திங்கள், 3 ஏப்ரல், 2023

"திங்க"க்கிழமை  :  சோள இட்லியும் குடமிளகாய்க் கொத்சுவும் - கீதா சாம்பசிவம்

 அரைத்த மாவு

நாங்க சிறு தானியம் சாப்பிட ஆரம்பிச்சு ஆறு மாதங்களுக்கும் மேல் ஆகிறது. எல்லாத்தையும் மசிக்க முடிஞ்ச எனக்கு சோளத்தை வேக வைப்பது ஒரு சோதனையாகவே இருந்தது. ஒரு மாதிரியா வேக வைச்சுடறேன். சில நாட்களுக்கு முன்னர் ஏதோ ஒரு சானலில் எல்லா சிறு தானியங்களிலும் இட்லி செய்வதைப் பற்றிச் சொன்னார்கள். நாம தான் ஏற்கெனவே வரகு, கம்பு போன்றவற்றில் இட்லி செய்து பார்த்துட்டோமே. இப்போ சோளத்தில் செய்யலாம் என நினைத்து நேற்று அதற்கான பொருட்களைத் தயார் செய்தேன்.

சோளம் உடைச்சது 250 கிராம் அல்லது ஒரு ஆழாக்கு அல்லது 2 கிண்ணம்

உளுந்து கால் கிண்ணம்

வெந்தயம் ஒரு டேபிள் ஸ்பூன்.

இன்று காலை உணவுக்குச் செய்யப் போவதால் ஏற்கெனவே ஊற வைச்சு அரைச்சிருக்கணும். ஆனால் நேற்று மாலை தான் இந்த யோசனை உதித்ததால் மாலை ஆறு மணி அளவில் சோள ரவையைக் களைந்து தனியாக ஊற வைத்தேன். பின்னர் உளுந்து, வெந்தயம் இரண்டையும் ஒன்றாகக் கலந்து ஊற வைத்தேன்.  இரண்டு மணி நேரம் ஊறப் போதும் என்பதால் இரவே அரைத்து வைத்து உப்புப் போட்டுக் கலந்து விடலாம். மாவு நன்கு பொங்கி வருகிறது.

சோள இட்லி தயார், சாப்பிட வாங்க!

இன்று காலை அதை இட்லிகளாக வார்த்து எடுத்தேன். தொட்டுக் கொள்ளக் குடமிளகாய்க் கொத்சு!

செய்முறை

புளி ஒரு சின்ன நெல்லிக்காய் அளவுக்கு நீரில் ஊற வைத்துக் கரைத்து எடுத்தது இரண்டு கிண்ணம்

பயத்தம்பருப்பு ஒரு டேபிள் ஸ்பூன் குழைய வேக வைக்கவும். அதிலேயே புளி ஜலத்தைச் சேர்க்கவும்.

ஒரு நடுத்தர அளவுக் குடைமிளகாய்,

நடுத்தர அளவுத் தக்காளி

பெரிய வெங்காயம் பெரிதாக ஒன்று அல்லது நடுத்தரமாக இரண்டு பொடிப்பொடியாக நறுக்கவும்.

சாம்பார்ப் பொடி இரண்டு டீஸ்பூன்

மஞ்சள் பொடி கால் டீஸ்பூன்

தாளிக்க எண்ணெய் ஒரு மேஜைக்கரண்டி, கடுகு, க.பருப்பு, உபருப்பு, கருகப்பிலை, பெருங்காயம்

மேலே தூவ பச்சைக் கொத்துமல்லி பொடிப்பொடியாக நறுக்கியது.

உப்பு தேவையான அளவு


குடமிளகாய்க் கொத்சு கொதிக்குது! :)

அடி கனமான வாணலியில் எண்ணெய் ஊற்றிக் கொண்டுக் கடுகு, உபருப்பு, கபருப்பு தாளித்து, பெருங்காயமும், கருகப்பிலையும் சேர்க்கவும்.  மஞ்சள் பொடியைச் சேர்க்கவும். பின்னர் முதலில் வெங்காயத்தை நறுக்கிச் சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் குடைமிளகாயைச் சேர்க்கவும். குடைமிளகாய் அரைப் பதம் வேகும்போது தக்காளியைச் சேர்க்கவும். தக்காளி சேர்ந்து வரும்போது பருப்புக்கலவையுடன் சேர்ந்த புளிக்கரைசலைச் சேர்க்கவும். உப்புச் சேர்த்துக் கொதிக்க விடவும். ரொம்ப நீர்க்கவும் இல்லாமல் சேறு போல் கெட்டியாகவும் இல்லாமல் இருக்க வேண்டும். பொதுவாக சாம்பார், கொத்சு போன்றவை சேறு போல் கெட்டியாக இருந்தால் அவ்வளவாக ருசிக்காது. கூடியவரை பால் போன்ற பதத்தில் வைத்துக் கொண்டால் நல்லது.

30 கருத்துகள்:

  1. செய்முறை விளக்கம் சுருக்கமாக நன்றாக இருக்கிறது நன்றி.

    பதிலளிநீக்கு
  2. இனிய காலை வணக்கம்...... சோள இட்லியும் கொத்சுவும் சுவையாக இருக்கும் என்று தோன்றுகிறது. சிறுதானிய பயன்பாடு எங்கள் வீட்டிலும் சில வருடங்களாக உண்டு.

    பதிலளிநீக்கு
  3. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  4. இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  5. சோள இட்லியும் குடைமிளகாய் கொத்சுவும் நன்றாக இருக்கிறது. செய்முறையும் அருமை.
    நானும் சோள இட்லி செய்து இருக்கிறேன். ஆனால் வெள்ளை சோளத்தை எட்டு மணி நேரம் ஊறவைத்து அரைத்தேன். நீங்கள் சொல்வது போல சோளத்தை உடைத்து ரவையை இரண்டு மணி நேரம் ஊற வைத்து செய்து பார்க்கிறேன்.
    படங்கள் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இங்கே எங்கள் மளிகைக்கடையில் சோள ரவையாகவே கிடைக்கிறது. நான் அதில் தான் உப்புமா, தோசை, இட்லி போன்றவை செய்கிறேன். அதோடு இதற்கு இட்லி அரிசியெல்லாம் சேர்க்கவில்லை.

      நீக்கு
    2. ஆமாம் அக்காஸ், சோள ரவை கிடைக்கலைனா நான் வீட்டில் சோளத்தைப் பொடித்துக் கொண்டுவிடுகிறேன். அது போலவே கம்பும். சிறுதானியங்களையும் கூட....

      மகனுக்கு அப்படித்தான் குழிப்பணியார கலவை, அடை கலவை இன்னபிற கலவைகள் என்று...அவன் ஊற வைத்து செய்து கொண்டால் போதும்.

      கீதா

      நீக்கு
  6. கருத்திட்ட அனைவருக்கும் நன்றி. பின்னர் வருகிறேன்.

    பதிலளிநீக்கு
  7. சோள இட்லி, குடமிளகாய் கொத்சு... முதல் முறை கேள்விப்படறேன்.

    செய்முறையின் ருசி படத்தில் தெரிகிறது. அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கொஞ்சம் போல் நிறம் மஞ்சளாக இருக்கும். அதைத் தவிர்த்தால் சுவை நன்றாகவே இருக்கு நெல்லை. முயற்சி செய்து பாருங்கள் உங்க கையில் சமையலறை வரச்சே!

      நீக்கு
    2. பொதுவாக கொத்சு எனில் பருப்பே போடாமல் தான் நாங்கல்லாம் (எங்க ஊர்ப்பக்கம்) பண்ணுவோம். ஆனால் மாமியார் வீட்டில் பொரிச்ச கூட்டுக்கேப் பருப்புப் போடலைனா சிரிப்பாங்க/சிரிக்கிறாங்க. அதனால் கொஞ்சம் போல் பருப்புப் பேருக்குச் சேர்ப்பேன்.

      நீக்கு
  8. கீதாக்கா ரொம்ப நல்லா வந்திருக்கு. இரண்டுமே. செய்முறையும் நல்லாருக்கு.

    சோள இட்லி, கம்பு இட்லி எல்லாமே நல்லாருக்கும். நான் முழு தானியம் ஊற வைத்தும் செய்திருக்கிறேன். இப்போ எல்லாம் இரண்டும் ரவை பக்குவத்தில் கிடைக்கின்றன. அதுவும் பயன்படுத்தி செய்கிறேன்.

    சிறு தானியங்கள் பனிவரகு வரகு, தினை எல்லாத்துலயும் செய்யலாம்.

    இணையம் எல்லாம் வரும் முன்னர், அது பிராபல்யம் ஆகும் முன்னரே தொட்டு.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இணையம் எல்லாம் வரும் முன்னர், அது பிராபல்யம் ஆகும் முன்னரே தொட்டு., நம் வீட்டில் செய்கிறேன். பின்ன நான் சர்க்கரைக் க/குட்டி என்று தெரியவந்து 25 வருஷங்கள் ஆகிறதே!!!! அப்பலருந்தே..

      கீதா

      நீக்கு
    2. சர்க்கரைக்கும் சிறுதானியத்துக்கும் என்ன சம்பந்தம்? எதைச் சாப்பிட்டாலும் (என்னைப் போல் சாப்பிடாமல்) குறைந்த அளவு சாப்பிட்டால் ஒரு பிரச்சனையும் இல்லை. உங்கள் ஒருவருக்காக, வீட்டில் உள்ள அனைவரும் சிறுதானியம் சாப்பிடணும்னா, அரிசியை உடைச்சு குருணையாத்தான் சாப்பிடணும்.

      நீக்கு
    3. அரிசிக்கும் சிரு தானியத்துக்கும் ஒண்ணும் அதிக வித்தியாசம் தெரியலை. ஆகவே நாங்க அரிசிச் சாதமே மதியம் ஒரு வேளை மட்டும் சாப்பிட்டுக்கறோம். ஒண்ணும் பிரச்னை இல்லை.

      நீக்கு
  9. கத்தரிக்காய் கொத்சு க்கும் கூட குடைமிளகாய் போட்டாலே தனி சுவை வந்துவிடும்.

    சிறுதானியங்கள், சோளம் கம்பு, கேழ்வரகு எல்லாவற்றிலும் ஆப்பம், புட்டு, குழிப்பணியாரம் (காரம், இனிப்பு) எல்லாமே, நாம அரிசி பயன்படுத்தி செய்வது போல் அதற்குப் பதில் இந்த தானியங்களைப் பயன்படுத்திச் செய்யலாம். மங்களூர் வகை இட்லி (கடுபு) எல்லாமுமே

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குடைமிளகாயில் சாம்பார், கறி எல்லாம் பண்ணுவாங்க என்பதே எனக்குச் சென்னை வந்து தான் தெரியும். பெரிய வெங்காயமும் அப்போல்லாம் பார்த்ததில்லை. நான் கல்யாணம் ஆகித் தனிக்குடித்தனம் வைச்சப்போக் கூடச் சின்ன வெங்காயம் தான் வாங்குவேன். ராஜஸ்தான் போனதும் அங்கே சின்ன வெங்காயமே தெரியாது என்பதால் பெரிய வெங்காயம் வாங்க ஆரம்பிச்சோம் அரை மனசா!

      நீக்கு
    2. நம்மவருக்குக் குடை மிளகாய், சௌசௌ, பீட்ரூட் போன்ற சில காய்கள் பிடிக்காது என்பதால் வாங்கவே மாட்டார். இது யாரோ விருந்தாளி வந்தப்போப் பண்ணினது.

      நீக்கு
    3. சௌசௌ எனக்கு மிக மிகப் பிடித்தமானது. என் கையில் சமையலறை வரப்போகுது என்றாலே இதனை வாங்கிவிடுவேன். இல்லாவிட்டாலும் எப்போதும் நான் விரும்பி வாங்கும் காய் இது. சௌசௌ தேங்காய் அரைத்த கூட்டு, எப்பவாச்சும் சௌசௌ தொகையல் (பசங்களுக்குப் பிடிக்கும்). வேறு வகையில் நான் சாப்பிடமாட்டேன் குடைமிளகாய் பருப்புசிலி பிடிக்கும். பீட்ரூட் சாதாரண கரேமது

      நீக்கு
  10. சுவையான குறிப்பு. இலகுவானதும்.

    பதிலளிநீக்கு
  11. நல்ல குறிப்பு. ஆனாலும் சர்க்கரை குறைபாடு உள்ளவர்களுக்கு ஆகாது என்கின்றனர்..

    என்ன செய்ய?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குவைத்தில் சமோலினா என்ற பேரில் சோள ரவா கிடைக்கும்..

      நல்ல பயன்பாடு..

      இங்கே அப்படியல்ல...

      நீக்கு
    2. செமோலினா என்றாலே ரவை தான். அது எதில் பண்ணினாலும். ஆட்டா என்றாலே மாவு என்பதைப் போல். வித்தியாசம் தெரிய கேஹூன் கா ஆட்டா (கோதுமை மாவு) சாவல் கி ஆட்டா(அரிசி மாவு) என்போம்.

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!