சனி, 11 நவம்பர், 2023

கண்டெடுக்கும் மனிதங்கள்  மற்றும் நான் படிச்ச கதை

 


================================================================================================

மரங்களை வெட்டித் தள்ளி மனைகளாக மாற்றும் இக்காலத்தில் தனது நிலத்தில் ஓர் காட்டையே உருவாக்கி, மரங்களைத் தனது குழந்தைகளைப் போல வளர்க்கும் இவரைப் போன்ற தாயம்மாக்கள் பெருகினால்தான் தமிழகம் பசுமையாகும்.  

ஓய்வு ஊதியத்தில் ஓர் காட்டையே உருவாக்கிய ஆசிரியை: மரங்களை குழந்தைகளாக பாவிக்கும் தாயம்மாள்!  [ நன்றி JKC  ஸார்  ]

====================================================================================================================

நாகை மாவட்டம், சீர்காழி அடுத்த திருநாங்கூர் வட்டத்தில் உள்ள, திவ்ய தேசங்களில் ஒன்று, கீழச்சாலை மாதவ பெருமாள் கோவில்.

திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலத்திற்கு, பஸ் வசதி கிடையாது. ஆட்டோ மற்றும் கார் போன்ற வாகனங்களில் பக்தர்கள் வந்து இறங்குகின்றனர். தரிசனம் முடிந்ததும், திரும்ப ஆட்டோ பிடித்து செல்கின்றனர்.

நான் சென்றிருந்தபோது, கோவில் நடை சாத்தியிருந்தது. கோவிலுக்கு பக்கத்தில் உள்ள வீட்டிலிருந்து, அர்ச்சகர் ஒருவர் வெளியே வந்தார்.

அவரை அணுகி, 'சுவாமி தரிசனம் பண்ணனும்... நீங்க தானே அர்ச்சகர்?' என, கேட்டதும், 'நான் அர்ச்சகர் இல்லீங்க, ஆட்டோ டிரைவருங்க...' என்றார், பணிவாக.

'கோவில் நடை திறக்கும் வரை, வீட்டில் உட்காருங்க...' என்று சொல்லி, வீட்டிலிருந்த பொங்கல் மற்றும் காபியை இன்முகத்துடன் தந்தார். பின், அவரை பற்றி அவரே, சொல்ல ஆரம்பித்தார்:


பெயர்: சுதர்சன், வயது: 64. கடந்த, 30 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பகுதியில் ஆட்டோ ஓட்டி வருகிறேன். 'ஆட்டோ சாமி' என்றால் எல்லாருக்கும் தெரியும்.

அப்பா பெயர்: ராமானுஜம். ஆசிரியர்; மகா நேர்மையானவர். திடீரென இறந்து விட்டார். எனக்கு கீழே நான்கு தங்கைகள். அப்பாவோட, 'பென்ஷன்' மட்டுமே வருமானம். அதில், அரிசி மட்டுமே வாங்க முடியும். இருந்தாலும், எல்லாவற்றையும் சமாளித்தார், அம்மா. அவருக்கு ஒத்தாசையா இருப்பதற்கு வேலை தேடி அலைந்தேன், கிடைக்கவில்லை; ஆட்டோ ஓட்ட ஆரம்பித்தேன்.

'உண்மை மற்றும் நேர்மையுடன் உழைச்சு பிழைக்கிற எந்த பிழைப்பும் குற்றமில்லை...' என்று சொல்லி, ஆசிர்வதித்தார், தாயார்.

இப்பகுதியில் உள்ள, 11 திவ்யதேசங்களையும், ஒரு, 'கைடு' போல ஆட்டோவில் அழைத்து போய் காட்டுவேன். சீர்காழி பகுதியில், 'சாமி ஆட்டோ' என்றால் எல்லாருக்கும் தெரியும். யாரிடமும், சவாரிக்கு இவ்வளவு என்று கறாராக கேட்பதில்லை. பயண முடிவில், 'நீங்கள் தருவதை தாருங்கள்...' என்று சொல்வேன். பயணம் செய்வோரும், மனம் நிறையும்படி தந்து செல்வர். அப்படி தராவிட்டாலும், வருந்த மாட்டேன்.

ஒரு தம்பதியினர், என் ஆட்டோவில் பயணித்தனர்; பயணத்தின்போது, என் குடும்பம் பற்றி விசாரித்தனர். 'பையன் குருராஜன், பிளஸ் 2வில் நல்ல மார்க் எடுத்துள்ளான்... இன்ஜினியரிங் கல்லுாரியில் சேர்க்கணும்... பண வசதி இல்லை...' என்று கூறினேன்.

மறுநாள், பையன் விருப்பப்பட்ட கல்லுாரியிலிருந்து போன் வந்தது... உடனே, வந்து கல்லுாரியில் சேரும்படி கூறினர். பையனும் நன்றாக படித்து, தற்போது, வளைகுடா நாட்டில், நல்ல வேலையில் இருக்கிறான்.

யாரிடமும் உதவி கேட்டது கிடையாது. அன்றைக்கு மட்டும் தான் வாய் திறந்தேன். பையனை படிக்க வைக்க முடியவில்லையே என்ற ஆதங்கத்துடன் ஒரே ஒருநாள் புலம்பினேன். உடனே, பெருமாள் போல உதவிய அந்த உத்தமர், பெயர் கூட இப்போது வரை தெரியாது.

மாதவ பெருமாள் சன்னிதி அருகில் வீடு இருக்கிறது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் இளைப்பாற, என் வீட்டை பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கிறேன். காபி, டீ போட்டு, உணவை பகிர்ந்து தருவோம். எதற்கும் காசு வாங்க மாட்டோம். பெருமாள் பக்தர்களுக்கு, என்னாலான கைங்கர்யம் என, நினைத்து செய்கிறேன்.

நாலு பேரை பார்க்கலாம்... சம்பாதிச்சு, அதை நாலு பேரோடு பங்கிட்டு சாப்பிடுற சந்தோஷமே தனி என்பதால், தொடர்ந்து ஆட்டோ ஓட்டிட்டு இருக்கேன்... இப்போ, ரொம்ப துாரம் ஓட்டுவது இல்லை.

- இவ்வாறு அவர் கூறினார். [நன்றி JKC ஸார்]

===================================================================================


=========================================================================================================================

============================================================================================================================================================================================


 

நான் படிச்ச கதை (JKC)

முன்னுரை

 ஒரு சாதாரண கதை. அமெச்சூர்  எழுத்தாளர் எழுதியது.

     இலக்கியநடை இல்லை.

     கவிதைத்தனம் இல்லை.

     உபமேய உருவகங்கள் இல்லை.

     சிறுகதை இலக்கணம் என்பதற்கு உட்படாதது.

     வார்த்தை சித்திரங்களோ தத்துவ அலசல்களோ இல்லை.

●  பத்திரிக்கையில் பிரசுரமானது, ஆனால் பரிசு ஒன்றும் பெறவில்லை

பின் ஏன் இக்கதை இப்பகுதிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது? 

     யதார்த்தம். கதையாக இல்லாமல் இருப்பது.

     ‘அம்மா என்றால் அன்பு‘ என்ற கருப்பொருளைக் கொண்டது. 

உண்மையில் என்னுடைய இல்லாளும் இக்கதையில் வரும் குடும்பத்தலைவியாக உள்ளவர். தற்போதும் ஸ்மார்ட்போனிலும் காண்டாக்ட் லிஸ்ட் உபயோகிக்காமல் லேண்ட் லைன் காலத்து எழுதிய டெலிபோன் டைரியில் நம்பர் பார்த்து டயல் செய்பவர்.. ஆனால் தினம் மகன்களிடம் இருந்து வரும் வீடியோ கால் எடுக்கத்  தெரியும். யு டியூபில் விடுபட்ட சீரியல் பார்க்கத் தெரியும். இது போன்ற சில ஒற்றுமைகளால் இக்கதையை இங்கு வெளியிடலாம் என்று உத்தேசித்தேன்.

மிக்க குடும்பங்களிலும் இது போன்ற ஒரு அம்மா இருப்பார்.


வேரில்லா மரம்

கதையாசிரியர்: ஆர். பரிமளா ராஜேந்திரன்

 


அடுப்பில் சாம்பார் கொதிக்க தாளித்து இறக்கி வைத்தாள் வத்சலா. 

ஹாலில் அபியும், அவள் அப்பாவும் சிரிக்கும் சப்தம் கையை டவலால் துடைத்தபடி வந்தாள்.

“அப்பா இந்த ப்ரோக்ராம் இன்னும் ஒரு வாரத்தில் முடித்தாகணும்” லேப்டாப்பைத் திறந்து அதில் தலையைக் கவிழ்த்திருந்தார்கள்.

எட்டிப் பார்த்தாள்.

போஸ்ட்கவரில் ஏதோ புள்ளிபுள்ளியாய் ஓடி விழுந்தபடி இருந்தது.

“என்ன பண்றீங்க?”

“டவுன்லோடு பண்ணிட்டு இருக்கோம்” கண்களை எடுக்காமல் மாதவன் பதிலளிக்க,

“அப்படின்னா என்னங்க?”

“ஐயோ அம்மா, நீ வேற தொணதொணன்னு, உனக்கு இதைப்பத்தி எதுவும் தெரியாது. கொஞ்ச நேரம் பேசாம இருக்கியா?”

மகளின் பதிலில் முகம் வாடிப் போக,

“சரி, சமையல் ரெடியாயிடுச்சு. பசிச்சா சொல்லுங்க. எடுத்து வைக்கிறேன்.”

“என்ன வழக்கம் போல சாம்பார், பொரியல் செய்திருப்பே புதுசா எதுவும் ட்ரை பண்ண மாட்டே.”

“”ஓ.கே. பசிச்ச பிறகே சாப்பிடலாம்.”

கணவனின் பதிலில் வாடிய முகம் மேலும் வதங்கியது.

மகனின் அறை நோக்கி நடந்தாள்.

காதில் ப்ளூடூத்தை மாட்டிக்கொண்டு, பேசிக் கொண்டிருந்தான்.

“குணா சாப்பிட வர்றியாப்பா?”

சைகையாலே வேண்டாம் என சொல்ல,

“காலையிலும் சாப்பிடலை வந்து ஒரு வாய் சாப்பிட்டுப் போடா.”

“ஜஸ்ட் ஒன் மினிட்…”

திரும்பி அம்மாவைப் பார்த்தான்.

“உனக்கெதாவது அறிவிருக்காம்மா. ஸ்கைப் லாகின் பண்ணி, லண்டனில் இருக்கிற என் ப்ரெண்டோடு பேசிட்டு இருக்கேன். குறுக்கே வந்து பேசற.”

“தெரியலைடா… நீ ஏதோ பண்ணிட்டு இருக்கேன்னு நினைச்சேன்.”

“ஐயோ அம்மா உனக்கு சொல்லி புரிய வைக்க முடியாது. நீ போய் கிச்சனில் இரு இன்னும் அரை மணியில் வரேன்.”

நான் ஒரு மக்கு. எட்டாம் வகுப்பு வரை படித்தவள்.

இவர்கள் அளவுக்குப் படிப்பறிவில்லை.

மனம் வலித்தது.

எண்ணெயில் அப்பளத்தைப் பொரித்து எடுத்து வைத்தவள், சாப்பிடும் மூவருக்கும் வைத்தாள்.

“அம்மாவுக்கு செல் போன் வாங்கிக் கொடுத்ததே வேஸ்ட்.”

“என்னடா சொல்றே.”

“எல்லா நம்பரும் போட்டுக் கொடுத்திருக்கேன். எனக்கு அதில் பார்க்கத் தெரியாது. நோட்டு புக்கில் எழுதி வைன்னு சொல்றாங்க.”

குணா சொல்ல, சிரிக்கிறார்கள்.

“நீ எந்த உலகத்தில் இருக்கே. மகள் சாஃப்ட்வேர் இஞ்சினியர், பையன் மெக்கானிக்கல் இஞ்சினியர், கணவர் க்ரேட் லாயர். நீ மட்டும் எதுவும் தெரியாததால் சுத்த வேஸ்ட்டா இருக்கே.”

“எது எப்படியோ, நீ வச்சிருக்கிற சாம்பார் சூப்பர்.”

“இத்தனை வருஷமா செய்யறாங்க. அதை கூட நல்லா செய்யாட்டி எப்படி?”

குணா சொல்ல, திரும்பவும் சிரிப்பு.

ஆத்திரமும், ஆற்றாமையும் வர, அடுப்படிக்குள் நுழைகிறாள்.

குளித்து ஈரத்தலையுடன் சுவாமி விளக்கேற்றி அமர்ந்தவள் கண்களில் கண்ணீர் அருவியாய் கொட்டுகிறது.

கடவுளே… என்னை ஏன் எதுவும் தெரிந்துகொள்ள முடியாதவளாய் தற்குறியாய் படைத்தாய். என் பிள்ளைகளே என்னைக் கேலியும், கிண்டலும் செய்கிறார்கள்.

இவர்கள் முன் அறிவிலியாய் நிற்கிறேன். இவர்கள் உலகமே வேறு, நான் மட்டும் தனித்து விடப்பட்டது போல… அவர்களுடன் ஒன்ற முடியவில்லையே.

ஈரத்தலையை துவட்ட மனமில்லாமல் படுத்தவள், அப்படியே தூங்கிப் போகிறாள்.

“அம்மா, உடம்பு அனலாகக் கொதிக்குது.”

அபி சொல்ல, அடுத்த நிமிடம் அம்மாவை அழைத்துக் கொண்டு டாக்டரிடம் செல்கிறான் குணா.

அம்மாவைப் படுக்கையில் படுக்க வைக்கிறாள்.

“அக்கா, அம்மாவுக்குப் பால் கலந்து எடுத்து வா.”

“மாத்திரை போட்டுட்டு, ரெஸ்ட் எடும்மா, சரியாயிடும்.”

குணா சொல்ல,

“ஆமாம், வத்சலா எல்லாத்தையும் நாங்க பாத்துக்கிறோம், நீ நிம்மதியா தூங்கு.”

அருகில் அமர்கிறார் மாதவன்.

“கொஞ்ச நாளா அம்மா முகமே சரியில்லை. நாம் சிரிச்சு பேசினா கூட, அவங்க கலந்துக்கிறதில்லை. தனக்கும் அதுக்கும் சம்பந்தமில்லைங்கிறதைப் போல உட்கார்ந்திருப்பாங்க.”

அபி சொல்ல, மௌனமாக இருக்கிறான் குணா.

மறுநாள் அபி, அவளுக்குத் தெரிந்ததைச் சமைக்க,

“நீங்க ரெண்டு பேரும் வேலைக்குக் கிளம்புங்க. நான் அம்மா கிட்டே இருக்கேன்” குணா சொல்ல,

“அம்மாவுக்குக் கஞ்சி வச்சுக் கொடுக்கணும் உன்னால முடியுமா குணா?”

“எல்லாம் முடியும். நீங்க கிளம்புங்க.”

“அம்மா எழுந்திரு. சூடா கஞ்சி கொண்டு வந்திருக்கேன். இப்ப ஜுரம் எப்படிம்மா இருக்கு.”

“பரவாயில்லைப்பா. நீ வேலைக்குப் போகலையா, குணா.”

“எப்படிம்மா. உன்னை இந்த நிலையில் விட்டுட்டு எல்லோரும் போக முடியும்.”

“ஸாரிப்பா… என்னால உங்களுக்கெல்லாம் கஷ்டம்.”

“என்னம்மா இது… ஏன் இப்படிப் பேசற?”

“இல்லை. உனக்கு எத்தனையோ வேலை இருக்கும்.”

“எனக்காக…”

கஞ்சி டம்ளரை டேபிளில் வைத்தவன் அம்மாவைப் பார்க்கிறான்.

“”உனக்கு என்னம்மா பிரச்சனை. மறைக்காம சொல்லு எதுவாக இருந்தாலும், மனசு விட்டுப் பேசும்மா.”

அம்மாவின் முகவாயைப் பிடித்து நிமிர்த்த… கண்களில் கண்ணீர்.

“அம்மா என்ன இது… எதுக்கு அழறே?”

“நான் படிக்காதவ. உங்க அளவுக்கு என்னால எதையும் தெரிஞ்சுக்க முடியலை. நீங்க மூணு பேரும் அதைக் காரணமாக வச்சு, என்னை எதுக்குமே லாயக்கில்லாதவன்னு நினைச்சு, சிரிக்கிறது, கேலி பேசறது……நீங்க என்னை ஒதுக்கிறதை தாங்க முடியலை.”

“எனக்கு தெரிஞ்சதெல்லாம்… நான் உங்க மேலே வச்சிருக்கிற அன்பு ஒண்ணு தான்.”

“ஐயோ… மக்கு அம்மா. நீ புரிஞ்சுக்கிட்டது அவ்வளவுதான். இப்பப்பாரு நீ இரண்டு நாளா படுக்கையிலே இருக்க.

எங்க யாருக்கும் ஒரு வேலையும் ஓடலை. அக்கா முடிச்சுக் கொடுக்க வேண்டிய ப்ரோக்ராம் அப்படியே இருக்கு. கேட்டா அம்மாவுக்கு முடியலை. அதே நினைப்பா இருக்குன்னு சொல்றா.

அப்பா… இந்த வாரம் இருந்த இரண்டு கேஸையும் அடுத்த வாரம் தள்ளிப் போட்டுட்டாரு. “மனசு ஒரு நிலையில் இல்லை குணா. அம்மா எழுந்து நடமாடட்டும்னு’ சொல்றாரு.

இன்னைக்கு என் க்ளோஸ் ப்ரெண்ட் லண்டனில் இருக்கிறவன் பர்த்டே. நான்தான் முதலில் விஷ் பண்ணுவேன். இப்ப வரைக்கும் அவன்கிட்ட பேசலை.

எல்லாத்துக்கும் காரணம் நீதான்மா…

உன்னைச் சுத்தி தான் நாங்க இயங்கிட்டு இருக்கோம். உன் அன்பும், பாசமும் தான் எங்களை இயக்கிட்டு இருக்கு.”

“உங்கிட்டேயிருந்து வந்தவங்கம்மா நாங்க. இந்த அறிவும், புத்திசாலித்தனமும் நீ கொடுத்தது.

உனக்கு எதுவும் தெரியலைன்னு வருத்தப்படாதே. ஆணிவேராக இருந்து எங்களை வளர்க்கிறது நீதான்மா. நாங்க பேசினது… எங்க செல்ல அம்மாவை வருத்தப்பட வச்சிருந்தா எங்களை மன்னிச்சிடும்மா…

உன் மேல நாங்க வச்சிருக்கிற அபரிமிதமான அன்பினால் தான் பேசறோமே தவிர, உன்னை என்னைக்குமே ஒதுக்கமாட்டோம்.”

கண்களைத் துடைத்துக் கொண்டவளாய், பெருமிதம் பொங்க மகனைத் தழுவுகிறாள், வத்சலா.

– மே 2014

யதேச்சையாக டைமன்ட் கவிஞர் எழுதிய ஒரு திரைப்பாடல் கண்ணில் பட்டது. அது இக்கதைக்கு பொருந்தும் என்று தோன்றியதால் இங்கே தருகிறேன். படம், இசை அமைத்தவர், பாடியவர் என்பது பற்றிய விவரங்களை ஸ்ரீராம் தருவார் (வெள்ளி வீடியோ) ஒரு சின்ன க்ளு  சுஜாதா சார் இந்தப் படத்திற்கு வசனம் எழுதியிருக்கிறார். 

ஆணின் இனம் அது கிளை மாதிரி
பெண்ணின் இனம் அது வேர் மாதிரி
கிளை பேசினால் அதை ஊர் கேட்குமே
வேர் பேசினால் அதை யார் கேட்பது

44 கருத்துகள்:

  1. ஆட்டோ ஓட்டுநர் சுதர்ஸன் மனதில் நிற்கிறார்.

    நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு
    எல்லோர்க்கும் பெய்யும் மழை.

    -- பேராசான் வள்ளுவப் பெருமான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் அதுஇன்றேல்
      மண்புக்கு மாய்வது மன்

      - திருவள்ளுவர்

      நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு
      எல்லோர்க்கும் பெய்யும் மழை

      - ஔவையார்

      நீக்கு
  2. ஆட்டோ ஓட்டுநர் சுதர்ஸன் மனதில் நிற்கிறார்.

    நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு
    எல்லோர்க்கும் பெய்யும் மழை.

    -- பேராசான் வள்ளுவப் பெருமான்.

    பதிலளிநீக்கு
  3. வேர் பேசினால் அதை யார் கேட்பார்? -- என்றிருந்தால் இன்னும் பொருத்தமாக இருந்திருக்கும். கவிஞர் கூட இசைக்குப் பொருந்தி வரவில்லை என்று மாற்றியிருப்பார் போலிருக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதிலும் 'அதை' எடுத்து விடலாம்!

      நீக்கு
    2. வேரில்லா மரம் - வேர் இல்லை என்றால் மரம் சாய்ந்துவிடும். ஆனால் இங்கு குடும்பத்தினர் அதாவது கிளைகள் உறுதுணையாகத் தாங்கிப் பிடிக்கிறார்கள் குடும்பத்தின் மரமான தாயை என்ற அர்த்தத்தில் ஆசிரியர் தலைப்பு வைத்திருக்கிறார் என்று தோன்றுகிறது.

      கீதா

      நீக்கு
  4. முன்னுரையைப் பின்னுரையாகச் சொல்லியிருந்தாலும்
    வாசிப்பவர் நீங்கள் சொல்லியிருப்பது நியாயம் தானா என்று ஒரு கணம் யோசித்திருப்பர். அதையே முன்னுரையாக அதுவும் ஒரு கதையை வாசிக்க பரிந்துரைப்பவரே சொல்லும் பொழுது வாசிக்கத் தொடங்கும் போதே ஒரு எதிர்மறை அபிப்ராயம் வாசிப்பதில் ஏற்படும் இல்லையா? -- உங்கள் யோசனைக்கு ஜெஸி ஸார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதல் நபராக வந்து கருத்து கூறியமைக்கு நன்றி ஜீவி சார். இது வரையிலும் என்னுடைய எண்ணங்களை கதைக்குப் பின் தான் எழுதி வந்தேன். இம்முறை ஒரு டீசர் என்ற முறையில் ஒரு சிறு ஆராய்ச்சி.

      பின்னூட்டங்களுக்கு பதில் எழுதிய ஸ்ரீராம் அவர்களுக்கும் நன்றி.
      Jayakumar

      நீக்கு
  5. உண்மை.  வாசகர்கள் படித்து அவர்கள் மனதில் தானாக ஒரு எண்ணம், அபிப்ராயம் உருவாக வேண்டும்.  முன்னரே இன்னதுதான், இப்படித்தான் என்று அவர்களை இட்டுச் செல்லக் கூடாது என்றே நானும் நினைக்கிறேன்!  நானாக இருந்தால் பின்னர் கூட இப்படி ஒரு அபிப்ராயம் சொல்ல மாட்டேன்.  வாசகர்கள் பின்னூட்டத்தில் தாங்கள் சொல்ல வந்த கருத்தை மறைக்கக் கூடிய சாத்தியக்கூறு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //நானாக இருந்தால்.... சாத்தியக்கூறு..//

      நானாக இருந்தாலும் அப்படித் தான். 'நானாக இருக்கலாமா?' என்ற யோசனை ஓடுகிறதே!.. ஹி..ஹி..

      நீக்கு
  6. // இசை அமைத்தவர், பாடியவர் என்பது பற்றிய விவரங்களை ஸ்ரீராம் தருவார் (வெள்ளி வீடியோ) //

    JKC ஸார்..  அந்தப் படத்தில் வரும் வேறு இரண்டு பாடல்கள் ஓகே.  எனக்கு இந்தப் பாடலில் அவ்வளவு நாட்டமில்லை.  படம் வந்த வேளையில் படத்தை ரசித்துப் பார்த்தேன்.

    பதிலளிநீக்கு
  7. கண்ணெதிரே தோன்றினாள் படத்தில் காரணி பாடிய பாடல் அது.  அதிலிருந்து கடைசி வரியை தலைப்பாக்கி விட்டார் கதாசிரியர்.  கண்ணெதிரே தோண்டினாள் என்னும் அந்தப் படத்தின் தலைப்பே ஒரு பழைய பாடலின் வரிதானே!  அப்புறம் வேர் பேசினால் யார் கேட்பது போல "பூ பூப்பதை யார் பார்த்தது" என்று ஒரு யேசுதாஸ் பாடல் இருக்கிறது.  பூவும் கூட காதல் போன்றது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ​// காரணி பாடிய பாடல் //

      ஹரணி

      நீக்கு
    2. ​// தோண்டினாள் //


      தோன்றினாள்!

      நீக்கு
    3. // பூவும் கூட காதல் போன்றது..//

      காதலும் கூடப் பூப் போன்றது... ( நா.பா.
      நாயகர்கள் போன்ற
      ஆண்களின் பார்வையில் --
      அடிக்கோடிட்டு)

      நீக்கு
  8. இந்தக் கதைக்கென்ன?.. அருமையான கதை. எழுதிச் சொல்லிய விதமும் அருமை.
    வத்ஸலா தகிக்கும் ஜூரத்தில் படுக்கையில் கிடக்க அந்த வீட்டில் மற்றவர்கள் அவரவர் வேலையிலேயே கவனமாய் ஆழ்ந்திருக்க... என்று கதையைக் கொண்டு போய் இருக்கலாமோ?
    ஒன் மினிட்.. எதுக்கும் தம்பி துரையை ஒரு வார்த்தை ஒப்பினியன் கேட்டுடலாம்.. சரியா?..

    பதிலளிநீக்கு
  9. கற்பக கணபதி
    கனிவுடன் காக்க..
    முத்துக்குமரன்
    முன்னின்று காக்க..
    தையல் நாயகி
    தயவுடன் காக்க..
    வைத்திய நாதன்
    வந்தெதிர் காக்க..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  10. சுதர்ஸன் ஐயா அவர்களைப் பற்றி எங்கோ படித்த நினைவு.. பெரியவர்
    மனதில் நிற்கின்றார்..

    இறைவன் நல்லருள் பாலிக்க வேண்டும்..

    பதிலளிநீக்கு
  11. குப்பையில் முதியவர்.... மனதைப் பாதித்த செய்தி. அவரும் அவர் பெற்றோருக்கு அருமையான, கொஞ்சி மகிழும் குழந்தையாக இருந்திருப்பார் அல்லவா...

    பதிலளிநீக்கு
  12. அம்மாவுக்குக் காய்ச்சல் என்பது வரை நிகழ்வில் நடக்கும் கதையாகவும், பின் பகுதி, கதை ஆசிரியரின் உள்மன ஆசையாகவுமே எனக்குத் தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெல்லை சார் அவர்களின் கருத்துடன் உடன்படுகிறேன். அம்மாவைக் கவனித்துக் கொள்ள ஒருவர் போதுமே.
      Jayakumar

      நீக்கு
  13. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  14. பாஸிடிவ் செய்திகள் அனைத்தும் அருமை.தாயம்மாள் டீச்சர் மனம் கவர்ந்தார்.

    பதிலளிநீக்கு
  15. வேரில்லா மரம் கதை நன்றாக இருக்கிறது. பகிர்வுக்கு நன்றி.
    அம்மாவுக்கு பிள்ளைகள் கற்று கொடுத்து இருக்கலாம்.
    எனக்கு பிள்ளைகள், பேரன் , பேத்திகள் தான் கற்று கொடுத்தார்கள்.

    அம்மாதானே என்று கேலி செய்து இருக்கிறார்கள். அம்மாவுக்கு ஒன்று என்றவுடன் அனைவரும் கவனிப்பது அம்மாவின் மனக்குறையை போக்கியது எல்லாம் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  16. அனைவருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  17. இன்றைய மூன்று பாசிட்டிவ் செய்திகளும் அருமை.

    முதல் செய்தி போலீஸ்காரர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

    இரண்டாவது செய்தி - தாயம்மாள் குறித்து ஜெ கே அண்ணா, நான் படிச்ச கதைப் பகுதியில் அன்றைய கதைக்குத் தொடர்பாகச் சொல்லியிருந்தார். இப்போது மற்றொரு தாயம்மா!!!!

    மூன்றாவது செய்தி - வாசித்த நினைவு இருக்கிறாப்ல இருக்கிறது. அருமையான செய்தி. இப்படி நல்ல மனதுடன் உதவுபவரின் மகனுக்குத் தன் பெயரைக் கூட வெளிப்படுத்தாமல் உதவிய அந்த நல்ல மனிதர் உயர்ந்து நிற்கிறார். பெரியவர் சுதர்ஸனின் நல்ல செயல்களும் பாராட்டப்பட வேண்டியவை.

    இதில் கிடைக்கும் வழக்கமான கருத்து - நாம் நல்ல மனதுடன் நல்லது செய்துவந்தால் நமக்கு எங்கிருந்தேனும் எப்படியேனும் எந்த ரூபத்திலும் நலல்து நடக்கும் என்பது. பாசிட்டிவ் செய்திகள் பகிர்ந்த ஜெ கே அண்ணாவுக்கும் நன்றி

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // இன்றைய மூன்று பாசிட்டிவ் செய்திகளும் அருமை.// மொத்தம் ஐந்து பாசிட்டிவ் செய்திகள் அல்லவா இருக்கின்றன!

      நீக்கு
    2. ஆமாம் கௌ அண்ணா பார்த்துவிட்டேன். அப்ப கண்ணில் டக்கென்று பட்டவை முதல் மூன்று!!!! ஹிஹிஹிஹி

      அப்புறம் இப்ப வந்தப்ப விட்ட ரெண்டும் கண்ணில் பட்டன, ...

      கீதா

      நீக்கு
    3. காலையில் விடுபட்ட மற்றொரு கருத்து - குப்பையில் குழந்தைகள் குறிப்பாகப் பெண் குழந்தைகளை வீசும் செய்திகள் வாசித்ததுண்டு ஆனால் இப்படி முதியவர் ஒருவர் என்பது ஆச்சரியம் அதே சமயம் மனதை படுத்திய செய்தி.

      எப்படி இப்படி? யார் வீசியிருப்பாங்க எப்படிக் குப்பையில் வந்தார் ஒரு வேளை தவறி விழுந்துவிட்டாரோ உறவினர் யாரேனும் இருக்காங்களா? இல்லை தனிமையிலானவரா....விவரங்கள் எதுவும் கிடைக்ல்லை போலும்...என்றெல்லாம் எண்ண வைக்கிறது.

      கீதா

      நீக்கு
  18. இக்கதைக் கரு நல்ல கரு. ஆசிரியர் கதையில் என்ன சொல்ல வருகிறார் என்பது புரிகிறது. இது பெரும்பாலான அம்மக்களைக் குழந்தைகள் இப்படிச் சொல்வதும், அதனால் வரும் தாழ்வுமனப்பான்மை. அது வரை யதார்த்தம்.

    ஆனால் கொஞ்ச நாடகம் போல இருக்கிறது. யதார்த்தம் என்பது இருந்தாலும் வசனங்கள் நாடகத்தனமாக இருக்கு. இன்னும் நன்றாக மெருகேற்றி உணர்வுபூர்வமாக எழுதியிருக்கலாம். அம்மா ஜுரமாகப் படுத்துக் கொண்டால் வருத்தம் இருந்தாலும் வேலை முடங்கிப் போகும் அளவு அதுவும் அப்பா கேஸ் முடக்கிப் போட்டு பெண் ஆஃபீஸ் ப்ரோக்ராம் முடிக்காம இதெல்லாம் கொஞ்சம் டூ மச். அவர் சொல்ல வரும் கருத்து புரிந்தாலும் அழகான கருத்து என்றாலும் இன்னும் அழகாகச் சொல்லியிருக்கலாம் என்று தோன்றுகிறது. இப்படி வீடே சோகம் என்பது போல் சொல்லியிருப்பது அதன் பின் வரும் வசனங்கள் செயற்கையாக இருப்பது போல் தோன்றுகிறது.

    நீங்கள் சொல்லியிருப்பது போல்தான்...ஆனால் பத்திரிகையில் வெளியாகியிருக்கிறதே!

    கீதா

    பதிலளிநீக்கு
  19. இந்த ஆசிரியரின் வேறு ஓரிரு கதைகள் வாசித்திருக்கிறேன். என் சித்திப்பாட்டி வீட்டில் நிறைய இதழ்கள் வாங்குவாங்க அப்ப. இவருடைய பல கதைகள் பல பத்திரிகைகளிலும் வெளியாகி உள்ளதோடு இவரும் பல புத்தகங்கள் வெளியிட்டுள்ளார்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆசிரியரைப்பற்றி மேல் அதிக விவரங்காளைத் தந்தமைக்கு நன்றி.
      Jayakumar

      நீக்கு
  20. தாயம்மாள் , சுதர்சனன் ஐயா மனதைத்தொட்ட மனிதர்கள் வாழ்க பல்லாண்டு. மற்றைய உதவிக் கரங்களுக்கும் வாழ்த்துகள்.

    சில வீடுகளில் அம்மாக்களின் நிலை இதுதான்.பிள்ளைகள் சொல்லிக்கொடுத்து இருக்கலாம்.

    அன்புள்ளம் அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  21. செய்திகள் அருமை...

    தாயம்மாள் தொண்டு சிறக்க வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  22. கடைசி இரு செய்திகளைத் தவிர்த்து முதல் மூன்றும் முன்னரே தெரிந்தவை தான். நல்ல செய்திகளைக் கொண்டு வந்து சேர்க்கும் திரு ஜேகே அவர்களுக்குப் பாராட்டுகள். அவர் மனைவியைப் பற்றி எழுதி இருப்பதைப் படித்தேன். எனக்குத் தெரிந்த சில ஆண்களும் அப்படித்தான். இத்தனைக்கும் படித்து வேலைக்குப் போய் நல்ல பதவிகளில் இருந்திருக்காங்க. ஆனால் கணினி மேல் உள்ள ஏதோ ஓர் வெறுப்பால் கணினியில் வேலை செய்வதே ஏதோ பாவம் என நினைப்பாங்க. இத்தனைக்கும் கணினி மூலம் செய்தித்தாள்கள், மற்ற யூ ட்யூப் சானல்கள்னு பார்த்தாலும் மொபைலில் வரும் வாட்சப், முகநூல் இவற்றில் நாட்டம் இருந்ததில்லை.

    பதிலளிநீக்கு
  23. கதை நன்றாக இருக்கிறது, நான் இவர் எழுத்தை அதிகம் அவ்வளவு ஏன்? படிச்சதே இல்லை. இதான் முதல்முறைனு நினைக்கிறேன். குழந்தைகள் செய்யும் செயல்கள், கணவனின் நடத்தை எல்லாம் கேலி மாதிரித் தோன்றவில்லை. ஆகவே வத்சலா உடல் நலம் சரியில்லாத நிலைமையில் எல்லோருமே பாதிக்கப்படுவது அத்தனை இயல்பாய்த் தோன்றவில்லை. என்றாலும் பல குடும்பங்களிலும் குடும்பத் தலைவியின் உடல் நலம் சரியில்லை எனில் அன்றாட வேலைகளில் எல்லோருக்குமே பாதிப்புகள் ஏற்படத்தான் செய்யும். ஆகவே அதில் செயற்கைத் தனம் ஏதும் தெரியலை. குழந்தைகளோ, கணவரோ தேவைப்படும் நேரங்களில் உதவி செய்திருந்தால் இது பெரிதாகத் தோன்றாது. அப்படி உதவாமல் இருந்தவங்க அம்மாவுக்கு உடம்பு சரியில்லைனதும் அம்மாவைப் பார்த்துக் கொள்வதும் கொஞ்சம் நாடகத்தனமாய்த் தெரிந்தாலும் ஓகே. ரசிக்கலாம்.

    பதிலளிநீக்கு
  24. ஏதானும் ஒரு இடத்திலாவது ஒரு சம்பவத்திலாவது அம்மாவை அன்புடன் பார்ப்பது அல்லது பேசுவது போல் காட்டி இருந்தால் முரணாகத் தெரிந்திருக்காது.

    பதிலளிநீக்கு
  25. நேர்மறைச் செய்திகள் எல்லாமே நல்ல செய்திகள். மனதை பாதித்த செய்தி அந்தப் பெரியவரை குப்பையில் கண்டெடுத்த செய்தி. அச்செய்தியில் காவல் துறையினரில் மனித நேயத்துடன் இருப்பவர்கள் இருக்கிறார்கள் அவர்கள் அவரைக் காப்பாற்றினார்கள் என்பது தெரிகிறது என்றாலும் முதியவர் குப்பையில் கிடந்த செய்திதான் மனதை அதிகமாகத் தாக்குகிறது. எப்படி இப்படி என்ற கேள்விகள் எழுந்தாலும், இறைவன் அப்பெரியவருக்கு நல்லதொரு அடைக்கலம் நல்கிட பிரார்த்திப்போம்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  26. JKC ஸார் நீங்கள் பகிர்ந்திருக்கும் கதை நன்று. குழந்தைகள், கணவர் எல்லோரும் அம்மாவை கேலி செய்தாலும் அவருக்கு உடம்பு சரியில்லாத போது அவர்களது அன்பு வெளிப்படுவதும், கவனித்துக் கொள்வதும், அவர்கள் எல்லோரது உள் மனதிலும் அம்மாவின் மீதான பாசத்தையும், ஒரு நாள் அவருக்கு முடியவில்லை என்றாலும் வீட்டின் வழக்கமான செயல்பாடுகள் எப்படி தொய்வடைகின்றன என்பதையும் யதார்த்தமாக, நன்றாகச் சொல்லியிருக்கிறார் கதை ஆசிரியர்.
    வழக்கமாக எல்லா வீடுகளிலும் நடக்கும் ஒன்று.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!