சனி, 15 அக்டோபர், 2022

இந்த வார நல்ல செய்திகள் மற்றும் நான் படிச்ச கதை (JC)

 

டெஸ்லாவுக்கு போட்டியாக எலெக்ட்ரிக் கார் தயாரிப்பில் ஆப்பிள் நிறுவனம்!


ஆப்பிள் ஐ-போன் உற்பத்தி நிறுவனமான ஃபாக்ஸ்கான் (Foxconn) தனது முதல் எலெக்ட்ரிக் காரை வெளியீடு செய்துள்ளது.


ஆப்பிள் ஐ-போன் உற்பத்தி நிறுவனமான ஃபாக்ஸ்கான் ப்ரீமியம் தரத்தில் ஐபோன்கள் மற்றும் கேட்ஜெட்களை வழங்குவது நம் எல்லோருக்கும் தெரிந்த விஷயமே.. இந்நிலையில் செல்போன் உற்பத்தியைத் தொடர்ந்து எலெக்ட்ரிக் கார் தயாரிப்பில் ஃபாக்ஸ்கான் நிறுவனம் களமிறங்கியுள்ளது. இதனை உறுதிப்படுத்துவிதமாக ஃபாக்ஸ்ட்ரான் பி (Foxtron Model B) என்ற தனது முதல் எலெக்ட்ரிக் காரை வெளியீடு செய்துள்ளது.
 
ஃபாக்ஸ்ட்ரான் மாடல் பி ஓர் ஹேட்ச்பேக் ரக மின்சார காராகும். தற்போது முழுமையாக உற்பத்திக்கு தயாராக இருக்கும் புத்தம் புதிய மாடல் பி காரின் படங்கள் வெளியீடு செய்யப்பட்டுள்ளன. இந்த எலெக்ட்ரிக் கார் ஆப்பிள் ஐபோன் பிரியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அக்டோபர் 18ம் தேதி காரை அதிகாரப்பூர்வமாக காட்சிப்படுத்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
 
கடந்த 2021ம் ஆண்டில் ஃபாக்ஸ்ட்ரான் பிராண்டின் கீழ் மாடல் இ (Model E),மாடல் சி (Model C) மற்றும் மாடல் டி (Model T) என மூன்று புதிய மின்சார வாகனங்களை ஃபாக்ஸ்கான் வெளியீடு செய்தது. இதனை தொடர்ந்தே மாடல் பி யும் உற்பத்திக்கு தயாராகி வருகிறது. மேலும், உலக புகழ் பெற்ற சூப்பர் கார் உற்பத்தி நிறுவனமான பினின்ஃபரினா உதவியுடனேயே மாடல் பி உள்ளிட்ட எலெக்ட்ரிக் கார்களின் உற்பத்தியை ஃபாக்ஸ்கான் நிறுவனம் மேற்கொண்டிருக்கின்றது. ஆனால் கட்டுமானம், டிசைன்ஸ் உள்ளிட்டவைகளை ஃபாக்ஸ்கான் நிறுவனமே மேற்கொள்ள உள்ளது.

அதுபோக, ஃபாக்ஸ்கான் நிறுவனம் இந்த காரின் உற்பத்தியை சீனாவிலேயே முதலில் தொடங்க இருக்கின்றது. அதுமட்டுமல்லாமல், எம்ஐஎச் என்ற ஓபன் சோர்ஸ் ஸ்கேட்போர்டு இவி பிளாட்பாரம் மூலம் எலெக்ட்ரிக் கார்களை உற்பத்தி செய்ய உள்ளது. ஃபாக்ஸ்கான் நிறுவனம் மாடல் பி-யைத் தொடர்ந்து, ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்ட மாடல் இ (Model E), மாடல் சி (Model C) மற்றும் மாடல் டி (Model T) ஆகிய எலெக்ட்ரிக் வாகனங்களை அடுத்தடுத்தாக விரைவில் வெளியீடு செய்ய இருக்கின்றது.

இதில், மாடல் சி என்பது பெரிய க்ராஸோவர் ரக எலெக்ட்ரிக் காராகும். மேலும், மாடல் சி என்பது லக்சூரி செடான் ரக காராக உருவாக்கப்பட்டுள்ளது. கடைசி ஒன்றான மாடல் டி என்பது எலெக்ட்ரிக் பேருந்தாகும். இந்த மின்சார வாகனங்களையே அடுத்தடுத்தாக ஃப்க்ஸ்ட்ரான் பிராண்டின்கீழ் ஃபாக்ஸ்கான் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது.
 
விரைவில் இந்த ஃபாக்ஸ்ட்ரான் மாடல் பி காரை, டெஸ்லாவின் மாடல் ஒய் (Tesla Model Y)-க்கு போட்டியாக அமெரிக்கா போன்ற உலக சந்தையில் விற்பனைக்குக் கொண்டு வர ஃபாக்ஸ்கான் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

== = =

குணமா சொல்லுங்க போதும்... குழந்தைகள் தட்டாமல் கேட்கும்!


பெரும்பாலான குடும்பங்களில் ஒரு சொல் சொல்லாமல் பெற்றோரால் செல்லம் கொடுத்து வளர்க்கப்படும் குழந்தைகள்தான் அதிகம். அதுவும் சில வீடுகளில் ஒற்றைப் பிள்ளையாய் வளரும் குழந்தைகளின் நிலை இன்னும் மோசம். என்னதான் செல்லம் கொடுத்து வளர்த்தாலும் கண்டிக்க வேண்டிய நேரங்களில் மிதமான கண்டிப்புடன் வளர்க்க வேண்டும் என்ற எண்ணம் பெரும்பாலான பெற்றோருக்கு இருப்பதில்லை. சில அசாதாரண சூழல்களில் குழந்தைகளைக் கண்டிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகையில் நிலைமை வேறாகிறது. கண்டிபில்லாமல் செல்லமாய் வளர்ந்த குழந்தைகளை திடீரென பெற்றோர் அடித்தாலோ கடுமையாகக் கண்டித்தாலோ சிக்கலாகிறது.பெற்றோரின் திடீர் கண்டிப்பபையோ, அடிப்பதையோ குழந்தைகளால் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. இதனால், குழந்தைகள் மனதளவில் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள்.

குழந்தைகள் விஷயத்தில் அடி என்றைக்குமே உதவாது. அது அவர்களை நீங்கள் நினைத்ததற்கு மாறாக எதிர் திசையில் சிந்திக்க வைக்கும். அடித்து வளர்க்கப்படும் குழந்தைகளிடம் வன்முறை எண்ணமும் வரக்கூடும், ஏதோ ஒரு சமயம் குழந்தையை அடிக்க தொடங்கி, பிறகு சிறு தவறுக்கும், ஒரு கொட்டு, மார்க் குறைந்தால் அடி, ஏன் சில சமயம் பெல்ட் அடி என இப்படி அவர்கள் செய்யும் தவறை பொறுத்து அடியும் அதிகரிக்கிறது.
 
குழந்தைகளை நல்வழிப்படுத்த அன்பு, அரவணைப்பு, புரிதல், எடுத்து கூறுதல் தான் மிகவும் அவசியம். அடி அதிகரிக்க குழந்தைகள், திருந்துவதை விடுத்து, தவறை மறைக்கும் எண்ணம் கூட தோன்றலாம்.

எனவே எந்த காரணமோ எந்த சூழலோ பெற்றோர் குழந்தைகளை அடிப்பது சரியான முடிவாக இருக்காது. ஒவ்வொரு குழந்தையின் பழக்க வழக்கமும் அவர்களின் பெற்றோர்களின் கையிலேயே இருக்கிறது. குழந்தையை எப்படி வளர்க்கிறீர்கள் என்பதைப் பொறுத்தே அந்தக் குழந்தையின் குணாதிசியம் அமைகிறது. அடிக்கு பதில் குழந்தையை எப்படி நம் வழிக்கு கொண்டுவரலாம் என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.
 
செல்லத்தை குறைக்கலாம்:

குழந்தைகளுக்கு அடியை தாண்டி சில 'செக்' வைத்தாலேயே போதும்.
குழந்தை ஒரு தவறு செய்தால், அவர்களிடம் சிறிது நேரம் பொய்க்கோபம் காட்டி பேசாமல் இருப்பது, கொஞ்சாமல் இருப்பது என இருக்கலாம். செல்லம் கொடுத்து கெடுக்காதே என வீட்டில் இருக்கும் பெரியவர்கள் சொல்வது போல் முதலில் குழந்தைகளை மாற்ற முயற்சிக்கலாம்.

சின்னச் சின்ன தண்டனை:

தவறுகளைத் தடுக்க சிறு சிறு தண்டனை வழங்கி குழந்தைகளை வழிக்கு கொண்டுவரலாம். வீட்டை சுத்தம் செய்வது, அவர்களது அறை அல்லது அலமாரிகளை நேர்படுத்துவது போல எதாவது ஒரு வேலையை அவர்களுக்கு அளிக்கலாம்.அப்படி அவர்கள் அதை செய்யும், போது உங்கள் கோபமும் உங்களை விட்டு நீங்கிவிடும், குழந்தைகளும், தவறை செய்ய தயங்குவார்கள்.

பொறுமையாகப் புரிய வைப்பது:

குழந்தைகள் அவர்களுக்கு வேண்டுவது கிடைக்கும் வரை, அடம்பிடித்து கொண்டே இருப்பர்கள். நச்சரித்து, நம்மை எரிச்சல் அடைய செய்வார்கள். ஆனாலும், அவர்களுக்குப் பொறுமையாக எடுத்துச் சொல்லிப் புரியவைக்கலாம். இதனால், அடம்பிடித்தாலும் பெற்றோர்கள் பயனில்லாததை நமக்கு வாங்கி தரமாட்டார்கள் என்ற எண்ணம் அவர்களிடம் வந்துவிடும்.

வெகுமதி வழங்குதல்:

நல்லது செய்தால் நல்லது கிடைக்கும் என்பதை மெய்பிப்பது போல், அவர்களை ஒழுங்குபடுத்த, இப்படி இருந்தால் இதை வாங்கி தருகிறேன் என, அவர்களுக்கு சின்னச் சின்ன பரிசுகளை வாங்கி கொடுத்து ஒழுங்கு படுத்தலாம்.

சொல்லி வளர்த்தல்:

குழந்தைகள் தவறு செய்தால், அந்த தவறின் பின்விளைவுகளை எடுத்து கூற வேண்டும். தீப்பெட்டி, கத்தி போன்ற ஆபத்து நிறைந்த கருவிகளால் வரும் தீமைகளை சொல்லி வளர்க்க வேண்டும். இப்படி குழந்தை வளர்த்தல் என்பது, அவர்களுக்கு வாழ்க்கையை வாழ பழக்கும் முறையே ஆகும்.

ஹனுமன் கோவிலுக்கு நிலம் தானமாக அளித்த முஸ்லிம்!


ஷாஜஹான்பூர்: உத்தர பிரதேசத்தில், நெடுஞ்சாலை திட்டத்துக்காக ஹனுமன் கோவிலை இடம் மாற்ற, முஸ்லிம் ஒருவர் தன் நிலத்தை தானமாக அளித்துள்ளார்.

உத்தர பிரதேசத்தில், புதுடில்லி - லக்னோ இடையே தேசிய நெடுஞ்சாலை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த சாலை, ஷாஜஹான்பூர் மாவட்டத்தில் கச்சியானி கேரா கிராமத்தின் வழியாக செல்கிறது. ஆனால், சாலை அமைக்கப்படும் இடத்தில் ஒரு ஹனுமன் கோவில் அமைந்துள்ளது.

இதனால், ஹனுமன் கோவிலை அகற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இதை உணர்ந்த, அக்கிராமத்தைச் சேர்ந்த பாபு அலி என்ற முஸ்லிம், சாலையிலிருந்து சற்று தள்ளி உள்ள தன் நிலத்தில் கோவிலை இடம் மாற்றிக் கொள்ள மாவட்ட நிர்வாகத்திடம் சம்மதம் தெரிவித்தார். இதையடுத்து, பாபு அலிக்கு சொந்தமான ஒன்றரை ஏக்கர் நிலத்தில், ஹனுமன் கோவில் மாற்றப்பட உள்ளது.


இந்நிலையில், ''பாபு அலி ஹிந்து - முஸ்லிம் ஒற்றுமைக்கு உதாரணமாக திகழ்கிறார்,'' என, மாவட்ட துணை கலெக்டர் ராசி கிருஷ்ணா அவரை புகழ்ந்துள்ளார்.

பூமியை காப்பாற்றிய அமெரிக்கா!


வாஷிங்டன் : பூமியை நோக்கி வந்த விண்கல்லை திசைதிருப்பி நாசா விஞ்ஞானிகள் உலகை காப்பாற்றி சாதனை படைத்துள்ளனர்.

பூமியை நெருங்கும் விண்கல்கள், குறுங்கோள்களை கண்காணித்து எச்சரிக்கை விடுக்க தனி அமைப்பை நாசா உருவாக்கியுள்ளது. அந்த அமைப்பு நெருங்கும் விண்கல்கள் மீது மோதி அவற்றை திசை திருப்பவும், அழிக்கவும் தனி விண்கலங்களையும் அனுப்பி வருகிறது.
 
பூமியிலிருந்து 68 லட்சம் மைல்கள் துாரத்தில் டிமார்பாஸ் என்ற விண்கல் சுற்றி வந்தது. 525 அடி அளவில் 2500 அடி அகலம் கொண்ட இதை தாக்கி பாதையை திசை திருப்ப நாசா திட்டமிட்டது.

அதன்படி வினாடிக்கு 15,000 மைல் வேகத்தில் அதன் மீது மோத டார்ட் என்ற விண்கலத்தை அனுப்பியது. அது சரியாக மோதியது. அதிலிருந்து லிசியாகியூப் செயற்கைக்கோள் பிரிந்து இந்த மோதல் சேதங்களை படம் பிடித்தது.


விண்கல்லின் சுற்றுப்பாதை 32 நிமிடங்கள் மாற்றியமைக்கப்பட்டு, திசை திருப்பப்பட்டதாக, நாசா தெரிவித்துள்ளது.

 =======

நான் படிச்ச கதை (JKC )

மதினிமார்கள் கதை

கதையாசிரியர்: கோணங்கி

மதினிமார்கள் கதை என்றவுடன் கமலாம்பாள் சரித்திரம், பத்மாவதி சரித்திரம் போன்று பெரிய நாவல் ஆக இருக்கும் என்று நினைத்து விடாதீர்கள். இதில் ஜி நாகராஜனின் மைக்ரோ கதைகள் அளவு கூட  மதினி என்று கூப்பிடப்பட்ட பெண்களின் கதை இல்லை. எழுதப்பட்ட விஷயங்கள் யாவும் கனவு சித்திரங்கள் தான். சுருக்கமாக சொன்னால்

             

       ழி யா

      கோ ங்

          ள்      

ஊரை விட்டு சில வருடங்கள் பிரிந்து வாழ்ந்த பின்னர்  ஊரைக் காண வரும் செண்பகத்தின் எதிர்பார்ப்புகள், அவனது மனத்திரையில் ஓடிய கருப்பு வெள்ளை கரிசல் காட்டு சித்திரங்கள், மற்றும் கதை ஆசிரியரின் வார்த்தை ஓவியங்கள் இவற்றின் தொகுப்பு. 

சிறுகதைக்கான இலக்கணம் இலக்கியம் என்றெல்லாம் எதிர்பார்க்கக் கூடாது. இது கரிசல் காட்டு எழுத்தாளனின் கைவண்ணம். நாட்டார் இலக்கியம்.  கோணங்கி என்ற இளங்கோவின் டைரிக் குறிப்புகள்.

சரி. சில வரிகளிலாவது கதையைச் சொல்ல வேண்டும் அல்லவாசொல்கிறேன்.

செண்பகம்அவனுடைய தந்தை கிட்ன தேவர்; கிணத்து வெட்டில் கல் விழுந்து எழுந்து நடமாட முடியாமல் கடைசி நேரத்தில் சாத்தூர் ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போன நாளில் அனாதையாகச் செத்துப் போனார்அவனுடைய அம்மா முன்பே நாலாவது பிரசவத்தில் ஜன்னி கண்டு மரித்து போனவர்.

செண்பகம் அன்று சாத்தூரில் ரயிலேறியதுதான். இன்று திரும்பி வருகிறான்

செண்பகம் வாழ்ந்த தெற்கு தெருவில் இருந்த வீடுகள் எவற்றிற்கும் உரிமையோடு சென்று, (அது எந்த நேரமாக இருந்தாலும் சரி) சாப்பிடும் அளவிற்கு அவனுக்கு சுதந்திரம் இருந்தது. அவ்வீடுகளில் இருந்த வயசுப் பெண்களும் (மதினிகளும்) கொழுந்தனார் கொழுந்தனார் என்று அவனை கேலி செய்வதும் அவனுக்கு பிரியமான தீனிப் பண்டங்களை வைத்திருந்து கொடுப்பதும் வழக்கம்.

ரயிலில் வந்து இறங்கியபோது முதலில் கண்டதுஆவுடத்தங்க மதினியா.

சாத்தூர் ரயிலடியில் வெள்ளரிக்காய் விக்கிறவனை சேர்த்துக் கொண்டு ஓடி வந்தவளென்று கேள்விப்பட்டிருந்த நம்மூர் மதினியா இப்படி மாறிப் போனாள். என்ன வந்தது இவளுக்கு. இத்து நரம்பாகிப் போனாளே இப்படி.” என்று நினைத்துக்கொண்டே ஊருக்குப் போகும் பஸ்ஸில் ஏறினான்.

ஆவுடைத்தங்க மதினியைக் கண்டது மற்ற மதினிகள் சிலரை அவனுடைய கனவுத்திரையில் தோற்றுவித்தது. கீகாட்டுக்கறுப்பாய்கரேர் ….’ ரென்ற கறுப்பு சுப்பு மதினி,  ரெட்டச் சடைப் பொஷ்பம், இவனைத் தூக்கி தூக்கி இடுப்பில் வைத்துக் கொண்டுக் கொஞ்சிய காளியம்மா மதினி, காளியம்மா மதினியின் சின்னையா மகள் குட்டக் கத்திரிக்கா, வாணியச் செட்டியார் வீட்டு அமராவதி மதினி,  என்னேரமும் பூ கட்டும் குருவு மதினி,  இவன் அய்யாவுக்குக் கலயத்தில் கஞ்சி கொண்டு போன மாணிக்க மதினி. என்று பட்டியல் நீள்கிறது.

இப்படியாக தனக்குப் பிரியப்பட்ட மதினிகளுக்கெல்லாம் கண்டதை எல்லாம் வாங்கிக்கொண்டு ஊருக்குப் போகிறான். மதினிமாரெல்லாம் இருக்கும் தெக்குத் தெருவை நோக்கி சென்றான். தெருவை வெறிக்கப் பார்த்துக்கொண்டே நடந்தான். தெருப் புழுதியே மாறிப் போய் குண்டும் குழியுமாய் சீரற்று நீண்டு கிடந்தது தெரு. இவன் பண்டார வீடுகளிருந்த இடத்துக்கு வந்து நின்றான். தெருவே மாறிப்போய்குறுனையளவுகூட இவன் பார்த்த தெருவாயில்லை. தெருவே காலியாகிவிட்டது.

எல்லாம் தலைக்குமேல் ஏறி சுமையாய் அழுத்த குறுக்கொடிந்துபோய், ரொம்ப காலமாய் ஆட்டுப்படாமல் கிடந்த மதினி வீட்டு ஆட்டுரலில் உட்கார்ந்தான். தலையில் கைவைத்தபடி மூஞ்சியில் வேர்த்து வடியத் தரையை வெறிக்கப் பார்த்தான். மூஞ்சியில் வழியும் அசடைப் (கவனிக்கவும் வேர்வை யல்ல)  புறங்கையில் துடைத்துக் கொண்டான்.

நாளைக்கு மீண்டும் ஓடிப்போன செம்பகமாய் நகரப் பெருஞ்சுவர்களுக்குள் மறைந்து போவான். பேரிரைச்சலுக்குள் அடையாளந்தெரியாத நபராகிஅவசர அவசரமாய்ப் போய்க்கொண்டிருப்பான் செம்பகம்.

மொத்தத்தில்வந்தான் பார்த்தான் சென்றான்மட்டுமே. இதற்கு இடையில் கனவு ஓவியங்கள், வார்த்தை சித்திரங்கள் என்று வாசகர்களைக் கட்டிப்போடும் ஒரு சொல் அலங்காரம்; கரிசல் காட்டுக் கதம்பம்.

இவருடைய சில வார்த்தை சித்திரங்களை பார்ப்போமா?

பஸ் ஸ்டாண்டுக்குள் நின்றிருந்த தகர டப்பா பஸ்ஸைப் பார்த்தான்

(நாம் பஸ்ஸைத் தான் பாப்போம். ஆனால் கோணங்கி தகரடப்பா பஸ்சைப் பார்ப்பார்.)

ஒரே சீரானச் சத்தத்துடன் குலுங்கா நடையுடன் நகர்ந்து கொண்டிருந்தது பஸ்.

(பஸ் ஓடவில்லை. குலுங்கா  நடையில் செல்கிறது!)

வெறுமனே ஆளற்றுக் கிடந்த ஸ்டேஷனில் சிமெண்டு போட்ட ஆசனங்கள் பரிதாபத்துடன் உட்கார்ந்து கொண்டிருந்தன.

(ஆள் உட்காராததால் ஆசனங்கள் உட்கார்ந்திருக்கின்றன!)

செத்த வீட்டு மேளக்காரர்கள் மாறி மாறித் தட்டும் ரண்டாங்கு மேளத்துடன் உள்ளடங்கி வரும் துக்கத்தை உணர்ந்தான்.

(ஒய் ஒய் என்று அழுவது போல் மேளம் துக்கத்தை உணடாக்குதாம்)

யாராலும் தீர்க்க முடியாத கஷ்டங்களையெல்லாம் அடிவயிற்றிலிருந்து எடுத்து ஊதிக் கொண்டிருந்த நாயனக்காரரின் ஊதல், போகிற பஸ்ஸோடு வெளியில் வந்து கொண்டிருந்தது.

(நாயனக்கார் வாழ்வதற்கே கஷ்டப்படுவதை காலியான வயிற்றில் இருந்து …..எடுத்து ஊதுகிறார்!)

(அந்த ஊதலும் அவனுடைய பஸ்சை தொடர்ந்து வந்து யாசிக்கிறதாம்!)

மேட்டுப்பட்டி நந்தவனத்தில் பூக்கிற ஒவ்வொரு பூவும் அமராவதி மதினி மாதிரி அழகானது.

(பூ தான் அமராவதி மாதிரி அழகாக இருக்கிறதாம்!)

அய்யாவின் நினைவு பின்தொடர சாத்தூர் எல்லையில் கேட்ட உருமியின் ஊமைக்குரல் திரும்பவும் நெஞ்சிலிறங்கி விம்மியது.

(உருமியின் ஊம் ஊம் சப்தம் ஊமையனின் உளறல் ஊம் ஊம் போல இருக்கிறதாம்!)

சூழ்ந்திருந்த காடுகளும், பனைமரங்களும் உருண்டு செல்ல பஸ்ஸிற்கு முன்னால் கிடக்கும் தார் ரோடு வேகமாய்ப் பின்வாங்கி ஓடியது. ஜன்னல் வழியாக மேகத்தைப் பார்த்தான். ஒரு சொட்டு மேகங்கூட இல்லாத வானம் நீலமாய்ப் பரந்து கிடந்தது. ரோட்டோர மரங்களில் நம்பர் மாறி மாறிச் சுற்றியது. ஆத்துப் பாலத்தின் தூண்கள் வெள்ளையடிக்கப்பட்டு மாட்டுக்காரர்களால் கரிக்கோடுகளும், சித்திரங்களும் வரையப்பட்டிருந்தன. தண்ணீரில்லாத ஆத்தில் தாகமெடுத்தவர்கள் ஊத்துத் தோண்டிக் கொண்டிருந்தார்கள்.

(பஸ் ஓடவில்லை. தார் ரோடு தான் பின் வாங்கி ஓடியது! )

(மரத்தில் நம்பர் மாறி மாறி சுற்றியது! ஒரே போல் மரங்கள் எண் மாத்திரம் வேறு!)

பாலம் கடந்து மேட்டில் ஏறியதும் ஊர், தெரிந்துவிட்டது. பஸ்ஸிற்கும் சந்தோஷம் வந்து துள்ளிக் குதித்தது.

 மந்தைத் தோட்டத்தில் கிணத்தை எட்டிப் பார்த்துக்கொண்டு படுத்திருக்கும் கமலைக்கல்லும், தோட்ட நிலமும் நீண்டகால உறக்கத்திலிருந்து மீளாமல் இன்னும் இறுகிக்கொண்டிருந்தது.

(நீர் இறைக்காமல் விவசாயம் இல்லாமல் இருப்பதை உறக்கம் எனக் கூறலாமா!)

எஸ்ரா இந்தக் கதையை நூறு சிறந்த கதைகளில் ஒன்றாக தேர்ந்துள்ளார்.

கதையின் சுட்டிகள்

அழியா சுடர்கள் :: மதினிமார்கள் கதை

சிறுகதைகள்.காம் :: மதினிமார்கள் கதை

 ஆசிரியர் பற்றிய குறிப்பு.

 இயற்பெயர் இளங்கோ.


1958-ஆம் ஆண்டில் நென்மேனி மேட்டுப்பட்டி என்னும் கிராமத்தில் பிறந்தவர். சுதந்திரப் போராட்ட வீரரான மதுரகவி பாஸ்கர தாஸ் பேரன் இவர். அப்பா சண்முகம், அண்ணன் . தமிழ்ச்செல்வன் ஆகியோர் எழுத்தாளர்கள். தம்பி முருகபூபதி தமிழின் முக்கியமான நாடகக் கலைஞர். கோவில்பட்டியில் வாழ்ந்து வரும் இவர் கூட்டுறவு சங்கம் ஒன்றில் பணி செய்தவர்.

இவர் நவீன தமிழ் இலக்கியத்தின் மாய யதார்த்தவாதக் கதை சொல்லியாக அறியப்படுபவர்.

கோணங்கி பாரதியின் 'புதிய கோடங்கி' என்னும் தலைப்பில் இருந்து தன் பெயரை உருவாக்கிக் கொண்டார். எஸ். ராமகிருஷ்ணன் கோணங்கியின் நெருங்கியநண்பர்.

இலக்கியமாமணி விருது, தமிழக அரசு (2022) பெற்றவர்.

கோணங்கியின் எழுத்து தானியங்கி எழுத்து என்ற வகையைச் சேர்ந்தது. தன் மனஓட்டங்களை அப்படியே பின்பற்றும் விதமாக மொழியை அமைத்துக்கொள்வது. கட்டற்று பாயும் தன்மை கொண்டது. அவரது படைப்புப் பிரக்ஞை என்பது நாட்டார் தன்மை உடையதே ஒழிய இத்தகைய தானியங்கிப் படைப்பை எழுதும் அளவுக்கு மொத்தப் பயன்பாட்டுக்குமாக விரியும் வீச்சுள்ளது அல்ல.’  எழுத்தாளர் ஜெயமோகன்

ஓவியம் ஒன்றை சொற்களாக்க முயன்றால் அவையே கோணங்கியின் படைப்புகள்' என்று பாலசுப்ரமணியம் பொன்ராஜ் குறிப்பிடுகிறார்.

 = = = = =

 

30 கருத்துகள்:

  1. //இவர் நவீன தமிழ் இலக்கியத்தின் மாய யதார்த்தவாதக் கதை சொல்லியாக அறியப்படுபவர்.//

    புரியும்படியாக 

    He is known as the author of magical surrealistic stories of modern Tamil literature.
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாய யதார்த்தவாதம் என்பது ஆங்கிலத்தில் magical realism.

      -not magical surrealism. Surrealism என்பது வேறு.

      நீக்கு
  2. கோணங்கியின் மதினிமார்கள் கதை படித்தேன்.

    ஓவியம் ஒன்றைச் சொற்களாக்க முயன்றால்... என்ற விமர்சனம் நூறு சதம் பொருந்துகிறது.

    வாழ்ந்த இடத்தைத் திரும்பப்போய்ப் பார்க்க நினைப்பவனின் ஏமாற்றம், ஊர் இருந்த நிலைமை இவற்றை மிகச் சிறப்பாக எழுதியிருக்கிறார். இத்தகைய அனுபவமே நமக்கும் நிகழும். இதைப்பற்றி ஒரு பதிவு எபிக்கு விரைவில் அனுப்புகிறேன். (என் அனுபவத்தை மனதில் அப்படியே கிளர்ந்து எழச் செய்துவிட்டது கதை)

    நல்ல பகிர்வு ஜெயகுமார் சார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாற்றம் மட்டுமே மாறாதது. நன்றி பின்னூட்டத்திற்கு.

      நீக்கு
  3. ஒரு பாசிட்டிவ் செய்தி

    இட்லி ATM .


    https://www.moneycontrol.com/news/trends/watch-idli-atm-in-bengaluru-delivers-meal-in-quick-contactless-process-9326691.html


    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் இருக்கும் ஊரில்தான் இது. பெங்களூரில் நிறைய உணவகங்கள் உண்டு (டீசன்ட், விலை குறைவு. வென்னீரில் போட்டு வைத்திருக்கும் ஸ்பூன்கள். நாமே பணம் கொடுத்து, டிக்கெட்டை கவுன்டரில் கொடுத்து உணவை வாங்கி, கிடைக்கும் இடத்தில் அமர்ந்து-பெரும்பாலும் நின்றுகொண்டு சாப்பிடணும். இட்லி தோசைலாம் 40-45 ரூபாய்க்குள். மக்களும் டீசன்ட். ). இந்த ஊரில் தோசை ஏடிஎம் வெற்றிபெறும். ஆனால் எத்தனைபேர்களுக்கு சர்வ் பண்ணமுடியும்? பார்க்கலாம்.

      நீக்கு
    2. சுட்டியில் சென்று பாருங்கள். idli vending machine with attached computer terminal. payment through mobile scan QR.

      நீக்கு
    3. இது வந்தே பல நாட்களாகிவிட்டன. பார்த்துவிட்டேன். தோசைலாம் பண்ணுது.

      நீக்கு
    4. ஜெகே அண்ணா இது வந்து ரொம்ப நாளாகிடுச்சு...சப்பாத்தி கூட வருது...(நீ வாங்கியிருக்கியான்னு எல்லாம் கேட்கப்டாது, கேட்டேளா!!!!)

      கீதா

      நீக்கு
  4. அது என்ன தானியங்கி எழுத்து?

    ஜெயமோகன் தன் இஷ்டப்படி இலக்கிய கொள்கைகளை வகுத்துக் கொள்வதில்
    சுதந்திர புருஷன்.
    அதற்கு அவர் கொடுக்கும் விளக்கங்களும் சுவாரஸ்யம் தான். உண்மை போலவேயான பொய் போல இருக்கும்.
    கோணங்கி தன் மன ஓட்டத்திற்கேற்ப மொழியை அமைத்துக் கொள்ளும் பாங்கு பற்றிய அவரது விளக்கமே அதற்கு சான்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தானியங்கி என்று சொல்வது சரிதானே ஜீவி அண்ணா?

      அதாவது கதையை கதாசிரியர் நினைத்து நினைத்து இங்கு என்ன வரி போட வேண்டும் என்ன சொல் போட வேண்டும் என்று புகுத்தி எழுதாமல், அவரது மன ஓட்டங்களே கதையாய் வடிந்து வடிவெடுத்ததைத்தான் தானியங்கி எழுத்து என்று சொல்லியிருக்கிறார் ஜெமோ என்று தோன்றுகிறது.

      நாம் சொல்வதும் அதுதானே ஆசிரியர் எழுதவில்லை அந்தக் கதையேதான் அவரது எழுத்தை நகர்த்திச் சென்றிருக்கிறது என்று எழுதுபவர்களும் தங்கள் கதைகளுக்கான முடிவை அப்படி என்று சொல்வதுண்டே...என் வாசிப்பு மிக மிகச் சொற்பம்தான் இலக்கியமும் தெரியாது.. எனக்குத் தோன்றியதைப் புரிந்தது இதுதான்...

      கீதா

      நீக்கு
    2. சகோதரி கீதா ரங்கனின் சிறப்பு
      இது தான். ஒரு விஷயத்தை கவனப்படுத்துவதில்
      தன் பங்களிப்பைச் செய்வதில் அவர் என்றுமே குறை வைத்ததில்லை. இந்த மாதிரி இருப்பவர்களால் தான் ஒரு பொருள் பற்றி தீர்க்கமாக சிந்திக்க வாய்ப்பு ஏற்படுகிறது. நன்றி சகோ.

      நீக்கு
  5. //பல ஜாதிக்காரர்களும் நிறைந்த தெக்குத் தெருவில் அன்னியோன்யமாக இருந்தவர்களை எல்லாம் நினைவு கூர்ந்தான்.//

    நினைவுகளில் அன்பான நட்புகளின் முகம் தெரிந்து இருக்கும்.

    //தெருப் புழுதியே மாறிப் போய் குண்டும் குழியுமாய் சீரற்று நீண்டு கிடந்தது தெரு.//

    மாறிய ஊரை கண்டு ஏமாற்றம்

    //‘மாப்ளைச் சோறு போடுங்கத்தா …. தாய்மாருகளா…..’ என்றதும் கம்மங் கஞ்சியைக் கரைத்து வைத்து ‘சாப்பிட வாங்க மாப்பிளே ….’ என்று சுட்ட கருவாட்டுடன் முன் வைப்பார்கள்.//

    பழைய உபசரிப்பு

    //கொஞ்சநேரத்தில் ஒரு சுடுகுஞ்சி கூட இல்லாமல் இவன் தனித்து விடப்பட்டான்.//

    பழைய நினைவுகளில் உள்ள உணவு உபசரிப்பு இல்லை.
    எல்லோருக்கும் தலைக்கு மேலே வேலை ஓடி கொண்டு இருக்கும் காலம் .

    //கொழுந்தனாரே…. எய்யா…. கப்பலைக் கவித்திட்டீரா…..கன்னத்தில் கை வைக்காதிரும்…. செல்லக் கொழுந்தனாரே….எய்யா….’ என்று எல்லா மதினிமார்களும் கூடிவந்து எக்கண்டம் பேச, அவர்கள் மத்தியில் இருக்க வேண்டியவன், இப்படி மூச்சுத் திணறிப் போய் ஆட்டுரலில் உட்கார்ந்திருக்கும்படி ஆனது.//

    கதையை படித்து முடித்தவுடன் மனது கனத்து போனது.
    அன்பான உறவுகளை , பார்க்க போய் பார்க்க முடியவில்லை என்றால் மனது துடிக்கும் துடிப்பு சொல்ல முடியாது.

    செம்பகமாய் நகரப் பெருஞ்சுவர்களுக்குள் மறைந்து போவான்.//
    உண்மை.

    கதை பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
    2. இதுபோன்ற விவரமான பின்னூட்டங்கள் இப்பகுதியை தொடரச் செய்கிறது. நன்றி.

      Jayakumar

      நீக்கு
  6. கோணங்கி அவர்களின் கதை மிகவும் அருமை. கதாபாத்திரத்தின் கண் முன் தன் பழைய ஊர் கண் முன் விரிவது அதுவும் மயினிமார்கள்..(மதினிமார்தான் எங்கள் ஊரில் மயினி)
    //மூடிக் கிடந்த ஞாபகத்தின் ஒவ்வொரு கதவையும் தட்டித் திறந்து விட்ட ஆவுடத்தங்க மதினி மீண்டும் கண்ணெதிரில் நின்றாள். அதே உதடசையாச் சிரிப்புடன், பழையதெல்லாம் ஒவ்வொன்றாய்ப் புது ஒளியுடன் கண்ணெதிரே தோன்றியது. ஆச்சரியத்தால் தோள்பட்டைகளை உலுக்கிக் கொண்டு நடந்தான்.//

    அங்கிருந்து விரிகிறது பழைய நினைவுகள். சொந்த ஊருக்கு நேரடியாகப் போகும் பேருந்து அவனை சந்தோஷப்படுத்தினாலும் பேருந்தில் எந்த முகமும் அவனுக்குப் பரிச்சயமில்லாத முகம்....இதிலேயே தெரிந்துவிடுகிறது அவனது சொந்த ஊரே இப்போது அவனுக்குப் புதியதாய்!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  7. எனக்குத் தோன்றிய இதே அனுபவம் சமீபத்தில்? இல்லை ஒரு வருடம் ஆகப் போகிறது!!! இதோ நவம்பர் வந்தால்....சென்ற நவம்பரில் ஊருக்குப் போயிருந்த போது பேருந்தில் ஏறிய போது ஒரு முகம் கூடத் தெரியவில்லை. அந்நியப்பட்டது போல இருந்தது...."ஏட்டி நம்ம ராஜாவூர் பஸ்ஸு நிக்கில்லா..." என்று ஓடிச் சென்று ஏறிய காலம் நினைவுக்கு வந்தது...ஆ....இந்த டயலாக் உட்பட நான் எழுதி பாதியில் நிற்கும் கதை முழுவதுமே இங்கு வந்துவிடும் அபாயம்!!! ஹிஹிஹி...எனவே இத்தோடு இங்கு முற்றுப்புள்ளி.

    பல வருடங்கள் கழித்துச் செல்லும் போது ஏற்படும் ஏமாற்றம்...மக்கள் முகங்கள் மட்டுமல்ல ஊரே மாறிப்போயிருக்கும் அந்த அதிர்ச்சி நாம் வாழ்ந்த வீடுமே அடையாளம் தெரியாமல் போயிருப்பதும், மனதில் ஏற்படும் சோகம் ஏமாற்றம் அனைத்தும் அந்தக் கடைசிவரிகளில் பொட்டலப் பொதியாய்க் கொடுத்துவிட்டார் ஆசிரியர். பொதியைப் பிரித்தால் சிதறும் அபாயம்!!

    கீதா

    பதிலளிநீக்கு
  8. நான் சொல்ல மறந்ததைச் சரியாக சொன்னீர்கள். கதையைப் படித்தமைக்கு நன்றி இதுபோன்ற விவரமான பின்னூட்டங்கள் இப்பகுதியை தொடரச் செய்கிறது. நன்றி.

    Jayakumar

    பதிலளிநீக்கு
  9. ஜெகே அண்ணா உங்கள் கருத்து அருமை....அதாவது ஆசிரியரின் வார்த்தைப் பிரயோகங்களைச் சொல்லியிருப்பது...

    //(நீர் இறைக்காமல் விவசாயம் இல்லாமல் இருப்பதை உறக்கம் எனக் கூறலாமா!)//

    அதே அதே அதைத்தான் ஆசிரியர் சொல்லியிருக்கிறார்.

    கீதா

    பதிலளிநீக்கு
  10. நான் வாழ்ந்த மதுரைக்குப் போய் மனம் நொந்த நாட்கள் நினைவில் வந்தன. இந்தக் கதையைப் படிச்சிருக்கேன். எஸ்.ரா.வின் தொகுப்பிலோ? நினைவில்லை. இன்று காலையில் கூட மகளுடன் பேசும்போது நவராத்திரி மதுரை நினைவுகளும்/அம்பத்தூர் நினைவுகளும் பகிர்ந்து கொண்டோம். இம்மாதிரி இப்போப் போனால் கூட நடக்காது என்பதே உண்மை. பல வருடங்கள் கழித்துச் செல்லும்போது ஏற்படும் ஏமாற்றங்கள் கண்கூடாக எழுதி இருக்கார் ஆசிரியர்.

    பதிலளிநீக்கு
  11. குழந்தைகளையும் வருங்காலத்தையும் பற்றிக் கவலைப்பட்டுப் பதிவு போட்டிருக்கேன். இங்கே வந்து பார்த்தால் குழந்தைகளை எப்படி நடத்துவது என்பது பற்றி விரிவாகக் கொடுத்திருக்கீங்க. பெற்றோர் இப்போதானும் விழித்துக் கொண்டு வருங்காலம் நன்றாக இருக்க வேண்டும் எனில் குழந்தைகளை வழிக்குக் கொண்டு வர வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீதாக்கா இங்கு இதைச் சொல்ல வந்தேன்...கீதாக்கா பதிவு ஆதங்கப் பதிவு....அதற்கு இங்கு பதில் போல ஒரு பதிவு என்று....நீங்களே வந்து சொல்லிவிட்டீர்கள்

      கீதா

      நீக்கு
  12. கோணங்கியை இங்கே கொணர்ந்ததற்கு நன்றி.
    இவ்வகை எழுத்தும் இலக்கியத்திற்குத் தேவைதான்.

    அவர் அரசால்பவர்களால் ‘ இலக்கிய மாமணி’யாகப் ‘புரிந்துகொள்ளப்பட்டது’ , சிரிப்பை வரவழைத்தது எனக்கு.

    பதிலளிநீக்கு
  13. ஜெய மோகன் சொல்கிறபடி மன ஓட்டத்தை மொழியாக்குவது இல்லை.

    மொழி என்பது ஏற்கனவே இருக்கிற ஒன்று. அந்த மொழியை தன் மனக்கிளர்ச்சிகளுக்கு ஏற்ப வார்த்தைகளாய் வடித்தெடுப்பதில்
    தான் அந்த மொழியில் எழுத்தாளனுக்கு இருக்கிற ஆளுமை வெளிப்படும்.

    ஜெமோ தன் கூற்றை மேலெடுத்துச் செல்வதில் தான் கோளாறே ஆரம்பிக்கிறது. மொத்த பயன்பாட்டுக்குமாக விரியும் வீச்சு கொண்டதல்ல கோணங்கியின் தானியங்கி எழுத்து;
    ஏனென்றால் அவர் எழுத்து நாட்டார் தன்மையுள்ள எழுத்து என்று முடிக்கிறார் அவர்.

    ஜெமோ சொல்வதில் உங்களுக்கு என்ன புரிந்தது சொல்லுங்கள் கீதா ரெங்கன்.

    பதிலளிநீக்கு
  14. ஹனுமன் கோவிலுக்கு ஒன்றரை ஏக்கர் நிலம் தானமாக அளித்த பாபு அலியை வாழ்த்துவோம்.

    பதிலளிநீக்கு
  15. செய்திகள், கோணங்கியின் கதை அலசல் என நல்ல பகிர்வு .

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!