====================================================================================================
சீமைக்கருவேல மரங்களை வாயுப்பொருளாக மாற்றும் புதிய தொழில் நுட்பத்தை கோவையில் செயல்படுத்த உள்ளதாக திண்டுக்கல் விஞ்ஞானி அப்துல் அஜீஸ் கோவையில் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் விஞ்ஞானி அப்துல் அஜீஸ். ஜெனரேட்டர் தொடர்பான துறையில் பணியாற்றிய இவர் ஜெனரேட்டர் வெளியிடும் அதிக புகையை குறைப்பது தொடர்பாக ஆராய்ச்சி நடத்தினார். அதைத் தொடர்ந்து பல்வேறு புதிய கண்டு பிடிப்புகளை வெளியிட்டார்.
அறிவியல் ஆராய்ச்சி தொடர்பான எந்த பட்டப் படிப்புகளும் இல்லாத இவர் உலகிலேயே முதல்முறையாக காற்றில் உள்ள நைட்ரஜனை எரிபொருளாக பயன்படுத்தி மத்திய அரசிடம் இருந்து ரூபாய் 5 லட்சம் அன்பளிப்பு பெற்றுள்ளார்.
மேலும் கார்பன் டை ஆக்சைடு பெட்ரோலுடன் சேர்த்து டூவிலர் இயக்கியும், நீரிலிருந்து ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜனை பிரித்து ஜெனரேட்டரை இயக்கியும், பெட்ரோலுடன் காற்றை கலந்து மூன்று மடங்கு மைலேஜ் அதிகரித்து அதனை நிரூபித்தும் காட்டியுள்ளார்.
மத்திய அரசின் நிதி உதவியுடன் வாகனங்களில் மைலேஜை அதிகரிக்கும் புதிய தாவர திரவத்தை உருவாக்கியுள்ளார்.
இந்நிலையில் கோவை வந்த விஞ்ஞானி அப்துல் அஜீஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, சீமைகருவேல மரங்களை பயன்படுத்தி புதிய தொழில் நுட்பத்தை கோவையில் செயல்படுத்த உள்ளோம், தற்போது சுற்றுச்சூழல் பாதிப்புகளில் பெரும் சவாலாக உள்ள சீமை கருவேல மரங்களால் ஏற்படும் சூழல் பாதிப்புகளை குறைக்கும் முயற்சியாக அதை சிலிண்டரில் அடைத்து வாயு எரிபொருளாக மாற்றும் புதிய கண்டுபிடிப்பை கண்டறிந்துள்ளேன். இது தொடர்பான ஆலையை கோவையில் செயல்படுத்த உள்ளதாக விஞ்ஞானி அப்துல் அஜீஸ் தெரிவித்தார். செய்தி; பி.ரஹ்மான், கோவை மாவட்டம்
===============================================================================================
================================================================================================
==================== ===============================================
மணிலா டாக்டரின் மகத்தான கண்டுபிடிப்பு!
பிலிப்பைன்ஸ் நாட்டில் - மணிலாவில் - டாக்டர் லூப் லிர்பா Dr LOOF LIRPA என்பவர் கண்டுபிடித்துள்ள ஒரு மருந்து மனித இனத்திற்கு மாபெரும் பொக்கிஷமாக கருதப்படுகிறது.
இவர் கண்டுபிடித்துள்ள அற்புத மருந்து மனித ஆயுளை இருநூறு ஆண்டுகளுக்கும் மேலாக நீட்டிக்க கூடியது.
அவர் தன்னுடைய ஆராய்ச்சியின் அடிப்படை ஆமைகளின் உடற்கூறு ஆராய்ச்சியால் விளைந்தது என்கிறார்.
நீண்ட பரிசோதனைகளுக்கும் சோதனைகளுக்கும் பிறகு இந்த மருந்தை அவர் கண்டுபிடித்துள்ளார்.
விரைவில் இந்த மருந்து உலகம் முழுவதும் விற்பனைக்கு வரும் என்று மணிலாவிலிருந்து சென்ற வாரம் வெளியான மருத்துவ ஏடு விவரம் தந்துள்ளது.
Dr LOOF LIRPA அவர்களின் தொடர்பு எண் +63 1169126012
(டாக்டர் பெயரை ஒரு தடவை 'திருப்பி' படித்துப் பார்க்கவும்)
= = = = = = = = = = = = == = = = = = = = = = =நான் படிச்ச கதை (JKC)
ஆழம் – பூமணி
கருவேலம் பூக்கள் என்ற திரைப்படத்தை NFDC உதவியுடன்
தயாரித்து வெளியிட்டார். திரைப்படம் பல விருதுகளையும் பாராட்டுக்களையும் பெற்றது.
வணிக ரீதியிலும் வரவேற்பு பெற்றது.
முன்னுரை
பூமணியின் கதை ஒன்றாவது எ பி வாசகர்களுக்கு அறிமுகம் செய்யவேண்டும்
என்ற விருப்பம் தற்போது நிறைவேறுகிறது. எஸ்ரா மற்றும் பலர் அவருடைய சிறந்த
சிறுகதையாக ரீதி என்ற கதையை பரிந்துரைத்திருக்கின்றனர். அக்கதை எ பி
வாசகர்களுக்குப் பிடிக்காது. ஆகவே எந்த ஒரு சர்ச்சையும் ஏற்படுத்த முடியாத ஆழம் என்ற இந்தக் கதையை
தேர்ந்தெடுத்தேன்.
அடிப்படையில் இது ஒரு கதை இல்லாத கதை. ஆசிரியர் ஒரு திரைக்கதை போன்று
கதையை அமைத்திருக்கிறார். ஒரு ஓரங்க நாடகம் போன்றது. ஒரு சாதாரண மத்திய தர குடும்பத்தில்
நடக்கும் காலைக் காட்சிதான். மாலையில் காட்சி எப்படி மாறுகிறது என்பதே கதை. ஒரு
உளவியல் கதையாகவும் கொள்ளலாம். கோணங்கியின் கவிதைப் பார்வை இவரது எழுத்துக்களிலும்
புலப்படுகிறது. உ-ம். “மைதானத்தில்
மழை பரப்பியிருந்த நீரில் சர்க்கரைச் சாரல் உதிர்ந்து கரைந்தது. காக்காய்கள்
குதித்துக் குதித்து தலையால் கோவிக் குளித்துச் சிலிர்த்தன.”
ஆழம்-பூமணி
அவன் கதையெழுதிக்கொண்டிருந்தான். தூக்கம் கழுவித் துடைத்திருந்த
மனசுக்குள் நினைவும் உணர்வும் ஊறி விரலில் கசியக் கசிய எழுத்து வேகமாக ஓடியது.
உடம்பு குளிரை மறந்து முறுக்கேறியிருந்தது.
கடலுக்குமேல் மெல்லக் கலையும் சாம்பல் புகைமண்டலம்.
அங்குமிங்குமாகத் திரியும் பறவைத் தூள்கள். தொலைவிலிருந்து சூரியனைப் புரட்டித்
தள்ளிவரும் அலைகள்.
மைதானத்தில் மழை பரப்பியிருந்த நீரில் சர்க்கரைச் சாரல் உதிர்ந்து
கரைந்தது. காக்காய்கள் குதித்துக் குதித்து தலையால் கோவிக் குளித்துச் சிலிர்த்தன.
படத்தில் உள்ளவர யார் என்று ஊகியுங்கள். பின்னுரையில் அவர் யார் என்பதை சொல்கிறேன்.
மனைவி பாத்ரூமுக்குள்ளிருந்தாள்.
'தலைய ஒணத்துடா. '
முடியை உதறிக்கொண்டே மூத்தவள் வராண்டா சுவருக்கு மேல் அசையும்
வாதுமைக் கொழுந்துகளை நீவிவிட்டாள். முன்பு கொழுந்துகளை எட்டிப் பார்த்தவள்
இப்போது தொட்டுப் பார்க்கிறாள்.
சின்னவன் தாடை நடுக்கத்தில் சட்டை தேடினான். தலையில் தண்ணீர்
ஊற்றிவிட்டால் அவனுக்குச் சிணுங்கல் கூட குளிர்ந்துவிடுகிறது.
மனைவி துணி கும்மினாள்.
'அந்தப் பய அழுகிறது கேக்கலயா. காது இடிஞ்சா போச்சு.
வீட்ல ஆம்பள இல்லன்னு எண்ணைக்கோ முடிவாயிருச்சு. '
அவள் வந்து சேலைத் தலைப்பால் சின்னவன் தலையை இன்னொரு தடவை துவட்டி ஈரம்
பார்த்தாள். எழும்பியிருந்த முடியை மடக்கித் தடவினாள். சட்டையை எடுத்துக்
கொடுத்துவிட்டு சமையலறைக்குப் போனாள்.
'வந்து கொட்டிக்கடா. ஸ்கூலுக்குப் போகணுமிங்கிறது ஞாபகமிருக்கா. இப்பவே தகப்பன் புத்தி தலையில ஏறிக்கிருச்சா.'
அவன் மும்முரமாகப் பேனாவில் சவாரி செய்தான்.
'ஒடம்புச் சதைய அறுத்துக் குடுத்த மாதிரி மாசம் மாசம்
ஸ்கூலுக்கு அழுகிறது ஒங்களுக்கெங்க தெரியும்.'
மூத்தவள் கொழுந்துகளைப் பிரிந்து வந்தாள். சின்னவன் தயாராக
உட்கார்ந்திருந்தான். சாப்பிட ஆரம்பித்தார்கள்.
'மழ வந்தா கொழந்தைக நனையாமப் போறதுக்கு ஒரு கொட
உண்டுமா. தனக்குத்தான் வேண்டாம்னா அதுகளுமா நனையணும்.'
அவன் தலை நிமிரவில்லை. கால்மடிப்பைத் தளர்த்தினான்.
பாத்ரூமுக்குள் மறுபடியும் துணியின் அங்கலாய்ப்பு.
'இடுப்பு வலிக்க எழுதி காலாணாவுக்கு வழி உண்டுமா.
இந்த வயசுலயே கண்ணக் கெடுத்து கண்ணாடி போட்டாச்சு. தலையக் கொடஞ்சு மயிரு
நரச்சிருச்சு. இங்க இப்படி உக்காந்துட்டுப் போயி ஆபீசுலயும் உக்காந்தா ஒடம்பு
என்னத்துக்காகும். நம்ம படுத்துக்கிட்டா என்னன்னு கேக்கிறதுக்கு ஆளு உண்டுமா.
நம்மளாத்தான் உருண்டு எந்திரிக்கணும். நோய வெலைக்கு வாங்குறதுக்கா எழுதணும்.
டாக்டருக்குக் குடுத்து முடியிதா.. எழுதியெழுதி கிழிச்சுப் போடுற பேப்பர
கொழந்தைகளுக்குக் குடுத்தாலாவது பாடம் எழுதிப் பாக்கும்.'
அவளுக்கு முன்னால் அழுக்கு நுரை கோபுரங்கட்டியிருந்தது. அடித்து
இருத்திவைத்த குழந்தைகளைப் போல் கசக்கிய துணிகள் உம்மென்று உட்கார்ந்திருந்தன.
'தாலிக்கயறு நெறம் வெளுத்துட்டுப் போகுது. புதுசு
ஒண்ணு வாங்கித் தாங்கன்னு சொல்லாற நாளில்ல. அத காதுலயே போட்டுக்கிறதில்ல.
தங்கத்துல செயினா கேக்காக. நாலணாக்கயறு. அதுக்கும் பஞ்சமாப் போச்சு. ஒரு பியூன்
வீட்டுக்காரி வெரல் தண்டியில செயின் போட்ருக்கா. பாத்தா வெக்கமாருக்கு.
ஸ்கூலுக்குப் போனா அத்தன பேரும் கழுத்தவே பாக்கிறாங்க. சேலைய மூடி கழுத்த மறச்சா
சொகமில்லையான்னு கேக்கிறாங்க... ஒரு நேரத்துல வித்தா ஒரு நேரத்துல வாங்கணும்.
பின்னால வாங்கலாம்னு சொல்லித்தான வித்தோம். அடுத்த வருசம் அடுத்த வருசம்னு ஒவ்வொரு
வருசமும் வந்துட்டுத்தான் போகுது. செத்ததுக்குப் பின்னால வாங்கினாச் சரி.
அவளது கைகள் தொடர்ந்து உச் கொட்டின.
'குடும்பத்துல கஸ்டம் எந்நாளும் இருக்கத்தான்
செய்யும். அதப்பாத்தா முடியுமா. இருக்கிறது ஒரு பொண்ணு. அது உக்காந்தா போட்டுப்
பாக்க மினுக்குனு ஒரு பண்டம் இருக்குதா. ஆம்பளைகளே கழுத்துல போட்டு அத பெரிசா
காட்டாட்டு அலையிறாங்க. பொம்பளைக ஒண்ணுமில்லாம இருந்தா யாரு மதிக்கிறாங்க.'
அவன் பேப்பரை மறுபக்கம் திருப்பியிருந்தான். குழந்தைகள்
புஸ்தகங்களை அடுக்கிப் பைக்குள் திணித்தார்கள்.
'என்னப்போல கயறு போட்ருந்த கமலாகூட பெரிய செயின்
வாங்கீட்டாங்க. நேத்து ஸ்கூலுக்குப் போறவங்க பாத்துட்டு பேசாமப் போறாங்க. நின்னு
ஒரு வார்த்த பேசினா என்ன. செயின பிடுங்கிக்கிருவாங்களா. இத்தன நாளும் என் பக்கத்துல
உக்காந்து கொழந்தைகளுக்குச் சோறு ஊட்டுவாங்க. நேத்து கிட்டயே வரல. அவசரமா ஊட்டி
முடிச்சிட்டு முந்திப் போயிட்டாங்க. எனக்கு அழுகையா வந்துருச்சு... யாருட்டச்
சொல்றது. சொவர்லதான் முட்டிக்கிறணும்.'
அவள் பக்கெட்டிலிருந்து பழைய தண்ணீரை வெடுக்கென்று ஊற்றி நுரையை
விரட்டினாள். எல்லாம் சேர்ந்து கழிவுக் குழாயில் கொடகொடத்தது. டேப்பைத்
திறந்து விட்டாள். பக்கெட்டில் புதுத் தண்ணீரின் இரைச்சல். துணிகளை உள்ளே அமுக்கி
குடுமியைப் பிடித்து தூக்குவதும் தண்ணீரைக் கொட்டுவதும் தொடர்ந்து நடந்தது.
அவன் முதுகுக் குறுக்கை நெளிக்கக்கூட நேரமில்லாமல் எழுத்தில்
லயித்திருந்தான். கதை வெண்ணெயாகத் திரண்டு வந்தது.
கழுவிய துணிகள் நீர் கக்கிக்கொண்டு கொடியில் தொங்கின. அவள் வெளியே
வந்து ஸ்டவ்வில் உட்கார்ந்திருந்த பானையின் மூடியைத் திறந்து பார்த்தாள்.
'வென்னீர் கொதிச்சிட்டுக் கெடக்கிறது யாருக்குத்
தெரியிது. குளிக்கக்கூட நமக்கு நேரங்கெடைக்க மாட்டேங்குது.
துணி தேடி பானையை பாத்ரூமுக்குள் தூக்கிக்கொண்டு ஓடினாள். வந்து
ஸ்டவ்வில் தண்ணீர் தெளித்து அணைத்தாள்.
'ஸ்டவ் ஒழுங்கா எரியிதா. தூண்டிவிட்டா குதிக்குது.
ரிப்பேருக்குக் குடுத்தா ரூவா கேப்பான். இத என்னன்னு பாக்கிறதுக்கு முடியல. நம்ம
கத இப்படியிருக்குது. '
வராண்டாவுக்கு வந்து வெளியே கை நீட்டினாள். மயிர்களில் சாரல்
கோர்த்தது. ரெண்டு துண்டெடுத்து குழந்தைகளுக்கு முக்காடு கட்டினாள். பைகளைத்
தூக்கிக்கொண்டு கிளம்பினாள்.
'போயிட்டு வாற வரைக்கு வென்னீர் ஆறீட்டுக் கெடக்காம
இருந்தாச் சரி. '
மாடிப்படிகளில் சின்னக் கால்களின் ஓட்டம் கேட்டது. அவனால் எழுத்தைத் தொடர முடியவில்லை. மூக்குக்குள் சிரித்துக் கொண்டான். அது கூட பலமாகக் கேட்டது. ஆபீஸ் கடிகாரமுள் நினவில் எழுந்து பாத்ரூமுக்கு விரைந்தான்.
சாயங்காலம் அவன் வீட்டுக்கு வரும்போது மனைவி சந்தோசமாக இருந்தாள்.
பல்கோர்வை வெள்ளை முகத்தின் மெல்லிய மஞ்சள் பூச்சை அடிக்கடி மிஞ்சியது.
தாலிக்கயிற்றிலும் மஞ்சளால் நிறமேற்றி வெளியில் தெரியும்படி போட்டிருந்தாள்.
அவன் முகங்கழுவிவிட்டு வந்து உட்கார்ந்தான்.
'கொழந்தைகள் எங்க. '
'கீழ வெளையாடுறாங்க. '
'ஆச்சரியமாருக்கே.
'அதுகளுக்கும் கட்டிப் போட்டதுபோல இருக்குமில்ல.
கொஞ்சநேரம் வெளையாடாட்டு வரட்டுமே. '
'ஒனக்கு பொறுமையா குளிக்கிறதுக்கெல்லாம்
நேரங்கெடைக்குதா. '
'மதியம் ஸ்கூலுக்குப் போயிட்டு வந்து குளிச்சென்...
ஒங்களுக்கு ஒண்ணுதெரியுமா.
'என்னவிஷயம். '
'இருங்க அடுப்பில காபி வச்சென். '
அவள் சூடாக காபி கொண்டுவந்து வைத்தாள். அவன் எடுக்கவில்லை
'சொல்லு. '
'ஸ்கூல்ல கமலாவப் பாத்தென். '
அவள் வய்விட்டுச் சிரித்தாள்.
'இதுக்கென்ன சிரிப்பு. அவங்கள தெனமுந்தான பாக்கிற. '
'என்னோட பேசீட்ருந்தாங்க. '
'பேசமாட்டங்கிறாங்கன்னு காலையிலதான் அடிச்சுக்கிட்ட.
'
'என்ன பேசினாங்க தெரியுமா. '
'சொன்னாத்தான தெரியும். '
'கழுத்துல பழையபடி கயறு போட்ருக்காங்க. '
'அதுக்குள்ள புதுச்செயின் எங்க போயிருச்சாம். '
'புதுச்செயினா. '
அவள் இன்னும் உரக்கச் சிரித்தாள்
'ஏன் பழசா. '
'பழசுமில்ல புதுசுமில்ல. '
'அப்புறம்.... '
நேத்து வர்றதா அவங்க அப்பா ஊருலருந்து ஒருவாரத்துக்கு முந்தியே
கடிதம் போட்ருந்தாராம். '
'அதுக்கென்ன.
'வந்து செயின எங்கன்னு கேட்டா என்ன சொல்றது.
'உள்ளதச் சொல்ல வேண்டியதுதான.'
'வித்துத் தின்னுட்டம்னு சொல்லமுடியுமா.'
'அதுதான நடந்தது. அவரும் குடும்ப நெலமையத்
தெரிஞ்சுக்கிறட்டுமே.'
'ஒங்கபுத்தி ஒங்களவிட்டு எங்க போகும்.'
'சரி அதுக்காக என்ன செஞ்சாங்களாம்.'
'அண்ணைக்கிலருந்து வீட்டுக்காரர அரிச்சிருக்காங்க.
அவரு அங்க இங்க ஓடி பணம் பெரட்டி கனமா கவரிங் செயின் வாங்கி வந்துட்டாரு. அப்பா
நேத்து வந்துட்டு இண்ணைக்குப் போயிட்டாராம். அவரு போன ஒடனே கயற எடுத்து மாட்டிக்கிட்டாங்க.
'அடடா வீண்செலவுதான. பணத்துக்கு என்ன கஸ்டப்பட்டாரோ.'
'இனியும் அவங்க அப்பா வருவாருல்ல. அதனால பத்தரமா கழட்டி வச்சிட்டங்க. இல்லன்னா கவரிங் வெளுத்துப் போகுமே... நல்லவேள எனக்கு அப்பாவுமில்ல அம்மாவுமில்ல.'
அவனுக்கு நெற்றிக்குள் குடைந்தது. ராத்திரிக்கு
கதையெழுத முடியுமென்று தோணவில்லை. தூக்கம் கூடச் சந்தேகந்தான்.
'கொழந்தைக இன்னும் வரலயா.'
'காபி ஆறிப்போயிருக்கும்.'
அவள் வெளியே நின்று குழந்தைகளைத் தேடினாள். அவன் அவளையே பார்த்தபடி
காபியை விழுங்கும்போது தொண்டைக்குள் விக்கியது.
பின்னுரை.
கதை எங்கே என்கிறீர்களா?
காலையில் எழுந்தவுடன் கிடைப்பது சுப்ரபாதம் (மனைவியின் புலம்பல்) அது
வேலைப்பளு கூடும்தோறும் தீவிரம் ஆகும். இது வழக்கம் தான் என்று எழுதுவதை நிறுத்தாத
ஆசிரியர். ஸ்கூல் ஆபீஸ் என்று எல்லோரும் சென்றபின் ஏற்படும் வெறுமை. மாலையில்
எல்லோரும் வந்தபின் ஏற்படும் மகிழ்ச்சி என்று ஒவ்வொரு நாளும் நடக்கும் தினசரி
காட்சிதான். இதில் சுவை கூட்டுவது
கமலாக்காவின் செயின் கவரிங் என்ற கண்டுபிடிப்பு. இது தான் கதை.
அது சரி. ஆழம் என்ற தலைப்பிற்கு கதை எப்படி பொருந்தும் என்ற கேள்வி
எழுகிறதே ?
பெண்ணின் மனது ஆழமானது என்பதே அது. அந்த ஆழத்தை அளவிட முடியாது.
அவர்கள் திறமையான வாதத்தால் மற்றவரை மடக்கி விடுவர். அப்படி முடியாத போது கடைசி
அஸ்திரமான கண்ணீர் வெளிப்படும்.
முடிவில்
//அவனுக்கு நெற்றிக்குள் குடைந்தது. ராத்திரிக்கு
கதையெழுத முடியுமென்று தோணவில்லை. தூக்கம் கூடச் சந்தேகந்தான்//
//அவன் அவளையே பார்த்தபடி காபியை விழுங்கும்போது
தொண்டைக்குள் விக்கியது// .
இந்த வரிகளில் கணவனது இயலாமை வெளிப்படுகிறது. கவரிங் என்ன கயறு
போலும் வாங்க
முடியவில்லையே என்ற ஆதங்கம் தான்
விக்கலாக வெளிப்படுகிறது.
மேலே இருக்கும் புகைப்படத்தில் பேணா பிடித்திருப்பவர் தேவன். (துப்பறியும்
சாம்பு)
மேலும் விவரங்களுக்கு
Dr LOOF LIRPA கண்டு பிடித்ததால் இன்னும் இந்தியாவில் ஊழல் வளரும்.
பதிலளிநீக்குஅரசியல்வாதிகள் இன்னும் பல்லாயிரம் கோடிகள் பதுக்கி வைப்பார்கள்.
திண்டுக்கல் விஞ்ஞானி திரு. அப்துல் அஜீஸ் அவர்களை வாழ்த்துவோம்.
ஜீ... ஊழல் வளராது. கவலைப்பட வேண்டாம்!!!
நீக்குஇந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
பதிலளிநீக்குபிரார்த்திப்போம்..
எல்லாருக்கும் இறைவன்
நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..
நலம் வாழ்க..
வாழ்க நலம். வாங்க துரை அண்ணா.. வணக்கம்.
நீக்கு..இவர் கண்டுபிடித்துள்ள அற்புத மருந்து மனித ஆயுளை இருநூறு ஆண்டுகளுக்கும் மேலாக நீட்டிக்க கூடியது. //
பதிலளிநீக்குநடக்காது.
சாரி டாக்டர்.. எதுக்கும் ஒடம்ப ஜாக்ரதயாப் பாத்துக்குங்க!
ஹிஹிஹி...
நீக்குபோற்றுதலுக்கு உரியவர்கள்
பதிலளிநீக்குநன்றி.
நீக்குஅனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குவாங்க கோமதி அக்கா. வணக்கம்.
நீக்குகோடை காலத்தில் ஆட்டோவில் குடிநீர் வைத்து இருப்பது நல்ல செயல் பாராட்ட வேண்டும். பொது குளம் படித்துறை அழகு.
பதிலளிநீக்குபடத்தில் உள்ளவர் தேவன். அவர் கதைகள் வாங்கி இருக்கிறேன், அதன் பின் பக்கம் இந்த படம் தான் இருக்கும்.
பதிலளிநீக்குபூமணி அவர்கள் கதை பகிர்வு நன்றாக இருக்கிறது.
அவர் மஹாதேவன் சகோதரி..
நீக்குகோவையில் வாழ்ந்த படிக்காத மேதை ஜி.டி.நாயுடு போல அஜீஸ் அவர்களும் ஒரு படிக்காத மேதைதான்.
பதிலளிநீக்குஆட்டோவில் பயணிக்கும் பிரயாணிகளுக்காக தண்ணீர் வழங்கும் ஆட்டோ டிரைவர் முருகேசன் வாழ்க வளமுடன்.
எல்லா இளைஞர்களும் நடிகர்களின் கட் அவுட்டிற்கு பால் அபிஷேகம் செய்வதில்லை. குளங்களை தூர் வாருகிறார்கள் சிலர் என்பதில் மகிழ்ச்சி.
மனித ஆயுளை 200 ஆண்டுகள் நீட்டிப்பதா? எதற்கு? 70 வயதானாலே அவுட் ஆஃப் பேளேசாக ஆகி விடுவோம். இன்று காலை தமிழ் சேனலில் 104 வயதாகும் ஒருவர் தனக்கு விரைவில் மரணம் வர ஏதாவது ம்ந்திரங்கள் இருக்கிறதா என்று ஹரிகேசநல்லூர் வெங்கட்ராமனிடம் கேட்டிருந்தார்.
*zee தமிழ் சேனலில் என்று வாசிக்கவும்.
நீக்குபடித்திராத கதைமை அறிமுகப்படுத்துவது பாராட்டுதலுக்குரியது
பதிலளிநீக்குதேவனைத் தெரியாதா?
பதிலளிநீக்குபூமணி கதை சாதாரண மக்களின் அன்றாட வாழ்க்கையின் கலக்கத்தை எடுத்துக் காட்டியுள்ளது. நல்ல கதை.
பதிலளிநீக்குகண்டு பிடிப்பாளர்களையும் போற்றத்தக்கவர்களையும் வாழ்த்துவோம்.
LOOF LIRPA...
பதிலளிநீக்குநல்ல குறும்பு...
:))))
நீக்குகதை இனிமேல்தான் படிக்கணும். மற்றபடி செய்திகள் அனைத்தும் அருமை. ஏப்ரல்ஃபூல் மருத்துவர் செய்தி உள்பட. அப்புறமா வரேன்.
பதிலளிநீக்குநன்றி.
நீக்குதிரு தேவன் அவர்களைத் தெரியாதவங்க இருப்பாங்களா? பூமணி கதைகள் படிச்சிருக்கேன். ஆனால் இந்தக் கதை படிச்சேனா இல்லையானு தெரியலை.
பதிலளிநீக்குஎல்லா பாசிட்டிவ் செய்திகளும் அருமை.
பதிலளிநீக்குApril Fool Doctor - ஹாஹாஹா அப்படி அமைந்திருக்கு பாருங்க...அவர் கண்டுபிடித்திருப்பது நல்லாதான் இருக்கு...ஆனால் பூமி தாங்குமா?!!!!
அது சரி வாழ்நாள் மாத்திரை ஆமையின் உடற்கூறுன்னு சொல்லியிருக்கிறார்...ஆனால் ஆமை, முதலை இவற்றின் வாழ்நாள் கூடுதல் என்பதற்குக் காரணம் Slow breathing. சித்தர்கள் சொல்லியிருப்பதும் அதுதானே மூச்சுப் பயிற்சி. நாம் எவ்வளவுக்கெவ்வளவு மூச்சு மெதுவாக விடுகிறோமோ கட்டுப் படுத்துகிறோமோ அவ்வளவுக்கவ்வளவு பதற்றம் இல்லாமல் இருக்கும் உடல்நலத்திற்கு நல்லது என்று.
கீதா
கரெக்ட்.
நீக்குபடத்தில் உள்ளவர் தேவன் என்பது இங்குப் பலருக்கும் தெரிந்திருக்கும்.
பதிலளிநீக்குஜெ கே அண்ணா, பூமணி பற்றி இப்போதுதான் தெரிந்து கொள்கிறேன். இதுவரை அவரைப் பற்றியும் அவர் எழுதிய கதைகளும் அறிந்ததில்லை. ஆனால் கருவேலம்பூக்கள் என்பது மட்டும் கேட்டிருக்கிறேன்.
அண்ணா, கதை இல்லை என்று சொல்ல முடியாதே. ஓர் எழுத்தாளரின் ஒரு தினமே இப்படித்தான், வறுமை, இயலாமை என்பதை அழகாகச் சொல்லியிருக்கிறார். உரையாடல்கள் மூலமே.
ஒரு சராசரி பெண்/மனைவியின் மன நிலை அந்தச் செயின் தங்கமோ என்று நினைத்து மனதில் தன் கழுத்தில் இருப்பதை நினைப்பது...பின்னர் அது கவரிங்க் என்று தெரிந்ததும் அதில் ஒரு மகிழ்ச்சி...நம்மைப் போலத்தான் என்று...ரசித்த இடம்...
உங்கள் கருத்துகளும் கரெக்ட்டா சொல்லியிருக்கீங்க, அண்ணா.
ஆனால் இதுவும் கதைதான் என்பது என் எண்ணம். கதை என்றால் முடிச்சு இருக்கணும், அப்படி இப்படி என்று பல இலக்கணங்கள் சொல்லப்பட்டாலும், இதுவும் யதார்த்தத்தைச் சொல்லும் கதை. சொல்லிய விதம் பல வரிகள் ரொம்பவே யதார்த்தம். ரசித்து வாசித்தேன். எனக்குப் பிடித்திருக்கிறது.
கீதா
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் இந்திய
பதிலளிநீக்குகம்யூனிஸ்ட் கட்சியின் இலக்கியப் பிரிவு. அதன் சார்பாக வெளிவந்த மாதப் பத்திரிகை 'தாமரை'.
தோழர் ஜீவா ஆரம்பித்து வைத்த பத்திரிகை. பூமணியை எழுத ஊக்குவித்து அறிமுகப்படுத்தி வைத்தது 'தாமரை' தான். அது சாஹித்ய அகாதமி விருது வரை அவரைக் கொண்டு போய் விட்டிருப்பது அவரது தாய் பத்திரிகையான தாமரையின் பெருமை.
ஜெயகாந்தன் கூட
'தாமரை' 'சரஸ்வதி' பத்திரிகைகளில் எழுத ஆரம்பித்தவர் தான். அது அவரை சாஹித்ய அகாதமி, ஞானபீடம் வரை உயர்த்தியது.
அந்தந்த
காலகட்டத்தில் எழுத்தாளன் பெரும் வாழ்க்கைப்பாடம் எப்படி இருக்குமோ அப்படியே அவன் எழுத்து இருக்கும் என்பதற்கு சரியான உதாரணம் ஜெயகாந்தன் அவர்கள். அதனாலேயே ஜெயகாந்தனின் எழுத்துலக வாழ்க்கையை, தாமரை காலம், ஆனந்த விகடன் காலம், தினமணிக் கதிர் காலம் என்று மூன்றாகப் பிரிப்பர்.