செவ்வாய், 27 ஏப்ரல், 2021

மறக்கவியலா சிறுகதை : ஏகாம்பரம் - அப்பாதுரை 

 

- ஏகாம்பரம் -


அப்பாதுரை 

         சில நாட்களாகக் கீழே இறங்கி அந்தக் கும்பலுடன் கலக்கவே பிடிக்கவில்லை. இருந்தாலும் வந்து விட்டேன். வழக்கமாக உட்காரும் சிமென்ட் பெஞ்சில் உட்கார்ந்தேன். K2 ப்ளாக்கிலிருந்து ராமானுஜமும் அசோக்ராஜும் என் முன் வந்து நின்று "கேப்டன், ரெடியா, வாக் போகலாமா?" என்றார்கள், இருபத்தைந்து சதவிகிதப் பேச்சுத் தமிழில்.

     **

     மாலை நாலரை முதல் ஆறு வரை எங்கள் சொகுசுக் குடியிருப்பு வளாகத்தைச் சுற்றி நடப்போம். இரண்டாயிரம் அபார்ட்மென்டுகள் பத்து பிளாக்குகள் என்பதால் சுவாரசியமான அரட்டையுடன் இரண்டு ப்ளாக்குக்கு ஒருமுறை ஐந்து நிமிடமாவது ஆங்காங்கே நிறுவப்பட்டிருக்கும் சிறு பூங்கா பெஞ்சுகளில் ஓய்வும் எடுப்போம். நடக்கையில் தனிக்கட்டை, கணவன் மனைவி என்று இருபது பேராவது சேர்ந்து விடுவார்கள். முடிக்கையில் சமூக மண்டபத்துக்குப் போவோம்.

      அங்கே சூரியோதய அஸ்தமனம் போல் தினம் தவறாமல் மிளகும் இஞ்சியும் கலந்தரைத்த குளிர்ந்த வெல்லப் பானகம் கொண்டு வருவார் ஹெச் ப்ளாக் வரலட்சுமி நாகேஸ்வரன். அறுபத்திரண்டு வயது. சக்கர மின் நாற்காலியில் உலா வரும் பெண்மணி. ஹைதராபாதில் இருந்த போது ஐம்பது வயதில் திடீரென்று வந்த மாரடைப்பால் மாடிப்படிகளில் உருண்டு விழுந்து கால் உடைந்து போனதாம். காஞ்சிபுரம் வெங்கடகிரி என்று ஏதாவது புடவை, கழுத்தில் ஒரே ஒரு ரோஜாப்பூ பதக்கம் கோர்த்த முத்து மாலை. பளிச்சென்று இருப்பார். யாராவது என்ன விலையென்று கேட்டால் முறுவலுடன் பதக்கத்தைத் தடவியபடி "நினைவில்லை" என்பார். அதிகம் பேசாத வாய். அற்புதமாகப் பேசும் கண்கள். இனிமையான குரல். அவ்வப்போது ஒரு பழைய இந்திப் பாட்டு பாடுவார்.

      ஆவ் கோ ஜாயேன் சிதாரோன் மே கஹின்
      சோடுதே ஆஜ் யே துனியா யே ஜமீன்

என்று அவர் இழுத்து உருகிப் பாடும் போது குறுகுறுக்கும். நாகேஸ்வரன் எங்களுடன் அவ்வப்போது நடப்பார். முசுடு. எதற்கெடுத்தாலும் வாதம். தன் கருத்துக்கு யாரும் துணை வராவிட்டால் இரண்டு நாள் நடை தடை. பிறகு தானாக வருவார். அடிக்கடி மனைவியை இரைவார் என்று அக்கம்பக்க வாசிகளான சத்தியாவும் சுஜாதாவும் சொல்லியிருக்கிறார்கள். சக்கர நாற்காலியில் உட்கார்ந்திருக்கும் மனைவியை விட்டு அவர் மட்டும் வேகமாகக் கோபத்துடன் நடந்து போனதை ஒரு முறை பார்த்திருக்கிறேன். நாகேஸ்வரன் தம்பதியின் ஒரே மகன் ஆஸ்திரேலியாவிலோ எங்கோ இருக்கிறான் என்று கேள்வி. வந்து பார்த்த நினைவில்லை. தன்னால் நடக்க முடியாவிட்டாலும் தினமும் நாங்கள் நடந்த அனுபவம் பற்றி விசாரிப்பார் வரலட்சுமி. பானகம் குடிப்போம். மறுபடி அரட்டை அடிப்போம். சீட்டு, கேரம் என்று ஆடுவோம். சில நாட்கள் யாராவது கதை சொல்வார்கள். அவரவர் வீடு திரும்ப சில நாள் ஏழரை மணி கூட ஆகிவிடும்.

      நாங்கள் அனைவருமே வெவ்வேறு பணியிலிருந்து ஓய்வு பெற்றவர்கள். அசோக்ராஜ் டெபுடி கலெக்டர், சந்திரமுருகன் அமெரிக்கா ரிடர்ன்டு, ராமானுஜம் ஐஐஎம் ப்ரொபசர், முரளி பஹ்ரெய்ன் ரிடர்ன்டு, மிசஸ் வனஜா உயர்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர், எழுத்தாளர் ஜீவி, ரவிச்சந்திர மேனன் அரசாங்க ஆஸ்பத்திரி டாக்டர் என்று பலதரப்பட்டு இருந்தாலும் இந்திய விமானப்படையிலிருந்து க்ரூப் கேப்டன் ரேங்கில் ஓய்வு பெற்றவன் என்பதால் நான் தான் லீடர். எனக்குத் தனி மரியாதை, கவனம் எல்லாம். சென்ற இரண்டு வருடங்களாக நான் சொல்வதே சரியான அபிப்பிராயம். போன மாதம் இரண்டாவது சனிக்கிழமையன்று எங்கிருந்தோ வந்து சேர்ந்தார் பிலஹரி சர்மா என்று ஒரு ஆசாமி. தனிக்கட்டை. அன்றிலிருந்து எல்லாரும் அவரைச் சுற்றத் தொடங்கி விட்டார்கள். என் மதிப்பும் மரியாதையும் திடீரென்று பழைய ஐநூறு ரூபாய் நோட்டு போல் ஆனதில் எனக்கு கடுப்பு உண்டா என்றால் இல்லை. மகா கடுப்பு உண்டா என்றால் உண்டு.

     பாருங்களேன்...

     "நம்ம பொருளாதாரம் இப்படி ஆயிடுச்சே? ஏதாவது முன்னேற்றம் இருக்குமா? மாமி ஏதாவது வித்தியாசமா பட்ஜெட் போடுவாங்களா?"
     "மாமி வித்தியாசமா கிடாரங்கா ஊறுகாய் வேணா போடுவாங்க.. கிடப்பியா கிடந்து.." என்றேன்.

     "நம்ம பொருளாதாரத்துக்கு காரணம் பட்ஜெட்னு மட்டும் சொல்ல முடியாது.. உலகப் பொருளாதார நிலமைக்கு ஒரு முக்கிய காரணம் சைனா தான்.. முடங்கினாலும் சரி முடுக்கினாலும் சரி.. கிழக்கத்தி நாடுகளின் பொருளாதாரம் சைனா கைல தான்.. இன்னும் அம்பது நூறு வருஷத்துல பாருங்க.. நம்ம கொள்ளு பேத்திங்களாம் சர்வ சாதாரணமா சைனீஸ் பேசிட்டு இருப்பாங்க"

      "என்ன பிலஹரி சார்.. அவ்ளோ மோசமாயிடுன்றிங்களா?"

      "மோசம்னு சொல்ல முடியாது.. நம்ம கொள்ளு தாத்தாங்களைப் பார்க்கையில நாம சகட்டு மேனிக்கு இங்லிஷ் பேசிட்டுத் திரியலியா? கார் ஓட்டிட்டு கார்பொரெட் விவசாயம் பண்ணலியா? சாம்பார் ரசம் சாப்பிட்டிருந்த நாம இப்ப எத்தனை வித பிட்ஸா பாஸ்தானு சாப்பிடறோம்? என்ன சொல்றிங்க கேப்டன்? வாழ்வாதாரம் பொருளாதாரம் தானே?"

     "அரசியல் பேசக்கூடாதுனு ஆர் பிளாக் கௌதமன் சொல்லியிருக்காரு.." என்றேன்.

     "சாப்பாட்டைப் பத்திப் பேசினா ஜீவி கழண்டுக்குவாரு" என்றார் ராமானுஜம்.

     "பொருளாதாரம் தானே பேசுறோம்?" என்ற பிலஹரி விடுவதாயில்லை. "எதுக்கு சொல்றேன்னா.. நான் இந்தியாவுல நிறைய இடங்கள்ல தொழில் விஷயமா அடிக்கடி பயணம் பண்ணி தங்கியிருக்கேன்.. தூத்துகுடி, பொச்சம்பள்ளி, ஹைதராபாத், திருவனந்தபுரம், கொச்சி, பெங்களூரு, தார்வாட், நாக்பூர், சண்டிகர், தில்லி, ஆக்ரா, மும்பை, புனே... பாக்காத இடமில்லேனு சொல்லலாம்... எங்க பாத்தாலும் சைனீஸ் வணிக ஆக்கிரமிப்பு.."

      இந்த ஆளை மடக்கி மௌனியாக்கத் தீர்மானித்தேன்.. உடன் நடந்து கொண்டிருந்த நாகேஸ்வரனின் கையை 'இதைக் கவனிங்க' என்பது போல் அழுத்தி "ஆனா பாருங்க பிலஹரி.. சீனாவின் வணிக ஆக்கிரமிப்பை திட்டமிட்டு கட்டுப்படுத்துற ஒரு நகரம் இந்தியாலயும் இருக்கு.. உங்களுக்கு தெரியாம இருக்குமா?"

     "கண்டிப்பா தெரியும். ஒரு நகரம் இல்லை, நாலு. இந்தோர், பரோடா, பூரி, விசாகபட்டினம்.. இதுல விசாகபட்டினம் கொஞ்சம் வீக்" என்று என்னை அசத்தினார். மௌனியானேன்.

    --

     "கேப்டன் சார்.. உங்களுக்கு தெரிஞ்சவர் ஜிஆர்டில இருக்காங்கனு சொல்விங்கல்ல? என் பேத்திக்கு ஒரு செயின் வாங்கலாம்னு இருக்கேன்.. கொஞ்சம் சொல்றிங்களா?"

     "ஜிஆர்டி எல்லாம் இருபதாம் நூற்றாண்டுக் கடை.. கர்னாடகா தார்வாட்ல வியாகரனகானு ஒரு கடை இல்லின்னா ஆந்திராவுல துவாரகபட்டினத்துல காமேஸ்வரினு ஒரு கடை.. எல்லாம் சின்ன தட்டான் கடையாட்டம் இருக்கும் ஆனா அற்புதமான நாகரிக டிசைன்ல பெரிய கடைகளைவிட மலிவாக நகை செஞ்சு தராங்க.. நகை உருவாவதை நேரில் பார்க்கலாம்.. ஒரு ட்ரிப் அடிச்சு வாங்கிட்டு வாங்க.. ரொம்ப ராசியா இருக்கும்"

     "பிலஹரி.. உமக்கு நகை பத்தி என்ன தெரியும்?" என்றேன்.

     "சின்ன வயசுல அப்பாவோட நகைக் கடைல வேலை பாத்திருக்கேன்"

      ஸ்ரீமதி வனஜா ஜிஆர்டி பற்றி என்னைத் தேடி வரவில்லை.

     --

     "வாழைப்பழம் உடம்புக்கு நல்லதில்லனு இன்னிக்கு வாட்சப்புல ஒருத்தர் அனுப்பியிருந்தாங்க.. யுட்யூப்ல பார்த்தேன்.. ஆளாளுக்கு இப்ப மருத்துவ ஆலோசனை சொல்றாங்க.. டாக்டர் சார்.. நீங்க என்ன நினைக்கிறிங்க?" என்று ஏதோ தொடங்கினார் அசோக்ராஜ்.

     "அசோக்ராஜ்.. உங்களுக்கு டயபிடிஸ்னு சொல்லியிருக்கிங்க.. கவனம்.. வாழைப்பழத்தை முடிஞ்சா தவிருங்க.. பொடேசியம் வேற மாதிரி தொல்லையைக் கொண்டு வந்துரும்.." என்று பிலஹரி புகுந்தார்.

      "ஏன் பிலஹரி சார்.. நீங்க டாக்டரா நம்ம மேனன் டாக்டரா?" என்றேன்.

     "உங்களுக்குத் தெரியாதா கேப்டன்.. நம்ம பிலஹரிக்கு இன்னொரு பெயரும் இருக்கு தெரியாதா? ஏகாஆஆம்பரம்.." என்று நக்கலுடன் இழுத்தார் நாகேஸ்வரன்.

      சிரித்த பிலஹரி "இல்ல சார்.. நம்ம மேனன் தான் டாக்டர்.. ஆனா சுகர் பேஷண்டுகள் பொட்டாசிய உணவுகளைக் குறைக்கலினா சிறுநீரகத்துலந்து ப்ரோடின் கசிவு உண்டாகி பெரிய ஆபத்துல கொண்டு முடியும்னு உலக சுகாதார நிறுவன ஆராய்ச்சி சொல்லியிருக்கு... என்ன மேனன் சார்.. நான் சொல்றது சரியா?" என்றார் பிலஹரி.

      "சரி தான்" என்று மேனன் ஆமோதித்தது எனக்குப் பிடிக்கவேயில்லை.

     --

     "என்னோட இன்சூரன்சு பாலிசி முடிஞ்சு ரொக்கமா கைக்கு வருது... ஏதாவது முதலீடு பண்ணலாம்னு பாக்குறேன்.. என்ன செய்யலாம் கேப்டன்?" என்றார் டி ப்ளாக் மனோகரன்.

     "மதுரை கோயமுத்தூர்னு எங்கயாவது ஒரு பிளாட் வாங்கிப் போடுங்க இல்லின்னா தங்கத்துல முதலீடு பண்ணுங்க... ஷேர் மார்கெட் எல்லாம் வேண்டாம்" என்றேன்.

     என்னை அடிக்காத குறையாகத் தடுத்து "அதெல்லாம் வேண்டாம் மனோகரன்" என்றார் பிலஹரி. "ஓய்வு எடுத்தாச்சு... இப்ப போய் ப்ளாட்டு தங்கம்னுட்டு.. இன்னும் எத்தனை நாள் உயிரோட இருக்கப் போறிங்கனு யோசிச்சு பாருங்க.."

      "என்ன இப்படி அபசகுனமா பேசுறிங்க?" என்று சந்திரன் பதைக்க அவரைப் புன்னகையோடு தடுத்தார் பிலஹரி. மனோகரனிடம் திரும்பி "நெருப்புனா சுடாது. பணத்தை செலவழியுங்க மனோகரன்.. உங்க மனைவியோட உல்லாசமா சுத்திப் பாருங்க.. இந்தியாவுல சின்ன சின்ன கிராமங்கள்ள ரெண்டு நாள் தங்கி வயல் காட்டுல கடலோரமா மலையடிவாரத்துலனு நடங்க.. இலஞ்சி, சிருங்கேரி, கோதாவரிக்கரை, பூவாரு, இடுக்கி அப்புறம் வடக்குல கிப்பர், மலானா இந்த இடங்களை ஒட்டி எத்தனையோ அழகான கிராமங்கள் இந்தியால இருக்கு.. "என் கிராமத்து நினைவுகளை நேற்று ஜனித்த கைக்குழந்தை போல் கவனமாகச் சுமந்து கொண்டிருக்கிறேன்"னு ஒரு கவிதை நினைவுக்கு வருது.. கிராமப் பயணம் செய்யுங்க மனோகரன்.. பயணம் பத்தி ஏதாவது தெரியணும்னா ஏ பிளாக் வெங்கட்டைக் கேளுங்க, அவரு பாக்காத, பாத்து ப்லாக் எழுதாத இடமே இந்தியால கிடையாது.. திட்டம் போட்டு அத்தனை கிராமத்தையும் பாத்து சேர்த்த பணத்தை சந்தோஷமா செலவழியுங்க.. போறப்போ நிம்மதியா போகலாம்.. யாருக்காக சேக்கறிங்க இத்தனை வயசுக்கப்புறம்?" என்றார் பிலஹரி.

     "என்னய்யா இது.. அதுக்குள்ள அனுப்பியே வச்சுடுவ போலருக்கே?" என்றேன்.

     "இல்ல கேப்டன்.. அவுரு சொல்றது சரிதான்" என்றார் மனோகரன். "எனக்கு இப்ப ஒரு விளக்கமே கிடைச்சாப்புல இருக்கு என் வாழ்க்கைக்கு.. என் மனைவிக்கும் எனக்கும் இல்லாத பணம் என் பிள்ளைகளுக்கு எதுக்கு.." என்று உணர்ச்சி வசப்பட்டார். "சரியாச் சொன்னிங்க பிலஹரி.. ஐ ஹவ் டு எஞ்சாய் மை ரிமெயினிங் லைப்".
     "மனைவியோட ஊர் ஊரா மனம் போனபடி சுத்துறது தனி சுகம் மனோகரன்.." என்ற பிலஹரியை மடக்கினார் நாகேஸ்வரன். "என்னய்யா பிலஹரி.. நீ கல்யாணமே செய்யாத தனிக்கட்டைன்ற.. ஆனா மனைவியோட சுத்துற சுகம் பத்தி உனக்கென்ன தெரியும்?" என்றபடி என்னைப் பார்த்து கண் சிமிட்டினார்.      தயங்காமல் பிலஹரி "உண்மை.. காதலுடன் இனிமையாகப் பொழுதைக் கழிக்காத தம்பதிகளின் வாழ்க்கை எப்படிப்பட்டதுனு எனக்கு தெரியும்.. நான் கல்யாணம் பண்ணாத தனிக்கட்டை தான், ஆனா காதலிச்ச அனுபவம் இருக்கே? இரண்டு வருடங்கள் காதல் வயப்பட்டிருந்தேன்.. எத்தனை மகத்தான நாட்கள்!" என்று கனவில் மிதந்தார் பிலஹரி.

     "ஏன் கல்யாணம் கட்டலே?" என்றார் அசோக்ராஜ்.

     "இந்தாளு அலப்பரை தாங்காம விட்டு ஓடியிருக்கும் அந்தம்மா" என்று சிரித்தார் நாகேஸ்வரன். பிறரும் சேர்ந்து கொண்டது சங்கடமாக இருந்தது.

     --

      "சார் இவ என் பெண் ஸ்வரா.. விமானப் படைல லெப்டினென்ட்.. இன்னிக்கு நம்ம கூட வாக்கிங் வரா.. கல்யாணமே வேணாங்கிறா.. கேப்டன் சார்.. நீங்க கொஞ்சம் எடுத்து சொல்லுங்க.." என்றார் டி ப்ளாக் நரசிம்மன். "என்னப்பா இது?" என்று அதிர்ச்சியுடன் சிணுங்கிய பெண்ணைப் பொருட்படுத்தாமல்.

      புன்னகைத்தபடி "கண்டிப்பா" என்றேன். "வீட்டுக்கு கூட்டி வாங்களேன்.. எனக்குத் தெரிஞ்சதைச் சொல்றேன்" என்றேன்.

      "கல்யாணம் கட்டுறதைப் பத்தி நம்ம தனிக்கட்டை ஏகாம்பரம் அதாவது பிலஹரி என்ன சொல்றாரு?" என்றார் சந்திரன்.

      உரக்கச் சிரித்த பிலஹரி, "கல்யாணம் கட்டுறது அவங்கவங்க இஷ்டம்.. இப்ப குஞ்சன் சேக்சேனாவ எடுத்துக்குங்க... விமானப் படைல முதல் பெண் பைலட்டா பறந்து கார்கில் போர் முடிஞ்ச பிறகே கல்யாணம்னு சொல்லி அவங்க காதலையே நிறுத்தி வச்சுட்டாங்க.. ஆனா கல்யாணம் கட்டி குழந்தை பிறந்த பிறகே தன் வாழ்வு நிறைஞ்சிருக்குனு சொல்றாங்க இல்லியா? அதை எடுத்துச் சொல்லணும்..." என்றார்.

      "ஏன் நீங்க சொல்லுங்களேன்? இல்லின்னா குஞ்சன் சேக்ஸானாவைச் சொல்லச் சொல்லுங்களேன்?" என்றேன் புகைந்த எரிச்சலுடன்.

      "சொன்னா போச்சு... நல்ல ஐடியா கேப்டன்.. நீங்க ஜிடிஓவா இருந்தவங்க.. குஞ்சன் அசலா பறந்தவங்க.. எனக்கு அவங்கப்பா ரொம்ப தோஸ்த்.."

      "நிஜமாவா அங்கில்? குஞ்சன் கூட பேச ஏற்பாடு பண்ணுவிங்களா?" என்று குதூகலித்தார் ஸ்வரா.

      அதைக் கவனிக்கமல் நாகேஸ்வரன் என்னிடம் "என்ன கேபடன் சார்? நீங்க ஜிடிஓன்றாரு.. என்னவோ ஏர்போர்சு கேப்டன்னு சொன்னிங்க?" என்றார். நான் பதில் சொல்லுமுன் மறித்த பிலஹரி "ஐயய்யோ.. அவரு கேப்டன் தான் சார். உழைச்சு சம்பாதிச்ச உயரமான பதவி.. ஜிடிஓனா விமானம் ஓட்டாம தரையில் கடமையாற்றியவர்னு அர்த்தம்.. ஆனா விமானப் பணியாளருக்குக் கிடைக்கிற அதே ரேங்க் தான் தரைக்கடமைகள் செய்பவருக்கும்.. நம்ம சார் விமானப்படை கேப்டன் தான்.." என்று என் பதவியை விளக்கினாலும் அன்றைக்கு என் மதிப்பு வெகுவாகக் குறைந்தது என்பதை உணர்ந்தேன். பிலஹரியை அந்தக் கணம் மிக வெறுத்தேன்.

      **

      "என்ன கேப்டன் சார்.. பலத்த சிந்தனைல இருக்கிங்களா? எழுந்து வாங்க.. நடக்கலாம்" என்றார் ராமானுஜம்.

      எழுந்து அவர்களுடன் நடந்தேன். வழக்கம் போல் கூட்டம் சேரச் சேர பிலஹரியின் மீதான கவனம் அதிகரித்துக் கொண்டே வந்தது. சமீபத்தில் அசல் குஞ்சனிடம் பேசிய திருப்தியில் நரசிம்மன் குடும்பமே பிலஹரியைக் கொண்டாட அதிலிருந்து இன்னும் சிலர் பழகத் தொடங்கி ஏறக்குறைய என்னை மறந்தேவிட்டதால் நான் அமைதியாகப் பின்னணியில் நடந்தேன். பலமாகத் தூறத் தொடங்க சமூக மண்டபத்துக்கு விரைந்தோம்.

     அங்கே வழக்கம் போல் வரலட்சுமி சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி இன்னும் சில பெண்மணிகளுடன் சீட்டாடிக் கொண்டிருந்தார். வழக்கத்தை விட லட்சணமாகத் தோன்றினார். ஆளாளுக்கு ஒதுங்கினோம். பிலஹரி, சந்திரன், நாகேஸ்வரன் என்று சிலர் என்னுடன் ஒதுங்க மெள்ள பிலஹரி விசாரித்தார். "என்ன கேப்டன், நலந்தானா? டல்லா இருக்காப்ல தோணுதே? கோவிட் தடுப்பூசி ரியேக்சன் எதுனா இருக்கா?".

     அதற்குள் ஸ்ரீமதி வனஜா எங்களைத் தேடி வந்தார். "என்ன வனஜா மேடம்.. ரெண்டு வாரமா ஆளைக் காணமேனு பார்த்தேன்" என்றேன், பிலஹரிக்கு பதில் சொல்லாமல் விலகுவது போல. வனஜா விடவில்லை. "கேப்டன், இதைப் பார்த்திங்களா?" என்று ஒரு நெக்லெஸைக் காட்டினார். "என்ன டிசைன் பாருங்க.. ஆறு பவுன்.. என்ன அற்புதமா பண்ணியிருக்காங்க.." என்று அவர் நெக்லசைக் காட்ட உடனே பிலஹரி "வியாகரனகா போனிங்களா? வெரி குட் வெரி குட்" என்றார்.

     "எப்படித் தெரியும்?" என்று வனஜா ஆச்சரியப்பட "நகை டிசைனைப் பாத்தாலே தெரியுதே?" என்ற பிலஹரி ஒரு தொகையைச் சொல்லி "இதானே ஆச்சு?" என்றார். திடுக்கிட்ட வனஜா "ஆமா சார்.. மொதல்ல அதான் சொன்னாங்க.. உங்க பேரை சும்மா சொல்லி வைப்போம்னு சொன்னதும் பத்தாயிரம் தள்ளுபடி செஞ்சாங்க சார்.. நம்பவே முடியலை.. ரொம்ப நன்றி" என்று இளித்தார்.

     "அதெப்படி பிலஹரி.. நகையைப் பார்த்ததும் விலையை சொன்னிங்க?" என்று நரசிம்மன் கேட்க பிலஹரி அமுக்கமாகச் சிரித்து "பாத்தாலே சொல்லிடுவேன்" என்றார். "நகைக்கு மதிப்பு சொல்ல முடியும்.. ஆனா நகை அணிந்த குணமுள்ள பெண்மணிகளின் அழகுக்கு அந்த ஆண்டவன் கூட மதிப்பு போட்டுச் சொல்ல முடியாது" என்றார்.

      திடீரென்று என்னிடம் சாய்ந்தார் நாகேஸ்வரன். "கேப்டன், இந்தாளுக்கு இன்னிக்கு வைக்கிறேன் பாருங்க ஆப்பு" என்று என்னிடம் ரகசியம் ஊதிவிட்டு எழுந்து "அப்போ.. உங்களால எந்த நகையைப் பாத்தாலும் உடனே அதன் மதிப்பை சொல்லிட முடியும்.. இல்லையா?" என்றார்.

      "நிச்சயமா. கைல எடுக்காமலே சொல்லிடுவேன்" என்றார் பிலஹரி.

     நாகேஸ்வரன் திடுதிடுன்று நடந்து தன் மனைவி வரலட்சுமியை சக்கர நாற்காலியுடன் வேகமாக எங்கள் முன் இழுத்து வந்தார்.

 "என்னாச்சுங்க?" என்று பதறிய மனைவியைப் பொருட்படுத்தாமல் "ஹலோ ஏகாம்பரம்.. இதோ என் மனைவி கழுத்துல இருக்குற முத்து மாலை.. பதக்கம்.. இதுக்கு என்ன மதிப்புனு சொல்ல முடியுமா?" என்றார்.


      "என்னை ஏன் அடிக்கடி ஏகாம்பரம்னு கூப்பிடறிங்கனு தெரியல" என்றார் பிலஹரி. "இங்கிருந்தே சொல்றேன் வரலட்சுமி அம்மா.. உங்களால தான் அந்த மாலைக்கு அழகும் மதிப்பும்.. இருந்தாலும் நமக்குக் காசு தானே பெரிசு? அதனால சொல்றேன்.." என்று நாகேஸ்வரனை நேராகப் பார்த்தார். "சார்.. அந்த மாலையும் பதக்கமும்.. நாளைய மதிப்பை விட இன்றைய மதிப்பு குறைவு" என்றார்.

      "தமிழ்ல சொல்லுயா.."

      "நாகேஸ்வரன்.. அந்த மாலையும் பதக்கமும் விலை மதிக்க முடியாத அசல். முத்து மாலைல முப்பது முத்து இருக்கும்னு நினைக்கிறேன். ஒவ்வொரு முத்தும் இன்றைக்குக் குறைந்தது எழுபதாயிரம் ரூபாய் பெறும்.. மாலை குறைந்தது இருபது லட்சம் பெறும்.. அந்தப் பதக்கம் சாலர் ஜங் குடும்பத்தைச் சேர்ந்த அசல் பதக்கம். சாலர் ஜங் தன் மூன்றாவது மனைவிக்கு அன்றைய இரானிலிருந்து வரவழைத்துக் கொடுத்தது. 1857 சிப்பாய் கலகத்தில் தொலைந்து பிறகு இங்கிலந்துல மாயமா தோன்றி அங்கே ஏலச்சந்தையில் காணாமல் போய் பம்பாய்ல ஒரு சாதாரண ஆங்கிலேய ஹை கோர்ட் குமாஸ்தா திரும்பக் கொண்டு வந்ததுனு சரித்திரம். ஐந்து பவுன் இருக்கும். ஆனா அதனோட வரலாற்றுப் பின்புலத்தால பதக்கம் இன்றைக்கு பத்திலிருந்து பதினைந்து லட்சம் பெறும்" என்றார்.

      பிலஹரியின் ஆணித்தரமான விளக்கமா அல்லது அவர் சொன்ன மதிப்புகளின் அதிர்ச்சியா தெரியவில்லை.. கூட்டத்தில் அப்படியொரு அமைதி. வரலட்சுமியின் முகம் பேயறைந்தது போலானதை நான் கவனிக்கத் தவறவில்லை.

      நாகேஸ்வரன் கனைத்தார். "நிச்சயமாவா? இப்ப இதை வித்தா லட்சம் லட்சமா கிடைக்கும்ன்றிங்க இல்லையா பிலஹரி?"

      பிலஹரி தயங்காமல் "கண்டிப்பா.. என் மதிப்பிற்கு ஒரு ரூபாய் கூட குறையாது..ஆனா எதுக்கு விக்கறிங்க.. அவங்க கழுத்துல கிடைச்ச மதிப்பு இந்த நகைக்கு வெளில கிடைக்காது.. காசுதான் கிடைக்கும்"

      "அப்ப ஒரு பந்தயம் வச்சுக்குவமா?" என்று குரலை உயர்த்தினார் நாகேஸ்வரன். "இந்த நகை நான் சம்பாரிச்சுக் குடுத்த காசுல வாங்கினது.. இதோட மதிப்பு எனக்குத் தெரியும். அப்படி நான் சொல்ற மதிப்பு சரியா இருந்தா நீங்க இதா இந்த பந்தயத்துல எனக்கும் என் பக்கம் யாரு கட்டறாங்களோ அவங்களும் ஆளுக்குப் பத்தாயிரம் குடுக்கணும். அதே நீங்க சொல்ற மதிப்பு சரியா இருந்தா நாங்க உங்களுக்கு ஆளுக்குப் பத்தாயிரம் குடுத்துடறோம்.. சம்மதமா?" என்றார் பிலஹரியிடம். பிறகு எங்களைப் பாத்து "யாரு கட்டுறிங்க?" என்றார். கை உயர்த்தினேன்... கடகடவென்று இன்னும் எட்டு கைகள் உயர நாகேஸ்வரன் சிரித்தார்.

 "மொத்தம் லட்ச ரூபாய்... சம்மதமா?"

      "இதென்ன அசுரத்தனமான பந்தயம்.. வேண்டாம் விடுங்க.. அபத்தம்" என்ற வரலட்சுமியை "நீ சும்மா வீல் சேர்ல உக்காந்திட்டிரு" என்றார் நாகேஸ்வரன் சற்றும் தயங்காமல்.

      அமைதியாகப் பார்த்த பிலஹரி "லட்ச ரூபாய் பந்தயமா" என்றார். "சரி. சம்மதிக்கிறேன். நீங்க இந்த நகைக்கு என்ன மதிப்பிடறிங்க?"

      "இரண்டாயிரம் கூடத் தேறாது" என்று நாகேஸ்வரன் சொல்ல கூட்டம் இன்னும் திடுக்கிட்டது. "எப்படித் தெரியும்னா ஹைதராபாதுல நாங்க இருந்தப்ப.. லட்சுமிக்கு கால் உடையறதுக்கு முந்தி.. பத்து வருசம் இருக்குமா, இருக்கும்.. அவ சார்மினார்ல வாங்கின பதக்கம் இது. எழுவத்தஞ்சு ரூவாய்க்கு வாங்கினா. இந்த முத்து மாலை அபிட்ஸ்ல ஆயிரம் ரூபாய்க்கு வாங்கினா. எல்லாம் நான் கொடுத்த காசு. மிஞ்சி மிஞ்சிப் போனா ஆயிரத்தைநூறு, அதிர்ஷ்டம் இருந்தா இரண்டாயிரம்.. இதான் மதிப்பு.. இப்ப என்ன சொல்றே?"

      பிலஹரி அமைதியாக "என் மதிப்பில் ஒரு ரூபாய் கூடக் குறையாதுனு முன்னால சொன்னேன். தப்பா சொல்லிட்டேன்னு நினைக்கிறேன். ஒரு நயா பைசா கூடக் குறையாது நாகேஸ்வரன். பந்தயம் எனக்குச் சம்மதம்" என்றார்.

      வரலட்சுமியின் முகம் வெளிறியது. அந்தக் கண்கள்! என்னவோ சொல்லத் துடித்தன. கூட்டம் அமைதியிழந்தது. நாகேஸ்வரனுக்குக் கோபம் வந்து கத்தத் தொடங்கினார். "யோவ்.. அப்ப இப்பவே வாய்யா.. போய் மதிப்பு போட்டு வந்துரலாம்" என்று வரலட்சுமியிடம் "அந்த பீத்தலைக் கழட்டிக்கொடு லட்சுமி" என்றார்.

      "வேணாங்க" என்று மாலையை இறுக்கிப் பிடித்துக் கொண்டார் வரலட்சுமி. "மாட்டிக்கிட்டு கழண்டு வர மாட்டேங்குது" என்றார் குரல் நடுங்க.

      "அறுத்து எறி கசுமாலத்தை.." என்று வேகமாக நெருங்கிய நாகேஸ்வரனைத் தடுத்தார் பிலஹரி. "சார்.. நான் வேணும்னா நகையைக் கைல எடுத்துப் பார்க்கிறேன் ஒரு முறை உங்க அனுமதியுடன்" என்றார். அதற்குள் நாகேஸ்வரன் நகையைக் கழற்றி விட்டார். "இந்தாய்யா.. பாத்துக்க. பந்தயம் பந்தயம் தான்" என்று நகையை பிலஹரியை நோக்கி வீசினார். அதை மிக நேர்த்தியாகப் பிடித்த பிலஹரி கவனமாகப் பார்த்தார். அவ்வப்போது அவர் நாசூக்காக வரலட்சுமியைக் கவனிப்பதை நான் கவனித்தேன். வரலட்சுமியின் கண்கள் நிறைய பேசின. எனக்குப் புரியவில்லை. ஒரு கணத்தில் பிலஹரியைக் கெஞ்சுவது போலப் பார்த்துச் சட்டென்று குனிந்து கொண்டார்.

      பதக்கத்தைத் திருப்பிப் பார்த்த பிலஹரி சட்டென்று நகையை நாகேஸ்வரனிடம் கொடுத்தார். "நீங்க சொல்றது சரியா இருக்கும்னு தோணுது நாகேஸ்வரன். அசல் பதக்கத்தின் பின்புறம் குடும்ப முத்திரை இருக்கும், இதில் இருப்பது போலி முத்திரை. கவனித்துப் பார்த்தால் மட்டுமே தெரிகிறபடி மிக அற்புதமாகச் செய்திருக்கிறார்கள். மாலையில் இருக்கும் முத்துக்கள் ஜப்பானில் செய்தவை. தொன்மைக்காக பளிங்கில் தேய்த்திருக்கிறார்கள். என் கணிப்பு தவறு" என்று அமைதியாக உட்கார்ந்தார் பிலஹரி.

      "இதுக்குத்தான் சொல்றது.. எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரமா ஆடக்கூடாதுனு.. மனுசனுக்கு அடக்கம் வேணும்" என்று நாகேஸ்வரன் மாலையை வரலட்சுமியின் மடியில் எறிந்தார். வரலட்சுமி அங்கிருந்து தனியாக விரைந்தார். கூட்டம் மெள்ளக் கலைந்து மண்டபத்தில் எங்கள் இருவரைத் தவிர யாருமில்லை.

      பானகம் குடிக்கப்படாமல் அப்படியே இருந்தது. எனக்கு ஒரு டம்ளரும் பிலஹரிக்கு ஒரு டம்ளரும் எடுத்துக் கொண்டு வந்தேன். "சாப்பிடுங்க பிலஹரி" என்றபடி அவர் எனக்கு கொடுத்த பத்தாயிரத்துக்கான செக்கை அவரிடமே திருப்பினேன். "ஏதோ எண்ணத்துல தெரியாம நானும் பந்தயத்துல இறங்கிட்டேன். ஐ கேனாட் டேக் திஸ்".

      பானகத்தை மட்டும் வாங்கிக்கொண்டு "நன்றி" என்றார் பிலஹரி. பத்து பதினைந்து நிமிடம் போல் எதுவும் பேசவில்லை. நானும் வற்புறுத்தவில்லை. உடனிருந்தேன்.

      திடீரென்று கதவு தட்டும் சத்தம் கேட்க வெளியே எட்டிப் பார்த்தேன். வரலட்சுமி! "என்னால பிலஹரிக்கு எத்தனை நஷ்டம்.. இதான் எங்கிட்ட இருக்கு.. இதை.. இதை அவரிடம் குடுத்துடுங்க கேப்டன்" என்று என்னிடம் ஒரு சிறிய துணிப்பையைக் கொடுத்து பதில் எதிர்பார்க்காமல் வேகமாகத் திரும்பினார் வரலட்சுமி.

      உள்ளே வந்து பையை பிலஹரியிடம் கொடுத்தேன். "யாரு வரலட்சுமி தானே? பைல என்ன இருக்கு பாருங்க கேப்டன்" என்றார்.

      "எப்படியா தெரியும்?" என்று கேட்கத் தோன்றவில்லை எனக்கு. பிரித்தேன். 'மன்னிக்கவும்' என்று ஒரு சொல் கடிதம். ஐம்பதாயிரத்துக்கு ஒரு செக். முத்து மாலையும் பதக்கமும். அப்படியே பிலஹரியிடம் கொடுத்தேன்.

     ஏதேனும் சொல்வாரா என்று பத்து நிமிடங்களுக்கு மேல் காத்திருந்தேன். திடீரென்று பெருமூச்சுடன் எழுந்த பிலஹரி செக்கைத் துண்டாகக் கிழித்தார். மாலையைப் பொட்டலத்தில் இட்டு என்னிடம் கொடுத்தார். "கேப்டன் சார்.. நான் ஒரு மாசம் ஊருக்குப் போறேன். எனக்கு ஒரு பெரிய உதவி பண்றிங்களா? இந்த நகையை அவ கிட்டயே குடுத்துடுங்க" என்று என் கையில் கொடுத்தார்.

      இருவரும் சில கணங்கள் ஒருவரை ஒருவர் பார்த்தோம். பிறகு சிரித்தோம். "யோவ்.. பெரிய ஆளுய்யா நீ" என்று பிலஹரியின் தோளில் தட்டினேன்.

      பானகத்தைக் கள் போல இருவரும் குடித்துத் தீர்த்தோம். வெளியே வருகையில் நன்றாக இருட்டியிருந்தது. நண்பன் பிலஹரி என் மதிப்பில் பிரகாசமாக இருந்தான்.

***

William Somerset Maugham எழுதி 1924ல் வெளிவந்த 'Mr.Know-All' எனும் ஆங்கிலச் சிறுகதை. பல உரிமைகள் எடுத்துக்கொண்டு என் பாணியில் தமிழில் தந்திருக்கிறேன்.

      "சாமர்செட் மாம் யார் தெரியுமா?" என்று ஒரு முறை என் மகனிடம் கேட்டேன். "உனக்கு தெரியணும்னா கூகல்ல பாத்துக்க" என்றான். அன்று முதல் அவனிடம் எதையும் "தெரியுமா" என்று கேட்பதில்லை. வளரும் அறிவுக்கு ஏதோ நம்மாலான உரம் தருவோம்னு நினைச்சா எத்தனை நக்கல்?! விடுவோம். அந்த நாளில் எஸ்எல்சி, பியுசி, பட்டப்படிப்புகளில் ஆங்கில இரண்டாம் தாள் அலசல்களில் சாமர்செட் மாம் கதைகள் பிரதானமாக இருக்கும். இந்தக் குறிப்பிட்டக் கதையின் மையக்கருத்து நிறைய அலசப்பட்டிருக்கிறது. சாமர்செட் மாம் சிறுகதைகளின் இறுதியில் வரும் திருப்பங்கள் எனக்கு பிடிக்கும். நிறைய ஆங்கில எழுத்தாளர்கள் இந்தப் பாணியில் வல்லுனர்கள் என்றாலும் மாம் மற்றும் ஹென்றி திறம்படக் கையாண்டார்கள் என்று நினைக்கிறேன். இந்தப் பாணியைத் தமிழில் மாசுபடுத்திய பெருமையுடைத்து நம் குமுதம்.

     கதைசொல்லியின் பார்வையில் அசல் கதை செல்கிறது. முதல் உலகப் போருக்குப் பிறகு ஜப்பான் போகும் கப்பலில் பல நாள் பயணம் செய்யும் கதைசொல்லி (மாம் என்று வைத்துக் கொள்வோம்), இன்னொரு சக பயணியை (மேக்ஸ் கெலாடா) முன்வைத்துச் சொல்லும் கதையின் இறுதியில் இரண்டு நறுக் திருப்பங்கள். ஒன்று தெளிவானது. மற்றொன்று மறைவானது. தெளிவான திருப்பத்தை நானும் என் பாணிக் கதையில் சொல்லிவிட்டேன். மறைவான நறுக் தான் இந்தக் கதையை மறக்க முடியாமல் செய்கிறது. அசல் கதையில் அந்தப் பெண்மணி (திருமதி ராம்செ) தனக்காக கெலாடா தொலைத்த பந்தயத் தொகையை ஒரு உறையில் இட்டு கெலாடாவுக்கே அனுப்பி வைக்கிறார். அதை கதைசொல்லியின் (மாம்) முன்னிலையில் பிரித்துப் பார்க்கும் கெலாடா, "If I had a pretty little wife I shouldn't let her spend a year in New York while I stayed at Kobe" என்கிறார். மாம் வாயடைத்துப் போகிறார்.

     ஆ! அந்த வரிகள்! அழகை ஆராதிக்கும் கெலாடா கருணையுடன் பந்தயத்தில் வேண்டுமென்றே தோற்றாரா? விலையுயர்ந்த நகையை திருமதி ராம்செ சில்லறைக்கு வாங்கினதாகச் சொல்வானேன்? உண்மை தெரிந்தால் ராம்செ தன் மனைவியின் கழுத்தில் நகையை அணிய அனுமதிக்க மாட்டாரா? அல்லது உண்மையே வேறேயா? ராம்செ தம்பதிகளுக்கிடையே அனாவசிய சிக்கல் உருவாக்க வேண்டாம் என்று வாளாவிருந்தாரா கெலாடா? ஒரு வேளை கெலாடாவுக்குத் துணை இல்லையா? அல்லது அவருக்கு இருந்த துணை அத்தனை அழகில்லையா? ஒருவேளை வாழ்வில் அழகிய அன்புத்துணையின் அவசியத்தை மென்மையாகச் சொல்கிறாரா? அல்லது அன்புத்துணைகளின் பின்னணியில் சில அழகிய ரகசியங்கள் புதைந்திருக்கும் என்கிறாரா? கதையின் கடைசி வரிகள் நிறைய ஆங்கில ஆசிரியர்களின் வகுப்பு நேரங்களை நிறைவு படுத்தியதுடன் நில்லாமல், கெலாடாவைப் பற்றியும் கதாசிரியர் மாமைப் பற்றியும் இன்றைக்கும் பேச வைக்கின்றன. ஒன்றரை மணி நேரம் இருந்தால் யுட்யுபில் (https://www.youtube.com/watch?v=SweR7qwEMxo) அசல் கதையும் சேர்த்து சாமர்செட் மாமின் மூன்று கதைகளைக் கண்டு களிக்கலாம்.

      நான் படித்த மறக்கவியலாத சிறுகதை #4.

= = = = 


46 கருத்துகள்:

  1. காலை வணக்கம் எல்லாருக்கும்.

    மாலை வணக்கம் அப்பாதுரை ஜி!

    ஆங்கிலக் கதையின் தமிழாக்கமோ?

    வாசித்துவிட்டு வருகிறேன்..

    கீதா

    பதிலளிநீக்கு
  2. காலை வணக்கம்.
    எழுத்தாளர் அப்பாதுரை கதையைப் பார்த்ததில் மகிழ்ச்சி. வாசித்து விட்டுப் பின்னால் வருகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜீவி ஸார்..   வணக்கம். முதலிலேயே உங்களை இங்கு பார்ப்பது இனிய ஆச்சர்யம்.  எங்கள் பிளாக் செவ்வாய்க்கிழமைகள் உங்களுக்குத் பிடித்தமான தளம்.  உங்கள் பின்னூட்டங்கள் அதில் ஸ்பெஷல்.

      நீக்கு
  3. இனிய காலை வணக்கம். அனைவரும் என்றும் ஆரோக்கியத்தோடு இருக்க
    இறைவன் அருளட்டும்.

    பதிலளிநீக்கு
  4. சாமர்செட் மாம்' இன் கதை. நெருடல் சிறிது கூட இல்லாமல்
    அற்புதமாகச் சொல்லிச் சென்றிருக்கிறார்.
    நடுவில் கண்ட,எங்கள் ப்ளாக் பதிவர்கள் பெயர்களும் வளம் சேர்த்தன.
    வாழ்த்துகள் துரை ஜி.

    மிஸ்டர் Know All ,
    சிங்கத்துக்கு மிகப் பிடித்த கதை. சில பேருக்கு
    அந்தப் பெயரையும் வைத்திருக்கிறார்.சாமர்செட் மாம் இன் ஆத்யந்த விசிறி.
    நன்றி துரை ஜி.
    இந்தக் கதையின் கேப்டன், பிலஹரி இருவரும் அச்சாணிகளாக
    நகர்த்தி வந்தார்கள். அசத்துபவர் பிலஹரி.
    வெகு நாசூக்காக முடிச்சுப் போட்டு
    அதைவிட நாசூக்காக அதை விடுவித்தும் விட்டார்.

    பதிலளிநீக்கு
  5. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம். நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். நோய்த்தொற்றினால் ஏற்பட்டிருக்கும் பிரச்னைகள் எல்லாம் தீர்ந்து அனைவரும் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழப் பிரார்த்திக்கிறோம்.

    பதிலளிநீக்கு
  6. இதை வெகு காலம் முன்னால் ஆங்கிலத்தில் படிச்சிருக்கேன். அரைகுறை நினைவு. ஆனால் அப்போது புரியாமல் இருந்தவை இப்போது புரிகின்றன, அப்பாதுரை தயவால்! நல்லதொரு தமிழாக்கம். அப்பாதுரைக்கு மட்டுமே முடியும். நன்றி.

    பதிலளிநீக்கு
  7. பின்னர் வரேன். கௌதமன் சாரை எங்கே காணோம்?

    பதிலளிநீக்கு
  8. ஜீவி சார், நெல்லைத்தமிழன், வெங்கட்
    இவர்களை அடையாளம் தெரிகிறது. மற்றவர்கள்
    மறைந்திருக்கிறார்கள்:)
    காலுடைந்த கதா நாயகி யாரும் இங்கே இல்லையே.
    அந்த முத்துச் சரத்தைப் பார்க்க ஆசையாக இருக்கிறது.
    மிக ஆச்சரியமான அருமையான கதை. மீண்டும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  9. Perfect Gentleman என்று பெயர் வைக்க வேண்டுமோ
    பிலஹரிக்கு.
    மாம் இன் கதை இங்கே பொருத்தமாக
    மாற்றப் பட்டிருப்பது மிகப் பெரிய ஆச்சரியம்.
    மிஸஸ் ராம்ஸே, கொலாடா பற்றி
    இன்னோரு முடிச்சும் அற்புதம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி..
      அசல் கதை வெளிவந்து கிட்டத்தட்ட நூறு வருடங்களாகியும் அதை 'பொருத்தமாக' மாற்ற வேண்டிய அவசியம் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. மிகச் சுலபமாக பண்பாடு போலீஸ் கையில் சிக்கிக் கொள்ள முடியும் :-)

      ஆழ்ந்து படித்தமைக்கு நன்றி

      நீக்கு
    2. இல்லைமா. நிறைய மாற்றம் இருக்கிறது நம் ஊரில். அடுத்த கதையை அப்படியே பதிவிடுங்கள். நல்ல கதைக்கு நகாசு வேலைகளாக நான் சொன்னது கதை நடக்கும் களம்.

      நீக்கு
  10. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  11. மறக்க முடியாத சிறுகதை நன்றாக இருக்கிறது.

    வரலட்சுமி நாகேஸ்வரன் மனதில் பதிந்து விட்டார்.

    பதிலளிநீக்கு
  12. அனைவருக்கும் காலை வணக்கம். அப்பாதுரை சாரின் கதையா? வேலைகளை முடித்து விட்டு சாவகாசமாக வருகிறேன்.

    பதிலளிநீக்கு
  13. காலை வணக்கம்.

    1. கதையை பெரிய எழுத்தில் பிரசுரித்தது படிக்க சுலபமாக இருந்தது.
    2. கதை நெருடலில்லாமல் செல்கிறது. ரசித்தேன். ("எல்லாம் தெரிந்த ஏகாம்பரம்" என்பதை என் அப்பா உபயோகிப்பார்... அதை திரும்பவும் நினைவுக்குக் கொண்டுவந்தேன்)
    3. பிலஹரிக்கும் வரலட்சுமிக்கும் உள்ள தொடர்பை கதை சொல்லாமல் சொல்லிச்செல்கிறது.

    மற்றபடி உரையாடல்கள் வெகு இயல்பு. புதியதாக எதையாவது கொண்டுவந்து சேர்க்கும் அப்பாதுரைக்குப் பாராட்டுகள்.

    சம்பாதிக்கும் காசு, நமக்கு (சம்பாதிப்பவருக்கு, அவர் மனைவிக்கு) உபயோகப்படணும் என்பது உண்மைதான்.

    பதிலளிநீக்கு
  14. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  15. செவ்வாயில் அப்பாதுரை, ஸாமர்ஸெட் மாம்!
    சுவாரஸ்யமாக ஆரம்பிக்கிறது. நிதானமாக வாசிப்பேன்.

    பதிலளிநீக்கு
  16. கதையை ரொம்ப அழகா சொல்லியிருக்கீங்க அப்பாதுரை ஜி! நம்ம ஊருக்கு ஏற்றாற்போல உங்கள் தமிழாக்கம் அதுவும் நம்ம மக்கள் கொஞ்சம் பேர் அதில் வருவது எல்லாம் செம.

    கதையின் முடிவு ரொம்பப் பிடித்தது. எனக்கு இப்படியான முடிவுகள் ரொம்பப் பிடிக்கும் வாசகர்களின் யூகத்திற்கு விடும் முடிவுகள். ட்விஸ்ட்!!! பிலஹரிக்கும், வரலட்சிமுக்கும் இடையேயானதை கதை அழகாக நாசுக்காகக் கொண்டு போய்...சூப்பர்

    இப்ப ஒரிஜினல் படித்துப் பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறது நெட்டில் கிடைக்குமா பார்க்கிறேன்...மகனிடம் சொல்ல வேண்டும் கதை பற்றியும் ஒரிஜினல் பற்றியும்..

    உங்கள் எழுத்தை மிகவும் ரசித்தேன் அப்பாதுரை ஜி

    கீதா

    பதிலளிநீக்கு
  17. அருமையான நடையில் எழுதப்பட்டிருக்கும் கதை. பாராட்டுகள்! மூலத்தை படிக்கத் தோன்றுகிறது.
    வருவாளா?மாட்டாளா? என்று சந்தேகித்த துணை தேவதை வந்து, ஒரு இடத்தில் உட்கார்ந்து படிக்க விடாமல் துடைப்பத்தோடும், மாப்போடும் துரத்தி,நல்ல வாசிப்பு அனுபவத்திற்கு இடைஞ்சலாக இருந்தாலும்,இடம் மாறி மாறி உட்கார்ந்து படித்து முடித்தேன். அப்பாதுரைக்கும், எ.பி.க்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  18. முடிவில் பல கேள்விகள்... மனதில் எழுந்த கேள்விகள்...

    ஆங்காங்கே நம் வலைப்பூ நண்பர்கள்...! அருமை...

    பதிலளிநீக்கு
  19. வணக்கம் சகோதரரே

    அருமையான கதை. மூலக்கதையை நல்ல தமிழில் படிப்பதற்கு, அதுவும் தடங்கல்கள் ஏதுமின்றி, நகர்த்திய விதம் மிக அருமையாக உள்ளது. ஆரம்பத்தையும் முடிவையும் கதை இணைத்த விதமும், இறுதியில் சொல்ல வேண்டியதை நாசூக்காக சொன்ன விதமும் மனதை கவர்ந்தது. இடையிடையே நம் வலைப் பதிவர்களை கொண்டு வருவதும் அருமையாக இருந்தது.

    சகோதரர் அப்பாதுரை அவர்களின் மறக்கவியலாத கதைகளை தொடர்ந்து இங்கு படித்திருக்கிறேன். அவற்றில் இன்றைய கதையும் ஒரு சிறந்த விலைமதிப்பற்ற நல்முத்துதான். மனதை விட்டகலாத இந்தக் கதை அருமை. மூல கதாசிரியர்களையும் இணைத்து இறுதியில் தந்த விபரங்களும் அருமை. எழுத்து வளம் படிக்கவே மிகவும் இனிமையாக இருந்தது. பாராட்டுகளுடன் நன்றிகளும். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  20. இன்னொன்று அப்போது சொல்ல விட்டுப் போச்சு. பிலஹரி நகையை வாங்கிப் பார்த்து நாகேஸ்வரன் சொன்னது ஓகேதான் என்று சொல்லும் போதும், வரலட்சுமி அவரிடம் கண்ணால் பேசியதும் ஊகிக்க வைத்தது பிலஹரி அண்ட் வரலட்சுமி...

    கீதா

    பதிலளிநீக்கு
  21. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. https://www.fadedpage.com/books/20180433/html.php

      இந்தச் சுட்டியில் இவரது சிறு கதைகள் வால்யூம் 1 இருக்கிறது. இந்தக் கதையின் அசலும் இருக்கிறது.

      https://www.fadedpage.com/books/20180433/html.php#p318

      கீதா

      நீக்கு
    2. fadedpage நல்ல தளம் இலவச புத்தகங்களுக்கு.

      நீக்கு
  22. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
    நலம் வாழ்க எங்கெங்கும்...

    பதிலளிநீக்கு
  23. கதை மாந்தர்களின் குணாதிசயங்களுக்குள் புகுந்து வருவதற்கு என்னால் இயலவில்லை.

    ஏதோ ஒருவிதமாக இருக்கின்றது...

    பதிலளிநீக்கு
  24. அனைவருக்கும் முகம் மலர அன்பான காலை வணக்கங்கள் ! அனைவரும் நலமுடன் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்.

    அசலை போலவே நகலும் அருமை! நிறைய வருடங்களுக்கு முன் படித்தது. மொழிபெயர்ப்பில், கதையின் கருத்து மாறாமல் அனைவருக்கும் புரிகின்ற வகையில் கதைக்களம் அமைத்து அசத்திவிட்டீர்கள்! நல்ல கதை படித்த திருப்தி! திரு.அப்பாதுரை அவர்களுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  25. காதல் வயப்பட்டிருந்த நாட்களைப் பற்றி பிலஹரி நினைவு கூரும்போதே ஒரு மாதிரிப் புரிய ஆரம்பித்து விடுகிறது. என்றாலும் சொல்லாமல் சொல்லிச் சென்றிருக்கும் நளினம் வெகு அருமை! மூலத்தின் உட்கரு மாறாமல் சொல்லுவது என்பது எல்லோருக்கும் கைவராது. மிகவும் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  26. ஸாமர்ஸெட் மாமின் கதையைப் படித்த மாதிரியே தெரியவில்லை.

    அப்பாதுரையின் கதை ஒன்றை வாசித்த அனுபவம் தான் எனக்கு.

    ஒன்று நிச்சயம். கதையின் அவுட்லைனுக்கும், தொட்டுக் கொள்ள சில உள்ளடக்கப் பகுதிகளுக்கும் தான், மாம் அப்பாதுரைக்கு தேவையாக இருந்திருக்கிறாரே தவிர எழுத ஆரம்பித்தது எழுதிச் செல்லச் செல்ல அப்பாதுரை தனக்கு கைவந்த கதை சொல்லும் பாணியில் மூழ்கி கதையை நடத்திச் சென்றிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.
    இதை இன்னொரு விதத்தில் சொல்ல வேண்டுமானால், அப்பாதுரை சொல்லவில்லை என்றால் என் போன்றோருக்கு இது அன்னிய சரக்கு என்று தெரிந்தே இருக்காது. இந்த விதத்தில் அவரது சுய நேர்மை பாராட்டுக்குரியது.

    பதிலளிநீக்கு
  27. இந்தக் கதை சொல்லும் திறமை அப்பாதுரைக்கு எப்படி சாத்தியமாகியிருக்கிறது என்ற கேள்வி வாசிக்கும் நமக்கும் சம்பந்தப்பட்டது தான்.

    1. அப்பாதுரை இயல்பாகவே நகைச்சுவை உணர்வு கொண்டவர். எழுத ஆரம்பிக்கும் பொழுது வஞ்சனையில்லாமல் அவருக்கே வாய்த்த அந்த நகை உணர்வு கூடவே வந்து கைப்பிடித்து ஒத்துழைக்கும். இவரா, அல்லது அதுவா யார் வழி நடத்துகிறார்கள் என்று தெரியாது. கேட்டால் அவருக்கேத் தெரியாது. அந்த அளவுக்கு அவரில் படிந்த உணர்வு அது.

    2.. அப்பாத்துரையின் நகை 'க்ளுக்' ரகமல்ல.

    3. அப்பாதுரையின் நகைச்சுவை பட்டிமன்ற அலங்கோல அவுட் சிரிப்பும் அல்ல. ஆழ்ந்த நாஸுக்காக மேதைத்தன்மையை பூசிக் கொண்ட நகைச்சுவை அது.

    3. ஆழமாக அவர் எழுதும் போக்கில் அந்த ரசனையை நாமும் சரிவிகிதத்தில் உள்வாங்கிக் கொண்டால் தான் அதுவும் அனுபவிக்கக் கூடிய சித்தி கிடைக்கும். அந்த உணர்வு தட்டுப்படாதவர்கள் வாசிக்கிற நேரத்தில் அவற்றைத் தவற விடுவதற்கும் வாய்ப்புகள் உண்டு.

    4. இதெல்லாம் தவிர தனக்குத் தானே தெரிந்தது, கேள்விப்பட்டது, இது உண்மையிலேயே நடந்த ஒன்று தான்யா என்று நம்மை நம்ப வைக்கும் பொருத்தமாக 'சில விஷயங்கள்' ஏதோ ஆணைக்குக் கட்டுப்பட்டது போல அங்கங்கே வந்து உட்கார்ந்து கொள்ளும்.

    5. கலந்து கட்டிய இந்த களைகட்டல் தான் அப்பாதுரைக்கு வழக்கம் போல இங்கேயும் கை கொடுத்து இது ஒரு மொழி மாற்றக்கதை என்பதை நமக்கு மறக்கடித்து ஜகஜ்ஜாலம் புரிந்திருக்கிறது.

    6. மொத்தத்தில் தனிப்பட்ட அப்பாத்துரையின் ஒரு கதை நடத்திச் செல்லும் சாகசம் தான் இங்கு நிகழ்ந்திருக்கிறது என்று அவரது கதைகளை வாசித்து பழக்கப்பட்ட நான் உணர்கிறேன்.

    7. இந்தக் கதை சொல்லலுக்காக அவர் கற்பனையில் நிகழ்த்திக் காட்டியிருக்கும் நிலைக்களம் லேசில் மறக்கக் கூடியதல்ல.

    வாழ்த்துக்கள், நண்பரே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக நன்றி சார்.
      கதை நன்றாக அமைந்ததற்ககு முக்கிய காரணம் பெரிய அகன்ற நிறைந்த சட்டி/பானை.

      நீக்கு
    2. ஸாமர்செட் மாம் கொடுத்த சட்டிப்பானை.

      நீக்கு
  28. எங்கள் பிளாக் ஆசிரியர் குழுவிற்கு ஒரு வேண்டுகோள்:

    கதையின் பெயரையும், எழுத்தாளரின் பெயரையும் வித்தியாசப்படுத்தி இடைவெளி விட்டு அல்லது ஃபாண்ட் சைஸ்களை மாற்றி அல்லது எழுதியவர் என்று போட்டு தொடர்ந்து எழுதியவரின் பெயரைப் போட்டு எந்தவிதத்திலாவது கதையின் பெயருக்கும் எழுத்தாளரின் பெயருக்கும் வேறுபாடு காட்டுங்கள்.

    இந்தக் கதையையே எடுத்துக் கொண்டால், ஏகாம்பரம் அப்பாதுரை என்றே படிக்கிற மாதிரி இருக்கிறது. கைப்பேசியில் இன்னும் மோசம். இரண்டு பெயர்களும் சேர்ந்தே காணக்கிடைக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹிஹி.. நானும் இதையே நினைச்சேன்.. ஸ்ரீராம் என்ன நம்ம தலைல குட்டுறாரா?

      நீக்கு
    2. கதைத் தலைப்பும் பெயராக இருக்கும்போது இப்படி தெரிகிறது.  இப்போது மாற்றி உள்ளேன்.  பாருங்கள்.

      நீக்கு
  29. யாருக்கேனும் இந்தப் பிரச்சனை இருக்கிறதா அல்லது எனக்கு மட்டும் தானா? கோமதிக்கா, ஏஞ்சல் தளங்களில் முதல் கருத்து போகிறது. அடுத்துகருத்து இட்டால் போவதில்லை. அழுமூஞ்சி டப்பா வருது..தளத்தை.ரெஃப்ரெஷ் பண்ணி மீண்டும் கருத்து இட்டால் மீண்டும் அதே டப்பாதான் வருகிறது.

    நான் தளம் வருவதே கஷ்டமாக இருக்கு இதில் இப்படியும் ..

    இங்கு, வெங்கட்ஜி தளத்தில் இந்தப் பிரச்சனை இதுவரை இல்லை

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தப் பிரச்சனை பல தளங்களில் இருக்கு. சில நேரங்களில் வெங்கட் தளத்திலும். அதனால் இரண்டாவது கருத்து இட முடிவதில்லை, அல்லது லேப்டாப்பில் பிறகு எழுதவேண்டியிருக்கு.

      நீக்கு
  30. கீதாமா,
    ப்ளாகர் சில சமயம் படுத்துகிறது. ஒவ்வொரு தேசத்திலும் உள்ள நெட்
    பிரச்சினைகள் பாதி காரணம்.

    பதிலளிநீக்கு
  31. மிக நீண்ட காலத்திற்கு அப்புறம் அப்பாதுரை அவர்களின் எழுத்தை படித்தேன் அவர் பாணியிலான மொழி பெயர்ப்பு கதை அருமை

    பதிலளிநீக்கு
  32. ஒரிஜினல் படிக்கவில்லை. ஆனால், தழுவல், தழுவல் போலில்லை என்று சொல்லமுடியும்! மாமின் கதையை லாவகமாகத் தமிழ்வெளிக்குள் கொண்டுவந்திருக்கிறீர்கள்.

    ’மிஸ்டர் நோ-ஆல்’ பிலஹரி இப்படி ஒரு கில்லாடி ஆசாமியா! வரலட்சுமி.. மனதின் ரகஸ்யத்தை, கண் பேசாது விடுமா.. இல்லை, கண் பேசுவது எல்லோருக்கும்தான் புரிந்துவிடுமா!

    பதிலளிநீக்கு
  33. முதலில் அப்பாதுரை சாரின் கதை என்றே நினைத்தேன். மொழிபெயர்ப்பின் சாயல் கொஞ்சம் கூட இல்லாமல் அருமையாக எழுதியிருக்கிறார். வாசித்து வந்த போதுதான் இது நாம் ஆங்கில இலக்கியத்தில் இருந்த WSM கதையோ என்று கொஞ்சம் புரிந்து இறுதியில் அதுதான் என்று புரிந்துவிட்டது.

    ஆங்கிலத்தில் அசலை விட இது இன்னும் நன்றாக இருப்பது போல் இருக்கிறது.

    வாழ்த்துகள், பாராட்டுகள் அப்பாதுரை சார்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!