ஞாயிறு, 13 நவம்பர், 2022

நான் தரிசனம் செய்த கோவில்கள் :: நெல்லைத்தமிழன்

 

கோவில் யானைகள் மற்றும் சில

ஒரு பதிவில், கீதா ரங்கன்(க்கா) மன்னார்குடி கோவில் யானையின் பெரிய படமாகப் போட்டிருக்கலாம் என்று சொல்லியிருந்தார். அதுவே, கோவில் யானைகளுக்காக ஒரு ஞாயிறு படப்பதிவே தரலாமே என்று எனக்குத் தோன்றியதற்கான காரணம்.

பெரிய கோவில்களில், அந்தக் கோவிலுக்காக ஒரு யானை வளர்க்கிறார்கள்.  அது அந்தக் கோவிலின் தினப்படி விஸ்வரூப சேவைக்கும், மற்றும் பல கோவில் திருவிழாக்களுக்கும் உபயோகப்படுத்தப்படுகிறது.  பெரிய கோவிலாக இருந்தாலும் யானை இல்லாத கோவில்கள் பல உண்டு. ஒரு யானையைப் பராமரிக்கும் அளவு அந்தக் கோவிலுக்கு வருமானம் இருக்கவேண்டும். வரும் பக்தர்களும் இதன் பொருட்டு ஏதேனும் காணிக்கைகளை, அந்த யானையைப் பார்த்துக்கொள்ளும் பாகனுக்கும் கொடுக்கவேண்டும். யானையைப் பராமரிப்பது மிகவும் செலவுபிடிக்கும் விஷயம் என்பது நமக்குத் தெரியுமல்லவா?

விஸ்வரூப தரிசனம் என்றால், காலையில் முதலில் கோவிலைத் திறந்து, மூலவர் சன்னிதியில் அவரைத் துயிலெழச்செய்வார்கள் (அதுவரை திரைபோட்டிருக்கும்). அதற்கு முன்பு, கோவிலைப் பொருத்து, பசு மற்றும் யானையை சன்னிதிக்குச் சிறிது எதிரே நிற்கவைத்து, திரையை நீக்கும்போது, பகவானுக்கு தீபங்கள் காண்பித்து பிறகு பசு, யானையை (சில கோவில்களில் குதிரையும்) தீபத்துடன் வலம் வந்து அவற்றிர்க்கும் பூஜை செய்வர். திரையை நீக்கி தீபாராதனை ஆகும்போது, பகவான், வந்திருக்கும் பக்தர்களைப் பார்க்கிறார் என்பது ஐதீகம். (மற்ற நேரங்களில் பக்தர்கள்தாம் இறைவனை தரிசனம் செய்கிறார்கள்). அதனால் விஸ்வரூப தரிசனம் என்பது முக்கியத்துவம் உடையது.

கோவிலுக்குப் போனால், அங்குள்ள யானையைப் பார்ப்பதில் நான் சிறிது நேரம் செலவழிப்பேன். ஒப்பிலியப்பன் கோவில் யானை, நாம் காசு கொடுத்தால், பொறுப்பாக தன் பாகனிடம் கொடுத்த பிறகு, நம் தலையின்மீது தன் துதிக்கையை வைக்கும். ஒரு தடவை நவதிருப்பதிகளில் ஸ்ரீவைகுண்டத்திலிருந்து (என்று நினைவு) யானையை சாலை வழியாகவே நடத்திக்கூட்டிக்கொண்டு இன்னொரு கோவிலுக்குச் சென்றுகொண்டிருந்தார் பாகன் (அதன் மீது அமர்ந்துகொண்டு). நாங்கள் டாக்சியில் ஒவ்வொரு கோவிலாகச் சென்றுகொண்டிருந்ததால், இதனைக் காண நேர்ந்து. தார் ரோட்டின் சூடு எவ்வளவு கஷ்டமாக இருந்ததோ அந்த யானைக்கு.

பல்வேறு கோவில்களில் நான் யானைகளைப் புகைப்படம் எடுத்திருந்த போதிலும், அவைகள் எங்கே என்று தேடுவதில் சிரமம் ஏற்படுகிறது. சில படங்களில் மனைவி அல்லது மகளும் யானையின் கூடவே இருக்கிறார்கள். பதிவும் நீண்ண்டுகொண்டே சென்றுவிடும். அதனால் சில கோவில் யானைகளை இங்கே கோர்க்க முடியவில்லை.

யானைக்கு அதன் எடையில் 10 சதத்துக்கும் குறைவில்லாமல் தினமும் உணவு தரவேண்டுமாம். அது இலை தழைகள், காய் பழங்களாக இருக்கலாம். நமக்கே தினம் தினம் விதவித உணவு வேண்டும் என்றிருக்கும்போது வெறும் வாழை தென்னை மட்டைகளையே யானைக்கும் போட்டுவிட முடியுமா? அதற்காக, திருநெல்வேலி சொக்கலால் ராம்சேட் பீடி தொழிலதிபர் செய்வதுபோல வருடத்துக்கு ஒரு முறை கிலோ கிலோவாக அல்வாவா கொடுக்க முடியும்?






நாச்சியார் கோவிலைப்பற்றி ஒரு வரலாற்றுச் செய்தி இருக்கிறது. கோச்செங்கணான் என்ற சோழ அரசன், 70 மணிமாடக் கோவில்களைக் கட்டினான். மணிமாடக்கோவில்களில், கருவறை, தரையிலிருந்து 4 அடி உயரத்திலும், 2 ½ அடி அகலத்திலும் இருக்கும் (பொதுவாக). இதன் காரணம், யானை அந்தக் கோவில்களில் நுழையக்கூடாது என்று அரசன் நினைத்ததுதான். இத்தகைய கோவில்கள் மணிமாடக் கோவில்கள் என்று அழைக்கப்படுகின்றன

(கோட்செங்கட் சோழன் மால்யவான் என்ற பெயருள்ள சிவகணங்களுள் ஒருவன். இன்னொரு சிவகணமான புஷ்பதந்தா என்பவனுடன் எப்போதும் சண்டையிட்டுக்கொண்டிருந்தான். கோபத்தில் மால்யவான், புஷ்பதந்தாவை யானையாகப் பிறக்கும்படிச் சபித்தான். புஷ்பதந்தாவும் மால்யவானை, சிலந்தியாகப் பிறக்கும்படிச் சபித்தான். இருவரும், திருவானைக்காவலில் பிறந்தனர். சிலந்தி, ஜம்பு மரத்தின் கீழிருந்த சிவலிங்கத்தின் மீது வலை பின்னி, மரத்திலிருந்து இலை சிவலிங்கத்தின் மீது விழாவண்ணம் காத்தது. அந்த ஊரிலேயே இருந்த யானை, தினமும் காவிரியிலிருந்து தண்ணீர் கொண்டுவந்து சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்யும்

அப்படிச் செய்யும்போது லிங்கத்தின் மீதிருந்த சிலந்தி வலையைப் பார்த்து, அதனைத் தூசு என்று எண்ணி, அதையும் சுத்தம் செய்யும். தினமும் சிலந்தி வலை பின்னப் பின்ன, யானை தினமும் அதனை அழிப்பதும் வழக்கமாகி, சிலந்திக்கு இதனால் கோபம் ஏற்பட்டு, யானையின் துதிக்கையில் ஏறி, யானையைக் கடித்தது. அதனால் யானையும் இறந்தது. சிலந்தியும் இறந்தது. அடுத்த பிறவியில் சிலந்தி, கோச்செங்கட் சோழன் என்பவனாகப் பிறந்தது)  கோச்செங்கணான் கட்டிய ஒரே ஒரு மணிமாட, வைணவக் கோவில், இந்த திருநறையூர் கோவில்தான். கருவறை, மிக மிக உயரத்தில் அமைந்துள்ளது.






= = = = = = = = =


29 கருத்துகள்:

  1. பதிவு சுவாரஸ்யமான தகவல்களோடு இருந்தது தமிழரே....

    பிறகு கணினியில் புகைப்படங்கள் பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
  2. யானை புகைப்படங்கள் எப்போதுமே சுவாரஸ்யம்தான்.  தனிமையில் இனிமை காணும் யானை பூமாதேவியா?  இடம் சொல்லவில்லையே..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது தாய்லாந்ததில் இருந்த யானை. நீண்ட தந்தம் என்னைக் கவர்ந்தது (அதுக்கு அதனால் எவ்வளவு கஷ்டமோ?)

      நீக்கு
  3. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  4. ஆனை அழகிகளின் அணி வரிசை அழகு. அடுத்து சிலை அழகிகளின் அணிவரிசையா? 

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆண் யானைகளை ஜெயக்குமார் சார் கவனிக்கவில்லையே... பெண் யானைகளை மாத்திரமே கவனித்திருக்கிறாரே... அது ஏன்?

      நீக்கு
  5. எல்லா ஜீவன்களிலும்
    இறை அம்சம் தவிர வேறொன்றில்லை
    என்றாலும் யானைகள் இறைவனாகவே தோற்றமளிக்கும் எனக்கு.
    இந்தப் பதிவும் கோயில்
    பதிவே எனக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் ஜீவி சார்.

      மூன்று நாட்கள் பயணம் முடிந்து நேற்று இரவு வந்தேன். முதல் நாள், காலை காவிரி துலா ஸ்நானத்திற்குப் பிறகு, ஶ்ரீரங்கபட்னம் ரங்கநாதர், கொள்ளேகால் அருகே மத்திய ரங்கம், சத்யாகாலம், பிறகு திருவரங்கன் தரிசனம் (இரவு 8:30க்கு).

      கொள்ளேகாலிலிருந்து சத்தியமங்கலம் வரும்போது 30 கிமீ வனப்பகுதி. மலைப்பாதையில் ஒரு காட்டுயானை, நெடிய தந்தத்மோடு. ஒற்றை யானை என்பதால் ஜாக்கிரதையாகப் பயணித்தோம். காட்டு யானையை அருகில் பார்த்தது முதல் அனுபவம். ஒரு சில படங்கள் எடுத்தேன். காரிலுள்ளவர்களுக்கோ பயம். பிறகு பகிர்கிறேன்.

      நீக்கு
    2. எது உண்மை தான், நெல்லை?

      நீக்கு
    3. அனைத்து ஜீவராசிகளிடமும் இறையம்சம் - இது உண்மைதான் ஜீவி சார்... நேற்று கரூர் பெங்களூர் சாலையில் வந்துகொண்டிருந்தபோது, நாய்க்குட்டி, (1 வயதுக்கும் குறைவு) நெடுஞ்சாலையில் வந்துவிட்டது. வண்டியை ஓட்டிய என் மச்சினன், வண்டியை (ஃபாஸ்ட் லேன்) நிறுத்திவிட்டான். அந்த நாய்க்குட்டியோ காரின் பக்கவாட்டுப் பகுதியில் நடக்க ஆரம்பித்தது. பின்னால் வந்த கார் நின்றது. அதன் ஓட்டுநர் இறங்கி அந்த நாய்க்குட்டியைத் தூக்கி சாலையின் மறுபுறத்தில் விட்டுவிட்டு வந்தார். எல்லா ஜீவன்களிடமும் அன்பு இருக்கிறது. அதை வெளிப்படுத்துவதில், பெருக்கிக்கொள்வதில்தான் ஜீவன் முன்னேற்றம் அடைகிறது.

      நீக்கு
  6. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் எவ்விதமான கலக்கங்களும் இல்லாத நல்ல நாளாக மலர வேண்டுமென இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  7. வணக்கம் நெல்லைத் தமிழர் சகோதரரே

    பதிவும், யானை படங்களும் அருமை. எல்லாயானை படங்களும், அவற்றிற்கான வாசகங்களும் நன்றாக உள்ளது. குளிப்பதற்குதான் அதற்கு என்ன சுகமாக உள்ளது...! அது ஒழுங்காக குளித்து தலைவாரி அலங்காரம் செய்யும் படங்கள் அருமையாக உள்ளது.

    யானைகளை எங்கு பார்த்தாலும் நின்று விட தோன்றும். விக்னேஷ்வரா என்றுதான் சொல்லி வணங்கி துதித்துக் கொண்டேயிருப்பேன். சமீபத்தில் சுவாமிமலை யானையின் தரிசனமும் தும்பிக்கை வாழ்த்தும் எங்களுக்கு கிடைத்தது. இன்றைய ஞாயறில் நல்ல தரிசனம் பெற்றுக் கொண்டேன். படங்கள் அனைத்தும் நன்றாக வந்திருக்கின்றன. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கமலா ஹரிஹரன் மேடம். நேற்று காலை ஶ்ரீரங்கத்திலிருந்து கிளம்பும்கோது நாங்கள் தங்கியிருந்த தெருவில் யானை வந்துகொண்டிருந்தது. மனைவி அதற்குப் பணம் கொடுத்து ஆசீர்வாதம் பெற்றபோது படமெடுக்க முடிந்தது.

      நீக்கு
  8. யானையை பற்றிய தகவல் அருமை.
    யானை படங்களும் அதற்கு பொருத்தமாக வாசகங்களும் அருமை.

    கோவில் யானைகள் நலவாழ்வு முகாம் சென்று வந்த பின் யானைகளுக்கு உடல் சோர்வு, மனசோர்வு நீங்கி விடுகிறது என்று சொல்கிறார்கள். அங்கு சக தோழர் தோழியுடன் மகிழ்ச்சியாக விளையாடி களிக்கிறது. தனிமை கிடையாது. எல்லா ஜீவராசிகளுக்கும் தனிமை கொடுமைதான்.

    அனைத்து யானை படங்களும் நன்றாக இருக்கிறது. யானையை பார்ப்பது மகிழ்ச்சி. வேண்டிய மட்டும் ரசித்து பார்த்து விட்டேன்.
    நன்றி.



    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தப் பயணத்திலும் இரண்டு யானைகள் பார்த்தேன். ஒன்று திம்பம் காட்டில். இரண்டாவது திருவரங்கத்தில்.

      யானைகள் முகாமில், பாகன்கள் யானைகளைப் பற்றிப் பேசிய காணொளிகள் சில பார்த்திருக்கிறேன். மிகவும் ரசனையாக இருக்கும்.

      நீக்கு
  9. ஆனைகள் அணி வகுத்த அழகான ஞாயிறு..

    கண் கொள்ளாக் காட்சியாக இனிய பதிவு..

    பதிலளிநீக்கு
  10. காவிரி துலா ஸ்நானம் ஸ்ரீரங்கத்தில் செய்து வந்தது அறிந்து மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. துலா ஸ்நானம் ஸ்ரீரங்கபட்டினத்தில். பிறகு மத்தியரங்கம் (கொள்ளேகால்), பிறகு சத்யாகாலம், பிறகு இரவு திருவரங்கத்தில் அரங்கநாதன் தரிசனம். இப்படி ஒரு நாளில் மூன்று ரங்கன் சேவை. மறுநாள் மழை என்பதால் ஸ்ரீரங்கத்தில் காவிரியில் குளிக்கவில்லை

      நீக்கு
  11. யானையை எவ்வளவு பார்த்தாலும் அலுப்பதில்லை. முகநூலில் கூட யானைப் படங்கள் எனக்குத் தனியாக வந்துடும். முந்தாநாள் முழுதும் உங்களை எதிர்பார்த்துக் காத்திருந்தோம். திரும்பத் தொலைபேசியில் கூட அழைக்கவில்லை. ஒரு வாட்சப் செய்தியானும் கொடுத்திருக்கலாமோ எனத் தோன்றியது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீசா மேடம்.... மழைத்தூரல், மழை என்றே சொத சொதவென இருந்த ஸ்ரீரங்கம். முதல் நாள் இரவு 8:20க்கு வந்து, அன்று பெரிய பெருமாளையும் நம்பெருமாளையும் சேவிக்க முடிந்தது. வேறு சன்னிதிக்கே செல்லமுடியவில்லை. மறுநாள் காலை 6:30க்குத் தொடங்கி, உறையூர், காலை உணவு, உத்தமர் கோவில், திருவெள்ளெறை, குணசீலம்..திரும்ப மழையில் ஸ்ரீரங்கம் வந்து 'மடப்பள்ளி' உணவகத்தில் உணவு உண்டபோது 2 மணி. (இதில் காரை எங்கோ பார்க் பண்ணி, மழைத்தூரலில் நடந்து...). இடையில் மனைவியின் மாமா, என்னுடைய திட்டத்தை மாற்றும்படியாக, அன்பில், கோவிலடி அப்பக்குடத்தான் கோவிலையும் சேவித்துவிட்டு வாருங்கள் என்று சொல்லிவிட்டார். பிறகு தங்குமிடத்துக்குச் சென்று அரை மணி நேரம் ஓய்வெடுத்து, திரும்பத் தயாராகி மாலை 4 மணிக்குக் கிளம்பி, அன்பில், அப்பக்குடத்தான் கோவில்களுக்குச் சென்று, கல்லணையை இருட்டில் பார்த்து, மழையில் திருவரங்கம் 7:10க்கு வந்தோம் (தெற்குக்கோபுரத்திற்கு). மழை, குடையின்மை காரணமாக, மனைவி மத்தவங்களோட அவர்கள் இடத்துக்குச் சென்று உணவு உண்ணும் திட்டத்தில் சேர்ந்துகொண்டாள். நான் மழையில் இறங்கி, எனக்குப் பிடித்த ஊதுபத்திகள் வாங்கிக்கொண்டு, நேரே கோவிலுக்குச் சென்று நான்கு சன்னிதிகளையும் (பெரிய பெருமாளையும்) திருப்திகரமாகச் சேவித்துவிட்டு, அறைக்குத் திரும்பியபோது இரவு 10:10. மறுநாள் அதிகாலை 6:30க்கு ஸ்ரீரங்கத்திலிருந்து கிளம்பிவிட்டோம். இடையில் வர நினைத்து வர இயலவில்லை. வரமாட்டேன், வருவேன் என்று சொல்லும் நிலையில் இல்லை. நேற்று இரவு 9 மணிக்கு வந்துசேர்ந்தேன். Excuse சொல்வதோ செய்தி அனுப்புவதோ சரியாக இருக்காது என்று என் மனதில் தோன்றியது. மழையோ, தரை முழுவதும் 2 இஞ்ச் நீரோ... நான் ராமானுசர், தாயார், சக்கரத்தாழ்வாரைச் சேவிக்கணும் என்ற முயற்சியினால்தான் என்னால் சேவிக்க முடிந்தது. இந்த பாக்கியம் என்னுடன் வந்தவர்களுக்குக் கிடைக்கவில்லை.

      நிச்சயம் மீண்டும் வருவேன். உங்களிருவரையும் சந்திப்பேன்.

      நீக்கு
  12. யானைகளின் அணிவகுப்பு அழகு

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!