செவ்வாய், 20 ஆகஸ்ட், 2024

சிறு தொடர்கதை : மோனா, மோனிகா, மனிஷா மற்றும் புழக்கடை மோகனா: 3/5 - அப்பாதுரை

 

மோனா, மோனிகா, மனிஷா மற்றும் புழக்கடை மோகனா: 3

     முன்கதை ஒன்று ---  இரண்டு 


காவல் நிலையத்தில் சிறிய மாநாடு போலக் கூட்டம். பாதிரி செபஸ்டியன், காவலர்கள் ஜார்ஜ் மற்றும் தேவா, உதவிப் பதிவாளர், ரகு, மதன், ஹோட்டல் மேனேஜர்.. இவர்கள் தவிர செய்தி பரவி சில பத்திரிகை நிருபர்கள், சில பதிவர்கள், ஒரு டிவி நிருபர், சில ஊரார் என்று கூட்டம் கூடியிருந்தது. கடுமையான குரலில் எஸ்ஐ ரதி, "இந்த கேஸ் விசாரணையில் இருக்குது. எதுவும் சொல்ல முடியாது. முதலில் இடத்தைக் காலி பண்ணுங்க... நீங்க ரெண்டு பேரும் வாங்க, கூட்டத்தைக் கலைங்க" என்று ஜார்ஜையும் தேவாவையும் ஏவினார். "யாரையும் உள்ளே விடாதீங்க". ரகுவையும் பிறரையும் விசாரணையறைக்குள் தள்ளாத குறையாகத் தள்ளி "அதுக்குள்ள என்னா கூட்டம்!" என்றவர் ரகுவைப் பார்த்து, "உங்க நண்பர் வரலியா?" என்றார். "உங்க மனைவி?" என்றார் மதனிடம்.


    "இல்லை" என்றான் ரகு. "அநேகமாக ஹரியும் ஸ்வேதாவும் மோனிகாவுடன் ஊருக்குப் போயிருப்பாங்க" என்றான். "மதன் மனைவி வைசாலி என் மனைவி ஷோபாவுக்குத் துணையாக ஹோட்டலில் இருக்கிறாள்" என்றான்.
    "உஸ் அப்பாடா. கண்ணைக் கட்டுதே. இந்த கேஸ் தொடர்பான உங்க பேர்களையே நினைவில் வைக்க முடியலே. எத்தினி பேருங்க! இதுல பொதுக்கூட்டம் வேறே!" என்றார் ரதி. "மிஸ்டர் ரகு, என் அனுமதி இல்லாம ஊரை விட்டு யாரும் போகக்கூடாது" என்றார். "ஸ்டாப் தெம்" என்றார் அருகில் இருந்த உதவி அதிகாரியிடம்.
     "மிஸ்டர் ரகு. நான் ஒரு ஹோலிஸ்டிக் போலீஸ் அதிகாரி" தொடர்ந்தார் ரதி. "எல்லாவற்றையும் நம்பி சரியான நேரத்தில் சரியான முடிவு எடுப்பதில் எனக்கு நிறைய பயிற்சி உண்டு. உங்க விவகாரத்தில் இயல்பான பகுத்தறிவுக்குப் புறம்பாக நிறைய தென்படுகின்றன. அதனால் பாதிரி செபஸ்டியன் எனக்கு உதவுவதாக சொன்னபோது நான் தவறாக நினைக்கவில்லை. உங்களுக்கு ஆட்சேபணை இல்லையென்றால் அவர் இங்கே இருக்க அனுமதிக்கிறேன். உங்கள் பிள்ளைகளை மீட்க உதவலாம் என்று நினைக்கிறேன்" என்றார். ரகு செபஸ்டியனை கீழ்ப்பார்வை பார்க்க, மதன் "கண்டிப்பாக எந்த ஆட்சேபணையும் இல்லை" என்றான் உரக்க.
     "எனில், கதிர்காமம் மோகனா... இது பற்றி மறைக்காமல் சொல்லுங்கள். புலன் விசாரணைக்கு உதவும்" என்றார் ரதி.
    ரகு தொடங்கினான். "பதினெட்டு வருஷத்துக்கு முன்னால.. நாங்க மூணு பேரும் புதுப் பட்டதாரிகள். ஒரே கம்பெனில வேலை கிடைச்ச சந்தோசத்துல ரெண்டு வாரம் கொழும்பு சுற்றப் போனோம். நாங்க தங்கின மிகப் பழமையான கிரேண்ட் ஓரியன்டல் ஹோட்டலில் வேலை பார்த்த மோகனாவை சந்திச்சோம். நட்பாகப் பழகினாள், என்னுடன் கொஞ்சம் கூடுதல் நெருக்கம் காட்டினாள். தூரத்து உறவுக்காரர் ஒருவர் மதனைப் பார்க்க கண்டியிலிருந்து வந்தார். கண்டி அழகை அவர் விவரிச்சதைப் பார்த்து நாங்களும் அவருடன் சுற்றுலாவாகப் போனோம். அங்கருந்து கொஞ்சம் பக்கம்தான் என்று தெரிஞ்சதும் கதிர்காமம் போக விரும்பினேன். முருகன் கோவில் போய் திரும்புகையில் சற்றும் எதிர்பாராவிதமாக மோகனாவை சந்தித்தோம். "ஏது, எம்மூருக்கு வந்திருக்கீங்க?" என்றாள். "இது உன் ஊரா? தெரியாதே? நீ எப்போ கொழும்புலந்து இங்கே திரும்பி வந்தே?" என்றேன். "நான் இங்கிருந்து போனால் தானே திரும்பி வர?" என்றாள். என் குழப்பத்தை ரசித்துச் சிரித்தாள். "உன்னை சந்திக்கத்தான் வந்தேன்" என்றாள். "கோவிலை பார்த்துவிட்டீங்க. வாங்க, கதிர்காமம் காடுகளைக் காணப்போகலாம்" என்று என் கையைப் பிடித்துக்கொண்டாள். அவள் கைப்பிடி வலித்ததில் வியந்தாலும் நான் காட்டிக் கொள்ளவில்லை. ஹரி தயங்கினான். மோகனா மதனின் கையையும் பிடித்தவுடன் அவன் உற்சாகத்துடன் சரி என்றான். கோவிலின் கிழக்கே இருந்த காட்டிற்கு அழைத்து சென்றாள். திகிலூட்டும் விதத்தில் பிரமாண்டமாக இருந்தது காடு. அப்படி ஒரு கரும்பசுமையை நாங்கள் பார்த்ததே இல்லை. எங்களைப் போல சிலர் ட்ரெக் செய்வதைப் பார்த்தோம். சில நூறு அடிகள் நடந்திருப்போம். அருகில் எங்களைத் தவிர யாருமில்லை. திடீரென்று என் கைகளை அழுந்தப் பிடித்த மோகனா, "நம்ம கல்யாணத்தை இங்கே இப்ப முடிப்போமா?" என்றாள். "கல்யாணமா?" என்றேன் திகைத்து. "ஆம். உங்களுக்காகத்தானே முன்னூறு வருடமாகக் காத்திருக்கேன்? பழமையான காதல் இல்லையா நமது? வழமையான காதலா மறந்து போக?" என்றாள். நான் திடுக்கிட்டு என் கைகளை இழுத்துக் கொண்டேன். "என்ன மோகனா இது?" என்றேன். மதன் என்னை விளையாட்டாக இடித்து "ஆமடா. கல்யாணம் தானே? முன்னூறு வருஷமா காத்துட்டிருக்காளாம். பணணிக்கடா பணணிக்கடா.." என்று என்னை ஓட்டினான். "விடாதே மோகனா.. இவனை பிடிச்சுக்க.. பசையுள்ள ஆசாமி. நஞ்சை புஞ்சை நகைநட்டு பங்களா எல்லாம் பல லட்சம் தேறும்" என்று மோகனாவைத் தட்டிக்கொடுத்தான்."டேய்" என்றேன் நான். அதற்குள் மோகனா, "விடமாட்டேன். முன்பு இதைத்தானே செய்தீர்கள்? இந்த முறை தப்ப முடியாது. காதல் விடாது" என்று என்னை அழுத்திப் பிடித்தாள். ஒரு பெண்ணுக்கு இத்தனை பலமா என்று நினைத்தேன். மோகனா என்னைப் பொருட்படுத்தாமல் மதனைப் பார்த்து, "உம்மையும் விடமாட்டேன். நீர் தானே எம் திருமணத்தை முன்பு நிறுத்தியது? காதலரைப் பிரித்த கயவர் உம்மையும் விடமாட்டேன்" என்று அவனையும் பிடித்துக் கொண்டாள். "விடுறி சனியனே!" என்று மதன் திமிறி, "ஹரி, டேய்.. இவளை மண்டைல ஓங்கி அடி" என்றான். ஆனால் ஹரியைக் காணவில்லை. மதனும் நானும் எங்கள் மற்ற கைகளால் மோகனாவைத் தள்ள முயன்றோம். மோகனா தளராமல், "என்னை ஏமாற்ற முடியாது. ஏமாற்றினால் விடமாட்டேன். உம் பரம்பரைகளை" என்று அவள் சொல்லும் பொழுதே மதன் அவளை பலமாக உதைத்தான். நான் அவள் நெற்றியில் பலமாக முட்டினேன். கீழே விழுந்த மோகனா, சில நிமிடமாகியும் எழவில்லை. ஒரு விசித்திரப் புன்னகையுடன் பிணம் போலக் கிடந்தாள். "டேய்" என்று ஒருவரையொருவர் அழைத்து நடுங்கினோம். "ஹரி ஹரி" என்று கூவினான் மதன். பத்து நிமிடம் போல பொறுத்து மெள்ள வந்தான் ஹரி. "அந்த மரத்துக்குப் பின்னால் நின்னு எல்லாத்தையும் பார்த்தேன்டா" என்றான். "ஓடிரலாமடா" என்று அவன் சொல்லும் பொழுது, "எங்கே ஓட எண்ணம்?" என்ற இடிகுரல் கேட்டுத் திரும்பினோம். நிச்சயமாக மோகனாவின் குரல். ஆனால் அவள் தரையில் அசையாமல் கிடந்தாள். எங்களுக்கோ திகில். மாலை நெருங்கிக் கொண்டிருந்தது. "இருங்கடா. என் மாமாக்காரனை கூட்டிட்டு வரேன், எங்கேயும் போவாதீங்க, பத்தே நிமிஷம்" என்று ஓடிய மதன் பதினைந்து நிமிடங்களில் தன் உறவுக்கார மாமனுடன் சைக்கிளில் வந்தான். மாமன் கையில் சிறு துணி மூட்டை. எங்களிடம் முழு விவரம் தெரிந்துகொண்ட மாமன், "எனக்கு அந்த எண்ணம் தான் மருமகனே" என்றார் மதனிடம். மதனும் விடாமல். "எந்த எண்ணம் மாமாவே?" என்றான். ஹரி இதை ரசிக்கவில்லை. "போலீசுக்கு போவோம்" என்றான். "போலீஸிடம் என்னவெண்டு சொல்வீர்கள்?" என்றார் மாமன். மெள்ளக் கனைத்து, "மருமக்களே" என்று எங்களை பொதுவில் வைத்தார். "இது மானுட சாவில்லை. இவள் மோகினி. பிசாசு. இவளுக்கு சாவே கிடையாது. நான் நிரூபித்துக் காட்டுகிறேன், பொழுது சாயட்டும்" என்றார். ஹரி, "நீங்க வந்தா வாங்கடா. நான் போலீசுக்குப் போறேன்" என்றான். ஒரே ஓட்டமாக மறைந்தான். அரை மணிக்குள் இருட்டத் தொடங்கியதும், "இதோ பாருங்க" என்றார் மாமன். மூட்டையைப் பிரித்துக் காட்டினார். மஞ்சள் நிறத்தில் பொடி. எதையோ ஆமோதிப்பது போல பலமாகத் தலையாட்டி "மஞ்சள் சாம்பிராணி" என்றார். தரையில் சிறு பள்ளம் தோண்டி மூட்டையை வைத்தார். சிகரெட் லைட்டரால் மூட்டையைப் பற்ற வைத்தார். சில நிமிடங்களில் மூட்டை பற்றி ஏரிய எங்களைச் சுற்றிப் புகை. நானும் மதனும் ஒருவரை ஒருவர் பார்த்தோம். கீழே மோகனா மட்டும் அசையாமல் கிடந்தாள். 

திடீரென்று "அதோ பாருங்க" என்றார் மாமன். "டேய் அங்கே பாருடா" என்றான் மதன் அதே நேரத்தில். பார்த்தேன். எங்களுக்கு நேர் எதிரே இருபதடி தூரத்தில் மரத்தில் தொங்கிக் கொண்டிருந்தது.. தொங்கிக் கொண்டிருந்தாள் ஒரு பெண். தலைமுடியில் தூக்குப் போட்டது போலத் தொங்கிக் கொண்டிருந்தாள். கண்கள் இருக்குமிடத்தில்.. நெருப்பு போல ஒளி. சட்டென்று கீழே பார்த்தேன். மோகனாவைக் காணோம். "டேய் இது பேய் சமாசாரம் தாண்டா, சந்தேகமேயில்லை" என்றான் மதன். "சொன்னேனில்லையா?" என்றார் மாமன். "இது பழி வாங்காமல் விடாது.கொள்ளிக் கண்களைக் கண்டீர்கள் தானே? புழக்கடை வகைப் பேய். உம்மையே வெறிப்பது தெரியவில்லை?" என்றார். அவர் சொன்னதும் மரத்தில் தொங்கிக்கொண்டிருந்த அந்தப் பெண்.. பேய்.. என்னவோ என்னையே வெறித்துப் பார்ப்பது போல உணர்ந்தேன். அடுத்த சில நிமிடங்களில் நாங்கள் கதிர்காமத்தை விட்டு கொழும்புவுக்கு கார் எடுத்துக் கிளம்பினோம். ஹரி ஏற்கனவே ஹோட்டலில் எங்களுக்காகக் காத்திருந்தான். மறுநாளே இந்தியா வந்துவிட்டோம்" என்றான்.

     சில நிமிடங்களுக்கு அறையில் அமைதி. "கொழும்பிலாவது போலீசுக்கு சொல்லி இருக்கலாமே?" என்றார் ரதி. ரகு ஒதுக்கினான். "என்னவென்று புகார் சொல்ல? மரத்தில் தலைமுடியால் தொங்கிக் கொண்டிருந்த பெண்ணை.. பேயை.. ஒரு பூசாரி மாமா தூவிய மஞ்சள் சாம்பிராணி மகிமையால் பார்த்தோம்னு.. சொல்லி என்ன பலன்? மேலும் எங்களுக்கு பயமான பயம்.. கொலைகிலை செய்திட்டமோ என்று. மரத்துல தொங்கின பெண்ணைப் பார்த்த பயத்தை விட மோகனாவை காணவில்லை என்று தெரிந்ததும் ஒரு நிம்மதி ஏற்பட்டது. நாங்கள் பீதியில் உறைந்து போனாலும் ஊர் வந்து சேரந்ததில் நிம்மதி. அடுத்த சில வருடங்களில் எங்கள் வாழ்க்கையும் மாறத்தொடங்கி.. எல்லாம் மறந்து விட்டது" என்றான்.
    கதவைத் திறந்து வந்த உதவியாளரின் பின்னே ஹரியும் ஸ்வேதாவும் மோனிகாவும் வந்தனர். ஸ்வேதா வெடித்தாள். "எங்களை வற்புறுத்தவும் பலவந்தப்படுத்தவும் நீங்க யாரு?" என்றாள் ரதியையும் ரகுவையும் பார்த்து. ஹரியும் கோபமாக இருந்தான். "கொஞ்சம் பொறுமை. இது விசாரணையில் இருக்கும் கேஸ். போலீஸ் அனுமதி இல்லாமல் நீங்கள் வெளியேறினால் உங்கள் மேல் சந்தேகம் வரும்" என்றார் ரதி சற்றும் தளராமல். "ஸோ. ப்லீஸ் கோவாபரேட்" என்றார் கறாராக. ஸ்வேதா முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.
     "நான் பேசலாமா?" என்றார் செபஸ்டியன். "எனக்கு இந்த இணையுலக அமானுஷ்ய விவரங்களில் ஈடுபாடு உண்டு, கொஞ்சம் அனுபவமும் உண்டு. இது புழக்கடை முனி, குட்டிச்சாத்தான் விவகாரம் என்பதில் எனக்கு சந்தேகமே இல்லை. அதே போல உங்க மற்ற இரண்டு பிள்ளைகளும் உயிருடன் இருக்கிறார்கள், மீட்க முடியும் என்பதிலும் சந்தேகம் இல்லை. உடனடியாக செயல் படவேண்டும். ஒற்றுமையாகச் செயல்பட வேண்டும். மற்ற பிள்ளைகளைப் பற்றி விவரம் சொல்லவே மோனிகாவை விட்டிருக்கிறது முனி. அதே போல உங்கள் மனைவிமார்களை ஒற்றுமை குலைக்கவும் மோனிகாவை வைத்து சதி செய்கிறது. இந்த நேரத்தில் அவசரமாக செயல் படவேண்டும். ஒற்றுமையாகவும் செயல்பட வேண்டும்" என்றார்.
     தட்டி உள்ளே வந்த ஜார்ஜ், "உங்களுக்கு போன் வந்திருக்கு" என்று ஹோட்டல் மேனேஜரை அழைத்தார். மேனேஜர் வெளியேறியதும் தொடர்ந்த செபஸ்டியன், "நீங்க தங்கியிருக்கிற ஹோட்டல் முன்னூறு வருஷத்துக்கு முன்னால ஒரு சுடுகாடாக இருந்தது. ஆயிரத்து எண்ணூறுகளில் ஆங்கிலேயருக்கும் பிரெஞ்சுக்கும் நடந்த போராட்டத்தில் இறந்து போன நூற்றுக்கணக்கான ஆங்கிலேய பிரெஞ்சு வீரர்களின் குடும்பங்கள் இங்கேதான் புதைக்கப்பட்டனர். குறிப்பாக, மனைவிகள் சிறு குழந்தைகள், அதிலும் அறுபது குழந்தைகள்.. பத்து வயதுக்கு உட்பட்டவர்கள்" என்றார். உதவியாளர் கொண்டு வந்த குறிப்புகளைப் படித்த ரதி, "நினைத்தேன்" என்றார். பழைய செய்திக் குறிப்புகளைக் காட்டினார். "நீங்க இப்ப தங்கியிருக்கிற ரிசார்ட் ஒரு பெரிய போர்க்கல்லறை மட்டுமல்ல முன்பு தங்கியிருந்த கொழும்பு கிரேந்ட் ஓரியன்டலும் முன்னூறு வருடங்ககளுக்கு முன்னால் போர்க்காலக் கல்லறையாக இருந்து.. அதுவும் ஆங்கிலேய பிரெஞ்சு போராட்டம்.. பின் ஹோட்டலாக மாறியது.. போதாமல்.. இந்த ரிசார்ட்டும் கதிர்காமமும் ஒரே நேர வலயத்துக்கு உட்பட்டவை. ஒரே தட்ப ரேகையும் கூட" என்றார். தலையசைத்த செபஸ்டியன், "நம் காலங்களை மீறிய ஒரு தொடர்பு இருக்கலாம். இதில் நம்பிக்கை இருந்தால்.." என்றார்.
     உள்ளே வந்த மேனேஜர் அவசரமாக, "உடனே ஹோட்டலுக்கு போக வேண்டும். மற்ற இரண்டு பெண்களின் குரல்கள் கேட்கிறதாம். அம்மா அப்பா காப்பாத்துங்க எங்களை காப்பாத்துங்கனு கத்திக்கிட்டே இருக்காங்களாம்.." என்றார்.

[தொடரும்] சாத்தியம்: 60.88%

38 கருத்துகள்:

  1. அமானுஷ்ய விஷயம். என்ன வேணாலும் எழுதலாம், கேள்வி கேட்பார் இல்லை என்ற சலுகை இருந்தாலும்
    அளவோடு தான் அதை உபயோகிக்கிறீர்கள்.

    கடைசியில் முடிக்கும் பொழுது தான் எல்லா
    புள்ளிகளையும் ஒன்றன் பின் ஒன்றாக கோடிழுத்து
    ஒன்று சேர்க்க வேண்டும் என்ற கடப்பாடு இந்த மாதிரி கதைகளில் இருப்பது பெரிய தலைவலி.
    உன்னிப்பாக இதையெல்லாம் கவனித்து கேள்வி கேட்பார் இல்லாமல் இருந்தால் அதுவே பெரிய செளகரியம்.

    தலைக்குத் தலை பேச்சைக் குறித்து
    காட்சிகளில் திகிலூட்டினால்?

    திகிலூட்டினால்?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உன்னிப்பாக கவனித்து, எதுவும் கேட்கவே வாய்ப்பில்லாமல் க்ளீனாக எழுதி விட்டால் தீர்ந்தது தொல்லை!

      நீக்கு
    2. //முடிக்கும் பொழுது தான் எல்லா புள்ளிகளையும் ஒன்றன் பின் ஒன்றாக கோடிழுத்து ஒன்று சேர்க்க வேண்டும் என்ற கடப்பாடு // அப்படியெல்லாம் ஒரு கட்டுப்பாடும் பிளாக்கில் கிடையாது. யாருக்கும் மறு செவ்வாய் வரை கதை நினைவில் இருக்கப்போவதில்லை. பெயர்க் குழப்பம் வந்தால்தான் போய் ஒரு புரட்டு புரட்டுவாங்க. புள்ளிகளெல்லாம் ஆங்காங்கே துருத்திக்கிட்டு நின்றால் நாம் என்ன அப்பாதுரை சார் மேல் கேஸ் போடவா முடியும்? நான் பொதுவா தொடர்கதை முடிந்ததும் கடைசி அத்தியாயம் படித்துவிட்டு, வாசகர்கள் கருத்தையும் படித்துவிட்டுத்தான் தொடர்கதையைப் படிக்கவே ஆரம்பிப்பேன்.

      நீக்கு
    3. சரியா சொன்னீங்க நெல்லை. ஆனால் எழுதுபவர் பார்வையில் ஜீவி சொல்வதும் நிஜமே. அப்படி வரிசையாக கோர்க்கவில்லை என்றால் வாசகர்களை மதிக்காமல் போவது போலாகும் என்று நம்புகிறேன். (நான் எழுதி முடிக்காமல் போன பல என்னை ஏதோ குற்றம் செய்தவன் போல அதிகமாக பாதிக்கின்றன என்றால் நம்ப முடிகிறதா?)

      நீக்கு
    4. //முடிக்காமல் போன பல என்னை ஏதோ குற்றம் செய்தவன் போல அதிகமாக பாதிக்கின்றன// - இதைப் படித்து நான் சந்தோஷம் அடைகிறேன். எத்தனை தொடர்களில் (உங்க பக்கத்தில்) என்னைக் கடுப்படித்திருப்பீங்க? ஒண்ணு சரியான முடிவா இருக்காது, இல்லைனா, சம்பவம் பாதியிலேயே அப்படியே நின்றுவிடும். (இந்த ஆளுக்கு நல்ல எழுத்துத் திறமை கொடுத்து, முழுவதும் முடிக்கணும் என்ற எண்ணமோ இல்லை சுறுசுறுப்போ கொடுக்கலையே என்று நான் அப்போதெல்லாம் நினைத்துக்கொள்வேன்)

      நீக்கு
    5. :-) எனக்கும் அந்த எண்ணம் தோன்றும். ஆனால் நான் ஒரு கருவி என்று நினைத்துக்கொண்டு எண்ணத்தை கடந்து விடுவேன். ஹிஹி.

      நீக்கு
  2. அடுத்த பகுதி கட்டாயம் ஒரு வாரம் தாமதித்தே வரும். இது என்னுடைய அனுமானம்.
    Jayakumar​

    பதிலளிநீக்கு
  3. முருகன் திருவருள் முன் நின்று காக்க..

    பதிலளிநீக்கு
  4. இரண்டு சித்திரங்க்களும் அருமை ஸ்ரீராம்.
    KGG--யின் உழைப்பு பிரமாதம். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  5. என்ன சொல்வது என்று புரியவில்லை..

    பதிலளிநீக்கு
  6. அமானுஷ்ய கதைகளில் லாஜிக், அறிவியல் குறித்த கேள்விகள் எழுந்தாலும் முன்வைக்க முடியாது. ஆனால் எனக்கு மணிச்சித்திரத்தாழ் படம் தான் நினைவுக்கு வரும்.

    இந்தக் கதைல அந்த ஹோட்டல்கள் கட்டப்பட்டிருக்கும் இடம் பற்றிய முந்தைய வரலாறுன்னு விஷயங்கள், இலங்கை இடமும் இங்கு கன்னியாகுமரி ஹோட்டல் இடமும் குறித்த தகவல் என்று வருகின்றன, இவை எப்படி இணைக்கப்படப் போகின்றன என்பது பற்றி கொஞ்சம் ஊகம் எழுந்தாலும்., நம்ம கௌ அண்ணாவின் வேண்டுகோளுக்கிணங்க விட்டுப்புட்டேன்!!!!

    இன்னான்னு பார்ப்போம் அடுத்தாப்ல.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எந்தக் கதையிலுமே லாஜிக் பார்த்தால் முடியாது. புராணங்களில் கூட கேள்விகள் நிறைய எழும், ஆனால் கப்சிப் தான். அங்கே கேள்வி கேட்டால் சாமி கண்ணை குத்தும். இங்கே கேள்வி கேட்டால் தூக்கம் போகும், அவ்வளவு தான் :-)

      நீக்கு
    2. இந்த ஹோட்டல் மற்றும் சரித்திர விவரங்கள் ஒரு அத்தாட்சிக்காக சேர்ப்பது. விபரீத கற்பனையில் ஒரு வரலாற்று நிகழ்வின் விவரங்களை சேர்க்கும் பொழுது போலி அத்தாட்சியாவது கிடைக்கிறது. திடீரென்று அசலுக்கும் போலிக்குமான ஒரு குழப்பத்தை ஏற்படுத்தி நம்பிக்கைக்கான தற்காலிக விதைகளைத் தூவ முடிகிறது. இதைத்தான் ஜீவி "உண்மை போலவே சொல்வதில்" என்கிறார். நிற்க, கன்னியாகுமரி கொழும்பு ஹோட்டல் இரண்டில் ஒன்று வரலாற்று நிஜம், இன்னொன்று நிஜம் 'மாதிரி'. ஹிஹி.

      நீக்கு
    3. //இவை எப்படி இணைக்கப்படப் போகின்றன என்பது பற்றி கொஞ்சம் ஊகம் எழுந்தாலும்

      வாசகரின் கற்பனைக்கு இவை தீனி, அவ்வளவு தான்.. இதற்கு மேல் இணைக்கப்படாமல் போகலாம். ஒரு இணைப்பு இருப்பதாக நீங்கள் நினைப்பதே எனக்கு நிறைவாக இருக்கிறது. என் ஐந்து நிமிட ஆராய்ச்சிக்கு ஒரு அங்ககீகாரம் தந்தீர்கள், நன்றி.
      கதைகளில் தொக்கி நிற்கும் கேள்விகள் நெருடாமல் இருந்தால் கதை நிறைவாக இருக்கும் என்றே நம்புகிறேன். (எல்லா கேள்விக்கும் விடை அளித்தால், விடுங்க.. நான் பள்ளிக்கூடத்துல நூறு மார்க் வாங்கியிருக்க மாட்டேனா? )

      நீக்கு
    4. திடீரென்று அசலுக்கும் போலிக்குமான ஒரு குழப்பத்தை ஏற்படுத்தி நம்பிக்கைக்கான தற்காலிக விதைகளைத் தூவ முடிகிறது.//

      யெஸ்! absolutely நெருடல் எல்லாம் எதுவும் இல்லாமல் போலீஸ் போவது என்று யதார்த்தமாக இருக்கு . நீங்க இதை டக்குபுக்குனு முடிக்காம இருந்தா சரி!!!!! ஹாஹாஹாஹா

      //(எல்லா கேள்விக்கும் விடை அளித்தால், விடுங்க.. நான் பள்ளிக்கூடத்துல நூறு மார்க் வாங்கியிருக்க மாட்டேனா? )//

      ஹாஹாஹாஹா

      கீதா

      நீக்கு
    5. புராணங்களில் கூட கேள்விகள் நிறைய எழும், ஆனால் கப்சிப் தான். அங்கே கேள்வி கேட்டால் சாமி கண்ணை குத்தும்.//

      ஹாஹாஹா எனக்கு ரொம்பவே வரும்....ஆனா அதேதான் கப்சிப் தான். //

      // இங்கே கேள்வி கேட்டால் தூக்கம் போகும், அவ்வளவு தான் :-)//

      சிரித்துவிட்டேன்....மூளைய கசக்க வேண்டி வருமோ!!!

      கீதா

      நீக்கு
  7. அமானுஷ்யம்... ஒரே நேரத்தில் தொடர்ந்து படிக்கும் படி இருந்தால் வசதி! :) அடுத்த பகுதிக்கு காத்திருக்க வேண்டியிருக்கிறதே!

    தொடர்கிறேன். Meta AI உதவியுடன் படங்கள் அசத்தலாக இருக்கின்றன. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  8. ஸ்ரீராம், மீட்டா சூப்பரா கொடுத்திருக்கிறதே!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது கொடுத்தவைகளை சேர்த்திருக்கிறேன்! இன்னும் கொஞ்சம் சிறப்பாகச் சேர்த்திருக்கலாம், கேட்டிருக்கலாம்.  ஹமாரே பாஸ் காஃபி வக்த் நஹி!

      நீக்கு
    2. ஹமாரே பாஸ் காஃபி வக்த் நஹி!//

      போதிய நேரமில்லைன்றீங்க !!!

      கீதா

      நீக்கு
    3. இனிமே உங்களுக்கு காபி இல்லைனு சொல்லீட்டாராம் அவரோட பாஸ்.

      நீக்கு
  9. "உஸ் அப்பாடா. கண்ணைக் கட்டுதே. இந்த கேஸ் தொடர்பான உங்க பேர்களையே நினைவில் வைக்க முடியலே. எத்தினி பேருங்க!//

    ஹாஹாஹாஹா அப்பாதுரை ஜி, இந்த வரிய போன வாரம் எங்கள்ல சிலர் கொடுத்த கமென்டை பார்த்ததும் சேத்தீங்களோ!!!

    பாருங்க இப்ப தினமும் அங்க இந்த கேஸை பாத்துட்டுருக்கற போலீஸ் ஆஃபீசருக்கே இந்தக் குயப்பம்னா ஒரு வாரம் விட்டு பார்க்கற எங்களுக்கு என்னமா இருந்திருக்கும்!!! இப்ப அந்த போலீஸ் ஆஃபீஸர் போல பெயர்கள் எல்லாம் பழகிடுச்சு!!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  10. அருமை. அடுத்தப் பகுதிக்காகக் காத்திருக்கிறேன்

    பதிலளிநீக்கு
  11. அடுத்த பகுதிக்காக வெயிட்டிங்....

    பதிலளிநீக்கு
  12. அமானுஷ்யம் தொடர்கிறோம்.
    படங்கள் நன்று.

    பதிலளிநீக்கு
  13. பாதிரி செபஸ்டியன் பிள்ளைகளை மீட்பாரா?

    //எனக்கு இந்த இணையுலக அமானுஷ்ய விவரங்களில் ஈடுபாடு உண்டு, கொஞ்சம் அனுபவமும் உண்டு. இது புழக்கடை முனி, குட்டிச்சாத்தான் விவகாரம் என்பதில் எனக்கு சந்தேகமே இல்லை. அதே போல உங்க மற்ற இரண்டு பிள்ளைகளும் உயிருடன் இருக்கிறார்கள், மீட்க முடியும் என்பதிலும் சந்தேகம் இல்லை. //

    போன வார பதிவில் எனக்கு பதில் சொன்னது போல
    பிள்ளைகள் குட்டிச்சாத்தானாக மாறி இருந்தால் நல்லது ,இல்லையென்றால் முனியே தின்று விடும் என்று சொன்னீர்களே!

    பார்ப்போம், குட்டி சாத்தானாக மாறி இருந்தால் பாதிரி செபஸ்டின் காப்பாற்றி விடுவார் என்று நம்ப நம்பிக்கை இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹி..ஹி.. கோமதி சகோ.! இது ஒட்டக்கூத்தர் பாட்டுக்கு ரெட்டைத் தாழ்ப்பாள் என்பது. :))

      நீக்கு
  14. முதல்லேருந்து படிச்சுட்டு வரேன்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!