பால் கொழுக்கட்டை..
துரை செல்வராஜூ
" சத்தீ.. டேய்!.. சத்தீ... "
காற்றோட்டமாக நாலு முழ வேஷ்டியும் அரைப் பனியனுமாய் பம்பு செட் அருகில் சுற்றிக் கொண்டிருந்த சக்திவேல் திடுக்கிட்டான்..
செவலைப் பசுக்கள் இரண்டும் வயலில் மும்முரமாக மேய்ந்து கொண்டிருந்தன...
ஆவணியில் நீர் பிடித்து நெகிழ்ந்திருந்த வயல்களில் தழைத்திருந்த கதிர்கள் களத்து மேட்டில் பொன் மணிகளாகக் குவிந்த பின் - மாசி பங்குனியில் பயிறும் உளுந்தும் பச்சைப் பட்டாக விரிந்திருந்தன..
கோடையின் துவக்கத்தில் அவையும் களம் கண்டு கரையேறிட - கழனி பாளம் பாளமாக வெடித்துக் கிடந்தது...
கிராமத்தின் ஒரே பரபரப்பு. எஸ்ஸெல்சி பரிட்சை.. அதுவும் முடிந்து விட்டது...
முதலையின் வாயிலிருந்து தப்பிக்கும் போது கூட இவ்வளவு சந்தோஷம் இருந்திருக்காது...
பசங்களுக்கும் பொண்ணுங்களுக்கும் அவ்வளவு சந்தோஷம்...
அந்தக் கணக்குப் பாடம் - கால் அரை முக்கால் - இனிமேல் கிடையாது..
பசங்கள்ல பாதிப்பேர் பனை மரம் தென்னை மரம்... ன்னு கிளம்பிட்டானுங்க.. மிச்சத்துல கொஞ்சம் பேர் செங்கச் சூளைக்குப் போய்ட்டானுங்க...
மீதிப் பேர் இழைப்புளி, ரம்பம், கைக் கோடாலியோட ஆசாரிப் பட்டறை பக்கம் சுத்திக்கிட்டு இருக்கானுங்க..
ஒன்னுக்கும் உதவாத சில பசங்கள் இந்தப் பக்கம் மாயவரத்துக்கும் அந்தப் பக்கம் கும்மோணத்துக்கும் மேட்னி ஷோ போயிருக்கானுங்க..
பசங்க எல்லாம் இப்படி இருக்க பொண்ணுங்களோட நெலமையோ வேற மாதிரி ...
அம்மாக்களின் கைகளிலும் அக்காக்களின் கைகளிலும் சிக்கித் தேங்காய் துருவவும் சட்னி அரைக்கவும் சாம்பார் வைக்கவும் எல்லாவற்றுக்கும் மேலாக - பழைய சோற்றை அரைத்து அதில் சின்ன வெங்காயத்தை நறுக்கிப் போட்டு கொதிக்க வைத்துக் கூழாக்கி வெயிலில் வற்றல் பிழியவுமாக நிலைமை பரிதாபமாக இருந்தது...
சக்திவேல் மாதிரி புத்தியுள்ள பசங்கள் ஆடு மாடு பார்த்துக்கிட்ட கையோட பம்பு செட்டுக்கும் காவல் இருக்குறானுங்க...
பம்பு செட்டுல ஒரு கண்ணு வைக்கலை..ன்னா களவாணிப் பயலுங்க மோட்டார் மேல கை வச்சிடுவானுங்க...
ராம விலாஸ் இன்னும் வடக்கால போகலை.. அது போனாத்தான் மணி பதினொன்றரை..
யோசித்துக் கொண்டிருந்த சக்தியை நோக்கி மீண்டும் சத்தம்...
" டேய்!.. "
மாரிமுத்தும் மூக்கையனும் கத்துகிறார்கள்...
" எங்கடா இருக்கீங்க!.. "
" நாவ மரத்துலடா.. "
" அடக் கொரங்குகளா!.. "
" வா.. வா!.. நாவப்பழம் பறிச்சிருக்கோம்!... "
" அதுக்கு உப்பு வேணுமே!.. "
" எல்லாம் இருக்கு.. வா..டேய்!.. "
நாவற் பழத்தை நினைத்ததும் நாவில் எச்சில் ஊறியது..
பம்பு செட்டில் இருந்து ரெண்டு எட்டு எடுத்து நடந்தால் ஒத்தையடி வாய்க்கால்.. மறுகால் தாண்டினால் கப்பி ரோடு... அதன் ஓரமாகத் தான் அந்த நாவல் மரம்..
விரைந்து நடந்து கப்பிச் சாலையில் ஏறினான்...
பாம்.. பாம்!..
புழுதியைக் கிளப்பிக் கொண்டு சிவப்பு நிற ராம விலாஸ் பஸ் அவனைக் கடந்து சென்றது...
பேருந்தின் பின்னால் பறந்த செம்புழுதி அடங்கியதும் சாலையைக் கடந்த சக்தி நாவல் மரத்தின் மேலே ஏறிட்டு நோக்கினான்...
மேலிருந்த குரங்குகள் இரண்டும் அப்படியும் இப்படியுமாகத் தாவியபடி கீழே இறங்கிக் கொண்டிருந்தன... மூக்கையனின் இடுப்பில் தாழங்குட்டான்...
தாழை நார்களால் பின்னப்பட்ட பை.. அதற்குள் தான் நாவற்பழங்கள்...
" டேய்... பார்த்து எறங்குங்கடா!... "
" ஹா..ஹ்ஹா!... "
கோடை விடுமுறையில் மரங்களில் ஏறிக் கீழே விழுந்து கை கால்களில் எண்ணெய்த் துணியைச் சுற்றிக் கொண்ட பசங்கள் பலபேர்..
மரத்திலிருந்து கீழே இறங்கிய ரெண்டு பேரும் கொஞ்சம் தாழ்வாக இருந்த கிளையில் உட்கார்ந்து கொள்ளவும்
' கிணுங்.. கிணுங்... ' - என்ற ஒலியுடன் சைக்கிள் ஒன்று வந்து நிற்கவும் சரியாக இருந்தது...
" சக்தி!.. "
" கார்த்திகா!... என்ன... இந்த வெயில்..ல?.. "
" டைப்ரைட்டிங் கிளாஸ்!.. "
கார்த்திகா சக்தியுடன் படித்தவள்.. போன மாதம் சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொண்டது இதுக்குத் தானா!.. ஆனாலும் சைக்கிள் இன்னும் அவளுக்கு முழுதாக வசப்படவில்லை... எதிரே இன்னொரு சைக்கிள் வந்தால் இவளுக்கு கைகள் நடுங்கும்...
" சொல்லவே இல்ல... உங்கூட. வேற யாரும் சேரலையா?... "
சக்தி சிரித்தான்...
" ஏன்... நீ வந்து சேர்ந்துக்கயேன்!.. "
" ஆமா... இத்துப் போன மிஷினைப் போட்டு லொட்டு லொட்டு..ன்னு தட்டிக்கிட்டு!.. எனக்குப் பிடிக்கலை... " என்று அலுத்துக் கொண்ட சக்தி,
" அது சரி.. தனியா போய்ட்டு வர்றியே.. பயமா இல்லை?.. " - என்றான்
" எதுக்கு பயம்?... அம்மா தான் தைரியம் சொன்னாங்க... வெளி உலகம் தெரிஞ்சாத் தான் பொண்ணுங்களுக்கு நல்லது..ன்னு!.. உனக்கென்னப்பா... எங்கள மாதிரியா நீ!.. வயல் வரப்பு.. வீடு வாசல்..ன்னு சின்ன ஜமீன்!... " கார்த்திகா கலகல.. ன்னு சிரித்தாள்..
" சின்ன ஜமீன்!.. நீ மட்டும் தான் மெச்சிக்கணும்.. சரி.. இதென்ன சுருள்?.. "
" இதான் டைப் அடிச்ச பேப்பர்ஸ்... "
சைக்கிளின் முன்னிருந்த வலைக் கூடைக்குள் கையை விட்டு எடுத்துப் பார்த்தான்....
வரிசை வரிசையாக ஆங்கில எழுத்துகள் வயலட் நிறத்தில்... ஆங்காங்கே சிவப்பு நிறத்தால் திருத்தப்பட்டிருந்தன...
" இதெல்லாம் எனக்குப் புரியாது... சரி... உனக்கு சுட்ட பழம் வேணுமா.. சுடாத பழம் வேணுமா?.. "
" நாவப் பழமா!.. ஏதுடா?.." - பரவசமானாள் கார்த்திகா...
" நாவமரத்துக்குக் கீழ நின்னுக்கிட்டு இது என்ன கேள்வி!.. "
வியப்புடன் கார்த்திகா அண்ணாந்து நோக்க மேலிருந்த வானரங்கள் -
" ஹேய்!..." - என்று சத்தமிட்டன...
" எறங்குங்கடா!... கொரங்குகளா!.. " - சக்தி சத்தம் போட்டான்...
கீழே குதித்த மூக்கையன் ஓடிப்போய் வாய்க்கால் ஓரமாக அகன்று விரிந்து வளர்ந்திருந்த சேமையின் இலை ஒன்றைப் பறித்துக் கொண்டு வந்தான்...
அகன்ற இலையில் கை நிறைய பழங்களைப் போட்டு கொஞ்சம் உப்பையும் போட்டு அப்படியும் இப்படியுமாக புரட்டிக் கலக்கினான் இலை முழுதும் செந்நிறமானது...
" இந்தா.. கார்த்திகா உனக்குத் தான் எல்லாம்!.. " - என்றான் மாரிமுத்து..
" உங்களுக்கு!?.. "
" நாங்க எப்ப வேணாலும் ஏறிப் பறிச்சுக்குவோம்!... "
" அதுசரி!.. " - என்றபடி ஒன்றிரண்டு பழங்களைச் சுவைத்த கார்த்திகா - " சரி.. நேரம் ஆச்சு.. தேடுவாங்க!... " என்றபடி சைக்கிளை நகர்த்தினாள்..
" டேய்... அதெல்லாத்தையும் கொடுடா!.. " - தாழம் பையைப் பிடுங்கிய சக்தி -
" கார்த்திகா... இதை அம்மாகிட்ட கொடு!... " - என்றான்...
" சக்தி... மறந்துட்டேன்... அம்மா உன்னை வரச் சொன்னாங்க!... "
" என்ன விஷயமாம்!?... "
" நீயே வந்து கேளு!.. " - என்று சிரித்த கார்த்திகா பசங்களை நோக்கிக் கையசைத்தபடி சைக்கிளில் ஏறிப் பறந்தாள்...
நாவற்பழங்களுக்காக மூக்கையன் மீண்டும் மரத்திலேற - அன்றைய மாலைப் பொழுதில் கார்த்திகாவின் வீட்டு வாசலில் இருந்தான் சக்திவேல்...
கார்த்திகாவின் அப்பா தாலுகா ஆபீஸில் கிளார்க்... டவுனுக்குள் வீடு சரியாக அமையாததால் பக்கத்து கிராமமாகிய இங்கு குடும்பம்...
கார்த்திகா வீட்டில் அன்பினில் வார்த்தெடுத்த மாதிரி ஒவ்வொருவரும்...
ஸ்காலர்ஷிப் பேப்பர், சாதிச் சான்று வருமானச் சான்று - இதிலெல்லாம் கையெழுத்து என்று தாலுகா ஆபீசுக்குப் போனால் பத்து நிமிஷத்தில் வேலையை முடித்துத் தருவதோடு டீ காஃபி வடை என்று உபசரிப்புகள் வேறு...
கார்த்திகாவின் அம்மாவும் அப்படியே.. அக்கம் பக்கத்து வீடுகளில் ஒரு சங்கடம் என்றால் அதைத் தீர்த்து வைப்பதில் முதல் ஆள்... கை வைத்தியமும் தெரியும்...
தலைவலி, மூட்டு வலி, முழங்கால் வலி என்றாலும் எலிக்கடி, தேள் பூரான் கடி என்றாலும் உடனடியாக சூரணம் தைலம் கஷாயம் என்று அம்மனைப் போல முன் வருவார்கள்..
பெயர் கூட தையல்நாயகி தான்!..
" அம்மா!... "
" வா சத்தி!.. உள்ளே வா!... ரொம்ப நாள் ஆச்சு உன்னைப் பார்த்து... நீ கொடுத்து விட்ட நாவல் பழம் அருமை.. அருமை... கார்த்திகாவே பாதிக்கு மேல தின்னுட்டா... சரி.. நீ எந்தக் காலேஜ்..ல சேரப் போறே!... "
" நமக்குப் பக்கம் கும்பகோணம் தான்... கார்த்திகாவை எந்தக் காலேஜூக்கு அனுப்பப் போறீங்க?..."
" ஒரு நல்ல சேதி வந்துருக்கு... அதனால யோசனை!... "
புரிந்து கொண்டான் சக்தி..
" கார்த்திகா அந்தப் போட்டோவை எடுத்துக்கிட்டு வாம்மா!. மாப்பிள்ளை தூரத்து சொந்தம்.. நல்ல குடும்பம்.. நில புலம்.. இருந்தாலும் வாத்தியாரா வேலை பார்க்கிறார்.. "
போட்டோவை கையில் வாங்கிப் பார்த்தான்.. நன்றாகத் தான் இருக்கிறான்.. கார்த்திகாவை விட ஐந்தாறு வயது அதிகமாக இருக்கலாம்.. கறுப்பு வெள்ளை படத்தில் நெற்றிக் குங்குமம் எடுப்பாக இருந்தது..
" கார்த்திகாவோட இஷ்டம் எப்படி?... " பெரிய மனிதனைப் போல விசாரித்தான் சக்தி...
" அவங்க அப்பாவை மீறி அவ என்ன சொல்லுவா!.. அவளுக்கு மேல படிக்கணும்னுதான் ஆசை.. நாடு கெட்டுக் கெடக்கு.. காலாகாலத்துல ஒருத்தன் கையில பிடிச்சுக் கொடுத்துட்டா நிம்மதி..ங்கறாங்க!... இவுங்க ரெண்டு பேருக்கு இடையில நான்!... "
" சார் சொல்றதும் சரிதான்.. பெரியவங்க பார்த்து நல்ல முடிவு எடுத்தா சரி... " - என்று பொதுவாக சொல்லி வைத்தான் சக்திவேல்...
பேசிக் கொண்டிருக்கும்போதே உள்ளிருந்து ஒரு கிண்ணத்தில் பால் கொழுக்கட்டை கொண்டு வந்து கொடுத்தாள் கார்த்திகா...
கிண்ணத்துடன் சிறு ஸ்பூனும் இருந்தது..
'நம்ம ஊர் இனிப்பு தான் ஆனாலும் இதோட ருசி அபாரமா இருக்குதே!..' - என்று நினைத்துக் கொண்டான்...
கார்த்திகா இன்னும் சமைக்கப் பழக வில்லை என்பது அவனுக்குத் தெரியும்..
". சாப்பிடுப்பா!.. " - கார்த்திகாவின் அம்மா..
" கல்யாண தேதி சொல்லுங்க... ஒரு வாரத்துக்கு முன்னால வண்டி மாடு ஆளுங்களோட அனுப்பி வைச்சிடுறேன்.. பந்தல் போடுறதுல இருந்து சமையல் வரைக்கும் எந்தப் பிரச்னையும் இல்லை.. மாயவரம் பஞ்சாட்சரம் அண்ணனை சமையலுக்கு கூப்பிட்டுக்கலாம்!... " என்றான் உற்சாகத்துடன்..
" நீ வேற சத்தி!... இன்னும் பெரியவங்க யாரும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துப் பேசி முடிவெடுக்கலை.. தரகர் மூலமா சேதி வந்துருக்கு.. அவ்வளவுதான்.. மாப்பிள்ளைக்கு ஏதோ கிரக தோஷம் நிவர்த்தி ஆகணுமாம்... ஆறேழு மாசத்துக்கு நேரம் சரியில்லையாம்... அப்படியே பேசினாலும் அதுக்கு அப்புறந்தான் நாள் நட்சத்திரம் எல்லாம்!... "
" எப்போ கல்யாணம் நடந்தாலும் என்னோட ஒத்தாசை உண்டு.. எல்லாம் நல்லபடியா நடக்கும்!.. "
கார்த்திகாவின் அம்மா முகத்தில் மகிழ்ச்சி...
" சரிம்மா... மாடுகளை மாத்திக் கட்டணும்.. நான் போய்ட்டு வர்றேன்!.. ஒரு நாளைக்கு கார்த்திகாவை அழைச்சிக்கிட்டு வீட்டுக்கு வாங்க!... " - என்றபடி சக்திவேல் எழுந்தான்..
" சரி சத்தி... நல்லபடியா போய்ட்டு வா!.. "- என்ற தாயிடம் -
" சக்தியப் பத்தி என்னம்மா நெனைக்கிறே!.. " - என்றாள் கார்த்திகா..
மகளை உற்று நோக்கியபடி, ' நானும் உங்க அப்பாக்கிட்டே இதே கேள்விய கேட்டேன்!.. நல்ல பையன் தான்.. ஆனா நமக்கும் அவங்களுக்கும் பழக்க வழக்கம் வேற வேற ஆச்சே!... ன்னு சொன்னாங்க.. நானும் யாரோட பழக்கம் எப்போ மாறும்.. யாரோட வழக்கம் எப்படி மாறும்.. ன்னு யாராலயும் சொல்ல முடியுமா!..ன்னு நெனைச்சுக்கிட்டேன்!... ' - என்று தனக்குள் நினைத்துக் கொண்டபடி,
" நல்ல பையன் தான் சத்தி!.. " - என்றாள் அந்தத் தாய்..
அடுத்து வந்த சில மாதங்களில் கிரஹப் பெயர்ச்சி தோஷ நிவர்த்தி என்று நடந்தாலும் அந்த மாப்பிள்ளைக்கும் கார்த்திகாவுக்கும் ஜாதகப் பொருத்தம் இல்லை - என்று செய்தி வந்தது..
ரொம்பவும் சந்தோஷம் கார்த்திகாவின் அம்மாவுக்கு...
கணவரை நோக்கி கேள்வி எனும் மலர்க் கணை..
" நம்ம சத்தி!.. என்ன சொல்றீங்க?.. "
" நல்ல குடும்பம்.. நல்ல பையன் தான்.. ஆனாலும்... "
" நல்ல மனசு... சொன்னால் கேட்டுக்கும்.. சொல்லாமலே புரிஞ்சுக்கும்!... "
மகளைத் தழுவிக் கொண்டாள் தாய்..
அடுத்து வந்த சில நாட்களில் பெண் கேட்டு வந்த சக்தியின் அம்மா அப்பாவையும் உறவினர்களையும் இரு கரம் கூப்பி வரவேற்றனர் - கார்த்திகாவின் பெற்றோர்...
எதிர்பாராத திருப்பத்தால் திகைத்திருந்தான் சக்திவேல்..
தாம்பூலம் மாற்றிக் கொண்டதும் சிறப்பான விருந்து - பால் கொழுக்கட்டையுடன்!...
ஃஃஃ
கிராமத்து நினைவுகளை வரவழைக்கும் கதை. உரையாடல், பின்னணி என்று ரொம்பவே மனதைக் கொள்ளை கொள்ளும் கதை. ஆனாலும் டக்குனு ஒரு கிராமத்துப் பையனுக்குத் திருமணம் செய்துகொடுத்திடிவாங்களா? அவன் உறவுக்காரன் கிடையாது. இந்தப் பகுதி தவிர மற்றவற்றை முகவும் ரசித்தேன்.
பதிலளிநீக்குஉறவு மட்டும்தான் அந்தஸ்தைப் பார்க்கச் சொல்லாமு.
முடிவுப் பகுதி தவிர கதை மிகவும் சிறப்பு. பாராட்டுகள் துரை செல்வராஜு சார்.
அன்பின் நெல்லை..
நீக்குபள்ளி வாழ்க்கை நிறைவுற்ற நாட்களில் நிகழ்ந்த சம்பவம் ஒன்று சற்றே மாற்தல்களுடன்...
தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..
தாளவாடி என்ற மலை கிராமத்தில் படித்துக்கொண்டிருந்தபோது, பள்ளிக்கு எதிரே காட்டாறு. பள்ளியிலிருந்து சிறிது தூரத்தில் காடு ஆரம்பம். காட்டில் நாவல் மரங்கள். கீழே சிதறிக்கிடக்கும் நாவல் பழங்கள் (ஆனால் அந்தப் பகுதியில் நாகம், மலைப் பாம்புகள் அதிகம்). - பழைய நினைவைக் கொண்டுவந்துவிட்டது.
பதிலளிநீக்குபெங்களூருல் நகரின் மையப் பகுதியில் ரோடு ஓரங்களில் நாவல் மரங்கள் பழுத்துக் குலுங்கியிருப்பதைப் பார்த்து வியந்திருக்கிறேன். அது சரி... மரக் காடுகளை அழித்துத்தானே நகரம் உருவாகியிருக்கிறது.
படங்கள் அழகு. பாராட்டுகள் கேஜிஜி சாருக்கு..
பதிலளிநீக்குஇருந்தாலும் நாவல் பழங்கள் தவிர, குங்கும்ப்பூ போட்ட ஜீனி பால் கொழுக்கட்டையும், சின்னவயது மாடர்ன் டிரஷ் தமன்னாவும் மனதில் கதையோடு பொருத்தம் இல்லாத்துபோல இருந்தது. ஆனாலும் அழகு படங்கள் கதைக்கு வலு சேர்க்கின்றன
பாராட்டுகளுக்கு நன்றி. அழகான படம் போட நினைத்ததால், இதைத் தேர்ந்தெடுத்தேன்!
நீக்குஅன்பின் நெல்லை..
நீக்குதங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..
அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
பதிலளிநீக்குஎல்லோரும் என்னாளும் ஆரோக்கியம்,
ஆனந்தம் நிரம்பி இருக்க இறைவன் அருள வேண்டும்.
அவன் அருள் வேண்டுவோம்.
நீக்குஅவன் அருளாலே அவன் தாள் வணங்குவோம்..
நீக்குஅன்பு துரையின் கதை. அருமையாகத்தான் இருக்கும். பனிரண்டு
பதிலளிநீக்குவகுப்பு முடித்தாச்சு என்றால் 18 வயதுதானே ஆகிறது!!!
அதுக்குள் கல்யாணமா.:)
அப்புறம் டைப் ரைட்டிங் கிளாஸ் - அப்புறம் வேறொரு வரன் தேடிய சில மாதங்கள் எல்லாம் கூட்டிக் கழித்துப் பாருங்கள்.
நீக்குதங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றியம்மா..
நீக்குநாவல் பழங்கள் நாவில் எச்சில் ஊற வைக்கின்றன.
பதிலளிநீக்குபடங்கள் அழகு. கார்த்திகா பாவாடை தாவணியில் இருந்தால் இன்னும் ரசிக்கலாம்:)
எல்லாம் அருமையாகப் பதிவு செய்த பிறகு கமெண்ட்
போடுவது வெகு சுலபம் ஜி:)
கார்த்திகா அணிந்திருப்பது பாவாடை தாவணிதான். கருநீலப் பாவாடை, மஞ்சள் சட்டை, கருநீல தாவணி.
நீக்குபடம் அழகு. கார்த்திகா சைகிளில் உட்கார்ந்திருப்பதால் தாவணி தெரியலை. முன்னெல்லாம் எனில் தாவணி குறைந்தது 3கஜமாவது இருந்திருக்கும். இப்போல்லாம் ஒரு மீட்டர் துணியில் பின்னால் ஒரு சின்ன முக்கோணத்துண்டு போல் தாவணி இருக்க முன்னால் நீளத் தலைப்பாகத் தொங்கும் வண்ணம் போட்டுக்கிறாங்க. அதைத் தாவணின்னே சொல்ல முடியாது. இதற்கு ராஜஸ்தான், குஜராத்தின் லஹங்கா பரவாயில்லை.
நீக்குகதையோட்டம் கிராம மணத்துடன் வெகு இனிமை.
பதிலளிநீக்குஅவசரமாக நிச்சயம் செய்தாலும் திருமணத்துக்குப்
பிறகு இருவருமே படிக்கலாமே, இல்லையா துரை?
....ஒரு தென்னந்தோப்பு...அதிலே குருவிக்கூடு
பதிலளிநீக்குபாட்டு நினைவுக்கு வருகிறது.
பசங்களின் விடுமுறை வாழ்க்கை
அனுபவிக்கும் படி இருக்கிறது...
பால் கொழுக்கட்டை இனிமையாகக் காரியங்களை முடிக்கிறது.
நல்லவர்கள் சேர்ந்து செய்யும் நல்ல காரியம்
நன்மையில் முடிகிறது.
வெகு சிறப்பு.
அன்பு துரைக்கும், எங்கள் ப்ளாகுக்கும் மிக நன்றியும் வாழ்த்துகளும்.
பால் கொழுக்கட்டை ஒரிஜினல் எனில் வெல்லம், தேங்காய்ப் பால் விட்டு, ஏலக்காய் போட்டுத் தான். இந்தப் படத்தில் இருப்பது குங்குமப்பூப் போட்ட நாகரீகக் கொழுக்கட்டை!
நீக்குவல்லியம்மா அவர்களது கருத்துரைகளும் கீதாக்கா அவர்களது கருத்துரைகளும் மகிழ்ச்சி.. நன்றி..
நீக்குஅன்பின் வணக்கம் அனைவருக்கும்...
பதிலளிநீக்குநலம் வாழ்க எங்கெங்கும்...
அன்பின் வணக்கம்.
நீக்குஇன்று எனது கதையினைப் பதிவு செய்த அன்பின் ஸ்ரீராம் அவர்களுக்கும் சித்திரங்களால் சிறப்பித்த அன்பின் கௌதம் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி...
பதிலளிநீக்குநன்றி.
நீக்குஇன்று கதைக் களம் காண்பதற்கு வருகை தரும் அனைவருக்கும் நல்வரவு...
பதிலளிநீக்குநாங்களும் வரவேற்கிறோம்.
நீக்குஇந்தக் கதை பள்ளி வாழ்க்கையில் நடந்த நிகழ்வு..
பதிலளிநீக்குசற்றே மாற்றங்களுடன்...
புரிந்துகொண்டோம்.
நீக்குஅனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். நல்ல கிராமத்துப் பின்னணியில் அமைந்த கதை. பின்னர் வரேன். கணினியில் சார்ஜ் தீர்ந்து விட்டது. வீட்டு வேலைகள் அழைக்கின்றன.
பதிலளிநீக்குநன்றி, மீண்டும் வருக!
நீக்குகிராமத்தில் SSLC (11) முடித்ததும் தஞ்சைக்கு சென்று விட்டேன்.. மூன்று மாதங்கள் கழித்து வந்த போது இப்படி திடீர் கல்யாணம்.. பள்ளி இறுதி வகுப்பில் நான் A பிரிவு. அந்தப் பையன் B பிரிவு...
பதிலளிநீக்குஅட! அப்படியா!
நீக்குநாற்பது வருஷம் இருக்குமா இது நடந்து? அப்போத் தான் டைப் ரைட்டிங்க் எல்லாம் முக்கியமானதாக இருந்தது. ஏற்கெனவே பிள்ளையைப் பிடித்துவிட்டது பெண்ணின் அம்மாவுக்கு! ஆகவே பிரச்னை வரவில்லை. மனது ஒத்துப் போனால் எல்லாமும் ஒத்திருக்கும். இருந்தாலும் பதினெட்டு வயதுக் கல்யாணம் என்பது கொஞ்சம் உறுத்தல் தான். ஆனால் இப்போதும் நடப்பதால் நம்பித் தான் ஆகணும்.
நீக்குஅன்பின் கருத்துரைக்கும் புரிந்துணர்வுக்கும் மகிழ்ச்சி..நன்றியக்கா..
நீக்குநாலு பேருக்கு முன்னால் இவள் தான் பெண் என்று உட்கார வைத்த பின் - ஏதாவது ஒரு காரணத்தால் சம்பந்தம் நிறைவேறாமல் போனால் -
பதிலளிநீக்குஅதன் பின் சட்டு புட்டென்று அந்தப் பெண்ணுக்கு வேறு நல்ல பையனைப் பார்த்து கல்யாணம் நடத்தி விடுவார்கள் -
வீண் கற்பனைகள் ஏதும் இளமனதில் வந்து விடக் கூடாதென்று...
நீங்கள் சொல்வது சரிதான்.
நீக்குவேறு நல்ல பிள்ளையாகப் பார்த்தாலும் பிள்ளை வீட்டுக்காரங்க ஒத்துக்கணுமே. இன்னொருவனுக்குப் பார்த்துப் பெண் என உட்கார வைச்சிருந்தாங்களே என்னும் நினைப்பு வந்துட்டால்?
நீக்குஅது அவ்வளவு தூரம் பாதிக்காது...
நீக்குகாலாகாலத்தில் கையைப் பிடித்து ஒருவனிடம் ஒப்படைத்து விடுவது நல்லது..
சென்ற ஆண்டு - எபியில் வந்த சமையல் குறிப்பு இந்தப் பழைய நினைவைத் தூண்டி விட்டது...
பதிலளிநீக்குபையன் நல்லவன்.. பொறுப்பானவன்...
உறவென்று பார்க்காமல் உள்ளத்தைப் பார்த்த நல்ல மனிதர்கள் ...
எல்லாம் நான்முகன் எழுதிய எழுத்து..
பூர்வ ஜென்ம புண்ணியம் தான்...
ஆம்.
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நன்றி.
நீக்குவணக்கம் துரை செல்வராஜ் சகோதரரே
பதிலளிநீக்குகதை அருமை. கிராமத்து கதையென்றாலே எனக்கு படிக்க விருப்பம். கிராமிய கதைகளை படிக்கும் போது இயற்கையின் வனப்புகள் கண்ணெதிரே நடமாட மனதுக்குள் ஒரு பசுமையை பார்த்த மகிழ்வுடன் இருக்கும். அந்தவூரின் பேச்சு மக்களின் பழக்க வழக்கங்கள் இனிதானவையாக மனதுக்குள் அன்று முழுவதும் சுற்றி வரும்.
தாங்களும் அத்தகைய கதைகளை எழுதுவதில் எப்போதும் வல்லவர். தங்களின் அருமையான எழுத்துக்களுடன் கதை படிக்கையில் ஒரு ஆனந்தம் மனதுக்குள் எப்போதும் எழும். இன்றைய கதையும் காட்சிகளை கண்ணெதிரே கொண்டு வந்தது. உறவை பார்க்காமல் நல்ல உள்ளத்தை பார்த்து மணமுடித்து வைக்கப்பட்ட சத்தியும், கார்த்திகாவும் பல வளங்களுடன் சீரும் சிறப்புமாக வாழட்டும்.
பொதுவாக கதைகள் மனிதர்கள் வாழ்வில் உண்மையாகும் நேரங்களும் அமைந்திருக்கின்றன. இன்று உண்மை சம்பவமே கதையாக மாறியது... அதிலும் எல்லாம் சுபமாக நடந்தேறியது மிகவும் சந்தோஷமே... நல்ல முடிவுக்கு பாராட்டுக்கள்.
சகோதரர் கெளதமன் அவர்கள் வரைந்த படங்கள் கண் நிறைந்த காட்சி. முதல்படம் கதைக்கு பக்கபலமாக கிராமிய சூழலோடு அழகாக உள்ளது. இரண்டாவது நாவல் பழங்கள் படம், கைகளில் எடுத்து அதன் சுவையுடன் சாப்பிட்ட நிறைவை தருகிறது இரண்டையும் பொருத்தமாக கதைக்கு ஏற்றபடி வரைந்த சகோதரருக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நன்றி.
நீக்குதங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. திரு. கௌதம் அவர்களது சித்திரங்கள் அழகு.. நன்றி..
நீக்குநன்றி.
நீக்குஅனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குவணக்கம் வாழ்க வளமுடன்.
நீக்குவாழ்க வையகம்..
நீக்குவாழ்க வளமுடன்..
பால் கொழுக்கட்டை உண்டது போல இனிப்பான முடிவு கதைக்கு! வழமை போல துரை செல்வராஜூ ஐயாவின் சிறப்பான நடையில் ஒரு கதை.
பதிலளிநீக்குரசித்தேன்.
அன்பின் வெங்கட்..
நீக்குதங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..
கிராமிய கதை கண் முன் விரிந்து விட்டது.
பதிலளிநீக்குகிராமத்தில் விடுமுறை விட்டால் ஆண் , பெண் குழந்தைகளின் வேலைகள்
கிருத்திகா அம்மாவின் குணநலன், சக்தியின் கள்ளமில்லா நட்பு.
என்று கதையில் நிறைய பிடித்ததை சொல்லி கொண்டே போகலாம்.
கார்த்திகா வீட்டினர் அன்பினில் வார்த்தெடுத்த மாதிரி அருமையாக சொன்னீர்கள்.
தையல்நாயகி பெயர் பொருத்தம்.
கதையின் முடிவு அருமை.
அலைபேசியில் எனக்கு பிடித்த வரிகளை நகல் எடுத்து போட முடியவில்லை.
மாயவரம், கும்பகோணம், வைத்தீஸ்வரன் கோவில் என்று ஊர் பேர்களை படிக்கும் போது நினைவுகள் அங்கு போனது.
பொருத்தமான படங்கள் அருமை. நல்ல கதைக்கு வாழ்த்துக்கள் சகோ.
நன்றி.
நீக்குமயிலாடுதுறைக்கு அருகில் என்றால் தெருவுக்கு இரண்டு பேர் தையல்நாயகி என்றிருப்பார்கள்...
நீக்குதங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..
காதல் மோதல் இல்லாமல் சாதாரணமாக பழகிய அன்பு தகுதியின் அடிப்படையில் நல்ல சம்பந்தம் கிராமத்து சூழ்நிலையில் அழகிய கதை அன்புடன்
பதிலளிநீக்குதங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றியம்மா..
நீக்குவேஷ்டியை வேட்டி என்றும்
பதிலளிநீக்குபனியனை மார்பு உறை என்றும்
பம்பு செட்டை நில நீர்க் குழாய் என்றும்
ஸ்காலர்ஷிப்பை .......? என்றும்
எழுதி நெருடலாக்காமல் இயல்பான பேச்சு மொழியில் கதை வாசிப்பை நடத்திச் சென்ற தம்பி துரைக்கு வாழ்த்துக்கள்.
அன்பின் அண்ணா..
நீக்குதங்கள் வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..
'ஆவணியில் நீர் பிடித்து நெகிழ்ந்திருந்த வயல்களில் தழைத்திருந்த கதிர்கள்' -- என்ற ஆரம்பத்திலேயே கிராமத்துப் பசுமை மனதில் வியாபித்து அந்தத் தண்மை மனசில் நிறைந்து விடுகிறது. இது தம்பிக்கே கைவந்த கலை. அவர் அனுபவித்த கிராமத்து வாழ்க்கை தேரோட்டமாய் எழுத்தில் பதிந்து அதுவே தன்னைத் தானே கைபிடித்து எழுதிக் கொள்கிற சித்து வேலை நடக்கிறது. அந்த எழுத்து சுகத்தை வாசிக்கும் நம் உணர்விலும் தேக்கி வெற்றி பெறுவது தான் தம்பியின் வெற்றிக்கான சூத்திரம்.
பதிலளிநீக்குவஞ்சனையில்லாமல் இந்தக் கதையிலும் அதை செய்து நம்மை மகிழ்விக்கிறார்.
அன்பின் அண்ணா..
நீக்குதங்களது மகிழ்ச்சி என் நெஞ்சில் நெகிழ்ச்சியாகின்றது... நன்றி..
கிராமத்து பின்னணியில் எளிய மனிதர்களின் கதை. நல் மனங்களை இணைத்து வைத்தது இனிமை, பால் கொழுக்கட்டை போல!
பதிலளிநீக்குஅன்பின் வானம்பாடி..
நீக்குதங்களது வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..
வழாக்கமாய் தான் சொல்லும் வாக்கில் கதையை நடத்திச் செல்வதில் தம்பி இந்தக் கதையில் பெருமளவு மாற்றம் கண்டிருக்கிறார். முடிந்த வரை உரையாடலில் கதையை நகர்த்துவதில் முயற்சி செய்திருக்கிறார். அந்த உரையாடலில் பால்மனசு சிறுபையனாய் சதீஷ் நம் மனசில் உருவகம் கொள்வதை இந்தக் கதையை வாசித்து முடித்தும் என்னால் மறக்க முடியவில்லை. பாவம், சதீஷ்.
பதிலளிநீக்கு"அம்மா உன்னை வரச் சொன்னாங்க.." என்று கார்த்திகா சதீஷிடம் சொல்லும் பொழுது லேசாக தெரிந்தது "நீயே வந்துக் கேளு.." என்ற பொழுது தெளிவாயிற்று.
நெஞ்சார்ந்த மகிழ்ச்சியுடன்..
நீக்குசைக்கிளின் முன்னிருந்த வலைக் கூடைக்குள் கையை விட்டு எடுத்துப் பார்த்தான்....
பதிலளிநீக்குவரிசை வரிசையாக ஆங்கில எழுத்துகள் வயலட் நிறத்தில்... ஆங்காங்கே சிவப்பு நிறத்தால் திருத்தப்பட்டிருந்தன...
" இதெல்லாம் எனக்குப் புரியாது... " என்று சதீஷைச் சொல்ல வைத்த காதாசிரியர் மாடு, ஆடு மேய பார்த்துக் கொள்ளும் அவன் ஈடுபாட்டை மேற்கொண்டான கல்வி வாசிப்பில் ஆர்வம் கொண்டவனாய் காட்டியிருக்கக் கூடாது என்று எரிச்சலாய் வந்தது.
அப்படிச் செய்திருந்தால் பின்வரும் கதையில் கார்த்திகாவுடனான அவன் இணை பலப்பட்டிருக்கும். வெள்ளையான மனது சதீஷின் வாழ்க்கையில் வேண்டுமென்றே விழுந்த ஒரு சிறு கரும் புள்ளி.
பள்ளி வாழ்க்கை நிறைவடைந்தவுடன் தங்களது ஆநிரைகளை மேய்ச்சலுக்கு விட்டு கவனித்துக் கொள்வதில் தவறில்லையே...
நீக்குசற்று விளக்கமாக ச் சொல்லாதால் படிப்பில் நாட்டமில்லாதவன் என்று பொருள் படும்படியாகி விட்டது...
இனி கவனத்தில் கொள்வேன்..
** //ஆர்வம் கொண்டவனாய் காட்டியிருக்கக் கூடாது என்று எரிச்சலாய் வந்தது//
பதிலளிநீக்குஆர்வம் கொண்டவனாய் ஏன் காட்டியிருக்கக் கூடாது என்று எரிச்சலாய் வந்தது.
கார்த்திகாவின் அம்மா தையல்நாயகி (கார்த்திகாவுக்காக அமையவிருக்கிறவன் என்ற எண்ணத்தில்) இன்னொரு ஆணின் புகைப்படத்தைக் காட்டி கருத்து கேட்கும் பொழுது ஒரு துளி கூட சித்தம் கலங்காமல் கருத்துச் சொல்லும் சதீஷைக் காணும் பொழுது பெருமையாக இருந்தது. அப்படிப்பட்டவனின் மேல் அவன் பெற்றோர்களைக் கூடக் கலந்து கொள்ளாமல் தன் சொந்த முடிவைத் திணிப்பது போல தையல்நாயகி முடிவு செய்வது நல்லதொரு கதையை இன்னும் ஆழமாய் வளப்பமாய் எழுதியிருக்கலாம் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது.
பதிலளிநீக்குமாடுகளை மாற்றிக் கட்டலாம் தான். அதில் ஒன்றும் தவறில்லை. கட்டிய பிறகு இரு மாடுகளும் ஒத்த இசைவுடன் வாழ்க்கை வண்டியை இழுத்துச் செல்லும் என்று நம்பலாம் தான். அதிலும் தப்பில்லை. இருந்தாலும் அந்த இரு மாடுகளுக்குமான ஒத்த இசைவைக் காட்டி விட்டு மாற்றிக் கட்டியிருக்கலாம் என்ற சிறு திருத்தத்தை வேண்டியே இந்தக் கதை நிற்பதாக மனசுக்குத் தோன்றியதை மறைக்கத் தோன்றவில்லை.
நல்ல எண்ணத்தை விளைவிக்கும் கதைகள் தாம் இந்தக் கதையை இன்னும் எப்படியெல்லாம் செழுமைபடுத்தலாம் என்று பலவிதங்களில் நம்மை யோசிக்க வைக்கிறது. அந்த மாதிரியான யோசிப்புகளைக் கிளர்த்தும் கதையை எழுதிய கதாசிரியருக்கு என் அன்பான வாழ்த்துக்கள். நல்லதொரு வாசிப்பு அனுபவத்தைக் கொடுத்தமைக்கும் நன்றி.
கதாநாயகன் பெயர் "சதீஷா" "சக்தியா" எனக்கென்னமோ "சக்தி" என்றே படித்த நினைவு. சதீஷ் எனில் இப்போதைய காலத்துக் கதாநாயகன் ஆகிடுவானே! இதிலே அறுவடை முடிந்து பயறு, உளுந்து தெளிப்பதெல்லாம் தஞ்சை மண்ணுக்கே உரிய ஒரு விஷயம். ஏனெனில் தென் தமிழ்நாட்டில் புன்செய் நிலங்களில் தான் பயறு, உளுந்து, துவரை, கடலை போடுவார்கள். இது விஷயமாக எங்க புக்ககத்தினருக்கும் எனக்கும் நடந்த பேச்சு வார்த்தையை முன்னரே சொல்லி இருக்கேன். தஞ்சை ஜில்லாவில் புஞ்சை என்றால் அப்போதெல்லாம் தெரியாது/தெரியலை. இப்போத் தெரிந்திருக்கலாம். உலகம் குறுகிவிட்டதே! அதோடு மதுரைப்பக்கம் நாங்கல்லாம் காடு, கழநி என்போம். அங்கே தஞ்சைப்பக்கங்களில் வயல் என்பார்கள். நஞ்சை நிலம், புஞ்சைக்காடு என்றே சொல்வது வழக்கம்.
நீக்குகாடு, கரை எனக் கோவைப்பக்கம் சொல்வார்கள்.
நீக்குநல்ல குணமும் பொறுப்பும் உடைய வரன்களுக்கு அந்நாட்களிலேயே மவுசு அதிகம்...
நீக்குஅதனாலேயே கார்த்திகாவின் அம்மா - தன் மகளுக்கு சத்தியை மாப்பிள்ளை ஆக்குவதற்கு விருப்பம் கொள்வதாக சொல்லியிருக்கிறேன்...
அந்தப் பையனின் பெயரை சக்தி வேல் என்று மறுவாசிப்பில் வாசித்து திருத்திக் கொள்கிறேன். நான் சதீஷ் என்று குறிப்பிட்டிருந்ததை சக்தி என்றே மாற்றி வாசித்துக் கொள்ளவும். கதையை வாசித்த வேகத்தில் கருத்துச் சொன்னதில் ஏற்பட்ட பெயர் மாற்றம். அவ்வளவு தான்.
பதிலளிநீக்குஇதில் தவறேதும் இல்லை அண்ணா..
நீக்குஇனிமையான கதை... அருமை...
பதிலளிநீக்குஅன்பின் தனபாலன்..
நீக்குதங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..
சிறப்பு
பதிலளிநீக்குஅன்பின் ஐயா..
பதிலளிநீக்குதங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..
பெண்ணறிவு நுண்ணறிவு - என்றுரைப்பார் வாரியார் ஸ்வாமிகள்...
பதிலளிநீக்குஏறத்தாழ நாற்பதாண்டுகளுக்கு முன்னர் -
தீய வழிச் செல்வதற்கு அதிக வாய்ப்புகள் இல்லாதிருந்த அந்த காலகட்டத்தில் நல்ல பழக்க வழக்கங்கள் உடைய பசங்களுக்கு மவுசு இருந்தது... பையன் உறவு
முறைக்குள் என்றால் கேட்க வேண்டியதே இல்லை.. எனக்கு உனக்கு என்று போட்டி வேறு இருக்கும்... இங்கே அப்படியில்லை..
தங்களது குலத்தைச் சேர்ந்தவனல்லன் என்ற போதும் தன் அருமை மகளுக்கு இவன் அன்பானவன் என்று முடிவு செய்து அதை முன் வைத்து நடத்திக் காட்டிய தையல்நாயகி அவர்கள் போற்றுதற்குரியவர்கள்...
வாசக அன்பர்கள் அனைவருக்கும் நன்றி..
நன்றி செல்வராஜு சார்.
நீக்குநல்ல முயற்சி . மேலும் எழுதுங்கள். கௌதமனின் படம் நன்றாக இருக்கிறது. திருமண வயதுப் பெண் என்பதால் இன்னும் கொஞ்சம் வயதின் முதிர்ச்சியைக் காட்டியிருக்கலாம்.
பதிலளிநீக்கு