செவ்வாய், 3 டிசம்பர், 2019

கேட்டு வாங்கிப்போடும் கதை  :  அப்பாவின் சைக்கிள் - துரை செல்வராஜூ 



அப்பாவின் சைக்கிள்


துரை செல்வராஜூ

==================


எட்டு மணிக்கெல்லாம் Check In/ Boarding Card...  முடிந்து நீண்ட வரிசையில் நின்று விரலைப் பதிவு செய்து Emigration முடித்தாயிற்று..

இன்னும் இரண்டரை மணி நேரம்.. பொழுதைக் கழிக்க வேண்டும்...

அந்த நடையின் கடைசியில் பயணியர் கூடத்தில் அதிர்ஷ்ட வசமாக சாய்வு நாற்காலியும் கிடைத்து விட்டது...

பெரிய பெரிய கண்ணாடிகளின் வழியே வானம் இருண்டு கிடக்க ஓடு தளத்தின் இருமருங்கும் நீலம் மஞ்சள் சிவப்பு பச்சை என ஒளிப்புள்ளிகள்...

அவற்றினூடாக வீல்.. வீல்... என கத்திக்கொண்டே பலவித வாகனங்கள்...

பேரிரைச்சலோடு விமானங்கள் விரைந்தோடி விண்ணில் ஏறுவதும்
விண்ணிலிருந்து இறங்கி ஓடுதளத்தில் விரைவதுமாக இருந்தன...

எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த என் மனதில் இப்படித் தோன்றியது...

வீட்டுக்குப் போனதும் அப்பாவோட சைக்கிளை எடுத்துக்கிட்டு
ஊர் முழுக்க நாலு ரவுண்டு அடிக்கணும்!...

அப்பாவின் சைக்கிள்!...

பச்சை நிற BSA ராலே...

தஞ்சாவூரில் இருந்து எண்ணூறு ரூபாய்க்கு கோர்த்துக் கொண்டு வந்திருந்தார் கோதண்டம்... திடீரென அவருக்கு ஏதோ பண முடை..

'' நூறு ரூபாய் தள்ளி விட்டு எடுத்துக் கொள்ளுங்கள்!.. '' - என்று
அந்த விடியற்காலைப் பொழுதில் அப்பாவிடம் வந்து நின்றார்...

பளபளக்கும் ஒற்றைக் கண்ணாக மில்லர் டைனமோ...  அந்தப் பக்கம் கேரியரோடு சேர்ந்திருந்த அழகான பெட்டி..  மெத்.. மெத்.. என்றிருந்த பச்சை நிற குஷன் சீட்...  முன் சக்கர ஆக்ஸிலோடு பொருத்தப்பட்டிருக்கும் வேல்!...

சைக்கிளைக் கண்டதுமே அப்பாவுக்குப் பிடித்து விட்டது...

அக்காவின் சிறுவாடு, அம்மாவின் புளிப் பானைப் புதையல், உரியடிக் கஜானா எல்லாவற்றையும் குடைந்து எடுத்ததில் அப்பாவின் அதிர்ஷ்டம் ஆயிரம் ரூபாய் தேறி விட்டது...

அதில் எழுநூற்று ஐம்பதைக் கொடுத்து சைக்கிளை வாங்கிக் கொண்டார்..

அத்துடன் மேல வீட்டு அண்ணனையும் பக்கத்து வீட்டு பாலு சாரையும்
சாட்சிகளாக வைத்துக் கொண்டு -

மேற்படி பிஎஸ்ஏ இன்ன இலக்கம் உடைய பச்சை நிற ராலே சைக்கிளை இன்னார்... இன்னாருக்கு நாளது தேதியில் மனப்பூர்வமாக இன்ன விலைக்கு விற்ற தொகை பற்றுவரவாகி விட்டது.. இனிமேல் இவ்விஷயத்தில் எனக்கு யாதொரு தொடர்பும் இல்லை..  என்றும் எழுதப்பட்டு கைச்சாத்து ஆனது...

'' நான் முதல்.. ல ஓட்டுவேன்!..'' - மகிழ்ச்சியில் குதித்தேன்...

'' அதெல்லாம் பெரியவன் ஆனதுக்கு அப்புறம்!..''

என்னது!.. பெரியவன் ஆனதுக்கு அப்புறமாவா?...  எஸெல்சி முடிச்சு ஒரு வருசம் ஆச்சே!...

மனதிற்குள் அரும்பு மீசையை வருடிக் கொண்டேன்.. ஆனாலும் -  அப்பாவின் அதட்டலில் ஆசைப் பலூனின் காற்று இறங்கிப் போனது...

என்றாலும் விடவில்லை... கிழிந்த வேட்டியை மேலும் கிழித்து எடுத்துக்
கொண்டு சைக்கிளைத் துடைத்து வைக்கும் பணியை ஏற்றுக் கொண்டேன்...

எப்படியாவது அப்பாவை தாஜா செய்து ஒரு ரவுண்டாவது அடித்து விடவேண்டும்....

அந்த சைக்கிளில் எடை கூடிய பொருட்கள் எதையும் அப்பா ஏற்றுவதில்லை..  ஏதோ கன்னுக்குட்டிக்கு வலிக்கும் என்கிற மாதிரி...

'' ஒரு மூட்டை நெல்லு தானே.. ரெண்டு நடையா எடுத்துக்கிட்டுப் போய் நாடார் மில்லுல அரைச்சுக்கிட்டு வாங்களேன்!... ''

மாதம் ஒரு நாள் அம்மா கொஞ்சுவாள் அப்பாவிடம்...

'' டே ... ராமசாமி.. இந்த நெல்லை அரைச்சுக்கிட்டு வந்து போடு!... '' -
என்று சொல்லி ஒரு ரூபாயைக் கொடுப்பார் அப்பா...

அடுத்த அரை மணி நேரத்தில் அரிசியும் குருணையும் வீட்டுக்கு வந்து விடும்...

குறுணையை ராமசாமியிடமே கொடுத்து விடுவாள் அம்மா...

இப்படியிருந்த சூழ்நிலையில்  வெகு விரைந்து வந்தது ஒரு நல்ல நேரம்..
உண்மையில் அது கெட்ட நேரம் என்பது அப்போது தெரியவில்லை!...

திருச்சியில் கல்யாணம் என்று விடியற்காலையிலேயே அப்பா கிளம்பி விட அரக்கப் பரக்க இட்லியை விழுங்கி விட்டு அப்பாவின் சைக்கிளை எடுத்துக் கொண்டு தாவினேன்...

சடக்.. சடக்... - என்று பெடல் அடித்து ஏறி - சீட்டில் உட்கார்ந்தாகி விட்டது...

ஆகா... ஆகா!.. - ஜம் என்றிருந்தது...

'' உல்லாச உலகம் உனக்கே சொந்தம் ... ஜையடா.. ஜையடா!... ''

காற்றைக் கிழித்துக் கொண்டு போனது சைக்கிள்...

கிணிங்.. கிணிங்.. கிணி கிணிங்!...

கூடப் படித்த பசங்கள் - ஹை!... என்றார்கள்..  ரெட்டை ஜடைகள் மட்டும் - க்கும்!.. என்றதுகள்...

எல்லாம் கொஞ்ச நேரத்துக்குத் தான்...

அந்த வேம்படி குளக்கரையில் திரும்பும்போது என்ன ஆயிற்றோ தெரியவில்லை..

சைக்கிளோடு வாய்க்காலுக்குள் கவிழ்ந்தேன்... அவ்வளவு தான்...

நினைவு வந்தபோது ஆஸ்பத்திரியில்...

'' வாத்தியார் மகன் சைக்கிள்..ல அடிப்பட்டுட்டாரு...'' ன்னு குளத்தங்கரையில் இருந்த சிலர் அலறி அடித்தபடி இங்கே கொண்டு வந்து போட்டிருக்கிறார்கள்...

அம்மாவின் ஓலம் பெரிதாக இருந்தது...

'' எம்புள்ளைக்கு இப்படி ஆயிடிச்சே!...  ஏ.. மகமாயி!.. கண் தொறந்து நீ பார்க்கலையா?.. '' - என்று..

ஊர் முழுதும் என்னைச் சுற்றித் தான்!...

அப்புறம் தான் தெரிந்தது...

உடலில் வேறெங்குமே காயமில்லாமல் அடிவயிற்றுக்குக் கீழ் கிழிந்து போனதும் ஆறு தையல்கள் போடப்பட்டிருப்பதும்...

காக்கி டிராயரைக் காணோம்..  இடுப்பில் நாலு முழ வேட்டியை விரித்திருந்தார்கள்..  இந்தக் கையில் குளுகோஸ் ஓடிக் கொண்டிருந்தது...

மலங்க மலங்க விழித்துக் கொண்டிருந்த என் கண்களில் கல்யாணி தென்பட்டாள்...

கல்யாணி .. அம்மாவின் அண்ணன் மகள்..

கண் மை எல்லாம் கரைந்து கன்னங்களில் வழிந்து கண்றாவியாக இருந்தாள் - கல்யாணி...  பாவம்... ரொம்பவும் அழுதிருக்கிறாள்...

'' முதலுக்கு வந்ததே மோசம்!.. '' - என்று அழுதிருப்பாளோ!...  இருக்காதா பின்னே!...

'' உன்னைக் கட்டிக்கிறேன்!... '' - என்று சொல்லித் தானே அவள் காதைப் பிடித்து இழுத்து....

திடீரென அங்கிருந்தவர்களிடம் பரபரப்பு...

சென்னைக்குச் செல்லும் பயணிகள் அழைக்கப்பட்டார்கள்...

சுறுசுறுப்புடன் நடந்து யூடிகொலோன் மணக்கும் விமானத்தினுள்
வரிசையாக நுழைந்து ஜன்னலோர இருக்கையில் அமர்ந்த சில நிமிடங்களில் -

மெலிந்திருந்த சிவப்பழகி அப்படியும் இப்படியுமாக கைகளை நீட்டி மடக்கி அபிநயித்துக் கொண்டிருந்தாள்...

மெல்ல நகர்ந்த விமானம் சற்றே பொறுமையுடன் ஊர்ந்து கடும் வேகத்துடன் ஓடிப் பறந்து வான வெளியில் நீந்தியது...

கீழே வண்ண மணிகளை வாரியிறைத்தாற்போல ஷார்ஜா!...

சற்றைக்கெல்லாம் டீ, காஃபி, கேப்புசினோ, குளிர்பானங்கள்...
அவற்றைத் தொடர்ந்து உணவும் வந்தது...

உணவு வேளை முடிந்து விமானத்தினுள் நீல நிற விளக்குகள் ஒளிர்ந்த வேளையில் மீண்டும் கண்ணுக்குள் வந்தாள் - கல்யாணி...

அவளைப் பார்த்து - '' பைத்தியம்!.. '' - என்று சிரித்த வேளையில் -

'' எங்கே அந்தப் பய?... '' - சிம்மத்தின் கர்ஜனை கேட்டது..

'' ஒண்ணும் இல்லை... ஒண்ணும் இல்லை!... தம்பி நல்லா இருக்கான்!..
ஏதோ நடந்திடுச்சு.. அவனே பயந்து கிடக்கான்... இதுல நீங்க வேற!.. ''

மேல வீட்டு அண்ணன் சிம்மத்திற்கு உக்ர சாந்தி செய்து கொண்டிருக்க
கூட்டத்தைப் பிளந்து கொண்டு வெளிப்பட்ட அப்பா கிழிந்த நாராய்க் கிடந்த என்னைக் கண்டதும் அழுதே விட்டார்...

கட்டிலின் ஓரத்தில் அமர்ந்து கையைப் பிடித்துக் கொண்டார்...
நெஞ்சைத் தடவிக் கொடுத்தார்... '' பயப்படாதே!.. '' - என்றார்...

நானும் அழுதேன்... '' சைக்கிளுக்கு என்ன ஆச்சுப்பா!.. '' - என்றேன்...

'' அது கிடக்கட்டும் விடு!.. உனக்கு ஒன்னும் ஆகலையே!..அதுவே போதும்!.. '' - என்றார்...

'' என்னது?.. எனக்கு ஒண்ணும் ஆகலையா!... '' - நானே பேசிக் கொண்டேன்..

அப்பாவின் மனம் புரிந்தது..  தானும் கலங்கி என்னையும் கலக்கி அடிக்காமல் என்னைத் தேற்றுகிறார்...

இப்படித்தான் எதையும் பெருசா எடுத்துக்க மாட்டார்...  பார்க்கிறவர்கள் கல் நெஞ்சம் என்பார்கள்...  ஆனால் எனக்கு அவர் தான் இமயம்!...

அம்மாவை அழைத்துக் கொண்டு டாக்டரின் அறைக்குச் சென்றார் அப்பா...

அருகில் நின்ற அக்கா தனக்குப் பின்னாலிருந்த கல்யாணியை இழுத்து எனக்கு முன்னே நிறுத்தினாள்...

கையில் ஈரத்துடன் இருந்த விபூதியை நெற்றியில் பூசி விட்டாள் கல்யாணி...

ஆறு நாளும் ஆஸ்பத்திரியில் படுக்கை...  அக்கா தான் அருகிருந்து கவனித்துக் கொண்டாள்...

இன்னொரு தாயல்லவா அவள்!...

ஆனாலும் - இலவச இணைப்பாக கல்யாணியின் கைங்கர்யம்..

ஆகா!.. என்று கவனிப்பு...  பால், பழம், ஹார்லிக்ஸ்.. சமயத்தில் கன்னத்தில் கிள்ளலுமாக!..

'' உன்னை இனிமே எவளும் கட்டிக்க மாட்டா!.. '' - கொக்கரிப்பு வேறு...

'' அதுல உனக்கென்னடி சந்தோஷம்?.. '' - அதிர்ந்தேன்...

'' அப்பா அம்மாக்கிட்ட சொல்லப் போறேன்!... ''

'' என்ன... ன்னு?... ''

கல்யாணியின் கன்னங்களில் குழி விழுந்தன...

ஏழாம் நாள் -

'' ம்ம்.. போதும்.. மூட்டையக் கட்டிக்கிட்டு வீட்டுக்குக் கிளம்பு!.. '' - தையலைப் பிரித்து அங்கிருந்து விரட்டி விட்டார்கள்...

அம்மா ஈரச் சேலையுடன் மாரியம்மன் கோயிலில் அடிப்பிரதட்சிணம் செய்து மடிப்பிச்சை கேட்டாள்..  கல்யாணியும் துணைக்கு நடந்தாள்...

ஒருநாள் மாலைப் பொழுதில் -  '' சைக்கிளை விற்று விடுவோமா!?.. '' - என்றார் அப்பா...

'' வேணாம்..ப்பா!.. '' - என்றேன்...

'' சைக்கிளை எடுத்து ஓட்டு!... ''

தயக்கமாக நின்றிருந்தேன்..

'' ம்.. எடுத்து ஓட்டு.. நான் இருக்கிறேன்!.. '' - என்றார்...

மறுபடியும் சைக்கிள் என்னைச் சுமந்து கொண்டு புறப்பட்டது...

வழியில் வீட்டுத் திண்ணையில் அமர்ந்திருந்த கல்யாணி என்னைக் கண்டதும் பின்பக்கம் என்று கண்ணைக் காட்டினாள்...

கல்யாணி கண்காட்டிய திசையில் - சைக்கிள் அதுவாகத் திரும்பியது...

கல்யாணியின் வீட்டுக்குப் பின்னால் தான் யூனியன் ஆபீஸ் திடல்...
ரெட்டைச் சடையும் மல்லிகைப் பூவுமாக நின்று கொண்டிருந்தாள்..

சைக்கிளின் முன்பக்கம் அவளை ஏற்றிக் கொண்டு ரெண்டு ரவுண்டு வந்தேன்...


ஜடையிலிருந்த மல்லிகைப் பூவின் வாசம் முகம் முழுதும் ஒட்டிக்கொண்டது..

அடுத்து வந்த ஆவணியில் - அக்காவுக்கு கல்யாணம்.. உள்ளூர் மாப்பிள்ளை....

'' அடுத்தது நம்ம கல்யாணம் தான்!.. ''  - என்று புன்னகைத்தாள் கல்யாணி...

அக்கா கல்யாணம் முடிந்து மறு வருடம்.. பேத்தியைக் கொஞ்சி மகிழ்ந்தார்..

தர்ஷிணியை சைக்கிளில் வைத்துக் கொண்டு ஊரைச் சுற்றி வந்தார்..

அதற்கப்புறம் ஒருவருடம் கூட ஆகவில்லை...

'' நான் இருக்கிறேன்!.. '' - என்று சொன்ன அப்பா இல்லாமல் போனார்...

ராலேயை நன்றாகத் துடைத்து முன் கூடத்தின் ஓரத்தில் நிறுத்தி வைத்து
போர்வையை விரித்துப் போர்த்தினேன்...

அப்பா சென்ற பின் ராலேயை சைக்கிள் என்று சொல்வதில்லை..

செவ்வாய் வெள்ளிகளில் ராலேக்கும் சாம்பிராணி தூபம் ஆகியது..

ஆறு மாதம் கழித்து - கூடி வந்த ஒரு சுபயோக சுபதினத்தில்
பெரியோர்கள் ஒன்று கூடி வாழ்த்த மனை மங்கலம் நிகழ்ந்தது...

நல்ல சேதிக்காக காத்திருந்த அம்மா சந்தோஷப்பட்ட வேளையில்
ஷார்ஜாவிலிருந்து அழைப்பு - மூன்று மாதங்களுக்குள் வந்து வேலையில் சேர்ந்து கொள்ளும்படி...

இது அப்பா இருந்தபோதே மேற்கொண்ட முயற்சி..

அம்மா தான் ரொம்பவும் கலங்கினாள்...

தேறுதல் சொல்லி விட்டுக் கிளம்பி இரண்டு வருடங்களாகி விட்டன...

அங்கே வீட்டில் அம்மா, கல்யாணி, ராலேயுடன் புது வரவாக ப்ரசாத்!..

தோளைத் தொட்டு எழுப்பிட கண் விழித்தேன்...

ஜன்னல் வழியே பளீரென்றிருந்தது..  பொழுது விடிந்து இரண்டு மணி நேரமாகியிருக்கிறது..

Your Attention Please!...

இருக்கையின் பட்டையை இறுக்கிக் கொண்டு நிமிர்ந்து அமர்ந்தேன்...

கீழிறங்கிய விமானம் விரைந்தோடி வளைந்து சத்தமில்லாமல் நின்றது...

அழைப்பதற்கு அம்மா, அக்கா அத்தான், கல்யாணியுடன் ப்ரசாத்!..

ராலே மட்டும் வரவில்லை...

அடுத்து ஏழு மணி நேரப் பயணம்...  வீட்டை அடைந்த போது பொழுதாகியிருந்தது...

'' நான் போய் மகமாயிக்கு விளக்கு போட்டு விட்டு வருகிறேன்!.. '' - என்றபடி அம்மா கோயிலுக்குப் போய் விட்டாள்...

ஆனாலும் உள் நோக்கம் பசங்கள் தனியாக இருக்கட்டும் என்பது...

என் கண்கள் ராலேயைத் தேடின...

'' இங்கே கிடந்து துரு பிடிக்கிறதுக்கு நான் ஓட்டிக்கிட்டு இருக்கேன்...
ன்னு அண்ணன் எடுத்துக்கிட்டுப் போய்ட்டாங்க!... '' - என்றாள் கல்யாணி...

பொழுது விடிந்ததும் அக்காவின் வீட்டுக்குப் புறப்பட -  '' ராலேயப் பத்தி ஒண்ணும் கேக்காதே!.. '' - என்றபடி வந்தாள் அம்மா...

அக்காவின் வீட்டுக்கு வந்து ராலேயைத் தேடினால் அம்மாவின் கண்கள் கெஞ்சின - '' கேக்க வேணாம்!.. '' - என்று...

'' மாமா.. சைக்கிள்!.. '' - தோளில் தொற்றிக் கொண்டு கொஞ்சினாள் தர்ஷிணி...

'' மாமா வந்ததும் சைக்கிள் வாங்கித் தருவான்னு சொல்லியிருக்கிறேன்!.. '' என்றபடி சிரித்தாள் அக்கா...

'' அக்கா!... ராலே எங்கே?.. ''

'' அது இத்துப் போச்சுடா தம்பி!.. அத்தான் கூட அதை பழைய இரும்புக்கு...''

'' இப்போ எங்கே இருக்கு?... '' - இடைமறித்தேன்...

'' பின் கட்டுல!... ''

அவள் காட்டிய இடத்தில் - உருக்குலைந்து கிடந்த ராலேயைக் கண்டு கண்கள் கசிந்தன...

'' நான் எடுத்துக்கிட்டுப் போகட்டுமா!... ''

'' ம்.. எடுத்துக்கோ!.. ''

ராலேயை நெருங்கித் தொட்டபோது அப்பாவின் குரல் காதருகில் கேட்டது..

'' நான் இருக்கிறேன்!...''

ஃஃஃ

69 கருத்துகள்:

  1. தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து மன்னுயிர்க் கெல்லாம் இனிது...

    வாழ்க நலம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதையை முதலில் படித்து முடித்துவிட்டு, அப்புறம்தான் கீழே இறங்கி வந்தேன். மிக மிக அருமையான கதை. ஒவ்வொரு வரியையும் இரசித்துப் படித்தேன். இந்தக் கதையை சினிமாவாக எடுத்தால், கல்யாணியின் கனவுகள் என்று பெயரிட்டு, கல்யாணியாக சரோஜாதேவியை நடிக்கவைத்து, ......... துரை சார் உங்களுக்கு என்ன வேடம் ?

      நீக்கு
    2. கல்யாணியின் கனவுகள்...

      ஆகா...

      இவ்வளவு தூரம் நடந்த பிறகு..
      எனக்கென்ன அப்பா வேடமா தரப்போகின்றீர்கள்?...

      பார்த்து ஏதோ போட்டுக் கொடுங்கள்...

      நீக்கு
    3. படம் முழுவதும் நீங்க வரவேண்டும் என்றால், நீங்க சைக்கிளாக நடிக்கணும்!

      நீக்கு
    4. கதாநாயகனாக சரவணா ஸ்டோர்ஸ் சரவணன் நடிக்கிறேன் என்கிறார்!

      நீக்கு
    5. ஆனால் கதாநாயகியாக தமன்னா நடிக்கவேண்டும் என்கிறார். ரெட்டை சடையுடன் தமன்னா பார்க்க சகிக்காதே ஐயா!

      நீக்கு
    6. ஹாஹாஹா! கௌதமன் சார் சிரிச்சு முடியல.கீதா ரங்கன் வராததால் அவர் டயலாக்கை எடுத்தாண்டு விட்டேன். ஹி! ஹி!

      நீக்கு
    7. //கல்யாணியாக சரோஜாதேவியை நடிக்கவைத்து, .........// சரோஜா தேவி சில வருடங்களுக்கு முன் முட்டி மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அவரைப் போய் சைக்கிளில் ஏற்றி... வொய்  திஸ் கொல வெறி?"வாடிக்கை மறந்ததும்  ஏனோ..?" என்று சைக்கிள் ஓட்டியபடி அவர் பாடியதை நீங்கள் இன்னும் மறக்கவில்லையா?பை தி வே ஸ்ரீராம் அடுத்த வெள்ளியில் நேயர் விருப்பமாக வாடிக்கை மறந்ததும் ஏனோ போடுவீர்களா? 

      நீக்கு
    8. மேலும், எம்ஜியார் சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொடுக்கும் பாட்டான "அக்கம் பக்கம் பார்க்காதே, ஆளைக் கண்டு மிரளாதே ..." பாடல் (நீதிக்குப்பின் பாசம்)

      நீக்கு
  2. இன்று எனது கதையைப் பதிப்பித்த ஸ்ரீராம் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களுக்கும் எங்கள் நன்றி.

      நீக்கு
    2. அன்பின் துரை, அன்பு ஸ்ரீராம் இனிய காலை வணக்கம்.
      இன்னுமொரு கரும்புச்சுவையோடு அப்பாவின் சைக்கிள் மனதில்
      ஓட வந்து விட்டது.
      சைக்கிள் ஏறி விழாதவர்கள் உண்டா.
      ஆனாலும் வயிற்றில் தையல் போட்டும் விரும்பிய தையலை மணந்த
      நாயகனுக்கு வாழ்த்துகள்.
      நலிந்த வாழ்வு வளம் பெறுவது போல ராலே சைக்கிளும் உயிர் பெறும்..
      அதை ஓட்ட மகனும் வளர்ந்து பெரியவனாவான்.

      ஒரு வாழ்க்கையின் கதை. என்றும் கைவிடாத அப்பா,சைக்கிள் வடிவில் ஆதரவாக இருக்கப்
      போகிறார்.
      அன்பின் பல பரிமாணங்களை அருமையாகச் சொல்லும் துரைக்கு மனம் நிறை வாழ்த்துகளும் நன்றியும்.
      நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  3. என்ன என்னவோ எண்ணங்கள், நிகழ்வுகளுக்குள் ஆழ்த்தும் கதை. பாராட்டுகள் துரை செல்வராஜு சார்.

    பதிலளிநீக்கு
  4. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் இந்தநாள் அனைவருக்கும் இனிமை நிறைந்ததாக இருக்கவும் ஆண்டவனை பரிபூரணமாக பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  5. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்!

    பதிலளிநீக்கு
  6. அன்பு, பாசம், கனிவு, காதல், குறும்பு எல்லாம் மிளிரும் கதை.
    அப்பாவின் சைக்கிள் பல நினைவுகளை தருகிறது.
    இளவயது சைக்கிள் நினைவுகள் வந்து போகும்.
    வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் வாழ்த்தும் பாராட்டும் மக்கள்.. நன்றி..

      நீக்கு
  7. என் கணவர் முதலில் அப்பாவின் சைக்கிளை தான் கல்லூரிக்கு வேலைக்கு போக வைத்து இருந்தார்கள்.சம்பளம் வாங்கியவுடன் புது சைக்கிள் வாங்கி விட்டு அப்பாவின் சைக்கிளை கொடுத்து விட்டார்கள். மாமா 80 வயது வரை சைக்கிளை ஓட்டினார்கள். இவர்கள் இரண்டு சைக்கிள் மாற்றினார்கள் போன வருடம் சைக்கிளை வேலை செய்யும் அம்மா கேட்டதால் கொடுத்து விட்டோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // சைக்கிளை வேலை செய்யும் அம்மா கேட்டதால் கொடுத்து விட்டோம்.// நல்ல மனம் வாழ்க, நாடு போற்ற வாழ்க!

      நீக்கு
    2. வாழ்த்துக்கு நன்றி சார்.

      சார் காலையில் நடைபயிற்சி, மாலையில் சைக்கிளில் கொஞ்சம் தூரம் போய் வருவார்கள்.

      மாயவரத்தில் வீட்டுக்கு அருகில் சைக்கிள் ரிப்பேர் கடை இருக்கும், சைக்கிளை அடிக்கடி அங்கு கொடுத்து பராமரித்து வந்தார்கள். இங்கு எங்கள் குடியிருப்புக்கு பக்கம் ஒரு கடையும் இல்லை. வெகு தூரம் போக வேண்டும் என்றார்கள். அதனால் அதை பராமரிக்கவும் முடியவில்லை.

      எங்கள் குடியிருப்பு வளாகத்தில் குடியிருப்போர்களுக்கு சுற்றறிக்கை ஏதாவது அனுப்பி கொண்டு இருப்பார்கள்.
      அதில் பயன்படுத்தா சைக்கிள், பழுதடைந்த இருச்சக்கர, நாலுசக்கர வாகனங்களை அப்புறபடுத்தச் சொல்லி அனுப்பி விட்டார்கள்.

      நாம் பயன்படுத்த முடியாத எங்கள் சைக்கிளும் அதில் அடங்கி விட்டது.எங்கள் வீட்டில் வேலை செய்யும் "அம்மா ஐயா அந்த சைக்கிளை ஓட்டவில்லை என்றால் எங்களிடம் கொடுங்கள் என் மகனுக்கு என்றார்கள்" அதனால் கொடுத்து விட்டோம்.

      நல்ல நிலையில் உள்ள சைக்கிளை கொடுத்து விட்டோம்.

      நீக்கு
    3. எங்கள் மகன் கல்லூரியில் சேர்ந்த பொழுது,மோட்டார் பைக் வாங்கி தந்து விட்டதால் அவனுடைய சைக்கிளை எங்கள் வீட்டிற்கு பூ கொடுக்கும் பெண்மணியின் மகனுக்கு கொடுத்தோம். அவரோ நாங்கள் எத்தனை மறுத்தும் கேட்காமல் கிட்டத்தட்ட ஒரு வருடம் எங்களுக்கு தினசரி பூ  இலவசமாக சப்ளை செய்தார்.   

      நீக்கு
    4. பாருங்கள் .. ஒரு சைக்கிளின் கதை என்னென்ன நல்ல விஷயங்களை வெளியில் கொண்டு வந்திருக்கிறது....

      நல்ல மனங்கள் வாழ்க...

      நீக்கு
  8. அனைவருக்கும் வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள், அப்பாவின் சைகிள், அப்பாவின் நினைவுகளைச் சுமந்து கொண்டு வரும் என எதிர்பார்த்தவாறே நடந்திருக்கிறது. இது துரையின் சொந்தக்கதை, உள்ளார்ந்த சோகக்கதை! இன்பமும், துன்பமும் கலந்த கதை! எல்லோரின் வாழ்விலும் நீக்கமற நிறைந்திருக்கும் சைகிள் கதை! கடைசியில் முடிவு இன்னமும் மனதை வருத்தி விட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் அக்கா....

      என்ன நடந்த்து என்று தெரியாமல் வாய்க்காலுக்குள் விழுந்தவன் நானே தான்..

      காயங்கள் எதுவும் இல்லை...

      மேலும் சில செய்திகளை தனியாக ஒரு பதிவில் தருகிறேன்..

      மகிழ்ச்சி... நன்றி...

      நீக்கு
  9. சித்தப்பா கூட "அப்பாவின் சைகிள்" என்னும் பெயரிலேயே ஒரு சிறுகதை எழுதி அந்தத் தலைப்பிலேயே ஓர் சிறுகதைத் தொகுப்பு விருட்சம் வெளியீடாக வந்திருக்கிறதுனு நினைக்கிறேன். வரேன் காலம்பர, மனதில் பதியவில்லை. இன்னிக்கு ஆபரேஷன் நடக்கணும். இன்னும் செய்தி எதுவும் வரலை. அலை பாய்கிறது மனசு! :(

    பதிலளிநீக்கு
  10. சைக்கிளை வைத்து ஒரு கதையா? ஆனால் எழுதும் திறன் உம்ளவர்களுக்கு குண்டூசியும் கதை நாயகனாகுமே. அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி... நன்றி...

      நீக்கு
  11. என் மகள் சைக்கிளை வீட்டுக்கு முன் வைத்து விட்டு பூட்டாமல் வந்து விட்டாள் வீட்டுக்குள், யாரோ எடுத்து போய் விட்டார்கள். காவல் நிலையத்தில் புகார் செய்தால் அங்கு இருக்கும் ஏதோ பழைய சைக்கிளை எடுத்து போக சொன்னார்கள். குப்பை போல் சைக்கிள்கள் நின்றன. என் மகளின் சைக்கிள் புதுசு. எங்கள் சைக்கிள் இல்லை என்று வந்து விட்டார்கள்.

    வேறு சைக்கிள் வாங்கி கொடுத்தோம் மகளுக்கு.

    சைக்கிள் கற்றுக் கொண்டு அப்பா வாங்கி தருவார்கள் சைக்கிள் என்று ஆசையாக இருந்த என்னிடம் அப்பா" வாடகை சைக்கிள் வாங்கி வந்து வீட்டு முன் புறம் ஓட்டிப் பார்த்துக் கொள் ஆசையாக வீதியில் எல்லாம் வேண்டாம் அம்மா போக்குவரத்து பயம்" என்று சொல்லி விட்டார்கள். அம்மாவிடம் சிபாரிசுக்கு போனால் "அம்மாவும் காலை கையை உடைத்துக் கொள்ளதே என்று சொல்லி விட்டார்கள்."

    என் சைக்கிள் கனவு அத்துடன் போச்சு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிறைய விஷயங்கள்....
      பெற்றவர்களின் கவலை இப்படித்தான் இருக்கும்....

      நீக்கு
  12. முடிவு மனதை நெகிழ வைத்து விட்டது ஜி

    பதிலளிநீக்கு
  13. இந்தத் தலைப்பில் படம் வந்ததுன்னு நினைவு. பார்த்திருக்கிறேன்

    பதிலளிநீக்கு
  14. மிகச் சிறப்பாக எழுதப்பட்டிருக்கும் கதை.  நீங்கள் எ.பி.யோடு நின்று விடக்கூடாது துரை சார். 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி...

      ஸ்ரீராம் அவர்களும் இப்படித்தான் சொன்னார்...

      பார்க்கலாம்...
      கலைமகள் என்ன ஆணையிடுகின்றாளோ!..

      நீக்கு
  15. சைக்கிள் வர்ணிப்புகள் எனது அந்நாளைய ஹெர்குலஸ் பச்சை நிற சைக்கிளை நினைவில் கொண்டு வந்தன... மில்லர் டைனமோ.. அடடா! எவ்வளவு பளபளப்பாக இருக்கும்!.. அதற்கு மஞ்சள் கலர் வெல்வெட் கைக்குட்டை சைஸ் துணியை மப்ளர் மாதிரி சுற்றி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்கள் வீட்டுச் சைக்கிளும் இப்படித் தான் இருக்கும்...

      தனிப்பதிவில் சில செய்திகளைச் சொல்வதற்கு விழைகிறேன்...

      மகிழ்ச்சி... நன்றி...

      நீக்கு
  16. மிக அருமையான கதை, அப்பா இன்னும் இருப்பதுபோல காட்டியிருந்தால், கதை மனதுக்கு இன்னும் மகிழ்ச்சியைக் குடுத்திருக்கும் இது பாதிக்கு மேல் சோகமாச்சு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம். நானும் அதையே நினைத்தேன்.

      நீக்கு
    2. தாங்கள் சொல்வது உண்மை

      எல்லாக் கதைகளையும் ஒரு மாதிரி சுபமாக முடிப்பதாக பேர் கிடைத்துள்ளது..
      இதிலுள்ள சில செய்திகளைத் தனியாக ஒரு பதிவில் பேசுவோம்...

      மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  17. அழகான வர்ணிப்பில் வழுவழுத்து நழுவிப் போன வரிகள்.. மனசில் நிற்கும் கதை!.. வாழ்த்துக்கள், துரை சார்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜீவி ஐயா தங்கள் கருத்துரைக்கு மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  18. சைக்கிளால, அதுவும் வயலுக்குள் விழுந்து வயிற்றில் தையலாம்:), அதிலயும் 6 மாதம் ஹொஸ்பிட்டலாம்:)... இதெல்லாம் ரொம்ப ஓவர் சொல்லிட்டேன் ஹா ஹா ஹா...

    இந்தக் கதைதான் ரொம்ப சூப்பர் துரை அண்ணன், உங்கள் சமீபகால கதைகளுக்குள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆகா...

      காபி அதிரா...
      ஆறு நாட்கள் தானே ஹொஸ்பிட்டலில்...

      வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  19. ராலே சைக்கிளை புதுப்பித்து "பிரசாத்" க்கு தயார் நிலையில் வைக்க வேண்டும் சார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எப்போதும் தாத்தாவின் சொத்து பேரனுக்குத் தானே!...

      சைக்கிளை புதுப்பித்து விடுவோம்...

      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  20. வணக்கம் சகோதரரே

    அருமையான கதை. படிக்கப் படிக்க ஸ்வாரஸ்யமாக சென்றது. ஆனால்,கனவும் காதலுமாக மனதை மகிழ்வித்த சைக்கிள் இறுதியில் நினைவுப் பொருளாகப் போனதும் மனதை வருத்தியது. கடைசியில் கதை மிகவும் நெகிழ்வாக இருந்தது.

    எங்கள் வீட்டிலும் ஒரு சைக்கிள் இருந்தது. குழந்தைகள் பள்ளி செல்லும் காலம் வரை ஓட்டினார்கள். பின்பு உறவினருக்கு கொடுத்து விட்டோம். வீட்டுக்கு வீடு இன்று சைக்கிள் நினைவுகள்தான். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பு வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி....

      இந்தக் கதையைத் தொடர்ந்து
      சைக்கிளைப் பற்றிய பலவிதமான மலரும் நினைவுகள்...

      அத்தனையும் அருமை...

      மகிழ்ச்சி... நன்றி...

      நீக்கு
  21. கதை மிக நன்றாக இருக்கிறது. சந்தோஷம். நீங்கள் அச்சு ஊடகங்களில் பிரகாசிக்கலாம் முயன்று பாருங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும்
      கருத்துரையும் மகிழ்ச்சி... நன்றி...

      நீக்கு
  22. அருமையான கதை...
    வாராவாரம் செல்வராஜ் ஐயாவின் ஆராவாரம்...
    கலக்கல்.
    கே.வா.போ.கதையை இனி செல்வராஜ் ஐயாவின் கதைகள் என மாத்திடலாம் என்பது போல்... தொடர்ந்து அடித்து ஆடுகிறார்... அருமை ஐயா... வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் குமார்...

      இனி சில வாரங்களுக்கு வேறு விதமான விருந்துகள்..

      தங்களது வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி... நன்றி....

      நீக்கு
  23. 196ஒகளில் ஒரு ஹெர்குலஸ் சைக்கிள் வைத்திருந்தேன் அப்போது ரூ 250 க்கு வாங்கிய நினைவு அதை வைத்து காதியின் அஹிம்சையை போதிக்கும் விதத்தில் ஒரு கதையும் புனைந்திருந்தேன்

    பதிலளிநீக்கு
  24. 1960 களில் என்று வாசிக்கவும்காந்தியின்யின்அஹிம்சையைஎன்றும் வாசிக்கவும் பிழைகள் பொறுக்கவெண்டி

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!