சனி, 7 செப்டம்பர், 2024

புல்டோஸரில் சென்று 9 உயிர்களைக் காத்தவர் மற்றும் நான் படிச்ச கதை

 ஹைதராபாத்: தெலுங்கானாவில் வெள்ளத்தில் சிக்கி தவித்த 9 பேரை புல்டோசரை எடுத்துச் சென்று மீட்ட சாமானியனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.  

பொதுவாக ஹீரோக்கள் என்பவர்கள் மக்களை காக்க பறந்து வருவார்கள்,  இல்லையென்றால் பந்தாவாக, ஸ்டைலாக வருவார்கள். இவை அனைத்தும் திரைப்படங்களில் கற்பனையாக உருவானவை. ஆனால் தெலுங்கானாவில் ஒருவர் புல்டோசரில் சென்று 9 பேரின் உயிரை மீட்டு ஹீரோவாக மக்களால் பாராட்டப்பட்டு வருகிறார்.  தெலுங்கானாவில் விடாது கொட்டித்தீர்த்த கனமழையால் பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடாக மாறி இருக்கின்றன. எங்கு பார்த்தாலும் மழை, வெள்ளம் என மக்கள் தவியாய் தவித்து வருகின்றன. மாநில அரசு மீட்பு பணிகளில் இறங்கினாலும் ஆங்காங்கே மக்களும் சுயம்புவாக மாறி பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றி வருகின்றனர்.  அப்படித்தான்... கம்மம் மாவட்டத்தில் பிரகாசம் பகுதியில் உள்ள பாலத்தில் 9 பேர் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டனர். முன்னேரு ஆற்றில் இருந்து வெள்ளமென பாய்ந்த தண்ணீர் அதிவேகத்துடன் சீறிப்பாய என்ன செய்வது என்று தெரியாமல் 9 பேரும் தவித்து அபயக்குரல் எழுப்பி உள்ளனர்.  இந்த விவரம் அறிந்த சுபான் கான் என்பவர் அடுத்த எடுத்த முயற்சி தான் அனைவரின் புருவங்களையும் உயர்த்தியது. புல்டோசர் ஒன்றை எடுத்துக் கொண்டு புறப்பட தயாரானார். அவரின் செயலைக் கண்ட அங்குள்ளவர்கள் வேண்டாம்... விபரீதம் என எச்சரிக்க, அதை புறம்தள்ளி புறப்பட்டார் சுபான்கான்.  டிரைவர் இருக்கையில் ஒரு போர் வீரனாக அமர்ந்த அவர், இறந்தால் நான் ஒருவன் தான் இறப்பேன், ஆனால் நான் திரும்பி வந்தால் 9 பேர் இங்கு பிழைத்து இருப்பார்கள் என்று கூற, மக்களும் அவரின் தன்னம்பிக்கையை மெச்சி வாழ்த்தி அனுப்பினர்.  புல்டோசருடன் சென்ற சுபான் கான், சிறிதுநேர போராட்டத்துக்குப் பின்னர் 9 பேரையும் உயிருடன் மீட்டு திரும்பினர். அவரின் செயலை கண்டு ஊர்மக்கள் பாராட்ட, இதுபற்றிய விவரம் மாநில அரசுக்கு தெரிய வந்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் அமைச்சருமான கே.டி. ராமராவ் தொலைபேசியில் தொடர்பு கொண்டு சுபான்கானை பாராட்டி உள்ளார். அவரின் தீரத்தை அறிந்த மக்கள் அனைவரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.


&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

திருநெல்வேலி:நள்ளிரவில் மணல் கடத்தலில் ஈடுபட்ட நபரை நான்கு மணி நேரம் அவரது வீட்டில் காத்திருந்து கைது செய்தார் நாங்குநேரி ஏ.எஸ்.பி பிரசன்ன குமார்.  திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே வெங்கட்ராயபுரத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவில் ஒரு கும்பல் இயந்திரங்கள் மூலம் மணல் கடத்தலில் ஈடுபட்டது. தகவல் அறிந்த நாங்குநேரி ஏ.எஸ்.பி பிரசன்னகுமார் போலீஸ் படையினருடன் அங்கு சென்றார்.  அந்த கும்பல் போலீசை கண்டதும் மணல் அள்ளும் இயந்திரம், டூவீலர்களை விட்டுவிட்டு தப்பி சென்றது. கும்பல் தலைவன் கங்கை ஆதித்தன் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்தவர் என தெரியவந்தது.  நள்ளிரவில் சாத்தான்குளத்தில் உள்ள கங்கைஆதித்தன் வீட்டிற்கு ஏ.எஸ்.பி., சென்றார். ஆனால் அவரை வீட்டிற்குள் வைத்துக்கொடு கதவை பூட்டிக்கொண்டனர். அவரது குடும்பத்தினரோ, பக்கத்து வீட்டில் வசிப்பவர்களோ அவரை காட்டிக் கொடுக்க விரும்பவில்லை. மேலும் கொலையா செய்து விட்டார், மணல் கடத்தலுக்கு நள்ளிரவில் கைது செய்வீர்களா என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.  இருப்பினும் இரவில் நான்கு மணி நேரமாக காத்திருந்து போலீசார் கங்கை ஆதித்தனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

உத்தர கன்னடாவின் அங்கோலா உளுவாரே கிராமத்தில் உள்ள, அரசு பள்ளி ஆசிரியை சந்தியா நாயக். ஏழை குடும்பங்களை சேர்ந்த, பள்ளி குழந்தைகள் கல்விக்கு உதவி வருகிறார். சமீபத்தில் ஷிரூரில் நடந்த, நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு, பலரிடம் இருந்து நிதி, பொருள் உதவி பெற்று தர முயற்சி செய்கிறார்.



=========================================================================================================================

 

நான் படிச்ச கதை (JKC)

அந்தஸ்து

கதையாசிரியர்: பி.வி.ஆர்.

முன்னுரை

தமிழ் உரைநடை படைப்புகள் இலக்கியம் என்ற அந்தஸ்தைப் பெற்றது ஆங்கிலேயர் வரவுக்குப் பின் என்று சில அறிஞர்கள் கூறுகின்றனர். அது வரை கவிதைகள் மட்டுமே இலக்கியம் என்ற அங்கீகாரம் பெற்றிருந்தன. அச்சு இயந்திரத்தின் வரவால் நாவல்கள், குறுங்கதைகள் போன்றவை அச்சடிக்கப்பட்டு நிறைய விற்பனையாகின. சிறுகதைகளை அவ்வாறு தனியாகப் பிரசுரிக்க முடியவில்லை. ஆகவே அவை பத்திரிகைகளின் ஒரு பகுதியாக வெளியிடப்பட்டன. வரவேற்பு இருந்தமையால் மாதம் ஒருமுறை, இருமுறை, மூன்று முறை, வாரம் ஒருமுறை என்று குமுதம், கல்கி, விகடன் என்று பல பத்திரிகைகள் விற்பனையில் வளர்ச்சி அடைந்தன. 

இந்தப் பத்திரிகை பொற்காலம் (கதை பிரசுரம்) 1930 முதல் 2000 ஆண்டு வரை எனலாம். பல பிரபல எழுத்தாளர்களும் இக்கால கட்டத்தில் புகழ் அடைந்தவர்கள்தாம். அவ்வாறு பிரபலம் ஆன ஒருவர் தான் பி வி ஆர் எனப்படும்  பி வி ராமகிருஷ்ணன்.  ஒரே சமயம் 6 பத்திரிகைகளுக்கு எழுதிக்கொண்டிருந்தார் என்பது செய்தி. இவரது படைப்புகள் வராத பத்திரிகைகளே இல்லை எனலாம். 80க்கும் மேற்பட்ட நாவல்கள், 300க்கும் மேற்பட்ட சிறுகதைகளை படைத்தவர். 

இவ்வளவு படைப்புகள்  இருந்தும் சிறுகதைகள் தளத்தில் இவரது படைப்பாக ஒரே ஒரு சிறுகதை மாத்திரம் இருக்கிறது. அதுவும் பசுபதிவுகள் தளத்தில் வெளியிடப்பட்ட சுதேசமித்திரன் பக்கங்களின் நகலாய் தட்டச்சு  செய்யப்பட்ட ஒன்று. அது இன்று இங்கு எடுத்தாளப்படுகிறது. ஆக இந்தக் கதையின் முதல் பதிப்பு சுதேசமித்திரன், இரண்டாம் பதிப்பு பசுபதிவுகள் தளத்தில். மூன்றாம் பதிப்பு சிறகதைகள்.காம் சேகரிப்பில், நான்காம் பதிப்பு எ பி மின்னிதழில்!! 

அந்தஸ்து என்ற இந்த சிறுகதை 1953இல் எழுதப்பட்டது. கருப்பொருள் சிறிதே. உயர்வு, தாழ்வு என்ற சுய மதிப்பீடு எவ்வாறு தவறாகிறது என்பதே கதையின் கருத்து. மோதிரக்கையால் அடி வாங்கிய, ஒரு வளரும் கலைஞன் பல மோதிரங்களை அணியும் சிறப்பு  பெற்றதை விவரிக்கும் கதை. 

1953 ஆம் ஆண்டு என்பது தனித்தமிழ் இயக்கம் தோன்றிய காலம். எனினும் கதையில் பல ஆரிய சொற்களும் எடுத்தாளப்பட்டிருக்கின்றன. இது போன்ற வார்த்தைப் பிரயோகங்கள், வாக்கிய அமைப்புகள் தற்காலத்தில் வினோதமாகத் தோன்றலாம். கதையை சுருங்கச் சொல்லி முடிக்கும் இக்காலத்தில் இன்றைய கதை, சொல்லும் முறையில் கொஞ்சம் சலிப்படைய வைக்கலாம். பொறுமை அவசியம். 

அன்றைய காலகட்டத்தில் சத்திரங்கள்தான் பொதுக் காரியங்களுக்கு, வருவோர், போவோர் தங்க, உணவு உண்ண, என்று பல வகையிலும் உபயோகமாக இருந்தன. அதை அறிந்து கொண்டு இக்கதையை வாசிக்க வேண்டும்.

 அந்தஸ்து  

=====> சிறுகதைகள்.காம்<=====

என் கண்களுக்கு நானே சின்னவனாகியதை நினைத்துக் கொண்டே நடந்தேன். நிமிஷத்துக்கொருதரம், சாயங்காலம் நடந்ததெல்லாம் என்னுள் மோதி என்னைத் தலை கவிழச் செய்தன. ஒருவனுடைய படிப்புக்கும், வயதுக்கும் அந்தஸ்துக்கும் மேலாக ஒன்றுஇருக்கிறது என்று தெரிந்தும் நடைமுறையில் தெரியாதவன் போல இருந்ததன் பலனை நினைக்க நினைக்க மனம் சுருங்கியது.

மெளன நடையால் மனக்கண் முன் விட்டல் எனக்கு முன்னால் தனக்குப் பிடித்த ராகம் ஒன்றை இழுத்துக் கொண்டு போவது போல் தோன்றியது.

இந்த விட்டல் எங்கேயோ, யாருக்கோ, எப்பவோ பிறந்த பையன் என் வாழ்வின் பகுதியில் ஒரு சிறிய பகுதியில் குறுக்கிட்டு மன எழுச்சியைக் கிளறி விட்டானே? ஏதோ இரண்டு வருஷங்களுக்கு முன்னால் இழைத்த தவறுக்கு இன்றைக்கு தண்டனை? அதுவும் சாமான்யமானதா? ‘நாலு உதைகள் நாலு வார்த்தைகள்இவைகளினாலெல்லாம் மானம் போவது கூட சகிக்கலாம். ஆனால் நான் இன்று அடைந்ததை? அதை நினைக்கிறபோது புது விட்டலைப் பார்க்கிறபோது பழைய விட்டல்தான் முன் தோன்றுகிறான். என்னதான் உருவம் மாறினாலும் முதன் முதலில் பார்த்த பார்வையின் அர்த்தம் தான் நிற்கிறது.

அன்று இரண்டு வருஷங்களுக்கு முன், பழனியில் தங்கையின் கலியாணம். இரண்டு வீட்டுக்காரர்களும் எதிர்த்திசைகளிலிருந்து வந்து பழனியில் சொந்தமானார்கள்.

தங்கை கலியாணத்தை எடுத்து நடத்த நான்தான், கலியாணத்துக்கு ஏழு நாள் முன்பாக சரியான அலைச்சல். கலியாணத்தன்று ஜலதோஷம், தொண்டைக் கட்டு, கலியாணமான பிறகு முதுகு வலி.

கலியாணமான மறுதினமே எல்லோரும் சென்றுவிட்டார்கள். டேரா அடித்தவன் தாமதித்துத்தானே புறப்படவேண்டும்? இரண்டு நாட்கள் நான் இருந்தாக வேண்டும் என்ற நிர்ப்பந்தம் உண்டாயிற்று.

அன்று மத்தியானம் நிம்மதியாகப் படுத்துத் தூங்கவேண்டும் என்று காலையிலேயே நிச்சயம் செய்திருந்தேன். ஒன்பது மணி ரயிலில் எல்லோரும் சென்ற பிறகு, கூட்டம் கலைந்த கொட்டகையாகக் காட்சியளித்தது சத்திரம்.

சரியான தூக்கம், பட்டினி கிடந்தவன் ருசித்துச் சாப்பிடுவதுபோல, ருசித்துத் தூங்கிக் கொண்டிருந்தேன். திடீரென்று, ‘அக்னி என்றறியாயோ…’ என்று கேதார கௌளை வானைப் பிளக்கும்படியாகக் கேட்டது. முன் காலங்களில் ராஜாக்களின் தூக்கத்தைக் கலைத்தால் மரண தண்டனை! நான் ராஜாவாக இல்லையே என்று துக்கத்திலும் ஆத்திரத்திலும், “யாரடா அது கத்துகிறது?” என்று இரைந்தேன்.

என் இரைச்சலுக்குப் பதில் இல்லை. திண்ணையில் சங்கீதம் கரைபுரண்டு ஓடிக்கொண்டிருந்தது. நான் இருந்த அறை ஜன்னல் வழியாகப் பார்த்தபோது, என் ஆத்திரம் என்னையும் மீறிக் கொண்டு கிளம்பியது.

எந்தச் சத்திரத்தில் தின்று, எந்தச் சத்திரத்தில் முடங்கிக் கொள்ளலாம், என்று சத்திரம் சத்திரமாக ஏறி இறங்கும் நாடோடிப் பயல்கள், ஏதாவது வேலை செய்து பிழைக்கலாம் என்ற எண்ணமே இல்லாத சோம்பேறிகள் ஐந்தாறு பேர்கள் வட்டமாக உட்கார்ந்து பேஷ்போட்டுக் கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு முகமும் ஒவ்வொருவிதமான அருவருப்பை அளித்தது. நடுவே வித்வான்உட்கார்ந்து கேதார கௌளையின் மென்னியை முறுக்கிக் கொண்டிருந்தான்.

இடத்திலிருந்தே மறுபடியும் டேய் கத்தாதே நிறுத்து!” என்றேன். பாடினவன் என் குரலைக் கேட்டுவிட்டான் என்று, அவன் என் பக்கம் திரும்பப் பார்த்ததிலிருந்து தெரிந்து கொண்டேன். அதனால்தான் என் ஆத்திரம் மேலும் அதிகரித்தது. என்னைப் பார்த்தும், நான் சொல்லியும், அவன் மேலே போய்க் கொண்டிருந்தான்.

விடுவிடு என்று எழுந்தேன், வதம் செய்யச் செல்லும் அசுரன் போல. இரண்டே எட்டில் திண்ணை. இரண்டு நாடோடிகளுக்கிடையில் காலை வைத்து, அந்தப் பையனைத் தோளோடு தோளாகத் தூக்கி, இடது கன்னத்தில் இரண்டு அறைகள் வைத்த பிறகுதான் ஆத்திரம் அடங்கத் தொடங்கியது.

படவா, ஒரு மனுஷன் தூங்கறேன்மத்தியான வேளையிலே வந்து ஓநாய் மாதிரி ஊளையிடறான்…” சொல்லிக்கொண்டே கழுத்தில் கை வைத்தபோது அவன் திமிறினான்.

நீங்க யாரு சார் என்னை அடிக்க?” கண்களில் நீர்த்திவலைகள். உடலில் மான உணர்ச்சி கிளப்பிவிட்ட படபடப்பு, உதடுகளில் வார்த்தைகள் தெறித்தன.

நான் யாருன்னா கேட்கிறாய், மடையா.. சோத்துக்கில்லாமல் அலையற நாடோடிப்பயல் கேட்கிறான் கேள்வி

உங்களாலே ஒருவேளை சோறு போடறத்துக்கு முடியாட்டாலும், தஞ்சாவூர் மிராசுதார் மாதிரி பேச்சுக்குக் குறைவில்லை!”

இன்னமே ஏதாவது பேசினாயோ, மென்னியை முறிச்சுப் பிடுவேன், ஜாக்கிரதைநான் இரைந்துகொண்டே அவனைப் பார்த்தேன். திடீரென்று வேஷ்டி மூலையை வாயினுள் சொருகினான். அதை வெளியே எடுத்த போது, ஒரே சிகப்பு!

அடடா, ரத்தம்!” என்றான் ஒரு நாடோடி.

நன்னா துடைடா, விட்டல்!” இன்னொருவன்.

முன் காலத்திலே நன்னா பாடினா வாயிலே தேனைவிட்டு, கையிலே பொன்னைக்கொடுப்பாஇப்போ என்னடான்னா வாயிலேந்து பல்லைப்படுங்கி, கழுத்திலே கையைக் கொடுக்கறா…” என்றான் ஒரு இளம் நாடோடி. மாடு மாதிரி வளர்ந்திருந்தான், பல சத்திரச் சாப்பாட்டையெல்லாம் ஜீரணித்துவிட்டு.

இந்தக் காலத்திலே இதுதான் அப்பா ஞானம்மூணு ரூபாயைக் கொடுத்து மூணு மணி நேரம் பெரியதனமாகக் கேக்கிற சுருதி தாளமில்லாத கச்சேரியில்தான் ஞானம் இருக்கு!” என்றான் இன்னொருவன்.

சரித்தான் வெளியே போங்கடா, நாடோடிப் பயல்களாஎன்று இசைத்தேன். நித்திரை இழந்ததில் கண்கள் எரிந்தன.

ஏன் சார், பல்லை உடைத்து விட்டீர்களே?” என்றான் விட்டல் மறுபடியும் மறுபடியும் துடைத்துக்கொண்டே.

பாக்கிப் பல் இருக்கே, அதுவே பெரிய பாக்கியம், நீ பாடின பாட்டுக்கு..”

ஏன் சார், பாட்டைப்பத்தி  உங்களுக்கு ஏதாவது தெரியுமா? நேத்து உங்க மச்சினன் நலங்கும்போது ரெண்டு பாட்டுப் பாடினானே, அதை ரசித்தீர்களே? அது பாட்டா? யாரோ என்னை இழுத்துண்டு வந்து, ‘இவன் நன்னாப்பாடுவான்னுசொன்னப்போ, என் மூஞ்சியைப் பார்த்து முகத்தைச் சுருக்கிக்கொண்டீர்களே?. வேண்டாம் என்று சொன்னீர்களே…”

டேய் அதிகப் பிரசங்கி..இந்த வரிசையிலும் ஒண்ணுரெண்டு உதிர்ந்துவிடும்..போடா, கழுதே…”

நான் போகிறேன் சார், போறேன்.. இந்த சத்திரத்தை யெல்லாம் கட்டினானே ஒரு புண்ணியவான், உங்க மாதிரி பெரியமனிதர்கள் வந்து தங்க என்று, அதை நினைத்துக்கொண்டே போகிறேன்ஆனா இது கடைசி சந்திப்பாக இருக்காதுஎன்று அவன் சொல்லிக்கொண்டே போனான். பரிவாரமும் கலைந்தது.

மீண்டும் அறையில் வந்து படுத்துக்கொண்டேன். இழந்த நித்திரை இழந்ததுதான். விட்டலின் வார்த்தைகள் காதில் ஒலித்துக்கொண்டேயிருந்தன. சாவதானமாக பாடாதேஎன்று சொல்லியிருந்தால் அவன் பேசாமலிருந்திருப்பான். என் தூக்கமும் பறி போயிருக்காது. ஆத்திரத்தில் கண் இழந்து செய்த காரியம் எத்தனை தூரத்துக்குப் போய்விட்டது? நேரம் செல்லச் செல்ல உடம்பின் குடு இறங்க இறங்க, விட்டலின் இரத்தம் கசிந்த வாய்தான் முன் தோன்றியது. ‘நான் பேசாமலிருந்திருக்கலாம்; ஏழைப் பையன்நாதியற்றவன்அவனுக்கு ஆதரவு அளிக்காவிட்டாலும் சும்மாவாவது இருந்திருக்கலாம்என்றெல்லாம் நினைத்தேன்.

ஆனால் என்னுள் நிறைந்து கிடக்கும் மமதையும் போலி கௌரவமும் அன்பு உணர்ச்சிகளுக்கு அணையிட்டுவிட்டன. ‘இது மாதிரி எத்தனையோ நாடோடிப்பயல்கள்நம்ம மாதிரி மனுஷா கிட்டே உதை படறத்துக்குன்னே பிறந்திருக்கிறார்கள்!’ என்று நானே சொல்லிக்கொண்டேன்.

அதற்குப் பிறகு என்றைக்காவது எப்போதாவது, கொதிக்கும் நீரில் குமிழ்கள் மேலும் கீழுமாக வந்து போவதுபோல விட்டலின் நினைவு மனத்தின் மேலே வந்து போகும். இரத்தம் கசிந்த பல் மின்னல் மாதிரி தோன்றிமறையும். ‘எத்தனையோ பேர் என் முரட்டுக் கோபத்தி்ற்கு ஆளாகியிருக்கிறார்கள்இந்த அனாதையும் ஒருவன்என்றுதான் விஷயத்தை ஒதுக்குவேன்.

நாட்கள் தூசியாகப் பறந்து விட்டன.

இன்றைக்கு நண்பன் வீட்டில் ஒரு விசேஷம். பணம் இருப்பதை கச்சேரி மூலம் காட்ட அவன் விரும்பினான். கச்சேரியைக் கேட்கப் போகும் வரையில் எனக்கு விட்டலின் ஞாபகம் துளிக்கூட இல்லை. எந்த மனிதன் எப்போதோ வரப் போகிற சாவையே நினைத்துக் கொண்டு இருக்கப்போகிறான்? அதேபோல் வாழ்வில் எப்போதோ கண்ணில் விழுந்த கரடை நினைத்துப் பார்க்கப் போகிறான்?.

நண்பன் கச்சேரி முடிகையில் அப்போதுதான் நான் போய்ச் சேர்ந்தது – “இவன் ஒரு இளம் வித்வான்டாஆனால் நல்ல பேருஞானமும் சாரிரமும் அதிருஷ்டமும் இருக்குகேட்கணுமா?” என்றான்.

என்ன பெயர்?” என்று கேட்கவில்லை. எனக்குத் தெரியுமே, பழைய சிந்தனைகளைக் கிளறிக் கொண்டு என் முன்னால் பாடுபவன் யாரென்று? நண்பனுக்கு உம்கொட்டி வைத்தேன்.

படம் உதவி இனையம் (படத்தில் உள்ள பிரபலங்களைத் தெரிகிறதா? மிருதங்கம் யார்? )

பழனி, கலியாணம், தூக்கம், கேதார கௌளை, நாடோடிப் பயல்கள், விட்டலின் இரத்தம் கசியும் பல், அவன் பரிதாபமாகத் திமிறின திமிறல் எல்லாம் சுருட்டிவைத்த பாய் விரிவது போல விரிந்தன. பாடுபவனைப் பார்க்கவே வெட்கமாகவும், பயமாகவும் இருந்தது. சமூக அஸ்திவாரக் கும்பலின் பிரதிநிதிகளின் முன் அமரிக்கையாக உட்கார்ந்து பாடுறான். அன்று என்னிடம் அடிவாங்கிய பையன் என்பதை நினைக்கையில் எழுந்து போய்விடலாமா என்று நினைத்துவிட்டேன்.

ஆனால் அதற்குள் கச்சேரியும் முடிந்துவிட்டது. நண்பன் சாப்பிட்டு விட்டுத்தான் போகவேண்டும் என்று வற்புறுத்திவிட்டான்.

பந்தியில் எனக்கு எதிரே விட்டல். அவன் வாயைத் திறக்கையில் நான் உடைத்த பல்லின் மீதிப்பகுதி இருக்கிறதா என்று பார்க்க வெட்கத்திலும் ஏனோ ஆசை உதிர்த்தது.

என் நண்பன், சாப்பிட்டானதும் விட்டலை எனக்கு நேரடியாக அறிமுகப்படுத்தி விட்டு, என்னையும் அறிமுகப்படுத்தினான், “இவர் தான் இந்த வட்டாரத்திலேயே பெரிய சங்கீத ரசிகர்ஒரு பெரிய சபாவை நடத்துபவர்என்றான்.

விட்டல் என்னைப் பார்த்தான். உதடுகளில் புன்னகை அரும்பியது. பிறகு சிரித்தான். “இவரை எனக்கு முன்னமே தெரியும்இவருடைய ரசிகத்தன்மையும் கண்டு அனுபவித்திருக்கிறேன்!” என்றான் கடைசியில்.

நான் குன்றிப்போனேன்.

அட, விட்டலுக்கு உன்னை தெரியுமாமே..” என்றான் நண்பன். அவனுக்கு சமயா சந்தர்ப்பம் தெரியாது.

உம்....ம்..” என்று ஏதோ முணுமுணுத்துவிட்டு, “அடடா மணி பத்து அடித்துவிட்டதே!” என்றேன்.

ஆமாம், சார், உங்கள் நண்பருக்கு நேரம் ஆகிவிட்டதுபாவம், தூக்கம் வருகிறதோ என்னமோ?” என்று விட்டல் கூறினான்.

நான் விடை பெற்றுக்கொள்ளுகையில், என் கைகள் எல்லோருக்கும் கூப்பினதுபோல் விட்டலுக்கும் கூப்பின.

என்னை நீங்கள் மறக்கமாட்டீர்கள் என்று எனக்குத் தெரியும்!” என்று விட்டல் விடை அளித்தான்.

அவன் கைகூப்பினபோது இரண்டு விரல்களில் மோதிரங்கள் பிரகாசித்ததைப் பார்த்துக்கொண்டே நகர்ந்தேன். அவன் மனத்தில் என்ன நினைக்கிறான்? ‘ரசிகப்புலி ஓய்வெடுத்துக் கொள்ளக் கிளம்பிவிட்டதுஎன்று நினைக்கிறானோ?

விட்டல் என்ன நினைத்தானோ, என் சிந்தனை சிதறிக்கொண்டு கிளம்பியது.

நன்றி: பசுபதிவுகள்        =====>சுட்டி - இங்கே <=====

இது சுதேசமித்திரனில் 1953-இல் வந்தது

====>ஆசிரியர் பி வி ஆர் ( பி வி ராமகிருஷ்ணன்)<====

பி.வி.ஆர் - Tamil Wiki

பி வி ஆர் என்கிற ராமகிருஷ்ணன் (1927-2007) கோழிக்கோட்டில் பிறந்தவர். பட்டப்படிப்பை சென்னையில் முடித்து மாநில கணக்காயர் அலுவலகத்தில் பணி புரிந்து ஒய்வு பெற்றவர். விளம்பர நிறுவனம் ஒன்றை நிர்வகித்தார்.

பி.வி.ஆர்., பாலக்காட்டுத் தமிழைப் பின்னணியாகக் கொண்டு சில படைப்புகளை எழுதினார். எண்பதுக்கும் மேற்பட்ட நாவல்களையும், 100-க்கும் மேற்பட்ட குறுநாவல்களையும், 300-க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் எழுதினார்.

என்னுடைய எழுத்தில் நான் அதிகமாகக் கையாள்வது மனித உணர்ச்சிகள்தாம். சமூகம், நாடக மேடையில் காட்சி ஜோடனையாகமட்டும் இருந்தால்போதும். அதுவே நாடகமாக வேண்டாம். இந்தக் கருத்தின் அடிப்படையில்தான் என்னுடைய எல்லாக் கதைகளும் நாவல்களும் எழுதப் பட்டிருக்கின்றன. மனிதனுடைய உணர்ச்சிகளுக்கும், அவனுடைய விசித்திரப் போக்குகளுக்கும் தான் நான் முக்கியத்துவம் கொடுக்கிறேன்….. நான் முக்கியத்துவம் கொடுப்பது, ஜீவனுள்ள உரையாடல்களுக்கும் ,மனித உணர்ச்சிகளின் பிரதிபலிப்புகளுக்கும் தான். உரையாடல்களின் மூலம் பாத்திரங்களின் குணாதிசயங்களைக் கூறுவது தான் சிறந்தமுறை என்று கருதுகிறேன்.”  பி வி ஆர்

பி வி ஆர் பற்றி திண்ணையில் <=======

42 கருத்துகள்:

  1. //இவ்வளவு படைப்புகள் இருந்தும் சிறுகதைகள் தளத்தில் இவரது படைப்பாக ஒரே ஒரு சிறுகதை மாத்திரம் இருக்கிறது. //

    சிறுகதை.காம் தளம் என்பது ஒரு குறுகிய வட்டத்திற்குள் அடைக்கப்பட்டு செயல்படும் தளம். ஏற்கனவே வேறு சிலரின் ரசனைகள் அடிப்படையில் தொகுக்கப்பட்ட ஒன்று. சில தனிப்பட்ட உங்கள் செளகரியங்களுக்காக அதிலிருந்து காப்பி & பேஸ்ட் செய்யும் வசதிக்காக உபயோகித்துக் கொண்டிருக்கிறீர்கள்.. அவ்வளவு தான். என்றைக்கு இந்த மாதிரியான அடைக்கப்பட்ட
    கூண்டுகளிலிருந்து வெளிவந்து பல்வேறு பொதுத்தளங்களில் உங்கள் வாசிப்பு மேம்பாட்டைத் தேடுகிறீர்களோ அன்றைக்குத் தான் சுதந்திரக் காற்றை சுவாசித்த உணர்வும் உங்கள் தேர்வின் அடிப்பகையிலான நல்ல விமர்சன போக்கும் உங்களில் படியும்.
    எஸ்.ரா., ஜெயமோகன் போன்றோர்களின் தேர்வுகளும் இதே மாதிரி அவர்கள் விருப்பத்தின் அடிப்படைகளில் சிக்கிக் கொண்டவை தான்.
    ஆக, இந்த சிறைகளுக்கு வெளியேயான வாசிப்பு உலகை நீங்கள்
    தேட வேண்டும்.. ஒரு வகையில் இதுவே கதைகள் வாசிப்பில் நான் கைக்கொண்ட முறையாகும். அதனால் என் உணர்வுகளுக்கேற்ப வாசிப்பதும் என்னளவில் என் சொந்த எழுத்தாற்றலை வளர்த்துக் கொள்ளவும் வழி வகுத்தது. மற்றவர்களுக்கு அவற்றைப் பகிர்வதில் தனி வேகமும் திருப்தியும் ஏற்படும்.

    இதைத் தனிப்பட்ட உங்களுக்கான என் பரிந்துரை என்று எடுத்துக் கொள்ளுங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் கூறுவது சரியே. அழியா சுடர்கள், மற்றும் சிறுகதைகள் தளங்கள் அல்லாத மற்ற தளங்களிலிருந்தும் pdf வடிவில் இருக்கும் கதைகளை ஒரு விரலால் தட்டச்சு செய்து விமரிசனமும் எழுதி வெளியிட்ட காலமும் இருந்தது. தற்போது அவ்வாறு விரிவான முயற்சிக்கு உடலும் மனமும் ஒத்துழைப்பதில்லை. ஆகவே சில சமயம் emi கட்டுவது போன்று நானும் எழுதி அனுப்புகிறேன். ஸ்ரீராமும் அதை பதிப்பிக்கிறார்.

      எ பி யில் ஒரு புனரமைப்பு தேவைப்படுகிறது என்று நினைக்கிறேன். கருத்துக்கு நன்றி.
      Jayakumar

      நீக்கு
    2. tamilvu, freetamilebooks, noolaham, wikisource, ramanichandrans, eekarai, openreadingroom, gudenberg போன்ற இலவச தளங்களில் மேய்ந்த அனுபவம் நிறைய. அவை எல்லாம் எ பி க்கு அப்பாற்பட்டது.

      நீக்கு
    3. நீங்கள் சொல்லும் தளங்களிலிருந்து நிறைய புத்தகங்கள் இறக்கிக் கொண்டிருக்கிறேன்.  ஆர்ச்சிவ்  தமிழ் லைப்ரரி மற்றும் இலங்கை நூலகங்களும் உண்டு.

      நீக்கு
    4. // ஆகவே சில சமயம் emi கட்டுவது போன்று நானும் எழுதி அனுப்புகிறேன். ஸ்ரீராமும் அதை பதிப்பிக்கிறார். எ பி யில் ஒரு புனரமைப்பு தேவைப்படுகிறது என்று நினைக்கிறேன். கருத்துக்கு நன்றி. //

      "EMI கட்டுவது போல எழுதி அனுப்புகிறேன்..."    ரசித்தேன் JKC ஸார்...  

      நான் படிச்ச கதை  தொடங்கியபோது ஜீவி ஸார் விரும்பிய வடிவம் வேறு..  பிறகு ஒவ்வொருவரும் வழங்கும் வகை வேறு.  நான் அவரவர் ரசிக்கும் வகைக்கேற்ப  வழங்குவதையே ஆதரிக்கிறேன்.  வித்தியாச வடிவங்கள் கிடைக்கும்.  சமீப காலங்களில் JKC தவிர வேறு யாரும் படைப்புகள் தருவதில்லை.  சென்ற வாரம் கூட இந்த வகையில் JKC எவ்வளவு எண்ணிலடங்கா கதைகள் வாசித்திருப்பார் என்று யோசித்தேன்.சனிக்கிழமையில், செவ்வாயிலும் நானும் சில மாறுதல்களை செய்ய விரும்புகிறேன்தான்.  இன்னும் வகைப்பபடுத்திக் கொள்ளவில்லை.  ஆனால் அதற்காக இப்போது வரும் வடிவத்தை முற்றிலும் மாற்றி அல்ல.  இதுவும் தொடரும், அதுவும் தொடரும் என்கிற வகையில்...  அதேபோல வேறு யாருமே இந்தப் பகுதிக்கு எழுதி அனுப்புவதில்லை என்பதும் வருத்தம்தான்,

      நீக்கு
    5. ஜெ கே அண்ணா நீங்கள் குறிப்பிட்டிருக்கும் தளங்களிலிருந்து நானும் நிறைய எடுத்திருக்கிறேன். அதுவும் இப்ப அப்பாவுக்கு வாசிக்கக் கொடுப்பதாலும்.

      // ஆகவே சில சமயம் emi கட்டுவது போன்று நானும் எழுதி அனுப்புகிறேன்.//

      சிரித்துவிட்டேன்...ஜெ கே அண்ணா! இந்த ஒப்புமையை வாசித்து. உங்களுக்கும் ஓய்வு அவசியம் என்பதும் புரிகிறது நீங்களும் சொல்லியிருக்கீங்க.

      எனக்கும் இப்பகுதிக்கு எழுத ஆர்வம் தான். இப்ப நேரமும் மனதும் தான் எனக்கு மிகவும் பிரச்சனையாக இருக்கிறது. வேலைகளும்..

      எனவே தொடர்ந்து அனுப்புவதற்கு அதுவும் உங்களின் உடல் நலத்திற்கு இடையிலும் நீங்கள் கூர்ந்து வாசித்து முன்னுரை பின்னுரை அதற்காகப் பல இடங்களில் பொருந்தும் கதைச் சுட்டிகள் வேறு தளங்களில் வந்தவை, படங்கள் என்று கொடுத்து உங்களின் உழைப்பு அபாரம் ஜெ கே அண்ணா.

      கீதா

      நீக்கு
    6. நான் அவரவர் ரசிக்கும் வகைக்கேற்ப வழங்குவதையே ஆதரிக்கிறேன். வித்தியாச வடிவங்கள் கிடைக்கும். //

      அதே நானும் இதை ஆதரிக்கிறேன்.

      ஸ்ரீராம் நானும் இப்பகுதிக்கு எழுத வேண்டும் என்று நினைக்கிறேன் தான். முயற்சி செய்கிறேன் இப்போதைய பணிகளை முடித்துவிட்டு அடுத்த பணிகள் வரும் முன். அதுவும் நான் வாசிப்பவை புத்தக வடிவில் - குவிகம் வெளியிடுபவை. ராய செல்லப்பா சாரின் உபயத்தில் எனக்கு வருபவரை - வளர்ந்து வரும் எழுத்தாளர்கள் அல்லது நிறைய புத்தகங்கள் வெளியிட்ட எழுத்தாளர்கள்....கதைகளை வாசிக்கிறேன். என் பிரச்சனை வாசிகக்த் தொடங்கினால் அதில் ஆழ்ந்துவிடுவேன். வீட்டு வேலைகள் முக்கிய வேலைகள் முடங்கிவிடுகின்றன அல்லது தாமதிக்கின்றன....

      முயற்சி செய்கிறேன் ஸ்ரீராம்.

      கீதா

      நீக்கு
  2. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  3. வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல் வாழ்த்துக்கள். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  4. வணக்கம் சகோதரரே

    இன்றைய பாஸிடிவ் செய்திகள் அருமை. ஹைதராபாதில் புல்டோசரில் சென்று வெள்ளத்தில் தவித்தவர்களை காப்பாற்றியவருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.

    மற்ற செய்திகளும் நன்று. அனைவரையும் பாராட்டுவோம். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  5. வணக்கம் சகோதரரே

    இன்றைய கதை பகிர்வும் நன்றாக உள்ளது. நல்ல குரல் வளம் கொண்டோருக்கு அதிர்ஷ்டமும், இறையருளும் துணை புரியும் போது, நன்றாக முன்னுக்கு வந்து விடுவார்கள். கதையின் நாயகர் அதை உணரும் போது, தான் முன்னாளில் செய்த தவறை நினைத்து எப்படி வேதனையடைகிறார் என்பதை கதையில் விவரிக்கும் பாங்கு நன்றாக உள்ளது. இவரின் சிறு கதைகளை அக்காலப் பத்திரிக்கைகளில் படித்த நினைவு வருகிறது. கதைகளின் பெயரை குறிப்பிட்டுச் சொல்ல நினைவில்லை. கதையை படித்து ரசித்தேன். இப்படிப்பட்ட சிறந்த எழுத்தாளர்களின் கதைகளை தேடித்தந்து இங்கு பகிர்ந்து எங்களை மகிழ்வுற செய்யும் சகோதரர் ஜெயக்குமார் சந்திரசேகர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.

    படத்தில் பிரபல பாடகர் பாலமுரளி கிருஷ்ணா அவர்களா? இன்னமும் சரியாக, உன்னிப்பாக பார்க்க வீட்டின் விநாயக சதுர்த்தி வேலைகள் தடை செய்கின்றன. பிறகு வருகிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  6. 1953-ம் ஆண்டு என்பது தனித்தமிழ் இயக்கம் தோன்றிய காலம் எங்கிறீர்கள்.. இது வரை தமிழ் எழுத்துத் துறையில் இந்த தனித்தமிழ்
    இயக்கக்காரர்கள் பல்வேறு வகைப்பட்ட வாசகர்கள் வாசிக்கிற மாதிரி என்ன சாதித்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை. வெகுஜன வாசகர்கள் ரசித்த ஒரு எழுத்தாளரின் பெயரைக் கூட சொல்ல முடியாத நிலை. ஆரிய -- திராவிட என்பதெல்லாம் வெற்று அரசியல் கோஷம்.

    மன உணர்வுகளை வெளிப்படுத்தும் எழுத்தாற்றலே செத்தது இவர்களால் தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புகழ் பெற்ற மறைமலை அடிகளும், பரிதிமாற்கலைஞரும் பெயரையே மாற்றி வைத்துக்கொண்ட காலமல்லவா அது. (1953)

      //மன உணர்வுகளை வெளிப்படுத்தும் எழுத்தாற்றலே செத்தது இவர்களால் தான்.//
      ஏன் சூடாமணியின் இணைப்பறவைகள் போன்ற கதைகள் இல்லையா?

      நீக்கு
    2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
    3. தனித் தமிழ் இயக்கக்கார்ர்களால் எதையும் சாதிக்க முடிந்ததில்லை. வெகுஜனங்களிடமிருந்து விலகிப்போகத்தான் அவர்களால் முடியும். அல்லது வெற்றுப் பெருமையினால் உணர்வைத் தூண்டி அதனால் தங்களுக்கு மாத்திரம் பெருமைதேடிக்கொள்வார்கள்.

      நீக்கு
    4. வேதாசலம்: மறைமலை
      சூரிய நாராயண சாஸ்திரி: பரிதி மால் கலைஞர்

      நீக்கு
  7. கபான் கானுக்குப் பாராட்டுகள்! அபாய நேரத்தில் தைரியமாகச் சென்று காப்பாற்றிய வீரர் அதுவும் அவரது அந்த வரி திரும்பி வந்தால் 9 பேருடன் வருவேன் என்பது அவரது நல்ல உள்ளத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
  8. இரண்டாவது செய்தி மணல் கொள்ளை - பாசிட்டிவ் செய்தியே...கோர்ட்டில் ஆஜர் செய்ததற்கு....அதே சமயம்

    //மேலும் கொலையா செய்து விட்டார், மணல் கடத்தலுக்கு நள்ளிரவில் கைது செய்வீர்களா என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.//

    இந்த மன நிலை மக்கள் மனதில் இருக்கும் வரை சமுதாயம் உருப்படப் போவதில்லை.

    கீதா

    பதிலளிநீக்கு
  9. உத்தர கன்னடா ஆசிரியை சந்தியா நாயக்கிற்கு வாழ்த்துகள். நல்ல நோக்கத்துடன் சிறப்பான பணி.

    கீதா

    பதிலளிநீக்கு
  10. இந்தக் கதையே பாத்திர படைப்புகளுக்கேற்ப கையாளும் எழுத்து நடைக்கும் அவரவர் உனர்வுகளை அவரவர் நிலையில் வெளிப்படுத்தும் திறமைக்கும் அடையாளம்.

    'சலிப்படைய வைக்கலாம். பொறுமை அவசியம்' போன்ற வார்த்தைகளை நீங்கள் தவிர்த்திருக்கலாம்.

    பதிலளிநீக்கு
  11. போனால்ஒருவன், வந்தால் ஒன்பது பேர்கள் என்றசிந்தனையே எப்படிப்பட்ட மனித்த் தன்மையை வெளிச்சமிடுகிறது. கான் அவர்களுக்குப் பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  12. இவ்வளவு படைப்புகள் இருந்தும் சிறுகதைகள் தளத்தில் இவரது படைப்பாக ஒரே ஒரு சிறுகதை மாத்திரம் இருக்கிறது. //

    காரணம் அங்குப் பகிரப்படும் அல்லது தேர்ந்தெடுக்கப்படும் எழுத்தாளர்கள் அல்லது நிர்வாகிகளின் மன நிலையைப் பொருத்து.

    ஒவ்வொருவரது வாசிப்பு மன நிலையும் வேறுபடும். ஒருவருக்குப் பிடித்த கதை மற்றொருவருக்குப் பிடிக்காமல் ஆகலாம்.

    பி வி ஆரின் கதைகள் சில தமிழ் பிடிஎஃப் தளத்தில் இருக்கின்றன.

    நான் இவரின் ஆடாத ஊஞ்சல் மற்றும் ஓடும் மேகங்கள் வாசித்திருக்கிறேன். ஆடும் ஊஞ்சல் பாலக்காட்டுத் தமிழ் உரையாடல்கள் இருக்கும். உணர்வுபூர்வமான உரையாடல்கள்.

    இப்போது அந்தத் தளத்தில் சில மாற்றங்கள் செய்திருப்பதால் பி டி எஃப் டவுன்லோட் செய்வது சிரமமாக இருக்கிறது,

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மற்றொன்று பல தளங்கள் அவர்களுக்குக் கிடைப்பதைத்தான் அப்படி ஸ்கான் செய்து பிடிஎஃப் வடிவில் அல்லது தட்டச்சு செய்து போடுகிறார்கள்.

      கீதா

      நீக்கு
  13. பி வி ஆர் கதை நன்று. முன் வினைப் பயன் என்பதை நம்பும் எல்லோரும் யாரை இறைவன் எப்போது எங்கு தூக்கிவைப்பார் என்பது தெரியாதாகையால் எவரையும் அலட்சியப்படுத்துவதையோ எள்ளிநகையாடுவதையோ தவிர்க்க வேண்டும். அனுபவம், மற்றும் பலரின் வாழ்வில் நிகழ்ந்தது எனக்கு இதைத்தான் புரிய வைத்துள்ளது. போலவே, உச்சாணியில் இருப்பவரும் புழுதியில் புரளும் வேளை வரும் என்பதால் அடக்கம் ஒன்றே அனைவரின் தேவை என்பது என் எண்ணம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கருத்துக்கு நன்றி. இது போன்ற பல நல்ல கதையாசிரியர்களுக்கும் சாஹித்ய அகாடமி பரிசு வழங்காதது ஒரு குறை தான்.

      நீக்கு
  14. இக்கதை, நன்று. தன் தூக்கம் கெடுகிறது என்பதால் - இத்தனைக்கும் சங்கீத ரசிகர், சபா நடத்துபவர் - வாய்ப்பு தேடி அலையும் நன்றாகப் பாடும் ஒருவரை அவமதிப்பதும் அதே நபர் பின்னாளில் புகழ்பெற்ற பாடகராக வந்து அவமதித்தவர் முன்னில் நிற்பதும்...

    யாரையுமே அவமதிப்பது என்பது மிகவும் மோசமான குணம்.

    திறமைகளைக் கண்டறியும் போது நம்மால் அவர்களை வழிநடத்தி ஊக்குவிக்க முடியவில்லை என்றாலும் முகத்தில் அறைவது போல் வார்த்தைகளைக் கொட்டாமல் இருக்கலாம்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆர்வத்துடன் எழுதுபவர்களையும் வழிநடத்தி ஊக்குவிப்பது உட்பட என்பதை இங்கு பதிகிறேன்.

      கீதா

      நீக்கு
  15. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  16. கதையில் கதாபாத்திரங்களின் உணர்வுகளை வெளிப்படுத்திய விதம் அது பி வி ஆரின் திறமை.

    இதுதான் மக்களோடு இயைந்து போகும். கதை முடிவில் 'பாத்தியா அன்னிக்கு அறைந்த அந்த நபர் இன்று உயரத்தில் இருப்பது' யாரையும் எள்ளி நகையாடக் கூடாது என்பது மறைபொருள்..

    எழுதப்பட்ட காலத்தையும் பார்க்க வேண்டும்.

    இப்பவும் இந்த எள்ளி நகையாடல் இலக்கிய உலகில், சங்கீத உலகில் என்று எல்லா இடங்களிலும் இருக்கத்தான் செய்கிறது. அன்று இப்படி நேரடியாக....இன்று ஊடகங்கள் அதுவும் ஏகப்பட்டவை!

    கதை எனக்கு மிகவும் பிடித்தது.

    கீதா

    பதிலளிநீக்கு
  17. அனைவருக்கும் வினாயகசதுர்த்தி நல்வாழ்த்துக்கள்

    ஹைதராபாத்தில் புல்டோசர்
    மூலம் 9 பேர்களை காப்பாற்றியவருக்கு வாழ்த்துக்கள். பாராட்டுகள்
    கே. சக்ரபாணி

    பதிலளிநீக்கு
  18. இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள் ஜி

    பதிலளிநீக்கு
  19. நட்புகள் அனைவருக்கும் விநாயக சதுர்த்தி வாழ்த்துகள்.

    உதவி செய்யும் கரங்கள் வாழட்டும்.

    கதை நல்ல படிப்பினையை தருகிறது. பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  20. உங்கள் கடலூரிலிருந்தே பெருஞ்சித்தரானரை ஆசிரியராய்க் கொண்டு 1960-களில் 'தென்மொழி' என்ற
    இதழ் வெளிவந்தது நினைவுக்கு வந்தது.
    அந்தப் பத்திரிகைக்கு சந்தா கட்டி வாசித்து வந்தவன் அடியேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயா எனக்கு அவரைத் (தேன்மொழி ஆசிரியர்) தெரியாது. புலியூர் கேசிகன் புத்தகங்கள் பள்ளியில் பரிசாக கிடைத்தன.
      Jayakumar

      நீக்கு
    2. ** பெரும்சித்திரனார்
      (இயற்பெயர்:
      இராஜமாணிக்கம்)

      நீக்கு
  21. இதழின் பெயர் தேன் மொழி அல்ல. தென்மொழி.
    தட்டச்சுப் பிழையாக இருந்திருக்கவும் கூடும்.

    பதிலளிநீக்கு
  22. வேதாச்சலனாரின் தனித்தமிழ் இயக்கம் என்றவுடன் நினைவுக்கு வருகிறது.
    பொதுவுடமைக்கட்சித் தோழர் ஜீவானந்தம் (ஜீவா) மறைமலையடிகளாரின் தனித்தமிழ் இயக்கம் கண்டு ஆர்வம் கொண்டு தாமும் தனித்தமிழில் இனி பேச வேண்டும் எழுத வேண்டும்
    என்று ஆர்வம் கொண்டார். அதற்காக தனிதமிழ் உச்சரிப்பு முயற்சிகளை மேற்கொண்டார். தன் பெயரையே உயிர் அன்பன் என்று மாற்றிக் கொள்ளும் அளவுக்கு அவர் சிந்தனை தனிதமிழ் ஆர்வத்தில் குவிந்திருந்தது.
    ஒரு தடவை அவர் மறைமலையடிகளாரைப் பார்க்க அவர் இல்லத்திற்குச் சென்றிருந்தார், வீட்டின் வெளிக்கதவு மூடியிருந்ததினால் "ஐயா.." என்ற அழைப்புடன் கதவைத் தட்டினார்.
    "யாரது?.. போஸ்ட்மேனா?" என்று கேட்டுக்கொண்டே கதவு திறந்த
    வேதாசலனாரைப் பார்த்து ஜீவா திகைத்தார்.
    தனித்தமிழில் பேச வேண்டும் என்று மேற்கொண்ட எண்ணிலா முயற்சிகள் அவரளவில் மடிந்தது.
    நமக்கும் தோழர் ஜீவா பழைய ஜீவானந்தமாகவே கிடைத்தார்.

    பதிலளிநீக்கு
  23. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தமிழ் பத்திரிகை உலகில்
      மணிப்பிரவாள நடைக்கு சரியான உதாரணம்
      சொல்ல வேண்டும் என்றால் ஜெயகாந்தனின் எழுத்து நடையினைச் சொல்லலாம்.

      நீக்கு
  24. விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்.
    நல்ல செய்திகள் உதவும் உள்ளங்களை சொல்கிறது அனைவருக்கும் வாழ்த்துகள்.

    //என் கண்களுக்கு நானே சின்னவனாகியதை நினைத்துக் கொண்டே நடந்தேன். நிமிஷத்துக்கொருதரம், சாயங்காலம் நடந்ததெல்லாம் என்னுள் மோதி என்னைத் தலை கவிழச் செய்தன. ஒருவனுடைய படிப்புக்கும், வயதுக்கும் அந்தஸ்துக்கும் மேலாக ‘ஒன்று’ இருக்கிறது என்று தெரிந்தும் நடைமுறையில் தெரியாதவன் போல இருந்ததன் பலனை நினைக்க நினைக்க மனம் சுருங்கியது.//

    கதை எளியாரை வலியார் மிதிக்கும் செயல், அந்த செயலை நினைத்து வருத்தும் உள்ளத்தை சொல்கிறது.
    தூக்கம் கெட்டால் இவ்வளவு கோபம் வந்து இருக்கிறது.
    தன் தப்பை உணர்ந்து விட்டார் அது போதும். அடித்தவரிடம் மன்னிப்பு கேட்டு இருக்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கருத்துக்கு நன்றி. ஆழ்ந்த தூக்கம் என்பது ஒரு த்யானம் போன்றது. அதில் குறுக்கீடு நேருமானால் கோபம் வருவது இயற்கை. எத்தனை முனிவர்கள் தியானம் கலைந்ததற்கு பிடி சாபம் கொடுத்திருக்கிறார்கள்.

      Jayakumar​

      நீக்கு
  25. இந்த வாரத்தின் சிறப்புச் செய்திகள் அனைத்தும் நன்று. முதல் செய்தி நானும் படித்தேன்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!