சிறு வயதிலிலேயே திருமணம், குழந்தை, குடும்பம் என வட்டத்திற்குள் சுருங்கி வாழ்க்கை இருண்ட போதிலும் தன்னம்பிக்கை எனும் தீப்பொறி கொண்டு தனக்கென ஒரு முத்திரை பதித்து மனிதவள மேலாண்மை ஆலோசகராகவும், தொழில் முனைவோரகவும் வலம் வருகிறார் காயத்ரி.
புதுச்சேரி காரைக்கால் பகுதியை சேர்ந்த இவருக்கு, பள்ளி பருவம் முடிந்து கல்லுாரி கனவை எட்டிப் பார்க்கும் வேளையில் திருமணம், 12ம் வகுப்போடு படிப்பு முடிந்தது. பின்னர் குடும்பம், குழந்தை என சிறு வட்டத்திற்குள் சுருங்கி விட்டது காயத்ரியின் வாழ்க்கை................ இந்த சமூகத்தின் பேச்சுகள் இவரின் துாக்கத்தை தொலைக்க வைத்து விட்டதென்றே சொல்ல வேண்டும். படிப்பு ஒன்றே ஆயுதம் என நம்பிய காயத்ரி மீண்டும் அதற்கான முயற்சியை கையில் எடுத்தார். சமூகம் உள்பட அனைத்தும் தடையாய் அமைந்த போதிலும், எனக்கான சுதந்திரத்தை நானே எடுத்துக் கொள்வேன் என்று சொல்லும் துணிச்சலோடு இன்றைய தலைமுறைப் பெண்களுக்கு முன்னுதாரணமாய் இருக்கும் காயத்ரி பாராட்டிற்குரியவரே.....========================================================================================================
''தெய்வத்தான் ஆகாதெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்'' என்கிறார் தெய்வப்புலவர் திருவள்ளுவர்.
இதற்கு ஏற்ப ஆதரவற்ற நிலையிலும் ராமநாதபுரம் அன்பு இல்லத்தில் (ஆதரவற்றோர் விடுதி) தங்கி பட்டப்படிப்பு வரை முடித்து ஏதாவது சாதித்துஏழைகளுக்கு உதவ வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் வெற்றி பெற்றிருக்கிறார் ஆர்.கோகுலசெல்வன் 21.அரசு பள்ளிகளில் வழங்கப்படும் இலவசசாதாரண சைக்கிளை, குறைந்த செலவில் நவீன வசதிகளுடன் எலக்டரிக் சைக்கிளாக தயாரித்துள்ளார் நயினார்கோவிலை சேர்ந்தஇந்த பட்டதாரி அவர் கூறுகிறார்.....
நான் படிச்ச கதைகள் - (JKC)
மொழி அதிர்ச்சி + புயல் = கோபிகிருஷ்ணன்
ஆசிரியர் கோபிகிருஷ்ணன்
கோபி கிருஷ்ணன் (1945-2003) மதுரையில்
பிறந்தவர். சென்னையில் வாழ்ந்தவர்.
இவருடைய சொந்த வாழ்க்கையே ஒரு ”பெரிய புராணம்” என்று கூறலாம். இவரைப் பற்றிய விவரங்கள் சேகரிக்க இணையத்தை
ஆராய்ந்தபோது இருவருடைய பதிவுகள் கவனத்தை ஈர்த்தன. ஒன்று ஜ்யோவ்ராம் சுந்தர் என்பவருடைய கோபிகிருஷ்ணனின் சுயசரிதை 4 பாகங்கள், இரண்டு ஏகாந்தன் ஐயா இவரைப்பற்றி எழுதிய இரண்டு பதிவுகள்.
ராம்சுந்தர், மழை என்ற சிற்றிதழுக்காக
யூமா வாசுகி கோபி கிருஷ்ணன் நேர்காணலில் கோபி கிருஷ்ணன் கூறிய அவருடைய சுய சரிதையை
4 பகுதிகளாக வெளியிட்டுள்ளார்.
ஏகாந்தன் ஐயா அவருடைய பதிவில்
கோபிகிருஷ்ணன் அறிமுகமும், புயல்
என்ற அவரது சிறுகதையையும் பதிவிட்டுள்ளார்.
இருவரது பதிவுகளின் சுட்டிகளையும் இணைத்துள்ளேன்.
சுருக்கமாக:
ஆசிரியர் நாம் செமி என்று விவரிக்கும் வகையைச் சார்ந்தவர் என்று கூறலாம். அதை அவரே ஒப்புக் கொள்கிறார். இவர் தனக்கு இருக்கும் வியாதிகளாக ஒப்புக்கொள்வது மற்றும் சிகிச்சை பெறுவது
1. Obsessive ruminations 2. Obsessive
Depression
இனி என்னுடைய விவரணம் தந்தி செய்தி போல் அமையும். விரிவான விவரங்களை சுட்டிக்குள் சென்று வாசிக்க வேண்டுகிறேன்.
படிப்பு:
B.A உளவியல், மற்றும் பல பட்டய
படிப்புகள் ஃபோரென்சிக் சையன்ஸ் கிரிமினலாஜி ஆன்த்ரோபாலாஜி, சோசிலயாஜி என்று பல. ஹிந்தி தெரியும். டியூசன் எடுத்திருக்கிறார்.
கடவுள் நம்பிக்கை அற்றவர்.
குடும்பம்:
நான்சி என்ற கிறிஸ்துவ பெண்ணை கிருஸ்துவ முறைப்படி திருமணம் செய்து
கொண்டார். ஒரு வருடத்தில் பந்தம்
முறிந்தது. பின்னர் 30 வயதில் பெற்றோர்களால் முடித்து வைக்கப்பட்ட
இரண்டாம் திருமணம். 1983இல் ஒரு
பெண் குழந்தை பிறந்தது. அதற்கு
ராணிஸ்ரீ என்று பெயரிட்டார். இரண்டாம்
மனைவி தற்கொலைக்கு முயன்றார். மகளுக்கு
திருமணம் முடிந்தது.
பார்த்த வேலைகள்:
பல. எதிலும் நிலைக்கவில்லை.
அடங்கிப்போகாத குணம், விதி மீறல்களை சகிக்க முடியாமை போன்று பல
காரணங்களால் இவர் பின்விளைவுகளை ஆராயாமல் ராஜினாமா செய்து வெளியேறி இருக்கிறார்.
//இதுவரை 17 நிறுவனங்களில்
பணிபுரிந்திருக்கிறேன்.// அரசுப்பணி
உட்பட.
இவருடைய நிலையைப் பார்த்து
இவருக்கு உதவி செய்தவர்கள் பலர். ஞானக்கூத்தன், நகுலன்,
க்ரியா ராமகிருஷ்ணன், சுந்தர ராமசாமி போன்றோர் முக்கியமானவர்கள்.
க்ரியா ராமகிருஷ்ணன் செய்த உதவிகள்
ஏராளம், போலிஸ் கேசில் இருந்து
விடுவித்தது உட்பட (மனைவி
தற்கொலைக்கு முயன்ற கேஸ். )
‘தற்சமயம் சில மொழிபெயர்ப்பு
வேலைகளைச் செய்து கொண்டிருக்கிறேன். இப்போது உடனடித்தேவை - ஒரு
வேலை.’ இவ்வாறு கூறியது 2002ஆம் ஆண்டு. 2003இல் 58 வயதில் இறந்தார்.
https://jyovramsundar.blogspot.com/2009/04/1.html
https://jyovramsundar.blogspot.com/2009/04/2.html
https://jyovramsundar.blogspot.com/2009/04/3.html
https://jyovramsundar.blogspot.com/2009/04/blog-post_21.html
முன்னுரை.
இப்பதிவில் இவரது இரண்டு கதைகள்
உட்படுத்தப்பட்டுள்ளன. ஆகவே பதிவு நீளம் கூடுதல். இரண்டாவது
கதையான ‘புயல்’ எஸ்ரா வின் 100 சிறந்த சிறுகதைகள் பட்டியலில் இடம் பெற்ற ஒன்று.
அலமேலுவின் அட்ராசிட்டி யை
பார்த்தபோது மொழி அதிர்ச்சி என்ற கதையையும் உட்படுத்தலாம் என்று தோன்றியது., ஆங்கிலம் படும் பாடு… அதை
எல்லோரும் அறிய போடு.
அதிர்ச்சி அடையாமல் வாசித்து
பின்னர் ‘ரிலேக்ஸேஸனாயி’ புயல் கதைக்குள் நுழையுங்கள். புயல் கதை ஒரு தனி பாணியில் எழுதப்பட்ட ஒன்றாக
ஞானக்கூத்தன் கருதுகிறார்.
மொழி அதிர்ச்சி
''பிரச்சனெ பெரிஸ்ஸா
ஒண்ணுமில்லீங்க.''
''பரவாயில்லெ, எதுவானாலும் சொல்லுங்க. அவங்களுக்கு என்ன பிரச்சினென்னு முழுஸ்ஸாத்
தெரிஞ்சாத்தான் உதவி செய்யிறதுக்கு எங்களுக்குச் சுலபமா இருக்கும்.''
''கொஞ்ச நாளாவே சிடுசிடுங்கறது, எங்கிட்டே எரிஞ்சு விழுறது, கொழந்தைகங்களெப் போட்டு மொத்தறது இப்பிடியாயிருக்குதுங்க. சமாதானப்படுத்துனா கூட கோபம் தணியிறதில்லெ..''
''வீட்டுலெ ஏதாச்சும்
சிக்கலாச்சா?''
''சிக்கலுன்னு
என்னெத்தெங்க சொல்றது? கொஞ்ச நாளா யாபாரம் அவ்வளவு சொகமில்லீங்க. ஒருவேளை அதனாலெதான் ரிலேக்ஸேஸனாயி ஒரு
மாதிரி ஆயிட்டாளோன்னு நெனெக்கிறேன்.''
''என்ன ஆயிடுச்சின்னு
சொன்னீங்க?''
''அது ஒண்ணுமில்லீங்க... நீங்க மேக்கொண்டு என்ன வெவரம் வேணும்னு
சொல்லுங்க..'
''சரி, நல்ல ஆழ்ந்து தூங்குறாங்களா?''
''தூங்குறா. ஆனாக்க
சில வேளெயிலே ரிலேக்ஸேஸனாயி ஒரே முட்டா யோசிக்க ஆரம்பிச்சிருவா... அண்ணிக்குப் படுக்கிறதுக்கு ரவெக்கி ஒரு மணி
ரெண்டு மணி ஆயிரும்.''
''என்ன ஆச்சுன்னா தூக்கம்
கெடுங்குறீங்க?''
''அது ஒண்ணுமில்லீங்க...நீங்க மேக்கொண்டு கேளுங்க.''
''நல்ல ருசிச்சு வேளாவேளெக்கிச் சாப்பிட்றாங்களா?''
''அப்படிச் சொல்றதுக்கில்லீங்க...ஏதோ சாப்பிடும்... ஆனா ரிலேக்ஸேஸனாயிட்டா சாப்பாடு எறங்காது.''
''என்ன ஆயிடுச்சின்னா
சாப்பாடு எறங்காதின்னீங்க?''
''அது ஒண்ணுமில்லீங்க...நீங்க மேக்கொண்டு கேளுங்க..'
'''குளிக்கிறதுலெ
ஏதாச்சும் பிரச்சினெயிருக்கா? தெனமும் நேரத்துக்குக் குளிக்கிறாங்களா?''
''குளிக்குது. அதுலெ
என்னாங்க இருக்கு? ஆனாக்க சிலவேளே இந்த ரிலேக்ஸேஸன் ஆயிடுங்க..
அப்ப குளிக்காதுங்க..''
''என்ன ஆனா
குளிக்கமாட்டாங்கன்னு சொன்னீங்க?''
''அது ஒண்ணுமில்லீங்க..
நீங்க மேக்கொண்டு கேளுங்க..''
''இவங்களுக்குத் தலையிலெ
எப்பவாச்சும் அடிபட்டிருக்கா?''
''பலமா அடின்னு
சொல்றதுக்கு ஒண்ணுமில்லீங்க..ஆனா
இவ படுத்துற கூத்து தாங்கமாட்டாமெ எனக்கே ரிலேக்ஸேஸன் ஆயி ஒரு ருல் தடியெ எடுத்து
அவ தலையிலே சிறுஸ்ஸா ஒரு போடு போட்டுட்டேங்க. ஒரு நாலு தையல் போட்டிருக்கு.
அவ்வளவுதாங்க..''
''ஒங்களுக்கு என்ன
ஆச்சுன்னு சொன்னீங்க?''
''அது ஒண்ணுமில்லீங்க. நீங்க
மேக்கொண்டு கேளுங்க..''
''நா மேக்கொண்டு
கேக்குறதுக்கு முன்னாடி ஒங்ககிட்டெ ஒரு உதவி கேக்கணும்..''
''எங்கிட்டெயா, நா ஒங்களுக்கென்ன உதவி செஞ்சிறப் போறேங்க?''
''அப்பிடிச்
சொல்றதுக்கில்லே...ஒங்களெப்
புரிஞ்சிக்கர்றதுக்கு நீங்கதான் உதவி செய்யணும்..''
''...............................''
''நடுநடுவுலெ எனனமோ ஒரு
வார்த்தெயெ உபயோகிச்சீங்க..அது என்னான்னு
கொஞ்சஞ் சொல்றீங்களா?''
''அட, நீங்க ஒண்ணு... அது ஒண்ணுமில்லீங்க..''
''அப்பிடி நீங்க
சொல்லக்கூடாது. நீங்க அது என்ன வார்த்தைன்னு சொன்னாத்தான்
நீங்க சொன்ன முழு வெவரமும் எனக்கு வெளங்கும். இல்லேன்னா
இவ்வளவு வெவரம் சேகரிச்சும் பிரயோசமில்லாமெப் போயிரும்..''
''நா புரியாத எதெயும்
சொல்லலீங்களே.''
''இல்லெ, சொன்னீங்க. இந்த ரிலேக்ஸஸன்னு ஏதோ அடிக்கடிச் சொன்னீங்க. இந்த வார்த்தெய வேறெ ஒரு அர்த்தத்துலெதான்
எனக்குத் தெரியும்.. ஆனா நீங்க
எந்த அர்த்தத்துலெ அதெச் சொன்னீங்கன்னு சொல்ல முடியுமா?''
''அதுங்களா? அது சும்மாங்க..இந்த பேண்ட் சட்டை போட்டுவிட்டு 'டை' யெல்லாம் கட்டிக்கிட்டு
ஒயிலாச் சிகரெட்டுப் பிடிக்கிற மாதிரித்தானுங்க அதுவும்..''
''எனக்குச் சத்தியமாப்
புரியல்லெ.''
''ஆமாங்க, இந்த இங்கிலீஷ் வார்த்தைக்கெல்லாம் என்னாங்க
பெரிஸ்ஸா அர்த்தம் இருந்திறப் போறது?''
''என்ன ஒரேயடியா அப்படிச்
சொல்லீட்டீங்க..''
''பெறகென்னாங்க..இங்கிலீஷ்லெ தஸ்ஸு புஸ்ஸுன்னு நாலு வார்த்தெ விட்றதெல்லாம் ஒரு ஸ்டைலுக்குத்தானுங்களே. ரிலேக்ஸேஸனும் அதே மாதிரித்தானுங்க..சும்மா ஸ்டைலுக்கு நடுநடுவுலெ அங்கெ அங்கெ விட்டுக்கிர்றதுங்க.. இதுக்கெல்லாம் போயி நீங்க அர்த்தங் கேட்டுக்கிட்டு இருக்கீங்க?''
என்ன டென்ஷன் தீர்ந்ததா? அடுத்து புயல்.
அதிகாலையிலிருந்தே பலத்த மழை. சென்னை அருகே புயலாம்.
தொழிற்சாலை நேரம் முடிந்து, தள்ளிப்போட முடியாத ஒரு முக்கியமான விஷயத்தைப் பற்றி சக ஊழியர் குதரத் உல்லா
பாட்சாவுடன் பேச, அவரது இல்லத்திற்குச் சென்று, பேசி முடித்துவிட்டு, சுமார் ஒன்பது மணியளவில் தன் வீட்டை நோக்கிப்
புறப்பட்டான் ஏக்நாத். நைந்துபோன,
பித்தான்கள் என்றைக்கோ தெறித்து, அவை இல்லாத நிலையில், ஸேஃப்டி
பின்களைப் போட்டு ஒருவாறாக மழைக்கோட்டை அணிந்து கொண்டு, தொப்பி தொலைந்துபோய் வெகு மாதங்கள்
ஆகியிருந்தும், அதை வாங்காதிருந்த
அசிரத்தையின் தண்டனையான தலைநனைதலை அனுபவித்துக் கொண்டே வீட்டை நோக்கி
நடந்துகொண்டிருந்தான். தொழிற்சாலையில்
ஒரு குப்பைக் கூடை அருகே கிடந்த சிறு துண்டு மழைத்தாள் ஒன்றை எடுத்து
பத்திரப்படுத்தி வைத்திருந்தான். வழியில்
ஒரு கடையில் புதிதாக சந்தையில் அமர்க்களப்படுத்திக் கொண்டிருந்த ‘நௌ’ சிகரெட் ஒரு பாக்கெட்டையும் ஒரு வத்திப்பெட்டியையும் வாங்கி மழைத்தாளில்
சுற்றி வைத்துக்கொண்டான். இரண்டு
மெழுகுவர்த்திகளையும் வாங்கிச் சட்டைப் பையில் போட்டுக் கொண்டான். நல்ல நாட்களிலேயே அடிக்கடி தடைப்படும்
மின்சாரம் மழையில் சீராக இயங்கும் என்று சொல்வதற்கில்லை. குழந்தைக்கு இரு தினங்களாக வெதுவெதுப்பான ஜூரம்.
மருந்துக்கடை ஒன்றில் மாத்திரை இரண்டை
வாங்கினான்.
ஜூரத்தால் அவதிப்படும் குழந்தையை ஏதோ ஒரு
வகையில் சந்தோஷப்படுத்தி உற்சாகத்துடன் இருக்கச் செய்ய வேண்டும் என்று தோன்றவே, ஒரு கடையில் காட்பரீஸ் மில்க் சாக்கலெட் ஒன்றை வாங்கினான். சிகரெட் ஒன்றைப் பெட்டியிலிருந்து கவனத்துடன்
உருவி மழைச் சொட்டுக்களிலிருந்து அதை அரைகுறையாக ஒருவாறு காத்து கைகளைக்
குவித்துப் பற்ற வைத்துவிட்டு நடந்து கொண்டிருந்தான். வீட்டை அடைய இன்னும் ஒரு டொக்குச் சந்தையும்,
ஒரு நீண்ட சந்தையும், இரண்டு சிறு சந்துகளையும் கடக்க வேண்டும்.
வழியில் ஒரு மளிகைக் கடை. வீட்டில் காப்பிப் பொடி. சர்க்கரை
காலையில் கொஞ்சம்தான் மீதம் இருந்தது. ப்ரூ ரீஃபில்பேக் காப்பிப் பொட்டலம் ஒன்றையும் 250 கிராம் சர்க்கரையையும் கொடுக்குமாறு கடைப்
பையனிடம் சொல்லிவிட்டு சிகரெட்டை உறிஞ்சி புகையை வெளித்தள்ளிக் கொண்டிருந்தான்.
அருகில் ஒரு நடுவயது மாமி. அவள் முகம் கோணினாள். “ஸாரி மாமி” - மன்னிப்புக் கோரி, கால்வாசிதான்
புகைத்திருந்த சிகரெட்டைக் கீழே போட்டு நசுக்கினான்.
வீட்டின் மிக அருகாமையில் வந்ததும் நேற்று
நடந்த ஒரு சம்பவம் நினைவுக்கு வந்தது.
அவன் வீட்டுக்கு நான்கு வீடு தள்ளி ஒரு
வீட்டின் முன் கிட்டத்தட்டத் தெருவின் முழு அகலத்தையும் அடைத்தபடி ஒரு பெரிய
கோலத்தை ஒரு பெண்மணி போட்டுக் கொண்டிருந்தாள் லயித்து. ஏகநாத் கவனமாகக் கோலக்கோடுகள், புள்ளிகள் முதலியவைகளைத் தவிர்த்து, ஏடாகூடமாகக் கால் வைத்ததில் கீழே சாயப்போய்,
ஒருவாறு சுதாரித்துக்கொண்டு, கோலத்தின் மேல் கால் பாவாமல் சிரத்தையுடன்
தாண்டி நடந்து கடந்தான்.
மணி தோராயமாக 9.30. “காலைலே வீட்டெ விட்டுக் கெளம்பினா வீட்டு ஞாபகமே இருக்கறதில்லை ஒங்களுக்குக் கொஞ்சங்கூட. நான் ஒருத்தி இருக்கேங்கற நெனெப்பே ஒங்களூக்குச் சுத்தமா மறந்தாச்சுன்னுதான் தோண்றது. நீங்க சீக்கிரம் வரணும்னு நான் வேண்டாத தெய்வங்க இல்லெ” ஸோனா பொரிந்து தள்ளினாள். “ஆனா, இண்ணெக்கி என்ன விசேஷம்? நான் சீக்கிரம் வரணும்னு சாமிங்களை வேண்டிக்கற அளவுக்கு எனக்கு என்ன திடீர் முக்கியத்துவம்?” - இது ஏக்நாத்.
“ஒண்ணுமில்லெ, சொல்றேன்.”
“என்ன வீட்டுக்காரம்மா ஏதாவது கத்தினாளா?” - “இல்லெ.” “மளிகைக்காரன் பாக்கிக்காக வந்து கேட்டுக் கத்தினானா?” “இல்லெ.” “வேறென்ன சொல்லேன்.”
ஸோனாவின் முகத்தில் கலவரமும் பரபரப்பும்
அவசரமும் குடிகொண்டிருந்ததை ஏகநாத்தால் கண்டுகொள்ள முடிந்தது. கணவனைச்
சந்தோஷத்திலாழ்த்தும் செய்தி போன்ற எதுவுமில்லை என்று அவனால் ஊகிக்க
முடிந்தது. சராசரிகளுக்குச்
சந்தோஷம் என்பதே ஒரு அரிதான விஷயம். அது அவனுக்கு ஒரு அனுபவபூர்வமான நிஜம். “நீங்க மொதல்லெ கைகால் அலம்பிண்டு வாங்க. வெளியே போக வேணாம். இந்த
மழைச் சனியன் வேறெ நின்னு தொலைய மாட்டேங்கறது.” ஸோனா சொன்னபடி சமையற்கட்டின் முன்பகுதியில் முகம், கைகால் அலம்பிக்கொண்டு, தலையைத் துவட்டிக்கொண்டு ஏகநாத் நாற்காலியில்
அமர்ந்து கொண்டான்.
ஸோனா ஏகநாத்தின் மனைவி. பெயரைப் போலவே தங்கமானவள். மணமான
புதிதில் ஏகநாத் அவள் பெயரை மனதில் அசைபோட்டுப் பார்த்திருந்தான். ஸோனா - தங்கம். இன்னொரு அர்த்தம்
உறங்குதல். நம் மனநிலைகளின்
அதீதங்களினாலோ பிறத்தியான் பிசகாக நடந்து கொள்வதினாலோ அவன்மீது ஏற்படும்
கசப்புணர்வு அறவே மறந்து அடுத்த நாள் அவன் தோள்மீது கைபோட்டு
அன்னியோன்னியமாயிருக்க உதவும். தீவிர
வெறுப்புகள் தொடராமல் தடைபோடக் கைகொடுக்கும் ஒரு அற்புதமான இயற்கை ஔஷதம். ஸோனாதான் எவ்வளவு ரம்மியமான ஆரோக்கியமான பெயர்!
குழந்தைக்கு ஸிந்தியா என்று பெயரிட்டிருந்தான். ஜனித்தவுடன் முதலில் தன் சிசுவைப் பார்த்ததும் உடனே அவன் நினைவில்
நிழலாடியது நீல ஆகாயத்தின் மையத்தில் ஒரு முழு நிலா. சந்திர தேவதையின் பெயரையே அவளுக்கு
சூட்டிவிட்டான்.
ஸிந்தியா: “டாடீ, எனக்கு இன்னா கொண்டாந்தே?”
“ஒனக்காடா கண்ணா, ஒரு மாத்திரெ, ஒனக்கு ஜொரமில்லெ? அப்பறம் ஒரு சாக்கலெட்”
“இன்னா டாடீ எனக்கு ஸ்வீட்டு, இன்னெக்கி எனக்கு பெர்த்டேவா?” அவளுக்கு எப்பொழுதாவது அரிதாக இனிப்பு கொண்டு கொடுக்கும் சமயமெல்லாம் அவள் கேட்கும் கேள்வி. சாக்கலெட்டை இரண்டு விள்ளல் கடித்துவிட்டு ஸிந்தியா வாந்தி எடுத்துவிட்டாள்.
“இப்பொ ஸ்வீட் ஒண்ணு இல்லேன்னு இங்கெ யார் அழுதா?” ஸோனா வெடித்தாள்.
“என்ன நடந்திச்சு, சொல்லு. காப்பி போடு. சாப்பிட்டிட்டே கேக்கறேன்.”
“ஒங்களுக்குக் காப்பிதான் முக்கியம். என்னோட அவஸ்தெயெப் பத்தி ஒங்களுக்கென்ன அக்கறை?” வாந்தியை வாருகாலால் தண்ணீர்விட்டுக் கழுவிக்கொண்டே ஸோனா எரிந்து விழுந்தாள்.
“சரி, காப்பிகூட அப்புறம் போட்டுக்கலாம். விஷயத்தெச் சொல்லு. தேவதூதன்
ஒண்ட்டே வழியிலே சந்திச்சுப் பேசி ஆசியெல்லாம் வழங்கிட்டுப் போனான்ற அற்புத
நிகழ்ச்சியெலாம் நீ சொல்லப் போறதில்லெ. அல்ப விஷயம் ஏதாவது சொல்லப் போறே. அதுக்கு ஏன் இவ்வளவு எரிச்சல்? சொல்லேன்.”
“என்னெ எதுக்கு வேலைலெ சேத்து விட்டீங்க?”
“புதுஸ்ஸா இதிலெ சொல்றதுக்கு என்னா இருக்கு?
சமூகத்தெப் பத்தி நீ தெரிஞ்சுக்கணும்.
நாலு பேரோட நீ பழகணும். அப்பொதான் உலகம்ன்னா என்னான்னு ஒனக்குப்
புரியும். ஒன்னோட வாழ்க்கை
புருஷன், கொளந்தெ, அடுப்படி, வீட்டுச்சுவர் இதுக்குள்ளேயே முடிஞ்சுவிடக் கூடாதுன்னுதான். இப்பொ ஏன் அதெத் திரும்பக் கேக்கறே?”
“என்ன நடந்ததுன்னு தெரிஞ்சா நீங்க இந்த மாதிரிப்
பேச மாட்டீங்க.”
“நானென்ன யேசுநாதரா, பார்க்காமலேயே எல்லாத்தெயும் தெரிஞ்சுக்க?
சொன்னாத்தானே தெரியும்?”
“இன்னெக்கி நர்ஸிங் ஹோம்லெ அந்த தியேட்டர்
டெக்னீஷிய ராஸ்கல் கோவிந்தன் டியூட்டி ரூம்லெ நர்ஸுப் பொண்ணுகள்ட்டெ அம்மணமா போஸ்
கொடுத்துண்டு நிக்கிற வெள்ளெக்காரச்சி ஒருத்தி ஃபோட்டோவைக் காட்னான். அந்த நாலும் சிரிச்சி கொளெஞ்சி நெளியறதுக.
வெக்கங்கெட்ட ஜன்மங்க.”
“இதுக்கு ஏன் இவ்வளவு கத்தல்? கோவிந்தன் ஒண்ட்டெ ஒண்ணும் காட்டலியே?”
“ஓ, அந்தக் கண்றாவி வேறெ நடக்கணும்ன்னு ஒங்களுக்கு ஆசையோ?”
“நீ இண்ணெக்கி நல்ல மூட்லெ இல்லே. கொஞ்சம் தண்ணி சாப்பிட்டு அமைதியா இரு.”
“அந்த டாக்டர் கெழம் - பேரம் பேத்தி எடுத்தாச்சு. ஹார்மோன் இன்ஜெக்ஷன் போட்டுண்டு ஹெட் ஸ்டாஃப் - அதுக்கு ஊர்லெ ரெண்டு பசங்க படிச்சிண்டிருக்கு -
அதோட ராத்திரியிலே குடும்பம் நடத்தறானாம்.”
என்ன பதில் சொல்வதென்று புரியாத நிலையில்
ஏகநாத் சிகரெட் ஒன்றைப் பற்றவைத்துக் கொண்டான்.
”ஒங்களுக்கென்ன, ஸ்மோக் பண்ணினா எல்லாம் தீந்து போச்சு. நான் இங்கெ கெடந்து குமுறிண்டிருக்கேன். நர்ஸிங் ஹோம்லேருந்து Creche-க்கு வந்து ஸிந்தியாவெ அழச்சிண்டு மழைலெ நனைஞ்சு வீட்டுக்கு
வந்திண்டிருந்தேன். கொட்ற மழைலெ
கொடெ இருந்தும் ஒண்ணுதான் இல்லாட்டியும் ஒண்ணுதான். ரோட்லெ ஆள் நடமாட்டம் இல்லெ. ஒரு ஆள் பாண்ட்ஸ், ஷர்ட் போட்டுண்டு கையிலே ஒரு சிகரெட்டோட காரிலே
உட்கார்ந்துண்டு ஜன்னக் கதவையெல்லாம் ஏத்தி மூடி வச்சிண்டு சுட்டு வெரலெ வளைச்சி,
“மேடம், ஒரு நிமிஷம் இங்கெ வர்றீங்களா?”ன்னு கூப்பிட்டது. யாரெக்
கூப்பிட்றான்னு திரும்பிப் பார்த்தா, “மேடம், ஒங்களெத்தான்.
ஒரு நிமிஷம் கிட்டெதான் வாங்களேன்”ன்னது. ’சில நேரங்களில் சில மனிதர்கள்’ சினிமாவில் ஸ்ரீகாந்த் லக்ஷ்மியை காரிலெ லிஃப்ட் கொடுத்து அனுபவிச்சுட்டு
எறக்கி விட்டுப் போனது ஞாபகம் வந்தது. பயந்து நடுங்கிண்டு விறுவிறுன்னு நடந்து வீட்டுக்கு வந்தேன்.”
ஸோனா தொடர்ந்தாள். “வந்து அரை மணி நேரமாகல்லெ. ஒரு
வாரத்துக்கு முன்னாலெ காலி செஞ்சுண்டு போனாங்களே, அந்த பார்வதி வீட்டுக்காரன் வந்தான். ‘எப்படீம்மா இருக்கே? கொளந்தெ
சௌக்கியமா?’ன்னு கேட்டுண்டே
உள்ளாரெ வந்து சேர்லெ ஒக்காந்துக் கிட்டான். ‘இங்கே இருக்கறப்போ அந்த மனுஷண்ட்டெ பேசினதுகூட கிடையாது. காபி சாப்பிட்றீங்களான்னு கேட்டேன். சரின்னது. போட்டு டேபிள்ல்லெ வச்சேன். ‘வேணாம். சும்மா
தமாஷுக்குத்தான் கேட்டேன்’ அப்படின்னான்.
என்ட்டெ என்ன தமாஷ்ன்னு
நெனெச்சிண்டிருக்கறப்போ ‘வாங்களேன்,
இளமை சுகம் சினிமாவுக்கு ரெண்டு டிக்கட்
வச்சிருக்கேன். சேர்ந்து போகலாம்’ன்னது. எனக்கு ஒதறல் எடுத்துப் போச்சு. ஸிந்தியவெத் தூக்கிண்டு, அந்தப்
பக்கத்து போர்ஷன் பொண்ணு குமுதினி இல்லெ, அதான் நைன்த் படிக்கறதே, அதைக்
கூப்பிட்டேன். நல்லகாலம் வந்தது.
கொஞ்ச நேரம் அந்த ஆள் அப்படியே
ஒக்காந்திண்டிருந்தான். ‘நான்
அப்பொ போயிட்டு இன்னொரு நாளெக்கி வர்றேன். நான் இப்பொ ஏன் போறேன் தெரியுமா? நான் இப்பொ ஒங்களோட தனியா இருக்கேன். ஒங்க வீட்டுக்காரரு இப்போ வந்தா நம்மளை என்னன்னு நெனைச்சிக்கிருவாரு?’ன்னு சொல்லிட்டே எழுந்தது. குமுதினிப் பொண்ணு கன்னத்தெத் தட்டிக்
கொடுத்துட்டே ஏறக்கட்னது. அந்தப்
பொண்ணு சொல்றது, அந்த மனுஷன்
நல்லவனாம். குடிச்சுட்டு வந்ததுனாலெ
இப்படி நடந்துக்கிட்டதாம்.”
ஸோனா இன்னும் முடிக்கவில்லை. “இந்த இழவெல்லாம் முடிஞ்சாவிட்டு கொடெயெ எடுத்துண்டு ஸிந்தியாவெத் தூக்கி
இடுப்பிலெ வச்சிண்டு அரைக்கக் கொடுத்த மாவெ வாங்கிவரப் போனேன். ஒரு வீட்டுத் திண்ணைலெ ரெண்டு கேடிப் பசங்க.
‘குட்டி ஷோக்காயிருக்கில்லெ’ அப்படீன்னு கமெண்டு அடிக்குதுங்க.”
ஸோனா கொட்டித் தீர்த்தாள். விசும்பிக்கொண்டே ஸிந்தியாவுக்குச் சோறு ஊட்டிப் படுக்க வைத்தாள். ஸோனாவுக்கு அமைதியின்மை காரணமாகச் சாப்பிடத்
தோன்றவில்லை. ஏகநாத்துக்குத்
துக்கம் மனம் பூராவும் வியாபித்திருந்த நிலையில் சாப்பாட்டுச் சிந்தனைக்கே இடம்
இல்லாமல் போயிற்று. படுக்கையில்
கிடந்தார்கள். ஸோனா
ஏகநாத்திடமிருந்து ஏதோ ஒரு பதிலை எதிர்பார்த்தாள். “சமூகம் இண்ணெக்கி ஒன்கிட்டெ அதனோட
விஸ்வரூபத்தைக் காட்டியிருக்கு, அவ்வளவுதான்.
தூங்கு. எல்லாம் சரியாப் போகும்” என்றான்.
“உலகத்தெத் தெரிஞ்சுக்கணும்னீங்க. புரிஞ்சுகிட்டவரைக்கும் சகிக்கல.”
அவள் கண்களில் கசிந்த நீரைத் துடைக்கக்கூடத்
திராணியில்லாமல் கிடந்தான் ஏகநாத்.
ஏகநாத் பாவமே செய்யாத புண்ணிய ஆத்மா அல்ல. இருப்பினும், அசிங்கமாகவோ,
அநாகரிகமாகவோ, கொச்சையாகவோ, பச்சையாகவோ, விரசமாகவோ
நடந்துகொண்டதாக அவனுக்கு நினைவில்லை. அப்பா பண்ணின பாவம் பிள்ளையின் தலைமேல் விடியும் என்று சொல்லக்
கேட்டிருக்கிறான். கணவன் செய்த
பாவம் மனைவி தலைமேல் விடியும் என்று எந்தப் பெரியவரும் சொன்னதாகக் கேள்வி இல்லை.
மேலும் சமீபத்தில், ஒரு மாமி மனம் கோணாமலும், ஒரு பெண்மணி உளம் நோகாமலும் அவன் அனுசரணையுடன்
நடந்து கொண்டிருந்திருக்கிறான். இதற்குச்
சன்மானம் கிடைக்கா விட்டாலும், கேடாவது
விளையாவது இருந்திருக்கலாம்.
கடைசியில் ஒன்றும் செய்யத் தோன்றாமல், “சாக்கடையில் உழலும் பன்றிகள்” என்று சற்று உரக்கவே கத்தினான். ஏகநாத்தால் இயன்றது அவ்வளவே.
பின்னுரை
வெளியிலும் புயல் வீட்டிலும் புயல். “சமூகம் இண்ணெக்கி ஒன்கிட்டெ அதனோட விஸ்வரூபத்தைக் காட்டியிருக்கு, அவ்வளவுதான். தூங்கு. எல்லாம் சரியாப்
போகும்” என்றான்.
“உலகத்தெத் தெரிஞ்சுக்கணும்னீங்க. புரிஞ்சுகிட்டவரைக்கும் சகிக்கல.”
கடைசியில் ஒன்றும் செய்யத் தோன்றாமல், “சாக்கடையில் உழலும் பன்றிகள்” என்று சற்று உரக்கவே கத்தினான். ஏகநாத்தால் இயன்றது அவ்வளவே.
‘கதை முடியும்போது கதையின் மையம் புயல் அல்ல நமது அன்றாட வாழ்வின் நிலைகுலைவு என்பது
புரியத்துவங்கும்’ - எஸ் ரா.
கதைகளின் சுட்டிகள்
=========>மொழி அதிர்ச்சி<=========
===========>புயல்<===========
ஏகாந்தன்
சார் தளத்தில் எ பி வாசகர்களின் பின்னூட்டங்கள்.
எளிமையான
கதை. ஒருநாள்
நிகழ்வு நன்றாகச் சொல்லப் பட்டிருக்கிறது
சமூகத்தின்
அவலங்கள் ஒரு வெகுளியான பெண்ணின் பார்வையில்!
. @ ஸ்ரீராம்: வெளியில் மையம்
கொண்டு, வீட்டிலடித்த புயல்..!
. @ கீதா சாம்பசிவம்: ஆண் சாதாரணமாக எடுத்துக்கொண்டு கதையை ஓட்டிக்கொண்டிருக்கையில், பெண் இதையெல்லாம் அவள் கோணத்தில் அனுபவித்துச் சொன்னால்தான், அவனுக்கும் அதிர்ச்சி வருகிறது.
காலை வண்ச்க்கம்.
பதிலளிநீக்குஎஸ்.ரா. போன்றவர்கள் தேர்ந்தெடுத்திருக்கும் நூறு கதைகளில் பத்து கதைகள் கூட தேறாது போலிருக்கே!
பதிலளிநீக்குஇவர்களெல்லாம் சிறந்த கதை தேர்வுக்கு சுலபமான ஒரு ஃபார்முலா தான் வைச்சிருப்பாங்க போலிருக்கு. எதெல்லாம் வெகு ஜன பத்திரிகைகளில் பிரசுரிக லாயக்கின்றி போகிததோ அதெல்லாம் இவர்களுக்குச் சிறந்த கதைகள். அம்புட்டுத் தான்.
கருத்துரைக்கு நன்றி.
நீக்குஎஸ்ரா மட்டுமல்லாமல் ஞானக்கூத்தனும் அல்லவா புயல் கதையை புகழ்ந்திருக்கிறார். புதுமைப்பித்தன் பாணியை மீண்டெடுத்ததாக அவர் கருதுகிறார். சம்பவங்கள் பார்ப்பவர் கோணத்தில் மாறுபட்டு விளங்கும் என்பதே கருப்பொருள் . இதைத்தான் ஏகாந்தன் ஐயா சுட்டிக்காட்டுகிறார்.
Jayakumar
உங்களுக்கே தெரியும் நான் கதையை எழுத்தில் வடித்துச் சொல்லும் நேர்த்திக்குத் தான் முக்கியத்துவம் கொடுக்கும் ஆசாமி என்று.
நீக்குகதாசிரியர் ஆ.வி.யில் வெளிவந்த ஜே.கே.யின் 'அக்னிப் பிரவேசம்' சிறுகதையைப் படித்திருக்க மாட்டார் போலும்.
நீக்குபுதுமைப்பித்தனா?
நீக்குசான்ஸே இல்லை. எள்ளலும் எக்காளமுமாய் அவர் சமூகத்தைப் பார்க்கிற பார்வையே வேறு.
முதல் கதையில் ரிலேக்சேஷன் அப்படீன்னா மறை கழண்ட சமயம் என்று புரிந்தது.
பதிலளிநீக்குஇரண்டாவது கதை, ஒரே நாளில் இத்தனை அக்கிரமங்களா? கதையாசிரியர் நினைத்தால் எதுவும் நடக்கும் போலிருக்கு. சிறந்த கதை என்ற அளவுகோலுக்கு அர்த்தம், சிறந்த ஜால்ரா என்றுதான் புரிந்துகொள்ளவேண்டியிருக்கு
கதையாசிரியர் கோபி கிருஷ்ணனின் வாழ்க்கை வரலாறு நான்கு பாகங்களா? ஏதேனும் முக்கியத்துவம் இருக்கிறதா?
பதிலளிநீக்குமுதல் பகுதியை வாசித்து விட்டு பின்னர் மற்ற பகுதிகளுக்கு சென்றால் மறை கழண்டவர் வாழ்க்கை எவ்வளவு கடினம் என்பது புரியும்.
நீக்குகருத்துரைக்கு நன்றி
நீக்குஎன் கருத்தைக் கொடுக்கும் முன் இந்தக் கருத்து கண்ணில் பட்டுவிட்டது.
நீக்குதயவு செய்து மறை கழண்ட என்ற சொல்லைத் தவிர்க்கலாம் என்பது என் தனிப்பட்டக் கருத்து அதை இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன்.
மேலும் இதைப் பற்றிச் சொல்வதை தவிர்க்கிறேன்.
கீதா
செமி என்ற வார்த்தையையும் தவிர்க்கலாம் என்பதும் என் தனிப்பட்டக் கருத்து. அதையும் இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன்.
நீக்குகீதா
ஆட்டோ ஓட்டுனரைப் போன்ற நல்ல உள்ளங்கள் இன்னும் வாழ்கிறார்கள்...
பதிலளிநீக்குதிருமணத்தின் பின் படித்து முன்னேறிய பெண் , ஆட்டோரைவர் , இல்லத்திலிருந்து படித்த பையன் அனைவரையும் வாழ்த்துவோம்.
பதிலளிநீக்குகதை ஒரு நாளின் அவலத்தை சொல்கிறது.
காயத்ரி நிஜமாகவே முன்னுதாரணம். தன்னம்பிக்கை விடாமுயற்சி என்று...அவரைப் பற்றிய பக்கத்திற்குச் சென்று வாசித்த போது தெரிந்தது.
பதிலளிநீக்குஆர் கோகுல செல்வன் தயாரித்திருக்கும் எலக்ட்ரிக் சைக்கிளாக மாற்றி அமைத்திருப்பது நல்ல முயற்சி. அனுமதிக்குக் காத்திருக்கிறார் என்பதும் தெரிகிறது. பார்க்க வேண்டும் அது எப்படிச் செயல்படுகிறது என்று. ஆனால் பயிற்சிக்குச் சரியாகுமா என்று தெரியவில்லை.
கீதா
அட மருத்துவர் கலெக்ட்டராக - அதான் தலைப்பாக இன்று!!
பதிலளிநீக்குஇதுவும் இதற்கு முன்னான செய்தியும் நல்ல விஷயங்கள். கலெக்டர், மருத்துவர் இரண்டு சேவையுமே மக்களுக்காகத்தானே! பாராட்டுகள் !
கீதா
இரு கதைகளுமே ஓகே தான் என்றாலும், இரண்டாவது கதை கொஞ்சம் பரவாயில்லை.
பதிலளிநீக்குஆனால் எஸ் ரா மற்றும் பெரிய எழுத்தாளர்களின் நல்ல விமர்சனக் கருத்து கிடைத்திருக்கிறது. ஒவ்வொருவரின் கண்ணோட்டமும் கதையைப் பார்க்கும் விதமும் வேறுபடத்தான் செய்யும்.
கீதா
இரண்டாவது கதையின் கரு பெரிதாக இல்லை என்றாலும் எழுதியது நன்றாக இருக்கிறது. அது எழுதப்பட்ட காலத்தை எடுத்துக் கொள்ளலாம் என்றும் தோன்றுகிறது. ஒரு பெண்ணின் பார்வையில் அவள் படும் இப்படியான கஷ்டங்களை எடுத்துக் கொள்ளலாம்.
பதிலளிநீக்குதிருவனந்தபுரத்தில் இருந்தப்ப எனக்கும் நிறைய அனுபவங்கள் உண்டு. அதுவும் குடித்துவிட்டு வீட்டு வாசலில் ஒரு க்ரூப் உட்கார்ந்து இருப்பார்கள். அவர்களைக் கடந்துதான் எங்கும் செல்ல முடியும் வீட்டில் நான் தனியாக வேறு. எனக்குக் கொஞ்சம் தைரியம் கூடுதல்தான் என்றாலும் கூட. அது போன்று கோட்டைச் சுவரை ஒட்டிய தெருவில் ஆள்நடமாட்டம் உண்டு என்றாலும் கூட சைக்கிளில் சென்று கொண்டே நம் மேல் கைவைப்பவர்கள் உண்டு.
அதை விட படித்த மருத்துவரே! அதன் பின் அவரிடம் சென்றதில்லை.
கீதா
ஆசிரியரைப் பற்றிய வரிகளில் அவரது வரிகளிலேயே OCR/OCD வகையில் இருந்திருக்கிறார் என்று தெரிந்தது.
பதிலளிநீக்குஇப்படியானவர்களால் நிலைத்து வேலை செய்ய முடியாது,. மிகவும் கடினம்.....அதனால்தான் முதல் திருமணம் முறிவு இரண்டாமவர் தற்கொலை முயற்சி. இப்படியானவர்கள் தகுந்த சிகிச்சை பெற்று நல்ல சைக்கோ தெராப்பி எடுத்துக் கோள்ளவில்லை என்றாலும், கூட இருப்பவர்களுக்கு இப்பிச்சனை பற்றிய சரியான புரிதல் இல்லை என்றால் இவர்களுடன் வாழ்வதும் இவர்களைக் கையாள்வதும் மிகவும் கடினம்.
ஆசிரியருக்குச் சிறு வயதில் traumatic experiences ஏற்பட்டிருக்கும் என்று நினைத்த போது, ஏகாந்தன் அண்ணாவின் பதிவை வாசிக்க நேர்ந்தது ஜெகெ அண்ணா நீங்கள் கொடுத்திருந்த சுட்டி மூலம். அதில் தெரிந்தது அவரது சிறு வயதில் மனதளவில் ஏற்பட்ட மனகாயங்கள் அவர் மனதில் ஆழமாகப் பதிந்து அந்த ஸ்க்ரிப்ட் தொடர்ந்திருக்கிறது,
ஆச்சரியம் அவர் முதுகலை உளவியல் படிப்பில் படித்தும் தன்னைப் பற்றி அறிய நேர்ந்தும் அதை விட்டு வெளியில் வரமுடியாமல் இருந்திருக்கிறார். பாவம். மருந்து சிகிச்சை மட்டும் போதா. சைக்கோ தெரப்பி மிக மிக அவசியம். அக்காலகட்டத்தில் சைக்கோ தெரப்பி என்பது இப்போது போல் வளர்ந்திருக்கவில்லை. எனவே அவருக்குக் கிடைத்திருக்க வாய்ப்பில்லை இப்போதைய விழிப்புணர்வும் அப்போது இருந்திருக்காதுதான்,
இப்படியானவர்களில் பலர் வேலையில் நிலைத்திருக்க முடியாவிட்டாலும், படிப்பில் மிக கெட்டியாக, வேலையிலும் கூட அறிவாற்றலும் திறமை மிக்கவர்களாக இருப்பவர்களும் உண்டுதான் அப்படி இந்த ஆசிரியரும். இவர்களில் இரு விதமான மனம் படைத்தவர்கள் உண்டு, மிக மிக மெல்லிய மனம்....இல்லை என்றால் மிகவும் குரூர மனம்..அந்தக் குரூர மனம் கூட வருவது மனம் பாதிக்கப்படுவதால்தான்.
ஆனால் இதைச் சமூகம் புரிந்துகொள்ளாது. ஏன் படிச்சவங்களுமே புரிந்து கொள்ள மாட்டாங்க.
அனுபவம் இல்லாதவர்களால் கண்டிப்பாகப் புரிந்து கொள்ள முடியாது.
கீதா
முதுகலை உளவியல்//இளங்கலை
நீக்குகீதா
@கீதா
நீக்குகதை ஆசிரியரே ஒப்புக்கொண்டதும், தொடர்ந்து மருந்துகள் உட்கொண்டதும் அவரே விவரித்ததால் தான் செமி என்ற வார்த்தையையும் மறை கழண்ட என்று சொற்தொடரையும் உபயோகிக்க நேர்ந்தது. பொறுத்தருள்க.
Jayakumar
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
நீக்கு
நீக்குஇக்கதை எனக்கு காசி கதையை நினைவூட்டியது.,
https://azhiyasudargal.blogspot.com/2009/11/blog-post_23.html
ஆசிரியருடைய தாய் வழி தாத்தா மிகப் பெரிய செல்வந்தர். மனநிலை பாதிக்கப்பட்டு குணசீலத்தில் ஒரு மண்டலம் கட்டி வைத்து சிகிச்சை பெற்றவர். பார்த்துக்கொண்டது ஒரு வேலையாள். வீட்டுக்கு திரும்ப கூட்டிவந்து சிறிது காலத்தில் இறந்துவிட்டார். இக்கதையை ஆசிரியரே சொல்லியிருக்கிறார். ஆக இவரது நோய் பரம்பரை வழியாக வந்ததாக அனுமானிக்கலாம்
https://azhiyasudargal.blogspot.com/2009/11/blog-post_23.html
காசி-பாதசாரி
https://docs.google.com/document/d/1v-_aO7uSGa5-NAURr8_UOl1JVkialBJHqzFVyucYWAY/edit?usp=sharing
ஹோ ஜெ கே அண்ணா, நான் தவறான ஆங்கிளில் சொல்லலை, பொதுவாகச் சொன்னது சமூகத்திற்கு. தவிர்க்கலாம் என்பதுதான். ஆசிரியர் தன் பிரச்சனையை வெளிப்படையாகச் சொல்லியிருந்தாலும் கூட.
நீக்குகீதா
ஆமாம் அண்ணா, நான் ஆசிரியரைப் பற்றி அவரே சொல்லியிருந்த அப்ப்குதிகளை நீங்க கொடுத்திருக்கும் சுட்டிகளில் போய் வாசித்துவிட்டேன்.
நீக்குகீதா
இந்த நிலையிலும் அவரது அறிவு பாதிக்கப்படவில்லை என்பதை அவரே சொல்லியிருக்கிறார் அவரைப் பற்றி சொல்லும் இடங்களில். நிறைய படித்திருக்கிறார்.
பதிலளிநீக்குசிறு விமர்சனங்கள், புகார்களைச் சந்திக்கும் மனநிலை இல்லாமை.....அவரது மனம் மிகவும் மெல்லிய மென்மையான கண்ணாடி போன்றது என்பதும் தெரிகிறது, அவரது மற்ற கதைகளையும் வாசிக்க வேண்டும் என்ற ஆர்வம் எழுகிறது. பாவம் என்றும் இரக்கமும் தோன்றுகிறது. மரணமும் சீக்கிரம் நிகழ்ந்திருக்கிறது.
கீதா
பாராட்டப்பட வேண்டிய விஷயம் இப்படிப் பலரையும் அறிமுகப் படுத்திவருகிறீர்கள் பாசிட்டிவ் செய்திகளாக. ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் இந்தச் சமுதாயத்திற்கு உதாரணமாகத் திகழ்கிறார்கள். எல்லோரையும் பாராட்டி வாழ்த்துவோம்.
பதிலளிநீக்குதுளசிதரன்
கதைகளில் புயல் நன்றாக இருக்கிறது. ஒரு பெண்ணின் மனதில் வீசும் புயலை பல சமயங்களில் தினமும் சந்திக்கும் இப்படியான பிரச்சனைகள் அவர்களின் மனதில் புயலாய் வீசுவதை அழகாகச் சொல்லியிருக்கிறார் கதாசிரியர் கோபி கிருஷ்ணன். வேலைக்குச் சென்றாலும் சரி வீட்டில் இருப்பதாக இருந்தாலும் சரி, பெண்களுக்கு இப்படியான புயல்கள் அவ்வப்போது எழுந்து கொண்டேதான் இருக்கிறது. இந்தப் புயல்கள் சூறாவளியாக மாறவும் செய்கின்றனவே.
பதிலளிநீக்குதுளசிதரன்
இரண்டாவது கதையில் ஆங்காங்கே ஒரு குறிப்பிட்ட சமூக வார்த்தைகள் பிரயோகத்தைப் பார்த்ததும் கேள்வி எழுந்தது கூடவே எழுத்து நடையில் கேள்வி எழ பின்னர் அவரைப் பற்றிய அவரே சொல்லும் பகுதிகளை சுட்டிகளில் வாசித்த போது தெரிந்தது அவருடைய சமூகப் பின்னணி.
பதிலளிநீக்குகீதா
ஜோக் 2.
பதிலளிநீக்குஒருவன் மனநோய் மருத்துவரிடம் “ஒருத்தனுக்கு பைத்தியம் குணம் ஆகி விட்டது என்பதை எப்படி தெரிந்து கொள்வீர்கள்” என்று கேட்டான்.
அவர் “ பல வழிகள் இருக்கின்றன. உதாரணமாக ஒரு பக்கெட்டில் தண்ணீர் வைத்து விட்டு அதற்கு பக்கத்தில் ஒரு ஸ்பூனையும், மக்கையும் வைத்து விட்டு அவனைக் கூப்பிட்டு பக்கெட்டை காலி பண்ண சொல்வோம். தண்ணீரை ஸ்பூனால் எடுத்து ஊற்றிக் கொண்டிருந்தால் அவனுக்கு குணமாகவில்லை என்று முடிவு செய்வோம்.”
“அது சரி நீங்களானால் என்ன செய்வீர்கள்?” என்று கேட்டார்.
கேள்வி கேட்டவர் “மக்கால் தண்ணீரை மொண்டு ஊற்றுவேன்” என்றாராம்.
மருத்துவர் “ இதைத் தான் நாங்கள் செமி என்று கூறுவது.” என்றாராம்
“ஏன் அப்படி?” என்று கேட்டானாம்
“முழுதும் குணமடைந்தவன் பக்கெட்டை கவிழ்த்து விட்டு சென்று விடுவான்” என்றாராம் மருத்துவர்.
நீக்குமனிதவள மேம்பாட்டு அதிகாரியாக தன்னை உயர்த்தி கொண்ட காய்த்ரி வாழ்க ! பெண்கள் தன்னம்பிக்கையை வளர்த்து கொள்ள உதவி வருவது மகிழ்ச்சி, வாழ்த்துகள்.
பதிலளிநீக்குகோகுல செல்வன் முயற்சி சாதனை ஆனது மகிழ்ச்சி வாழ்த்துகள்.
ஆட்டோ ஓட்டுனர் பெஞ்சமின் நேர்மைக்கு வாழ்த்துகள்
கருத்துரைக்கு நன்றி.
நீக்குமுதல் கதை ‘ரிலேக்ஸேஸனாயி’ என்ற வார்த்தை பல விதமாக கதையில் வந்தது மொழி அதிர்ச்சிதான்.
பதிலளிநீக்கு'உலகத்தெத் தெரிஞ்சுக்கணும்னீங்க. புரிஞ்சுகிட்டவரைக்கும் சகிக்கல.”
அடுத்த கதை சோனாவின் பார்வையில் உலகம். ஸோனாவிற்கு கிடைத்த அனுபவங்களை சொல்கிறது. உலகம் இப்படி பட்ட சில மனிதர்கள் இருப்பார்கள்தான் நாம் பயப்படாமல் தைரியமாக இருக்க வேண்டும் என்று சொல்லி இருக்கலாம்.
//கணவன் செய்த பாவம் மனைவி தலைமேல் விடியும் என்று எந்தப் பெரியவரும் சொன்னதாகக் கேள்வி இல்லை. மேலும் சமீபத்தில், ஒரு மாமி மனம் கோணாமலும், ஒரு பெண்மணி உளம் நோகாமலும் அவன் அனுசரணையுடன் நடந்து கொண்டிருந்திருக்கிறான். இதற்குச் சன்மானம் கிடைக்கா விட்டாலும், கேடாவது விளையாவது இருந்திருக்கலாம்.//
அப்படியும் சொல்ல முடியாது போல ஏகநாத்லால்.
கருத்துரைக்கு நன்றி.
நீக்குஇந்த வாரத்தின் நற்செய்திகள் அனைத்தும் சிறப்பு. சம்பந்தப்பட்ட அனைவருக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
பதிலளிநீக்கு