கோவர்தன் சென்ற நாங்கள், முகாரவிந்த் இருக்கும் கோவிலை நோக்கிச் சென்றோம். அங்கு முதலில் தென்னிந்தியாவைச் சேர்ந்தவர்களால் நிறுவப்பட்ட லக்ஷ்மி நாராயணர் கோவிலுக்குச் சென்றோம். அங்கு லக்ஷ்மி நாராயணரை வணங்கிவிட்டு பிறகு முகாரவிந்த் கோவிலை நோக்கி நடந்தோம்.
லக்ஷ்மி நாராயணர் கோவிலே மிகப் பழமையானதாகவும், கோசாலையுடனும் இருக்கிறது. கோவிலில் எடுத்த படங்கள் கீழே.
மூலவர் லக்ஷ்மிநாராயணர்
முதலில் இந்தக் கோவிலுக்குச் சென்று லக்ஷ்மி நாராயணரை தரிசனம் செய்தோம். தமிழக பாணி அர்ச்சகர் இருக்கும் கோவில் இது.
அங்கிருந்த கோசாலா
தரிசனத்திற்குப் பிறகு முகாரவிந்த் கோவில் அமைந்துள்ள பகுதியை நோக்கிச் சென்றோம். இந்தக் கோவில், மானச கங்கா என்ற ஏரியின் (பெரிய குளத்தின்) வட கரையில் உள்ளது.
கோவிலுக்குச் செல்லும் வழியில் நுழைவாயில். கண்ணன் கோவர்தன கிரியைத் தூக்கியிருப்பது போல
மானச கங்கையிலிருந்து குழாய்கள் வழியாக நீர் வரும்படிச் செய்திருக்கிறார்கள். பக்தர்கள் பத்திரமாக படியில் இறங்கி, அந்த நீரைத் தலையில் ப்ரோட்சித்துக்கொள்ளலாம். பிறகு படியேறி, முகாரவிந்த் சன்னிதிக்குச் செல்லலாம்.
இந்தச் சன்னிதி நான்கு புறமும் வாசல்களைக் கொண்டுள்ளது (அதில் இரண்டுதான் திறந்திருந்தன). சன்னிதியை நான்கு முறை வலம் வந்தோம்.
இந்த வளாகத்திலேயே பல சன்னிதிகள் இருக்கின்றன. அவற்றிற்கு நாங்கள் செல்லவில்லை (கோகுலம் நந்தபவனில் இருந்த சன்னிதிகள் போலவே. அவற்றிக்கு முக்கியத்துவம் இல்லை என்பதால்)
கோவர்த்தனத்தில் தரிசனம் செய்த பிறகு, வந்த ஆட்டோவிலேயே பேருந்து நிறுத்தும் இட த்திற்குச் சென்று, 7 மணி சுமாருக்கு 22 கிமீ தூரமுள்ள மதுராவை நோக்கிப் பயணித்தோம். 7 ¾ க்கு மதுராவை அடைந்தோம். பேருந்து நிறுத்தத்திலிருந்து கையில் எதுவும் கொண்டுபோகாமல் (பணம் தவிர. மொபைலை ஒப்படைப்பது, திரும்ப வாங்கிக்கொள்வது கடினம்) கோவிலை நோக்கி நடந்தோம். சுமார் 1 கிமீ தூரம் இருக்கலாம் (அதில் மூன்றில் ஒரு பகுதி மெயின் சாலை. பிறகு மதுரா கோவிலை நோக்கிச் செல்லும் சாலை. அங்கு இருந்த பல தனித் தனி வீடுகளைக் கண்டோம்.). கோவில் நுழைவாயிலில் செக்யூரிட்டி செக் உண்டு. அதைத் தாண்டியதும் இது புறம் பெரும் வெட்டவெளியில் ரெஸ்ட்ரூம் கட்டியிருக்கின்றார்கள். நாங்கள் நேராக கோவிலை நோக்கி நடந்து உள் வளாகத்துள் நுழைந்து முதலில் ராதா கிருஷ்ணா கோவிலுக்குப் படியேறிச் சென்றோம்.
மதுரா – ஜன்மஸ்தான் – ஸ்ரீகிருஷ்ண ஜென்மபூமி
உத்திரப்பிரதேசத்தில், மதுரா என்ற இடத்தில் அமைந்துள்ள கோவில் இது. இங்குதான் ஸ்ரீகிருஷ்ணர் துவாபர யுகத்தில் பிறந்தார் (இதிஹாசங்களின் படி). இங்கு 2500 ஆண்டுகளுக்கு முன்பே ஸ்ரீகிருஷ்ணர் கோவில் இருந்திருக்கின்றது. இது கம்சன் இருந்த தலைநகரம். இந்த இட த்தில்தான் அரண்மனை ஜெயில் இருந்திருந்த து. பாரத மக்களுக்கு முக்கியமான இந்த இட த்தில் இருந்த கோவில் இரண்டு முறை முஸ்லீம் அரசர்களால் அழிக்கப்பட்டிருக்கிறது. அதன் இடிபாடுகளின் மீது ஔரங்கசீப் மசூதியைக் கட்டினான். சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்திலேயே அதன் அருகில் இருந்த இடங்கள் வாங்கப்பட்டு, பிறகு பெரிய கோவில் கட்டப்பட்ட து. உணர்வு பூர்வமாக, எப்படி அயோத்தி, வாரணாசி போன்ற பல இந்துக்கோவில்கள் முஸ்லீம் அரசர்களால் அழிக்கப்பட்டு அங்கு மசூதி கட்டப்பட்டனவோ அதே போன்று மதுராவிலும் கட்டப்பட்டிருக்கிறது. இதைத்தான் மூன்று முக்கியமான இடங்களுக்கான ஹிந்துக்களின் உரிமையைப் பெறுவோம் என்று பல அரசியல் தலைவர்கள் சொல்லியிருக்கின்றனர்.
அடிப்படை வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதாலும், முஸ்லீம் பயங்கரவாதிகளால் ஹிந்துக் கோவிலில் பயங்கரவாதச் செயல்கள் நடைபெற்றுவிடக் கூடாது என்பதற்காக கடுமையான பாதுகாப்பு மதுரா ஜென்மஸ்தானில் இருக்கிறது. அதனால்தான் அந்த வளாகத்திற்குச் செல்ஃபோன் போன்றவை அனுமதிக்கப்படுவதில்லை, நிறைய காவலர்கள் பாதுகாத்துக்கொண்டிருப்பர்.
நான் இரண்டு மூன்று முறை மதுரா ஜென்மஸ்தானுக்குச் சென்றிருக்கிறேன். அங்கு தற்போது ஒரு கிருஷ்ணர் கோவிலும், ஸ்ரீகிருஷ்ணரின் ஜென்மஸ்தான் அமைந்துள்ள இடத்தில் ஜெயில் போன்று கட்டப்பட்ட கட்டிட த்தில் அவருடைய சன்னிதியும் அமைந்துள்ளன. முதலில் படிகள் ஏறி ராதா கிருஷ்ணா கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்த பிறகு, வெளியே வந்து பக்கப் படிகளில் ஏறி, பிறகு சிறையைப் போன்று அமைக்கப்பட்டுள்ள பக்க வழியாகச் சென்று சிறை அறையைப் போன்றுள்ள இடத்தில் ஸ்ரீகிருஷ்ணனை வணங்கிவிட்டு அதே வரிசையில் வெளியே சென்றுவிடவேண்டும்.
அங்கு புகைப்படங்கள் எடுப்பது சாத்தியமில்லை. இருந்தாலும் என் மனக்கண்ணில் நான் பார்த்த இடங்கள் அப்படியே இருக்கின்றன. இணையத்தில் தேடி, அப்படியே இருக்கும் படங்களை மாத்திரம் இங்கு எடுத்தாண்டுள்ளேன். அதிலும் கர்பக்ரஹம், பிரதமர் மோடி இருக்கும் பட த்தில் அப்படியே உள்ளது (இணையத்தில் உள்ள மற்றப் படங்கள் உண்மைத்தன்மை இல்லாதவை).
இந்தக் கர்பக்ரஹத்தில்தான், ஒரு ஓரமாக (வரிசையைக் குலைக்காமல்) நாங்கள் எல்லோரும் நின்றுகொண்டு திருப்பாவையும், கண்ணன் சம்பந்தப்பட்ட பாசுரங்களும் சேவித்தோம். நான் சென்றிருந்த தடவைகளில் எல்லாம் 20 நிமிடங்களாவது அந்த கர்பக்ரஹத்தில் நிற்கும் பாக்கியம் கிடைத்தது. (எல்லாம் அவனருள். இல்லையென்றால் அங்கிருக்கும் காவலர்கள், போங்க போங்க என்று அனுப்பிவிடுவார்கள்). எங்கள் யாத்திரைக் குழுத் தலைவரிடம் தனிப்பட்ட குணாதிசயம் உண்டு. சன்னிதி தரிசனத்தின்போது அவசரப்படுத்த மாட்டார். இன்னொரு முறை சேவித்துவிட்டு வந்துவிடுகிறேன் என்றாலும் ஒன்றும் சொல்ல மாட்டார். தரிசனம் செய்வதால் தாமதம் ஆகிவிட்ட து என்று ஒரு நாளும் சொன்னதில்லை (அவருடன் பல்வேறு யாத்திரைகள் மேற்கொண்டிருக்கிறேன்). ஆனால் அதைத் தவிர, வெளியில் கடையில் இளநீர் சாப்பிடுகிறேன், பர்சேஸ் பண்ணுகிறேன் என்றால் அதை அனுமதிக்கமாட்டார், கோப்படுவார். இதனால் அடுத்த கோவிலின் தரிசனம் பாதிக்கப்படுமே என்று.
நாங்கள் 8 ½ யில் இருந்து 8 ¾ வரை கர்பக்ரஹத்தில் இருந்திருப்போம்.
கோவிலின் தோற்றம். இந்தப் படிகள் ஏறித்தான் ராதா கிருஷ்ணரையும் பிறகு ஜென்மஸ்தான் கர்பக்ரஹத்துக்குச் சென்றும் வணங்க வேண்டும். உண்மையில் பழைய கோவிலின் மீதுதான் அருகில் உள்ள மசூதி கட்டப்பட்டிருக்கிறது. (இதனை அவர்கள் உரிமை கொண்டாடுவதுதான் சோகம். அடுத்தவன் சொத்தைத் திருடிவிட்டு, அது தன்னிடம் இருப்பதால் அது தன்னுடையது என்று சொல்வதைப் போல)
கோவிலை ஒட்டிய மசூதி. அயோத்தி, காசி போன்று இங்கும் தொல்லியல்துறை ஆய்வு மேற்கொள்ளும்போது உச்ச நீதிமன்றம் வரை சென்று கடைசியில் இந்துக்கள் வசம் வரும்.
ஜென்மஸ்தான் செல்லும் வழி. இதே நிறத்தில்தான் (முதல் படம்) பார்க்க சிறை போன்றே கட்டியிருக்கிறார்கள்.
இதுதான் நான் சென்று வணங்கிய, ஸ்ரீகிருஷ்ணர் பிறந்த ஜென்மபூமி. அப்படியேதான் இருக்கிறது. இதன் எதிரே (வழியை விட்டுவிட்டு, 6 அடி தூரத்தில்) நாங்கள் (எங்களில் சிலர்) நின்றுகொண்டு பாசுரங்கள் சேவித்தோம்.
நுழைவாயிலுக்கு வரும் வழியும் குகை போன்று சிறை வடிவிலேயே இருக்கும்.
இதன் அருகிலேயே மியூசியம் இருக்கிறது என்கிறார்கள். ஜென்மஸ்தானில் கிமு 6ம் நூற்றாண்டைச் சேர்ந்த பொருட்கள் கிடைத்திருக்கிறதாம்.
இது ஜென்மஸ்தான் வளாகத்திலேயே, அருகில் உள்ள கோவிலில் இருக்கும் ராதா கிருஷ்ணர். இவரை வணங்கிய பிறகுதான் நாம் ஜென்மஸ்தானுக்குச் செல்கிறோம்.
ஜென்மஸ்தான் தரிசனத்திற்குப் பிறகு வெளியில் வந்து அங்கிருக்கும் கடைகளில் தண்ணீர் வாங்கிக்கொண்டு பிறகு வளாகத்தை விட்டு வெளியில் வந்தோம். இந்தத் தரிசனம் உணர்வுபூர்வமாக அமைந்தது.
எல்லோரும் பேருந்து நிறுத்தப்பட்டிருந்த இடத்திற்கு வந்து சேர்ந்தோம். எங்களை மாதிரி நிறைய பயணிகளை அங்கு பார்த்திருப்பார்கள். வளையல் கடை, குழந்தைகளுக்கான டிரஸ், ஜூஸ் என்று பல தள்ளுவண்டிக் கடைகள் இருந்தன. துளசி மாலைகள் விற்கும் கடைகளும் இருந்தன. அனைவரும் வருவதற்கு முன்பு வாங்க விருப்பப்பட்டவர்கள் வாங்கிக்கொண்டிருந்தனர்.
மதுராவிலிருந்து 9¼ க்குப் புறப்பட்டோம். சுமார் 17 கிமீ தூரமுள்ள விருந்தாவனத்திற்கு அரை மணி நேரத்தில் சென்றோம். அங்கு மிகப் பெரிய வளாகத்தில் எங்களுக்கான அறைகளை ஒதுக்கினார்கள். லக்கேஜ்களை இறக்கி, சிறிது தூரத்தில் இருந்த தங்குமிட த்திற்குக் கொண்டு செல்ல கொஞ்சம் சிரமாக இருந்தது. இரவு 10 ½ க்கு கலந்த சாதம் (சாம்பார் சாதம் மற்றும் தயிர் சாதம்) தந்தார்கள். காலை 6½ மணிக்கு காபி, பிறகு 7 மணிக்கு கோவில்களுக்குச் செல்வோம் என்று சொல்லியிருந்தார்கள்.
விருந்தாவனத்தைப் பற்றியும் அங்கு நாங்கள் சென்ற இடங்களையும் பற்றி வரும் வாரத்தில் காண்போம்.
(தொடரும்)
வணக்கம். பதிவு போல பதிவு நன்றாக உள்ளது. கோயில்களின் பராமரிப்பு சுத்தம் போதவில்லை என்று தோன்றுகிறது.
பதிலளிநீக்குJayakumar
அவ்வளவு நீளப் பதிவிற்கு இப்படி இரண்டே வரிகள் எழுதினால் எப்படி ஜெஸி ஸார்?
நீக்குஅதானே!
நீக்குவாங்க ஜெயகுமார் சார். வளாகம்ஓரளவு சுத்தமாகவே இருந்தது. ஜென்மஸ்தான் சன்னிதிக்குச் செல்லும் பாதையும் சுத்தமாகவே இருந்தன. கோவர்தனத்தில் பரவாயில்லை ரகம்.
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
பிரார்த்தனைக்கு நன்றி.
நீக்குஸ்ரீ லஷ்மி நாராயணர் கோயில் தென்னக பாணி இலச்சினை பொறித்த மாதிரி இருந்தது.
பதிலளிநீக்குஇதைப் பார்ததும் குழந்தை இராமர் மற்றும் முழு கோயில் திருப்பணியை தென்னக ஸ்தபதிகளிடம் விட்டிருக்கலாமே என்று தோன்றியது. இவ்வளவுக்கும் மாமல்ல்புரம், மதுரை மீனாட்சி கோயில் இங்கெல்லாம் வந்து பார்த்தவர் தாம் நம் இன்றைய பிரதமர். தென்னக சிற்பக்கலையின் தொடர்ச்சியாய் இன்றும் கற்றளி படைப்புக்கலைச் செல்வம் அழிந்து விடாமல் பேணிக்காக்கும்
ஸ்தபதிகள் இன்றும் மேனாடுகளில் திருக்கோயில்கள் நிர்மாணப் பணிகளை பேற்கொண்டு வருகினறனர். சிற்ப சாஸ்திரக் கல்வியை போதிக்குக் கல்லூரிகளும் தென்னகத்தில் பண்டைய கற்றளி உருவாக்கக் கல்வியையும் போதித்து வருகினறன. இருந்தும்
இந்தப் பகுதி கலைஞர்களின் திறமையை உபயோகித்துக்கொள்ள
வாய்ப்பில்லாமல் போயிருப்பது வருத்தம் அளிப்பதாகவே உள்ளது.
வாங்க ஜீவி சார். வட இந்தியப் பகுதிகளில் பெரும்பாலும் சிவப்பு நிற சோப் ஸ்டோன் என்று சொல்லப்படுபவை அதிகம். தென்னிந்திய கட்டிட பாணி வேறு, வட இந்திய மற்றும் பாரத்த்தின் வேறு பகுதிகளின் கட்டிடப் பாணி வேறு.
நீக்குஅயோத்தியிலும் நம் தென்னிந்திய பாணி கோவில் உண்டு. அது அம்மாஜி மந்திர் என அழைக்கப்படுகிறது. இன்னொரு யாத்திரைத் தொடரில் அதுபற்றி எழுதுகிறேன்.
நீக்குநமக்கு இறைவன் சன்னிதானம் என்ற உணர்வு வட இந்தியக் கோவில்களில் வருவதில்லை. சிவன் ஆலயம் என்றாலும் (இப்படி எழுதக் காரணம், மூலவர் லிங்கத் திருமேனி என்பதால்) நம் தென்னிந்தியக் கோவில்களில் நுழைந்தாலே பக்தி உணர்வு மிகும். காரணம் சொல்லத் தெரியவில்லை.
வணக்கம் நெல்லைத் தமிழர் சகோதரரே
பதிலளிநீக்குவழக்கம் போலவே இன்றைய கோவில்கள் தரிசன பதிவும் அருமை.. அழகான படங்கள், கோவில்களைப் பற்றிய விபரங்கள் அனைத்தையும் பார்த்து, படித்தறிந்து கொண்டேன்.
லக்ஷ்மி நாராயணர் கோவில், கோசாலை, மானச கங்கை, முகாரவிந்த் கோவில் அனைத்தையும் தரிசனம் செய்து கொண்டேன். இயற்கை அழகுடைய படங்களும் நன்றாக உள்ளது. இறைவன் லக்ஷ்மி நாராயணன் அழகு மனதை கவர்கிறது.
ஸ்ரீ கண்ணன் பிறந்த இடமான மதுராவை காணும் பாக்கியம் இன்று தங்களால் கிடைத்தது தங்களுக்கு இறைவனின் கர்பகிரஹத்தில் சிறிது நேரம் நின்று பிரபந்தம் பாடி சேவிக்கும் பாக்கியம் கிடைத்தது குறித்து மகிழ்ச்சி. அங்குள்ள படங்களும் மிக அழகாக இருக்கிறது.
மிகவும் பொறுமையாகவும், அழகாகவும், கோர்வையாகவும் நீங்கள் சென்றவிடங்களைப் பற்றியும், அங்கு பல கோவில்களை தரிசனம் செய்த முறைகளைப் பற்றியும் சொல்லி வருவதால் நாங்களும் உங்களுடன் பயணித்து வந்த உணர்வை எங்களுக்கு தருகிறது. அதற்கு உங்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் உங்களுடன் தொடர்ந்து விருந்தாவனம் வருகிறோம்.
நீங்கள் இந்தப் பதிவனைத்தையும் சேர்த்து ஒரு நூலாக்கினால், படிக்கும் அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக அமையும். உங்களுக்கு தெரியாததையா நான் சொல்லப்போகிறேன். இருப்பினும் என்க்குத் தோன்றியதை கூறுகிறேன். அருமையான பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலாஹரிஹரன் மேடம். நெடிய கருத்துக்கு நன்றி. நான் எழுதுகின்ற கோவில்களுக்குச் செல்லும்போது, அங்கிருக்கும் சிற்பத்தைப் பார்த்து, இந்தத்தொடர் நினைவுக்கு வந்தால் மிகவும் மகிழ்வேன்.
நீக்குஜென்மஸ்தானத்தில் சிறிது நேரம் நிற்கும் பாக்கியமே எனக்கு மிகுந்த மனநிறைவைக் கொடுத்தது.
அறிவார்ந்த தற்காலத்திலும் மொபைல்களை கோயில்களுக்குள் கொண்டு செல்லக் கூடாது என்பது பேறிழப்பாகும். நீங்கள் இந்தத்
பதிலளிநீக்குதடாவைப் பற்றிச் சொல்லும் பொழுதெல்லாம் ஒருவித வருத்தம்
நிறைந்த தொனி உங்கள் எழுத்துக்களில் ஒலிப்பதை நானும் உணர்வேன். நாம் தங்க்கும் இஅடத்தில் அவற்றை விட்டு விட்டு வந்தாலும் பாதுகாப்பிற்கு உத்திரவாதம் கிடையாது. என்று தான்
நம்மவர்கள் எல்லா நிலைகளிலும் சுதந்திரக் காற்றை சுவாசிப்போம் என்று தெரியவில்லை.
உண்மை.
நீக்குநிர்வாகம் அப்படிச் சொல்லுவதிலும் அர்த்தம் இருக்கிறது ஜீவி சார். பல கோவில்களில் மூலவர் தரிசனத்தின் சன்னிதியில் இருக்கும்போது, சிலரின் மொபைல்கள் அலறுவதும், அதைக் கைப்பையிலிருந்து தேடி எடுத்து அணைப்பதற்குள் நாராசமான ரிங் டோன்கள் அந்த இடத்தின் புனித்த்தை அசைத்துப் பார்க்கும்போதும் மொபைலுக்கு அனுமதி இல்லை என்பதை வரவேற்கிறேன். ஆனால் இந்த ரூல் எல்லோருக்கும் பொதுவாக இருப்பதில்லை என்பது கசப்புணர்வை உண்டாக்குகிறது.
நீக்குமுருகன் திருவருள் முன் நின்று காக்க...
பதிலளிநீக்குகந்தன் நம் மீது கருணைமழை பொழியட்டும்.
நீக்குஸ்ரீகிருஷ்ணரின் மகாபாரதச் சிற்பத்திற்கும் (அர்ஜூனனுக்கு தேர் சாரதியாய் பார்த்தசாரதி பெருமாள் வீற்றிருக்கும் அட்டகாசக் காட்சி)
பதிலளிநீக்குஊத்துகாடு காளிங்க நர்த்தன விக்கிரகத்துக்கும் என்றைக்குமே நம் மனத்தை விஸ்வரூபமெடுத்து ஆக்கிரமிக்கும் தனி சக்தி உண்டு.
மதுரா ஸ்ரீகிருஷ்ண ஜன்மஸ்தான் நுழைவாயில் காட்சியை மிகவும் ரசித்தேன். நன்றி.
நீங்கள் எழுதியிருக்கும் இரண்டு சிற்பங்களை, அது நடந்த இடத்தில், வரும் வாரங்களில் காண்போம்.
நீக்குஉண்மையில் பழைய கோவிலின் மீதுதான் அருகில் உள்ள மசூதி கட்டப்பட்டிருக்கிறது.
பதிலளிநீக்கு(இதனை அவர்கள் உரிமை கொண்டாடுவதுதான் சோகம். அடுத்தவன் சொத்தைத் திருடி விட்டு, அது தன்னிடம் இருப்பதால் அது தன்னுடையது என்று சொல்வதைப் போல)
திருச்செந்துறை கோயில் விவகாரத்திலும் இப்படித் தான் சொல்லப்படுகின்றது...
நிறைய கோவில்களில் இந்தகசப்பான நிகழ்வுகள் உண்டு.எழுதினால் வருத்தம்தான் மிஞ்சும் துரை செல்வராஜு சார்.
நீக்குசிறப்பான செய்திகள்...
பதிலளிநீக்குமகிழ்ச்சி..
மகிழ்ச்சி....
ஹரே கிருஷ்ணா..
வருகைக்கு நன்றி துரை செல்வராஜு சார்.
நீக்குஹிந்தி மொழியில் ஸ்ரீகிருஷ்ணர் புகழ் பாடும் பாசுரங்கள் (பாசுரங்க்கள் போலவானும் ஓசை நயமிக்க நாமாவளிகள்) உண்டா?
பதிலளிநீக்குகோயில் ஸ்தலங்க்களில் அவர்ககும் பாடுகிறார்களா? நம் கோயில்கள் போன்ற அர்ச்சனைகள், தேங்க்காய், புஷ்பம்,கற்பூரம், ஊதுபத்தி கொண்ட அர்ச்சனைத் தட்டுகள் , சங்கல்பம் செய்து கொள்ளல், தேங்காய் உடைத்து பிரசாதத் தட்டை நம்மிடம் தருதல்
போன்ற பூஜை நிய்மங்க்கள் இவையெலாம் உண்டா?
அவர்கள் பூஜை முறைகளைட் தெரிந்து கொள்ளும் ஆவலில் மனத்தில் எழுந்த கேள்விகள் இவை, நெல்லை.
மொபைலில் டைப் பண்ணுவதால் நிறைய எழுத்துப் பிழைகள். பொறுத்துக் கொள்க.
நீக்குநீங்கள் குறிப்பிட்டிருப்பவை, இரு மொழிகளில் (வடமொழி, தமிழ்) தென்னிந்தியக் கோவில்களில் நடைபெறுகிறது. வட இந்தியக் கோவில்களில் இது நடைபெறுவதில்லை. நாம் கொண்டுசெல்லும் இனிப்பை இறைவன் முன் காண்பித்து நம்மிடம் பகுதியைத் தந்துவிடுவார்கள்.
நீக்குதேவ மொழியான சமஸ்கிருதம் தென்னாட்டு கோயில்களில் வழிப்பாட்டு மந்திரங்களாய்
நீக்குகல்யாணம் போன்ற குடும்பம் சார்ந்த விசேஷங்களில் வழி வழியாய் உச்சரித்து
வழிபடுபது தொன்று தொட்ட குடும்ப வழக்கமாய் இருப்பது
மற்றும் ஆசிகள் பெறுவது அக்னியை முன்னிருத்தி சகல வழிபாடுகளும் நடப்பது போன்ற பழக்க வழக்கங்கள் சிந்து சமவெளி நாகரிகம விடபுலத்துபரை விட நமக்கு நெருக்கமாகி எவ்வ,ளவு ஆழமாய் தென்னகத்தில் வேரூன்றி பதிந்திருக்கிறது என்பதை நினைக்கையில் பெருமையாகத் தான் இருக்கிறது, நெல்லை.
கோயில்களில் தெய்வங்களின் திருவுருவை கற்சிலையாய் வடித்திருப்பது
அத்தெய்வத்திற்கு பாலாபிஷேகம் முதலான பலவித அபிஷேகம், அலங்காரம் செய்து வழிபடுதல் அதில் மனத்திருப்தி கொள்ளல் என்று தலைமுறை தலைமுறையாய் வழக்கத்தில் இருப்பதற்கு நாம் பழக்கப்பட்டிருக்கிறோம், நெல்லை. இந்த உணர்வுகள் தாம் அப்பகுதி வழிப்பாட்டு தலங்களுக்குப் போகும்
போது
நம்மில் கிளர்ந்தெழுந்து அதெல்லாம் இல்லாமை தான் ஒரு முழுமையை அடையாத தன்மையை நம்முள் ஏற்படுத்துவதாக நினைக்கிறேன்.
அது மட்டுமல்ல தேவாரம், திருவாசகம்
கர்நாடக சங்கீதம்,
கூத்து, நடனம், பாட்டு என்று விதவித தென்னக லலித கலைகளும் ஆணி வேராய் நம்முள் வேறூன்றி
தென்னகத்தில் தெய்வ வழிபாடு என்பது எல்லா தரப்பு மக்களையும் இணைக்கும் தெய்வாம்சமாக வெளிப்படுகிறது நெல்லை.
என்ன விலை கொடுத்தும்
இந்த ஒற்றுமையைக் கட்டிக் காக்க வேண்டும் என்ற மன எழுச்சி தம்முள் அலைபாய்கிறது
நீங்கள் எழுதியிருப்பது சரியானதுதான் ஜீவி சார்.
நீக்குநம் கோவிலில் மந்திரங்கள், வழிபாட்டுமுறை போன்ற பலவற்றில் (தமிழ் திவ்யப்ப்ரபந்தமாக இருக்கட்டும், வடமொழி வேதமாக இருக்கட்டும், தமிழ் திருமுறைகளாக இருக்கட்டும்) நம் மனம் ஒன்றிவிடுகிறது, பக்தி என்ற உணர்வில் திளைக்கிறது. இந்த விதத்தில் தென்னகம், அதிலும் தமிழகம் மிகவும் கொடுத்துவைத்தது என்றே கூறலாம். நாங்கள் யாத்திரை செல்லும்போது கூட, அந்த அந்தத் தலத்தில் அதற்குண்டான பிரபந்தத்தைச் சேவிப்போம். இது மிகப் பெரும் மனநிறைவை அளிக்கும் (ஓரளவு அர்த்தம் புரிவதால்)
தென்னகக் கோவில்களும்கூட, சமூகங்களை இணைப்பதாகவே இருந்துவந்தது. இதனைப்பற்றிப் புரிதல் இல்லாதவர்கள்தாம் ஒரு குறிப்பிட்ட சமூகத்தால் கோவில்கள் ஆக்கிரமிக்கப்பட்டன என்று கூறுவார்கள்.
இந்த ஒற்றுமை இருந்தால், மாற்று மதங்கள் இந்த மண்ணில் வேரூன்ற முடியாது என்ற காரணத்தால் அதனைச் சிதைக்கும் வேலைகளும், பிரித்தாளும் வேலைகளும் 50களிலிருந்து நடைபெறுகிறது என்பது வருத்தத்துக்குரிய செயல் (என்பது என் எண்ணம்)
அதெல்லாம் வெளிவேஷம் நெல்லை. எல்லோரையும் ஆட்டிப் படைக்கும் தெய்வ சக்தி என்பது தாத்தாவுக்குத் தாத்தா என்பதான பாரம்பரிய உணர்வாய் எல்லோர் மனசிலும் உள்ளறக் கலந்திருக்கிறது.
நீக்குஇதில் முக்கியமான அம்சம் என்னவென்றால் தேவமொழி சமஸ்கிருதமும் தெய்வமொழி தமிழும்
ஆதி அந்தமில்லா பழமையானவை. இறைசக்தியை 'ஓம்' என்ற நாதமாய் உள்ளடக்கியவை.
இறைசக்தியையும் இந்த இரண்டு மொழிகளையும் தனித்தனியாய்ப் பிரிக்கமுடியாதபடி பிணைப்பு கொண்டவை. அந்த உன்னதம் காலாதிகாலம் உயிர்ப்பு கொண்டதாய் திகழும். இதுவே காலத்தின் பதிலாய் ஒளிரும். இது திண்ணம்.
பிற்காலத்து சிலரின் பேச்சு மொழியான ஹிந்தி என்பது வேறு.
தேவமொழி சமஸ்கிருத பழமையுடன் கலந்து தெய்வ பக்தியின் வழிபாட்டு முறைகளை அதனால் அனுஷ்டிக்க முடியாமைக்கு இது தான் காரணம்.
உண்மைத் தமிழர்கள் இந்த வேற்றுமையை
நன்கு உணர்ந்தவர்கள்.
அதனால் தான் சமஸ்கிருத வேத பழக்க வழக்கங்களுடன் ஒன்றிய அவர்களால் ஹிந்தியுடன் ஒன்ற முடியவில்லை. இதுவே காலத்தின் பதிலாய் ஒன்ற முயற்சிப்பவர்களையும் தோல்வியுறச் செய்யும். தெய்வ பக்தி நம்மில் அழியின் அதுவே எல்லாவற்றின் அழிவாய் அண்ட சராசரங்களும் ஒடுங்கிப் போகும்.
இதுவே சத்தியத்தின் உண்மை சொரூபமாம்.
//ஹிந்தியுடன் ஒன்ற முடியவில்லை.// யாரும் விரும்புகிறார்களோ இல்லையோ.... ஒருவரின் மன உணர்வை வெளிப்படுத்தும் சாதனமான மொழி, அவர்கள் தாய்மொழியாகத்தான் இருக்க முடியும். நம் இடத்தைவிட்டு வெளியே சென்றால்தான் நம் மொழி உணர்வு நமக்கு இருப்பதை நாம் அறிய முடியும். அதனால் ஹிந்தி, கன்னடா, தெலுங்கு.... என்ன என்ன மொழிகள் தேவையோ நமக்கு, அதைக் கற்பதில் தடையில்லை. உனக்குத்தான் இப்போ தெலுங்கு/கன்னடம் தெரியுமே, அதனால் தமிழை விட்டுவிடு என்றால், போடாங்... என்பதுதான் தமிழர்களின் பதிலாக இருக்க முடியும்.
நீக்குமுகாரவிந் லஷ்மிநாராயணர்கோவில் ,கோசாலை, கண்டு கொண்டோம்.
பதிலளிநீக்குஜன்மபூமி தரிசனம் பெற்றோம்.
நன்றி மாதேவி அவர்கள்
நீக்குபுகைப்படங்கள் வழக்கம் போல அழகாக இருக்கிறது.
பதிலளிநீக்குதகவல்கள் வரிசையாக சொல்லிய விதம் அருமை.
நன்றி கில்லர்ஜி
நீக்குலக்ஷ்மி நாராயணர் கோவிலே மிகப் பழமையானதாகவும், //
பதிலளிநீக்குஅந்தக் காலத்து ராஜாக்கள் மஹால் போன்று இருக்கிறது!!! மாடங்கள் முற்றம் என்று!
கீதா
ராஜாக்கள் இல்லைனா பண்ணை வீடு போல!!!
நீக்குகீதா
வாங்க கீதா ரங்கன். அங்கிருக்கும் கோவில்களில் பழைமை மாறாமல் இருந்தது அந்தக் கோவில்தான்
நீக்குமுகாரவிந்த் கோயில் - பராமரிப்பு சரியில்லைன்னு படுகிறது.
பதிலளிநீக்குநடுவில் செயற்கை நீரூற்று போல இருக்கிறதே அதுதான் மானச கங்கை! நம்ம அழகர்கோயில் நூபுர கங்கை போல பண்ணிட்டாங்க போல!!!
கங்கைக்குப் போக முடியலைனா இதை கங்கை போல நினைச்சு நீராடுவதாக இருக்குமோ!
//தண்டவதி சிலா எனப்படும் கோவர்தன கிரியின் ஆரம்பம் தெரிகிறதா?//
சுத்தமா புரியலை.
இக்கோயில் ரொம்ப பழசு போலத் தெரியலையே மார்பிள் டைல்ஸ் எல்லாம் இருக்கிறதே.
கீதா
கோவர்தன கிரியை (மலையை) நாம் காண முடிவதில்லை. அதுக்கு ஒரு வரலாறு சொல்கிறார்கள். இதுதான் ஆரம்பம், கோவர்தன கிரியின் முகம் என்று சொல்கின்றனர். அது கல் வடிவில் இருக்கிறது.
நீக்குஅந்த குளம் முழுவதும் மானச கங்கை. கிருஷ்ணரால் ஏற்படுத்தப்பட்டது.
தமிழகத்திலும் பல இடங்களில் இப்படி கங்கை நீர் இந்தக் கிணற்றில் வரும் என்றெல்லாம் சொல்வார்களே.
//மார்பிள் டைல்ஸ் எல்லாம் இருக்கிறதே.// தமிழகத்தின் பல கோவில் கருவறைகளில் இப்படி வர ஆரம்பித்துவிட்டது. திருமஞ்சனம் என்று சொல்லப்படும் அபிஷேக நீர் தேங்கக்கூடாது, கருவறை சுத்தமாக இருக்கவேண்டும் , சுத்தம் செய்ய சுலபமாக இருக்கவேண்டும் என்று பல காரணங்கள்
நீக்குமதுரா பற்றிய விவரங்கள் படங்கள் எல்லாம் நல்லாருக்கு, நெல்லை. படங்கள் இணையம் ஆனாலும் சுத்தமாக இப்படிப் பார்த்ததா நினைவில்லை அதாவது வெளிப்புறம். பல வருஷங்கள் ஆகிடுச்சே!
பதிலளிநீக்குகீதா
நீங்க சொல்றது, கட்டிடங்களைப் பற்றியா இல்லை நீங்கள் சென்று யுகமானதைப் பற்றியா? ஓரளவு மாற்றங்கள் இருந்தாலும், ஜென்மஸ்தான் தரும் உணர்வு தனியொரு விதம்
நீக்குலக்ஷ்மி நாராயணர் கோவிலுக்குச் சென்றோம். அங்கு லக்ஷ்மி நாராயணரை வணங்கிவிட்டு பிறகு முகாரவிந்த் கோவிலை நோக்கி நடந்தோம்.
பதிலளிநீக்குலக்ஷ்மி நாராயணர் கோவில், முகராவிந்த், மற்றும் மதுரா – ஜன்மஸ்தான் – ஸ்ரீகிருஷ்ண ஜென்மபூமி ஆகிய கோவில்கள் தரிசனம் மீண்டும் பெற்றேன்.
நீங்கள் தரிசனம் செய்த கோவில்கள் பகிர்வால் மீண்டும் அங்கு போன வாய்ப்பு கிடைத்த மகிழ்ச்சி.
படங்கள், விவரங்கள் அனைத்தும் அருமை.
மானச கங்கையிலிருந்து குழாய்கள் வழியாக நீர் வரும்படிச் செய்திருக்கும் ஏற்பாடு அருமை, முன்பு இப்படி இருந்த நினைவு இல்லை.
இரவு நேரத்தில் விளக்கு ஒளியில் கோவில் அழகாய் இருக்கிறது.
கர்பக்ரஹம் படங்களும் அருமை, தரிசனம் செய்து கொண்டேன்.
வாங்க கோமதி அரசு மேடம்.... நீங்கள் தரிசனம் செய்திராத கோவில்கள் குறைவு அல்லவா? எனக்கும் நான்குகோவில்கள் (Char dham) போகணும் என்று ஆசை, ஆனால் யோசனை..அத்தகைய பிரயாணத்தை மேற்கொள்ள இயலுமா என்று. அடுத்த வருடம் மார்ச், இறையருள் இருந்தால் முக்திநாத் யாத்திரை இன்னொரு முறை செல்லலாம் என்று எண்ணம். (ஹெலிகாப்டர், விமானம் - நேபாளம், மாத்திரம்தான் ஒரே யோசனையாக இருக்கிறது)
நீக்குமானச கங்கையில் தெரிவது மாலைச்சூரியனா . அதன் பிம்பம் கீழே நீரில் தெரிவது மிக அழகு.
பதிலளிநீக்குநன்றி கோமதி அரசு மேடம்.... மாலைச் சூரியன். சிலசமயம் நாங்கள் செல்லும்போது இரவு நேரம் ஆகியிருக்கிறது. பொதுவா மதுராவை நாங்கள் 8 மணி வாக்கில்தான் (இரவு) தரிசனம் செய்யும் வாய்ப்பு கிடைக்கும்.
நீக்குஆலயம் குறித்த தகவல்கள் சிறப்பு. பாதுகாப்பு அதிகம் தான் - பெரும்பாலும் நான் செல்லும் போதும் வாகனத்திலேயே மொபைல் போன்றவற்றை வைத்து சென்றுவிடுவேன். நிறைய இடங்கள் இங்கே உண்டு பார்ப்பதற்கு என்றாலும் பொதுவாக அனைவரும் செல்வது ஜனமஸ்தான் மட்டுமே.
பதிலளிநீக்குவாங்க தில்லி வெங்கட். நீங்கள் இந்த இடங்களுக்குப் பலமுறை சென்றிருப்பீர்கள்.
நீக்கு