வியாழன், 4 நவம்பர், 2021

"ஷ்....   இன்று தீபாவளி.."

 நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள். 

நம் இளமைக்கால தீபாவளியின் சந்தோஷம் இன்னும், இன்றும் இருக்கிறது என்று நினைக்கிறீர்களா?

தீபாவளியின் சந்தோஷம் எதில் என்று நினைக்கிறீர்கள்?  பட்டாசு மத்தாப்பூவிலா?  புதுத்துணியிலா?  அன்று ரிலீஸாகும் படங்களிலா?  பட்சணங்களிலா?

முன்னரெல்லாம் புதுத்துணி என்று நாம் எடுப்பது தீபாவளிக்கும் பிறந்த நாளுக்கும்தான் இருக்கும்.  சமயங்களில் பொங்கலுக்கு.  நாங்கள் பொங்கலுக்கு புதுத்துணி எடுத்ததில்லை.  என் அலுவலக நண்பர்கள் சிலர் தீபாவளிக்கு புதுத்துணி எடுக்க மாட்டார்கள்.  பொங்கலுக்கு தவறாது எடுப்பார்கள்.  அவர்கள் பழக்கம் அப்படி.

அப்பாவுக்கு ஆபீஸில் சாங்க்ஷன் ஆகும் கோ ஆப்டெக்ஸ் அல்லது கதர்க் கடனில் போர்வை, தலையணை வாங்கியது போக தலையணை உரை போல டிராயர் வாங்குவது உண்டு.    இப்போதெல்லாம் நினைத்த நேரத்தில் துணிகள் எடுத்து விடுவதால் தீபாவளியின் புதுத்துணி ஆர்வமும் புஸ்சென்று போய்விடுகிறது.  பட்சணங்களை அப்படியே.

தொலைகாட்சி இல்லாத அந்த நாட்களில் வீட்டுக்குள் முடங்கி கிடப்பதில்லை.  தலைக்கு எண்ணெய் வைத்து தேய்த்துக் குளித்து சிவந்த கண்களுடன் ஓரிரு பட்சணங்கள், தீபாவளி லேகியம் சாப்பிட்ட கையோடு அவரவர்கள் வெடி பங்குடன் வெடிக்கக் கிளம்பி விடுவோம். வெங்காய வெடி முதல், ஊசி பட்டாஸ் வரை.  பிஜிலி வெடி, லட்சுமி, சிவாஜி வெடி எல்லாம் சற்று விசேஷம்.  சரம் இன்னும் சற்று விசேஷம்.  அதிலும் ஆயிரம் வாலா போன்றவை என்றால் படுவிசேஷம்!  மத்தாப்பூ, பூவாணம் போன்றவை சகோதரிகளுக்கு!  ஆனால் ராக்கெட் மட்டும் எங்களுக்கு!  தரைசக்கரம் பொது.  கையில் விடும் கிருஷ்ணசக்கரம் ரேர்!  அவர்களும் வந்து வெடிகள் வெடிப்பதுண்டு.  நியூஸ் பேப்பரைக் கிழித்து, தீயில் பற்றவைத்து, அதை தெருவில் வைத்து அதன் மறுமுனையில் வெடியின் திரி இருக்குமாறு வைத்து ஓடி வருவது ஆரம்பகால வாடிக்கை.  அப்புறம் கையிலேயே பற்ற வைத்துத் தூக்கி எறியும் சாகசங்கள்.  பட்டுப்பாவாடைகள், தாவணிகள், ஓரப்பார்வைகள்...

அன்று ஒரே படம் பல தியேட்டர்களில் வெளியாகும் சாகசம் கிடையாது.  ஒரு எம் ஜி ஆர் படம், ஒரு சிவாஜி படம், அப்புறம் சில படங்கள்.. எல்லாவற்றுக்கும்  கூட்டம் நிற்கும்.  எங்களை பொறுத்தவரை முதல் நாள் என்ன, முதல் ஒரு மாதத்தில் புதிய படங்கள் பார்க்கும் வழக்கமே கிடையாது!

எங்கே போச்சு அத்தனை சந்தோஷமும் இப்போது?  தொலைக்காட்சி, கொரோனா, அரசாங்கம் என்று கொஞ்சம் கொஞ்சமாக சந்தோஷங்களை பிய்த்தெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.  தீபாவளி என்பது ஒரு சம்பிரதாயமாக மாறிவிட்டது.

கடந்த சில வருடங்களில் இல்லாத ஒரு பரபரப்பு இந்த வருட தீபாவளியில் இருப்பதுபோல தோன்றுகிறது.  பத்து நாட்களாக ஊர் முழுவதும் ஒரே பரபர.

தீபாவளி மலர் படிப்பதுபோல நினைத்துக் கொண்டு நண்பர்களின் தீபாவளி நினைவுகளை படியுங்கள்.  அவசரமில்லை, ஒவ்வொன்றாகக் கூடப் படிக்கலாம்!

==================================================================================================

தீபாவளி நினைவுகள்.

நினைவுகள் என்றாலே இனிய நினைவுகள்தாம்.   "தீபாவளியும் அதுவுமாக"  வெடி- பயணவசதி- லீவு- பணத்தட்டுப்பாடு ஏற்படுத்திய பிரச்சினைகள் யாருக்கு வேண்டும் ?

அதிகாலை விழிப்பும் குளியலும் தந்த மெலிசான கண் எரிச்சல் கூட ஒரு சுகம்.  சீட்டி-காக்கி-பாப்ளின் ஆனாலும் டெய்லர் சற்றே ஏறுமாறாகத் தைத்த அந்த க் கஞ்சி மொடமொடப்புடன் விறைத்து நிற்கிற புத்தாடை ஏற்படுத்திய கர்வம், ருசி பார்த்து க் கச்சிதமாக அம்மா சித்தி அத்தைகள் தயாரித்த பட்சணம், சுடச்சுட காலைப் பலகாரம்-அமிர்தமாக சட்னி, தலைதீபாவளியன்று அக்கா தங்கை 'மாப்பிள்ளைகள்' முகங்களின் ஆனந்த ஜ்வலிப்பு, பயம்-அசட்டு தைரியம்-கூடிய வாண-வெடி வீராப்புகள்....

எதைச் சொல்ல எதை விட . அது ஒரு கனாக்காலம். நினைக்கும்தோறும் மகிழ்ச்சி.

===============================================================================================

போய காலங்கள் போகு காலங்கள் - தீபாவளி

ஒரு பண்டிகை என்றால் எது மனமகிழ்ச்சியை உண்டாக்கும்?  புது டிரெஸ், சுவையான உணவு, நண்பர்களோடு கொண்டாடுதல் போன்றவைதானே... நண்பர்களோடு ஜாலியாகக் கொண்டாடும் பண்டிகைகள் என்றால் பொங்கல், தீபாவளி, பிறகு ஆடிப்பெருக்கு (ஆற்றங்கரையில் நண்பிகளையும் பார்க்கலாமே) ஆகியவைதான்.

தீபாவளி என்றால் சட் என்று எனக்கு நினைவுக்கு வருவது, இளமைக்காலத்தில் கொண்டாடிய(?) சாதாரணத் தீபாவளிகள்தாம்.

எனக்கு 7 வயதாக இருக்கும்போது, அப்பா உதவியுடன் வீட்டிற்குள், இரயில் வெடி போன்றவையும், பாம்பு மத்தாப்பு கொளுத்தியதும் நினைவுக்கு வருகிறது (பரமக்குடியில்). பிறகு 9 வயதில், பூலாங்குறிச்சி என்ற ஊரில் இருந்தபோது (பொன்னமராவதி பக்கம்), காடாத் துணியில் கொஞ்சம் அளவுக்கு அதிகமாகத் தைத்துத் தந்த டிராயரும் கதர் துணியில் தைத்துத்தந்த சட்டையும் நினைவுக்கு வருகின்றன. அப்போது மத்தாப்புகள், சாட்டை போன்ற எளிமையானவைகளுடன் தீபாவளி முடிந்துவிடும். அந்த ஊரில் இருந்த அக்ரஹாரத்திற்கு நான் சென்று அங்கு நண்ப நண்பிகளின் வீட்டிற்குச் செல்வேன். நண்பியின் வீட்டில், ஓலைவெடி வெடிப்பார்கள். இன்னும் சிறந்த புது உடைகள், அதிக வெடிகள் என்று அவர்கள் இன்னும் சிறப்பாகக் கொண்டாடுவதுபோல என் மனதுக்குத் தோன்றும். அந்த வயதில் எனக்கு சாதாரண உடைகள்தாம். அப்பா உயர்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியராக இருந்தாலும், எங்களுக்கு சாதாரண உடைதான்.

அப்புறம் 9ம் வகுப்பு படிக்கும்போது என் பெரியப்பாவின் வீட்டில் தங்கிப் படித்தேன். அவர் கல்லூரி விரிவுரையாளர். ஊரில் உள்ள அனேகரைவிடவும் படிப்பும் சம்பாத்தியமும் இருந்தாலும், செலவு என்று வரும்போது, அந்த அனேகரைவிடக் குறைவாகச் செலவழிக்கும் பண்பு. (அப்பா, அவர் சகோதரர்கள் எல்லோரும் ரொம்ப கஷ்டப்பட்டவர்கள், என் பெரியப்பா வேலைக்குப் போகணும் என்ற வயது வரும்போது, அவருடைய அப்பா மறைந்துவிட்டார். குடும்பத்தைக் காப்பாற்றவேண்டிய தருணம். என் நண்பர்கள் எல்லோரும் புது டிரெஸ் (பேண்ட், ஷர்ட்) என்று கலக்கும்போது, எனக்கு வேஷ்டிதான் (சட்டையும் கிடையாது).  மற்றவர்கள் நிறைய வெடிகள் போட்டு தெருவில் உள்ள சிட்டுக்களின் மனதைக் கவர முயலும்போது, எனக்கு 2 ரூபாய்க்கு வெடிவகைகள் வாங்கித் தந்தார்.  என்னடா... மத்தவங்கள்லாம் நிறைய வெடித்து வெடிக்குப்பைகள் அவர்கள் வீட்டின் முன்பு, பரவி இருக்கிறதே என்று நினைத்தால், பேசாம கொஞ்சம் வெடிக்குப்பையை நம்ம வீட்டு முன்பும் அதிகாலைல போட்டுக்கொள் என்று சிரித்துக்கொண்டே சொல்வார்..  வறுமை கிடையாது, ஆனால் சிக்கனம். (We are only custodians of funds என்று சொல்வார்)
 
சென்னையில் வேலைக்குப் போக ஆரம்பித்தபோது, தீபாவளிப் பண்டிகை, உடை, வெடி என்று எதிலும் ஆசையே வரவில்லை. சில வருடங்களில் (ஐந்து வருடங்கள்) துபாய்க்குச் சென்றேன். அங்கு 3 வருடங்களுக்குப் பிறகு பஹ்ரைனில் 22 வருடங்கள் இருந்தேன். தீபாவளி என்ற எண்ணமே வராமலேயே போய்விட்டது. இந்த வருடமும் என் அம்மா மறைந்து 1 வருடம் ஆகாததால் (அதற்குச் சில நாட்களே இருக்கின்றன), தீபாவளி கிடையாது... அது சரி.. தீபாவளி இருந்தால்தான் என்ன?  பெரிதாக மன மகிழ்ச்சி வந்துவிடவா போகிறது? சென்னையில் இருந்தபோது (இரண்டு வருடங்களுக்கு முன்பு) நினைத்ததுபோல, வெடியை வெடித்து எதற்கு இப்படி காதைச் செவிடாக்கறாங்க.. மனுஷனை நிம்மதியா இருக்க விடறாங்களா என்றே தோன்றும்.  

இருந்தாலும், மனதின் ஓரத்தில் இளமைக்காலத்தில் நண்பர்களைப்போல பண்டிகைகளை கெத்தாகக் கொண்டாடவில்லையே, சிட்டுகளின் முன்பு கெத்தாக இருக்க முடியவில்லையே என்ற ஏக்கம் இருக்கத்தான் செய்கிறது.

- நெல்லைத்தமிழன் -
===============================================================================================

தீபாவளி அன்று எண்ணெய் தேய்த்து தலை முழுகக் கூடாது. ஆமாம், இப்படித்தான் ஒரு பிரபல ஜோதிடர் இன்று காலை (1-11-21) தொலைக்காட்சியில் கூறினார். தீபாவளி அன்று அமாவாசை வருகிறது. அமாவாசையில் எண்ணெய் தேய்த்து குளிக்கக் கூடாது.
 
ஆனால் நமக்கு நாள் என்பது சூரிய உதயத்திற்கு பின் தான் துவங்குகிறது. ஆகவே சூரிய உதயத்திற்கு முன் நரகசதுர்தியில் தலை  முழுக வேண்டும் என்று கூறினார். 

தீபாவளி என்பது தீபங்களின்  வரிசை. அதை நாம் திருக்கார்த்திகை அன்று கொண்டாடுகிறோம். ஆக நாம் கொண்டாடுவது நரக சதுர்த்தியே.

அது போகட்டும். எனக்கு 72 தீபாவளிகள் ஆகி விட்டது. சில சிறு வயது தீபாவளிகள் இப்போது ஞாபகம் வருகிறது. 

என்னுடைய 10 வயதுக்கு முந்தைய தீபாவளிகளில் பட்சணம் என்றால் வெல்லம் போட்ட அதிரசம் முந்திரிக்கொத்து பொருள் விளங்கா உருண்டை போன்ற இனிப்புகளும் முறுக்கு, தட்டை, வடை போன்ற கார வகைகளும் தான். துணி : புதிதாக வந்த ரேயான் துணி  மீட்டர் ரூபாய் 3.75 விலையில் வாங்கி தைத்த பொம்மை சட்டை. டிரில் டவுசர். 

15-20 வயதில் கொஞ்சம் முன்னேற்றம். அஸ்கா அதாங்க சீனி இனிப்புகள் ஹல்வா, மைசூர்பாக், சோமாஸ் போன்றவையும், காராசேவு, ஓமப்பொடி, முறுக்கு,  போன்ற கார வகைகளும் தான். துணி புதிதாக வந்த டெரிகாட்டன் சட்டையும், ஷார்க்ஸ்கின் பேண்டும் என்று ஒரு  உயர்வு. 

இன்னும் கட்டுரையை வளர்க்க விரும்பவில்லை. 

தற்போது அந்த நாளும் வந்திடாதோ என்று கிழவனும், கிழத்தியும் (நாங்க தேன்) வேஷ்டி, சட்டை, புடவை ஆன்லைனில் வாங்கி, வீட்டில் முறுக்கு தட்டை, ரவா லாடு செய்து, தனிமையில் தீபாவளி கொண்டாடுகிறோம். ஆசை இருக்குது மனசிலே. ஆனால் உடலும் மனமும் ஒத்துழைக்க மாட்டேன் என்கிறது. 

ஜேகே (ஜெயக்குமார் சந்திரசேகர்)
==========================================================================================================

இருள் களையும் விழா.  தீப ஒளி. 

அனைவருக்கும் என் அன்பான தீபாவளி பண்டிகையின் நல்வாழ்த்துக்கள். 

தீபாவளி என்றாலே பாரம்பரியமாக மக்கள் அனைவருக்கும் மனமகிழ்ச்சி தரும் ஒரு பண்டிகை. என்பது அனைவரும் அறிந்ததே. 

நம் இரண்டு இதிகாச புராணங்களிலும் கடவுள் தானே மனித அவதாரமாக எடுத்து வந்து நம்முடன் வாழ்ந்து, தர்மத்தை நிலை நாட்டவும்,  சத்திய வழியில் எப்போதும் தவறாது செல்லவும்,  பிறக்கும் ஒவ்வொரு மனிதனும் எப்படியெல்லாம் வாழ வேண்டும் என்பதையும்  இவ்வுலகிற்கு புரிய வைத்தார். 

ஒரு சமயம் உலக மக்களை  தன் கொடூர செயல்களால் ஆட்டிப் படைத்து  வந்த நரகாசுரன் என்னும் அரக்கனை இந்த ஐப்பசி மாதம் சதுர்தசி/அமாவாசையன்று  தன் கணவரான கிருஷ்ணபரமாத்மாவின் துணையுடன் சத்தியமாமா அழித்ததாக புராண கதை சொல்கிறது. அந்த அசுரனும், இறக்கும் தறுவாயில் தான் இறந்த இந்த தினத்தை மக்கள் தன்னைப்பற்றி அவதூறுகள் பேசி கழிக்காமல், அதற்கு மாறாக புத்தாடைகள் உடுத்தி, தங்கள் உறவினர்களுடன் விருந்தோம்பல்கள்  செய்து, வீடெங்கும் மங்களகரமான தீபங்கள் ஏற்றி, இறைவனை வழிபட்டு வான வேடிக்கைகளுடன் சிறப்பாக கொண்டாடி மகிழ்வாக இருக்க வேண்டுமென்ற வரத்தை கேட்டு உயிர் துறந்தான். இந்த கதையின்படி  அன்றைய தினத்தை நாம் "நரகசதுர்தசி ஸ்னானம்" என்றும், "தீபாவளியெனவும்" வழிவழியாக அப்படியே கொண்டாடி வருகிறோம்.

ராமாயண காலத்தில், தந்தை சொல் தட்டாது கானக வாழ்வை தன் மனைவி சீதையுடன் பதினான்கு ஆண்டுகள் முடித்து விட்டு தன் நாடான அயோத்திக்கு திரும்பிய தங்கள் அரசனான ஸ்ரீராமபிரானை அந்நாட்டின் மக்கள் மிகுந்த சந்தோஷத்துடன்  வரவேற்று,  வீதியெங்கும், ஒவ்வொரு வீடெங்கும், மலர் தோரணங்கள் கட்டி அலங்கரித்து  லட்சகணக்கான தீபங்களை ஏற்றி, வானவேடிக்கைகளுடன்  குதூகலம் பொங்க தம் உற்றார் உறவினர்களுடன் மகிழ்ந்திருந்த நாளே "தீபாவளி" எனவும் ஒரு கதை உண்டு.  ஆக இறைவன் தான் மனித அவதாரம் எடுத்து வாழ்ந்த இரு புராணங்களிலும்  இருளை அகற்றும் ஒளியாக இந்த (தீபஒளி) தீபாவளி பண்டிகையை முக்கியத்துவம் பெறச் செய்து  நீதியை போதிக்கிறார் எனவும் கொள்ளலாம். 

தீபாவளி என்பதற்கு தீப ஒளி என்ற பொருள்தான்  முன்னிலை வகிக்கிறது. இறைவன் ஒளி வடிவானவன். அதனால்தான் நாம் தினமும் அவரவர் வீடுகளில் காலை, மாலை விளக்கேற்றி வழிபடுகிறோம்.

 " ஒளி வடிவாக உன்னுள்ளே இருக்கும் இருளை அகற்ற பரமாத்மாவாக நான் உன்னுடன் குடி இருக்கிறேன். ஜீவாத்மாவாகிய நீ என்னைத் இடைவிடாது தேடி, உன்னை தன்னுடன் இணைத்து வைத்திருக்கும் " ஆசை" என்ற மாயையினால் கட்டப்பட்டிருக்கும் அஞ்ஞான இருளை அகற்றி, அதை நீ வென்று விட்டால், பரிபூரண வெளிச்சமாக உன்னுள்ளே வீற்றிருக்கும் என்னைக் காணலாம். இப்பூலகில் உனக்கென உண்டாக்கி வழங்கப்பட்டிருக்கும் பிறவிக் கடலை கடப்பதற்கு இந்த வழிதான் உசிதம்.." என கீதையில் அதே ஸ்ரீ கிருஷ்ணர் அர்ச்சுனன் மூலமாக மக்களுக்கு உபதேசம் செய்திருக்கிறார். 

அதன்படி நடந்து "அவனை" பரிபூரணமாக உணர்ந்தவர்கள் மஹா ஞானிகளாக, தவசிரேஷ்டர்களாக, யோகிகளாக, வாழ்ந்தும், மறைந்தும்  நமக்கு வழி காட்டியிருக்கிறார்கள் என்பதையும் நாம் அறிவோம்.  ஆனாலும் , மாயையின் பிடியில் இன்னமும் சிக்குண்டு இந்த சம்சார சாகரத்தில் உழன்று வரும் சாதாரண மனிதர்களாகிய நாம் அகக்கண்களால் "அவனை" ஜோதிஸ்ரூபமாக காண இன்னமும் எத்தனைப் பிறவிகள் எடுக்க வேண்டுமோ? 

இன்றைய தினத்தில் இப்போதும் வட நாட்டினர்  தத்தம் வீடுகளில்   நிறைய தீபங்களை (அகல் விளக்குகள்) ஏற்றி, இறைவனை வழிபட்டு கொண்டாடுவார்கள். நம் தென்னிந்தியாவிலும் இந்தப்பழககம்  இப்போது வந்து விட்டது என நினைக்கிறேன். வடக்கில் இமயத்தில் உதயமாகி என்றும் வற்றாது ஓடும் கங்கை நதியும், இந்த ஐப்பசி மாதத்தில் தென்னாட்டு வரை தவழ்ந்து வந்து இங்கிருக்கும் சகல நதிகளிலும் நீராடி கூடி களித்து தன் சாபமொன்றை போக்கி கொள்கிறாள். அதனால் தீபாவளியன்று  விடியல் பொழுதில் (நான்காவது சாமத்தில்) நீராடி முடிப்பவர்களை "கங்கா ஸ்னானம் ஆயிற்றா?" என ஒருவருக்கொருவர்  கேட்டு பண்டிகையின் உற்சாகத்தை கூட்டும் பேச்சு வழக்கு (மரபு முறை) இன்றும் நம்மிடையே உண்டு. 

மேலும் ஐப்பசி மாதத்தில் வரும் தீபாவளி அமாவாசையன்று  மாலை முதல் வாசல் படியில் இருபக்கமும்  இரு அகல் விளக்கேற்ற தொடங்கி, கார்த்திகை  மாதம் வரும் திருவண்ணாமலையார் தீபம் வரையும், அதன் பின் கார்த்திகை மாதம் முழுமை வரையும் விளக்கேற்றும் பழக்கம் நம்  வீட்டு பெரியவர்கள்  மூலமாக நமக்கு எப்போதும் இருந்து வருகிறது. 

இவ்விதம் நம் மனதிலிருக்கும் தெய்வீக குணமாகிய, அனைவரிடமும் பாரபட்சமின்றி அன்பு செலுத்துவது, மனித நேயத்தோடு அனைவரையும் நேசிப்பது போன்ற நல்ல குணங்கங்களின் ஒளி கொண்டு, அவ்வப்போது  மனதில் தலை தூக்கும் கோபம், பழி வாங்கும் வன்மம், அசூயை, போன்ற அசுர குணமான இருளையகற்றி, வருடந்தோறும் வரும் இந்த தீபஒளி பாரம்பரிய பண்டிகையை போற்றி, நமது  இளைய தலைமுறைகளுக்கும் இதன் நோக்கத்தை, அவசியத்தை உணர வைத்து அனைவரும் இறைவனின் இன்னருள்களை பெற்று சிறப்பாக வாழ்ந்திட  வேண்டுமாய் இறைவன் அருள வேண்டுமென இந்த நன்னாளில் பிரார்த்தித்துக் கொள்வோம்.  

 🙏

அனைவருக்கும் அன்பான நன்றிகளுடன் இனிய  தீபாவளி நல்வாழ்த்துகள்.

- கமலா ஹரிஹரன் -

================================================================================================

தீபாவளிக்கு நூறுநாட்கள் முன்னாடியிலிருந்தே ஒரு தூணில் இன்னும் எவ்வளவு நாட்கள் என்று countdown எழுதி தினமும் அதைப் பார்த்து ஆனந்தித்தது. 

"என்னைத்தான் முதலில் எழுப்பவேண்டும்; நான்தான் முதலில் கங்காஸ்நானம் செய்வேன்"  ஒவ்வொரு வருடமும் தீபாவளிக்கு முதல்நாள் பெற்றோரிடம் வைக்கப்பட்டு ஆனால் நிறைவேற்றப்படாத கோரிக்கை. 

எவ்வளவு பணக்கஷ்ட காலத்திலும் எங்களின் பட்டாசு ஆசையை முடிந்த அளவுக்கு திருப்தி செய்த அப்பா. 

சண்டை போட்டு(ஹி ஹி அழுது ஆர்ப்பாட்டம் செய்து), பங்கீட்டாளர் kayjee யிடமிருந்து பெற்ற எனக்கு உரிய பங்கான மத்தாப்பு கேப்பு வெடிகள், வாணங்கள். 

அதில் ஆபத்து இல்லாத மத்தாப்புகளை மட்டும் பயந்துகொண்டே தூரமாக வைத்துக்கொண்டு அவைகள் வெளியிடும் கலர் ஒளியை ரசித்த காலம். 

ஒவ்வொரு கேப்பு ஆக எடுத்து, திண்ணையில் வைத்து, அதை ஒரு நீண்ட சாம்பிராணிக் கரண்டியால் எட்ட இருந்து அடித்து வெடித்தது. (மற்ற வெடிகளை, வாணங்களை என் சார்பில் kayjee வெடித்து - கணக்கை சரி செய்வார்.)   

வளர்கிற பையன் என்று சொல்லி தைக்கப்பட்ட oversize உடைகளை அணிந்து தஸ்கா புஸ்கா என்று நடை போட்டது.  

அம்மா செய்த sweet எல்லாவற்றையும் அவர் கொடுக்கும்போது வாங்கி சுவைத்தது - 

அதுபோக அவருக்குத் தெரியாமல் திருடி, புது டிராயர் பையில் போட்டுக்கொண்டு யாருக்கும் தெரியாமல் சுவைத்து மகிழ்ந்தது, (அதை மறுநாள் டிராயரை துவைக்கும்போது அம்மா கண்டுபிடித்துவிடுவார் என்பது வேறு விஷயம்!) 

ஹூம் எல்லாவற்றையும் சொல்ல பத்து வரிகள் போதாது!




KGG
=========================================================================================


57 கருத்துகள்:

  1. காலை வணக்கம் சகோதரரே

    தங்களுக்கும்,தங்கள் குடும்பத்தினருக்கும், எங்கள் பிளாக் ஆசிரியர்கள் அனைவருக்கும்,அவர்கள் குடும்பத்தினருக்கும், மற்றும் எ.பியின் குடும்பமாக இருக்கும் சகோதர சகோதரிகள் அனைவருக்கும் என் அன்பான இனிய தீப ஒளித்திருநாள் வாழ்த்துகள்.

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கமும் தீபாவளி வாழ்த்துகளும் கமலா அக்கா...  வாங்க...

      நீக்கு
  2. வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் இந்த தீப ஒளித் திருநாள் மிகுந்த சந்தோஷத்தை தர வேண்டுமாக இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    இன்றைய வியாழன் கதம்பம் அருமை. தங்கள் தீபாவளி கட்டுரையுடன், நண்பர்கள் அனைவரின் கட்டுரைகளையும் தொகுத்து கதம்பமாக, ஒரு தீபாவளி மலராக வெளியிட்டிருப்பதற்கு மிக்க மகிழ்ச்சி. இதில் என் எழுத்தையும் பகிர்ந்து என்னையும் சிறப்பித்திருப்பதற்கு மனம் நிறைந்த நன்றிகள். அனைவரது கட்டுரைகளையும் படித்து விட்டு பிறகு வருகிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  3. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
    இறையருள் சூழ்க எங்கெங்கும்..

    வாழ்க வையகம்..
    வாழ்க வளமுடன்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கமும் தீபாவளி வாழ்த்துகளும் துரை செல்வராஜூ அண்ணா...  வாங்க...

      நீக்கு
  4. இருளெனும் தீமை விலகி
    ஒளியெனும் நன்மை பெருகிட
    தீபாவளித் திருநாள்
    நல்வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  5. கங்கா ஸ்நானம் ஆச்சா?

    தீபாவளி அன்று ஸ்ரீராம் அவர்கள் சூப்பர் லட்சுமி வெடி வெடிப்பார் என்று வந்தால் பதிவு புஸ்வாணம் ஆகிவிட்டது. நாலு கிழங்களைச் சேர்த்து "அந்த நாளும் வந்திடாதோ" பாட வைத்து விட்டார். அவரும் பாவம். ஆபீஸ் தொல்லை, வீட்டிலே பாஸ்சுக்கு உதவுதல், உடம்பு படுத்துதல் என்று ஏகப்பட்ட கஷ்டம். அதனால் என்ன இது ஒரு சிம்பிள் தீபாவளி மலராக இருக்கட்டும்.

    பி.கு.
    நான் கிழம் என்றால் மற்றவர்களையும் கிழம் ஆக்கியதற்கு மன்னிப்பு கோருகிறேன். 

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னுடைய திட்டமிடுதலும் வேறாய் இருந்ததுதான்.  நேரமில்லை, முடியவில்லை! மிகக்குறைந்த பட்சம் தீபாவளி வெடி, வாணப் படங்களாவது இணைக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.  உங்களை ஏமாற்றத்துக்குள்ளாக்கியதற்கு மன்னிக்கவும்! 

      நீக்கு
  6. @ஸ்ரீராம்.

    out of mike "இன்னும் சேர்க்க வேண்டுமா?" என்பதை எடிட் செய்திருக்கலாம்.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒன்றும் குறை இல்லை மாதிரி, விஷயங்கள் 'இன்னும் சொல்லவும் கூடுமோ' பாணியில் இருக்கட்டும் என்று அந்த வரியையும் விட்டு வைத்திருந்தேன்.  இப்போது நீக்கி விட்டேன்!

      நீக்கு
  7. அனைவருக்கும் இனிய தீபத் திரு நாள் நல் வாழ்த்துகள். இனிய
    காலையின் ஒளி அனைவரின் வாழ்விலும் நல் விளக்கேற்றி
    நன்மைகள் கொண்டு வரட்டும்.

    இறைவன் அருள் என்றும் நம்முடன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கமும் தீபாவளி வாழ்த்துகளும் வல்லிம்மா.....  வாங்க...

      நீக்கு
  8. ஜெகே சார். எங்களுக்கு நாளை காலை வர இன்னும் பத்து மணி நேரம் இருக்கிறது. அருமையான பதிவுக்கு நன்றி.
    கிழம் என்றால் நான் சேர்ந்து கொள்கிறேன்.
    உங்களை விட ஒரு வயது மூத்தவள் நான்:)

    எல்லா நினைவுகளும் அருமையே.
    உங்கள் இல்லக் கிழத்திக்கும் மக்களுக்கும் நல் வாழ்த்துகள்.
    ஆரோக்கியம், மகிழ்ச்சி நிறையட்டும். சென்னையில் மழை என்று தெரிகிறது.

    நம் உற்சாகம் என்றும் குறைய வேண்டாம்.நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா... ஹா... ஹா... என்னைப் போன்ற இளசுகளுக்கு உங்கள் வாழ்த்துக்களும், ஆசிகளும் அவசியம் தேவை.

      நீக்கு
  9. அன்பின் கமலாமா, அன்பின் நெல்லைத் தமிழன், அன்பின் KGG ji

    அனைவரின் பங்களிப்பும் அந்தந்த எழுத்தில்
    மிளிர்கிறது.

    நாம் எல்லோரும் மத்திய வர்க்கத்தைச் சேர்ந்தவரே.
    இறைவன் நம்மை இது வரை அருமையாகக் காத்து வந்திருக்கிறார்.
    இனியும் காப்பார் அன்பின் நெல்லைத் தமிழன் ,

    இன்னும் பல நல்ல காலங்கள் காத்திருக்கின்றன. பெண்ணின்
    திருமணம், பையனின் படிப்பு, எல்லாம் சிறக்க
    இறை அருள் என்றும் உண்டு.

    பதிலளிநீக்கு
  10. அன்பின் கமலாமா,
    நலமுடன் இருங்கள். தீபத்திரு நாள் வாழ்த்துகள்.

    ''இவ்விதம் நம் மனதிலிருக்கும் தெய்வீக குணமாகிய, அனைவரிடமும் பாரபட்சமின்றி அன்பு செலுத்துவது, மனித நேயத்தோடு அனைவரையும் நேசிப்பது போன்ற நல்ல குணங்கங்களின் ஒளி கொண்டு, அவ்வப்போது மனதில் தலை தூக்கும் கோபம், பழி வாங்கும் வன்மம், அசூயை, போன்ற அசுர குணமான இருளையகற்றி, வருடந்தோறும் வரும் இந்த தீபஒளி பாரம்பரிய பண்டிகையை போற்றி""

    அமிர்தமான வார்த்தைகள். நேர் எண்ண ஓட்டங்கள்
    நம்மைக் காக்கட்டும். நோயில்லாத வாழ்வை அளிக்கட்டும்.
    மிக நன்றி மா

    பதிலளிநீக்கு
  11. @KGG ji,அதில் ஆபத்து இல்லாத மத்தாப்புகளை மட்டும் பயந்துகொண்டே தூரமாக வைத்துக்கொண்டு அவைகள் வெளியிடும் கலர் ஒளியை ரசித்த காலம்.
    "
    ஒவ்வொரு கேப்பு ஆக எடுத்து, திண்ணையில் வைத்து, அதை ஒரு நீண்ட சாம்பிராணிக் கரண்டியால் எட்ட இருந்து அடித்து வெடித்தது. (மற்ற வெடிகளை, வாணங்களை என் சார்பில் kayjee வெடித்து - கணக்கை சரி செய்வார்.) "இதையே நாங்களும் செய்திருக்கிறோம்.

    நான் வளர்ந்து மணம் முடித்து,சென்னை வந்த பிறகும் பக்கத்து வீட்டுப் பையன் ஒவ்வொரு
    கேப்பாக வெடிப்பான். அதுவும் ராத்திரி பத்து மணிக்கு மேல்.
    'டேய் தூங்கப்போ என்று சொல்ல ஆசையாக இருக்கும்.
    நல்ல நினைவலைகளை இங்கு பதிவேற்றிய உங்கள் அனைவருக்கும்

    இனிய தீபாவளி நல்ல நாள் வாழ்த்துகள்.

    இனிமை தொடர இறைவன் அருளட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெடிக்காத வெடிகளின் மருதை பேப்பரில் சேகரித்து, அதைக் கொளுத்தி மகிழ்ந்தும் உண்டு; காயம் பட்டுக்கொண்டதும் உண்டு!  அதை வைத்து அணுகுண்டு ஹயாரிக்க முயன்றது உண்டு.

      நீக்கு
    2. ஓ உண்டு உண்டு. எனக்கு அனுமதி கிடையாது. என் நண்பர்கள்
      மாதுவும், கிட்டாவும் கொண்டு வருவார்கள். வாயில்
      கிராதிகளுக்கு இடையில்
      ஒளிரும் கந்தகத்தகத்தை ரசித்த நாள். நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  12. அன்பின் ஸ்ரீராம்,
    நல்ல நாளுக்கான வாழ்த்துகள். ஆரோக்கியம்
    ஆனந்தம் சேர வாழ்வு தொடர வேண்டும்.
    வேலை இன்னும் முடியவில்லை. இறைவன் அருளில்

    மீண்டும் பார்க்கலாம்.நல்லதொரு பகிர்வுமா.

    பதிலளிநீக்கு
  13. @ ஜெயகுமார்சந்திரசேகர்

    // நான் கிழம் என்றால் மற்றவர்களையும் கிழம் ஆக்கியதற்கு..//

    கிழம் என்றாலும் பழம் அல்லவா!..

    பதிலளிநீக்கு
  14. தீபாவளி இனிப்புகளைப் போல அழகான இனிய தொகுப்பு...

    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
  15. அனைவருக்கும் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  16. தூக்கம் கண்களை சுற்றுவதால் காலையில்தான் பதிவுகளை படிக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  17. அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்.

    தீபாவளிக் கட்டுரைகள் வியாழனின் இடத்தைப் பிடித்துக்கொண்டது ஏமாற்றமே. வியாழனை விட்டுவைத்திருக்கலாம்.

    தர்ப்பணம் போன்றவை இருந்துவிட்டால், வீட்டில் பெரியவர்களுக்கு, அதுவும் இன்னொரு நாள் என தீபாவளி மாறிவிடுகிறது.

    அடுத்த வருடம் நன்றாக்க் கொண்டாடுவது (வெடிக்காவிட்டாலும்) என நினைத்திருக்கிறேன். அதற்கு அடுத்த வருடம் பசங்க நம்மோடு இருப்பாங்களா என்ற சந்தேகம் வருகிறது. இன்னும் ஒரு சில தீபாவளிகளுக்கு மேல் அனைவரும் சேர்ந்து கொண்டாடுவது என்பது வெகு அபூர்வமாகிவிடும்.

    பதிலளிநீக்கு
  18. குறைந்தபட்சம் பட்சணப் படங்களை (இணையத்திலிருந்து அல்ல) சேர்த்திருக்கலாம். கொஞ்சம் ஏமாற்றம்தான்

    பதிலளிநீக்கு
  19. சகோதரர் ஸ்ரீராம் அவர்களுக்கும் எங்கள் பிளாக் குழுமத்திற்கும் இங்கு வருகை தரும் அனைத்து அன்புள்ளங்களுக்கும் மனங்கனிந்த இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  20. அனைவரும் அசத்தலாக தீபாவளி நினைவுகளை எழுதியிருக்கிறார்கள்! படிக்கப்படிக்க அருமையாக இருந்தன!
    இங்கே சில வீடுகளின் பால்கனிகளில் மின் அலங்காரம் செய்திருப்பார்கள் எப்போதும்! எல்லா உணவகங்களிலும் இனிப்புகள் வியாபாரம் கொடி கட்டி பறக்கும்! எந்த போனாலும் தடுக்கி விழுந்தால் இனிப்புகள் தான்! இப்போது புடவை விற்பனை இங்கு குறைந்து விட்டது. எங்கு பார்த்தாலும் சல்வார் கம்மீஸ் கடைகள் தான்! நல்லி சில்க்ஸ் இருந்த இடத்தில் இப்போது அது இருந்த சுவடே இல்லை. இங்கே இருக்கும் ஒரு தமிழ்க்கடையில் மத்தாப்பூ வாங்கி பேத்தியை பால்கனியில் கொளுத்தி மகிழ வைத்தோம்!! இன்று எல்லா உணவகங்களிலும் தீபாவளி சாப்பாடு உண்டு. [எங்கள் உணவகம் உள்பட!]
    இப்படித்தான் இங்கே தீபாவளி!!

    பதிலளிநீக்கு
  21. அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  22. நினைவலைகள் அருமை ஜி

    எமது இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  23. அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள். அனைவர் வாழ்க்கையிலிருந்தும் இருள் நீங்கி ஒளி பொங்கிப்பரவிடவும் பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
  24. எல்லோருடைய தீபாவளி நினைவுகளும் நன்றாக சுவையாக ரசிக்கும்படி இருந்தன. கேஜிஒய் எளிமையாக அவர் காலத்தை நினைவு கூர்ந்துள்ளார். ஜேகே அண்ணா அவர் பாணியில் கொடுத்திருப்பவையும் நன்றாக உள்ளன. நெல்லைத் தமிழரின் நினைவுகளைப் படிக்கையில் அவர் எழுத்து எனக்குப் புதிது என்பதால் யாராக இருக்கும் என்னும் ஆவலோடு படித்தேன். கமலாவைப் பாதிக் கட்டுரையிலேயே கண்டு பிடித்துவிட்டேன். கேஜிஜியையும் கண்டு பிடிச்சேன். பட்டாசுப் பங்கீடு கேஜி எனச் சொல்லி இருப்பதால் கண்டு பிடிக்க முடிந்தது.

    பதிலளிநீக்கு
  25. நானும் தீபாவளி நினைவுகளைச் சில வருடங்கள் முன்னர் எழுதி இருக்கேன். திருமணத்துக்கு முன்னர்/திருமணத்துக்குப் பின்னர் எனத் தனித்தனியாக எழுதினேன். தீபாவளியின் மகிழ்ச்சிக்குச் சின்ன வயசில் பக்ஷணமும், புத்தாடையும், பட்டாசும் தான் முக்கியமான காரணிகள். பின்னர் நாளாவட்டத்தில் வேறு மாதிரியான அனுபவங்கள்/சோதனைகள்/ திண்டாட்டங்கள் என இருந்தன. ஆனால் அப்போதெல்லாம் தீபாவளியின் சந்தோஷம் தனித்தன்மையுடன் இருக்கும். இப்போ அப்படி இல்லை என்பதே உண்மை. விடாமல் தொடரவேண்டும் என்பதற்காகவே இப்போல்லாம் செய்கிறேன்.

    பதிலளிநீக்கு
  26. சுவாரசியம்..
    தீபாவளியன்று எம்ஜிஆர் சிவாஜி ரஜினி படம் முதல் நாள் முதல் ஷோ தியேடரில் அடிதடி சகிதம் டிக்கெட் வாங்கி விசில் இறைச்சலில் படம் பார்த்து சந்தோஷமோ கடுப்போ அடைந்த அனுபவங்கள் யாரிடமும் இல்லயா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பொதுவாகவே திரைப்படம் பார்ப்பது குறைவு. தீபாவளி ரிலீஸ் படங்களில் ஏதேனும் ஒன்றை அடுத்த தீபாவளிக்குள் பார்த்தால் பெரிய விஷயம். :))))

      நீக்கு
  27. இனிய தீபாவளி அனுபவங்கள் . சிறுவயது தீபாவளி எப்பொழுதும் தனித்துவமானதுதான்.

    அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  28. தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  29. அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள் ! வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  30. ஸ்ரீராம் உங்கள் தீபாவளி நினைவுகள் அருமை.

    இப்போது எல்லாம் தீபாவளி நீங்கள் சொல்வது போல தீபாவளி என்பது ஒரு சம்பிரதாயமாக மாறிவிட்டது.

    முன்பு உறவுகளுடன் ஒன்றாய் கொண்டாடிய நினைவுகள் மிகவும் இனிமையானது,அருமையானது.

    பதிலளிநீக்கு
  31. //ருசி பார்த்து க் கச்சிதமாக அம்மா சித்தி அத்தைகள் தயாரித்த பட்சணம், சுடச்சுட காலைப் பலகாரம்-அமிர்தமாக சட்னி, //

    ஆமாம். எத்தனை பலகாரம் இருந்தாலும் என் கணவருக்கு சுடச்சுட இட்லியும் தேங்காய் சட்னியும் வேண்டும். தீபாவளி காலை. அதை உறவுகளுடன் அமர்ந்து சிரிப்பு வெடிகளை சிந்தி சாப்பிட பிடிக்கும்.

    பதிலளிநீக்கு
  32. //தற்போது அந்த நாளும் வந்திடாதோ என்று கிழவனும், கிழத்தியும் (நாங்க தேன்) வேஷ்டி, சட்டை, புடவை ஆன்லைனில் வாங்கி, வீட்டில் முறுக்கு தட்டை, ரவா லாடு செய்து, தனிமையில் தீபாவளி கொண்டாடுகிறோம். ஆசை இருக்குது மனசிலே. ஆனால் உடலும் மனமும் ஒத்துழைக்க மாட்டேன் என்கிறது. //

    ஜேகே சார் சொல்வது சரிதான். உறவுகளுடன் கொண்டாடிய காலங்களை நினைத்து மகிழ வேண்டி இருக்கிறது.

    பதிலளிநீக்கு

  33. நெல்லைத்தமிழனின் பகிர்வும் இளமைகால தீபாவளிதான் சிறப்பு என்று சொல்கிறது. //இருந்தாலும் மனதின் ஓரத்தில் இளமைக்காலத்தில் நண்பர்களைப்போல பண்டிகைகளை கெத்தாகக் கொண்டாடவில்லையே, சிட்டுகளின் முன்பு கெத்தாக இருக்க முடியவில்லையே என்ற ஏக்கம் இருக்கத்தான் செய்கிறது/

    கண்டிப்பாய் இருக்கும் தான். இளமை காலத்தில் நண்பர்கள், உறவுகள் வீடுகளுக்கு போய் பலகாரங்களை கொடுத்து வரும் போது தீபாவளி உடைகளை காட்டி மகிழ முடியவில்லை என்றால் வருத்தமாகத்தான் இருக்கும்.

    பதிலளிநீக்கு
  34. //அனைவரிடமும் பாரபட்சமின்றி அன்பு செலுத்துவது, மனித நேயத்தோடு அனைவரையும் நேசிப்பது போன்ற நல்ல குணங்கங்களின் ஒளி கொண்டு, அவ்வப்போது மனதில் தலை தூக்கும் கோபம், பழி வாங்கும் வன்மம், அசூயை, போன்ற அசுர குணமான இருளையகற்றி, வருடந்தோறும் வரும் இந்த தீபஒளி பாரம்பரிய பண்டிகையை போற்றி, நமது இளைய தலைமுறைகளுக்கும் இதன் நோக்கத்தை, அவசியத்தை உணர வைத்து அனைவரும் இறைவனின் இன்னருள்களை பெற்று சிறப்பாக வாழ்ந்திட வேண்டுமாய் இறைவன் அருள வேண்டுமென இந்த நன்னாளில் பிரார்த்தித்துக் கொள்வோம். //

    அருமையான பிரார்த்தனை. தீபாவளி வாழ்த்து அருமை கமலா ஹரிஹரன்.

    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  35. //ஹூம் எல்லாவற்றையும் சொல்ல பத்து வரிகள் போதாது!//

    கெளதமன் சார் நீங்கள் சொல்வது போல சிறு வயது நினைவுகளை சொல்ல பத்து வரி போதாதுதான்.

    தீபாவளி பண்டிகை எதிர்ப்பார்ப்புகள் எவ்வளவு! பண்டிகை காலங்களை நினைத்து நினைத்து அது வந்த பின் கொண்டாடி குதுகலித்த நாட்கள் மறக்க முடியாத நாட்கள்.

    பதிலளிநீக்கு
  36. //அடுத்த வருடம் நன்றாக்க் கொண்டாடுவது (வெடிக்காவிட்டாலும்) என நினைத்திருக்கிறேன்//

    நெல்லைத் தமிழன் , அடுத்த வருடம் நினைத்தது போல் கொண்டாடி மகிழுங்கள்.
    வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோமதி அரசு மேடம்... ஒவ்வொன்றையும் விமர்சித்தற்கு நன்றி. உங்களின் வாழ்த்துக்கும் மிக்க நன்றி. உங்கள் வாழ்த்து பலிக்கவேண்டும்.

      நீக்கு
  37. ஸ்ரீராம் உங்கள் தீபாவளி நினைவுகள் உட்பட எல்லோரது நினைவுகளும் சூப்பர்.

    எனக்கு தீபாவளி நினைவுகள் என்று பெரிதாக ஏதும் இல்லை அது ஏன் என்று தெரியவில்லை. என்ன பள்ளி கல்லூரி லீவு கிடைத்தது. வீட்டில் இனிப்பு காரம் என்று செய்து ருசித்ததுண்டு. அது அந்த வயது. கண்டிப்பாக திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா ஒவ்வொரு தீபாவளிக்கும் வீட்டில் செய்வதுண்டு. மிக்சர் கண்டிப்பாக அது போல ஒக்கோரை கண்டிப்பாக உண்டு. ஏன் தி இ அ என்கிறேன் என்றால் டெக்சர், மணம் பதம் கலர் எல்லாம் அப்படியே இருக்கும் ஹிஹிஹி..

    ஆனால் இந்த வருட தீபாவளி எங்கள் வீட்டில் இல்லை என்றாலும் இந்த தீபாவாளி நினைவில் எப்போதும் நிற்கும் ஒன்று. நெருங்கிய சொந்தங்களோடு கொண்டாட்டம் என்றில்லை என்றாலும் கூடியிருந்து களித்த நிமிடங்கள்....கொட்டும் மழை பசுமையின் இடையே என்பதால்....

    எல்லோருக்கும் வாழ்த்துகள்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீதா ரங்கன் இந்த தீபாவளிக்கு திருப்பதிசாரத்தில் அல்வா செய்திருப்பாரா? தாமிரவருணி ஆறுதானே இ க அ. தனிச் சிறப்புக்குக் காரணம்.

      நீக்கு
  38. தீபாவளி நினைவுகள் சுவாரஸ்யம். அனைவருக்கும் நல்வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!