ஞாயிறு, 29 செப்டம்பர், 2024

நான் தரிசனம் செய்த கோயில்கள் – நெல்லைத்தமிழன் ஐந்து துவாரகைகள் யாத்திரை – பகுதி 39

 

குருக்ஷேத்திரத்தில் காலை உணவிற்குப் பிறகு 11 மணி வாக்கில் அர்ஜுனனுக்கு கண்ணன் கீதை உபதேசித்த இடத்திற்குச் சென்றோம்குருக்ஷேத்திரம் முழுவதுமே யுத்தம் நடந்த பூமி என்பதை மனதில் வைப்போம். அதனால் இந்த இடத்தில்தான் கீதை உபதேசம் நடந்தது, இங்குதான் பீஷ்மர் அம்புப் படுக்கையில் கிடந்தார் என்பதை ஆங்காங்கிருக்கும் நீர்நிலைகள் மற்றும் அடையாளங்களை வைத்துத்தான் கோவில்கள் எழுப்பியிருக்கின்றனர்.

ஜ்யோதிஷர் என்று அழைக்கப்படும் இடம், ஜ்யோதிஷ சரோவர் கரையில் அமைந்துள்ளது. இங்குதான் ஆலமரத்தடியில் அர்ஜுனனுக்கு கண்ணன் கீதையை உபதேசித்தார் என்று சொல்கின்றனர்.

ஜ்யோதிஷர் தீர்த்தம். இதன் கரையில்தான் ஆலமரம் அமைந்துள்ளது



அந்த வளாகத்திலேயே சிறிய சிறிய கோவில்கள் இருக்கின்றன.

இந்த ஆலமரத்தின் அடியில்தான் (பக்கத்தில்) கீதா உபதேசத்தை மாடல் செய்துவைத்திருக்கிறார்கள்  (காஞ்சி காமகோடி பீடம்)



இந்த இடத்தின் எதிரே நாங்கள் எல்லோரும் அமர்ந்து விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம் செய்தோம்.

குழுவினர் அனைவரும் அமர்ந்து சஹஸ்ரநாம பாராயணம் செய்தோம்.

யாத்திரைக்கு அழைத்துச் சென்றவருடன் நினைவுக்காக எடுத்துக்கொண்ட புகைப்படம்.

வைணவ மொழியில், தெண்டன் சமர்ப்பித்தல் என்று சொல்லுவோம். வைணவப் பெரியவரைக் கண்டால் உடனே கீழே விழுந்து வணங்கவேண்டும். ஒரு உலக்கையை சம தளத்தில் நிற்கவைத்து கையை எடுத்தால் எப்படி அது உடனே விழுமோ அதுபோல, அடியற்ற மரம்போல (தமிழ்ல இல்லாத சொற்கள் உண்டா?) விழுந்து வணங்கவேண்டும் என்பது மரபு. ஆனால் பாருங்க, அப்படிச் செய்ய மனம் வருவதில்லை. ஏன், திருவல்லிக்கேணியில் ஸ்வாமி வீதியில் வரும்போது கீழே விழுந்து வணங்க மனம் வருவதில்லை, சாலை இவ்வளவு புழுதியாக இருக்கிறதே, போட்டிருக்கும் உடை அழுக்காகிவிடுமே என்றெல்லாம் மனதில் தோன்றுகிறதுநான் கைப்பையில் ஒரு துண்டை எடுத்துக்கொண்டு வருவேன். எங்கள் மரபுப்படி கோவிலிலோ இல்லை பெரியவர்கள் முன்போ, கீழே ஆசனமிட்டு அமரக்கூடாது, அதாவது துண்டைக்கூட கீழே போட்டுக்கொண்டு அதன் மீது உட்காரக்கூடாது. ஆனால் பாருங்க, எல்லா இடத்திலும் உட்கார்ந்தால் வேஷ்டி அழுக்காயிடுமே. இந்தக் கவலையால்தான் நான் துண்டை வேஷ்டி மீதே கட்டிக்கொண்டுவிடுவேன். இந்தப் புகைப்பட த்தைப் பார்த்ததும் எனக்கு எழுதத் தோன்றியது.






ஆலமரத்தடியில் கிருஷ்ணரது திருவடி மற்றும் சிறிய அளவில் அர்ஜுனனுடன் தேரில் இருப்பது போன்று சிலை வடித்துவைத்திருந்தார்கள்.

ஜ்யோதிஷர் தீர்த்தம். 

இந்த இடத்தின் அருகிலேயே (அதே வளாகத்தில்) ஸ்ரீகிருஷ்ணரது விராட் உருவம் (தன்னுடைய முழு உருவத்தை அர்ஜுனனுக்குக் காட்டியபடி) அழகிய சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது. அதையும் புகைப்படம் எடுத்தோம்.

எல்லோரும் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டதும் அந்த இடத்திலிருந்து பீஷ்ம குண்டம் இருக்கும் இடத்திற்குப் புறப்பட்டோம்

பீஷ்ம குண்டம்

மஹாபாரத யுத்தத்தின் பத்தாம் நாள் பீஷ்மர் வீழ்ந்துபடுகிறார். அர்ஜுனன் அம்பால் துளைக்கப்பட்ட அவருக்கு ஒரு வரம் இருக்கிறது. அது அவரது அப்பாவினால், அவருக்குக் கொடுக்கப்பட்ட வரம், அதாவது பீஷ்மர் விரும்பும்போது அவருக்கு மரணம் ஏற்படும் என்பது. (இச்சா ம்ருத்யு). தந்தையின் ஆசை நிறைவேறும்பொருட்டு, ஆட்சி பீடம் தனக்கு வேண்டாம் என்று ஆட்சி அதிகாரத்தைத் துறந்த செயல் அவரது தந்தையின் மனதை சந்தோஷப்படுத்தி வரம் கொடுக்க வைத்ததுபீஷ்மர் வீழ்ந்துபட்டதும், அவருக்கு கஷ்டம் இல்லாது இருக்க, அர்ஜுன் அம்புப் படுக்கை அமைத்தான். அதாவது உடல் முழுவதையும் அம்பினால் தாங்கி நிற்கும்படியாக பல அம்புகள் எய்து அவருக்குப் படுக்கை அமைத்தான். அப்போது பீஷ்மருக்கு தாகம் எடுக்க, அர்ஜுனன் அதைப் புரிந்துகொண்டு அம்பை பூமியை நோக்கி எய்து பூமியிலிருந்து நீர்ப்பெருக்கு வரச் செய்து அவரது தாகத்தைத் தீர்த்தான். இந்த நீர்ப்பெருக்கு வந்த இடம்தான் பீஷ்ம குண்டம் என்று தற்போது அழைக்கப்படுகிறது.




இந்த வளாகத்திலேயே கோவில் ஒன்றும் இருக்கிறது. இது மிகப் புராதானமான இடம் என்று சொல்கின்றனர் (கோவில்). அங்கு சில சன்னிதிகள் இருந்தன. அவற்றையும் தரிசனம் செய்துகொண்டோம். பிறகு அங்கேயே வெளிப்புறத்தில் எல்லோரும் அமர்ந்து விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம் செய்தோம்.

பீஷ்ம குண்ட் அருகே இருந்த கோவிலின் தோற்றம்

இந்தக் கோவிலில் முக்கியமானது பீஷ்மர் அம்புப்படுக்கையில் கிடப்பது மாதிரியான சன்னிதிதான். இது தவிர சில சிறிய சன்னிதிகளும் இருந்தன.



இரண்டு இடங்களையும் பார்த்த பிறகு தங்குமிடத்திற்குத் திரும்பினோம். அறைகளைக் காலி செய்த பிறகு, 1 ½ மணி வாக்கில் பேருந்து எங்களை ஏற்றிக்கொண்டு தில்லி நோக்கிச் செல்ல ஆரம்பித்தது.

பஞ்ச துவாரகா யாத்திரை குருக்ஷேத்திரத்துடன் நிறைவு பெற்றது. நாங்கள் மறுநாள் இரவு ஜிடி எக்ஸ்பிரஸில் சென்னை செல்வதால் தில்லி சென்று திரும்புவோம். தில்லியில் என்ன செய்தோம் என்பதை அடுத்த வாரம் நிறைவுப் பகுதியில் காணலாம்.

(தொடரும்) 

49 கருத்துகள்:

  1. தீர்த்தக் கரையிலிருக்கும் ஆலமரத்தடியில் தான் கீதோபதேசம் நடந்தது என்று நீங்கள் ஆரம்பத்திலேயே குறிப்பிட்டு விட்டபடியால்,

    ஜியோதிஷர் தீர்த்தம், அதன் கரை, ஆலமரம் என்று மனத்தில் இருத்தி வாசித்து வரும் பொழுதே
    அந்த உணர்வு ஏற்பட்டு விட்டது, நெல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜீவி சார்... மிகப் பெரிய போர்க்களத்தில், பாண்டவர்களுக்கான பகுதியில், தேரில் இருந்து அர்ஜுன்னுக்கு கண்ணன் கீதை உபதேசித்தான். அந்த இடமே எவ்வளவு பிரம்மாண்டமாக இருந்திருக்க வேண்டும்? நினைத்தாலே புல்லரிக்கவைக்கும் சூழல்.

      நீக்கு
  2. காஞ்சி காமகோடி பீடம்
    நிருவியிருக்கும் மாடல், நாம் பார்த்துப் பார்த்துப் பழக்கப்பட்ட கீதா உபதேச
    காட்சி போல இல்லாதிருக்கிறதே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஜீவி சார். அதற்கு ஓரளவுக்காவது, கர்ணன் பட இயக்குநர் ஏபி நாகராஜன் அவர்களும் ஒரு காரணம். நம் கற்பனைத் திறனும் ஒரு காரணம். விராட உருவத்தையும், கீதோபதேசத்தையும் சிற்பங்களால், நம் மனதில் விரிந்த காட்சி போல வடிக்க இயலாது.

      நீக்கு
  3. ஆலமரத்தடியில் ரதத்தோடு கிருஷ்ண பகவான் தரிசனம் அருளியதில் பரம திருப்தி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த இடத்திற்குச் சென்ற போதெல்லாம் வஷ்ணு சஹஸ்ரநாம்ம் பாராயணம் பண்ணியதில் எங்களுக்கும் மனத் திருப்தி.

      நீக்கு
    2. மகா புண்ணியமான விஷயம். இதெற்கெல்லாம் அருள் பாலித்த இறைவனுக்கு நன்றி சொல்வோம்.

      நீக்கு
    3. வைணவ திவ்யதேசங்கள் அனைத்தையும் தரிசனம் செய்ததஐ நினைக்கும்போது எப்போதுமே மனதில் நன்றியுணர்ச்சி உண்டாகும். அவன் அருளன்றி எதுதான் சாத்தியம்? எனக்கு வரவேண்டிய பெரும் பணம் எனக்குக் கிட்டாத்தற்கும் அவன்தான் காரணம்.

      நீக்கு
  4. அம்புப் படுக்கையில் பீஷ்மர் கல்ங்க வைத்தது., பீஷ்ம குண்டம் அது பற்றிய வரலாற்றுத் தகவல்களையெல்லாம் அழகாக எழுதியிருக்கிறீர்கள். மிக்க நன்றி, நெல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்திய வரலாற்றிலேயே, ஏன் உலகத்திலேயே சிறந்த காவியம் மஹாபாரதம்தான் என்பது என் அபிப்ராயம். ஒவ்வொருவரது கர்மவினை அவர்களின் வாழ்வின் இறுதிக்கும் பாதை அமைக்கிறது. கங்கைபுத்திர்ரான பீஷ்மரின் வரலாறும் ஒருவரின் கொள்கை எப்படி அவரின் கர்மவினைகளுக்குக் காரணமாக அமைகிறது என்பதைப் புரியவைக்கும். அம்பிகை அம்பாலிகைக்கான அநீதி, அவரின் வாழ்வில் துரத்தி வந்தது. .

      நீக்கு
  5. தங்கள் விளக்கம் தத்ரூபமான
    போட்டோக்கள். அப்படியே
    எங்களை அந்த இடங்களுக்கே
    அழைத்து சென்றதாக
    உணர்ந்தோம். தங்கள் பணிக்கு நன்றி. மேலும்
    கடவுள் அருளால் தொடரட்டும்.
    கே. சக்ரபாணி

    பதிலளிநீக்கு
  6. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  7. இந்த வாரம் சாப்பாடு பற்றிய தகவல் ஒன்றுமே இல்லை. வழக்கம் போல் படங்கள் சிறப்பாக அமைந்திருக்கின்றன.
    ஆனால் கோயில் விக்ரகங்கள் என்னமோ கொலு பொம்மைகள் போன்று இருப்பது தான் துரதிர்ஷ்டம். உதாரணமாக திருப்பதி பாலாஜியின் படத்தைக் கண்டாலே ஒரு பக்திஉணர்வு மனதில் ஏற்படும். அது இல்லை.

    என்று புறப்பட்டு என்று வந்தீர்கள் என்ற குறிப்பையும் எந்தெந்த நாட்களில் எங்கிருந்தீர்கள் என்பதையும் ஒரு சிறு அட்டவணையாக கொடுத்தால் டூர் போக உத்தேசிப்பவர்களுக்கு ஒரு கையேடு போல் உதவியாக இருக்கும். இது கடைசி பதிவில் சேர்க்கலாம்.
    Jayakumar​

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சென்ற வார இறுதியில் எழுதின நினைவு ஜெயகுமார் சார். வடை பாயசத்துடன் விருந்திற்குப் பின்னர்தான் இந்த இடங்களுக்குச் சென்றோம். திரும்பி வந்த பிறகு, அறையைக் காலி செய்துவிட்டு தில்லி நோக்கிப் பயணிப்போம்.

      நீக்கு
    2. நீங்கள், கோவிலின் கடவுளர் உருவங்களைப் பற்றி எழுதியிருப்பதில் உண்மை இருக்கிறது. கோகுலம், மதுரா, குருஷேத்திரம் போன்ற இடங்களில் இவ்வாரான உருவங்கள் நடந்த நிகழ்வைக் காட்டுமாறு அமைந்ததே அன்றி, கர்பக்ரஹம் போன்று அமைந்தவை அல்ல.

      நீக்கு
  8. பீஷ்மர் ஏன் அம்புப்படுக்கையில் உடனடியாக  மரணத்தைத் தருவித்துக் கொள்ளாமல் காத்திருந்தார்?  புண்ய காலத்தில் உயிர் துறக்க வேண்டும் என்றா?  எத்தனை நாள் உயிர் வாதையுடன் அங்கிருந்தார்?  அது ஏதாவது தனக்குத்தானே அளித்துக் கொள்ளும் தண்டனை, பிராயச்சித்தம் போலவா?  மறுபடி போய் பாரதத்தில் இந்த இடம் படிக்க வேண்டும்.  இதற்கு விதைகளாக எதுவும் படித்த நினைவு இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பீஷ்மர் போர் முடியும் வரை உயிருடன் இருந்தார். போர் முடிந்தபின் எட்டு நாள் கழித்துதான் இறந்தார்.
      அவர் எப்போது விரும்புகிறாரோ அப்போ தான் இறக்க முடியும் அப்படி ஒரு வரம் அவருக்கு. அவர் விரும்பும் நாளில், விரும்பு வேளையில் இறப்பு அவருக்கு.
      விஷ்ணு சஹஸ்ரநாமாவை தந்து விட்டு எல்லோருக்கும் நல்லதை சொல்லி விட்டு பின் தான் மரணம்.

      நீக்கு
    2. வாங்க ஸ்ரீராம்.

      யாருமே செய்வதற்கு ஆசைப்படாத காரியத்தை பீஷ்மர் செய்தார். தான் அரசபதவிக்கு வரமாட்டேன் என்றும் தன் தந்தையின் ஆசை மனைவியின் வாரிசுகள்தாம் பதவிக்கு வருவார்கள் என்றும், கடைசிவரை அந்த சிம்மாசனத்தில் இருக்கும் ராஜாவிற்கு விசுவாசமாக இருப்பேன் என்றும் சபதம் மேற்கொண்டார். இதனால் தந்தை சந்தோஷப்பட்டு, நீ நினைக்கும்போதுதான் மரணமடைவாய் என்ற வரம் கொடுத்தார். பீஷ்மர், சிம்மாசனத்தில் இருக்கும் அரசனுக்கு விசுவாசியாக இருப்பேன் என்ற சபதம் மேற்கொண்டதால், அநீதிகளுக்கு மறைமுகமாகத் துணைபோனார்.

      அர்ஜுனன் சிகண்டியை முன்னிட்டு தன்னை வீழ்த்தியபிறகு சுமார் இரண்டு மாத காலம் அம்புப்படுக்கையில் இருந்தார். உத்தராயணம் (இறப்பதற்கான நல்ல காலம்) வந்தபிறகு தன் உயிரை விட்டார். அம்புப் படுக்கையில் இருந்தபோது யுத்தம் முடிவடையவில்லை. அவருடைய வீழ்ச்சிக்குப் பிறகும் 8 நாட்கள் யுத்தம் நடந்தது. தருமன் அரசனான பிறகு அவனுக்கும் பாண்டவர்களுக்கும் பல உபதேசங்களைச் செய்தார்.

      எனக்கு பீஷ்மரின் செயல்களான, அம்பிகை அம்பாலிகைகளை அஸ்தினாபுரத்திற்குக் கொண்டுவருவது, திருதிராஷ்டிரன் மற்றும் துரியோதனன் தவறுகள் செய்தபோது, தன்னுடைய வீரத்தையும் வயதையும் முன்னிறுத்தி அவைகள் நடவாமல் பார்த்துக்கொள்ளாதது போன்றவை, பெரிய தவறுகளாகத் தோன்றும்.

      உங்களுக்கு அடிபட்டுக்கிடக்கும் நாய் இன்னும் சற்று நேரத்தில் உயிரை விடும் என்ற விதி தெரிந்திருந்தாலோ, இல்லை இந்த நாயின் விதியால் இப்போது பேருந்தில் அடிபட்டு இறக்கப்போகிறது என்பது தெரிந்திருந்தால், என்ன செய்வீர்கள்?

      நீக்கு
  9. உச்சி வெயிலில் மார்பிள் தரையில் பாராயணம் முடியும் வரை (அரை மணி நேரம்) எப்படித்தான் உட்கார்ந்திருந்தீர்களோ
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அங்கு சென்ற இரண்டு முறைகளும் சூடு அதிகமாக இல்லை. ஒருவேளை வெயில் அதிகமாக இருந்திருந்தால், ஆலமரத்தடியில் பாராயணம் செய்திருப்போம்.

      நீக்கு
  10. முருகன் திருவருள் முன் நின்று காக்க...

    பதிலளிநீக்கு
  11. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  12. குருக்ஷேத்திர படங்கள் , மற்றும் விவரங்கள் அருமை.
    படங்கள் மிக துல்லியம். மீண்டும் தரிசனம் செய்த மன நிறைவு ஏற்பட்டது.

    விஷ்ணு சஹஸ்ரநாமாவை அங்கு பாராயணம் செய்தது

    சிறப்பு. அங்கு தானே பிஷ்மர் இயற்றினார்.

    தனக்கு சாவு வரும் இத்தனை நாளில் என்று தெரிந்து படுத்து இருப்பவர்களை அந்தக்கால மக்கள் சொல்வார்கள் பீஷ்மர் அம்பு படுக்கையில் படுத்து கிடப்பது போல படுத்து இருந்தார் என்பார்கள்.

    என் அக்கா 25 வயது புற்று நோயால் வலியோடு படுத்து நாட்களை எண்ணி கொண்டு இருந்தார், அப்போது மருத்துவர் சொல்வார் அக்காவை மிக தைரியமாக தன் மரணத்தை பிஷ்மர் மாதிரி தாங்கி கொண்டு இறை நாமாவை சொல்கிறார் என்று.

    அவர் சொன்னது நினைவுக்கு வந்தது.
    பீஷ்மர் அம்பு படுக்கையில் படுத்து இருப்பதை அன்று பார்த்த போதும் நினைவுக்கு வந்து என் மகளிடம் மருத்துவர் சொன்னதை
    சொன்னேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கோமதி அரசு மேடம்... 'பீஷ்மர் மாதிரி' - ஓ.. இந்த மாதிரி உபயோகிக்கறாங்களா? நீங்கள் எழுதினதைப் படித்த பிறகுதான், பீஷ்மருக்கு அப்போது வலி இருந்திருக்கும் என்பதே எனக்கு உறைக்கிறது. 2 மாதங்கள்.... எவ்வளவு வலியோடு மரணத்துக்கான நாளை எண்ணிக் காத்திருந்திருப்பார். அல்லது நாம்தான் அம்புப்படுக்கை என்பதைத் தவறாகப் புரிந்துகொண்டு சித்தரிக்கிறோமோ?

      நீக்கு
  13. குருஷேத்திரம் கீதை உபதேசித்த ஆலமரம் , ஜ்யோதிஷர் தீர்த்தம்., கிருஷ்ண பகவானின் விராட் உருவம் அனைத்தும் உங்கள் பயணத்தால் நாங்களும் கண்டு தரிசித்தோம். மிக்க நன்றி.

    வீஷ்மர் அம்புப் படுக்கையில் இருப்பது கண்டு வணங்கிக்கொண்டோம் அவரின் தியாகம் சொல்ல வார்த்தைகள் இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க மாதேவி. மிக்க நன்றி. ஒரு கேள்வி. தமிழ்ல பீஷ்மர் என்று எழுதுவதில்லை. வீடுமர் என்றே எழுதுவார்கள் (இலக்கியத்தில்). நீங்கள் வீஷ்மர் என்ற பதமா உபயோகிப்பீர்கள்?

      நீக்கு
  14. ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம் அருளிய மகாத்மா பீஷ்மர் திருவடிகளுக்கு நமஸ்காரம்..

    பதிலளிநீக்கு
  15. பீஷ்மரது மன உறுதிக்கு ஸ்ரீமதி கோமதி அரசு அவர்களது தகவல் புதிய கோணம்...

    ஓம் ஹரி ஓம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதை மன உறுதி என்று சொல்வதா? இல்லை நல்ல நேரத்திற்காகக் காத்திருத்தல் என்று சொல்வதா? எப்படியும் அவருடைய அனுமதி இல்லாமல் அவருக்கு இறப்பு இல்லை அல்லவா?

      நீக்கு
  16. வசுக்களின் தலைவன் பிரபாசன்..
    தலைவன் தானடங்கி இருப்பதோடு தன்னைச் சேர்ந்தவர்களையும் அடங்கி யிருக்கச் செய்தல் வேண்டும்...

    இல்லையேல் பீஷ்மரது அவஸ்தை தான்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ஹா.... பீஷ்மர் இறப்பைக் கண்டு அஞ்சவில்லை. ஆனால் ஒருவேளை அதர்மம் பக்கம் நின்றதால் அவருக்கு கடைசி காலத்தில் சுமார் இரு மாதங்கள் கஷ்டப்பட நேர்ந்ததோ என்னவோ.

      நீக்கு
    2. உலகத்துக்கு ஒரு செய்தியைச் சொல்லி விட்டு போவேண்டும் என்று காத்திருந்தார் போல...

      அல்லது அந்த மந்திரம் சொன்னால் சில காலம் கழித்துதான் பலனளிக்குமோ...

      நீக்கு
  17. வணக்கம் நெல்லைத் தமிழர் சகோதரரே

    இன்றைய கோவில் யாத்திரை பதிவுத் தொடர் மிக அருமையாக உள்ளது. படங்கள் அனைத்தையும் மிக நன்றாக எடுத்துள்ளீர்கள். கிருஷ்ணர், பிறந்து, வளர்ந்து, மறைந்தது முதற் கொண்டு அந்தந்த இடங்களை நல்ல விரிவாக நீங்கள் படங்கள் பலவுடன் சொல்லியதில் இதற்கு முன்னாலான பதிவுகள் எல்லாம் சுவாரஷ்யமாக இருந்தது.

    இன்றைய பகுதியிலேயும் அவர் (கிருஷ்ணர்) என்ன காரணத்திற்காக இப்பூவுலகில் ஜனித்தாரோ, அதை சுட்டிக்காட்டும் இடங்களாகிய பகவத்கீதை பிறந்த இடம், பீஷ்மர் அம்பு படுக்கையில் தன்னுடலை கிடத்தி, நமக்கெல்லாம் கீதையின் காரணகர்த்தாவாக அந்த பகவானின் நாமங்களை துதி பாடும் பாக்கியத்தை தந்து, பிறகு அவர் இறைவனோடு இரண்டற கலந்து ஐக்கியமாகும் பேறு பெற்ற தலம், என பலவற்றை நீங்கள் படங்களோடு விவரிக்கும் போது எங்களை கிருஷ்ணர் வாழ்ந்த அந்த காலத்திற்கே அழைத்துப் போனது.

    எல்லாவற்றையும் பார்த்து தரிசனம் செய்து கொண்டேன். இத்தொடர் முடியப் போகிறதே என இருக்கிறது.அருமையான இடங்கள். இப்படியான இடங்களை இதுவரை நேரில் பார்த்த உணர்வை அளித்து வந்தது தங்கள் பதிவுகள். அனைத்தையும் தொகுத்து ஒரு புத்தகமாக்க முயற்சியுங்கள். அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா ஹரிஹரன் மேடம். இன்றைக்குத்தான் பார்த்தேன். இந்த வருடம் ஜனவரி முதல் வாரத்தில் இந்தத் தொடரை ஆரம்பித்திருக்கிறேன். அடுத்த தொடர் (நிச்சயம் கோவில்கள் சம்பந்தமானதுதான்) எதை எழுதலாம் என்று யோசிக்கிறேன். மிக்க நன்றி.

      நீக்கு
  18. படங்கள் அனைத்தும் வழக்கம் போல மிகவும் அழகாக உள்ளது.

    வேட்டியோடு துண்டு நல்ல யோசனை....

    பதிலளிநீக்கு
  19. இந்த இரண்டு இடங்களுக்கும் சென்றிருக்கிறேன். உங்களை போலவே அங்கே விஷ்ணு ஸஹஸ்ரநாம பாராயணமும் செய்திருக்கிறோம். நல்ல இடங்கள் தான் - ஆனாலும் ஆலயம் போன்ற எண்ணம் வராது. சரியான பராமரிப்பும் இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வெங்கட். அந்த இடங்களின் சரித்திர முக்கியத்துவம் மாத்திரமே நினைவுக்கு வரும் என்பது உண்மைதான். Enchrachment அதிகம். பராமரிப்பு குறைவு.

      நீக்கு
  20. நெல்லை குருஷேத்திர படங்களும், பீஷ்ம குண்டம், படங்கள் அதைப்பற்றிய விவரங்கள் எல்லாமே சூப்பர்.

    ஹாஹாஹாஹா வேட்டியோடு துண்டு அட! நல்ல ஐடியாவாக இருக்கே.

    ஆனா பாருங்க நீங்க சொல்லிருக்காப்ல, புண்ணிய இடம்னு சொன்னாலும் கூட நம்ம மனசுல லௌகீகம்!!!!! நம்ம ட்ரெஸ்ல அழுக்காகிடும், இப்படித்தான் போகுது!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீதா ரங்கன்(க்கா)... ஆளைக் காணோமே... பயணமா?

      நம்ம மனசுல (நம் எல்லோரின் மனசுலயும்) சுயநலம் கண்டிப்பா இருக்கு. இராமானுஜர் காவிரி ஆற்றின் மணலில் பட்டப்பகலில் விழுந்து சேவித்தபோது, அவரை எழுந்திருக்கச் சொல்லவில்லை அவரது ஆச்சார்யர். யார் ராமானுஜரை நினைத்துப் பதட்டப்படுகிறார்கள் என்று பார்த்தார். இராமானுஜரை சுடு மணலிலிலிருந்து எழுந்திருக்கச் சொல்லவில்லையா? என்று கோபத்தோடு கேட்டவரையே, ஆச்சார்யார், இராமானுஜருக்கு உணவு தயார் செய்யும் கைங்கர்யம் செய்ய நியமித்தார் (அதற்கு முன்பு இராமானுஜர் உணவில் யாரோ விஷமிட்டார்கள்).

      அந்தக் காலம்லாம் போயேவிட்டது. இப்போல்லாம் தெருவிலோ இல்லை ஆச்சார்யரைப் பார்த்த உடனேயோ சேவிப்பதற்கு முன்பு, நாம் சேவிக்கும் இடம் சுத்தமா இருக்கிறதா என்று பார்ப்பவர்களே அதிகம். கோவிலில் கொடுக்கும் குங்குமம் தன் கையையும் கொஞ்சம் தவறினால் உடையையும் பாழ்படுத்துமே என்று எண்ணி கோவில் தூண்களில் போட்டுவிட்டு வருபவர்களே 90 சதத்திற்கும் அதிகம். ஹா ஹா ஹா.

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!