வெள்ளி, 10 பிப்ரவரி, 2023

வெள்ளி வீடியோ : ஏங்கிய நாட்கள் நூறடி தோழி தூங்கிய இரவோ ஒன்றரை நாழி

உளுந்தூர்ப்பேட்டை ஷண்முகம் எழுதிய பாடலுக்கு குன்னக்குடி வைத்தியநாதன் இசை.  சீர்காழி கோவிந்தராஜன் குரலில் ஒரு அருமையான பாடல்... 

கண்ணபுரம் செல்வேன் கவலையெல்லாம் மறப்பேன்.
கண்ணனின் சன்னிதியில் எந்நேரமும் இருப்பேன்.
திருக்கண்ணபுரம் செல்வேன் கவலையெல்லாம் மறப்பேன்.

வண்ண வடிவழகை கண்குளிரக் காண்பேன்
எண்ணமெல்லாம் அவனின் இணையடியே என்பேன். கண்ணபுரம்...

நித்திய புஷ்கரனி நீரினிலே குளிப்பேன்
நிமிர்ந்த கோபுரத்தை கண்டு கைகள் குவிப்பேன்
உத்பலாவதக விமானத்தை நினைப்பேன்
உள்ளத்தில் அள்ளி வைத்தே உவகையிலே திளைப்பேன். கண்ணபுரம்...

கருட மண்டபத்தை கடந்து தொடர்ந்திடுவேன்
கண்ணாடி சேவை கண்டு கண்கள் கசிந்திடுவேன்.
பெருமான் சன்னிதி முன் பித்தாகி நின்றிடுவேன்
பிறவிப் பிணி அறுத்து உலகை வென்றிடுவேன். கண்ணபுரம்..

எட்டெழுத்தைச் சொல்லி கிட்ட நெருங்கிடுவேன்.
ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா
என்ற என்னை தெரிகிறதா என்றே கேட்டிடுவேன்.
கட்டி அணைத்தெனக்கு கை கொடுப்பான் கண்ணன்.
கற்பூரம் மணக்கின்ற கால் பிடித்தே உய்வேன்.

============================================================================================================

கடந்த வாரத்தில் இயக்குனர் டி பி கஜேந்திரன் உட்பட மூன்று திரைப் பிரபலங்கள் மறைந்தனர்.  இயக்குனர் கே. விஸ்வநாத்தின் மறைவு மனதை விட்டு நீங்கும் முன் பாடகி வாணி ஜெயராமின் துயர முடிவு.

பாடகி வாணி ஜெயராம் தனித்துப் பாடிய பாடல்களில் எனக்குப் பிடித்தது என்று ஒரு லிஸ்ட் வைத்திருக்கிறேன்.  இங்கு அந்த லிஸ்ட்டைத் தரவில்லை.  (விரும்பினால் இணைக்கிறேன்!)  இன்று வாணி ஜெயராம் நினைவாக இரண்டு பாடல்கள்.  இரண்டு பாடல்களுமே 'காலங்களில் அவள் வசந்தம்' படத்தில் இடம்பெற்ற பாடல்கள்.

1976 ல் வெளியான இந்தத் திரைப்படத்தில் முத்துராமன், சந்திரகலா, ஸ்ரீவித்யா, அசோகன் ஆகியோர் நடித்திருந்தனர்.  ஸ்ரீவித்யா தனது திருமணம் தடைப்பட்டதால் மனநிலை பிறழ்ந்து சகோதரியின் கணவனான முத்துராமனை மணந்து சரியாகி, தனக்கு உதவிய சகோதரியையே சந்தேகப்பட்டு அப்புறம் உண்மை உணரும் படம்.  நடிகர் அசோகன் கவுரவமான வேடத்தில் நடித்திருக்கும் படங்களில் ஒன்று.

எஸ் பி முத்துராமன் இயக்கத்தில், விஜயபாஸ்கர் இசை.  பாடல்கள் கண்ணதாசன் மற்றும் பஞ்சு அருணாச்சலம்.  இந்தப் படத்தில் நான் ரசிக்கும் SPB பாடல் ஒன்றும் உண்டு.  அதிலும் இணைக்குரல் வாணி ஜெயராம்தான்.

முதல் பாடல் மனநிலை பிறழ்ந்த ஸ்ரீவித்யா வீட்டிலிருந்து வெளியேறி பாடுவதாக வரும் பாடல்.  வாணி ஜெயராம் அவர்களின் இனிமையான குரலில் என்னென்ன பாவங்கள் என்று கேட்டு ரசிக்கலாம்.  'பாடும் வண்டை அழைத்து மாலையணிந்த என் மாப்பிள்ளையை எங்காவது பார்த்தாயா என்று கேட்கும் பாடல்.
பாடும் வண்டே பார்த்ததுண்டா
மாலை அணிந்த என் மாப்பிள்ளை
ஏண்டி தோழி என்ன செய்தாய்
எங்கு மறைத்தாய் கண்ணன்
எங்கே எங்கே எங்கே எங்கே எங்கே (பாடும்)
வாரி முடிக்க மலர்கள் கொடுத்தார்
வண்ண சேலை வாங்கிக் கொடுத்தார்
கோலம் திருத்தி காத்துக் கிடந்தேன்
கோவில் வழியை பார்த்துக் கிடந்தேன்
ஊர்வலம் எங்கே உறவுகள் எங்கே
உண்மை சொல்வாயடி எந்தன்
கண்ணாளன் வந்தார் இங்கே
எங்கே எங்கே எங்கே எங்கே எங்கே (பாடும்)
ஏங்கிய நாட்கள் நூறடி தோழி
தூங்கிய இரவோ ஒன்றரை நாழி
ஆலயம் பாடுது ஆனந்தம் வாழி
அவர் இன்றி கூவுது ஆயிரம் கோழி
கண்ணிலும் பார்த்தேன் கனவிலும் பார்த்தேன்
இன்று வந்தானடி எந்தன்
கண்ணாளன் வந்தார் இங்கே
எங்கே எங்கே எங்கே எங்கே எங்கே (பாடும்)


இரண்டாவது பாடல் திருமணம் நடைபெறப்போகிறது என்னும் நிலையில் சந்தோஷமாக பாடும் பாடல்.  'மணமகளே..  உன் மணவறைக்கு கோலம்..'  இரண்டாவது வரியிலேயே உச்சம் தொடும் பாடல்.

மணமகளே உன் மணவறை கோலம்
மணமகளே உன் மணவறை கோலம்
நாளை வருகின்றது
மாலை விழுகின்றது
கன்னி கழிகின்றது
.
மணமகளே உன் மணவறை கோலம்
.
மதுரை மீனாட்சி மகாராணி திலகம்
மைந்தன் குமரேசன் திருப்பள்ளி பதிகம்

மாயவரம் கூரை பட்டாடை ஜொலிக்கும்
மங்கை ஊர்கோலம் மலர் மாலை மயக்கம்
ஏண்டி இளஞ்சிட்டு
வேந்தன் கைப்பட்டு
என்ன செய்வாய் என்றொரு தோழி சிரிக்கும்
.

மஞ்சள் வளம் கொண்டு மலர் மங்கை வருவாள்
மைத்துனன் நம்பி மதுசூதன் வருவான்

காசி பெருந்தேவி கங்கை நீர் தருவாள்
கைத்தலம் தந்து கல்யாணம் புரிவாள்
மேளம் இசை மேவ
மாதர் மலர் தூவ
வேத முனிவோர்கள் நெய் ஆவி பொழிவார்

.
காணக் கிடைக்காத கண் கொள்ளும் சாந்தி
கட்டில் உறவாடி கைக்கொள்ளும் சாந்தி

ஆண்டு பலவாக மனம் கொள்ளும் சாந்தி
ஆசைப் பெருக்கோடு உடல் கொள்ளும் சாந்தி
என்ன சுகம் என்று
இன்னும் தெரியாது
அந்த சுகம் காண்பேன் அவரோடு நீந்தி

27 கருத்துகள்:

  1. இந்த நாளும் இனிய நாளே..

    எல்லாருக்கும் இறைவன் அருளட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ​//இந்த நாளும் இனிய நாளே..//

      ஆம். எந்த நாளும் போல.... வாங்க துரை செல்வராஜூ அண்ணா... வணக்கம்.

      நீக்கு
  2. கண்ணபுரம் செல்வேன்..

    உளுந்தூர்பேட்டை சண்முகம் அவர்களும் சீர்காழி அவர்களும் கோயிலைக் கண் முன்னே நிறுத்தியிருப்பார்கள்..

    இனிய பாடல்!..

    பதிலளிநீக்கு
  3. இன்றைய தொகுப்பின் மற்ற பாடல்களும் இனிமை..
    வாணிஜெயராம் என்றும் நம்முடன் இருப்பார்..

    பதிலளிநீக்கு
  4. முதல் பாடல் பலமுறை கேட்டு மகிழ்ந்திருக்கிறேன்.

    உத்பலாவலக விமானத்தையே. என்றே நினைவில் இருந்ததால் பாடலை மீண்டும் கேட்டு என் நினைவு சரிதான் என்று உறுதிப்படுத்திக்கொண்டேன்.

    பதிலளிநீக்கு
  5. மூன்றாவது பாடல் மிக நன்றாகவே நினைவில் இருக்கிறது (எப்படி என நினைவில்லை).

    இரண்டாவது பாடல் காணொளியைக் கேட்டதும் பாடல் நினைவுக்கு வந்தது.

    வாணி ஜெயராமை நினைவுகூரும்விதமாக உள்ள பாடல்களைப் பகிர்ந்திருக்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்ன இப்படி சொல்லி விட்டீர்கள்...  இரண்டுமே வாணி ஜெயராம் குரலில் நல்ல பாடல்கள்தானே..  

      நீக்கு
  6. மூன்றும், முத்தான பாடல்கள் ஜி.

    உளுந்தூர்ப்பேட்டை ஷண்முகம்,
    குன்னக்குடி வைத்தியநாதன்,
    சீர்காழி கோவிந்தராஜன்.
    ஊரின் பெயரை முன்னிறுத்திய உள்ளங்களை எனக்கு மிகவும் பிடிக்கும். நெல்லைத்தமிழர் போலவே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஊரின் பெயரை முன்னிறுத்திய...    அடடே..  இதை நான் கவனிக்கவில்லையே...!  நன்றி ஜி.

      நீக்கு
  7. என்னவோ பாட்டு.. என்னவோ எழுதுகிறார்கள்..
    மாலை விழுந்தவுடன் அதற்காகவே காத்திருப்பது போல, கன்னி கழிதல் தானா?
    தொடர்ந்து கட்டில் உறவாடலில் பல நிலைகள்..

    பொறுப்புள்ள மருமகளாக வலம் வர வேண்டும் என்பதெல்லாம் அந்தக் காலத்து அட்வைஸ்கள் தான் போலிருக்கு. :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜீவி சார் சொல்வதைப் பார்த்தால் திருமணமாகி பல மாதங்கள் கழித்துத்தான் நாள் குறித்தார்களா?

      நீக்கு
    2. இந்தப் பாடலே அந்த்க் காலப் பாட்டுதா... னுங்கோவ்!..

      நீக்கு
    3. மணமகளே மணமகளே வா வா
      உன் வலது காலை
      எடுத்து வைத்து வா வா

      (எவ்வளவு மங்கலமாக இருக்கிறது?)
      -- என் அந்தக்காலம் இது.

      நீக்கு
  8. 3 பாடல்களும் அருமை... இரண்டாவது பாடலை கேட்டு நாளாச்சி...

    பதிலளிநீக்கு
  9. திருக்கண்ணபுரம் செல்வேன் - பிடித்த பாடல். ரசித்த பாடல். எத்தனை முறை கேட்டிருப்பேன்...ஊரில் கோயிலில் போட்டுடுவாங்களே...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதென்ன புதுப் பாடல்? கண்ணபுரம் செல்வேன் என்பதுதானே பாடல்?

      நீக்கு
    2. ஹலோ பாட்டு ஒழுங்கா கேட்கணுமாக்கும்.....தொடக்கம் கண்ணபுரம் என்றாலும் அடுத்த அடி பாடிவிட்டுத் திரும்ப எடுக்கும் போது திருக்கண்ணபுரம்னுதான்......அது வார்த்தைகள் தாளத்திற்காக அப்படி...

      கீதா

      நீக்கு
    3. திருக்கண்ணபுரம் தானே ஊரின் பெயரே....கண்ணபுரம் என்றால் கண்ணூர் (கேரளா) க்கும் உண்டு...திருக்கண்ணபுரம் என்றால்தான் பாட்டின் ஊர். அங்கு ஒரு புஷரணி பெரிசா இருக்கும் கோயிலை ஒட்டியே....இப்ப எப்படி இருக்கு தெரியாது. 30 வருஷத்துக்கும் மேலாகுதுபார்த்து

      கீதா

      நீக்கு
  10. மூன்றாவது பாடலும் நிறைய கேட்டிருக்கிறேன் ஸ்ரீராம்....அருமையான பாடல் செம உச்சஸ்தாயி...அதுதான் அவரது குரலே செம உச்சஸ்தாயி போகும்....

    வரிகளைப் பார்த்ததும் இசை நினைவுக்கு வந்துவிட்டது!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  11. சீர்காழி பாடல் அண்மையில் கேட்டதில்லை. அருமை.

    வாணி ஜெயராம் முதலாவது பாடல் கேட்டதில்லை. இனித்தான் கேட்கப்போகிறேன்
    இரண்டாவது பாடல் கேட்டிருக்கிறேன் அருமை. .

    பதிலளிநீக்கு
  12. கண்ணபுரம் செல்வேன்.. பாடல் மிகவும் பிடித்த பாடல். கண்ணபுரம் அடிக்கடி சென்று இருக்கிறோம். பதிவும் , பாடலும் பகிர்ந்து இருக்கிறேன். எத்தனை தடவை கேட்டாலும் அலுக்காத பாடல்.

    வாணிஜெயராமை நினைவு கூர தேர்ந்து எடுத்த பாடல்களும் நன்றாக இருக்கிறது. தொலைக்காட்சியில் அதிகம் பகிரபடாத பாடல்கள்.
    கேட்டேன். நன்றி.

    பதிலளிநீக்கு
  13. மாயவரம் கூரை பட்டாடை செய்பவர்கள் கடை எங்கள் பக்கத்தில் இருந்தது. நாங்கள் இருந்த பகுதிக்கு "கூரை நாடு" என்று பெயர்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!