திங்கள், 26 ஜூன், 2023

"திங்கக்"கிழமை :  சொஜ்ஜி அப்பம் - கீதா சாம்பசிவம் ரெஸிப்பி 

 சொஜ்ஜி அப்பம்: சொஜ்ஜி அப்பம்னா என்னனு கேட்காதீங்க. சொஜ்ஜி அப்பம் இரண்டு முறைகளில் செய்யலாம். ஒண்ணு வெல்லம் போட்டுச் செய்வது; இன்னொண்ணு சர்க்கரை போட்டுச் செய்வது. அதே போல் ஒண்ணு போளி போல் தட்டித் தோசைக்கல்லில் போட்டு எடுப்பது. இன்னொண்ணு எண்ணெயில் பொரித்து எடுப்பது. எண்ணெயில் பொரித்து எடுக்கும் சொஜ்ஜி அப்பங்களானாலும், போளி மாதிரி தட்டினாலும் மூன்று நாட்கள் வரை வைச்சுச் சாப்பிடலாம்.

தேவையான பொருட்கள்: ரவை 200 கிராம், வெல்லம் பாகு தூள் செய்தது 200 கிராம். ஏலக்காய்த் தூள் ஒரு டீஸ்பூன். நெய் குறைந்தது 100 கிராம், முந்திரிப்பருப்பு(தேவையானால்) வேக வைக்க நீர் தேவையான அளவுக்கு.

மேல் மாவுக்கு: பொடி ரவை 50 கிராம், மைதா 200 கிராம், உப்பு அரை டீஸ்பூன், வெண்ணெய் அல்லது நெய் இரண்டு டேபிள் ஸ்பூன். கலந்து பிசைய நீர் தேவையான அளவு.

முதலில் மாவைப் பிசைந்து ஊற வைக்கலாம். ரவையையும், மைதாவையும் ஒன்றாய்க் கலந்து கொள்ளவும். ஒரு வாயகன்ற பாத்திரத்தில் ஒரு டேபிள் ஸ்பூன் வெண்ணெய் அல்லது நெய்யைப் போட்டு உப்புச் சேர்ந்து நன்கு குழைக்கவும். ஐந்து நிமிடங்கள் போல் விடாமல் குழைத்துவிட்டுப் பின்னர் ரவை, மைதா கலந்த கலவையைப் போட்டு மேலும் ஐந்து நிமிடங்கள் அந்த நெய்யோடு ரவை, மைதா நன்கு கலக்கும்படி கலக்கவும். கொஞ்சம் கொஞ்சமாக நீர் விட்டுப் பிசையவும். தேவை எனில் மீதம் உள்ள நெய்யைச் சேர்க்கலாம். ரொம்பவே நெய் அல்லது வெண்ணெய் சேர்த்தால் பொரிக்கையில் அல்லது தோசைக்கல்லில் போடுகையில் உதிர்ந்துவிடும் என்பதால் தேவை எனத் தெரிந்தால் மட்டுமே சேர்க்கவும். நன்கு சப்பாத்தி மாவு பதத்துக்கு வந்ததும், நல்லெண்ணெய் விட்டு மூடி வைக்கவும். இது வெள்ளையாக இருக்கலாம் எனில் மஞ்சள் தூள் சேர்க்கவேண்டாம். கலர் வேண்டுமென்றால் மாவு பிசைகையிலேயே ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் சேர்க்கலாம். இது அவரவர் விருப்பம்.

வாணலியை அடுப்பில் ஏற்றிக் கொள்ளவும். இன்னொரு பக்கம் வேறொரு பாத்திரத்தில் நீரை நன்கு கொதிக்க வைத்துக் கொள்ளவும். அடுப்புத் தணித்து வைத்து நீர் சூடாகவே இருக்கட்டும். அடுப்பில் ஏற்றிய வாணலியில் எடுத்துக் கொண்டிருக்கும் நெய்யில் பாதியை ஊற்றி ரவையைப் போட்டு நன்கு வறுக்கவும். ரவை நன்கு சிவக்க வறுபட்டதும் கொதிக்கும் வெந்நீரை ஊற்றிக் கிளறவும். ரவை நன்கு வெந்து வரும் சமயத்தில் வெல்லத் தூளைச் சேர்க்கவும். வெல்லத் தூளைச் சேர்க்கையில் கொஞ்சம் நீர் விட்டுக் கொள்ளும். பயப்பட வேண்டாம். கிளறிக் கொண்டே இருக்கவும். மிச்சம் இருக்கும் நெய்யைத் தேவையானால் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றிக் கிளறவும். நன்கு சுருண்டு வருகையில் அடுப்பை அணைத்துக் கீழே இறக்கி ஏலக்காய்ப் பொடியைத் தூவி முந்திரிப்பருப்பை நெய்யில் வறுத்துப் போடவும். நன்கு ஆற வைக்கவும். ஆறியதும் உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.

சப்பாத்திப் பலகையில் பிசைந்து வைத்துள்ள மாவில் ஒரு சின்ன உருண்டை எடுத்துக் கொண்டு பூரி அல்லது சப்பாத்தி அளவுக்கு இட்டுக் கொள்ளவும். உருட்டிய சொஜ்ஜி உருண்டைகளில் ஒன்றை அதில் வைத்து மூடவும். நன்கு மூடியதும் ,எண்ணெய் அல்லது நெய்யைத் தொட்டுக் கொண்டு அதிரசம் போல் தட்டவும். வாணலியில் எண்ணெயைக் காய வைத்து தட்டிய சொஜ்ஜி அப்பத்தைப் போட்டுப் பொரித்து எடுக்கவும்.

படத்துக்கு நன்றி கூகிளார்

போளி மாதிரித் தட்டி தோசைக்கல்லில் போட்டு எடுக்கும் முறையில் மேற்கூறியது போல் செய்து கடைசியில் எண்ணெயில் பொரிப்பதற்குப் பதிலாக தோசைக்கல்லில் போட்டு இரண்டு பக்கமும் நன்கு வேக வைத்து எடுக்கவும். ஆனால் பொரித்து எடுக்கும் சொஜ்ஜி அப்பங்களே சுவையாக இருக்கும்.

இதை வெல்லம் சேர்க்காமல் சர்க்கரை சேர்த்தும் மேற்கூறிய மாதிரிச் செய்யலாம். பொதுவாக சுமங்கலிப் பிரார்த்தனை போன்ற முக்கிய நிகழ்ச்சிகளுக்குச் செய்கையில் வெல்லம் சேர்த்துச் செய்வார்கள்.

26 கருத்துகள்:

  1. திடீர்னு சொஜ்ஜி பஜ்ஜி பற்றியெல்லாம் எழுத ஆரம்பிச்சிட்டீங்க. அப்புவை பெண் பார்க்க யாரேனும் வாராங்களா?

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்புவுக்கு இப்போத்தான் பதினைந்து வயது. பத்தாவது முடிச்சுட்டு +1 போகக் காத்திருக்கா! அவள் அக்காவிற்குத் தான் பார்க்கணும். இன்னிக்குக் கூடக் கேட்டோம். மாட்டேன் என்கிறாள். கல்யாணமே செய்துக்கப் போவதில்லையாம். :(

      நீக்கு
  2. காக்க காக்க
    கனக வேல் காக்க..
    நோக்க நோக்க
    நொடியில் நோக்க..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  3. இந்த மைதாவைத் தவிர்த்து விட்டு செய்ய இயலுமா அக்கா?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோதுமை மாவு சேர்த்துக்கலாமே தம்பி. இந்தப் பதிவே பல நாட்கள்/வருடங்கள் முன்னர் மைதாவைத் தவிர்க்கும் முன்னால் எழுதினதைத் தேடி எடுத்து ஸ்ரீராமுக்கு அனுப்பினேன். கோதுமை மாவில் தான் இப்போல்லாம் நெய்க்கொழுக்கட்டை பண்ணுகிறேன். அதே போல் இதையும் பண்ணலாம்.

      நீக்கு
    2. நல்லது அக்கா..
      மகிழ்ச்சி. நன்றி..

      நீக்கு
  4. சொஜ்ஜியப்பம் எங்க ஊர் (இப்போ இருக்கும் கர்நாடகா) ஸ்பெஷல். கடைகளில் (கான்டிமென்ட்ஸ் எனப்படும் நொறுக்குத்தீனி கடைகள்) 10-15 ரூபாய்க்குக் கிடைக்கும். ரவா லட்டு, பல்வேறு வகையான் போளிகள், சொஜ்ஜியப்பம்லாம் கிடைக்கும்.

    செய்முறை நன்று. படம் சொதப்பல். நல்ல படத்தைத் தேர்ந்தெடுத்திருக்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படம் சொதப்பல் என்று எதனால் சொல்கின்றீர்கள் ?..

      நீக்கு
    2. நான் இரண்டு வாரங்களுக்கு ஒரு தடவையாவது கடைகளில் சொஜ்ஜியப்பம் அடுக்கி வைத்திருப்பதைக் காண்கிறேனே. படத்தில் மேல் மாவு சரியா இல்லை. பொரி பொரியா மேல வந்திருப்பதைப் பாருங்கள்.

      நீக்கு
  5. பெரும்பாலும் வெல்லம் போட்ட சொஜ்ஜியப்பம்தான் உண்டு. இதற்கென்றே சிரோட்டி ரவை எனப்படும் பொடி ரவை கடைகளில் கிடைக்கும்.

    பதிலளிநீக்கு
  6. இங்கு வந்த பிறகு, ச்ராத்தத்துக்கு, அதிரசத்துக்குப் பதிலாக சொஜ்ஜியப்பம்தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என் அம்மா இருந்தப்போவும் ச்ராத்தம் எனில் சொஜ்ஜி அப்பம் தான். பின்னாட்களில் அதிரசமாகி இப்போல்லாம் அப்பமாகக் குத்தி விடுகிறார்கள். அவரவர் சௌகரியம்.

      நீக்கு
  7. கீதாக்கா, சூப்பர் சூப்பர். நல்லா வந்திருக்கு

    நம் வீட்டில் முன்பெல்லாம் அடிக்கடி செய்ததுண்டு. அதுவும் பாட்டி இருந்த வரையில் அவங்களுக்கு ரொம்பப் பிடிக்கும்.

    நீங்கள் சொல்லியிருக்கும் முறையே தான்...சீனி அல்லது வெல்லம்...

    நான் பாட்டியிடம் கற்றுக் கொண்டது. தீபாவளி போன்ற தினங்கள் என்றால் ஜீனி. திவசம் என்றால் வெல்லம் என்று சொல்லிக்கொடுத்தார். அப்படிச் செய்வது வழக்கம்.

    கீதா

    பதிலளிநீக்கு
  8. பாம்பே ரவை என்றால் பொடித்துக் கொண்டுவிடுவேன் மைதாவில் கலக்க. இங்கு கிடைக்கும் சிரோட்டி ரவையைப் பயன்படுத்துவேன் உள்ளே வைப்பதற்கும் கூட சிரோட்டி ரவை. ஆனால், அபூர்வமாகிவிட்டது வீட்டில் செய்வது. இங்கு நன்றாகக்கிடைத்தாலும் வாங்கிச்சாப்பிட்டதில்லை. வேண்டுமென்றால் வீட்டில் செய்துகொள்ளலாம் என்று.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என் புக்ககத்தில் சுமங்கலிப் பிரார்த்தனைக்கு மட்டும் மேல்மாவு அதிரசம் என ஒண்ணு பண்ணுவாங்க. சாதாரணமாய் அதிரச மாவு கிளறுகிறாப்போல் கிளறித் தனியாக வைச்சுக்கணும். ஏலக்காய் எல்லாம் அதிலேயே போட்டுடலாம். கால் கிலோ அதிரசமாவு எனில் சுமார் ஒரு ஆழாக்கு/200கி பச்சரிசியை நன்கு ஊற வைத்துக் கொண்டு ஒரு மூடித் தேங்காய்த் துருவலோடு துளி உப்புச் சேர்த்துக் கல்லுப் போல் நன்கு அரைக்கணும். நல்ல நைசாக அரைக்கணும். எங்க பாஷையில் வெழுமூண! பின்னர் அந்த மாவை ஓர் எலுமிச்சம்பழ அளவு எடுத்துக் கொண்டு வாழை இலையில் வைத்துத் தட்டணும். தட்டியதில் ஏற்கெனவே கிளறி வைச்சிருக்கும் அதிரச மாவை எடுத்து வைத்து நாலு பக்கமும் மூடிக் கொண்டு மீண்டும் அதிரசமாகத் தட்டணும். கொஞ்சம் சிரமமாகவே தான் இருக்கும். தட்டியதை எண்ணெயி/நெய்யில் போட்டுப் பொரிச்சு எடுக்கணும். எண்ணெயைக் குடிச்சுக் கொண்டு எண்ணெயாகத் தான் இருக்கும் நான் மேல் மாவு அரைக்கையில் கெட்டியாக அரைத்துக் கொண்டு கொஞ்சம் மாவை லேசாக நீர் சேர்த்துக் கரைத்துக் கொண்டு, பூரணமாக வைச்சிருக்கும் அதிரச மாவை அதில் போட்டு முக்கி எடுத்துக் கொண்டு பின்னர் வாழை இலையில் போட்டுத் தட்டிப் போட்டுப் பொரிச்சு எடுப்பேன். எண்ணெய் என்னமோ எப்படிப் பண்ணினாலும் குடிக்கும்.

      நீக்கு
  9. இந்த சொஜ்ஜியில் விளைந்த ஒரு கற்பனை...அதுவும் வீட்டுக்கு வந்தவரால் என்னை யோசிக்க வைத்தது....கோதுமை மாவில் செய்யலாம் என்றும். அது போல கோதுமை கேழ்வரகு மாவு கலந்து கொண்டு அதில் கொஞ்சம் சிரோட்டி ரவை சேர்த்தும் செய்யலாம் என்று.... எழுதி வைத்திருக்கிறேன்...ரெசிப்பிஎ ல்லாம் இல்லை இது எப்படி வந்ததுன்னு...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சொஜ்ஜி என்றாலே ரவை என்று அர்த்தம். அதனால்தான் பஜ்ஜி சொஜ்ஜிம்பாங்க (அதாவது ரவையில் செய்யும் கேசரி. அதுதானே சட்னு பண்ணி, வர்றவங்களை வாயைத் திறக்கவிடாமல் செய்துவிடலாம் ஹா ஹா).

      மைதா என்பதே for binding. அதற்குப் பதிலாக கோதுமை மாவு உபயோகிக்கலாம். ஆனால் பெரும்பாலான வீடுகளில் சப்பாத்தி மாவுதான் இருக்கும், வெறும் கோதுமை மாவு இருப்பது அபூர்வம்.

      நீக்கு
    2. சப்பாத்தி மாவுக்கும் கோதுமை மாவுக்கும் என்ன வித்தியாசம்னு புரியலை. எங்க வீட்டில் மாவு மில்லிலேயே கோதுமையாக வைச்சிருப்பாங்க. அதைத் தேர்ந்தெடுத்து எத்தனை கிலோ மாவு வேணுமோ அங்கேயே அரைத்து வாங்கி வருவோம். அதில் தான் சப்பாத்தி, பூரி பண்ணுவதெல்லாம். பூரிக்கு மாவு பிசைந்தால் இப்போல்லாம் ரவை சேர்க்கிறாங்க. நம்ம ரங்க்ஸுக்கு அது பிடிப்பதில்லை. நான் கொஞ்சம் உப்போடு ஒரு டீஸ்பூன் சர்க்கரையும் சேர்த்து மாவில் முழுதுமாகக் கலக்கும்படி கலந்து வைத்துக் கொண்டு பின்னர் மாவு பிசைந்து பூரி பண்ணுவேன். பூரி நன்றாக உப்பிக் கொண்டு வரும். அமுங்காமல் நிற்கும்.

      நீக்கு
  10. அடுத்து சில்லில் எந்த குறிப்புகளைப் பதிவாக்கலாம்னு யோசித்த வேளையில் கீதாக்காவின் சொஜ்ஜி கை கொடுக்கும் கையாக....கீதாக்கா நன்றி!! ஹாஹாஹாஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  11. சொஜ்ஜி அப்பம் குறிப்பு மிக அருமை! சின்ன வயதில் மன்னார்குடியில் இருந்தபோது யாரோ கொண்டு வந்து பிரசாதம் என்று சொல்லி கொடுத்தார்கள். சுவை பிடித்துப்போனதால் அதை செய்ய கற்றுக்கொண்டேன். மேல் மாவு பொதுவாக மைதா மட்டுமே சேர்ப்பார்கள். நீங்கள் ரவாவையும் சேர்க்கச் சொன்னது நல்ல டிப்ஸ்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்க வீட்டில் ரவைதான் அதிகம் இருக்கும். அதிலும் ச்ராத்தம் எனில் கண்டிப்பாக ரவை தான். பால் விட்டுப் பிசைந்து தளர வைச்சிருப்பாங்க. பின்னர் அப்பளத்து மாவை இடிப்பது போல் நெய் தடவிக்கொண்டு அம்மியில் வைத்துப் புரட்டிப் புரட்டி இடிப்பாங்க. சேர்ந்து வந்ததும், பூரணம் கிளறி சொஜ்ஜி அப்பமாகச் செய்வார்கள். இதையே சுமங்கலிப் பிரார்த்தனை எனில் ரவைப் பூரணத்தோடு தேங்காயும் சேர்ப்பது உண்டு.

      நீக்கு
  12. சொஜ்ஜி அப்பம் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  13. சொஜ்ஜி அப்பம் செய்முறை நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!