வெள்ளி, 2 ஆகஸ்ட், 2024

ஒரு பொழுது மலராக கொடியில் இருந்தேனா

 கேட்கவும், பகிரவும் மனதில் நிற்கும் சில பாடல்களைத் தேடுவதும், அது கிடைக்காமல் போவதும் அவ்வப்போது நிகழும்.. அது கிடைக்காமல் போகும்.  அப்புறம் வேறு பாடலுக்குப் போய் அதைப் பகிர்வேன்.  அப்படி சில நாட்களாக நான் தேடிக்கொண்டிருந்த பாடல் "கற்பூர ஒளியினிலே கந்தா உன் காட்சி கண்டேன்"  பாடல்.  கே வீரமணி பாடிய பாடல்.

 

பாடல் கிடைத்ததே பெரிது என்னும் நிலையில் யார் எழுதியது, யார் இசை என்றெல்லாம் கிடைக்காதது பெரிய விஷயமாகத் தெரியவில்லை. 

நான் இப்படி தேடுபொறியில் உள்ளிட்டு தேடும் சில பாடல்கள் அப்புறம் அதன் காரணமாகவோ, யதேச்சையாகவோ கிடைப்பதைப் பார்த்திருக்கிறேன்.  அப்படியான சில பாடல்கள் தலைவர் பாடிய 'எந்த இரவு முதல் இரவு' பாடல், ராமநாமத்தை சொல்பவன் எவனோ , அருளே மானிட வடிவாகி, வங்கக்கடலில் ஒரு முத்தெடுத்தேன், வானாதி வானங்களில் போன்ற சில பாடல்கள்.

இந்தப் பாடல் கிடைத்த இடத்திலேயே நான் தேடிக்கொண்டிருக்கும் இன்னொரு பாடலும் கிடைத்தது.  அது அடுத்த வாரம்!

நேற்று செல்வாண்ணாவின் தஞ்சையம்பதி பதிவில் கற்பூரம் பற்றி சொல்லி இருந்தார்.  இன்று இங்கே இந்தப் பாடல் பகிர்வதை நேற்று நான் அங்கே சொல்லி இருந்தேன்.


ஓம் ராஜாதிராஜாய பிரசஹ்ய சாஹினே நமோவயம் வைஸ்ரவனாய குர்மஹே ஸமேகமான் காம காமாய மஹ்யம் ! காமேஸ்வரோ வைஸ்ரவனோத தாது ! குபேராய வைஸ்ரவனாய மகாராஜய நம: கற்பூர நீராஜனம் ஸமர்ப்பயாமி 

கற்பூர ஒளியினிலே கந்தா உன் காட்சி கண்டேன் 
கற்பூர ஒளியினிலே கந்தா உன் காட்சி கண்டேன் 
பொற்பதமே மகிழ்ந்தருள்வாய் 
பூமகளின் மருமகனே - கற்பூர 

சரவணப் பொய்கையிலே தவழ்ந்து வந்த சிவபாலா 
பரமனுக்கே குருவானாய் பழுத்த பழம் நீயானாய்...  - கற்பூர ஒளியினிலே 

பாலமுதம் அன்னையிடம் பண்ணமுதம் தந்தையிடம் 
வேலவனே வேலமுதம் விளையாடும் உன்னிடமே 
ஆறுபடை வீடமைத்த ஆறுமுகப் பெருமானே 
நேருவது உன்னருளே தேவர் தொழும் பரம்பொருளே 
தேவர் தொழும் பரம்பொருளே  

துதிப்பாடல் நான்பாட துணை நிற்கும் சத்குருவே 
 துதிப்பாடல் நான்பாட துணை நிற்கும் சத்குருவே
மதியாவும் தந்திடுவாய் மால்மகனின் பேரமுதே 
மோனத்தவம்  புரிவோமே உன்னருளே முருகையா
ஞானப்பழ கனிரசமே நான் என்றும் உன் வசமே 
நான் என்றும் உன் வசமே    -  கற்பூர ஒளியினிலே 


https://youtu.be/EE9gxnYQs-4?si=O50dVP96Xmfu_J53

                 

====================== =========================================

Chase A Crooked Shadow என்று 1958 பி வெளிவந்த ஆங்கிலப்படத்தால் கவரப்பட்டு 1963 ல் ஹிந்தியில் Sesh Anka என்று உத்தம்குமார் நடிப்பில் படம் எடுத்தார்கள்.  அதைத் தமிழில் 1964 ல் சிவாஜி ப்ரொடக்ஷன் சார்புகள் புதிய பறவை என்று எடுத்தார்கள்.

சிவாஜி பிலிம்ஸுக்கு தமிழில் இது முதல் படம்.  முன்னதாக தயாரித்த இரண்டு ஹிந்திப் படங்களை சேர்த்தால் மொத்தத்தில் மூன்றாவது. பின்னர் இந்நிறுவனம் சிவாஜி பிலிம்ஸ் என்ற பெயரில் அப்போது இருந்த இந்நிறுவனம்தான் பின்நாட்களில்  சிவாஜி புரோடக்ஷன்ஸ்  என்று மாறி விட்டது!

 படத்தில் சிவாஜியின் தந்தையாக காட்டப்படுவது  படத்தின் இயக்குனர் தாதா மிராஸி.

எல்லா பாடல்களும் விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில் ஸூப்பர் ஹிட் என்றாலும் இன்று நான் பகிர இருப்பது P. சுசீலா குரலில் வரும் சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து.பாடல்...

ரசனையான ஒரு காட்சி அமைப்பில் சிவாஜி கணேசன், சரோஜா தேவி..

பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்ட படம் என்பதால் படத்தைப் பற்றிச் சொல்ல நிறைய விஷயங்கள் வைத்திருக்கிறார்கள்.


சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திட கண்டேனே
செவ்வானம் கடலினிலே கலந்திட கண்டேனே (3)

மொட்டு விரிந்த மலரினிலே வண்டு மூழ்கிட கண்டேனே
மூங்கிலிலே காற்று வந்து மோதிட கண்டேனே
ஹோய் - சிட்டுக்குருவி

பறந்து செல்லநினைத்து விட்டேன் எனக்கும் சிறகில்லையே
பழக வந்தேன் தழுவ வந்தேன் பறவை துணையில்லையே } (2)

எடுத்து சொல்ல மனமிருந்தும் வார்த்தை வரவில்லையே 
என்னென்னவோ நினைவிருந்தும் நாணம் விடவில்லையே ஹோய்

சிட்டுக்குருவி


ஒரு பொழுது மலராக கொடியில் இருந்தேனா 
ஒரு தடவை தேன் கொடுத்து மடியில் விழுந்தேனா

இரவினிலே நிலவினிலே என்னை மறந்தேனா 
இளமை தரும் சுகத்தினிலே கன்னம் சிவந்தேனா
ஹோய் - சிட்டுக்குருவி

https://youtu.be/XLETWdhRYvo?si=DJnbeqw309q8EtI3

= = = = = = =

61 கருத்துகள்:

  1. முதல் பாட்டிற்கு முன்னுரை போல பதிவுக்குப் பாடல் தேடலில் உங்களுக்குகந்த அனுபவத்தைச் சொல்லியிருக்கிறீர்கள்.
    வாசிக்க விவரிப்பு பிடித்திருந்தது.

    பதிலளிநீக்கு
  2. அப்படியான தேடலில்
    இசையமைப்பு, பாடலைப் பாடியவர்கள் என்றளவில்
    உங்கள் மனத்திற்குப் பிடித்திருந்தால் திருப்தி ஏற்பட்டு விடுகிறது என்று நினைக்கிறேன். சரி தானே?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிகத் தவறான கணிப்பு ஸார்.  பாடல் பிடித்திருந்தால், பாடல் மனதில் இடம் பிடித்தால் மட்டுமே மற்ற விவரங்கள் தேவைப்படும்.

      நீக்கு
  3. பாடலை இயற்றியவர்,
    பாடல் வரிகளில் தன்னாலே வந்து அமர்ந்த உன்னதங்கள், நீயா, நானா போட்டி மாதிரி இசைக்காக பாடல் வரிகளை சிதைக்காமல்
    இரட்டை மாட்டு சவாரி மாதிரி இரண்டையும் ஒரு சேர கையாண்ட கவிஞனின் திறமை, வார்த்தைகளில் இருக்கும் குற்றம், குறைகள் இதெல்லாம் தான் எனக்குத் தட்டுப்படும். இசையின் உள்ளார்ந்த மேன்மைகள் தெரியாமல் மேலோட்டமாக இசையை ரசிப்பதால் இந்தப் போக்கு என்னில் படிந்து விட்டதென நினைக்கிறேன். இருப்பினும் இசையில்லாமல் பாடல் இல்லையா, இல்லை பாடல் இல்லாமல் இசை இல்லையா என்ற கேள்விக்கு விடை பாடலின் நேர்த்திக்கே என் மனம் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது. நீங்களோ
    இசைக்குத் தான் அதிக முக்கியத்துவம் கொடுப்பதாக உணர்கிறேன். இதை வேறு விதத்தில் விளக்க வேண்டுமானால் எஸ்.பி.பி--யா? கண்ணதாசனா? என்றால் கண்ணதாசனிடம் தான் என் கவனம் மேலாகப் படியும். உங்களுக்கோ எஸ்.பி.பி. ஏன் இந்த வேறுபாடு நம்மில் ஏற்படுகிறது என்பதை தங்கள் உணர்விற்கேற்ப சொல்ல முடியுமா? இன்னொரு பாடல் ரசிகரின் ரசிப்பைத் தெரிந்து கொள்வதற்காகவே இந்தக் கேள்வி என்று கொள்ள வேண்டுகிறேன், ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // கண்ணதாசனிடம் தான் என் கவனம் மேலாகப் படியும். உங்களுக்கோ எஸ்.பி.பி. //

      மறுபடியும் தவறான அவதானிப்பு ஜீவி ஸார்.  வரிகளும் சிறப்பாக இருக்க வேண்டும்.  முக்கியமாக பாடப்படும் வரிகள் கேட்பவர்கள் காதில் விழுந்து புரிய வேண்டும்.  இசையால் ஆக்கிரமிக்கப்பட்டு வார்த்தைகள் காதில் விழாமல் போகக்கூடாது.  வரிகள் மனதை வருட வேண்டும்.  "நானுறங்கும் நாள் வேண்டும்..  சாய்ந்துகொள்ள தோள் வேண்டும்..  என் கண்ணில் நீர் வேண்டும்..  சுகமாக அழ வேண்டும்...  "  ஏன் இந்த வரிகள் மனதிலேயே தங்கி நிற்கின்றன?  "பால் மணக்கும் பருவத்திலே உன்னைப்போல் நானிருந்தேன்..  பட்டாடைத் தொட்டிலிலே சிட்டு போல் படுத்திருந்தேன்...  அந்நாளை நினைக்கையிலே என் வயது மாறுதடா...  பிள்ளையாய் இருந்துவிட்டால் இல்லை ஒரு துன்பமடா..   "  இந்த வரிகள் எல்லாம் மனதில் ஏன் இடம் பிடித்திருக்கின்றன?  உங்கள் கேள்வியிலிருந்து என்னை நீங்கள் ஒரு விசிலடிச்சான் குஞ்சு ரேஞ்சுக்கு மனதில் நினைத்திருக்கிறீர்கள் என்று தெரிகிறது.  பரவாயில்லை.  அதனால் என்ன!

      நீக்கு
    2. நீங்கள் வரிக்கு மட்டும் முதல் முக்கியத்துவம் என்று தோன்றுகிறது.  நான் வரிகளுக்கும், இசைக்கும் சேர்த்தே முக்கியத்துவம் கொடுக்கிறேன்.  எத்தனையோ கண்ணதாசன் பாடல்கள், வாலி பாடல்கள் திரையில் இடம்பெறாமல் அச்சில் மட்டும் வெளிவந்திருக்கின்றன.  அவற்றில் எத்தனை வரிகளை உங்களால் நினைவுகூர முடியும்?  இசையுடன் சேரும்போது மனதில் படிய அது வாகனமாகிறது.  இசை ஒரு சிறந்த ராகத்தில் கிடைக்கும்போது மனதைப் பிசைகிறது.  மெஹபூபா என்றொரு ஹிந்திப் படம் அதில் மேரே நைனா என்று ஒரு பாடல் வரும் தேடிக்கெட்டுப் பாருங்கள்.  உங்களுக்கு மொழியே புரியாவிட்டாலும் மனதை உருகும்.  சிவரஞ்சனி ராகம்.  அதற்கு வரிகளும் பொருள்களும் அவசியமில்லை.  இசையால் கவரப்பட்டபின் அந்த வரிகளுக்கான அர்த்தம் என்ன என்று தேடி ஓடத்தோன்றும்.  பள்ளியில் கூட மனப்பாட செய்யுளை ராகத்துடன் கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்கள் உண்டு.  "ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்" வரிகளை இன்னும் தெய்வசிகாமணி டீச்சர் குரலில்  கைகளை ஆட்டி  நினைவுகூர முடிகிறது!

      நீக்கு
    3. இது எப்படி இருக்கு என்று ஒரு படம்.  அதில் எஸ் ஜானகியும் கே ஜெ யேசுதாசும் (ஆம் யேசுதாஸ்தான்..  ஜேசுதாஸ் இல்லை!) பாடிய 'எங்கும் நிறைந்த இயற்கையில் என்ன சுகமோ' என்றோ ஒரு பாடல் வரும்.  காட்சியைப் பார்க்காமல் நல்ல ஒரு ஸ்பீக்கரில் அந்தப் பாடகைக் கேளுங்கள்.  அதன் இன்டர்லூட் இசையில் என்னென்ன உணர்வுகள் தோன்றுகின்றன என்று பாருங்கள்.  மலைச்சாரலில் பயணிப்பீர்கள்.  காற்றில் அலைவீர்கள்.   

      நீக்கு
    4. சுகம் சுகமே என்று ஒரு பாடல்...  நான்  படத்தில்...  அந்தப் பாடலின் இடைவரும் இசைக்கோர்வைகளைக் கேட்டுப் பாருங்கள்.  மனதில் ஒரு பரவசம் வரும்.  வயது மறந்து வாலிபமாகி விடுவீர்கள்!

      நீக்கு
    5. ரொம்ப உணர்ச்சி வயப்பட்டு விட்டீர்கள் போலிருக்கு. 'தலைவர் பாடிய' என்று பெயரைக் கூடச் சொல்லாத பிரியமான வரியைப் பார்த்ததும் கேட்கத் தோன்றியது. அவ்வளவு தான். Take it easy Shriram.

      நீக்கு
  4. முதல் பாடலை ஓரிரு முறை கேட்டிருந்தாலே அதிசயம். அதனால்தான் வரிகளைப் படித்ததும் பாடல் மனதில் ஒலிக்கவில்லை. காணொளி கேட்டேன். பாடல் நன்று

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ.. அப்படியா? இது நான் அடிக்கடி கேட்ட பாடல் மட்டுமின்றி வரிகளும் 90 சதவிகிதம் மனப்பாடம்!

      நீக்கு
  5. இரண்டாவது பாடல் பலமுறை கேட்டு மனதில் தங்கிவிட்ட ஒன்று. ஆனால் பாருங்க, ஒரு பொழுது சரணம் மாத்திரம் நினைவுக்கு வரவில்லை. அதனால்தான் தலைப்பைப் படித்ததும் பாடல் நினைவுக்கு வரவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சில சமயம் அப்படி ஆகும். மிகவும் தெரிந்த பாடல் கூட அப்படிக் குழப்பும். நேற்று ரீலிஸ் தொகுதியில் ஒரு பாடல் வரி கேட்டேன். முன்பு 'நிலவைக் கொண்டு வா' பாடலை கிண்டல் செய்து மீம்ஸ் போடும் குழு. அது போன்ற ரீல். அதில் 'அந்தரத்தில்
      பந்தல் ஒன்று போடவா  நான்பந்தலுக்குள் பந்து விளையாடவா'
      என்ற வரிகளை மட்டும் பாடி விழிகளை உயர்த்தி இருந்தார்கள்.

      நான் அதன் டியூனுடனே மனதில் பயணித்தாலும் பாடலின் தொடக்கம் சட்டென பிடிபடவில்லை. 'செவ்வானத்தில் ஒரு நட்சத்திரம்' பாடலோ என்று நினைத்தேன். பின்னர்தான் கூகுள் செய்து தெரிந்து கொண்டேன்!

      நீக்கு
  6. தலைப்பைப் படித்ததும் குயிலாக நானிருந்தென்ன பாடலில் வரும் வரியா என யோசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என் லிஸ்ட்டில் இருக்கும் பாடல்களில் ஒன்று. இது கேட்கும்போதே இன்னொரு பாடலும் என் நினைவில் வந்து விடும். பூவினும் மெல்லிய பூங்கொடி....

      நீக்கு
    2. அதன் அடுத்த வரி, பொன்மலர் காட்டும் பைங்கிளியா?

      நீக்கு
    3. நீங்கள் நினைக்கும் பாடால்தான்... பொன்னிறம் காட்டும்
      பைங்கிளி சிறு மாவிலை பின்னிய தோரணம் இரு மைவிழி நாடக காவியம் அவள் வாழ்க தினம் வாழ்க -இந்த
      ஏழை நெஞ்சின் கோவிலில் தெய்வ பெண்ணாக...

      நீக்கு
  7. ஜீவி சாரின் கேள்வி எனக்குப் பலமுறை தோன்றியிருக்கிறது.

    பாடல்களிலேயே மூன்று விதங்கள் உண்டு. காட்சியையும் உணர்ச்சியையும் பார்வையாளனுக்குக் கடத்தவேண்டிய பாடல், எழுதப்பட்டு நல்ல இசையில் அமர்ந்துகொள்ளும், அல்லது வரிகளுக்கே முக்கியத்துவம் இருக்கும். இதற்கு ஏகப்பட்ட உதாரணங்கள் உண்டு. அந்த நல்ல கவிதை வரிகள் நல்ல இசையில் உட்கார்ந்துவிட்டால் நெஞ்சில் நீங்கா இடம் பெற்றுவிடும்.

    இரண்டாவது, நல்ல இசை. இதில் எந்த வரிகள் உட்கார்ந்தாலும் நம்மால் ரசிக்க முடியும். அர்த்தமுள்ளவை அமர்ந்தால் இன்னும் சிறப்பு. அதனால்தான் மொழி புரியாத பல பாடல்களை நம்மால் ரசிக்க முடிகிறது.

    மூன்றாவது ரசனைக்குறைவான அல்லது துள்ளலிசைப் பாடல்கள், டப்பாங்குத்து போன்றவை. இதில் கவிதை நயத்தைக் காண இயலாது.

    இசையமைப்பாளர் தேவா சொல்வது, தயாரிப்பாளர்கள் இசைக் கோர்வையைப் புரிந்துகொண்டு இந்தப் பாடல் இருக்கட்டும் எனக் கேட்கத் தெரியாது. பாடல் தேவையான இடத்தின் சம்பவ வார்த்தைகளை டம்மியாகப் போட்டுப் பாடலின் முதல் வரிகளைப் பாடும்போதுதான் இது நல்லாருக்கு, வேற மாதிரி இசை வேணும் என்று சொல்லத் தெரியும் என்பார். அதனால் எந்தப் பாட்டுக்கும் பாடல் வரிகள் அவசியம் என்பார். அது தவிர பல தயாரிப்பாளர்கள், இசையமைப்பாளர் முழுப் பாடலையும் பாடும்போது அதில் கவரப்பட்டு அந்தக் குரலே மனதில் தங்குவதால் நீங்களே பாடிவிடுங்கள் என்பார்கள். இசையமைப்பாளனுக்கே தெரியும், யார் பாடினால் பாடல் மேன்மைபெற்று ஹிட் ஆகும் என்று. அதனால் புகழ்ச்சிக்கு மயங்காமல் தொழில் நேர்த்தி பாடல் வெற்றி இவற்றை மனதில் கொண்டு சரியான பாடகரை வைத்துப் பாடவைக்கவேண்டும் என்பார்.

    ஆக, மூவரும் அவசியம், இருந்தாலும் இசையமைப்பாளர்தான் முக்கியமான பிரம்மா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கும் இந்தக் கருத்துதான்.  வைரமுத்து சொன்ன ஒரு கருத்து சமீபத்தில் பலத்த சர்ச்சைக்குள்ளாகி 'இசையா, வரியா' சண்டை இணையத்தில் ஓடிக் கொண்டிருந்தது.  நான் ஒரு தளத்தில் இட்ட பின்னூட்டம் 165 லைக்குகள் பெற்றது.  ஜீவி ஸாரின் கேள்வி வேறு விதமானது.    என் ரசனையையே சந்தேகப் படுகிறார்.  
      மேலும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ரசனை. 

      ஸார் நினைபபது போல தன் கருத்து, ரசனை சரி, மற்றவர்கள் ரசனை கொஞ்சம் வளராதது, முதிர்ச்சியற்றது என்று நினைபபவர்கள் இருக்கிறார்கள். 

      நீக்கு
    2. அப்படியில்லை. நான் சொன்னதை தவறாகப் புரிந்து கொள்வோரிடம் அவரது புரிதலுக்காக வாதிடுவேன். அதுவும் நாம் சொன்னதை தெளிவாக அவருக்குப் புரியும் விதத்தில் விளக்க வேண்டுமே என்ற அக்கறையில். அவ்வளவு தான்.

      நீக்கு
    3. சமயங்களில் அது தவறாக புரிந்து கொள்ளப்பட்டு விடுகிறது.!

      நீக்கு
  8. இரண்டாவது பாடலில்
    'மொட்டு விரிந்த மலரினிலே' என்ற ரொம்ப ரொம்ப நாஸூக்கான வார்த்தைகளைப் படித்ததும் இது யார் எழுதிய பாடலாக இருக்கும் என்று யோசித்தேன். கண்ணதாசனா, வாலியா?
    குறிப்பு கிடைக்குமோ என்று தேடினேன்.
    விஸ்வநாதன் -- ராம்மூர்த்தி இசை, பி
    சுசீலா குரலில், சிவாஜி-- சரோஜா தேவி எல்லோரும் இருந்தார்கள். பாடலை எடுத்துப் போடும் பதிவில் பாடலாசிரியரை மட்டும் காணோம்.
    கடைசியில் கண்ணதாசனுக்கும் வாலிக்கும் இறுக்கும் நுண்ணிய வித்தியாசத்தில் (கண்ணதாசனில் இலக்கிய தரமான மூடுதிரை -- வாலியில் அந்த அளவு இல்லாத லேசான வெளிப்படை)
    கொண்டு, இது கண்ணதாசனது தான் என்று முடிவுக்கு வந்தேன்.
    சரி தானோ, ஸ்ரீராம்?

    பதிலளிநீக்கு
  9. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  10. அனைவருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  11. நேற்று தாங்கள் சொல்லிய பிறகு நான் நினைத்துக் கொண்ட பாடல் வேறு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது என்ன பாடல்? சினிமா பாடலில் நினைத்தீர்களோ?

      நீக்கு
  12. முதல் பாடல் முன்பு வானொலியில் அடிக்கடி கேட்டது காலையில்.
    கேட்டு வெகு நாட்கள் ஆகி விட்டது. இன்று கேட்டேன்.
    அடுத்த பாடல் பழைய பாடல் நிகழ்ச்சியில் அடிக்கடி கேட்கும் பாடல். இனிமையான பாடல். எல்லா தொலைக்காட்சியிலும் வைத்து விடுவார்கள்.
    இன்றும் கேட்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வீரமணி பாடல்தான் ஸ்பெஷல்... நன்றி கோமதி அக்கா.

      நீக்கு
  13. இந்தக் கற்பூர பாடல் வீரமணி அவர்களது ஆரம்பகாலப் பாடல்களில் ஒன்று...

    வெகுகாலத்துக்குப் பிறகு கேட்கின்றேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் ஏற்கனவே சொல்லி இருக்கிற படி நானும் வெகு நாட்களாக தேடிக் கொண்டிருந்த பாடல் தான்.

      நீக்கு
  14. புதிய பறவை பாடல்கள் எல்லாம் காலத்தை வென்றவை ஸ்ரீராம்! அதில் மிக அழகான காட்சியமைப்பு கொண்ட, தேனிசைக்குரலில் சுசீலா அவர்களின் பாடலை இன்று வெளியிட்டு மகிழ்ச்சியடைய செய்து விட்டீர்கள்!
    இசை, வரிகளையும் தாண்டி காட்சியமைப்பு என்ற ஒன்றும் இருக்கிறது. நீங்கள் சொல்லியிருக்கும் ' பூவினும் மெல்லிய ' பாடல் கூட இசையாலும் வரிகளாலும் லக்ஷ்மியின் சிறந்த நடிப்பாலும் புகழ் பெற்றது!
    ஹிந்தியில் ' ஹமேன் தும்ஸே ப்யார் கித்னா ' என்ற பாடலை கிஷோர் குமார் அத்தனை நெகிழ்வுடன் பாடி உருகச்செய்வார். அதே பாடலை பர்வீன் சுல்தானா முற்றிலும் வேறு மாதிரி அதே பைரவி ராகத்தில் பாடி அசத்தியிருப்பார். பாடல் முடிந்து போனாலும் அது மனதிலே சில மணி நேரங்கள் தங்கி இம்சிக்கும். ராகங்களும் இசையும் சேர்ந்தால் அதற்கு எல்லை எங்கே இருக்கிறது?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கு கிஷோர் வெர்ஷன் தான் பிடிக்கும். எனக்கும் மிகவும் பிடித்த பாடல் தான்.

      காட்சி அமைப்பு என்று சொன்னால், ஹிந்தி பாடல்களில் நான் இரண்டு பாடல்கள் சட்டென்று சொல்லுவேன். ஒன்று பிளாக்மெயில் படத்தில் வரும் பல் பல் பல் தில்கே பாஸ். இன்னொன்று மௌசம் படத்தில் வரும் தில் தூண்ட்தா...ஹை ஃபிர்வஹி..

      நீக்கு
  15. புதிய பறவையின் பாடல் என்றும் புதியது.. என்றும் இனியது..

    பதிலளிநீக்கு
  16. ஆயிரம் கொக்குகள் கேமராக்களைத் தூக்கிக் கொண்டு நின்றாலும் பழைய பறவையைப் போல் ஒரு புதிய பறவையைத் தர முடியாது!..

    பதிலளிநீக்கு
  17. முதல் பாடல் கேட்டதே இல்லை ஸ்ரீராம். இப்போதுதான் கேட்கிறேன். ரொம்ப நன்றாக இருக்கிறது, ஸ்ரீராம். கொஞ்சம் கொஞ்சமாக மேல் ஸ்தாயிக்குப் போறப்ப சூப்பரா இருக்கு. ராக மாலிகை என்று தோன்றுகிறது.

    பாலமுதம் அன்னையிடம் பண்ணமுதம் தந்தையிடம்//

    பாலமுதம் புரிகிறது பண்ணமுதம்? என்றால்?

    'பண்' அமுதம்?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ராகமாலிகையா ?என்னென்ன ராகம்? பண் அமுதம் தான் அது.

      நீக்கு
  18. இரண்டாவது பாடல் நிறைய முறை கேட்டிருக்கிறேன், ஸ்ரீராம். பல முறை. ரசித்த பாடல். இசையும் பாடல் வரிகளும் செமையா சேர்ந்திசைக்கும் பாடல். இதனை அப்போதைய பாடல்கள் பலவற்றிலும் காணலாம். இதுக்கான இசை மிக அருமையா போட்டிருக்காங்க இரட்டையர் லெஜன்ட்ஸ்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கு இப்போது ஒரு சந்தேகம் வருகிறது கீதா! நான் அனைவரும் அறிந்த பாடல்களை பகிர வேண்டுமா? அல்லது புதிய பாடல்களாக அறிமுகப்படுத்த வேண்டுமா? இரண்டும் கலந்து தான் கொடுத்து வருகிறேன்.

      நீக்கு
  19. /// அது என்ன பாடல்? சினிமா பாடலில் நினைத்தீர்களோ?///


    உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டு!...

    நான் நினைத்துக் கொண்ட பாடல் -

    கற்பூர நாயகியே கனகவல்லி!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கற்பூர நாயகியே பாடல் ஏற்கனவே பகிர்ந்த நினைவு

      நீக்கு
  20. இரண்டு பாடல்களும் கேட்டு ரசித்து இருக்கிறேன் ஜி

    பதிலளிநீக்கு
  21. வணக்கம் சகோதரரே

    இன்றைய வெள்ளி பாடல் பகிர்வில் நீங்கள் பகிர்ந்த இரண்டு பாடல்களையுமே அடிக்கடி கேட்டு ரசித்திருக்கிறேன். இப்போதும் கேட்டு ரசித்தேன். அருமையான பாடல்களையும் பாடல்கள் பற்றிய தகவல்களையும் அழகான முறையில் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  22. முதல் பாடல் பக்தி சொட்டும். இரண்டாவது சுசீலா குரலில் கொஞ்சும் பாடல். பழைய பாடல்களில் இப்பாடல் பிடிக்கும்.

    பதிலளிநீக்கு
  23. கற்பூர ஒளியினிலே கந்தா உன் காட்சி கண்டேன் - கந்தன் பாடல் இப்போதுதான் கேட்கிறேன். பாடல் வரிகள் மனதைத் தொட்டு அதில் ஆழ்ந்து போனேன். அருமையான பாடல்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  24. அது போலவே சுசீலாம்மாவின் சிட்டுக்குருவி பாடல் நீண்டகாலத்துக்குப் பிறகு கேட்டு ரசித்தேன். பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி ஸ்ரீராம்.

    யுட்யூபில் பழைய பாடல்கள் பக்திப்பாடல்கள் கேட்கிறேன் இருந்தாலும் இந்தப் பாடலை எல்லாம் மிஸ் செய்திருக்கிறேன். இனி கேட்க வேண்டும், புதிய பறவை பாடல்கள் எல்லாமே நன்றாக இருக்கும்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!