கொட்டாரத்தில் சங்குண்ணி எழுதிய
ஐதீக மாலை என்ற தொகுப்பிலிருந்து ஒரு
கதை
மலையாளத்தில் இருந்து மொழிபெயர்ப்பு - JK
சாஸ்தாங்கோட்டையும் குரங்குகளும்.
(பாகம் 2/2 ) நிறைவு
முற்பகுதி சுட்டி : இங்கே
கதை இதுவரை:
பாண்டிய வம்சத்தைச் சேர்ந்த பந்தள ராஜா காயங்குளம் ராஜாவின் புத்திரியை
விவாகம் செய்து காயன்குளத்திலேயே
12 வருடம் இருந்தார். குலதெய்வம் ஆன சபரி சாஸ்தாவைக் காண 12 வருடமாகச் செல்லவில்லை. சாஸ்தா அவருடைய கனவில் புலி உருவில் வந்து உபத்திரவம் செய்தார். ப்ரச்னம் வைத்து பரிகாரம் கண்டனர்.
அதன்படி பந்தள ராஜா சபரிமலை சென்று 12 தினங்கள் பஜனை செய்தார். அடுத்த பரிகாரமாக மாதந்தோறும் தொழச் செல்வது அவருக்கு சிரமமாக இருந்தது. சாஸ்தா ஒரு
வீரன் வடிவத்தில் வந்து சாஸ்தா இருக்கும் வேறு ஒரு இடத்தை அம்பெய்து காட்டினார். ஒரு ஏரியின் நடுவே இருந்த அந்த இடம் சாஸ்தாங்கோட்டை என்றாகியது. அங்கேயே மாதந்தோறும் நடத்தவேண்டிய பூஜைகளை செய்தால் போதும் என்று உணர்த்தினார்.
பந்தள ராஜாவும் ராணியும் சாஸ்தாங்கோட்டையிலேயே வசித்தனர். சாஸ்தாவின் ஊழியர்களாகக் குரங்குகள் இருந்தன.
அவை பந்தளம் ராஜாவிற்குச் சேவை செய்தன.
பந்தள ராஜாவும் ராணியும் சாஸ்தாங்கோட்டையில் வசிக்கலாயினர். அவர்கள் கொட்டாரத்தில் இருந்து வெளியே செல்லும்போது அங்கு இருந்த குரங்குகள் அவர்களுக்கு முன்பும் பின்பும் அணி வகுத்து செல்வது வழக்கம் ஆயிற்று.
இப்படி இருக்கும்போது ஒருநாள்
காயங்குளம் ராஜா சாமி தரிசனத்திற்காகவும், கோயில் பணிகளை மேற்பார்வை செய்யவும்
வேண்டி சாஸ்தாங்கோட்டைக்கு வந்தார்.
அவர் அங்கு வந்த சமயம் பந்தள ராஜாவும் ராணியும் ஏரிக்குச் சென்று குளித்து சாமி தரிசனம் செய்து திரும்பி வரும் நேரம் ஆக இருந்தது. அவர்களுக்கு அகம்படியாக, குரங்குகள் அணிவகுத்து வருவதையும் அவர் கண்டார். காயங்குளம் ராஜா பல்லக்கில் இருந்து இறங்கினார்.
பந்தள ராஜா
“ஆம் அவர்கள் யோக்கியர்கள்தான். நேர்மையுள்ளவர்கள். அவர்கள் சாஸ்தாவின் ஊழியர்கள். அவர்களுக்கு ஆறேகால் இடங்கழி அரிசிச் சோறு தினமும் தேவஸ்வம் வகையாகக் கோயிலில் இருந்து கொடுக்க ஏற்பாடு செய்திருக்கிறேன்.” என்று கூறினார்.
காயங்குளம் ராஜா சிறிது ஒய்வு எடுத்துவிட்டு
பின் குளிப்பதற்காக ஏரிக்குச்
சென்றார்.
குரங்குகள்
அவருக்கு அகம்படியாகச் சென்றன.
ராஜா எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டி இரத்தின மோதிரத்தை
அவிழ்த்து ஒரு கல்லின் மேல் வைத்தார். ஊழியர் எண்ணெய் தேய்த்து குளிப்பாட்டி
விட்டனர். அது சமயம் ஒரு பருந்து அந்த மோதிரத்தை எடுத்துக்
கொண்டு பறந்து சென்று விட்டது.
ராஜாவிற்குச் சங்கடம் தோன்றியது.
மோதிரம் அரச முத்திரை மோதிரமும் ஆகும். விசனத்துடன் கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்து விட்டு கொட்டாரத்திற்குச் சென்றார். அப்போதும் குரங்குகள் அணி வகுத்துச் சென்றன. ஆனால் குரங்குத் தலைவன் அந்த அணிவகுப்பில் இல்லை.
ராஜா கொட்டாரத்தை அடைந்தபோது அந்த வானர வீரன் மோதிரத்தை திருடிய பருந்தை அடித்துக் கொன்று கொண்டு வந்து ராஜாவின் முன்பு இட்டது.
பருந்தின் நகத்தில் இருந்து ராஜாவின் மோதிரத்தை எடுத்து ராஜாவின் முன்பு வைத்து தொழுதது.
காயங்குளம்
ராஜாவிற்கு மிக்க சந்தோசம். அந்த வானரத் தலைவனுக்குச் சுக்ரீவன் என்று பெயரும் இட்டார்.
குரங்குகள் விடை பெற்று கோயிலுக்குச் சென்றன.
இரு ராஜாக்களும் சாப்பிடச் சென்றனர்.
ராஜாக்கள் உண்டு முடித்து வந்த போது குரங்குகள் இல்லை.
“சாதாரணமாகக் குரங்குகள் உண்டு முடித்தவுடன் நன்றி தெரிவிக்க கொட்டாரத்திற்கு வருவது
வழக்கம். இன்று அவைகளைக் காணவில்லை. காரணம் தெரியவில்லை.” என்று பந்தளம் ராஜா சொன்னார்.
அப்போது குரங்குகளின் ஆர்ப்பாட்டம் கேட்டது.
“என்னமோ தகராறு என்று தோன்றுகிறது,
சென்று பார்க்கலாம்” என்று பந்தளம் ராஜா கூற இரு ராஜாக்களும் புறப்பட்டனர்.
அவர்கள் அங்கு சென்றடையும் முன்பே சுக்ரீவன் முதலான வானரங்கள் சோற்று பாத்திரத்தை ராஜாக்கள்
முன் கொண்டு வந்து வைத்தன. சுக்ரீவன் பாத்திரத்தில் உள்ள சோற்றையும் ஒவ்வொரு குரங்கும் அவரவர் வயிற்றையும் சுட்டிக் காட்டி முகத்தைத் தொங்கப் போட்டு ராஜாவைப் பார்த்தன.
காயங்குளம் ராஜாவிற்குக் குரங்குகள் செய்கை புரிந்தது.
அவர் “உங்கள் எல்லோருக்கும் இந்தச் சோறு போதவில்லை என்றா சொல்கிறீர்கள்?”
என்று கேட்டார். அப்படித்தான் என்று சுக்ரீவன் முகத்தை ஆட்டினான். “சரி தற்போதைக்கு இன்று இதில் இருப்பதைச் சாப்பிட்டுவிட்டுக் கொட்டாரத்திற்கு
வாருங்கள். நாம் ஒரு வழி காணலாம்.”
என்று சொல்லி இருவரும் கொட்டாரத்திற்கு
மடங்கினர்.
குரங்குகளும் சாப்பிட்டு முடித்து கொட்டாரத்தில் ஆஜர் ஆயின. காயங்குளம் ராஜா
தேங்காய், பழம் வெல்லம் ஆகியவற்றை குரங்குகளுக்குக்
கொடுத்தார். குரங்குகளுக்குத்
தினப்படி மூன்று பறை அரிசிச் சோறு கொடுக்கவேண்டி கட்டளையிட்டார். இந்தக் கட்டளையை ஒரு செப்புத் தகட்டில் எழுதி முத்திரை இட்டு பட்டயமாக சுக்ரீவனிடம்
தந்தார். சந்தோசம் கொண்டு ஆரவாரத்துடன் குரங்குகள்
திரும்பிப் போயின. அடுத்த நாள் முதல் அவைகளுக்கு மூன்று பறை அரிசிச் சோறு கொடுப்பது வழக்கம் ஆகியது.
கொட்டாரக்கரையை சேர்ந்த ஒரு நாயர் குடும்பத்தில்
பெண்களும் ஆண்களும் ஒவ்வொருவராக இயற்கை எய்தினர்.
கடைசியாக ஒரு பெண் மாத்திரம் இருந்தாள். 45 வயதாகிவிட்டது. சந்தான பாக்கியத்திற்கு அவர்கள் பல நல்ல
காரியங்கள் செய்தும் பலன் இல்லை. ஆகவே இனி இந்த ஸ்திரீ பிரசவிக்கப் போவதில்லை என்றும்,
அவளுடன் அந்தக் குடும்ப பரம்பரை முடிந்து விடும் என்றும் எல்லோரும் தீர்மானித்தனர். (கேரளத்தில் மருமக்கள் தாயம் நிலவில் இருந்த காலம் அது).
அப்படி இருந்தபோது ஒரு சந்நியாசி வந்து பிச்சை வாங்கிய பின் அந்த ஸ்திரீயோடு
“அம்மா நீங்கள் கவலைப்பட வேண்டாம்.
சாஸ்தாங்கோட்டைக்குச் சென்று சாமியைத் தரிசித்து வழிபாடுகள்
செய்வதாக வேண்டிக் கொண்டால் சந்ததி உண்டாகும்.” என்று சொல்லிச் சென்றார். சந்நியாசி சொன்ன
வாக்குகள் நிச்சயம் பலிக்கும் என்று ஸ்த்ரீ நம்பினாள்.
அடுத்த நாளே அவள் கணவருடன் சாஸ்தாங்கோட்டைக்குச்
சென்று சாமியைத் தொழுது
‘தான் ஒரு பெண் குழந்தையைப் பெற்றால் குழந்தையின் அன்னப் பிராசனம் சாமியின் நடையில் செய்து முடித்து மூன்று பறை அரிசி கொண்டு சோறுண்டாக்கி குரங்குகளுக்குக் கொடுப்பதாகவும்,
மூன்று நாழி அரிசி மீன்களுக்குக்
கொடுப்பதாகவும் வேண்டிக் கொண்டாள்.
ஒரு மாதம் போலும் ஆகவில்லை.
அவளுடைய கணவன் ஏதோ காரணத்தால் சம்பந்தம் ஒழிவாக்கி (விவாக ரத்து செய்து) வீட்டை விட்டுச் சென்றான். அவள் வேறு ஒருவரிடம் சம்பந்தம் பேசி முடித்தாள். அப்படி அந்த புதுக் கணவன் மூலம் கர்ப்பம் தரித்து ஒரு பெண் குழந்தையைப் பிரசவித்தாள்.
குழந்தைக்கு ஆறாம் மாதம் ஆனவுடன் சோறு கொடுக்க குழந்தையை எடுத்துக்கொண்டு
சாஸ்தாங்கோட்டை வந்தனர். கோயிலில் வழிபாட்டிற்கு
வேண்டிய ஏற்பாடுகள் செய்தபின்
ஏரியில் குளித்து முடித்து கோயிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து கிழக்கு நடையில் குழந்தையுடன் இருந்தனர்.
கோயில் பூசாரி தீர்த்தம், பிரசாதம் தந்தபின் இலையில் சோறு, பாயசம் முதலியவையும் பரிமாறினார்.
அப்போது குழந்தை மடியில் இருக்காமல் யாரோ அடித்தது போன்று திமிறிக் கொண்டு அழுது முரண் பிடித்தது.
ஆகவே அம்மா ஒரு துண்டை தரையில் விரித்து அதில் குழந்தையைக் கிடத்தினாள். அந்த சமயம்
குரங்குத் தலைவன் சுக்ரீவன் ஓடிச் சென்று குழந்தையை எடுத்துக்கொண்டு
ஒரு பெரிய மரத்தில் ஏறி உட்கார்ந்து கொண்டது.
சுக்ரீவன் எடுத்தபோதே குழந்தை அழுகையை நிறுத்தி விட்டு கையையும் காலையும் ஆட்டி சிரித்தது.
குரங்கு கையில் குழந்தை இருப்பதைக் காண எல்லோரும் கூடிவிட்டனர்.
குழந்தையின் பெற்றோருக்குக் குழந்தையை எப்படி மீட்பது என்ற கவலை கூடியது.
குரங்குகள்
யாவும் நடையில் கூடிவிட்டன.
குரங்கு குழந்தையை எடுத்ததன் காரணம் யாருக்கும் விளங்கவில்லை.
இது போன்ற தருணங்களில் ஆலோசித்துக்
காரியங்களை முடிவு செய்யும் பொறுப்பு உண்ணித்தானுடையது.
உண்ணித்தான் பெற்றோர்களிடம் “நீங்கள் குரங்குகளுக்கும் மீன்களுக்கும் ஏதாவது கொடுப்பதாகப்
பிரார்த்தித்தீர்களா?” என்று வினவினார். குழந்தையின் தாய் “இக்குழந்தையை நடையில் இருத்தி சோறு கொடுக்கும் நாளில் மூன்று பறை அரிசிச் சோறு,
மற்றும் கறிகளுடன் குரங்குகளுக்குக் கொடுப்பதாகவும்,
மூன்று நாழி அரிசி மீன்களுக்குக்
கொடுப்பதாகவும் வேண்டி இருந்தேன். அந்த வேண்டுதலை மறந்து விட்டேன். தற்போதுதான் அது ஞாபகத்திற்கு வந்தது” என்று கூறினார்.
“அப்படியானால் குரங்குகளுக்கு விருந்து, மற்றும் மீன்களுக்கு அரிசி கொடுப்பது ஆகியவற்றை
நாளை நடத்துவதாக உறுதி அளித்து 101 பணம் நடையில் காணிக்கை செலுத்துங்கள்.
எல்லாம் சரியாகும். சரியாக்கலாம். நாளை இந்த வழிபாடுகளைத் தீர்த்து
விட்டே நீங்கள் ஊருக்கு மடங்க வேண்டும்…பணம் தற்போது கையில் இல்லை என்றால் நான் கடன் தருகிறேன்.
பின்னர் கடன் தீர்த்தால் போதும்.”
என்று சொன்னார்.
குழந்தையின் பெற்றோர் அதற்குச் சம்மதித்தனர். உண்ணித்தானிடம் 101 பணம் கடன் வாங்கி நடையில் காணிக்கை
செலுத்தினர். சுக்ரீவன் குழந்தையைக் கொண்டு வந்து துண்டில் கிடத்தியது. சோறூட்டல் நடந்து முடிந்தது. பெற்றோர் அன்று சாஸ்தாங்கோட்டையிலேயே தங்கினர்.
அடுத்த நாள் குரங்குகளுக்கு விருந்தும்
மீன்களுக்கு அரிசியும் கொடுக்கப்பட்டது. கொட்டாரக்கரைக்கு திரும்பிச் சென்று இரண்டு நாளில் சாஸ்தாங்கோட்டை
வந்து உண்ணித்தானுடைய கடனைத்
தீர்த்தனர்.
கொல்ல வருடம்
721, விருச்சிக மாதம் 5ஆம் தேதி ஜெயசிம்ஹ நாடு
(தேசிங்கு நாடு) அரசர் உண்ணி கேரளவர்மா பண்டாரத்தில்
ராஜா சாஸ்தாங்கோட்டைக்கு வந்து
“ஆறு பறை” என்ற சிறப்பு வழிபாடு செய்து சாமியைத் தரிசித்தார். தினசரி உஷ
பூஜைக்கு “ஒன்றே கால் இடங்கழி அரிசி”
கட்டளையையும் ஏற்படுத்தியதாக ஒரு கல்வெட்டு காணப்படுகிறது.
கொல்லவருடம்
933 ஆம் ஆண்டு மார்த்தாண்ட வர்மா மஹாராஜா எட்டு வீட்டில் பிள்ளைமாரிடம் இருந்து தப்பித்து மாறு வேடத்தில் அலைந்த காலத்தில் ஒரு நடுப்பகல் வேளையில் கண்ணக்கோடு (குன்னத்தூர் தாலுக்காவில் உள்ளது) என்ற இடத்தை அடைந்தார். அங்கு இருந்த ஒரு மாளிகைக்குச் சென்று
“நான் நேற்று முதல் ஆகாரம் கழிக்கவில்லை. பசியும் தாகமும் என்னை வாட்டுகிறது.
ஆகையால் ஆகாரத்திற்கு ஏதாவது ஏற்பாடு செய்யமுடியுமா” என்று கேட்டார். அதைக் கேட்ட அந்த வீட்டில் வசிக்கும் செல்வந்தர்
வேலையாளைக் கூப்பிட்டு “வந்திருக்கிறவருக்கு இரண்டு உப்பு மாங்காய் எடுத்துக் கொடு” என்று கூறினார். அதைக் கேட்டவுடன் மார்த்தாண்ட வர்மா அவ்விடம் விட்டு நீங்கினார்.
அவ்வாறு சென்று அடுத்துள்ள ஒரு வீட்டில் யாசித்தார்.
அந்த வீட்டில் ஆண்கள் யாரும் இல்லாமல் இருந்தது. ஒரு வயதான பெண் மாத்திரம் முற்றத்தில்
நின்று கொண்டிருந்தாள். மார்த்தாண்ட வர்மா
“ஆகாரம் ஏதாவது கிடைக்குமா” என்று கேட்டார்.
அதைக் கேட்ட அந்தப் பெண் அவர் ஒரு பிராமணன் என்று நினைத்து
“நான் ஆகாரம் கொடுத்தால் நீங்கள் உண்பீர்களோ என்னவோ? ஆகவே அடுத்துள்ள பிராமண வீட்டில் சமையல் பொருட்களை கொண்டு வைக்கிறேன்.
நீங்கள் குளித்து வாருங்கள். ஆகாரம் தயாராக இருக்கும்.” என்று கூறி குளம், மற்றும் பிராமணருடைய வீடு ஆகியவற்றை சுட்டிக் காட்ட ஒரு ஆளையும் கூட அனுப்பினாள்.
மார்த்தாண்ட வர்மா குளித்து,
பூஜைகளை முடித்துவிட்டு அங்கு சென்றபோது உணவு தயாராக இருந்தது.
உண்ட திருப்தியுடன் அங்கிருந்து படி இறங்கும்போது இரண்டு
வீட்டுக்கார்களுடைய விவரங்களையும் (யார் எவர்)
கேட்டறிந்தார். முதலில் சென்ற வீடு ‘சிற்றுண்டியில் தரகன்’ என்ற பணக்காரனுடையது. அந்த வீட்டில் உள்ளவர் செல்வம் மிக்கவராயினும் வருபவர்களுக்கு தண்ணீர்
போலும் தராத கருமிகள்.
இரண்டாவது சென்ற வீட்டுக்காரர்கள் செல்வம்
இல்லாதவராயினும் இரக்க குணம் உள்ளவர்களாயிருந்தனர்.
இரண்டு வீட்டுக் காரர்களும் சுரியானி
கிருத்துவர்கள் (Syrian
Christian) என்று அறிந்தார்.
ராஜத் துரோகிகளான எட்டு வீட்டில் பிள்ளைமாரை வதைத்த பின் மார்த்தாண்ட வர்மா, மகாராஜா ஆனவுடன்
காயங்குளம் முதலிய பிரதேசங்களையும் பிடித்தெடுத்தார்.
தனக்கு அன்று உணவளித்த ‘நெல்லி மூட்டில்’ குடும்பத்தினருக்கு வரி நீக்கி பல நிலங்களைத் தானமாகக் கொடுத்தார். மேலும் அவர்களுக்கு “முதலாளி” என்ற கவுரவ பட்டத்தையும் தந்தார்.
‘சிற்றுண்டியில் தரகன்’ சொத்துக்களை பறிமுதல்
செய்து சாஸ்தா கோயிலுக்கு இனாமாகத் தந்தார். அந்த சொத்துக்களில் இருந்து வரும் வருமானத்தில் ஒவ்வொரு சனியன்றும் நாற்பத்தி
ஒன்று பறை அரிசி கொண்டு அன்னதானமும், ஐந்து பறை
அரிசி பிராமண போஜனத்தினும்,
பாக்கியுள்ளது சேமிப்பாவாகவும் வைக்க கட்டளை இட்டார்.
பின்னர் ஏற்பட்ட மாற்றங்களால் அந்த அளவுகள் குறைக்கப்பட்டு அன்னதானத்திற்கு
மூன்று பறை ஐந்து இடங்கழி அரிசியும், பிராமண போஜனத்திற்கு ஒரு பறை எட்டு இடங்கழி அரிசியும் ஆக சுருக்கப்பட்டது. பாக்கி உள்ளது
கொல்லம் ஆனந்தவல்லீஸ்வரர் கோயில்
பிராமண போஜனத்தினும், ஆசிரமத்து உணவுக்கும்
ஆக ஏற்பாடுகள் உண்டாக்கப்பட்டன.
சாஸ்தா கோயிலின் வெண்கலப் பாத்திரங்களில்
“சிற்றுண்டியில் தரகன் வகை” என்று கொத்தி இருப்பதை தற்போதும் காணலாம்.
பிரிட்டிஷ் ரெசிடெண்டும் பின்னர் திருவிதாங்கூர் திவானும் ஆக இருந்த மன்ரோ பிரபு, தேவஸ்வம் நிர்வாகங்களை சீர்திருத்தி முறையான விதிகளை ஏற்படுத்திய காலத்தில் சாஸ்தாங்கோட்டை குரங்குகளுக்குச் சோறு, மீன்களுக்கு அரிசி என்று தினமும் கொடுப்பது அனாவசிய செலவு என்று அவற்றை நிறுத்த கட்டளை இட்டார். குரங்குகளுக்குச் சோறு கிடைக்காது போன பின் குரங்குகள் மற்றவர்களுக்கும், பக்தர்களுக்கும் கிடைக்கும் பிரசாதம் மற்றும் பழங்களைப் பிடித்து பறித்து உண்ணத் தொடங்கின. பக்தர்களைக் கடித்தல், பூஜாரிமார்களை அடித்தல் என்று உப்த்திரவங்கள் செய்தன. அப்படி கோயில் சிப்பந்திகளுக்கும் சோறு கிடைக்காமல் போனதும், அவர்கள் கோயில் ஊழியத்தை விட முடியாததாலும் அவர்கள் எல்லோரும் மன்ரோ பிரபுவைச் சென்று கண்டு விவரங்கள் கூறினர்.
குரங்குகள் எல்லாம் அங்கு அவர் முன் வந்து அணி வகுத்தன.
மன்ரோ, “நீங்கள் அக்கிரமம்
காட்டுவது ஏன்?” எனக் கேட்டார். வானரங்கள் வயறைத் தொட்டுக்
காட்டின.
“உங்களுக்கு இங்கு சோறு தரும் வழக்கம் எப்படி யாரால் உண்டாக்கப் பட்டது. அதற்கு ஏதேனும் ஆதாரம் உண்டா?”
சுக்ரீவன் முன் வந்து வாயில் அடக்கி வைத்திருந்த செப்புத் தகடை
எடுத்து கழுவி அவர் முன் வைத்தான். அது காயங்குளம் ராஜா எழுதித் தந்த பட்டயம் ஆகும். அதை வாசிக்கக் கேட்டு பிரபு சோறு தருதல் சரியானது என்று ஒப்புக் கொண்டார். அதன் பின் சுக்ரீவன் பட்டயத்தை எடுத்துக்
கொண்டான்.
முதலைக்குச் சோறு கொடுப்பது
மாராருடைய வேலை அல்லவா? மாரார் ஒரு நாள் வேறு எங்கோ சென்றதால், அக்குடும்பத்தில் உள்ள ஒரு பையன் முதலைக்குச் சோறு கொண்டு
போய் கொடுத்தான். முதலை வந்து சோறு சாப்பிடும்போது பையன்
ஒரு பெரிய கல்லை எடுத்து முதலையின் தலையில் போட்டான். முதலை சப்தம் உண்டாக்கியது. சப்தம் கேட்டு
மற்றவர்கள் வந்து பார்க்கும்போது முதலை
செத்துப்போய் தண்ணீரில் மிதந்து கொண்டு இருந்தது. அதன் பின் முதலைக்குச் சோறு கொடுக்கும் வழக்கம் நின்றது.
பந்தள ராஜாவின் காலத்திற்குப் பின் கோயில் காரியங்கள் மேற்பார்வை பொறுப்பு
உண்ணித்தானுடைய குடும்பத்தில் உள்ள மூத்த காரியஸ்தருடையதாகியது.
அவர்கள் சாமியின் பேரில் பக்தியும் விசுவாசமும் உள்ளவர் ஆக இருந்தனர். அவர்கள் காலையில் குளித்து சாமி தரிசனம் செய்யாமல் தண்ணீர் போலும் குடிக்க மாட்டார்கள்.
ஆனால் காலப் பழக்கத்தில் எல்லாம்
மாறத் தொடங்கின.
பந்தள ராஜா காலத்திற்குப் பின் மீன்களுக்கு அரிசி கொடுப்பது உண்ணித்தானுடைய
வேலை ஆகியது. ஒரு உண்ணித்தான்
சுத்தம் இல்லாமல் மீன்களுக்கு
அரிசி இட்டார். மீன்கள் அரிசியை புறக்கணித்தன. எனவே மீன்களுக்கு அரிசி கொடுப்பதும் நிறுத்தப்பட்டது.
சாஸ்தாங்கோட்டையில் இருந்த குரங்குகள் பிராமணர் அல்லாது மற்றவர்கள் தரும் சோறோ,
மீன், மாமிசம் போன்ற
அசைவமோ உண்பதில்லை. தினமும் சாந்திக்காரன் மட்டுமே குரங்குகளுக்குச்
சோறு கொடுக்கவேண்டும் என்பது கட்டாய விதி.
ஒரு சமயம் சில குரங்குகள் கோயிலின் அடுத்துள்ள ஒரு மரைக்காயருடைய வீட்டில் அவர்கள் சமைத்து வைத்திருந்த மீன்,
மாமிசம் போன்றவற்றை புசித்தன. அது மற்ற குரங்குகளுக்குப் பிடிக்கவில்லை. அடுத்த நாள் சோறு கொடுக்கும் சமயம் குரங்குகள் மதிலின் கிழக்கு நடையில் எப்போதும் போல் ஆஜர் ஆயின. அசைவம் சாப்பிடாத மற்ற குரங்குகள், அசைவம் சாப்பிட்ட குரங்குகள் கோயில் சோறு உண்ண சம்மதிக்கவில்லை.
பெரிய சண்டை மூண்டது. இப்படி சண்டையில் சோறு வீணானது. இந்த அடிதடி ஒரு மாதம் வரை நீண்டு நின்றது. சோறு வீணாவதால் சோறு கொடுப்பது நிறுத்தப்பட்டது.
ஆனாலும் ஆண்டுக்கு ஒரு முறை
பத்தாம் உதயம் அன்று
(சித்திரை 10) குரங்குகளுக்கு விருந்து அளிக்கப்படுகிறது. மற்ற நாட்களில்
பக்தர்கள் வழிபாடாகச் சோறு கொடுப்பது உண்டு.
மாமிசம் உண்ட குரங்குகள் கோயிலில் இருந்து மற்ற குரங்குகளால் துரத்தப்பட்டு
அவை ஊர் சந்தைக்குக்
குடி பெயர்ந்தன. கோயில் குரங்குகள் கோயிலை விட்டு வேறு எங்கும் செல்வதில்லை.
வழிபாடு சோறு ஊட்டு நடக்கும் நாட்களில் சந்தைக் குரங்குகளும்
மதில் அருகில் வந்து சேரும். தனித்தனி பந்திகளில் குரங்குகளுக்குத்
தனித் தனி பாத்திரங்களில் இருந்து
சோறு பரிமாறப்படும். சந்தைக் குரங்குகள்
முதலில் சாப்பிட்டு அவைகள் சென்ற பின்னரே கோயில் குரங்குகள் சாப்பிட ஆரம்பிக்கும்.
ஆனால் எந்தப் பந்தியிலும் அசைவ பதார்த்தங்கள் பரிமாறப்பட மாட்டாது.
தினமும் நிறைய பக்தர்கள் வருவதால் குரங்குகளுக்குச் சோறு ஊட்டு
வழிபாடு முடங்காமல் நடக்கிறது.
குரங்குகளின் மஹாத்மியம் பற்றி சொல்வதற்கு நிறைய உண்டு. விஸ்தாரமாக விவரிக்கவில்லை.
ஆனாலும் சுமார் 30 வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு சம்பவத்தை மட்டும் கூறி இந்த நீண்ட உபன்யாசத்தை முடிக்கிறேன்.
கொல்லவருடம்
1065 இல் நடந்தது. ஐந்து பேர் குழு ஒன்று சாஸ்தாங்கோட்டைக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர். அவர்களில் நால்வர் வழிபாடாகக் குரங்குகளுக்குச் சோறும், மீன்களுக்கு அரிசியும் ஏற்பாடு செய்தனர். ஒரு ஆள் மாத்திரம் வழிபாட்டிற்கு ஒன்றும்
தரவில்லை. “நான் ஈஸ்வரனுக்கு லஞ்சம் கொடுக்க விரும்பவில்லை. குரங்குகளுக்குச் சோறு ஊட்டு என்பது மூட நம்பிக்கை என்பது என் கருத்து.”
என்று சொன்னார்.
ஐந்து பேரும் குளிக்கச் சென்றனர்.
எல்லோரும் வேட்டியை அவிழ்த்து ஒரு கல்லின் மேல் வைத்து விட்டுக் குளிக்க ஏரியில்
இறங்கினர். அப்போது ஒரு வானரம் வழிப்பாட்டிற்கு
ஏற்பாடு செய்யாத ஆளின் வேட்டியை மாத்திரம் எடுத்துக்
கொண்டு ஒரு மரத்தின் மேல் ஏறி அமர்ந்து கொண்டது. வேட்டி நஷ்டப்பட்ட ஆள் கல்லெடுத்து குரங்கின் மேல் வீசினான்.
குரங்கு அந்த கல்லை பிடித்து அந்த ஆளின் மேல் எறிந்தது. அவனுடைய மண்டை உடைந்தது. பின்னர் அக்குரங்கு வேட்டியில் முடிந்து வைத்திருந்த
பணத்தை எல்லாம் எடுத்தது.
அப்பணத்தை ஒவ்வொன்றாக ஏரியில் எறிந்தது.
பணம் தீர்ந்தவுடன் வேட்டியை சுருட்டி அந்த ஆளின் முகத்தின் மேல் எறிந்தது.
‘பணம் திரும்பக் கிடைக்க நடையில் வேண்டிக்கொள்’ என்று, கூட வந்தவர்கள் கூறினர். வேறு ஒரு ஆள் அவரிடம்
‘ஏரியில் வீசப்பட்ட பணம் முழுவதையும் காணிக்கையாக வழிபாட்டிற்குத்
தந்து குரங்குகளுக்குச் சோறு ஊட்டு
நடத்துவதாக வேண்டிக் கொள்ளுங்கள்’ என்று கூறினார்.
அவ்வாறு வேண்டிக்கொண்டதும்
குரங்குகள் ஏரியில் மூழ்கி எறிந்த எல்லாப் பணத்தையும் சேகரித்து
ஒரு சிரட்டையில் கொண்டு வந்து வைத்தன. நஷ்டப்பட்டவர் அதை வழிபாடாக நடையில் வைத்தார். பாதிப் பணம் சாமிக்கு காணிக்கையாகவும், மீதிப் பாதி
சோறு ஊட்டு வழிபாடாகவும் ஏற்பாடு செய்தார். இவ்வாறு செய்தும் அவர் ஏற்பாடு செய்த சோற்றை குரங்குகள் ஏற்கவில்லை.
விருப்பம் இல்லாமல் தரும் சோறு வேண்டாம் என்று புறக்கணித்தன.
தற்போது (1925) திருவனந்தபுரத்தில் வலிய(பெரிய)
கொட்டாரத்தில் மேனேஜர் சங்கரன் தம்பி அவர்களுடைய முயற்சியால் சாஸ்தாங்கோட்டை கோயில்
புனருத்தாரணம் செய்யப்பட்டு பொலிவுடன் விளங்குகிறது.
ஊசிக்குறிப்பு.
கொஞ்சம் சரித்திரம்
திருவிதாங்கூர் என்ற ராஜ்ஜியம் மார்தாண்ட வர்மாவினால் உண்டாக்கப்பட்டது. அவர் காலத்துக்கு முன் கேரளமும்,
அடுத்துள்ள
தமிழ்நாட்டின் சில பகுதிகளும் குறு நில மன்னர்களாலும், நிலப் பிரபுக்களாலும்
ஆளப்பட்டு வந்தது. அப்படி வேணாடு என்ற திருவனந்தபுரம்,
கன்னியாகுமரி நிலப்பகுதிகள் ஆய் வம்சத்தில் வந்தவர் என்று கூறிக்கொண்ட ராமவர்மா
என்ற மன்னரின் ஆளுகையில் இருந்தது. மன்னர், பெயருக்குத்தான் மன்னர். உண்மையில் ஆண்டு கொண்டிருந்தவர் நிலப்
பிரபுக்களான எட்டு வீட்டில் பிள்ளைமார்.
எட்டரை யோகம் என்ற அமைப்பு (council) முக்கியமான காரியங்களை தீர்மானிக்கும். எட்டு வீட்டில்
பிள்ளைமார் ஒவ்வொருவருக்கும் ஒரு ஓட்டு, மன்னருக்கு அரை ஓட்டு என்று இருந்தது.
ராமவர்மா ராஜாவிற்கு இரண்டு மகன்கள் பப்புத் தம்பி, ராமன் தம்பி, கொச்சு உம்மிணி தங்க என்ற மகளும் பிறந்தனர்.
மார்த்தாண்ட வர்மா கொச்சும்மிணி தங்க யை
மணக்க விரும்பியதாகவும், அந்த பந்தத்தில்
பிறக்கும் குழந்தையை மார்த்தாண்ட வர்மா காலத்திற்குப் பின் அரச பட்டம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கையை மார்த்தாண்ட
வர்மா நிராகரித்தார் என்று
வேறு ஒரு கதை.
என்னவானாலும் மார்த்தாண்ட வர்மா, ராம வர்மா காலம் செய்தபின்,
பப்புத் தம்பி, ராமன் தம்பி, எட்டு வீட்டில் பிள்ளைமார் ஆகியோரையும்,
அவர்களது ஆண் சந்ததிகளையும் கொன்று
அரியணை ஏறினார். பின்னர் அடுத்துள்ள ராஜ்ஜியங்கள் ஒவ்வொன்றாகப்
பிடித்தெடுத்து திருவிதாங்கூர் என்ற பெரிய ராஜ்யத்தை உண்டாக்கினார். அப்படித்தான் பந்தள ராஜா, காயங்குளம் ராஜா ஆகியோரது ராஜ்ஜியங்கள் பறி போயின.
மார்த்தாண்ட வர்மா செய்த நம்பிக்கை துரோகம், பொய் சத்தியம், கொலைகள் போன்றவற்றைப் பற்றி அறிய இந்தக் சுட்டியில் வாசிக்கலாம்.
மார்த்தாண்ட வர்மா கேரளத்தின் ஔவுரங்கசீப்
என்று கூறலாம்.
Very interesting. நாட்டார் கதை போல, உண்மையும் புனைவும் கலந்த கதை
பதிலளிநீக்குநவீன சில சொற்தொடற்கள் எனக்குப் புரியாமல் இருக்கின்றன. நாட்டார் கதை என்றால் என்ன, நெல்லை?
பதிலளிநீக்குஇலக்கியம், புராணம், சரித்திரம், என்று வரையறுக்கப்பட்ட எந்த இலக்கணத்துக்கும் உட்படாத சாதாரண மனிதர்களின் சொல்லாடலில் கூறப்படும் கதை " நாட்டார் கதை" என்று எனது அபிப்பிராயம். காத்தவராயன்-ஆர்யமாலா கதை, மதுரை வீரன் கதை போன்ற கதைகள் நாட்டார் கதைகள் எனக் கூறப்படுபவை.
நீக்குJayakumar
அர்த்தம் தெரிந்து சில வார்த்தைகளை உபயோகித்தால் அது மனத்திற்கு சம்பந்தப் பட்டதாய் இருக்கும்.
நீக்குஎன்னுடைய சந்தேகம் நாட்டார் என்ற வார்த்தைக்கு நேரடியான அர்த்தம் என்ன என்பதே.
Folklore - வழிவழியாகச் சொல்லப்படும் கதை. சரித்திரம் புனைவு கலந்தது
நீக்குஒரே ஒரு ஒற்றை வார்த்தை தான்.
நீக்குVery interesting.
அந்த ஒற்றை வார்த்தையிலேயே
ஜெஸி ஸாருக்கும்
நெல்லைக்கும் வித்தியாசமான பொருள் கொள்ளல் இருக்கும் போலிருக்கே?
இன்னொருத்தர் வந்தால் நாட்டார் என்ற வார்த்தைக்கு இன்னொரு அர்த்தம் சொல்வாரோ?
நானும் வந்திருக்கின்றேனே!..
நீக்குநாட்டார் என்றால் நாட்டை ஆள்பவர் என்று எடுத்துக் கொள்ளலாமோ ?
நீக்குஹி.. ஹி.. ஹி..
-கில்லர்ஜி
இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
பதிலளிநீக்குபிரார்த்திப்போம்..
எல்லாருக்கும் இறைவன்
நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..
நலம் வாழ்க..
நல்லவிதமாக கதை நிறைவு பெற்றதற்கு மகிழ்ச்சி..
பதிலளிநீக்குதலைமுறை மாற்றம்..
பதிலளிநீக்குஅடுத்து வரும் மனிதர்களால் பழக்க வழக்கங்கள் மாறிப்போவதும் கைவிடப்படுவதும் நிதர்சனம்..
சைவத்தின் குரங்குகள்/ மனிதர்கள் புலால் உண்ணிகளாக
பதிலளிநீக்குமாறிப்போவது காலக் கொடுமை..
குரங்குகள் ஒதுக்கி வைத்தால் அது மட்டுமே நியாயம்..
இதற்கு மேலும் எழுதலாம்.. அரசியலாகி விடும்..
பதிலளிநீக்குஊரார் - ஊர்க்காரர்கள்
பதிலளிநீக்குவீட்டார் - வீட்டில் உள்ளவர்கள்..
தலத்தார் - கோயிலைச் சார்ந்த பணிகளில் இருப்பவர்கள்..
நாட்டார் - அந்தந்த வட்டாரத்து மக்கள்..
தஞ்சை என்ற நகரத்தைச் சுற்றி நாடு என்ற பெயரில் பல ஊர்கள் உள்ளன.. ஊருக்கு ஊர் பற்பல வழக்கங்களும் இருக்கின்றன..
அவை தொகுக்கப்படும் போது
நாட்டார் வழக்கங்கள் என்றோ வழக்கு என்றோ அமையலாம்..
வழக்கு என்று வரும் போது அந்த சொல்லுக்கு வேறு அர்த்தம் தான்- என்று சொல்கின்றார்கள் இப்போது..
நாட்டார் என்ற வார்த்தைக்கு நீங்கள் வேறொரு அர்த்தம் சொல்கிறீர்கள் தம்பி.
நீக்குபொறுக்க மாட்டாமல் கூகுளில் தேடினேன்.
நாட்டார் என்றால் நாட்டுப்புறம் என்று சொன்னது. அது. எரிச்சலாக வந்தது.
எனது கருத்து சரியாக இருக்கின்றதா இல்லையா?..
நீக்குகூகுளுக்கு என்று தனி அறிவு இருக்கின்றதா?..
நீக்குஇங்குள்ளோர் ஏற்றி வைப்பது தானே!..
மூன்று பேரின் கருத்தும் மூன்றாக வெவ்வேறாக இருக்கிறது என்பது தான் இதனால் அறியப்படுகிற செய்தி. அதைத் தெரியப்படுத்தவே இந்த முயற்சி, தம்பி.
நீக்குநாட்டார் கதைகள் என்றால் நாட்டுப்புறக் கதைகள். தாங்கள் அறிந்த நிகழ்வுகளைக் கொஞ்சம் கற்பனை கலந்து...அது வழி வழியாக வருவதால் ஒவ்வொருவர் சொல்வதிலும் அடிப்படைக் கதை ஒன்றாக இருந்தாலும் சொல்லும் விதத்திலும் வார்த்தைகளிலும் சில மாற்றங்கள் வர வாய்ப்புண்டு.
நீக்குநாட்டார் பாடல்கள் - நாட்டுப்புறப்பாடல்கள் என்பது போல
கீதா
நாட்டார் எனில் அந்தக் குறிப்பிட்ட நாட்டில் காலம் காலமாக வசித்து வரும் பூர்வ குடிகள் எனப் பொருள் கொள்ளலாம்.
நீக்குஇந்தக் கதை என்னுள் சில உன்னத கருத்துக்களை விதைத்தது. ஆனால் சொல்லப்பட்ட விதத்தில்
பதிலளிநீக்கு-- வார்த்தைகளை உபயோகித்த விதங்களில் -- சில குறைபாடுகளை உணர்ந்தேன். அது சங்குண்ணி காலத்து
வழங்கங்களைச் சார்ந்து அமைந்து விட்டனவையா, தெரியவில்லை.
நல்ல கதை...
பதிலளிநீக்குஅனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குகதை நன்றாக இருக்கிறது.
பதிலளிநீக்கு//சாஸ்தாங்கோட்டை கோயில் புனருத்தாரணம் செய்யப்பட்டு பொலிவுடன் விளங்குகிறது.//
திருவனந்தபுரத்தில் இப்போது யாரும் இல்லை, தாய் மாமா இருந்தால் அவர்களை பார்க்க போகும் போது போய் பார்க்கலாம்.
மன்றோ பிரபுவின் படம் மெட்ராஸ் கவர்னர் ஆக இருந்த தாமஸ் மன்றோ படம் ஆகி விட்ட்து. ஜான் மன்றோ திவான் வெகு ஒருவர். தவறுதலுக்கு வருந்துகிறேன்.
பதிலளிநீக்குJayakumar
இதில் வருந்துவதற்கு
நீக்குஏதும் இல்லை, ஜெஸி ஸார்.
ஜெகே அண்ணா ஸ்ரீராமிற்குச் சொல்லியாச்சு ஆனால் அவர் இடத்தில் நெட் இல்லை அவர் வீடு வந்த பிறகுதான் மாற்ற முடியும் என்று நினைக்கிறேன்.
நீக்குகௌ அண்ணா பார்த்தால் மாற்றக் கூடும்
கீதா
இன்றைய பகுதி மிகவும் பிடித்திருந்தது. சுவாரசியமும் கூட.
பதிலளிநீக்குகீதா
கதை/வரலாறு சுவாரசியம். மார்த்தாண்ட வர்மாவைப் பற்றிய உண்மைகள் அதிர்ச்சி அடைய வைத்தன.
பதிலளிநீக்குமார்த்தாண்டவர்மா பற்றி அந்தச் சுட்டியில் வாசித்திருக்கிறேன், ஜெ கே அண்ணா.
பதிலளிநீக்குமார்த்தாண்டவர்மாவின் மறு பக்கம் அறிந்ததே நண்பர் துளசி எனக்குச் சொல்லி அதன் பின் இணையத்தில் வாசிச்சப்ப இந்தச் சுட்டி கிடைத்து வாசித்தேன்.
கீதா
தெரியாத கதை. படித்து அறிந்தோம் சுவாரசியமாக சென்றது .
பதிலளிநீக்குகேரளத்துக் கதை பெருங்கதை...
பதிலளிநீக்குபெருங்கதையா?உதயணனின் கதையைச் சுவைபடச் சொல்லும் பெருங்கதை
நீக்குநினைவுக்கு வருகிறது.
பதிவை வாசித்தவர்களுக்கும், வாசித்து கருத்துக் கூறியவர்களுக்கும் மிக்க நன்றி. சங்குண்ணி 200க்கும் மேற்பட்ட ஐதீகக் கதைகள் எழுதியுள்ளார். நான் இங்கு மொழி பெயர்த்தது சில மட்டுமே. நன்றி.
பதிலளிநீக்குJayakumar
நன்றி JKC ஸார்.. நீங்கள் என்ன மாதிரி சூழ்நிலையில் இந்த இரண்டாம் பாகத்தை எழுதினீர்கள், எவ்வளவு சிரமம் எடுத்து இந்த வேலையை முடித்தீர்கள் என்று அறிந்தேன். உங்கள் அந்த அர்ப்பணிப்பு பாராட்டத்தக்கது. கற்றுக்கொள்ளபப்ட்ட வேண்டியது. நன்றி.
நீக்குஆமாம் ஸ்ரீராம், ஜெகேசி அண்ணாவின் அர்ப்பணிப்பு, அசாத்தியம். மொழிபெயர்ப்பு என்பது அத்தனை எளிதல்ல. அதுவும் எழுதி, கண்ணினியில் தட்டி, அதன் பின் இப்பகுதியை அனுப்பியிருக்கிறார். Highly sincere and dedicated!!! ஆம் நாம் எல்லாரும் கற்றுக் கொள்ள வேண்டிய ஒன்று. அண்ணாவைப் பாராட்ட வேண்டும்.
நீக்குகீதா
ஜேகே சாருக்கு எங்கள் பிரார்த்தனைகள். என்ன பிரச்னை எனச் சொன்னால் நாங்களும் தெரிஞ்சுப்போமே!
நீக்குவிட்டுப்போன ஒரு வேலையை குறித்த காலத்துக்குள் செய்து முடிக்க வேண்டிய சூழ்நிலையில் ஏகப்பட்ட இயற்கை இடைஞ்சல்கள் - மின்சாரம் இல்லாதது, இன்ன பிற தடைகளை மீறி வைராக்கியமாக குறித்த நேரத்தில் தயார் செய்து அனுப்பினார்.
நீக்கு//சொல்லப்பட்ட விதத்தில்-- வார்த்தைகளை உபயோகித்த விதங்களில் -- சில குறைபாடுகளை உணர்ந்தேன். அது சங்குண்ணி காலத்து
பதிலளிநீக்குவழங்கங்களைச் சார்ந்து அமைந்து விட்டனவையா, தெரியவில்லை.//
ஜீவி சார் எழுத்தாளரானதால் நடையில் வித்தியாசம் ஏற்பட்டுள்ளதை எளிதில் கண்டு பிடித்து விட்டார். மொழிக்கு மொழி வாக்கியங்கள் அமைப்பும், வார்த்தைகள் வரிசையும் மாறுபடும். ஆகையால் மொழிக்கு ஏற்ப வாக்கியங்களாய் சீர் செய்து ஒரு ஆற்றொழுக்காகக் கதையை கொண்டு செல்வதில் தான் உள்ளது மொழிபெயர்ப்பின் வெற்றி. அந்த வகையில் இன்றைய மொழிபெயர்ப்பு திருத்தம் போதவில்லை.
பாராட்டுதல்களை தாழ்மையுடன் ஏற்றுக் கொள்கிறேன் நன்றி.
Jayakumar