ஞாயிறு, 5 பிப்ரவரி, 2023

நான் தரிசனம் செய்த கோவில்கள் :: நெல்லைத்தமிழன்

 

அஹோபில நவ நரசிம்ஹர் யாத்திரைபகுதி 1

இந்தத் தடவை, கோவில் உலாவில், நான் ஜனவரியில் சென்ற அஹோபில நவ நரசிம்ஹர் கோயில் யாத்திரையை எழுதலாம் என்று நினைத்தேன். இதற்கு முன்பு, பஞ்சத் த்வாரகா யாத்திரையைப் பற்றி ஸ்ரீராம் எங்கள் பிளாக்கில் எழுதச் சொன்னார். ரொம்ப விவரமாக எழுத ஆரம்பித்த தனால், யாத்திரையின் முதல் நாளை எழுதினாலே 30 பக்கங்களுக்கு வந்துவிட்ட து. அதனால் அப்போது அதனை எழுதவில்லை. யாத்திரை எழுதும்போது புகைப்படங்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்று நினைத்து அஹோபில யாத்திரையை எழுத ஆரம்பிக்கிறேன். புராணக் கதைகள் போன்றவற்றிர்க்கு ரொம்ப இடம் கொடுக்காமல், ஞாயிறு பதிவின் தீம் மாறாமல் எழுத முயல்கிறேன்.

ஹிரண்யகசிபு, அவன் மகன் பிரகலாதன் கதை அனைவரும் அறிந்ததே. ஹிரண்யகசிபு தனக்கு மரணம் எந்த எந்த விதத்தில் ஏற்படக்கூடாது, யார் யாரால் ஏற்படக்கூடாது என்பதெற்கெல்லாம் தவம் செய்து வரம் வாங்கிவிடுகிறான். அந்த வரங்களுக்குப் பாதகம் ஏற்படாமல், பகவான் ஸ்ரீமந் நாராயணன், நரசிம்ஹ அவதாரம் எடுத்து ஹிரண்யகசிபுவை வதம் செய்தார். இந்த நிகழ்வு நடந்த இடமே அஹோபிலம்.

2020 ஜனவரியில் நானும் மனைவியும் அஹோபிலம் யாத்திரைக்குச் சென்றிருந்தோம். மிகவும் கஷ்டமான யாத்திரை என்று சிலர் சொல்லுவார்கள். மூன்று நரசிம்ஹர் கோவில்களுக்கு மலையில் ஏறிச் செல்வது கடினம் என்றும், அதிலும் ஜ்வாலா நரசிம்ஹர் கோவிலுக்கு செல்ல காட்டுப் பாதை, சிறிய சிறிய பாறைகளுடன் சூழ்ந்த காட்டாற்றுப் பகுதி என்று ஒரு மணி நேரம் நடக்கும்படியான பாதையுடன் கூடியது. இரண்டு நரசிம்ஹர் கோவில்களான பாவன நரசிம்மர் மற்றும் பார்கவ நரசிம்ஹர் தரிசனம் செய்வதற்கு ட்ராக்டர் அல்லது ஜீப் மூலமாக காட்டுப் பாதையில் சுமார் 20 கிமீ தூரம் பயணம் செய்யவேண்டும். அப்போது நாங்கள் டிராக்டர் மூலம் காட்டுப் பகுதியில் அமைந்திருந்த இரண்டு நரசிம்ஹர் கோவில்களுக்குச் சென்றிருந்தோம். அது எனக்கு மிகவும் கடினமாக அமைந்தது. பாறைகள், பள்ளங்கள், இடையில் ஓடும் நீரோடைகள், காட்டின் இடையில் டிராக்டர் மாத்திரம் செல்லமுடிந்த சிறிய பாதை என்று  அமைந்திருந்த வழியாக டிராக்டர் குலுங்கிக் குலுங்கி மெதுவாகச் சென்றது. முதல் கோவில் தரிசனம் முடித்து இரண்டாவது கோவிலுக்குச் செல்லும்போதே, யாத்திரை முடிந்துவிடாதா என்று மனதில் எண்ணம் ஏற்பட்டது.

2023 ஜனவரியில், மனைவியின் சகோதரன் (cousin) அஹோபில யாத்திரைக்குச் செல்லப்போகிறேன் என்று சொன்னதும், எனக்கும் அந்த யாத்திரையில் கலந்துகொள்ளும் ஆசை வந்தது. 2020ஐவிட இப்போது பாதவலி இன்னும் அதிகம். இருந்தாலும், யாத்திரைக்குக் கூட்டிச் செல்பவரிடம் நான் தொலைபேசி, இடம் இருக்கிறதா என்று கேட்டேன். இந்த யாத்திரைக்கு நவம்பரிலேயே அனைவரும் முன்பதிவு செய்துவிட்டனர். இருந்தாலும், நான் அவருடனேயே அனேகமாக எல்லா யாத்திரைகளிலும் கலந்துகொண்டிருப்பதால், இடம் இல்லை என்று சொல்லாமல், கலந்துகொள்ள அனுமதி கொடுத்தார். கடந்த ஓரிரு வருடங்களாக, டிராக்டருக்குப் பதிலாக ஜீப் பயணம் என்று சொல்லியதும் எனக்குக் கொஞ்சம் தெம்பைக் கொடுத்தது.

யாத்திரை 21ம் தேதி மாலை 4 மணிக்கு திருவல்லிக்கேணியில் துவங்கி, முதலில் காக்களூர் ஆஞ்சநேயர் தரிசனம் முடித்து, மறுநாள் அதிகாலை 4 மணி வாக்கில் அஹோபிலத்தை அடைந்து, உடனே குளித்துத் தயாரான பிறகு, அன்று 7 நரசிம்ஹர் கோவிலில் தரிசனம், பிறகு மறுநாள் மேலும் 2 நரசிம்ஹர் கோவில் தரிசனத்தை முடித்துவிட்டு, திரும்பும் வழியில் அஹோபில உற்சவர்கள் தரிசனம், இரவு 7 மணி வாக்கில் கடப்பா அருகிலுள்ள ஒண்டிமிட்டா கோதண்ட ராமர் கோவில் தரிசனம் முடித்து மறுநாள் அதிகாலை 3 மணி வாக்கில் சென்னை அடைவதாகத் திட்டம். முதல் நாளில் ஏதாவது ஒரு நரசிம்ஹர் கோவிலில் முழுமையான திருமஞ்சனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும். அதற்கு உதவியாக, நம்மால் முடிந்த பழங்கள், தேன், பால், தயிர், மஞ்சள், சந்தனம், ஊதுபத்தி போன்றவற்றைக் கொண்டுவரலாம் என்று சொல்லியிருந்தனர். நானும் தேன், பழங்கள், பேரீட்சை, ஊதுபத்தி போன்றவற்றைக் கொண்டு சென்றிருந்தேன்.

இதற்காக முந்தைய நாள் இரவே, அந்த உறவினர் வீட்டிற்குச் சென்று தங்கி, மறுநாள் அமாவாசை தர்ப்பணம் முடித்து, இருவரும் சேர்ந்து மதியம் 2 3/4க்குக் கிளம்பி திருவல்லிக்கேணி போய்ச் சேர்ந்தோம். சொன்னபடி, 4 மணிக்கு அனைவரும் அமர்ந்தபிறகு அந்த குளிர்சாதனப் பேருந்து புறப்பட்டது.  ஒரு வரிசையில் 2+3 என்ற விகிதத்தில் இருக்கைகள் அமைந்திருந்தால் கொஞ்சம் நெருக்கமாக இருந்த து. குளிர்சாதனப் பேருந்து என்பதால் ரொம்பவும் சிரமமாக இல்லை. இந்த யாத்திரையையே சுருக்கமாக, ஆனால் நிறைய படங்களுடன் ஞாயிறு பதிவாக அனுப்பலாமே என்று தோன்றியதால், அதனை எழுத ஆரம்பிக்கிறேன். எப்போதும்போல், புராணக் கதைகள்லாம் இங்கு எழுதப்போவதில்லை. நீங்களே அவற்றை, ஆர்வமிருந்தால் கூகுளிட்டுப் படித்துக்கொள்ள வேண்டியதுதான்.

நாங்கள் சென்றிருந்த பேருந்துநாங்கள் புறப்பட்ட திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் முகப்பு. 

இவருடைய எல்லா யாத்திரைகளிலும், முதலில் ஆஞ்சநேயர் தரிசனம் இருக்கும். பிறகுதான் யாத்திரை ஆரம்பமாகும். அதன்படி வழியில் காக்களூர் என்ற இடத்தில் ஆஞ்சநேயரை முதலில் தரிசனம் செய்தோம். நெடுஞ்சாலையின் அருகிலேயே அமைந்த சிறிய கோவில் இது. ஆஞ்சநேயர் தரிசனம் முடிந்ததும், அங்கிருந்த சிறிய ஹாலில் இரவு உணவாக அரிசி உப்புமாவும் கொத்ஸும் தர்ப்பணம் பண்ணியவர்களுக்கும், மற்றவர்களுக்கு கூடுதலாக தயிர் சாதமும் வழங்கினார்கள். அங்கிருந்து புறப்பட்டு அஹோபிலம் நோக்கி பேருந்து சென்றது.

 

பட்டாபிஷேகம் காணும் இராமரையும், திருப்பதி ஸ்ரீநிவாசனையும் (இரண்டு படங்களும் மிகப் பழமையானவை. நமக்குத் தெரிந்த பதிவர் வீட்டில் சமீபத்தில் புகைப்படம் எடுத்தேன்) இந்தச் சமயத்தில் மனதால் நினைத்துக்கொள்வோம்.

ஸ்ரீராகவேந்திரின் முந்தைய அவதாரமான ஸ்ரீ வியாசராஜ தீர்த்தர், தன் வாழ்நாளில் ஒரே உருவ அமைப்புடைய 700க்கும் அதிகமான ஆஞ்சநேயர் விக்ரகங்களை ஸ்தாபனம் செய்தாராம். அப்படி அமைந்ததுதான்,  திருநின்றவூருக்கும் திருவள்ளூருக்கும் இடையிலான காகாசுரன் சாபவிமோசனம் பெற்ற இந்த இடத்தில் நிறுவப்பெற்ற ஆஞ்சநேயர் ஸ்வாமி. இந்தச் சன்னிதியிலேயே ஆஞ்சநேயர் பூஜை செய்த லக்ஷ்மிநாராயணரும் இருக்கின்றனர் (சிறிய வடிவம்)


இரவு 8 ½ மணிக்கு, இரவு உணவுக்குப் பிறகு, காக்களூரிலிருந்து புறப்பட்டு அஹோபிலம் நோக்கிச் சென்றோம். 330 கி.மீ தூரம். மறுநாள் நிறைய நடக்கவேண்டியிருக்கும் என்பதால் பேருந்தில் அனைவரும் ஓரளவு நன்றாகத் தூங்கினோம். அதிகாலை 4 மணிக்கு அஹோபில மடத்தை அடைந்தோம். இது கீழ் அஹோபிலம் என்று சொல்லப்படும் இடத்தில் இருக்கிறது. அஹோபிலம் முழுவதுமே காட்டுப்பகுதியாக இருந்தது என்பதை இங்கு இருக்கும் குரங்குகளின் கூட்டம் நமக்குச் சொல்லுகிறது. ஹாலில் நாங்கள் கொண்டுசென்றிருந்த பயணப் பெட்டிகளை வைத்தோம். கொண்டுபோயிருந்த பழங்கள், தேன் போன்ற திருமஞ்சனப் பொருட்களை ஹாலின் ஒரு பகுதியில் அடுக்கினோம். அந்த மடத்திலேயே யாத்ரீகர்களுக்காக குளியலறைகள் போன்றவை இருந்தன. அனைவரும் குளித்து, காலை காபிக்குப் பிறகு 6 ½ மணிக்கு அருகிலிருந்த லக்ஷ்மீ நரசிம்ஹ ஸ்வாமி கோவிலுக்குச் சென்றோம்.


தங்கியிருந்த மடத்தின் வெளியே இதுபோன்ற சிறிய தூண்கள் சிற்பங்களுடன் இருந்தன. இவற்றைப் போலவே அஹோபிலத்தில் ஒரு சில நரசிம்மர் கோவில் முன்பும் (காரஞ்ச நரசிம்ஹர் கோவில்..) பார்க்கமுடிந்தது. இவையெல்லாம் அழகிய மண்டபத்தின் வெளிப்புறத் தூண்களாக இருந்திருக்கலாம், அல்லது கோவிலின் எதிரே பாதையின் இருமருங்கிலும் குறிப்பிட்ட இடைவெளியில் அமைக்கப்பட்டு, இதன் மேற்புறத்தில் எண்ணெய் விளக்குகள் எரியவைக்கும் அமைப்பு இருந்திருக்கலாம். இஸ்லாமியப் படையெடுப்பின்போது அழிக்கப்பட்டிருக்கலாம். தற்போது அவற்றை அப்படி அப்படியே விட்டுவைத்திருக்கிறார்கள். அவற்றில் இருந்த சிற்பங்களும், தூண்களும் அழகும் கண்ணக் கவர்ந்தன.

இந்தக் கோவிலின் மூலவர், பிரஹலாத வரதர்பிரஹலாதனுக்குக் காட்சி கொடுத்த நரசிம்ஹமூர்த்தி. மூன்று பிராகாரங்களுடைய பெரிய கோவிலான இது, விஜயநகர பாணியில் அமைக்கப்பட்டுள்ளது. அருகிலேயே திருக்குளத்துடன் கூடிய, அளவில் பெரிதான கோவில் இது. கோவிலின் உள்ளே கர்பக்ரஹத்துக்கு வெளியில் முகமண்டபம், ரங்கமண்டபம் மற்றும் லக்ஷ்மி, ஆண்டாள் மற்றும் ஆழ்வார்களுக்கு சிறிய கோவில்களைக் கொண்டதுரங்கமண்டபத்தில் ஏராளமான அழகிய சிற்பங்களைக் கொண்டிருக்கிறது. தூண்களில் எட்டு நரசிம்ஹ சிற்பங்களும் இங்கு செதுக்கப்பட்டிருக்கின்றன. இந்தக் கோவில் இஸ்லாமியர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு, ரங்கதேவராயரின் உதவியால் மீட்கப்பட்டு புனரமைக்கப்பட்டது. அதன் நினைவாக, ஒரு வெற்றித் தூண், கோவிலுக்கு வெளியே அமைக்கப்பட்டுள்ளது. இந்த வரலாறைப் படித்தபிறகுதான், இந்த மாதிரி வெற்றித்தூண்கள் பல கோவில்களில் அமைக்கப்பட்டிருப்பது என் நினைவுக்கு வந்தது. அதுவும் கோவிலை மீட்டுக் கொடுத்த அரசரின் வெற்றிச்சின்னமாகவே ஒற்றைக் கல்லால் அமைக்கப்பட்டிருகவேண்டும். இந்தக் கோவிலின் சிற்பங்கள் சிலவற்றைப் பார்க்கலாம்.


கோவிலில் முகப்பு கோபுரம், த்வஜஸ்தம்பத்தைத் தாண்டி உள்ள கோபுரம் இரண்டிலும் ஏகப்பட்ட சிற்பத் தொகுதிகள் உள்ளன. மேலே கோபுரத்தை சமீபகாலத்தில்தான் கட்டியிருப்பதால், முன்பு அவை பாதி கோபுரமாக அழிந்த நிலையில் இருந்திருக்க வாய்ப்பு இருந்திருக்கிறது.

நுழைவாயிலில் இருபுறங்களிலும் இருந்த சிற்பத் தொகுதிகள் என் கண்ணைக் கவர்ந்தன. அதில்ம் ஆடல் மகளிர் சிற்பங்கள். எல்லாம் அரை அடி அகலத்தில் உள்ளவை. ஒரு சிற்பம் போன்று இன்னொன்று இல்லை, பெண்ணின் முகம் உட்பட. எப்படிப்பட்ட சிற்பத் திறமை. எப்படி இவற்றைச் செதுக்கினார்கள் என்று வியக்க வைத்தது.





கோவிலைக் கட்டுவது என்பது சும்மாவா? தலைமைச் சிற்பி, எப்படி கோவில் அமையப்போகிறது என்பதற்கான வரைபடம், ஒவ்வொரு பகுதிக்கும் ஒருவரின் மேற்பார்வை, ஏகப்பட்ட சிற்பிகள், ஒரே கல்லில் பலவகைச் சிற்பங்களைச் செதுக்கும் திறமை, தனித் தனிப் பகுதியாக சிற்பங்களைச் செதுக்கும் சிற்பிகள், நாட்டியத் தாரகைகள், அவர்களுக்கான அணிகலன்கள், உடைகள், இவர்களுக்கான உணவு, தங்குமிடம் என்று ஏகப்பட்ட ஏற்பாடுகள். இவர்களின் திறமைதான் என்னே. நான் பல்வேறு கோவில்களில் உள்ள சிற்பங்களின் மேன்மையைக் கண்டு வியந்திருப்பதால், கல்வி என்பது ஒரு சமூகத்திடம் மூடி மறைத்து வைக்கப்பட்டிருந்தது என்று சிலர் எழுதுவதைப் பார்த்து மனம் கசந்துபோகிறது. கல்வி என்றால் என்ன என்றே தெரியாதவர்களிடம், அல்லது தெரியாததுபோல நடிப்பவர்களிடம் விவாதம் செய்வதில் பயனில்லை என்பதால் அமைதியாகக் கடந்துசெல்ல வேண்டியிருக்கிறது.

கோவிலின் நுழைவாயிலிலேயே இவ்வளவு அழகான சிற்பங்கள் இருக்கின்றன. அவற்றையே பார்த்துக்கொண்டிருந்தால், எப்போது கோவிலின் உள் செல்வது? அடுத்த வாரம் நுழைவாயிலைக் கடந்து செல்லமுடிகிறதா என்று பார்ப்போம்.

(தொடரும்) 

40 கருத்துகள்:

  1. எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண் டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு..

    தமிழ் வாழ்க..

    பதிலளிநீக்கு
  2. இந்த நாளும் இனிய நாளே..

    எல்லாருக்கும் இறைவன் அருளட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  3. அஹோபில தரிசனம் கண்டு வந்திருக்கும் நெல்லை அவர்களுக்கு வணக்கங்கள்..

    ஓம் ஹரி ஓம்..

    பதிலளிநீக்கு
  4. மறுபடியும் மறுபடியும் கலைப் பொக்கிஷமாக மலர்கின்றது..

    இன்றைய பதிவில் பயண விவரங்கள் நன்று..

    பதிலளிநீக்கு
  5. பயணக் கட்டுரையும் படங்களும் நன்றாக உள்ளன. தொடர்கிறேன்.
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தொடர்ந்து வாருங்கள். இன்றுதான் சென்னையிலிருந்து பெங்களூர் புறப்படுகிறேன்

      நீக்கு
  6. கோயில் சிற்பங்களின் படங்கள் மிகத்தெளிவாக இருக்கிறது தமிழரே...

    பதிலளிநீக்கு
  7. அஹோபில நவ நரசிம்ஹர் யாத்திரை– ஆஹா அற்புத ஸ்தலம் ...

    அருமையான படங்கள் ....படங்களில் ரசித்து குறித்துக் கொண்டால் நேரில் காணும் பொழுது இன்னும் பரவசமாக இருக்கும் ..... ரங்கா ரங்கா


    கீதா அம்மா வீட்டு ராமர் தானே ... ஸ்ரீ ராமா

    ஒவ்வொரு சிலையிலும் ஒவ்வொரு முக பாவம் ஆஹா அழகா இருக்கிறது

    பதிலளிநீக்கு
  8. அபூர்வமான வந்திருக்கும் அனுப்ரேம்

    ஆம். கீதா சாம்பசிவம் மேடம் வீட்டு இராமர் வெங்கடேசர்

    படங்களைக் குறித்துக் கொண்டால் யாத்திரை இன்னும் இனிமையாக இருக்கும். தொடர்ந்து வாருங்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அபூர்வ வருகையா இல்ல சார் .. முடிந்த அளவு ப்ரெசென்ட் போட்டு கொண்டு தான் இருக்கிறேன் . பல பயணங்களும் (பொங்கலுக்கு, குலதெய்வம் கோவிலுக்கு , சில பல திருமணங்களுக்கு என ) , பசங்களின் படிப்பும் என நேரம் காற்றில் பறக்கிறது ...

      கண்டிப்பாக குறித்து கொள்வேன் ... இங்கு தளங்களில் வாசிக்கும் இடங்களை குறித்துக் கொள்வதால் தான் எங்கள் பயணங்கள் மிக சிறப்பாக அமைகின்றன

      நீக்கு
    2. உண்மை அனுப்ரேம். நேரம் எப்போதுமே பறந்துவிடுகிறது. ஒவ்வொரு பதிவு தயார் செய்யவும் நிறைய நேரமும் எடுக்கிறது

      நீக்கு
  9. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  10. கோவில் வரலாறு மற்றும் படங்கள் எல்லாம் மிக அருமை.
    நுழைவாயிலில் இருபுறங்களிலும் இருந்த சிற்பத் தொகுதிகள் அனைத்தும் மிக அழகாய் இருக்கிறது.

    //ஒரு சிற்பம் போன்று இன்னொன்று இல்லை, பெண்ணின் முகம் உட்பட. எப்படிப்பட்ட சிற்பத் திறமை.//

    ஆமாம், நீங்கள் சொல்வது போலதான் இருக்கிறது அருமை.
    ராமர் பார்த்து இருக்கிறேன். வெங்கடேசர் படம் பார்த்தது இல்லை பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  11. கோவில் சிற்பங்கள் அனைத்தும் அழகாக இருக்கிறது. பயணத்தில் தொடர்கிறோம்.

    பதிலளிநீக்கு
  12. கோயில் கருவறை, மூலவர் தரிசனப்பேறு, அது குறித்துக் குவிந்திருக்கும் அகப் பார்வை இவற்றிலிருந்து
    நம் கவனத்தைத் திருப்புவதா புறச் சிற்ப வெளிப்பாடுகள்?..

    ஹி.. ஹி.. புதன் கேஜிஜிக்கான கேள்வி அல்ல.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜீவி சார்.... நிறைய கோவில்கள் வரப்போகின்றன. அவற்றில் வெறும் மண்டபம் (சிற்பங்கள் இல்லாமல்), கருவறை அல்லது சிறிய குகை, அதில் மூலவர் என்று இருக்கின்றன. அவற்றிலும் தரிசனம் செய்தபிறகு திரும்புகிறோம். பெரிய கோவில்கள், மண்டபங்கள் சிற்பங்கள் என்று இருந்தால் அந்தப் பிராகாரத்திலேயே அதிக நேரம் இருப்போம். நல் அதிர்வலைகளை அதிகம் பெறலாமோ? அதுவும் தவிர சிற்பங்கள் வாழ்க்கையின், கலாச்சாரத்தின், புராணத்தின் பல்வேறு செய்திகளையும் நமக்குக் கொடுக்கிறதோ?

      முதலில் அருள்மொழி, தனக்குக் கிரீடம் வேண்டாம் என்று சொல்லி தன் சித்தப்பாவிற்கு அரியணையை அளித்தான் என்ற க்ளைமாக்ஸுக்கு முன்பு, பெரும் கதை தேவையாக இருக்கிறதே

      நீக்கு
  13. முதலில் இறை தரிசனம், பின்னால் சிற்ப இன்னோரன்ன நேர்த்திகளை ரசிப்பது என்றிருந்திருந்தால்
    மேற்கண்ட கேள்வி மனத்தில் எழுந்திருக்காதோ? இடுக்கில் இந்த யோசனை வேறே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எப்போதும் முதலில் இறை தரிசனம்தான். காரணம் சில நேரங்களில் திரையிட்டுவிடுவார்கள், கூட்டம் கூடிவிடும், தளிகைக்கான நேரம் என்று தரிசனம் வாய்க்க நேரமாகிவிடும். ஆனால் பயணக்கட்டுரை என்று வரும்போது கோயில் சுற்றுகளைப் பற்றி எழுதி பிறகு கடைசியில் மூலவர், தாயார் தரிசனம்

      நீக்கு
  14. அஹோபிலம் யாத்திரை கஷ்டமே கிடையாது. அதைவிடக் கஷ்டமான யாத்திரைகள் பல உண்டு...அதில் ஒன்று பர்வதமலை ஏறுவது.

    நாங்கள் பாவன, பார்கவ வுக்கு ஜீப்பில் சென்றோம் திரும்பும் போது எங்களை எங்களுக்கே அடையாளம் தெரியவில்லை!!! ஹாஹாஹா அந்த அளவு புழுதி அப்பி இருந்தது எங்களை. கரடுமுரட்டுப் பாதை ஜீப் துள்ளி துள்ளி எல்லோரது முதுகெலும்பையும் பதம் பார்த்தது. நான் ஜீப் பின் பக்கம் நுனியில்!!!!! அந்தக் கதவைப் பிடித்துக் கொண்டு கீழே.....மூக்குக்குள் புழுதி கண்ணில் புழுதி....எனக்கு ஏனோ அந்தப் பயணம் மட்டும் அவ்வளவு ரசிக்கவில்லை. அதே சமயம் ஜ்வால அந்த சொட்டுச் சொட்டாய் ஷவர் பொல விழும் தண்ணிரில் நனைந்தபடி சென்று அதன் பின் அதற்கு மேலே இருக்கும் மலைப்பாறைகளில் மண்ணில் சறுக்கிவிடாமல் ஏறிய உக்ரஸ்தம்பம் ரொம்பப் பிடித்தது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அஹோபில யாத்திரையைவிட கஷ்டமானது பஞ்சத்வாரகா யாத்திரை. மற்றபடி மலையேற்றங்கள் கஷ்டம்தான், என்னை மாதிரி (மனசில் வஞ்சமில்லாததால் ஹா ஹா ஹா) கொஞ்சம் (???) பூசின மாதிரி இருப்பவங்களுக்கு.

      நீக்கு
  15. ஆஞ்சு ரொம்ப அழகு!!! ரசித்துப் பார்த்தேன்,

    சிற்பங்கள் எல்லாம் அத்தனை அழகு. என்ன ஒரு கைவண்ணம். பார்த்துக் கொண்டே இருக்கலாம்.....அசாத்திய திறமை. உண்மையைச் சொல்றேன் நெல்லை, நான் அங்கு போன போது கோயில் முகப்பில் இருந்த சிற்பங்களையும், தூண்களையும் தான் பார்த்துக் கொண்டே இருந்தேன் கோயிலுனுள் செல்லவில்லை....அப்புறம் கூட வந்தவங்க முறைத்ததும் டக்கென்று உள்ளே சென்று கும்பிடு போட்டுடு ஓடி வந்து மீண்டும் ரசித்துப் பார்த்துக் கொண்டே இருந்தேன். நம்ம கூட வந்தவங்க மேல கண்ணு...மிஸ் பண்ணிடக் கூடாதே....ஹிஹிஹி...

    அப்புறம் கையில் கம்புகள் வைத்துக் கொண்டுதான் ஏறினோம்...

    சிற்பங்கள் பார்த்தப்ப செல்ஃபோன், கேமரா எதுவும் கிடையாது எனவே படமும் எடுக்க முடியாதே...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கையில் செல்போன் கேமரா இல்லைனா படங்கள் எடுக்கமுடியாது. யாத்திரையில் நான் நிறைய படங்கள் எடுத்து அப்போ அப்போ யாத்திரை குழுமத்தில் வாட்சப்பில் பகிர்ந்துகொள்வேன். அதனால் யாத்திரை நடத்துபவர் நான் சிறிது நேரம் எடுத்துக்கொண்டாலும் ஒன்றும் சொல்லமாட்டார். இங்கு பகிரும்போது குழுவினர்கள் இருக்கும் படங்களைப் பகிரவில்லை.

      நாங்களும் கையில் கம்பு வைத்துக்கொண்டிருந்தோம்.

      நீக்கு
    2. சில நேரங்களில் மற்றவர்கள் தங்களையும் படங்கள் எடுக்குமாறு கேட்டுக்கொள்வார்கள். நான் பெரும்பாலும் தவிர்த்துவிடுவேன், காரணம் நான் பார்க்கும் கோணங்கள் வேறு, நான் புகைப்படக்காரனல்ல என்பதுதான்.

      நீக்கு
  16. பெயின்ட் அடிக்காத சிற்பங்கள் தனி அழகு!! எனக்கு அவை ரொம்பப் பிடிக்கும். அந்தக்காலத்து கலை வடிவங்கள்....இப்போதும் கல்லில் சிலை வடிக்கறாங்க ரொம்ப அழகா வடிக்கறாங்க.

    இங்க கூட ஹெப்பல் பகுதியில் ஒரு இடத்தில் கற்சிலைகள் வடிவமைத்து வைச்சிருப்பாங்க...ரோட்டோரத்தில், அப்புறம் பங்களூரின் வடபுறத்தில்.

    மஹாபலிபுரம் போகும் வழியில் ஊரை நெருங்கும் சமயத்தில் ஈசியாரில் பல கடைகளைக் காணலாம் ரோட்டோரத்தில். ரொம்ப அழகா வடிவமைச்சு செதுக்கி வைச்சிருப்பாங்க....நான் அதை எடுத்ததுண்டு. எங்கே போச்சுன்னு தெரியலை..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போவும் சிற்பத்திறமை மங்கிவிடவில்லை. இருந்தாலும் நம் முன்னோருக்கு இருந்த வசதிகள் மிகவும் குறைவு. அதில் அவர்கள் சாதித்தது நிறைய

      நீக்கு
    2. வர்ணகலாப மூலவர் சிற்பங்கள் தவிர, மற்றபடி கெமிக்கல் பெயிண்ட் கோயில்களில் எல்லா இடங்களிலும் அடிப்பது நன்றாக இருப்பதில்லை. பல கோவில்களில், புதுசுபடுத்துகிறேன் என்று சொல்லி பெயிண்ட் அடிக்கறாங்க. நல்லால்லை.

      நீக்கு
  17. அட கீதாக்காவீட்டுப் படங்கள்!!! ஓ அங்க போயிருந்தப்ப எடுத்தீங்களோ நெல்லை...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். ஜனவரியில் அவங்க வீட்டுக்குப் போயிருந்தபோது எடுத்தது. அப்போ அவங்க பையர், கு.கு, அதன் அம்மா எல்லோரையும் சந்தித்தேன்.

      நீக்கு
  18. கதை சொல்ல முயற்சிக்கும் சிற்பங்கள்

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!