திங்கள், 29 நவம்பர், 2021

'திங்க'க்கிழமை  :  மசாலா போளி அல்லது கார போளி - பானுமதி வெங்கடேஸ்வரன் ரெஸிப்பி 

 

 மசாலா போளி  அல்லது கார போளி


தேவையான பொருள்கள்: (மேல் மாவு பிசைந்து கொள்ள)

மைதா மாவு   -  2 கப் 

உப்பு                   - 1 சிட்டிகை 

புஃட் கலர்        - 2 சிட்டிகை 

சமையல் எண்ணெய்  -  1 தேக்கரண்டி 

மைதா மாவை தண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து, உப்பு, நிறமி(food colour) இவைகளையும் சேர்த்து கடைசியில் எண்ணெய் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து வைத்து விடுங்கள். 


மசாலா பூரணம் செய்யத் தேவையான பொருள்கள் :

உருளைக் கிழங்கு - 4

பட்டாணி   -  ஒரு கரண்டி 

வெங்காயம் -1

பூண்டு (தேவையென்றால்) - 3 அல்லது 4 பல் 

கொத்துமல்லி தழை - சிறிதளவு 


தாளிக்க: 

எண்ணை    -  சிறிதளவு 

சீரகம்  - ஒரு டீ ஸ்பூன்

*காரப்பொடி  - ஒரு டீ ஸ்பூன் 

உப்பு  - ஒரு டீ ஸ்பூன் 

துருவிய காரட் - சிறிதளவு 

இட்லி மிளகாய்ப்பொடி - சிறிதளவு 

செய்முறை:

உருளைக் கிழங்கை வேக வைத்து, தோல் உரித்து, உதிர்த்துக் கொள்ளவும்.

ஒரு கடாயில் எண்ணையை ஊற்றி அது காய்ந்ததும் சீரகத்தைப் போட்டு வெடிக்க விட்டு, பொடியாக நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கிக் கொண்டு, பின்னர் பட்டாணியை சேர்த்து வதக்கி விட்டு கடைசியில் உதிர்த்து வைத்திருக்கும் உருளைக் கிழங்கை போட்டு, அதனோடு உப்பு, மஞ்சள் தூள், காரப்பொடி இவைகையும் சேர்த்து வதக்கி அடுப்பிலிருந்து இறக்கி, ஆற விடவும். 



இப்போது மேல் மாவு, பூரணம் இரண்டுமே தயார். 

மைதா மாவை சற்று பெரிய உருண்டை அளவு எடுத்துக் கொள்ள வேண்டும். அதை சப்பாத்தி இதும் கல்லில் அதிகம் பரத்தாமல் சிறிய வட்டமாக பரத்திக் கொள்ளவும். 

பரத்தியிருக்கும் சப்பாத்தியை விட சிறிய உருண்டையாக பூரணத்தை எடுத்திக் கொண்டு அதை மைதா மாவின் நடுவில் வைத்து மூட வேண்டும். பின்னர் கல்லில் கொஞ்சம் மைதா மாவை தூவி  குழவியால் அதிக அழுத்தம் கொடுக்காமல் சப்பாத்தி இடுவது போல் இட்டு, தோசைக்கல்லில் போட்டு, எண்ணை ஊற்றி ஒரு பக்கம் லேசாக வந்ததும், திருப்பி போட்டு இந்த பக்கம் வேக வைக்க மீண்டும் எண்ணை ஊற்றி, லேசாக வந்ததும் மீண்டும் திருப்பி போட்டு அதன் மீது கேரட் துருவல் மற்றும் இட்லி மிளகாய்ப் பொடியைத் தூவி, வெந்ததும் இறக்கி விடலாம். இதற்கு தொட்டுக் கொள்ள எதுவும் தேவையில்லை.   


என்ஜாய் மாடி!



38 கருத்துகள்:

  1. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம்.
    கார போளி எப்படி இருக்கிறது என்று சொல்லுங்கள்.
    ஆரம்ப காலத்தில் பத்திரிகைகளுக்கு ஏதாவது மேட்டர் அனுப்பி விட்டு புத்தகத்தில் வருகிறதா? என்று எதிர்பார்ப்போமே அது போல ஆகிவிட்டது எ.பி.யும். எ.பி.வளர்கிறது மம்மி!

    பதிலளிநீக்கு
  2. ஆலு பராத்தாவிற்கும் இதற்கும் என்ன வித்யாஸம்? மாவு தவிர.

     Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரவையை வறுத்து, வெங்காயம்,ப.மிளகாய் சேர்த்து செய்யும் உப்புமாவில் மஞ்சள் பொடி சேர்த்து அதை கிச்சடி என்பதில்லையா? ஜெயகுமார் சார்?அது மாதிரிதான். மேலும் ஆலு பராட்டாவின் மேல் காரட், மிளகாய்ப் பொடி தூவி மாட்டார்கள். இந்த கார போளியை பிரபலப் படுத்தியது கிருஷ்ணா ஸ்வீட்ஸ். அவர்கள் சூட்டிய பெயர் இது.
      கருத்திற்கு நன்றி.

      நீக்கு
  3. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
    இறையருள் சூழ்க எங்கெங்கும்..

    வாழ்க வையகம்..
    வாழ்க வளமுடன்..

    பதிலளிநீக்கு
  4. பட்டாணி எதற்கு? போளி தட்டும்போது வெளில வந்துவிடாதோ?

    முன்னொரு காலத்தில் பாண்டிபஜார் கிருஷ்ணா ஸ்வீட்ஸ்ல சாப்பிட்டிருக்கேன். அவ்வளவாக விரும்பியதில்லை.

    இங்கெல்லாம் விதவித இனிப்பு போளிகள்தாம் கிடைக்கும்.

    கோதுமை சப்பாத்தியில் ஸ்டஃப் பண்ணி பராத்தா மாதிரி இட்டால் இன்னும் சுவையாக இருக்குமோ?

    செய்முறை நன்று

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை. கோதுமை மாவில் செய்தால் இன்னமும் சுவை நன்றாக இருக்கும். பட்டாணியோடு சப்பாத்தியை இடுவது என்றால் கொஞ்சம் கஷ்டம் தான். அதுவும் வேகவைக்காத பட்டாணி போல!

      நீக்கு
    2. Frozen peas என்பதால் தனியாக வேக வைக்க தேவை இல்லை. உ.கி., வெங்காயத்தை வதக்கவும் பொழுதே அதுவும் வெந்து விடும். பரத்தும் பொழுது வெளியே வராது.
      கிருஷ்ணா ஸ்வீட்ஸில் செய்வதை பார்த்து கற்றுக் கொண்டேன்.
      நன்றி நெல்லை.

      நீக்கு
  5. செய்முறை விளக்கம் அருமை மேடம்.

    பதிலளிநீக்கு
  6. குறிப்பு நன்றாக இருக்கிறது. இட்லிப்பொடி உபயோகித்து செய்திருப்பது நல்ல ஐடியா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம், இந்தக் காரட் துருவிச் சேர்ப்பதும் இட்லி மிளகாய்ப்பொடி போடுவதும் தான் புதிது.

      நீக்கு
    2. ஐடியா என்னுடையது அல்ல. கிருஷ்ணா ஸ்வீட்ஸுனுடையது. நன்றி மனோஜி.

      நீக்கு
  7. பானுமதியின் செய்முறையில் இட்லிப்பொடி சேர்ப்பதும், பட்டாணி/காரட் துருவிச் சேர்ப்பதும் தான் புதுமை. மற்றபடி ஆலு பராட்டா தானே இது! கடைகளில் நெய்/வெண்ணெய்/எண்ணெய் அதிகமாக இருப்பதாகச் சொல்லுவார்கள். நான் எந்தக் கடைகளிலும் வாங்கிச் சாப்பிட்டதில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் எதுவும் புதிதாக செய்யவில்லை அக்கா, எல்லா புகழும் கிருஷ்ணாவுக்கே! நன்றி.

      நீக்கு
  8. பானுக்கா ஆ ஆ கார போளி ரொம்பப் பிடிக்கும். வாசித்துக் கொண்டே வந்த போது, அக்கா போளியின் மேல் கொஞ்சம் நெய் விட்டு இட்லி மிளகாய்ப்பொடி தூவுவாங்களா என்று பார்த்துக் கொண்டே வந்தேன். ஹப்பா! தூவியிருக்கீங்க. காரட்டுடன். செமையா இருக்கு பானுக்கா.

    குளிருக்கு நல்லாவே இருக்கும். இங்கிருந்து எடுத்துக் கொண்டு நயாகரா போய் அங்கு உட்கார்ந்து அருவி லைட்டிங்க் எல்லாம் பார்த்துக் கொண்டே சப்புக் கொட்டிச் சாப்பிட்டுவிட்டு இதோ இங்கு கருத்தும்...ஹாஹாஹா

    ரசித்தேன் பானுக்கா.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //குளிருக்கு நல்லாவே இருக்கும்.// -குளிருக்கு மிளகாய் பஜ்ஜி சொல்லுங்க, இல்லை வெங், மிளகாய் போட்ட மசால்வடை, ஆனியன் பஜ்ஜி(சூடா இருக்கணும்) இதெல்லாம் இல்லாம... சவுக் சவுக் மசாலா போளியா? என்ன ரசனை இந்த கீதா ரங்கன்(க்கா)வுக்கு... ஒருவேளை ஆற்றுவெள்ளத்திலேயே வீட்டில் கொஞ்சநாள் இருந்ததால், எதில் காரம் போட்டுக்கொடுத்தாலும் நன்றாக இருப்பதாக பிரமை ஏற்பட்டுவிட்டதோ? ஹாஹா

      நீக்கு
    2. //சவுக் சவுக் மசாலா போளியா?// சூடாக சாப்பிட்டு பாருங்கள் சவுக் சவுக்கென்று இருக்காது. அதன் பிறகு சூடாக காபியும் குடிக்க வேண்டும்.

      நீக்கு
  9. மேலே கரட் இட்லி மிளகாய்பொடி ஆகா .

    பதிலளிநீக்கு
  10. வணக்கம் சகோதரி

    தங்களின் செய்முறையான கார போளி பார்க்கவே நன்றாக உள்ளது. இப்போதைய மழை, குளிர் காலத்திற்கு ஏற்ற உணவு. படங்களும் செய்முறைகளும் அருமை. இறுதியில் போளியில் மேல் காரட் துருவலும், இட்லி மிளகாய் பொடி தூவுவதும், கார போளியை மேலும்,சுவை கூட்டியுள்ளது. இதைப் போலவே ஒரு தடவை செய்து பார்க்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிச்சயம் ட்ரை பண்ணி விட்டு சொல்லுங்கள். நன்றி.

      நீக்கு
  11. அனைவருக்கும் வணக்கம்
    வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  12. மசாலா போளி செய்முறை குறிப்பும், படங்களும் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  13. மசாலா போளி புதியதொரு குறிப்பு.. செய்முறையும் எளிதாகத் தான் இருக்கின்றது..

    ஊருக்குத் திரும்பியதும் செய்து பார்க்கலாம்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  14. தேவையா? (ஸ்ரீராமுக்கு உச்சி குளிந்திருக்குமே?)

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!