புதன், 24 ஜூலை, 2024

நோய்நாடி நோய்முதல் நாடி ..


 நெல்லைத்தமிழன்: 

எந்த வியாதி, உடல் குறைபாடுகளைப் பற்றிப் படித்தாலும்  அந்த சிம்ப்டம்ஸ், நமக்கும் இருப்பதுபோலத் தோன்றுவது ஏன்?

# இதன் அடிப்படைக் காரணம் " நமக்கு நோய் வந்து விடுமோ " என்ற ஐயம் - அச்சம்.‌ 

கல்கியின் " ஏட்டிக்குப் போட்டி " யில் இதை ரசமாக எழுதியிருக்கிறார்.

எனக்கும் இது இருப்பதாக எங்கள் குடும்பத்தில் ( ஒருவர் மட்டும்) சொல்வதுண்டு.

& கல்கியின் ஏட்டிக்குப் போட்டி - புத்தகத்திலிருந்து அந்தப் பகுதி : 

" தலைகீழ் பாடம்" பக்கம் 46.. 47 .. 48 (ஒரு பகுதி) 

விளம்பரங்களைப் பார்க்கவேண்டாமென்று நான் சொல்வதன் காரணம் முற்றும் வேறானது. அந்தக் காரணத்தைச் சொல்வதைவிட, என்னுடைய அனுபவம் ஒன்றைக் கூறி னேனானால் உங்களுக்கு நன்றாய் விளங்கிவிடும்.

ஒரு நாள் தினசரிப் பத்திரிகை ஒன்றைப் புரட்டிக் கொண்டிருக்கையில் ஒரு விளம்பரம் கண்ணில் பட்டது. அது "கல்லீரல் மாத்திரை" விளம்பரம். அந்த விளம்பரத்தை வாசித்தபோது எனக்குப் பெருமூச்சு வாங்கியது; உடம்பு வியர்த்தது. ஏனெனில் கல்லீரல் கெட்டுப் போயிருந்தால் என்னென்ன அறிகுறிகள் காணப்படும் என்று அவ்விளம்பரத்தில் சொல்லப்பட்டிருந்ததோ, அவ்வளவு அறிகுறிகளும் என்னிடம் இருப்பதாகத் தோன்றிற்று. 'சரி, இதை இத்துடன் விட்டுவிடக்கூடாது; முழுதும் ஆராய்ந்தே தீர வேண்டும்' என்று தீர்மானித்தேன். உடனே அருகிலிருந்த புத்தகசாலை ஒன்றுக்குள் சென்றேன். அங்கே வைத்தியப் புத்தகங்கள் உண்டென்று அறிந்ததும், போன உயிரில் பாதி திரும்பி வந்தது. நோய்களைப் பற்றி விவரிக்கும் அகராதி ஒன்றை வாங்கிக் கல்லீரல் நோயைப்பற்றிப் படிக்கத் தொடங்கினேன். சந்தேகம் அறவே நிவர்த்தியாயிற்று. என் கல்லீரல் நைந்து அழுகி நாசமாய்ப் போயிருக்க வேண்டுமென்று நிச்சயமடைந்தேன். உடனே சென்று அந்த மாத்திரையை வாங்கவேண்டுமென்று தீர்மானித்தேன்.

வந்த காரியம் ஆனதும் எழுந்து போயிருக்கக் கூடாதா? சைத்தான் ஆசை ஒன்று உண்டாயிற்று. “வந்ததுதான் வந்தோம்; இன்னும் சில ரோகங்களைப் பற்றியும் படிக்கலாமே?" என்று தோன்றிற்று. எனவே சில ஏட்டைத் தள்ளி மற்றொரு நோயைப் பற்றி படித்தேன். அது ஒரு மகா கொடிய நோய். (பின்னால் சேர்ந்த மனக் குழப்பத்தில் அதன் பெயரை மறந்துவிட்டேன்) நாலைந்து வரி படிப்பதற்குள் ஒரு பயங்கரமான சந்தேகம் எழுந்தது. இன்னும் நாலைந்து வரி படித்ததும் சந்தேகம் நிச்சயமாயிற்று. அப்பயங்கர நோய் என்னைப் பிடித்திருந்ததென்பதில் யாதொரு சந்தேகமுமில்லை. கால் கட்டை விரல் முதல் உச்சந்தலை வரையில் ஒரு நடுக்கம்  உண்டாயிற்று பின்னர் நடுங்கிக் கொண்டிருந்த விரல்களால் மற்றொரு ஏட்டைப் புரட்டினேன். டைபாய்டு சுரம் வந்தது ஆனால், என் உடம்புக்கு அது வந்து குறைந்தது ஆறு மாதமாயிருக்க வேண்டுமெனத் தெளிவாயிற்று, இதன் பின்னர் எனக்கு அச்சத்தைவிட ஆச்சரியமே அதிகமாயிருந்தது. எனக்குத் தெரியாமல் இத்தனை நோய்கள் எவ்வாறு வந்திருக்கக்கூடும்.

இதை அடியிலிருந்து ஆரம்பித்து, ஆராய்ச்சி செய்து விடுவதென்று தீர்மானித்தேன் 'ஏ'யிலிருந்து தொடங்கினேன். புத்தகம் ஆங்கிலப் புத்தகம் என்று நேயர்களுக்குச் சொல்ல வேண்டியதில்லையல்லவா? வரிசையாக நோய்களைப் படித்துக்கொண்டே வந்தேன். காசநோய் எனக்கிருப்பதாகத் தெரிந்தது. ஆனால் அதைப்பற்றிப் பயமில்லை. காச நோயுடன் பல வருஷ காலம் உயிரோடு இருக்கலாம். க்ஷயரோகம் எனக்குப் பிறவியிலேயே உண்டென்று தெற்றென விளங்கிற்று. இன்னும் மலேரியா, வைசூரி, இன்புளூ யன்ஸா, நிமோனியா ஆகியவையெல்லாம் ஒவ்வொரு நிலையிலிருந்தன. கடைசி எழுத்து (இஜட்) முடியப் படித்தேன். காக்கை வலிப்பு ஒன்றைத் தவிர மற்றெல்லா நோய்களும் என்னைப் பிடித்திருந்ததாக உறுதி பெற்றேன். இது குறித்து முதலில் கொஞ்சம் வருத்தமாய்த்தான் இருந்தது. காக்கை வலிப்பு ஏன் இல்லை? மற்ற எல்லா நோய்களும் வந்திருக்கும் போது, காக்கை வலிப்பு மட்டும் நம்மை அசட்டை செய்து விட்டதே என்று ஏக்கமுண்டாயிற்று.

சட்டென்று ஓர் எண்ணம் உதயமாயிற்று. வைத்தியக் கலாசாலை ஒன்றுக்கு நாம் எவ்வளவு உபயோகமாய் இருக்கலாம்? நாம் மட்டும் ஒரு வைத்தியக் கலாசாலைக்குச் சொந்தமாயிருந்தால் மாணாக்கர்கள் ஆஸ்பத்திரிகளுக்குச் சென்று தனித்தனி நோயுள்ளவர்களைப் பார்த்துக் கொண்டு அலையத் தேவையில்லை. நாமே ஒரு வைத்தியசாலை! யானை முகக் கடவுள் பரமசிவனைச் சுற்றி விட்டுப் பழத்தை வாங்கிக் கொண்டதுபோல், மாணாக்கர்கள் நம்மைப் பார்த்து ஆராய்ந்துவிட்டுப் பட்டம் பெறலாம் என்று எண்ணினேன். அப்படி வைத்தியக் கலாசாலை ஏதேனும் என்னை வாங்குவதாயிருந்தால் **பதினாயிரம் ரூபாய்க்குக் குறைந்து விற்பதில்லையென்றும், அதற்குமேல் கிராக்கிக்குத் தகுந்தாற்போல் பார்த்துக் கொள்வதென்றும் முடிவு செய்திருந்தேன்.

இதற்குள் இன்னொரு நினைவு எழுந்தது. எல்லாவற்றிற்கும் உயிரோடிருந்தாலல்லவா? கை நாடியைப் பிடித்துப் பார்த்தேன். முதலில் நாடி அடிப்பதாகவே தெரியவில்லை.

திடீரென்று அதிவேகமாக அடிக்கத் தொடங்கிற்று. எண்ணியதில் ஒரு நிமிஷத்தில் 136 தடவை அடித்ததாகத் தெரிந்தது. பின்னர் நெஞ்சைத் தொட்டுப் பார்த்தேன்.

நெஞ்சு அடித்துக் கொள்ளவேயில்லை. இப்போது உயிரோடிருக்கிறேனா செத்துப் போனேனா என்பதே சந்தேகமாகிவிட்டது. தொடையில் கிள்ளிக் கொண்டேன்; கொஞ்சம் வலித்தது. உயிர் சிறிதளவு ஒட்டிக் கொண்டிருக்கிறதென்று தைரியம் பிறந்தது. ஆனால், புத்தகசாலையிலிருந்து வெளியே வருவதற்குக் கூட உடம்பில் பலமில்லை. மெதுவாக சுவரைப் பிடித்துக் கொண்டு வெளியே வந்து, ஒரு ஜட்கா வண்டி பிடித்து இக்கட்டுரையின் தலைப்பில் குறிப்பிட்ட டாக்டர் வீட்டுக்கு ஓட்டச் சொன்னேன்.  ....... 

** எழுதப்பட்ட ஆண்டு 1947 (அப்போதைய பதினாயிரம் ரூபாய் இந்தக் காலத்தில் குறைந்தது ஒரு கோடி ரூபாயாக இருக்கக்கூடும்!)

[இந்தப் புத்தகம் pdf வடிவம் விரைவில் நெல்லைத்தமிழன் அவர்களின் வினவி எண்ணுக்கு அனுப்பி வைக்கப்படும். வேறு யாருக்காவது வேண்டும் என்றால், என்னுடைய (kgg) வினவி எண்ணுக்கு செய்தி அனுப்பவும்] 

கே. சக்ரபாணி சென்னை 28: 

1.  ஆடிமாதம்  அம்மனுக்கு  உகந்த மாதம்.  உங்கள்  அதீத  பக்தி  காரணமாக  திடீரென்று  உங்கள்  கனவிலோ. அல்லது   நேரிலோ  ஜீனத்அம்மன்  தோன்றினால்  உங்கள் நிலமை  என்னவாக இருக்கும்?

# ஆடி மாதம் எனக்கும் உகந்ததாக மாறிவிடும். ஆனால் எனக்கு அந்தக் காலத்திலேயே சீனத்து அம்மன், சருமிலா தாகூர் இருவரையும் பிடிக்காதே! 

& ஜீனத்? ஓ ! அந்தக் கால தமன்னாவா! கனவில் தோன்றி, எல் ஆர் ஈஸ்வரி குரலில் பாட்டுப் பாடினார் என்றால், அலறி அடித்துக்கொண்டு தூக்கத்திலிருந்து எழுந்து உட்கார்ந்து கந்தசஷ்டி கவசம் படிக்க ஆரம்பிப்பேன். 








ஓய் சக்ரபாணியாரே !  ஆடி மாசத்துல கேட்கிற கேள்வியா இதெல்லாம்! 





2. ரயில்   பஸ்   விமானத்தில் பயணம் செய்து  இருப்பீர்கள்.   கப்பலில் பயணம் செய்த  அனுபவம்  உண்டா?

# ஆசை இருந்தது அதிர்ஷ்டம் இல்லை.

& படகு பயணம் மட்டுமே. மங்களூரில் செய்திருக்கிறேன். 

3. சென்னையில்  ஆட்டோவில்  மீட்டர்   போட்டு   பயணம் செய்த   நினைவு   இருக்கிறதா? 

# அம்பாசிடர் டாக்சி மினிமம் 12-8-0 ஆக  இருந்த காலத்து  நினைவுகளே கூட இன்னும் மறக்கவில்லை.  சூடு வைத்த மீட்டர் ஆட்டோவை விட வேகமாக ஓடுவதையும் பார்த்திருக்கிறேன். அப்போதெல்லாம் ஆட்டோ பயணம் எங்களுக்கு எப்போதோ மேற்கொள்ளும்  லக்ஸரியாக இருந்தது.‌ அடிச்சுப் பிடிச்சு அரசுப் பேருந்துப் பயணம்.‌ 50களில்‌ ட்ராம் !!

& பதினைந்து வருடங்களுக்கு முன் ஆட்டோவில் மீட்டர் போட்டு பயணம் செய்த ஞாபகம். 

= = = = = = = =

KGG பக்கம்: 

சென்ற வாரம் சலூன் கடையில் திடீரென்று ஞாபகம் வந்த விஷயம், முடி வெட்டிக்கொள்ள கொடுக்கவேண்டிய கட்டணம். 

நாகையில் இருந்தவரையிலும்  அதிகபட்சம் ஒரு ரூபாய் கொடுத்ததுண்டு. (குறைந்த பட்சம் இரண்டு அணா !) 

இங்கே என்ன கட்டணம் என்று தெரியவில்லை. கடைக்கு கிளம்புமுன் அண்ணனிடம் அவர் வழக்கமாக என்ன கட்டணம் கொடுப்பார் என்று கேட்டேன். 

அவர், " நான் சலூன் கடைக்குப் போய் பல மாதங்கள் ஆகிவிட்டன. இப்போதெல்லாம் ஹேண்ட் ட்ரிம்மர் உபயோகப்படுத்தி நானே முடி வெட்டிக்கொள்கிறேன் " என்றார். மேலும் அவர், " நான் சலூன் போன காலத்தில், கட்டிங் & ஷேவிங் இரண்டுக்கும் சேர்த்து ஒன்றே முக்கால் ரூபாய் கொடுப்பது வழக்கம். பத்து வருடங்களாக எனக்குத் தெரிந்த பார்பர்" என்றார். 

" இப்போ அவர் எங்கே இருக்கிறார்? " என்று கேட்டேன். 

" புரசவாக்கத்தில் கடை நடத்தினால் கட்டுப்படி ஆகவில்லை என்று அண்ணா நகருக்குப் போய்விட்டார்" என்றார். 

சரி. எப்படியும் கடையில் கட்டண விவரம் பிரிண்ட் போட்டு சுவற்றில் ஒட்டி அல்லது கண்ணாடி ஃபிரேம் போட்டு வைத்திருப்பார்கள் - அதைப் பார்த்து கட்டணம் செலுத்துவோம் என்று நினைத்து, சட்டைப்பையில் இரண்டு ரூபாய் எடுத்துக்கொண்டு சென்றிருந்தேன். 

கட்டணம் ஞாபகம் வந்தவுடன் - அந்த விவரம் எங்கே இருக்கிறது என்று கொஞ்சமாக தலையைத் திருப்பி .. ஊஹூம் - மு வெ என்னுடைய தலையை பிடிவாதமாக எதிர்த்திசையில் திருப்பி மு வெ வேலையைத் தொடர்ந்தார். 

எதிரில் இருந்த கண்ணாடியில் எனக்குப் பின் பக்க சுவரில் இருந்த அந்த கட்டண விவர நோட்டீஸ் தெரிகிறதா என்று பார்த்தேன். ஆ ! அதோ தெரிகிற .. அதற்குள் ஒரு கள்ளபார்ட் நடராஜன் போன்ற ஆசாமி அந்தக் கண்ணாடியில் பார்த்து தலை சீவிக்கொள்ள சீப்பும் கையுமாக வந்து கட்டண விவரம் காணமுடியாதபடி நின்றுகொண்டு தலை சீவிக்கொள்ள ஆரம்பித்தார். 

அவர் தலை சீவிக்கொண்டு அகலவும், மு வெ என்னுடைய சுழல் நாற்காலியைத் திருப்பவும் சரியாக இருந்தது. 

'அப்பாடி - கட்டண விவரத்தை நேராகப் பார்த்து படிக்கலாம்.' 

வட சென்னை - முடி திருத்துவோர் சங்கம் 
கட்டண விவரம். 

ஜூலை 10, 1971 முதல் திருத்தப்பட்ட கட்டண விவரம் :

கடை எண் : nnnn 

உரிமையாளர் : மு வெ கந்தசாமி 

டிஸ்கோ கட்டிங் : ரூ 12 - 00 

ஸ்டெப் கட்டிங் : ரூ 10 - 00 

இந்தக் கட்டத்தில் சுழல் நாற்காலியைத் 90 டிகிரி திருப்பிவிட்டார் மு வெ. 

மீண்டும் அந்தப் பக்கம் திரும்பும் வரை பொறுமையாக இருந்தேன். 

திரும்பியவுடன் - மேலேயிருந்து படிப்பதைவிட கீழேயிருந்து  படிக்கலாம் என்று கீழிருந்து படிக்க ஆரம்பித்தேன். 

பிரதி வாரம் செவ்வாய்க்கிழமை விடுமுறை. 

கண்டிப்பாக கடன் கிடையாது. 

சிறுவர் கட்டிங் : ரூ 1 - 75 பைசா 

பேபி கட்டிங் : ரூ 2 

கட்டிங், ஷேவிங் & ஷாம்பு : ரூ 3 - 50 பைசா 

கட்டிங் & ஷேவிங் : ரூ 2 - 75 பைசா 

ஸ்டெப் கட்டிங் : ரூ 10 -00 

அடப்பாவிகளே! என்னைப் போன்ற ஒருவன் ஹேர் கட்டிங் மட்டும் செய்துகொண்டால் - அதற்கு என்ன கட்டணம் என்று போடமாட்டீர்களா ! என்னை லோயர் மிடில் கிளாஸிலும் சேர்க்காமல், அப்பர் மிடில் கிளாஸிலும் சேர்க்காமல் இப்படி திரிசங்கு சொர்க்கவாசி ஆக்கிவிட்டீர்களே! 

மு வெ இதற்குள் ஹேர் கட்டிங் முடித்து, 'ஷேவிங் செய்யட்டுமா?' என்று பரத நாட்டிய  அபிநயம் பிடித்தவாறு கேட்டார். அந்தக் காலத்தில் நான் அமுல் பேபி போல இருப்பேன். 'எனக்குப் போய் ஷேவிங்கா ! யோவ் ! ' என்று மனதினுள் நினைத்து ' வேண்டாம் ' என்று தலையை வேகமாக  ஆட்டியபடி, சட்டைப்பையிலிருந்து இரண்டு ரூபாயை எடுத்து அவர் கையில் கொடுத்துவிட்டு, வேகமாக வெளியே செல்ல எத்தனித்தேன். 

அவர் என்னைத் தடுத்து நிறுத்தி, (போச்சுடா - மீதி பைசாவைக் கொடுக்காவிட்டால் வெளியே விடமாட்டார் போலிருக்கே என்று நான் நினைத்த நேரத்தில் ) என் கையில் ஒரு சீப்பைக் கொடுத்து, கண்ணாடியைக் கை காட்டினார். 

ஓஹோ - தலை சீவிக்கொள்ளச் சொல்கிறார். 

தலையை அவசரம் அவசரமாக ஜான் கென்னடி ஸ்டைலில் சீவிக்கொண்டு, சீப்பை அவர் வசம் ஒப்படைத்தேன். மீண்டும் வெளியே ஓட இருந்த என்னை நிப்பாட்டி என்னிடம் நாலணா காசு ஒன்றைக் கொடுத்தார். 

ஆக, என்னை அவர் சிறுவர் அணியில் சேர்த்துவிட்டார் என்று தெரிந்துகொண்டேன்! 

அடுத்தவாரம் சந்திப்போம். 

= = = = = = = = = = = = =

இப்போ பாருங்க கொஞ்சம் வித்தியாசமான ஒன்று. 

இது ஒரு மர்மக் கதை. 

வாரா வாரம் இங்கே எழுதுவேன். 

தொடர் முடிந்தவுடன் மொத்தமாகப் படித்துக்கொள்ளலாம் என்றெல்லாம் நினைக்காதீர்கள்! இது எவ்வளவு வாரம் தொடரும் என்று என்னால் இப்போது கணிக்கமுடியவில்லை. 

இதோ கதை ஆரம்பம். 

" ரீட்டா & மீட்டா " 

ஆனந்த் - ரீதிகா திருமணம் முடிந்த மறுநாள். 

இந்த ஆனந்த் - அம்பானி பையன் இல்லை; சாதாரண அருக்காணி பையன். ஏழை. ஆனால் ரீதிகா செல்வச் செழிப்புடன் பல கோடி ரூபாய் சொத்து உள்ள ஆந்திர தொழில் அதிபர் ஒருவரின் ஒரே பெண். 
கல்யாணத்திற்கு வந்திருந்த வாழ்த்துகளையும் பரிசுப் பொருட்களையும் ஒவ்வொன்றாக சாவகாசமாக பார்த்துப் படித்துக்கொண்டிருந்தான், ஆனந்த். 

ஒரு சிவப்புக் கலர் உறை - வித்தியாசமாகத் தெரிந்தது. அது என்ன என்று யோசனையுடன் அதைத் திறந்தான் ஆனந்த். 

உள்ளே சிவப்பு நிறத் தாளில் கருப்பு மையினால் எழுதப்பட்ட சில வரிகள். 

" வாழ்த்துகள் ஆன் ! 
புளியங்கொம்பா புடிச்சுட்டே! 
பழைய பேப்பர் எல்லாம் திரட்டி கடைக்குப் போட்டு, காசு பார்க்கலாம் என்று எல்லாவற்றையும் திரட்டினேன். 
அதில் நீ எழுதிய காதல் கடிதங்கள் சில இருக்கின்றன. 
நல்ல விலை கொடுத்தால் அதை உனக்கே விற்றுவிடுகிறேன்." 

BMW ரீட்டா 

' கிராதகி ' என்று முணுமுணுத்தான் ஆனந்த். 

(தொடரும்) 

= = = = = = = = = = =

39 கருத்துகள்:

  1. கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு மாடல்ல மற்றை யவை..

    தமிழ் வாழ்க..

    பதிலளிநீக்கு
  2. கற்பக கணபதி
    கனிவுடன் காக்க..
    முத்துக்குமரன்
    முன்னின்று காக்க..
    தையல் நாயகி
    தயவுடன் காக்க..
    வைத்திய நாதன்
    வந்தெதிர் காக்க..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..
    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  3. தண்செய்யும் வாழ்க.. தஞ்சையும் வாழ்க..
    தளிர் விளைவாகித்
    தமிழ் நிலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  4. சும்மாவே ஆடற பேய்க்கு யாரோ ஒருத்தர் வேப்பிலை எடுத்து அடிச்சாராம்...

    அந்த மாதிரி
    ஆன்னா அனுஷ்கா
    ஈன்னா தமன்னா ன்னு இருக்கிற நம்ம எபி கொழந்தைக் கிட்ட வந்து ஜீனத்து அம்மனப் பத்தி கேள்வியா?...

    இன்னிக்கு எத்தன பேருக்கு மந்திரிச்சு விடணுமோ தெரியலயே!...

    பதிலளிநீக்கு
  5. சித்திரச் செல்வரின் க்ஷவர புராணம் ...

    ஆகா!..

    பதிலளிநீக்கு
  6. அனைத்தும் நன்று. புதிய பகுதி - ஆஹா... நல்ல தொடக்கம்! BMW ரீட்டா - என்னவொரு பெயர்!

    பதிலளிநீக்கு
  7. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  8. //எந்த வியாதி, உடல் குறைபாடுகளைப் பற்றிப் படித்தாலும் அந்த சிம்ப்டம்ஸ், நமக்கும் இருப்பதுபோலத் தோன்றுவது ஏன்?//

    இப்படி நானும் படித்து ஏதாவது உடல் தொந்திரவு வந்தால் அப்படி இருக்குமோ, அது மாதிரி இருக்கு, இது மாதிரி இருக்கு என்று கணவரிடம் சொல்வேன். இந்த மாதிரி படிப்பதை நிறுத்து முதலில் என்று சொல்வார்கள்.

    பதிலளிநீக்கு
  9. கேள்விகளும், பதில்களும் அருமை.

    சிறுவர் அணியில் சேர்த்து மீதி நாலணா காசு திருப்பி கொடுத்து விட்டாரே! நன்றாக முடிதிருத்தம் செய்து விட்டாரா?

    ரீட்டா & மீட்டா மர்ம கதை ஆரம்பம் நன்றாக இருக்கிறது.
    ரிவால்வர் ரீட்டா மாதிரி BMW ரீட்டா !

    பதிலளிநீக்கு
  10. எந்த வியாதி, உடல் குறைபாடுகளைப் பற்றிப் படித்தாலும் அந்த சிம்ப்டம்ஸ், நமக்கும் இருப்பதுபோலத் தோன்றுவது ஏன்?//

    பயம் - Phobia!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எபியில் அப்பதிவில் கேட்ப்பட்டபோது  இதற்கான பதிலாக நான் கொடுத்திருந்ததைப் படித்தீர்களா கீதா?!!

      நீக்கு
  11. நோய்களைப் படித்துவிட்டு தமக்கும் இருப்பது என பலரும் நினைப்பதாக சொல்லீயுள்ளார்கள் நீங்கள் கூறியதுபோல பயம்தான் காரணம்.

    ஆடிமாதத்துக்கு நல்ல கலர் படங்கள் ஹா.....ஹா....

    'சிறுவர் பட்டியலில் சேர்த்துவிட்டார்" :)

    ரீட்டா & மீட்டா மர்மமா? தொடர்கிறோம்.

    பதிலளிநீக்கு
  12. கல்கி எழுதியிருப்பது சுவாரசியம்.

    நம்ம உடம்புலயே மனம் (மூளைக்குள்ளதான்!!!) என்ன பாடுபடுத்துது பாருங்க. எல்லா உறுப்புகளையும் விட கண்ணுக்குத் தெரியாத இந்த உறுப்புதான் மிகவும் அபாயகரமானது. நம் சக்தி முழுவதையும் எடுத்துக் கொண்டுவிடும் அது சேதமடைந்தால்.

    கீதா

    பதிலளிநீக்கு
  13. ஜீனத் - & பதில் சிரித்துவிட்டேன்.

    ஜீனத்? ஓ ! அந்தக் கால தமன்னாவா!//

    //அண்ணே ஆனாலும் இப்படி நெல்லைய கடுப்படிக்கலாமா!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  14. மர்மம் ஏதோ கொஞ்சம் புரியுது....ஹாஹாஹா அதாவது என்னவா இருக்கும்...என்று பார்ப்போம்...ரீட்டா மீட்டா!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மர்மத்துக்குள் மர்மம் வர இருக்கிறது. பொறுத்திருந்து பார்க்கவும்.

      நீக்கு
  15. ஆமாம் மருத்துவர் யாரேனும் பேசத் தொடங்கினால் கொஞ்சம் நேரம் கேட்கும் போது அதுவும் தொடர்ந்து கேட்கும் போது நமக்கும் வந்ததோ என்று தோன்றுவது உண்டு.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  16. ரீட்டா மீட்டா கதை நல்ல சஸ்பென்ஸ். தொடர்கிறேன்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  17. சலூன் அனுபவங்கள் கடைசியில் சிரித்துவிட்டேன். இப்பவும் கௌ அண்ணா சின்ன பையன் தானே!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  18. நோய் அறிகுறிகள் ஒன்றுக்கு மேல் பல வியாதிகளையும் குறிக்கும். உதாரணமாக தலைவலி, ஜுரம், வயிற்றுவலி, போன்ற அறிகுறிகள்.


    ​கண்டிப்பாக யாரும் இந்த வியாதி இருக்குமோ என்று கற்பனை செய்வதில்லை. அது மனோவியாதி. மனோவியாதி உள்ளவர் வியாதியை அறியமாட்டார்.

    ஒரு புதன் கேள்வி: சலூன் கடைகளுக்கு செவ்வாய் விடுமுறை ஏன்? வெள்ளி விடுமுறை கூடாதா?
    kgg சாருக்கு குஷி வந்துவிட்டது மர்ம தொடர்கதை துவங்கி கலக்குகிறார்.
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கருத்துரைக்கு நன்றி. கேள்விக்கு பதில் அளிப்போம்.

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!