சனி, 12 நவம்பர், 2022

இலவச சிகிச்சை மற்றும் நான் படிச்ச கதை

 

'சோலார்' மின்சக்தி உற்பத்தியால் ரூ.34 ஆயிரம் கோடி சேமிப்பு...: 

  புதுடெல்லி: கடந்த ஜனவரி முதல் ஜூன் வரையிலான 6 மாதங்களில் சூரிய மின் உற்பத்தி காரணமாக இந்தியா தனது எரிபொருள் செலவில் ரூ.34,328 கோடியை மிச்சப்படுத்தி இருப்பதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

எரிசக்தி மற்றும் தூய காற்று குறித்த ஆய்வு மையமான எம்பெர்-கிளைமெட் எனும் அமைப்பு, இது தொடர்பாக வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் சூரிய மின் உற்பத்தி அதிகரித்துள்ளது. சூரிய மின் உற்பத்தியில் முதல் 10 இடங்களில் உள்ள நாடுகளில் 5 நாடுகள் ஆசிய கண்டத்தில் உள்ளன.

சீனா, ஜப்பான், இந்தியா, தென் கொரியா, வியட்நாம் ஆகிய நாடுகளே அந்த 5 நாடுகள். இவை மட்டுமின்றி, பிலிப்பைன்ஸ் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளும் சூரிய மின் உற்பத்தியில் அதிக கவனம் செலுத்தி வருகின்றன. கடந்த ஜனவரி முதல் ஜூன் வரையிலான 6 மாத காலத்தில் இந்த 7 நாடுகளும் சேர்த்து ரூ. 2.79 லட்சம் கோடிக்கு எரிபொருள் இறக்குமதியை தவிர்த்துள்ளன. மொத்த எரிபொருள் இறக்குமதியில் இது 9 சதவீதம்.

இந்த 6 மாத காலத்தில் எரிபொருளுக்கான செலவில் ரூ. 34,328 கோடியை இந்தியா மிச்சப்படுத்தி உள்ளது. 1.94 கோடி டன் நிலக்கரி, மின்உற்பத்திக்காக பயன்படுத்தப்படுவது தவிர்க்கப்பட்டுள்ளது. சூரிய மின் உற்பத்தி காரணமாக எரிபொருள் செலவை அதிக அளவில் மிச்சப்படுத்தி உள்ள நாடு சீனா. இது தனது மொத்த மின் உற்பத்தியில் 5 சதவீதம் அளவுக்கு சூரிய மின் உற்பத்தியை கொண்டுள்ளது. இதன்மூலம் $21 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான நிலக்கரி மற்றும் இயற்கை எரிவாயு பயன்பாட்டை அது தவிர்த்துள்ளது.

சீனாவுக்கு அடுத்த இடத்தில் சூரிய மின் உற்பத்தியில் ஜப்பான் சிறந்து விளங்குகிறது. இது இந்த 6 மாதத்தில், $21 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான நிலக்கரி மற்றும் இயற்கை எரிவாயு பயன்பாட்டை அது தவிர்த்துள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

= = = = = ===============================================================================

08047104600

இது என்ன எண் ?

நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்களுக்கு வாழ்க்கையில் உடல்நலக் கேடுகள் வரும்போது....

வைத்திய செலவு, ஆபரேசன் அதுஇது என்று செலவு பல லட்சம் ஆகும் என்ற நிலை வரும்போது தலை சுற்றி, கண் கலங்கி, கடவுளே எங்களுக்கு ஏன் இந்த சோதனை ? என்று குழம்பாமல் பெங்களூர் ஸ்ரீ சத்யா சாய் பொது மருத்துவமனை, ஒயிட் பீல்டு எண்ணுக்கு கால் செய்தால், முதலில் கம்ப்யூட்டர் வாய்சில் உங்கள் எண் பதிவாகி விடும்.

அடுத்து அவர்களே கால் செய்து நமது விருப்ப மொழியிலேயே என்ன உடல்நலக் குறைபாடு, அதன் சம்பந்தமான டெஸ்ட் ரிப்போர்ட் என்ன உள்ளது என்பதை கேட்டு, அங்குள்ள வரிசைப்படி உங்களுக்கு அப்பாயின்ட்மென்ட் தருவார்கள்.

உங்கள் எண்ணுக்கு எஸ்எம்எஸ் தகவல் வரும்.

அந்த விபரப்படி அந்த தேதி முதல் உங்களுக்குத் தேவையான மருத்துவம் ஆலோசனை, மற்றும் அறிவுரைகள் கிடைக்கும்.  ஒரு பைசா செலவில்லாமல் சிகிச்சை. ஆபரேசன் தேவையென்றால் அட்மிஷன் செய்து தக்க வைத்தியம் செய்யப்படும். நோயாளிக்கு மட்டும் உணவு மருந்து அனைத்து வசதிகளும் அவர்களே இலவசமாக நல்ல தரத்தில் செய்வார்கள்.  நோயாளியுடன் ஒரு அட்டண்டரை மட்டுமே கேட்டில் அனுமதிப்பார்கள். 

இது மருத்துவமனை அல்ல. கோவில்.  இதனுள் நமக்கு அட்மிஷன் கிடைத்துவிட்டால் அவர்களுக்கு மறுபிறவி இல்லை.  மற்றுமொரு விஷயம். இதன் அருமைகளை அதிகமாக வங்கதேசம் ஒரிசா கல்கத்தா நேபாள் பீகார் என்று... வரப் போக 10 தினம் ஆகும் தூரத்திலிருந்து வந்து பயனடைபவர்களே அதிகம்.

நம் பக்க மாநிலங்களான தமிழ்நாடு கேரளா ஆந்திரா ஏன் ? கர்நாடகாவின் வெறும் 5 சதவிகித மக்களே இந்த பயன் பெறுகிறார்கள்.  எனவே இதைப் பார்க்கும் நம் அன்பர்கள் இத்தகவலை தங்கள் குழுவில் பகிரவும். உங்களால் பலரும் அதைப் பார்த்து பயன் அடைந்தால் அது நீங்கள் அவர்களுக்கு செய்யும் பெரிய உதவி. நாம் பிறருக்கு பணம் காசு கொடுப்பது மட்டுமே உதவி அல்ல. இதுபோன்ற உண்மையான நல்ல விசயங்களை பகிர்வதும் புண்ணியமே. நல்லதே நடக்கும். முயற்சிப்போம் . வாழ்க வளமுடன் நன்றி சாய்ராம். [நன்றி ஜெயக்குமார் சந்திரசேகர் சார்]

=======================================================================================================


பூமியை நெருங்கும் விண்கல்கள், குறுங்கோள்களை கண்காணித்து எச்சரிக்கை விடுக்க தனி அமைப்பை நாசா உருவாக்கியுள்ளது. அந்த அமைப்பு நெருங்கும் விண்கல்கள் மீது மோதி அவற்றை திசை திருப்பவும், அழிக்கவும் தனி விண்கலங்களையும் அனுப்பி வருகிறது.

பூமியிலிருந்து 68 லட்சம் மைல்கள் துாரத்தில் டிமார்பாஸ் என்ற விண்கல் சுற்றி வந்தது. 525 அடி அளவில் 2500 அடி அகலம் கொண்ட இதை தாக்கி பாதையை திசை திருப்ப நாசா திட்டமிட்டது.

அதன்படி வினாடிக்கு 15,000 மைல் வேகத்தில் அதன் மீது மோத டார்ட் என்ற விண்கலத்தை அனுப்பியது. அது சரியாக மோதியது. அதிலிருந்து லிசியாகியூப் செயற்கைக்கோள் பிரிந்து இந்த மோதல் சேதங்களை படம் பிடித்தது.  விண்கல்லின் சுற்றுப்பாதை 32 நிமிடங்கள் மாற்றியமைக்கப்பட்டு, திசை திருப்பப்பட்டதாக, நாசா தெரிவித்துள்ளது.

============================================================================================================================================================================================================================================================================================================================

 

நான் படிச்ச கதை (jk)

விடியுமா - கு.-ராஜகோபாலன். (கு--ரா)


இந்த வாரம் வாசிப்பனுபவத்தில் கு--ரா அவர்களின் ஒரு சிறந்த சிறுகதைவிடியுமாஎன்பதைப் பற்றி பார்க்கலாம். பி வாசகர்கள் பலரும் இக்கதையை வாசித்திருப்பார்கள். ஆகவே பதிவு நீளம் கருதி கதையை முழுதும் தராமல் சுருக்கத்தை மட்டுமே தந்துள்ளேன். கூகிள் தேடலில் முழுக்கதையை பிரசுரித்த தளங்கள் பல கிடைத்தன என்றாலும் நான்கு  தளங்களின் சுட்டிகளை மாத்திரம் கீழே தந்துள்ளேன். வழக்கம் போல கதைச்சுருக்கம் ஆசிரியர் வார்த்தைகளாலேயே கொடுக்கப்பட்டுள்ளது.

சுட்டிகள்:

விடியுமா-nadappu-blog

அழியாச்சுடர்கள்

விடியுமா-wikisource

விடியுமா-sirukathaikal.com

Youtube சுட்டி

முன்னுரை.

 இந்தக் கதையின் நிகழ்வுகள் என்னுடைய வாழ்விலும் அப்படியே நடந்தது தான். என் அம்மாவின் எதிர்பாராத மரணம், அப்பாவின் எதிர்பார்த்த மரணம்.

விடியுமா?


கதையாசிரியர்: கு..ராஜகோபாலன்

கதைச் சருக்கம்.

தந்தியைக் கண்டு எல்லோரும் இடிந்து உட்கார்ந்துபோனோம். அதில் கண்டிருந்த விஷயம் எங்களுக்கு அர்த்தமே ஆகவில்லை போல் இருந்தது.

சிவராமையர்டேஞ்சரஸ்-’ என்ற இரண்டு வார்த்தைகளே இருந்தன. தந்தி சென்னை ஜெனரல் ஆஸ்பத்திரியிலிருந்து வந்திருந்தது.

என் தமக்கை இரண்டு மாதங்களுக்கு முன்புதான் சென்னையிலிருந்து வந்தாள். அப்பொழுது எங்கள் அத்திம்பேர் நன்றாகக் குணமடைந்து விட்டார். க்ஷயத்தின் சின்னம் கொஞ்சம்கூட இல்லையென்று பிரபல வைத்தியர்கள் நிச்சயமாகச் சொல்லிவிட்டார்கள்.

ஓங்கித் தலையில் அடித்ததுபோலக் குஞ்சம்மாள் பிரமை தட்டிப் போய் உட்கார்ந்திருந்தாள்.

எங்கள் எல்லோருடைய மனத்திலும் ஒரு பெருத்த போர் நடந்து கொண்டிருந்தது. ‘இருக்காது!’, ’ஏன் இருக்கக்கூடாது? இருக்கும்என்று இரண்டு விதமாக மனதில் எண்ணங்கள் உதித்துக் கொண்டிருந்தன. ‘இருக்கும்!’ என்ற கட்சி, தந்தியின் பலத்தில் வேரூன்றி வலுக்க வலுக்க, ‘இருக்காது!’ என்ற கட்சி மூலைமுடுக்குகளிலெல்லாம் ஓடிப்பாய்ந்து தனக்குப் பலம் தேட ஆரம்பித்தது.

தந்தியில் கண்டிருந்ததைத் திரும்பத் திரும்பப் படித்தோம். அதில் ஒன்றும் பிசகு இருக்கவே முடியாது. சென்னை ஜெனரல் ஆஸ்பத்திரியிலிருந்துதான் வந்திருந்தது. சந்தேகமில்லை. காலையில் அடித்திருக்கிறார்கள். குஞ்சம்மாள் பேருக்குத்தான்! தவறு எப்படி நேர்ந்திருக்க முடியும்?

ஆனால், இவ்வளவு சீக்கிரத்தில் என்ன நேர்ந்திருக்க முடியும்? மூன்று நாட்களுக்கு முன்புதானே கடிதம் வந்தத ஏதாவது உடம்பு சௌகரியமில்லாமல் இருந்தால் அதில் எழுதாமல் இருப்பாரோ?

என் தமக்கையும் நானும் சாயந்தரம் ரெயிலில் சென்னைக்குப் புறப்பட்டோம். அதுதான் அன்று கும்பகோணத்திலிருந்து சென்னைக்குப்  போகும் முதல்வண்டி.

அவள் கதிகலங்கிப் போயிருந்தாள் என்பது அவள் பேச்சற்றுப் போயிருந்ததிலிருந்தே நன்றாகத் தெரிந்தது. அவளுடைய கலகலப்பு, முதல் தடவையாக அன்று, எங்கோ அடங்கிவிட்டது.

ஒண்ணும் இருக்காது! நமக்கேன் அப்படியெல்லாம் வரது? நாம் ஒருத்தருக்கு ஒண்ணும் கெடுதல் எண்ணல்லேஎன்றெல்லாம், அம்மா அடிக்கடி தன்னையும் பிறரையும் சமாதானம் செய்து கொண்டிருந்தாள்.

ரெயில் ஏறுகிறபோது மணி சுமார் எட்டு இருக்கும். இரவு பூராவும் போயாக வேண்டுமே என்று துடித்தோம்.

நீ புறப்படுகிறபோது ஒன்றுமேஇல்லையே, அக்கா?’ என்றேன், ஏதாவது பேச்சுக் கொடுக்க வேண்டும் என்று.

ஒண்ணுமில்லையே! இருந்தால் புறப்பட்டு வருவேனா?’ என்று அவள் ஏக்கம் நிறைந்த குரலில் பதில் சொன்னாள்.

அதற்குள் திடீரென்று ஒன்றும் ஏற்படுவதற்குக் காரணமே இல்லையே!’

எது எப்படியானாலும், மனசைச் சில மணி நேரங்களாவது ஏமாற்றித் தத்தளிப்பைக் கொஞ்சம் குறைத்துக் கொள்ளலாம் என்று நினைத்தது போலப் பேச்சு வெளிவந்தது.

நீ வேண்டுமானால் பாரேன்! எழும்பூர் ஸ்டேஷனில் வந்து இருக்கப் போகிறார்என்றேன்.

மனத்தில், ஆழத்தில் பீதி அதுபாட்டிற்குப் புழுப்போலத் துளைத்துக்கொண்டே இருந்தது. மேலே மட்டும் சமாதானம் கொஞ்ச நேரத்திற்கு ஒரு தரம் அந்தத் திகில் மேல்மட்டத்திற்கு வந்து தலையெடுக்கும்; உடம்பு பதறும்; நெஞ்சு உலரும்; அடிவயிறு கலங்கும்; முகம் விகாரமடையும். மறுபடியும் மெதுவாகச் சமாதானத்தின் பலம் அதிகமாகும்; பயத்தைக் கீழே அமுக்கிவிடும்.

சுகமோ துக்கமோ எந்த நிலைமையிலும் நீடிக்க முடியாது என்பதற்கு மனித சுபாவத்தில் இதுவும் ஓர் அத்தாட்சியோ?

ரெயில் வண்டி வெறி பிடித்ததுபோல் தலைதெறிக்க ஓடிக்கொண்டிருந்தது; எங்கேயோ சென்னையில் விடியப்போகும் ஒரு காலையை நோக்கிக் கனவேகமாகப் போய்க் கொண்டிருந்ததுபோல் இருந்தது.

துக்கத்தில் தலையெடுக்கும் தைரியம்போல தொலை இருளில் அந்த ஒளித்தொடர் விரைந்து சென்று கொண்டிருந்தது.

குஞ்சம்மாள் மூட்டையிலிருந்து வெற்றிலை பாக்கை எடுத்து எனக்குக் கொடுத்துத் தானும் போட்டுக் கொண்டாள்.

சோர்வில்தான் சௌந்தரியம் பரிமளிக்குமோ? அல்லது-? கடைசியாக, அணைவதற்கு முன்னால், விளக்கு-? இல்லை! இல்லை!

குஞ்சம்மாள் அன்று என்னவோ அப்படி இருந்தாள்.

வெற்றிலையைப் பாதி மென்றுகொண்டே, ‘அம்பி, ஒங்க அத்திம்பேருக்கு வாக்கப்பட்டு நான் என்ன சுகத்தைக் கண்டேன்?’ என்றாள் குஞ்சம்மாள்.

அவளுடைய கண்களில் ஜலம் மளமளவென்று பெருகிற்று.

என்னிக்கும் பிடிவாதம், என்னிக்கும் சண்டை, நான் அழாத நாள் உண்டா? – என் வாழ்வே அழுகையாக-’ என்று உணர்ச்சி வேகத்தில் ஆரம்பித்தவள் சட்டென்று நிறுத்திக்கொண்டாள்.

எதிலாவது நான் சொன்ன பேச்சைக் கேட்டது உண்டா? எப்படியோ ஆயுசுடன் இருந்தால் போதுமென்று தோன்றிவிட்டது, போனதடவை உடம்புக்கு வந்தபோது!’

இருவரும் வெகுநேரம் மௌனமாக இருந்தோம். ஆனால் மனசு மட்டும் மௌனமாக இருக்கவில்லை.

நடு நிசிவேளை. வண்டியில் ஜனங்கள் உட்கார்ந்து கொண்டும் படுத்துக் கொண்டும் அநேக தினுசாகத் தூங்கிக் கொண்டிருந்தார்கள்.

வண்டி போன வேகத்தில் விர்ரென்று அடித்த காற்றிலும் அவளுடைய முகத்தில் வியர்வை தென்பட்டது.

ஆனால் எவ்வளவு நேரந்தான் கவலைப்பட முடியும்? கவலையால் ஏற்பட்ட அசதியிலேயே எங்களை அறியாமல் கண்ணயர்ந்தோம்.

துக்கத்தில், நித்திரையும் நினைவு மறதியும் சேர்ந்துதான் வாழ்க்கைக்கு ஒரு சிறு போதையாகித் தாபத்தைத் தணிக்கின்றனவோ?

வண்டி செங்கற்பட்டை நெருங்குகிற சமயம். வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்து உட்கார்ந்தோம். கிழக்கு வெளுத்துக்கொண்டிருந்தது. வண்டி ஏதோ ஒரு குக்கிராமத்தைக் கடந்து போய்க் கொண்டிருந்தபொழுது கோழி கூவியதுகூடக் காதில் வந்துபட்டது.

அப்பா! விடியுமா?’ என்கிற நினைப்பு ஒருபக்கம்.

ஐயோ! விடிகிறதே! இன்னிக்கி என்ன வச்சிருக்கோ!’ என்ற நினைப்பு மற்றொரு பக்கம்.

இரவின் இருட்டு அளித்திருந்த ஆறுதலைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தலைகாட்டிய வெளிச்சம் பறிக்க வருவதுபோல் இருந்தது.

எங்கேயோ, கண்காணாத தூரத்தில் உருவடைந்த ஒரு காட்சியில் ஈடுபட்டவளாய் நிலைகுத்திய பார்வையுடன் குஞ்சம்மாள் அசையாமல் உட்கார்ந்திருந்தாள்.

செங்கற்பட்டில் பல் தேய்த்துக்கொண்டு காபி சாப்பிடுவோமா?’ என்று கேட்டேன்.

எல்லாம் பட்டணத்தில்தான்!’ என்று சொல்லிவிட்டாள் குஞ்சம்மாள். பக்கத்தில் நகரத்தார் பெண் கவலையற்றுத் தூங்கிக் கொண்டிருந்தாள்.

இதோ ஆயிற்று, இதோ ஆயிற்று!’ என்று சொல்வதுபோல வண்டி தாவிப் பறந்து கொண்டிருந்தது.

ஆனால் எங்களுக்கு என்னவோ பட்டணம் நெருங்க நெருங்க, வண்டி வேண்டுமென்றே ஊர்வதுபோல இருந்தது.

எழும்பூர் வந்தது கடைசியாக.

ஸ்டேஷனில் யாருமில்லை; அதாவது எங்கள் அத்திம்பேர் இல்லைஎல்லோரும் இருந்தார்கள். ‘ஆனால் அவர் ஸ்டேஷனுக்கு எதற்காக வரவேண்டும்? அங்கே எதிர்பார்ப்பது சரியில்லைதான்என்று அப்பொழுது தோன்றிற்று.

வீட்டுக்குப் போனோம். வீடு பூட்டியிருந்தது.

உடம்பு சௌகரியமில்லைதான்! சந்தேகமில்லை இப்பொழுது!

ஜெனரல் ஆஸ்பத்திரிக்குப் போனோம். அரைமணி நேரம் துடித்த பிறகு குமாஸ்தா வந்தார்.

நீங்கள் கும்பகோணமா?’ என்றார்.

ஆமாம்-’ என்றேன்.

நோயாளிநேற்றிரவுஇறந்துபோய்விட்டார்என்று குமாஸ்தா சாவதானமாகச் சொன்னார்.

இறந்து-? அது எப்படி? அதற்குள்ளா?’ அப்பொழுதும் சந்தேகமும் அவநம்பிக்கையும் விடவில்லை.

சிவராமையர்-?’

ஆமாம், ஸார்!’

ஒருவேளை-’

சற்று இருங்கள். பிரேதத்தைப் பெற்றுக் கொள்ளலாம்என்று சுருக்கமாகச் சொல்லிவிட்டுக் குமாஸ்தா தம் ஜோலியைக் கவனிக்கப் போனார்.

கொஞ்சநேரம் கழித்துப் பிரேதத்தைப் பெற்றுக் கொண்டோம்பின்னுரை,

அப்பொழுது, அதைப் பார்த்தவுடன், நிச்சயமாயிற்று!

ஒருவழியாக மனத்திலிருந்த பயம் தீர்ந்தது; திகில் தீர்ந்தது.

பிறகு-?

விடிந்துவிட்டது.

பின்னுரை

//‘அப்பா! விடியுமா?’ என்கிற நினைப்பு ஒருபக்கம்.

ஐயோ! விடிகிறதே! இன்னிக்கி என்ன வச்சிருக்கோ!’ என்ற நினைப்பு மற்றொரு பக்கம்.//

 புதுக்கவிதையின் தந்தை கு..ரா இந்த இரண்டு வரிகளில் கதையின் சாராம்சத்தை எடுத்து கூறுகிறார். மேம்போக்காக படிப்பவர்களுக்கு விடியுமா என்ற தலைப்பிற்கும்  கதைக்கும்  என்ன சம்பந்தம் என்று கேட்கத் தோன்றும்.

விடியுமா என்ற கேள்வியை கேட்கும் முறையில் தான் அதனுடைய முழு அர்த்தத்தையும் வெளிக் கொண்டு வர முடியும். தொனி முக்கியம். இரண்டு உதாரணங்களைக் கூறுகிறேன்.

கல்யாண வயதுப் பெண். கரை ஏற்ற வேண்டும். பல வரன்கள் வந்து பார்த்தும் ஒன்றும் அமையவில்லை. தற்போது ஒரு வரன் வந்திருக்கிறது. அது நல்ல  முடிவு தருமா? அவள் வாழ்க்கை விடியுமா?

இளைஞன். பல இடங்களிலும் வேலைக்கு இன்டெர்வியூவுக்கு சென்று வேலை கிடைக்காமல் இருப்பவன். இன்று ஒரு இன்டர்வ்யூக்கு செல்கிறான். இத்தவணை அவனது முயற்சி பலிக்குமா? அவனது வாழ்க்கை விடியுமா?

இங்ஙனம்விடியுமாஎன்ற கேள்வி நல்லதே நடக்கும் என்ற எதிர்பார்ப்பில் கேட்கப்படுகிறது. இந்தக்கதையிலும் அவ்வாறே.

அதே சமயம்விடிஞ்சதுஎன்ற முடிவுச் சொல் இரன்டு வகைகளில் அர்த்தம் கொள்ள வைக்கிறது. ஒன்று எதிர்மறை. மற்றது நேர்மறை.

மேலே சொன்ன உதாரணங்களில் இரண்டு கேள்விகளுக்கும்விடிஞ்சதுஎன்ற பதில் சொல்ல முடியும். அது நேர்மறை. நல்ல முடிவுச் சொல். எதிர்பார்ப்பு பூர்த்தியானதில் திருப்தி.

விடிஞ்சதுஎன்பது எதிர் முறையாகவும் அர்த்தம் கொள்ள வைக்கும். எதிர்பார்த்த செயல் தவறும்போதுவிடிஞ்சதுஎன்று கூறவைப்பது உண்டு.

உதாரணமாக மருமகளிடம் எண்ணெய் குப்பியை கொண்டு வர சொன்ன மாமியார் முன் மருமகள் கையில் இருந்த குப்பி கீழே விழுந்தால் மாமியார் வாயில் இருந்து வரும் வார்த்தைவிடிஞ்சது” “ “உன்கிட்டே போய் சொன்னேனே.” என்ற வசனம் எதிர்மறை ஏமாற்றத்தை பிரதி பலிக்கும்.

கடைசியில் விடிஞ்சது என்னமோ சரிதான். விடியல் தவிர்க்க முடியாதது. ஆனால் அந்த விடியல் நல்ல விடியலா? அல்லது கெட்ட விடியலா என்பதை நிகழ்வு தான் தீர்ப்பளிக்கும். ஆசிரியர் இரண்டு விதமாகவும் கதையை முடித்திருக்கலாம். எப்படி முடித்தாலும் முடிவு சரியாக இருக்கும்.

ஒரு கதையைச் சொல்ல ஆரம்பிக்கும் போது முதல் வரியிலேயே இழுத்துப் பிடித்துவிட வேண்டும் என்று சொல்வார்கள். அந்த முதல் வரிதான் கடைசி வரி வரைக்கும் இழுத்துக் கொண்டே வர வேண்டும். முடிவு என்னவாக இருக்கும் என்று வாசிக்கிறவன் யோசித்துக் கொண்டேயிருக்க வேண்டும். இப்படியும் இருக்கலாம் அப்படியும் இருக்கலாம் என்று அசைக்காட்டியபடியே கடைசி வரைக்கும் கொண்டு வந்து நிறுத்தி தன் இஷ்டத்துக்கு முடிவை எழுதிவிட்டு போய்விட வேண்டும். சிறுகதைக்கு இது மிகச் சிறந்த ஃபார்முலா. இதற்கு அப்படியே பொருந்துகிற ஒரு கதையை உதாரணம் காட்டச் சொன்னால் கு..ராவின் விடியுமா?’வைக் காட்டலாம். ‘சிறுகதை ஆசான்என்று அவரைச் சும்மாவா சொல்லியிருப்பார்கள்?   ……  நிசப்தம்

எஸ்ரா இந்தக் கதையை 100 சிறந்த கதைகளில் ஒன்றாக தேர்ந்திருக்கிறார்.

கடைசியாக ஒரு  சந்தேகம்.

அடிக்க வராதீங்கோ.  சந்தேகம் இல்லாமல் JK இல்லை.

குஞ்சம்மாவின் கணவரை (சிவராமய்யரை) ஆசுபத்திரியில் சேர்த்தது யார்?

அவர் சீக்கிரமாக செத்துப் போகக்  காரணம் என்ன?

சரி ஆச்சிடேன்ட் கேஸ் என்றாலும் குஞ்சம்மாவின் பிறந்தகத்து விலாசத்தை ஆசுபத்திரியில் தெரிவித்தது யார்?.

ஊசிச் சேர்க்கை.

விடியுமா?

நள்ளிரவில் பெற்றோம்

சுதந்திரம்

இன்னும் விடியவில்லை.

விடிஞ்சது.

புரிஞ்சுதா

 ஆசிரியர் பற்றிய குறிப்பு


கு.. ராஜகோபாலன் (ஜனவரி 1902 - ஏப்ரல் 27, 1944) தமிழ்ச்சிறுகதையின் முன்னோடிகளில் ஒருவர். நாவல், கவிதை, வசன கவிதை, ஓரங்க நாடகம், திறனாய்வு, வாழ்க்கை வரலாறு, கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள் எழுதியுள்ளார். மணிக்கொடி எழுத்தாளர்களில் முக்கியமானவர். ஆண் பெண் உறவை மையமாக்கிய கதைகளை சொற்சிக்கனத்துடனும் வடிவ ஒருமையுடனும் எழுதியவர் என விமர்சகர்களால் கருதப்படுகிறார்…. நன்றி தமிழ் விக்கி

ந.பிச்சமூர்த்தியின் (ஞானப்பால்-லிங்கம்கட்டி) உற்ற நண்பர். அடுத்த வீட்டுக்காரர்.

''கு..ராஜகோபாலனின் கலை அலங்காரங்களுக்கு நேர் எதிரானது. சொல்லும் விதத்தில் பல்வேறு சாத்தியங்களை அவர் சோதனை செய்யவில்லை. ஜாலங்களை முயற்சி செய்யவில்லை. கச்சிதமானமுழுமையான கூறல் முறைக்காகவே முயன்றார். ஆகவே அவருக்குக் கூறப்படும் விஷயம் முக்கியமானதே.

கு. ராஜகோபாலன் தன் இலக்கிய ஆக்கங்கள் மூலம் தொடர்ந்து ஒன்றை சொல்ல முயன்றார் என்றே படுகிறது. அதை மனதின் உள்ளோட்டங்கள் என்று சொல்லலாம். கு. ப ராஜகோபாலன் முயன்றது அதற்காகவே. தன் கதைகள் மூலம் சொல்லாமல் உணர்த்தப்படவேண்டிய விஷயத்தையே அவர் முன்வைத்திருக்கிறார்.''  ------ஜெயமோகன்

13 கருத்துகள்:

  1. நல்ல பகிர்வு. நான் திங்களிலிருந்து நான் வருவேன்

    பதிலளிநீக்கு
  2. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் எவ்விதமான கலக்கங்களும் இல்லாத நல்ல நாளாக அமைய வேண்டுமென இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  3. இது மாதிரியான கதைகளுக்கான அறிமுகத்தையும் கருத்து உருவாக்கத்தையும் நிறுத்தினால் நல்லது.. விடியற்காலை யில் தளத்தைத் திறந்ததும் விடியுமா என்று தலைப்பு.. தளத்தின் வாசகர்கள் அனைவருமே பல்வேறு பிரச்சினைகளில் இருப்பவர்கள்..

    இதயம் மலர்கின்ற விதமான செய்திகள் எல்லாருக்கும் நன்மை தரும்..

    ஐந்து மணிக்கு இன்றைய பதிவைப் பார்த்ததும் மனதில் திகில்.. குழப்பம்... ஏதோ ஒரு சிந்தனை..

    ஏழு மணிக்கு வருகின்றது - துக்க செய்தி ஒன்று..

    எதையும் தடுக்க முடியாது..

    எல்லாம் நிதர்சனம் தான் என்றாலும் இந்த மாதிரியான அவல விமரிசனங்கள் வேண்டாம்.. வேண்டவே வேண்டாம்..

    பதிலளிநீக்கு
  4. சத்ய சாய் பொது மருத்துவமனையின் பணி போற்றுதலுக்கு உரியது

    பதிலளிநீக்கு
  5. அந்த விண்கல்லை இந்திய அரசியல்வாதிகள் தலையில் போட்டாலும் மக்களுக்கு மோட்சம் கிடைக்கும்.

    பதிலளிநீக்கு
  6. வணக்கம் சகோதரரே

    இன்றைய பாஸிடிவ் செய்திகள் அருமை.

    சூரிய மின்சக்தி உற்பத்தியில் பயன்பெறும் நாடுகளுக்கு வாழ்த்துகள். இதில் நம் நாடும் இணைந்திருப்பது பெருமைக்குரியது.

    இலவசமாக மருத்துவ உதவி தரும் பெங்களூர் ஒயிட் பீல்டிலிருக்கும் ஸ்ரீ சத்யா சாய் பொது மருத்துவமனையின் பணி சிறப்பானது.

    பூமியை பாதுகாக்க விண் கல்லை திசை திருப்பும் நாசாவின் முயற்சி பாராட்டுக்குரியது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  7. வணக்கம் சகோதரரே

    இன்றைய "நான்படித்த கதை" பகிர்வை நானும் ஏற்கனவே எஸ. ரா அவர்களின் நூறுகதை தொகுப்பில் படித்திருக்கிறேன்.

    மனதை வருத்தமடையும் செய்யும் ஒரு பரபரப்பில் செல்லும் கதை. "எழும்பூரில் குஞ்சம்மாளின் கணவர் வந்து நின்றிருக்க மாட்டாரா என்ற பரிதவிப்பு ரயிலில் பயணம் செய்யும் அவர்களுடனே நமக்கும் வருவதை தடுக்க முடியாது. இடையே தந்தியின் வாசகம் வந்து நம் மனதையும் வருத்திப் போகும்.

    மனித மனங்களின் இயல்பை விவரித்தவாறு கதையை நகர்த்திச் செல்லும் கதாசிரியர் மீது ஒரு கோபமும், அதே சமயத்தில் ஒரு மதிப்பும் எழுவதை கதை முடிவில் உணரத்தோன்றும். இந்தக்கதையின் தலைப்பும் அருமை.

    இக்கதை குறித்து சகோதரர் ஜெயக்குமார் சந்திரசேகர் அவர்கள் தந்த பின்னுரையையும் படித்து மிகவும் ரசித்தேன். "விடியும்" என்ற வார்த்தைக்கு தந்திருக்கும் விளக்கங்களையும் ரசித்தேன்.

    இப்படியான சந்தேகங்கள் எந்த கதையிலும் எழுவதுதான். ஆனால் அதை விவரிக்க ஆரம்பித்தால் அது ஒரு வாழ்க்கை சரிதமாகி விடும். பொதுவாக கதைகள் கற்பனை என்றாலும், அதில் சில நம் வாழ்க்கையோடு ஒத்து வருகிற விஷயங்கள்தானே...!

    சில கதைகள் சமயங்களில் நம் வாழ்க்கையாகி விடுகிறது. எங்கோ, என்றோ நடந்த வாழ்வின் முறைகள் கதையாகி விடுகிறது. அதன் வலிகள் இரண்டிலும் ஆழ்ந்து முறையே உணரந்து/படிக்கும் போது நம் மனதை எப்போதும் கலங்க செய்வது உறுதி.

    நல்ல எழுத்தாளர்களின் கதை பகிர்வுக்கு சகோதரர் ஜெயக்குமார் அவர்களுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  8. ஒயிட் ஃபீல்ட் மருத்துவமனை குறித்தும் அதன் சேவைகள் குறித்தும் ஏற்கெனவே அறிந்திருக்கிறேன். புட்டபர்த்தியிலும் அப்படி ஒன்று உள்ளது.
    நாசா செய்திகள் தினமலரில் வந்திருந்தன, சோலார் மின்சாரம் பற்றியும் இந்தியாவில் அதன் பயன்பாடு பெருகி வருவது குறித்தும் படிச்சேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சோலார் மின்சாரம் இன்னும் பயன்பாடு பெருகி வருவது நல்லதுதான்.

      ஒயிட் ஃபீல்ட் மருத்துவமனை காத்து இருக்க வேண்டும் முன்பதிவு செய்தவர்களுக்கு சிகிட்சை என்று மாயவரத்தில் பக்கத்து வீட்டு அக்கா சொன்னார்கள்.


      "விடியுமா" கதை படித்து இருக்கிறேன். என் கணவருக்கு கல்லூரியில் பாடமாக வந்து இருக்கிறது என்று சொல்லி இருக்கிறார்கள். என் தளத்தில் முன்பு இந்த கதையை பற்றி பேசி இருக்கிறோம். ரயிலில் போகும் போது ஏற்படும் எண்ணங்களின் பகிர்வு பற்றி எல்லாம் பேசி இருக்கிறோம்.

      இறப்பை சொல்லாமல் ஆஸ்பத்திரியில் இருப்பதாய் கூட்டி போன அனுபவம் எல்லாம் இருக்கிறது, போகும் வழியில் தெய்வங்களை வேண்டுவது, நேர்ந்து கொள்வது அத்தனையும் பயனற்று போன அவலம் எல்லாம் நேர்ந்து இருக்கிறது.
      .

      நீக்கு
  9. கதையைப் படித்து கருத்து கூறிய அனைவருக்கும் நன்றி.

    Jayakumar

    பதிலளிநீக்கு
  10. தேர்ந்த எழுத்தாளர்கள் கதைகளைத் தேர்ந்தெடுக்கும் போது கு.ப.ரா. என்றால் அவரது இந்த விடியுமா கதை.

    இந்தக் கதையை இங்கு பிரஸ்தாபித்த ஜெஸி சாரின் தேர்வு பாராட்டத் தக்கது.

    இந்தக் கதை பற்றி நிறைய சொல்ல வேண்டும். உடல் நலன் ஒத்துழைக்கவில்லை.
    பிறகு வருகிறேன்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!