செவ்வாய், 30 ஜூலை, 2024

சிறுகதை : அலமேலுவின் அட்ராசிட்டி - 1 - மஞ்சுபாஷிணி சம்பத்குமார்

 வெப்பம் முதுகில் உணர்ந்து, திரும்பி படுத்தாள் அலமேலு. அலமேலுவின் வெப்ப மூச்சு கைலாஷின் கழுத்தில் கிச்சு கிச்சு மூட்டியதும் கண் திறந்து பார்த்தான்.

" என்ன முழிச்சிட்டியா? இன்னும் டைம் இருக்கே. தூங்க வேண்டியது தானே" என்று வாத்ஸல்யத்துடன் அணைத்தான் கைலாஷ்.

" இல்லங்க, தூக்கம் வரல. நான் கிளம்பினப்பின்னே நீங்க அழக்கூடாது. போன வருடம் நீங்க ரொம்ப அழுதீங்க ஏர்ப்போர்ட்லயே" சொல்லும்போதே இருவருக்கும் கண் கலங்கியது.

" ரொம்ப தனியான உணர்வு 
அலமேலு.  ஒரு மாதம் இவ்வளவு வேகமா போகும்னு நான் நினைக்கல"

"எனக்குமே நாட்கள் போன வேகத்தைப்பார்த்தால் மலைப்பா இருக்கு. அங்க போனதும் வேலையில் மூழ்கி எல்லாம் மறக்கும் நிலை" பெருமூச்சு விட்டாள் 
அலமேலு.

அலாரம் மெலிதாக அடிக்க துவங்கியது.

இருவரும் எழுந்து பேக் செய்த லக்கேஜ் இன்னுமொரு முறை சரி பார்த்து விட்டு கிளம்ப தயாரானார்கள்.

சாமி படம் முன்பு கும்பிட்டு விட்டு காரில் ஏர்ப்போர்ட் கிளம்பினார்கள் இருவரும்.


" காலையில ட்ராஃபிக் இல்லாமல் இருப்பது ஒரு நிம்மதி இல்லங்க?"

"ம்" கைலாஷின் மனம் சோக நிலைக்கு போனது.

அலமேலுவுக்கு கைலாஷின் சோகம் தொற்றுமுன்னர் ஏர்ப்போர்ட் சேர்ந்து,

"நான் கார் பார்க் பண்ணிவிட்டு வருகிறேன்" என்று 
அலமேலுவின் பதிலுக்கு காத்திராமல் காரை விரட்டினான் கைலாஷ்.

அலமேலு மலங்க ஒரு நொடி பார்த்துவிட்டு, சட்டென அங்கிருந்த ட்ராலியை இழுத்து பெட்டியை நகர்த்தினாள் அருகே.

கைலாஷ் வண்டி நிறுத்திவிட்டு ஓடி வந்து பெட்டிகளை ட்ராலியில் அடுக்கிவிட்டு, "ஜாக்கிரதையா பார்த்துக்கோ இதோ வந்துடறேன்" என்று காரை நோக்கி ஓடினான்.

'சரி' என்ற 
அலமேலுவின் ஒற்றைச்சொல் காற்றில் கரைந்தது.

வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்றதில் சிறிது நேரம் பிரிவென்னும் சோகத்தை மறந்தாள் 
அலமேலு.

நேரம் ஓடிக்கொண்டே இருந்தது. கைலாஷ் திரும்பின பாடில்லை.

நேரம் ஆக ஆக 
அலமேலுவுக்கு டென்ஷன் ஆனது. '3 மணி நேரம் முன்பு போர்டிங் போடனுமே' என்று தவித்து இங்கும் அங்கும் தேடினாள் கைலாஷை.

இந்தியா வரும்போதெல்லாம் 
அலமேலுவிடம் இந்திய போன் இல்லாததால், அவசரத்துக்கு யாரையாச்சும் கூப்பிடலாம் என்றாலும் முடியாத அவஸ்தை. அதை இப்போது நன்றாகவே உணர்ந்தாள்.

அடுத்த முறை இந்தியா வரும்போது கண்டிப்பாக இந்திய சிம் ஒன்று வாங்கித்தர சொல்லி கைலாஷிடம் கேட்க வேண்டும் என்று நினைத்தபோது கைலாஷ் வந்து சேர்ந்தான்.

"என்னங்க இவ்ளோ லேட்? எனக்கு பயமாகிவிட்டது நீங்க வர நேரம் ஆனதும்" என்றாள் 
அலமேலு பதட்டத்துடன்.

"பதட்டப்படாதே, ஆரோக்கியம் கெடும். பார்க் பண்ணின இடத்தில், வேறு இடத்தில் மாற்றியாகிவிட்டது என்று சொன்னதால் வெகு தூரத்தில் பார்க் பண்ணி விட்டு வர நேரமாகிவிட்டது. பத்திரமாக பார்த்து போ. லக்கேஜ் ஸ்கான்ல போடும்போதும் போர்டிங்ல போடும்போதும் அங்கே இருக்கும் ஹெல்ப்பர்கள் உதவுவார்கள் கவலைப்படாதே. இமிக்ரேஷன் தாண்டினதும் யாரிடமாவது
 போன் வாங்கி நீ பத்திரமாக இருப்பதை எனக்கு சொல்லு"  தொண்டை கமறலுடன் கைலாஷ்.

கண்ணீர் முட்டியது இருவருக்கும்.

கைலாஷ் மெல்ல 
அலமேலுவை அணைத்து, விட மனமில்லாமல் கண்ணீர் விட்டான்.

போர்டிங், இமிக்ரேஷன் இந்த டென்ஷனுடன், கைலாஷை பிரியும் டென்ஷனும் சேர, கண் கலங்கியது 
அலமேலுவுக்கும்.

"சரி சரி நேரமாகிறது கிளம்பு....  நான் இங்கிருந்து பார்த்துக்கொண்டே தான் இருப்பேன். கவலைப்படாதே. நீ இமிக்ரேஷன் கடந்து போனதும் உன்னிடமிருந்து 
போன் வந்தப்பின் நான் கிளம்புவேன்"  என்று உறுதி கூறி, அலமேலுவை அனுப்பி வைத்தான்.

ஒரு மாத சந்தோஷ அலை 'பட்'டென வடிந்தது போல, தன் பலமெல்லாம் குறைந்து தளர்ந்தது போல, தனியாக நிற்பதை நினைத்து கண் கலங்கினான்.

ட்ராலியை தள்ளிக்கொண்டு சென்ற 
அலமேலுவுக்கு கைலாஷை பிரிந்த துக்கம் தொடுமுன்னர் 'கௌண்டர் எங்கே' என்ற டென்ஷன் தோளில் தொற்றியது.

"சார் குவைத் ஏர்வேஸ் கௌண்டர் எங்கே" என்று அங்கே இருந்த ஒரு பணியாளரிடம் கேட்டதும், எதிரில் கைகாட்டினார்.

ட்ராலி ஒரு பக்கம், அதை தள்ள முடியாமல் அதனோடு ஓடிக்கொண்டிருக்கும் டென்ஷனும் 
அலமேலுவை பாடாய் படுத்தித் தொடர்ந்தது.

வரிசையில் நின்றுக்கொண்டு, தூரமாக தெரிந்த கண்ணாடியில் கைலாஷின்  கை அசைப்பை கண்டு நிம்மதியானது 
அலமேலுவுக்கு.

போர்டிங் கௌண்டரில் பாஸ்போர்ட், குவைத் சிவில் ஐடி (நம்மூர் ஆதார் கார்ட் போல குவைத்தில் இருப்பது) கொடுத்ததும் கேள்விக்கணை தொடங்கியது.

எங்க உங்க டெஸ்டினேஷன்?

குவைத்

எப்போ வந்தீங்க இந்தியாவுக்கு?

மே 30 கிளம்பி, மே 31 இந்தியா வந்து சேர்ந்தேன்

லக்கேஜ் பேக் பண்ணியது யார் மேடம்?

அதிசயமாக தலை உயர்த்தி பார்த்து, 'இதெல்லாமா கேட்பாங்க?' என்று ஆச்சர்ய விழிகளுடன் "நானும் என் வீட்டுக்காரரும் தான்" என்றாள்.

ஒவ்வொரு முறை இந்தியா வரும்போதும் ஏதாவது ஒரு மாற்றம் நடந்துக்கொண்டு தான் இருக்கிறது என்று நினைத்து பெருமூச்சு விட்டாள்.

"ஹேண்ட் லக்கேஜ் வைங்க முதலில்" என்றார் கௌண்டரில் இருந்தவர்.

இரண்டாம் முறை ஆச்சர்ய மலங்கல் முழித்துப்பார்த்ததும்,

"என்ன மேடம் ஓவர் வெயிட்டா?"

"இல்லையே. இதோ வைக்கிறேன் பாருங்க" என்று வைத்தாள்.

"ஓக்கே."

அருகில் இருந்த பணியாளரை அழைத்து, பெரிய பெட்டிகள் இரண்டையும் எடுத்து வைக்கச் சொன்னார்.

திருப்தியாக தலை அசைத்துவிட்டு போர்டிங் பாஸும் டிக்கெட்டும், பாஸ்போர்ட், சிவில் ஐடி எல்லாம் திருப்பி கொடுத்தார் கௌண்டரில் இருந்தவர்.

எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு, ஆளை விட்டால் போதும் என்று இமிக்ரேஷன் கௌண்டருக்கு ஓடினாள் 
அலமேலு.

வெளியே இருந்து பார்த்துக்கொண்டிருந்த கைலாஷுக்கு கவலை அதிகமாகியது.

'என்னாவாயிற்று, கேட்கலாம்' என்றால் 
அலமேலுவிடம் போன் இல்லை.

ஹேண்ட் லக்கேஜ், ஒரு பெரிய கவர், ஹேண்ட் பேக், லாப்டாப் பேக் இதெல்லாம் போதாதென்று நெக் பில்லோ. எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு இமிக்ரேஷன் கௌண்டர் செல்லும் முன் எல்லா பொருட்கள் பேக், கையில் போட்டிருக்கும் வளையல், பர்ஸ், எல்லாம் எடுத்து அங்கு ஸ்கானில் போடச்சொன்னார் அங்கிருந்த ஒருவர்.

எல்லாவற்றையும் போட்டுவிட்டு, பட்டிக்காட்டுப்பெண் போல மூன்று முறைக்கு மேலே "என் லாப்டாப் பத்திரமா இருக்கும்ல? என்று கேட்டு அவர் பிபியை எகிற வைத்து நகர்ந்தாள் 
அலமேலு.

இமிக்ரேஷன் கழிந்ததும், கைலாஷ் சொன்னது நினைவுக்கு வந்தது. "இமிக்ரேஷன் முடிந்ததும், பராக்கு பார்க்காமல், பாஸ்போர்ட், போர்டிங் பாஸ், சிவில் ஐடி எல்லாவற்றையும் ஹேண்ட் பேக்ல வை"

துரிதமாக போர்டிங் பாஸ், பாஸ்போர்ட், சிவில் ஐடி எல்லாவற்றையும் எடுத்து ஹேண்ட் பேகுக்கே மூச்சு திணறும் அளவுக்கு திணித்தாள்.

ஹேண்ட் பேக் உயிர் இருந்திருந்தால் 
 பேக்கில் இருக்கும் எல்லாவற்றையும் வெளியே துப்பி இருந்திருக்கும்.  நாக்கு வெளி தள்ளி உயிரை விட்டிருக்கும் இல்லையென்றால்!

போர்டிங் பாஸ் நீளமாக இருந்ததால் ஹேண்ட் பேகில் திணிக்க முடியவில்லை. பாஸ்போர்ட், சிவில் ஐடியை திணித்துவிட்டு போர்டிங் பாஸையும் டிக்கெட்டையும் கையிலேயே வைத்துக்கொண்டு 'செக்யூரிட்டி செக்' உள்ளே சென்று அங்கிருந்த மேஜை மேல் போர்டிங் பாஸ், டிக்கெட் வைத்துவிட்டு, அங்கே நின்று இருந்த பணியாளருக்கு ஒத்துழைத்துவிட்டு செக்யூரிட்டி கடந்து வெளியே வந்தாள்.

வெளியே வந்ததும் ஸ்கானில் வந்த அத்தனை பொருட்களையும் பொறுமையாக (பெருமையாக) எண்ணி எடுத்து சரியாக வைத்து மூடி ('அட, 
அலமேலுவுக்கு பொறுப்பு வந்திருச்சுப்பா') கீழ் மாடிக்கு எஸ்கலேட்டரில் ('பரவாயில்லையே... பயமே இல்லாம இத்தனையும் தூக்கிக்கொண்டு, யாரையுமே உதவி கேட்காமல்... சபாஷ் அலமேலு') இறங்கி கேட் நம்பரையும் பார்த்து ( 'ஸ்ஸ்ஸப்பா புல்லரிக்குது. இதெல்லாம் கைலாஷ் பார்த்திருந்திருக்கணும். அலமேலுவா இது என்று ஆச்சர்யப்பட்டிருப்பான்') நினைவலைகளின் ஓட்டத்தில் அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தாள்.

யாரிடம் ஃபோன் கேட்பது என்று தலையை திருப்பி அந்தப் பக்கமும் இந்தப் பக்கமும் பார்த்தாள். ஒரு ஓரமாக உட்கார்ந்திருந்த ஒரு ஆளிடம் சென்று "எங்க வீட்டுக்காரருக்கு ஃபோன் செய்யனும், நம்பர் தரேன் பண்றீங்களா ப்ளீஸ்" ('கைலாஷிடம் என்றாவது இத்தனை பவ்யமாக பேசியதுண்டா?' - அலமேலுவின் மனசாட்சி இடித்தது. அதை மெல்ல தள்ளிவிட்டு) நம்பர் தர ஆரம்பித்தாள். தன் நம்பரையே ஒழுங்காக நினைவு வைக்காத அடி மண்டூக 
அலமேலு கைலாஷ் நம்பரை தங்கு தடையில்லாமல் சொல்லிக்கொண்டிருக்க, ஜாக்கிரதை பேர்வழி ஃபோனை ஸ்பீக்கரில் வைத்து கொடுத்தான்.

தன் நேர்மையை நிரூபிக்க, 
அலமேலுவும் ஸ்பீக்கரிலேயே பேச ஆரம்பித்தாள் "என்னங்க, போர்டிங் முடிஞ்சுது, இமிக்ரேஷன் முடிஞ்சுது. எல்லாம் பர்ஃபெக்டாக நடந்தது. நானும் எல்லாவற்றையும் பத்திரமாக எண்ணி எடுத்தும் வெச்சுக்கிட்டேன். நீங்க பத்திரமாக போய் வாங்க. நான் குவைத் சேர்ந்ததும் ப்ராத்விக் உங்களுக்கு போன் செய்வான்."  பிரிவை விட கைலாஷுக்கு அலமேலு குவைத் சென்று பத்திரமாக சேரவேண்டுமே என்ற பயம்.

ஃபோன் பேசி முடித்து, நன்றி சொல்லி, போனை திருப்பி கொடுத்துவிட்டு அங்கிருந்த இருக்கையில் அமர்ந்து, ஹேண்ட் லக்கேஜுக்கு கொண்டு வந்த பூட்டை பூட்டலாம் என்று பூட்டிவிட்டு, கவரில் வைத்திருந்த பட்டு புடவையை லாப்டாப் பேகில் வைக்க திறக்கும் போது, சீட் எண் என்னவென்று பார்க்க தேடும்போது.....  

போர்டிங் பாஸ் காணவில்லை.

அலமேலுவுக்கு தலை சுற்ற ஆரம்பித்துவிட்டது. பதட்டம் தலைவிரித்து பேயாட்டம் போட்டது. அங்கிருந்த ஒவ்வொருவரிடமும் போய் "நான் போர்டிங் பாஸ் தொலைச்சுட்டேன் எங்க விட்டேன்னே தெரியல. என்ன செய்வது"  வார்த்தைகள் குளற கேட்டாள் அலமேலு.

அவளை பரிதாபமாக பார்த்துவிட்டு எல்லோரும் முகத்தை திருப்பிக்கொண்டு அவரவர் வேலையை கவனிக்க, ஒரு நொடி என்ன செய்வதென்று தெரியாமல் முழித்துவிட்டு, பின்னே கொண்டு வந்த அத்தனை பைகளையும் தேட ஆரம்பித்தாள். கிடைக்கவில்லை. நேரம் வேகமாக நகர ஆரம்பித்தது.

ஸ்கான் போட்ட இடத்தில் போட்டுட்டோமா என்று யோசித்து திரும்ப அதே இடத்துக்கு எல்லாவற்றையும் தூக்கிக்கொண்டு 
ஓட முடியாமல் மூச்சிறைக்க ஓடினாள்.  அங்கிருந்த ஒரு ஊழியர், "அம்மா ஓடாதீங்க, லிஃப்ட் இருக்கு பாருங்க, அதில் ஏறி போங்க" என்றார்.

"நன்றிங்க"  என்று சொல்லிவிட்டு லிஃப்ட் ஏறி என்ன செய்வது என்று பேந்தபேந்த  முழித்தாள் 
அலமேலு.

அதே ஊழியர் உள்ளே வந்து 'என்ன விஷயம்?' என்று கேட்க, அவரிடமும் 
அலமேலு உளறி கிளறி சொல்லி முடிக்க,

"ஒண்ணும் கவலைப்படாதீங்கம்மா, அங்கேயே தான் இருக்கும். தேடி பாருங்க" ஆறுதல் சொன்னார்.

கை கூப்பிவிட்டு ஸ்கான் வைத்த இடத்தில் எல்லாம் பேய் போல தேடினாள். அங்கும் இங்கும் ஓடினாள். பதட்டம் அதிகமாக கைகள் நடுங்க ஆரம்பித்தது.

அங்கிருந்த ஏர்போர்ட் செக்யூரிட்டி இரண்டு பேர் வந்து என்னவென்று விசாரிக்க, மறுபடியும் 
அலமேலு சொல்லி முடிக்க, 'எந்த செக்யூரிட்டி கேபின்' என்று ஒரு செக்கியூரிட்டி கேட்க, அலமேலு மறுபடி "ஙே" என்று விழித்தாள்.

ஓடி அங்கிருந்த எல்லாவற்றையும் கைக்காட்டினாள்.

'இன்று நம்ம நாள் நரகம்' என்று கேலண்டரை பார்த்த ஞாபகம் என்று தலையில் லேசாக அடித்துக்கொண்டாள்.  

அங்கிருந்த செக்யூரிட்டி, எல்லாவற்றிலும் தேடி எங்குமே இல்லை இல்லை என்று பீதியூட்டினான்.

செக்யூரிட்டிகள் கும்பலாக சேர, 
அலமேலு குரலெடுத்து அழ ஆரம்பித்து விட்டாள்.

அலமேலுவிடம் கேள்வி கேட்க அருகே வந்தவர்கள், அலமேலுவின் ஆலாபனை (நாராசமான குரலில்) கேட்டு எல்லோரும் தூர விலக, ஒருவர் மட்டும் அருகே வந்து என்னவென்று விசாரிக்க, மறுபடி இவள் அவரிடமும் சொல்ல,

அவர் பொறுமையாக அங்கே நின்றுக்கொண்டிருந்த பெண் செக்யூரிட்டி நாலு பேரையும் அழைத்து,  'இதில் யார் உங்களை செக் செய்தது, சொல்லுங்க' என்றார்.

அலமேலு எங்கே முகம் பார்த்தாள்?  'பதட்டத்துடனும் பொருட்கள் ஸ்கான்ல இருந்து எடுக்கணுமே என்ற நினைவுடனும் இருந்ததால் நினைவுக்கு வரவில்லை' என்றாள்.

பெண் செக்யூரிட்டிகள் இது போல் ஆயிரம் கேஸ் ஒரு நாளைக்கு பார்ப்பார்கள் போல. ஒன்றுமே நடவாதது போல் நகர்ந்தனர்.

அலமேலு அழுவதை நிறுத்தவில்லை, கண்ணீரை குறைக்கவில்லை, குரலோ கர்ண கடூரம்.

அந்த ஒருவர் மட்டும் 
அலமேலு அருகே வந்து அலமேலுவின் பேக் எல்லாம் எடுத்து அவரே செக் பண்ணும்போது அலமேலுவுக்கு நினைவு வந்துவிட்டது. அந்த மூலை முதல் கேபின்ல தான் செக் செய்தபோது, அங்கிருந்த லெட்ஜர் மேல் வைத்தை சொன்னாள். அங்கே போய் மேலோட்டமாக பார்த்துவிட்டு எல்லோரும் இல்லை என்று ஒரே பாட்டாக பாடினார்கள்.

அந்த நல்லவர், 
அலமேலுவிடம் சொன்னார் "அம்மா, கவலைப்படாதீங்க, நீங்க இமிக்ரேஷன் முடிச்சுட்டதால், டூப்ளிகேட் போர்டிங் பாஸ் போட்டு தருவாங்க, கீழே போய் கேளுங்க" என்றார். (பொறுமை டெசிபல் கொஞ்சமும் குறையாமல்...  அவருக்கு கோயில் கட்டி தான் கும்பிடணும்)

அலமேலு உஷாராச்சே.... "இங்க ப்ளைட்ல கேட்பாங்க, குவைத்லயும் கேட்பாங்க. நான் போமாட்டேன். எனக்கு என் போர்டிங் பாஸ் வேணும்" என்னமோ காணாமல் போன பொம்மை வேணும்னு அடம்பிடிப்பது போல உறுதியாக (அழுகை குறையாமல்) நிற்க, 

வருவோர் போவோர் எல்லோரும் என்னவென்று கேட்க, அலமேலு விவரம் சொல்ல, வந்தவர் எல்லாம் அலமேலுவின் ஹேண்ட் பேக் லாப்டாப் கேப் எல்லாம் செக் செய்ய, ஹேண்ட் பேக்குக்கு உயிர் இருந்திருந்தால், போடி என்று ஓடி போயிருக்கும்.

கடைசியில் எல்லோரும் பார்த்த டிராமா போதும் நம்ம வேலை பார்ப்போம் என்று நகர, அந்த நல்லவரை பரிதாபமாக பார்த்தாள் 
அலமேலு.

அந்த நல்லவர், "கவலைப்படாதீங்கம்மா, உங்களுக்கு டூப்ளிகேட் போர்டிங் பாஸ் நானே வாங்கி தருகிறேன்" என்று சொல்லி (பெரிய பதவியில் இருப்பவர் போல, தனி ரூம், ஃபோன் எல்லாம் இருக்கே) ஃபோன் செய்து யாருக்கோ என்னவோ சொல்ல, (ஹிந்தியில்தான்) 5 நிமிடத்தில் கௌண்டரில் ஆயிரம் கேள்வி கேட்ட அபூர்வ சிந்தாமணி வந்து என்னவென்று கேட்க, 
அலமேலுவும் மறுபடியும் முதலில் இருந்து பரோட்டா சாப்பிட, (ச்சும்மா ஒரு உதாரணத்துக்கு) அவரும் ஹேண்ட் பேக், லாப்டாப் பேக் எல்லாம் கொட்டி கவிழ்த்து தேட ஆரம்பிக்க, 'யாரும்மா அலமேலு கைலாஷ் ?  இங்கே இருக்கு போர்டிங் பாஸ்' என்று சொல்ல,

கண்ணில் வரும் கண்ணீர் துடைக்காமல், காணாமல் போன குழந்தையை கண்ட தாய் போல் இரண்டு கைகளையும் விரித்துக்கொண்டு ஓடினாள் 
அலமேலு.  போர்டிங் பாஸ் வாங்கி பார்த்துவிட்டு, டிக்கெட் என்று நாக்கு நுனியில் வந்த வார்த்தையை மென்று முழுங்கி விட்டு, இன்னும் அதிகமான சத்தத்துடன் (ஆனந்த கண்ணீராம்) அழுது எல்லோருக்கும் நன்றி சொல்லி, நல்லவரை தேடினால் கிடைக்கவில்லை. அட ஒரு நொடியில் சட்டென எங்கே மறைந்து போனார் அவர்? என்று தேடி தேடி அலுத்து பின்னர் பேக் எல்லாம் பொறுக்கிக்கொண்டு நிமிர்ந்த போது டிக்கெட்டையும் கொண்டு வந்து கொடுத்தார் மற்றவர். நல்லவரை மட்டும் காணவே இல்லை கடைசி வரை.

எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு கேட் அருகே வந்து அமர்ந்தாள் 
அலமேலு. சூறாவளி புயல் வந்து அடங்கியது போலிருந்தது.

இது எதுவும் அறியாது கைலாஷ் வீட்டை நோக்கி கலங்கிய மனதுடன் கண்ணீர் கண்களுடன் காரை ஓட்டிக்கொண்டிருந்தான்.

ப்ளைட்டில் ஏறி அமர்ந்ததும், செல்ஃபி எடுத்துக்கொண்டிருந்த ஒரு ஆளை பார்த்ததும், 
அலமேலுவும் ஒரு செல்ஃபி எடுத்தாள். அழுத முகத்துடன் கண்றாவியாக இருந்தது.

இறங்கும் நேரம் வந்தபோது, ஹேண்ட் லக்கேஜ் இறக்க ஒருவரிடம் உதவி கேட்டபோது அவர் எடுத்து கொடுத்துவிட்டு, தன் மனைவியிடம், "ஒரு பெண் போர்டிங் பாஸ் தொலைத்துவிட்டு இங்கும் அங்கும் ஓடிக்கொண்டிருந்தார் கிடைத்ததோ இல்லையோ...."  என்றார்.

அலமேலு சட்டென திரும்பி, "நான்தான்.... நான்தான்..... கிடைச்சிருச்சு" என்றாள்...

"ஐயோ பாவம்..   "

"அதுதான்  பாஸ் கிடைச்சு, நானே இங்கேயே வந்துட்டேனே..."

"அட உங்களை சொல்லலம்மா, இன்னைக்கு ஏர்ப்போர்ட்ல இருந்த எல்லார் BP யையும் ஏற்றி விட்டீங்களே...  ஐயோ பாவம் அவங்கெல்லாம் என்றேன்" என்றாரே பார்ப்போம்.

இப்படியாக 
அலமேலுவின் ஒரு அட்ராசிட்டி ஏர்ப்போர்ட்டில் முடிந்தது...

ஆனால் 
அலமேலுவின் அட்ராசிட்டி தொடரும்......

53 கருத்துகள்:

  1. ஹை! மஞ்சு! வாங்க வாங்க ரொம்ப வருஷம் ஆச்சு உங்களை பாத்து!! கண்டிப்பா கதைல இடையிடையே புன்சிரிக்க வைக்கும் வரிகள் இருக்கும்!!!! முழுசும் வாசித்துவிட்டு வருகிறேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா கீதா...

      சௌக்கியமாப்பா?

      ஆமாம் பல வருடங்கள் ஆகிவிட்டது..

      நீக்கு
  2. ஹேண்ட் பேக் உயிர் இருந்திருந்தால் பேக்கில் இருக்கும் எல்லாவற்றையும் வெளியே துப்பி இருந்திருக்கும். நாக்கு வெளி தள்ளி உயிரை விட்டிருக்கும் இல்லையென்றால்!//

    ஹாஹாஹா முன்னாடி எல்லாம் பயணம் என்றால் என் ஹேன்ட்பேக் நிறைமாத கர்ப்பிணி போலதான் இருக்கும்!! அதாவது லக்கேஜை குறைக்கறேனாம்.

    இப்ப ரொம்ப நல்ல பிள்ளையா பயணத்துல அதுவும் health conscious ஆ - ஆமா பேக் பிஞ்சுருச்சுனா - ஒல்லியாதான் இருக்கும்!

    கீதா

    பதிலளிநீக்கு
  3. நிறைய இடங்களில் சிரித்துவிட்டேன்! மஞ்சு!

    நல்லா எழுதியிருக்கீங்க. அலமேலுவின் அடுத்த அட்ராசிட்டிஸ் கு வெயிட்டிங்க்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கொஞ்சம் இல்ல.. நிறைய பயமாக இருந்தது..

      நிறைய வருடங்கள் எழுதாமல் எழுத ஆரம்பித்ததால் முன்பு போல வேகம் இல்லை சிந்திப்பதிலும், எழுதுவதிலும் டைப் அடிப்பதிலும்...

      முயற்சிக்கிறேன்பா. அன்பு நன்றிகள் கீதா.. உங்கள் அன்பின் வெளிப்பாடு இங்கே நீங்கள் இட்ட கருத்தில் தெரிகிறது...

      நீக்கு
  4. அது சரி, எல்லா பேகையும் தலைகீழா கவுத்து தேடினதுக்கப்புறம் அலமேலு எல்லாத்தையும் நினைவா பேக்ல வைத்துக் கொண்டாள்தானே!! இல்லைனா அதுலயும் ஏதாச்சும் மிஸ் ஆகி ஃப்ளைட்ல நினைவு வந்து எல்லார் பிபியும் எகிற வைச்சு இப்பவே ஃப்ளைட்டை நிறுத்துங்கன்னு சொல்லாம இருக்கணும்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குறிப்பா அந்தப் பட்டுப் புடவை!!

      கீதா

      நீக்கு
    2. ஹாஹா.. என்னை சிரிக்க வைத்த வரிகள்... :)

      நான் டென்ஷன் ஆனாலே எல்லோர் பிபியும் எகிற ஆரம்பித்து விடும் வீட்டிலேயே... பாவம் எல்லோரும்...

      ஆமாம் பட்டு புடவை பத்திரமா வந்திருச்சு என்னுடனே... லாப்டாப் பேக் ல....

      நீக்கு
  5. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  6. மஞ்சு நலமா? எப்படி இருக்கிறீர்கள்? வருடங்கள் பல ஆகி விட்டதே!

    //அலமேலுவா இது என்று ஆச்சர்யப்பட்டிருப்பான்') நினைவலைகளின் ஓட்டத்தில் அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தாள்.//

    ஆஹா! சமத்து என்று நினைத்தேன். அதற்குள்
    போர்டிங் பாஸ் காணவில்லை.என்று பீதியை கிளப்பி விட்டீர்கள்.

    //நல்லவரை தேடினால் கிடைக்கவில்லை. அட ஒரு நொடியில் சட்டென எங்கே மறைந்து போனார் அவர்?//

    நல்லவர்கள் இறைவன் போன்றவர்கள் சட்டென்று மறைந்து போனார்.

    அலமேலுவின் அட்ராசிட்டி நன்றாக இருக்கிறது. தனிமை பயணம் கொடுத்த பீதிகள், பிறகு மகிழ்ச்சி தொடரட்டும் அலமேலுவின் அட்ராசிட்டி. தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எழுதி பல வருடங்கள் ஆனதால்... எனக்கு டச் விட்டுப்போச்சு... தயங்கி தயங்கி ஒவ்வொரு வார்த்தையாக டைப் செய்வதற்குள் மூச்சு முட்டுகிறதுப்பா... ஆமாம் பல வருடங்கள் ஆகிவிட்டதுப்பா... சௌக்கியமாப்பா? அன்பு நிறை நன்றிகள்...

      நீக்கு
  7. பெயர் குழப்பம் ஏற்படுகிறது. அலமேலு ஏன் கைலாஷ் பைரவியின் பாஸை வாங்க வேண்டும்.பாஸில் அலமேலுவின் பெயரல்லவா இருக்கவேண்டும்.
    //, 'யாருப்பா கைலாஷ் பைரவி? இங்கே இருக்கு போர்டிங் பாஸ்' என்று சொல்ல,

    ​//கண்ணில் வரும் கண்ணீர் துடைக்காமல், காணாமல் போன குழந்தையை கண்ட தாய் போல் இரண்டு கைகளையும் விரித்துக்கொண்டு ஓடினாள் அலமேலு. போர்டிங் பாஸ் வாங்கி​//

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லையே சரியாய்த்தானே இருக்கிறது!!

      நீக்கு
    2. அச்சச்சோ நக்கீரர்.... அன்பு வணக்கங்கள்...ராமா.... காப்பாற்றிவிட்டீர்கள் பெயர் திருத்தம் செய்து... :)

      நீக்கு
  8. ஓ சரி செய்து விட்டீர்களா? இதையும் செய்யுங்கள்: "யாரம்மா கைலாஷ் அலமேலு"
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 'யாருப்பா' என்று இருந்தாலும் தப்பில்லை என்றாலும் திருத்தி விட்டேன்... ஹிஹிஹி...

      நீக்கு
    2. பகவானே திருத்தச்சொன்னவருக்கும், திருத்தினவருக்கும் அன்பு நிறை நன்றிகள்பா..

      நீக்கு
  9. எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  10. வணக்கம் மேடம் நலமா ? இது உங்களுடைய அட்ராசிட்டி ஆரம்பமா ? அதுவும் தொடரும்..... சூப்பர் இடையிடையே தங்களது நகைச்சுவை நன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரி கைலாஷ் இந்தியாவில் அலமேலு குவைத்திலா...?
      (குவைத் அட்ரஸ் தரமுடியுமா?)

      இப்படி தெள்ளுமணியாக இருக்கும் அலமேலு குவைத்தில் குப்பை கொட்டுவது எப்படி ?

      ஒருவேளை உங்களுடைய அட்ரா சிட்டியில் விபரம் விசாலாட்சியாக செதுக்கப்படலாம்....

      தொடர்ந்து வருகிறேன் ஆட்டுக்கார அலமேலுவை...

      அபுதாபியிலிருந்து தேவகோட்டை கில்லர்ஜி.

      நீக்கு
    2. அன்பு வணக்கங்கள்பா... சௌக்கியம்... நீங்கள் சௌக்கியமாப்பா? அன்பு நன்றிகள்...

      நீக்கு
  11. ஆஹா... நீண்ட இடைவெளிக்குப் பிறகு மஞ்சுபாஷிணி அவர்களின் ஒரு சிறுகதை... மகிழ்ச்சியாக இருக்கிறது. அவரிடமிருந்து ஒரு கதையைப் பெற்றி பகிர்ந்து கொண்டிருக்கும் எங்கள் பிளாக் குழுவினருக்கும் நன்றி.

    கதை நன்றாக இருக்கிறது. தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பு வணக்கங்கள் வெங்கட்... சந்தோஷமாக இருக்கிறது.. எல்லோரும் என்னை இத்தனை வருடங்கள் எழுதாமல் இருந்தாலும் நினைவில் வைத்திருப்பதற்கு.. அன்பு நன்றிகள்...

      நீக்கு
  12. /// ஆனால் அலமேலுவின் அட்ராசிட்டி தொடரும்... ///


    ஆகா...

    பதிலளிநீக்கு
  13. இடையிடையே நகைச்சுவை...

    புன்னகை ததும்புகின்றது...

    தொடரட்டும்...
    வாழ்க நலம்...

    பதிலளிநீக்கு
  14. ஹா...ஹா...இப்படி ஒரு அலமேலு. தொடருங்கள்......

    பதிலளிநீக்கு
  15. absurdity என்பதை atrocity ஆக்கி விட்டார் ஆசிரியர்!
    // அலமேலுவின் அட்ராசிட்டி தொடரும்......//

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடுக்கடுக்கான அபத்தங்களை அட்ராசிட்டியாக்கிய அலமேலுவா இருக்குமோ?

      அன்பு நிறை நன்றிகள்...

      நீக்கு
  16. வாங்க, மஞ்சு சகோ.
    உங்களை சென்ற 12-ம்
    தேதி சென்னையில்
    சந்தோஷத்துடன் பார்த்து வாழ்த்தியது. இன்று அமெரிக்காவிலிருந்து கொண்டு எபி--யில் உங்கள் எழுத்தை வாசிப்பேன் என்பது நானே எதிர்பாராதது.
    வாழ்த்துக்கள், சகோதரி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கும் சந்தோஷம் உங்களை சந்தித்தது... உங்களிடம் ஆசிப்பெற்றது...

      அன்பு நிறை நன்றிகள்...

      நீக்கு
  17. கதையின் ஆரம்பம் அட்டகாசம். நேற்று அனுபவித்த விமான தள சடங்குகளை இன்று எழுத்தில் பார்த்ததில்
    புன்னகை என் அனுமதிக்குக் காத்திராமல் பூத்தது.
    அடுத்த பகுதியில் கதை வேகமெடுக்க வேண்டும்
    என்ற நியாயமான எதிர்பார்ப்பு. தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
  18. விமான பயணிகள் அனுபவிக்கும் சங்கடங்களை சுவாரஸ்யமான கதையாக்கியிருக்கும் திறமைக்கு பாராட்டுகள்.
    நான் ஒடிஸா சென்ற போது செக்யூரிட்டி செக்அப்பில் அவிழ்த்து போட்ட என் ஸ்மார்ட் வாட்ச் வராமல் தேடினேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பு வணக்கங்களும் நன்றிகளும்... ஸ்மார்ட் வாட்ச் கிடைத்ததா?

      நீக்கு
  19. மஞ்சு சகோ..

    23 பின்னூட்டம் வந்திருக்கா? அதை 46 ஆக்கி அதோட ஆரம்ப இரண்டு வரி பின்னூட்டம் 15-ஐ நாமே போட்டு மொத்த பின்னூட்டம் 61-ன்னு காட்டறது தான் -----

    செவ்வாய் ஸ்டைலு.

    அடுத்த பகுதிக்கு உங்க கருத்தையாவது பின்னூட்ட ஜோதியில் கலந்திடுங்க.. சரியா?..

    பதிலளிநீக்கு
  20. ஸ்ரீராமின் உதவியால் தான் இத்தனையும் கடந்து வந்து எழுத முடிந்தது... ஸ்ரீராம் உங்களுக்கு என் மனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா.. எங்கள் ப்ளாக் அன்பர்கள் எல்லோருக்குமே என் அன்பு வணக்கங்களும் மனம் நிறைந்த அன்பு நன்றிகளும்..

    தட்டு தடுமாறி விழுந்து எழுதியதை வாசித்த அனைத்து அன்பு உறவுகளுக்கும் மனம் நிறைந்த அன்பு நன்றிகள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி மஞ்சுபாஷிணி.. சிரமம் பார்க்காமல் வந்து பதில் அளித்து விட்டீர்கள். மிக்க நன்றி. தொடர்ந்து எழுதி அனுப்புங்கள்.

      நீக்கு
  21. பதற்றத்தின் உச்சத்திற்கே கொண்டு போன வலிமையான எழுத்து.
    ஏன் அடிக்கடி எழுதுவதில்லை என்று ஏங்கவும் வைத்தது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா... ரிஷபா... உங்களை சந்தித்தது ஆச்சர்ய சந்தோஷம்... அன்பு நிறைந்த நன்றிகள்... எழுதியதை முழுவதுமாக நிறுத்தி மறந்துவிட்ட நிலையில் பலமுறை ஸ்ரீராம் எழுத சொல்லி இப்போது தான் எழுதலாமா... என்ற யோசனையுடன் எழுதினேன்பா...

      நீக்கு
  22. வருடக்கணக்கில் ஆகியிருக்கும் மஞ்சு அவரளின் எழுத்தைப் படித்து. பாராட்டுக்கள். அட்ராசிடி தொடரட்டும் என்று நான் சொன்னதேயில்லை, சொல்ல வைத்துவிட்டீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா....அப்பாதுரை எட்டிப்பார்க்கவில்லையே என்ற என் மனக்குறையை நீக்கிவிட்டீர்கள்பா.. நிறைந்த அன்பு நன்றிகள்....

      நீக்கு
  23. கணவன் இங்கும் மனைவி அங்குமாக இருக்க வேண்டிய அவசியத்தை ஒரு வரியில் சொல்லி இருக்கலாம்!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!