நாங்க திருநெல்வேலி போயிருந்தபோது, நவதிருப்பதிலாம் சேவித்துவிட்டு இரவு நெல்லையப்பர் கோவிலை நோக்கி டாக்சியில் சென்றோம். நெல்லை டவுன் ஆர்ச்சைத் தாண்டும்போது என் பெண் போன் செய்தாள். அவள் ஆபீஸுக்கு எவ்வளவு ‘இருட்டுக்கடை அல்வா வாங்கணும், வேற மிக்சர்லாம் வேணுமா’ என்று கேட்டு அவள் சொன்னதைக் குறித்துக்கொண்டேன். நல்லவேளை, சரியான சமயம் போன் பண்ணினாளே என்று எனக்கு மகிழ்ச்சி. (இல்லைனா, எனக்குன்னு வாங்கினதுலேர்ந்துனா நான் அவள் ஆபீஸுக்குக் கொடுக்கணும்).
மறுநாள் நாங்கள் சென்னை திரும்பியதும், அவள், கிச்சன்ல ஒரு சர்ப்ப்ரைஸ் வைத்திருக்கிறேன் என்றாள். அது என்ன என்று பார்த்தால், பாத்திரத்தில் கோதுமை அல்வா. அவளே முந்திய நாள் செய்தாளாம். அதுக்கு முழு கோதுமையை ஊறவைத்து, பாலெடுத்து அரைத்துச் செய்யணுமே…. நீ எப்படி அதெல்லாம் செய்திருப்ப என்று கேட்டால், கோதுமை மாவிலிருந்து ஊறவைத்து பாலெடுத்துச் செய்தேன் என்றாள். அவள் செய்தது நன்றாக இருந்தது. சரி… படங்களை எனக்கு அனுப்பு, செய்முறையைச் சொல், நான் எங்கள் பிளாக், தி.பதிவுக்கு எழுதறேன் என்றேன். அவள் செய்து படங்கள் அனுப்பி ஒரு சில மாதங்களாகிவிட்டது. இப்போதான் எழுதறேன்.
எப்படிச் செய்வது?
கோதுமை மாவு 1 கப்
ஜீனி 2 ¼ கப் + ¼ கப்
நெய் 1 கப்
முந்திரிப் பருப்பு – 6
முதலில் கோதுமை மாவை, சப்பாத்தி மாவு மாதிரி தண்ணீர் கொஞ்சம் சேர்த்து செய்துக்கோங்க. பிறகு 5 கப் தண்ணீரை அதன் மேல் விட்டு, இரண்டு அல்லது மூன்று மணி நேரத்துக்கு அப்படியே விட்டுவிடவும்.
இப்போ பால் வந்திருக்கும். அதை மட்டும் வடிகட்டி எடுத்துவைத்துக்கொள்ளவும்.
கடைசியில் கோதுமை மாவுச் சக்கை மட்டும் மிஞ்சும். அந்த மாதிரி பாலை வடிகட்டிவிடவேண்டும்.
முந்திரிப் பருப்பை வாணலியில் நெய் விட்டு வறுக்கணும். இதுல அந்த கோதுமைப் பாலைச் சேர்க்கவும்.
அப்போ அப்போ இதனைக் கிளறி, கஞ்சி பதத்துக்கு வரும் வரை கொதிக்க விடணும்.
இதில் 2 ¼ கப் ஜீனியைச் சேர்த்து கலக்கணும்.
இன்னொரு கடாயில், 1 டேபிள் ஸ்பூன் நெய்யில் ¼ கப் ஜீனி சேர்த்து அதனை குறைந்த அனலில் கேரமலைஸ் பண்ணணும். கேரமலைஸ் ஆனபிறகு (அதாவது பிரவுன் கலருக்கு வந்தபிறகு) இதனை கோதுமைப்பால், ஜீனி சேர்த்துக் கொதிக்கும் வாணலியில் சேர்த்துவிடணும்.
இப்போ கோதுமைப் பாலைக் கலக்கிக்கொண்டே, ஒவ்வொரு பத்து நிமிடத்துக்கும் 2 மேசைக் கரண்டி நெய் விட்டு கிளறணும். 1 கப் நெய் காலியாகும்வரை இதனைச் செய்யணும்.
கொஞ்ச நேரத்துல (அதாவது கிளறிக் கிளறி நம்ம கை கொஞ்சம் வலிக்கும் சமயம்..ஹா ஹா) அல்வா பதத்துக்கு நெருங்கும். அப்போ அது கரண்டில ஒட்டிக்காம கிளறும்போது கீழே நழுவி விழும். இப்போவும் அது மாவு மாதிரி பதத்துலதான் இருக்கும். கெட்டியான அல்வா பதத்துக்கு இருக்காது.
அடுப்பை இப்போ அணைத்துவிடலாம்.
ஒருவேளை நெய் அதிகமாக இருந்தால் (அல்வாவைச் சுற்றி), அதனை எடுத்துவிடலாம்.
அல்வாவை இப்போ ஒரு தட்டில் பரத்திவைத்தால், கொஞ்ச நேரத்துல கெட்டியாயிடும்.
கொஞ்சம் ஜாஸ்தி கிளறினால், தட்டில் கொட்டி கொஞ்சம் ஆறினபிறகு துண்டு துண்டாகப் போடலாம். அதுவும் நல்லா இருக்கும்.
என் பெண், அல்வாவுக்கு எந்த நிறமியும் சேர்க்கலை. கேரமலைஸ் செய்த ஜீனியை உபயோகப்படுத்தியதாலும் கோதுமையாலும், இயல்பான பிரவுன் நிறத்தில் அல்வா வந்திருந்தது.
அல்வா எனக்குப் பிடித்திருந்தது. எப்போவும் நான் நினைப்பது, எதுக்கு கொஞ்சம் கஷ்டமான வேலையைச் செய்யணும்… பேசாம கடைல காசு கொடுத்து அல்வா வாங்கினாப் போதாதா என்பதுதான். ஆனா பெண்ணிடம் அப்படிச் சொல்ல முடியுமா? நல்லா இருக்கு, ஏண்டா கஷ்டப்பட்டு இதைப் பண்ணற என்றேன்.
திருநெல்வேலிக்குப் போனா எங்க என்ன வாங்கணும்னு சொல்றேன். அல்வா வாங்கணும்னா, இருட்டுக்கடைனா, மாலை 6:30 மணிக்குப் போயிடணும். 8 மணிக்கெல்லாம் அல்வா முழுவதும் காலியாயிடுத்து என்று சொல்லிவிடுவார்கள். இல்லைனா, திருநெல்வேலி பழைய பஸ் ஸ்டாண்டுல, சாந்தி ஸ்வீட்ஸ்ல (அங்க 3-4 சாந்தி விலாஸ் இருக்கு. எதுல கூட்டம் ஜாஸ்தியா இருக்கோ அதுதான் உண்மையான சாந்தி ஸ்வீட்ஸ். அதாவது செயிண்ட் மேரீஸ் பார்மஸிக்கு அடுத்த கடை). இல்லைனா, பஸ் ஸ்டாண்டுல இருந்து வெளில பாலத்தை நோக்கி போகும் ரோடில், தனலட்சுமி புராதான லாலா கடை, இல்லைனா, சந்திரவிலாஸ் (சாலைக்குமரன் கோவில் அருகில்) கடைக்கு எதிரே சந்த்ரா ஸ்வீட்ஸ், அதை விட்டா, பாளையங்கோட்டை தெற்கு பஜாரில் ராம் லாலா ஸ்வீட்ஸ் ஆகிய இடங்களில்தான் authentic சுவையான அல்வாவை ருசிக்கலாம். நெல்லை மிக்சருக்கு என்னோட சாய்ஸ் சாந்தி ஸ்வீட்ஸ்தான். திருநெவேலி மனோகரம் ராம் லாலா ஸ்வீட்ஸ்லதான் கிடைக்கிறது. கீதா சாம்பசிவம் மேடம், நெல்லைலயும் கல்லிடைக்குறிச்சி ஆஞ்சநேயா ஸ்வீட்ஸ் இருக்குன்னு சொல்லியிருந்தாங்க. அங்கவும் மனோகரம், அதிரசம், இனிப்பு சீடை ரொம்ப நல்லா இருக்கும். நாக்கு நாலு முழம் இருக்கறவங்க இதனை மனசுல வச்சுக்கோங்க.
அன்புடன்
நெல்லைத்தமிழன்
வாழ்க நலம்...
பதிலளிநீக்குவாங்க துரை செல்வராஜு சார்
நீக்குஇனிய காலை வணக்கம் மற்றும் விஷு வாழ்த்துகள் அனைவருக்கும்.
பதிலளிநீக்குநெல்லை அல்வா கொடுத்திருக்கார்!! ஹா ஹா ஹா வரேன் (நெல்லைக்கே அல்வாவா?!!!!!!!!!!)
கீதா
அதான் நீங்க நேற்றைக்கு ஜவ்வரிசி வெல்லப் பாயசம் செஞ்சு எனக்குக் கொடுத்துட்டீங்களே கீதா ரங்கன்
நீக்குஅன்பின் ஸ்ரீராம், KGG, கீதாக்கா/ கீதா, நெல்லை மற்றும் அனைவருக்கும் நல்வரவு...
பதிலளிநீக்குவந்திருக்கும் துரை, தி/கீதாவுக்கும், வரப்போகும் அனைவருக்கும் நல்வரவும் வணக்கமும் வைச்சுக்கறேன்.
நீக்குஅனைவருக்கும் நல்வரவு. கொஞ்சம் வேலை.... தாமதமாகிறது.
நீக்குபுத்தாண்டின் முதல் பதிவாக தித்திக்கத் தித்திக்க அல்வா!..
பதிலளிநீக்குஆகா!..
ஆமாம் துரை செல்வராஜு சார்.... ஸ்ரீராம்தான் இதனை இப்படி வெளியிட்டிருக்கார். முதல் இடுகை இனிப்பாக இருக்கட்டும் என்று. நாளை கதை சோகக்கதையாகவும் இருக்கலாம் இல்லையா?
நீக்குரொம்ப நல்லா வந்துருக்கு நெல்லை. பதம் கரெக்ட் நெல்லை. நானும் கலர் சேர்க்கவெ மாட்டேன்.
பதிலளிநீக்குகோதுமை மாவிலும் அவசர அல்வா செய்ததுண்டு. நன்றாகவே இருக்கும்.
உங்க பொண்ணு ரொம்ப சூப்பரா செஞ்சுருக்காங்க!! வாழ்த்துகள் பாராட்டுகள் அவங்களுக்கு!
பாருங்க நெல்லைக்கே அல்வா கொடுத்துட்டாங்க உங்க பொண்ணு!!! ஹா ஹா
கீதா
வாங்க கீதா ரங்கன். நான் அவள் செய்வாள் என்று எதிர்பார்க்கலை. (அவ இந்த மாதிரி செய்துவிட்டு, அவள் சாப்பிடமாட்டாள். எனக்கோ அப்போதான் திகட்டத் திகட்ட திருநெல்வேலியில் அல்வா சாப்பிட்டுவிட்டு, கொஞ்சம் வாங்கிக்கொண்டுவேறு வந்தேன். பாராட்டுக்கு நன்றி. போஸ்ட் பண்ணிடறேன்.
நீக்குமைதா மாவில் இம்மாதிரிப் பால் எடுத்து ஓர் அவசரத்துக்குப் பல வருடங்கள் முன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்னே பண்ணி இருக்கேன். பின்னர் பண்ணினது இல்லை. இம்முறையில் அரைத்துப் பாலெடுத்துனு கஷ்டப்பட வேண்டாம். ஆனாலும் எங்க வீட்டில் ச்ராத்தம் அன்று கட்டாயம் அல்வா செய்யணும் என்பதால் கோதுமை ரவையில் உடனடியாகப் பால் எடுத்துப் பண்ணுவோம். வெல்லம் தான் போடுவோம். என் மாமியார் பல வருடங்கள் வெல்லம் சேர்த்த அல்வாவே பண்ணிக் கொண்டிருந்ததாகவும் சொல்லுவார்.
பதிலளிநீக்குஆமாம் மைதாவிலும் செய்யலாம் என் பாட்டியும் வெல்லம் சேர்த்துத்தான் முதலில் செய்து கொண்டிருந்தார். மைதாவும் சரி கோதுமையிலும் சரி. அப்புறம் தான் சர்க்கரை போட்டுச் செய்தது. நானும் ரொம்ப வருஷம் முன்னேதான் மைதாவிலும் செய்தது. பாம்பே ஹல்வா, கராச்சி ஹல்வானு....
நீக்குகேரளா ஹல்வா அது வித்தியாசமானது. தேங்காய்ப்பால் சேர்த்து.....மஸ்கோத்து ஹல்வா தூத்துக்குடி ஃபேமஸ். நாகர்கோவிலிலும்.
கீதா
வாங்க கீதா சாம்பசிவம் மேடம்.... எங்க அப்பா, நான் 6வது படிக்கும்போது இந்த மாதிரி மைதாவில் பாலெடுத்து அல்வா செய்திருக்கிறார். அதனை எவர்சில்வர் தட்டில் நெய் தடவி இட்டு, கட் செய்தது நினைவில் இருக்கு. அந்த கட் செய்யும் தழும்பு அந்தத் தட்டில் ரொம்ப நாள் இருந்தது.
நீக்குவெல்லம் போட்டு அல்வாவா? கோதுமை ரவை பாலெடுத்து என்பது ஓகே. வெல்லம் போட்டால் நல்லா வருமா?
புது வருடம் அன்று 1 ஜனவரி, மைலாப்பூரில், ஸ்பெஷல் மீல்ஸ் (அந்த சபா பெயர் மறந்துவிட்டது...பார்த்தசாரதி சபாவா?) 825 ரூபாய் கொடுத்து சாப்பிட்டேன். அதில் வெல்லம்/கருப்பட்டியில் இரண்டு ஸ்வீட் போட்டிருந்தார்கள். அதில் ஒன்று அல்வாவாக இருக்கலாம். சுத்தமா எனக்குப் பிடிக்கலை..ஹாஹா
நீக்குஎனக்கு கராச்சி அல்வா ரொம்பப் பிடிக்கும் (ஜவ்வு மாதிரி இழுபடும் ஆனால் கட்டியா இருக்கும்). சும்மா சிறிதளவு வாயில் வைத்துக்கொண்டு ரசித்துச் சாப்பிடலாம். நெல்லை அல்வாவை வாயில் வைத்தால், சடக் என்று வழுக்கு வயிற்றுக்குள் போய்விடும்.
நீக்குமஸ்கோத்து அல்வா எனக்குப் பிடிப்பதில்லை. தேங்காய் வாசனை நல்லா இருக்காது. கேரள அல்வாக்களில் (குருவாயூரில் செங்கல் அடுக்கியதுபோல் கலர் கலர் அல்வாக்கள் உண்டு), எனக்கு அரிசி அல்வா மட்டும்தான் பிடிக்கும். எங்கள் எல்லோருக்கும் இந்த அல்வா பிடிக்கும்.
நெல்லைத் தமிழரே, வெல்லம் போட்டு அல்வா எனக்கு நினைவு தெரிந்ததில் இருந்து சாப்பிட்டு வருகிறேன். இப்போவும் வருடா வருடம் ச்ராத்த தினத்தன்று வெல்லம் போட்ட அல்வா தான். அடுத்த முறை ஶ்ரீரங்கம் வரச்சே சொல்லுங்க. உங்களிடம் சொல்லாமல் வெல்லம் போட்டு அல்வா பண்ணி வைக்கிறேன். முன்னெல்லாம் எங்க கல்யாண நாள், தீபாவளி மற்றச் சில விசேஷங்கள், அல்லது திடீர்னு ரங்க்ஸுக்கு அல்வா மசக்கை வரும். அப்போல்லாம் அல்வா கிளறி இருக்கேன்.கணக்கே சொல்ல முடியாது. கடைசியா 2010 ஆம் வருடம் எங்க கல்யாண நாளில் அல்வா கிளறியது தான். அதன் பின்னர் அல்வா இல்லாத தீபாவளிகளே! ச்ராத்தம் தவிர்த்து மற்ற நாட்களில் அல்வா செய்வதே இல்லை. :(
நீக்குகாலையிலேயே சொல்ல மறந்துட்டேன். அப்பா, அம்மா தூண்டுதல் இல்லாமல் உங்கள் பெண் தானாகவே சமையலில் ஆர்வம் காட்டுவதோடு புதுசு புதுசாகப் பண்ணியும் கொடுத்து அசத்துகிறாள். உங்கள் மகளின் ஆர்வம் கண்டு வியப்பாக இருக்கிறது. எங்கள் ஆசிகளும் பிரார்த்தனைகளும். எங்க பேத்திகளில் அப்பு மட்டும் சமையலில் ஆர்வமாக இருக்கிறாள். குட்டிக் குஞ்சுலு என்ன செய்யுமோ தெரியலை! 21/2 வயசுக்கு லூட்டி அடிக்கிறது! :))))))
நீக்குமைதா அல்வாவில் ஒரு லைட்டா புளிப்புச் சுவை இருக்கும். அதுதான் எனக்குப் பிடிக்கும். வெல்லம் போட்டு அல்வா ருசியாக இருக்குமா? பார்ப்போம் ஒருதடவை செய்துபார்த்தால் தெரிந்துவிடுகிறது. (இப்பவுமே அது சர்க்கரைப் பொங்கல் மாதிரி இருக்குமோன்னு சந்தேகம் வருது)
நீக்குஅல்வா கிளறுவது பெரிய தண்டனை இல்லையோ கீசா மேடம்?
//மகளின் ஆர்வம் கண்டு வியப்பாக இருக்கிறது// - உண்மைதான். அவளுக்கு ஆர்வமாக இருக்கும் செய்முறைகளை மட்டும்தான் அவள் செய்வாள். எனக்கு (அப்பாவுக்கு) சர்ப்ரைஸ் கொடுக்கணும்னு நினைத்தால் எப்போதாவது சாப்பிடச் செய்துகொடுப்பாள் (நான் பிரயாணம் போயிட்டு வரும்போது). அதை 'சமையலில் ஆர்வம்' என்று எனக்கு ஒத்துக்கொள்ளத் தோணாது. ஹாஹா. என்னைப் பொறுத்தவரையில் தென்னிந்திய லஞ்ச் செய்தால்தான் (முழுவதும் கடகடவெனச் செய்யத் தெரிந்தால்தான்) சமையலில் ஆர்வம் என்று சொல்லுவேன். படிக்கிற பெண்ணுக்கு நேரமில்லை என்பது ஒருபுறமிருக்க.......................ஹாஹா
நீக்கு//அடுத்த முறை ஶ்ரீரங்கம் வரச்சே சொல்லுங்க// - எப்போ அவன் கூப்பிடறான்னு தெரியலை. எனக்கு ஸ்ரீராமைத் தொடர்ந்து, வாரணாசி போகணும் என்ற எண்ணம் வந்தாச்சு. பார்க்கலாம்.
நீக்குஸ்ரீரங்கம் - எனக்கு அந்த ஊர் மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுக்குது. அங்கேயே செட்டில் ஆகணும் என்ற ஆசை வருது. ஆனால் அதுக்கு எனக்கு கொடுப்பினை உள்ளதுபோல் தெரியலை.
இப்போவும் முழு கோதுமைக்குப் பதிலாக சம்பா கோதுமை ரவை பயன்படுத்தியே தோசை எல்லாமும் செய்து வருகிறேன்.
பதிலளிநீக்குஅப்போ தோசைக்கு நீங்க கோதுமை மாவு உபயோகப்படுத்துவது இல்லையா? கோதுமை/கோதுமை ரவையை அரைத்து உபயோகிக்கிறீங்களா? நான் இந்த மாதிரிச் செய்ததில்லை. நல்லா இருக்குமா?
நீக்குஇப்போல்லாம் மில்லட் அது இது என்று கண்டதையெல்லாம் அரைத்து தோசை, இட்லி மாவு தயாரிக்கறாங்க.. என்ன டயட்டோ என்ன உபயோகமோ...
நெல்லைத் தமிழரே, கோதுமை தோசையில் உப்பு தோசை, வெல்லத் தோசை எனில் ரவை தான் ஊற வைப்பேன், கொஞ்சம் புழுங்கலரிசி, கோதுமை ரவை+துவரம்பருப்பு+ ஒரு டேபிள் ஸ்பூன் உளுந்து போட்டு அரைக்கையிலேயே உப்புக் காரம்போட்டு அரைத்து விடுவேன். வெல்ல தோசைக்குத் தனியாக நனைப்பேன்.கோதுமை ரவை+அரிசி+கடலைப்பருப்பு+தேங்காய், ஏலக்காய். உளுந்து வேண்டாம் இதற்கு. உப்பு தோசைக்குக் கருகப்பிலை, கொத்துமல்லி சேர்க்கலாம். தோசை நன்றாக வரும். கோதுமை மாவு பயன்படுத்தி தோசை வார்த்தால் அதற்குக் கொஞ்சம் ரவையும் அரிசி மாவும் சேர்ப்பேன். ரவா தோசை போலக் கரைத்துக் கொண்டு பச்சைமிளகாய்+இஞ்சி+கருகப்பிலை+கொத்துமல்லி+ஜீரகம் சேர்த்துத் தேவையானால் வெங்காயம் போட்டு வார்ப்பேன்.
நீக்குஎல்லாவகை சிறு தானியங்களிலும் தோசை, உப்புமா, அடை,கலந்த சாதங்கள், தேன்குழல் வகைகள், தித்திப்பு உருண்டைகள், பாயசம் எனச் செய்திருக்கேன். எல்லாமே நன்றாகவே வரும்.
நீக்குமிக்க நன்றி கீசா மேடம்... உங்கள் செய்முறைகளைச் சொன்னதற்கு. நான் இதுவரை கோதுமை/கோதுமை ரவையை உபயோகப்படுத்தினதில்லை. செய்துபார்க்கிறேன். அட..இந்த முறையில் வெல்லத் தோசையுமா?
நீக்குகேழ்வரகு மற்றும் சிறு தானிய மாவுகள் எல்லாவற்றிலும் இம்மாதிரித் தோசைகள் செய்யலாம். பார்லி போட்டுக் கூட தோசை பண்ணி இருக்கேன்.அதுக்கு உளுந்து குறைவாகப் போடணும்.
நீக்குஇனிய காலை வணக்கம். புத்தாண்டு நன்றாக விடிந்திருக்கு.
பதிலளிநீக்குஅல்வாவோடு.
அழகான செய்முறை விளக்கம். நெல்லையின் மகள் என்றாலே
திறமை தானாக வந்து விடும் போல. மனம் நிறை வாழ்த்துகள். ரெண்டு ஸ்ட் ராண்ட்
குங்குமப்பூ போட்டால் இன்னும் கலர் வந்துவிடப் போகிறது.
வாங்க வல்லிமா. உங்க பாராட்டுக்கு நன்றி... குங்குமப்பூ போட்டால் அட்டஹாசமா இருக்கும். ஆனா பாருங்க... சல்லிசா அவைகள் கிடைத்தபோது, தினமும் பாலில் குங்குமப்பூ போட்டு சாப்பிடுவோமே என்று எனக்குத் தோன்றவே இல்லை. அதுபோலவே, பாதாமும்...... நம்ம ஊர்ல குங்குமப்பூ என்று சொல்லி தேங்காயைத் துருவித் தரானோ இல்லை ஏதேனும் பூவில் சாயம் ஏத்தித் தரானோ... யார் கண்டது...
நீக்குஉண்மைதான் ராஜா. இங்கே பாதாமும் ,குங்குமப் பூவும் கொட்டிக் கிடக்கு.
நீக்குஎனக்கும் சாப்பிடணும்னு தோன்றியது இல்லை.
ஆஹா... காலையிலேயே அல்வா கொடுத்து இருக்கீங்க! சுவையோ சுவை! செய்யும் அளவு எனக்கும் பொறுமை இல்லை! வாங்கி சாப்பிடலாம்னா இதுக்குன்னு இப்ப திருநெல்வேலி போக முடியாது! :( ம்ம்ம்.... வேற வழி - இந்த ஊர்ல கிடைக்கற ஏதாவது ஒரு ஸ்வீட் வாங்கி சாப்பிட வேண்டியது தான்.
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி வெங்கட்.... பிகானீர்வாலா, பிகான்.ஜீ, ஹால்திராம் கடைகள் மற்றும் ஏகப்பட்ட இனிப்புக் கடைகள் தில்லியில் உண்டே.... கொல்கத்தா இனிப்புவகைகளைவிடவா நெல்லை அல்வா உசந்தது? சும்மா 'வேற வழி'ன்னு சொல்றீங்க....
நீக்குஅங்க பிகானீர்வாலாவில் லஞ்ச் 175 ரூ (என நினைக்கிறேன்) சாப்பிட்டேன்... இனிப்போடு அட்டஹாசமாக இருந்தது. அதன் சுவை வேறு எங்கும் எனக்குக் கிடைத்ததில்லை. அதுபோலவே ஹால்திராம் கடைகளில் சென்னா பட்டூரா (இரண்டு தருவார்கள்)....ம்ம்ம்ம்ம்ம்ம்.... நீங்களாவது எஞ்சாய் மாடி....
அல்வா அருமை
பதிலளிநீக்குவாங்க கரந்தை ஜெயக்குமார் சார்... நம்ம அரசியல்வாதிகள் எலெக்ஷன் நேரத்தில் கொடுக்கும் அல்வாவை விடவா?
நீக்குஅல்வா நல்லாத்தான் இருக்கு நெல்லை போனால் அல்வாக்கடை குறிப்பு எடுத்துக்கொண்டேன் நன்றி நண்பரே
பதிலளிநீக்குவாங்க கில்லர்ஜி.... நெல்லை ஸ்வீட்ஸ்களுக்குப் பேர் போனது...... தேவகோட்டை மாதிரி இல்லை என்று சொன்னால் சண்டைக்கு வருவீங்க..ஹாஹா.
நீக்குஒருநாள் பதிவர்கள் எல்லாம் நெல்லைக்குப் போகலாம்...
உங்க பொண்ணு நல்லாத்தான் அல்வா செய்து இருக்காங்க ஆனால் அதில ஒரு குறை இருக்கு.. அது என்னென்னா கொஞ்சமா செஞ்சு இருக்காங்க அதனால் எனக்கொரு பார்சல்ன்னு கேட்க முடியாமல் போய்விட்டது..... சரி பரவாயில்லை. நம்ம அதிரா தமிழ் புத்தாண்டுக்கு களி பண்ணி அதுதாங்க கேக்கு பண்ணி இருப்பாங்க.... அவங்க வந்து பதிவு போட்டு எல்லோரும் எடுத்து கொள்ளுங்கள் என்று சொல்லுவதற்குள் நான் ஒடி ஒழிஞ்சுடிறேன் இதை மட்டும் அவங்ககிட்ட சொல்லீடாதீங்க ஒகேவா
பதிலளிநீக்குவாங்க மதுரைத்தமிழன்... புத்தாண்டு வாழ்த்துகள்.
நீக்குஉங்களுக்கில்லாத பார்சலா? ஆனா பாருங்க... அல்வா செய்தது அக்டோபர்ல என்று ஞாபகம். இப்போதான் ஸ்லாட் கிடைச்சிருக்கு. அதனாலதான் உங்களுக்கு பார்சல் அனுப்பலை.
அதிரா வீட்டுல அவங்க அம்மா வந்திருக்காங்க. இன்னும் ஒரு வாரத்துக்கு அவங்க ரொம்ப பிஸி. (எதுல என்று உங்களுக்கு மட்டும் சொல்றேன். வெந்நீர் போடுவதிலிருந்து எல்லாச் சமையலையும் அவங்க அம்மா இப்போ அதிராக்குச் சொல்லிக்கொடுக்கப் போறாங்க. பத்து நாட்களாக நீங்க தப்பிச்சிட்டீங்க. அதிரா இணையத்துக்குத் திரும்பி வரும்போது புதுப் புதுப் பெயர்ல ஏகப்பட்டது எழுதப்போறாங்க. நீங்களும் நானும் தப்பமுடியாது)
நீக்குநான் சில தடவைகள் அல்வா செஞ்சிருக்கேன் செய்முறை எல்லாம் உங்கள் பொண்ணு செய்த மாதிரிதான் ஆனால் நான் கோதுமை மாவை ஊற வைத்து அதில் இருந்து பாலை எடுத்து இரவு முழுவதும் பரிஜில் வைத்துவிட்டு அடுத்த நாள்தான் அல்வா செய்தேன் அப்படித்தான் திருனெல்வேலி அல்வா செய்வதாக அல்வா கடை ஒனர் சொன்ன வீடியோ ஒன்றை பார்த்து அதன் படி செய்தேன் ஆனால் அவர்கள் கோதுமையை ஊறவைத்து அதில் இருந்த பாலை எடுத்து அடுத்த நாள் செய்வார்களாம் ஏறக்குறைய அப்படி இருப்பதாக என் அல்வா சாப்பிட்ட என் நண்பர்கள் சொன்னார்கள்
பதிலளிநீக்குஆமாம் மதுரைத் தமிழன். நெல்லைல, முழு சம்பா கோதுமையை ஊறவைத்து அரைத்து பாலெடுத்துச் செய்வார்கள். அந்தக் காலத்தில் (35 வருடங்களுக்கு முன்பு), வேலையாட்கள் கை ஒடியுமட்டும் கிண்டிக்கொண்டே இருக்கணும். இப்போ அதனை ஆட்டமேட் செய்துவிட்டார்கள். (முன்னெல்லாம் 4 மாசத்துக்கு ஒரு தடவை கொஞ்சம் அல்வா வாங்குவாங்க. இப்போல்லாம் மக்கள் எவ்வளவு பர்சேஸ் பண்றாங்கன்னு நினைக்கறீங்க... டாஸ்மாக் கடை கெட்டது. அவ்வளவு கூட்டம். கிலோ கிலோவா வாங்கித் தள்ளறாங்க. ஒரு நாளுக்கு இரண்டு முறை லாரியில் சரக்கு வந்து கடைல இறக்குவாங்க.... அப்புறம் ஏன் டயபடீஸ் வராது..ஹாஹா)
நீக்கு//என் நண்பர்கள் சொன்னார்கள்// - அப்போ மனைவிக்கு அல்வா (நிஜ அல்வா) கொடுக்கலையா? என்ன அநியாயம்?
நீக்குஇன்னைக்கு எல்லோருக்கும் அல்வா கொடுத்துட்டீங்க. நாளைக்கு வேறென்ன கொடுக்க போறீங்க?
பதிலளிநீக்குவாங்க உண்மையானவன்... நாளை என்ன என்பதை யாரறிவார்? எவர் எழுதிய கதை என்று உங்களைப்போல் நானும் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறேன்...
நீக்குஅல்வா செய்முறைக்கு நன்றி ஐயா...
பதிலளிநீக்குவருகைக்கு மிக்க நன்றி திண்டுக்கல் தனபாலன் அவர்கள்.... எலெக்ஷன் நேரம்... பிஸினெஸ் அஃபெக்ட் ஆகுதா?
நீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
நீக்கு@தி.தி - பதிலில் எப்படி லிங்க் கொடுக்கறீங்க? நீங்க நிறைய தெக்கினிக்குகள் உபயோகப்படுத்தறீங்க. பாராட்டுகள்.
நீக்கு'அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்' - "உயர்சால் பத்தினியை உயர்ந்தோர் ஏற்றணும்' - "ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்" - இதெல்லாம் நான் கடந்த 40 ஆண்டுகளில் கண்டதே இல்லையே தி.தனபாலன் சார்.
A1 தெரியாமல் இருக்குமா ஐயா... A2 சிறையில்...
நீக்கும்... அதே சூப்பர் அல்வா தான்...
தி.தனபாலன் சார்... அரசியல் என்பது அவரவர் தங்களுக்குத் தோதானவற்றைப் பேசுவது. அதனால்தான் பெரும்பாலும் எ.பி. தளத்தில் அரசியல் சம்பந்தமானவைகளை அவங்க எழுதுவதும் கிடையாது, வெளியிடுவதும் கிடையாது.
நீக்குஎப்போதுமே தங்களுக்குப் பிடித்தவர்கள் செய்யும் இமாலய குற்றங்களை நாம் தேவையில்லாமல் 'அவங்களா.. ரொம்ப நல்லவங்களாச்சே..புத்தருக்கு அடுத்தது அவங்க குடும்பம்தானே. நானே சர்டிபிகேட் ரெடி பண்ணியிருக்கேனே' என்ற ரீதியில் ஜஸ்டிஃபை செய்வோம்... நமக்குப் பிடிக்காதவர்கள் என்ன செய்தாலும் அதில் குற்றம் காண்போம். நமக்குத் தோதுப்படுபவைகளுக்கு 'உச்ச நீதி மன்றமே சொல்லிடுச்சு..பெரியவங்க சொன்னா பெருமாளே சொன்ன மாதிரி' என்போம். நமக்குத் தோதுப்படாதவைகளுக்கு 'உச்ச நீதி மன்றமா? அதையே விலைக்கு வாங்கிட்டாங்க' என்று வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோன்னு பேசுவோம். இல்லைனா, 'ஐயோ பாவம்..இவங்களுக்கு இப்படி தண்டனை தரலாமா, இவ்வளவு காலம் சிறையில் இருந்துவிட்டார்களே' என்று நாமே உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பதவிக்கு நம்மையே உயர்த்திக்கொண்டு பேசுவோம்.
இது மனித இயல்பு. இதற்கு யாரும் விதிவிலக்கல்ல.
உச்ச நீதிமன்றமாவது ___ராவது...! சாதாரண மக்களுக்கு எதன் மேலும் நம்பிக்கை இல்லை... சி பி ஐ, வங்கி, தேர்தல் ஆணையம் உட்பட தகர்க்கப்பட்டு அடிமையாக்கப்பட்ட பல தன்னாட்சி ஆணையங்கள்...! வாழ்க நலம்...!
நீக்குஅனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குவாழ்க வளமுடன் கோமதி அரசு மேடம்
நீக்குஅருமையான செய்முறை.
பதிலளிநீக்குமிக்க நன்றி ராமலக்ஷ்மி மேடம்..
நீக்குஉங்கள் மகள் செய்த அல்வா மிகவும் அருமையாக இருக்கிறது. படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது.
பதிலளிநீக்குநானும் இரண்டு தீபாவளிக்கு சம்பா கோதுமையை ஊறவைத்து அரைத்து பால் எடுத்து செய்து இருக்கிறேன்.
மைதாமாவை பிசைந்து வைத்து விட்டு ஒரு மணி நேரம் கழித்து பிசைந்து பிசைந்து பால் எடுத்து அல்வா செய்து இருக்கிறேன் அதுவும் தீபாவளிக்கு தான்.
நீங்கள் சொல்வது போல் கஷ்டபட வேண்டாம் கடையில் கிடைக்கிறது என்றாலும் நாமே செய்தோம் என்ற மகிழ்ச்சிக்கு ஈடு ஏது. அதுவும் குழந்தை உற்சாகமாய் செய்து இருக்கும் போது ஒன்று சொல்லாமல் பாராட்டி நீங்கள் சாப்பிட்டதே பெரிதுதான்.
வாங்க கோமதி அரசு மேடம்... தீபாவளிகளுக்கு அல்வா செய்திருக்கிறீர்களா? நான், ஏகப்பட்ட முந்திரிகளைப் போட்டு இதே அல்வாவைச் செய்துபார்க்கணும்னு நினைத்திருக்கிறேன் (அதாவது 1/4 கிலோ அல்வாவில், பாதிக்கும் மேல் முந்திரி).
நீக்குஅல்வா நன்றாக வந்ததில் என் மகளுக்கு மகிழ்ச்சி பெருமை. எனக்கு, அவள் ஆர்வத்தைக் கண்டு மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. என்ன இருந்தாலும், நம் மக்கள் செய்யும் சிறிய செயலும் நமக்கு பெரிய பெருமையாக இருக்கும் இல்லையா கோமதி அரசு மேடம்...
உங்கள் மகளுக்கு பாராட்டுக்களை, வாழ்த்துக்களை சொல்லிவிடுங்கள்.
பதிலளிநீக்குநிச்சயம் சொல்றேன் கோமதி அரசும் மேடம்... நன்றி
நீக்குருசித்தேன், அருமை.
பதிலளிநீக்குவாங்க முனைவர் ஜம்புலிங்கம் சார்... நன்றி
நீக்குLike father, like daughter. சமையலில் நிறைய ஆர்வம். கேட்க சந்தோஷமாக இருக்கிறது.
பதிலளிநீக்குநானும் இந்த முறையில் அல்வா செய்வதுண்டு. எனக்கு பாம்பே ஹல்வாவை விட திருநெல்வேலி அல்வாதான் பிடிக்கும். மஸ்கட் ஹல்வா சாப்பிட்டிருக்கிறீர்களா? ஒரு டேபிள் ஸ்பூன் அதை சாப்பிட்டால் போதும், ஒரு வேளை சாப்பாட்டை ஸ்கிப் செய்து விடலாம்.
வாங்க பானுமதி வெங்கடேச்வரன் மேடம்.... கல்ஃபில் 25 வருஷமா இருந்த என்னிடம் மஸ்கட் அல்வாவைப் பற்றிக் கேட்கறீங்களே.... எனக்கு மஸ்கட் அல்வா பிடிக்கும். ஆனா என் பசங்களுக்கு பஹ்ரைன் அல்வாதான் பிடிக்கும். மஸ்கட் அல்வாவில் உள்ள எனக்குப் பிடித்த வாசனை, அவங்களுக்குப் பிடிப்பதில்லை.
நீக்கு//ஒரு டேபிள் ஸ்பூன் அதைச் சாப்பிட்டால் // தோசை மாவு கரண்டில ரெண்டு கரண்டி அல்வா சாப்பிடுபவனிடம் ஸ்பூன் அளவுலாம் சொல்லி டென்ஷன் ஆக்குறீங்களே...ஹாஹா
@கீதா அக்கா: வெல்லம் போட்டு, வெங்கல உருளியில் கிளறும் அல்வாவின் ருசி அலாதிதான்.
பதிலளிநீக்குஎனக்கு ஒரே கன்ஃப்யூஷன். பரங்கிக்காய் அல்வாவைத் தவிர வேறு எந்த அல்வாவும் வெல்லம்போட்டுச் செய்ததாய் நான் கேள்விப்படலை... இதுலவேற நீங்க 'ருசி அலாதி'ன்னு சொல்றீங்க.
நீக்குசர்க்கரை போட்டு தீபாவளிக்குக் கிளறும் அல்வாவும் வெண்கல உருளியிலேயே கிளறுவேன். அதான் வசதி! சூடு தாங்கும்.
நீக்குபறங்கிக்காய் அல்வாவுக்குப் பால்விட்டுச் சர்க்கரை போட்டு பாதம் எஸென்ஸோ, பிஸ்தா கலரோ போட்டுச் செய்தால் நன்றாக இருக்கும்.வெல்லம் போட்டுத் தான் பண்ணணும்னு இல்லை!
நீக்குபரங்கிக்காய் - சர்க்கரை போட்ட அல்வாவா? முயற்சிக்கிறேன் கீசா மேடம்...... நன்றி
நீக்குஇதுக்காகவே வெல்லம் போட்டு அல்வா கிளறி, நீங்கள் எங்கள் வீட்டுக்கு வரும்பொழுது கொடுத்து உங்கள் வாயை அடைக்கிறேன்.
பதிலளிநீக்குமிக்க நன்றி பா.வெ. மேடம்.... ஆனால் கடைசி வார்த்தைகள்தான் என்னைக் குழப்புது. அல்வா, தட்டை விட்டு வரவில்லை, மைசூர்பாக் கல் மாதிரி இருக்கு என்றெல்லாம் சொல்வதுபோல, வெல்லம்போட்ட அல்வா என் வாயை அடைக்கும்கிறீங்களே.... இதுல ஏதேனும் உள்குத்து இருக்கோ? (ஏய்... நல்லவங்களை சந்தேகப்படாதே... நான் எனக்குச் சொல்லிக்கொண்டேன்)
நீக்குஎனக்கு அல்வா பிடிக்கும்ன்னு செய்முறையை சொன்னதுக்கு நன்றி..
பதிலளிநீக்குதிருநெல்வேலில அல்வா வாங்கும் டிப்சை சொன்னதுக்கும் நன்றி...
ஆனா, எனக்கு திருநெல்வேலி அல்வாவைவிட மதுரை பிரேமா விலாஸ் அல்வாதான் பிடிக்கும்
வாங்க ராஜி.... திருநெவேலி அல்வா உங்க ஊர் கடைகள்லயும் கிடைக்கும் சந்தேகம் இருந்தால் வாங்கிச் சாப்பிட்டுப் பாருங்கள்னு சொல்லிடுவேன். ஆனா நான் இதுவரை மதுரை பிரேமா விலாஸ் அல்வா (அதிலும் முந்திரி அல்வா) சாப்பிட்டதே இல்லை..... அது சரி.... எப்போ எனக்கு கொரியர்ல அனுப்பறீங்க?
நீக்குஅருமையா இருக்கு ..
பதிலளிநீக்குஇதே முறையில் ஆன அந்த கேரமல் மட்டும் செய்யாமல் நானும் செய்தது உண்டு ...அப்படியே திருநெல்வேலி அல்வா போல வந்து ...எல்லாரும் ரொம்ப விரும்பி சாப்பிட்டாங்க ...
வாங்க அனுராதா ப்ரேம்குமார். என்னதான் நாம் செய்தாலும் சாந்திவிலாஸ் அல்வா போல் வராது.
நீக்குகும்பகோணத்துல ஆண்டவன் ஆஸ்ரமத்திலிருந்து நடக்கும் தூரத்தில் முராரி ஸ்வீட்ஸ் பெரியகடைத் தெருவில் இருக்கிறது. அதற்கு அருகில் சிறிய ஸ்வீட்ஸ் ஸ்டால் ஒன்று இருக்கிறது. இது பாரம்பர்யமான கடையாம். அது சோன்பப்டிக்குப் பெயர்பெற்றது என்று கடைக்காரர் சொன்னார். அங்கு ஜிலேபி (ஜாங்கிரி) மிக அருமையா இருந்தது. கும்பகோணம் தொடர்பா நீங்க இடுகை எழுதியிருந்ததுனால உங்களுக்கு இந்தத் தகவல்..
நெல்லை ஆகா கீதாக்கா நேத்து செமை ஆக்டிவ் போல!!! கமென்ட்ஸ்..இப்பத்தான் பார்த்தேன். நேத்து கொஞ்சம் பிஸி !!!
பதிலளிநீக்குகீதா
இந்த ஊர் வந்துமா பிஸி கீதா ரங்கன்... நான் நினைத்தேன்... காலைல ஆபீஸ் போயாச்சுன்னா அப்புறம் மாலை வரை ஃப்ரீன்னு. ஒரு வேளை நேற்று அல்வா செய்துபார்த்தீர்களோ?
நீக்குஅல்வா ப்ரமாதம். அது என்ன பாத்திரம் இண்டாலியமா
பதிலளிநீக்குவாங்க தேனம்மை லக்ஷ்மணன்... பாத்திரம் என்னன்னு தெரியலையே... நான் இலுப்பச்சட்டி/கடாய்னு சொல்வேன்.
நீக்குஅடடா அல்வாவிற்கு ஸெல்லிலிருந்து கமென்ட் எழுதினேன். அது போலே என்று தெரிந்தது.மீன் குட்டிக்கு நீந்தப்பழகணுமா? மிகுந்த ஆர்வத்துடன்அழகாகவும்,நன்றாகவும் செய்திருக்கிராள். மிகவும் பாராட்டுகள் அவளுக்கு. சொட்டச் சொட்ட நெய் என்று சொல்வார்கள். அது இப்படிதான் இருக்கும். வாயெல்லாம் இனிப்பாக இருக்கிறது. ஸந்தோஷம். நன்றி. அன்புடன்.
நீக்குவாங்க வாங்க காமாட்சி அம்மா... நல்லா இருக்கீங்களா? உங்க பாராட்டுக்கு மிக்க நன்றி. இந்தப் படங்களெல்லாம் அவளே எடுத்தா. அதிலும் `இதில் 2 ¼ கப் ஜீனியைச் சேர்த்து கலக்கணும்.: என்ற வரிகளுக்குக் கீழே வந்திருக்கும் படம் மிக நன்றாக எடுத்திருக்கிறாள்.
நீக்குமிக்க நன்றிம்மா. புத்தாண்டில் வணங்கி உங்கள் ஆசியைக் கோருகிறேன்.
காமாட்சி அம்மாவுக்குப் பிறந்த நாள் வாழ்த்துகளும், நமஸ்காரங்களும். உங்கள் ஆசிகளை வேண்டி
நீக்குகீதா&சாம்பசிவம்
எல்லாமே நன்றாக இருக்கு. உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் புத்தாண்டு ஆசிகள். அதிகம் எழுத முடியாததால் சுருக்கமாக எழுதிவிடுகிறேன்.அன்புடன்
பதிலளிநீக்குமிக்க நன்றிம்மா.
நீக்கு