புதன், 26 அக்டோபர், 2022

நடிக்க வாய்ப்பு கிடைத்தால், எந்தக் கதாநாயகிக்கு தாத்தாவாக நடிக்க விரும்புவீர்கள்?

 

ஜீவி :

நெருப்பு எரிய ஆக்ஸிஜன் வேண்டுமானால், ஞாயிறு மட்டும் தகதகவென்று எப்படி உலா வருகிறது?

$ புகை கக்கும் நெருப்பையும், ஹைட்ரஜன் மூலக்கூறுகள் இணைந்து உண்டாக்கும் ஆற்றலையும் ஒன்றாக சேர்த்து பார்ப்பது சரியல்ல. இந்த நெருப்புக்கு ஆக்சிசன் தேவை இல்லை.

நெல்லைத்தமிழன் : 

உங்கள் குழந்தைகள் எக்ஸ்ட்ரார்டினரியாக தேர்வுகள் பெர்ஃபார்ம் செய்யவேண்டுமா? படிப்பில் புலியாக வேண்டுமா என்றெல்லாம் விளம்பரங்கள்ல (யூடியூப்) சொல்றாங்களே, அவங்களோட குழந்தைகள் குறைந்த பட்சம் +2 பாஸ் பண்ணியிருப்பாங்களா?

# குழந்தைகள் நன்றாகப் படிப்பதற்கு 60% அவர்களது சொந்த முயற்சி, 20% ஆசிரியர், 10% பெற்றோர் . மீதி 10% பயிற்சி தருபவரால் வரலாம். இது என் உத்தேச மதிப்பீடு. 

டியூஷன் நிறுவனம் எல்லாமே மோசடி என்று சொல்வதற்கில்லை.  அவர்களும் ஓரளவு நாணயமாக உதவி செய்ய திட்டங்கள் வைத்திருப்பார்கள்.

கீதா சாம்பசிவம்: 

மூத்த பிள்ளை என்றால் அது பூர்விகச் சொத்தாக இருந்தாலும் பங்குக்கு வரக்கூடாது என நினைக்கும் பெற்றோர் பற்றி உங்கள் கருத்து என்ன? தன் தம்பி, தங்கைகளுக்கு விட்டுக் கொடுத்துட்டுத் தன் சம்பாத்தியத்திலும் அவங்களுக்கே செய்யணும் என நினைக்கும் பெற்றோர் பற்றி?

# இந்தக் கேள்வி கற்பனையில் உதித்ததா , தெரிந்த குடும்பத்தில் நடந்ததைச் சொல்கிறீர்களா என்று ஐயம் வருகிறமாதிரியான கேள்வியைக் கேட்டிருக்கிறீர்கள். 

கேள்வியில் பொதிந்திருக்கும் உண்மை பெற்றோரின் எண்ணம் மூத்த பிள்ளையை விட்டுக்கொடுக்க நிர்பந்திப்பதாகத் தெரிகிறது.. இதற்கு பல காரணங்கள் இருக்கக்கூடும்.  மூத்த பிள்ளை கடந்த காலத்தில் செய்த தவறுகள் ,  அல்லது அவர் மற்றவர்களை விட அதிக வசதியுடன் இருப்பதால் தேவைகள் கம்மி என்கிற நிலை, இம்மாதிரி - - 

கற்பனையாக ஒன்றை காட்சிப் படுத்திப் பாருங்கள்.  பெற்றோர் எல்லாருக்கும் சமமாகப் பிரிக்கிறார்கள்.  வசதியான பிள்ளை "ஆண்டவன் அருளால் நான் சௌக்கியமாக இருக்கிறேன்.  என் பங்கை தம்பி தங்கைகளுக்கு கொடுத்து விடுங்கள் " என்று சொல்கிறார்.  இந்தக் கற்பனையில் பெற்றோர், பிள்ளை இருவரும் சரியாக செயல் பட்டிருக்கிறார்கள். 

பெற்றோர் கொடுக்கவில்லை.  பையன் "அதனால் என்ன, பரவாயில்லை " என்று சொல்லி எல்லாருடைய மதிப்பிலும் உயர்ந்து நிற்கிறார். 

"என் பங்கு என்ன ஆயிற்று ? நான் வசதியாக இருந்தால், அது என் சாமர்த்தியம் "  என்று சொல்லும் பிள்ளை மரியாதையை இழக்கிறார்.

பானுமதி வெங்கடேஸ்வரன் :

ஏதோ ஒரு குருட்டு அதிர்ஷ்டத்தில்‌ உங்களுக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்து விடுகிறது, எந்தக் கதாநாயகிக்கு தாத்தாவாக நடிக்க விரும்புவீர்கள்?

# சுஹாசினிக்கு அப்பாவாக ...

& பா வெ மேடம் - இது நியாயமா !! ஆனாலும் பதில் சொல்லிவிடுகிறேன் - கி பி 2050 ஆம் வருடம் எந்த கதாநாயகி நடிகைக்கு இருபது வயது ஆகிறதோ - அந்த நடிகைக்கு அப்போது நான் தாத்தாவாக நடிக்கத் தயார். 

 ராஜ ராஜ சோழன், பொன்னியின் சொல்வன்

ராஜராஜசோழன் (சிவாஜி), அருண்மொழி வர்மன் (ஜெயம் ரவி),

குந்தவை (லட்சுமி),

குந்தவை (திரிஷா)

ஏ.பி.என்., மணிரத்னம் ஒப்பிடவும். 

# தோசை பிட்ஸா.

1) சிவாஜி = கம்பீரம். ஜெயம் ரவி : 'படம் பார்த்தபின் சொல்கிறேன்'

2) ராஜராஜ சோழன் படத்தில் அருண்மொழி (சிவாஜி)யின் சகோதரி 'குந்தவை'யாக வருபவர் எஸ் வரலட்சுமி. 

ராஜராஜசோழனின் 'மகள்' குந்தவையாக நடித்தவர் லட்சுமி.  ஆக ரா ரா சோ குந்தவை லட்சுமியையும், பொ செ குந்தவை  திரிஷாவையும் ஒப்பிட்டால் - - - லட்சுமியின் அத்தை திரிஷா. (காலச்சக்கரம் நரசிம்மா எழுதிய 'சங்கதாரா' நாவல் படி,  லட்சுமியின் பாட்டி திரிஷா !!) 

 

3) பொ செ பார்த்தபின்தான் ஒப்பிடமுடியும். 

நம்முடைய சாஸ்திரீய சங்கீதம் பாடுகிறவர்கள் நாஸ்தீகர்களாக இருப்பது சாத்தியமா?

அல்லது கேள்வியை இப்படி மாற்றி கேட்கிறேன்

நாஸ்தீகர்கள் நம்முடைய சாஸ்திரீய சங்கீத பாடகர்களாக இருக்க முடியுமா?

# பாரம்பரியம் காரணமோ என்னவோ, நம் கர்நாடக சங்கீதம் பக்தியை அடிப்படையாகக் கொண்டதுதான்.  இதை தியாகராஜர் ஒரு கீர்த்தனையில் பாடி இருக்கிறார்.  (சங்கீத ஞானமு - தன்யாசி). பக்தி அடிப்படையாக இல்லாமல் பாடுவதும் , யாரேனும் அப்படிப் பாடத் துணிந்தால் அதைக் கேட்பதும் கஷ்டம். இது நியாயம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் உண்மை.

ஜெயக்குமார் சந்திரசேகரன்: 

தேங்காய் பர்பிக்கும் கமர்கட்டுக்கும் என்ன வித்தியாசம். தேங்காய் + சீனி =தேங்காய் பர்பி. தேங்காய்+வெல்லம் = கமர்கட்டு. செய்முறை கிட்டத்தட்ட ஒன்றே. பின் ஏன்  கமர்கட்டு என்று பெயர் வைத்தார்கள்?

# கமர்கட் பர்பியைவிட கடினம் , முறுகல்.  அளவில் சிறியது.  கட்டி போல் இன்றி கோலி வடிவில் இருக்கும். அந்தக் காலத்தில் ஐந்து பைசா பத்து பைசா விலையில் சிறுவர் ரசித்து ருசித்து .. எனவே கமர்கட்டு அவசிய தேவைதான்.

&  பாரம்பரிய முறையில் செய்யப்பட்ட கமர்கட்டில், தேங்காய்த் துருவல், வெல்லம், மற்றும் சுக்குப் பொடி உண்டு. அந்தக் காலத்தில் தொண்டைக் கட்டு இருந்தால், தொண்டை கமர்கிறது என்று கூறுவர். அப்படி கமர்கின்ற தொண்டையை சரி செய்ய நமது முன்னோர்கள் கண்டுபிடித்ததுதான் கமர்கட் - அதில் உள்ள சுக்கு - தொண்டைக் கமறலை சரி செய்யும். தொண்டை கமர்கிறதா - அதை cut செய்ய - 'கமர்'cut !! (ஹி ஹி - சும்மா தோனிச்சு!! ) 

எனக்கு சிறிய வயதில் கமர்க்கட், பெரிய வயதில் தேங்காய் பர்பி பிடிக்கும். எது கைவசம் இருந்தாலும் அனுப்பி வைக்கவும். 

= = = = = =

எங்கள் கேள்வி: 

தீபாவளி பட்சணங்களில் உங்களுக்கு மிகவும் பிடித்தது எது? யார் செய்தது? 

& அந்தக் காலத்தில் எனக்கு மிகவும் பிடித்த விடயம் : தீபாவளி லேகியம்! 

அதை எப்படி செய்வது என்று எனக்குத் தெரியாது. 

தீபாவளிக்கு ஒரு நாள் முன்பு சியாமளா வெங்கட்ராமன் அவர்கள், எங்கள் பிளாக் இமெயிலுக்கு தீபாவளி லேகியம் செய்யும் சுலபமுறை எழுதி அனுப்பியிருந்தார். 

அதை இங்கே இப்போது வெளியிடுகிறேன். வாசக சமையல் ராஜா / ராணிகள் தீபாவளி லேகியம் பற்றிய உங்கள் செய்முறைகளை கருத்துரையில் பகிரவும். 

சியாமளா வெங்கட்ராமன் ரெஸிபி : " தீபாவளி லேகியம்" 

தீபாவளி லேகியம் சுலபமாக செய்யும் முறை : 

தேவையான பொருட்கள் : 

தனியா 3 டீஸ்பூன் 

மிளகு 2 டீஸ்பூன் 

சீரகம் 2 டீஸ்பூன் 

ஓமம்200  கிராம்

சுக்குஒரு அங்குல நீளம் 

கண்டதிப்பிலி பத்து குச்சி  

ஏலக்காய்3 

வெல்லம்150 கிராம் 

செய்யும் முறை:  

மேலே கூறிய பொருட்களை வறுத்து அதை மிக்ஸியில் அறைத்து சல்லடையில் சலித்துக் கொள்ள வேண்டும்  

ஒரு வாணலியில் ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு அதில் வெல்லத்தை போட்டு கொதிக்க வைக்கவேண்டும் 

வெல்லம் கரைந்ததும் அதில் அரைத்து வைத்துள்ள பொடியைப் போட்டுக் கிளறவும் அப்பொழுது தேவையான நெய்யை ஊற்றி கிளறவும். 

லேகியம் கெட்டியாக வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி வைக்க வேண்டும். 

இப்பொழுது கமகம வாசனையுடன் தீபாவளி லேகியம் தயாராகிவிட்டது. 

= = = = =

படம் பார்த்து கருத்து எழுதுங்க : 

1) இந்தப் படத்திற்கு ஒரு பொருத்தமான தலைப்பு எழுதுங்க. 


2) இதற்கும் - - 


3) மரத்தில் என்னென்ன உருவங்கள் தெரிகின்றன? 


68 கருத்துகள்:

  1. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் எவ்விதமான கலக்கங்களும் இல்லாத நல்ல நாளாக மலர வேண்டுமென இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் சகோதரரே

    இன்றைய கேள்வி பதில்கள் அனைத்தும் எப்போதும் போல் அருமை.

    கமர்கட் விளக்கம் மிகவும் நன்றாக உள்ளது. ரசித்தேன்.

    தீபாவளி லேகியம் செய்முறை அருமை. சகோதரிக்கு வாழ்த்துகள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  3. அவசர, திங்கட் கிழமை பதிவுக்கு வெளியிடவேண்டியதை, புதன் கிழமை வெளியிட்டு, ஸ்டாக்கைக் குறைப்பது நியாயமா? இணையப் படத்தையும் அப்போது கோர்த்திருக்கலாம், அல்லது எங்களிடமிருந்து பெற்றுக்கொண்டிருக்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தீபாவளி லேகியம் என்பதால், அடுத்த தீபாவளி வரை காத்திராமல் இப்போதே போட்டுவிட்டேன்!

      நீக்கு
  4. இந்தத் தடவை தீபாவளியின்போது, மனைவி செய்த ஒக்கோரையும், மனைவியின் அக்கா செய்திருந்த லட்டுவும் (இனிப்பு சிறிது அதிகம் என்றாலும்) எனக்குப் பிடித்து அதிகமாகச் சாப்பிட்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உக்காரை/ஒக்கோரை எல்லாம் சாப்பிட்டு வருஷங்கள் ஆகிவிட்டன. அம்மாவோடு போச்சு எல்லாம். :( இங்கே வழக்கமில்லை என்பதால் பண்ண முடியாது. :(

      நீக்கு
  5. நேற்றைய செவ்வாய்க் கிழமைக்கு இன்றைய புதன் அழகிய ஆறுதல்..

    பதிலளிநீக்கு
  6. ராஜராஜ சோழன், பொன்னியின் செல்வன் ஒப்பீடே தவறு. கலை என்பது அப்போதுள்ள சமூகத்தைச் சார்ந்தது. அவ்வப்போதுள்ள toolsஐயும் சார்ந்தது.

    இப்போ ஏன் சேனல்களில் என் எஸ் கே, காளி என் ரத்தினம் நகைச்சுவைக் காட்சிகள் வருவதில்லை? வடிவேலு, சந்தானம் காட்சிகள் மிக அதிகமாக வருகிறது? அதுவே இதற்கும் பதில்.

    இரண்டு நாட்களுக்கு முன் தூர்தர்ஷனின் பொன்னியின் செல்வன் நாடகத்தின் ஒரு பகுதியின் முதல் காட்சியைப் பார்த்து அதிர்ந்து உடனே நிறுத்திவிட்டேன். பேய்க்கதை போல ஆரம்பம், 250 வயதானவரின் குந்தவை தோற்றம் என்றால் தாங்குமா?

    பதிலளிநீக்கு
  7. தேங்காய் பர்பி இனிப்பு வகை. கமர்கட் சிறுவர்களுக்கான ஸ்நாக்ஸ். செய்யவேண்டிய முறையில் செய்தால் கமர்கட்டை வாயில் ஊறப்போட்டுதான் சாப்பிடமுடியும். இப்போது ஒரு சில பிராண்டுகளே (உ. கோவில்பட்டி கமர்கட் பிராண்டு) நான் சிறுவயதில் சாப்பிட்ட கமர்கட்டின் 60-70 சதம் பக்கம் வருகிறது. பாண்டிச்சேரியில் கிடைப்பது 40-50 சதம்கூடக் கிடையாது.

    இதே கதைதான் பொருவிளங்காய் உருண்டைக்கும். அதைக் கடிக்கவே சாத்தியமல்ல. ஆனால் இப்போ கடைகளில் பயத்தமா உருண்டைபோலப் பண்ணி, பொருவிளக்கா என்று மனசாட்சியில்லாமல் விற்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பொருள்விளங்கா உருண்டைக்கு கோதுமை, புழுங்கலரிசி, பச்சைப்பயறு ஆகியவற்றைச் சம அளவு எடுத்துக் கொண்டு நன்கு வறுத்து மாவாக்கிச் சுக்கு, ஏலக்காய் சேர்த்துத் தேங்காய்க்கீற்றுகள் போட்ட நன்கு முற்றிய வெல்லப்பாகை விட்டுக் கிளறி உருண்டை பிடித்தால் சுத்தியலால் தட்டித் தான் சாப்பிடணும்.

      நீக்கு
    2. அந்த வாசனையே தனியாக இருக்கும். முன்னெல்லாம் பெண் கருத்தரித்த ஐந்தாம் மாதம் பெண்ணுக்கு எண்ணெய் கொடுக்கணும்னு காரணம்/மசக்கைக்குனு காரணம் சொல்லிப் பிறந்த வீட்டில் வந்து அழைத்துச் செல்லும்போது பெண்ணின் பிறந்த வீட்டினர் பொருள்விளங்கா பருப்புத் தேங்காயைத் தான் கொண்டு வந்து கொடுத்துவிட்டு அழைத்துச் செல்வார்கள். குழந்தை இதைப் போல் கெட்டியாகத் திண்ணென்று வளர்வான் என்பதற்கான குறியீடு அது. அதே போல் பெண்ணைப் பிரசவத்துக்கு அனுப்பும்போது மாமியாரும் இதே பொருள்விளங்காய்ப் பருப்புத்தேங்காய்தான் பிடித்து மருமகளின் மடியில் முந்தானையில் கட்டுவார். இதைப் போல் கெட்டியாகப் பிள்ளையைப் பெற்றுக் கொடுக்கணும் என்பதற்கான குறியீடு அது. ஒரு சிலர் மட்டைத்தேங்காயை வைத்துக் கொடுக்கின்றனர். இது இன்றைய நாகரிகமாகி விட்டது

      நீக்கு
    3. எங்கள் பிளாக்குக்காக நானே பொருவிளங்காய் வீட்டில் செய்து ஒவ்வொரு ஸ்டெப்பையும் படம் எடுத்தேன். கடைசி நேரத்தில், என் மனைவி, கொஞ்சம் மாவு, அதில் கொஞ்சம் பாகு விட்டு உருண்டை பிடிங்கோ என்றாள். நான் 'அனுபவமே' ஆசான் என்று நினைப்பவன். அதனால் மொத்த மாவிலும் பாகை விட்டு, உருண்டை பிடிக்க முடியாமல் திணறி, ஒன்றை உருண்டைபோல் ஷேப்புக்குக் கொண்டுவருவதற்குள் மற்றவை கட்டியா கல் போல பாத்திரத்திலேயே ஒட்டிக்கொண்டுவிட்டது. பொருள்விளங்கா உருண்டையாக வராததால், அந்தச் செய்முறையை அனுப்பலை. அவள் சொல்வதைக் கேட்டிருந்தால் உருண்டைகளும் செய்திருப்பேன் எபிக்கும் அனுப்பியிருப்பேன்

      நீக்கு
    4. :))) கருத்துரைகளுக்கு நன்றி.

      நீக்கு
  8. அந்தக் காலத்தில் ராஜராஜ சோழனாக நடிகர் திலகம் அவர்கள் நடித்தபோது அவருக்குச் செய்யப்பட்டிருந்த ஒப்பனை ஆபரணங்கள் பட்டு வஸ்த்திரங்கள் இவற்றின் எடை பன்னிரண்டு கிலோ என்றொரு செய்தி வெளியாகி இருந்தது..

    பதிலளிநீக்கு
  9. //நாஸ்திகர்கள் சங்கீதப் பாடகர்கள்//- இதன் பதில் சரியானதாக இல்லை. நாம் சங்கீதம் கேட்கப் போகிறோமா இல்லை கோவில் தரிசனம் செய்யப்போகிறோமா?

    எனக்குப் பிடிக்காத கேரக்டர், பிறழ் மனநிலை கொண்ட டி எம் கிருஷ்ணாவின் சங்கீத்த்திற்கு என்ன குறை? இல்லை கிறித்துவ சம்பந்தம் பெற்றதால் சுதா ரகுநாதனின் சங்கீதம் பழுதாகிவிட்டதா?

    எம் எம் இஸ்மாயிலின் கம்ப ராமாயணச் சொற்பொழிவுகள் கேட்டு மயங்கியிருந்தால் இத்தகைய பதிலே மனதில் உதித்திருக்காது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // எம் எம் இஸ்மாயிலின் கம்ப ராமாயணச் சொற் பொழிவுகள் கேட்டு.. //

      நீதியரசர் மு.மு. இஸ்மாயில் அவர்கள் துவேஷம் கொண்டு நின்றவர்களின் அருகிலே இருந்ததில்லை..

      நீக்கு
    2. ஒரு இசை ரசிகனாக என் அனுபவத்தின் அடிப்படையில் சொன்ன பதில் இது. கச்சேரியில் கல்யாணி ராகத்தில் நிதி சால சுகமா கேட்பதும், மழை நீர் சேமிப்பு குறித்து ஒரு கீர்த்தனை கேட்பதும் ஒன்று அல்ல என்பதே சொல்ல நினைப்பது.

      நீக்கு
    3. கேள்வி நாத்திகர் பாடுவதைப் பற்றியது. கீர்த்தனைகளைப் பற்றியதல்ல.

      அதுவும்தவிர, தற்போதைய பாடல்கள் பலவற்றைப் பலர் ரசிக்கின்றார்கள். அவர்கள் ரசிப்பது இசையை. பாடல் வரிகளை அல்ல. பாடல் வரிகளைத் தனியாக ஸ்ரீராம் வெள்ளியன்று பதிய கனவிலும் நினைக்கமாட்டார்.

      இருந்தாலும் உங்கள் கருத்தில் நான் குறை சொல்ல ஒன்றுமில்லை.

      நீக்கு
    4. கருத்துரைகளுக்கு நன்றி.

      நீக்கு
  10. கதாநாயகிக்குத் தாத்தாவாக -- மடியில் படுத்துக்கொண்ட கதாநாயகிக்கு அவள் தோளைத் தட்டிக்கொண்டே தூங்க வைக்கும் சீன், அழுதுகொண்டு வரும் கதாநாயகியைக் கட்டிப்பிடித்து ஆறுதல் சொல்லும் சீன், அவளை அருவிக்கு அழத்துச் சென்று குளியல் போடச் சொல்லும் சீன் (பாதுகாப்புக்காக அருகிலேயே இருப்பதாக ஃப்ரேமில் வரணும்) போன்ற பல சீன்கள் இருக்கு என்றால் பதினைந்து வயதுப் பையனும் மேக்கப் போட்டுக்கொண்டு தயாராகிவிடுவானே... எபி ஆசிரியர்கள் மாத்திரம் விதிவிலகாகாக இருப்பார்களா? ஹா ஹா ஹா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனிதர்களின் சகல நடவடிக்கைகளுக்கும் மூல காரணம் செக்ஸ் தூண்டுதல் என்பது சிக்மண்ட் பிராய்ட் கண்டு பிடிப்பு.

      நீக்கு
    2. இது உண்மைதான். அதனால்தான் பருவத்திற்கு நுழைந்துவிட்டால் அந்தப் பெண்ணை சொந்த சகோதரனே தொட்டுப் பேசுவது நம் கலாச்சாரத்தில் இல்லாமலிருந்தது. ஏன்.. மாமியார் கூட, மருமகனிடம் நேரில் வந்து பேசமாட்டார். இதையெல்லாம் நாம் பழங்கதைகள் என்று புறம் தள்ளி, கண்டகண்டவன் hug பண்ணிக்கொண்டு, ஆஹா வெள்ளைக்காரர்களே மிரளும்படியான கலாச்சாரத்தை நாம் follow பண்ணுகிறோம் என்று புளகாங்கிதம் அடைகிறார்கள் இன்றைய இளைஞர்கள்.

      இதுபற்றி, கில்லர்ஜி அவர்களின் கருத்தைத் தெரிந்துகொள்ள ஆசை (அவர்தான் சம்மட்டி அடித்ததுபோல கருத்தை வெளியிடுவார் ஹா ஹா)

      நீக்கு
    3. கில்லர்ஜி எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்.

      நீக்கு
  11. //சொத்து// - இது கோயில் பிரசாதம் போன்றது. தன் மீது, தன் நேர்மையான வாழ்வின்மீது தந்தைக்கு இல்லாத அக்கறை உலகில் வேறு யாருக்கும் கிடையாது. அவர் என்ன செய்தாலும் அது சரியாகத்தான் இருக்கும்.

    விதிவிலக்குகள் இலக்கணமாவதில்லை

    பதிலளிநீக்கு
  12. கமர்ஷியல் டியூஷன் நிறுவனங்கள் பெற்றோர்களின் அக்கறையின்மை, கையில் கொழுத்த காசு, மேக்கப் போட்டால் பையன் இன்னும் அழகாகத் தெரிவான் என்ற மனநிலையைக் காசாக்கும் உத்தி. பைஜு போன்றவற்றிர்க்கு இதுதான் அடிப்படை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல பயிற்சி காசு வாங்கிக் கொண்டு செய்தாலும் பலன் தரலாம் என்பது சொல்ல வந்த கருத்து.

      நீக்கு
    2. கம்பி மத்தாப்பில் மருந்து இருந்தால்தான் விளக்கில் காட்டினால் பற்றிக்கொண்டு பிரகாசமாக ஒளிரும். மருந்தில்லா அல்லது கொஞ்சமாக ஒட்டிக்கொண்டிருக்கும் மருந்தை எவ்வளவு பெரிய நெருப்பில் காட்டினாலும் பிரகாசமாக ஒளிருமா? படிப்பு என்பதே வெறும் பயிற்சியல்ல. அதற்கான விதை, ஆர்வம், ஆட்டிடியூட் பசங்கள்ட இருக்கணும்.

      நீக்கு
    3. கருத்துரைகளுக்கு நன்றி.

      நீக்கு
  13. தேங்காய் பர்பி வட இந்திய இனிப்பு. ஆங்கிலேயர் வருகைக்குப் பின் சீனி கண்டுபிடித்ததற்கு பின் கண்டு பிடிக்கப்பட்டது. 

    கமர்கட் பாரம்பரிய தென் இந்திய இனிப்பு. காலம் காலமாக குழந்தைகள் விரும்பும் இனிப்பு.  

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மஹாராஷ்ட்ராவிலும் குஜராத்திலும் தேங்காய் பர்ஃபி நிறையப் பார்க்கலாம்.

      நீக்கு
    2. // தேங்காய் பர்ஃபி நிறையப் பார்க்கலாம்.// சாப்பிட முடியாதா?

      நீக்கு
    3. சிலவற்றுக்குப் போட்டிருக்கும் நிறத்தைப் பார்த்தால் எனக்குச் சாப்பிடவும் யோசனையாகவே இருக்கும். :))))) என்னையும் அறியாமல் அப்படி எழுதி இருக்கேன்.

      நீக்கு
  14. //இதற்கு பல காரணங்கள் இருக்கக்கூடும். மூத்த பிள்ளை கடந்த காலத்தில் செய்த தவறுகள் , அல்லது அவர் மற்றவர்களை விட அதிக வசதியுடன் இருப்பதால் தேவைகள் கம்மி என்கிற நிலை, இம்மாதிரி - - //உண்மை ஏற்கப்படுமானு சந்தேகமா இருக்கு. அந்தப் பிள்ளை பொறுப்புகளைச் சரிவரவே நிறைவேற்றி வந்தார். அவர் செய்த ஒரே தப்பு கல்யாணம் செய்து கொண்டு 2/3 குழந்தைகள் பெற்றுக் கொண்டது. சம்பாத்தியம் எல்லாம் அவங்களுக்குத் தானே என்று பெற்றோர்/சகோதர/சகோதரியரின் ஆதங்கம், இப்படி எத்தனையோ காரணங்கள் சொல்லலாம். நம்பக் கஷ்டமாக இருந்தாலும் இதான் உண்மை. கடைசியில் சின்னவங்க அவங்களுக்குள்ளேயே பங்கிட்டுக் கொண்டார்கள். பெரியவரிடம் ஆலோசனைகள் கூடக் கேட்டுக்கலை. அவர் செய்ய வேண்டியவற்றுக்கு முறையாகச் செய்து கொண்டு தான் இருக்கார்

    பதிலளிநீக்கு
  15. தீபாவளி மருந்துக்கு ஓமம் சேர்த்தால் எனக்கு ஏனோ பிடிப்பதில்லை. ஆகவே ஓமம் இல்லாமலேயே பண்ணுவேன். திப்பிலி, அரிசித்திப்பிலி, ஜீரகம், மிளகு, சோம்பு, சித்தரத்தை, சுக்கு, பறங்கிப்பட்டை, ஜாதிபத்திரி, ஜாதிக்காய் துளி போல், ஆகியவற்றைச் சுத்தம் செய்து கொண்டு வெயிலில் காய வைத்துக் கொண்டு சம அளவு எடுத்துக் கொண்டு நன்கு வறுத்து மிக்சி ஜாரில் போட்டுப் பொடியாக எடுத்துக்கவும். நைஸாகவே அரைக்கலாம். சலிக்கணும்னு இல்லை. பின்னர் சுமார் ஐம்பது கிராம் இஞ்சியோடு இரண்டு மேஜைக்கரண்டி கொத்துமல்லி விதையைச் சேர்த்து அரைத்துக் கொண்டு அதை வடிகட்டிச் சாறு எடுத்துக்கணும். சாறு சுமார் ஒன்றரைக்கிண்ணம் இருக்கலாம். அடுப்பில் இரும்புக் கடாயை வைத்து (இரும்பு முக்கியம்) இந்த இஞ்சிச்சாறை விட்டுக் கருப்பட்டியைப் பொடித்துச் சுமார் 100 கிராம் அளவுக்குச் சேர்த்துக்கொதிக்கவிடவும். கருப்பட்டி பிடிக்கலைனா வெல்லம் சேர்க்கலாம். நன்கு வாசனை போகக் கொதித்த பின்னர் மிக்சியில் பொடித்து வைத்துள்ள பொடியைக் கொஞ்சம் கொஞ்சமாய்ச் சேர்க்கவும். சாறு கெட்டிப்படும் அளவுக்குச் சேர்த்த பின்னர் நல்லெண்ணெய் அரைக்கிண்ணம் விட்டுக் கிளறவும். நன்கு சேர்ந்து வந்து கையில் ஒட்டாமல் வந்ததும் ஒரு மேஜைக்கரண்டு நல்ல சுத்தமான நெய்யைச் சேர்த்துக் கிளறி வேறொரு பாத்திரத்தில் மாற்றி வைக்கவும். நன்கு ஆறியதும் நல்ல சுத்தமான கலப்படம் இல்லாத தேனை ஒரு மேஜைக்கரண்டி சேர்த்து நன்கு கலந்து வைக்கவும். ஆறு மாதம் ஆனாலும் கெட்டுப் போகாது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வரும் தீபாவளிக்கு கொரியரில் 1/2 கிலோ அனுப்பிடுங்க. கிலோ எவ்வளவுன்னு சொன்னீங்கன்னா, அந்தப் பணத்தையும் நீங்க எனக்கு டிரான்ஸ்ஃபர் பண்ணிடுங்க ஹிஹி

      நீக்கு
    2. விளக்கமான செய்முறைக்கு நன்றி.

      நீக்கு
  16. கேள்விகளும், பதில்களும் நன்றாக இருக்கிறது.
    பின்னூட்டங்களும் சுவாரஸ்யமாக இருக்கிறது.
    தீபாவளி லேகியம் செய்முறை நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  17. //ராஜராஜசோழனின் 'மகள்' குந்தவையாக நடித்தவர் லட்சுமி. ஆக றா றா சோ குந்தவை லட்சுமியையும், பொ செ குந்தவை திரிஷாவையும் ஒப்பிட்டால் - - - லட்சுமியின் அத்தை திரிஷா. (காலச்சக்கரம் நரசிம்மா எழுதிய 'சங்கதாரா' நாவல் படி, லட்சுமியின் பாட்டி திரிஷா !!)// ஹாஹாஹா! நல்ல வேலை திரிஷாவுக்கு தமிழ் படிக்கத் தெரியாது. அது சரி எ.பி.யில் திரிஷா ரசிகர்கள் இல்லையோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரா.ரா.சோ. பெண் குந்தவி. சகோதரி அதாவது அக்கையார் குந்தவை.

      நீக்கு
    2. Wiki pedia shows both - the sister and daughter are called kundavai.

      " Rajaraja I, born Arunmozhi Varman or Arulmozhi Varman and often described as Raja Raja the Great or Raja Raja Chozhan was a Chola emperor who reigned from 985 CE to 1014 CE. Wikipedia
      Born: 947 AD, Thanjavur
      Died: 1014, Thanjavur
      Full name: Arulmoḷi Varman
      Parents: Parantaka Chola II, Vanavan Maha Devi
      Children: Rajendra Chola I, Arumozhi Chandramalli, Mathevadigal, Kundavai
      Siblings: Aditya Chola II, Kundavai Pirattiyar
      Grandchildren: Rajendra Chola II, Rajadhiraja Chola, Virarajendra Chola"

      நீக்கு
  18. அந்த அருவிப் படம் முதலில் உள்ளது போல் திருக்கயிலை யாத்திரையில் நிறையப் பார்க்கலாம். மேலிருந்து அருவி கொட்டிக்கொண்டே இருக்க நாம் கீழே செல்வோம். சுற்றிலும் சாரல் அடிக்க அருவிச் சத்தம் ஓவென்று காதில் விழ அந்த டொயோடோ வண்டியில் செல்லுவது ஓர் தனி அனுபவம். சற்றுத்தூரம் போனால் உடனே மழை பெய்து கொண்டிருக்கும் ஜவ்வரிசி, ஜவ்வரிசியாக. அதைத் தாண்டினால் நதிகள் குறுக்கிடும். சில இடங்களில் நதிகளில் இறங்கி மறுகரைக்குப் போகணும். இப்போல்லாம் பாதை நன்றாக இருப்பதாகப் போயிட்டு வந்தவங்க சொல்றாங்க. நான் சொல்லுவது 2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட்/செப்டெம்பரில் நாங்க போனப்போ அனுபவிச்சது.

    அந்தக்குழந்தையோட வீடியோ நிறைய வந்தாச்சு.
    மரத்தில் நீண்ட வாலுடன் நம்ம நண்பர்கள் தெரிஞ்சாலும் சில கிளைகளே உருவமாகவும் தெரிகின்றனவே.

    பதிலளிநீக்கு
  19. ஏதோ ஒரு குருட்டு அதிர்ஷ்டத்தில்‌ உங்களுக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்து விடுகிறது, எந்தக் கதாநாயகிக்கு தாத்தாவாக நடிக்க விரும்புவீர்கள்?
    கேபி சுந்தராம்பாளுக்கு தாத்தாவாக நடிக்க வேண்டும் என்ற தீராத ஆசை எனக்கு சின்ன வயசிலிருந்தே உண்டு.

    -மந

    பதிலளிநீக்கு
  20. கேள்வி பதில்கள் ரசனை. மரத்தில் நம்ம இனத்தவர். கரடியார், குருவிக் கூடு, நீண்டவாலுடன் புலியா மாடு எது என்பது தெரியவில்லை.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!