செவ்வாய், 3 செப்டம்பர், 2019

கேட்டு வாங்கிப்போடும் கதை - களத்து மேட்டுக் காவலன் 2 -

களத்து மேட்டுக் காவலன் -2 
- துரை செல்வராஜூ -
=============================
களத்து மேட்டுக் காவலன் 1

பதினைந்து நாட்களுக்கு முன்பாக -
ஒரு பொன் மாலைப் பொழுது...

கூடுகளைத் தேடிக் குருவிகள் பறந்து கொண்டிருந்த வேளை..

அந்த மாலைப் பொழுது அந்தத் தெருவுக்கே சங்கடமாகப் போகின்றது என்பதை அப்போது யாரும் அறிந்திருக்கவில்லை...

தெற்குத் தெருவுக்குப் பின்னால் தான் குடமுருட்டி ஆறு...

தெற்குத் தெருவிலிருக்கும் வீட்டுக்காரர்கள் எல்லாருமே
கொல்லைப்புற வேலிப் படலைத் திறந்து கொண்டு
கரையைக் கடந்து ஆற்றுக்குள் இறங்கி விடுவார்கள்...

இருபதடிக்கு அகலமான கரை..

வாகை மரங்களும் தூங்கு மூஞ்சி மரங்களுமாக -
பட்டப் பகல் பொழுதே மாலைக் கருக்கல் போலக் கிடக்கும்..

அந்தி மயங்கும் நேரம் என்றால் கேட்க வேண்டுமா?...

மாலை மயங்கிய வேளையில் குளித்து விட்டுக் கரையேறுவது ஒரு சுகம்...

அப்படித்தான் அவள் - அமுதா..
ஈரத்துணியுடன் கரையேறி வந்தபோது
அறிவழகன் சைக்கிளில் வந்து வழி மறித்தான்..

வெட்கத்தால் வெருண்டு போன அருணா தவித்தாள்... தத்தளித்தாள்...

மாலைப் பொன்வெயிலில் மஞ்சள் முகம் மினுமினுக்க
விழிப் புருவங்கள் வில்லாக வளைந்து வினவின...

ஏன்?.... ஏன்டா இப்படி!?..

அருணாவும் அறிவழகனும் பக்கத்துப் பக்கத்து வீடு..

ஒருவரை மற்றவருக்குப் பிடித்துப் போயிற்று...

கண்களால் பேசிக் கொண்டிருந்தவர்கள்
வெகு நாட்களுக்குப் பிறகு

ஏங்ங்...க!..

என்னாங்க?..

சாப்பிட்டீங்களாங்க!..

பழைய சோறும் பச்ச மொளகாயும்!...

இட்லி எல்லாம் பிடிக்காதாங்க!...

இட்டிலியும் பிடிக்குங்க.. இடியாப்பமும் பிடிக்குங்க!

ஏன்?... இந்த தோசை உப்புமா எல்லாம் பிடிக்காதாங்க?...

தோசை பிடிக்குங்க!.. நீங்க செஞ்சுக் கொடுத்தா உப்புமாவும் பிடிக்குங்க!..

இன்னைக்கு நானே சுட்ட இட்லி..ங்க...  பாருங்க மல்லிகப் பூ மாதிரி...

மல்லிகப் பூ மாதிரி இல்லீங்க ... உங்க மனசு மாதிரி இருக்குதுங்க!..

இப்படியான தெய்வாம்சம் பொருந்திய வார்த்தைகளால் வசீகரித்துக்
கொண்டார்கள்... அன்பெனும் வலைக்குள் அகப்பட்டுக் கொண்டார்கள்...

ஆனாலும் இப்போது அருணாவின் இமைகள் படபடத்தன...
அழகிய விழிகளுக்குள் பட்டாம் பூச்சிகள் படையெடுத்தன...

எப்போது பேசினாலும் விழி பார்த்துப் பேசுவான் அறிவழகன்..
அதுவே அருணாவுக்கு மிகவும் பிடித்துப் போயிற்று....

அவன் எப்போதும் தன்னோடு பேசிக் கொண்டு இருக்க மாட்டானா!..
- என்று தான் இருக்கிறாள்...

அதனால்தான்,
இவள் குளித்து விட்டு நடக்கையில் குறுக்காக வந்தானோ!..
ஈரத்துடன் இருக்கையில் இன்முகத்துடன் வந்தானோ!...

நாலெட்டு எடுத்து வைத்தால் வேலியைத் திறந்து கொண்டு
கொல்லைக்குள் ஓடி விடலாம்...

ஆனாலும் -
கால்கள் ஓடுதற்கு மறுக்கின்றனவே...
இவன் இன்றைக்குக் குறுக்கே வந்தான் என்று!...

அது ஒரு பக்கம் இருந்தாலும்
மன்னவன் வந்தான் என்று மகிழ்ச்சி கொள்ளாமல்
மனம் மயங்கி அச்சம் கொள்கின்றதே!.. ஏன்?..

அவன் வந்தால் தான் என்ன?...
வந்து நின்று வடிவழகைப் பார்த்தால் தான் என்ன?..

அவனைத் தான் மனமார நேசிக்கின்றேனே...
அவன் அன்புக்குத் தான் அடிமையாய்க் கிடக்கின்றேனே!...

அறிவே.. என் அறிவே.. ஆரத் தழுவிக் கொள்ள மாட்டேனா உன்னை!..
இந்த நெற்றிப் பொட்டில் முகம் பதித்து கரைத்திட மாட்டாயா என்னை?..

ஈரத் தாவணியை இழுத்து தோள்களை மூடிக் கொண்டாள்...

சிலுசிலு என்று தென்றல் தவழ -
தாவணியின் ஈரம் தோள்களைத் துளைத்தது...

மெல்லிய புன்னகையுடன் அறிவழகன் கேட்டான்...

" என்ன குளியலா!... "

" பாதைய விடுங்க!... "

" நானா தடுக்கிறேன்!.. அந்தப் பக்கத்து வேலிதான் திறந்து கிடக்கே!... "

" நல்லா இருக்கே நியாயம்.. அது உங்க வீட்டு வேலியாச்சே!... "

" ஏன்?... இந்தப் பக்கமா போயி அந்தப் பக்கமா வர்றது!... "

" ம்ம்.. ஆசை.. தோசை... அதெல்லாம் அப்புறம்!... "

" எப்புறம்?... "

அவனுடைய கேள்வியே இவளது காதுகளுக்குள்
குளிர் காற்றாய் குறுகுறுத்தது..

" எங்கழுத்துல நீங்க தாலி கட்டுனதுக்கு  அப்புறம்!... "

" ஓ!.. இதெல்லாம் தெரிஞ்சிருக்கிற நீங்க
நான் வர்ற நேரமாப் பார்த்து ஏன் குறுக்கால வந்தீங்களாம்!... "

பொல்லாத பயலா இருக்கான்... எல்லாத்தையும் புரிஞ்சு வெச்சிருக்கானே!..

அருணாவின் மனம் ஆனந்தக் கூத்தாடியது...

அந்த அன்புக் குயில்கள் இரண்டும் ஆனந்தம் கொண்டாடுவதற்குள்
கொல்லைப் புறத்தில் இருந்து பெரிய சத்தம் கர்ண கடூரமாக..

" புள்ள வளர்த்திருக்கா பாரு... புள்ள!..
கட்டை வெளக்குமாறு மாதிரி!.. "

அதிர்ந்து நின்ற அறிவழகன் -

" சரி.. சரி.. நீ போ.. உங்க ஆத்தா பார்த்துட்டாங்க!... "
சைக்கிளுடன் நகர்ந்தான்...

" அவங்க எப்பவுமே இப்படித்தான்... அது எங்க அம்மா மேல உள்ள கோபம்!... "

புன்னகைத்தபடி நடந்து வேலிப் படலைத் திறக்கவும் -
ஆத்தாவின் கோபக் கூக்குரல் அவளைத் தடுத்து நிறுத்தியது...

" ஏன்டீ.. அவங்கூட சரசம் எல்லாம் முடிச்சிட்டியா?... "
" இன்னும் ஏதும் பாக்கி வெச்சிருக்கியா?... "

" ஆத்தா!.. ஏன் இப்படியெல்லாம் பேசறீங்க?.. "

" வேற எப்படி பேசணுங்கறே?... உன்னச் சொல்லிக் குத்தமில்லடி..
மாடு மாதிரி வளர்த்து விட்டுருக்காளே.. அவளச் சொல்லணும்... "

" ஆத்தா!?.. " - அதிர்ந்து சப்தமிட்டாள் அருணா...

அதற்குள் வீட்டுக்குள்ளிருந்து வந்த கனகவல்லி - அருணாவின் அம்மா -

" இத்தனை வயசாகியும் யாருக்கிட்ட எப்படிப் பேசணும்...ங்கறது தெரியலை...  பேத்தி...ங்கற பிரியம் கொஞ்சங்கூட இல்லாம... இப்படியா வக்கிரம்?... "

" எம்மேல கோவம்...ன்னா அத எங்கிட்ட தான் காட்டணும்...
அத விட்டுட்டு அந்த சின்னப் புள்ளை கிட்ட என்ன ஆகாத பேச்சு!... "

" எதுடி.. ஆகாத பேச்சு?... குளிச்சுட்டு ஈரத் துணியோட வர்றவளுக்கு
தெருவுல போறவங்கூட என்ன பேச்சு...ன்னு கேட்டா அது ஆகாத பேச்சா?... "

ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்காமல் பேசவும்
அங்கே விபரீதம் வளர்ந்தது...

" சரி.. அப்படியே இருந்தாலும்
அதச் சொல்றதுக்கு ஒரு வரமுறை இருக்கா இல்லையா?... "

" என்னா வரமொறை.. எதுக்கு வரமொறை?...
என்னப் பார்!.. என் அழகப் பார்!....ன்னு
உம்மவ கொழுப்பெடுத்து நிக்கிறா..
அவளக் கொஞ்சிக்கிட்டு இருக்கச் சொல்றியா?.. "

" பாம்பைக் கண்டா கண்ட இடத்தில..ய அடிச்சிடணும்...
அதை விட்டுட்டாத் தேடக்கூடாது!...
அதுக்குள்ள அது ரெண்டு குட்டியோட வந்தா?..
சந்தியில சிரிப்பா சிரிச்சு தான் நிக்கணும்!.. "

" யாரப் பார்த்து பாம்பு...ங்கிறீங்க...
குட்டி குளுவான்...ன்னு எதுக்கு சொல்றீங்க?... "

கனகவல்லிக்கு ஆத்திரமும் கண்ணீரும் பொங்கியது...

" ஒன்னுமே தெரியாமத்தான் நீயும் இருக்கே... ஒம்மகளையே கேளு...
அவ தானே சாரைக் கிடா தேடிக்கிட்டு இருக்கா!.. "

" அத்தே!... " - சீற்றமானாள் கனகவல்லி..

" அம்மா... நீ பேசாம போ.. ஒருத்தருக்கொருத்தர் பேச்சை வளர்த்துக்கிட்டு!...  என்னோட மனசுக்கு எது சரி.. எது தப்பு...ன்னு நல்லாவே தெரியும்... "

" தெரியும்..டி.. தெரியும்!...
இன்னும் நாலஞ்சு மாசத்தில நல்லாவே தெரியும்!... "

கனகவல்லியின் மாமியார் விஷத்தைக் கக்கியபடி
கீழே கிடந்த கட்டை விளக்குமாற்றை எடுத்து விட்டெறிந்தாள்...

அது வேலியின் அருகில் போய் விழுந்தது...

வேலிக்கு அந்தப் பக்கம் நின்று கொண்டிருந்த
அறிவழகன் திடுக்கிட்டான்...

" ஆத்தா.. தேவையில்லாம ஏன் பேசுறீங்க... "

" யார்டா... நீ ?.. குடி கெடுத்த பயலே!...
குட்டியாடு ஓட்டிக்கிட்டு ஊருக்குள்ள வந்த பயலுங்க..தானே!...
குடியானவத் தெருவுல வீடு வாங்கிட்டோம்...ங்கிற திமிரு!?... "

அதற்குள் ஒற்றையாய் இரட்டையாய் அங்கே ஆட்கள் கூடி விட்டார்கள்...

 " வயசுப் புள்ளைக்கிட்ட வக்கணையாப் பேசறது...
முதல்ல மனசைக் கெடுப்பானுங்களாம்?..
அப்புறமா மானத்தைக் கெடுப்பானுங்களாம்?...
இதே பொழப்பு மானங்கெட்ட பயலுங்களுக்கு!.. "

" உன்னைச் சொல்லி என்னடா ஆகிறது?..
இங்க இருக்கிற சிறுக்கிகளைச் சொல்லணும்!...
திண்ணை எப்போ காலியாகும்..ன்னு இருக்காளுங்க.... "
- என்றபடி கூச்சலிட்டாள் கிழவி...

அம்மா!... - அலறிய அருணா அழுது கொண்டே ஓடினாள்..
சல சல... - என்று ஓடிக் கொண்டிருந்த ஆற்றுக்குள் குதித்தாள்...

அவ்வளவு தான்... அந்தப் பகுதியே அரண்டு போனது...

அங்குமிங்குமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர்கள்
ஆற்றுக்குள் குதிப்பதற்கு முன்பாக அறிவழகன் பாய்ந்தான்...

அதற்குள் -
" குப்புசாமி அண்ணன் மக ஆத்துல குதிச்சிட்டா!..."
- என்று, அங்கே எழுந்த ஓலக்குரல் கேட்டு தெற்குத் தெரு மட்டுமல்லாமல் ஊரே திரண்டோடி வந்தது....

முழுதுமாக இருட்டி விட்ட நிலையில் பரிதவித்து நின்றனர் மக்கள்...

ஒரு சிலர் ஓடிச் சென்று டீக்கடைகளில் எரிந்து கொண்டிருந்த பெட்ரோமாக்ஸ் விளக்குகளைத் தூக்கி வந்தார்கள்....

இன்னும் சில பேர் நாலு கட்டை டார்ச் லைட்டுகளுடன் ஓடிவந்தார்கள்...

" எம் புள்ளயப் பழி வாங்கிட்டீங்களே...  இப்போ சந்தோசந்தானே!... "

- கனகவல்லி அலறித் துடிக்க அதிர்ச்சியுற்ற கிழவி மயக்கமாகி விழுந்தாள்...

கிழவியைத் தூக்கிக் கொண்டு சிலர் வைத்தியர் வீட்டுக்குப் போக
மற்றவர்கள் எல்லாரும் ஆற்றங்கரையோடு ஓடினர்...

" அருணா... அருணா... இந்த மாதிரி பண்ணிட்டியேடி...
படிச்ச புள்ளை பண்ற வேலையா இது!... கரையேறி வந்துடுடி ராசாத்தி!..."

பெண்களில் சிலர் அரற்றிக் கொண்டே ஓடினார்கள்...

பத்து நிமிஷம் ஓடியும் ஒன்றையும் கண்டு கொள்ள முடியவில்லை..

திடீரென முன்னே ஓடிக்கொண்டிருந்தவர்களிடம் பரபரப்பு...

" அதோ... அதோ... அங்க பாருங்கடா.... "

ஆற்றங்கரையின் நடுவில் ஈரச் சகதியில் ஒருக்களித்துக் கிடந்தாள் அருணா...

அவளது தலைமாட்டில் - நொண்டி வீரன் சாமி.. புடைப்புக் கல் சிற்பம்...

ஊர் எல்லை... காவல் தெய்வம்...

அலறியடித்துக் கொண்டு நெருங்கினார்கள்...

இன்னும் மயக்கம் தீரவில்லை...

அறிவழகன் தான் அருணாவை ஆற்றிலிருந்து தூக்கி
கரையேற்றிப் போட்டிருக்கின்றான் என்பது தெள்ளத் தெளிவாகப் புரிந்தது...

தெற்குத் தெரு கூட்டத்தைக் கண்டதும் பரபரப்புடன்
அரிக்கேன் விளக்கைத் தூக்கிக் கொண்டு ஓடிவந்தனர் - அந்தப் பகுதி மக்கள்...

நிலைமையை அறிந்து கொண்ட அந்த நொடியில்
சின்னான் வீட்டிலிருந்து கயிற்றுக் கட்டில் வந்தது!...

அருணாவைத் தூக்கிக் கட்டிலில் கிடத்தினர்...

துவண்டு கிடந்த அருணாவின் கையைப் பிடித்து
நாடியைச் சோதித்த ஒரு மூதாட்டி -

" பயப்படாதீங்க... சாமிகளா... கொழந்தைக்கு ஆயுசு கெட்டி!...
தொங்கத் தொங்க மாங்கலியம் போட்டிருப்பா!.. "

என்றபடி, நொண்டி வீர சாமியின்
காலடியில் இருந்த மண்ணை எடுத்து நெற்றியில் பூசி விட்டாள்...

 சட்டென கட்டிலைத் தூக்கிக் கொண்டு ஊருக்குள் ஓடினர் சிலர்

சரி.. அருணா இங்கே கிடக்கிறாள்... அறிவழகன் எங்கே?...

காலடிகளின் ஈரத் தடங்கள் கிழக்காகச் சென்று மறைந்ததை
டார்ச் லைட்டுகளின் ஒளி வட்டங்கள் காட்டி நின்றன...

" அறிவூ!.. அறிவூ!...
இந்த அப்பனை உட்டுட்டு எங்கேடா சாமீ போனே!.. "

காளிமுத்து பெருங்குரலெடுத்து அழத்தொடங்கினார்..

எஞ்சி நின்ற கூட்டம் அவரைத் தேற்றியது..

" அண்ணே.. அண்ணே... என்ன இது சின்னப் புள்ளையாட்டம்?...
வந்துடுவான்... வந்துடுவான்... அழுவாதீங்க!.. "

ஆனால் பதினைந்து நாளாகியும் அறிவழகன் திரும்பி வரவில்லை...
எங்கிருக்கின்றான் என்கிற தகவலும் தெரியவில்லை...

போலீஸில் சொல்லலாமா என்று யோசித்தவேளையில்
அருணா விஷயமும் தேவையில்லாமல் கிளறப்படும் என்று
ஊர்ப் பஞ்சாயத்தார்கள் தடுத்து விட்டார்கள்...

ஆனாலும், சும்மா இருக்காமல் -
இளைஞர் மன்றத்தினரைப் பல பக்கத்திற்கும் அனுப்பினார்கள்...

எந்த ஒரு பயனும் இல்லாமல் போயிற்று....

அறிவழகனைக் காணாமல் அந்தத் தெருவே மயங்கிக் கிடக்கின்ற வேளையில் தான் முனீஸ்வரனின் பாய்ச்சல்...

ஊர் கூடி நின்று முனீஸ்வரனுக்கு விளக்கு ஏற்றி வைத்தாலும்
இந்த இரண்டு வீட்டு வாசல் மட்டும் இருண்டு கிடந்தன..

இதோ முனீஸ்வரன் நாலாவது வீட்டு வாசலில்!..

டட்டட டட்டட... டும்டும்டும்... டட்டட டட்டட டும்!...
டட்டட டட்டட... டும்டும்டும்... டட்டட டட்டட டும்!...
ஃஃஃ


- தொடரும் -

31 கருத்துகள்:

  1. அனைவருக்கும் வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். இன்னும் யாரும் வரலை போல! இந்தக் கதை போன வாரமும் வந்திருக்குப் போல. படிக்கலை. இரண்டையும் படிச்சுட்டு வரேன். யார் எழுதினது? துரையா? அல்லது குமாரா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //யார் எழுதினது? துரையா? அல்லது குமாரா?//

      ஹிஹிஹி...

      நீக்கு
    2. வாங்க கீதாக்கா...

      நல்வரவும், வணக்கமும்.

      நீக்கு
    3. இதான் ஆரம்பம்னு நினைச்சுப் படிச்சேன். முதலாவதும் படிச்சுட்டு வரணும். படிச்சவரைக்கும் திக், திக், திக்.

      நீக்கு
  2. பதில்கள்
    1. அன்பு துரைக்கும், அன்பு ஸ்ரீராம், கீதாமா எல்லோருக்கும் இனிய காலை வணக்கம்.

      இந்தக் கதைக்கு விமர்சனம் சொல்ல
      எனக்கு வார்த்தைகள் இல்லை.
      எத்தனை அருமையான காதல். கனிவு.
      கிழவிக்கு என்ன ஆங்காரம். வார்த்தையால் சுடுகிறாளே.

      அருணாவும், அறிவழகனும் ஒன்று சேரணும் காவல் தெய்வமே.
      மனம் நிறை வாழ்த்துகள் அன்பு துரை.

      நீக்கு
    2. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சியம்மா!...

      அருணாவும், அறிவழகனும் ஒன்று சேரணும் தான்...
      ஆனாலும் அறிவழகன் போன எடம் தெரிலையே!..

      சாமி என்ன செய்யக் காத்திருக்கோ!..

      நீக்கு
  3. அலைகடலெனத் திரண்டு வரவிருக்கும் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்...

    இப்போது அலுவலகத்துக்கு நேரமாயிற்று...

    மாலையில் சந்திப்போம்!... மகிழ்ச்சி.. நன்றி..

    பதிலளிநீக்கு
  4. //இப்படியான தெய்வாம்சம் பொருந்திய வார்த்தைகளால் வசீகரித்துக்
    கொண்டார்கள்//
    ஹா.. ஹா.. ரசித்த வரிகள் ஜி

    நல்ல சுவாரஸ்யமாக போகிறது தொடர்...

    கிராமத்து வார்த்தைகளின் வசீகரம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..

      >>> கிராமத்து வார்த்தைகளின் வசீகரம்..<<<

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. மனசில் தோன்றியவை அழகு வார்த்தைகளில் துரை செல்வராஜுக்கே கை வந்தகலை பாராட்டுகள் வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..

      >>> மனசில் தோன்றியவை அழகு வார்த்தைகளில்..<<<

      தங்கள் வருகையும் கருத்துரையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. நல்ல வார்த்தைகளில் கதை. பாராட்டறேன். தொடர்கதைனு போட்டுட்டீங்க. இன்று முடியும்னு நினைத்துப் படித்தேன். ஆனாலும் அன்றைய இடுகை ஒரு கதையைச் சொல்லுது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் நெல்லை..

      >>> நல்ல வார்த்தைகளில் கதை. பாராட்டறேன்...<<<

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி.

      நீக்கு
  7. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன் !

    பதிலளிநீக்கு
  8. தொடராய் போகிறதா..?
    காதல் வரிகள் அருமை...
    மீண்டும் காத்திருக்க வைத்துவிட்டீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் குமார்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  9. கதை அற்புதமாய் போகிறது.

    //ஆற்றங்கரையின் நடுவில் ஈரச் சகதியில் ஒருக்களித்துக் கிடந்தாள் அருணா...

    அவளது தலைமாட்டில் - நொண்டி வீரன் சாமி.. புடைப்புக் கல் சிற்பம்.//

    காவல் தெய்வம் காப்பாற்றி விட்டது அறிவழகன் மூலம்.
    அறிவழகனுக்கு என்ன ஆச்சு ? எங்கே போனார் படிக்க ஆவல்.



    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..

      >>> காவல் தெய்வம் காப்பாற்றி விட்டது அறிவழகன் மூலம்.
      அறிவழகனுக்கு என்ன ஆச்சு ? ..<<<

      அதுதானே தெரியவில்லை...

      அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி.

      நீக்கு
  10. அனைவருக்கும் வணக்கம். அறிவழகன் எங்கே என மனது துடிக்கிறது.... மேலும் தெரிந்து கொள்ள தொடர்கிறேன்.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி.

      நீக்கு
  11. வணக்கம் துரை செல்வராஜ் சகோதரரே

    நல்ல கதை. சென்ற தடவையே கதையின் காவலன் நீங்கள்தான் என புரிந்து விட்டது. இவ்வளவு அழகான கிராமிய மணம் மிகுந்த வார்த்தைகளுடன், சுருக்கமாய், அதே சமயம் சுவைபட கதை நகர்த்தும் திறமை யாருக்கு வரும்.?

    நெருப்புத்தான் சுடுமென்பதில்லையே... வார்த்தைகள் அதை விட வேகமாய் சுட்டுப் பொசுக்கியதால் வந்த வினை அந்தி மயங்கிய நேரத்தில் அனைவரையும் ஆட்டுவித்து விட்டது. அடுத்து அறிவழகனை தேடும் பணியில் கிராமமே தங்களை ஈடுபடுத்தி கொள்வது கிராமத்தின் மனித நேயங்களை அழகாக சுட்டிக் காண்பிக்கிறது. கதை மிகவும் நன்றாக செல்கிறது.

    அறிவழகன் என்ன ஆனாரோ என அறிய அடுத்த செவ்வாய் வரை காத்திருக்க வேண்டும்.அருமையான கதைக்காக அவசியம் ஆவலுடன் காத்திருக்கிறோம். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. >>> அறிவழகனை தேடும் பணியில் கிராமமே தங்களை ஈடுபடுத்தி கொள்வது கிராமத்தின் மனித நேயங்களை அழகாக சுட்டிக் காண்பிக்கிறது கதை... <<<

      தங்களன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  12. வார்த்தைகளின் பிரவாகம் ...எழுத்தினுள் இழுத்து செல்கிறது அண்ணா அருமை ..


    அசோ அறிவுக்கு என்னாச்சு ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. >>> அச்சோ.. அறிவுக்கு என்னாச்சு?.. <<<

      தேடிக் கொண்டே இருக்கின்றார்கள்...


      அனுபிரேம்...

      தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி... நன்றி..

      நீக்கு
  13. கவர்ந்து இழுக்கும் வர்ணனையுடன் தொடர்கிறது.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  14. வாசித்து விட்டேன்.. தொடர்கிறேன், துரை சார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..

      தங்களுக்காகத் தான் அன்றைக்குக் காத்திருந்தேன்...
      விரிவான கருத்துரையை அன்புடன் எதிர்பார்க்கிறேன்..

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!