திங்கள், 25 செப்டம்பர், 2023

"திங்க"க்கிழமை : தேங்காய்ப் பால் தட்டை - துரை செல்வராஜூ ரெசிப்பி

 தேங்காய்ப் பால் தட்டை..

மறுபடியும் கொல்லர் தெருவில் கோணி ஊசி விற்பதற்கு வந்திருக்கின்றேன்..

இன்று தேங்காய்ப் பால் தட்டை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.. 

தேவையான பொருட்கள்:   
பச்சரிசி மாவு - 200  கி
பயற்றம் பருப்பு - 50 கி 
பொட்டுக் கடலை 50 கி
எள்  - 2 tsp 
கறிவேப்பிலை - 2 இணுக்கு 
கல் உப்பு - தேவையான அளவு 
வெண்ணெய் - 2 tsp 
கடலெண்ணெய் - தேவையான அளவு 




கவனத்துடன் எல்லாவற்றையும் செய்யவும்..

முதலில் எள்ளை சுத்தம் செய்து கொள்ளவும்..

அதான் தெரியுமே!..

(இந்த  - அதான் தெரியுமே!.. எல்லாவற்றையும் தட்டை பொரித்தெடுத்த பின் சொல்லிக் கொள்ளலாம்..)

எள்ளிற்கு மாற்றாக சீரகம் அல்லது ஓமம் சேர்த்துக் கொள்ளலாம்.. 

(ஆர்வக் கோளாறினால் எல்லாவற்றையும் ஒன்றாகப் போட்டு விடாதீர்கள்.. பதார்த்த குணோபேதம் ஆகி விடும்)

கறிவேப்பிலையை அலசி விட்டு அப்படியே உருவி எடுத்து இரண்டாகக் கிள்ளி தனியே வைத்து விடவும்..

கல் உப்பினை நன்றாக தூளாக்கிக் கொள்ளவும்.. 

(இந்த டொக்கு டொக்கு வேலைக்கு அயோடைஸ்டு சால்ட்டு வாங்கிடலாமே என்று நினைத்தால - கல் உப்பு தான்  சிறந்தது..)

பயற்றம் பருப்பை மிதமான தீயில் சிவக்க வறுத்தெடுத்து ஆறியதும் மிக்ஸியில் இட்டு மிருதுவாக அரைத்துக் கொள்ளவும் ..

கையோடு கையாக பொட்டுக் கடலையையும் மிருதுவாக அரைத்துக் கொள்ளவும் ..

அப்படியே பச்சரிசி மாவினை சற்று வறுத்துக் கொள்ளவும்..

தேங்காயைத் துருவி மிக்ஸியில இட்டு அரைத்து  150 மிலி., அளவுக்கு - பால் பிழிந்து கொள்ளவும்..

சற்று அகலமான பாத்திரத்தில் பச்சரிசி மாவு, பயற்றம் பருப்பு மாவு, பொட்டுக் கடலை மாவு, எள், கறிவேப்பிலை,  வெண்ணெய்  மற்றும் உப்புத் தூள் அனைத்தையும் போட்டு நன்றாகக் கலந்து, சிறிது சிறிதாக தேங்காய்ப் பாலை ஊற்றி - ரொம்பவும் இறுக்கமாக இல்லாமல் ஓரளவு தளர்வாகப் பிசைந்து - மாவினை பத்து நிமிடங்கள் அப்படியே வைத்து விடவும்..

கை அகல வாழை இலையில் எண்ணெய் தடவி,  நெல்லிக் காய் அளவு மாவை எடுத்து, இலையில் வைத்து தட்டையாக  தட்டிக் கொள்ள வேண்டும்.  

தட்டிக் கொள்ள  - என்றதும் டமார் டமார் என்பதாக  அர்த்தம் செய்து கொள்ள மாட்டீர்கள் என்று நிர்வாகக் குழு நம்புகின்றது (வேற வழி!..)

வாணலியை அடுப்பில் வைத்து, அதில்  தேவையான அளவு கடலெண்ணெய் ஊற்றி காய்ந்ததும், 

அதில் தட்டி வைத்துள்ள தட்டைகளை இட்டு இரு புறமும் புரட்டி விட்டு எண்ணெயின் சொட சொட சத்தம் அடங்கியதும்  எடுக்க வேண்டும். 

பிசைந்து வைத்த மாவினை தட்டைகளாக்கி முடித்ததும் பூஜை மாடத்தில் வைத்து நிவேதித்த பின்னர் - நிவேதித்த பின்னர்

உங்களுக்குத் தான் தெரியுமே!..

பக்கத்து வீடுகள் ராசியாக இருந்தால் பகிர்ந்து கொள்ளவும்.. இல்லையேல் இருக்கவே இருக்கின்றது சுத்தமான Es டப்பா!..

இப்போது தாராளமாக சொல்லிக் கொள்ளலாம் - 

அதான் எனக்குத் தெரியுமே!..

30 கருத்துகள்:

  1. குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
    மிகைநாடி மிக்க கொளல்

    தமிழ் வாழ்க..

    பதிலளிநீக்கு
  2. காக்க காக்க
    கனக வேல் காக்க..
    பார்க்க பார்க்க
    பாவம் பொடிபட..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  3. செய்முறை விளக்கம் சுவாரஸ்யமாக இருந்தது ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..

      நன்றி ஜி..

      நீக்கு
  4. அனைவருக்கும் நல்வரவு..

    அன்பின் ஸ்ரீராம் அவர்களுக்கு நன்றி..

    பதிலளிநீக்கு
  5. தட்டோடு தட்டை அனுப்பியிருந்தேனே.. ?...

    ( படம் தான்!..)

    பதிலளிநீக்கு
  6. வித்தியாசமான தட்டை குறிப்பு. நன்றாகவும் செய்வதற்கு சுலபமான முறையாகவும் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..

      நன்றி ..

      நீக்கு
  7. பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி ஐயா..

      நன்றி ..

      நீக்கு
  8. இன்றைக்குக் காலையில் இரண்டு பின்னூட்டங்களுக்கும், உங்கள் பின்னூட்டத்தில் பிழை இருக்கிறது என்று சொல்லி ப்ளாக் ஏற்கவில்லை. ஒருவேளை ஐபேடினால் இப்படியோ என்று நினைத்துவிட்டேன். ஏகாந்தன் சார் தளத்திற்கும் இதே பிரச்சனைதான். துரை செல்வராஜு சார் தளத்தில், பாதி எழுதிக்கொண்டிருக்கும்போதே தளம் ரீசெட் ஆகிவிடும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியா...

      இப்படி ஆவதில் எனது பிழை ஏதும்?..

      ஒன்றும் புரியவில்லை..

      நீக்கு
    2. காரணம் தெரியவில்லை. ஏதேனும் செட்டிங் மாற்றமான்னும் தெரியலை.

      நீக்கு
  9. புதுமையான செய்முறை. படம் சேர்த்திருந்தால் பளிச் என்று இருந்திருக்கும் (அதுக்கு செஞ்சு, படம் எடுத்திருக்கவேண்டும், படமெடுக்க மறந்திருக்கலாம்). துரை செல்வராஜுக்குப் பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படத்தைப் பார்த்த பிறகு என்ன ஐட்டம் என்பது தெளிவாகத் தெரிகிறது. எங்கள் வீட்டில் செய்யும் அரிசி அடை போல இருக்கிறது. (ஆனால் நான் பெரும்பாலும் சாப்பிடுவதில்லை, பசங்களுக்குப் பிடிக்கும்). இதுக்குத் தொட்டுக்கொள்ள ஏதும் வேணுமா?

      நீக்கு
    2. ஒன்றும் வேண்டாம்.. பொர பொர என்று இருக்கும்..

      நொறுக்குத் தீனி தான் இது..

      நீக்கு
  10. தட்டைகள படத்தையும் - ஸ்ரீராம் அவர்களுக்கு வாட்ஸப்பில் அனுப்பி இருந்தேன்..

    பதிவுடன் இணைப்பதில் தாமதம் ஆகியிருக்கின்றது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாட்ஸப்பில் படம் அனுப்பி வைக்கும் போது ஸ்ரீராம் அவர்களால் தரவிறக்கம் செய்ய இயலாமல் ஆகின்றது..

      இணைய வேகம் குறைவதால்
      மின்னஞ்சலில் படங்கள் அனுப்புவதில் பிரச்சினை..

      இந்த பதிவிற்கும் ஒரு படம் அனுப்பியிருந்தேன்..

      நீக்கு
  11. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  12. தேங்காய்ப்பால் தட்டை நன்றாக இருக்கிறது. செய்முறை சொல்லியவிதம் அருமை.

    //அதில் தட்டி வைத்துள்ள தட்டைகளை இட்டு இரு புறமும் புரட்டி விட்டு எண்ணெயின் சொட சொட சத்தம் அடங்கியதும் எடுக்க வேண்டும்.//

    அத்தை அவர்கள் தட்டை செய்யும் போது எல்லாம் சொல்லும் முக்கிய குறிப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // அத்தை அவர்கள் தட்டை செய்யும் போது எல்லாம் சொல்லும் முக்கிய குறிப்பு.//

      இது பாரம்பரிய செய்முறை..

      பாரம்பரிய செய்முறைக்கு இப்படித் தான் அசரீரி வாக்குகள் வந்து சேரும்

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      வாழ்க நலம்..

      நீக்கு
  13. செய்யும் விதம் இதேதான். ஆனால் நாங்க கொஞ்சம் காரப்பொடி சேர்த்துப்போம். அல்லது சிவப்பு மி.வத்தலை ஊற வைச்சு உப்பு, பெருங்காயம் சேர்த்து அரைத்துக் காரபொடிக்குப் பதிலாய்ச் சேர்ப்போம். சில சமயங்கள் தேங்காய்த் துருவலையும் மிவத்தலோடு சேர்த்து அரைத்தும் சேர்ப்போம். இந்தத் தேங்காய்ப் பால் எடுத்துக் கலப்பதும் துருவலை அரைத்துச் சேர்ப்பதும் புக்ககம் வந்தப்புறமாத் தான் தெரிந்து கொண்டேன். எங்க வீட்டில் தேங்காய்ச் சில் தான் வாங்குவோம். முழுத்தேங்காய் விநாயக சதுர்த்திக்கும், பொங்கலுக்கும் தான். மற்ற நாட்களீல் ஐந்து பைசா, பத்துப் பைசாவுக்குத் தேங்காய்ச் சில் தான். இங்கேயோ நேர்மாறாகத் தேங்காய் உடைபடாத நேரமே இல்லை. தினம் ஏழெட்டுக் காயாவது உடைப்பாங்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் மேலதிக விவரங்களும் கருத்தும் மகிழ்ச்சி அக்கா..

      நன்றி .. நன்றி..

      நீக்கு
    2. மிளகாய் சேர்த்துக் கொள்வது அவரவர் விருப்பம்..

      மிளகு, ஓமம், சீரகம் என்று மூலிகைகளைச் சேர்க்கும் போது - மிளகாய் எதற்கு இடைஞ்சலாக!..

      நீக்கு
  14. நல்ல குறிப்பு. ரசனையாக தந்துள்ளீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..

      நன்றி .. நன்றி..

      நீக்கு
  15. ஒரு வழியாக படம் இணைக்கப்பட்டது!  தாமதததுக்கு மன்னிக்கவும்!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!