முந்திரி பருப்பு மீது எப்போதுமே எனக்கு காதல் உண்டு! ஆனால் நமக்கு எது பிடிக்கிறதோ அது நமக்கு ஆகாததாய் இருக்கும் என்பது இயற்கை சொல்லும் விதி! தலைவிதி!
15 வருடங்களுக்கு முன் எனக்கு கொழுப்பு சோதனை செய்துகொண்டபோது எனக்கு Triglyceridesதான் 800 க்கு மேல் இருந்தது. நடக்கச் சொன்னார்கள். மூன்று மாதம் நடையாய் நடந்து அதைக் குறைத்தேன். அப்புறம் நடப்பதை நிறுத்தி விட்டேன். மறுபடி கொஞ்ச நாள் கழித்து சோதனை செய்து மறுபடி கொஞ்சம் நடந்து இன்னும் கொஞ்சம் குறைத்து.. அப்புறம் அது குறைந்த அளவில் இருந்தபோது அதற்கான மாத்திரையை சாப்பிட்டே ஆகவேண்டும் என்று சில வருடங்களாய் நான் Fenofibrate சாப்பிட்டு வருகிறேன். ஆறு மாதங்களாய் Rosuast ம் சேர்ந்து கொண்டது.
விஷயம் சொல்ல வந்தது முந்திரி பருப்பு. போனவாரம் A2B போனபோது 540 ரூபாய் கொடுத்து கார முந்திரி வாங்கி வந்து திட்டு வாங்கி கொண்டே தினம் இரண்டு பருப்புதான் என்று சொல்லி ரகசியமாய் நான்கு சாப்பிட்டு வருகிறேன்!!!
அக்காவின் மாப்பிள்ளையோடு பேசிக் கொண்டிருந்தபோது அவர் அலுவலகத்துக்கு வந்த ஆடிட்டர்களுக்கு தினம் காலை ஒரு சில்வர் பௌலில் முந்திரிப்பருப்பு, பாதாம், பிஸ்தா வைப்பார்கள் என்றும் ஆனால் மாலை பார்த்தால் கூட அது அப்படியே இருக்கும் என்றும் சொன்னார். கெளரவம் கருதியும், நீண்ட நேரம் திறந்தே இருந்ததாலும், இன்னொருவருக்கு வைத்தது என்பதாலும் இவர்களும் யாரும் எடுத்துக் கொள்ள மாட்டார்களாம்.
எனக்கு உடனே முந்திரி சம்பந்தமான ஒரு சுவையான சம்பவம், சுமார் 22 வருடங்களுக்கு முன் நடந்தது, நினைவுக்கு வந்தது.
அலுவலகத்துக்கு டெல்லி தலைமை அலுவலகத்திலிருந்து டைரக்டர் வருவதாக இருந்தது. ஒரு மாதத்துக்கு முன்னரே பயணத்திட்டம் வகுக்க பட்டிருந்தது. எங்கள் அலுவலகங்களை கணினி மயமாக்கும் திட்டத்தின் முன்னோடி.
எங்கள் உள்ளூர் (அரசு) உயர் அதிகாரிகள் இதனால் எங்கள் அலுவலகத்துக்கு வருவதும் போவதுமாய் இருந்தனர். ஒரே திட்டமிடல் மயம்தான். சாதாரணமாக எப்போதும் உயர் அதிகாரிகள் விசிட் என்றால் ஒரு பயமும், மரியாதையும், பதட்டமும் இருக்கும். அவர்களும் விசிட் வரும்போது எல்லா பந்தாவும் பண்ணுவார்கள், மிரட்டுவார்கள்! அதெல்லாம் எங்களுக்கு போயே போய்விட்டது. திடீரென திரும்பிப் பார்த்தால் பெரிய அதிகாரி ஒருவர் வந்து நம் அறை வாசலில் நின்று விவாதித்துக் கொண்டிருப்பார். எங்களை சோதிக்கும் வேலை எல்லாம் இல்லை. அவர்களுக்கே சோதனையாக இருந்திருக்கும் போல! நான் தேநீர் அருந்தும் சமயம் என்றால் கேஷுவலாக அவரைப்பார்த்து குடித்துக் கொண்டிருக்கும் கப்பை அவர் திசையில் நீட்டி "ஸார்.. டீ..." என்று உபசரிக்கும் அளவு சகஜமாகிப் போயிருந்தோம்!
காம்பவுண்ட் உள்ளே வாசலுக்கு செல்லும் வழியில் பூந்தொட்டிகள் வாடகைக்கு எடுத்து அடுக்குவது முதல் போஸ்டர்கள் வரை தயாரானது.
அந்த நாளும் வந்தது. டெல்லி டைரக்டர் வந்தால் அவருக்கு எங்கள் அலுவலகம் சார்பில் டிகாக்ஷன் காப்பிக்கும் அருகிலிருந்த நட்ஸ் அண்ட் ஸ்பைஸஸ் கடையிலிருந்து முந்திரி பருப்பும் வாங்கி வைக்க யோசனை சொன்னேன். ஏற்றுக்கொள்ளப் பட்டது. டிகாக்ஷன் காபிக்கு நான் பொறுப்பு. காலையே புத்தம்புது டிகாக்ஷன் போட்டு அவர் வரும் நேரம் கள்ளிச்சொட்டு காஃபி கொடுக்க அலுவலகத்தில் ஒரு மின் அடுப்புடன் பால், சர்க்கரை, டம்ளர் டபராக்கள் தயார். வீட்டிலிருந்து டிகாக்ஷனையும் கொண்டு வந்தாச்...
முந்திரி பருப்பு ஏன் சொன்னேன் என்றால், கௌரவமாகவும் இருக்கும், நமக்கும் வசதியாய் இருக்கும் என்றுதான்! நட்ஸ் அண்ட் ஸ்பைஸஸில் பார்த்திருப்பீர்கள், அங்கு கிடைக்கும் முந்திரி பருப்பின் சைஸை.. அது எப்போதுமே என் கண்களை உறுத்தும்!
வாங்கியும் வைத்தாயிற்று. தட்டில் அதை பிரித்து வைத்த ஊழியர் யாரையும் ஆலோசிக்காமல் மூன்று பாக்கெட்டுகளையும் பிரித்து நிரவி விட்டார். எனக்கு அதில் ஏமாற்றம்!
சுமார் 25 கார்கள் அணிவகுத்து வர, வந்தார் டைரக்டர். கூடவே எங்கள் சென்னை அதிகாரிகளும்... டிக் டிக் டிக் பட வில்லன் நலலவராய் இருந்தால் எப்படி இருப்பாரோ அப்படியொரு தோற்றம். ஆஜானுபாகு!
நாங்கள் நினைத்தை எல்லாம் செயல்படுத்த நேரம் எல்லாம் இல்லை. காஃபியை மதிக்கவே இல்லை. இருக்கையில் உட்காரவே இல்லை. உடன் வந்த ஓரிரு ஒல்லி சஃபாரிகளுடன் ஹிந்தியில் உரையாடியபடியே சும்மா சுற்றி வந்து விட்டு உடனே கிளம்பி தலைமைச் செயலகம் சென்று விட்டார் அந்த குண்டு சஃபாரி சூட் உயர வழுக்கைத் தலையர்...! ஒரு மாத உழைப்பு புஸ்...!
ஆர்ப்பாட்டம் எதுவும் இல்லாததில் எங்களுக்கும் ஒரு வகையில் நிம்மதிதான்.
அதை விடுங்கள்.. அவர்கள் சென்றதும் தட்டுகளில் பரப்பி யாரும் எடுக்காமல் அனாதையாய் இருந்த முந்திரிகளை எடுத்து ஆதரவு கொடுப்பது என்று நான் முடிவு செய்திருந்தேன். பொருள்கள் வீணாவது எனக்குப் பிடிக்காது! ஹிஹிஹி... அப்படிப் பார்க்காதீர்கள்... விஷயம் இருக்கிறது...
வேகமாக உள்ளே சென்றால் உள்ளே நிகழ்ந்து கொண்டிருந்த சம்பவத்தைப் பார்த்து எனக்கு...........................................
(அதிர்ச்சியாக இருந்தது / வியப்பாக இருந்தது / ஏமாற்றமாக இருந்தது / சிரிப்பாக இருந்தது / கேவலமாக இருந்தது........... விருப்பப்பட்ட வரிகளை வைத்து பூர்த்தி செய்து கொள்ளுங்கள்)
எங்கள் உள்ளூர் உயர் உயர் அதிகாரிகள் வந்தனர் அல்லவா... அவர்கள் இருவரும் பெண்கள்... (உயர் உயர் அதிகாரி சற்றே குள்ளமாக புசுபுசு புடவையுடன் தலைக்குப் பின்னே குட்டி பிச்சோடாவுடன் வேற்று கிரகவாசி போல பார்க்கவே வேடிக்கையாக இருப்பார்.) அவர்கள் இருவரும், அவர்களுடன் அவர்கள் P A வும் (அவரும் பெண்) அங்கிருந்த பேப்பரை கிழித்து உருவி கடகடவென அங்கிருந்த முந்திரிகளை தங்கள் தங்கள் பங்குக்கு பொட்டலம் கட்டிக் கொண்டிருந்தார்கள்.. அடுத்தவர் எடுக்கும் முன் தட்டிலிருந்து அவர்கள் எடுத்த வேகத்தைப் பார்க்க வேண்டுமே... பொட்டலம் கட்டி தங்கள் கைப்பைக்குள் வைத்துக் கொண்டு வேகமாக வெளியேறினர்! நான் நினைத்துக் கூடப் பார்க்காத காட்சி. நானுமே எடுக்க விரும்பாத மேரி பிஸ்கட்டுகள் மட்டும் தட்டில் இளித்துக் கொண்டிருந்தன.
காட்சி இன்னும் முடியவில்லை.
இவர்கள் வெளியேறியதும் அவர்கள் கார் ஏறும்வரை மரியாதையாய் அங்கே நின்று வழியனுப்பி விட்டு ஓடி வந்தார் எங்கள் அதிகாரி. அறைக்குள் வந்து சற்றே கதவை மூடினார்.. "ஸ்ரீராம்.. ஒரு பேப்பர் இருக்கா... எடுங்க.. கபோதிங்க ஒரு முந்திரியை எடுக்காம அப்படியே வச்சிருக்காங்க.. யாரும் வராங்களா பாருங்க...."
'ஸார்.. நீங்களுமா...'
எனக்கு சிரிப்பு தாங்க முடியவில்லை!
"அங்க ஒண்ணுமில்லை ஸார்... இவங்க அடிச்சுட்டு போயிட்டாங்க..."
=====================================================================================================
பழைய விகடன் ஒன்றிலிருந்து எடுக்கப்பட்ட பகுதி. 1930 களின் பிற்பகுதியை இருக்கலாம். நடுவில் சில இடங்களில் வரிகள் தொடர்பற்று இருக்கின்றன. அர்த்தம் புரியும் அளவு எடுத்து கொடுத்திருக்கிறேன்!
சமரசவாதி எழுதிய கம்பன் கண்ட நாத்திக உலகம் என்கிற கட்டுரையின் சுருக்கம் : ராவணனின் போக்கை எதிர்த்து விபீஷணன், 'ராமன் மனிதனல்ல. மகாவிஷ்ணு' என்கிறான்.
அதை ஏற்காத ராவணன் 'என் வீரத்துக்கு முன் கடவுள் தோற்றோடினானே... அவன் மூச்சற்றுப் போனானே...' என்று கேட்கிறான். 'தன் போன்ற சர்வாதிகளுக்கு இடையூறாக மற்றவர் செய்யும் தடைதான் கடவுள்' என்று எண்ணிய ராவணன் போர் முகத்தில் 'கடவுளை காணோம்' என்றான்.
இன்றைய விஞ்ஞானிகள் அனுபவிப்பிழந்தும் 'மின் மண்டலத்தை ஆழ்ந்தும் இறைவன் இல்லை' என்கின்றனர். இவர்கள் ராவணன் போல் இறைவனை போரில் வெற்றி கண்டவர்கள் அல்லவா... 'கடவுள் சர்வ வல்லவன் எனில் தற்கொலை செய்து கொள்ள முடியுமா' என்று பாதிரியாரை ஒரு விஞ்ஞானி கேட்டானாம்!
இறைவன் இறந்தால் தற்கால இராவணர்கள் சர்வ வல்லமை உள்ள டாலரை வழிபடலாமே... கடவுள் மூச்சற்றுப் போனார் என்றும் காலத்தால் கொல்லப்பட்டார் என்றும் மூப்பெய்தி மூச்சுடங்கினார் என்றும் எண்ணி புதிய இராவணர்கள் பொருளிலும் போகத்திலும் மூழ்குகிறார்கள்.
இவர்கள் கடவுள் பேச்சு கோழைகளின் பேச்சு வீரர் பேச்சு அல்ல என எண்ணும் ஆங்கில நாவலாசிரியர் ஒருவன் இறைவன் முதிராத குழந்தை என்கிறான். 'இராமன் சிறியவன் கொள்! நீ சொன்ன தேவன் என்பது போன்றது எது? ஆனால் பொருளாகிய கடவுள் ஒன்றே. மற்ற கடவுள் வீண்' என்ற எண்ணத்துடன் வல்லரசுகள் இருக்கின்றன.
தங்களையே கடவுளாக்கி ஆள்பவர் வல்லரசுகளானாலும் முசோலினி போன்ற சர்வாதிகள்தான்.
ராவண ராஜ்யத்தில் கம்பன் கண்டதை நாம் இன்று உலகில் காண்கிறோம். கடவுள் உள்ளானா அல்லது ராவணன் கூறியது போல ஒதுங்கி விட்டானா?
=========================================================================================================
அளவாய்த்தான் கொட்டேன்
அனலை
அதிகமாக் கொட்டி
ஆகப்போவதென்ன அருணனே
கடலில் குளித்துமா உன்
கடுமை குறையவில்லை?
இல்லை
வெப்பம் தாங்காமல்
வெளியில் தள்ளி விட்டதா
கடலும் உன்னை!
=================================================================================================
”எம்.ஜி.ஆர் எதைச் செய்தாலும், அதில் வேகமும் விடாமுயற்சியும் இருக்கும்!”
“சிகிச்சை முடிந்து எம்.ஜி.ஆர். தமிழகம் திரும்புகிறார் என்று செய்தி வருகிறது.
ஆம்புலன்சில்
படுத்த படுக்கையாக வரப்போகிறாரா, இல்லை சக்கர நாற்காலியில் வரப்போகிறாரா என்று சொந்தக் கட்சிக்காரர்கள் மத்தியிலேயே குழப்பம்.
யாருக்கும் எந்த விவரமும் தெரியவில்லை. அவரை விமானத்தில் இருந்து அப்படியே தூக்கி கீழே வைக்கும் ஒரு ஸ்பெஷல் லிஃப்ட் கூட தயார் நிலையில் இருந்தது.
புரட்சித் தலைவரை சுமந்து வந்த அமெரிக்க விமானம் சென்னையில் தரை தொட்டது. மந்திரிகள் முதல் கடைக்கோடி தொண்டன் வரை தங்கள் மன்னவனைக் காண தவம் கிடந்தனர்.
ஓடுபாதையில் மெல்ல ஊர்ந்து வந்து நின்றது அந்த விமானம். பயணிகள் எல்லோரும் வெளியேறிய பிறகு சில நிமிடங்கள் உருண்டோடின. முதலில் டாக்டர்கள் வெளியே வர, பின்னால் தெரிந்தது அந்த ரோஜா முகம். காத்திருந்த அத்தனை கண்களிலும் கண்ணீர்.
விமானத்தில் இருந்து வெளிப்பட்டதும், அங்கு கூடியிருந்தவர்களைக் கண்டு உற்சாகமானார். கையை உயர்த்திக் காட்டிவிட்டு, விறுவிறுவென படிக்கட்டுகளில் அவர் இறங்கி வந்த வேகத்தைக் கண்டு தமிழகமே ஆர்ப்பரித்தது. அவரது எதிரிகள் அரண்டு போனார்கள்.
அப்போது எம்.ஜி.ஆருக்கு வலது கை செயலிழந்து இருந்தது. அவ்வப்போது சின்ன பேப்பர் ரோலை கையில் வைத்து அழுத்தியபடி அந்தக் கைக்கு வேலை கொடுக்க கொடுக்க மீண்டும் கைகள் செயல்பட வாய்ப்பு இருப்பதாகக் கூறியிருந்தனர் மருத்துவர்கள்.
'சின்ன பேப்பர் ரோல் எதுக்கு? நான் பெரிய பேப்பர் பந்தா உருட்டி அதிலேயே பயிற்சி எடுக்கிறேன்' என்று சொல்லி, தினமும் பயிற்சி செய்வார். தொடர்ச்சியான பயிற்சியால் விரைவிலேயே அவரது கை செயல்படத் தொடங்கியது.
அந்தச் சமயத்தில் எம்.ஜி.ஆருக்கு வைத்தியம் பார்த்த டாக்டர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பாராட்டு விழா ஒன்று நடத்தப்பட்டது. அந்த விழாவில் கானு என்ற டாக்டருக்கு தங்க யானை பொம்மை ஒன்றை பரிசளித்தார் எம்.ஜி.ஆர்.
விழாவின்போது, “இப்போது டாக்டர் கானு அவர்களை மேடைக்கு அழைக்கிறோம்” என்றதும், பின் வரிசையில் அமர்ந்திருந்த டாக்டர் எழுந்து நடந்து சென்று மேடை ஏறி எம்.ஜி.ஆரை நெருங்கும் வரை நல்ல எடை கொண்ட அந்த யானை சிலையை தன் வலது கையால் தூக்கிப் பிடித்தபடியே நின்றிருந்தார் தலைவர்.
அருகில் நின்றிருந்தவர்கள் பதறிப்போய் பிடிக்க முயல, யாரையும் நெருங்க அவர் அனுமதிக்கவில்லை. டாக்டர் கானு அருகே வந்ததும், “எப்படி…” என்பதைப் போல ஒரு நமட்டு சிரிப்பு சிரித்தபடி அந்தப் பரிசை அவர் கையில் கொடுத்தார்.
அதைப் பார்த்து வெளிநாட்டு டாக்டர்களே வியந்து போனார்கள். இது தான் புரட்சித் தலைவரின் மன திடம். அவர் எதை செய்தாலும் அதில் இந்த வேகமும் விடாமுயற்சியும் இருக்கும்.
அமெரிக்காவில் அவர் சிகிச்சை பெற்று வந்த நேரத்தில், இங்கே இந்திராகாந்தி சுடப்பட்டு உயிரிழந்தார். இந்தச் செய்தியை சொன்னால் அது அவரது உடல் நலத்தை பாதிக்கும் என்பதால் அப்போது அதை எம்.ஜி.ஆரிடம் சொல்லவில்லை.
நான்கைந்து நாட்கள் கழித்து மெதுவாக அந்தச் செய்தியை சொன்னபோது, “ஏன் என்கிட்ட முன்னாடியே சொல்லவில்லை” என்று கடுமையாகக் கோபித்துக் கொண்டாராம்.
சரியான நேரத்தில் அமெரிக்க சிகிச்சைக்கு ஏற்பாடு செய்து தன் உயிரைக் காப்பாற்றிய இந்திராவின் இழப்பை தாங்கிக்கொள்ள முடியாமல் கதறி அழுதிருக்கிறார். அன்று முழுவதும் ஒரு சொட்டு தண்ணீர் கூட குடிக்காமல் பட்டினி கிடந்திருக்கிறார் எம்.ஜி.ஆர். அந்த அளவுக்கு இந்திராவின் இழப்பு அவரைக் கடுமையாக பாதித்தது.
1987-ம் ஆண்டு ஜூன் மாதம் நடிகர் சத்யராஜின் ரெண்டு தங்கச்சிகளுக்கு கோயமுத்தூர்ல கல்யாணம். ஒரு மரியாதைக்காக ராமாவரம் தோட்டத்தில் எம்.ஜி.ஆரை சந்திச்சு பத்திரிகை கொடுத்தார்.
‘‘அண்ணே… காலையில 4.30 – 5.30 ஒரு மூகூர்த்தம், 5.30 – 6.30 ஒரு முகூர்த்தம். நீங்க ரெண்டாவது முகூர்த்தத்துக்கு வந்தா போதும்னு சொல்லி இருக்கார். ‘‘ஏன் முதல் முகூர்த்தத்துக்கு வரக்கூடாதா? நான் 4 மணிக்கே வந்திடறேன்’’னு சொல்லிட்டார்.
சத்யராஜூக்கு ஒன்ணும் புரியல. ‘‘எண்ணன்ணே, மரியாதைக்காக கூப்பிட்டேன், தலைவர் கண்டிப்பா வர்றேன்னு சொல்லிட்டார். எப்படி அவரை ரிசீவ் பண்றது’’னு பதட்டமாகிட்டார்.
‘‘நீ விடுய்யா… அவர் தமிழ்நாட்டு சி.எம். அவர் வந்து போற வரைக்கும் அதிகாரிங்க பார்த்துப்பாங்க’’னு சொன்னேன்.
கல்யாணத்துக்கு எம்.ஜி.ஆர். போன அதே பயணிகள் விமானத்துல தான் நானும் போனேன். அவருக்கு ரெண்டு சீட் பின்னால நான் உட்கார்ந்துகிட்டு இருந்தேன். தலைவருக்கு இந்தப் பக்கம் வின்டோ சீட்ல ஜானகி அம்மாவும், வலது பக்கம் அமைச்சர் முத்துசாமியும் உட்கார்ந்துட்டு இருந்தாங்க.
என்னைப் பார்த்த முத்துசாமி, முன்னாடி வாங்கனு சொல்லி எழுந்து இடம் கொடுத்தார். புரட்சித் தலைவரை வணங்கிவிட்டு அவர் அருகில் அமர்ந்தேன். அப்போது அவருக்கு பேச்சு சரியாக வராத நேரம். என்னைப் பார்த்து சிரித்தார்.
“நீங்க எங்க ஆளு. நீங்க ஏன் அரசியலுக்கு போனீங்க?” என்று கேட்டேன்.
“முன்னாடியெல்லாம் உங்கள பார்க்கணும்னா நேரா தோட்டத்துக்கு வந்து உரிமையோட உங்க அறைக்கே வந்து சந்திப்போம். இப்பல்லாம், 4 பி.ஏ.வை தாண்டி உங்களைச் சந்திக்கிறது அவ்வளவு சுலபமா இல்லியே.
நான் ‘இனி ஒரு சுதந்திரம்’னு ஒரு படம் எடுத்திருக்கேன். அதைப் பார்க்க உங்களை அழைக்கலாம்னு முயற்சி பண்ணிட்டு இருக்கேன், முடியல” என்றேன். சிரித்தபடி ஏதோ சொன்னார். புரியவில்லை. ஜானகி அம்மாவை பார்த்தார்.
“ 9 ஆம் தேதி டெல்லி போறேன். திரும்பி வந்ததும், ஒரு நாள் வந்து படத்தைப் பார்க்கிறேன்னு சொல்றார்” என்றார் ஜானகி அம்மையார்.
கல்யாணத்து அன்று காலை 2.30 மணிக்கே எழுந்து தயாராகி 4.30 மணிக்கு மண்டபத்துக்கு வந்துவிட்டார். அன்றைக்கு அவருக்கு இருந்த உடல்நிலைக்கு இப்படியெல்லாம் தன்னை வருத்திக் கொண்டு வரவேண்டும் என்று அவசியமே இல்லை. ஆனால் மனதில் ஒன்றை நினைத்துவிட்டால் அதை செய்தே தீருவார் எம்.ஜி.ஆர்.
கல்யாணத்துக்கு வந்தவர் இரண்டு முகூர்த்தத்துக்கும் இருந்தார். கோயமுத்தூர்காரங்க சாப்பாட்டு விஷயத்துல பின்னிடுவாங்க. காலை டிபனில் நெய் மிதக்க மிதக்க சர்க்கரைப் பொங்கல், வெண் பொங்கல், 4 வடை என்று அவர் இலையை நிரப்பி விட்டனர்.
தலைவர் அமர்ந்து சாப்பிட்ட டேபிளுக்கு எதிரிலேயே நின்று கொண்டிருந்த அவரது டாக்டர், சர்க்கரை பொங்கலையும் வெண் பொங்கலையும் காட்டி வேண்டாம் என்பது போல சைகை செய்தார்.
லேசாக நிமிர்ந்து டாக்டரைப் பார்த்தார், “இத்தனை பேர் முன்னாடி என்னை வியாதிக்காரன்னு சொல்லிக் காட்றியா…” என்ற எக்ஸ்பிரஷனோட, “இன்னும் கொஞ்சம் சர்க்கரைப் பொங்கல் வைப்பா… இன்னும் ரெண்டு வடை வைப்பா” என்று ஆசையாக கேட்டு வாங்கி சாப்பிட்டார் தலைவர்.
எந்த இடத்திலுமே தன்னை அவர் பலகீனமாக வெளிப்படுத்திக் கொள்ளவே மாட்டார். உடலில் ஆயிரம் பிரச்சனைகள் இருந்தாலும் பொதுமக்கள் மத்தியில் எப்போதுமே ஒரு ஹீரோவாக இருந்தவர். இந்தத் திருமணத்துக்கு பிறகு டெல்லிக்குச் சென்று வந்தார். அதன் பிறகு ஒரு சில மாதங்களிலேயே நம்மையெல்லாம் விட்டு பிரிந்து விட்டார்.
சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்த பிறகு எம்.ஜி.ஆர். ஒன்றரை வருடங்கள் வரை வாழ்வார் என்று டாக்டர்கள் சொன்னபோதும், நான்கரை வருடங்கள் வாழ்ந்து மறைந்தார் அந்த உத்தமத் தலைவன். அவர் ஆயிரத்தில் அல்ல கோடியில் ஒருவன்.
நன்றி: தாய் - நன்றி R. கந்தசாமி ஸார்.
[சமீபத்தில் நான் பார்த்த வீடியோ ஒன்றின் மூலம் அறிந்த விஷயம்... டாக்டர் கானு எம் ஜி ஆரின் போஸ்டர் ஒன்றை கேட்டு வாங்கிச் சென்றிருந்திருக்கிறார். அவருக்கு கொடுக்கப்பட்ட போஸ்டர் 'அன்பே வா' பட போஸ்டர்]
=========================================================================================
நியூஸ் ரூம்
தமிழகத்தில் வணிகத்
தலங்கள், தொழிற்சாலைகளுக்கு மின் கட்டணம் உயருகிறது.
பெட்ரோல், டீசல் விலை குறையக்கூடும்.
பெண்கள் பேருந்தில் இலவசமாக பயணிக்கலாம் என்ற அறிவிப்பால் தங்கள் வருமானம் பாதிப்படையும் எனவே தங்களுக்கு மானியம் வழங்க வேண்டும் என்று கர்நாடக ஆட்டோ ஒட்டுனர்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை வைக்க முடிவு.
விவாகரத்து பெற்றவர்கள், திருமணம் செய்து கொள்ளாமல் குழந்தையை தத்து எடுத்துக் கொள்ளும் பிரும்மச்சாரிகளுக்கு குழந்தையை பராமரிக்க ஆறு மாத விடுமுறை உண்டு – கர்னாடக அரசு உத்தரவு.
தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட்ட புதிய நீதிமன்ற வளாகத்தில் பெண் வக்கீல்களுக்கு கழிப்பறை வசதி இல்லை என்று நீலகிரி மாவட்ட பெண் வக்கீல்கள் சங்கம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. ஆனால் விசாரணையில் தங்கள் குறை தீர்க்கப்பட்டு விட்டதாக நீ.பெ.வ.சங்கம் கூறினாலும், விடுமுறைக்குப் பின் ஜூலை முதல் வாரத்தில் உரிய அமர்வு முன் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். நீதிமன்றத்திலேயே பெண்களுக்கு நீதி இல்லையா?
பெங்களூரில் இரவு நேரத்தில் இரண்டு மடங்கு கட்டணம் தர மறுத்த பயணியை குத்திக் கொன்ற ஆட்டோ டிரைவர்.
ஹோண்டா மோட்டார் சைக்கிள் நிறுவனம் தன் ‘டியோ’ ஸ்கூட்டரை புதுப்பித்து மீண்டும் சந்தையில் இறக்கியுள்ளது. புதிய மாடல் வாகனத்தின் விலை ரூ.70,211/- மட்டுமே.
சொந்த நாட்டை விட்டு அந்நிய நாட்டுக்கு புலம் பெயரும் கோடீஸ்வரர்கள்(தொழிலதிபர்கள்) அதிகம் இருக்கும் நாடு சைனா, இரண்டாம் இடத்தில் இந்தியா. அப்படி புலம் பெயர்பவர்கள் செல்ல விரும்பும் நாடுகள் சிங்கப்பூர் மற்றும் துபாய்.
எம்.ஆர்.எஃப் கம்பெனியின் பங்குகள் ஒரு லட்சம் ரூபாயை எட்டி இருக்கின்றன. இந்த அந்தஸ்தை பெற்ற முதல் கம்பெனி எம்.ஆர்.எஃப்.
சைனாவில் திருமணம் செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டதாம்.
12 வருடங்களுக்குப் பின் யுனெஸ்கோவில் மீண்டும் இணைந்தது அமெரிக்கா.
லண்டனில் நடந்த உலக டெஸ்ட்மாட்சில் அஸ்வினை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை, அவமானபடுத்தப்பட்டார் என்று கவாஸ்கர் கண்டனம். இப்படி வேறு யாருக்கும் நேரவில்லையாம், வெங்கட்ராகவனை மறந்து விட்டாரா?
=======================================================================================================
என்ன செய்வார்கள்? எப்படிச் செய்வார்கள்? போன வாரம் ஒன்று வெளியிட்டிருந்தேன்..
===================================================================================================
பொக்கிஷம் :-
ஜாலியாதான் போயிருக்கும் பொழுது!
ஹிஹிஹிஹி.... ஜில்ஜில்ஸ்ரீயாம்!
இதில் என்ன ஜோக் ன்று நிஜமா எனக்குப் புரியலை!
போடணுமா என்ன!
உண்மை விளம்பி...
கிலோ 550 க்கு நல்ல முழு முந்திரி பருப்பு ரொம்ப சீப்.
பதிலளிநீக்குகடவுளை நம்புபவர்களுக்கு கடவுள் உண்டு என்று மற்றவர்களுக்கு நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. இல்லை என்பவர்கள் கூறுவதால் கடவுள் இல்லாமல் போகப்போவதும் இல்லை. ஆனாலும் கட்டுரையின் கடைசி வரி
//கடவுள் உள்ளானா அல்லது ராவணன் கூறியது போல ஒதுங்கி விட்டானா?//
என்ற கேள்வி இக்காலத்திற்கு மிகவும் பொருந்துகிறது.
கேட்டதைக் கொடுப்பவன்
கர்ணன்.
கர்ணனின் தந்தை
சூரியன்
இருமடங்கு தருவான்
வெக்கையானாலும்.
MGR ஒரு சகாப்தம். அவரைப் போல் சிநேகம் பாராட்டியவருமில்லை. அதே போல் பகைவரை பழி வாங்கியவரும் இல்லை. நல்லவனுக்கு நல்லவன். கெட்டவனுக்குக் கெட்டவன். '
//தமிழகத்தில் மின்சார வணிகத்
தலங்கள், தொழிற்சாலைகளுக்கு மின் கட்டணம் உயருகிறது.///
மின்சார அமைச்சர் செந்தில் பாலாஜி கைது.
ஜோக்குகள் ஜோக்கு பஞ்சம் ஏற்பட்ட காலத்தில் ஒப்புக்கு சப்பாணியாய் நிராகரிக்கப்பட்டவற்றை சேர்த்திருப்பது போல் தோன்றுகிறது.
Jayakumar
முந்திரி பருப்பு கிலோ 550 எல்லாம் இல்லை. அது 400 கிராம் என்று நினைக்கிறேன்.
நீக்குகடவுளை பற்றிய கவலை எல்லாம் பாதிக்கபப்டும்போதுதான் எழுகிறது. மற்ற சமயங்களில் நினைப்பதுமில்லை!
நேற்றெல்லாம் எவ்வளவு தண்ணீர், மோர் குடித்தும் தாகம் அடங்கவில்லை. நாக்கு வறண்டே இருக்க ரொம்ப சிரமமாய் இருந்தது.
MGR ஒரு மர்மம்... ஒரு புதிர்... ஒரு மித் (பழைய டி ஜி பி மோகன்தாஸ் எழுதி இருக்கும் புத்தகம் படித்திருக்கிறீர்களா?)
கிடைக்கும் ஜோக்குகளை பகிர்கிறேன். பழைய புத்தகங்களில் என்ன, சந்தை மாதிரி சொத்தை கத்தரிக்காய் என்று ஒதுக்கியா வைத்திருந்திருப்பார்கள்!!
கடவுளைப்பற்றிய கவலையா! எழுகிறதா!
நீக்குமனிதன் கேட்கிறான்....!
நீக்குகாக்க காக்க
பதிலளிநீக்குகனக வேல் காக்க..
நோக்க நோக்க
நொடியில் நோக்க..
இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
பிரார்த்திப்போம்..
எல்லாருக்கும் இறைவன்
நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..
நலம் வாழ்க..
வாழ்க.. வாங்க... வணக்கம்.
நீக்குதங்களது முந்திரி அனுபவம் சுவாரஸ்யமாக இருந்தது ஜி.
பதிலளிநீக்குஎம்ஜிஆர் பற்றிய தகவல்கள் மனதை உலுக்கியது.
நன்றி ஜி.
நீக்குமுந்திரி புராணம் சுவை.. அருமை..
பதிலளிநீக்குகார முந்திரியா!..
சாதா முந்திரிதான். நடந்த சம்பவத்தால் காரமானது!
நீக்குஎம் ஜி ஆர்..
பதிலளிநீக்குஎம் ஜி ஆர் தான்!..
அதே.. அதே..
நீக்குஇரண்டு பருப்புதான் என்று சொல்லி ரகசியமாய் நான்கு சாப்பிட்டு வருகிறேன்!!!//
பதிலளிநீக்குஹாஹாஹாஹா முதல் வேலை பாஸிடம் இதை பாத்தீங்களானு போட்டுக் கொடுக்கறதுதான்...
ஆனா ஸ்ரீராம் சொல்லுவார் - பாஸுக்குத் தெரிஞ்சாலும் நாங்க சாப்பிடாம இருப்பமா என்ன?
எனக்கும் முந்திரி பிடிக்கும்...ஆனா சாப்பிடுவதே அபூர்வம்...Health is wealth, you see!!! உலர்பருப்புகள், பழங்கள் எல்லாமே பிடிக்கும்தான்
கீதா
அதென்னவோ பிஸ்தா எல்லாம் பிடிப்பதில்லை. முந்திரியை விட மனம் வருவதில்லை. நிறைய சாப்பிட்டால் வயிறு மந்தமாகி விடும் அபாயமும் உள்ளது.
நீக்குமுந்திரி பருப்பு குறித்த தகவல்கள் நன்று. ஒரு காலத்தில் எங்கள் ஊர் அருகே அத்தனை முந்திரி தோப்புகள் - நிறையவே சாப்பிட்டதுண்டு. அதுவும் நண்பர் (முந்திரி தோப்புக்குச் சொந்தக்காரர்) ஒருவர் வீட்டிற்கு எப்போது சென்றாலும் அவரது அம்மா நெய்யில் வறுத்த முந்திரியை தட்டு தட்டாக சாப்பிடத் தருவார்!
பதிலளிநீக்குமற்ற தகவல்களும் நன்று.
தஞ்சாவூரில் நானும் முந்திரி காட்டுக்குள்ளேயே வசித்தவன்தான்!
நீக்குகெளரவம் கருதியும், நீண்ட நேரம் திறந்தே இருந்ததாலும், இன்னொருவருக்கு வைத்தது என்பதாலும் இவர்களும் யாரும் எடுத்துக் கொள்ள மாட்டார்களாம்.//
பதிலளிநீக்குஆமாம் அறிந்ததுண்டு...அப்படினா யாருக்குக் கொடுப்பாங்க? வீணாகுதே.
கீதா
மாலைக்குள் அது நொது நொது என்று ஆகிவிடுமே...
நீக்கு//தமிழகத்தில் மின்சார வணிகத்
பதிலளிநீக்குதலங்கள், தொழிற்சாலைகளுக்கு மின் கட்டணம் உயருகிறது.// இதில் ஒரு தவறு நேர்ந்து விட்டது, மின்சார வணிகத் தலங்கள் கிடையாது, வணிக தலங்கள் என்று மட்டுமே இருக்க வேண்டும். டைபோ எரர். மன்னிக்கவும். முடிந்தால் திருத்தி விடுங்கள்.
மாற்றி விட்டேன்!
நீக்குகாம்பவுண்ட் உள்ளே வாசலுக்கு செல்லும் வழியில் பூந்தொட்டிகள் வாடகைக்கு எடுத்து அடுக்குவது முதல் //
பதிலளிநீக்குஹாஹாஹா அவருக்குத் தெரியாதா என்ன இதெல்லாம் சும்மா இப்போதைக்கு..எப்பவும் கிடையாதுன்னு.....
போஸ்டர்கள் வரை தயாரானது.//
ஆச்சரியம் இதுக்கும் போஸ்டரா!!!!
கீதா
பெரிய சைஸ் விளம்பரம்!
நீக்குமுந்திரி பருப்பு காதல் கதை அருமை...
பதிலளிநீக்குநன்றி DD.
நீக்குஎம்.ஜி.ஆர். அவர்களின் வள்ளல் குணம் பிடிக்கும்...
பதிலளிநீக்குஉண்மைதான்.
நீக்குஹையோ ஸ்ரீராம், எனக்கும் நட் ஸ் அன்ட் ஸ்பைஸஸ் கடை முந்திரி கண்ணைக் கவரும்...அது போல அங்குள்ள மற்ற பருப்புகளும் தான் ...
பதிலளிநீக்குகீதா
ஆமாம். விதம் விதமான சைஸ்களில் சாக்லேட்டுகளும்!
நீக்குநான் நினைத்துக் கூடப் பார்க்காத காட்சி.//
பதிலளிநீக்குஅடப் பாவிங்களா எல்லாத்தையும் சுருட்டிட்டுப் போய்ட்டாங்களா?!! அதுவும் அதிகார்கள்னு சொல்லிக்கறாங்க...ஐயே ஐயே....ஷேம் ஷேம் பப்பி ஷேம்!!!
கீதா
வாங்கினது அவங்களுக்குத்தானே... ஹா ஹா ஹா
நீக்குஅதுவும் சரிதான்!
நீக்குபழைய விகடன் - அர்த்தம் ஏதோ புரியுது அவ்வளவுதான்... ரொம்பப் புரியவில்லை ...அல்லது என் புத்திக்கு விளங்கியது அவ்வளவுதான்!! என்று நினைக்கிறேன் ஸ்ரீராம்
பதிலளிநீக்குகீதா
ஏதோ கடவுள் பற்றிய கருத்துரை கீதா... விடுங்க..
நீக்குமுந்திரிப்பருப்பு அனுபவம்.. நல்லா எழுதியிருக்கீங்க. காசை வீணாக்குவது அலுவலகப் பெண்களுக்கும் பிடிக்காது போலிருக்கு.
பதிலளிநீக்குஎன்ற்கும் முந்திரி மிகவும் பிடிக்கும், ஆனால் உடம்புக்கு ஒத்துக்கொள்வதில்லை.
நான் வேலைபார்த்துக்கொண்டிருந்தகோது, வேலை சம்பந்தமா ஏகப்பட்ட உயர்ரக சாக்லேட்டுகள் பிஸ்கட்டுகள் நிறைய வரும். பலவித உயர் ரெஸ்டாரன்டுக்கு க்ளையன்ட்ஸைக் கூட்டிக்கொண்டு செல்ல வேண்டியிருக்கும் (பிட்சா, TGIF, Chilies etc). நான் எதையும் சாப்பிட மாட்டேன்.
இப்போ நம்மூர்ல கிடைக்கும் சாக்லேட் லோ க்வாலிட்டி
நன்றி நெல்லை. ஆனாலும் நட்ஸ் & ஸ்பைசஸ் சாக்லேட்ஸ் பெட்டராகத்தான் இருக்கும்.
நீக்குதிருமணப் பத்திரிகை... ரிபீட்டு
பதிலளிநீக்குவேற... வேற... அடுத்த வாரமும் வேறொரு நிகழ்ச்சி வரும்.
நீக்குஜோக்ஸ் நல்லா இருந்தது. டிக்கெட் வாங்காதவனை வயிறெரிய வைக்கும் ஜோக் உட்பட
பதிலளிநீக்குநன்றி நெல்லை.
நீக்குஇன்றைய கவிதை ரொம்ப சூப்பர் ஸ்ரீராம்...
பதிலளிநீக்குஅதுவும் //கடலில் குளித்துமா உன்
கடுமை குறையவில்லை?
இல்லை
வெப்பம் தாங்காமல்
வெளியில் தள்ளி விட்டதா
கடலும் உன்னை!//
ஹையோ கற்பனையை ரொம்ப ரசித்தேன்...
கீதா
நன்றி கீதா... நீங்கள் எப்படியும் ரசிப்பீர்கள் என்று தெரியும்.
நீக்குஎம் ஜ் ஆர் பற்றிய சுவாரசியமான விஷயங்கள்....துளசியின் ஃபேவரைட்!!! ஹாஹாஹா
பதிலளிநீக்குகீதா
நன்றி கீதா.
நீக்குநியூஸ் ரூம் நியூஸ் எல்லாம் வாசிச்சாச்சு. இங்கயும் கரன்ட் பில் கூட்டிருக்காங்க...ஒரு கையால இலவசம் மறுகையால இப்படி எதுக்குஇலவசமோ?
பதிலளிநீக்குபத்திரிகை - தெலுங்குப் பத்திரிகையோ...அந்த முறைகள் பத்தி...ஜீரக பேஸ்ட்???!!!!! புதுசா இருக்கே...உங்களுக்கும் இப்படி நடந்ததா ஸ்ரீராம்? ஓ பாஸ் வீட்டு வழக்கப்படியோ...?
கீதா
இல்லை. எனக்கு இப்படி நடக்கவில்லை.
நீக்குஅட திருடங்களுக்கு புத்தி இல்லை.காமென்சென்ஸ்..ரெண்டு பேரும் சண்டை மும்முரத்துல இருக்கப்ப சடார்னு லவட்டியிருக்கலாமே!!
பதிலளிநீக்குஜோக்ஸ் ஓகே...
கீதா
சுமாரான ஜோக்ஸ் என்று பரவலான அபிப்ராயம்.
நீக்குகார முந்திரி கிடக்கட்டும். நொக்கல் எனப்படும் இனிப்பு முந்திரி சாப்பிட்டிருக்கீங்களா? அது ஸ்பெஷன் ஸ்வீட் என்று சொல்லப்படும். ஆனால் கடந்த இரண்டு திருமணங்களில் கொடுத்த நொக்கல், எனக்குப் பிடிக்கவில்லை. சுண்டைக்காய் கால் பணம் சுமைகூலி முக்கால் பணம் என்பதுபோல, முந்திரி கால், ஜீனியால் போர்த்தியது முக்கால் என்று இருக்கிறது.
பதிலளிநீக்குசாப்பிட்டிருக்கிறேன். ஆனால் எனக்கு அது அவ்வளவு ரசிப்பதில்லை. வெறும் முந்திரி கூட ருசிக்கலாம். உங்களில் போடும் சமயம் நெய்யில் வறுத்து எடுக்கும் சமயம் சாப்பிடவும் பிடிக்கும்.
நீக்குஎம்ஜிஆர் பிறரிடமிருந்து எதையும் பெற்றுக்கொள்ள விரும்பியதில்லை. கடன் என்று நினைத்து உடனே அவர்களுக்கு ஏதேனும் மிகப் பெரியதாகச் செய்துவிடுவார். அவர் ஒரு தனிப் பிறவி.
பதிலளிநீக்குஅது என்னவோ உண்மைதான்.
நீக்குமுந்திரி பருப்பு ஹா...ஹா.
பதிலளிநீக்குஜோக்ஸ், திருமண படங்கள் ரசனை.
நன்றி மாதேவி.
நீக்குகாஜு கட்லி (or Kaju Barfi) எனப்படும் அந்த அருமையான முந்திரி பர்ஃபிபற்றி ஏன் யாரும் எழுதவில்லை? தைர்யமாக வாங்கி சாப்பிடுங்கள். உள்ளே போய் வெடிக்காது. சத்தியம்... இது சத்தியம்!
பதிலளிநீக்குஆஆஆஆ ஏ அண்ணன்... இது நாங்களும் டெல்லி- ஹல்டிராம் இல் வாங்கிச் சாப்பிட்டோமே.. என்னா சுவை.. இனிப்புப் பிடிக்காத எனக்கே பிடிச்சது...
நீக்குகாஜூ கட்லி ஒன்று வாயில் போட்டுக் கொள்ளலாம். நிறைய சாப்பிட்டால் திகட்டி விடும்!
நீக்குஹல்டிராமில் வாங்கும் ஏதும் எனக்குப் பிடிக்காது.
நீக்குஅடடா என்னாலேயே தாங்க முடியவில்லை முபருப்புக் கதையை... வந்தவர்கள் சாப்பிடாமல் போய் விட்டார்களே .. அதனாலென்ன என எல்லோரும் யோசித்திருப்பார்கள், ஆனா எல்லோர் கண்ணும் அந்த முபருப்புமேலதான் இருந்திருக்கு.. ஆனா அப்பெண்களின் செயல் .. எவ்வளவு இழிவாக இருக்கிறது படிக்கவே..
பதிலளிநீக்குஅதன் பின்பு பேப்பர் கொண்டுவாங்கோ பக் பண்ண என்றாரோ ஹா ஹா ஹா இல்லாததை எப்பூடிப் பக் பண்ண முடியும்.. அதன்பின்பு வாழ்க்கையில் ஒபிஸில் யாருக்கும் முபருப்பு வாங்கி வைக்கும் எண்ணமே வந்திருக்காதே...
ஊசிக்குறிப்பு:
ஆசைப்பட்டதை வாங்கி ஓரளவு சாப்பிடுங்கோ ஸ்ரீராம், ஆனா அதற்கேற்ப கொஞ்சம் நடைப்பயிற்சியும் செய்யுங்கோ... ஆகவும் கூடாது கூடாது எனக் கட்டுப்படுத்திக் கொண்டிருப்பதும் பிடிக்காது எனக்கு, இருக்கும் வரை பிடிச்சபடி வாழ்வோமே எனத்தான் நினைப்பேன், அதுக்காக ஓவராகவும் போயிடக்கூடாது.
ஆண்களோ, பெண்களோ எல்லோருக்கும் நாக்கு நாலு முழம், ஆசை இருக்கிறது. ஊசிக்குறிப்புக்கு பதில் நடக்கிறேன். தினமும் நடக்கிறேன்.
நீக்குகல் என்றால் வெறும் கல் தான்..
பதிலளிநீக்குசிலை என்றால் அது சிலைதான்..
.. அது அவரவர் மனநிலையைப் பொறுத்தது, யாருக்கும் எதையும் திணிக்க முடியாதெல்லோ...
கவிதை, இப்போ எங்களுக்கும் பொருந்தும்.. சூடு வெக்கை தாங்க முடியவில்லை, ஆனா இங்கு சில்லென ஒரு காத்துண்டு அதனால வீட்டுக்குள் ஓகே, வெளியே இறங்க முடியாது.. அதிலும் காலை 4 மணிக்கே சூரியன் ஹாய் சொல்கிறார் பின்பு இரவு 11 மணிக்குத்தான் குட்நைட் சொல்கிறார்... நாங்கள் 10.30 க்குப் பின்புதான் வீட்டுக்கு லைட் போடுகிறோம் என்றால் பாருங்கோவன் எங்கள் பகலின் நீளத்தை...
உங்கள் ஊரிலேயே சூடு என்றால் நாங்கள் எல்லாம் என்ன சொல்வது!
நீக்குபுரட்சித் தலைவர் எம்ஜிஆர் கதைகள் படிக்க படிக்க சுவாரஷ்யம்...
பதிலளிநீக்குபடப் பெயர் மறந்திட்டேன்.. சமீபத்தில் வந்த ஹிந்திப்படம்.. நானும் பார்த்தேன்... சூப்பராக இருந்தது...
ஓ.. ஊன்ச்சாயி பார்த்து விட்டீர்களா?
நீக்குஇல்ல ஸ்ரீராம், ஜெ..லலிதாவும் எம்ஜிஆருடையதும் கதை என ஒரு படம் வந்துதே...
நீக்குஇதைப் பற்றி நான் அறியாதிருக்கிறேன். என்ன படம் என்று தெரியவில்லை. தீபிகா பதுகோன் நடித்ததா?
நீக்குஅது மாறிச்சொல்லிட்டேன், தமிழில் வந்து ஹிந்தியிலும் வந்தது.. தலைவி.... அப்படத்தைச் சொன்னேன்...
நீக்குஹங்குபாய் உம் நல்ல ஹிந்தி மூவி, பார்த்திருப்பீங்கள்..
sir எனவும் ஒரு ஹிந்தி மூவி நெட்பிளிக்ஸ் ல இருக்குது பார்க்க நல்லா இருக்கு.
கல்யாணப்பத்திரிகை நல்லாத்தான் இருக்குது... உங்கட பத்திரிகையையும் போடுங்கோவன் ஸ்ரீராம்.
பதிலளிநீக்குபொக்கிஷம் எல்லாம் நல்லாவே இருக்குது.
////இதில் என்ன ஜோக் ன்று நிஜமா எனக்குப் புரியலை!///
அது அவரின் அப்பாபோல இருக்குது, அவருக்கு ரிக்கெட் எடுக்காமல் கூட்டி வந்திட்டார், இப்போ பயத்தில நழுவப்பார்க்கிறாரோ ....
என் கல்யாண பத்திரிகை எல்லாம் சுவாரஸ்யமாக இருக்காது அதிரா. அதில் இது போன்ற எக்ஸ்டரா விஷயங்களும் இல்லை.
நீக்கு//நான்கைந்து நாட்கள் கழித்து மெதுவாக அந்தச் செய்தியை சொன்னபோது, “ஏன் என்கிட்ட முன்னாடியே சொல்லவில்லை” என்று கடுமையாகக் கோபித்துக் கொண்டாராம்.// இதைப் பற்றி நான் படித்தது, இந்திராகாந்தி இறந்து கிட்டத்தட்ட ஒரு மாதம் வரை இந்திராகாந்தி கொலை செய்யப்பட்ட தகவல் அவருக்கு தெரிவிக்கப் படவில்லை. ஒரு மாதத்திற்குப் பிறகு செய்தித்தாளை படித்த அவர், பிரதமர் ராஜீவ் காந்தி என்று இருந்ததைப் பார்த்து விட்டு, "ராஜீவ் காந்தி பிரதமரா? இந்திராகாந்திக்கு என்னவாயிற்று? என்று கேட்டிருக்கிறார், அதன் பிறகே அவருக்கு தகவல் தெரிவிக்கப் பட்டதாம். செய்தி கேட்டு, அவர் கதறி அழுதார் என்பது கொஞ்சம் மிகை என்றே தோன்றுகிறது.
பதிலளிநீக்குஅவருக்கே உடம்பு சரியில்லாத மனநிலையில் மனம் பலவீனப்பட்டுப் போய் கதறி அழுதிருக்கலாம். ஏனென்றால் இந்திராதான் எம் ஜி ஆரை அக்கறையுடன் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தவர். மேலும் நம்மூர் செய்தித்தாள்கள்தான் பிரபலங்கள் கண்கலங்கினாலே 'கோ' வென்று கதறி அழுதார் என்று சித்தி வெளியிடும் டைப்பாச்சே...
நீக்குதிருமண பத்திரிகையில் மாயா வரைந்திருக்கும் ஓவியம் தெலுங்கு, அல்லது மாத்வ திருமணம் போல தெரிகிறது.
பதிலளிநீக்கு
நீக்குஓ.. அப்படியா?
கவிதை சிறப்பு!
பதிலளிநீக்குநன்றி.
நீக்குகார முந்திரி.. கரகரப்பான சுவாரஸ்யம். புரட்சித் தலைவரின் குணாதிசியங்களைப் பற்றிய தகவல்கள் சிறப்பு. கவிதை அருமை.
பதிலளிநீக்குதொகுப்பு நன்று.
நன்றி ராமலக்ஷ்மி.
நீக்கு