வைரமுடி யாத்திரை – தொண்டனூர் – பகுதி 19
முந்தைய நாள் மேல்கோட்டை வந்த பிறகு இரு முறை செல்வநாராயணர் கோவிலுக்குச் சென்று மூலவரை தரிசனம் செய்தேன். மறுநாள் மதியத்திலிருந்து கூட்டம் வர ஆரம்பித்துவிடும். அதற்குப் பிறகு மூலவரை தரிசனம் செய்ய 2 மணி நேரங்களுக்கு மேல் ஆகிவிடும். அதனால் நான் அதிகாலையில் சீக்கிரம் எழுந்து, நேரே கோவிலுக்குச் சென்றேன். 5 ½ க்குத்தான் விஸ்வரூப தரிசனம் ஆரம்பித்த து. சீக்கிரமாகவே தரிசனம் செய்ய முடிந்தது. பிறகு காபிக்குச் சென்றேன். காபி முடிந்ததும், குளிப்பதற்குத் தேவையானவைகளை மாத்திரம் எடுத்துக்கொண்டு, பேருந்தில் தொண்டனூர் சென்றோம்.
மேல்கோட்டை என்று அழைக்கப்படும் திருநாராயணபுரத்தில், கோவில் 1 ஏக்கர் அளவில் இருக்கும். கோவிலுக்கு வலப்புறம், நான்கு மாட வீதிகள் அமைந்திருக்கின்றன. 150 மீட்டர், 300 மீட்டர் நீளங்களில் இருக்கும் செவ்வக வடிவம். இதற்கு வெளியே ஊர் நிறைய வளர்ச்சி பெற்றிருக்கிறது. இந்த நான்கு மாடவீதிகளில் ஒன்றில் ஒரு பள்ளியும் செயல்படுகிறது. இந்த நான்கு மாடவீதிகளில்தான் வைரமுடி அணிந்து செல்வப்பிள்ளை சந்திரப் ப்ரபையில் பல்லாக்கில் ஊர்வலமாக வருவார். நான்கு வீதிகளிலும் வந்து பக்தர்களுக்குத் தரிசனம் கொடுத்துவிட்டு கோவிலுக்குத் திரும்ப கிட்த்தட்ட 5-6 மணி நேரம் ஆகிவிடும். அப்படியென்றால் எவ்வளவு மெதுவாக இந்த ஊர்வலம் நடக்கும் என்று கற்பனை செய்துகொள்ளுங்கள். இந்தச் சமயத்தில் (ஒரு நாள், அதாவது மாலை 4 மணியிலிருந்து மறுநாள் காலை 7 மணி வரை) அந்தச் சின்ன கிராமத்தில் லட்சக்கணக்கான மக்கள் வருவார்கள். நிறைய அன்னதானக் கூடங்களும் உண்டு. வீதிகளை அலங்கரிப்பது, தண்ணீர் தெளிப்பது, கோவிலில் பூக்களுடன் கூடிய அலங்காரம் என்று அந்த இடமே ஜெகஜ்ஜோதியாக இந்த ஒரு நாள் இருக்கும்.
வைரமுடி
திருவிழாவிற்காக மாடவீதிகளில் சீரியல் விளக்குகள் பொருத்தியிருக்கிறார்கள். (காலை 4 ¼ )
கோவில் பூ
அலங்காரத்துடன் வண்ண விளக்குகளினால் ஒளிமயமாக்கப்பட்டிருந்தது.
கோவில்
வெளிமண்டபத்தில் இருக்கும் தூண்களில் உள்ள சிற்பங்கள். ஏற்கனவே மக்கள் இந்த
மண்டபத்தில் நிறைய ஆரம்பித்துவிட்டார்கள்.
முதல் சிற்பம் வெண்ணையைக் கையில் வைத்திருக்கும் கிருஷ்ணர். இரண்டாவது, கருடன்.
முதல்
சிற்பம் லக்ஷ்மி நாராயணர். இரண்டாவது கல்கி அவதாரம் போல் தெரியவில்லை. குதிரை
சரியாக வராததால் இருக்கும்.
இரண்டாவது சிற்பத்தில் காணப்படுவதுபோலத்தான் பெரும்பாலும் விஷ்ணு மூர்த்தங்கள்
கர்நாடகா கோவில்களில் காணப்படுகின்றன (மளூர், பேளூர் போன்று பல கோவில்களிலும்)
விஷ்ணுவின் சிறிய திருவடியும் (ஹனுமான்), பெரிய திருவடியும் (கருடன்)
கோவில்களுக்குச் சென்றால் நான் விநாயகர் சிற்பங்கள் இருந்தால்
படமெடுத்துவிடுவேன். அந்தக் கோவில் எந்தக் காலத்தைச்
சேர்ந்தது என்றும் தெரிந்துகொள்வேன்.
காலையில் மேல்கோட்டை யோகநரசிம்மர் ஆலயத் தோற்றம். மேல்கோட்டையிலிருந்து 500 படிகள் மேலே ஏறிச் சென்றால் கோவிலை அடையலாம்.
20 கிமீ தூரத்தில் இருக்கும் தொண்டனூரை, 7 ¼ க்கு அடைந்தோம். குளிப்பதற்குத் தேவையான டிரெஸ் இருக்கும் பையை எடுத்துக்கொண்டு, சுமார் ½ கிமீ நடந்து சென்று ஏரியை அடைந்தோம்.
தொண்டனூரில், நான்கு இடங்கள் முக்கியமானவை. தொண்டனூர் ஏரி, அங்கிருந்து சிறிது தூரத்தில் அமைந்திருக்கும் யோக நரசிம்மர் ஆலயம். இது சிறிய கோவில். பக்த பிரகலாதனால் பிரதிஷ்டை செய்யப்பட்டது என்று நம்பப்படுகிறது. (5500 ஆண்டுகளுக்கு முன்னர்). இந்தக் கோவிலை அடைய 20 படிகள் ஏறவேண்டும். இது இராமானுஜரின் அபிமானத்தலம் என்று சொல்லப்படுகிறது.
இராமானுஜரின் சீடர் தொண்டனூர் நம்பி, இங்கு ஒரு ஏரியை அமைத்தார். அது பஞ்ச அப்ஸர தடாகம் என்று அழைக்கப்பட்டது. இந்தப் பகுதியைத் தலைமையிடமாகக் கொண்டு ஜைன அரசன் bபிட்ட தேவா ஆட்சி புரிந்துவந்தான். அவனுடைய மகள் நோய்வாய்ப்பட்டிருந்தாள் (மனநிலை சரியில்லாமல் இருந்தாள்). அரசனின் மகளின் நோயை யாராலும் குணப்படுத்த முடியவில்லை. தொண்டனூர் நம்பி, அரசனை இராமானுஜரிடம் அழைத்துவந்தார். இராமானுஜர், அரசனின் மகளை தொண்டனூர் ஏரியில் குளித்துவிட்டு, யோக நரசிம்மர் கோவிலுக்குச் செல்லச் சொன்னார். கோவிலில் அர்ச்சகர், நரசிம்மர் கரத்தில் இருந்த தண்டத்தை இளவரசியின் தலையில் வைத்ததும், இளவரசியின் மனநோய் முற்றிலும் குணமடைந்தது.
மிகவும் மனமகிழ்ந்த அரசன் bபிட்ட தேவா, இராமானுஜருக்கு தான் என்ன தரவேண்டும் எனக் கேட்டபோது, தான் வைணவத்தைப் பரப்பவே ஹொய்சாள நாட்டுக்கு வந்துள்ளதாகவும், அரசன் வைணவத்துக்கு மாறவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். அரசன், தன் மதக்குழுவினரின் விருப்பத்துக்கு மாறாக, வைணவத்தைத் தழுவி, விஷ்ணுவர்தன் என்று பெயர் மாற்றம் கொண்டார். தன்னுடன் இருந்த ஜைனர்களிடம், இராமானுஜர் அவதார புருஷர், ஆதிசேஷன் எவ்வாறு லக்ஷ்மண அவதாரம் எடுத்து இராமருடன் இருந்தாரோ அதுபோல கலியுகத்தில் ஆதிசேஷ அவதாரம் இராமானுஜர் என்று சொன்னார். ஆனாலும் அதனை ஏற்றுக்கொள்ளாமல், ஆயிரம் ஜைனர்களும் இராமானுஜருடன் வாதிட வந்தனர். (மதக்கருத்துக்களை). இராமானுஜர், யோக நரசிம்மரின் அருளை யாசித்து, சந்நிதிக்கு வெளியே, ஒரு திரையிட்டு, அதன் பின்னே அமர்ந்துகொண்டு, எதிரே இருந்த ஆயிரம் ஜைனர்களின் கேள்விகளுக்கும் ஒரே சமயத்தில் பதிலளித்தார். இராமானுஜர் அவதார புருஷர் என்று அறிந்துகொண்ட ஆயிரம் ஜைனர்களும், வைணவத்திற்கு மாறினர். (விஷ்ணு வர்தன் பிறகு பல கோவில்களை எழுப்பினான்)
பன்னிரண்டு ஆண்டுகள் திருநாராயணபுரத்தில் இருந்து பிறகு ஸ்ரீரங்கம் திரும்ப யத்தனித்தபோது, மேல்கோட்டையில் இருந்த பக்தர்கள் அவரைப் பிரியமாட்டாமல் இருக்க, இராமானுஜருடைய விக்ரஹம் ஒன்று செய்யப்பட்டு, அதை ஆரத் தழுவி தன் நினைவாக வைத்துக்கொள்ளச் சொன்னார் இராமானுஜர். (இது நடந்த து மேல்கோட்டையில்). அதுபோல தொண்டனூர் மக்களும் அவரைப் பிரியவொட்டாமல் இருக்க, இராமானுஜர், தன் சூக்ஷ்ம ரூபமான ஆதிசேஷ ரூபத்தை, யோக நரசிம்மர் ஆலயத்தில் பிரதிஷ்டை செய்தாராம். அந்தச் சந்நிதி இப்போதும் யோகநரசிம்மர் ஆலயத்தில் இருக்கிறது. அங்கேயே இராமானுஜர் உபயோகித்த பூக்கூடையும் இருக்கிறது.
மேல்கோட்டையில் செலுவநாராயணர் கோவிலில் உள்ள இராமானுஜர் உற்சவ விக்ரஹம், இராமானுஜரின் இளமையை நினைவுபடுத்தும் விதத்தில் இருக்கும். அதை அபிமான விக்ரஹம் என்கின்றனர். ஸ்ரீபெரும்புதூரில் உள்ள இராமானுஜர் விக்ரஹம் ஸ்தூல ரூபம் என்றும் (அதன் கதை பின்பு), ஸ்ரீரங்கத்தில் இருக்கும் இராமானுஜர் திருவுருவம் சரீரம் என்றும், தொண்டனூரில் இருக்கும் சேஷ ரூபம் சூக்ஷ்ம ரூபம் என்றும் குறிப்பிடப்படுகிறது. இராமானுஜரால் நிர்மாணிக்கப்பட்ட சேஷ ரூபம், வைகானச ஆகமம் கொண்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது என்று சொல்கிறார்கள்.
இந்த யோக நரசிம்மர் கோவிலில் வேண்டிக்கொண்டு, வேண்டுதல் நிறைவேறியதும் நன்றி தெரிவிக்கும் விதமாக, நரசிம்மருக்கு 10X6 வேஷ்டியும், இராமானுஜருக்கு காவி நிற வஸ்திரமும் சமர்ப்பிக்கிறார்கள்.
தொண்டனூர் ஏரி, தொண்டனூர்
தொண்டனூர் ஏரி மிகப் பிரம்மாண்டமான ஏரி. அங்கு குளித்துவிட்டு, மலைப்பாதை வழியாக யோக நரசிம்மர் கோவிலுக்குச் சென்றோம்.
இந்த
இடத்தின் முக்கியத்துவம் கருதி, இங்கு அமைக்கப்பட்டிருக்கும் இராமானுஜர் சிலை.
யோக நரசிம்மர் ஆலயம், தொண்டனூர்
தொண்டனூர் யோக நரசிம்மர் கோவிலுக்கு ஏறுவதற்கான படிகள். இது வைரமுடி சேவை சமயம் என்பதால், நிறைய பக்தர்கள் லாரியில் தொண்டனூருக்கும் வந்துவிட்டுச் செல்வார்கள். பக்தர்கள் குழுவாக வந்து ஆங்காங்கு தங்கி, குளித்து, உணவு தயாரித்துச் சாப்பிட்டு, கோவில்களை தரிசனம் செய்துவிட்டு பிறகு மேல்கோட்டைக்கு வருவார்கள். அருகில் அப்படி ஒரு குழு உணவு தயாரித்துக் கொண்டிருந்தபோது எடுத்த படம்.
(இணையத்திலிருந்து… தொண்டனூர் யோக
நரசிம்மர் மூலவர். பிரகலாதனால் பிரதிஷ்டை செய்யப்பட்டவர்)
தொண்டனூர் இராமானுஜர், சேஷ ரூபம் (சூக்ஷ்ம ரூபம்). இராமானுஜரால் பிரதிஷ்டை செய்யப்பட்டது – இணையம்.
இராமானுஜர் உபயோகித்த பூக்கூடை. அந்தச் சந்நிதியிலேயே இருக்கிறது.
தொண்டனூர்
யோக நரசிம்மர் ஆலயத்தில் தரிசனம் முடிந்த பிறகு எங்கு சென்றோம் என்பதை வரும்
வாரத்தில் பார்க்கலாம்.
(தொடரும்)
காலை வணக்கம்.
பதிலளிநீக்குவாங்க ஜீவி சார். காலை வணக்கம்.
நீக்குஇந்த திரு நாராயண தரிசனப் பதிவிற்கு படங்கள் மிகப் பெரிய + பாயிண்ட். விவரங்களைப் படிப்பதும் கீழே இறக்கி அதற்கான படத்தைப் பார்த்துப் புரிந்து கொள்வதும் என்று... படங்கள் மிகவும் உதவியாக இருந்தன. நன்றி.
பதிலளிநீக்குநன்றி ஜீவி சார். நான் தொண்டனூர் பகுதிக்கு மூன்று முறையும், வைரமுடி யாத்திரை இரண்டு முறையும் சென்றிருக்கிறேன். இனியும் செல்ல வாய்ப்பு இருக்கிறது என்றாலும், ஒரு முறைதான் எழுதுவதால் படங்கள் அதிகமாகச் சேர்த்து, ஞாயிறு படங்கள் என்ற themeஐ விட்டுவிடாமல் எழுதுகிறேன்.
நீக்குதொண்டனூர் ஏரிப் பகுதி இராமானுஜர் பின் பக்கத் தோற்றச் சிலை மட்டும் வித்தியாசமாகத் தெரிந்தது.
பதிலளிநீக்குஎடுப்பாகத் தெரிந்த துளையிட்ட காது ஒரு காரணம். Bபிட்ட தேவா (விஷ்ணு வர்தன்) வேறு அரசாட்சி செய்த இடமில்லையா? ஒருக்கால், விஷ்ணு வர்தன் என்ற நாமகரணத்திற்குப்
பிறகு Bபிட்ட தேவா ஸ்ரீமத் இராமானுஜருக்காக எழுப்பிய சிலையாக இருக்குமோ இது?..
ஹொய்சாள அரசர்கள் 10ம் நூற்றாண்டிலிருந்து (1000) 13ம் நூற்றாண்டுவரை அரசாட்சி செய்தார்கள். Bபிட்டதேவா நான,காவது அரசர் என்று நினைவு. இது பற்றி பேளூர் ஹளபேடு கோவில்கள் பற்றி இங்கு எழுதும்போது அறியலாம். ஹொய்சாள அரசர்கள் கர்நாடகத்தில் பரந்துபட்ட இடத்தை ஆட்சி செய்தவர்கள். நம் சோழர்களைப்போல் (சோழர்கள் அதிக்க் கோவில்கள்) இங்கு நூறு கோவில்களுக்குமேல் உருவாக்கியவர்கள், புனர் நிர்மாணம் செய்தவர்கள்.
நீக்குதொண்டனூர் பகுதி வரலாற்றுச் சிறப்பு மிக்கது என்பதாலும் இராமானுஜர், கர்நாடகப் பகுதியில் வைணவத்தை வளர்த்தெடுத்த இடம் என்பதாலும் சமீபத்தில் உண்டாக்கப்பட்ட சிலை இது. இராமானுஜரின் பாதச் சுவடுகள் இங்கிருக்கும் கோவிலில் இருப்பதை வரும் வாரங்களில் படிப்பீர்கள்.
நீக்குஓ.. சமீபத்தில் ஏற்படுத்திய சிலையா இது? சந்தேகம் தெளிந்தது. நன்றி, நெல்லை.
நீக்குஇராமானுஜரது ஆயிரமாவது ஆண்டு கொண்டாட்டத்தின்கோது என நினைவு
நீக்குகற்பக கணபதி
பதிலளிநீக்குகனிவுடன் காக்க..
முத்துக்குமரன்
முன்னின்று காக்க..
தையல் நாயகி
தயவுடன் காக்க..
வைத்திய நாதன்
வந்தெதிர் காக்க..
இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
பிரார்த்திப்போம்..
எல்லாருக்கும் இறைவன்
நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..
நலம் வாழ்க..
காலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருப்பார். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா ஹரிஹரன் மேடம்.
நீக்குவரலாற்று சிறப்புடைய செய்திகளுடன் கூடிய பதிவு...
பதிலளிநீக்குவழக்கம் போல அழகான படங்கள்..
சிறப்பான பதிவு..
கர்நாடகத்தில் வைணவ வரலாற்றைச் சொல்லும் பதிவுதான் துரை செல்வராஜு சார். இந்த இடங்களெல்லாம் ஒரு காலத்தில் மஹோன்னதமாக இருந்தவை. (இதைப் போன்றே தமிழகத்தில் பல்வேறு வைணவத் தலங்களும். உதாரணமாக வடுவூரில் ஒரு காலத்தில் 650 வைணவக் குடும்பங்கள் வசித்தார்களாம். இப்போது பதினான்கு குடும்பங்கள் என்று நினைக்கிறேன்)
நீக்குமேல் விவரங்களுக்கு நன்றி..
நீக்குஇரண்டு வாரமுன்பு தஞ்சாவூர் சென்று, வடுவூர், மன்னார்குடி ஆகிய ஊர்களுக்கும் சென்று வந்தேன். வடுவூர் ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடந்து நன்றாக இருக்கிறது. ஸ்ரீ ஆண்டவன் ஆஸ்ரமம் நடத்திவரும் ஒரு சிறிய வேதபாடசாலையும் அங்கே இயங்குவது ஆச்சர்யம் தந்தது. வைணவக் குடும்பங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம் இப்போது. எல்லோரும் படித்துப் பெரிய மனிதர்களாகி வெளியூர், வெளிநாடு என்று போய்விட்டார்கள்! உத்தியோக நிமித்தம் ஊரைவிட்டு ஓடுவது காலத்தின் கட்டாயமாகிவிட்டது. யாரையும் குறை சொல்லக்கூடாது. எங்கிருந்தாலும் வாழ்க என அவனே வாழ்த்தி அனுப்பியிருக்கக்கூடும்..
நீக்குபடங்களும் சிறப்பு; விவரங்களும் சிறப்பு. தொண்டனூர் கோவில், கோவில் தோற்றமாக இல்லாமல் ஒரு இல்லம் போல எளிமையாக இருக்கிறது. முதல் செட் படங்களில் கடைசி படம் மலைமேல் மேல்கோட்டை யோகநரசிம்மர் ஆலயம் படம் அழகு. ரசிக்க வைக்கிறது.
பதிலளிநீக்குதொண்டனூர் நரசிம்மர் கோவில் சிறிய குன்று/மண் மேட்டில் இருப்பதால் இடம் குறைவு. அதனால் சிறிய கோவிலாகவும், அதில் இராமானுஜர் திரைக்குப் பின்னால் ஆதிசேஷனாக இருந்து ஜைனர்களை வாதில் வென்ற இடம் சிறிய அறையாகவும் இருக்கிறது. நான் முதன்முமலில் சென்றபோது கோவில் அமைப்பு இப்படி இல்லை (இருபது வருடங்களுக்கு முன்பு)
நீக்குஸ்ரீஸ்ரீ உடையவரின் திருக்கரங்களில் இருக்கப் பெற்ற பூக்கூடையைப் பார்ப்பதுவும் புண்ணியம்..
பதிலளிநீக்குநெல்லை அவர்களுக்கு நன்றி..
முன்பு ஆணியில் மாட்டித் தொங்கவிடப்பட்டிருந்தது. இப்போது கண்ணாடிப் பேழையில். இதைவிட, மேல்கோட்டை இராமானுஜர் விக்ரஹம், ஶ்ரீபெரும்பூதூர் இராமானுஜர் திருமேனி ஆகிய இரண்டும் இராமானுஜரால் தீண்டப்பெற்றவை.
நீக்குதல விவரங்கள் விவரிப்பு சிறப்பாக இருக்கிறது.
பதிலளிநீக்குபடங்கள் வழக்கம் போல அழகு
வாங்க கில்லர்ஜி.. நன்றி
நீக்குவணக்கம் நெல்லைத் தமிழர் சகோதரரே
பதிலளிநீக்குஇந்த வார கோவில் தரிசன பதிவும் அருமை. மேல் கோட்டை கோவில் உற்சவ படங்களும், விபரங்களுமாக பார்த்துப், படிக்கும் போதே பரவசமாக உள்ளது. தொண்டனூர் ஏரியையும், கோவிலையும், மூலவரையும் சுவாமி ஸ்ரீ இராமானுஜரையும் தரிசித்துக் கொண்டேன்.
அருமையான கோவிலின் இடங்கள், அழகான சிற்பங்கள் என ஒவ்வொன்றையும் நீங்கள் விளக்கி எழுதியிருப்பதை படிக்கும் போது, நாங்களும் உடன் பயணித்த திருப்தி எழுகிறது. நல்ல ரசனையான விளக்கங்கள். உங்களுக்கு எனது மனம் நிறைந்த பாராட்டுக்களும். நன்றியும்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா ஹரிஹரன் மேடம். ரொம்ப வள வள என எழுதக்கூடாது என நினைக்கிறேன். ஆனால் தகவலுக்காக எழுதவேண்டி வந்துவிடுகிறது.
நீக்குஎனக்கும் இவற்றைப் படிக்கும்போது தரிசனம் செய்த நினைவுகள் எழுகின்றன.
பதிவை ரசித்தமைக்கு நன்றி.
படங்கள் அழகாக உள்ளன. தீபாவளிக்கு ஒரு நல்ல படமும் பதிவும் வெளியிடுங்கள்.
பதிலளிநீக்குவாங்க ஜெயகுமார் சார். 'நல்ல படம் பதிவு' - இதன் தொடர்ச்சியா வந்தால் சரியா இருக்காதா ஜெயகுமார் சார்? அப்படீன்னா நான் உடனே வேறு ஒரு பதிவு தீபாவளிக்காக எழுதி, பிறகு கௌதமன் சாரை, முன்பு 12ம் தேதிக்காக வைத்திருந்ததை ஷெட்யூல் மாற்றி வெளியிடுங்கள் என்றெல்லாம் கேட்கணும். அவரும் பாவம் அல்லவா? பார்ப்போம். சரி...ஏதேனும் தீம் இருக்கிறதா? எந்தத் தீமிலும் என்னிடம் படங்கள் இருக்கும் என்று நினைக்கிறேன். ஓவியமோ, புதிய இடங்களோ இல்லை கோவில்களோ இல்லை இயற்கைக் காட்சிகளோ இல்லை வெளிநாட்டில் உள்ள பழங்கால கட்டிடங்களோ...
நீக்குமாடவீதிகள் அதிகாலை 4.30க்கு அலங்கார விளக்குகள் ஜொலிக்க காட்சி அளிப்பது அழகு.
பதிலளிநீக்குமேல்கோட்டை யோகநரசிம்மர் ஆலயத் தோற்றத்தை காலையில் எடுத்த படம் மிக அருமை .
எல்லா படங்களும் மிக அருமையாக இருக்கிறது. கோவில் தல வரலாறு மற்றும் விவரங்களும் இனி போகிறவர்களுக்கு பயன்படும்.
இரண்டாவது கல்கி அவதாரம் போல் தெரியவில்லை. குதிரை சரியாக வராததால் இருக்கும்.//
அது ரிஷபம் மாதிரி இருக்கிறது. கால்கள், வால், தலை எல்லாம் காளை போலதான் இருக்கிறது.
மலர் அலங்கார படங்கள், தூண் சிற்பங்கள் எல்லாம் அழகு.
யோக நரசிம்மர் சன்னிதி மற்றும் இராமானுஜர் சன்னிதி//
நீங்கள் எடுத்த படத்திலும் மூலவர் தெரிகிறார்.
மூலவர் யோகநரசிம்மரை தரிசனம் செய்து கொண்டேன்.
இராமான்னுஜர் சேஷ ரூபம் அழகு.
இராமானுஜர் உபயோகித்த பூக்கூடையை கண்ணாடி பெட்டிக்குள் வைத்து பாதுகாப்பது நல்லது. இல்லையென்றால் மக்கள் தொட்டுவணங்கி கொள்கிறேன் என்று ஆரம்பித்து விடுவார்கள்.
வாங்க கோமதி அரசு மேடம்.
நீக்குரிஷபம் - இருக்கலாம். எனக்கும் தோன்றியது.
முன்பு சாதாரண ஓவியமாக இராமானுசர் சேஷ ரூபம் இருந்தது. தற்போது மிக அழகாகச் செய்திருக்கிறார்கள் (பழைய ஓவியத்தை நேரம் கிடைக்கும்போது பகிர்கிறேன்)
தொண்டனூர் நரசிம்ம தரிசனம் மிகவும் விரிவாக படித்து , படங்கள் , சிலைகள், ஏரி , மலை, என நாமும் படி ஏறி வணங்கி வந்தோம்.
பதிலளிநீக்குமகிழ்ச்சி. நன்றி.
வாங்க மாதேவி. வருகைக்கு நன்றி
நீக்குமலை மேல் சின்னதா இருக்கும் அந்தப் படம் மிக அழகு, நெல்லை.
பதிலளிநீக்குதொண்டமனூர் போனதில்லை.
கீதா
தொண்டனூர் கண்டிப்பா பார்க்கவேண்டிய இடம் கீதா ரங்கன். அங்க போய் ஏரில குளித்துவிட்டு அருகில் இருக்கும் புராதானமான மூன்று கோவில்களுக்கும் சென்று சேவித்துவிட்டு வாருங்கள். பேருந்து வசதி எப்படி இருக்கிறது என்பது எனக்குத் தெரியவில்லை.
நீக்குமலையும் ஏரியும் மலை சார்ந்த படங்கள் எல்லாமே அழகு.
பதிலளிநீக்குகீதா
நன்றி கீதா ரங்கன்(க்கா)
நீக்குசிற்பங்கள் ஆஹா. அது காளை போல இருக்கிறது. கொம்பில்லாத காளை!!!!! அந்தச் சிற்பம் பார்த்ததும் எனக்குத் தோன்றியது...."இந்த என்னை நல்லா பார்த்து படம் புடிச்சுக்க" என்று சொல்வது போல் கைகளைக்காட்டி உடலைத் திருப்பி முகம் கேமராவைப் பார்த்து இருப்பது போலத் தோண்றியது!!! ஹாஹாஹா
பதிலளிநீக்குகீதா
பெரிதாக்கி ஊன்றி கவனித்தால் கன்றுகுட்டி போல இருக்கு அதான் விஷ்ணு அதுமேல இருக்காப்ல சிற்பம்.
நீக்குபெரும்பாலும் எல்லா நடனமங்கைகள் சிற்பங்களும் டக்குனு திரும்பி ஃபோட்டோவுக்குப் போஸ் கொடுக்கறாப்லவே இருக்கு!!!
கீதா
கொம்பில்லாத காளையிடம் வம்பு வைக்காதே என்று ஏதோ பாடல் வரியில் படித்த நினைவு.
நீக்குஇவையெல்லாம் அந்த அந்த வேலைகளுக்காக ஒதுக்கும் பணத்தைப் பொறுத்தது என்று நினைக்கிறேன். அதாவது சாதாரண சிற்பம், நிறைய உழைப்பு தேவையான உயர்ந்த கலைச்சிற்பம் என்று சிற்பங்கள் வேறுபடுவதற்கு அந்த அந்த வேலைகளுக்காக ஒதுக்கப்படும் பணத்தின் அளவு ஒரு காரணம்.
நடனமங்கை சிற்பங்கள் எல்லாமே போஸ் கொடுத்து ஏதாவது மீடியத்துல எழுதிக்கொண்டு பிறகுதான் செதுக்க இயலும். நிறைய சிற்பங்கள் அப்படியே உயிரோட்டமுள்ளது போல இருக்கும். சில நேரங்களில் ஒரே சிற்பப் பதிவுகளாகத் தொடர்ந்துகொண்டிருந்தால் போரடிக்குமோ என்றும் எனக்குத் தோன்றும்.
நீக்குசிற்பங்கள் சிறப்பு...
பதிலளிநீக்குவிளக்கங்கள் அருமை...
வாங்க திண்டுக்கல் தனபாலன். நன்றி
நீக்குபடங்கள் அனைத்தும் சிறப்பு. மேல்கோட்டை மாடவீதி அதிகாலையில் மிக ரசனையுடன் எடுக்கப்பட்ட படம். யோக நரசிம்மரைத் தரிசித்துக் கொண்டேன். இந்த ஜைன அரசன் தான் மதம் மாறிப் பஞ்ச நாராயணக் கோட்டங்களை எழுப்பியதாகக் காலச்சக்கரம் நரசிம்மா எழுதி இருக்கார். விபரங்கள் அதிலும் அருமையாகவும் விறுவிறுப்பாகவும் இருக்கும். நீங்களும் விபரங்களை நன்றாகத் தொகுத்துக் கொடுத்திருக்கிறீர்கள். தொண்டனூர் எல்லாம் நாங்க போகலை. நம்மவர் தான் எங்கே போனாலும் பார்க்கும்/பார்க்கப் போகும் இடங்களில் ஆகும் நேரத்தைக் கணக்குப் பண்ணிக்காமல் திரும்பிப் போக டிக்கெட்டை வாங்கிடுவார். ஆகவே மேல்கோட்டை செலுவநாராயணனைப் பார்த்ததுமே அங்கேயே படாசாரியார் கொடுத்த சாப்பாட்டைச் சாப்பிட்டுட்டுத் திரும்பியாச்சு.
பதிலளிநீக்குவாங்க கீதா சாம்பசிவம் மேடம். Bபிட்டதேவா, விஷ்ணுவர்தனனான பிறகு, ஐந்து வைணவக் கோவில்களைக் கட்டினான். அதில் மூன்றை நான் தரிசித்திருக்கிறேன். இரண்டு இந்த யாத்திரையிலும் ஒன்றை சமீபத்தில் சென்ற பயணத்திலும்.
நீக்குமேல்கோட்டை செலுவநாராயணை தரிசித்துவிட்டு குன்றில் இருக்கும் நரசிம்மர் கோவிலுக்குச் சென்றீர்களா? பெரிய படிகளாயிற்றே.
யாத்திரைக் குழுவில் செல்லும்போது ஐந்து நாட்களுள் பல கோவில்களை, அதிலும் தள்ளித் தள்ளி கோவில்கள் இருந்தாலும் சேவித்துவிட முடியும். நாம் தனியாகப் போனால் காரில் பயணம் செய்து, அதற்கான திட்டமிடல் இருந்தாலொழிய எல்லாக் கோவில்களையும் தரிசனம் செய்வது கடினம்.
சீரியல் பல்புகள் போட்டிருந்தும், வெறிச்சோடி இருந்ததைப் பார்த்தவுடன் படம் எடுக்கத் தோன்றியது. அந்தத் தெரு முழுவதையும் அடைத்துக்கொண்டு கூட்டம் வரும் என்பது தெரியும் என்பதால்.
நீக்குஇத்தனை கோயில்களைப் பார்த்ததோடு இல்லாமல் அவற்றிற்கான படங்களையும் பொறுமையாகப் பார்த்துப் பார்த்து எடுத்திருக்கீங்க. விளக்கங்களும் அருமை/ ஸ்ரீராமானுஜரின் சிற்பம் புதிது என்றே நினைத்துக் கொண்டேன். அதே தான் ஜீவி சாரிடமும் சொல்லி இருக்கீங்க. சூஷ்ம ரூப ராமானுஜர் அசர அடிக்கிறார். சட்ட்னுனு மனதில் ஒரு விதமான சிலிர்ப்பு ஏற்படுகிறது பார்க்கையில்.
பதிலளிநீக்குஇருக்கும் நிறைய புகைப்படங்களில் ஓரளவு தேர்ந்தெடுத்துத்தான் பகிர்ந்துகொண்டிருக்கிறேன் கீசா மேடம். சூஷ்ம ரூப இராமானுஜரை நன்றாகச் செய்திருக்கிறார்கள் (ஆனால் இது சமீப காலத்தையது. முன்பு கோட்டோவியம்தான் பார்த்த நினைவு. பழைய புகைப்படங்களைப் பார்த்துப் பகிர்கிறேன்). நன்னி ஹை.
நீக்குமிக சிறப்பு ...
பதிலளிநீக்குஅதே நேரம் நாங்களும் அங்கிருந்து தரிசனம் செய்தோம் என்னும் நினைவே மகிழ்ச்சி தருகிறது.
இந்த யோக நரசிம்மர் சன்னிதி மற்றும் இராமானுஜர் சன்னிதிக்கு நாங்கள் முதல் நாளே வந்து தரிசனம் செய்து விட்டோம் ...அப்பொழுது அங்கு வெகு சிறப்பாக பிரசாதம் செய்யும் வேலைகள் நடந்தன .