளசிதரன் சார். மிக்க நன்றி. யமுனை ஆற்றில் கெமிக்கல் நுரைகள் மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. மக்களுக்கு குடிநீராகக் கூடிய நதியில் இப்படி கழிவைக் கலந்துவிடுவதா என்று தோன்றியது. ஆனால் வாக்குகள் காரணமாக அரசாங்கம் இதனைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுகிறது.

      நீக்கு
  12. சிறப்பான தரிசனம்..
    அழகான படங்கள்...

    மகிழ்ச்சி..
    நன்றி..

    பதிலளிநீக்கு
  13. காழ்ப்பு மிகுத்திருந்த அரசன் ஒருவன் தான் கங்கையில் கழிவு நீரைத் திருப்பி விட்டான்...

    அவன் பெயரைச் சொல்ல வேண்டியதில்லை..

    ஆங்கிலேயன்களும் இந்த அராஜகத்தைத் தொடர்ந்து செய்திருக்கின்றனர்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க துரை செல்வராஜு சார்... இப்போதும் பல ஆறுகளை நாம் பாழ்படுத்திக்கொண்டுதானே இருக்கிறோம்... பாருங்க... காவிரி மிகச் சமீபத்தில் கரைபுரண்டு ஓடியது. எல்லா நீரும் கடலை அடைந்துவிட்டது.

      நீக்கு
  14. யமுனை - வேதனை. பல நாட்களில் இப்படி நுரையுடன் தான் இருக்கிறது யமுனை - தில்லியில் யமுனையைத் தாண்டும்போது அடிக்கும் துர்நாற்றம் மனதில் வேதனை தரக்கூடியது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க தில்லி வெங்கட்... துர்நாற்றமா? சில மாதங்கள் முன்பு வெள்ளத்தினால் கரைபுரண்டு ஓடியதே யமுனை.

      நீக்கு
  15. வணக்கம் நெல்லைத் தமிழர் சகோதரரே.

    பயணத்தில் இந்த வாரத்திய படங்களும், பதிவும் நன்றாக உள்ளது. கோகுலத்தில் ஸ்ரீ கிருஷ்ணர் தரிசன படங்கள் அனைத்தும் அருமை. தொட்டில் கிருஷ்ணர் படமும் நன்றாக உள்ளது. யமுனை நதி படங்கள் மனதை கலங்க வைக்கின்றன. ஒரு புனிதமான நதியில் கழிவு நீர் வகையறாக்களை இப்படி கலக்க விடுவது பாவமில்லையா? மனித மனங்களை எத்தனை சுத்தமாக வடிக்க இறைவன் முயற்சித்தும் பயனில்லை போலும்.!

    தங்களின் சுவாரஸ்யமான ஞாயறு பதிவுகள் சில வாரங்கள் படிக்க இயலாமல் தவறுகிறது. ஆனால், ஒருநாள் அனைத்தையும் படித்து விடுவேன்.இன்றைய வார பகிர்வுக்கு மிக்க நன்றி. தொடர்கிறேன். நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா ஹரிஹரன் மேடம். எப்படி இருக்கீங்க. ரொம்ப வேலைப் பளுவா? நலம்தானே?

      இன்னும் ஐந்தாறு வாரங்களில் இந்த யாத்திரைத் தொடர் முடிந்துவிடும்.நன்றி

      நீக்கு
    2. வணக்கம் சகோதரரே

      நடுவில் சளி ஜுரம் என ஒரு வாரம் அவதிப்பட்டு இப்போது நன்றாக உள்ளேன். ஆமாம். உறவுகளின் வருகையால், நாட் முழுவதும் வேலை பளுதான். அதனால்தான் தொடர்ச்சியாக பதிவுகளுக்கு வர இயலவில்லை. அடுத்த மாதத்திலிருந்து எப்போதும் போல வர முடியுமென நம்புகிறேன். தங்களின் அன்பான விசாரித்தலுக்கு மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  16. முன்பு போய் இருந்த போது எடுத்த யமுனை நதி படங்களை பார்த்து மனம் வருத்தம் அடைகிறது.
    படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது.
    நந்கோபர் மாளிகையில் படங்களை பார்த்தவுடன் கண்ணதாசனின் ஆயர் பாடி மாளிகையில் பாடல் நினைவுக்கு வருகிறது.
    நீங்கள் நின்று கொண்டு இருக்க மற்றவர்கள் அமர்ந்து இருக்கும் படத்தை பார்த்ததும் பழைய நினைவுகள் வந்தன.
    நாங்கள் அமர்ந்து இருந்து பண்டா பேசியதை கேட்டதும் , கண்ணன் தொட்டிலை ஆட்டியதும். நினைவுக்கு வந்தது.

    பதிலளிநீக்கு
  17. படங்கள், விவரங்கள் எல்லாம் அருமை.
    அடுத்த வாரமும் தொடர்கிறேன், இந்த ஞாயிறு வெளியூர் போய் இருந்தோம். திங்கள் மாலைதான் வந்தோம்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!