வியாழன், 4 மே, 2017

இளமை நினைவுகள் -- மோகன்ஜி [ கவிதைக்கதை ] நினைவு



     வானவில் மனிதன் நண்பர் மோகன்ஜி அனுப்பியிருக்கும் ஒரு கவிதைக்கதை!  





நான் சென்ற இன்பச்சுற்றுலா

மோகன்ஜி

ஒரு சனிக்கிழமை காலை எட்டுமணிக்கு
உறுமியபடி நின்றிருந்த 'பாப்புலர்' பஸ்ஸில்
நாலாம் வகுப்பு பிள்ளைகள் ஏறிக்கொண்டோம்.


'பேருந்து' என்ற பதம் எனக்குத் தெரியாது.
தனித்தமிழ் ஆர்வலர்கள் 
நான் ஆறாம் வகுப்பு வரும்வரை 
இந்தக் கவிதையைப் படிக்க வேண்டாம்.


ஞானசேகரன் சார், மேரி டீச்சர் 
அதட்டல்களையும் மீறி
அட்டகாசமும் ஆரவாரமும் பாண்டிச்சேரி வரை....


அப்பா அம்மாவுடன் இல்லாத ஆனந்தப் பயணம்.
அன்றுதான்,
சந்திரா மீண்டும் என்னோடு 'பழம்'விட்டதும்
ஒரு சூடவல்லி மிட்டாய்க் கொடுத்ததும்.


ஏனோ உம்மென்றிருந்த ஜோதிராமன்.
ஏறுமாறாய் ஊக்குகள் பிணைத்திருந்தது
பட்டன்கள் விழுந்துவிட்ட அவன் சட்டையை.


பெண்ணையாற்றுப் பாலம் கடந்தபோது 
ராமதாசு காட்டிய ஆற்றின் மடு.
யானையைக்கூட உள்ளே இழுத்துவிடுமாம்.
'நம்புடா' என  கிள்ளி போடப்பட்ட பிளஸ்குறியில்
குறுகுறுத்த என் உள்ளங்கை.


மேரிடீச்சர் மிக்சர் பொட்டலம் வினியோகம் செய்தபோது
ஜோதி ஆள்காட்டி விரலெழுப்பி சொன்ன 'அர்ஜண்ட் மிஸ்' .
'சனியனே' என்றபடி 
மிஸ் ஓரம்கட்ட சொன்ன பஸ்ஸிலிருந்து
முதலில் இறங்கியது ஞானசேகரன் சார்.
எல்லா பாய்ஸும் இறங்கி வரிசைகட்ட,
ஆடவருக்கான தனிச்சுதந்திரம் எனும் அவலம்
உணர்ந்த முதல் தருணம்.


அன்றுதான் முதல்முதலாய் பார்த்த கல்லறைத் தோட்டம்.
சிலுவைபூத்த சிமெண்ட் மேடைகள் நெடுகிலும்
மௌனம்கூட்டி இருந்த தனிமை.
பஸ்கடந்த போது, 
தோட்டத்தில் நுழைந்த தள்ளுவண்டியில் 
மாலைகள் மூடிய பெட்டியொன்று  
.

சனியன்கள் ஏறியவுடன் புறப்பட்ட பஸ்,
 டியூப்ளே சிலைமுன் நின்ற கடற்கரை சாலை.
டியூப்ளே பற்றி ஞானசேகரன் சார் சொல்லிக்கொண்டிருந்தபோது,
கடந்தாள் 
முதன்முதலாய் நான் கண்ட கவுன்அணிந்த லேடி .


மணக்குள விநாயகர் கோவிலில் 
யாரோ தந்தது தேங்காய் பத்தையும் கல்கண்டும் .
அழகாய்இருந்த அரவிந்தர் ஆசிரமம் .
 மாடி வராண்டாவில் நின்று கையசைத்த அன்னை.
 எல்லோருக்கும் கிடைத்த சிவந்த வாழைப்பழங்கள்.
அன்றுதான் முதன்முதலாய் செவ்வாழையை ருசித்ததுவும்.


பார்க்கில் அமர்ந்து திறந்த எங்கள் டிபன்பாக்ஸ்கள்.
பாய்ஸுடன் சாப்பிட அமர்ந்த சந்திராவும் பார்வதியும் .
ராமதாசு எனக்குத் தந்த மிக்ஸர் பொட்டலத்தை,
சந்திராவுக்குத் நான் தந்ததுவும்,
அவன் கோபித்து என் கீழ்த்தொடையில் கிள்ளியதும்,
மியூசியம் பக்கம்போகும் போது
மீண்டும் 
'பழம்விட்ட பன்னி' என்று அவன் திட்டியதும்,


பின்னாட்களில்
அன்று பார்த்த இடங்களையெல்லாம்
மீண்டும்மீண்டும் பார்க்க வாய்த்ததுவும்,


கல்யாணியை ஓரிருமுறையும்
ஜோதியின் அக்காவை ஒருமுறையும்
கண்டதன்றி
யாரையும் பின்னர் சந்திக்காததும்.
ராமதாசுவும் கொஞ்சநாளில் மாண்டுபோனதுவும்,


நடுநாயகமாய்
அன்று
பணமூட்டைகளோடு நின்றிருந்த டியூப்ளே,
பிறகு நேருவுக்கு இடம்கொடுத்துவிட்டு
கடற்கரைசாலையின் 
ஒரு ஓரத்திற்கு ஒதுங்கிப் போனதுவும்.


களிப்பும் இனம்புரியா சோகமுமாய் 
திரண்டிருந்த மூட்டையோடு,
அந்த 'எஸ்கர்சன்' நினைப்பும்
மனசின் ஒரு ஓரத்தில் உறைந்ததுவும்


அன்று வகுப்பில் நான் எழுதிப் படிக்காத
'நான் சென்ற இன்பச்சுற்றுலா'

34 கருத்துகள்:

  1. நீங்க எழுதறதுக்குக் கேட்கணுமா தம்பி! மிக அருமை!

    பதிலளிநீக்கு
  2. அருமையான நினைவலைகள்.
    சிறுவயது நட்பு காயும், பழமும் தான். அந்த குழந்தைமனம் இருந்தால் நல்லது,
    மறத்தலும், மன்னிப்பும் அருமை.
    இன்பசுற்றுலா என்றும் நினைவுகளில்.

    பதிலளிநீக்கு
  3. நடந்ந சம்பவம் க(வி)தையாய் அருமை.

    பதிலளிநீக்கு
  4. நடைபெற்ற நிகழ்வுகள்
    கவிதையாய்
    அருமை

    பதிலளிநீக்கு
  5. படிக்கச் சுவையாக இருந்தது. 'காய்' விடுதலும் 'பழம்' விடுதலும் இளமையின் வஞ்சமில்லா விளையாட்டு.

    -இராய செல்லப்பா நியூஜெர்சி

    பதிலளிநீக்கு
  6. அருமையான பதிவு க்கு மிக மகிழ்ச்சி

    பதிலளிநீக்கு
  7. அருமையான பதிவு க்கு மிக மகிழ்ச்சி

    பதிலளிநீக்கு
  8. நினைவு மீட்டல் நல்லா இருந்தது.

    பதிலளிநீக்கு
  9. நினைவுகளின் ஈரம்கசியும் பசுமை.

    நன்றி.

    பதிலளிநீக்கு
  10. ஆஹாஹா... இனிமையாய் ஒரு இன்பச் சுற்றுலா....

    பதிலளிநீக்கு
  11. ஆஹாஹா... இனிமையாய் ஒரு இன்பச் சுற்றுலா....

    பதிலளிநீக்கு
  12. ஆவ்வ்வ்வ்வ்வ்வ் நான் ஓடிவந்த வேகத்தில தடக்கி விழுந்திடாமல் 6 ம் நம்பர் பஸ்ஸை பிடிச்சிட்டேன்ன்:).

    /// [ கவிதைக்கதை ] ////
    இண்டைக்குத்தான் சகோ ஸ்ரீராம் கரெக்ட் டான ஹெடிங் வச்சிருக்கிறார்ர்... நானும் அப்படித்தான் படிச்சதும் நினைச்சேன்ன்.. ஒரு கதையை கவிதை போல சொல்லியிருக்கிறார் மோகன் ஜி என. கவிதைக்கதை ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்.

    பழைய நினைவுகளை எல்லாம் உசுப்பி விட்டிட்டீங்க... நண்பர்களோடு சுற்றுலா என்றாலே அது மறக்கவே முடியாத ஒன்றுதானே...

    பசுமை நிறைந்த நினைவுகளே... பாடித்திரிந்த பறவைகளே...

    பதிலளிநீக்கு
  13. //கல்யாணியை ஓரிருமுறையும்
    ஜோதியின் அக்காவை ஒருமுறையும்
    கண்டதன்றி
    யாரையும் பின்னர் சந்திக்காததும்.
    ராமதாசுவும் கொஞ்சநாளில் மாண்டுபோனதுவும்,///

    மிகவும் கவலையான நினைவுகள்.. என்னிடமும் இப்படி இருக்கு நிறைய... எனக்கும் கிட்டத்தட்ட முதலாம் வகுப்பிலிருந்து குட்டிக்குட்டி விசயங்களெல்லாம் பசுமரத்தாணிபோல மனதில் நிற்குது.

    முதலாம் வகுப்பில் ஒருநாள் ஸ்கூலுக்குப் போகும்போது, ஸ்கூல் எல்லைக்குள் போனதும், ஒரு காலை மண்ணில் ஊன்றி, ஒரு பிரேக் போட்டேன்.. போக மாட்டேன் ஸ்கூலுக்கு என:) அந்த பிரேக்கை எடுக்க, அன்று அம்மா பட்ட பாடு எனக்குத்தான் தெரியும்:)ஹா ஹா ஹா.

    பதிலளிநீக்கு
  14. நல்லாத்தான் பஸ்ஸில் கிள்ளி விளையாடியிருக்கிறார் மோகஞி, நாங்களெல்லாம் “கிள்ள” மாட்டோம்.. “நுள்ளு”வோமாக்கும் ஹா ஹா ஹா:).[யாரும் தப்பா நினைச்சிடப்போகினம் வைரவா.. இது எங்கள் பாசையைச் சொன்னேன்:)].

    பதிலளிநீக்கு
  15. ///பார்க்கில் அமர்ந்து திறந்த எங்கள் டிபன்பாக்ஸ்கள்.
    பாய்ஸுடன் சாப்பிட அமர்ந்த சந்திராவும் பார்வதியும் .
    ராமதாசு எனக்குத் தந்த மிக்ஸர் பொட்டலத்தை,
    சந்திராவுக்குத் நான் தந்ததுவும்,
    அவன் கோபித்து என் கீழ்த்தொடையில் கிள்ளியதும்,//

    ஹா ஹா ஹா.. ராமதாசு மதிரி ஆட்கள் முன்னேறவே விடாயினம் போல இருக்கே:).. வழித் தேங்காயை எடுத்து தெருப் பிள்ளையாருக்கு அடிச்ச கதைதான் இந்தக் கதை:) அப்போ கிள்ளாமல் என்ன பண்ணுவார் அவர்:).

    பதிலளிநீக்கு
  16. உண்மையாகவே அந்த வயதில் அது இன்பச் சுற்றுலாதான். மறப்பதற்கில்லை. கவிதையாக அருமை.அன்புடன்

    பதிலளிநீக்கு
  17. சுற்றுலா சென்ற போதுகூட இவ்வளவு மகிழ்ச்சி இல்லை ,இப்போ நினைச்சா அவ்வளவு மகிழ்ச்சி பொங்குகிறதே :)

    பதிலளிநீக்கு
  18. அருமை,இந்த தகவலை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி
    Tamil News

    பதிலளிநீக்கு
  19. அருமை. பல வரிகள் மிகவும் ரசிக்க வைத்தன ஏதோ சுற்றுலா சென்றது போன்றது மட்டுமின்றி, பழைய நினைவுகளையும் மீட்டெடுத்துவிட்டது!! பாராட்டுகள்!

    கீதா: வாவ்! மோகன் ஜி பின்னிட்டீங்க!! நீங்கள் உண்மையிலேயே சென்ற சுற்றுலாவை அழகான கவிதை வடிவில் கொடுத்தது...இவ்வுலகையே அந்த ஆனமுகன் தன் அம்மை அப்பனைச் சுற்றி வந்தது போல நாம் செல்லா விட்டாலும்,கேட்டது, படங்களில் கண்டது என்பதை கற்பனையில், செல்லாத இடங்களையும் கவிதை வடிவில் உலகையே சுற்றி விடலாம் போல....அப்படியான ஓர் எண்ணத்தையும் கொடுத்தது உங்கள் கவிதை!! அப்படியான வார்த்தைகளின் அவதாரம்!! அருமை...!!! அருமை..

    பதிலளிநீக்கு
  20. ஞாபகம் வருதே ஞாபகம் வருதே :) ஆட்டோகிராப் இல்லை முதல் முதல் பிரைமரி பள்ளியில் ஒன் டே ட்ரிப் போனோம் திருவண்ணாமலை மேட்டூர் டாம் மகாபலிபுரம் :) ..

    அழகான நினைவுகளை கவிதையாய் வடித்து விட்டீர்கள் ..
    எத்தனை முறை சென்றாலும் அந்த முதல் முறை செல்லும்போது இருக்கும் எக்ஸைட்மெண்ட் எப்பவும் திரும்ப வராது ..

    பதிலளிநீக்கு
  21. //ஒரு சூடவல்லி மிட்டாய்க் // இது எப்படி இருக்கும் ??

    பதிலளிநீக்கு
  22. @Angelin, சூட மிட்டாய் கேள்விப் பட்டதில்லை? வெள்ளையா நடுவில் ஓட்டையோடு இருக்கும். நாங்க அதைச் சுண்டுவிரலில் மாட்டிப்போம். மெல்ல மெல்ல வாயில் இட்டு அந்த மணத்தை வாய்க்குள் இழுக்கையில் ஒரு சுகமான, ஆனந்தம் தோன்றும் பாருங்க! அதுக்கு ஈடு இணை இல்லை. இப்போவும் சில சமயம் பேருந்துப் பயணம் வாய்த்தால் இதை வாங்கிக் கொண்டு போவதுண்டு. இல்லைனால் ஆரஞ்சு மிட்டாய்! முன்னெல்லாம் இந்திய சுதந்திர தினத்துக்கு ஆரஞ்சு மிட்டாய்கள் தான் தருவாங்க! கவியோகி சுத்தாநந்தரின் ஜிப்பாப் பைக்குள் ஆரஞ்சு மிட்டாய்கள் வைத்திருப்பார். குழந்தைகளைப் பார்த்தால் கை நிறைய அள்ளித் தருவார்! சாக்லேட் சாப்பிடக் கூடாது என்பார்! :)))) தம்பி மோகனின் பதிவு எனக்குள்ளும் நோஸ்டால்ஜியா! :)

    பதிலளிநீக்கு
  23. @ Geetha akka ஆஹா!! தாங்க்ஸ்க்கா பெப்பெர்மிண்ட்டுக்கு சூடமிட்டாய்னு ஒரு பேர் இருக்கறது தெரியாம போச்சே :)

    பதிலளிநீக்கு
  24. பெப்பெர்மிண்ட் அல்லது பாப்பின்ஸ் தான் எங்க சாய்ஸ்சும் ..

    பதிலளிநீக்கு
  25. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், ஏஞ்சலின், பெப்பர்மின்ட் வேறே! சூட மிட்டாய் வேறே! இது வெள்ளைக்கலரில் மட்டுமே கிடைக்கும். சூடம் போல வடிவம் இருப்பதால் சூட மிட்டாய்னு சொல்றாங்களோ தெரியலை. கற்பூர வில்லை போலவே வெண்மையாக இருக்கும். பெப்பர்மின்ட் பல நிறங்களில் வருமே! சூட மிட்டாய் வேறே! பாப்பின்ஸ் அல்லது பெப்பர்மின்ட் வேறே! சூட மிட்டாய்ப் படம் கிடைச்சால் போடறேன். :)

    பதிலளிநீக்கு
  26. ஆஹா !! இதெல்லாம் taste பார்க்காம இந்தியால பிறந்து இருந்துட்டு வந்திருக்கேன் பாருங்க ..

    போடுங்க லிங்க் ..

    பதிலளிநீக்கு
  27. வரேன், சாப்பாடு போட்டுட்டு, நானும் சாப்பிட்டுட்டு!

    பதிலளிநீக்கு
  28. @ஏஞ்சலின், மிட்டாய்கள் படம் போட்டாச்சு, பாருங்க! :)))) சுட்டி கீழே

    http://sivamgss.blogspot.com/2017/05/blog-post_92.html

    பதிலளிநீக்கு
  29. எண்ண எண்ண இன்பம் தான்.
    எத்தனையோ நினைவலைகளை மீட்டிச் சென்றது உங்கள் பதிவு மோகன் ஜி.
    அந்த உற்சாகம், அந்த தோழமை,பாசம், அழுகை,ஆனந்தம் எல்லாம் துளிக் கூடக் கலப்படமில்லாத உறவுகள். இந்த அனுபவங்களைக் கொடுத்த இறைவனுக்கு நன்றி.
    எங்களை அந்த நாட்களுக்கு அழைத்துச் சென்ற துல்லிய நினைவுகளுக்காகவும் உங்களுக்கு நன்றி வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  30. நெஞ்சம் மறப்பதில்லை நினைவை இழக்கவில்லை.......

    பதிலளிநீக்கு
  31. நினைவுலாவில் ஒரு சுற்றுலா.இனிமை.அன்னையைக் கண்ட அரிய அனுபவம்.பகிர்வுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  32. நினைவுலாவில் ஒரு சுற்றுலா.இனிமை.அன்னையைக் கண்ட அரிய அனுபவம்.பகிர்வுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  33. உள்ளத்தில் ஊரும் நினைவுகள்
    அடிக்கடி
    எம்மை மீட்டுப் பார்க்க வைக்கும்!
    நினைவுகள்
    நிரலாக நீண்ட கவிதை அருமை!

    பதிலளிநீக்கு
  34. ஆஹா... மோகன்ஜி அண்ணாவின் கவிதைக்கதை மிக அருமை....
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!