ஆண்
வாசலில் ஆட்டோ சத்தம் கேட்டது. இரண்டாவது மாடி பால்கனியில் இருந்து எட்டிப் பார்ப்பதற்குள் யார் வந்தார்கள் என்று புலப்படவில்லை.
யார் வீட்டுக்காக இருக்கும் என்கிற யோசனை. இன்று ஏனோ பொழுது போகாமல் புத்தியும் உடம்பும் அலை பாய்கிறது.
காலிங் பெல் அடித்தது. கதவைத் திறந்தால்..
தடி சீனு. ஒல்லிப்பிச்சானாய் இருக்கும் அவருக்கு எப்படி இந்த பட்டப் பெயர் வந்தது என்று தெரியவில்லை.
"அப்பா இருக்காரா"
தன்னறையில் உட்கார்ந்திருந்த அப்பா வெளியே எட்டிப் பார்த்தார்.
பால்ய நண்பனைக் கண்டதும் (இப்போது வயசு 85) சத்தமாய்க் கேட்டார்.
" இன்னும் சாகலியாடா"
தடி சீனு முகத்தைப் பயத்துடன் பார்த்தேன். அவருக்குக் காது கேட்காது என்பது மறந்து போனது.
கேட்டிருக்கும். அல்லது புரிந்திருக்கும். உதட்டசைவில். அடுத்த நிமிஷம் இருவரும் நட்பின் முதல் நாளுக்குப் போய் விட்டார்கள்.
அப்பா அவரைத் தன் அறைக்கு அழைத்துப் போய் விட்டார். எதிரில் உட்கார வைத்துக் கொண்டார்.
" காபி தரட்டுமா" என்றேன்.
கலந்தும் கொண்டு போய் விட்டேன்.
" இவ்வளவு வேணாம்"
" ஆளுக்குப் பாதி எடுத்துக்கலாம்" என்றார் அப்பா.
நகர்ந்து வந்து விட்டேன். இரண்டு வருடங்களுக்குப் பின் சந்திக்கிறார்கள். பேச ஆயிரம் இருக்கும்.
நன்றி இணையம்
அப்பாவின் குரல் உரத்துக் கேட்டது. தடி சீனுவின் குரல் மென்மையாய். நடுநடுவே இருவரின் சிரிப்பும்.
"சாப்பிடச் சொல்லலாமா"
" இல்ல.. நான் வீட்டுக்குப் போறேன்.. ஆட்டோ காத்திருக்கு"
அப்பா தள்ளாடி எழுந்தார். நண்பரை கீழ் வரை கொண்டு விட்டு வந்தார்.
" சும்மா தானே வந்தார் " என்றேன்.
" ஹ்ம்ம்" அப்பா உறுமல்.
நகர்ந்து வந்து விட்டேன். அப்படி என்ன தப்பாய்க் கேட்டு விட்டேன்.
அப்புறம் இவள் சொன்னாள்.
' அவரோட வொய்ஃப் கோவிச்சுண்டு போயிட்டாளாம்..'
என்ன... 85 வயசுக் கிழவனின் 80 வயசு மனைவியா.. கோச்சிண்டா..
" உளராதே"
" நிஜம்.."
" அபத்தம்.. இந்த வயசிலா"
" லேடீஸ்க்கு எப்போ பொறுமை போகும்னு தெரியாது.. அவங்க என்ன கஷ்டப்பட்டாரோ"
" ஏய்.. பாவம் தடி சீனு"
" வெளில அப்பிராணி மாதிரி இருக்கறவா வீட்டுல ராட்சச கணமா இருப்பா"
"ஆங்"
" உங்களுக்குக் கூடத்தான் வெளியே நல்ல பேர்"
சொல்லிவிட்டு போய் விட்டாள். ஹ்ம்ம்.. பேசாமல் இருந்திருக்கலாம். வாய்க் கொழுப்பு.
எதுக்கு வந்தார்... அப்பாவிடம் போனேன்.
"நாம் ஏதாச்சும் ஹெல்ப்.."
" நீ என்ன பண்ண முடியும்"
" தெரியல"
" கஷ்டம் டா.. ஒரு பெண்ணுக்குக் கிடைக்கற அனுதாபம் ஆணுக்குக் கிடைக்காது.. அவன் எவ்வளவு நல்லவனா இருந்தாலும்.. "
"ம்ம்"
" பாரேன்.. எப்படி வேஷம் போட்டிருக்கான் இத்தனை நாளான்னு .. சட்டுனு தூக்கிப் போட்டுருவாங்க"
" பையன்.. பொண்ணு எதுவும் சொல்லலியா"
" ம்ஹும்.. "
" அப்போ இவர் மேல "
அப்பா சிரித்தார். நீயும் அதே கூட்டம் என்பது போல். தம் நண்பரை விட்டுக் கொடுக்காத குணமா அல்லது.. நிஜமாகவே அவருடன் விதி விளையாடுகிறதா.
" இப்போ என்ன பண்ணப் போறார். "
" அவருக்குன்னு ஒரு ரூம்.. அதுல இருக்கார்.. யாரும் பேசறதில்லையாம்" - மகள் மணமாகி ..மகனும் வேறு ஊரில்
" சாப்பாடு? "
" பக்கத்து மெஸ்ல"
" ஓ.. "
யோசித்துப் பார்த்தேன். என்ன அபத்தம். இத்தனை வருட தாம்பத்யத்திற்குப் பின் ஒரு மனிதரை நிராகரித்து அவர் தனிமையில்.
எப்போதோ ஒரு முறை அவர் வீட்டிற்குப் போன நினைவு. ஏதோ விசேஷ நாள். தடி சீனுவின் மனைவி புதுப் புடவையில். அவர் காலில் விழுந்து நமஸ்கரித்து.. முகமெல்லாம் மலர்ச்சியாய்.
சட்டென்று எப்படி உதறினார்.. என்னதான் நடந்தது..
" என்ன யோசனை"
" பாவம் அவர்"
" என்ன பேசற"
" உங்களை மாதிரி ஆணுக்கெல்லாம் இப்படிப் பண்ணாத்தான் புத்தி வரும்"
பட் பட்டென்று பதில். எவ்விதத் தயக்கமோ யோசனையோ இல்லாமல்.
இந்தத் தலைமுறை வழக்கம். முகத்திற்கு எதிரே பேசி விடுவது. நாசுக்கு எல்லாம் பார்க்காமல். அந்த மாமி அடக்கி அடக்கி வைத்து பட்டென்று வெடித்து விட்டாளோ.. இப்படிப் பேசி விடுவது கூடச் சரியோ.. அவுட்லெட் ஆகி விடுகிறதோ..
" மச மசன்னு நிக்காம துணியை மாடில உலர்த்திட்டு வாங்க.. போனோம் வந்தோம்னு.. குருவியைப் பார்த்தேன்.. கோட்டானைப் பார்த்தேன்னு நின்னுராதீங்க "
அடுத்த பிறவியில்.. எதுவாயிருந்தாலும்.. பெண்ணாகப் பிறந்து விடலாமா..
மாடிப்படி ஏறும்போது என் சிந்தனை அதுவாகத்தான் இருந்தது.
வாழ்க நலம்..
பதிலளிநீக்குகாலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்..
நீக்குஅன்பின் ஸ்ரீராம் , கீதா/ கீதா மற்றும் அனைவருக்கும் நல்வரவு....
பதிலளிநீக்குஎன்னவோ....
பதிலளிநீக்குஅவரவர் தலைவிதி அவரவர்க்கு முன்னே ஆடுகின்றது...
இதில் குருவி என்ன..
கோட்டான் என்ன!...
நலம் வாழ்க..
//அவரவர் தலைவிதி அவரவர்க்கு முன்னே ஆடுகின்றது...//
நீக்குதத்தம் கருமமே கட்டளைக்கல்!!!
அனைவருக்கும் காலை வணக்கம்.
பதிலளிநீக்குகாலை வணக்கம் பானு அக்கா.
நீக்குகாலை வணக்கம்.
பதிலளிநீக்குகாலை வணக்கம் வெங்கட்...
நீக்குஆஹா... இன்று ரிஷபன் ஜி கதை.
பதிலளிநீக்குஆமாம்... ரிஷபன்ஜி கதையேதான்! ஆனால் அம்மு வராத கதை!
நீக்குநல்ல கதை. பாராட்டுகள் ஜி!
பதிலளிநீக்குசரி... இப்படிப் பேசி விடுவது தான் சரி...
பதிலளிநீக்குகதை என்னையும் யோசனையில் ஆழ்த்துகிறது. பின்னர் வரேன் அலசித்துவைத்துக் காயப் போட! இன்னிக்கு லேட்!
பதிலளிநீக்கும்ம்ம்ம், பலரும் அவங்க அவங்க கருத்தைச் சொல்லி இருக்காங்க. ஆனால் என்னோட புரிதலே வேறே! இத்தனை நாட்கள் இருந்தவர் இப்போ விலகிச் செல்லணும்னா! அழுத்தமான காரணம் இல்லாமல் இத்தனை வயசுக்கப்புறமா விலகி இருக்கமாட்டார். பொதுவாக எத்தனை ஏமாற்றங்களை அல்லது கோபதாபங்கள் அல்லது சிறுமையைப்பொறுத்துக் கொண்டாலும் ஒரு நொடி, ஒரே ஒரு நொடியில் வந்து விழும் வார்த்தை நம் நேர்மையைச் (Actually I mean integrity here. Do not know the exact tamil meaning) சந்தேகிக்கறாப்போல் அமைந்து விட்டால் அந்த நொடி நம் உடம்பிலிருந்து ஏதோ கழன்று விட்டது போல் இருக்கும். உயிர் இல்லாம வெறும் கூடாகத் தோன்றும். அப்படி ஏதோ இருந்திருக்கும் என நினைச்சேன். ரேவதி சொன்னமாதிரி சாதாரணமாக எடுத்துக்கத் தோணலை! "ரண"மாகவே தோணுது!
நீக்குகீசா மேடம்.... நீங்கள் எழுதியிருப்பதைப் படித்தபோது, மிகச் சமீபத்தில் வேகமாக வாசித்த (இன்னும் முடியலை) லா.ச.ரா வின் சிந்தா நதி ஞாபகத்துக்கு வருகிறது. அதில், லாசரா, தன் சம்பாத்யத்தை எப்போதும் அம்மாவிடம் கொடுப்பார், அம்மாதான் எல்லாத்தையும் பார்த்து செலவு செய்வாள் (வாடகை எல்லாம் முதற்கொண்டு). ஒரு தடவை அம்மா தயக்கத்துடன் லாசராவிடம் பணம் கொஞ்சம் நிறைய துண்டு விழும்போல் இருக்கிறது என்று சொல்கிறாள். அதற்கு 'எவ்வளவு துண்டு விழுகிறது' என கொஞ்சம் எரிச்சல் தொனியில் லாசரா கேட்கும்போது, 100 ரூபாய் போல என்று அவர் அம்மா சொல்வார். அவ்வளவு பெரிய அமவுண்டா என்ற த்வனியில், என்ன இவ்வளவு பெரிய தொகையைச் சொல்ற, ஏதாவது ஏமாத்தறயா என்பதுபோல் அம்மாவிடம் சொன்னவுடனே, அம்மா அதிர்ச்சியாகிவிடுவார், நானா ஏமாத்தறேனா பொய்க்கணக்கா என்று மிகுந்த அதிர்ச்சியோடு விக்கித்துப்போவார். அந்த மன அதிர்ச்சியை லாசரா புரிந்துகொண்டு மன்னிக்கமுடியாத குற்றம் தன் அம்மாவுக்குச் செய்துவிட்டதாக பதிவு செய்திருக்கிறார்.
நீக்குலா சா ராவின் எழுத்துக்களில் என்றும் நினைவை விட்டு அகலாதது
நீக்கு"பிடிச்சா தின்னு " "பிடிக்காட்டி முழுங்கு " இந்த மந்திரம் பல சமயங்களில் என்னுடைய வாழ்வில் சந்தித்த பல மன போராட்டங்களுக்கு வடிகாலாய் இருந்திருக்கிறது.
தடி சீனு மாமாவின் மனைவி திரும்பி வந்துவிடுவார்.
பதிலளிநீக்குமனம் வராது தனியாக விட.
தாம்பத்யம் எல்லாம் சேர்ந்ததுதான். அவருக்குக் காதும் கேட்காது.
என்ன புரிந்ததோ. மாமி என்ன புரிந்து கொண்டாரோ.
ரிஷபன் ஜி யாராகப் பிறந்தாலும் வாழ்க்கை
ஒரே மாதிரிதான். பேசித் தீர்த்துக் கொள்ளவேண்டியதுதான்.
@ஸ்ரீராம் உடல் நலமாக இருக்கிறது என்று நினைக்கிறேன். அழகான கதைக்கு மிக நன்றியும் வாழ்த்துகளு
அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஅந்த மாமி அடக்கி அடக்கி வைத்து பட்டென்று வெடித்து விட்டாளோ.. இப்படிப் பேசி விடுவது கூடச் சரியோ.. அவுட்லெட் ஆகி விடுகிறதோ..//
பதிலளிநீக்குஅதுவும் நல்லதுதான்.
எதையும் உடனே உடனே மனதில் வைத்து கொள்ளாமல் பேசி விடுவது நல்லது.
கதை நன்றாக இருக்கிறது.
இக்கரைக்கு அக்கரை பச்சை தான்!! அடுத்த ஜென்மத்தில் ஆணாகப் பிறக்க வேண்டும் என பெண்கள் நினைப்பார்கள்!!
பதிலளிநீக்குகோவித்து போக இடம் இல்லாத பெண் என்ன செய்வார்?
கதை படுத்தும் பாடால் எழுந்த கேள்விகள்:)
மாதவி, 100 சதவிகிதம் ஆமோதிக்கிறேன்.
நீக்குஎத்தனையோ தடவை. இதோ இப்போது கூட அந்த நினைப்பு வரத்தான் செய்கிறது.
இக்கரைக்கு அக்கரை பச்சை தான்!! அடுத்த ஜென்மத்தில் ஆணாகப் பிறக்க வேண்டும் என பெண்கள் நினைப்பார்கள்!!
பதிலளிநீக்குகோவித்து போக இடம் இல்லாத பெண் என்ன செய்வார்?
கதை படுத்தும் பாடால் எழுந்த கேள்விகள்:)
கடம் (உடல்) மாறினால் தடம் (நிலைமை)மாறுமோ?
பதிலளிநீக்குமனம் அல்லவோ மாற வேண்டும்.
பட்டாபி சார்... எல்லோரும் வழி வழியா அவங்க அப்பாவைத்தான் பின்பற்றுகிறார்கள். மாற்றம் இந்தத் தலைமுறையில் நிச்சயம் உண்டு. மாற்றத்துடன் கலக்காதவர்கள் சுழலில் அடித்துச் செல்லப்படுவார்கள்.
நீக்குஉடல் மாறுவது இக்கரைக்கு அக்கரை பச்சை போன்றதுதான்.
மற்றவர் படும் துன்பம் தனக்கு வரும்போதுதான் மாற்றம் வரும்.
நீக்குஅதுவரை ஏமாற்றம்தான். பிறர் மீது குறை கூறுவது தொடரும்.
ரிஷபன் சாரின் கதை... எப்போதும்போல் வித்தியாசமான கரு. நன்றாக இருந்தது.
பதிலளிநீக்குநான் அவதானித்த வரையில், ஆண்கள் ஒரு இருபது இருபத்தைந்து வருஷம் டாமினேட் செய்கிறார்கள். பிறகு பெண் இன்சார்ஜாகி விடுகிறாள். மிச்சமுள்ள உறுமல் ஆணிடமிருந்து அப்போ அப்போ வந்தாலும் முழுவதும் பெண்ணின்கீழ் குடும்ப அதிகாரம் போகிறது, போகணும். அப்படி இல்லாமல் அடக்குமுறை தொடர்ந்தால் நேரம் சரியில்லாத நீண்ட ஆயுள் கொண்ட ஆணுக்கு காலமே தண்டனை தந்துவிடுகிறது, மனைவி வடிவத்தில்.
இந்தியப் பாரம்பர்யம் என்ற பெயரில் நாம் பெண் அடிமைத் தனத்தைத்தான் பேணி வந்திருக்கிறோம். அவர்களுக்கு பண சுதந்திரம் இல்லாமையால் இதுகாலம் ஓடிவிட்டது. மேற்கத்தைய நாடுகளைப் போன்ற சுதந்திரம் இருந்தால் எத்தனை குடும்பங்கள் தாக்குப்மினிக்க இயலும்?
நெ.த. எனக்குத் தெரிந்து வீட்டு நிர்வாகம் முழுதும் பெண்கள் கையிலேயே இருந்திருக்கிறது. இதற்கு என் அத்தை, என் அம்மாவழிப்பாட்டி, என் பெரியம்மா(அப்பாவின் மன்னி) ஆகியோர் குடும்ப நிர்வாகம் அவங்க கையில் தான்! ஆண் வெறும் சம்பாதிக்கும் நபர்! முடிவெடுப்பது கூட அவங்களே எடுப்பாங்க! குடும்பத் தலைவர் வெறும் சாட்சி மட்டுமே! அதே என் அப்பா அம்மாவையோ, எங்களில் யாரையுமே கேட்க மாட்டார். அவர் முடிவு மட்டுமே இறுதியானது. யாரும் எதுவும் கேட்க முடியாது!
நீக்குகீசா மேடம் - வயல் வருமானம் மட்டும் இருந்த பழைய காலத்தில் நீங்கள் சொல்வது இருந்திருக்கலாம். எப்போ ஆண் வேலைக்குப் போக ஆரம்பித்தானோ அப்போதே பணம், இன்வெஸ்ட்மெண்ட், செலவழிப்பு என்று எல்லாம் ஆண்கள் கையில் வந்துவிட்டது. இதற்கு மாற்றாக (ஓரளவு மைனாரிட்டியாக) பெண்கள் 'தலைமைப்' பொறுப்பு ஏற்கும் குடும்பங்கள் இருக்கலாம். அப்படி இல்லாமல், ஆண், 'கலைஞனாக' இருந்தால் (எழுத்தாளர், நடிகர், பெர்ஃபார்ம் பண்ணுபவர்), அப்போது குடும்பத்தை நடத்துவது மனைவியாக இருக்கலாம், அல்லது வேறு ஒரு உறுப்பினர் இந்த வேலையை எடுத்துக்கொள்ளலாம் (உதாரணம், தமிழ்வாணன் வீட்டில், லேனா எழுத்து, பதிப்பு வேலை, அவர் தம்பி ரவி, வீட்டு நிர்வாகம், உங்கள் பாசத்துக்குரிய ஜிவாஜி வீட்டில், அவர் தம்பி சண்முகம் என்றெல்லாம் படித்திருக்கிறேன்)
நீக்குநீங்கள் எழுதியிருப்பது மைனாரிட்டிதான். இருந்தாலும், இதனையே 'புதன் கேள்வியாக' வைக்கிறேன் (வீட்டு நிர்வாகம் அதாவது பண நிர்வாகம் தமிழ்ச்சமூகத்தில் யாரிடம் இருக்கிறது? பெண்ணா ஆணா?)
நெல்லைத் தமிழரே, எங்க வீடுகளில் யாரும் வயல் வருமானத்தை மட்டுமே நம்பி இருந்ததில்லை. என் அப்பாதான் சட்டம் படிக்கலை! ஆனால் சட்டவட்டமாய்ப் பேசுவார். :))) மத்தவங்க எல்லாம் சட்டம் படிச்சவங்க! அப்பா வழித் தாத்தா ஓர் ஆயுர்வேத வைத்தியர். மணி,மந்திர ஔஷதம் தெரிஞ்சவர், தங்க, வெள்ளி பஸ்பங்களை வீட்டிலேயே தயாரிப்பார் என என் அம்மா சொல்லுவார். அவர் இறந்தப்போ நான் நான்கு வயசுக் குழந்தை என்பதால் அதிகம் அவரைப்பற்றித் தெரியாது. ஆனால் அம்மா வழித் தாத்தா சேதுபதி ராஜாவின் பரம்பரை திவானாக இருந்த குடும்பத்தைச் சேர்ந்த்வர். அவர் காலத்தில் திவான் இல்லாததால் லீகல் அட்வைசர் என்னும் பெயரில் இருந்தார். எங்க அம்மாவின் அம்மா 5 வயதில் கல்யாணம் ஆகிப் புக்ககம் வந்தே எழுதப் படிக்கக் கற்றுக் கொண்டவர். ஆனால் வீட்டு நிர்வாகம் அவரைப் போல் யாராலும் செய்ய முடியாது. அதை என் கணவரே பார்த்து வியந்திருக்கிறார். அதே என் மாமனார் வீட்டில் வயல் வருமானம் தான். ஆனாலும் மாமியார் கை தான் மேலோங்கி இருந்தது. மாமனார் எந்த விஷயத்திலும் தலை இட மாட்டார். வயலிலிருந்து பொருட்களைக் கொண்டு வருவதோடு சரி! வரவு, செலவு எல்லாம் என் சின்ன நாத்தனார் தான், அவங்க கல்யாணம் ஆகிப் போகும் வரை! பின்னரும் பிறந்த வீட்டுக்கு வந்து அப்பா அம்மாவுக்கு வரவு செலவு செய்ய உதவி செய்வார். எப்போவுமே எங்க வீட்டில் அவங்க பேச்சுத் தான்! :)))) ஆகவே வயல் வருமானம், வெளிவருமானம் என்றெல்லாம் இல்லை. குடும்பத்தில் பெண்கள் சுதாரித்துக் கொண்டால் அவங்க நிர்வாகம். இல்லைனா ஆண்கள் நிர்வாகம்.
நீக்குஎங்களை எடுத்துக் கொண்டால் அன்றாட சமையல் கூட அவர் தான் சொல்லுவார். இப்போல்லாம் உன் இஷ்டம், முடிஞ்சதைச் செய்னு சொன்னாலும் பின்னால் அவரே மாற்றுவதும் உண்டு. அதே போல் முக்கிய விஷயங்களில் எல்லாம் அவர் முடிவு தான் இறுதி! அதில் ஏதேனும் தவறு வந்து விட்டால், உன் பேச்சைக் கேட்டிருக்கலாமோ என இப்போல்லாம் சொல்கிறார். இது தான் மாற்றம். மற்றபடி மாற்றம் ஏதும் இல்லை! :))))) குழந்தைகள் கூட அப்பாவிடம் எல்லாம் சொல்வாங்க! :))))
நீக்குஇந்தத் தலைமுறை வழக்கம். முகத்திற்கு எதிரே பேசி விடுவது. நாசுக்கு எல்லாம் பார்க்காமல். அந்த மாமி அடக்கி அடக்கி வைத்து பட்டென்று வெடித்து விட்டாளோ..
பதிலளிநீக்குஉண்மை தான் அப்போ வெல்லாம் அப்பா , மாமா தான் பேசுவாங்க மனைவியர் அமைதியா இருப்பாங்க அதே கணவன் மனைவி 60 வயதிற்கு பிறகு பார்த்தால் அப்போ நடந்தது எல்லாத்தையும் சொல்லி காட்டி பேசுறாங்க..மனதுக்குள் இருந்தைவை எல்லாம் வெடிக்கிறது ..இப்போ எங்க வீடுகளில் இதான் நடக்கிறது..
இந்த வயதுலே கொஞ்சம் உரைக்கட்டும் என்றுதான் வந்தேனே தவிர கேட்டு கேட்டு பழக்கமானவள்தானே நான். நாளைக்குப் போய்விடமாட்டேனா நான். ஆமாம் இப்படியும் அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கத்தான் . மாமி இப்படிதான் நினைத்துக்கொண்டிருப்பாள். நல்லகதை. அன்புடன்
பதிலளிநீக்குஒரு உளவியல் சார்ந்த கதையை வெகு சுலபமாக சொல்லி விட்டார்.
பதிலளிநீக்குநிறைய யோசிக்க வைக்கிறது.
நெல்லை தமிழன்சரியாக கணித்திருக்கிறார் / நான் அவதானித்த வரையில், ஆண்கள் ஒரு இருபது இருபத்தைந்து வருஷம் டாமினேட் செய்கிறார்கள். பிறகு பெண் இன்சார்ஜாகி விடுகிறாள். மிச்சமுள்ள உறுமல் ஆணிடமிருந்து அப்போ அப்போ வந்தாலும் முழுவதும் பெண்ணின்கீழ் குடும்ப அதிகாரம் போகிறது, போகணும். அப்படி இல்லாமல் அடக்குமுறை தொடர்ந்தால் நேரம் சரியில்லாத நீண்ட ஆயுள் கொண்ட ஆணுக்கு காலமே தண்டனை தந்துவிடுகிறது, மனைவி வடிவத்தில்./பேசாமலோ பேசியோ பெண்ணாய் பிறப்பதே நல்லது
பதிலளிநீக்குநன்றி ஜி.எம்.பி சார். இதற்குக் காரணமும் நீங்கள் கூறியிருக்கலாம். என் அசெஸ்மெண்ட் பிரகாரம், பசங்க, அம்மாவோட கட்சி சேர்ந்துடுவாங்க, அவங்களோட 15+ வயசுலேர்ந்து. அதுவும் மனைவிக்கு கூடுதல் பலத்தைத் தரும், கணவனை ஃபேஸ் பண்ண. கொஞ்சம் கொஞ்சமா சீறிப்பார்க்கும் பாம்பு, அப்புறம் வேலைக்காகாது என்று அமைதி அடைந்துவிடுவதுபோல கணவனும் ஆகிவிடுவான்.. ஹாஹாஹா
நீக்குரிஷபன் சார்! Crisp and concise.. அவருக்கு வாய்த்த கலை.
பதிலளிநீக்குஆணா பெண்ணா சரித்திரம்
ஆழம் பார்த்தால் தெரிந்திடும்
நீயா நானா பார்க்கலாம்..!
எல்.ஆர்.ஈஸ்வரியின் பாடல். ஆரம்ப வரிகள். சினிமாவில் இவை வேறு எதையோ சுட்டிச்சென்றாலும், வாழ்க்கையில் – தாம்பத்ய வாழ்க்கையில்- காலங்காலமாக நடப்பது ஆண் பெண்ணிற்கிடையேயான இந்தப் பனிப்போர்தானோ என நினைக்கத் தோன்றுகிறது.
சிலருக்குக் கொஞ்சம் வெடித்துக் காண்பிக்க வாய்ப்புக் கிடைக்கிறது. பலர் அப்படியே, அமுங்கியவாக்கிலேயே போய்ச்சேர்ந்துவிடுகிறார்கள்.
வாழ்க்கையில்..... அடக்கி அடக்கி வைத்தாலும், அடங்கி அடங்கிப் போனாலும் ஒரு கட்டத்தில் வெளிப்பட்டு விடும்....தனக்காய் ஒரு நிமிடத்திற்கு....ஏங்கும். கதை அழகாய் வெளிப்பட்டு இருக்கிறது.
பதிலளிநீக்குஆணுக்கு பெண்ணாய் பிறந்தால் பரவாயில்லைஎன தோன்றும்... பெண்ணுக்கு ஆணாய் பிறந்தால் பரவாயில்லை என தோன்றும்....என்ன செய்வது...இல்ல.
வெடிக்க வேண்டும் என்று நினைத்த சந்தர்ப்பங்கள் வாய்த்தாலும் அடங்கிப் போவதே பெண்ணின் வழக்கமாக இருக்கிறது.
நீக்குஇப்போது மாற்றமாக இந்தப் பாட்டி செய்திருக்கிறார்.
எங்கள் வீட்டில் கணவரின் பாட்டி கையில் தான் ஆட்சி.
இருந்தாலும் மாமனாரும் ,கணவரும் அந்த வலையில் சிக்க மாட்டார்கள்.
அகப்படுவது நானும் என் மாமியாரும் தான்.
மாமியார் அடிக்கடி சொல்லும் வார்த்தை.வேலைக்காரியாக இருந்தால் துடப்பத்தைக் கீழ போட்டுட்டு வெளியே போய் விடுவாள்... நமக்கு ஏது வாய்ப்பு என்று.
இப்போது நினைத்தால் சிரிப்பு வருகிறது.
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஆணோ, பெண்ணோ, அடங்கிப் போவதென்பது ஒரு கால கட்டத்தில் மிகவும் முடியாமல் போகும் போது, பொறுமையெனும் வெள்ளம் சீற்றம் கொள்வது நடந்தே விடுகிறது. கதையிலும் அவ்வாறான முடிவே.. அந்த அம்மா அந்த தள்ளாத வயதில் எப்படி தனியாக இருக்க இயலும்? அவரவர் முடியாமையில், அடுத்தது மாற்றுப் பிறவியை யோசிப்பது நல்லதொரு முடிவு. கதை அருமை. நிறைய விஷயங்களை குறுகிய எழுத்துக்களில் சிந்திக்க வைக்கிறது. பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
கதை நன்று பாராட்டுகள்
பதிலளிநீக்கு// " இன்னும் சாகலியாடா"//
பதிலளிநீக்குதடி சீனு முகத்தைப் பயத்துடன் பார்த்தேன். அவருக்குக் காது கேட்காது என்பது மறந்து போனது.//
ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா !
படித்தேன், ரஸித்தேன், சிரித்தேன், மகிழ்ந்தேன்.
//அப்புறம் இவள் சொன்னாள்.
' அவரோட வொய்ஃப் கோவிச்சுண்டு போயிட்டாளாம்..'
என்ன... 85 வயசுக் கிழவனின் 80 வயசு மனைவியா.. கோச்சிண்டா..
" உளராதே"
" நிஜம்.."
" அபத்தம்.. இந்த வயசிலா"
" லேடீஸ்க்கு எப்போ பொறுமை போகும்னு தெரியாது.. அவங்க என்ன கஷ்டப்பட்டாரோ"//
அநேகமாக 40+ .... 45+ .... அல்லது 50 வயதுக்குள் நிச்சயமாக பொறுமை போய்விடும். சுபாவத்தில் ஆணாகவே மாறி விடுவார்கள்.
//" ஏய்.. பாவம் தடி சீனு"
" வெளில அப்பிராணி மாதிரி இருக்கறவா வீட்டுல ராட்சச கணமா இருப்பா"
"ஆங்"
"உங்களுக்குக் கூடத்தான் வெளியே நல்ல பேர்"
சொல்லிவிட்டு போய் விட்டாள். ஹ்ம்ம்.. பேசாமல் இருந்திருக்கலாம். வாய்க் கொழுப்பு. //
சூப்பரோ சூப்பர் ! .... அந்த ”உங்களுக்குக் கூடத்தான் வெளியே நல்ல பேர்” :) டைம்லி ஜோக் :)
//" மச மசன்னு நிக்காம துணியை மாடில உலர்த்திட்டு வாங்க.. போனோம் வந்தோம்னு.. குருவியைப் பார்த்தேன்.. கோட்டானைப் பார்த்தேன்னு நின்னுராதீங்க "
அடுத்த பிறவியில்.. எதுவாயிருந்தாலும்.. பெண்ணாகப் பிறந்து விடலாமா..
மாடிப்படி ஏறும்போது என் சிந்தனை அதுவாகத்தான் இருந்தது.//
மாடிப்படி ஏதும் ஏறாமலேயே பலசமயம் எனக்கும் இதே சிந்தனைகள் வருவதுண்டு.
வித்யாசமாக, அருமையாக, நிதர்சனமாக, வீட்டுக்கு வீடு அன்றாடம் நடப்பதையே ஓர் படைப்பாக ஆக்கியிருப்பது .... சிறப்பு.
அன்புடன் கோபு
திரு ரிஷபன் ஃபேஸ்புக்கில் பின்னூட்டம் வழங்கிய அனைவருக்கும் நன்றி கூறி ஒரு மெஸேஜ் அனுப்பி இருக்கிறார்.
பதிலளிநீக்கு"குட் மார்னிங்
கமெண்ட் போட விடவில்லை. என் ஃபோனில் பிரச்னையா தெரியவில்லை..
பாராட்டிய அனைவருக்கும் நன்றி"
க்ளாஸ்! அறைகிற யதார்த்தம்! அதானே ரிஷபன்? மெல்லிய நகைச்சுவையுடன்..
பதிலளிநீக்குசொல்லிய விதம் மிக அருமை.
பதிலளிநீக்குஅருமை....
பதிலளிநீக்குகடைசி வரை அந்த மாமி திரும்பி வந்தாளான்னு சொல்லலையே.. :)