நான் மெக்சிகோ ரிசார்ட்டுக்கு வந்து சேர்ந்த வரை சென்ற வாரம் சொல்லியிருந்தேன். வழியில் அலையாத்திக் காடுகள் வழியாக சாலையில் வந்ததாக எழுதியிருந்ததே… அது எங்கே என்று கேட்பவர்களுக்காக அங்கிருந்து தொடர்கிறேன்.
மதியம் 2 மணிக்கு விமானம் கான்கன் விமான நிலையத்தை அடைந்தது. ரிசார்ட்டை 4 மணிக்கு அடைந்தேன். அறைக்கு 5 மணிக்கு வந்துவிட்டேன்.
ரிசார்ட்டில் நுழைந்ததும், ரிசப்ஷன் முன்பு அழகிய, நீர் நிறைந்திருந்த பெரிய நீர்நிலை போன்று (நீர் நாலா பக்கமும் தொடர்ந்து விழுமாறு) அமைத்திருந்தார்கள். எனக்கு வெல்கம் டிரிங்க்ஸ் என்று வித வித நிறங்களில் கொண்டு வந்தார்கள். சந்தேகப்பேர்வழியான நான் எதையும் எடுத்துக்கொள்ளவில்லை.
எனக்கான அறைச் சாவியைக் கொடுத்தாள் அழகிய பெண் (ஆமாம்…. எல்லா ஹோட்டல் ரிசப்ஷன், பெரிய கடைகள், ரெஸ்டாரண்டில் இருக்கும் பெண்களெல்லாம் அழகாகத் தெரிகிறார்களே… அது எனக்கு மட்டும்தானா?).
அந்த ரிசார்ட்டில் 7-8 பெரிய ரெஸ்டாரண்டுகள் உண்டு (பல themeகளில்). இது தவிர நீச்சல் குளங்கள், அங்கேயே Drinksகான இடங்கள்-நாம் வேண்டுவதை எடுத்துக்கொள்ளலாம், பெரிய Gym என்று பல வசதிகள் இருந்தன. ஒரு நாளைக்கு இவ்வளவு டாலர் என்று வாங்கிக்கொண்டு book செய்கிறார்கள். அங்குதான் சுமார் 7 நாட்கள் இருக்கப்போகிறேன். எங்கு வேண்டுமானாலும் சென்று என்ன வேண்டுமானாலும் சாப்பிட்டுக்கொள்ளலாம். அதுபோல காலை உணவை, என்ன வேண்டுமோ அவற்றை அறைக்கு வரவழைத்துக்கொள்ளலாம். ரிசார்ட்டில் எந்த இடத்திற்கும் சென்றுவரலாம், ரிசார்ட் கடலின் அருகில் அமைந்திருந்தது. அதாவது கடலுக்கும் ரிசார்ட்டுக்கும் 30-40 அடிகள் இருக்கலாம்.
நான் 1994ல் துபாய் சென்றடைவதற்கு முந்தைய நாள் 69 கிலோ எடை இருந்தேன். துபாய் சென்றடைந்த ஒரு வாரத்தில் 72 கிலோவாகிவிட்டேன். 2010 ஆரம்பத்தில் எடை 94 கிலோ ஆகிவிட்டது. என்னுடைய work nature (desk based) மற்றும் நடைப்பயிற்சியோ, இல்லை உணவுக்கட்டுப்பாடோ இல்லாமைதான் அதன் காரணம். (இதைப்பற்றியே ஒரு பதிவில் எழுதலாம்).
2006ல் நான் 'வாழும் கலை'யில் சேர்ந்து, சுதர்ஷன் க்ரியா போன்றவற்றைக் கற்றுக்கொண்டேன். அந்தச் சமயத்தில்தான் ஒரு யோகா மாஸ்டர் என் வீட்டிற்கு வந்தார். அவர் முதலில் என்னை படுத்துக்கொண்டு ஒரு காலை உயர்த்தச் சொன்னார். ஒரு அடி உயர்த்துவதற்குள் ஏதோ பெரிய சாதனை செய்து விட்டவன் போல் இருந்தேன். பிறகு அவர் வாரம் ஒரு தடவை வந்து எங்கள் எல்லோருக்கும் யோகா சொல்லித்தருவார். இருந்தபோதும் நான் தொடர்ச்சியாக யோகா செய்ததில்லை.
2009 ஆரம்பத்தில் என் எடை மிக அதிகம் என்ற பயம் வந்தபோது, VLCC என்ற எடை குறைப்பு மையத்திற்குச் சென்றேன். அங்கு சென்ற பிறகுதான் எடை அதிகரிப்பதற்கான காரணிகள் என்ன என்ன, எவற்றையெல்லாம் நான் செய்யக்கூடாது என்பது போன்ற பலவற்றைக் கற்றுக்கொண்டேன். அதிலிருந்து ஒரு ஒழுங்குமுறையைக் கடைபிடிக்க ஆரம்பித்தேன்.
நான் மாத்திரம் அப்படி இருந்தால் சரிப்படாது என்று என் மனைவியையும் சிறிய அளவு எடை குறைப்பு ப்ரோக்ராமில் சேர்த்துவிட்டேன். அதிலிருந்து எங்கள் உணவுப் பழக்கம் கொஞ்சம் கொஞ்சமாக மாறியது. நானும் தினமும் நடைப்பயிற்சி, உடற்பயிற்சிக்குச் செல்வது என்று மாறிக்கொண்டேன்.. பிறகு தினமும் சுதர்ஷன் க்ரியா செய்வது என்றும் வைத்துக்கொண்டேன். நான் ஒன்றில் மனம் வைத்து ஆரம்பித்துவிட்டால் அதில் தீவிரமாக இருப்பேன். அப்படி சுதர்ஷன் க்ரியா செய்ய ஆரம்பித்ததிலிருந்து தொடர்ந்து 9 ½ வருடங்கள் ஒரு நாள் கூட விடாமல் செய்தேன். இது என்ன பெரிய விஷயம் என்று நினைப்பவர்களுக்காக எழுதுகிறேன். நான் மாதம் ஒரு தடவையாவது பயணிக்கிறவன். அதிலும் நெடுந்தொலைவு என்றால், சில தேசங்களுக்குப் போய்ச் சேர்வதே இரவு 7 மணிக்கு (முந்தைய நாள் இரவு கிளம்பி). அதனால் ஹோட்டலை அடைந்தவுடன் முதலில் சுதர்சன் க்ரியா (35-40 நிமிடங்கள் ஆகும் சுருக்கமான க்ரியா. வாரம் ஒரு முறை செய்யும் நெடிய க்ரியா 73 நிமிடங்கள் ஆகும்) செய்துவிடுவேன். பசிக்கிறது என்று சாப்பிட்டுவிட்டால், அதற்குப் பிறகு 2 மணி நேரம் கழித்துத்தான் க்ரியாவிற்கு உட்கார முடியும். எங்கே விட்டுப்போய்விடுமோ என்று முதலில் க்ரியாவை முடித்துவிடுவேன்.
இப்போது 1 ¾ வருடங்களாக தினமும் 10,000 ஸ்டெப்ஸ் நடப்பது என்று வைத்திருக்கிறேன் (அதாவது 60-70 நிமிடங்கள் தொடர்ந்து நடப்பது). இதைத் தீவிரமாகக் கடைபிடிப்பதால், எல்லாப் பயணத்திலும் இடத்தை அடைந்தவுடன் முதலில் நடக்க ஆரம்பித்துவிடுவேன். யாத்திரை என்றால், காத்திருக்கும் நேரத்தில் எல்லாம் நடப்பேன். இரண்டு வருடங்களாகத் தொடர்ந்து நடக்கிறேன் என்று எழுதியிருக்க முடியும். ஆனால் 2023 மார்ச்சில் காசி யாத்திரை சென்றுவிட்டு திரும்ப இரயிலில் வந்த போது ஒரு நாள் இரயிலிலேயே கழிந்தது. அப்போது எனக்கு இரயிலிலேயே நடக்கலாம் என்று தோன்றவில்லை. பிறகு பயணங்களின்போது இரயிலிலும் நடப்பேன். (இடையில் ஏதேனும் ஸ்டேஷனில் 10 நிமிடங்கள் நின்றால், ஐந்து நிமிடங்கள் வெளியில் நடப்பேன்)
அன்று அறைக்கு 5 மணிக்கு வந்தவுடன் சுதர்ஷன் க்ரியாவை முடித்தேன். அங்குள்ள நடைமுறைகள் சரியாகத் தெரியவில்லை என்பதால் கொண்டுவந்த உணவை உண்டுவிட்டு, உடற்பயிற்சிக் கூடத்துக்குச் சென்றுவிட்டு ஓய்வெடுத்தேன். மறுநாள் அதிகாலை எழுந்து என் வேலைகளை முடித்துவிட்டு, காலை உணவை ஆர்டர் செய்தேன். பழங்கள், ப்ரெட், தேன் இவற்றைத்தான் கேட்டேன். கொஞ்சம் அதிக அளவில் கேட்டேன். தேன் 300 எம்.எல். கொடுத்தார்கள்.
அது சரி.. 'எப்படி இவற்றையெல்லாம் நினைவு வைத்துக்கொண்டு, நேரம் முதற்கொண்டு எழுத முடிகிறது?' என்ற சந்தேகம் வரலாம். நான் ரொம்ப வருடங்களாகவே நிறைய படங்கள் எடுப்பேன். 2004க்கு முன்பு சாதாரண புகைப்படக் கருவி, ஸோனி வீடியோ கேமராவை வைத்திருந்தேன். அதற்குப் பிறகுதான் டிஜிடல் புகைப்படக் கருவி வர ஆரம்பித்தது (எங்கள் தேசத்தில்). முதலில் வந்த டிஜிடக் கேமராவில், ஃப்ளாப்பி டிஸ்க் போட்டுவிட்டு படங்கள் எடுக்கணும். அதில் நான் நிறைய எடுக்கவில்லை. அதன் பிறகு சிறிய அளவு டிஜிட்டல் கேமரா வர ஆரம்பித்தது. அதனால் எப்போதும் செல்லும் இடம், பார்க்கும் மனிதர்கள் என்று பெரும்பாலும் போட்டோ எடுத்துக்கொண்டுவிடுவேன். அதனால்தான் இப்போது பார்க்கும்போதும் வரிசைக்கிரமமாக நினைவுக்கு வரும்.
ஒன்றை எழுதும்போது இன்னொன்று நினைவுக்கு வருகிறது. அதனால் சப்ஜெக்டை விட்டு விலகி வேறு எழுதுவதாகத் தோன்றுகிறது. வாழ்க்கைக் கட்டுரை என்று எதையும் எழுதப்போவதில்லை என்பதால் இப்படி ஆங்காங்கே அனுபவங்களை எழுதுகிறேன்.
எனக்கு 1997ல் அலுவலகத்தில் முதல் மொபைல் போன் கொடுத்தார்கள் (நிறுவன ஜெனெரல் மேனேஜர், தனக்கு சிறிய அளவில் மொபைல் போன் வாங்கிக்கொள்ளலாம் என்பதற்காக என்னிடம் தன்னுடைய போனைக் கொடுத்தார்). அது நம் வாக்கி டாக்கி அளவில் இருக்கும். ஆரம்பத்தில் அதனை கார் ஓட்டும்போது உபயோகிக்க மிகவும் சிரமப்பட்டேன்.
ஆரம்பத்தில், நிறுவனத்தில், முக்கியப் பதவியில் இருப்பவர்களுக்கு எல்லாம் மொபைல் போன் கொடுத்தார்கள். அப்போதெல்லாம் எவ்வளவு பேசினாலும், கம்பெனி மொபைல் பில்லில் வரும் பணத்தைக் கட்டிவிடும். பலர் அதனை misuse செய்ய ஆரம்பித்தார்கள். அடுத்த அறையில் இருப்பவனிடமும் மொபைலில் பேசுவார்கள். அப்போதெல்லாம் பேசுவதற்கான கட்டணம் அதிகம். என் Boss (Company GM) சொல்லுவார், உன் மொபைல் போன் மாத்திரம்தான் குறைந்த பில்லுடன் வருகிறது என்று. அவசியம் இல்லாததற்கு நான் மொபைல் போன் உபயோகிக்கமாட்டேன் என்பது அவருக்குத் தெரியும். (இத்தகைய செயல்கள்தாம் ஒருவரை நம்பிக்கைக்குரியவராக ஆக்குகின்றன)
பிறகு, மொபைல் போன்கள், வாங்கும் விலையில் வந்ததும், அவரவர்கள் அவரவருக்குத் தேவையான மொபைலை சொந்தச் செலவில் வாங்கிக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டார்கள். சில மாதங்கள் கழித்து, மாதம் அவரவர் பதவிக்கு ஏற்றபடி மாதம் இவ்வளவு மொபைல் அலவன்ஸ். அதற்கு மேல் வரும் கட்டணத்தை அவரவர்களே கட்டிக்கொள்ளவேண்டியது என்று சொல்லிவிட்டார்கள். எப்போதுமே என் கைக்காசைப் போடவேண்டிய அவசியம் எனக்கு நேரவில்லை. நிறுவனத்தில் யாரேனும், மொபைல் பில் அதிகமாக வருகிறது, அலவன்ஸை அதிகமாக்கவேண்டும் என்று கேட்டாலும், என்னைக் கை காட்டி விட்டுவிடுவார். அவனுக்கே அவ்வளவு பில் வருவதில்லை, எப்போதும் காண்டாக்ட் செய்யும் நிலையில் இருக்கிறான், பிறகென்ன? என்று சொல்லிவிடுவார்.
இந்த வாரம் இனி படங்கள்.
ரிசார்ட்டை அடையும் சாலை, அதன் ஒரு புறம் ரிசார்ட் அமைத்திருந்த அழகிய புல்வெளி, சில மரங்கள், மறுபுறம் காயல், அலையாத்திக் காடுகள். பார்க்கவே ரம்மியமாக இருந்தது.
இங்கு நின்றுகொண்டு பார்த்தால் ஒரு முதலை கரையோரம் தெரிந்தது. அடப்பாவி.. ரொம்ப ஜாக்கிரதையாக இருக்கணும்போல என்று நினைத்துக்கொண்டேன். நான் 2010 வாக்கில் பஞ்ச நரசிம்ம க்ஷேத்திரம் என்று ஒரு யாத்திரை சென்றிருந்தேன். அதில் மட்டப்பள்ளியில், தங்கியிருந்த இடத்திலிருந்து அதிகாலையில் எழுந்து கிருஷ்ணா நதிக்கரையோரமாக, அங்கு இருந்த படிகளில் இறங்கிக் குளித்துவிட்டு வந்தேன். (நதியில்தான்). நல்ல பகல் வெளிச்சத்தில் அந்தப் பகுதிக்குச் சென்றபோது, அங்கு ஒரு பெரிய எச்சரிக்கைப் பலகையைப் பார்த்தேன்… ஜாக்கிரதை..முதலைகள் நிறைய உண்டு என்று. (இந்த யாத்திரையை எப்போது எழுதப் போகிறேனோ)
எனக்கான அறைச் சாவியை (அட்டையை) வாங்கிக்கொண்டேன்.
அறை மிகப் பெரியது. ஐந்து பேர் உள்ள குடும்பம் நல்ல வசதியாகத் தங்கும்படியாக இருந்தது. (ஆனால் நான் ஒற்றை ஆள்)
குளியல் அறையில் மிக அருமையான வாசனை உள்ள ஷாம்பூ பாட்டில் வைத்திருந்தார்கள். அதில் நாலைந்தாவது எடுத்து வைத்திருந்தேன். மெக்சிகோவை விட்டுத் திரும்பும்போது, ஹேண்ட் லக்கேஜில் வைத்திருந்த பாட்டில்களை, 100ml அளவை மீறிவிட்டதால் குப்பைக்கூடைக்கு அனுப்பிவிட்டார்கள். பச்சை நிறத்தில் இருந்த மூலிகை வாசனை வரும் ஷாம்பூ அது.
உடல் தளர்வுக்காகவும் மனமகிழ்ச்சிக்காகவும் அறையில் இருந்த நீர்த்தொட்டி (Jacuzzi).
தொட்டுவிடும் தூரத்தில் கடல். அறையிலிருந்தே பார்க்கும் வசதி!
ஒரு மணி நேரம் வேர்க்க விறுவிறுக்க உடற்பயிற்சிக்கூடத்தில் ..
காலை உணவு அறையில். (காலை 8 மணி) ஒருவனுக்கு, எல்லாம் இரண்டிரண்டாக. படம் எடுத்த பிறகுதான், தேன் கொண்டுவந்தார்கள். எனக்கு எப்போதுமே டோஸ்டுக்கிடையில் நிறைய தேன் விட்டுக்கொண்டு சாப்பிடப் பிடிக்கும். ஜாம் உபயோகிப்பதில்லை, அதில் நிறைய ஷுகர் சேர்க்கிறார்கள் என்று. தேன் இயற்கையானது என்று நம்பிக்கொண்டிருக்கிறேன்.
அதுசரி… ரிசார்ட் படங்கள் எங்கே என்று கேட்பவர்களுக்கு, அதைப் பகிர நினைக்காமலா இந்தத் தொடரை
ஆரம்பித்தேன்! அடுத்த
வாரம் வரும்.
சென்ற வருடம் தேதி ட்போரா விவரங்களும் இருந்தால் நன்றாக இருக்கும்.
பதிலளிநீக்குஎழுத்து சரளமாக வருகிறது. சில சமயம் டிராக் மாறும் போல் இருந்தாலும் சமாளித்து விடுகிறீர்கள். படங்களை பாதுகாத்தும் வைத்திருக்கிறீர்கள். மேலும் சாப்பாடு வரை நினைவில் வைத்திருந்து எழுதுகிறீர்கள். இவை யாவும் மெச்சத் தகுந்தது.
பெரிய அளவில் படங்கள் நன்றாக உள்ளன.
Jayakumar
ட்போரா= போன்ற
நீக்குஅப்படியே வழிமொழிகிறேன்.
நீக்குவாங்க ஜெயகுமார் சார். 2006லிருந்து டிஜிடல் காமரா மூலம், நான் சென்ற இடங்கள், செய்தவைகளை படம் எடுத்துக்கொள்வேன். அதனால் வரிசையாக பலதும் என் நினைவில் இருக்கும். வித்தியாசமாகத் தோன்றுபவைகளையும் படமெடுப்பேன்.உதாரணமாக, ஒரு விலை உயர்ந்த மற்றும் வீட்டுக்குத் தேவையான ஃபர்னிசர் கடையிலேயே உணவுக்கான சிறு பெஉதியையும் வைத்து அமைத்திருந்தார்கள், சிறிய உணவுவிடுதி போல. காரணம், ஒவ்வொரு பொருளையும் நிதானமாகப் பார்த்து முடிவு செய்ய உணவு நேரம் குறிக்கிடக்கூடாது என்று. இவற்றையெல்லாம் படமெடுத்துக்கொள்வேன்.
நீக்குவாங்க ஶ்ரீராம். வருடம் தேதி வேண்டுமென நீங்களும் நினைக்கிறீர்களா?
நீக்குகுறிப்பிட்ட வலுவான காரணங்கள், சொந்த விருப்பம் இருந்தாலொழிய வருடம் தேதி சொல்லுதல் எப்போதுமே நல்லது என்று நினைப்பேன். காலச்சக்கரம் நரசிம்மா ஸாருக்கும் சமீபத்தில் இதை நான் சஜஸ்ட் செய்திருந்தேன்.
நீக்குஇது மனதில் வைத்துக்கொள்கிறேன் ஶ்ரீராம்.
நீக்குஅந்த ரிஸப்ஷன் பெண் அழகாகத்தான் இருக்கிறார். கொஞ்சம் தமன்னா ஜாடை தெரியவில்லை?
பதிலளிநீக்குஅப்படீல்ஙாம் தெரியவில்லை ஶ்ரீராம். ஆனால் எனக்கு எப்போதுமே ரிசார்ட், ஹோட்டல் போன்ற பல இடங்களிலும் பல பெண்கள் மிக அழகாக இருப்பதாகத்தான் தோன்றும். சமீபத்தில் அத்தகைய பெண்ணை சிக்கிம் காங்டேக் ஹோட்டலில் பார்த்தேன், படமெடுக்கவில்லை.
நீக்கு// கொஞ்சம் தமன்னா ஜாடை தெரியவில்லை?// தமன்னா ஜாடை இருந்திருந்தால் இப்படி நெ த எதிரில் உட்கார்ந்து போஸ் கொடுத்திருப்பாரா? அப்படியே குளோஸ் அப்ல நின்னு செல்ஃபி எடுத்து வைத்துக்கொண்டிருப்பாரே!
நீக்குவாங்க கௌதமன் சார். நான் சில பெண்களுடன் நினைவுக்காக புகைப்படங்கள் எடுத்துக்கொண்டுள்ளேன். சில கான்ஃபரன்ஸ்களில் அழகிய இளம் பெண்களுடனும் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டுள்ளேன், ஆனால் அது எனக்கு குற்ற உணர்வை வரவழைக்கும். அவைகளும் இங்கு ஒருநாள் வரலாம்.
நீக்குகாத்திருக்கிறோம்
நீக்குகாத்திருக்கிறோம் சென்சார் கத்திரியோடு என்று குறிப்பிட விரும்பினீர்கள் போல பட்சி சொல்லுது. இருந்தாலும் என் பெயரை நானே கெடுத்துக்கொள்வேனா கௌதமன் சார்?
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
ப்ரார்த்தனைக்கு நன்றி கமலா ஹரிஹரன் மேடம். இன்று வெளியில் செல்லவில்லையா ஞாயிறு ஆயிற்றே
நீக்குவணக்கம் நெல்லைத் தமிழர் சகோதரரே
பதிலளிநீக்குதங்களின் மெக்சிகோ பயண கட்டுரை நன்றாக உள்ளது. படங்கள் அனைத்தையும் ரசித்தேன். இயற்கை கொஞ்சம் படங்கள். நீங்கள் நன்றாகவும், விபரமாகவும் எழுதுகிறீர்கள். உங்கள் எழுத்தின் சிறப்பு கண்டு வியக்கிறேன். உங்கள் எழுத்தின் திறமைக்கு என் தலை சாய்த்த வணக்கங்கள்.
நீங்கள் தங்கியிருந்த ரிச்சார்ட் படங்கள் அனைத்தும் அழகு. அறையிலிருந்தபடியே கடல் அலைகளை ரசிக்கும் வாய்ப்பு நன்றாகத்தான் இருந்திருக்கும். அறையின் வசதிகள், பிரமிக்க வைக்கின்றன. நல்லதொரு அனுபவங்கள் கிடைத்தமைக்கு வாழ்த்துகள்.
உயர்தர ஹோட்டல்களில் பணியாற்றும் வரவேற்பறை பெண்கள் மற்றுமல்லாது விமான பணிப்பெண்களும் மிக அழகாக இருப்பார்கள். அப்படி அழகுள்ளவர்களைத்தான் அந்தப்பணிகளுக்கு தேர்ந்தெடுப்பார்கள் இல்லையா? உங்களிடம் அறையின் அட்டையை தரும் பெண்ணும், சிரித்த முகத்துடன் அழகாக இருக்கிறார். புகைப்படம் யாரையாவது எடுக்கச் சொல்வீர்களா?
முன்பு பஞ்ச நரசிம்மர் கோவில் யாத்திரை பற்றி வாரத் தொடராக எபியில் ஒன்று எழுதினீர்களே ? அது வேறோ? (உங்களைப் போல இத்தனாவது வருடம் என எனக்குச் சொல்லத் தெரியவில்லை. பாருங்கள்...!) இந்த வார படங்கள் அனைத்தும் துல்லியமாக உள்ளது. அங்கு நடந்த சம்பவங்களை நினைவு வைத்துக் கொண்டு எழுதுவதற்கு பாராட்டுக்கள். தொடர்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா ஹரிஹரன் மேடம். நான் அஹோபில யாத்திரை மற்றும் பஞ்ச துவாரகை யாத்திரையை எழுதியிருக்கிறேன். இதோ... இன்னும் ஒரு வாரத்துக்குள் இரண்டாம் முறையாக பத்ரி யாத்திரை செல்கிறேன்.
நீக்குவிமானப் பணிப் பெண்களும்...... தூண்டி விட்டுவிட்டீர்கள். எழுதினால் கோச்சு. முன்பு (பத்து வருடங்களுக்கு முன்பு), ஏர் இந்தியாவில் மாத்திரம் பேரிளம் பெண்களை இந்த வேலைக்கு வைத்திருப்பார்கள். அதுபோல ஶ்ரீலங்கா ஏர்லைன்ஸிலுப் பலர் என்னைக் கவர்ந்ததில்லை. ஹாஹாஹா. அதுவும் நல்லதுக்குத்தான். விச்ராந்தியாக மெடிடேஷனில் ஆழ முடியும்.
நீக்குமெக்சிகோ நல்ல அனுபவம். ஆனால் இதுவரை நான் அமெரிக்கா சென்றதில்லை.
நாங்கள் அவ்வளவாக விமானத்தில் பயணித்ததில்லை. இரண்டு தடவைகள் சென்னைக்கும், ஹைதிராபாத்துக்குமாக குழந்தைகள் தயவில் ஒரு பயணம் வந்தது. அப்போதுதான் விமானத்தில் பணிபுரியும் பெண்களை பார்த்தேன். என்ன நளினம்..! பேச்சில், உடையில், பார்வையில் என்று.. அவர்கள் பெண்ணாகிய என்னையே கவர்ந்தார்கள் என்றால்,... ஹா ஹா ஹா. அதனால்தான்தான் "விமானபணிப் பெண்களின் அழகே அழகு" என குறிப்பிட்டேன்.
நீக்குஉங்களுக்கு விரைவில் அமெரிக்கா செல்லும் சந்தர்ப்பம் கிடைக்கட்டும். உங்கள் மகள், மற்றும் மருமகன் அங்குதான் உள்ளார்கள்..? நன்றி.
இங்கு எழுதிவிட்டால் இன்னொரு தொடரில் எழுத முடியாது. எனக்கு அமெரிக்கா பிடிக்காது. சிலர் 'சீச்சீ இந்தப் பழம்' என்று நினைத்துவிடக்கூடாது என்பதற்காக அங்கு வேலை வாய்ப்பு வந்த காண்டிராக்ட் எல்லாம் பத்திரமாக வைத்திருக்கிறேன். என் அண்ணன் அவ்வப்போது அங்கு சென்று வருவான். நேற்றுத்தான் ஓரிரு மாதங்கள் அங்கே தங்கிச் சுற்றிப்பார்க்க எவ்வளவு ஆகும் என்று சொன்னான்.
நீக்குமுன்பெல்லாம் அவங்கதான் ரொம்ப அழகா இருப்பாங்க. இப்போ எல்லா இடங்களிலும் அதே போல அழகு உடை அணிந்த பெண்கள் வலம் வருவதால், ரொம்பவே என்னைக் கவரவில்லை.
இன்னொன்று கமலா ஹரிஹரன் மேடம். சொந்தக் காசில் நான் எந்த வெளிநாட்டுக்கும் சென்றதில்லை. ஹாஹாஹா
படங்களும், விவரிப்பும் மிக மிக அருமை, நெல்லை. , முதல்ல என்னடா ரிசார்ட்லருந்து நேரே எடை, பயிற்சி எடைக் குறைப்புக்குப் போகிறதே என்று தோன்றினாலும், உணவு பற்றி வந்தப்ப உங்க அனுபவங்களையும், நீங்கள் சொல்லி இருப்பது போல் இடையில் சேர்த்துச் சொல்லி, அதைச் சொல்லும் படமும் போட்டு, மீண்டும் ரெசார்ட்டுக்கு வந்துட்டீங்க!!!!
பதிலளிநீக்குநம் அனுபவங்களை இப்படிக் கட்டுரையோடு சேர்த்துச் சொன்னாதான் உண்டு. சில சமயம் நமக்குத் தனியாக எழுத வாய்ப்பு இல்லாமல் நேரம் அமையாமல் போகும். எனவே நல்லா இருக்கு, நெல்லை.
கீதா
வாங்க கீதா ரங்கன் க்கா. இந்தப் பயணம் 2010க்கு அப்புறம். அதனால் எடைக்குறைப்பு, ஜிம் ஆகியவற்றில் கவனமாக இருந்தேன். அதற்கு முன்பு? ஒரு தொடரில் அந்தப் படம் ஒன்றைப் பகிர்கிறேன்.
நீக்குசில பயணங்களில் நிறைய விவரிக்க ஒன்றும் சுவாரசியமாக இருக்காது. அதனால் சொந்த அனுபவங்களை எழுதுகிறேன்.
கடல் தெரியும் படங்கள் செம்மையா இருக்கு. எனக்கு இப்படிக் கடல் அருகாமையில், நதியின் அருகாமையில், மலைகளின் அருகாமையில் தங்க ரொம்பப் பிடிக்கும்.
பதிலளிநீக்குரெசார்ட் ரொம்ப அழகு.
அது சரி, ஆண்கள் மட்டும்தான் பெண்களை அழகுன்னு சொல்லி விவரிப்பதும், எழுதுவதும் உண்டோ?
இப்படி ரிசப்ஷனில் அழகான ஆண்கள் இருந்தால், ரசிக்கத் தோன்றுமா? சொல்லத் தோன்றுமா? பொதுவெளியில் சொல்வதுண்டா?
நான் சொல்லியிருக்கிறேனா என்று யோசித்துப் பார்க்கிறேன்!!!!!!!!!!
சொல்வதில் தப்பும் இல்லை என்பது என் கருத்து. ரசிப்பதில் என்ன தப்பு!
கீதா
பெண்களும் நிச்சயம் நல்ல வசீகரமான ஆண்களால் கவரப்படுவார்கள். உண்மையைச் சொன்னால் அகலிகை கதையும் அப்படித்தானே.
நீக்குரிசப்ஷனில் ஆண்களைப் பார்த்து கடுப்பாகியிருக்கேன்.
ஒன்று தெரியுமா? கடைகளில் உள்ள பெண்களிடம் பேரம் பேசுவது கடினம். கறாரா இருப்பாங்க.
பதிலளிநீக்குஇப்படி ரிசப்ஷனில் அழகான ஆண்கள் இருந்தால், பெண்களுக்கு ரசிக்கத் தோன்றுமா? சொல்லத் தோன்றுமா? பொதுவெளியில் சொல்வதுண்டா?
மேலே கருத்தில் பெண்களுக்கு என்பது விட்டுப் போச்சு
கீதா
நம்முடைய சமூகத்தின் அளவீடுகளால் வெளிப்படையாக பெண்கள் கருத்து தெரிவிக்க மாட்டார்கள். பெண்கள் பத்தினிகளாக இருக்கணும் , ஆண்கள் கிருஷ்ணனாகவும் இருந்தால் தப்பில்லை என்று நினைக்கும் சமூகம் இது.
நீக்குநானும் இப்படிச் சில அனுபவங்களைச் சேர்த்துச் சொல்ல விரும்புவேன். ஒரு நாள் பயணமாக இருந்தாலும் அப்படிச் சொல்லும் போதும், படங்களும் நிறைய போடும் போதும் பதிவும் நிறைய பகுதிகள் போகிறது. படங்களும் நிறைய போடப் பிடிக்கும். எல்லாரும் பார்த்துக்குவாங்களே போக முடியாதவங்க கூட என்றுதான்.
பதிலளிநீக்குஆனால், இப்படி எழுதும் போது நான் எழுதும் பதிவுகள் குறையாகப் பார்க்கப்படுமோ என்ற எண்ணமும் எழுகிறது.
கீதா
நிறைய விளக்கங்களோடு போகும் இடத்தைப் பற்றி எழுத முடியுமானால் சொந்த அனுபவங்கள் தேவையில்லை. விளக்கங்கள் கொடுக்க முடியாதபோதோ இல்லை அவசியமில்லாத போதோ, வெறும் படங்களுக்குப் பதில் அனுபவங்களையும் எழுதலாம் என நினைக்கிறேன்.
நீக்குமெக்சிகோ பயண கட்டுரை நன்றாக உள்ளது. படங்களே சொல்கின்றன அழகிய இடம்.
பதிலளிநீக்குஅறையில் இருந்து கடல் அழகாக தெரிகிறது.
உங்கள் எழுத்து நாங்களும் உங்களுடன் பயணித்த உணர்வை தந்தது.
வாங்க மாதேவி அவர்கள். மிக்க நன்றி
நீக்குஅனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குவாங்க கோமதி அரசு மேடம். வாழ்க வளமுடன்.
நீக்குமெக்சிகோ பயண கட்டுரையும் , படங்களும் அருமையாக இருக்கிறது.
பதிலளிநீக்குபடங்கள் அழகு.
ரிசார்ட் அழகு, தங்கி இருந்த அறை நன்றாக இருக்கிறது.
அறையிலிருந்து கடற்கரை தெரியும் படம் அழகு.
ரிஸப்ஷன் பெண் அழகாய் தான் தேர்ந்து எடுப்பார்கள்.
பேசும் போது அழகாய் சிரிக்க வேண்டும், சாந்தமாக பேச வேண்டும்
அதை தானே வருபவர்கள் விரும்புவார்கள்.
உங்கள் அறைச் சாவியை கொடுக்கும் பெண் அழகு.
உங்கள் உடற்பயிற்சிகள், நடை விவரங்கள் பகிர்ந்து கொண்டது நன்று. தொடர்ந்து கடைபிடிப்பது நல்லது.
கடற்கரையைப் பார்த்துக்கொண்டிருப்பதே மகிழ்ச்சியாக இருந்தது. எதையோ எழுதும்போது மற்றவற்றையும் எழுத நேர்ந்துவிடுகிறது கோமதி அரசு மேடம். கருத்திற்கு நன்றி
நீக்கு