புதன், 29 நவம்பர், 2023

படைப்பாற்றல் - ஆரம்ப நாட்கள்.

 

பானுமதி வெங்கடேஸ்வரன் : 

சிறு வயதில் தெருவில் கிரிக்கெட், கிட்டிப்புள் போன்றவை விளையாடி அக்கம்,பக்கத்தினருக்கு டாமேஜ் ஏற்படுத்தியது உண்டா?

டாமேஜ் ஏற்படுத்தாமல் ஆடியதுண்டு.

$ ஒ, உண்டு ஒரு மூங்கில் குச்சி. முனையில் ஒரு divider. பின் புறம் சில கோழி இறகுகள்.  பம்பிளிமாஸ் மரத்தை நோக்கி எறிந்து பழகிக்கொண்டிருந்த. போது குறுக்கே வந்தவருக்கு இன்னும் நினைவிருக்கலாம். காலில் குத்திய இடத்தில் கரிப்பொடியை அழுத்தி விட்டு...மறந்தே போய் விட்டோம்.

# உண்டு. ஆனால் சொற்பமாக. யாருக்கும் இடைஞ்சல் அதிகம் செய்தது கிடையாது.

& நான் பெரும்பாலும் வீட்டுக்குள் விளையாடும் விளையாட்டுகளில்தான் படித்த காலங்களில் கவனம் செலுத்தினேன். 

நான்காம் வகுப்பு படிக்கும் வரையில், என்னை தெருவில் ஆடும் மற்ற பையன்கள், ஆட்டத்திற்கு சேர்த்துக்கொள்ளமாட்டார்கள். அப்படியே சேர்த்துக்கொண்டாலும், "உ ச & ஊ மா" என்று பெயர் இட்டுவிடுவார்கள். உ(ஒ?)ப்புக்குச் சப்பாணி & ஊருக்கு மாங்கொட்டை! கிரிக்கெட்டில் பத்தோடு பதினொன்று & அத்தோடு இது ஒன்று. உ ச & ஊ மா பையன்களுக்கு batting, bowling, wicket keeping எல்லாம் கிடையாது. long on / long off பொசிஷனில் நின்றுகொண்டு, பந்து பொறுக்கிப் போடும் வேலை மட்டுமே. கிட்டிப்புள் ஆட்டத்திலும் அதே main ரோல் கிடையாது. 

அதே வகையில் பாதிக்கப்பட்ட இன்னொரு பையன் எங்கள் தெருவில் இருந்தான் - முத்து - என்னை விட size குறைவான, வயது குறைவான பையன். மாலை மூன்று மணி முதல் நான்கு மணி வரை - பெரிய பையன்கள் ஆட தெருவிற்கு வருவதற்கு முன்பு அவன் அவனுடைய வீட்டில் இருந்த, 'ஆகி வந்த' கிட்டிப்புள் செட் எடுத்துக்கொண்டு வந்து, என்னிடம் "வெளாட வரியா?" என்று மழலைக் குரலில் கேட்பான். நான் உடனே சம்மதித்து அவனோடு விளையாடுவேன். ஒரு தடவை நான் கிட்டியால் அடித்த புள் தரையில் பட்டு எழும்பி அவன் நெற்றியில் பட்டு அவனுக்கு சிறு காயம் ஏற்பட்டது. அழுதுகொண்டே வீட்டிற்குள் ஓடினான். பிறகு நெற்றியில் ஒரு கட்டுப் போட்டுக்கொண்டு திரும்ப வந்தான். ஆனால் எனக்கு என்னவோ பயம் விடவில்லை. அன்றிலிருந்து ஆபத்தான தெரு விளையாட்டுகளைத் தவிர்க்க ஆரம்பித்துவிட்டேன்.  

= = = = = = = = = =

KGG பக்கம். 

பன்னிரெண்டு வயதுக்குப் பிறகு, படம் வரைவதில் ஆர்வம் வந்தது. பிள்ளையார் படம் பார்த்து வரைய ஆரம்பித்தேன். காது, தந்தம், தும்பிக்கை  பார்த்து, நான் வரைந்தது பிள்ளையார்தான் என்று ஓரளவுக்கு என் வீட்டில் இருந்தவர்கள் ஒப்புக்கொண்டனர். 


பிறகு ஆனந்த விகடன் புத்தகத்தில் வரும் கார்ட்டூன்கள் பார்த்து, நேரு, காந்தி, இராஜாஜி, காமராஜ், லால் பகதூர் சாஸ்த்ரி முகங்கள் வரையக் கற்றுக் கொண்டேன். 


அதற்குப் பிறகு, ஒரு குறுக்கு வழி கண்டுபிடித்தேன். டைப் ரைட்டிங் பயிற்சி வகுப்பில் சேர்ந்திருந்த என்னுடைய அண்ணன், பயிற்சி முடிந்து  வீட்டுக்கு, வரும்போது, உபயோகப்படுத்திய கார்பன் தாள்கள் அடிக்கடி கொண்டு வருவார். அவைகளை, எனக்கும், என்னுடைய தம்பிக்கும், சரி சமமாக பிரித்துக் கொடுப்பார். 

நாங்கள் அதை என்ன செய்வோம் என்று சொல்கிறேன். வீட்டிற்கு வருகின்ற 'பொம்மை' போன்ற சினிமா பத்திரிக்கைகளில் உள்ள பெரிய அளவு சிவாஜி, எம்ஜியார் படங்களின் கீழே ஒரு பேப்பர் (முந்தைய வருடத்து நோட்டுப் புத்தகத்திலிடுந்து கிழித்து எடுக்கப்பட்ட தாள்கள்) வைப்போம், அதன் மீது கார்பன் தாள் வைத்து சினிமா நடிகர்கள் படங்களின் அவுட்லைன் மட்டும் காப்பி  செய்துகொள்வோம். 

பிறகு அந்தப் படங்களுக்கு கலர் பென்சில், வாட்டர் கலர் எல்லாம் உபயோகப்படுத்தி மெருகூட்டுவோம். 

நண்பர்களிடம் அவற்றைக் காட்டி, முழுவதும் நாங்களே பார்த்து வரைந்தது என்று பெருமை அடித்துக்கொள்வோம். 

JTS சேர்ந்த பிறகுதான் என்னுடைய படைப்பாற்றல் திறமை வேறு ரூபங்கள் கண்டது. 

அது பற்றி அடுத்த வாரம் எழுதுகிறேன். 

= = = = = = = = =

அப்பாதுரை பக்கம் : 

வீடு பேரு. 

ஜான், கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் வீட்டு வசதி வாரிய முன்னாள் அதிகாரி. 2019ல் வேலையிலிருந்து ஓய்வு பெறவேண்டும் என்ற கட்டாயத்திலும் தன் செலவுக்கு அரசாங்க ஓய்வூதியம் போதாது என்ற அவசியத்திலும் ஒரு காரியம் செய்தார். தன் மனைவி பெயரில் இருந்த வீட்டை ஏர்பிஎன்பி வழியாக 2018 ஜூன் மாதம் தின வாடகைக்குக் கொடுக்கத் தொடங்கினார்.  வார இறுதி தவிர பிற நாட்களில் தின வாடகைக்கு எடுத்த எலிசபெத் என்ற பெண்மணி  அவரிடம் மாத வாடகைக்குக் கேட்க, ஏபிபிக்கு மாத வாடகை கமிஷன் தரவிரும்பாத, அதே நேரம் வார இறுதியில் ஏபிபி வழியாக வாடகை சம்பாதிப்பதையும் இழக்க விரும்பாத ஜான் சாமர்த்தியமாக (!) ஒரு வேலை செய்தார். மனைவி பெயரில் மாத வாடகைக்கு எலிசபெத்திடம் ஒப்பந்தம் செய்தார்.  அதே வீட்டைத் தன் பெயரில் வார இறுதிக்கு மட்டும் ஒப்பந்தம் செய்து ஏபிபி வழியாக வாடகைக்கு விட்டார்.  சில வார இறுதி நாட்களில் அங்கேயே தங்கிய எலிசபெத் தட்டாமல் மனைவி பெயருக்கும் தன் பெயருக்கும் வாடகை முறையே கூகில் பே மற்றும் ஏபிபி வழியாக அனுப்பிவிட்டதால் ஜான் சிக்கலில்லாமல் சந்தோஷமாக இருந்தார். எலிசபெத் வடிவத்தில் வந்தது கலிசபெத் என்பது தெரியாமல்.

2022 ஜூன் மாதம் வரை தவறாமல் வாடகை தந்த எலிசபெத் இன்னும் சில பின்புலக் காரியங்களையும் தவறாமல் செய்தார். கடைசியாக 2022 ஜூன் முப்பதாம் தேதி கலிபோர்னியா நேரம் மாலை நாலு மணிக்கு, ஜானைக் கூப்பிட்டார். இனி வீட்டு வாடகை தர முடியாதென்றும் உடனடியாக வீட்டை முறையாகத் தன் பெயருக்கு எழுதித்தர வேண்டும் என்றும் சொன்னார்.  

இதென்ன உட்டாலங்கடியாக இருக்கிறதே என்று அதிர்ந்து வியந்த ஜான், எலிசபெத்தை உடனடியாக வீட்டை விட்டு வெளியேறச் சொன்னார்.  வெளியேறாவிட்டால் அதன் விளைவுகளுக்குத் தான் பொறுப்பல்ல என்றார்.  வீட்டு வசதி வாரியத்திலும் காவல் துறையிலும் தனக்கு நிறைய அதிகாரிகள் இருப்பதாகச் சொன்னார்.

எலிசபெத் பலமாகச் சிரித்தார். பிறகு வணக்கம் சொல்லிவிட்டு பேசினார். இரண்டு வருடங்களாக ஜானைப் பற்றியும் வீட்டைப் பற்றியும் நிறைய ஆராய்ச்சி செய்து பின்வரும் விவரங்களைப் புட்டு வைத்தார்:

- ஜானின் மனைவி 2019ல் இறந்தார்

- இறந்தவர் பெயரிலேயே வீட்டையும் வங்கிக் கணக்கையும் வைத்து சொத்து வரி, வாடகை வரி இரண்டும் கட்டாமல் ஜான் டபாய்க்கிறார்

- வரி இலாகாவுக்குத் தெரிந்தால் சொத்து வரி வருமான வரி வாரிசு வரி என்று வரிக்குதிரை லெவலுக்கு ஜானை இழுத்து சிறையில் 10 வருடமாவது வரி ஏய்ப்பு குற்றத்தில் தள்ளுவார்கள்

- வாடகை வீட்டில் ஆங்காங்கே அச்சு மற்றும் பூஞ்சை காளான் பூத்து அதை எத்தனை சொல்லியும் தீர்க்காமல் இருந்ததால் எலிசபெத் உடல் நலம் கெட்டு கோவிட் ஜூரம் வர ஜான் காரணமானார்

- உயிருக்கு அஞ்சிய எலிசபெத் மருத்துவர் மற்றும் உறவினர் அறிவுரையின்படி நாற்பதாயிரம் டாலர் செலவழித்து முழு வீட்டை மராமத்து செய்ததாலும், நாற்பத்தியெட்டு மாதங்கள் தவறாமல் வாடகை கட்டியதாலும், கலிபோர்னியா வாடகைக் கட்டுப்பாட்டு சட்டத்தின்படி  ஜான் வீட்டில் எலிசபெத்துக்கு உரிமைப் பங்கு கிடைத்துவிட்டது.

"இந்த ஆய்வு போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா?" என்றார் எலிசபெத். மறுமுனையில் கப்சிப் என்றாகிப் போன ஜான் மூச்சு விடுகிறார் என்று புரிந்து கொண்ட எலிசபெத் தொடர்ந்தார். "உங்க கஷ்டம் எனக்குப் புரியுது ஜான். அடுத்தவங்க கஷ்டப் படுறதைப் பாத்தா எனக்கு துக்கமா வரும்.. தாங்க முடியாதுங்க" என்றார்.

"உன்னை என்ன செய்கிறேன் பார்" என்று ஆத்திரம் பொங்கப் பொருமினார் ஜான். 

"ஒன்றும் செய்ய முடியாது. வீட்டை என் பேருக்கு நானே மாற்றுவதற்கு முன் நீங்களே மாற்றினால் பத்தாயிரம் டாலர் தருவேன். அதை விட்டு கோர்ட் கேஸ் என்று போனால் மானம் போய் பணமும் போய் ஜெயிலுக்குப் போகணும் ஜான் டோய்" என்றார் சற்றும் கலங்காத எலிசபெத்.

ஒரு வருடமாக வழக்கு கலிபோர்னியா கோர்ட்டில் சிரிப்பாய்ச் சிரிக்கிறது.  இறந்தவர் பெயரில் வரி ஏய்ப்பு செய்த ஜான் பற்றி டிவியில் நிறைய காமெடி. அதைத் தவிர ஜானுக்கு வருவாய்த்துறை நெருக்கடியினால் இரண்டு முறை மாரடைப்பு வந்துவிட்டது. ஆயுசு கெட்டி ஜெயிலுக்கு போவார் என்கிறார்கள்.   இடையே சென்ற வாரம் புதுத்தகவல் இடியாக வெளி வந்திருக்கிறது.

ஜான் பற்றிய விவரங்களை அறிந்த எலிசபெத் கலிபோர்னியா வருமான வரி, லாஸ் ஏஞ்சல்ஸ் கீழ் நீதிமன்றம் மற்றும் வீட்டு வாரிய அதிகாரிகளுடன் ரகசியக் கூட்டு சேர்ந்து இந்தத் திட்டம் போட்டார் என்றும், கோவிட் வந்ததாகவும் நாற்பதாயிரம் செலவு செய்ததாகவும் தாக்கல் செய்திருப்பது பொய் என்றும், ஆதாரங்களுடன் (வாட்சப், இமெயில்) வெளியிட்டிருக்கிறது உள்ளூர் தினசரியான பர்பேங்க் டைம்ஸ்.  எலிசபெத் கைது. அல்லோல கல்லோலம்.

நிற்க, வருமானவரி இலாகா கணக்குப்படி யார் பெயரிலும் இல்லாத,  கலிபோர்னியா அரசு எடுத்துக்கொண்ட, ஜான் வீட்டின் மதிப்பு ஆறு மிலியன் டாலராம். 

இரண்டு முடிவுகளை எதிர்பார்க்கலாம்:

- கலிபோர்னியா ஊழல் மலிவில் இந்த விஷயம் குட்டை குழம்பி நாளடைவில் எங்கேயோ போய்விடும்

- ஜான் வீடு யாருக்கும் கிடைக்கப் போவதில்லை.

= = = = = = =

32 கருத்துகள்:

  1. தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு..

    தமிழ் வாழ்க

    பதிலளிநீக்கு
  2. கற்பக கணபதி
    கனிவுடன் காக்க..
    முத்துக்குமரன்
    முன்னின்று காக்க..
    தையல் நாயகி
    தயவுடன் காக்க..
    வைத்திய நாதன்
    வந்தெதிர் காக்க..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இறைவன்
      நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்.

      நீக்கு
  3. இது வரையிலும் யாரையம் காணவில்லை.

    எனது அம்மா வழி தாத்தாவுடன் கொட்டிப்புள் விளையாடியிருக்கிறேன். அந்தக் காலத்தில் வீடுகளுக்கு கண்ணாடி ஜன்னல் கிடையாது. கண்ணாடி உடையும் என்ற பயம் எழுந்ததில்லை. என்ன சமயத்தில் புள் ஓடு மேல் போய் உட்கார்ந்து கொள்ளும்.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புள் ஓட்டில் போய் உட்கார்ந்தால், உடனே - கிட்டிப் புள் ஆடும் எதிர் அணியினர், " தொற்றினான் புள் என் புள் " என்று கூவு(று)வார்கள். ஒருவன் ஓட்டில் ஏறி போய், அந்தப் புள்ளை தட்டிவிட்டு, அதை எதிர் அணி ஆள் catch பிடித்துவிட்டால் - புள்ளை ஓட்டில் அடித்துவிட்டவர் ஆட்டமிழந்து வெளியேற வேண்டும்!

      நீக்கு
  4. நிறைய கிட்டிப்புள் (கில்லி ?), கிரிக்கெட் விளையாடியிருக்கிறேன். பேந்தா விட்டுட்டிங்களே ?

    தனக்கும் அடுத்தவருக்கும் டாமேஜ் இதிலெல்லாம் சகஜம். அடி கூட வாங்கியிருக்கிறேன். ஹெட் லெட்டர் பாருங்க. நியூ காலநில இருந்தப்ப ரஞ்சநா நாச்சியார் மாதிரி ஒருத்தர் வந்து எங்க எல்லாரும் தலா ஒரு அறை விடடார் - அவங்க வீட்டு நாய் மேலே கில்லி அடிச்சதுக்காக.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. :)) நாய் மேலே அடிச்சதுக்கே இந்த கதி என்றால் .. .. ..

      நீக்கு
    2. நாய் மேல அடிச்சதுக்கே இந்த கதி என்றால் ..
      : <)

      நீக்கு
  5. கிட்டிப்புள் நிறைய விளையாடியிருக்கிறேன், வள்ளியூரில் இருந்தப்ப. பசங்களோடுதான்! ஏட்டிக்குப் போட்டியாக நின்றதுண்டு. அந்த இரு வருடங்கள்தான்...அதன் பின் மற்றொரு பாட்டி வீட்டுக்குப் போய்விட்டதால் விளையாட்டு போச்சு பாடப்புத்தகம் வந்தது டும் டும் டும்...

    கீதா

    பதிலளிநீக்கு
  6. கௌ அண்ணா, நல்லாதானே வரைஞ்சிருக்கீங்க!! இப்ப வரைஞ்சதா அப்ப வரைஞ்சதா இங்கு கொடுத்திருப்பது!

    கௌ அண்ணா, காந்தி ரொம்ப ஒல்லியா இருக்காரேன்னு நீங்க அவருக்கு நிறைய சாப்பாடு கொடுத்து குண்டாக்கிட்டீங்களோ!!!!!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்போ வரைந்ததை அப்படியே நினைவில் கொண்டு வந்து, நேற்று வரைந்தது.

      நீக்கு
  7. நானும்கார்பன் பேப்பர் வைத்து வரைந்து கலர் கொடுத்திருக்கிறேன் பிடித்த விஷயம்.

    கீதா

    பதிலளிநீக்கு
  8. அப்பாதுரை ஜி பக்கம் - அட! வீட்டுக்கு வீடு வாசப்படி!

    கீதா

    பதிலளிநீக்கு
  9. கிட்டிப் புல்லும், கிரிக்கெட்டும் சகோதரர்களுடன் கூடப் பிறந்ததில் ,சிறுவயது காலத்தில்.

    Kgg படங்கள் நன்றாக இருக்கின்றன.

    ஜானின் அளவு மீறிய ஆசையால் வந்த கேடு.

    பதிலளிநீக்கு
  10. கேள்விக்கு பதில்கள் அருமை.

    KGG சார் மலரும் நினைவுகளும் அப்போது வரைந்த ஓவியங்களும்
    நன்றாக இருக்கிறது. காந்திஜி மட்டும் கொஞ்சம் குண்டாக இருக்கிறார் என்று நினைத்தேன். கீதாவும் சொல்லிவிட்டார்.

    ஜான் வீடு கடைசியில் யாருக்கும் கிடைக்காது என்று சொல்லி விட்டாரே அப்பாதுரை சார்.

    ஏமாற்றுபவர்கள் ஏமாந்துதான் போக வேண்டும் என்று தெரிகிறது.

    பதிலளிநீக்கு
  11. இப்போதுள்ள குழந்தைகள் தெருவில் ஆடி ஓடி விளையாடுவது குறைந்து, வீட்டுக்குள் கணினியில் கவிழ்ந்து கிடக்கிறது.

    பதிலளிநீக்கு
  12. .. ஜான் வீடு யாருக்கும் கிடைக்கப் போவதில்லை.//

    ஓய்வூதியத்தில வாழ கத்துக்கணும்
    ஓவரா டாலர்தான் வேணும்னா
    உள்ளே போயிரத் தயாராயிரணும்...

    பதிலளிநீக்கு
  13. கோட்டோவியங்கள் மிக அழகு! ஒரு சில கோடுகளிலேயே பெரியவர்களின் முகங்களை அழகாக வெளிக்கொண்டு வந்திருக்கிறீர்கள்! வாழ்த்துக்கள் சகோதரர் கெளதமன்!!

    பதிலளிநீக்கு
  14. அப்பாதுரை அவர்களது பக்கம் வழக்கம் போல..

    உலக நீதி அதன் வேலையைச் செய்யும்..

    பதிலளிநீக்கு
  15. இந்தத் தெரு விளையாட்டுகள் எதையும் விளையாடிதில்லை..

    அப்போ,
    அந்தத் தெரு விளையாட்டு?.

    பதிலளிநீக்கு
  16. நேற்றைய பதிவின் கருத்துகளுக்கு பதில் அளித்துள்ளேன்..

    மடை மாற்றி விடவும்..

    நன்றி கௌதம் ஜி....

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!