திங்கள், 28 நவம்பர், 2022

"திங்க"க்கிழமை :  தேங்காய் வறுத்த பொடி - கமலா ஹரிஹரன் ரெஸிப்பி 

 

தேங்காய் வறுத்த பொடி. 

 அனைவருக்கும் அன்பான வணக்கங்கள். 


இது ஊற வைத்து உலர்த்திய பச்சரிசி. 


நல்ல நைசான மாவாக மிக்ஸியில் பொடித்து சலித்துக் கொள்ளுங்கள். 


நான் ஒரு டம்ளருக்கு ஒரு மூடி தேங்காய் என்ற கணக்கில் எடுத்துக் கொண்டேன். கால்படிக்கு அரிசிக்கு ஒரு நல்ல திண்ணமான பெரிய தேங்காய் எடுத்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் தேங்காய் துருவல் கணிசமாக இருக்கும். 


பொடியாக துருவிய தேங்காய் துருவல். 


சலித்து வைத்த மாவையும் தேங்காய் துருவலையும் நன்கு கலந்து கொள்ளவும். 


ஒரு கடாயில் இந்த மாவைப் போட்டு அடுப்பை சிம்மில் வைத்து இரு பாகங்களாக வறுக்கவும். 


நன்றாக கை விடாமல் யார் மேலும் கோபம் இல்லாமல் மனதில் பொறுமையுடன் வறுக்கவும்.
 

இறுதியில் இந்த கலருடன் மாவு மொறுமொறுவென தயாராகி விடும். 


  இதை தேங்காய் வறுத்த மாவு என்போம் நாங்கள். முன்பு நான் பிறந்த வீடு (தி. லி) சென்று திரும்பும் போதெல்லாம் தாய் வீட்டு சீதனமாக சாம்பார் பொடி, மற்ற இத்யாதிி  பொடிகளுடன்  ஏனைய பட்சணங்களுடனும் இந்தப் பொடியும் கண்டிப்பாக இடம் பெறும். இது மாதக்கணக்கில் கெட்டுப் போகாது. சாயங்காலம் விடுமுறை நாட்களில் மாலை சிற்றுண்டியாக வெல்லத் தண்ணீர் நன்கு கொதிக்க வைத்து வெல்ல வாசனை போனதும் , வடிகட்டிய ஆறிய  வெல்ல நீருடன் இந்த மாவை கலந்து சாப்பிடுவோம். கூடவே காரமாக ஏதாவது ஸ்நாக்ஸ். இல்லை வீட்டில் போடும் பஜ்ஜி போண்டா.... வகைகள். அதுபோல் காலை பசிக்கும் போதும் டிபன் ஏதும் சரியாக அமையாத போதும்.. வழக்கமான  இட்லி, தோசை அல்லாத புளி அரிசி மாவு உப்புமாவோடும் இது ஜோடி சேர பிணக்கு கொள்வதேயில்லை. ஏதாவது பூஜை விரத நாட்களிலும், உப்பு மோருடன் கொஞ்சம்  மாவை கலந்து சாப்பிடுவோம். பூஜையெல்லாம் முடிந்து சாப்பிடும் வரை பசியை அடக்கி தாக்குப் பிடிக்கும். இல்லையெனில் பொழுது போகாமல் இருக்கும் போது, கொஞ்சம் மாவுடன் ஒரு ஸ்பூன் சர்க்கரை சேர்த்து வீட்டில் எல்லோரும் ஏதாவது அரட்டை அடித்தபடி, இல்லையென்றால் ஒரு ஸ்வாரஸ்யமான நாவலை படித்தபடி  கொஞ்ச கொஞ்சமாக ஸ்பூனினால் அள்ளி அப்படியே சாப்பிடுவோம். இப்போது இதெல்லாம் எனக்கு கொஞ்சம் கனவாகி விட்டது. ஸ்வீீட் எல்லாவற்றிகும் தடா... (நாவல் படிக்கலாம். ஆனால் எதையும் சாப்பிடாமல்... இரண்டாவதாக அது உடனே பற்களில் மாட்டிக் கொண்டு நாவலின் கவனத்தை திசை திருப்பி விடுகிறது.) 

இப்போது வந்திருந்த என் மகனின் மலரும் நினைவுகளுக்காக கொஞ்சம் செய்தேன். இதை இங்கு பகிர்ந்து கொள்கிறேன். நீங்களும் இதை அறிந்திருக்கலாம் .  இதைதான் திணை மாவு என்பார்களோ அதையும் அறியேன்.  இதன் பெயர் உங்கள் அளவில் என்னவென்று தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.இது ப. ப. (பழைய பஞ்சாங்கம்) ஆனாலும், படங்களை ரசிப்பதற்கும், பகிர்வை படித்து ரசிப்பதற்கும் என் மனம் நிறைந்த நன்றிகள். 

53 கருத்துகள்:

  1. இது வரை சாப்பிட்டிராத கேள்வியே பட்டிராத தின்பண்டம் இது. அறிமுகத்திற்கு நன்றி.
    தேங்காய்த் துருவல் மாவுடன் சேர்ந்து வறும்படும் பொழுது எது ஒன்றும் தீய்ந்து போய் விடாமல் இரண்டும் சமமாய் ஒத்துழைத்து
    வறுபட வேண்டும் என்ற அக்கறை இயல்பாய் மனசில் படிந்தது.
    புதிய அறிமுகத்திற்கு நன்றி, சகோதரி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரரே

      இன்றைய ரெசிபி பதிவை படித்து தாங்கள் முதலில் வந்து தந்த சுவையான கருத்துக்களுக்கு மிக்க நன்றி.

      ஆம், தேங்காய் துருவல் மாவுடன் கலந்து வேறுபடும் போது அதன் மணமும், சுவையும் நன்றாகத்தான் இருக்கும் தங்கள் அன்பான கருத்துக்கு மனமார்ந்த நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    2. "கலந்து வறுபடும் போது" என திருத்தி படிக்கவும். தட்டச்சு பிழை வந்து விட்டது. மன்னிக்கவும்.

      நீக்கு
  2. படங்களோடு சொன்ன விதம் அருமையாக உள்ளது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரரே

      இன்றைய ரெசிபியை படித்து, படங்களையும் ரசித்து தாங்கள் தந்த நல்லதொரு கருத்துக்களுக்கு மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  3. அனைவருக்கும் காலை/மதியம்/மாலை வணக்கம். நல்வரவு. வாழ்த்துகள். பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
  4. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் எவ்விதமான கலக்கங்களும் இல்லாத நல்ல நாளாக மலர வேண்டுமென இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  5. இப்படி ஒரு தேங்காய்ப் பொடி உண்டென்பதையே இன்றே அறிந்தேன். சாதாரணமாக தோசை மிளகாய்ப் பொடிக்குப் பண்ணுவது போல் சாமான்களை வறுத்துக் கொண்டு கூடவே தேங்காயையும் வறுத்துச் சேர்த்துப் பொடி செய்து வைத்துக் கொண்டிருக்கோம். சாதத்தில் போட்டுப் பிசைந்தும் சாப்பிட்டுக்கலாம். ஆனால் பச்சரிசி சேர்த்துச் செய்யும் பொடியைப் பற்றி இன்னிக்குத் தான் தெரியும். பகிர்வுக்கு மிக்க நன்றி. ஒரு முறை செய்து பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களுக்காக அளவு. பதினைந்து அரசி, சிறிய சில் தேங்காய், வெல்லம் கரைக்கும்போது கரையாமல் அடம் பிடிக்கும் சிறிய வெல்லக்கட்டி

      நீக்கு
    2. வணக்கம் சகோதரி

      இன்றைய ரெசிபியை ரசித்து படித்து தாங்கள் தந்திருக்கும் கருத்து மன மகிழ்வை தருகிறது.

      ஆனால், தங்களுக்கே இது இன்றுதான் புதிதான அறிமுகம் என்ற செய்தி வியப்பைத் தருகிறது. நீங்கள் சமையலில் விதவிதமாக சொல்லும் தினுசைப் பார்த்து நான்தான் அடிக்கடி பிரமித்திருக்கிறேன்.

      நீங்கள் சொன்ன இட்லி, தோசைக்கு தொட்டுக் கொள்ளும் தேங்காய் மிளகாய் பொடியையும் நான் இங்கு முன்பே பகிர்ந்திருக்கிறேன். அதன் செய்முறையும் அனைவரும் அறிந்ததே..!
      இதையும் நீங்கள் ஒருமுறை செய்து பார்க்கிறேன் என்றதற்கு மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  6. வணக்கம் சகோதரரே

    அட..! இன்று என் ரெசிபியா? எதிர்பார்க்கவேயில்லை. இதற்கு இங்கு வந்து கருத்துரை தத்த சகோதரர்கள் ஜீவி சகோதரர் மற்றும் கில்லர்ஜி சகோதரர் இருவருக்கும் என் பணிவான நன்றிகள். பிறகு கொஞ்ச நேரத்தில் வந்து கருத்த்துரை தந்தவர்களுக்கும், கருத்து தரப்போகும் அனைவருக்கும் தனித்தனியே நன்றி சொல்கிறேன். ( இன்று எழுந்ததே தாமதம்
    குழந்தைக்கு பள்ளிக்கு தயார் செய்து சென்று கொண்டு விட்டு விட்டு பிறகு வருகிறேன்.) இதை இன்று இங்கு பகிர்ந்த உங்களுக்கும், அனைவருக்கும் என் அன்பான நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குழந்தையா இல்லை பேத்தியா? ஹிஹிஹி

      நீக்கு
    2. வணக்கம் சகோதரரே.

      ஹா ஹா ஹா. குழந்தைதான். குழந்தை பேத்தி. ஹா ஹா ஹா. நாமும் இன்னமும் குழந்தைகள்தானே .. நம் பெற்றோருக்கு.. நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  7. சர்க்கரை/வெல்லம் சேர்க்கையில் ஒன்றிரண்டு ஏலக்காய்களையும் பொடித்துச் சேர்த்துக்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரி

      ஆம்.. ஏலக்காய் சேர்க்கலாம். தவறில்லை.. வாசனையாகத்தான் இருக்கும். ஆனால், வறுத்த தேங்காய், மாவின் வாசனை போய் ஏலக்காயின் வாசனை திருவாதிரை களி மாதிரியை நினைவு படுத்தி விடுமோ எனச் சொல்லவில்லை. மேலும், ஏலக்காயின் வாசனை சிலருக்குப் பிடிக்காது. மற்றபடி நம்மைப் போன்றவர்கள் சேர்த்துக் கொள்ளலாம். தங்கள் அன்பான கருத்துக்கு நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  8. இந்தப் பொடியை வெல்லப்பாகில் போட்டு உருட்டினால் கமர்கட்டு ஆகிவிடும்???

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கமர்கட்டுக்கு எதுக்கு அரிசி மாவு? இன்னொன்று.. கமர்கட் சாப்பிட்டபின், நன்றாகப் பல் துலக்கிவிட்டு இரவில் படுக்கணும். இல்லைனா பல் கெட்டுப்போயிடும்.

      நீக்கு
    2. வணக்கம் ஜெயகுமார் சந்திரசேகர் சகோதரரே

      பதிவை ரசித்து தாங்கள் தந்த கருத்திற்கு மிக்க மகிழ்வுடன் கூடிய நன்றி.
      வெல்லத்தண்ணீர் கொதிக்க வைத்து மாவை சேர்ப்பது போல் வெல்லப்பாகில் போட்டு கிளறினாலும் , அதன் சுவை நன்றாகத்தான் இருக்கும். சிறிது நெய் விட்டு கெட்டியாக உருட்டி குழந்தைகளுக்குத் தரலாம். கீழே சிந்தாமல், சிதறாமல் எடுத்து சாப்பிடுவார்கள். அது கமர்கட்டாக வருமா என்று தெரியவில்லை. சகோதரர் நெல்லை அவர்கள் கமர்கட் செய்முறையை ஒரு திங்களில் தருகிறேன் என்றார்கள்.

      தங்கள் அன்பான கருத்திற்கு மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    3. வணக்கம் நெல்லைத் தமிழர் சகோதரரே

      கமர்கட்டுக்கு வேறு என்ன சேர்ப்பீர்கள்.? இது வரை செய்ததில்லை. (பொருள் விளங்கா உருண்டையே ஒரு கமர்கட் தான்) கடையில் வாங்கி முன்பு சிறு வயதில் சாப்பிட்டுள்ளோம் . பற்களில் நீண்ட நேரம் ஒட்டிக் கொள்ளும். இப்போது நடக்காது என்றுதான் நினைக்கிறேன். இப்போது இனிப்பு அதிகம் சேர்த்தால் பற்கள் நம்மை உண்டு இல்லை என செய்து விடும்.:)))) கமர்கட் பதிவு நீங்கள் திங்கள் பதிவில் எழுதி விட்டீர்களா? நினைவில் இல்லை.. அதனால்தான் கேட்கிறேன். நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  9. நான் தேங்காய் மிளகாய்ப்பொடியை எழுதியிருக்கீங்களோன்னு தலைப்பைப் படித்துவிட்டு நினைத்தேன்.

    இதை நான் சாப்பிட்டதில்லை. ஆனால் இந்தப் பொருட்களை வைத்துச் செய்யும் (மைனஸ் பயறு) காரடையான் நோன்புக் கொழுக்கட்டை சாப்பிட்டிருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரரே

      இன்றைய ரெசிபியை படித்து ரசித்து நல்லதோர் கருத்துக்கள் தந்திருப்பதற்கு என் மன மகிழ்வுடன் கூடிய நன்றி

      தேங்காய். மி. பொடி முன்பே ஒரு தடவை எ. பிக்காக எழுதி ஏற்கனவே வந்திருக்கிறது. கூடவே எரிவுள்ளி சாம்பாரை அதற்கு துணையாக வைத்து எழுதினேன்.

      /இந்தப் பொருட்களை வைத்துச் செய்யும் (மைனஸ் பயறு) காரடையான் நோன்புக் கொழுக்கட்டை சாப்பிட்டிருக்கிறேன்./

      ஆமாம். காரடையான் நோன்புக்கு அரிசி மாவும், தேங்காய் பூவும் அவசியம். எல்லா சாமான்களும், அதன் பக்குவங்களுமே ஒன்றுக்குள் ஒன்றான உறவு பட்டாளந்தானே.. :))

      காரடையான் கொழுக்கட்டையும், (இனிப்பும், காரமும்) உறவுகள் தந்து நான் சாப்பிட்டுள்ளேன். நன்றாக இருக்கும். தங்களது அன்பான கருத்துக்கு மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  10. நெய் காச்சிய பிறகு, கசண்டோட இருக்கும் பாத்திரத்தில் வறுத்த கோதுமை மாவு, ஜீனி கலந்து சாப்பிட என் பையனுக்குப் பிடிக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெல்லை இந்த அவலோஸ் பொடியிலும் நெய் கசண்டு கலந்த்து ஜீனி கலந்து சாப்பிட்டுப் பாருங்க!!!!

      ஆனால் 15 கிமீ நடக்கணுமாக்கும்!!! ஹாஹாஹாஹாஹா

      (ஹப்பா நெல்லைய வம்புக்கிழுத்தாச்சு!!)

      அப்படியே சாப்பிட்டால் ட்ரையாக இருப்பதால் தொண்டையில் சிக்கும் அதனால்தான் அதோடு பழம் வைத்து சாப்பிடுவது. அலல்து லட்டு பிடித்தும் சாப்பிடலாம்...எளிய ஸ்னாக் எக்கனாமிக்கால் ஸ்னாக் வீட்டில் ரேஷன் அரிசி இருக்கும், தென்னை மரம் உண்டு, பழம் சல்லிசா கிடைக்கும் வீட்டிலும் வாழை உண்டு....மாமரம் உண்டு...என்பதால் எங்க வீட்டில் இது சகஜம் அதுவும் பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய குடும்பம் அப்போது...

      கீதா

      நீக்கு
    2. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      ஆம். நெய் காய்ச்சிய கசண்டிலும் இந்த மாதிரி செய்யலாம். என் இளைய மருமகள் அடிக்கடிக் செய்வார். அதுவும் இந்த ருசிதான் வரும். அதில் சேர்ப்பது கோதுமை மாவா? இல்லை அரிசிமாவா? (ஆனால், அதில் தேங்காய் மட்டும் மிஸ்ஸிங் என நினைக்கிறேன். ) எனக்கு என்னவோ முன்பு ரொம்ப வருடங்களாக வெண்ணெய் வாங்கி நெய் காய்ச்சும் போது கசண்டு அவ்வளவாக வந்ததில்லை. இப்போது நெய்யேதான் வாங்குகிறோம். வெண்ணெய்யாக வாங்குவதில்லை. தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    3. வணக்கம் சகோதரி

      இன்றைய ரெசிபி பதிவை படித்து தாங்கள் தந்த கருத்திற்கு மிக்க நன்றி சகோதரி

      உங்களுக்கு இந்த முறை தெரிந்திருக்கும் நினைத்தேன்.

      /இந்த அவலோஸ் பொடியிலும் நெய் கசண்டு கலந்த்து ஜீனி கலந்து சாப்பிட்டுப் பாருங்க!!!!

      ஆனால் 15 கிமீ நடக்கணுமாக்கும்!!! ஹாஹாஹாஹாஹா/

      ஹா ஹா ஹா. நெய், ஜீனி, தேங்காய் சேர்ந்தால் நடந்துதானே ஆகனும். இதன் பெயரைச் சொல்லி விட்டீர்கள். உங்கள் வீட்டிலும், இந்த தேங்காய் பொடியின் பயன்பாடு அதிகமாக இருந்திருப்பது குறித்து மகிழ்ச்சி அடைகிறேன் சகோதரி.

      ஆம்... வெறும் மாவு தொண்டையைப் பிடிக்கும். அதனுடன் வெல்லத்தண்ணீர், நீங்கள் சொல்கிறபடி பால், மோர் இவைகளை சேர்த்தால் நன்றாக இருக்கும். பழத்துடன் சேர்த்து நான் சாப்பிட்டதில்லை.

      எங்கள் அம்மா வீட்டிலும் அப்போது நிறைய தென்னை மரங்கள் இருந்தன. அதனால் தேங்காய்கள் செழிப்பு. ஆனால், திருமணமாகி சென்னைக்கு வந்த பின் புகுந்த வீட்டில் தேங்காய் பத்தைகள் கொஞ்சம் பெரிதாக 25,பைசா சின்னதாக 15 பைசாவுக்கு ஒன்று என வாங்கும் போது எனக்கு அதைப்பார்த்து ஆச்சரியமாக இருக்கும். "உனக்கென்னமா!! சமையலில் எதற்கும் தேங்காய் நிறைய போட வேண்டுமென்கிறாய்..!! உங்கள் வீட்டில் இருப்பது போல மரத்தில் காய்த்தா தொங்குகிறது." என்று கேலி பேசுவார்கள்.

      இப்போது ஒரு தேங்காய் 28 ரூபாய் தந்து வாங்குகிறேன்.இதுவெல்லாம் இப்போது செய்வதேயில்லை . அன்று மகனுக்காக கொஞ்சம் செய்தேன். அதைத்தான் புகைப்படம் எடுத்து வைத்திருந்தேன்.

      தங்கள் அன்பான கருத்துக்கும், விளக்கத்திற்கும் மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  11. எனக்கு நாவல் படிக்கும்போது, பலாச்சுளைகள், நுங்கு போன்றவைகளைச் சாப்பிட்டுக்கொண்டே படிப்பது (சிறிய வயதில்.. அதாவது 35-40 வரை) ரொம்பப் பிடிக்கும். சத்துமா உருண்டைலாம் வேலைக்கு ஆகாது.

    உங்கள் ஆர்வம் பாராட்டத்தக்கது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரரே

      ஆம்.. ஏதாவது நாவல் படிக்கும் போது, எதையாவது கொறித்துக் கொண்டே படித்தால் அதிலுள்ள சுகமே அலாதிதான். நேரம் போவதே தெரியாது. ஆனால் இந்த சுகமான அனுபவம் எனக்கு 19, 20 வயது வரைதான் அமைந்தது. திருமணத்திற்கு பின் இது கிடைக்கவில்லை. பிறகு அம்மா வீட்டிற்கு வரும் போதெல்லாம் இந்த சுகானுபவத்தை விடாமல் அனுபவிப்பேன் .

      கையில் ஒரு சுவாரஸ்யமான நாவலும் இந்த நொறுக்குத் தீனிகளும், தொந்தரவுகள் இல்லாத தனிமையும் இருந்து விட்டால், அதன் இனிமையே தனிதான். என்றிருந்த காலங்கள் போயே விட்டது. இப்போது இதில் எதிலும் சுவாரஸ்யமில்லை. இதெல்லாம் ஒரு மாயையான தோற்றமோ என எண்ணம் வருகிறது. காலந்தான் நம் அனுபவ எண்ணங்களை கொண்டு நம்மை எப்படியெல்லாம் மாற்றி விடுகிறது...?

      /சத்துமா உருண்டைலாம் வேலைக்கு ஆகாது.!/

      ஆகா..! நீங்களும் இதற்கு ஒரு பெயரை வைத்து விட்டீர்கள். தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  12. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..

    வாழிய நலம்..

    பதிலளிநீக்கு
  13. காலையிலேயே பதிவைப் படித்து விட்டேன்..

    கீதாக்கா அறியாத ஒரு செய்முறை யும் உள்ளது எனில் ஆச்சரியம் தான்..

    இது மாதிரி எளிமையானவை களுடன் வாழ்ந்த காலங்களில் நினைவுகள் ஏதும் மறப்பதற்கு இயலாதவை..

    மகிழ்ச்சி.. நன்றி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரரே

      இன்றைய ரெசிபி குறித்து தங்கள் கருத்தை பதிவு செய்ததற்கு மிக்க மகிழ்ச்சி அடைந்தேன்.

      /இது மாதிரி எளிமையானவை களுடன் வாழ்ந்த காலங்களில் நினைவுகள் ஏதும் மறப்பதற்கு இயலாதவை../

      ஆம்.. அன்றைய காலத்து நிகழ்வுகள் மறக்க இயலாதவை. தங்களது அன்பான கருத்துக்கு மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  14. பதில்கள்
    1. வணக்கம் சகோதரரே

      தங்களது வருகைக்கும், ரெசிபி குறித்த கருத்துக்கும் மிக்க மகிழ்வெய்தினேன்.

      தங்களது கருத்துக்கும், பாராட்டிற்கும் மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  15. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  16. ஹை கமலாக்கா அட!!! இது எங்க ஊர் அவலோஸ்பொடி!!!!! இது கேரளத்துப் பக்கத்தில் அவலோஸ் பொடி என்று சொல்லுவோம். எங்கள் ஊரில் இது ரொம்ப பரவலாகச் செய்யப்படும் டிஷ். நம் வீட்டில் இது எப்பவும் தயாராக இருக்கும் ஸ்கூல் விட்டு வந்ததும் டக்கென்று இப்பொடியில் வெல்லம் அல்லது சர்க்கரை கலந்து கூடவே வேகவைத்த நேந்திரன் பழம் அல்லது வேக வைக்காத நேந்திரன் பழமும் தந்துடுவாங்க. வயிறு நிரம்பி விடும். நான் இந்த ரெசிப்பி படங்கள் வைத்திருக்கிறேன் திங்கவுக்காக என்று ஹிஹிஹிஹி வழக்கம் போல எழுதாம அனுப்பாம இருக்கு.

    இங்க நீங்க சூப்பரா கொடுத்திட்டீங்க. நல்லா வந்திருக்கு கலர் எல்லாமே

    கேரளத்து, காஸர்கோடு, மலநாடு, மங்களூர் பகுதியில் செய்யப்படும் ஹலசினஹன்னு கொட்டிகே /சக்கைப்பழ கடுபு/இட்லி - இனிப்பு, காரம் இரண்டும் படங்களோடு இருக்கு...எழுத முயற்சி செய்கிறேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரி

      தங்களது வருகைக்கும், கருத்துக்கும் மிக்க மகிழ்ச்சி சகோதரி.

      இந்த ரெசிபி உங்களுக்கு தெரியுமென நினைத்தேன். அது போலவே, அதன் பெயரையும், அதைப் பற்றிய விபரங்களையும் தெரியப்படுத்தியதற்கு மிக்க நன்றி.

      /கேரளத்து, காஸர்கோடு, மலநாடு, மங்களூர் பகுதியில் செய்யப்படும் ஹலசினஹன்னு கொட்டிகே /சக்கைப்பழ கடுபு/இட்லி - இனிப்பு, காரம் இரண்டும் படங்களோடு இருக்கு...எழுத முயற்சி செய்கிறேன்/

      எல்லாவற்றையும் தங்கள் பாணியில் விபரமாக சீக்கிரம் எழுத என் வாழ்த்துகள். பதிவாக வந்து படிப்பதற்கு நானும் ஆவலோடு காத்திருக்கிறேன். தங்களது அன்பான கருத்துக்கும், பாராட்டிற்கும் என் மனம் நிறைந்த நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  17. கீதா ரெங்கன் சொல்வார்கள் பாருங்கள் தெரியும் என்று. எனக்கும் தெரியும். திருவனந்தபுரத்தில் காலை உணவாக இந்த அரிசி தேங்காய் பொடி உருண்டைதான். சிலர் சாப்பிடுவார்கள். நேந்திரம் பழத்துடன்.
    அம்மா செய்வார்கள். பழைய நினைவுகளை கொண்டு வந்து விட்டீர்கள். இன்னொரு மாலை உணவு பொரி அரிசி மாவில் தேங்காய் பூ போட்டு சூடானபால், வெல்லம் கலந்து உருட்டி கொடுப்பார்கள். தேன்குழல், அல்லது கை முறுக்கு இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோமதிக்கா அடுத்து நான் வேர்டில் அடித்து வைத்திருந்த கருத்தை காப்பி பேஸ்ட் செஞ்சு போட அது வெளியான போது உங்கள் கருத்து என்னைச் சொல்லி!!! பாருங்க என்ன பொருத்தம்....!!!!!

      கீதா

      நீக்கு
    2. இன்னொரு மாலை உணவு பொரி அரிசி மாவில் தேங்காய் பூ போட்டு சூடானபால், வெல்லம் கலந்து உருட்டி கொடுப்பார்கள். //

      அதே அதே....வெறுமன பாலில் கலந்தும் இப்பல்லாம் வருதே கார்ன்ஃப்ளேக்ஸ், வீட்டபிக்ஸ் என்று அது போல இதைச் சாப்பிடலாம். என் மகனுக்குச் சிறு வயதில் இதைத்தான் விதம் விதமாகக் கொடுப்பேன் ஸ்பூனால் ஊட்டுவதும் எளிது என்பதால்....ஸ்கூல் போகும் அவசரத்தில் இது சௌகரியம்.

      இப்பவும் அவனுக்கு இப்பொடி அனுப்புகிறேன். டக்கென்று கொதிக்கும் பால் விட்டு ஊற வைத்து (இப்ப அவன் சர்க்கரை சேர்த்துக் கொள்வதில்லை எனக்கு இருப்பதால் அவன் இப்போதே கவனமாக இருக்கிறான் அதுவும் அவனுக்கு வர வாய்ப்புண்டு என்று அறிந்ததிலிருந்து) சாப்பிட்டுப் போகிறான்

      கீதா

      நீக்கு
    3. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி.

      /கீதா ரெங்கன் சொல்வார்கள் பாருங்கள் தெரியும் என்று. எனக்கும் தெரியும். திருவனந்தபுரத்தில் காலை உணவாக இந்த அரிசி தேங்காய் பொடி உருண்டைதான். சிலர் சாப்பிடுவார்கள். நேந்திரம் பழத்துடன். /

      ஆம்.. தங்கள் சொன்னது போல சகோதரி கீதா ரெங்கன் அவர்கள் இந்த ரெசிபி அறிந்ததுதான் எனச் சொல்லி விட்டார்கள். கேரளத்தில் அதன் பெயரும், அதன் விபரங்களும் சொல்லி விட்டார்கள். நாங்கள் பழத்துடன் சேர்த்து சாப்பிட்டது இல்லை.

      இது எங்கள் அம்மா இருக்கும் போது அடிக்கடி செய்வார்கள். . வீட்டிலேயே உரலில் நிறைய மாவு இடித்து, தேங்காய்களை துருவி (அப்போது பிறந்தவீட்டில் நிறைய தென்னை மரங்கள் இருந்ததினால், தேங்காய்களுக்கு பஞ்சமில்லை.) ஆறு மாத காலம் போதுமான வரை செய்வார்கள். சீக்கிரம் கெடாமலேயும் இருக்கும். சத்துள்ள மாவு என்பதினால், அவ்வப்போது எடுத்து சாப்பிடுவோம்.

      தாங்களும் இதை செய்வீர்கள் என்பதறிந்து மகிழ்ச்சி அடைந்தேன்.

      /இன்னொரு மாலை உணவு பொரி அரிசி மாவில் தேங்காய் பூ போட்டு சூடானபால், வெல்லம் கலந்து உருட்டி கொடுப்பார்கள். //

      அது பற்றியும் அறிந்து கொண்டேன். அன்பான கருத்துகள் தந்த உங்கள் இருவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  18. நான் டைப் செய்து கொண்டு இருந்தேன், அதற்குள் கீதா போட்டுவிட்டார்கள்.

    பதிலளிநீக்கு
  19. தேங்காய் வறுத்தப்பொடி செய்முறையும், படங்களும் மிக நன்றாக இருக்கிறது.

    //நன்றாக கை விடாமல் யார் மேலும் கோபம் இல்லாமல் மனதில் பொறுமையுடன் வறுக்கவும்.//

    குறிப்பு அருமை. கைவிடாமல் வறுத்தால்தான் ஒன்று போல வறுபடும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரி

      இன்றைய ரெசிபி குறித்த தங்கள் கருத்துக்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி.

      பதிவையும், படங்களையும் ரசித்து தந்த நல்லதொரு கருத்துக்கு என் மனம் மகிழ்வான.நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  20. கோமதிக்காவுக்கு இது தெரிந்திருக்கும்....அவங்க அம்மா திருவனந்தபுரம் என்பதால்....

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான்.. அவர்களுக்கும் இதன் பக்குவம் தெரிந்துள்ளது. நன்றி சகோதரி.

      நீக்கு
  21. அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்!

    பதிலளிநீக்கு
  22. வித்தியாசமான தின்பண்டம்! இஸ்லாமியர்கள் இது போல அரிசி மாவு, முட்டை, சீனி எல்லாம் கலந்து வறுத்து ஒரு பொடி செய்வார்கள். இந்த தேங்காய் வறுத்த அரிசி மாவில் வெல்லம் கலந்து சாப்பிட்டால் நன்றாகத்தானிருக்கும். செய்து பார்க்க வேண்டும். வித்தியாசமான, சுவையான பகிர்வுக்கு அன்பு நன்றி கமலா ஹரிஹரன்!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரி

      இன்றைய ரெசிபி பதிவை ரசித்துப் படித்து தாங்கள் தந்த கருத்திற்கு என் மன மகிழ்வுடன் கூடிய நன்றி சகோதரி

      நீங்கள் சொன்ன பிரகாரம் நானும் கேள்விபட்டுள்ளேன்.
      இந்த வறுத்த தேங்காய் உடனான மாவில், வெல்லத் தண்ணீர் கரைத்து கொதிக்க வைத்து கலந்து சாப்பிட்டால் நன்றாக இருக்குமென்ற தாங்கள் ஊக்கமாக கருத்து தந்திருப்பது எனக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது.

      நீங்களும் ஒரு முறை இதை செய்து பார்க்கிறேன் என்று சொன்னதற்கு என் மனம் நிறைந்த நன்றி சகோதரி.

      தங்களது அன்பான கருத்துக்கு மீண்டும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  23. பதில்கள்
    1. வணக்கம் சகோதரரே

      இன்றைய ரெசிபியை படித்து ரசித்து நல்லதோர் கருத்து தந்த தங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றி சகோதரரே .. உங்கள் ஊக்கம் தரும் கருத்துக்கள் என் எழுத்துக்கு பலம் சேர்ப்பதாக உள்ளது. மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  24. வணக்கம் அனைவருக்கும்.

    மதியம் என் கைப்பேசியில் சார்ஜ் இல்லையென சார்ஜ் போடச் சென்று விட்டேன். பிறகு சில வேலைகள். அதன்பின் கைப்பேசியில் மகன் அழைக்க மாலையில் அவருடன் பேசிக் கொண்டிருந்தேன் . அதனால் உங்களுக்கெல்லாம் பதில் தர தாமதமாகி விட்டது. இதோ அனைவருக்கும் பதில் கருத்து தந்து விடுகிறேன். பதில் கருத்துகள் தந்து கொண்டு இருந்த போது நடுவில் ஏற்பட்ட தாமதத்திற்கு மன்னிக்கவும்.

    அன்புடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  25. பச்சரிசி மாவும் தேங்காயும் வறுத்து செய்ததில்லை. பொரிவிளாங்காய் உருண்டை, பொரித்த அரிசி மாவு, எள்ளுமாவு, உளுந்து பயறு மா, செய்திருக்கிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும், இன்றைய ரெசிபி பற்றிய தங்களின் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      இப்படியும் ஒரு நாள் செய்து பாருங்கள். சுவையாக இருக்கும். பொரிவிளங்காய் உருண்டையும், தங்கள் பக்குவப் பிரகாரம் செய்தால் நன்றாக இருக்கும். தங்கள் அன்பான கருத்துக்கு மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!