திங்கள், 15 அக்டோபர், 2018

"திங்க"க்கிழமை 181015 : அ. து. ப. மி. உ. கொழுக்கட்டை. - கமலா ஹரிஹரன் ரெஸிப்பி





அ. து. ப. மி. உ. கொழுக்கட்டை



இதில் உ. க்கு உடைத்த. Or, உப்புமா என கொள்ளலாம்.
அ. பச்சரிசி.
து. ப. துவரம் பருப்பு.
மி. மிளகு.

ஒரு கிளாஸ் அரிசிக்கு அரை கிளாஸ் து. ப எடுத்துக் கொள்ளவும். மிளகு ஒரு ஸ்பூன் இதில் சிலருக்கு மிளகு அவ்வளவாக பிடிக்காது. அவர்கள் சற்று குறைவாக பயன்படுத்தலாம். பருப்பையும், மிளகையும் அலம்பி தனியாக ஒரு அரைமணிநேரம் குறைந்த நீரில், ஊற வைத்துக் கொள்ளவும். அரிசியை அலம்பி, பின் அதையும், கொஞ்சம் தண்ணீர் தெளித்து  ஒரு இருபது நிமிடங்கள் ஊற வைக்கவும்.

ஊறிய இவைகளை தனித்தனியே மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி கொஞ்சம் குருணைகளாக மாற்றிக் கொள்ளவும். இரண்டையும் சேர்த்து உடைத்தால், பருப்பை விட அரசி சற்று வேகமாக உடைபட்டு மாவாக்கி விடும். அதனால் இரண்டையும் தனிமையுடன் மிக்ஸியில்  பயணப்பட வைத்தலே சிறப்பு.  உடைத்த குருணைகளாகிய இந்த இரண்டையும் ஒன்றாக கலந்து வைத்து கொண்ட பின்னர்,  ஒரு கடாயை அடுப்பில் ஏற்றி, கொஞ்சம் எண்ணெய் விட்டு (நல்லெண்ணெய் நன்றாய் இருக்கும். ஆனால் அவரவர் விருப்பம்) கடுகு, உ. ப, 4 அல்லது 5 மிளகாய் கிள்ளி ( இதுவும் அவரவர் காரத்தின், மிளகாயின் தரத்தைப் பொறுத்து எடுத்துக் கொள்ளவும். ) போட்டு தாளித்ததும், ஓரிரு ஆர்க்கு கறிவேப்பிலை அலம்பி பொடிதாக அரிந்து அதில் இட்ட பின்னர், சிறிதளவு பெருங்காயத் தூள் சேர்த்த பின், 1க்கு 3  என்ற கணக்கில், 3 கிளாஸ் தண்ணீரும், து. பாக்கு ஒரு கிளாஸ் தண்ணீருமாக மொத்தம் நான்கு கிளாஸ் தண்ணீர் சேர்த்து தேவையான உப்பு போட்டு, ( இதில் பருப்பை ஊற  வைத்த தண்ணீர் மீதமிருந்தால், இதில் சேர்த்துக் கொள்ளவும். வீணாக்க வேண்டாம். ) கொதித்ததும், உடைத்த குருணைகளை சிறிது சிறிதாக சேர்த்து கிளறவும். நன்கு வெந்து, ஒன்று சேர்ந்து உப்புமா ஆனதும், ஒரு தட்டில் ஆறவைத்து  கொள்ளவும்...




பின்னர் சின்ன  சின்ன கொழுக்கட்டை களாக உருட்டி இட்லி தட்டில் வைத்து ஒரு ஐந்து நிமிடம் வேக வைத்து எடுக்கவும்.  சுவையான அ. து. ப. மி. உ. கொ ரெடி.



இதற்கு தேங்காய்  சட்னி எப்போதுமே தேவாமிர்தம்.  அல்லது இனிப்பு பிடித்தவர்களுக்கு இருக்கவே இருக்கிறது வெல்லம். அவரவர் டேஸ்ட் அவரவர் மனதில். சரியா....

ஆனால்  நான் பீர்க்கங்காய் துவையல் செய்தேன். மதிய சாப்பாட்டுக்கும் ஆச்சு.. இந்த உ. கொ. க்கு தொட்டு கொள்ளவும் ஆச்சு..  ஒ. க. இ. மா. மாதிரி, என நீங்கள் முணுமுணுப்பது புரிகிறது.

பீர்க்கங்காய் துவையல்..



நான்கைந்து மிளகாய் வத்தல், ஒரு டேபிள் ஸ்பூன் கடலை பருப்பு, ஒரு டேபிள் ஸ்பூன் உளுந்தம் பருப்பு,, ஒரு ஸ்பூன் கடுகு இவைகளை ஒரு கடாயில் போட்டு அடுப்பில் வைத்து ஒரு ஸ்பூன் ந.எண்ணெய் விட்டு வறுத்துக் கொள்ளவும். அதிலேயே  கடைசியில் பெருங்காயமும் போட்டு எடுத்து வைத்து கொள்ளவும்.



பீர்க்கங்காய் இரண்டு வாங்கி நன்றாக அலம்பிய பின், (எங்கள் வீட்டில் பெரிதாக மூன்று வாங்கி விட்டோம். பீர்க்கங்காய் வாங்கிய இரண்டொரு நாளில் உபயோகபடுத்தி விட்டால், நல்லது. இல்லையெனில், வீணாகி விடும். அதனால், ஒன்றரை பீர்க்கங்காயை கார துவையல் செய்து விடலாமென்று முடிவு செய்தேன். மறுநாள்  பாக்கியை  பருப்பு துவையல் ஆக்கினேன்.)  தோலுடனே அரிந்து வைத்துக் கொள்ளவும்.



தாளிதங்கள் வறுத்த கடாயிலேயே ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு, காயைப் போட்டு, அடுப்பை சிம்மில் வைத்து சிறிது தண்ணீர் தெளித்து மூடி வைத்தால், காயும் நன்கு வெந்து விடும். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் தெளித்துக் கொள்ளலாம்.




தாளிதங்களும், வெந்த காயும் சூடு ஆறியதும், மிக்ஸியில் வறுத்த மி. வ. பருப்புகளுடன், உப்பு தேவையான அளவு, ஒருபெரிய கோலி அளவு புளியும்  போட்டு கர, கர்ப்பமக அரைத்த பின், வேக வைத்திருக்கும் பீர்க்கங்காயையும் போட்டு அரைத்து எடுக்கவும்.  காரத் துவையல் ரெடியாகி விட்டது.



இனி என்ன.. உ. கொழுகட்டைகளை துவையல் தொட்டும், நடுநடுவே வெல்லப் பொடியையும்  (பிடித்தவர்கள்) தொட்டுக் கொண்டு சாப்பிடலாமே ..

இந்த முறைகள் அனைவருக்கும் பிடித்ததென்றால், 👌 என்றால், பருப்பு துவையல், வேறு எதனுடனாவது, பொருந்தும் பட்சத்தில் மீண்டும் வருகிறேன்.


.... நன்றி ........ 🙏 ........ நன்றி....

35 கருத்துகள்:

  1. அன்பின் ஸ்ரீராம், கீதா/ கீதா மற்றும் அனைவருக்கும் நல்வரவு....

    பதிலளிநீக்கு
  2. இனிய காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்.

    பதிலளிநீக்கு
  3. கொழுக்கட்டையோ....
    கொழுக்கட்டை!..

    காரம், மணம், குணம்.... ஆகா!....

    பதிலளிநீக்கு
  4. இதைத் தானே போனவாரம் காலைச் சிற்றுண்டிக்கு செய்தேன்...

    மாவில் மிளகாய் தாளித்துப் போடுவதால் சட்னி தனியாக கிடையாது...

    எளிமையானது... செய்பவர் செய்தால்
    சுவையானது...

    நல்லதொரு குறிப்பு கண்டு மகிழ்ச்சி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலைச் சிற்றுண்டியாக கொழுக்கட்டையா? அடடே... சிறப்பு, மகிழ்ச்சி. சகோதரி கமலா ஹரிஹரன் விடுப்பில் சென்றிருக்கிறார் போலும். ஆளையே காணோம். நீண்ட விடுப்பு!

      நீக்கு
    2. ஆமாம்...
      இது சற்றே உப்புக் கொழுக்கட்டையில் இருந்து மாறுபட்ட சுவையுடன் இருக்கும்...

      இந்த பருப்புக் கொழுக்கடையை சாப்பிட்டு விட்டு ஒரு குவளை சுக்கு மல்லி டீ/காஃபி அருந்திப் பாருங்கள்.

      ஆகா..
      மழைக் காலம் முழுதும் சொர்க்கம்..
      ( சென்னை இதற்குள் அடங்காது.)

      நீக்கு
    3. நாங்கள் செய்திருக்கிறோம். எல்லா சமயங்களிலும் இரவு உணவாகத்தான் செய்திருக்கிரோம்!

      நீக்கு
  5. அப்பா வீட்டில் அடிக்கடி உண்டு உப்புமாக் கொழுக்கட்டை. இங்கே அவ்வளவாப் பிடிக்கிறதில்லை. நாங்க வத்தக்குழம்பு தொட்டுண்டே சாப்பிட்டுடுவோம். முதல்நாளை விட மறுநாள் அமிர்தம்.

    பதிலளிநீக்கு
  6. ஆனாலும் விடறதில்லை. ஏதேனும் ஓர் வெள்ளிக்கிழமை பிள்ளையாரைச் சாக்குச் சொல்லி இத்தோடு கொஞ்சம் வெல்லக் கொழுக்கட்டையும் பண்ணி, இதையும் பண்ணிடுவேன். ஆனால் நான் மிளகு, ஜீரகம் சேர்ப்பதில்லை. அரிசியை மட்டும் உடைத்துக் கொண்டு து.ப., க.ப. ஊற வைச்சுத் தேங்காய், மி.வத்தலோடு சேர்த்து அரைச்சுத் தாளித்ததும் அதைச் சேர்த்துக் கலந்து விடுவேன். அ.உ.க்கும் அப்படித் தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாங்களும் ஜீரகம் சேர்த்ததில்லை. ஆனால் மிளகு சேர்ப்போம்.

      நீக்கு
  7. பீர்க்கங்காய், புடலங்காய், வெள்ளரிக்காய் இதெல்லாம் கொஞ்சம் போல் எடுத்து வாயில்போட்டுப் பார்த்தே பின்னர் நறுக்க வேண்டி இருக்கும். சில சமயங்களில் கசப்பு ஆளைக் கொன்று விடும். ஒரு முறைப் பீர்க்கங்காய்த் துவையல் தோலை நீக்கிவிட்டுச் செய்ததே அப்படியே தூக்கிக் கொட்டினோம்.

    பதிலளிநீக்கு
  8. அனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  9. கமலா ஹரிஹரன் ஊருக்கு போய் இருக்கிறார்களா? அவர்களை காணோம்.
    அவர்கள் சமையல் குறிப்பு வந்து இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  10. வெல்லம் தனியாத் தொட்டுக்கறதுக்குப் பதிலாக் கொழுக்கட்டை பிடிக்கையில் உள்ளே ஓர் அச்சு வெல்லத்தை மூணாக உடைத்து வைத்துப் பிடித்து வேக வைத்துச் சாப்பிட்டுப் பாருங்கள்!

    பதிலளிநீக்கு
  11. உப்புமா கொழுக்கட்டை நன்றாக இருக்கிறது.
    பீர்க்கங்காய் நாங்கள் வதக்கி அரைப்போம்.
    பீர்க்கங்காய் தோலில் மட்டுமே ஒரு நாள் சட்னி , துவையல் அரைப்போம்.
    புதிதாக வாடாமல் இருந்தால்.
    படங்கள், செய்முறை விளக்கம் எல்லாம் நன்றாக இருக்கிறது கமலா ஹறிஹரன்.

    பதிலளிநீக்கு
  12. உப்புமா கொழுக்கட்டை எனக்கு மிகவும் பிடிக்கும். சிலர் இதில் மிளகு சீரகத்திற்கு பதிலாக சின்ன வெங்காயம் சேர்ப்பார்கள். மாறுபட்ட சுவையோடு இருக்கும். எளிய நல்ல ரெசிப்பிக்கு நன்றி.
    சமீபத்திய சென்னை விஜயத்தின் பொழுது காஞ்சிபுரம் அருகே ஒரு ஹோட்டலில் வெல்ல கொழுக்கட்டை சாப்பிட்டேன். நன்றாக இருந்தது.

    பதிலளிநீக்கு
  13. உ.கொழுக்கட்டை மாலை டிஃபன்.
    பெருங்காயம் கறிவேப்பிலை சேர்ப்பதில் வாசம். மிக ஆனந்தமான சிற்றுண்டி.
    மிக நன்றி கமலா ஹரிஹரன்.
    நாளைக்கு ,நவராத்திரி நைவேத்யம் இதுதான்.
    அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.அ.து.ப.மி மட்டுமே போதும் சீரகம் வேண்டாம்.

    பதிலளிநீக்கு
  14. கொலு காலத்தில் கொழுக்கட்டையை கண்டதும் பசி எடுக்கிறது.

    பதிலளிநீக்கு
  15. பீர்க்கங்காய் துவையல் செய்முறை அருமை...

    நன்றி...

    பதிலளிநீக்கு
  16. பருப்பு அதிகம் சேர்த்து உடைத்திருக்கிறீர்கள். தேங்காய் போடவில்லை. பருப்பை அரைத்துவி்ட்டுச் செய்தால் கலர்மாறும். ருசி மாறும். எல்லாமே ருசிதான் செய்யும் வகையில் செய்தால். படங்களும் நன்றாக வந்துள்ளது. துவையலுடன் இரவு பலகாரத்திற்கு ஏற்றது. அன்புடன்

    பதிலளிநீக்கு
  17. துவரம்பருப்பு போடாம வெறும் அரிசியில் மட்டும் செய்வோம். அரிசி ஊற வச்சு மாவாக்கி, கடுகு, உ.ப, க.ப, கா.மிளகாய் போட்டு தாளிச்சு வெங்காயம் , பூண்டு சேர்த்து மாவை கொட்டி லேசா வதக்கி உருண்டையாக்கிச் செய்வோம். தேங்காயும் போடலாம். உப்புருண்டைன்னு பேரு

    பதிலளிநீக்கு
  18. பார்க்கவே ஆசையாக இருக்கு, இப்படி ஒருநாளும் நாங்க செய்ததில்லை.. பிடிக் கொழுக்கட்டை எனில் அரிசியை ஊறவிட்டு உடனே அரைச்சு மா எடுத்து இப்படி பயத்தம் பருப்புடன் சக்கரை தேங்காய்ப்பூக் கலந்து பிடித்து, ஆவியில் வேக வைத்து எடுப்பதுண்டு.

    பிசுக்கங்காய் சட்னியும் சூப்பர்.

    பதிலளிநீக்கு
  19. பார்த்ததே சாப்பிட்டது போல இருந்தது

    பதிலளிநீக்கு
  20. பீர்க்கங்காய் துவையலைக் குறித்துக்கொண்டேன்.

    சென்றவாரம் கொழுக்கட்டை செய்தேன். அவசரத்தில் அரிசி, துவரை இரண்டையும் சேர்த்து அரைத்து, பிறகு துவரையைப் பிரித்து திரும்ப அரைத்து என்று கஷ்டப்பட்டுவிட்டேன். சின்ன சின்ன மிஸ்டேக் தயாரிப்பையே சிக்கலாக்கி விடுகிறது.

    பதிலளிநீக்கு
  21. இன்னொன்று, கிட்டத்தட்ட இதைப் போன்றே ஒரு செய்முறையை எ.பி தி.பதிவுக்காக ரெடி பண்ணி வைத்திருக்கிறேன். எப்படியும் அதைப் போட சில மாதங்களாகிவிடும் ஸ்ரீராமுக்கு. அதுக்குள்ள இதனை மறந்திருக்க மாட்டார்களா? ஹாஹா

    பதிலளிநீக்கு
  22. கமலா அக்காவைக் காணோமே என்று மெயில் செய்திருந்தேன். அவரிடமிருந்து வந்த சோகமான செய்தி ஒன்றை இங்கு பகிர்கிறேன். அவருக்கும், அவர்தம் குடும்பத்தாருக்கும் நமது ஆறுதல்கள். இந்தச் சிரமமான காலகட்டத்தைத் தாண்டும் மனவலிமையை இறைவன் அவர்களுக்கு அளிக்கட்டும்.

    ---------------------------------------------------------------------------------------------------

    வணக்கம் சகோதரரே

    தங்கள் மெஸேஜ் கண்டேன். உடன் பதிலளிக்க இயலவில்லை. மன்னிக்கவும்.



    என் மாப்பிள்ளை திடீரென ஒரு விபத்தில் எங்களை கண்ணீர் வெள்ளத்தில் தவிக்க வைத்து விட்டு சென்று விட்டார். அந்த அதிர்ச்சியில் இருந்து இயல்பு நிலைக்கு நாங்கள் மீளவே இயலாமலும், ஒருவருக்கொருவர் ஆறுதல் சொல்ல முடியாமலும் தவிக்கிறோம். அவருக்கு பதிலாக என்னை கொண்டு போயிருக்க கூடாதா அந்த ஆண்டவன் என அவன் மேல் எனக்கு கோபம் வருவதை என்னால் தவிர்க்க முடியவில்லை. கொலு முடியும் முன் இந்த வருத்தத்தை அனைவருடனும் பகிர முடியாமல் நான் ஒதுங்கியிருந்தேன். என் கவலைகள் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் கரையாது எனத் தோன்றுகிறது. என்னை காணாத இந்த நாட்களில், இந்த சகோதரியை அன்புடன் நினைவு வைத்துக் கொண்டு தேடிய உங்கள் அனைவருக்கும் என் நன்றிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரொம்ப மனம் கலங்க அடித்த செய்தியாக இருக்கிறது. அந்தக் குழந்தைக்குக் காலம் தான் மனப்புண்ணை ஆற்ற வேண்டும். தீராத துயரம் இது! என்ன சொல்லித் தேற்றுவது என்பதே புரியவில்லை! :(

      நீக்கு
    2. அட ஆண்டவா.. இப்படிப்பட்ட துயரச் செய்தியா? கேள்விப்படுகிற எனக்கே ‘கதக்’ என்று துயரம் அப்பிக் கொள்கிறதே. எப்படி இத்தகைய துயரச் செய்தியைத் தாங்க இயலும்? நீங்கள் வழிபடும் இறைவனே உங்களுக்கு இதனைத் தாங்கும் சக்தியை அருள வேண்டும். உங்கள் மகளுக்கு எங்கள் இரங்கல்கள். இந்த மாதிரியான வீட்டைப் புரட்டிப் போடும் துக்கத்திற்கு என்ன ஆறுதல் சொல்ல இயலும்?

      நீக்கு
  23. ஸ்ரீமதி கமலா ஹரிஹரன் அவர்களுக்கு.,

    மன்னிக்கவும்..
    இப்போது தான் இந்தத் துயரச் செதியைக் கண்டேன்..

    எந்தவகையில் ஆறுதல் சொல்வது என்று தெரியவில்லை..

    காலம் ஒன்றைத் தவிர கதி வேறு இல்லை...
    கண்ணீரைக் காலம் தானே மாற்றும்

    கடவுள் துணையிருக்கட்டும்..

    பதிலளிநீக்கு
  24. ஸ்ரீராம், இந்த செய்தியை இப்போதுதான் பார்த்தேன்.
    மிகவும் வேதனையான விஷயம்.
    இறைவன் அவருக்கும் மகளுக்கும், குடும்பத்தினருக்கும் ஆறுதலையும், மனசாந்தியை தர வேண்டும்.
    மகிழ்ச்சியாக போய் கொண்டு இருக்கும் வாழ்க்கையை இப்படி தட்டி பறிப்பதில் என்ன ஆனந்தமோ இறைவனுக்கு.

    பதிலளிநீக்கு
  25. நான் இந்தச் செய்தியை இப்போதுதான் பார்த்தேன். மிகவும் மன வருத்தமடைந்தது. எந்தவித ஆறுதலைச் சொல்வது. காலந்தான் பதில் சொல்ல வேண்டும். உங்கள் துக்கத்தில் நானும் பங்கு கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!