திங்கள், 23 செப்டம்பர், 2024

'திங்க'க்கிழமை  :  தஹி ஆலு - பானுமதி வெங்கடேஸ்வரன் ரெஸிப்பி 

 

தஹி ஆலு 


தேவையான பொருள்கள்: 

 உருளைக் கிழங்கு(மீடியம் சைஸ்) -      2 
தயிர்                                                              -         1 கப் 
உப்பு                                                               -        தேவையான அளவு 
தாளிக்க -  எண்ணெய் ஒரு டீ ஸ்பூன், சீரகம், பட்டை சிறு துண்டு. 
தயிர் புளிக்காமல், கெட்டியாக இருக்க வேண்டியதுஅவசியம்.

செய்முறை:


முதலில் உருளைக் கிழங்கை வேக வைத்து, அதன் தோலை உரித்து, சிறிதாக நறுக்கி கொள்ளவும்.


வாணலியை அடுப்பில் வைத்து, எண்ணெய் விட்டு, சீரகம் மற்றும் பட்டை தாளித்து, அதில் தயிர் விட்டு, உருளைக் கிழங்குகளை போட்டு, உப்பு சேர்த்து,  லேசாக கொதிக்க வைத்து கொத்துமல்லி தூவி இறக்கி விடலாம்.  செய்வதற்கு எளிமையான, வெங்காயம் கூட சேர்க்காத சுத்த  உணவு. 

சமீப சென்னை விஜயத்தின் பொழுது என் அக்கா பெண் வீட்டிற்கு சென்றிருந்தோம் அப்போது அக்காவின் பேத்தி செய்திருந்தாள். Gujarathi cuisine என்றாள். அவளிடம் செய்முறை கேட்டு, வீட்டில் செய்த பொழுது, "ஆ! இதை நம் பாட்டி செய்திருக்கிறாளே..?"  என்று மண்டைக்குள் பல்ப் எரிந்தது. மெலட்டூரில் பிறந்து, கண்டமங்கலத்தில் வாழ்க்கைப்பட்டு, திருச்சியில் சில காலங்கள் வசித்த என் பாட்டிக்கு குஜராத்தி தோழியர் யாரும் கிடையாது. பாட்டி யாரிடம் இதை  கற்றுக் கொண்டிருப்பாள்? சொந்த கற்பனையாகத்தான் இருக்க வேண்டும்.

பாட்டியின் செய்முறையில் ஒரு வித்தியாசம். பாட்டி வேக வைத்த உ.கி.களை துண்டுகளாக நறுக்கிக் கொள்ள மாட்டாள், கைகளால் மசித்து, கெட்டித் தயிரில் கலந்து, பச்சை மிளகாயை கீறி தாளிப்பாள். அதுவும் நன்றாகத்தான் இருக்கும்.

25 கருத்துகள்:

  1. உங்களுடைய தஹி ஆலு வைக் காட்டிலும் பாட்டி செய்த உருளை தயிர் பச்சடி நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது. காரணம் பச்சை மிளகாய். புளிப்பை சமன் படுத்தும். இந்த தஹி ஆலு விற்கு மஞ்சள் பொடி சேர்க்க வேண்டாமா?
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாட்டியின் கைவண்ணத்தில் எல்லாமே சிறப்பு. தயிரின் வெண்மை தெரிய வேண்டும், எனவே நோ மஞ்சள்பொடி. வருகைக்குப்,கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  2. முருகன் திருவருள் முன் நின்று காக்க...

    பதிலளிநீக்கு
  3. பானுக்கா சூப்பர்....ரெசிப்பி.

    நம்ம வீட்டுல ரொம்ப பிடிக்கும்.

    நீங்க சொல்லி இருக்கும் பாட்டியின் செய்முறை உகி பச்சடி என் மாய்யார் செய்வாங்க.

    இன்னொரு ஒன்னு வேலை முடித்துவந்து சொல்றேன்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு முறை திடீரென்று விருந்தினர் 4 பேர்வந்துவிட்டனர். அவர்களில் இருவரை அப்போதுதான் முதல் முறையாகப் பார்க்கிறேன்.
      காய்கள் இரண்டு வகை செய்திருந்தவை இருந்தன. கணிசமாக இருந்தன. உருளைக்கிழங்கு தயிர் சேர்த்து (கொதிக்கவிடாமல்) இந்தக் குறிப்பில் செய்திருந்ததும் கொஞ்சமாக இருந்தது. குழம்புதான் பற்றமால் இருந்தது. அதைக் கொஞ்சம் கூட்டி சமாளிக்க முடியாது என்பதால்.
      உடனே இருந்த உருளைக் கிழங்கு தயிரில், (ஜீரகம் பட்டை இருந்தாலும் பரவாயில்லை என்று) கொஞ்சம் தேங்காய் ஏற்கனவெ துருவியது இருந்ததால், பச்சை மிளகாய் அரைத்து, வெந்தயம் தாளித்து ஒரு கொதி விட்டு, இறக்கி அதில் கூடக் கொஞ்சம் தயிர்/மோர் சேர்த்து கலக்கி, உகி தயிரோடு சேர்த்து, கடுகும், சிவப்பு மிளகாய், கறிவேப்பிலை தாளித்துவிட்டேன். உப்பு பார்த்து சேர்த்து. தேங்காய் கொதிக்க வைத்த சூடே போதுமானது. மீண்டும் கொதிக்க வைக்கத் தேவையில்லை.
      பேசிக் கொண்டிருந்தவர்கள் அடுக்களைக்குள் எட்டிப் பார்க்க மீண்டும் ஒரு பிரச்சனை, வந்தவரில் ஒருவர் உ கி சாப்பிடமாட்டார் என்பது அப்பதான் தெரிந்தது.

      அவரிடம் கேட்டுக் கொண்டு, டக்கென்று புளி, மிளகு, ஜீரகம், கொஞ்சம் து பருப்பு சேர்த்து பொடித்து உப்பு எல்லாம் கலந்து ஒரு கொதி விட்டு நெய்யில் கடுகு ஜீரகம் தாளிக்க ரஸம் ரெடியாகிட...

      கீதா

      நீக்கு
    2. சபாஷ்! வந்தே பாரத் ஸ்பீடில் எல்லாவற்றையும் செய்திருக்கிறீர்கள்.

      நீக்கு
  4. அடுப்பில் இருக்கும் பாத்திரத்தில் தயிரையோ மோரையோ ஊற்றக் கூடாது என்பது ஆயுர்வேத குறிப்புகளில் ஒன்று...

    மோர்க்குழம்பு என்பதெல்லாம் அடிப்படை கோளாறுகள்..

    பதிலளிநீக்கு
  5. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  6. மசித்த கிழங்கை தாளித்த பின் அடுப்பில் இருந்து இறக்கி

    அதனுடன் மஞ்சள் பொடி கரைத்த தயிரைக் கூட்டிக் கொள்ளலாம்.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //மோர்க்குழம்பு என்பதெல்லாம் அடிப்படை கோளாறுகள்..// ஆ...!

      நீக்கு
  7. இப்படித்தான் ஒவ்வொரு உணவுப் பதார்த்தமும் ஒவ்வொரு பகுதியில் சிறு சிறு வித்தியாசங்களுடன் வெவ்வேறு பெயர்களில் உருவாகின்றன என்று தோன்றுகிறது

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  8. நல்ல உருளை தஹி.

    எனது அம்மாவும் உருளைக் அவித்து லேசாக மசித்து தயிர் உப்பு கலந்து வைத்துவிட்டு நீங்கள் தாளித்தது போல பச்சைமிளகாய் சீரகம் கடுகு தாளித்து கலப்பார்.

    பதிலளிநீக்கு
  9. வணக்கம் சகோதரி

    இன்றைய திங்களில் தாங்கள் செய்திருந்த செய்முறையான தயிர். உ. கி பச்சடி குறிப்பு அருமையாக உள்ளது. குறித்துக் கொண்டேன். இதில் பட்டை போடாமல் செய்யலாமா? ஏதாவது துவையல் கலந்த சாதத்திற்கு பொருத்தமாக இருக்கும். நல்லதொரு பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    எப்போதும் போல் காலையில் வர இயலவில்லை. தாமதமாக வந்துள்ளேன். மன்னிக்கவும். நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  10. எளிமையான , அருமையான உருளை தஹி.
    முன்பு பாட்டிமார்கள் தயிர் அதைகமாக இருந்தால் இது போன்றவை, மோர் அதிகமாக இருந்தால் , வயிறு சரியில்லை என்றால் மோர் ரசம் என்று செய்து விடுவார்கள்.
    பாட்டியின் ஊர் மெலட்டூர் மிக புகழ்பெற்ற ஊர், மெலட்டூர் பாகவத மேளா மார்கழி மாதங்களில் பொதிகையில் வைப்பார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கோமதி அக்கா! எங்கள் பாட்டி மெலட்டூர் பாகவத மேளா குடும்பத்தைச் சேர்ந்தவர்தான். பாட்டியின் சகோதரர் கலைமாமணி விருது வாங்கியிருக்கிறார். தற்சமயம் பாகவத மேளாவின் தலைவராக இருப்பவர் பாட்டியின் சகோதரர் மகனான அதாவது என் அம்மாவின் மாமா மகனான மாலி என்னும் மகாலிங்கம்.

      நீக்கு
  11. உண்மையில் தஹி ஆலு செய்முறையே வித்தியாசமானது.. ஆனால் நான் திப்பிச முறையில் மோர்க்குழம்பு மீந்து போனால் இரவு தக்காளி, வெங்காயம், மசாலாப் பொருட்கள் அரைத்துக் கலந்து கொதிக்க வைத்து உ.கிகளை வேகவைத்து நறுக்கிச்சேர்த்துக் கடைசியில் மோர்க்குழம்பையும் சேர்த்து ஒரே கொதி. இம்முறையில் வெண்டைக்காயையும் முழுசாக (சின்னச் சின்னதாய் ஒரே மாதிரி கிடைக்கும் வடமாநிலங்களில்) ந்றுக்கிக் கொண்டு உப்புச் சேர்த்துக் கலந்து கொஞ்சம் வதக்கிக் கொண்டு மோர்க்குழம்பில் போட்டுடலாம். வழக்கம் போல் தக்களி மசாலா உண்டு.

    பதிலளிநீக்கு
  12. சரியான முறையில் வடக்கே செய்வது போலவே தஹி ஆலு அல்லது தஹி பிண்டி செய்வது பற்றிச் சாவகாசமாய் ஒரு நாள் எழுதணும்.

    பதிலளிநீக்கு
  13. நல்ல குறிப்பு. ராஜஸ்தானிலும் சில இடங்களில் இந்த தஹி ஆலு கிடைக்கிறது - பக்கத்து மாநிலம் ஆயிற்றே.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!