நட்பெனப்படுவது யாதெனில்
ஜீவி
தெரு முனையில் நுழையும் போதே நெகிழ்ச்சியில் மனம் கனத்தது.
பாருவைப் பார்த்து எவ்வளவு வருஷம் ஆச்சு?.. அதே மனசு கணக்குப் போட்டுப் பார்த்துச் சொன்னது. முப்பது வருஷம்! முழுசா முப்பது வருஷம்!
'நடுவே தொடர்பே இல்லியே!!. எந்த நம்பிக்கையில் இங்கே தான் பாரு இருப்பாள்ன்னு தேடிண்டு வர்றே?' -- என்று அதே மனசு தான் கொக்கி போட்டுக் கேட்டது.
மத்தவங்களுக்கு எப்படியோ, தெரிலே.. என் மனசுக்கு மட்டும் ரெண்டு நாக்கு. ரெண்டு பக்கமும் பேசும்.. 'நியாயத்தைத் தவிர வேறொன்றும் அறியேன், பராபரமே' என்கிற மாதிரி ரெண்டு சைடு பேச்சும் ஏத்துக்கற மாதிரி நியாயமாகத் தான் இருக்கும். அதான் விசேஷமே!
பத்து வருஷம் ஹைதராபாத்திலே; இருபது வருஷம் தில்லிலேன்னு முப்பது வருஷம் ஓடிப்போனதே தெரிலே. இந்த முப்பது வருஷத்திலே நாலைஞ்சு சந்தர்ப்பத்திலே தான் பாருவை நெனைச்சுப் பார்த்திருப்பேன்னு இப்போ நெனைச்சுப் பாக்கறேன். பாருவின் அப்பா அனுப்பி வைச்சிருந்த அவள் கல்யாணப் பத்திரிகை வந்து சேர்ந்த தருணம் அதில் ஒன்று.
சுப்ரமணியன் என்று மணமகனின் பெயர் பார்த்த நினைவு இப்பொழுதும் மனசில் பளிச்சென்று இருக்கிறது. ஆபிஸ் வேலை நெருக்கடி.. கல்யாணத்திற்கு போக முடியவில்லை. காசோலையாய் ஆசீர்வாதப் பணம் அனுப்பி வாழ்த்துக் கடிதத்தோடு முடித்துக் கொண்டதோடு சரி.. 'உனக்கென்ன?.. எங்கே இருக்கோமோ, அங்கே சொர்க்கம்னு ஆகிப் போச்சு இல்லியா' ன்னு அதே மனசு முணுமுணுக்கறது.
கரெக்ட்! முரளி கிட்டே கேட்டா தத்துவ வாதத்தில் இதுக்குப் பேரு என்னவோ சொல்வான். முரளி என்னோட பையன். இருபத்தஞ்சு வயதிலே அசாத்திய ஞானம்.
இந்திய தத்துவ இயலில், பி.எச்டி. பண்ணனும்ங்கறது அவனோட லட்சியம். தில்லிலே அவனோட சர்க்கிளே தனி. உலகளாவிய பார்வை!
சரோஜாவை நான் கைப்பிடிச்ச ரெண்டே வருஷத்லே, பிறந்தவன் முரளி. மூக்கு நுனியும், கண் செருகலும் சரோஜாவையே உரிச்சு வைச்ச மாதிரி இருப்பான். யாராவது இதைப் பத்தி சொன்னா, சரோஜாவுக்கு பெருமை பிடிபடாது.
சரோஜாவிற்கு நெருங்கிய சொந்தக்காரரின் மகளின் திருமணம். சென்னை வருவதாயிற்று. 'எனக்கு வேலையிருக்கு' என்று சென்னை வருவதை முரளி தவிர்த்து விட்டான். என்னால் அப்படி செய்ய முடியாத தர்ம சங்கடம். தவிர சென்னை போனால் ரொம்ப வருஷம் கழித்தானும் பாருவைப் பார்த்து விட்டு வரலாமே என்று மனத்தின் குறுகுறுப்பு வேறே. அதனால் சென்னை வருவது எனது ஒரு பக்க விருப்பமாயும் இருந்தது.
நாளை மறுநாள் தான் நிச்சயதார்த்தம். நண்பரைப் பார்த்து விட்டு நாளை வந்து விடுகிறேன் என்று சரோஜாவிடம் அனுமதி பெற்றுக் கொண்டு அந்தத் திருமணக் கூட்ட கசகசப்பிலிருந்து தப்பி பூந்தோட்டம் வந்து விட்டேன்.
பூந்தோட்டம் தான் என் இளம் வயசு உல்லாசபுரி. பாருவும் நானும் படித்தது இந்த ஊர் மிடில் ஸ்கூலில் தான்.
எதிர்ப்பட்டவர் தெரிஞ்ச முகம் மாதிரி தெரிஞ்சார். 'டக்' குனு கேட்க நா எழும்பலே. நேரே பார்வதி இருந்த வீட்டுக்கே போய்ப் பார்ப்போமேன்னு தோணித்து.
பாரு வீட்டு வாசல்லே தென்னை மரம் இருக்கும்ன்னு ஞாபகம் வந்தப்போ, இந்த முப்பது வருஷம் கழிச்சு அந்தத் தென்னை மரம் அப்படியே இருக்கப் போறதாக்கும்ன்னு முந்தைய நினைப்பை அழிச்சு இன்னொரு நினைப்பு. எல்லாம் இந்த மனசின் குரளி வித்தை தான். அதுவே நினைக்கும். அடுத்த நொடி அதுவே அதை மாத்திக்கும்.
ஆனா அதுவும் சரிதான். தெருவே மாறிப் போய் கிடக்கு. அகலம் குறுகின மாதிரி பார்வைக்கு தெரிஞ்சாலும் பரமபதம் அருகாஷன் பாம்பு கணக்கா தலை ஒரு பக்கம் வால் ஒரு பக்கம்ன்னு நீண்டு கிடந்தது என்னவோ அப்படியேத் தான் இருக்கு..
இதோ, நான் இருந்த வீடு. முன்பக்க திண்ணை இல்லை. தூக்கிக் கட்டி அடையாளம் தெரியாம மாறிப் போயிருக்கு. மிஞ்சினது வாசல் அடிபம்ப் ஒண்ணு தான். 'உள்ளே போய் இப்போ யார் இருக்கானு பாக்கலாம்ங்கற நினைப்பு மூர்க்கத்தனமாய் மாய்ந்து போனது. 'பாருவைப் பார்த்து பேசின பிறகு தான் மத்ததெல்லாம்'ன்னு உள் மனசு போட்ட ஒரே போடில் கால் எட்டிப் போட்டு இயங்கியது.
பாரு இருந்தது நான் இருந்த வீட்டுக்கு நாலு வீடு தள்ளி எதிர்ப்புறம். தென்னை மரம் இல்லையே தவிர பாரு வீடு அப்படியே இருந்தது.
மனசைக் கிளறியது. ராகவனும், ரகுராமனும் எட்டாங்கிளாஸ். நானும் பாருவும் ஏழாங்கிளாஸ். எப்பவும் எந்த விளையாட்டுனாலும் நாங்க நாலு பேர் தான். இந்த வீட்டு நடு ஹால்லே ஜன்னல் வழியா மாடி வெளிச்சம் பளீரிடும். அங்கே கேரம் போர்டு விளையாடறோம் பேர்வழின்னு அடிச்ச கொட்டம் கொஞ்சமா, நஞ்சமா?..
ராகவன், ரகுராமன், பாரு, நான்.... நாலு பக்கமும் நாலு பேரு தான். பாருவுக்கு எப்பவும் என் பக்கத்து சைடு தான். அதாவது எதிரணி. Red-ஐப் போட்டு ஃபாலோ தவறாமல் போடுவதில் நான் கில்லாடி. பாருவானால் ஆட்ட ஆரம்பத்திலேயே Red-ஐப் போட்டு விடுவாளே தவிர, கூட ஃபாலோ போடுவதில் சொதப்பி விடுவாள். அந்த சமயத்திலெல்லாம் என் கொக்கரிப்பு உச்சத்தை எட்டும். ஆனா பாருவோட மூஞ்சி மட்டும் குனிஞ்ச வாக்கில் லேசா சிவப்பு தட்டி இருக்கும். நினைக்க, நினைக்க அந்தப் பாருவை இப்போ பார்க்கறச்சே, இதெல்லாம் அவ நினைவில் இருக்கான்னு கேக்கணும் போல இருக்கு.
வாசல் பக்கம் நான் படியேறினதும், "யாரு வேணும்""ன்னு உள்ளேயிருந்து குரல் வந்தது. முன் தாழ்வாரத்தில் வயசானவராய் யாரோ.
"பாரு இல்லியா?... பாரு வீடு இது தானே?"
"எந்தப் பாரு?"
"பார்வதின்னு பேரு. சிவராமன் சார் பொண்ணு..."
"ஓ.. அந்தப் பாருவா?... சிவராமன் இருந்ததுக்கு அப்புறம் இந்த வீடு ரெண்டு கை மாறியாச்சு... இப்போ என் பேரன் இதை வாங்கியிருக்கான். அடுத்த தெருவிலே இருந்தோம். இப்ப இங்கே வந்திருக்கோம். நீங்க கேக்கற பாரு, இந்தத் தெருக் கோடிலே இருக்கா. இதே வாடை தான். பச்சை பெயிண்ட் அடிச்சிருக்கும். போனேள்னா பளிச்சினு தெரியும்.."
"ரொம்ப தேங்கஸ்"ன்னு படியிறங்கினேன்.
பாரு இங்கே தான் இந்தத் தெருவில் தான் இருக்கிறாள் என்கிற நிம்மதி மனசில் படர்ந்தது. எத்தனை வருஷம் கழித்துப் பார்க்கப் போகிறோம்?.. பார்த்தவுடனே தெரிஞ்சிப்பாளா?.. டக்குனு தெரியாட்டாலும் தப்பில்லை. பாவம், அவளைச் சொல்லி குத்தமில்லை. எத்தனை வருஷம் ஆச்சு?...
அப்போ இருந்த நாணா இல்லை தானே நானும். இப்போ?...
மாந்தோப்பில் கண்ணாமூச்சி விளையாடினது.. தோப்பு காவல்காரனுக்கு டேக்கா கொடுத்திட்டு மரம் ஏறி பாருவுக்கு ரொம்பப் பிடிக்குமேன்னு நான் பறிச்சுப் போட்டதெல்லாம்........
ஓ... பச்சை பெயிண்ட வீடு வந்தாச்சு....
ஒற்றையாய் நீள வாக்கில் வீடு.
கோலம் போடுவதென்றால் அந்த வயசிலேயே பாருவுக்கு உயிர்.
வாசலில் கோலம் இல்லாதது மூளியாய் பட்டது. வாசக் கதவு சாத்தியிருந்தது. ஆனால் பக்க ஜன்னல் திறந்திருந்தது. ஜன்னல் பக்கத்தில் போகையிலேயே புகைமுட்டம் கண்ணைக் கசக்கியது.
அதோ, அங்கே... ஒருக்களித்த ரூம் கதவு பக்கம் நின்று கொண்டிருப்பது..... ஆ! பாருவே தான்.. மூப்பின் ஆக்கிரமிப்பில் முகம் மட்டும் தெளிவாய்...
அக்னிப் புகை. எதிரில் மங்கலாய்... வாலிபப் பையன் அக்னியில் நெய் வார்த்துக் கொண்டிருக்க, அருகில் இருந்த வேதியர் கேட்பது இங்கு எனக்குக் கேட்டது.
"ஒன்னோட அப்பாக்குத் தானே சிராத்தம்?.. கோத்திரம்?.. பேர்?.."
பையன் சொகிறான்: "ஸ்ரீவத்ச கோத்திரம்... சுப்ரமண்ய சர்மா..."
எனக்குக் கீழே தரை நழுவின மாதிரி இருந்தது..
கரகரவென்று வெளிப்பட்ட உப்பு நீரில் கன்னம் நனைந்தது.. அக்னிப்புகை மட்டும் காரணமில்லை.
மனம் மெழுகாய் இருந்தால் இப்படித் தான். வாழ்க்கையின் எந்த வெப்ப நெருங்கலையும் தாங்க முடிவதில்லை.
அனைவருக்கும் அன்பின் வணக்கம்...
பதிலளிநீக்குவாழ்க நலம்..
வணக்கம் துரை செல்வராஜூ ஸார்.. வாங்க.. வாங்க...
நீக்கு>>> மனம் மெழுகாய் இருந்தால் இப்படித் தான்... வாழ்க்கையின் எந்த வெப்ப நெருங்கலையும் தாங்க முடிவதில்லை...<<<
பதிலளிநீக்குஎன் மனம் தான் இப்படி என்றால் உங்கள் மனமும் இப்படித்தானா!?...
ஆனால் -
மெழுகு மனம் அமையப் பெற்றவர்கள் பாக்யவான்கள் என்று சொல்லுவார்கள்!...
வாங்க, துரை சார். ஆமாம், உணர்ந்து சொல்லியிருக்கிறீர்கள்.
நீக்குஇளாகிய மனம் கொண்டவர்கள் பாக்கியசாலிகள் தான்.
அவர்களால் சட்டென்று நெகிழ முடிகிறது. மற்றவர்கள் உணர்வுகளைச் சுலபமாகப் புரிந்து கொள்ள முடிகிறது. யாரையும் டக்கென்று தூக்கி எறிந்து பேச மனம் வருவதில்லை.
எல்லாவற்றையும் விட கதைகள் கொத்து கொத்தாக பூக்க இந்த மாதிரி மனம் பண்பட்ட நிலமாய் இருக்கிறது.
அனைவருக்கும் வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். ஜீவி சார் கதையா? அருமையாக இருக்கிறது. முடிவை ஒரு மாதிரி ஊகிக்க முடிந்தது. அதோடு வயசும் ஆச்சே! தவிர்க்க முடியாத முடிவு. காலம்பர வரேன். இப்போப் படுத்துக்கப் போறேன்.
பதிலளிநீக்குவாங்க கீதா அக்கா..
நீக்குநல்வரவும், வணக்கமும்.
வாங்க, கீதாம்மா. பூந்தோட்டம் என்று கொண்டேனே தவிர இந்தக் கதை எழுதும் பொழுது நிலைக்களமாய் மதுரை காமாட்சி புர அக்ரஹாரத் தெரு தான் மனசில் அப்படியே ஓடியது. உங்களக்கு மிகவும் பழக்கமான இடம் தான். சிம்மக்கல்லிருந்து வைகை படித்துறை நோக்கி வரும் பொழுது ஆஞ்சநேயர் கோயில் எதிரே லஷமி நாராயணபுர அக்ரஹாரம்.
நீக்குஆஞ்சநேயர் கோயில் பக்கவாட்டில் காமாட்சிபுர அக்ரஹாரம்.
ஏழு, எட்டு வயசில் நான் இருந்த தெரு. நாலைந்து வருடங்களுக்கு முன் அந்தத் தெரு எப்படியிருக்கிறது என்று பார்க்கும் ஆவலில் போயிருந்தேன். அப்பொழுது பார்த்த நினைவு தான் இந்த பூந்தோட்டத் தெருவாய் நினைவில் ஓடியது.
கதையை வாசித்து கருத்துச் சொன்னமைக்கு நன்றி.
லக்ஷ்மிநாராயணபுர அக்ரஹாரம் தேவர் வீட்டுக்கு அடுத்த ஸ்டோரில் (உயரமான படிகள் உண்டு) பெரியம்மா குடும்பம் பல வருடங்கள் இருந்தார்கள். அடிக்கடி அங்கே போவோம். வைக்கத்தஷ்டமி சமாராதனை அந்த ஸ்டோரில் மாடியில் நடக்கும். காமாட்சிபுர அக்ரஹாரத்தில் தெரிந்தவர்கள் இருந்தார்கள். நாங்க இருந்ததெல்லாம் மேலாவணி மூலவீதி! ஆஞ்சநேயர் கோயில் வாசலில் உள்ள பூக்காரர் தான் எங்கள் ஆஸ்தான பூக்காரர். குடும்ப விசேஷங்களுக்கு எல்லாம் அவர் தான் பூக்கள், மாலைகள் கொடுப்பார். அதிலும் அந்த மஞ்சள் முல்லை மாலை இருக்கே, 3 நாட்கள் ஆனாலும் வாடாது!
நீக்கு//பாரு வீட்டு வாசல்லே தென்னை மரம் இருக்கும்ன்னு ஞாபகம் வந்தப்போ, இந்த முப்பது வருஷம் கழிச்சு அந்தத் தென்னை மரம் அப்படியே இருக்கப் போறதாக்கும்ன்னு முந்தைய நினைப்பை அழிச்சு இன்னொரு நினைப்பு. எல்லாம் இந்த மனசின் குரளி வித்தை தான். அதுவே நினைக்கும். அடுத்த நொடி அதுவே அதை மாத்திக்கும்.// இந்த அக்ரஹாரங்களில் தென்னை மரங்கள் இருக்க வாய்ப்பில்லை என்பதால் நான் கும்பகோணம் அருகிலுள்ள பூந்தோட்டத்தையே நினைத்துக் கொண்டேன்.
நீக்குகாமாட்சி புர அக்ரஹாரத் தெருவில் நாங்கள் வசித்த காலத்தில்
நீக்குகிட்டத்தட்ட ஆறு தென்னை மரங்கள் இருந்தன. நான் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஆதிமூலம் பிள்ளைத் தெருவிலிருந்த எலிமெண்டரி ஸ்கூலில் தான் வாசித்தேன்.
1948 முதல் 1952 வரை எலிமெண்ட்ரி ஸ்கூல் வாசிப்பு. இந்த காலத்தில் தைய்க்கால் தெரு தீ விபத்து என்று அந்தக் காலத்தில் பிரபலப்பட்ட ஒரு தீ விபத்து அருகிலிருந்த பகுதியில் நிகழ்ந்து காமாட்சிபுர அக்கிரஹாரத்திற்கு தீ பரவி, காற்று பலமாக வீசியதால் தென்னை மர பேயாட்டத்தில் தீ கொழுந்து விட்டு எரிய கைக்கு கிடைத்த பொருள்களை அள்ளிக் கொண்டு நாங்கள் வீட்டை விட்டு வெளியேற வெளி வாசலுக்கு வந்து விட்டோம். நல்ல வேளை அப்பொழுது தீ கொஞ்சம் மட்டுப்பட்டு அணைக்கப்பட 4 ஒண்டு குடித்தனங்கள் வீட்டுக்குள்ளேயே தஞ்சம் புகுந்தது நன்றாக நினைவிலிருக்கிறது.
ஆக தென்னை மரங்கள் அந்தத் தெருவில் இருந்தது உறுதி.
அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
பதிலளிநீக்குஅன்பு துரை, ஸ்ரீராம் இன்னும் வரப் போகிறவர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துகள்.
ஜீவி சார் கதையா இன்று.
முப்பது வருட நினைவுகளைச் சுமந்து கொண்டு வந்தவர்க்கு இத்தனை பெரிய அதிர்ச்சியா
வாங்க வல்லிம்மா...
நீக்குஇனிய காலை வணக்கம்.
வாங்க, வல்லிம்மா..
நீக்குஎல்லாம் கதைக்காகத் தான். எழுதுவனுக்கு வாசகரின் கை பிடித்து கூட்டிச் சென்று தான் அடையும் உணர்வுகளை அவரும் அடையச் செய்வதில் ஒரு அலாதியான சுகம். அந்த ஆத்ம திருப்திக்காகத் தான்.
மத்தவங்களுக்கு எப்படியோ, தெரிலே.. என் மனசுக்கு மட்டும் ரெண்டு நாக்கு. ரெண்டு பக்கமும் பேசும்.. 'நியாயத்தைத் தவிர வேறொன்றும் அறியேன், பராபரமே' என்கிற மாதிரி ரெண்டு சைடு பேச்சும் ஏத்துக்கற மாதிரி நியாயமாகத் தான் இருக்கும். அதான் விசேஷமே!//அனேகமாக எல்லாருடைய மனமும் இரண்டு பக்கமும் பேசும். தனக்கு சாதகமான பதிலை எடுத்துக் கொள்ளும்.
பதிலளிநீக்குதில்லியிலிருந்து சென்னை வந்து பூந்தோட்டம் வரை வந்துவிட்டார் நாணா,
அப்போது அந்தப் பழகின பாசம் மிக ஆழமானது தான்.
மணவாழ்வு மாறினால், மனமும் மாறித்தான் விடுகிறது. நான்கு
ஐந்து தடவை நினைத்திருக்கிறாரே.
அதற்கு மேல், மனைவி சரோஜாவுக்கு பாதிப்பாகும்.
மெழுகு மனம் நிறைய கஷ்டப்படும் சார்.
கதை சோகமானாலும் இனிமை..
மணவாழ்வு மாறினால் மனமும் அதற்கேற்ற மாதிரி அட்ஜெஸ்ட் செய்து கொள்கிறது. எல்லாரும் வேண்டும். அந்த எல்லார் அபிலாஷைகளுக்குள் சின்னதாய் தனது சொந்த அபிலாஷையும். அதுவும் மெழுகு மனம் இல்லையா?.. யார் மனமும் தன் நடவடிக்கைகளால் அனாவசிய சஞ்சலங்களுக்கு ஆட்ப்படக் கூடாது என்று அனுசரித்துப் போகிற நிலை. தனக்காக வாழறது என்கிறதை கூடிய மட்டும் சுருக்கிக்கற மனசு. நிறைய இழுத்துப் போட்டுக்கற அல்லாட்டங்கள்.
நீக்குகதை சோகமானாலும் இனிமை என்று தாங்கள் சொல்லியிருப்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது வல்லிம்மா.
அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்!
பதிலளிநீக்குபழைய நட்பை தேடி போன இடத்தில் சந்தோஷமாய் உரையாட முடியவில்லை.
பதிலளிநீக்குமனம் கனத்து போனது முடிவை படித்து.
எங்கோ நன்றாக இருப்பதாக நினைத்துக் கொண்டு இருக்கும் போது இப்படி பார்த்தால் மனம்மெழுகாய் உருகிதான் போகும்.
கதை மிக நன்றாக இருக்கிறது.
அதான் பாயிண்ட் கோமதிம்மா. பழைய நட்புகளோடு தொடர்பு விட்டுப் போன நிலையில் அவர்களைப் பற்றிய நினைப்புகள் மட்டுமே நம்மோடு வாழ்கிறது. அவரவரகளுக்கு ஒரு வாழ்க்கை அமைந்து நல்லபடி இருப்பார்கள் என்று தான் பொதுவாக மனசு எண்னுகிறது. மனுஷ மனம் தானே?.. அதற்கு மாறி அறிய வரும் பொழுது தாங்க முடியாமல் தடுமாறுகிறது. நீங்கள் சொல்வது சரி தான். அந்த நாட்களில் பெரியவர்கள் சொல்வார்கள்: 'அடிக்கடி பார்க்க முடியாவிட்டாலும் எல்லாரும் அவரவர் இடத்தில் ஷேமமாய் இருந்தால் சரி' என்று.
நீக்குஅன்பர்கள் அனைவருக்கும் அன்பான காலை வணக்கம்.
பதிலளிநீக்குநம்ம வூடு தானே?.. நிதானமா படிச்சு நினைப்பதைச் சொல்லுங்க..
அன்பர்களோடு அளவளாவ பின்னாடி வர்றேன்.. நன்றி.
எத்தனை வயசு ஆனாலும் பள்ளிப்பருவ ஈர்ப்பை மறக்க முடிவதில்லைதான்.
பதிலளிநீக்குஆமாம், ஜோசப் சார். இளமை அனுபவங்கள் அலாதி சக்தி கொண்டவை தான். இது பற்றி தொடித்தலை விழுத்தண்டினார்
நீக்கு(இது அவர் இயற்பெயர் அல்ல) என்ற புறநானூற்று காலத்து பெரியவரின் பாடல் வரிகள் நினைவுக்கு வருகின்றன.
அருமையான கதை...
பதிலளிநீக்குஇப்படித்தான் பல வருடத்துக்குப் பிறகும் இருப்பார்கள் என்ற நினைப்புடன் போய் மாற்றத்தைப் பார்த்து ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பது வலி.
முடிவு மனம் கனக்கச் செய்தது.
வாழ்த்துக்கள் ஐயா.
வாங்க, பரிவை. எழுத்துக்கான பரிசுகள் தேடி வந்தமை அறிந்து சந்தோஷப்பட்டேன். அந்த வீராப்பு கதையை எங்கள் பிளாக்கில் பகிர்ந்து கொள்ளுங்களேன். எல்லாரும் வாசித்துக் களிக்க வாய்ப்பாய் இருக்கும். கைப்பேசியில் பொடி எழுத்துக்களில் என்னால் வாசிக்க முடியவில்லை. எழுத்துக்களை பெரிசு பண்ணி பார்த்தும் வாசிக்க முடியாதது வருத்தமாக இருந்தது.
நீக்குஆபிதின் பக்கங்களில் அப்பாவின் நாற்காலி வாசித்து விட்டேன்.
அருமை.
மனம் கனத்தாலோ, இலேசானாலோ எழுத்தாளனுக்கு வெற்றி என்பது தாங்களும் அறிந்த சூத்திரம் தானே?..
பலவருடங்கள் உருண்டு ஓடினாலும் பழைய நிகழ்வுகளையே நினைத்துக் கொண்டிருக்கும் மனம் ... இறுதியில் காண்பதுவோ பெரிய துன்பம் .அதுவும் இடிதான்.
பதிலளிநீக்குநினைப்பு என்பது மனுஷ இனம் பெற்ற வரம். அது தான் உரமும் கூட. இரவு, பகல் போல துன்பமும், இன்பமும் கலந்து தானே வாழ்க்கையாகியிருக்கிறது என்பது வேதாந்திகளுக்கு சொல்வதற்கு சுலபமாக இருக்கிறது. ஆனால் நமக்குத் தான் இரண்டையும் சரிசமமாகப் பாவிக்க முடிவதில்லை. என்ன செய்வது?..
நீக்குகதை.... நான் செய்ய நினைத்திருந்து செய்யத் தயக்கமாக இருந்த விஷயத்தை முழுவதுமாக எடுத்துக்கொண்டுள்ள கதை.இவ்வளவு வருஷம் கழித்து போய்ப் பார்க்கலாமா அவள் சகோதரனை... அவர்களெல்லாம் இப்போது எப்படி இருப்பார்கள் என்பதெல்லாம் என்னைத் தயங்கவைப்பவை.
பதிலளிநீக்கு//ஒன்னோட அப்பாக்குத் தானே சிராத்தம்?.. கோத்திரம்?.. பேர்?..// - அம்மாவோ வீட்டில் இருக்கிறார். பையன் ச்ராத்தம்/தர்ப்பணம் பண்ணறான். இதுல வாத்தியார் எப்படி இந்தக் கேள்வியைக் கேட்பார்? கோத்திரம், பெயர் சொல்லு என்று மட்டும்தானே கேட்பார். பெயர் 'சுப்ரமண்ய சர்மா' என்று சொன்னாலே படிப்பவர்கள் புரிந்துகொள்ள முடியுமே
பொத்தாம் போக்கில் நமக்குத் தெரிந்திருக்குமே தவிர அந்த காலத்தில் எல்லாம் வாத்தியார்கள் சொல்லித் தான் ச்ராத்த தேதி கரெக்டாக நமக்குத் தெரிய வரும். அதற்காக ஒரு டைரியே மெயிண்டெயின் பண்ணுவார்கள். ஞாபகப்படுத்துவார்கள்.
நீக்குஇப்பொழுதெல்லாம், குறிப்பாக சென்னையில் எல்லாம் அப்படியில்லை, நெல்லை. நாமாக தொடர்பு கொண்டு கேட்டுக் கொள்ள வேண்டும். வழக்கமாக வரும் அவரே கூட வராமல் சில சம்யங்களில் வேறு வாத்தியார்களை பிக்ஸ் பண்ணுவதும் உண்டு. வருபவரும் முன்னாடியே கூட கேட்டுக் கொள்ள மாட்டார்கள். அதற்கான தருணத்தில் தான் கர்த்தாவிடம் கேட்பார்கள்.
ஒரு இடத்தில் தான் அந்தப் பெயர் வருகிறது. பாருவின் திருமண அழைப்பில் கோடி காட்டிய சுப்ரமணியன் என்ற பெயரை வாசித்து வரும் வாசகர் நினைவில் வைத்திருப்பார் என்று எதிர்பார்க்க முடியாது. யார் இந்த சுப்ரமண்ய சர்மா என்று சிறு தடுமாற்றம் ஏற்படும்.
அதுவும் தவிர இதெல்லாம் கதை எழுதுபவன் தான் எழுதும் கதையின் காட்சிப்படுத்துதலில் தத்ரூப உணர்வை வாசகர்களுக்கு அளிக்க நுணுக்கமாக சில விவரங்களை அளித்தால் வாசிப்பு அனுபவம் மேம்படும். அதற்காகத் தான்.
கதையை வாசித்து சந்தேகங்களைக் கேட்பது நல்லது. நன்றி, நெல்லை.
இன்னொன்று ஜீவி சார்...
பதிலளிநீக்குவாழ்க்கையில் கடந்த பாலங்களை, நாம் மீண்டும் போய்ப் பார்க்க ஆசைப்படுவது சகஜம். ஆனால் பார்க்கக்கூடாது என்பது என் எண்ணம். அது நம் மனதில் இருக்கும் ஓவியத்தைக் கலைத்துவிடும், மனம் வெறுமையில் ஆழ்ந்துவிடும் என்பது என் நம்பிக்கை. அப்படித்தான் எனக்கு சில இடங்களில் நிகழ்ந்திருக்கிறது. அதனால்தான் 4ம் வகுப்பு படிக்கும்போது, 7ம் வகுப்பு படிக்கும்போது இருந்த இடங்களைக் காணவேண்டும் என்ற ஆவல் இருந்தபோதும், செல்லத் தயங்குவது.
நானும் போய்ப் பார்த்து ஏமாந்தேன் ஒரு தடவை. மனிதர்கள் வீடுகள்,தெருக்கள் எல்லாம் புது வேடம் போட்டுக் கொண்டிருந்தன.
நீக்குபழகிய முகம் ஒன்று கூட இல்லை.
அசுர வளர்ச்சி. சிலபேருக்கு நல்ல அதிர்ஷ்டம் வாய்க்கிறது. அதுவும் கிராமங்களாக இருந்தால்
புதுப் பொலிவும் பழைய பொலிவும் இருக்கும் என்று நம்புகிறேன் முரளிமா.
ஓவியமாக மனத்தில் படிந்தது அழிந்து விடக் கூடாதே என்று பதட்டப்படும் மென்மையான மனம். புரிகிறது.
நீக்குஆனால் மனத்தில் எந்தக் காலத்திலோ படிந்ததை பல வருடங்கள் கழித்துப் போய்ப் பார்க்கும் பொழுது ஏற்படும் வினோதமான உணர்வு அன்று பார்த்த ஓவியத்தின் காலச்சிதைவை இன்னும் மேலான புரிதலுடன் மனசில் பதிய வைக்கும்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சிறுவனாக இருந்து பார்த்த நிலை, பின்னால் தலைகீழாக மாறிக் காட்சி அளித்துப் போன போது பதறியே போனேன். எனது 'மறக்க முடியாத மதுரை நினைவுகள்' பதிவில் அது பற்றி நாங்கு பகுதிகளாகப் பிரித்து எழுதியிருக்கிறேன்.
அதே போல, நெல்லை போன போது 'நெல்லை லாட்ஜில்' தங்க வேண்டி ஜங்ஷனிலிருந்து ஆட்டோவில் போன போது திகைத்தேன். ஊருக்குள் உயர்த்திக் கட்டிய பிர்மாண்ட மேம் பாலங்கள் மருட்டின. அந்நாட்களில் உயர்ந்து எழுந்திருந்த நெல்லை லாட்ஜ், மேம்பாலத்தின் அடியில் குட்டியாய்...
ஜீவி ஸார் நானே முரளியாய் நடந்து போனது போன்ற உணர்வு.
பதிலளிநீக்குஎல்லோர் வாழ்விலும் இப்படி நிகழ்வுகள் உண்டுதான் போலும்...
மனம் ஒரு கணம் களமானது.
நீங்கள் போட்டிருக்கிற அந்த போலும் மிகுந்த அர்த்தம் கொண்ட வார்த்தை, தேவகோட்டையாரே!
நீக்குமுரளியில் மட்டும் ஒரு சின்ன கரெக்ஷன். அது முரளியின் அப்பா.
அந்த இடத்தில் கதையை நிறுத்தாமல், இரண்டு வரி கூட எழுதியிருந்தால் கூட கதை லேசாகியிருக்கும்.
வாசித்து தாங்கள் உணர்ந்ததைச் சொன்னமைக்கு நன்றி.
அழகிய கதை, மனதை நெருடுகிறது...
பதிலளிநீக்குதனுஸ் மூவி ஒன்றிலும் இப்படி ஒரு கதை, பெரியவராகி தன் பழைய காதலியை தேடிப்போவார், இறுதியில் வட்ஸப் மூலம் கண்டு பிடிக்கிறார்... அதில் இருவரும் ஒன்று சேர்வதைப்போல முடிகிறது என நினைக்கிறேன்.
வெள்ளை மாளிகையில் இருந்து கொண்டே அதிராவும் இந்தக் கதையை வாசித்து விட்டதில் மிகவும் மகிழ்ச்சி.
நீக்குமனதைத் தொட்ட கதை.
பதிலளிநீக்குகருத்திட்டதிற்கு நன்றி, வெங்கட்.
நீக்குஒன்றைக் கவனித்தீர்களா நினைவில் மட்டும் உருவங்கள் மங்குவதில்லை அதுவே நேரில் காணும்போது ஏமாற்றம்தரும்
பதிலளிநீக்குவாங்க, ஜிஎம்பீ சார்!
பதிலளிநீக்குபார்த்துப் பழகிய காலத்தில் எப்படிப் பார்த்தோமோ அப்படியே உருவங்கள் மனத்தில் பதிந்து விடுகின்றன. அதனால் அப்படி அப்படியே தான் நம்மால் நினைவு கொள்ள முடிகிறது.
நேரில் காண்பது யதார்த்த வாழ்க்கையின் அனுபவ இடிபாடுகளில் சிக்கிய தோற்றம். அதனால் தான் நேரில் காண்பது, என்றும் பதினாறு இல்லை. :) இந்தப் புரிதல் இருக்கும் பொழுது ஏமாற்றமும் இல்லை.
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅருமையான கதை. பழைய நினைவுகள் என்றுமே மறக்க முடியாத இன்பமான சுமைகள்.
பழைய நட்பை நீண்ட வருடங்களாக மறக்க இயலாது பார்க்க வேண்டும், பேச வேண்டும் என்று சென்றவருக்கு அந்த நட்பு இருக்குமிடம் அதேதான் என்பது உறுதியாக தெரிந்ததும் எவ்வளவு சந்தோஷம் வந்திருக்கும். அவையெல்லாம் எதிர்பாராத அதிர்ச்சியில் மனம் கரைந்து தாங்கவொண்ணா துயரத்தில் மெழுகாய் உருகினால் ஏற்படும் மனவேதனையை புரிந்து கொள்ள முடிகிறது. கதை முடிவு சிறந்ததாக உள்ளது.மிகவும் ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்
வாசித்து அனுபவித்து கருத்திட்டமைக்கு நன்றி, சகோதரி.
பதிலளிநீக்குஎவ்வளவு சந்தோஷம்! அடுத்த சில நிமிடங்களில் எவ்வளவு துக்கம்!
சரியான உணர்வில் கதையை அணுகியிருக்கிறீர்கள்!.. நன்றி.
மனதை நினைவுகளால் அசைக்கும் கதை ...அருமை ஐயா
பதிலளிநீக்குவாசித்து பெற்ற உணர்வை சொற்களில் சிறையிட்டுச் சொன்னமைக்கு நன்றி, அனுபிரேம்.
பதிலளிநீக்கு