Monday, October 24, 2016

"திங்க"க்கிழமை 161024 :: அவியல் - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி.அவியல் என்று ஒன்று வந்ததே, மிஞ்சின குறைந்த அளவு உள்ள காய்கறிகளை வைத்து என்ன செய்வது என்று யோசித்ததால்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். கல்யாணம் முடிந்து மறுநாள் கட்டுச்சாதம் அன்னைக்கு மிஞ்சின காய்கறிகளை வைத்து அவியலும், பலவித கலந்த சாதங்களும் எங்கள் பக்கத்தில் செய்வார்கள். பொதுவாக வீட்டில், அவியலுக்கு என்று காய் வாங்குவது அபூர்வம். (யார் தேவையான காய் எல்லாவற்றிலும் 100 கிராம்னு வாங்கறது?). அவியல் என்பது திருநெல்வேலிப் பகுதியில் பிரபலமானது. கேரளாவில் இது முக்கியமான பண்டிகை நாட்களில் செய்யப்படுவது. பெரும்பாலும் உணவுவிடுதிகளில் முருங்கைக்காய் சேர்ப்பார்கள். எனக்கு இது ரொம்பவும் எரிச்சலாக இருக்கும். நிம்மதியா அவியலைச் சாப்பிடமுடியாது. எங்கள் வழக்கத்தில் (முந்தைய தலைமுறை) நாட்டுக் காய்கள் மட்டும்தான் சேர்ப்பார்கள். அதாவது, ஆங்கிலக் கறிகாய்களுக்குத் (பீன்ஸ், கேரட், உருளை போன்றவை) தடா. அதேபோன்று, அவியலுக்கு உணவு விடுதிகளில் செய்வதுபோல், நீள் சதுரவாக்கில் அழகழகாகவெல்லாம் திருத்தமாட்டார்கள். கொஞ்சம் பெரிய அளவில்தான் திருத்துவார்கள். அவியல்ல புளியும் சேர்ப்பார்கள். பெரும்பாலும் மாங்காய் சேர்த்துப் பார்த்ததில்லை. இதற்கு, மாங்காய் குறிப்பிட்ட பருவகாலத்தில்தான் கிடைக்கும் என்பது காரணமாயிருக்கலாம். மாங்காய் சேர்த்தால், புளி சேர்ப்பது தேவையில்லை.

நான், அவியல் பண்ணுவதற்காகவே, எல்லாக் காய்களையும் கொஞ்சம் வாங்கினேன். அவியலுக்கு அவசியம் தேவையான காய்கள்,  கத்தரி, அவரை, வாழை, பூசணி ஆகியவை. சேப்பங்கிழங்கு, வெண்டை, உருளை, பீன்ஸ், சேனை சேர்த்தால் நல்லா இருக்கும்.  கேரட் அவியலைக் கொஞ்சம் வண்ணமயமாக்கும். காய்களை ஓரளவு அளவில் திருத்திக்கொள்ளவும். கத்தரி, பூசணி, உருளை ஆகியவற்றைக் கொஞ்சம் பெரியதாகவும், மற்றவற்றை நீள் சதுரவாக்கிலும் திருத்திக்கொள்ளணும். சேப்பங்கிழங்கு, உருளை இவற்றை நான் முதலில் கொஞ்சம் வேகவைத்துக்கொண்டேன்.  மற்றவற்றை, குக்கரில், கொஞ்சம் புளிஜலம் சேர்த்து வேகவைத்துக்கொண்டேன். ரொம்ப வேகவேண்டாம்.

அரைக்கிலோ காய்கறிக்கு, அரை மூடித் தேங்காய் தேவை.  தேங்காயும், 4 பச்சை மிளகாயும் சேர்த்து (கொஞ்சம் தண்ணீர் விட்டுக்கொண்டு) வழுமூன மிக்சியில் அரைக்கவும். நான் இதிலேயே கொஞ்சம் உப்பையும் சேர்த்துக்கொள்வேன்.

 


இப்போ, குக்கரில் ஓரளவு வெந்திருக்கும் காய்கறிகளை எடுத்துக்கொள்ளவும். நீரை வடிகட்டிவிடலாம்.   கடாயில, தேங்காய் எண்ணையில் கடுகு பொரித்து, அதில் இந்த வெந்த காய்கறிகளைப் போடவும். அதனுடன் தேங்காய் பேஸ்டையும் சேர்த்து, தேவையான உப்பு சேர்த்து, மிதமான தீயில் கொஞ்சம் சுட வைக்கவும். தேங்காய் கொஞ்சம் ஆகவேண்டும். புளி போதவில்லை என்று தோன்றினால், குக்கரிலிருந்து எடுத்தபோது, நீரை வடிகட்டினோமே அதைத் தேவையான அளவு சேர்த்துக்கொள்ளலாம்.அடுப்பை அணைத்துவிட்டு, 2-3 தேக்கரண்டி தேங்காய் எண்ணெயும், 2 ஆர்க் காம்புடன் கூடிய கருவேப்பிலையையும் சேர்த்துக் கலக்கவும். அப்புறம் நல்ல புளிக்காத தயிரை 1 ½ கப் அளவில் சேர்த்துக் கலக்கவேண்டியதுதான். (பின்குறிப்பைப் பார்க்க)

அவியல் பண்ணுவது ரொம்ப சுலபம். கொடுத்துள்ள இத்தனை காய்கறிகளும் வேண்டுமா என்று மலைக்கவேண்டாம். கொஞ்சம் குறைவாக இருந்தால் அவியலின் கம்பீரம் குறையாது. என்ன, வாழைக்காய், அவரை (அல்லது பீன்ஸ்), சேப்பங்கிழங்கு, கத்தரி, பூசணி இவைகள் இருந்தால் போதும். எங்க அம்மா, பச்சைத் தக்காளிக் காய் மட்டும்போட்டு அவியல் செய்வார்..அது இன்னும் என் மனதிலேயே இருக்கு.  சண்டைல கிழியாத சட்டை எங்க இருக்கு என்று சொல்வதுபோல், எங்க அம்மா பண்ணித்தருவதுபோல் நீயும் பண்ணு என்று மனைவியிடம் சொல்லாத கணவன் வெகு அபூர்வமல்லவா?
தொட்டுக்க வேண்டாம்.. அப்பிடியே ச்சாப்பிடுவேன்.. என்பதுபோல, எனக்கு அவியலுக்கு, வெறும் சாதம், வாசனைக்குக் கொஞ்சம் தேங்காய் எண்ணெய் (எங்கள் வீடுகளில் நெய்தான் சாதத்துக்கு) போதும். என்னைப் பொறுத்தவரையில் அவியல், கொஞ்சம் காரமான கலந்த சாதங்களுடன் (புளியோதரை, எள்ளுச்சாதம்-கார வகை) நன்றாக இருக்கும். அடைக்கு அவியலைத் தொட்டுக்கொள்ளலாம் என்று கண்டுபிடித்த மஹராசனே.. நீயே அனுபவி அந்தக் காம்பினேஷனை.. எனக்கு வேண்டாம்.  (அடைக்கு மரியாதை… நெய்யுடன் சேர்ந்த வெல்லப் பொடி. இல்லாட்டா இட்லி மிளகாய்ப்பொடி. மற்ற காம்பினேஷன்லாம், சும்மா எண்ணிக்கைக்குத்தான்.. சரவணபவன், சிவப்பு, பச்சை, மஞ்சள், வெள்ளை என்று வண்ண வண்ணமாக சட்னி தருவதுபோல)

பின்குறிப்பு:
1.   பொதுவாக, அவியலில் (அதாவது அடுப்பை அணைத்தபின்), உடனேயே தயிர் சேர்க்கவேண்டாம். பரிமாறுவதற்கு முன் தயிர் சேர்க்கலாம் என்று சொல்வார்கள். அப்போதுதான், சாயும்காலத்தில் அவியல் மிஞ்சியிருக்கும்போது, திருப்பி தயிர் சேர்த்துச் சாப்பிடலாம். இல்லைனா, அவியல் புளிக்கும். ஆனால் எங்கள் வழக்கத்தில் கடவுளுக்குப் படைத்தபின் அதில் எதையும் சேர்க்கும் வழக்கம் இல்லை. அதனால் அவியல் பண்ணும்போதே தயிரையும் சேர்த்துவிடுவார்கள்.

2.   தயிர் புளிப்பாக இருக்கும் என்று தோன்றினால் (காலையில்), காய்கறிகளைக் குக்கரில் வைத்துவேகவைக்கும்போது, புளிஜலம் சேர்க்கவேண்டாம். மாங்காயையும் திருத்தி அவியலில் சேர்ப்பதானால், புளிஜலம் தேவையில்லை.

3.   காய்கறிகள் ஒவ்வொன்றுக்கும் வேக, ஒவ்வொரு உஷ்ணநிலை வேண்டும். எல்லாத்தையும் ஒரேமாதிரி குக்கரில் வைத்தால் ஒன்றும் தவறில்லை. வாழை, கத்தரிக்கு வேக நேரமாகாது.  எல்லாக் காயும் முக்கால் வெந்திருந்தால் போதும். கடைசியில் கடாயில் தேங்காய் பேஸ்டுடன் கொதிக்க வைக்கும்போது மீதி வெந்துவிடும்.

4.   அவியல் கொஞ்சம் நீர்க்க இருந்தால்மட்டும் (அடுப்பில் இருக்கும்போது), 1 தேக்கரண்டி அரிசிமாவு கரைத்துச் சேர்க்கலாம்.


நான் வெள்ளிக்கிழமை அவியல் செய்தபோது, வடகங்களும் அப்பளாமும் பொரித்தேன். சாதம், அவியல், வடகம். இந்தக் காம்பினேஷன் எனக்குப் பிடித்தது.


அன்புடன்,

நெல்லைத்தமிழன்.

Sunday, October 23, 2016

ஞாயிறு 161023 :: மர்ம உருவம்!


படத்தை  க்ளிக் செய்யும்பொழுது சந்திரன் மட்டுமே இருந்தார். ஆனால் வேறு  ஓர் உருவம் எப்படி வந்தது என்று தெரியவில்லை. 

பேய்?  


Saturday, October 22, 2016

ஒரு பெண்ணை நடு இரவில் காப்பாற்றியவர்..
1)  "...... அப்போ தான், உங்களைத் தான் அவன் தேடறான்னு புரிஞ்சுது'னு சொன்னாங்க. அந்த நிமிஷத்தில் எனக்குள் ஏற்பட்ட உணர்ச்சிகளை வார்த்தைகளால் சொல்ல முடியாது. ஆட்டிசத்துக்கும், இசைக்கும் நிச்சயமாக ஏதோ தொடர்பு இருக்குன்னு புரிந்தது. 
 
 
 

 
இனி அவர்களுக்காக மட்டுமே என் பாட்டுன்னு முடிவெடுத்தேன். அப்போது ஆரம்பித்தது இந்தப் பயணம்.
 
 
ஆட்டிச நிலையாளர்களுக்கு, ௯௯.௯ சதவீதம் இசையில் ஆர்வம் உண்டு...."
சென்னை, அண்ணாமலைபுரத்தில், 'ஆட்டிசம்' என்ற மனவளர்ச்சி குறைப்பாட்டால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இசை வகுப்புகளை நடத்தி வரும், கர்நாடக இசைக் கலைஞர் லட்சுமி மோகன்.


 
 
 
 
 3)  சமயோசிதமாய் செயல்பட்டு ஒரு பெண்ணை நடு இரவில் காப்பாற்றியவர்.  மனிதம் இன்னும் மறித்து விடவில்லை என்று நினைக்க வைத்திருப்பவர்.  
 
 
 
 


Friday, October 21, 2016

வெள்ளிக்கிழமை வீடியோ 161021 ஆனைக்கும் உண்டே அன்புத் தாழ்!

                              

                        

Thursday, October 20, 2016

முன்னுரை : பிரதாப முதலியார் சரித்திரம்     புத்தகங்களுக்கு எப்போது முன்னுரை எழுதும் வழக்கம் ஏற்பட்டது?  
     முதலிலிருந்தே.....!


     முதல் முன்னுரை!
 
    
     தமிழ் நவீனத்தின் முதல் முன்னுரை!


 
     தேடினால், தமிழின் முதல் நவீனமாம் "பிரதாப முதலியார் சரித்திரம்" புத்தகத்துக்கே முன்னுரை இருக்கிறது.  இல்லாமல் இருக்குமா என்கிறீர்களா?  அதுசரி!  முன்னுரையில் அப்போதைய பாணி எப்படி இருந்தது என்று தெரிய வேண்டாமா?

     தமிழின் முதல் நாவல் வகை நூல்.  1857 இல் எழுதப்பட்டு, 1879 இல் வெளியானதாம். ஏன் அவ்வளவு இடைவெளியோ!  அதுவரை செய்யுள் நடையில் எழுதப்பட்டுக் கொண்டிருந்த புனைவிலக்கியத்துக்கு முதல் முறையாக வசன நடையில் ஒரு படைப்பு.     அதன் ஆசிரியர் மாயூரம் வேதநாயகம் பிள்ளை எழுதிய அந்த முன்னுரையை இந்த வாரம் பார்ப்போம்.


     கதை இருக்கும் நடையில் முன்னுரை இல்லை!  இந்தக் காலத் தமிழை ஒட்டியே இருக்கிறது.  தமிழ் வாசகர்களின் ரசனை, சுவை மேல் ஆசிரியருக்கு இருக்கும் நம்பிக்கையை, நாடி பிடித்துப் பார்த்திருப்பதை தனது வரிகளில் வெளிப்படுத்துகிறார்.  அல்லது அதைப் படித்த வாசகர்கள் (அப்போதுதான் தொடங்கும் வழக்கங்கள் என்பதால்) உண்மை, உண்மை என்று படித்திருக்கக் கூடும்.
 

     "இந்திய வாசகர்களுக்கு ராஜா ராணிகள் பற்றிப் படிப்பதில் மிகுந்த ஆசையுண்டு.  கண்ணைக்கட்டி காட்டில் விட்டால் அலைந்து திரிவதில் மிகுந்த உற்சாகம் உண்டு. பொன்னால் ஆக்கப்பட்ட அரச மாளிகையைப் பார்த்துக் கொண்டே இருப்பதிலும், பூங்கா வனத்தருகில் உள்ள நீர் வீழ்ச்சியைப் பார்த்துக் கொண்டு படுத்திருப்பதிலும் அவர்களுக்கு மிகுந்த பிரியம் உண்டு."
     "பல்வேறு காட்சிகளில் பல உப பாத்திரங்கள் பல்வேறு வகைகளில் தங்கள் பாகங்களில் சிறப்புற நடித்திருக்கின்றனர். " என்று அவர் சொல்வது புதுமையாக இருக்கிறது, நாடகம் போடுவது போல ஒரு உணர்வை ஏற்படுத்துகிறது.  


     கதையை ஒரு போதனை முறையில் எழுதியிருப்பதைச் சொல்கிறார்.  சமயம் சார்ந்து எழுதியிருப்பதையும் சொல்லும் அதே நேரம் பிற சமயத்தினர் மனதை புண்படுத்தும் வகையில் எழுதவில்லை என்றும் சொல்கிறார்.  தனது படைப்பில் என்னென்ன இருக்கிறது என்று ஒரு சிறு முன்னோட்டம் மாதிரித் தருகிறார். 

     கதையைப் பொறுத்தவரை சமூக நாவலாகத் தொடங்கும் கதை, பின்னர் ராஜா ராணி கதைக்குள்ளும் சென்று வருகிறது.

     46 அத்தியாயங்கள் கொண்ட இந்தக் கதையை இங்கு படிக்கலாம்.

     இன்னொரு விஷயம்.  பிரதாப முதலியார் சரித்திரம் தமிழின் முதல் நாவல் இல்லை என்று சிட்டி சிவபாதசுந்தரம் சொல்கிறாராம்.  


     வித்துவான் சேஷையங்கார் என்பவர் எழுதிய "ஆதியூர் அவதானி சரிதம்" என்கிற நூல்தான் முதல் நாவலாம்.  அதை பற்றி இங்கு படிக்கலாம்!  இந்தப் புத்தகம் 1875 இல் இந்தக் கதை வெளியானதால்.  


      ஆனாலும் நம்முடைய ( !!! ) பிரதாப முதலியார் சரித்திரம் 1857 முதலே எழுதப் பட்டு வந்தது அன்றோ?  அப்போது [நம்மைப் பொறுத்தவரை] அதுதான் முதல்!!


     இனி முன்னுரை :  (முழுதாகப் படிப்பீர்கள் அல்லவா!)==============================
================================
பிரதாப முதலியார் சரித்திரம் -  மாயூரம் ச. வேதநாயகம் பிள்ளை 


ஆசிரியர் முன்னுரை :  


தமிழில் உரைநடை நூல்கள் இல்லையென்பது ஒப்புக்கொள்ளப் படுகிறது.   இந்தக் குறைபாட்டைப் பற்றி எல்லோரும் வருந்துகின்றனர்.  இக்குறையை நீக்கும் நோக்கத்துடன் தான் இந்தக் கற்பனை நூலை எழுத முன்வந்தேன்.  மேலும் நீதி நூல், பெண்மதி மாலை, சமரசக் கீர்த்தனம் முதலிய ஏற்கெனவே வெளிவந்துள்ளன. எனது நூல்களில் குறிப்பிடப் பட்டிருக்கும் அறநெறிக கொள்கைகளுக்கு உதாரணங்களைக் காட்டவும் இந்த நவீனத்தை எழுதினேன்.


இந்தக் கதைக்கு நிலைக்களம் தென் இந்தியா.  கதா நாயகன் இப் பக்கத்தகவர்; நன்கு கல்வி பயின்றவர்;  மகா புத்திசாலி; நகைச்சுவையுடனும் அருகி சுடர் வீசும் வகையிலும் பேச வல்லவர்.  அவர் தனது பிறப்பு, வளர்ப்பு, பெற்றோர், கல்வி பயின்றது, திருமணம் செய்து கொண்டது போன்ற தனது வாழ்க்கையில் முக்கியமான சம்பவங்களை விவரிக்கிறார்.  கதையில் இடையிடையே ஹாஸ்ய சம்பவங்களும் தமாஷான பேச்சுக்களும் பின்னப்பட்டிருக்கின்றன.  அறத்துறை சம்பந்த கருத்துக்களும் இடம் பெற்றிருக்கின்றன.


இந்த நவீனத்தில் முக்கியமான பங்கு கொள்பவர்கள் கதா நாயகனின் அன்னை 'சுந்தர அண்ணி'யும் அவருடைய மனைவி 'ஞானாம்பாளும்' .  இவ்விருவரும் உயர்குடியில் செல்வந்தர் குடும்பத்தில் பிறந்தவர்கள்.  எல்லாவிதமான நற்பண்புகளும் உடையவர்கள்;  பெண் குலத்திற்கு அணிகலனான எல்லா லட்சணங்களும் பொருந்தியவர்கள்.  


வாழ்க்கையில் பல நெருக்கடியான சந்தர்ப்பங்களில் அவர்களுடைய உயர் குணங்கள் பிரகாசிக்கின்றன.  தங்களுக்கு நேரக்கூடிய கஷ்டங்களையும் பொருட்படுத்தாமல்,  அவர்கள் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் நீதியையும், மனித தர்மத்தையும் காக்க முன்வருகின்றனர்.  தன்னால் கட்டுப்படுத்த முடியாத பல சந்தர்ப்பங்களில், எதிர்பாராத சேர்க்கையினால் 'ஞானாம்பாள்' ஆண்வேடம் பூண்டு மகோன்னத சக்தி பெற்று, புத்தி சாதுர்யத்துடனும் திறமையுடனும் ஆட்சி புரிகிறாள்.  இந்திய வாசகர்களுக்கு ராஜா ராணிகள் பற்றிப் படிப்பதில் மிகுந்த ஆசையுண்டு.    கண்ணைக்கட்டி காட்டில் விட்டால் அலைந்து திரிவதில் மிகுந்த உற்சாகம் உண்டு. பொன்னால் ஆக்கப்பட்ட அரச மாளிகையைப் பார்த்துக் கொண்டே இருப்பதிலும், பூங்கா வனத்தருகில் உள்ள நீர் வீழ்ச்சியைப் பார்த்துக் கொண்டு படுத்திருப்பதிலும் அவர்களுக்கு மிகுந்த பிரியம் உண்டு.  இம்மாதிரி மனப்பாங்குள்ள வாசகர்களின் சுவையைத் திருப்தி செய்வதற்காக ஞானாம்பாளை மனிதர் அடையக் கூடிய மகோன்னத பதவிக்கு உயர்த்தி யிருக்கிறேன்.  


கதாநாயகனின் தந்தையும், மாமனாரும் உயர் குடும்பத்தில் பிறந்தவர்கள்;  ஆனால் கல்விப் பேறு பெறாத நாட்டு மக்கள்;  வக்கிர போக்குடையவர்கள்;  விசித்திர குணம் படைத்தவர்கள்.  ஆனாலும் சுந்தர அண்ணியும், ஞானாம்பாளும் கையாளும் பண்பு மிக்க தந்திரங்களால் அவர்களிடம் மயங்கி கிடந்த நற்பண்புகள் பிரகாசித்து, அவர்களும் புகழத்தக்க செயல் புரிகின்றனர்.  பல்வேறு காட்சிகளில் பல உப பாத்திரங்கள் பல்வேறு வகைகளில் தங்கள் பாகங்களில் சிறப்புற நடித்திருக்கின்றனர்.  அவர்களுடைய செயல்களில் பெற்றோரிடம் பாசம், சகோதர வாஞ்சை, கணவன் மனைவி அன்பு, கற்பு, எல்லோருக்கும் நலம் புரிதல், நாணயம், நன்றி முதலிய நற்பண்புகளை உதாரணங்களைக் காண்கிறோம்.  சமயம் போதிப்பதும், அனுபவம் உணர்த்துவதுமான நற்குணமின்றி இந்த வாழ்க்கையில் கூட இன்ப வாழ்வு வாழ முடியாது என்னும் மூதுரைக்கும் கதையில் உதாரணங்கள் காணப்படுகின்றன. 


தேசியப் பண்பு, இல்வாழ்க்கை, தென்னிந்திய மக்களின் பழக்க வழக்கங்கள் சித்தரிக்கப் பட்டிருக்கின்றன.  இடையிடையே நகைச்சுவை மிக்க சம்பவங்களும், சுவை மிக்க அஃதைகளும் இடம் பெற்றிருக்கின்றன.  உலகத்தோரிடம் பொதுவாகக் காணப்படும் பலஹீனங்களும், குறைபாடுகளும் ஆங்காங்கே கேலி செய்யப்பட்டிருக்கின்றன,. நான் கடவுள் பக்தி புகட்டியிருக்கிறேன்.  குடும்பத்திற்கும், சமூகத்திற்கும் யாவரும் செய்ய வேண்டிய கடமைகளையும் வற்புறுத்தியிருக்கிறேன்.  நல்வழியின் இயல்பான சிறப்பையும், தீய வழியில் உள்ள கொடூரங்களையும் நான் விவரிக்க முயற்சித்திருக்கும் முறையில் வாசகர்கள் நல்லதை விரும்பித் தீயதை வெறுக்க முன்வருவார்கள்.  பல்வேறு பாத்திரங்களையும், சம்பவங்களையும் விவரிப்பதில் நான் இயற்கையை ஒட்டியே எழுதியிருக்கிறேன்.  அற்புதங்களையோ உணர்ச்சி வசப்பட்டோ எழுத்துவதைத் தவிர்த்திருக்கிறேன்.  எந்த மதத்தினர் சமய பற்றையும் புண்படுத்தாமல் ஜாக்கிரதையாகவே எழுதியிருக்கிறேன்.


சில நாவலாசிரியர்கள் மனித இயல்பை உள்ளது உள்ளபடியே வருணித்திருக்கிறார்கள்.  இவர்கள் மனிதர்களில் கடையவர்களை வருணிப்பதால் அனுபவமற்ற இளைஞர்கள் இந்த உதாரணங்களைப் பின்பற்றுகின்றனர்.  இந்தக் கதை எழுதுவதில் இந்த முறையை நான் பின்பற்றவில்லை.  முக்கியமான பாத்திரங்களை நான் பூரண சற்குணம் படைத்தவர்களாகவே சித்தரித்திருக்கிறேன்.  பிரபல அற நோக்குள்ள ஆங்கில ஆசிரியர் டாக்டர் ஜான்சனையே இவ்விஷயத்தில் நான் பின்பற்றியுள்ளேன்.  அவர் 'ராம்ப்ளர்' என்னும் நூலின் நான்காவது பகுதியில் கூறுகிறார்.


"வரலாற்று அடிப்படைக்கு கதைகள் தவிரப் பிறவற்றில் நற்குணத்துக்குச் சிறப்பான உதாரணமாக விளங்கும் பகுதிரங்களை ஏன் சிருஷ்டிக்கலாகாது என்பது எனக்கு விளங்கவில்லை.  நற்குணமட்டுமென்றால் தெய்வீகத் தன்மை வாய்ந்ததென்றோ, நடக்கக் கூடாத சம்பவமென்றோ அர்த்தமில்லை.  ஏனெனில் நாம் உணரமுடியாததைப் பின்பற்ற மாட்டோம்.  ஆனால் மனிதர்கள் முயற்சித்து அடையக்கூடிய உயர்தர - தூய்மை மிக்க - நற்பண்பு புரட்சிகரமான சந்தர்ப்பங்களில் சில விபத்துகளைச் சமாளிப்பதிலோ அல்லது அனுபவிப்பதிலோ நாம் காட்டக் கூடிய சிறப்புகளை நாம் அடையலாம்.  அல்லது நாமே செய்து காட்டலாம் என்பதை நமக்கு உணர்த்துகிறது.  தீமையையும் காட்ட வேண்டியதுதான்;  ஆனால் காட்டப்படும் தீமை அருவருக்கத் தக்கதாக இருக்க வேண்டும்.  தீமை தோன்றும் இடங்களிலெல்லாம் அதைக் கையாளும் முறையிலிருந்து அதனிடம் வெறுப்புக் கொள்ள வேண்டும்.  அதன் அற்புதத்தனமான தந்திரங்கள் மூலம் அதனிடம் நமக்கு நிந்தையான எண்ணம் உதயமாக வேண்டும்.  ஏனெனில் தீமையை ஆதரிப்பது போல் காட்டினால் அதை யாரும் கண்டு அஞ்ச மாட்டார்கள்."


தமிழில் இம்மாதிரி உரைநடை நவீனம் பொதுமக்களுக்கு இதுவரை அளிக்கப் படவில்லை.  ஆகையால் இந்த நூல் வாசகர்களுக்கு ரசமாகவும், போதனை நிறைந்ததாகவும் இருக்கலாம் எனப் பெருமை கொள்கிறேன்.  இம்மாதிரிப் புதிய முயற்சிகளில் ஏதாவது குற்றங்குறைகள் இருப்பின் பொறுத்தருளுமாறு பொது மக்களை வேண்டிக் கொள்கிறேன்.ச. வேதநாயகம் பிள்ளை.


==============================
===================================

Wednesday, October 19, 2016

புதன் 161019

சென்ற ஐந்தாம் தேதி புதிருக்கான விடைகளை எழுத, பன்னிரெண்டாம் தேதி கணினி முன்பு உட்கார்ந்தேன்.  

அப்போ  ஒரு  மொபைல் அழைப்பு. 

"சார்! சென்ற வாரப் புதிருக்கான விடைகளை வெளியிடப் போகிறீர்களா? "

"ஆமாம்" 

"இருங்க சார்.  இரண்டாம் கேள்விக்கு மட்டும் பதில் யோசித்துக் கொண்டிருக்கேன். இப்போ பதில் சொல்லிடுவேன். கொஞ்சம் கழித்து, பதில் வெளியிடுங்கள் சார். "

ஓ கே என்று சொல்லி எழுந்து சி எல் சி ரோடு, ஜி எஸ் டி ரோடு, நியூ காலனி என்று சுற்றிவிட்டு, ஒருமணி நேரம் கழித்து வந்து, கணினி முன்பு உட்கார்ந்தவுடன், அதே கால், அதே விண்ணப்பம். 

இந்தத் தடவை வீட்டுக்குள்ளேயே சில சுற்றுகள் சுற்றி வந்து, பல் துலக்கி, பாத்திரம் தேய்த்து .... என்றெல்லாம் பொழுதைக் கழித்துவிட்டு, வந்து , க மு அ ........   அ கா -----  அ வி. 

காபி நேரம். 

அ கா  அ  வி. 

சாப்பாட்டு நேரம். 

க மு உ . அ கா அ வி! 

மாலை. 

பக்கத்தில் உள்ள சுந்தரவல்லி ஸ்கூலில் தேசிய  கீதம் பாடுகிறார்கள். மரியாதையாக நிற்கிறேன். 

"........  ஜெயஹி  .....   ஜெயஹி .......   ஜெயஹி ..........    ஜெய ஜெய ஜெய ஹி!"  

அவங்க சரியா பாடி, எனக்குதான் அப்படி கேட்குதா - அல்லது  அதுதான்  சரியான உச்சரிப்பா என்று குழம்பிக் கொண்டிருக்கும் பொழுது, மீண்டும் அழைப்பு.

"சார் கண்டுபிடிச்சுட்டேன், கண்டுபிடிச்சுட்டேன். "

"வெரி  குட்! என்ன விடை?"

"நாந்தான் சார். " 

"யோவ்! என்ன கிண்டலா?"

"சார் இன்றைக்கு நான் போன் செய்த போதெல்லாம் என்ன செய்தீர்கள்? 

" கணினி முன்பு உட்கார்ந்த  நான், எழுந்து போய் சில சில வேலைகளை செய்துவிட்டு வந்தேன்." 

" என் தம்பி பேரு சிங்காரம். அவனை எல்லோரும் செல்லமா சிங்கு ன்னு கூப்பிடுவோம். அவனுடைய நண்பர்கள் எல்லோரும் என்னை சிங்கண்ணா என்றுதான் கூப்பிடுவார்கள். நான் எங்கள் ஊரில் இரண்டாவது வட்டத்தில் வசிக்கிறேன். எனவே, நாந்தான் 'வட்ட வட்ட சிங்கண்ணா' --- போன் செய்து அப்பப்ப உங்களை கணினி முன்பு உட்காரவிடாமல் எழுப்பிக்கொண்டே இருந்தேன். "

பல்லைக்கடித்துக் கொண்டு, பதிவு எதுவும்  போடாமல்  விட்டுவிட்டேன். 

இப்போ  சொல்லிடறேன். இரண்டாவது  கேள்வி, ஒரு விடுகதை. அதற்கு விடை, "மூட்டைப்பூச்சி."  

ஆளை விடுங்கப்பா! அலாரம் கடிகாரம் எல்லாம் 'வந்து' எழுப்பாது. சும்மா கூவும் அம்புட்டுதான்!  

What comes .......... !  

Watch the exclamatory symbol at end. So, answer is not a question word. 

Any answer which is like "What comes, Goes!" etc are right answers. 

மூன்றாவது கேள்விக்கான சரியான விடை எண் இரண்டு. சிக்கலான பதிலாக இருக்குமோ என்று எல்லோரையும் குழப்ப, சுலப கேள்வி. 

==========================================

இந்த வாரப் புதிருக்கு,  எங்கள் வாசகர்கள்   கேள்விகள் (மட்டும்) எழுதுங்கள். எங்கள் ஆசிரியர்களுக்கு விடை தெரியாத கேள்வி கேட்பவருக்கு சிறப்புப் பரிசு உண்டு. 
(கேட்பவருக்கு, விடை தெரிந்திருக்கவேண்டும் -- ஜாக்கிரதை!)   

மீண்டும் சந்திப்போம்.  

===================================================Tuesday, October 18, 2016

கேட்டு வாங்கிப் போடும் கதை :: தானம்


 
     எங்களின் இந்த வார கேட்டு வாங்கிப் போடும் கதை பகுதியில் அன்பு நண்பர் வெங்கட் நாகராஜின் கதை இடம் பெறுகிறது.

     அவரின் தளம் சந்தித்ததும் சிந்தித்ததும்.

     பயணப்பிரியர்.  அருமையான புகைப்படக் கலைஞர்.  சுவையான சுற்றுலாப் பதிவுகளை அழகான புகைப்படங்களுடன் தருபவர்.  இவருடைய வாராந்திர பதிவு ஃப்ரூட் ஸாலட் ஒரு சுவாரஸ்யமான பல்சுவைப் பதிவு.  இவருடைய துணைவியாரின் கதை சில நாட்களுக்கு முன்னால் இடம்பெற்று வரவேற்பைப் பெற்றது வாசகர்களுக்கு நினைவிருக்கும்.  இவர்களுடைய மகள் ரோஷிணி கூட ஒரு பிளாக்கர்.  அவர் அருமையாய் - மிக அருமையாய் - ஓவியங்கள் வரைவார்.

     கதை பற்றி வெங்கட்டின் முன்னுரையைத் தொடர்ந்து அவர் படைப்பு...==================================================================அன்பின் ஸ்ரீராம், 

வணக்கம்.  

என்னுடைய ஒரு பதிவும் உங்கள் பக்கத்தில் வெளியிட நினைத்திருக்கும் உங்களுக்கு எனது மனம் நிறைந்த நன்றி!  

பொதுவாகவே எனக்குக் கவிதைகள், கதைகள் பிடித்திருந்தாலும், அதை எழுதும் அளவிற்கு தைரியம் இல்லை! :)

சில மாதங்களுக்கு முன்னர் தானம் என்ற பெயரில், “கதையல்ல நிஜம்” என்று எனது வலைப்பூவில் எழுதி இருந்தேன்.  அதையே இப்போது சில மாற்றங்களோடு உங்களுக்கு அனுப்பி வைத்திருக்கிறேன்.  

நெய்வேலியில் இருந்தபோது ஒரு வீட்டில் பார்த்த காட்சிகள் தான் இந்த கதை பிறக்கக் காரணம்.  அம்மா உயிருடன் இருக்கும்போது பார்த்துக் கொள்ள ஆள் வைத்து, இறந்த பிறகு பலருக்கு தானங்கள் கொடுத்தார் ஒருவர். அது நடந்தது பல வருடங்களுக்கு முன்னர் என்றாலும் நினைவிலிருந்து நீங்காத நிகழ்வு அது. அதுவே தான் இங்கே கதையாக.....

நட்புடன்

வெங்கட்.


=====================================================================தானம்....
 
வெங்கட் நாகராஜ்

வீட்டின் வெளியே பெரிய பந்தல் போட்டு சில நாற்காலிகளும் போட்டு இருந்தனர். ஊரில் உள்ள

பலர் வருவதும் போவதுமாக இருந்தனர். தனது அம்மாவின் ஆத்மா சாந்தி அடைய

வந்தவர்களுக்கெல்லாம் தான-தர்மங்களை செய்து கொண்டு இருந்தார் வேணு.

சிலருக்கு கன்றுடன் பசுமாடு, சிலருக்கு ஒரு காணி நிலம், சிலருக்கு பாத்திரங்கள், வேறு சிலருக்கு

துணிமணிகள் என பலவிதமான தானங்கள் வழங்கிக் கொண்டு இருந்தார். தானம் பெற்ற பலரும்

வேணுவை வாழ்த்தி அவரின் அம்மாவின் ஆத்மா சாந்தியடையட்டும் என வாழ்த்திச்

சென்றார்கள். ஆனாலும் அவருக்குத் தனது தாயார் இறக்கும் முன் சொன்ன வார்த்தைகள்

மனதைத் தைத்துக்கொண்டே இருந்தது.

அசைவில்லாமல் படுத்துக் கிடந்தார் கிருஷ்ணவேணி அம்மாள். ஒரு மாதத்திற்கும் மேலாகவே

படுத்த படுக்கையிலேயே மல-ஜல உபாதைகள் எல்லாம். கடைசி இரண்டு நாட்களாக பேச்சு

இல்லை, உடம்பில் அசைவும் இல்லை. உயிர் மட்டும் ஊசலாடிக்கொண்டு இருந்தது.

மற்றவர்கள் பேசிக் கொண்டிருப்பது மட்டும் கேட்கத் தான் செய்தது.

பத்துமாதம் கஷ்டப்பட்டு சுமந்த மகன் வேணு தன் மனைவியுடன் பேசிக்கொண்டு இருந்தது

காதில் விழுந்தது. “எத்தனை நாளுக்குத்தான் இப்படி இழுத்துக்கொண்டு இருக்கப்போகுதோ

தெரியல? வேலைக்குப் போக முடியல, நிறைய செலவு, எப்பதான் முடியுமோ தெரியல”.

”இவங்க போன பிறகு வேறு நிறைய செலவு இருக்கு. காரியமெல்லாம் தடபுடலா செய்யணும்.

கோதானம், பூதானம் இப்படின்னு நிறைய தானமெல்லாம் பண்ணனும். என்ன பண்றதுன்னு

தெரியல. ஏதோ ஒரு முடிவு தெரிஞ்சா எல்லாவற்றிற்கும் ஏற்பாடு செய்யலாம்!” என்று

சொல்லிக்கொண்டு இருப்பது கிருஷ்ணவேணி அம்மாளின் காதில் விழுந்து

தொல்லைப்படுத்தியது.

கிருஷ்ணவேணி அம்மாளுக்கு தான் தன் மகன் வேணுவுக்காக பட்ட கஷ்டங்கள் மனதில் வந்து

போயிற்று. கணவன் இறந்த பிறகு தனியொருத்தியாய் அவனை வளர்த்து ஆளாக்கி பெரிய

பொறுப்பில் வேலையில் அமரும் வரை, தான் இழந்தது எத்தனை எத்தனை.

வேணு குழந்தையாக இருந்தபோது செய்த அத்தனை அசிங்கங்களையும் சகித்துக்கொண்டு சுத்தம்

செய்ததற்கு, இப்போது அவன் தனது மூக்கைப் பிடித்துக்கொண்டு என் அசிங்கங்களை சுத்தம்

செய்ய வேலையாளை அனுப்புகிறான். இதையெல்லாம் பார்த்து மௌனமாக கண்ணீர்

விடுவதைத் தவிர வேறொன்றும் சொல்ல முடியவில்லை கிருஷ்ணவேணி அம்மாளுக்கு....

இன்னும் எத்தனை நாட்களுக்கு இந்த கஷ்டங்களோ? ஆண்டவன் நமக்கு ஒரு வழி சொல்ல

மாட்டானா? என்று நினைத்துக் கொள்ள கண்களிலிருந்து தாரை தாரையாக கண்ணீர் வடிந்து

கொண்டிருந்தது.

ஆண்டவனும் செவி சாய்த்து விட்டான் போலும்.... இறப்பதற்கு முன்னர் ”வேணு, நான் செத்த

பிறகு நீ எத்தனை தானம் கொடுத்தால் தான் என்ன? அவை என்னுடைய தியாகங்களுக்கு

ஈடாகுமா” என்று கடைசியாக சொல்லிவிட்டு தான் தலைசாய்த்தாள்.

கன்றுடன் பசுமாடு தானம் பெற்ற ஒரு முதியவர் “இந்த தானங்களை விட நீ உனது தாயார்

முடியாமல் இருந்தபோது அவருக்குச் செய்த பணிவிடைகளே மிகப்பெரிய தானம்” என்று சொல்ல,

அவரின் அம்மா இறப்பதற்கு முன்னர் சொன்ன வார்த்தைகள் மீண்டும் கேட்டது போல, துக்கம்

பீறிட்டு அழ ஆரம்பித்தான் வேணு.