திங்க பதிவுக்கு யாரும் படைப்பு அனுப்பாததால் நிலைய வித்வான் வாசிப்பு இன்று!
ஆரோக்ய சமையல் ஹேமா ஒரு படம் மட்டும் அனுப்பி இருந்தார். விளக்கம் எதுவும் வராத நிலையில் நாமே தம்புரா போட்டு தவில் வாசித்து விடுவோம் என்று வந்து விட்டேன்!
பொதுவாக 'என்ன இருக்கப்போவுது திங்கக்கிழமையில்.. நமக்குத் தெரியாததையா சொல்லப்போகிறார்கள்' என்கிற மனோபாவம் வந்து விட்டது போல தெரிகிறது. பிரியாணியும் விருந்தும் சாப்பிட்டுக் கொண்டிருந்தால் இப்படிதான் புளிச்ச ஏப்பம் வரும். நடுவில் இப்படி கொஞ்சம் பழைய சாதத்துக்கு போய்வருவோம்!
சில இடங்களில் பிரியாணியை ஆங்கிலத்தில் Briyani என்று எழுதுகிறார்கள். பிரிட்டானியா பிஸ்கட் என்று சொல்வது போல! பாஸ் கூட அதை ப்ரியாணி என்றே சொல்கிறார். அது சரி, பிஸ்கட்டை பி ரி ட் டா னி யா என்றா பிரித்துச் சொல்கிறோம்! ஆனால் எனக்கு அவர் அப்படி ப்ரியாணி என்று சொல்லும்போதெல்லாம் ப்ரியாமணி நினைவுக்கு வருகிறார். எது சரி? பிரியாணியா? ப்ரியாணியா?
நன்றி இணையம். இதைத்தவிர மற்ற புகைப்படங்கள் யாவும் நான் எடுத்தது! இதையும் நான்தான் எடுத்தேன் - இணையத்திலிருந்து!
ஆமாம், பிரியாணி என்பது ஆங்கில வார்த்தையா? எனில் அதற்கு தமிழில் என்ன சொல்வது? வெஜ் ரைஸ், புலாவ் என்றெல்லாம்தான் சொல்கிறார்கள்!
பிரியாணிக்கு மக்கள் ஏன் பைத்தியம் பிடித்து அலைகிறார்கள் என்று நண்பனிடம் கேட்டேன். "கர்மம்.. அதாண்டா எனக்கும் புரியல... நானும் வாரத்துக்கு மூணு, நாலு தரம் அதைச் சாப்பிட்டுதான் பார்க்கிறேன்.. கண்டுபிடிக்க முடியல" என்றான். சீக்கிரம் கண்டு பிடித்து விடுவான் என்றுதான் நினைக்கிறேன்.
இதில் அசைவ பிரியாணிக்குதான் மவுசு. சைவ பிரியாணி அந்த அளவு விலை போவதில்லை. இரண்டும் ஒரே மாதிரி தயாரிப்புகள்தான். இரண்டுமே மசாலாவால் வாசம் பெறுகின்றன. சைவ பிரியாணிக்கு தனியாய் எங்கும் கடைகள் இல்லை. சாலைகள்தோறும் தள்ளுவண்டிகளில் விற்பதில்லை. என்ன ஓரவஞ்சனை! அசைவ ஹோட்டலில் என்று பிரியாணி சாப்பிடாதோர் குறைவு. சைவ ஹோட்டலில் உள்ளே போனால் இட்லி தோசைகளின் வித்தியாச ஐட்டங்களைதான் ஆர்டர் செய்கிறார்கள். வெஜ் பிரியாணி யாரும் வாங்குவதில்லை. அனாதையாய் காத்திருக்கும் அது எப்போதாவது வரும் ஒரு நேயருக்காக!
போகப்போக பிரியாணியை மாலை நேரம் ஸ்நாக்ஸ் போல பத்து ரூபாய்க்கு ஒரு கரண்டி என்று கப்பில் போட்டு விற்கும் காலம் வந்து விடும்!
ஒரு மொறுமொறுப்பான தங்கநிற ரவா தோசையில் இருக்கும் கவர்ச்சி, சாம்பாரில் மூழ்கி சட்னிகள் தேய்த்து குளிக்கும் பூப்போன்ற இட்லி மற்றும் தோசையின் கவர்ச்சி, கும்மென்று பூரித்து நிற்கும் பூரி, சோளா பூரியின் ஆகர்ஷம் பிரியாணியில் கிடைக்கிறதா என்ன!
இதை என் ஆ ஆ இடம் கேட்டபோது, "ஸார்.. அதெல்லாம் டிஃபன் வகையறா... எனக்கும் பிடிக்கும். பிரியாணி ரைஸ் வகையறா.. சாம்பார் சாதம், புளி சாதம், தக்காளி சாதம், ரசம் சாதம், தயிர் சாதம்... இதோடெல்லாம் போட்டி போடணும்." என்றார்.
"அப்புறம் பிரிஞ்சி?" பிரிஞ்சி கூட தமிழ் இல்லை!
"ஊ.. ஹூம்... அதெல்லாம் பிரியாணிக்கு அப்புறம்தான்.."
"பிரியாணியில் உங்களுக்கு சிக்கன் பிடிக்குமா? மட்டன் பிடிக்குமா?"
"எல்லோரும் மட்டன் என்பார்கள். நான் சிக்கன்தான் சொல்வேன். அதுவும் குஸ்கா வாங்கிக்கொண்டு கூட சிக்கன் வகையறா ஸைட் டிஷாக வாங்கி சாப்பிடுவேன்" என்றார்.
நீங்கள் ஹோட்டலுக்கு போனால் சைவமோ, அசைவமோ, அடிக்கடி என்ன ஆர்டர் செய்வீர்கள்? பிடித்த வரிசை என்ன?
இதைச் சொல்லும்போது நினைவுக்கு வருகிறது.. சமீபத்தில் தி நகரில் கீதம் ஹோட்டலில் ஒரு பார்ட்டிக்கு சென்றிருந்தேன். அங்கு தரப்பட்ட சாம்பார் வடை, சப்பாத்தி குருமா அருமையாய் இருந்தது என்று சொல்லிக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன். மேலே உள்ள படங்கள் அவ்வமயம் எடுக்கப்பட்டதுதான்! அந்தப் பக்கம் செல்பவர்கள் அவசியம் சோதித்துப் பார்க்கவும்.. நீண்ட நாட்களுக்குப் பின் அழகான பொன்னிற மெதுமெதுப்பான சப்பாத்தியின் வடிவத்தை அங்கு கண்டேன். அருமாவும் குருமை... மன்னிக்கவும், குருமாவும் அருமை!
காபி அங்கு குடிக்க வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்!
அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள் சிறுகை அளாவிய கூழ்..
பதிலளிநீக்குவாழ்க தமிழ்..
வாழ்க
நீக்குகற்பக கணபதி
பதிலளிநீக்குகனிவுடன் காக்க..
முத்துக்குமரன்
முன்னின்று காக்க..
தையல் நாயகி
தயவுடன் காக்க..
வைத்திய நாதன்
வந்தெதிர் காக்க..
இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
பிரார்த்திப்போம்..
எல்லாருக்கும் இறைவன்
நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..
நலம் வாழ்க..
வாழ்க வாழ்க
நீக்குசைவம் அசைவம் என்பதே தவறு..
பதிலளிநீக்குவன்மையாக கண்டிக்கின்றேன்..
( யோவ்.. வேலய பாத்துக்கினு போவியா!...)
:))
நீக்குசைவம் எனில் மங்கலம் என்றொரு அர்த்த்ம்...
பதிலளிநீக்கு__/\__
நீக்குசைவ உணவுப் பழக்கம் உடையவர் சமைப்பதே சைவ உணவு...
பதிலளிநீக்குஒரே கடையில் சைவ அசைவ உணவு என்பது பம்மாத்து..
ஏமாற்று வேலை...
ஆம். உண்மை.
நீக்குஎன்னுடன் குஜராத்தைச் சேர்ந்த ஸ்வாமி நாராயணர் வழிபாட்டு சமூகத்தைச் சேர்ந்தவன் வேலை பார்த்தான். அவங்கள்லாம் ரொம்பவே உணவுப் பழக்கத்தில் தீவிரம். ஒரு தடவை எல்லோரும் டிஸ்கஷன் என்ற பல காரணங்களால் ஒரு நான் வெஜ் கடைக்குப் போயிருந்தோம் (பெரிய ஹோட்டல்). நான் அங்கு தண்ணீர் கூட குடிக்கமாட்டேன். எனக்கு ஆச்சர்யம் தரும் விதமா அவன் சப்பாத்தி, சிக்கன் குருமா வாங்கி, அதில் உள்ள இறைச்சித் துண்டங்களை எடுத்துவிட்டு, இது இப்போ சைவமாகிவிட்டது என்று சொல்லிச் சாப்பிட்டான். ஒரு விதி என்று ஒன்றிருந்தால் அதை வளைக்கவும் ஐடியா கண்டுபிடிச்சுடறாங்க என்று நினைத்துக்கொண்டேன்.
நீக்குஒரு பழைய கதை நினைவுக்கு வருகிறது நெல்லை.. குடிகாரன் ஒருவனை திருத்த அவன் மேல் நீர் தெளித்து ஞானஸ்நானம் செய்து, உன் பெயர் இனிமேல் ஜோஸப் என்று சொல்லி அவனை கிறித்துவ மதத்துக்கு மாற்றி ஆண்டவன் நாமத்தால் குடிக்க மாட்டேன் என்று சத்தியம் வாங்கி கொண்டாராம் பாதிரியார். மறுநாளும் அப்புறமும் அவன் குடித்தானாம். காரணம் கேட்ட பாதிரியாரிடம் அவன் சொன்னானாம். பிராந்தி மேல் தண்ணீர் தெளித்து இனி நீ சாதாரண நீர் என்று சொல்லி மாற்றி விட்டுதான் குடித்தானாம்!
நீக்குகாத்திருத்தல்..
பதிலளிநீக்குகாலகாலமாக புழக்கத்தில் இருக்கின்ற சொல்/ செயல்..
வெயிட் பண்ணுங்க...
என்னும் சொல் வழக்கு
என்ன அழகு!...
பண்ணுவது என்றால் செய்வது என்றும் அர்த்தம் கொள்கின்றோம் ..
அப்படியானால்
வெயிட் எப்படி செய்வது?..
நிறைய சாப்பிட்டால் - அதுவும் 'ஜங்க் புட்' - என்று அழைக்கப்படும் உணவுகளை சாப்பிட்டால் வெயிட் நிறைய பண்ணலாம்.
நீக்குநிலைய வித்துவானுங்களே எறங்கி வந்துட்டதால...
பதிலளிநீக்குஇன்னிக்கு அமோகம் தான்!...
மோகம்/ அமோகம் அர்த்தம் தெரியுமா?..
ஆனாலும்
சொல்லிக்கினே இர்க்கோம்!..
அமோகங்களில்தான் அதிக நாட்கள் ஓடுகின்றன.
நீக்குஉணவு சமைப்பதற்கு அடுப்பு/தீ மூட்ட வேண்டும்..
பதிலளிநீக்குதீ மூட்டுவதற்கு ஏகப்பட்ட் நியதிகள்..
இன்றைக்கு நவீன சமையல் அறைகள்/ கூடங்கள்...
சமைப்பவன் கழுவுவதற்கும் குளிப்பதற்கும்
விதிமுறைகள் உள்ளன..
அதெல்லாம் பின்பற்றப்பட்டால்
அது சைவ உணவு என்று ஒத்துக் கொள்ளலாம்..
இன்றைய புலால் உணவு.. அது கிட்க்கட்டும்...
இவை எந்த உணவு நிலையங்களிலும் முறையாக பின்பற்றப்படுவதில்லை என்பது கண்கூடு.
நீக்குஉணவு பாதுகாப்பு விதிகளின்படி தான் இன்றைய சாலையோத உணவுக் கடைகள் இருக்கின்றனவா?..
பதிலளிநீக்குஇல்லை.
நீக்குஉணவு பற்றி நிறைய பதிவுகள் அளித்துள்ளேன்..
பதிலளிநீக்கு__/\__
நீக்கு/// அருமாவும் குருமை.. ///
பதிலளிநீக்குகுருமாவும் அருமை..
ஆகா ஆகா!..
:-))
நீக்குபிரியாணியா?..
பதிலளிநீக்குப்ரியா (ம)ணியா?..
இப்படியான சந்தேகங்கள் எனக்கும் வருவதுண்டு..
அந்தப் படத்தில் கவுச்சி வாடையடிக்கும் சில வசனங்கள்..
கவுச்சியே கவர்ச்சி..
கவர்ச்சியே கவுச்சி..
ஹிஹிஹி.. அந்த கவுச்சி வேற...
நீக்குஅப்படி இருந்தால் ஏன் நல்ல நாட்கள் விசேஷங்களில்்புலாலுணவு சமைக்கப்பட்டதில்லை?
நீக்குநெல்லை... அவர் சொல்வது ப்ரியாமணி கவர்ச்சி கவுச்சி! நீங்கள் சொல்வது வேற.. நல்லநாள் விசேஷங்கள்ல பிரியாணி சமைக்கிறவங்களை நான் பார்த்திருக்கேனே..
நீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குநாரதரே..
பதிலளிநீக்குகவுச்சி என்றால் என்ன?..
அதுதான் இது
இதுதான் அது என்று சொல்லி விடாதீர்!..
பின்ன அது?
நீக்குஒன்று மட்டும் இன்று தெரியவந்தது. நீங்கள் Galaxy S23 போன் வைத்திருக்கிறீர்கள்.
பதிலளிநீக்குஎன்னுடைய பாஸ் காளான் பிரியாணி அருமையாக செய்வார்.
Jayakumar
என் பாஸ் வெஜ் பிரியாணி, தக்காளி சாதம் அருமையாக செய்வார். மேலும் புதினா ரைஸ், தேங்காய் சாதமும்...
நீக்குஅப்போ ஒருவேளை உங்க வீட்டுக்கு வர நேர்ந்தால் வெஜ் பிரியாணியைத்தீன் எதிர்பார்க்கணும்.
நீக்குஎன்னிடம் கேட்கிறீர்களா? JKC ஸாரிடம் கேட்கிறீர்களா? கேட்கப்படுபவரை விடுங்கள்.. கேட்பவரைப் பொருத்தும் பொருத்தமில்லாத கேள்வியாய் இருக்கிறதே!
நீக்குஸ்ரீராமைத்தான் கேட்கிறேன். வீட்டுக்கு வந்தால் கலவை சாதம் போடாமல், இல்லை பஜ்ஜில்லாம் போடாமல், வெஜ் பிரியாணியை எதிர்பார்க்கலாம் என்று சொல்ல வந்தேன்.
நீக்குகேட்டதை / விரும்பியதை கொடுத்து விடலாம்!
நீக்குதஞ்சை வட்டாரத்தில் கெட்டுப்போன புலால் வாடையை கவுச்சி என்பார்கள்..
பதிலளிநீக்குoh...
நீக்குமுதன் முதலாக அசைவ பிரியாணி படங்கள் எங்கள் பிளாக்கில். வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஒப்பீட்டுக்காக.. அதைத்தானே எல்லோரும் ஓடி ஓடி சாப்பிடுகிறார்கள்!
நீக்குபடத்தில் உள்ள ரவா தோசையையும் தமிழக சாம்பாரையும் நான் மிஸ் செய்கிறேன்.
பதிலளிநீக்குஎப்போதுமே படத்தில் பார்த்து கற்பனையை வளர்த்துக் கொண்டு சாப்பிடச் செல்லக் கூடாது. பார்க்க நன்றாய் இருப்ப்பதெல்லாம் சுவைக்கவும் நன்றாய் இருக்கும் என்பது மாயை. நம்ம வீடு வசந்த பவனில் மெயின் ஐட்டம் நன்றாய் இருக்கும். சாம்பார், சட்னி, குருமா என் சுவைக்கு விரோதமாக இருக்கும்!
நீக்குதுபாய் நம்ம வீடு வசந்தபவன் (பர்துபாய்) பரோட்டா மற்றும் அதற்கு தினமும் மாறும் குருமாவும் மிக அருமையாக இருக்கும். அதுபோல நான் எங்குமே சாப்பிட்டதில்லை. நான் மாலையில் சென்று எண்ணெய் அதிகமாக விடவேண்டாம் என்று ரிக்வெஸ்ட் பண்ணிப்பேன். அது சரி...நல்ல பரோட்டா குருமா சென்னையில் எங்கு கிடைக்கும்? (மூன்று மாதங்களுக்கு ஒரு முறை சாப்பிடத்தான்)
நீக்குஅங்கிருக்கும் வசந்தபவன் பற்றி ஞானமில்லை. இங்கே இருக்கும் வசந்தபாவனில் துணைப்பொருட்கள் சுவையில்லை என்பதே எனது நாவின் தீர்ப்பு!
நீக்கு// அது சரி...நல்ல பரோட்டா குருமா சென்னையில் எங்கு கிடைக்கும்? //
நீக்குஎன் அனுபவத்தில் தி. நகர் கீதம் ஹோட்டலில். கிண்டி சங்கீதா ஹோட்டலில். உங்களுக்கு அதிருஷ்டம் இருந்தால், வடக்கே சூலம் இல்லாதிருந்தால் அடையார் ஆனந் பவனில் நன்றாய் இருக்கும்.
நல்ல ஒரிஜினல் கோதுமை மாவில் செய்யப்பட்ட பராத்தா எனில் அண்ணா நகர் ஐயப்பன் கோயிலுக்கு அருகே உள்ள சுக் சாகர் போங்க. எல்லாமே நன்றாக சுவையாக இருக்கும். காலை நேரங்களில் கீழே இருக்கும் ஸ்டாலில் கூடச் சுவையான இட்லி, தோசை, வடை, பூரி கிடைக்கும். மாலை எனில் ஏழு மணிக்கு மாடியில் இருக்கும் ரெஸ்டாரன்ட் போகலாம். சனி, ஞாயிறு விசேஷ நாட்களில் காத்திருக்கணும்.ஒரிஜினல் குல்ஃபி அங்கே நன்றாக இருக்கும். குஜராத்+ராஜஸ்தான் கலவை/ அநேகமாக அனைவரும் குஜராத்தியாகவே இருந்தனர். இப்போப் பத்து வருஷங்களுக்கும் மேல் ஆனதால் எப்படினு தெரியலை.
நீக்குஉண்மையைச் சொன்னா திட்டுவீங்க.. செல்வாண்ணா வேற புள்ளி விவரங்களோடு ஓடி வருவாரு... எனக்கு கோதுமைல செஞ்ச பராத்தா பிடிக்காது! மைதாவில் செய்த பரோட்டாதான் பிடிக்கும்! உடன் பீன்ஸ் போடாத குருமா.
நீக்குஏற்கனவே படித்திருக்கின்றேன்.. எனினும்
பதிலளிநீக்குதற்போது மீண்டும் கிடைத்தது..
எப்போதும்
மகிழ்ச்சியாக இருக்கின்ற மூன்று பேரில் தன் வீட்டில் உணவு சாப்பிடுபவனும் ஒருவன்!..
(யக்ஷனின் கேள்விகளுக்கு தர்ம புத்திரரின் பதில்!..)
மற்ற இருவர்?..
அது அப்புறம்!..
வாழ்க... அது அந்தக் காலம்!அப்போதெல்லாம் A2B சங்கீதாக்கள் கிடையாது!
நீக்குஎனது மனதை மிகவும் கவர்ந்த 88-95 வரையிலான சரவண பவனை மறக்கலாமா? A2B என் தார்வில் கடந்த ஒரு வருடமாக இல்லை
நீக்குபழைய சரவணபவனை மறந்து விடுங்கள். எள்ளு தண்ணீர் ஊற்றி திவசம் செய்து விட்டார்கள்!
நீக்குதற்போது என்றால் ஐந்து நிமிடங்களுக்கு முன்பு..
பதிலளிநீக்குகோரக்கர் வழிபாட்டுக் குழுவில் இருந்து!..
ஸ்ரீராம் அவர்களுக்கு அனுப்பி வைக்கின்றேன்..
__/\__
நீக்குதிங்களில்தான் கை வைத்தீர்கள் என்று பார்த்தால் புதனிலுமா? சரி பதில் சொல்லிடுவோம்.
பதிலளிநீக்குநான் தமிழக ஹோட்டல்களில் ரவா தோசைதான் ஆர்டர் செய்வேன். ஒன்று எண்ணெயில்லாமல். அது திருப்தி தராத பட்சத்தில் (சாம்பார் சட்னி நல்லா இருந்தும்), இன்னொரு நார்மல் ரவா தோசை ஆர்டர் செய்வேன்.
அடுத்த வேளைக்கும் இதுதான். சமயத்தில் சப்பாத்தி/பரோட்டா குருமா ஆர்டர் செய்து நொந்துபோவதும் நடக்கும். சமீபத்தில் துரை செல்வராஜு சாருடன் சென்று மங்களாம்பிகாவில் ஏமாந்தது போல
ஆ.. ஆ!..
நீக்குஆம். குடந்தை சென்றபோது எனக்கும் மங்களாம்பிகாவில் ஏமாற்றமே கிடைத்தது.
நீக்குஅது சரி, மறுபடி மறுபடி ரவா தோசையா?
பரோட்டா அமைந்தாலும் குருமா அமைவது சிரமம். குருமா அமைந்தாலும் ஸாஃப்ட் பரோட்டா அமைவது கடினம்!
நிஜமாகவே எப்போதுமே ரவா தோசைதான் (ஆனியன் இல்லை). இப்போ, பிரச்சனை இலாதா சாதா தோசைக்கே மாறிவிடலாமா, அதை மோசமாகப் பண்ண முடியாது என்று நினைத்திருக்கிறேன்.
நீக்குமங்களாம்பிகா இப்போது இருப்பது ஒரிஜினல் முதலாளிகளால் நடப்பது இல்லை. ஒரிஜினல் முதலாளி பிள்ளை இப்போ சாப்பாடு மெஸ் வைத்து நடத்துகிறார். மாலை டிஃபன் உண்டுனு சொன்னார். மத்தியானங்களில் தவலை வடை, கீரை வடை, போண்டா போன்றவை. காலை பத்தரை மணிக்குள்ளாகச் சாப்பாடு முடிந்து விடுகிறது. அவரும் அவர் மனைவியும் சேர்ந்து செய்து கொண்டிருந்தனர். இப்போத் தெரியலை.
நீக்குஅந்த நாள் மங்களாம்பிகாவில் பசும்பால் காஃபி நன்றாக இருக்கும். அந்தப் பழைய வீட்டில் மேலே கூரை உடைந்து இருக்கையில் மழை நீரெல்லாம் சாப்பிடும்போது நம் மேல் தெறிக்கும். எங்கேயானும் இடிஞ்சு விழுந்துடுமோனு பயம்மா இருக்கும். பின்னர் அங்கிருந்து மாற்றிக் கொஞ்ச நாட்கள் கும்பேஸ்வரர் கோயில் கடைத்தெருவிலும் பின்னர் இப்போ இருக்கும் இடத்துக்கும் வந்திருக்கு.
நீக்குநான் சாதா தோசை பக்கம் செல்வதில்லை நெல்லை. ரவா ஓகே. மசாலா தோசை கூட பிடிக்காது. ஸ்பெஷல் நெய் ரோஸ்ட் ஓகே. ஆனியன்னா அது ரவாவிலும், ஊத்தப்பதிலும்தான்! பரோட்டா எப்படியும் கேட்டு விடுவேன்.
நீக்குமங்களாம்பிகா முதலாளி பற்றி என்பது போல ஒரு கதை படித்தேன் சமீபத்தில். எங்கே என்று நினைவில்லை. நெகிழ்ச்சியான கதை.
நீக்குஆக,
பதிலளிநீக்குநமக்கான மகிழ்ச்சி எது,?..
மகாபாரதத்தில் தர்மபுத்திரர் சொல்கின்றார்..
இதைப் பின்பற்றினால்,
எல்லாவகைகளும் இழுத்து மூடப்பட்டு விடும்!...
ஆனால் நமக்குத் தான் நல்ல விஷயங்கள் ஆகாதே!..
// ஆனால் நமக்குத் தான் நல்ல விஷயங்கள் ஆகாதே!. //
நீக்குஅதைச் சொல்லுங்க...
சமீபத்தில் பெங்களூர் கஃபேயில் பிரியாணி (பலப் பல வருடங்களுக்குப் பிறகு) சாப்பிட்டளன். (சாப்பிட்டோம். 450 ரூபாய்க்கு மூன்று பேர்களுக்கான பிரியாணி). மிக்க் காரமாகவும் (எங்களுக்காக மீடியம் காரமாம்) மிக ருசியாகவும் இருந்தது. ரெய்த்மா குறைவாக இருந்தது.
பதிலளிநீக்குஹைதராபாத்தில் வேறு வழியில்லாமல் வெஜ் நான்வெஜ் ஹோட்டலில் வெஜ் பிரியாணி மிகுந்த குற்ற உணர்வுடன் சாப்பிட நேர்ந்தது (2010ல்)
எனக்கு வெஜ் நான்வெஜ் கடைகள் பிடிப்பதில்லை, பிட்சா மற்றும் ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள் விதிவிலக்கு (பிட்சாவும் பிராண்டட்)
வெஜ் பிரியாணிகளில் கிராம்பு அதிகம் போட்டு விடுகிறார்கள். வீட்டில் செய்தால் அளவாய் சேர்க்கலாம். நான் ஹோட்டல் போனால் டிஃபன் ஐட்டங்கள்தான்.
நீக்குமத்தியானம் உணவு நேரத்திலும் இரவு உணவு நேரத்திலும் வெஜ் புலவ், பிரியாணி, வெஜ் நூடுல்ஸ்,தக்காளி சாதம் போன்றவை அநேகமாக எல்லாப் பெரிய ஓட்டல்களிலும் கிடைக்கும். ஆர்டர் பண்ணினால் செய்து சூடாகத் தருவார்கள்.
நீக்குஆம். கிடைக்கும். கேட்பவர் குறைவு என்று நினைக்கிறேன்.
நீக்குநீங்கள் எழுதியருப்பது போல, பிரியாணி கடைகள் அங்கிங்கெனாதபடி ஏகப்பட்டது இருக்கின்றன. இதைச் சாப்பிடுபவர்கள் பெருகியதற்கு முக்கியக் காரணம் குடிப்பது அதிகரித்துவிட்டதால்.
பதிலளிநீக்குஏழைக் குடியர்களுக்கும் ஏழைத் தொழிலாளர்களுக்கும் குறைந்த செலவில் வயிறை நிரப்ப பரோட்டா உபயோகப்படுவது போல
நீங்கள் சொல்லும் காரணம் சரியாய் இருக்கலாம். 60 களில் நான்ஸ் என்னை வந்த புதிது. சம்பளம் வாங்கிய உடன் என் செலவுக்கு கொஞ்சம் மட்டும் கையில் வைத்துக்கொண்டு மிச்சத்தை மதுரைக்கு அனுப்பி விடுவேன். அப்போல்லாம் ரெவின்யூ ஸ்டாம்ப்பில் கையெழுத்திட்டு கையில் அல்லவா சம்பளம்? அப்போது வார நாட்களில் கிளம்பி உறவினர் வீடு செல்ல (குரோம்பேட்டை) கிண்டி வந்து அங்கிருக்கும் முருடிஸ் கஃபேயில் ஒரு (ஆனியன்) ஊத்தப்பம், ஒரு பரோட்டா சாப்பிடுவேன். குறைந்த செலவில் வயிறு நிறையும். சில சமயங்களில் செட் தோசை வடகறி!
நீக்குஏன் அப்போதிருந்த ருசி இப்போ இல்லை? மதுரை இரயிலடி கற்பகம் பெரும் ஏமாற்றம். 85ல் ஆசையோடு அங்கே ரவா தோசையும், மசாலா பாலும் சாப்பிடுவேன்.
நீக்குவீட்டை விட்டு வெளியே வந்து நாம் முதலில் சுவைத்த வெளி சுவை நாக்கில் நின்று விடுகிறது நெல்லை. அம்மா சமையல் மனதை விட்டு அகலாதது போல அதுவும் மனதை விட்டு போவதில்லை.
நீக்குபேசாமல் மாதம் ஒரு வாரத்தில் தி பதிவுகள் நீங்களே எழுதலாம். ரசித்த எழுத்து
பதிலளிநீக்குஆஹா.. செஞ்சுடலாமே.. சமைப்பது கூட சுலபம். பாத்திரம் தேய்ப்பதுதான் சிரமம் என்பது போல பதிவு கூட எழுதி விடலாம். பின்னூட்டங்களுக்கு பதில் சொல்வதுதான் சிரமம்!!!! ஹிஹிஹி...
நீக்குகாபி சில முறை சுவைத்துப் பார்க்கிறேன். ஒவ்வொரு தடவையும், இந்தக் கசப்பை எப்படித்தான் ஆர்வமா குடிக்கிறாங்கன்னு தோணும், சாக்லேட் சம்பந்தப்பட்ட ஐஸ்க்ரீம் போல
பதிலளிநீக்குஏன்.. நீங்கள் காஃபி குடிக்க மாட்டீர்களா? செம போதை ஸார் அதில்...
நீக்கு@ ஸ்ரீராம்..
பதிலளிநீக்கு// எப்போதுமே படத்தில் பார்த்து கற்பனையை வளர்த்துக் கொண்டு சாப்பிடச் செல்லக் கூடாது.. //
அருமை..
மசாலாப் பொடிகள் தயாரிப்பவனே சொல்கிறான் பாக்கெட்டில் அச்சிடப்பட்டிருக்கும் கவர்ச்சியான வறுவல் பொரியல் படங்களைப் போல உங்களது கை தயாரிப்புகள் இருந்தாக வேண்டிய அவசியமில்லை என்று!!..
இது ஒன்றே போதாதா!..
உண்மைதான். கடையிலிருந்து புத்தம்புதிய வெள்ளை சட்டை வாங்கி வந்து, லேசான அழுக்காக்கி, அவர்கள் (யாரோ) சோப்புப்பவுடரில் அலசி, பளிச்சென வெளியே எடுப்பது போல!
நீக்குஐஸ்க்ரீம் மற்ற உணவு வகையெல்லாம், நிஜமாகவே செய்து விளம்பரங்களுக்குப் படமெடுப்பதில்லை. படத்தில் உள்ள ஐஸ்க்ரீம் ஃபலூடா போன்ற பலதும் உண்மையானது இல்லையாம். (இன்னைக்கு ஸ்ரீராம், ஏன் இந்தப் பதிவு எழுதினோம் என்று நினைக்கும்படி பல பின்னூட்டங்கள் போட்டு வைப்போம்)
நீக்குமக்களை ஏமாற்ற ஆயிரம் விளம்பரங்கள், வழிகள்.
நீக்கு
பதிலளிநீக்கு@ ஸ்ரீராம்
// எப்போதுமே
படத்தில் பார்த்து கற்பனையை வளர்த்துக் கொண்டு சாப்பிடச் செல்லக் கூடாது.. //
அருமை..
மசாலாப் பொடிகள் தயாரிப்பவனே சொல்கிறான் பாக்கெட்டில் அச்சிடப்பட்டிருக்கும் கவர்ச்சியான வறுவல் பொரியல் படங்களைப் போல உங்களது கை தயாரிப்புகள் இருந்தாக வேண்டிய அவசியமில்லை என்று!!..
இது ஒன்றே போதாதா!..
என்ன ரெண்டு வாட்டி சொல்லி இருக்கீங்க...! மேலே ஒரு விளம்பரம் பற்றி சொல்லி இருக்கேன் பாருங்க...
நீக்குஅச்சச்சோ, காலம்பற ஏழு மணிக்கே 49
பதிலளிநீக்குகருத்துக்களா?
ஹி..ஹி..
எல்லோருக்கும் பசி மயக்கமாக இருந்திருக்கும்.
நீக்குஜீவி ஸார்... இதுதான் பின்னூட்டமா? இவ்வளவுதானா?
நீக்குஇப்போது சில ஆண்டுகளாகவே - புலால் உணவுகளில் இருந்து விலகிய பிறகு -
பதிலளிநீக்குகாபி என்றால் காளியம்மன் காபிக்கடை உணவு என்றால் முனியாண்டி பவன் என்றிருக்கும் கடைகளில் மட்டுமே நுழைகின்றேன் ..
பொதுப் பெயர்களில் இருக்கும்
எந்தக் கடைக்கும் செல்வதில்லை..
முன்னர் பஸ்ஸ்டேன்ட் அருகே வாசனையாய் வாசவி இருக்கும். ரயில்வே ஸ்டேஷன் அருகே நியூ பத்மா இருக்கும். தள்ளி சந்தைப் பக்கம் போனால் சுப்பையா பிள்ளை பால் கடை இருக்கும். இப்போது நோ ஐடியா...
நீக்குதூங்கி எழுந்ததும் குளித்து விட்டுத் தான் அடுத்த வேலை.. (முக்கியமாக சமையல், தானம்)
பதிலளிநீக்குஇது தான் நீதி நியதி..
குளிப்பது அவசியமில்லை என்றால் நான் வெகு தூரத்திற்கு வந்து விடுவேன்..
உடல் நலிவு நோய் எனில் அது வேறு..
நானெல்லாம் தூங்கி எழுந்ததும் காலைக்கடன் முடித்து, பல் தேய்த்து, காபி குடித்து பின்னர்தான் குளியல்!
நீக்குபஞ்ச பூதங்களினால் கிடைப்பதுவே உணவு..
பதிலளிநீக்குஇதை நம்புவதே மனிதம்..
உணவே புனிதம்!..
ஆம். எந்த உணவாயினும்.
நீக்குகல்யாணம் என்பது மங்கலம்.. இதனுள் பிரியாணி என்று அமங்கலத்தை சேர்த்தது இன்றைய நாகரிகம்...
பதிலளிநீக்குஆர்டரின் பேரில் கல்யாண பிரியாணி என்று இந்தப் பகுதிகளில் இப்போது விளம்பரங்கள்..
நிழற்பட சான்றுகள் அளிக்க இயலாது.. (!)
பிரியாணி என்பதை அமங்கலமாக ஏன் பார்க்கிறீர்கள்? அது ஒரு சாராருக்கு பிடித்த உணவு. அதில் தவறில்லை. பிரியாணிக்கு தமிழ் என்ன என்று சொல்லுங்களேன்.
நீக்குஅந்தக் காலத்திலேயே இந்த பிரியாணி இருந்துள்ளது. இதைப் பற்றி நான் ஏற்கெனவே 2,3 பதிவுகள் போட்டிருக்கேன். சுட்டி எடுத்துத் தரேன்.
நீக்குhttps://sivamgss.blogspot.com/2020/08/blog-post_25.html
நீக்குகீதாக்கா உங்க சுட்டி போய் பார்த்தேன். எப்படி மிஸ் பண்ணினேன் தெரியலை....20ல வந்த பதிவு போல. ரொம்பவே சுவாரசியமாக இருக்கு கீதாக்கா. அதாவது தமிழ்ச்சொற்கள்! அந்தக்காலத்து அளவு முறை.... பெரிய குடும்பம் போல! அளவெல்லாம் அப்படி இருக்கு..எல்லாமே நெய்தான்.
நீக்குபழைய காலத்து சமையலில் நெய், மற்றும் நெல்லெண்ணைதான் என்று கல்வெட்டு சமையல் என்று ஆராய்ந்து எழுதிய மறைந்துவிட்ட செஃப் - அவர் பெயர் மறந்துவிட்டது - அவர் எழுதியிருந்தார்.
அது சரி பிரியாணி முறை எங்கே!!!?? அங்கு காணும்? வேறு தொடர் பதிவிலோ? சுட்டி இருந்தா கொடுங்க கீதாக்கா
கீதா
நானும் போய் பார்த்தேன். என் கமெண்ட் அங்கே இல்லையே, படித்த ஞாபகமும் இல்லையே என்று யோசித்து தேதியைப் பார்த்தேன். நான் கொரோனாவால் தாக்குண்ட தினம். ரிசல்ட் வந்த தினம். அதற்கு இரண்டு நாள் முன்னாலிலிருந்தே கடும் உடல்வலியும் ஜூரமுமாக இருந்த சமயம்.
நீக்குப்ரியாணி தவறு, பிரியாணி என்பது சரி.
பதிலளிநீக்குகோழி பிரியாணியோ, கறி பிரியாணியோ அதில் சேர்க்கப்படும் அசைவ பொருள்களால்தான் ருசி அதிகரிக்கும். அதில் சேர்க்கப்படும் மசாலாப்பொருள்களால் அல்ல. அப்படியும் மசாலாப்பொருள்கள் அளவோடு சேர்த்தால் மட்டுமே எந்த பிரியாணியும் ருசிக்கும். இதில் நிறைய விளக்கங்கள் உண்டு. ஆனால் இங்கே அது தேவையில்லை.
ஆனால் அசைவ சமையலுக்கு சுத்தம், தரமான பொருள்கள் மிகவும் முக்கியம். ஆனால் வெளியில் விற்கும் கடைகளில் இதெல்லாம் சுத்தமாக இருப்பதில்லை. அசைவ உணவகம் என்றாலும் சரி, சைவ உணவகம் என்றாலும் சரி பல முறைகள் உபயோகித்த எண்ணெயில் தான் எல்லா வகை சமையலும் செய்யப்படுகின்றன. நம் ஊரில் இது மிகச் சுலபமாக நடக்கும்.
இங்கே அமீரகத்தில் உணவகங்களில் கடுமையான சட்ட திட்டங்கள் உண்டு. திடீரென்று முனிசிபாலிட்டி அதிகாரிகளால் செக்கிங் நடக்கும். அதற்கெல்லாம் கட்டுப்பட்டுத்தான் இங்கே உணவகம் நடத்த முடியும். பரிமாறுபவர் முடி வெட்டாமல் அதிகம் வளர்த்திருக்க கூடாது. கை விரல்களில் நகம் வெட்டப்படாமல் இருக்கக்கூடாது. உடனேயே ஸ்பாட் ஃபைன் போடுவார்கள். நம் ஊர் பணத்துக்கு 30000லிருந்து 40000 வரை இருக்கும். சமையலறை சுத்தத்துக்கு இன்னும் அதிகமான ஃபைன் இருக்கும்.
வரவேற்கின்றேன்..
நீக்குஇதைத்தான் சொல்ல இருந்தேன்..
தாங்கள் பதிவில் தந்ததற்கு
மகிழ்ச்சி.. நன்றி..
இதைப் படிக்கும்போது, எங்கள் பிராண்டட் உணவகத்தில் (கல்ஃப்) ஒரு கரப்பானை கஸ்டமர் பார்த்துவிட்டு கம்ளெயின்ட் செய்ததால் (இந்த மிஸ்டேக் எங்கள் உணவகங்களில் அபூர்வத்துக்கும் அபூர்வம்), மூன்று நாட்கள் மூட நேர்ந்தது, நினைவுக்கு வருது. நம்ம ஊரில் உணவில் இருந்தாலும், எடுத்துப்கோட்டுவிட்டு சாப்புடையா என்பார்கள்.
நீக்குஇங்கே இது குறித்த கேவல நகைச்சுவைகள் ஏராளம்..
நீக்குவாங்க மனோ அக்கா... அழகாய் விளக்கமாய் பதில் சொல்லி இருக்கிறீர்கள். சுட்ட எண்ணெயே திரும்பத்திரும்ப ரீசைக்கிள் ஆவது ஒரு மைனஸ் இதில். இந்தியா தவிர மற்ற மாநாடுகளில் எல்லாம் ஒழுங்காய்தான் இருக்கிறது!
நீக்குஸ்ரீராம், வழக்க்மான திங்க வை விட இதுவும் மிகவும் நன்றாகவே இருக்கு. இப்படிப் பொதுவான திங்க பதிவுகளில், சில தலைப்புகளில் எழுதலாம்.
பதிலளிநீக்கு1. திடீர் வருகைதரும் விருந்தினர்களுக்கு எப்படி உணவு அல்லது நொறுக்குத்தீனி - நாம் செய்ததாக இருக்க வேண்டும் - அல்ல்து குடிப்பதற்கு காஃபி டீ ஹார்லிக்ஸ் - போர்ன்விட்டா இதெல்லாம் இல்லாமல் தவிர வேறு வகைகள் என்ன செய்து கொடுத்திருப்போம் னு எழுதலாம் திங்கவில் - பதிவாக.
2. எதிர்பார்த்த நபர்களை விட கூடுதல் வந்தால் எப்படிச் சமாளித்தோம் வீட்டில் நடக்கும் விசேஷங்களில் ....
3. வீட்டில் உள்ளவர்களை அசத்த திடீரென்று ஐடியா தோன்ற அப்படி உருவான உணவு, நொறுக்குத் தீனி....
4. நாம் நம் இஷ்டம் போல கற்பனையில் செய்ய நினைத்தது ஒன்று ஆனால் வெளிவந்தது வேறு...ஆனால் சுவையாக இருந்தது என்று இப்படி
ஸ்ரீராம், 4 வது நீங்க முயற்சி செய்திருக்கீங்க....சொல்லியிருக்கீங்க. விடுவேனா....திங்கவில் போடுங்க.
பதிவுக்கு வாசித்து விட்டு வருகிறேன்
கீதா
வாங்க கீதா... நன்றி.
நீக்குஎழுத சப்ஜெக்டுக்கா பஞ்சம்? எழுதிடலாம். எனக்கு நேரமும் மூடும் இருக்கணும்!
4 வதையும் லிஸ்ட்டில் வைத்திருக்கிறேன். அதற்குள் யாராவது எதையாவது அனுப்பி விட்டால் பிழைத்தீர்கள்!
// பதிவுக்கு வாசித்து விட்டு வருகிறேன் //
நீக்குவாசிக்காமலேயே இவ்வளவா?!!
பிரியாணிதான் சரி.
பதிலளிநீக்குமனோ அக்கா வந்திருக்காங்களா பார்க்கிறேன்....
கீதா
நானும் பிரியாணி என்றுதான் சொல்வேன்!
நீக்குஆ மனோ அக்கா வந்திட்டாங்க....
பதிலளிநீக்குமனோ அக்கா உங்களிடம் பல முறை கேட்க நினைத்து விட்டுப் போனவை.
நீங்கள் - உங்கள் குடும்பம் அமீரகத்தில் உணவகம் வைத்திருக்கீங்கன்றது எனக்குப் பல வருடங்களுக்கு முன்பே - 2012? அப்படித்தான் நினைக்கிறேன் - தெரியும்.
ஹோட்டல் சாம்பார் அந்தச் சுவை பற்றி இங்கு திங்க பதிவில் குறிப்புகள் தர முடியுமா? அதுக்குப் பொடி என்ன செய்வீங்கன்னு. அல்லது அவ்வப்போது செய்வதா? கொஞ்சம் விவரமாகத் தர முடியுமா?
கீதா
கீதா! நாங்கள் 1976லிருந்து இங்கிருக்கிறோம்!!
நீக்குஉணவகம் ஷார்ஜாவில் 1989ல் ஆரம்பித்தோம். ஷார்ஜாவில் 28 வருடங்களும் துபாயில் ஏழு வருடங்களும் என்று உணவகம் தொடர்ந்து நடத்திக்கொண்டிருக்கிறோம்.
எங்களின் உணவகங்களில் சாம்பார் எப்போதுமே எனது குறிப்பு தான்! சாம்பார்ப்பொடியும் பெருங்காயமும் கொஞ்சம் தூக்கலாக இருக்கும். அவ்வப்போது சென்று தரம் குறையாமலிருக்கிறதா என்றும் பரிசோதிப்பேன்!!
அந்த சாம்பார்ப்பொடி நான் பல வருடங்களாக பயன்படுத்துவது!
உணவக விவரங்களுக்கு மிக்க நன்றி மனோ அக்கா. எனக்கு 2012 ல்தான் தெரிய வந்தது இண்டஸ்லேடீஸில் நீங்கள் இருந்ததால். அதன் பின் நான் அதில் இல்லை. நீங்களும் அங்கு இல்லை.
நீக்குஉங்க்ள் குறிப்புதான் சாம்பாருக்கு என்பதையும் நீங்க அப்போது இண்டஸ் லேடீஸில் ஏதோ ஒரு முறை சொல்லியிருந்தீங்க. அதனால்தான் கேட்டேன்.
மிக்க நன்றி மனோ அக்கா.
கீதா
https://manoskitchen.blogspot.com/ உங்களின் இந்தத் தளத்தையும் பார்ப்பதுண்டு மனோ அக்கா
நீக்குகடைசியா நீங்க போட்டது சர்க்கரை வள்ளிக் கிழங்கு அடை என்று நினைக்கிறேன்.
வித்தியாசமான அவரைக்காய் - பொரியல் பற்றி கூட நீங்க போட்டிருக்கீங்க.
கீதா
ஹோட்டல் சாம்பார் பற்றி எவ்வளவு படித்து அதே போல செய்தாலும் அதே போல சுவை வருவதில்லை. நான் செய்வேன் என்று சொன்ன சிலர் செய்த சாம்பாருக்கு நான் செய்ததே மேல் என்று இருந்தது. ஆம், அவர்கள் ஃபீமேல்!
நீக்குமேலதிக குறிப்புகளுக்கு நன்றி மனோ அக்கா.
நீக்குஎனது கருத்துகள் சில எங்கே போயின?..
பதிலளிநீக்குகௌதமானந்தாஜி சுவாமிகள் வந்து தான் சொல்ல வேண்டும்..
ஶ்ரீஶ்ரீ கௌதமானந்தாஜி ஸ்வாமிகள் என்று மிக்க மரியாதையுடன் குறிப்பிடாது, அவரது பக்தர்கள் மனதை நோகடிக்கலாமா துரை செல்வராஜு சார்.
நீக்குதவறு தான்..
நீக்குஇன்று அசைவப் பதிவு ஆகி விட்டபடியால் தியானத்தில் மூழ்கி விட்டாரோ - ஶ்ரீஶ்ரீ கௌதமானந்தாஜி ஸ்வாமிகள்!..
/இன்று அசைவப் பதிவு ஆகி விட்டபடியால்// - என்னவோ... எனக்கும் அப்படியே தோன்றியது... சில பல படங்களால் இருக்கும்.
நீக்குசிஷ்யபுள்ள ஸ்ரீராம் வந்து ஒளிந்து கொண்டிருந்த எல்லா கமெண்ட்ஸையும் காதைப் பிடித்து இழுத்துக் கொண்டு வந்து விட்டேன்.
நீக்கு//இன்று அசைவப் பதிவு ஆகி விட்டபடியால்//
அசைவ பதிவா? இன்றா? அட, ராமா!
//என்னவோ... எனக்கும் அப்படியே தோன்றியது... சில பல படங்களால் இருக்கும்.//
சில படங்களா? ஒன்றே ஒன்று... அதைதான் இணையத்தில் இருந்து எடுத்து போட்டேன். மற்ற படங்கள் எல்லாமே தூய நெய்யினால் செய்யப்பட சைவம்!
ஹி ஹி ! நான் ப்ரியாமணி gif தேடி facebook ல நம்ம பதிவுக்கு கமெண்ட் போடுவதில் மும்முரமாக இருந்தேன்.
நீக்குசிறப்பு
பதிலளிநீக்கு__/\__
நீக்குபிரியாணி ஆணுக்கான உணவு என்பதால் ஆண் தன்மை கொண்ட பிரியாமணியை ஒப்பீடு செய்திருக்கிறாரோ ஶ்ரீராம்?
பதிலளிநீக்குஇது என்ன புதுக்கதை? பிரியாணி ஆணுக்கான உணவா? பெண்கள் சாப்பிட்டு பார்த்ததில்லையா நீங்கள்?
நீக்குப்ரியாமணி ஆண்தன்மை கொண்டவரா? எப்படி சொல்கிறீர்கள்? குரலை வைத்தா?
நீக்குஒரு பெண் பிரியாணி சாப்பிட ஆரம்பித்து பிரியாணிக் கடைக்காரனிடம் உறவை வளர்த்து தன் இரண்டு குழந்தைகளைக் கொன்றுவிட்டு, காதல் கணவரையும் கொல்ல நினைத்து முடியாமல் போன செய்தியை நீங்கள் படிக்கவில்லையா ஸ்ரீராம்?
நீக்குஒரே பின்னூட்டத்தில் இரண்டு வம்புகளை ஆரம்பித்துவிட்டேனோ?
அந்தச் செய்தி படிக்கவில்லை நெல்லை. ஆனால் திருமணமான பெண்ணா? கள்ள உறவா? அது போல நிறைய நிறைய செய்திகள் வருகின்றன.
நீக்குஸ்ரீராம், பட்த்தில் இருக்கும் கூம்பு தோசை வீட்டில் செய்ததுண்டு எல்லாம் மகனுக்காக! மொறு மொறு என்று வேண்டும்...இப்பவும் வீட்டில் ரோஸ்ட் செய்வதுண்டு ஆனால் கூம்பு இல்லை.
பதிலளிநீக்குஎனக்கு ஹோட்டலில் ரவா தோசை ஆசைப்பட்டு ஆர்டர் செய்வேன். ஆனால் சில இடங்களில் நன்றாக இருக்கும். அதாவது மொறு மொறு என்று. வீட்டில் மெலிதாக மொறு மொறு என்று வரும்.
ரவா தோசை இல்லைனா ரோஸ்ட்.
கீதா
கூம்பு தோசை வீட்டில் செய்து பார்க்க வேண்டும் என்று எனக்கும் ஆசை. கொஞ்சம் பெரிய அடுப்பு, பெரிய தோசைக்கல் இருந்தால் நன்றாயிருக்கும்! ரவா தோசை பிடித்த மாதிரி அமைய போன ஜென்மத்தில் புண்ணியம் செய்திருக்க வேண்டும். பரிகாரம் எல்லாம் செய்ய வேண்டும்.
நீக்குஹாஹாஹாஹா பரிகாரம் ----சிரித்துவிட்டேன் ஸ்ரீராம். நம் வீட்டில் வெங்காயம் இல்லாமல் ரவா தோசை செய்வது எப்போதாவதுதான். வெங்காயம் மஸ்ட் நம்ம வீட்டில்.
நீக்குகீதா
வெங்காயம் போட்டால் வீட்டில் மொத்தையாக வருமே கீதா... சின்னசின்னதாய் வேற தோசை இருக்கும்!!!
நீக்கு//ரவா தோசை பிடித்த மாதிரி அமைய போன ஜென்மத்தில் புண்ணியம் செய்திருக்க வேண்டும்.// அப்படியா? அப்படியென்றால் நான், என் பெரிய அக்கா, என் மகன், என் மகள் எல்லோரும் புண்ணியம் செய்தவர்கள். :)))
நீக்குஎல்லா முறையும் எல்லா இடத்திலும் நன்றாய் அமைந்ததா? எனக்கும் சில இடங்களில் நல்ல ரவா தோசை வாய்த்திருக்கிறது.
நீக்குவட இந்தியவில் பல வருடங்களுக்கு முன்பு சாப்பிட்ட வெஜிட்டபிள் பிரியாணி அருமையான சுவை அந்தச் சுவை போல வேறு எங்கும் சாப்பிட்ட நினைவில்லை. தில்லியில் ஆனால் எங்கு என்பது டக்கென்று நினைவு வரவில்லை
பதிலளிநீக்குகீதா
கடைகளில் பிரியாணி மிக மிக மிகச்சில சமயங்களில்தான் நன்றாய் இருக்கும். பாஸ் ப்ரெட் எல்லாம் வறுத்துப் போட்டு செய்யும் பிரியாணியே சூப்பராய் இருக்கும்.
நீக்குஸ்ரீராம், நானும் ப்ரெட் வறுத்துப் போடுவேன். எனக்கும் அது ரொம்பப் பிடிக்கும்....எங்கல் ஊர்ப்பக்கங்களில் பிரியாணியில் ப்ரெட் வறுத்துப் போடுவாங்க நாகர்கோவில், கேரளத்தில்.
நீக்குஎம் ஏ பிரிவு உபசாரத்தின் போது, பசங்க நாகர்கோவில் அப்போதைய அன்னபூர்ணாவில் வெஜிடபிள் பிரியாணி (எனக்காக) வகுப்பு முழுவதுக்கும் ஆர்டர் செய்திருந்தாங்க. அதுதான் நான் முதல் தடவையாக பிரியாணி என்ற ஒரு ஐட்டமை சாப்பிட்டது. அதுவரைக்கும் சாப்பிட்டதில்லை.
பரிமாறியிருந்த போது மஞ்சளும் வெள்ளை நிறத்திலுமான உதிரி சாதம் கொஞ்சம் குவித்து இடையிடையே காரட், பீன்ஸ் வெங்காயம் என்று ஆனால் மசாலா வாசம் அடக்கமாக, மேலே வறுத்த ப்ரெட் துண்டுகள் - பார்க்கவே அவ்வளவு அழகாக ஈர்க்கும் விதத்தில், அத்தனைச் சுவையுடன் இருந்தது. அதன் பின் கற்றுக் கொண்டு செய்யத் தொடங்கினேன். எங்கள் ஊர்ப்பக்கங்களில் ஜீரகசம்பா - பிரியாணி அரிசி - அதில்தான் செய்வாங்க. இப்போ எப்படி என்று தெரியவில்லை. அப்போது கற்ற போது அவங்க சொன்னது, சாதம் தனியாக உதிர வடித்துவிட்டு, காயைத் தனியாக வதக்கிவிட்டு கலப்பாங்களாம்.....அது அப்போதைய செய்முறை. நான் இப்பவும் இப்படித்தான் செய்கிறேன். எங்கள் ஊர்ப்பக்கம் படி.
மசாலா தூக்கலாக இருக்காது. பிரியாணியின் கலரும் இப்போதையது போல் இருக்காது.
அப்ப சொல்ல விட்டுப் போச்சு/
கீதாக்காவின் சுட்டி போய்ப் பார்க்கணும்
கீதா
வாழ்க நலம்... (!)
பதிலளிநீக்குவாழ்க நலம்.
நீக்குகாலையிலேயே ரொம்பப் பேசக்கூடாது என்று நினைத்தேன்.. இருந்தாலும் வாயும் மனசும் சும்மா இருக்க விடுவதில்லை..
பதிலளிநீக்கு/// ஆண் தன்மை கொண்ட பிரியாமணியை ஒப்பீடு.. ///
ப்ரியா - மணி
( ப்ரியா - மணி என்று
இருவர்)
பிரியாமணி - பிரியாத மணி
ப்ரியா!.. மணியா?..
இதெல்லாம் போதாதுன்னு பிரியாணி மணி..
மணி பிரியாணி..
என்ன கர்மம் டா இது!..
அய்யய்யோ... துரை செல்வராஜூ அண்ணே.. இப்பல்லாம் ரொம்ப ஆழ்ந்து யோசிக்கறீங்க... கட் பண்ணுங்க... கட் பண்ணுங்க...
நீக்குநல்லவேளை freeyaa ஃப்ரீயா மணி என்று பிரிக்காமல் போனாரே.
நீக்குதிங்கப் பதிவில் -
பதிலளிநீக்குஇது வரலாற்றுச் சாதனையாக அமையப் போகின்றது..
என்னவாம்? முன்னர் தோசாயணம் பதிவெல்லாம் பார்த்ததில்லையா...
நீக்குகீதம் ஹோட்டலில் சாப்பிட்ட உணவு வகைகள் படம் அருமை.
பதிலளிநீக்கு//நடுவில் இப்படி கொஞ்சம் பழைய சாதத்துக்கு போய்வருவோம்! //
உடம்புக்கு நல்லது என்று வெளிநாட்டவர் ஆராய்ய்ச்சி செய்து சொன்னவுடன் ஹோட்டல்களில் பழைய சாதமும் விற்பதாக செய்தியில் படித்தேன்.
நான் கல்யாணவீடுகளில், மற்றும் உணவு விடுதிகளில் பிரியாணி சாப்பிட மாட்டேன். எனக்கு பிடிக்காது. வீட்டில் அளவோடு மசாலாப்பொருட்கள் போடுவோம். எண்ணெய், நெய், அளவோடு சேர்ப்போம்.
நான்ஹோட்டல் போனால் ரவா தோசை எப்போதாவதுதான் ஆர்டர் செய்வேன், தோசை, , முறுகல் தோசை(நெய் ரோஸ்ட்) ஆப்பம், இடியாப்பம் என்று வயிற்றை கெடுக்காத உணவை ஆர்டர் செய்து சாப்பிடுவேன்.
வாங்க கோமதி அக்கா.. படம் மட்டுமல்ல, சுவையும் ப்ரமாதம்தான். ஆனால் நான் இப்படி சொல்லிய பிறகு நீங்கள் சென்று சாப்பிடும்போது அவ்வளவா நன்றாயில்லை என்றுதான் தோன்றும் மனித மனம்!
நீக்குபஹய்ய சாதத்தின் பெருமையை சொல்லவும் வேண்டுமோ... நான் இங்கு பழைய சாதம் என்று சொன்னது சமையல் குறிப்பு இல்லாத இந்தப் பதிவை!
மிகச்சில கல்யாண வீடுகள் தவிர மற்ற கல்யாணங்களில் பிரியாணி போடுவதில்லை என்று நினைக்கிறேன்.
உங்கள் ஹோட்டல் ஆர்டரில் இட்லி சொல்வதில்லையா?
நான் இட்லி சொல்ல மாட்டேன், சார் இட்லி, ஊத்தப்பம் , உருளை மசாலா தோசை சொல்வார்கள் அவர்களுக்கு.
நீக்குபஹய்ய சாதத்தின் பெருமையை சொல்லவும் வேண்டுமோ... நான் இங்கு பழைய சாதம் என்று சொன்னது சமையல் குறிப்பு இல்லாத இந்தப் பதிவை!//
நீக்குநீங்கள் சொன்னது புரிந்தது. இருந்தாலும் பழைய சாதம் பற்றி கேள்வி பட்டதை சொன்னேன்.
ஆம். நானே கடைகளில் மண்சட்டியில் தயிரூற்றிய பழைய சாதம் பார்த்திருக்கிறேன். பழைய சாதத்துக்கு ஈடில்லை. ஆனால் இந்தக் காலத்து குக்கர் சாதத்துக்கு, பிரிஜ் யுகத்துக்கு பழைய சாதம் சிலபேர்தான் விடாமல் எடுக்கிறார்கள். தொட்டுக்கொள்ள சின்ன வெங்காயமும் பச்சை மிளகாயும். என் அம்மா பழைய சாதம் வைத்து ஒரு டிஷ் செய்வார்.
நீக்குஇன்றைய உணவு வணிகத்தில் பல நிலைகளில் ஏமாற்றுத்தனம் மோசடிகள் இருக்கின்றன..
பதிலளிநீக்குஇன்று விற்கப்படுவது பிரியாணியே அல்ல...
இதிலே மிகப்பெரிய சேதிகள் இருக்கின்றன.. அவை
நேரில் மட்டுமே பேசிக் கொள்ள உகந்தவை..
கத்தரிக்காய் கெட்டுப் போனால் குப்பையில் எறியப்படுகின்றது..
மற்றவை!?...
எது? நாய்க்கறியெல்லாம் போட்டார்கள் என்று செய்திவ் வந்ததே.. அதுவா?
நீக்குகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்... அது நாய் இல்லை.... ராஜஸ்தான் ஆடு ஒல்லியா நீளமாக நாய் போல இருக்குமாம். அப்படித்தான் செய்திகளில் போட்டார்கள். இறைவன் ஒருவேளை நாய்க்கு இரண்டு வால் வைத்திருந்தால், இப்படிக் கதை திரித்திருக்க முடிந்திருக்காது.
நீக்குவரையாடு என்பார்களே அதுவா? சரி, பூனைக்கறி போட்டால் என்ன பதில்?
நீக்குமேலே சொன்ன தோசை, ரவா தோசை இல்லைனா பெரும்பாலும் இடியாப்பம், ஆப்பம் ரொம்பப் பிடிக்கும் சாப்பிட. இல்லைனா குழிப்பணியாரம்.
பதிலளிநீக்குகீதா
சுவைகள் வேறுபடும்!
நீக்குபிரியாணி பெயர் தான் பிற மொழி..
பதிலளிநீக்குசங்க காலத்தில் -
ஊன் துவை கறி சோறு
ஊன் சோறு..
எட்டுத் தொகையில் காணப்படுகின்றது..
ஓ.. அதில் மசாலா இருக்குமோ...
நீக்குசைவம் அசைவம் என்று சொல்வதால் நம்மவர்களின் கல்யாணத்தில் எதற்கு சைவம் அல்லாதது என்ற அர்த்தத்தில் எழுதினேன்..
பதிலளிநீக்குஇனி அதைப் பற்றி சிந்திப்பதற்கில்லை..
சரிதான்!
நீக்குஎனக்கு எப்பொழுதுமே பிரியாணி பிடிக்காது.
பதிலளிநீக்குமுன்பு அபுதாபியில் வெள்ளிக்கிழமை சாதா சாப்பாடு தேடி அலைவேன் காரணம் எங்கும் பிரியாணி.
ஆ... பிரியாணி பிடிக்காதா? ஆச்சர்யம்தான் ஜி.
நீக்கு@ நெல்லை..
பதிலளிநீக்கு/// ராஜஸ்தான் ஆடு ஒல்லியா நீளமாக நாய் போல இருக்குமாம்..///
அதுவும்
அந்த ஆடு மேமே ன்னு கத்தாமல் வேற மாதிரி கத்தியிருக்குது..
கடவுளின் ஓரவஞ்சனை..
ஜீ.... ஜீ..... என்று கத்தியிருக்குமோ!
நீக்குசங்க காலத்திலேயே பிரியாணி, மசாலா இல்லாமல் கறிச்சோறு ஆக இருந்தது.
பதிலளிநீக்குhttps://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2017/dec/24/%E0%AE%8A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-2832023.html
https://www.facebook.com/TASTYSAMAYAL/photos/a.775541772492881/1112555235458198/?type=3
Jayakumar
நன்றி JKC ஸார்...
நீக்குபுத்தக சந்தைகளில்/கண்காட்சிகளில் சமையல் புத்தகங்கள்தான் அதிகம் விற்கும் என்பார்கள் அதைப்போல இன்று கருத்து கும்மி பிரமாதமாக இருக்கிறதே..? பேஷ் பேஷ் ரொம்ப நன்னாயிருக்கு..
பதிலளிநீக்குஆம். என்றும் ஹாட் சேல்ஸ்.
நீக்குஹோட்டலுக்குச் சென்றால் என் சாய்ஸ்: காலை டிபன் என்றால் இட்லி, பொங்கல். வெகு அபூர்வமாக பூரி மசால்.
பதிலளிநீக்குலன்ச் என்றால் மினி மீல்ஸ். ஃபுல் மீல்ஸ் சாப்பிட முடியாது. அது சரி முருகன் இட்லி கடை, பாக சாலா போன்ற உணவகங்களில் சாப்பாட்டிற்கு நெய் ஊற்றுவதில்லையே? நெய் வேண்டுமென்றால் எக்ஸ்ட்ரா பே பண்ண வேண்டுமாம்.
ஈவ்னிங்க் ஸ்னாக்ஸ் என்றால் பஜ்ஜி அல்லது சாபுதானா வடை.
இரவு உணவு என்றால் வட இந்திய உணவு பெரும்பாலும் குல்சா. சைட் டிஷ் எது வேண்டுமானாலும் இருக்கலாம். நவரத்தின குருமா அல்லது கோஃப்தா கறி விருப்பம்.
தென்னிந்திய உணவு என்றால் ரவா தோசைக்குத்தான் முதலிடம். அடுத்து 16 இட்லிஸ், மைசூர் மசாலா தோசா.
சாட் ஐட்டம்களில் முதலிடத்தில் பேல் பூரி, அடுத்து க்ச்சோடி, ரகடா பேட்டீஸ், டோக்ளா(ஐ ஜஸ்ட் லவ் இட்), தயி பூரி. கடைசியில் ஸ்வீட் லஸ்ஸி.
பேக்கரி ஐட்டம்களில் தில் பசந்த், சாக்லேட் ஐஸ்க்ரீம், ப்ளாக் ஃபாரஸ்ட் ஐஸ்க்ரீம்
ஐஸ்க்ரீம்களில் பிஸ்தா, ஃபலூடா. போதுமா..?
பிடிக்காதது பிசைந்த சாத வகைகள். அதனால் பிரியாணியும் அத்தனை பிடிக்காது.
மேலே குறிப்பிட்டவற்றில் பேக்கரி ஐட்டம்கள், ஐஸ்க்ரீம் தவிர எல்லாம் செய்யவும் தெரியும்.
வித்தியாசமான மெனுவாய் இருக்கிறது. ஆனால் சரிதான், வீட்டில் செய்ய முடியாததைதான் பெரும்பாலும் எல்லோரும் விரும்புவோம். ஆனால் சாபுதானா எல்லாமா?
நீக்குமிக அதிக பின்னூட்டங்கள் வாங்கிய பதிவு இதுவாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.
பதிலளிநீக்குஇல்லை பானு அக்கா.. பின்னூட்டங்கள் 250 ஐத் தாண்டிய பதிவுகள் எல்லாம் உண்டு.
நீக்குஅசைவ உணவு சமைக்கும் முறையையும் எழுதியனுப்பலாம் என்றால் திங்கள் பதிவுக்கு நிறைய கிடைக்குமோ?
பதிலளிநீக்குஅப்படி எதுவும் யோசனை இல்லை பானு அக்கா.
நீக்குநல்ல ப்ரியாமணி புராணம். :)
பதிலளிநீக்குஎப்பவும் சைவ உணவுதான் என்னால் சாப்பிட முடியும்.
பேப்பர் தோசை பிடித்தமானது. கூம்பு நெய் தோசையும் . இவை இல்லாத இடத்து நாண் எடுப்பேன்.
நன்றி மாதேவி.
நீக்குநான் ஓட்டலுக்குப் போனால் பெரும்பாலும் இட்லி/சாம்பார் அதிலும் மினி இட்லி சாம்பார் அல்லது சாம்பார் வடை. பொங்கல் எல்லாம் ரொம்பவேஹெவியா இருக்கும் என்பதால் லைட்டான உணவு வகைகளே தேர்ந்தெடுப்பேன். வெறும் தோசை அல்லது ஆனியன் ரவா. ஆனியன் ரவா திருநெல்வேலியில் ஜானகிராமன் ஓட்டலில் பண்ணறாப்போல் எங்கேயும் வராது. எங்க வீட்டிலேயும் ஆனியன் ரவா அடிக்கடி பண்ணுவேன். வெங்காயம் ரொம்ப மெலிதாக நறுக்கிக் கொண்டு ரவா தோசைக்கும் நல்லா நீர்க்கக் கரைச்சுக்கணும். தோசை நன்றாக வரும். ரவை கொஞ்சம் தூக்கலாகவே இருக்கட்டும்.
பதிலளிநீக்குஇங்கு மினி இட்லி சாம்பாரில் ரொம்ப நெய் போடுகிறார்கள். திகட்டுகிறது. திருநெல்வேலி பக்கம் போனால் அந்த ஹோட்டல் இருக்கான்னு பார்க்கிறேன்! வீட்டில் ரவா தோசை செய்து சரியாய் வருவது 50-50
நீக்குஜானகிராமன் ஓட்டலைத் திருநெல்வேலியில் தேடப் போறீங்களா? சரியாப் போச்சு. ரொம்பவே பிரபலமான போர்டிங் அன்ட் லாட்ஜிங் ஓட்டல். எனக்குத் தெரிந்து 20 வருடங்கள் போல் ஆகிறது.
நீக்கு