செவ்வாய், 9 நவம்பர், 2021

அப்பாதுரை - மறக்கவியலா சிறுகதை : முக்தி

 முக்தி


முதல்
     காந்திஜி இந்தியாவுக்குக் கொண்டு வந்த ஜப்பானிய குரங்குக் குறியீடுகளுக்கு முன்னரே மானுடம் கட்ட வேண்டியவை கண், காது, வாய் இம்மூன்றென நம் நெறிகள் சொல்லி வந்திருக்கின்றன. ஏன் கட்ட வேண்டும்? இம்மூன்று புறப்பார்வைகளின் அவசரத்தால் அகப்பார்வையான அறிவை இழக்கிறோம். அறிவை இழந்து இடையறாமல் முனைப்போடு வினை புரிவதால் முக்தியிலிருந்து விலகி விலகிப் போகிறோம். ஏற்க முடிகிறதா? முடிகிறதெனில் அடுத்த கேள்வி.
     முக்தி என்றால் என்ன? நல்வினை பல புரிந்து சோதனை பல கடந்து இறுதியில் இறையடி சேர்ந்து வருபிறவி விடுப்பது முக்தி என்பீரெனில், ஹிஹி, இந்த மாதிரி சித்தாந்தச் சிந்தனைகளில் நீங்கள் சின்ன பப்பா! அகமும் புறமும் ஒரு நாணயத்தின் பக்கங்கள் என்ற அறிவை இழந்து நல்வினையோ தீவினையோ இடையறாது செய்து பின் திடீரென்று கை தட்டி ஊனமாய் நடந்து 'பிறக்கு முன்னே இருந்த உள்ளம் இன்று வந்ததடா' என்று டிஎம்எஸ் குரலில் பாடி மூச்சை நிறுத்துமுன் வினைதளை அறுத்து விடுதலை பெறுவதே முக்தி என்பீரெனில், ஹிஹி, இந்த மாதிரி சித்தாந்தச் சிந்தனைகளில் நீங்கள் அப்பப்பா!!

இடை

    

 பெரிய பண்ணையிடம் குத்தகைக்கு எடுத்த அரைக்காணி நிலத்தின் பாசனக் கிணற்றடியோரம் செங்கலும் சாந்தும் சேர்த்துக்கட்டிப் பனங்கீற்று வேய்ந்த வயற்காவல் குடிலின் வாசலில் சாய்வு நாற்காலியில் அமர்ந்து சின்னன் தன் பயிரைத் தினம் கண்டுக் காமுறுவான். இன்றும் அப்படியே. கிணற்றடியில் ஏற்றச்சால் இறைத்துக் கவிழ்க்கும் பெண்டிரின் இனிய குரல் ஒலிக்க....

       நஞ்சஞ்சுப் பிச்சாண்டி பரமசிவன் புத்திரரே பஞ்சஞ்சு மெல்லிடையாள் பார்வதியின் புத்திரரே
       முந்திமுந்தி நாயகனே மத்தக் கரிமுகரே மயிலேறு மால்மருகா மலப்பழனி வேலவரே
       தும்பி நுகராத ஆயிரம்பூ தூக்கி வந்தோம் வண்டு நுகராத ஆயிரம்பூ வாரி வந்தோம்
       தூக்கிவந்த பூவெல்லாம் தும்பிக்கை காலடியில் வாரிவந்த பூவெல்லாம் வெற்றிவேல் காலடியில்
      வாரும் பிள்ளயாரே வரவேணும் சம்முகரே ஏத்தமுகம் பாரும் ஏழையெமைக் காரும்
      மாமனைப் பாடி மூவிருசால் ஏத்திருவோம் மருமகனப் பாடி முப்பாரம் இறைச்சிருவோம்
           போட்டாளே மருந்தப் போட்டாளே புருசன் மனசுல பொல்லாக்கள்ளி அந்தக்
           கள்ளிமருந்தாலே கட்டினவளை மறந்தானே தாசிமருந்தாலே தாயமறந்தானே ராசன்
           வேசிமருந்தாலே வீட்டை மறந்தானே பாயிமருந்தாலே பெத்தரெண்டும் மறந்தானே
      பிள்ளையாரைப் பாடிப் பிடிச்சிருடி கைக்கோல ஆனமுகனப் பாடி இறைச்சிருடி தண்ணீர
      விநாயகனைப் பாடி விட்டுருடி பாரத்த வேலவனைப்பாடிக் கரைச்சிருடி கண்ணீர
      தாசிகளைக் கண்டா தலமறச்சு தூக்கிவருவான் வேசிகளைக் கண்டா வழிதப்பி இழுத்துவருவான்
      அத்தனையும் கருமவினை அடியடியடியடி சத்திமவனை நித்தம்நினை அடியடியடியடி
         ஏத்தந் தூக்கையிலே சொந்தமா வந்திடுவான்
      ஆமா என் தொந்தன்
           ஏத்தங் கவிழையிலே சோகத்தைக் கரைச்சிடுவான்
      ஆமா என் கந்தன்
         ஒண்ணே ரகுராமா எம்பூட்டன் சிவபாலன்
      ஒண்ணே ரகுராமா எம்பூத்தி சிவபாலன்
           ரெண்டே ரகுராமா எம்பாட்டன் சிவபாலன்
      ரெண்டே ரகுராமா எம்பாட்டி சிவபாலன்
           மூணே ரகுராமா எந்தோப்பன் சிவபாலன்
      மூணே ரகுராமா எந்தாயும் சிவபாலன்
           நாலே ரகுராமா எம்மவன் சிவபாலன்
      நாலே ரகுராமா எம்மவளும் சிவபாலன்
           அஞ்சே ரகுராமா எம்பேரன் சிவபாலன்
      அஞ்சே ரகுராமா எம்பேத்தி சிவபாலன்
           ஆறே ரகுராமா எல்லாரும் சிவபாலன்
      ஆறே ரகுராமா எல்லாமும் சிவபாலன்...
...குத்தகை நிலத்துப் பயிரைப் பார்த்தே பரவசம் அடைகிற சின்னன், அந்த நிலைத்தையொட்டி, பெண்டாட்டித் தாலித்தங்கத்தை அடகு வைத்து கடன் வசூல் ஏலத்தில் சொந்தமாக வாங்கிச் சுத்தப்படுத்திப் பயிரிடத் தயாரியிருந்த இரண்டு குழி நிலத்தைப் பார்த்ததும் பெற்றெடுத்த அழகான முதல் காதல் குழவி போல் கர்வமும் கொண்டான்.
  காதலும் கர்வமும் தெரிந்த கண்களில் திடீரென்று கோபம் தெரிந்தது. காரணம், தாமு. தன் மாடுகளையும் ஆடுகளையும் மேய்த்தபடி சின்னனின் நில எல்லைக்குள் புகுந்துவிடும் சாத்தியத்தைப் பார்த்ததில் விளைந்த எரிச்சல். "டேய் தாமு!" என்று கூவினான் சின்னன். "ஆட்டையும் மாட்டையும் ஓரமா மேச்சுட்டுப் போ.. அந்த இடத்தில கிடை போட்டிருக்கு, கீதாரிக்கு இப்பத்தான் பணம் கொடுத்தேன்.. குறுக்கே பூந்து குடைஞ்சுராதே".
  "மேட்டுத்தெடலுக்கு இதானே குறுக்குப் பாதை சின்னா? சட்னு மேச்சுக் கூட்டிப் போயிடறேன்.. சுத்திப் போனா நேரமாயிரும். அவசரமா ஊருக்குப் போகணும்.. கிடை மிதிபடாம வரப்போரமா போயிடறேன்... நெதம் இப்படிப் போயி பழகிருச்சா..."
  "அதெல்லாம் இனி நடக்காது, இது என் நிலம். லே, இத்துப் போனவனே, சொல்லிட்டே இருக்கேன்... என் நிலத்துல தொடர்ந்து அடி வச்சே, நடக்குறதே வேறே.. சுத்திக் கூட்டிப் போடா". சாய்த்திருந்த துரட்டியை எடுத்துக்கொண்டு ஏற்றப் பெண்டிரைத் தாண்டி தாமுவை நோக்கி நடந்தான்.
  "இன்னிக்கு மட்டும் சின்னா.. நாள்லந்து இந்தப் பக்கம் வரலே. தம்பிக்குத் தொலைகிராமத்துல பெண்ணெடுத்திருக்கு.. வண்டி கட்டி அவசரமா போகணும் சின்னா.."
  "டேய்... மரியாதையில்லாம... நான் யாரு தெரியும்ல? எடேய்.. ஒரே வருசத்துல இந்த கிராமத்து சின்ன பண்ணையாப் போற எங்கிட்ட... ரெண்டு மாட்டையும் நாலு ஆட்டையும் வச்சுகிட்டு...நாதாரிப் பயலே... எதிர்த்தா பேசுற? ஓதுங்கி போடா. மீறி என் வரப்புல காலை வச்சே...". விடுவிடென விரைந்து தாமுவை மறித்தான். "ஒரு அடி வச்சே, உன் ஆட்டை வெட்டிக் கறியாக்கித் தின்னுடுவேன் பாத்துக்க.."
  சின்னனின் கண்களில் தென்பட்டக் கனலைக் கண்டு ஒரு கணம் தயங்கிய தாமு தன் ஆடு மாடுகளை நிறுத்தினான். சின்னனை நேராகப் பார்த்தான். "மன்னிச்சிங்க சின்னப் பண்ணே.." என்று பணிந்து தன் ஆடு மாடுகளை அகற்றி சுற்றுப் பாதையில் கூட்டிப் போனான்.
  மறுநாள் அதிகாலையில் தன் வீட்டுக் கதவை யாரோ தட்டுவது கேட்டு பாதுகாப்பு அரிவாளுடன் கதவைத் திறந்தான் சின்னன். மேட்டுத்திடல் ஆட்கள். "சின்னா.. உன் நிலம் பத்திட்டு எரியுது!"
  சின்னன் அரிவாளுடன் நிலத்தை நோக்கி ஓடினான். வளர்ந்த பயிர் அத்தனையும் பற்றி எரிந்து கொண்டிருந்தது. கிடை போட்ட இடம் எங்கும் தீச்சூட்டில் வற்றியிருந்தது. பாசனக் கிணறு இடிந்திருந்தது. ஏற்றம் உடைந்திருந்தது. வடம் கரியாகியிருந்தது. ஒட்டிய சிறு குடில் சீமெண்ணெய் வாடையில் தீயும் புகையும் பரிணமிக்க சின்னனின் நாற்காலியோடு சாம்பலாகிக் கொண்டிருந்ததது. அடுத்திருந்த நிலங்களுக்குப் பரவத் தொடங்கியிருந்ததால் கிராமத்து ஆட்கள் நீர் தெளித்துக் கொண்டிருந்தனர். தணிக்கத் துணிந்தும் பலனில்லாமல் போனதில் விடிய விடிய நீர் தெளித்துத் துடித்தான் சின்னன். விடிந்தபின் ஒய்ந்து தனக்கினி விடிவில்லை என்று புரிந்து சாம்பல் தரையில் புரண்டு அழுதான். பயிரிழந்த அக்கம்பக்கத்து நிலக்காரர்கள் அழுதபடி அவ்வப்போது சின்னனைச் சபித்தனர்.
**
  "எத்தனை நாள் இப்படி சோகமா உக்காந்திருப்பே?" என்ற மனைவியின் குரல் காதில் விழாதது போல் சுவரில் தலையைச் சாய்த்து உட்கார்ந்திருந்தான் சின்னன். மண் தட்டில் பழைய சோறும் குழம்பும் அவன் முன் வைத்து "சின்னா.. எதாவது சாப்பிடு... ஒரு மாசமா இப்படியே குந்தி உக்காந்திட்டிருக்கியே?". சின்னன் சலனமில்லாமல் இருந்ததைக் கண்டு, "நான் ஊட்டி விடவா?" என்று கையில் ஒரு பிடி எடுத்து அவன் வாயருகே எடுத்துச் சென்றாள். ஒதுக்கிய சின்னன் "இது மட்டுந்தான் குறை" என்றான்.
   "இப்படி சோகமா உக்காந்திட்டிருந்தா நிறைஞ்சிருமா?"
   "நம்ம நிலமை பாழானதுமில்லாம வெளங்குவியானு ஊர் சாபம் வேறே சேர்ந்திடுச்சே.. என்ன செஞ்சாலும் நாலு தலைமுறைக்கு நிறையாது பொன்னி". சின்னன் மறுபடி அழத் தொடங்கினான். "உப்பழி உப்பழி" என்று துப்பினான். புலம்பினான்.
   "மத்தவங்க நிலமைக்கு நீ உன்னை வாட்டிக்காத சின்னா... ஊர் சாபம்லாம் கருப்பசாமி பாத்துக்குவாரு.. கஞ்சியூத்திக் கடன் கழிச்சுருவோம்.. இந்தா.. இப்ப ஒரு வாய் சாப்பிடு" கெஞ்சினாள் பொன்னி. சின்னன் அவளை ஒதுக்கி நகர்ந்தான். "உப்பழி உப்பழி"* என்று புலம்பினான். பொறுமினான். "அவனைக் கூறு போட்டுரணும்.."
   "தான் ஊரிலயே இல்லைனு இந்தாற வந்து அத்தனை வருந்திட்டுப் போனாரில்ல தாமு? வட்டியில்லாம கடன் தரதா சொல்றாரில்லே? ரெண்டு ஆடும் பசுங்கன்னும் கொண்டு வந்தாருல்ல தானமா? வாங்கி மறுபடி சாயம் செய்யலாமே?"
   "அடி போக்கத்தவளே.. ஒன் தாலியை அடகு வச்சு வாங்கின குழி அங்கே சாம்பலா கிடக்கு.. எப்படி மீட்கப் போறேன்? குத்தகைப் பயிரு போச்சு.. அந்த நாசத்துல பெரிய பண்ணை குத்தகையும் போச்சு.. இனி எதை நம்பி எவன் எனக்குக் கடன் தருவான்? எல்லாம் போச்சுடி.. அந்தச் சல்லிப்பயகிட்டே விழுங்கு தண்ணி வாங்கினமுனா கூட அன்ன ராத்திரியே உன்னை மடிவிரிக்கச் சொல்வான்... சோரமும் போவணுங்கிறியா?"
   "மப்போட நடந்து நீதானே அவன் கோவத்தைக் கிளறினே? தாலித்தங்கம் போவுது விடு.. வேறே பொழப்பு..." பதறினாள் பொன்னி. "ஏய்.. சின்னா.. எங்க போறே விருட்டுனு?"
   'அவனை வெட்டக்கூடாது.. உசுரோட விட்டு சாகுற மட்டும் சித்திரவதை செய்யணும்' என்று உள்ளுக்குள் பொறுமிய சின்னன், பொன்னியிடம் "நீ சொன்னாப்புல தாமுட்ட கைமாத்தோ உதவியோ கேட்டு வரேன்" என்றான்.
**
   ஒதுங்கி நின்று உள்ளே பார்த்தான் சின்னன். போர்வை போர்த்திய கயிற்றுக் கட்டிலில் உட்கார்ந்திருந்தான் தாமு. கட்டில் மேல் பருத்திப் புடவை வேட்டிகள் சில அடுக்கியிருந்தன. ஒரு அகண்ட பாத்திரத்தில் கண்ணாடி மணிகள். யாரையோ உரக்க விரட்டியபடி எழுந்த தாமு சின்னனைப் பார்த்துத் தயங்கினான். புன்னகையுடன் "உள்ள வா சின்னா.. வா வா" என்று இழுத்து வந்தான். "உக்காரு".
   சின்னன் தயக்கத்துடன் உள்ளே வந்து நின்றான். "இருக்கட்டும் தாமு.. சும்மா பாத்துட்டுப் போவலாம்னு.. துணி வியாவாரம் தொவங்கியிருக்கியா?"
   "ஆமா சின்னா.. உனக்குத்தான் தெரியுமே.. தம்பிக்குப் பொண்ணெடுக்கப் போனனா.. அவங்க வீட்ல தறியெல்லாம் வச்சு வேட்டி புடவை நெசவு செய்யறாங்க.. அந்தப் பொண்ணும் தங்கையும் கண்ணாடி மணிமாலை கோத்து கரனூர்ல கடை வச்சு விக்கிறாங்களாம்.. பாத்திரம் மணிமாலையும் பத்து புடவை வேட்டியும் சீதனமா கொடுத்தாங்க.. விட்டு வப்பானேனு வியாபாரமா தொடங்கிட்டேன்.. நல்லா போவுது அதுக்குள்ள நாலஞ்சு வித்துப் போச்சு.. இந்தா நீ ஒரு வேட்டி எடுத்துக்க, வீட்ல ஒரு புடவைய குடுத்துரு.. மணிமாலை வேணும்னா எடுத்துக்க, அக்காவுக்குப் போட்டு அழகு பாரு.."
   "வேணாம் தாமு, எங்கிட்ட சல்லிக்காசில்லே"
   "அட.. காசாரு கேட்டா.. இன்னிக்கு வரும் நாளைக்கு போகும்.. குணமாத்தான் தரேன்.. எடுத்துட்டுப் போ.." என்று விடாப்பிடியாக சின்னன் கையில் வேட்டி புடவை திணித்தான் தாமு. "ஒரு வாய் பால் சாப்பிடுறியா? ஆட்டுப் பால், சத்தா இருக்கும். சென மாடு ரெண்டும் கன்னு போட்டிருச்சா.. இப்ப ஆறு மாடு கொட்டில்ல.. பால் வியாவாரமும் பெருகும்".
   தாமு பெருமை பேசியது சின்னனை உறுத்தியது. "தாமு.. இப்ப நீ மொதலாளியாயிட்டே போல.. பால், தயிர், வெண்ணை, புடவைத்துணி... அடுத்து என்ன வியாபாரம்?"
   "கரனூர்ல கடை வைக்கலாம்னு இருக்கேன்.. தம்பிக்குப் பாத்த பொண்ணு வீட்ல இருநூறு ரூவா வரதட்சணைனு திட்டமா சொன்னேன்.. கதையக் கேளு.. மேலே இருநூறு ரூவா கொடுத்து பொண்ணை கலங்காம வச்சுக்கன்றான் பெத்தவன்.. அதான் வியாவார விருத்தி.. மேட்டுத்திடல்ல கடை போட்டு பால், தயிர், நெய், வேட்டி புடவை, மணிமாலைனு.." என்ற தாமு சட்டென்று நிறுத்தி சின்னனைக் கீழ்ப்பார்வை பார்த்தான். "ஆமா சின்னா.. நான் கேக்குறனேனு காயாதே.. வயலெல்லாம் கரியாயிடுச்சே.. என்ன செய்யப்போறே? மறுபடி குத்தகை எடுக்குறியா? வாங்குன காணில மறுபடி பயிரிடுறியா?"
   "கடன்ல வாங்குன காணி, வட்டி மொதல் கட்ட முடியாம மறுபடி ஏலத்துல போயிடும்.. குத்தகை போயிடுச்சு.. இனி விவசாயம் எனக்கில்லே"
   "பால் வியாவாரம்? மாட்டுப் பண்ணை வச்சிருந்தியே?"
   "பண்ணையெல்லாம் இல்ல.. ரெண்டு மாடு தாமு.. ஒரு மாட்டை வித்துட்டேன்.. மத்தது கன்னு.."
   "அப்ப வீட்டுச் செலவுக்கு? ...என்ன செய்வே?" என்று சாப்பிடும் ஜாடை காட்டினான். "என் பண்ணைல வேலை பாக்கிறியா? மாடு மேய்ச்சலுக்கு அனுப்புறதை நிறுத்திட்டேன். புல்லுக்கட்டும் புண்ணாக்குத் தீவனமும் தான். மாட்டுக்குத் தினம் ரெண்டு வேளை தீவனம் காட்டி, சாணி கூட்டி வரட்டி அடிக்கணும். பதினொரு ஆடுங்க தரேன். ஒரு தடுக்கும் கொங்காணியும் தாரேன்.. என் ஆடுகளை மேய்க்கிறியா? நெதம் ரெண்டு வேளை கஞ்சி வாரம் ரெண்டு ரூவா சம்பளம் தாரேன், கிடை போட்டு வந்தா காலணா கூடுதல்.. என்ன சொல்றே?"
   சின்னன் அவமானத்தில் குறுகினான். 'என் பண்ணை' என்று வேண்டுமென்றே சொல்லி தாமு தன்னை தாக்குவது அவனுக்குப் புரிந்தது. "இல்லை தாமு.. நான் கரனூர் வெள்ளக்காரன் மில்லுல வேலக்கு போறேன்.. தினக்கூலி ஒரு ரூவா.."
   "அதெல்லாம் ஒத்துவருமா சின்னா.. நாம வெவசாயிங்க.. வெள்ளாமைதான் நமக்கு.. அடடா... எப்படி ஆயிடுச்சு பாரு உன் நிலமை? சின்னப்பண்ணையா வர வேண்டிய உன் தலைல இப்படி எழுதிட்டானே சிதம்பரத்தான்! சரி போ... ஒரு ரூவா தினக்கூலி இப்ப உதவியா இருக்குந்தான்". தாமு வருந்தியதில் சின்னன் எரிந்தான். "நான் வரேன் தாமு" என்று நகர்ந்தான்.
**
   களைப்புடன் வீடு திரும்பிய சின்னனைக் குளிப்பாட்டி தோள் பிடித்துவிட்டாள் பொன்னி. கீறிக் காய்ந்திருந்த அவன் கைகளில் புடவைத் தலைப்பைப் பந்துபோல் சுருட்டி வாயில் வைத்து ஊதி ஊதி ஒத்தடம் கொடுத்தாள். "எதுக்கு சின்னா உனக்கு இந்தக் கட்டிட வேலை? போய் வர நடை வேறே.." என்று அவன் கால்களைப் பிடிக்கப் போனாள். ஒதுக்கினான் சின்னன்.
   "கிறுக்கி.. கட்டிட வேலக்கு போவலின்னா அந்தப் படுபாவி கிட்டே நான் தோத்துட்டதா ஆவாதா? எப்ப கரனூர் மில் வெள்ளைக்காரன் கிட்டே என்னப் பத்தி பொல்லாதது சொல்லி வேலையில்லாம செஞ்சிட்டானோ அப்பவே புரிஞ்சுபோச்சு.. அவன் கிட்டே ஆடு மேய்க்க வரணும்னு அந்தப் பன்னாடைக்கு நெனப்பு.. வரப்பு தாண்டி வந்தா அவன் ஆட்டை வெட்டிருவேன்னு சொன்னேன்ல.. அதான்.. பழி வாங்குறான்.. இனி பகைதான்.. ரெண்டு மூணு வாரத்துல இந்தக் கட்டிட வேலை பழகிடும் பொன்னி.. அணைக்கட்டு வேல வருசக்கணக்குல நிலச்சு நிக்கும்.. ஆயிரம் பேரு வேலை பாக்கறாங்கனு மேஸ்திரி சொன்னாரு.. கொஞ்ச நாள்ல எல்லாருக்கும் ஆத்தோரமா கூரை கட்டித் தாராங்களாம்.. இந்த எளவெடுத்த ஊரை விட்டு நீயும் எங்கூட வந்துடலாம்"
   "வளந்த ஊரை அப்படிப் பேசாதே சின்னா... உம்பாவத்துக்கு ஊர் என்ன செய்யும்?" என்று சினந்து தணிந்தாள் பொன்னி. மறுபடி அவன் தோள் பிடித்து, "சின்னா.. பெரிய பண்ணைல வீட்டு வேலக்கு வரச் சொன்னாங்க.. சாப்பாடு போட்டு தினம் நாலணா சம்பளம்.. போலாம்னு இருக்கேன்"
   சின்னனுக்கு ஆத்திரம் வந்தது. "என்ன பொன்னி இது.. சின்னப் பண்ணையாக வேண்டியவன் நான்.."
   "அதெல்லாம் கனவு சின்னா.. இப்ப வயுத்தைக் கழுவணும்.. பொறக்குற பிள்ளைக்கு தொட்டில் கட்டவும் காசில்லே.. ஒரு காப்பாச்சும் வேணாமா? சும்மா மப்பு காட்டிப் பலனில்லே" என்ற பொன்னியின் பேச்சு எரிச்சலூட்டினாலும் அடங்கினான் சின்னன். சிறிது நேரம் குடிசை வாசலை வெறித்துப் பார்த்தான். எழுந்து வாசலில் கட்டியிருந்த பசுங்கன்றை அவிழ்த்தான். "இதை வித்து காசு வாங்கிட்டு வரேன்" என்றான். "வேணாம் சின்னா.. இருக்குற ஒரே கன்னு.. பச்சை... ஒரு வருசம் கூட ஆவலே.." என்ற மனைவியின் குரலைப் புறக்கணித்து நகர்ந்தான்.
**
   "என்ன சின்னா, கன்னோட வந்திருக்கே?" என்றான் கருப்பன். சின்னனின் சிதைந்து போன குத்தகை நிலத்துக்கு பக்கத்து நிலக்காரன். முன் போல் நெருங்கிய நட்பு பாராட்டாவிடினும் சின்னன் மேல் பரிதாபத்துடன் நடந்து கொள்பவன். அவ்வப்போது நாலணா கைமாற்றாகத் தருபவன்.
   "கருப்பா, உன் கூட பேசணும்.. நம்ம ரெண்டு பேத்து நிலத்தையும் நாசம் செஞ்சவனைப் பழி வாங்கணும்" என்றான் சின்னன். திட்டத்தை சொல்லி முடித்தான். "அந்தப் பன்னாடைக்கு நாம எல்லாரும் சேர்ந்து வச்சி செஞ்சோம்னு தெரியணும், ஆனா எதும் செய்ய முடியாம தவிக்கணும். உப்பழி உப்பழி" என்று துப்பினான்.
   "வேணாம் சின்னா.. இது கொடூரம்.. நானும் வள்ளியும் நடந்ததை மறந்துட்டோம்.. நீயும் மறந்துடு.. பழியெல்லாம் வேணாம்"
   "கருப்பா.. அன்னிக்கு தீத்தணிக்க தண்ணி இறைச்சு உன் புள்ளத்தாச்சிப் பெண்டாட்டி கரு கலைஞ்சு போனதை மன்னிச்சுட்டியா? உன் பயிர் அழிஞ்சு கடன் வாங்கி பெரியாஸ்பத்திரில கிடந்ததை மறந்துட்டியா? இந்தப் பழி வாங்குறது யாரு? நானா வாங்குறேன்? நீயா வாங்குறே? உப்பழி தீக்குறவன் கருப்பசாமி.. அவன் பேரெடுத்த உங்கிட்ட என்னை வரச்சொல்லியிருக்கான்". சின்னன் சொல்லச் சொல்ல கருப்பன் பொங்கினான்.
   **
*உப்பழி உப்பழி: ஊர்ப்பழி ஊழ்ப்பழி

(தொடரும்)               நிறைவுப்பகுதியைப் படிக்க...

30 கருத்துகள்:

  1. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
    எல்லொரும் எக்காலத்தும்

    இறைவன் அருளுடன் சுகமாக இருக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  2. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
    இறையருள் சூழ்க எங்கெங்கும்..

    வாழ்க வையகம்..
    வாழ்க வளமுடன்..

    பதிலளிநீக்கு
  3. அனைவருக்கும் காலை வணக்கம். சென்னையில் மழை குறைந்திருக்கிறதா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சென்னைவாசிகள் பதில் சொல்லவும். நவம்பர் 10 & 11 கடுமையான மழை பெய்யும் என்று கூறிவருகிறார்கள்.

      நீக்கு
    2. நேற்று இரண்டு சென்டிமீட்டர்தான் மழை பெய்தது  என்று செய்தித்தாள்கள் குறைப்பாட்டுக் கொண்டிருந்தன.  காலை முதல் மழை இல்லாமல் இருந்து இப்போது லேசான தூறல்!  நாளையும் நாளை மறுநாளும் அதிகனமழை வரும் என்று பயமுறுத்தி இருக்கிறார்கள்!

      நீக்கு
  4. அந்த ஏற்றப் பாட்டும் தொடர்ந்து வரும் கதையும் அருமை.. அருமை.. இதைப் போல வாசித்து வெகு வருடங்கள் ஆகின்றன..

    பதிலளிநீக்கு
  5. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  6. கதை குரோதமாக செல்கிறது தொடர்ந்து வருகிறேன்...

    பதிலளிநீக்கு
  7. முதல் :-

    பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்
    செம்பொருள் காண்பது அறிவு

    முடிவைப் பொறுத்து :-

    ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
    தாழாது உஞற்று பவர்

    பதிலளிநீக்கு
  8. வணக்கம் சகோதரரே

    முதல் முக்தி விபரத்திற்கு நன்றி.

    கதையில் ஏற்றம் இறைக்கும் பாடல் நன்றாக உள்ளது. கிராமத்திற்கே அழைத்துச் சென்றது.

    கதை பகையும், பழியுமாக சுறுசுறுவென நகர்கிறது. வஞ்சிப்பவனுக்கு தன் அவமானம்.. அதைப்பற்றி மட்டுந்தான் கவலை. அதனால் வரும் குரோதமான குணங்களுக்கு அடிமையாகி விடுகிறான். . வஞ்சிக்கப்படுபவனுக்கு நடந்த நிகழ்வுகள் இரண்டின் மீதும் நினைவு.. அதன் விளைவாக வந்த நஷ்ட கஸ்டங்களின் பாதிப்பு. அதன் விளைவால் உதிக்கும் பழியுணர்ச்சியை எப்படி பயன்படுத்துவது என யோசிக்கிறான். காலங்காலமாய் மனித இனத்துக்கென உண்டான சாபம் இது. இதில் மகேசன் (உழ்வினை) தீர்ப்பு எப்படி என அடுத்த வாரத்தில் தெரிந்து விடும். காத்திருக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  9. அனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  10. புறப்பார்வைகளின் அவசரத்தால் அகப்பார்வையான அறிவை இழக்கிறோம்
    கதையை இந்த வரியே சொல்லி விட்டது.

    'பிறக்கு முன்னே இருந்த உள்ளம் இன்று வந்ததடா'

    பழி உணர்வா அந்த உள்ளம்?

    ஏற்றபாடல் நான்றாக இருக்கிறது.

    பழி வாங்கும் எண்ணம், பகை உணர்வு என்று கதை இருக்கிறது .
    நன்றாக கதையை சொல்லி வருகிறீர்கள்.

    பதிலளிநீக்கு
  11. இம்மூன்று புறப்பார்வைகளின் அவசரத்தால் அகப்பார்வையான அறிவை இழக்கிறோம். //

    அதென்னவோ சரிதான். அறிவையும் இழந்து உறவு நட்பு எல்லாமே இழக்க நேரிடும். இந்தக் கதையில் வருவது போல. தான் பெரிய ஆள் எனும் அகம்பாவம் அதன் பின் பழிக்குப் பழி, பகை எல்லாம் எவ்வளவு பின் விளைவுகளை ஏற்படுத்துகிறது! பாடல் நன்றாக இருக்கிறது. பிடித்த கதையை நீங்கள் சொல்லும் விதம் நல்லா இருக்கு.

    கீதா

    பதிலளிநீக்கு
  12. மிக அற்புதமான கிராம வழக்கில் ஒரு கதை.

    பழியும் பாவமும் வார்த்தைகளில் ஓடி விளையாடுகிறது.
    படிக்கப் படிக்க மிக சுவை.
    நல்ல எழுத்துக்கும் ,ஏற்றப் பாட்டுக்கும்
    மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    சிவபாலா!!!

    பதிலளிநீக்கு
  13. மீதி மனதில் இருக்கும் மிருகம் ஒழிந்தால்
    நின்னதி கிடைக்க வாய்ப்புண்டு. பாராட்டுகள் துரை.

    பதிலளிநீக்கு
  14. ரத்தமும், சதையுமாக இப்படி ஒரு கதை படித்து எத்தனை நாட்களாகி விட்டது?

    பதிலளிநீக்கு
  15. பதில்கள்
    1. மழையில் தத்தளித்து கல்யாணச் சாப்பாடு சாப்பிட்டுக்கொண்டிருக்கிறாரோ என்னவோ

      நீக்கு
  16. அப்பாதுரையின் எழுத்துக்குக் கேட்கணுமா? அந்த ஏற்றம் இறைக்கும் பாடல்! அருமை! கதை எப்படி முடியப் போகிறதுனு தெரிஞ்சுக்கக் காத்திருக்கேன். மற்றபடி கதையை விமரிசிக்கும் அளவுக்கெல்லாம் தகுதி இல்லை. அருமையான கதை. இப்படி ஒன்று படித்து வெகு காலம் ஆகி விட்டது.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!