செவ்வாய், 16 மார்ச், 2021

கேட்டு வாங்கிப் போடும் கதை :  கத்தரிக்காயும் கச்சேரியும் -  புதுக்கோட்டை வைத்தியநாதன் 

ஃபேஸ்புக் மத்தியமர் குழுவிலிருந்து இன்னொரு எழுத்தாளரை இங்கே கடத்தி வந்திருக்கிறேன்!  கடந்த பிப்ரவரி 21 ஆம் தேதி அவர் அங்கு வெளியிட்டிருந்த கதையை படித்ததும் அதை இங்கு வெளியிடலாம் என்று தோன்றியதால் அவர் அனுமதி பெற்று இங்கே வெளியிடுகிறேன்.  


இனி அவர் இங்கே நேரடியாகவே கதைகள் எழுதி அனுப்பப் கோரிக்கை விடுக்கிறேன்.

கத்தரிக்காயும் கச்சேரியும்

புதுக்கோட்டை வைத்தியநாதன்.

வாசவி மிகவும் பரபரப்பாக இருந்தாள் . கடிகாரத்தை எட்டி எட்டிப் பார்த்துக்கொண்டிருந்தாள் . மாலை ஏழு மணிக்கு நகரத்திலேயே பிரபலமான சபையில் கச்சேரி. அதுவும் பாடப்போவது வித்வான் சாரங்கன். அவருடைய பாட்டை இதுவரை வாசவி நேரில் கேட்டதில்லை . ஆனால் டி.வி யில் பலமுறை கேட்டு மெய் மறந்திருக்கிறாள் .
கல்லூரிப்படிப்பை முடித்தபின் வீட்டில் ஒரே பெண்ணாக இருந்த இவளுக்குப் பொருத்தமான மாப்பிள்ளையைத் தேடிக்கொண்டிருந்தபோது பக்கத்து வீட்டுமாமியிடம் சங்கீதம் கற்றுக் கொண்டிருந்தாள் . பெரிய அளவில் இல்லையென்றாலும் ஓரளவிற்குப் பாடுவாள் . ஆனால் கற்றுக்கொண்டதில் , இயல்பாகவே பாட்டில் இருந்த ஆர்வம் பலமடங்கு வளர்ந்துவிட்டது. கல்யாணமாகிப் பத்து வருஷங்கள் வரை மாமியாரும் மாமனாரும் கூட இருந்தபோது பிடித்த பாட்டைக் கேட்டு ரசிக்கும் தைரியம்கூட அவளுக்கு வந்ததில்லை. ஒருவர் பின் ஒருவராக இரண்டு பேரும் போய்ச்சேர்ந்த பின்னால்தான் , கொஞ்சம் சுதந்திரமாக டேப் ரெக்கார்டரிலும் , சில காலம் கழித்து டி .வி யிலும் கேட்க ஆரம்பித்தாள் .

கோபிக்கு இந்தப் பாட்டு கீட்டிலெல்லாம் ஆர்வம் கிடையாது. வாசவியோ வீட்டு வேலைகளைச் செய்யும்போதுகூடப் பாடிக்கொண்டேதான் செய்வாள் . ஒருநாள் ஹாலில் பேப்பர் படிப்பதில் மூழ்கியிருந்த கோபியைக் கேட்டாள் .

'நான் விடாம பாடிண்டேயிருக்கிறேனே , உங்களுக்குத் தொந்தரவா இருக்கா ?'

'இல்லையே , எனக்குப் பிடிக்குமே ! '

' பிடிக்குமா? ' வாசவி ஆச்சரியத்துடன் கேட்டாள் , 'இத்தனை நாளா உங்களுக்குத் பாட்டுப் பிடிக்கும்னு சொல்லவே இல்லையே ! '

கோபி சிரித்தான் , 'பாட்டை யார் சொன்னா ? உன்னைப் பிடிக்கும், ரொம்பப் பிடிக்குன்னு சொன்னேன், அதனாலே நீ என்ன பண்ணாலும் எனக்குத் தொந்தரவாத் தோணாது .'

கொஞ்சம் சப்பென்று போய்விட்டாலும் வாசவிக்குப் பெருமையாகவும் இருந்தது. ஆனாலும் அவன்கூட ஜோடியாகக் கச்சேரிக்குப் போய் நேரடியாகக் கேட்டு ரசிக்க வேண்டும் என்ற ஆசை நிராசையாகவே போய்விட்டது. அதனால் நேரடிக்கச்சேரிகளுக்குப் போவதில்லை .
இப்படியாக இருந்தபோதுதான் , அன்று காலையில் திடீரென்று நான்காவது மாடி பங்கஜம் மாமி வீட்டுக்கு வந்தாள் . மாமியை வாசவிக்குக் கிட்டத்தட்ட ஒரு வருஷமாகத் தெரியும். மாமா ஏதோ பெரிய வேலையிலிருந்து ரிட்டையர் ஆகியவர். ஒரே பெண் வெளிநாட்டில் , இரண்டு குழந்தைகள் , நல்ல வேலையில் இருக்கும் மாப்பிள்ளையுடன் மகிழ்ச்சியான வாழ்க்கை. ஒரு பிக்கல் பிடுங்கல் இல்லாமல் மாமிக்கும் மாமாவுக்கும் இங்கே நிம்மதியான ஜீவனம். இருவரும் கோவில், குளம், பாட்டுக் கச்சேரி என்று ஜோடியாக அங்கேயும் இங்கேயுமாகப் போய்ப் பொழுதைக் கழித்துக்கொண்டு வாழ்க்கையை அனுபவித்துக்கொண்டிருந்தார்கள்.
வாசவிக்கு அந்தக் கச்சேரிகளுக்கு இவர்கள் ஜோடியாகப் போகும்போது பார்த்தால் ஒரு ஏக்கம் வரும் . ஆனால் கோபியுடன் சேர்ந்து போக வாய்ப்பில்லாததனால் , டி .வி யில் பாட்டுக் கேட்பதோடு திருப்திப்பட வேண்டியிருந்தது. '

' வாங்கோ மாமி , என்ன திடீர்னு ? '

' நல்ல விஷயந்தான் , மாமாவோட ஃப்ரெண்ட் ஒருத்தர் மாயவரத்திலே இருக்கார் . அவருக்கு ரொம்ப உடம்பு சரியில்லாம போய் ஹாஸ்பிடல்லே அட்மிட் பண்ணியிருக்கான்னு அவரோட பையன் கார்த்தாலே ஃபோன் பண்ணான் . பாத்துட்டு வரேன்னு உடனே கிளம்பிட்டார் . வர ரெண்டு நாளாகும் ...'
வாசவிக்குப் புரியவில்லை. ' இதிலே என்ன நல்ல விஷயம் மாமி ? '

'அவருக்கு உடம்பு சரியில்லாம போனதைச் சொல்லல , வாசவி. இன்னிக்குச் சாயந்தரம் அந்த நாதகீத சபாவில சாரங்கன் பாடறார் . மாமா அதிலே பேட்ரன் . அதனால முதல் வரிசையிலே ரெண்டு டிக்கெட் உண்டு. மாமா ஊருக்குப் போனதனாலே , உன்னைக் கூட்டிண்டு போகலாம்னு நினைச்சேன் . உனக்கு அவர் பாட்டுன்னா உயிராச்சே ? அதைத்தான் சொன்னேன் . '

வாசவிக்குத் தலைகால் புரியவில்லை. வெகுநாள் ஆசையான நேரடிக் கச்சேரி, அதுவும் முதல் வரிசையில், மேலும் அவளுடைய அபிமான பாடகரின் கச்சேரி . கோபி கண்டிப்பாக ஒன்றும் தடை சொல்ல மாட்டார்.

'ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் , மாமி , எத்தனை மணிக்குக் கிளம்பணும் ? '

' கச்சேரி சாயந்தரம் ஏழு மணிக்கு ஆரம்பிக்கும். அந்த சபையிலே அவா நேரத்திலே ரொம்ப ஸ்ட்ரிக்ட் . டாண்ணு ஏழு மணின்னா ஏழு மணிக்கு ஆரம்பிச்சுக் கரெக்ட்டா ஒம்பதரைக்கு முடிச்சுடுவா. நாம்ப வீட்டிலேருந்து ஆறு மணிக்கு கிளம்பினாப் பத்து மணிக்கு வீட்டுக்குத் திரும்பிடலாம். ட்ரைவரை வரச் சொல்லியிருக்கேன். நீ ஆறு மணிக்கு கீழே வந்துடு. நான் காத்துண்டிருப்பேன்.'
' மறுபடியும் ரொம்பத் தேங்க்ஸ் மாமி , நான் கரெக்ட்டா வந்துடறேன் .'

துள்ளும் உள்ளத்துடன் அவசர அவசரமாக வீட்டு வேலைகளையெல்லாம் முடித்து , ராத்திரி சாப்பாட்டையும் ரெடி செய்து, ஹாட் கேசுக்குள் வைத்து மூடி டைனிங் டேபிள் மேல் வைத்தாள் . கச கசவென்று இருந்ததால் மறுபடியும் குளித்துவிட்டு , தனக்குப் பிரியமான ப்ளூ கலர் ப்யூர் சில்க் புடவையையும் , பொருத்தமாக நீலக் கல் நெக்லஸையும் அணிந்து கொண்டு , லைட்டான மேக்கப்புடன் , அடர்த்தியான கூந்தல் கொண்டையில் வளைத்து வைத்த மல்லிகைப் பூவுடன் அறையை விட்டு வெளியே வந்தபோது மணி ஐந்து. ஹாலில் சோ∴பாவில் உட்கார்ந்து கொண்டு பரபரப்புடன் கடிகாரத்தைப் பார்த்துக்கொண்டே இருந்தாள்.


சரியாக ஐந்தேமுக்கால் மணிக்கு வாசல் கதவைத் திறந்துகொண்டு உள்ளே நுழைந்த கோபி , ஆச்சரியமாகப் புருவத்தை உயர்த்தினான் .
' வாவ் , ஒரு பத்தே நிமிஷம் கொடு. நான் வந்துடறேன் .'
வாசவிக்குப் புரியவில்லை . ' நீங்களா , எங்கே ? '
' வேறே எங்கே , ரெண்டாவது ஹனிமூனுக்குத்தான் ' கோபி அவளை அணைத்துக்கொள்ள வந்தான்.
வாசவி பொய்க்கோபத்துடன் விலகிக்கொண்டாள் . ' க்கூம் , நம்ப பொண்ணுக்கு ஒரு பொண் , அதாவது உங்களைத் தாத்தாவாக்கின பேத்தி பொறந்து ரெண்டு வருஷமாறது , உங்களுக்கு இப்ப ஹனிமூன் கேக்கறதா ? புடவையைக் கசக்கிடாதீங்கோ. நான் ஒரு கச்சேரிக்குப் போகப்போறேன். டைனிங் டேபிள்ளே எல்லாம் எடுத்து வச்சிருக்கேன். கொஞ்சம் நீங்களே எடுத்துப் போட்டுண்டு சாப்பிட்றேளா ? பத்து மணிக்கு வந்து எல்லாத்தையும் ஒழிச்சுப் போட்டுக்கறேன். நீங்க ஒண்ணும் க்ளீன் பண்ண வேண்டாம் . '
கோபி ஒரு மறுப்பும் சொல்லவில்லை . 'சந்தோஷமாப் போய் என்ஜாய் பண்ணிட்டு வா. யாரோட போறே ? '
வாசவி சொன்னாள் . கோபி தலையை ஆட்டிவிட்டுப் பேப்பரைக் கையில் எடுத்துக்கொண்டு சோ∴பாவில் உட்கார்ந்துகொண்டான். வாசவி அவனுக்குக் கையை ஆட்டி டாடா சொல்லிவிட்டுக் கீழே இறங்கியபோது மணி சரியாக ஆறு. பங்கஜம் மாமி காரின் அருகே காத்துக்கொண்டிருந்தவள் , வாசவியைப் பார்த்தவுடன் கோபியைப் போலவே புருவத்தை உயர்த்தினாள் .
'வாசவி, ஒன்னைப் பாத்தா ஒரு பேத்தி எடுத்தவள்னு சத்தியம் பண்ணிச் சொன்னாலும் நம்ப மாட்டா . ஏதோ சினிமா ஸ்டார் மாதிரின்னா இருக்கே ? என் கண்ணே பட்டுடும் .'
கோபியின் குரலில் காதல் இருந்தது, இங்கே மாமியின் குரலில் சற்றுப் பொறாமை த்வனித்தது .
'சும்மா இருங்கோ மாமி , கேலிபண்ணாதீங்கோ . வாங்கோ, கிளம்பலாம். '
சரியாக ஆறரை மணிக்கு சபாவிற்குப் போய்விட்டார்கள். யார் யாரோ வந்து மாமியைக் குசலம் விசாரித்து , வாசவி யாரென்று கேட்டு முடித்து ( மாமா வரலையா , ஒங்க பொண்ணா மாமி , எப்போ வந்தா ? ) முதல் வரிசையில் சென்டரில் இருந்த இருக்கைகளில் அமரும்போது மணி ஆறே முக்கால்.
ஹால் மிக ரம்மியமாக இருந்தது. பத்து நிமிஷங்களில் தன் வாத்தியக் குழுவுடன் சாரங்கன் பிரவேசித்தார்.

மணி ஏழு அடித்ததும் மாமி சொன்ன மாதிரியே 'டாணென்று 'கச்சேரியை ஆரம்பித்தார். முதலில் ஸ்ரீ கணபதிம் என்ற செராஷ்டிர ராகக் கீர்த்தனை. கம்பீரமாகப் பாடினார். பின்பு காம்போதி ராக விஸ்தாரமான ஆலாபனை, திருவடி சரணம் என்று அந்தக்காலத்தில் முசிறி சுப்ரமணிய அய்யரால் பிரபலமான பாட்டு. வாசவி மெய் மறந்து போனாள் . என்ன குரல், என்ன கல்பனா வளம் , அப்பப்பா !
ராக ஆலாபனையில் அவர் பாடிய ஸ்வரங்கள் , அந்தக் காலத்தில் ஜி.என்.பி காட்டியதைப் போல் அவர் குரல் காட்டிய வித்தைகள் , வாசவி சங்கீதத்தில் மூழ்கிப் போனாள் . 'மறுபடியும் கருவடையும் குழியில் தள்ளி என்னை வருத்தப்படுத்த வேண்டாம்' என்று காம்போதியின் உச்சத்தில் அவர் பாடியபோது வாசவிக்குத் தன்னையும் அறியாமல் கண்களில் நீர் வழிந்தது. மள மளவென்று ராகங்களும் பாட்டுகளும் தொடர்ந்தன. ஒவ்வொரு பாட்டுக்கும் கைதட்டல் ஹாலைப் பிளந்தது.
வாசவிக்கு ஒவ்வொரு பாட்டையும் ஏதோ ஒரு பாடகர் பாடும் விதத்தில்தான் மனது லயிக்கும் . ஆனால் இவரோ அனாயசமாக அத்தனை பாடல்களையும் அற்புதமாகப் பாடினார் .அவர் ராக ஆலாபனையில் விழுந்த ஸ்வரங்கள் , வாசவிக்குச் சிறு வயதில் கம்பி மத்தாப்பைக் கையில் பிடித்துக்கொண்டு அது கலர் கலராய் அள்ளித்தெறிக்கும் பொறிகளை ரசித்ததை நினைவூட்டியது . நடு நடுவில் முன் வரிசையில் இருந்தவர்கள் ஓரிருவர் தங்கள் அபிமானப் பாடல்களைப் பாடவேண்டிச் சீட்டுக் கொடுத்தனுப்பினார்கள் . அவரும் சளைக்காமல் பாடினார்.
வாசவிக்குப் பெஹாக் ராகமும் அதில் அமைந்த 'இரக்கம் வராமல் போனதென்ன காரணம் 'என்ற பாட்டும் மிகவும் பிடிக்கும் . கொஞ்சம் தயக்கத்துடனே மாமியைக் கேட்டாள் .
'மாமி, அந்தப் பாட்டைப் பாடச் சொல்லிக் கேட்கலாமா ? '
' கேளேன் ' மாமி ஹேண்ட் பேக்கிலிருந்து பேனாவையும் பேப்பரையும் கொடுத்தாள் . அந்தச் சீட்டைக் கொடுத்தனுப்பியதும் பார்த்த சாரங்கன் , கொடுத்தவரிடம் ஏதோ கேட்க அவர் வாசவியைச் சுட்டிக் காட்டினார். ஆனால் சாரங்கன் அந்தப் பாட்டைப் பாடவில்லை. 'நாத விந்து கலாதி நமோ நமோ 'என்று திருப்புகழைப் பாடிக் கச்சேரியை முடித்துக்கொண்டார். மணியும் சரியாக ஒன்பதரை.
ரசிகர்கள் எழுந்து நின்று விடாமல் ஐந்து நிமிஷம் கை தட்டினார்கள். சாரங்கனும் எழுந்து நின்று கை கூப்பி வணங்கிவிட்டு ஸ்டேஜிலிருந்து இறங்கி வந்தார் . கூட்டம் கலைய ஆரம்பித்தது .அதற்குள் மாமியை யாரோ கூப்பிட்டார்கள் . 'ஒரு ஐந்து நிமிஷம், வாசவி . இங்கேயே நில்லு நான் வந்துடறேன்'
வாசவி , மாமி போன திக்கையே பார்த்துக்கொண்டு நின்றுகொண்டிருந்தாள் . யாரோ அருகில் வருவதுபோல் உணர்ந்து திரும்பிப்பார்த்தால் - சாரங்கன் !
பளபளவென்ற சில்க் ஜிப்பா . சராசரியான உயரம். முன் வழுக்கையான தலை. கழுத்தில் ஒரு தடிமனான தங்கச்சங்கிலி . ஜவ்வாதுப் பொட்டின் வாசனை வந்தது.
'நமஸ்காரம் , நீங்கதான் அந்தப் பெஹாக் ராகம் பாடச்சொல்லிக் கேட்டிருந்தேளோ ? '
வாசவிக்குக் கொஞ்சம் கூச்சமாக இருந்தது . 'ஆமாம் , ஆனாக் கச்சேரி முடியற டைம் ஆனதைக் கவனிக்கல , சாரி . '
'இதுக்கென்னத்துக்கு சாரி , இப்படி நீங்கள்ளாம் பிரியப்பட்டுக் கேக்கறதுதான் எங்களுக்குப் பெரிய கெளரவம். இங்கே டைம்ல ரொம்பக் கறாரா இருப்பா. பெஹாக் அற்புதமான ராகம் . நேரம் பத்தாதுன்னுதான் பாட முடியலை. என்னோட அடுத்த கச்சேரி நாளான்னிக்கு தி .நகர்ல இருக்கு. அங்கே வாங்கோ. கண்டிப்பாய் பாடறேன். ஆமாம், உங்க ஆத்துக்காரருக்காக வெய்ட் பண்ணிண்டிருக்கேளா ? '
கொஞ்சம் சங்கோஜத்துடன் வாசவி இல்லையென்று தலையாட்டினாள் . 'அவருக்கு வேலை அதிகம். கச்சேரிக்கெல்லாம் வர டைம் இல்லை. நான் பக்கத்து வீட்டு மாமியோட வந்தேன். நேரடியாக முதல் முதலாக் கேட்ட கச்சேரியே ஒங்களோடதுதான் . அற்புதமாப் பாடினேள் '
சாரங்கன் மறுபடியும் கை கூப்பிவிட்டுக் கிளம்பியவர் ஒரு நிமிஷம் தயங்கினார் , திரும்பி வாசவியைப் பார்த்தார் .
' ஒங்க ஜாகை எங்கே ? '
இதை இவர் எதற்கு கேட்கிறார் ? ஒரு வேளை ரசிகர்கள் வீடு வீடாய்ப் போய்ப் பாடி சந்தோஷப் படுத்துவாரோ ? வாசவி வந்த சிரிப்பை அடக்கிக்கொண்டு சொன்னாள் .
' பரவாயில்லை, என் வீட்டுக்குப் பக்கந்தான் . எதுக்கு கேட்டேன்னா நான் கச்சேரி நாளை விட்டு மத்த நாளெல்லாம் என் சிஷ்யாளுக்குப் பாட்டு சொல்லிக்கொடுப்பேன். நாளைக்கு சாயந்தரம் அஞ்சு மணிக்கு வந்தேள்னா உங்களுக்காக பெஹாக் பாடின மாதிரியும் இருக்கும், அவாளுக்குச் சொல்லிக்கொடுத்த மாதிரியும் இருக்கும் . வர முடியுமா ? '
வாசவியின் மனம் துள்ளியது. அந்தப் பாட்டை இவர் பாடிக் கேட்டால் எப்படி இருக்கும் ? சான்சை விடுவேனா?
'கண்டிப்பா வரேன் , ரொம்ப நன்றி , சார் .'
சாரங்கன் ஒரு கையசைவால் அவளுடைய நன்றியெல்லாம் தேவையில்லை என்பதைக் காட்டிவிட்டு , அவளை பார்த்துத் தன் வெற்றிலைக் காவிப்பற்கள் பாதி தெரிய சிரித்துவிட்டு நகர்ந்தார். திரும்பிப் பார்த்த வாசவிக்குப் பங்கஜம் மாமி கொஞ்சம் கவலைதோய்ந்த முகத்துடன் வருவது தெரிந்தது .

' என்ன மாமி ? '
' வாசவி , என்னைக் கூப்பிட்டது அந்த மாயவரத்துக்காரரோட ஒண்ணு விட்ட தங்கை. ஆஸ்பத்திரியில அவருக்குக் கோவிட்னு கண்டுபிடிச்சிருக்காளாம் . மாமா வேறே அங்கே அவரைப் பாக்கப் போயிருக்காரே , எதையாவது பிடிச்சிண்டு வந்துட்டா ? அதான் கவலையாயிருக்கு. '
வாசவி மாமியைத் தன்னுடன் சாரங்கன் வீட்டுக்குக் கூட்டிக்கொண்டு போகலாம் என்று இருந்த எண்ணத்தைக் கை விட்டாள் . கோபியோ காரை எடுத்துக்கொண்டு ஆஃபீசுக்குப் போய் விடுவார். அதனாலென்ன , ஒரு ஆட்டோ பிடிச்சு சாரங்கன் வீட்டுக்குப் போய்விட்டால் போச்சு. கோபிக்குக் காப்பி போட்டு ஒரு தெர்மாசில் வைத்துவிட்டுப் போனால், இரவு சாப்பாட்டுக்குத் திரும்பி வந்து சமைத்துக்கொள்ளலாம்.
வீட்டுக்குத் திரும்பியதும் கோபியிடம் சொன்னாள் . 'தாராளமாய் போய்ட்டு வா, உனக்கும் பாவம் பிடிச்சதைப் பண்ண ஒரு சான்ஸ் கிடைச்சுதே '.
றுநாள் மாலை நான்கரை மணிக்கு வீட்டை வீட்டுக் கிளம்பியவள் , அரை மணி நேரத்தில் சாரங்கன் கொடுத்திருந்த விலாசத்திற்குப் போய்விட்டாள். ஒரு காம்பவுண்டுடன் தனி வீடு. தரங்கிணி என்று பொறித்திருந்த பெயரை ரசித்துக்கொண்டே உள்ளே போய் மணியை அடித்தவுடன் சாரங்கன் வந்து கதவைத் திறந்தார்.
'வாங்கோ, வாங்கோ, அடி இவளே, கொஞ்சம் காப்பி போட்டுக்கொண்டு வா .'
வாசவி ஹாலின் ஓரத்தில் நின்றுகொண்டிருந்த 'இவளை'ப் பார்த்தாள் . அவளும் வாசவியைப் பார்த்த முகத்தில் கொஞ்சம் சோகமும் கொஞ்சம் வெறுப்பும் தெரிந்த மாதிரி வாசவிக்குத் தோன்றியது. அவள் காபி போட உள்ளே போகத் திரும்பினாள் .
'தயவு செஞ்சு எனக்காகக் காப்பியெல்லாம் போட வேணாம் . வீட்டிலேயிருந்தே குடிச்சுட்டுத்தான் கிளம்பினேன். மறுபடியும் குடிக்கற பழக்கமேயில்லை.'
சாரங்கன் சிரித்தார் . 'அதுவும் சரிதான் , நீங்க வந்தது காபிக்காக இல்லையே, உங்களுக்கு வேண்டியது பெஹாக்தானே . சரி, வாங்கோ, மாடிக்குப் போகலாம்.'
மாடி ஹாலில் வலது பக்கம் இருந்த அறைக் கதவைத் திறந்துகொண்டு சாரங்கன் உள்ளே போனார். 'உள்ளே வாங்கோ '
அறை பெரிதாக இருந்தது. ஒரு மூலையில் ஒரு மேடை மாதிரிப் போட்டிருந்ததில் ஒரு தம்புராவும், எலெக்ட்ரானிக் ஸ்ருதிப் பெட்டியும் வைத்திருந்தது. அங்கேதான் சாரங்கன் உட்கார்ந்து சொல்லிக்கொடுப்பார் போல . சிஷ்யர்கள் கீழே உட்கார்ந்துகொள்ள வசதியாக , ஒரு ரத்தினக்கம்பளம் விரித்திருந்தது . ஆனால் வேறே யாரையுமே காணோம் .
' உங்க க்ளாஸ் ஆரம்பிக்கலையா , இன்னும் யாரையுமே காணோமே ? அஞ்சு மணிக்கு வருவான்னு சொன்னேளே ? '
'அது என்னன்னா இன்னிக்குக் கொஞ்சம் அவசர வேலையா வெளியே போக வேண்டியதாப் போச்சு . வர லேட்டாகும் போல இருந்தது. ஸ்டூடெண்ட்ஸ்க்கெல்லாம் ஃபோன் பண்ணிச் சொல்லிட்டேன். ஒங்க ஃபோன்நம்பர் தெரியாததனாலே சொல்ல முடியல. ஆனா ஒங்க அதிஷ்டம் பாருங்கோ. வேலை சீக்கிரமாவே முடிஞ்சு நாலே முக்கால் மணிக்கே வர முடிஞ்சுடுத்து . அதை விடுங்கோ . இப்போ உங்களுக்காகவே நீங்க கேட்ட பாட்டைப் பாடப்போறேன். கேட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்கோ. உக்காருங்கோ.'
சாரங்கன் ஸ்ருதி பெட்டியை செட் செய்த்துக்கொண்டு பெஹாக் ராக ஆலாபனை செய்ய ஆரம்பித்தார். ஆஹா , வாசவிக்கு அப்படியே பறக்கிற மாதிரி, சங்கீதக் கடலில் மிதக்கிற மாதிரி இருந்தது. ஒரு இருபது நிமிஷ ஆலாபனைக்குப் பின் கோபாலகிருஷ்ண பாரதியின் அற்புதமான பாடலை, வாசவிக்கு மிகவும் பிடித்த அந்தப் பாட்டைப் பாட ஆரம்பித்தார். அவருடைய குரலின் குழைவும் , உணர்ச்சி பாவமும் வாசவியை எங்கேயோ கொண்டு சென்றது. இப்படியும் ஒருவரால் பாட முடியுமா ?
பாட்டு முடிந்தது. வாசவி எழுந்துகொண்டாள். ' உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியலை. மறக்க முடியாத அனுபவம்.'
சாரங்கனும் எழுந்து வாசவியின் அருகில் வந்தார். ' மறக்க முடியாத அனுபவம்னா , அது பாட்டு மட்டும் இல்லையே , உங்களுக்குத் புரிஞ்சிருக்குமே .' ஒரு மாதிரியாகச் சிரித்துக்கொண்டே வாசவியின் தோளைத் தொட்டார்.
வாசவிக்குத் தோளில் நெருப்புப் பட்ட மாதிரி எரிந்தது . உக்கிரமாகத் திரும்பினாள் . 'ச்சீ , நீயெல்லாம் ஒரு ஆளா , மிருகம் ' வேகமாக ஓடி அறைக்கதவைத் திறந்துகொண்டு மாடிப்படியில் இறங்கப் போனாள். சாரங்கன் பின்னாலேயே ஓடி வந்தார். ' ஒரு நிமிஷம் நில்லுங்கோ ' வாசவி , சாரங்கனை ஒரு புழுவைப் பார்ப்பதுபோல் திரும்பிப்பார்த்தாள் . ' த்தூ 'என்று காறித்துப்பிவிட்டுத் தடதடவென்று கீழேயிறங்கியவள் , சாரங்கனின் மனைவி ஒரு திருப்தியுடன் நடந்ததையெல்லாம் பார்த்துக்கொண்டிருப்பதையும் கவனிக்காமல் வாசல் கதவைத் திறந்துகொண்டு தெருவுக்கு வந்தாள் .
கொந்தளிக்கும் மனத்தோடு எதையும் கவனிக்காமல், ஒரு ஆட்டோவைக் கூப்பிடவேண்டும் என்றுகூடத் தோன்றாமல் , ஓட்டமும் நடையுமாக எப்படியோ வீட்டை அடைந்து கதவைத் திறந்தாள் . கோபி சோஃபாவில் உட்கார்ந்தபடி மடியில் லேப்டாப்பை வைத்துக்கொண்டு ஏதோ பார்த்துக்கொண்டிருந்தான். ஒரு கதறலுடன் ஓடி வந்தவள் லேப்டாப்பைத் தள்ளிவிட்டு அவன் மடியில் முகத்தைப் புதைத்து அழ ஆரம்பித்தாள்.
கோபி திடுக்கிட்டான் , கீழே விழுந்த லேப்டாப்பை சட்டை செய்யாமல் , ஆதுரத்துடன் அவள் முதுகை தடவிக்கொண்டே கேட்டான்.
'வாசி, என்ன ஆச்சு , ஏன் அழறே ? '
வாசவியின் அழுகை அடங்கக் கொஞ்ச நேரம் பிடித்தது. தேம்பிக்கொண்டே நடந்ததையெல்லாம் கோபியிடம் சொல்லி முடித்தாள்.'

' நடந்ததுக்கெல்லாம் என் முட்டாள்தனந்தான் காரணம் ' வாசவியின் தேம்பல் அடங்கவில்லை .
' முட்டாள்தனம்தான் ' கோபி சிரித்தான் 'ஆனால் நீ நினைக்கறது இல்லை. இப்போ அசடு மாதிரி இதுக்குப் போய் அழறதுதான் முட்டாள்தனம் .'
வாசவிக்கு அழுகை ஒரு நிமிஷம் நின்றது . 'நீங்க என்ன சொல்றேள் ? '
'ஆமாம் , என் வாசி, தெருவிலே போகும்போது காக்கா நம்மேல எச்சமிட்டதுன்னா அதை நம்ப முட்டாள்தனம்னு நினைச்சு அழுதுண்டிருக்கலாமா , அதைத் தண்ணி போட்டுத் துடைச்சுட்டு காக்காயோட வேலை இப்படித்தான்னு விட்டு விட்டு நம்ப வேலையைப் பாக்க வேண்டியதுதான் '
'இல்லை, அவன் பாட்டு ரொம்ப அற்புதமா இருந்ததுன்னு கேக்கணும்கற ஆசையில்தான் போனேன் . ஆனா அவன் இவ்வளவு கீழ்த்தரமான அயோக்கியனா இருப்பான்னு நான் எதிர் பார்க்கவேயில்லை ....'
' வாசி, கம்பி மத்தாப்பு கலர் கலரா எரியும்போது அழகாத்தான் இருக்கும் . ஆனா அந்த அழகெல்லாம் ஒரு நிமிஷம்தான். அதைக் கையில பிடிச்சா கைதான் கொப்புளிக்கும் '
வாசவிக்குத் தூக்கி வாரிப் போட்டது. இதே கம்பிமத்தாப்பு உவமை நேற்று கச்சேரியில் தன் மனதில் எப்படித் தோன்றியது ?
' இல்லை . நீங்க என்ன சொன்னாலும் நான் பண்ணது தப்புதான் . அவன் வீட்டுக்குப் போயிருக்கவே கூடாது .'

'அதனாலே நான் இப்போ என்ன பண்ணனும்கிறே ? ' கோபி மறுபடியும் சிரித்தான் . 'அந்த ராமன் சீதையைப் பண்ண மாதிரி உன்னை அக்கினிப் பிரவேசம் பண்ணச்சொல்லணுமா ? ' திடீரென்று கோபியின் குரல் கொஞ்சம் சீரியஸாக மாறிற்று , 'ஒண்ணு தெரியுமா வாசி , ராமன் பகவானாகவே இருக்கலாம் . ஆனால் தான் ஒழுக்கம் தவறாத , ஜனங்களுக்கு ஒரு உதாரணமா இருக்கற ராஜான்னு காட்டிக்கறதுக்காகத் தன்னையே உயிரா நினைச்சு வாழ்ந்த சீதாவை அக்கினிப் பிரவேசம் பண்ணச்சொன்னதில , ராமனோட சுயநலம்தான் எனக்குத் தெரியறது. அந்த இடத்திலே நான் இருந்திருந்தா ...'

வாசவிக்கு அழுகையையும் மீறி கோபி என்ன சொல்ல வருகிறான் என்று கேட்கும் ஆவல் வந்தது.

'இருந்திருந்தா ?'

' இருந்திருந்தா , எனக்கு இந்த ராஜ்ஜியமும் வேணாம் . என்னைப் பின்னால் யாரும் புகழவும் வேண்டாம் . எனக்கு என் சீதை போதும் . இந்தா பரதா , இத்தனை நாள் ஆண்டது போல் இனிமேலும் ஆண்டுகொள் என்று என் சீதையை அணைத்துக்கொண்டு, அழைத்துக்கொண்டு எங்கேயாவது போயிருப்பேன்.' கோபி வாசவியின் நெற்றியில் முத்தமிட்டான் . ' வாசி, நீ நெருப்பு, என் அணைப்பில் மட்டுமே தணியும் நெருப்பு. எனக்கு உன்னைப் பற்றித் தெரியாதா ? ஏன் உனக்கு அவசியமில்லாமல் குற்ற உணர்ச்சி வரணும் ? சரி , வா, நீ ஏதாவது சாப்பிடு. தூங்கப் போகலாம். நான் சாயந்திரமே சேண்ட்விச் சாப்பிட்டு விட்டேன் .'
' இல்லை, எனக்குப் பசிக்கலை , எதுவும் வேண்டாம் . நான் ஒரு டம்ளர் பால் மட்டும் குடிச்சுக்கிறேன். அதை விடுங்கோ. நீங்க இப்படியெல்லாம் யோசிப்பேள் , பேசுவேள்னு தெரியவே தெரியாதே ! '
'அதுவா 'அதே சிரிப்பு. 'உனக்குப் பாடிண்டே எல்லா வேலையும் செய்ய முடியும். எனக்குப் பேசிண்டே எந்த வேலையும் செய்ய முடியாது . அதனாலதான் பேசறதில்ல.'
இருவரும் பெட் ரூமுக்குப் போனார்கள் , வாசவி , கோபியைக் கட்டிக்கொண்டு படுத்துக்கொண்டாள். கோபியின் கையும் அவள் இடுப்பை இறுக்கியது.
' ஆனாலும் , வாசி ,இன்னிக்கு நடந்ததுக்கெல்லாம் நீதான் காரணம் '.
வாசவி குழம்பினாள் . 'நானா ? '
'ஆமாம், உன்னை யார் இவ்வளவு அழகாக இருக்கச் சொன்னது ? ' வாசவிக்குச் சிரிப்பு வந்தது. கோபியின் பிடி இறுகிற்று. மேலும் இறுகிற்று.

*****
காலையில் எழுந்தபோது வாசவிக்கு அசதியாகவே இருந்தது. நன்கு பிரெட் ஸ்லைஸ்களை டோஸ்ட் செய்து ஜாமும் வெண்ணையும் தடவி கோபிக்கு வைத்துவிட்டுத் தனக்கும் அதேபோல எடுத்துக்கொண்டு டைனிங் டேபிளில் உட்கார்ந்தாள். அதற்குள் கோபி குளித்துவிட்டு அவசரமாய் டிரஸ் செய்து கொண்டு வந்தவன் ஒரே முழுங்கில் விழுங்கிவிட்டு, வாசவியின் தலையில் முத்தமிட்டுவிட்டு ஆஃபீசுக்குக் கிளம்பினான்.

கிளம்பியவன் வாசலருகே ஒரு நிமிஷம் நின்றான்.
' வாசி , இன்னிக்கு ஒரு லஞ்ச் மீட்டிங். கண்டதையெல்லாம் சாப்பிட்டுட்டு வருவேன். சாயந்தரம் ஏழு மணியாயிடும்.அதனாலே ராத்திரிக்கு ஒரு ரசம் சாதமும், கூட நீ பிரமாதமாப் பண்ணுவையே அந்த எண்ணைக் கத்தரிக்காய் வதக்கலும் , அதை மட்டும் பண்ணி வை , போதும் . பை '
இரண்டே நிமிஷத்தில் அவன் கார் கிளம்பும் சத்தம் கேட்டது. வாசவி வீட்டு வேலைகளைக் காமா சோமாவென்று பண்ணிவிட்டுக் குளித்துவிட்டு வந்து , கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கொள்ளலாம் என்று படுத்தவள் , அப்படியே அயர்ந்து தூங்கி விட்டாள் .
ஃபோன் மணி அடித்து அவள் தூக்கம் கலைந்தபோது மணி மாலை ஆறு, அவளுடைய ஃப்ரெண்ட் சுதாதான் கூப்பிட்டாள் . 'என்ன வாசவி இது, இதுவரை மூணுதரம் கூப்பிட்டிருப்பேன். எடுக்கவே மாட்டேங்கறையே ?'

'சாரி சுதா, ஏதோ டயர்டா இருந்தது , நன்னாத் தூங்கிப்போய்ட்டேன் . என்ன விஷயம் சொல்லு . '
என்னத்தைச் சொல்ல, இப்பவே லேட்தான் . இருந்தாலும் கொஞ்சம் ட்ரை பண்ணி சீக்கிரம் ரெடியானா , இன்னிக்கு சாயந்திரம் ஏழு மணிக்கு தி . நகர்லே சாரங்கன் கச்சேரிக்கு ரெண்டு டிக்கெட் கிடைச்சிருக்கு. இவர் வரலேன்னுட்டார். நானும் நீயும் போலாம் , கிளம்பு .'
' நான் வர முடியாது சுதா, எனக்கு முக்கியமான வேலை இருக்கு .'
சுதாவின் குரலில் ஆச்சரியம் தெரிந்தது . 'சாரங்கன் கச்சேரி உனக்கு எவ்வளவு பிடிக்கும்னு எனக்குத் தெரியும். அதைவிட அப்படி என்ன முக்கியமான வேலை உனக்கு ? '
'எனக்கு எண்ணைக் கத்தரிக்காய் வதக்கல் பண்ணனும் , அதுதான் முக்கியம். கச்சேரியெல்லாம் கணக்கிலேயே வராது. நீ வேறே யாரையாவது பிடி. நாளைக்குப் பேசலாம் . நான் ஃபோனை வைக்கிறேன். பை '
வாசவி சமையல் அறையை நோக்கி நடந்தாள் . மனம் நிம்மதியாய் இருந்தது .
= = = =

83 கருத்துகள்:

  1. புதிய அறிமுகத்துக்கு வாழ்த்துகள் இதோ கதையை படித்து விட்டு வருகிறேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்லதொரு கதை பெரிய மனிதர்களில் பலருக்கும் சில்லறை புத்தி இருப்பது உண்மையே...

      முடிவில் தலைப்பை கொண்டு வந்து பொருத்தியது அருமை.

      புதுக்கோட்டை வைத்தியநாதன் அவர்களுக்கு வாழ்த்துகள் - கில்லர்ஜி

      நீக்கு
    2. தலைப்பை முடிவு செய்தபிறகுதான் கதையையே எழுதினேன். தங்கள் ரசிப்பிற்கு நன்றி.

      நீக்கு
  2. என்ன இது? என்ன இது? யாரையுமே காணோம்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆறு மணி பத்து நிமிட நேரத்தில் ஒருவர் வந்திருக்கிறாரே - அது தெரியவில்லையா!

      நீக்கு
    2. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் கௌதமன் சார், நான் கருத்துப் போடும்போது இங்கே யாருடைய கருத்துரையும் இல்லை. போட்டேன் பாருங்க, கொஞ்ச நேரம் என்னோடது மட்டும் தெரிஞ்சதா? அடுத்த கருத்துப் போடும்போது முன்னாலே கில்லர்ஜியோட கருத்துரை ஒட்டிக் கொண்டிருந்திருக்குப் போல! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

      நீக்கு
  3. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். அனைவர் வாழ்விலும் ஆரோக்கியம் மேலோங்கித் தொற்று அதிகரிக்கும் நிலையில் உள்ள சென்னை நகரில் தொற்று முழுவதும் நீங்கப் பிரார்த்திப்போம்.

    பதிலளிநீக்கு
  4. இதை ஏற்கெனவே மத்யமரில் படிச்சாலும் இங்கேயும் படிச்சேன். யாருமே வரலையேனு. வர வரைக்கும் படிப்போம்னு. இன்னும் யாரும் வரலை. ஆகவே என்னோட கருத்துக்கள் ரிசர்வ்!

    பதிலளிநீக்கு

  5. @ஸ்ரீராம், நான் சொன்ன அந்த "ஜீவி" அவர்களையும் கேட்டுப் பாருங்கள். இரண்டு சிறுகதைகள் நன்றாக எழுதி இருந்தார். சொந்த அனுபவங்களும் கதையை விட சுவாரசியமாக எழுதுகிறார். முயற்சி செய்து பார்க்கவும். அப்புறமா வரேன். ஜட்ஜ்மென்ட் ரிசர்வ் மாதிரி என்னோட கருத்துகள் ரிசர்வ்! :)))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆறு பத்து கருத்துரையை இன்னமும் நீங்க பார்க்கவில்லையா !

      நீக்கு
    2. அங்கிருக்கும் அந்த ஜீவி அவர்களிடம் கேட்கவில்லை.  வேறு இருவரிடம் கேட்டேன்.  பதிலே இல்லை.  என்ன சொல்ல!

      நீக்கு
    3. வேறு இரு ஜீவிகள் என்று அர்த்தமாகிறதோ?

      நீக்கு
    4. ஸ்ரீராம், எனக்கு நீங்க வேறே யார் கிட்டேக் கேட்டீங்கனு தெரியலை. நான் சொல்லும் ஜீவி கொஞ்சம் பரிச்சயம் தான். இன்னொரு முறை பார்க்க நேர்ந்தால் கேட்டுப் பார்க்கலாம்.

      நீக்கு
    5. @ஸ்ரீராம், நான் சொன்ன ஜீவியை tag செய்து உங்களை அழைத்திருதேன். நீங்கள் பார்க்கவில்லை.

      நீக்கு
    6. இன்னிக்கு அந்த ஜீவி ஒரு கதை எழுதி இருக்கார். ஆனால் ரொம்ப ரொம்ப சுமார் ரகம். அதிலே விளக்கம் கொடுத்துட்டு இந்தப் பதிவின் சுட்டியையும் கொடுத்திருக்கேன். அநேகமா ஒத்துக்கொள்ள மாட்டார்னு நினைக்கிறேன்.

      நீக்கு
    7. ஆஆ ஐ அம் கியூரியஸ் :)) ஹாஹாஆ 

      நீக்கு
    8. நான் நினைச்ச/சொன்ன மாதிரியே அந்த "ஜீவி" நேரம் இல்லைனு சொல்லிட்டார்! :)))))

      நீக்கு
  6. எழுந்திருங்கப்பா எல்லோரும்! மணி ஆறரை ஆயிடுச்சு! இன்னும் என்ன தூக்கம்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆறு பத்து கருத்துரையை இன்னமும் நீங்க பார்க்கவில்லையா !

      நீக்கு
    2. "ஆறு பத்து" கருத்துரை கூட இன்னும் அபிப்ராயம் சொல்லவில்லை!

      நீக்கு
    3. நான் 6-10 கருத்துரையைப் பார்க்கிறச்சே ஆறரை ஆயிடுச்சு! :(

      நீக்கு
  7. அட? கில்லர்ஜி? எனக்கு முன்னாடி? ஙே!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

    பதிலளிநீக்கு
  8. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  9. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
    எல்லா நாட்களுக்கும் நல்ல நாட்களும்
    ஆரோக்கியமும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  10. அன்பு கீதாவுக்கும், அன்பு தேவ கோட்டைஜிக்கும்,
    நல்ல கதையை அளித்திருக்கும் ஸ்ரீராமுக்கும்
    வாழ்த்துகள்.

    திரு புதுக்கோட்டை வைத்யனாதன் அவர்களின் எழுத்து
    பிரமிக்க வைக்கிறது.
    இப்படிக்கூட இருப்பார்களா என்று அதிசயம். நான் சொல்வது அந்தப் பாடகரைப்
    பற்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாடகன், பாடகி , கச்சேரி என்றதும் எனக்கு நம் ஜீவி ஸாரின் பழைய கதை ஒன்று நினைவுக்கு வந்தது!

      நீக்கு
    2. நினைவில் கொண்டதற்கும் அந்த 'நம்'க்கும் நன்றி ஸ்ரீராம்!/.

      நீக்கு
    3. இதெல்லாம் போக, வழக்கமான உங்கள் கதை அலசலுக்காக காத்திருக்கிறோம் ஜீவி ஸார்.

      நீக்கு
    4. பின்னால் வருகிறேன், ஸ்ரீராம்.

      நீக்கு
    5. மத்யமரில் ஆரம்பித்த நாளில் இருந்தே நான் இருந்தாலும் அங்கே மும்முரமாக எதுவும் எழுதுவது இல்லை. இந்த மாதிரித் தேர்ந்தெடுத்த சிலரின் கதைகளை வாசித்துவிட்டுக் கருத்துச் சொல்லுவேன். பலரும் மிக நன்றாக எழுதுகிறார்கள்.

      நீக்கு
    6. //கொஞ்சம் சுதந்திரமாக டேப் ரெக்கார்டரிலும் கேட்க ஆரம்பித்தாள் .//

      இது போன்ற வரியை வாசித்த கணத்தில், இது எந்தக் காலத்துக் கதை என்று வழக்கமாக கேட்பவர்கள் இன்னும் வரவில்லை போலும்.

      நீக்கு
    7. இப்படிக்கூட இருப்பார்களா என்று கேட்டிருக்கிறீர்கள். அந்தக் காலத்தில் பல புகழ் பெற்ற பாடகர்களின் அந்தரங்க வாழ்வைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டதில்லை என்றே தோன்றுகிறது. இப்போதும் தொடர்கிறது. காலங்கள் மாறலாம், கலைஞர்கள் மாறுவதில்லை. அதீதக் கல்பனா சக்தியும் , நுணுக்கமான ரசிப்பும் , இந்த வக்கிர புத்தியை இலவச இணைப்பாகக் கொண்டு வந்து விடுகிறோதோ ?

      உங்கள் பாராட்டுக்கு நன்றி.

      நீக்கு
  11. பக்கத்து வீட்டு மாமி அழைப்பது, கச்சேரிக்குப் போவது எல்லாம்
    சென்னையில் சகஜமே.
    மிக சிறப்பாகக் கதையின் உச்சத்தைத் தொட்டுத் திருப்பி இருக்கிறார்.

    ஆனால் இது போல நடக்கலாம் என்று தோன்றியதைச் சொல்ல வேண்டும்.

    ஆனாலும் மிக நல்லவனாக இருக்கிறான்.
    அருமையான கதை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது போல் நிறையவே நடந்திருக்கு வல்லி! புதுசெல்லாம் இல்லை. என்றாலும் திரு வைத்யநாதன் சொல்லி இருக்கும் பாணியில் கதையை ரசிக்க முடிகிறது. அபிமானப் பாடகர் என்றில்லாவிட்டாலும் கற்றுக்கொள்ளப் போகும் பெண் குழந்தைகளைத் தொந்திரவு செய்யும் சங்கீத ஆசிரியர்கள் பற்றி அந்தக் காலத்திலேயே பேசிக் கொள்வார்கள்.

      நீக்கு
    2. உண்மைதான் கீதாமா.
      அரசல் புரசலாகக் கேள்விப்பட்டதுண்டு.
      வருத்தமாக இருக்கும்.

      நீக்கு
  12. கதைநாயகியின் பாத்திரம் நன்றாகச் சித்தரிக்கப்
    பட்டிருக்கிறது.
    அவளது விருப்பங்கள் அழகாகச் சித்தரித்திருக்கிறார்.

    சாரங்கன் போன்ற பாடகர், இன்னோருவரை நினைவுக்குக்
    கொண்டு வருகிறார்.
    பாவம் கதா நாயகியின் இசை மோகமே முழுதும்
    பாதிக்கப் படாமல்
    அவள் இசையை ரசிக்க வேண்டும்.
    மிக மிக நல்ல கதை ஸ்ரீராம்
    .கதையாசிரியருக்கும் உங்களுக்கும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  13. கதை நன்றாக இருந்தது. காக்காய் பகுதியோட க்ளைமாக்ஸ் முடிந்துவிட்டது. இரண்டாவது க்ளைபாக்ஸுக்கு நீட்டியிருந்தாலும் அதுவும் நன்றாக இருந்தது.

    சில நாட்களுக்குமுன் படித்த பச்சோந்தி, முகமூடி கேள்வி பதில் நினைவுக்கு வந்தது.

    நடந்த நிகழ்ச்சிகளே கதையாக்கத் தூண்டுகின்றன

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம், கதாநாயகி கணவனின் நடத்தையினாலேயே மனம் மாறியதோடு கதையை முடித்திருக்கணும் தான். அதன் பின்னர் கத்தரிக்காய் வரை நீட்டி இருக்க வேண்டாம் தான். அவள் வாயால் சொல்லணும்னு நினைச்சிருப்பார் போல ஆசிரியர்.

      நீக்கு
    2. கௌதமன் சாரின் ஓவியம் வழக்கம்போல் பொருத்தமாக அமைந்துள்ளது.

      நீக்கு
  14. அன்பின் வணக்கம் அனைவருக்கும்...
    நலமே வாழ்க எங்கெங்கும்...

    பதிலளிநீக்கு
  15. புதுக்கோட்டை வைத்திய நாதன் அவர்களுக்கு நல்வரவு...

    வருக.. வருக..

    பதிலளிநீக்கு
  16. நல்ல கதை...
    மேலும் பல படைப்புகளுக்கு நல்வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
  17. மற்றுமொரு புதிய கதாசிரியரின் வரவு - எங்கள் பிளாக்-இல். மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    கதை நன்றாக இருக்கிறது. பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

    பதிலளிநீக்கு
  18. நல்ல கதை... புதியவருக்கு வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  19. ரசனை தான் மாறுபட்டது கணவனின் அன்பு மாறுபடவில்லை உண்மையான அன்பை உணர்த்திய விதம் அருமை ரசிக்கும்படியான கதை அன்புடன்

    பதிலளிநீக்கு
  20. நிதானமாக நேராக போகும் கதை. ஒரே ஒரு அதிர்ச்சி நிகழ்வு. நிகழ்வில்லை அது அதிர்ச்சி வைத்தியம் என்றால் எதற்காக அந்த வைத்தியம், அதுவும் வாசவிக்குத் தேவைப்பட்டது என்று தெரியவில்லை. வாசவியின் அதீத சங்கீத ஆர்வத்தை முடக்கவா? புருஷன் இல்லாமல் பெண்கள் தனியாக எந்த இடத்திற்கும் போகக்கூடாது என்ற அறிவுறுத்தலுக்கா? இல்லை, போனால் இப்படித் தான் நடக்கும் என்ற எச்சரிக்கையா?.. அப்பாவிகளுக்குத் தான் தண்டனையா என்ற வாசகரின் குமைச்சலுக்கு கதாசிரியர் வழி கண்டிருக்கலாம்.

    எப்படி?.. அந்த சங்கீத வித்வான் சாரங்கனை கதாசிரியர் தண்டித்திருக்க வேண்டும்.
    அதற்கு கதையிலும் ஒரு அருமையான சான்ஸ் வருகிறது.

    //சாரங்கனின் மனைவி ஒரு திருப்தியுடன் நடந்ததையெல்லாம் பார்த்துக்கொண்டிருப்பதையும் கவனிக்காமல் வாசல் கதவைத் திறந்துகொண்டு தெருவுக்கு வந்தாள் .///

    சாரங்கனின் மனைவிக்கு திருப்தியா?.. எதற்கு திருப்தி?.. புருஷன் விரித்த வலையில் வாசவி மாட்டாமல் தப்பித்த திருப்தியா? அப்படியானால் இந்த மாதிரி வலை விரிப்பு அந்த வீட்டில் சங்கீத வித்வானின் மனைவிக்குத் தெரிந்தே அடிக்கடி நடப்பதா? மாடி ஏறி வந்து புருஷனை, "சீ.. நாயே!.." என்று ஏறி மிதித்திருக்க வேண்டாம்?.. வாழ்க்கையில் தான் 'மத்யமர்' குடும்பங்களில் இல்லாமல் போச்சு. ஒரு கதைக்காவது சீறி எழுந்து சுட்டுப் பொசுக்கும் ஒரு பெண் ஜாதியை கதாசிரியர் படைத்திருக்க வேண்டாமா?..

    சுட்டுப் பொசுக்கி விட்டு அப்ரப்ட்டாக கதை அந்த இடத்திலேயே முடிந்திருந்தால் அற்புதமாக இருந்திருக்கும். மத்யமர் கதையாயிற்றே?.. ஆண்கள் ஹாயாக ஜாலியாக இருப்பார்கள், பெண்கள் தான் கூனிக் குறுக வேண்டும் என்பது எழுதப்படாத சட்டம் ஆயிற்றே!..

    வாசவியின் வீட்டிலும் இதான் நடக்கிறது. தன் பெண்மைக்கு நேர்ந்த இழுக்கை சகித்துக் கொள்ள முடியாமல், அந்நியன் தீண்டிய தோள் பிரதேசத்தைப் போர்த்திப் பொங்கிப் பிரவாகமாய் வந்து புருஷன் மடியில் சோர்ந்து விழுகிறாள் வாசகி. கேவிக் கேவி அழுகிறாள். நடந்தைச் சொல்கிறாள். (இந்த இடத்தில் கதாசிரியரின் விவரிப்பு பிரமாதம்..)

    வாசவியின் புருஷனுக்கோ இதிகாச ராமன் கதை வாகாகக் கிடைக்கிறது. "நானாக இருந்திருந்தால், என்ன செய்திருப்பேன், தெரியுமா?" வீராவேசமாய் வீராப்பு நீள்கிறது.
    அடிப்பட்டு வந்திருக்கும் மானிற்கு மருந்தாய் தேன் தடவிய சொற்கள். வெற்றுச் சொற்கள். பட்ட அடி மறக்க, சமப்பட இரண்டு நாளாவது போக வேண்டாமா?

    இரண்டாவது ஹனிமூனின் விட்ட குறையின் தாக்கம் இரவு முடிகிறது.

    பெண் ஜன்மம் என்றால் இதற்கு தான் பிறந்திருக்கிறார்கள் போலிருக்கு.


    ' ஆனாலும் , வாசி ,இன்னிக்கு நடந்ததுக்கெல்லாம் நீதான் காரணம் '.
    வாசவி குழம்பினாள் . 'நானா ? '
    'ஆமாம், உன்னை யார் இவ்வளவு அழகாக இருக்கச் சொன்னது ? ' வாசவிக்குச் சிரிப்பு வந்தது. கோபியின் பிடி இறுகிற்று. மேலும் இறுகிற்று.



    பதிலளிநீக்கு
  21. ஜீவி சார்...மிக அற்புதமான கண்ணோட்டம்.

    இதுவும் அந்தக் ஆலமாகத் தான் இருந்திருக்க வேண்டும்.
    காணும் நமக்கே அந்த முகத்தில் அறையும் அளவு கோபம் வருகிறது.

    எழுத்தாளரை மதிப்பிட இன்னோரு அனுபமிக்க எழுத்தாளர் வரவேண்டும்.
    இல்லாவிட்டால் புது சிந்தனை, ஆய்வு கிடைப்பது சிரமம்.

    நன்றி சார்.
    திரு வைத்திய நாதன் அவர்கள் மனம் கவரும்படி எழுதி இருக்கிறார்.
    இனி பெண்கள் மனம் மாறும் காட்சிகள்,கதைகள்
    வர வேண்டும்.

    பதிலளிநீக்கு
  22. கடத்தப்பட்ட எழுத்தாளரின் எழுத்துக்கள் என்னையும் சில நிமிடங்கள் கடத்தி சென்றுவிட்டது. அருமையான கதை தெளிவான நடை.
    எச்சமிடும் காக்கைகள் இன்னும் மிச்சமிருக்கும் சமூகத்தில் எவரிடத்தும் அல்லது எத்தனிடத்திலும் அபரிமிதமான அபிமானம் வைப்பதும் ரசிகர் என்ற வகையில் சிலரை தலைமேல் வைத்து கொண்டாடுவதும் மேடையில் அல்லது திரையில் காண்பவரெல்லாம் கண்கண்ட தெய்வம் என நினைத்து நெருங்கும் தருவாயில் நெருப்பென சுடும் உண்மை தெரியும்போது ......... பேரதிர்ச்சி .

    புதுக்கோட்டை வைத்திய நாதருக்கு பாராட்டுக்கள். அறிமுகம் செய்துவைத்த உங்களுக்கு நன்றிகள்.

    நல்ல படைப்பு நல்ல படிப்பு , சுவையான கத்தரிக்காய்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மையான வார்த்தைகள் திரு கோயில்பிள்ளை அவர்களே! ரசிகர்கள் தங்கள் அபிமானக் கலைஞரைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவதே இவற்றுக்கெல்லாம் காரணம்.

      நீக்கு
  23. அந்த காவிபல்வரிசை  ///காவிப்பற்கள் பாதி தெரிய சிரித்துவிட்டு  // இந்த வரியிலேயே அவர் ஜொள் பார்ட்டி என்பது புரிஞ்சிடுச்சு :))
    கதை நன்றாக இருந்தது எத்தனை பெரிய மனிதருக்கு இத்தனை சிறிய மனது .

    பதிலளிநீக்கு
  24. இக்கதை இந்த காலத்தில் நடக்க சாத்தியங்கள் குறைவு .முக்கியமா வெளிநாட்டில் இப்படி சங்கீதம் படிப்பு சொல்லிக்கொடுக்கும் ஆசைறியர்கள் கட்டாயம் CRB /DBS செக்கிங் செய்தபின்னே இவ்வேலைக்கு அனுமதி வழங்கப்படும் .அதோட இப்போதைய பிள்ளைங்க செம உஷார் உடனே பார்வை வைச்சே கண்டுபிடிசிடுவாங்க :)நாம் பார்க்காத ஜொள்ளு பேர்வழிகள் இல்லை :) முகம் காட்டாமல் வார்த்தையால் பொது இடங்களில் இரட்டை அர்த்தம் தொனிக்க பேசும் ஜொள்ளுகளையும் ஒழிந்து போகட்டும்னு விட்டு தள்ளியிருக்கிறோம் .பெண்களில் இன்னமும் நிறைய விளங்கா மண்டைகள் இருக்காங்க என்பது உண்மை அது அவர்கள் வளர்ந்த வாழ்ந்த வளர்க்கப்பட்ட விதம் யாரையும் சந்தேகிக்க மனம் விடுவதில்லை ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லை ஏஞ்சல், இக்காலம் மட்டுமில்லை, எக்காலத்திலும் நடக்கக் கூடியதே! வெளியே தெரிய வேண்டுமானால் நாள் பிடிக்கும். இக்காலத்திலும் பள்ளிகளில் எத்தனை ஆசிரியப் பெருமக்கள் தங்கள் மாணவிகளைச் சீரழித்து வருகிறார்கள் என்பது செய்திகளாக வந்து கொண்டு தானே இருக்கு! :( ஆண்களாகப் பார்த்துத் திருந்தினால் ஒழிய இதற்கு விடிவு இல்லை.

      நீக்கு
  25. புதுக்கோட்டை வைத்திய நாதன் அவர்கள் கதை நன்றாக இருக்கிறது.
    பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

    பதிலளிநீக்கு
  26. புதுக்கோட்டை வைத்தியநாதனை வரவேற்கிறேன். நல்ல தேர்ந்த நடை. கதையின் போக்கை என்னால் மட்டும்தான் யூகிக்க முடிகிறதா?
    ராமன் சீதையை அக்னி பிரவேசம் செய்யச் சொன்னது தவறு என்று வலியுறுத்த எழுதப்பட்ட கதை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்போ அந்த இடத்தோடு கதையை முடிச்சிருக்கணும் இல்லையா? ஆனால் ராமன் சீதையை அக்னிப்ரவேசம் செய்யச் சொல்லவே இல்லை என்பதை நான் பல முறை வலியுறுத்தி வால்மீகி, கம்பர், துளசிதாசர் ஆகியோரிடமிருந்து ஆதாரங்களையும் காட்டி இருக்கேன். அப்படியே சொல்லி இருந்தாலும் அது அந்தக் கால கட்டத்தில் அரச பதவி வகிப்பவர்களுக்குத் தங்கள் குடிமக்கள் தான் முக்கியம். குடிமக்களின் சந்தேகங்களுக்கு பதில் சொல்ல வேண்டியது ஓர் நல்ல அரசனின் கடமை! குடும்பம் அப்புறம். நாடும், மக்களுமே முன்னுக்கு வருவார்கள். இதைப் புரிந்து கொண்டால் சீதையின் அக்னிப்ரவேசம் தவறாய்த் தோன்றாது. எதையும் அந்தக் கால கட்டத்தோடு பொருத்திப் பார்க்க வேண்டும்.

      நீக்கு
  27. வணக்கம் சகோதரரே

    இன்றைய செவ்வாய் கதை பகுதியில் அருமையான கதை. சுவை குன்றா நடையில் அடுத்தது என்னவோ என்ற தவிப்பில், புதுக்கோட்டை திரு. வைத்தியநாதன் அவர்கள் மிக அற்புதமாக கதையை நகர்த்தியுள்ளார். அவருக்கு என் பாராட்டுகளும் வாழ்த்துக்களும். பகிர்வுக்கும் மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  28. ரசித்த அன்பர்கள் பலருக்கும் நன்றி.எப்படி எழுதினாலும் , சில கருத்துக்களில் வேற்றுமை, அமைப்பில், முடிவில், பிடித்தது, பிடிக்காதது என்ற இரண்டுமே இருக்கத்தான் செய்யும். மெது வடையில் மிளகாக
    அவற்றையும் நான் ரசிக்கிறேன் . ஜீவி அவர்கள் சொன்னதுபோல் , அல்லது விரும்புவதுபோல் , சாரங்கனின் மனைவி ஒரு தைரியம் நிறைந்த புதுமைப் பெண் இல்லை.இந்தக் காலத்திலும் பல நடுத்தர வயதுப் பெண்கள் வாயில்லா ஜீவன்கள்தான். வாசவியின் வயது எவ்வளவு இருக்கும் என்று கணிக்கத் துப்புகள் கதையிலேயே உண்டு. அதனால் எந்தக் காலத்துப் பெண் இப்படிப் பதைபதைத்திருப்பாள் என்று கேட்க வேண்டாம். ஆனால் இன்றும் இப்படியெல்லாம் நடக்கிறது.

    பதிலளிநீக்கு
  29. சரியே..
    யதார்த்த சூழலைப் படம் பிடித்துக் காட்டிய திறமையில் இந்தக் கதை
    வெற்றி பெற்றிருக்கிறது என்பதைக் குறிப்பிட்டே ஆக வேண்டும்.
    சமூக சூழல்களின் அவல நிலைகளுக்கு எதிர்த்துத் தான் குரல் கொடுக்க வேண்டும் என்றில்லை. ஆக்க பூர்வமான முயற்சிகளாய் இப்படியான விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் ஏற்றுக் கொள்ளத் தக்க ஒரு வழியே.
    மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.
    இந்தப் பகுதியில் உங்கள் படைப்புகளை எங்கள் வாசிப்புக்கு. அடிக்கடி நீங்கள் தர வேண்டும் என்று விருப்பம் கொள்கிறேன். நன்றி, நண்பரே!

    பதிலளிநீக்கு
  30. நன்றி, ஜீவி, செய்யலாம், நாம் பலரும் .

    பதிலளிநீக்கு
  31. ஊர் கூடி தேரிழுப்போம். நன்றி.

    பதிலளிநீக்கு
  32. நல்ல கதை. கதை கதையாம் காரணமாம். காரணத்தில் தோரணமாம். பெண்கள் எல்லா காலங்களிலும் " innocent " ஆக இருப்பது ஆபத்தே. அனைவரையும் தவறாகவும் நினைக்க வேண்டாம். மிக நல்லவராக்கவும் கருத வேண்டாம். தனித்து எங்கும் தேவையில்லாமல் செல்லாதிருப்பதே உத்தமம் என்பதே, இக்கதை உணர்த்தும் பாடமோ?

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!