ஞாயிறு, 20 நவம்பர், 2022

நான் சென்றிருக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் :: நெல்லைத்தமிழன்

 

(001) பஞ்சவன் மாதேச்வரம்

கல்கியில் வந்த பொன்னியின் செல்வன் நாவலைப் படித்துப் பரவசமாகாதவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். இன்றளவும் பொன்னியின் செல்வன், இளையதலைமுறையையும் கவர்வதே இதற்குச் சான்று. பிறகு அதன் தொடர்ச்சியாகச் சொல்லப்பட்ட நாவல்களைப் படித்திருக்கிறேன். பாலகுமாரன் அவர்கள் எழுதிய உடையார் நாவல் அவற்றில் ஒன்று. பொன்னியின் செல்வனில், வரலாற்றுக் கதாபாத்திரங்களை, நாம் படித்து, இப்படிப்பட்ட முன்னோர்கள் நமக்கு உண்டு என்று பெருமிதப்பட த்தக்க வகையில் சமைத்திருப்பார் கல்கி. உடையாரில், அதே கதாபாத்திரங்கள், நடந்தைப் பார்த்த ஒருவர் எழுதும் கமெண்டரி என்ற வகையில் செதுக்கியிருப்பார் பாலகுமாரன்.  இவற்றையெல்லாம் படித்துவிட்டு, கும்பகோணம் பக்கம் சென்ற நான், பஞ்சவன் மாதேவி பள்ளிப்படைக் கோவிலைப் பார்க்கவேண்டும் என்ற ஆசை கொண்டேன்.  இப்போதும், அது இருக்குமிடம், எல்லோருக்கும் தெரிவதில்லை. இரு மாதங்களுக்கு முன்பு கும்பகோணம் சென்றிருந்தபோது, இராஜராஜ சோழனின் பள்ளிப்படை என்று சொல்லப்படும் இடத்திற்குச் செல்லவேண்டும் என்று ஆசைப்பட்டபோது, (அப்போது நாதன் கோவில் எனப்படும் நந்திபுரவிண்ணகரத்துக்கு தரிசனத்திற்குச் சென்றிருந்தோம்) நான் சென்ற ஆட்டோ ஓட்டுநரிடம், பழையாறை சிவன் கோவில், கொஞ்ச தூரத்தில் பால்குளத்தி அம்மன் கோவில் இருக்கும் என்று பல்வேறு தகவல்கள் சொல்லி, அவரும் ஆங்காங்கு விசாரித்து 2 கிமீ தூரத்திலிருந்த அந்த இடத்திற்குக் கூட்டிச் சென்றார். என் மனைவிக்கு இதிலெல்லாம் அதிக ஆசை கிடையாது.  

கும்பகோணத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர், இப்போதான் சார் இந்த இடம்லாம் எனக்குத் தெரிகிறது என்றார். சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைப் பற்றி உள்ளூர், அதன் அருகிலுள்ள ஊர் மக்களுக்கு அவ்வளவாகத் தெரிந்திருக்கவில்லை என்றே கொள்ளவேண்டியிருக்கிறது  

இந்தப் பதிவில், பஞ்சவன் மாதேவி பள்ளிப்படையைப் பற்றிப் பார்ப்போம். பஞ்சவன் மாதேவி, ராஜராஜ சோழனின் மனைவியரில் ஒருவள். அரசனின் அன்புக்குரியவராகத் திகழ்ந்தார். பழுவேட்டரையர் குலத்தைச் சேர்ந்தவள். பட்டத்து இளவரசனான ராஜேந்திர சோழனின் மீது அதீத அன்புசெலுத்தியவள், அவனுக்காகவே குழந்தை பெற்றுக்கொள்ளவில்லை என்றெல்லாம் சொல்கிறார்கள். எப்படி இருந்தாலும், தன்னைப் பெறாத சிற்றன்னையின் மறைவுக்குப் பிறகு, அவளுக்காக ராஜேந்திர சோழன் எடுத்த பள்ளிப்படை இது, என்பதே தன் சிற்றன்னைக்கு எப்படிப்பட்ட முக்கியத்துவம் ராஜேந்திர சோழன் கொடுத்திருந்தான் என நம்மை எண்ணவைக்கும்.

புதரினுள்ளே மறைந்திருந்த கோவிலை, தொல்லியல் அறிஞர் முனைவர் நாகசாமி அவர்களின் மாணவர்கள் கண்டுபிடித்து, இந்தக் கோயிலை மீட்டெடுத்தார்களாம்.  பள்ளிப்படை என்பது, சைவமரபில், இறந்தவர்களின் அஸ்தி அல்லது பூத உடலின் மீது எழுப்ப்படும் கோவில். இதில் கருவறையில் சிவலிங்கம் இருக்கும். அதன் கீழ்தான் இறந்தவரின் அஸ்தி/பூத உடல் வைக்கப்பட்டிருக்கும் என்கிறார்கள்.  அதே காலகட்டத்தில் மறைந்த வைணவ ஆச்சார்யரான இராமானுஜருக்கும் திருவரங்கம் கோவிலில், தனியாக ஒரு கோவில் எழுப்ப்பட்டிருக்கிறது. அதுவும் பள்ளிப்படைதான். அதனைத் திருவரசு என்று சொல்லும் வழக்கம் உண்டு.

இந்த இடம், தற்போது ராமநாதன் கோவில் என்று அழைக்கப்படுகிறது. வாழைத் தோப்பின் நடுவே அமைந்த இந்தக் கோவிலை இப்போது சரி செய்து, அதற்குப் போக பாதையும் அமைத்திருக்கிறார்கள். இது பட்டீச்வரத்திலிருந்து சுமார் அரை கி.மீ தூரத்துக்குள் இருக்கிறது.  இந்தச் சுற்றுவட்டாரமே, சோழர் குல மகளிர், அவர்கள் குழந்தைகள் ஓடி விளையாடிய இடம் என்பதையும் நாம் மனதில் கொள்ளவேண்டும். அப்படிப்பட்ட இடத்தில், அவர்களின் நம்பிக்கைக்குரிய தளபதிகள் மாத்திரமே இருந்திருப்பார்கள், அல்லது பெரும் குலத்தவர்கள் வாழ்ந்திருப்பர். இப்போதும் அந்தப் பகுதியில் காலம்காலமாக இருப்பவர்கள் நிச்சயம் சோழ அரசகுலத்தவராக அல்லது முக்கியத் தளபதிகள்/படைவீரர்களின் குலத்தவராக இருக்கவேண்டும்











வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் நாம் இந்த மாதிரி வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களுக்குச் சென்றுவருதல் வேண்டும். அந்த இடத்தைப் பார்த்துக் கொள்பவர்களுக்கு நம்மாலானதைக் கொடுப்பதோ இல்லை, அந்த இடத்திற்கு விளக்கேற்றவோ பராமரிக்கவோ நம்மாலானதைச் செய்யவேண்டும். அப்படிச் செய்யவில்லை என்றால் நாம் வரலாற்றுப் பெருமைமிக்க இடத்தை பழுதுபடச் செய்தவர்களாகிவிடுவோம்.  இதுபோன்றதொரு இன்னொரு பதிவில் சந்திப்போம்.

= = = =

46 கருத்துகள்:

  1. ஞாயிறு பதிவுகள் பொலிவுறுகின்றன, ஒரு பொன்னியின் செல்வன் எத்தனை பேரை ஆட்கொண்டு சரித்திர விவரங்களைக் கண்டுபிடிக்கத் தூண்டுகிறது என்பது வியப்பு.

    நல்ல விவரங்கள். நல்ல படங்கள். நல்ல பதிவு. 
     
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த இடத்தை நான் இரண்டு வருடங்களுக்கு முன்பு பார்த்தேன். கல்கியின் எழுத்து நம்மு சோழர், பல்லவர் என அவர்களின் ஆட்சிக்காலத்தை நினைக்கத் தூண்டியது என்றால் மிகையாகாது.

      நீக்கு
    2. சில கோயில்களில் உள்ள சிற்பங்கள், ஏன் இவற்றை வடித்துவைத்தார்கள், என்ன காரணமாயிருக்கும் என எண்ணத் தோன்றும்.

      நீங்கள் வர்க்கலை ஜெகந்நாதர் கோயிலுக்குப் போயிருக்கிறீர்களா?

      நீக்கு
    3. போயிருக்கிறேன். ஆனால் சிற்பங்களையோ மற்றும் கோவில் கட்டடக்  கலையயோ பார்க்கவில்லை. கடற்கரையில் இருந்து ஏறியதால் மூச்சு வாங்கியது. சாமி தரிசனம் மாத்திரம் தான்!
       Jayakumar

      நீக்கு
    4. வர்கலையில் ஜனார்த்தன சாமி கோயில் தான் உள்ளது. வர்கலையில் நாராயண குருவின் சமாதி உள்ள சிவகிரி ஈழவர்களுக்கு காசி போன்ற ஒரு புண்ணிய ஸ்தலம். 
      Jayakumar

      நீக்கு
    5. யாத்திரை குழுவுடன் செல்வதால், அருகிலிருக்கும் முக்கியமான இடங்களைக் காணமுடிவதில்லை. வருத்தம்தான். பத்ரி யாத்திரையில் பத்ரியில் சிறிது தள்ளி (4 கிமீ) இருந்த மணா-பார்டர் கிராமத்தையோ, சரஸ்வதி ந்தி போன்றவற்றையோ தரிசிக்க முடியாத்து ஏமாற்றம். அதனால் வேறொரு யாத்திரைக் குழுவுடன் செல்லலாமென நினைத்திருக்கிறேன்.

      நீக்கு
    6. சிற்பங்களையும் கட்டிடக் கலையையும் பார்த்து ரசிக்கணும். உங்கள் வீட்டிற்கு விருந்துக்கு வருபவர், உங்கள் மனைவி வீட்டை நேர்த்தியாக வைத்திருப்பதையும், எல்லா உணவையும் ரசித்து உண்டு கருத்துச் சொல்லாமல் இருப்பதையும் ரசிக்கமுடியுமா? சிற்பிகள் செதுக்கிய சிற்பங்களின் நேர்த்தியையும் கட்டிடக் கலையையும் பார்க்க வேண்டுத்.

      வர்க்கலை கடல் மிக வேகமாக இழுக்கும் அலைகளைக்்கொண்டது. மூன்று முறையும் எனக்குப் பயத்தை வரவழைத்திருக்கிறது

      நீக்கு
    7. ஆஹா! மானாவுக்குப் போகாமல் வந்தீர்களா? பீமன் பாலம், சரஸ்வதி நதி ஆகியவற்றைப் பார்க்காமல்விட்டுட்டீங்க. சரஸ்வதி நதியின் அந்தப் பிரவாகத்தில் தான் ஸ்ரீஹரிதாஸ் ஸ்வாமிகள் ஜலசமாதி அடைந்ததாக பத்ரியில் சொன்னார்கள். ஆனால் இன்னும் சிலர் கர்ணப்ரயாகையில் என்றார்கள். இரண்டையும் நாங்க பார்த்தோம். குழுவாகவெல்லாம் போகலை. அலுவலக நண்பர் ஒருத்தர்/அவர் மனைவி ஆகியோர் எங்களுடன் இணைந்து கொண்டார்கள். பின்னர் ஹரித்வாரில் அவங்க பிரிஞ்சு அவங்க வழியில் போனாங்க. நாங்க எங்க வழியில்.

      நீக்கு
    8. பத்ரியில் இருந்து திரும்பும்போது தான் எங்களுக்கு முன்னர் சென்ற வண்டி ஒன்று விளிம்பில் கிட்டத்தட்டக் கவிழ்ந்து விடும் நிலைக்கு மாட்டிக் கொண்டிருந்தது. எங்க வண்டியும் பின்னால் வந்த வண்டிகளும் நின்றன. இந்த வண்டியிலிருந்து கஷ்டப்பட்டுப் பிரயாணிகளை இறக்கிப் பத்திரமாக ஓரிடத்தில் இருக்க வைத்தனர். பின்னர் அவங்களுக்குள்ளாகக் கலந்து பேசிக்கொண்டு வண்டி அங்கே திரும்ப முடியாது என்பதால் சுமார் 3,4 கிலோ மீட்டர் பின்னால் போகணும் என்பதால் கீழே செல்லும் வண்டியின் பிரயாணிகளான எங்களை எல்லாம் மேலே வந்து கொண்டிருந்த வண்டியில் ஏற்றினார்கள். அந்த வண்டிப் பிரயாணிகள் எல்லாம் எங்க பக்கத்து வண்டியில் ஏற்றப்பட்டனர். பின்னர் இருபக்கம் காவல்துறையின் மேற்பார்வை, தன்னார்வலர்கள் மேற்பார்வை ஆகியவற்றுடன் மெல்ல மெல்லப் பின்னால் போக ஆரம்பித்தன. நாங்க சுமார் 4 கிலோ மீட்டர் இப்படிப் பின்னால் போனதும் ஒரு கிராமம் வந்தது. அங்கே வண்டியை மெல்ல உள்ளே கொண்டு போய்ப் பின்னர் திரும்பக் கீழே இறக்கத் திருப்பி மெல்ல மெல்ல 2 கிலோ மீட்டரைக் கடந்ததும் ஆபத்து நீங்கி விட்டதாக அறிவித்தார்கள்.

      நீக்கு
    9. //Geetha Sambasivam "நான் சென்றிருக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் :: நெல்லைத்தமிழன் ” என்ற உங்கள் இடுகையில் இவர் புதிய கருத்து தெரிவித்துள்ளார்:

      ஆஹா! மானாவுக்குப் போகாமல் வந்தீர்களா? பீமன் பாலம், சரஸ்வதி நதி ஆகியவற்றைப் பார்க்காமல்விட்டுட்டீங்க. சரஸ்வதி நதியின் அந்தப் பிரவாகத்தில் தான் ஸ்ரீஹரிதாஸ் ஸ்வாமிகள் ஜலசமாதி அடைந்ததாக பத்ரியில் சொன்னார்கள். ஆனால் இன்னும் சிலர் கர்ணப்ரயாகையில் என்றார்கள். இரண்டையும் நாங்க பார்த்தோம். குழுவாகவெல்லாம் போகலை. அலுவலக நண்பர் ஒருத்தர்/அவர் மனைவி ஆகியோர் எங்களுடன் இணைந்து கொண்டார்கள். பின்னர் ஹரித்வாரில் அவங்க பிரிஞ்சு அவங்க வழியில் போனாங்க. நாங்க எங்க வழியில்.// my first comment. it was in the mail box. Lifted from there. grrrrrrrrrrrrrrrrrrrrrrr daily it is happening to me only. :(

      நீக்கு
    10. மானாவுக்குப் போகாமல் வந்தது வருத்தம்தான். ரெகுலரா யாத்திரைக்குக் கூட்டிச்செல்வார் அவர். அவருக்கு வயதானதாலும், அவர் கூட்டிச்செல்லு குழுவில் பலருக்கு வயதாகிவிட்டதாலும் இந்த மாதிரி இடங்களுக்குச் செல்வதில்லை. அதனால் நான் இன்னொருமுறை, வேறொரு யாத்திரிகை குழுவுடன் செல்லப்போகிறேன்.

      நீக்கு
    11. நாங்கள் சென்ற யாத்திரையில் இந்த மாதிரி விபத்துப் பிரச்சனைகளைப் பார்த்ததில்லை. முக்திநாத்திற்கு பொகாராவிலிருந்து ஹெலிகாப்டரில் செல்லும்போது அது சில இடங்களில் ஆடினதும், மலையை நெருங்கியதும்தான் பயமாகத் தோன்றியது.

      நீக்கு
    12. திருக்கயிலை யாத்திரையின் போது இதை விட மோசமாகவெல்லாம் விபத்து எங்களுக்கே ஏற்பட்டது. வண்டி பள்ளத்தில் போய் விழுந்து எங்களை எல்லாம் தூக்கி அடித்துவிட்டது. இதுதான் போச்சு என்றால் ஒரு பக்கத்துச் சக்கரம் கழன்று ஓடி விட்டது. அதை கெட்டித்துணியை வைச்சுக் கட்டிக் கொண்டு சுமார் 20 அல்லது 30 மைல் வந்தார் எங்க வண்டி ஓட்டுநர். அப்போதெல்லாம் கயிலை யாத்திரைப் பாதையின் சாலைப் பராமரிப்பு மோசமாகவே இருந்த காலம். சுமார் 17 வருடங்கள் முன்னர்.

      நீக்கு
    13. நீங்க சொல்றதைப் பார்த்தால், தலைவர் மோடி வந்தபிறகு இந்து யாத்திரைகளெல்லாம் நன்றாக ஆகிவிட்டது போலத் தெரிகிறதே. வெளிநாட்டு காங்கிரஸுக்கு இந்து யாத்திரைகளைப் பற்றி என்ன அக்கறை என்று சொல்வதுபோலத் தோன்றுகிறதே

      நீக்கு
    14. நூற்றுக்கு நூறு சதம் சரியாகவே சொல்கிறீர்கள். காசி ஒண்ணு போதுமே. 25 வருடங்கள் முன்னர் நாங்க போனப்போக் காரியங்கள் செய்ய சிரமப்படலைனாலும் மற்றவற்றிற்குப் பிரச்னை தான். அதிலும் தெருக்கள். முட்டுவது போல் வரும் பசுக்கள்! :(
      சமீபத்தில் திருக்கயிலை யாத்திரை சென்றவர்கள் எழுதியதில் இருந்து இப்போது சாலை வழி செல்லுவது தரம் உயர்ந்திருக்கிறது எனத் தெரிய வந்தது. அதோடு இப்போதெல்லாம் ஹெலிகாப்டர் சேவை வேறே இருப்பதால் சாலைவழிப்பயணம் அதிகமாய் இல்லை எனவும் கேள்விப் பட்டேன். பயண நேரமும் குறைந்திருக்கிறது.

      நீக்கு
    15. விரைவில் காசி செல்கிறேன் (சில மாதங்களில்). டிக்கெட்லாம் புக் பண்ணியாச்சு

      நீக்கு
    16. போயிட்டு வாங்க. பார்க்காத இடங்களை எல்லாம் பார்த்துட்டு வாங்க.

      நீக்கு
  2. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..

    வாழிய நலம்..

    பதிலளிநீக்கு
  3. // பட்டத்து இளவரசனான ராஜேந்திர சோழனின் மீது அதீத அன்பு செலுத்தியவள், அவனுக்காகவே குழந்தை பெற்றுக் கொள்ளவில்லை என்றெல்லாம் சொல்கிறார்கள்.//

    எப்படியான மா மனிதர்கள் நம்முடைய மண்ணில்..

    பிறக்குந்தோறும் இம்மண்ணில் பிறப்பதற்கு வேண்டிக் கொள்வோம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பொற்கைப் பாண்டியன், அதியமானுக்கு நெல்லிக்கனி கொடுத்த ஔவை.... என்று பல்வேறுபட்ட குணாதிசயங்கள் நிரம்பிய மண் இது.

      நீக்கு
  4. // மக்கள் நலன் மக்கள் நலன் என்று சொல்லுவார்..
    தன் மக்கள் ஒன்றினையே மனதில் கொள்ளுவார்..//

    உண்மையிலேயே தனது நாட்டு மக்களுக்காக வாழ்ந்த் சோழ வம்சத்தினருக்கு ஈடாக மாட்டார்கள் இன்றைய ஆட்கள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பல்லவர்கள், சோழர்கள், பாண்டியர்களால் நிறைந்தது நம் தமிழ்நாடு. விவசாயத்திற்காக, வாழ்க்கைத் தரம் முன்னேற, சோழவளநாடு சோறுடைத்து என்ற பெயருக்காக, கரிகால் வளவன் முதற்கொண்டு சோழர்கள் தஞ்சைக்கு உழைத்திருக்கின்றனர்.

      ஒரு வாரத்திற்கு முன் கல்லணையை மாலைமங்கிய நேரத்தில் பார்த்து நினைவுல் வருகிறது.

      நீக்கு
  5. அனைவருக்கும் காலை வணக்கம்.

    இன்று காஞ்சிக் கோயிலொன்று என நினைத்திருந்தேன். பஞ்சவன்மாதேச்வரம் வந்ததில் மகிழ்ச்சி

    பதிலளிநீக்கு
  6. அரிய தகவல்கள் தமிழரே...

    புதிய கோயில்கள் கட்டுவது அவசியம் இல்லை பழைய கோயில்களை பராமரித்தாலே பெரிய புண்ணியம்தான் இதை மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும்.

    ஆனால் சந்து பொந்துகளில் சிறிய கோயில்களை கட்டி பாதையை அடைப்பதையே குறிக்கோளாகக் வாழ்கிறோம்.

    புகைப்படங்களை பிறகு கணினியில் காணவேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் கருத்து, புதிய கோவில்களைப்பற்றியது, எனக்கும் ஏற்புடையது.

      நேற்று இங்கு கே ஆர் மார்க்கெட்டின் அவென்யூ சாலையில் இருக்கும் இரண்டு, புராதானமான வெங்கடேசப் பெருமாள் கோவில்களுக்குச் சென்றிருந்தேன். அங்கிருந்த அர்ச்சகர், அந்த நெடிய வீதியில் ஏறத்தாழ பத்துக்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன என்றும், அந்த இடம் கமெர்ஷியலாக மாறிவிட்டதால், கோவில்களை நெருக்கிக்கொண்டு ஏகப்பட்ட கடைகள் காம்ப்ளெக்ஸ்கள் வந்து கோவில்களே தெரியாதபடி ஆகிவிட்டது என்றார்

      நீக்கு
  7. நீங்கள் பஞ்சவன் மாதேஸ்வரத்தை தந்தால் துரை பெருவுடையார் கோயிலையும், கங்கை கொண்ட சோழபுரம் கோயிலையும் அவருடைய தளத்தில் பதிவிட்டுள்ளார். எப்படி சொல்லி வைத்துக் கொண்டீர்களா? 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது யதேச்சையாக நிகழ்ந்திருக்கிறது. அவை பற்றி நான் எழுதும் பதிவுகளும் வரும்.

      நீக்கு
    2. இங்கே பள்ளிப்படையும் அங்கே சோழர் வம்சாவளியும் வெளியானது தற்செயலான விஷயம்..

      நீக்கு
  8. அனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  9. மிக அருமையான பதிவு. பஞ்சவன் மாதேவி பள்ளிப்படையைப்பற்றி விரிவான விவரங்களுடன் பதிவு அருமை.
    படங்கள் நன்றாக இருக்கிறது. முன்பு சகோ துரைசெல்வராஜூ அவர்கள் தளத்தில் பள்ளிபடை பார்த்து வந்த விவரம் கூறி இருக்கிறீர்கள்.

    //இந்தச் சுற்றுவட்டாரமே, சோழர் குல மகளிர், அவர்கள் குழந்தைகள் ஓடி விளையாடிய இடம் என்பதையும் நாம் மனதில் கொள்ளவேண்டும். அப்படிப்பட்ட இடத்தில், அவர்களின் நம்பிக்கைக்குரிய தளபதிகள் மாத்திரமே இருந்திருப்பார்கள், அல்லது பெரும் குலத்தவர்கள் வாழ்ந்திருப்பர். //

    நான் போனது இல்லை. போகும் ஆவலை ஏற்படுத்தி விட்டீர்கள்.
    வாய்ப்பு கிடைத்தால் பார்க்க வேண்டும். சார் பார்த்து இருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  10. பஞ்சவன்மாதேவி பற்றி பழுவேட்டரையர் பேராசை பற்றி சமீபத்தில் எதிலோ படித்தேன்.  இதில் என்று நினைவில்லை.  படங்களைவிட கட்டுரை வெகு சுவாரஸ்யம்.  குடந்தையில் கோவில்கள் பற்றி அறிந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் இருக்கிறார்.  கட்சிப்பற்றும் உள்ளவர்.  அண்ணனின் நண்பர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கும் இந்த இடங்களெல்லாம் தெரிந்த ஆட்டோக்காரர்கள் (கும்பகோணம், நெல்லை... போன்று) தெரியும். ஆனால் இந்த ஆட்டோக்காரர் கொஞ்சம் விலை குறைவு என்று நினைத்ததால் அவருடன் சென்றேன்.

      வியாழக்கிழமை அன்று எழுதுங்கள்....பஞ்சவன்மாதேவி... நினைவு வந்தால்

      நீக்கு
  11. பதில்கள்
    1. ஆங்கிலத்தில் எழுதினால் ப்ளாக்கர் பயந்துகொண்டு வெளியிட்டுவிடும் என்ற நம்பிக்கை போலிருக்கு

      நீக்கு
    2. டெல் மடிக்கணினியில் இருந்து வேலை செய்கிறேன். தோஷிபா மடிக்கணினியின் பிரச்னை முழுதும் சரியாகலை. இதுவும் கீபோர்ட் ;தொந்திரவு இருந்தாலும் சமாளிக்கிறேன். இதில் வின்டோஸ் 10 இருக்கிறது. இ கலப்பை டவுன்லோட் பண்ணி வைத்திருந்தாலும் குறில்நெடில் தகராறுகள் வருகின்றன. ஆகவே சுரதா.காம் மில் தங்கிலீஷில் தட்டச்சி மாற்றி இங்கே காப்பி, பேஸ்ட் செய்கிறேன். நடுவில் பதிவிலோ வேறு எங்காவதோ உடனே கருத்துச் சொல்லணும்னால் ஆங்கிலத்தைப் பயன்படுத்துகிறேன்.

      நீக்கு
    3. நான் அழகியை உபயோகிக்கிறேன்.....தட்டச்சு செய்ய... (நான் சொல்வது சாஃப்ட்வேரை ஹிஹிஹி).

      நீக்கு
    4. me too have Azhagi. I know Vishi very well. But nowadays no contact. :(

      நீக்கு
  12. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தலம் கண்டுகொண்டதில் மகிழ்ச்சி . இவ்வாறான பதிவுகள் பகிர்ந்ததற்கு நன்றி. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  13. வணக்கம் நெல்லைத் தமிழர் சகோதரரே.

    வரலாற்று சிறப்பு மிக்க இடங்களை கோவில்களை குறித்து விபரமாகவும் ஆர்வத்துடனும் எழுதும் தங்களது பதிவுகளுக்கு மிக்க நன்றி. இன்றைய பதிவில் சிற்பங்கள் அனைத்தும் அழகாக இருக்கிறது.

    இன்றைய பதிவும், படங்களும் அற்புதம். ராஜ ராஜ சோழனின் மனைவி பஞ்சவன் மாதேவி பற்றிய விபரங்களை படித்து அறிந்து கொண்டேன். நல்லவர்களை பெற்ற நாட்டில் நாமும் பிறந்து வளர்ந்து வந்திருக்கிறோம் என நினைக்கும் போதே மனது மகிழ்வடைகிறது. கட்டுரை நன்றாக மனதில் பதியும் வண்ணம் தந்துள்ளீர்கள்.

    நீங்கள் சொல்வது போல் வாழும் போதே வரலாற்று சிறப்பு மிக்க கோவில்களை, இடங்களை பார்த்து அங்கிருக்கும் கலையம்சங்களை மனதில் இருத்திக் கொள்ள வேண்டுமென நானும் நினைப்பேன். ஆசையும் அடைந்திருக்கிறேன். ஆனால், குடும்பம் கடமைகள் என்றே காலம் என்னை தன்னுடனே கடத்திச் சென்று விட்டது. இப்போதாவது உங்கள் எழுத்துக்களைப் பார்த்து பல விபரங்கள் அறியும் வாய்ப்பை தந்த இறைவனுக்கும் உங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.

    நேற்றும், முன்தினமும் என்னால் வலையுலகத்திற்கு சரிவர வர இயலவில்லை. அதனால்தான் இன்று தங்களின் பதிவை பார்த்து படித்து தாமதமாக கருத்திடுகிறேன். மன்னிக்கவும். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்றுதான் உங்களின் பின்னூட்டத்தைப் படித்தேன். நன்றி கமலா ஹரிஹரன் மேடம். எனக்கு ஆர்வம். இந்த ஆர்வம் என் மனைவிக்கு இல்லை என்பதையும் சொல்லிவிடுகிறேன். சிலருக்கு வாய்ப்பு கிடைக்கிறது. பலருக்குக் கெடுப்பதில்லை. அவ்ளோதான்.

      பாருங்க... Bull Temple Road வழியாகப் பலமுறை நடந்து செல்லும் எனக்கு இன்னும் அந்தப் பெரிய நந்தியின் தரிசனம் கிடைக்கவில்லையே

      நீக்கு
  14. நானும், முனைவர் பா.ஜம்புலிங்கம் ஐயா அவர்களும் இவ்விடத்திற்குச் சென்றுள்ளோம்.
    போற்றிப் பாதுகாக்க வேண்டிய இடம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை கரந்தை ஜெயக்குமார் சார். உங்களிருவரையும் இன்னும் சந்திக்கவில்லை. ஜம்புலிங்கம் ஐயாவுடன் அலைபேசியில் பேசியிருக்கிறேன். அவருடன் பேசுவதில் தனி இன்பம். மிகவும் விளக்கமாகவும் அன்புடனும் பேசக்கூடிய பெரும் அறிவும் தன்மையும் படைத்தவர் அவர்.

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!