புதன், 16 ஜூன், 2021

கனவுகள் பலித்தது உண்டா?

 

கீதா சாம்பசிவம் : 

கனவுகள் பலித்தது உண்டா?

* உண்டு.   கனவுகள் புதிரானதும் உண்டு.  மிக விரைவில் ஒரு பதிவு இது சமபந்தமாக....

# நல்ல வேளை, என் கனவுகள் பலித்ததில்லை.

$ கனவுகள் பலித்ததுண்டு. 3 முறை ஆபத்திலிருந்து மக்களைக் காப்பாற்றவும் முடிந்திருக்கிறது.

& உண்டு; பல தடவைகள். 

கனவு கண்டு கத்தினால் பின்னர் எழுந்ததும் என்ன கனவு என்பது நினைவில் இருக்குமா?

*  கத்தியதில்லை.  ஆனால் கனவு நினைவில் இருக்கும்.

# சில சமயங்களில் நினைவில் இருக்கும். (கனவு கண்டு கத்தினதில்லை.)

$ கனவில் கத்த முயற்சிக்கும் போது குரல் எழும்புவதில்லை. நினைவில் இருப்பதுண்டு.

& கனவு கண்டு கத்தி, உடனே விழித்து எழுந்ததும், கண்ட கனவு ஞாபகம் இருக்கும். கண்ட கனவு மறந்து போகாமல் இருப்பதற்கு, மனைவியிடம் கண்ட கனவை உடனே சொல்லி வைப்பேன்.  

சில சமயங்கள் நமக்கு வீட்டு வேலைகளை ஒட்டியே கனவு போல் வரும். அது உண்மையான கனவா? இல்லைனா நமக்குச் செய்ய வேண்டிய வேலைகளை நினைவூட்டும் நம் மனமா?

இதற்கும் வேறு சில கேள்விகளுக்கும்  விடை தேடிக் கொண்டிருக்கிறேன்.

# ஆழ்மனத்திலுள்ள பதிவுகள் கனவாக வரும் எனக் கூறப்படுகிறது. ஆனால் சில கனவுகள் வயிற்றில் மந்தம் காரணமாகவும் வருமாம்.  நமது ஆழ்மனத்தில் இருப்பதை நாம் விழிப்பு நிலையில் அறிவதற்கில்லை என்பது ஒரு விசித்திரம். 

$ அலுவலகத்துக்கு அல்லது பள்ளிக்கு தாமதமாகப் போகிறமாதிரி கனவு கண்டால் எப்போதும் தூங்குவதைக் காட்டிலும் அதிகம் தூங்குகிறோம்.

& நம் மனம் எதைப் பற்றி அதிகம் சிந்திக்கிறதோ அது கனவில் வர வாய்ப்பு அதிகம். 

கனவில் ஆழ்மனம் விழித்துக் கொள்ளும் என்கிறார்கள். அதை நம்மால் உணர முடியுமா?

உள்ளுணர்வு சொல்வதை நம்புவீர்களா?

ம்ம்ம்...

# நாம் நம்புவதுதான் நம் உள்ளுணர்வாக இடம் பெற்றிருக்கிறது. 

$ கீ சா கூட காலைக் காப்பி தாமதம் பற்றி சென்ற வாரம் சொன்னார்கள். 

உங்கள் மனைவி/அல்லது கணவன் உள்ளுணர்வால் எதற்கானும் உங்களை எச்சரிக்கை செய்தால் ஏற்றுக் கொள்வீர்களா?

நிச்சயம்.

# சில சமயங்களில் ஏற்பதுண்டு. 

$ ஏற்றுக்கொள்ள நேர்ந்திருக்கிறது.

& உள்ளுணர்வு - எச்சரிக்கை எதுவும் அவர்கள் செய்ததில்லை. 

உள்ளுணர்வு சொன்னது அப்படியே நடக்கும்போது/நடந்தால் என்ன தோன்றும்?

# ஒரு திருப்தி ஏற்படும்.

பண்டிகைகளுக்கான நிவேதனங்களை விலைக்கு வாங்கி ஸ்வாமிக்கு நிவேதனம் செய்வது சரியா? ஒண்ணும் பண்ணவே முடியலைனால் பழம், பாக்கு, வெற்றிலை, தேங்காய் வைத்து நிவேதனம் செய்யலாம் இல்லையா?

# கடவுள் நம் நிவேதனத்தை எதிர்பார்த்திருப்பதில்லை. அது நம் மனத் திருப்தி சந்தோஷத்துக்கானது. பிரதேச, குல வழக்கத்தை அனுசரித்து நைவேத்தியம் வேறுபடுகிறது.  யாவர்க்கும் ஆம் இறைவர்க்கொரு பச்சிலை என்று சொல்லப் பட்டிருக்கிறதே.

& ஒருவர் வாழைத் தோட்டம் அமைத்தார். நன்கு விளைந்து லாபம் வந்தால் விநாயகருக்குத் தேங்காய் உடைப்பதாய் வேண்டிக்கொண்டார். நல்ல விளைச்சல், நல்ல லாபம். விநாயகருக்கு 108 தேங்காய் உடைத்தார்.  மனதார விநாயகருக்கு   விளைந்த வாழைப் பழங்களை அர்ப்பணித்து, அவற்றை வாழைப்பழ மண்டிக்கு அனுப்பினார். மண்டி உரிமையாளர் வந்த வாழைப்பழங்களை விநாயகருக்கு அர்ப்பணித்து பிறகு கடைகளுக்கு விற்றார். கடை உரிமையாளர்கள் ஒவ்வொருவரும் தாம் வாங்கிய வாழைப்பழத் தார்களை விநாயகருக்கு அர்ப்பணித்து பிறகு சிறு கடை / நடைபாதை / தள்ளுவண்டி விற்பனையாளர்களுக்கு விற்பனை செய்தார்கள். சிறு கடை, தள்ளுவண்டி விற்பனையாளர்களிடம் வாங்கிய வாழைப்பழங்களை வீட்டு ஆசாமிகள் விநாயகருக்கு அர்ப்பணிக்க முற்பட்டபோது - - -  விநாயகர் என்ன நினைத்திருப்பார்? 

பானுமதி வெங்கடேஸ்வரன்: 

பெரியதனமாக பேசும் குழந்தைகள், சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொள்ளும் பெரியவர்கள், எது எரிச்சலூட்டும்?

# குழந்தைகள் வயதுக்கு மீறிய புத்திசாலித்தனமாகப் பேசினால் வியப்பும், பிஞ்சிலே பழுத்த தனமாகப் பேசினால் (7வயதில் மனப்பாடம் செய்து ஒப்பிக்கும் கதா காலட்சேபம் மாதிரி) சலிப்பும் ஏற்படுவது சகஜம்.  ஆனால் பெரியவர்கள் சிறுபிள்ளைத் தனமாக நடந்துகொண்டால் வெறுப்பும் சினமும்  உண்டாவது இயல்பு.

& அதிக எரிச்சலூட்டுவது சி பி தனமான பெ. 

பெண்களுக்கு பேசுவதில் அதிக ஆர்வம் இருப்பதற்கு என்ன காரணம்?

# இதற்கு ஒரு ஆண் பதில் சொன்னால் ஊகமாகத்தான் இருக்கும்.  பெண்மணிகளின் நாளில் பெரும்பகுதி வீட்டுக்குள் கடப்பதால் பேச்சு அலுப்பு நீக்கும் நிவாரணம் என நினைக்கிறேன்.

& ஹி ஹி - நான் இதற்கு ஏதாவது ஏடா கூடமாக பதில் சொல்லி வம்பில் மாட்டிக்கொள்ளவேண்டும் என்று நினைக்கிறீர்கள்! 

அப்பா பெட்டாக இருக்கும் பெண்கள் திருமணத்திற்கு பிறகு மாறுவதில்லை, கடைசி வரை அப்பா பெண்ணாகவே இருக்கிறார்கள். ஆனால் என்னதான் அம்மாவிடம் பிரியம் இருந்தாலும் ஒரு வயதிற்கு பிறகு தாய்க்கும் மகனுக்கும் இடையே ஒரு இடைவெளி விழுந்து விடுகிறதே?

# அப்படியா ? தாயின் முனைப்பால் அத்தகைய இடைவெளி வந்தால் அந்த அம்மா தன் மருமகளை எதிரியாகப் பார்க்கிறார் என்றாகிறது. மகன் மனைவியிடம் அன்பு பாராட்டுவதை தாய் சகிக்கவில்லை என்பதால் இருக்கலாம்.  மகன் தன்னைவிட, தன் தாயிடம் அதீத அக்கறை காட்டுவதாக மனைவி எண்ணினாலும் இதே விளைவுதான்.

& 'மருமகன்கள் யாரும் மாமனாரை போட்டியாளராகப் பார்ப்பதில்லை - ஆனால் , மருமகள்கள் எல்லோரும் -- --- (நான் ஒன்றும் சொல்லமாட்டேன்!) 

நெல்லைத்தமிழன்: 

1. சின்னக் குழந்தைகள் உபந்நியாசம் பண்ணும்போது எனக்கு பிரமிப்பு ஏற்படுகிறதே தவிர பக்தி வருவதில்லையே. என்ன காரணம்?

#   உபன்யாசம் என்பது சிறந்த ஆன்மிக தத்துவங்களை விளக்க முற்படும் ஒரு நிகழ்ச்சி .  சிறு வயதினருக்கு அந்த அளவு பரிபக்குவம் வருவதற்கான வாய்ப்பு மிக மிகக்  குறைவு.  பெரும்பாலும் மனப்பாடம் செய்தவற்றை நல்ல முறையில் ஒப்பிக்கும் வல்லமை தவிர அந்த பிரசங்கத்தில் ஆன்மா இல்லாது போய்விடுகிறது என்பதுதான் கேட்போருக்கு பிரமிப்பு தவிர வேறு ஆழமான உணர்வுகள் வராததன்  காரணம்.

2. ஜீனி கெடுதல், மைதா கெடுதல், பெப்சி கோலா கெடுதல்னு, உணவின் விஞ்ஞான முன்னேற்றங்கள் சில வருடங்கள் கழித்து உடலுக்குக் கெடுதல், கேன்சர் வரும் எனப் படிக்கறோமே.. அப்போ முதல்ல எப்படி அனுமதி தர்றாங்க?

#  முதலில் அவற்றை அனுமதிக்கும் போது  இந்த மாதிரியான பின்விளைவுகளுக்கான எச்சரிக்கையோ அடையாளங்களோ காணப்படவில்லை என்பது காரணமாக இருப்பின் ஏற்றுக்கொள்ளலாம். சாதாரணமாக இந்த வகையான சந்தர்ப்பங்களில் அனுமதி தரப்பட்டதின் காரணம் லஞ்சம் மட்டுமே என்று இருக்காது என நம்புகிறேன்.

3. கொரோனா வைரஸ் சீனாவிலிருந்து வரலை என முழு பூசணியை டம்ளருக்குள்ள மறைக்கப் பார்க்கும் WHO சீனாவிடமிருந்து எவ்வளவு லஞ்சம் வாங்கியிருக்கும்?

 # : உலக சுகாதார மையம் போன்ற அமைப்புகளில் அரசியல் கை  முறுக்கல்  இருக்கலாமே தவிர லஞ்சம் இராது என்று நான் நினைக்கிறேன்.  ஏன் அப்படி நினைக்க வேண்டும் என்று கேட்டால் பதில் சொல்வது அசாத்தியம்.

= = = = =

இந்த வாரம் இரண்டு படங்கள் - அவற்றைப் பார்த்து, என்ன தோன்றுகிறது என்று கருத்துரையுங்கள். 

1 )   


2 )  


= = = = = 


105 கருத்துகள்:

  1. காலை வணக்கம் அனைவருக்கும்.

    இரண்டாவது படத்தைப் பார்த்ததும், குழந்தை இருக்கிறதா இல்லை எழுந்து ஓடிப்போய்விட்டதா? இவள் வெறும் வண்டியைத் தள்ளிக்கொண்டிருக்கிறாளா என்றுதான் பார்க்கத் தோன்றியது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நெல்லை..  வாங்க...   

      உள்ளே குழந்தை இல்லை, மளிகைப்பொருட்கள் வாங்கிக்கொண்டு போகிறாள் என்று நினைக்கிறேன்!!!

      நீக்கு
    2. குழந்தையின் கால் தெரிகின்றது.

      நீக்கு
  2. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  3. இனிய காலை வணக்கம்.
    அனைவரும் என்றும் நலமாக ,ஆனந்தமாக இருக்க இறைவன் அருள் செய்ய வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இணைந்தே பிரார்த்திப்போம்.  வாங்க வல்லிம்மா...   வணக்கம்.

      நீக்கு
  4. இரண்டாவது படத்தில் குழந்தையை மளிகைக் கடையில் விட்டு விட்டு
    மறந்து போய் பொருட்களை மட்டும் எடுத்துச் செல்கிறாளோ:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. "அடடா...   காசை விட்டுட்டு வந்துட்டேன் அண்ணாச்சி...."

      "குழந்தையை விட்டுப்போய் காசை எடுத்துட்டு வா..."


      நல்ல கற்பனை!

      நீக்கு
  5. அனைவருக்கும் காலை வணக்கம்.

    பதிலளிநீக்கு
  6. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். அனைவர் வாழ்விலும் ஆரோக்கியம் சிறந்து மன அமைதி பெருகிடப் பிரார்த்திக்கிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இணைந்து பிரார்த்திப்போம்.  வாங்க கீதா அக்கா..  வணக்கம்.

      நீக்கு
  7. ஹிஹிஹி, இன்னிக்கு புதன்கிழமை என்பது எழுந்திருக்கும்போதே நினைவில் வந்து விட்டது. ஆனால் பாருங்க, இந்தப் பதிவு தான் என்னோட டாஷ்போர்டில் தெரியவே இல்லை. இன்னமும் அப்டேட் ஆகலை. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் டாஷ்போர்டில் இருக்கும் வலைத்தளங்களை அந்தந்த நேரத்தில் சென்று பார்த்து விடுகிறேன்.  வேறென்ன செய்ய!  அதுதான் அப்டேட்டே ஆவதில்லையே...

      நீக்கு
  8. கேள்விகளும், பதில்களும் நன்றாக இருக்கிறது.

    எனக்கு கனவுகள் கோவில் , வீடு இப்படித்தான் வரும். உறவினர்கள் குறிப்பாக அப்பாவிடம் பேசி கொண்டே இருப்பேன், இப்போது என் கணவரிடம் பேசுகிறேன்.

    சின்னக் குழந்தைகள் உபந்நியாசம் செய்வதை கேட்கும் போது "கருவிலே திருவுடையார்" என்று சொல்வது இது தானோ என்று வியந்து போவேன்.

    பெண் குழந்தை அப்பாவிற்கு அன்பாய் உணவு பரிமாறுவது மகிழ்ச்சி.
    அடுத்த படத்தில் குழந்தை இல்லை, இருந்தால் இப்படி அலைபேசியை பார்க்க மாட்டார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கனவில் ஸார் வருகிறாரா?  என்ன சொல்கிறார் கோமதி அக்கா?  

      நீக்கு
    2. என் அம்மாவுக்கு எங்க தாத்தா/அப்பாவின் அப்பா வருவதாய் அம்மா பலமுறை சொல்லி இருக்கார்.

      நீக்கு
    3. சார் என்ன சொல்வார்! நான் தான் பேசி கொண்டே இருக்கிறேன். அவர்கள்கேட்டுக் கொண்டு இருக்கிறார்கள். கோவில்களுக்கு போகிறோம்.
      பகலில் எதைப்பற்றி அதிகம் பேசுகிறோமோ அதுவும் கனவில் வரும்.

      நீக்கு
  9. காசு சோபனாவைத் தவிர மற்ற ஆ"சிரி"யர்கள் என்னோட கேள்விகளுக்கெல்லாம் முனைப்புடன் பதில் சொல்லி இருப்பது பார்த்து மகிழ்ச்சி. ஶ்ரீராமின் கனவு பற்றிய பதிவும் மற்றக் கேள்விக்கு அவர் தேடிக் கொண்டிருக்கும் விடையை/விடைகளைக் கூடிய சீக்கிரம் பகிர்ந்து கொள்ளவும் வேண்டும். எதிர்பார்ப்புடன் காத்திருக்கேன்.

    பதிலளிநீக்கு
  10. முதல் படம் மிக அருமை. ஒரு குழந்தை தூளியில் இருக்கு.
    முதல் குழந்தை சாப்பாடு போடுகிறது.

    இந்த தந்தை ????
    அம்மா தூங்கி விட்டாளா?
    இருந்திருந்தால் நாலோ மூன்றோ தான் இருக்கும்.
    முகத்தில் எவ்வளவு தீவிர கவனம்.
    ஏதோ சோகம்.

    பதிலளிநீக்கு
  11. குட்டிப் பாப்பா அழகாய் நிதானமாய்க் காரியம் செய்வாள் போல. தன் குஞ்சுக்கைகளால் அப்பாவுக்கு/மாமா/சித்தப்பா? பரிமாறுகிறாள். எங்க பெண் 2 வயசா இருக்கும்போது அவளையும் எங்களுடன் சாப்பிட உட்கார்த்தி வைத்தால் இப்படித் தான் செய்வாள். அவள் சாப்பிடவே மாட்டாள். அது நினைவில் வந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடடே...   அங்கும் அப்படித்தானா?  என் அக்கா பெண் நினைவுக்கு வந்தாள் எனக்கு!

      நீக்கு
    2. நான் ரசம் சாதம் சாப்பிடும்போது, என் பெண் என் தட்டுக்கு எதிர்ப் பக்கம் உட்கார்ந்துகொண்டு, அவளும் தன் குட்டிக் கைகளால் சாதத்தை எடுத்து சாப்பிடுவாள். அப்போது அவளுக்கு மூன்று வயது.

      நீக்கு
  12. கீழே உள்ள ப்ராம் போல ஒன்றைத் தான் சைகிளுடன் சேர்த்து இணைத்து எங்கள் பையரோ/மருமகளோ குட்டிக் குஞ்சுலுவை அதில் உட்கார்த்தி வைத்துப் பள்ளிக்கு அழைத்துச் சென்று கூட்டி வருகிறார்கள். எனக்கு அது தான் நினைவில் வந்தது. இந்தப் ப்ராமில் குழந்தையை உள்ளே படுக்க வைத்திருப்பாங்களோ?

    பதிலளிநீக்கு
  13. குழந்தையின் பிஞ்சுக்கால்கள் தெரிகின்றனவே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அட . இன்னோரு தடவை பார்க்கிறேன்.

      நீக்கு
    2. பார்த்தால் காரட் போல தெரிகிறது. குஞ்சு காலாக நினைத்தால் குஞ்சுகால்.

      நீக்கு
  14. பக்கத்திலும் யாரோ உட்கார்ந்திருக்கிறார்கள்.
    படம் எடுப்பதற்காக குழந்தையை உட்கார வைத்து விட்டார்களா.
    ஆனால் சில பெண் குழந்தைகள் இவ்வளவு முனைப்போடு வளரும்.

    பதிலளிநீக்கு
  15. கனவுக் கேள்விகளுக்கு நானும் விடை தேடிக் கொண்டிருக்கிறேன்.
    முன்பெல்லாம் பயங்கரக் கனவுகள் வரும்.
    அதுவும் திருச்சி வீட்டில் இருக்கும்போது
    யாரோ மதிலேறி மொட்டைமாடிக்கு
    வருவதாகத் தோன்றும். சிங்கம் தான்
    எழுப்பி தண்ணீர் குடி என்று கொடுப்பார்.
    நல்ல வேளை அதெல்லாம் மறந்து விட்டன.:)

    பதிலளிநீக்கு
  16. பெரிய தனமாய்ப் பேசும் குழந்தைகளைப் பார்த்து ரசித்துப் பாராட்டும் பெற்றோர்கள் உண்டே! எனக்கென்னமோ பிடிக்காது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெரிய தனமாகப் பேசும் குழந்தைகளைப் பார்த்தால் அலுப்பாக இருக்கும். யார் இப்படி வளர்த்து விட்டார்கள் என்றும் தோன்றும்.

      சின்னத்தனமாக நடந்து கொள்ளும்,
      சிலர் அவதிக்குள்ளாவார்கள்.
      என்றுமே குழந்தையாகக் கொஞ்சும்
      சில நடிகைகள் நினைவுக்கு வருகிறார்கள்:)))))))

      நீக்கு
  17. ஜீனி, மைதா எல்லாம் சாப்பிட்டுத்தான் வளர்ந்தோம். மைதாமாவு பிஸ்கட் அம்மா அடிக்கடி
    செய்வார். ஒன்றும் கெடுதல் அப்போதெல்லாம் இருந்ததாக நினைவில்லை.
    பிறகு மாறி இருக்குமோ!!!

    பதிலளிநீக்கு
  18. என் கனவில் அம்மா, அப்பா வந்ததே இல்லை. தம்பி வருவான். சிங்கம் வந்திருக்கிறார்.
    ஆனால் பேச மாட்டார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏன் கனவில் அம்மா,அப்பா, என் கணவர் எல்லோரும் வருகிறார்கள். இதெல்லாம் சரி, சிவாஜி கணேசன்,அவர் மனைவி கமலாவோடு ஒரு முறை வந்தார்.

      நீக்கு
  19. நிவேதனத்துக்கான பதில் மிக சுவாரஸ்யம்.
    எல்லாக் கேள்விகளும்
    பதில்களும் மிகச் சிறப்பு. வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  20. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
    இறையருள் சூழ்க எங்கெங்கும்...

    பதிலளிநீக்கு
  21. //அம்மாவிடம் பிரியம் இருந்தாலும் ஒரு வயதிற்கு பிறகு தாய்க்கும் மகனுக்கும் இடையே ஒரு இடைவெளி விழுந்து விடுகிறதே?//

    நாம் தான் மருமகளுக்கு இடம் கொடுத்து கொஞ்சம் இடைவெளி ஏற்படுத்திக் கொள்கிறோம் அது நல்லது என்று எனக்கு தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியும் இருக்கலாம்.

      நீக்கு
    2. //நாம் தான் மருமகளுக்கு இடம் கொடுத்து கொஞ்சம் இடைவெளி ஏற்படுத்திக் கொள்கிறோம் அது நல்லது என்று எனக்கு தோன்றுகிறது.//இது பதில்.
      சில பல வருடங்களுக்கு முன்பு கல்கியில் ஒரு சிறு கதை படித்தேன். அதில் ஊரிலிருந்து வந்திருக்கும் அந்த கதாநாயகனின் சகோதரி அம்மாவின் மடியில் படுத்துக் கொள்வாள், மிகவும் நெருகமாக அம்மாவோடு உறவாடுவதைப் பார்க்கும் அவனுக்கு தன்னால் அம்மாவோடு முன்பிருந்ததைப் போல நெருக்கமாக இருக்க முடியவில்லையே என்று ஏக்கம் வரும்.

      நீக்கு
    3. பெண்களுமே இடைவெளியைக் கடைப்பிடிப்பது உண்டு. ஆகவே என்னதான் நம் குழந்தைகள் என்றாலும் அவரவர் குடும்பம் என வரும்போது அவரவர் தனித்துவம் தனியாகவே இருக்கும்/இருக்கிறது/இருக்கவும் வேண்டும்.

      நீக்கு
  22. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கமலாக்கா திங்கவில் உங்கள் பதிலைப் பார்த்துவிட்டேன் ஆனால் நேற்றும் சரி திங்க பதிவுலும் சரி உங்களுக்கு பதில் கருத்து கொடுக்க முடியவில்லை கணினி கருத்தை ஏற்காமல் போட மறுத்தது!!!!

      இப்ப கருத்து போகுதா என்று பார்த்தேன் இங்கு போனது எனவே உங்களுக்கும்..(முந்தைய இரண்டு பதிவிலும் போகைவ்ல்லை!!!! எனவே இங்கு. கௌ அண்ணா இங்கு திங்க வரதுக்கு ஸாரி ஓகேவா!!!)

      மிக்க நன்றி கமலாக்கா செய்து பார்த்ததற்கும் - பிடித்திருந்ததா? டேஸ்ட்? ஸ்வீட் தோசை செய்து பார்க்கிறேன் என்று சொன்னதற்கும். மிக்க மிக்க ந்னறி கமலக்கா...ஹப்பா ஒரு டெஸ்டிமொனி கிடைச்சாச்சு!! நெல்லை நோட் இட்!!

      மீண்டும் நன்றி அக்கா!!

      கீதா

      நீக்கு
    2. வணக்கம் கீதா ரெங்கன் சகோதரி

      தங்கள் பதில் கருத்துக்கு மிக்க நன்றி. நேற்று இரவு படுக்கப் போகும் முன் உங்கள் பதிலை பார்த்தேன். அங்கு நன்றி சொல்ல வேண்டுமென இன்று வரும் போது இங்கும் நீங்கள் அழகாக பதில் சொல்லியுள்ளீர்கள். உங்கள் சுவையான சமையல் செய்முறைகளைப் போல, உங்கள் அன்பான பதில் கருத்துக்களும் அளவற்ற மகிழ்ச்சியை தருகிறது. உங்கள் முறைப்படி கண்டிப்பாக தித்திப்பு வெள்ளரி தோசையும் செய்து பார்க்கிறேன். அன்று எங்கள் வீட்டில் அனைவருக்கும் அந்த தோசை பிடித்தமானதாக இருந்தது. அனைவருமே விரும்பி சாப்பிட்டோம். உங்கள் மடிக்கணினி பிரச்சனை விரைவில் சரியாக வேண்டுமென பிரார்த்தித்துக் கொள்கிறேன். உங்கள் அன்புக்கு மிக்க நன்றி சகோதரி.

      புதனில் திங்களா..? என அனைவருமே வியக்கப் போகிறார்கள்..:) கிரகங்கள் அனைத்தையும் நாம் எப்போதும் வானில்தானே காண்கிறோம்.(இங்கும் எ. பி என்ற வானத்தில்தான் அவை அனைத்தும் சங்கமிக்கிறது என எனக்கு தோன்றுகிறது. உண்மைதானே...)

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    3. நன்றி கமலாக்கா..அங்கும் வந்திருக்கா அப்படினா? எனக்குக் காட்டவே இல்லை இந்த் ப்ளாகர்~ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...

      //புதனில் திங்களா..? என அனைவருமே வியக்கப் போகிறார்கள்..:) கிரகங்கள் அனைத்தையும் நாம் எப்போதும் வானில்தானே காண்கிறோம்.(இங்கும் எ. பி என்ற வானத்தில்தான் அவை அனைத்தும் சங்கமிக்கிறது என எனக்கு தோன்றுகிறது. உண்மைதானே...)//

      ஹாஹாஹாஹா ஹப்பா எனக்கு ஒரு ஜோடி கிடைச்சாச்சு நீங்களும் என்னைப் போலக் கொஞ்சம் கற்பனை உலகில் சஞ்சரிப்பீங்க போல!!! ஹாஹாஹாஹா..

      கீதா

      நீக்கு
    4. வணக்கம் கீதா ரெங்கன் சகோதரி

      நன்றி சகோதரி.

      வானம் (நம்ப எ.பி)
      எனக்கொரு போதி மரம்.
      நாளும் எனக்கது சேதி தரும்.
      ... கேள்விகளால் (இன்றையதும், இது போல் கடந்த அனைத்து புதன் பதிவுகள்) வேள்விகளை......

      அழகாக பாடிய இந்த எஸ்.பி.பியின் பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல். அடாடா.. இங்கு வெள்ளியும் வந்து விட்டது பாருங்கள்.;) நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  23. கனவுகள் பற்றி நான் தகவல்கள் சில தேடிக் கொண்டு இருக்கிறேன். நிறைய கேள்விகள் மனதில் எழுவதுண்டு. இது ஆழ்மனம் வரை செல்கிறது என்றும் நடக்கப் போவது என்ன என்பது வரை தொடர்புடையது என்றும் ஆனால் எப்படியான கனவுகள் எப்ப வரும் கனவுகல் அதற்கும் உள்ளுணர்வுக்கும், 7 வது அறிவிற்கும் உள்ள தொடர்பு என்று பல இருக்கிறது. இன்னும் தெரிந்து கொள்ள நிறைய இருக்கிறது இதில். நான் ஒரு குறிப்பிட்ட விஷயத்திற்காகத் தேடுகிறேன் பதிவ் ப்ளஸ் கதை.

    கீதா

    பதிலளிநீக்கு
  24. பெரியதனமாக பேசும் குழந்தைகள், சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொள்ளும் பெரியவர்கள், எது எரிச்சலூட்டும்?//

    இரண்டுமே என்றாலும் முதலாவதை அடக்கிவிடலாம்!!! இரண்டாவதை? ஹிஹிஹி

    கீதா

    பதிலளிநீக்கு
  25. கேள்வி பதில்கள் அருமை...

    படம் 1: கவனத்துடன் அழகு குழந்தை...
    படம் 2: குழந்தைக்கு கவனம் தேவை...

    பதிலளிநீக்கு
  26. & ஹி ஹி - நான் இதற்கு ஏதாவது ஏடா கூடமாக பதில் சொல்லி வம்பில் மாட்டிக்கொள்ளவேண்டும் என்று நினைக்கிறீர்கள்! //

    ஹாஹாஹாஹா...கௌ அண்ணா இங்க பெண்கள் எண்ணிக்கைதான் அதிகமாக்கும்...!!!! என்ன 2 குறையுது அதுலயும் சவுண்ட் விடற பார்ட்டியதான் காணலை!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெல்லையாரே மௌனம் ஏன்?

      நீக்கு
    2. நெல்லை இந்த அக்காகிட்ட மோத மாட்டார்!!!! கௌ அண்ணா!

      கீதா

      நீக்கு
    3. வீட்டுல ஒருத்தரும் பேசாமல் மொபைலைப் பார்த்துக்கொண்டிருந்தால், அதற்கும் மார்ச்சுவரிக்கும் ஏதாவது வித்தியாசம் இருக்கிறதா என்ன?

      பெண்கள் அதிகம் பேசுகிறார்கள் என்பது ஒரு குறை கிடையாது. அது மற்றவர்களையும் கலகலப்பாக வைத்துக்கொள்ள உதவும்.

      ஒரு கேள்வி கேட்டால், நிறைய பேசினால்தான் வீடு கலகலப்பாக இருக்கும் என்பது என் எண்ணம். ஒரு கேள்வி கேட்டால், சரி, இல்லை, ஆம் என்று ஒற்றை வரியில் பதிலளித்தால் அங்கு என்னcommunication இருக்க முடியும்?

      நீக்கு
    4. //பெண்கள் அதிகம் பேசுகிறார்கள் என்பது ஒரு குறை கிடையாது. அது மற்றவர்களையும் கலகலப்பாக வைத்துக்கொள்ள உதவும்.// யார் பேசுவது நெல்லையாரா? நம்ப முடியவில்லை,இல்லை,இல்லை..!!

      நீக்கு
    5. உண்மை என்பது வேறு, கலாய்ப்பது என்பது வேறு.

      சில சமயங்களில் இதற்கு உண்மையை எழுத வேணும் என்று தோன்றும். வாழ்க்கையில் பெண்கள் பங்கு மகத்தானது. தியாகம் என்று சொல்வதைவிட, பொறுமை, அறிவுத் தெளிவு, ஆண்களைவிட matured என்று பல்வேறு விதமாகச் சொல்லலாம்.

      இயல்பான மேல் ஷாவனிஸ்ட் குணத்தால் சிலசமயம் கலாய்க்கத் தோன்றும். By the by, என்னால் பெண்ணின் கீழ் எப்போதும் வேலை பார்த்திருக்க முடியாது.

      நீக்கு
  27. சித்தார்த்தன் பிறப்பதற்கு முன் யசோதரா வெள்ளை யானையைக் கனவில் கண்டதாகப் படித்திருக்கின்றேன்.. கோதை நாச்சியார் கனவுத் திறம் உரைக்கின்றாள்..

    கனவிலும் தேவர்க்கு அரியாய் போற்றி.. என்று பாடுகின்றார் மாணிக்க வாசகர்...

    இதற்கு மேலும் என்ன எழுதுவது என்று சிந்தித்துக் கொண்டே Fb சென்ற எனக்கு -

    - கேட்க யான் உற்றது உண்டு கேழலாய் உலகம் கொண்ட பூக்கெழு வண்ணனாரைப் போதரக் கனவில் கண்டு ...

    (திருமங்கையாழ்வார் திருப்பாசுரம் - 2035)
    வடிவில் மேலும் ஒரு புதிய தகவல் கிடைத்தது..

    அடியார்கள் ஐயனைக் கனவிலும் கண்டு உகந்ததாக மெய்யுரைக்க - நவீன விஞ்ஞானமோ வேறு விதமாகச் சொல்கின்றது...

    பதிலளிநீக்கு
  28. நான் இங்கு தான் இருக்கிறேன்!.. - என்று என் தந்தையார் கனவில் சொன்னதன் மூன்றாம் நாள் இம்மண்ணுலகை விட்டுப் பிரிந்தார்..

    தான் இறந்த பிறகு இரண்டு மாதம் கழிந்த நிலையில் என் தாயார் - 35/36 வயது உடையவராக எனது கனவில் வந்தார்.. அவர் இறக்கும் போது அவருடைய வயது 86..

    என் இல்லத்தரசியிடம் விவரம் கூறினேன்.. காஃபி டம்ளரின் அடையாளத்தையும் சொன்னேன்.. அந்தக் குவளை என் தந்தையின் படத்துக்கு முன் தண்ணீருடன் இருக்கும்..

    அதன் பின் என் மனைவி சொன்ன தகவல் இது...

    என் தம்பியின் வீட்டில் அம்மாவின் படத்துக்கு முன்பாக அந்தக் குவளையில் தண்ணீர் வைக்கப்படுகின்றது...
    ****

    ஆனால், நவீன விஞ்ஞானம் சொல்கிறது வயிற்றில் மந்தம் இருந்தால் கனவு வரும் என்று...

    பதிலளிநீக்கு
  29. கனவில் எனக்குத் தெரிந்தவர்கள், உறவினர்கள் வந்திருக்கிறார்கள். எனக்கு போட்டோ எடுப்பது ஒரு வழக்கமாகவே ஆகிவிட்டது. கனவில் மட்டும், என்ன கிளிக்கினாலும் படம் பதிவதில்லை. நிறையதடவை முயற்சிப்பேன். கேமரா க்ளிக் ஆவதில்லை. இது எதனால்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பள்ளி,கல்லூரி நாட்களில் பரிட்சை எழுதிக் கொண்டே இருப்பேன், எழுத நிறைய இருக்கும், ஆனால் டைம் அப் என்று பேப்பரை பிடுங்க வருவது போல் கனவு வரும். திருமணமான பிறகு யாரையோ சாப்பிட கூப்பிடிருப்பேன், அவர்களுக்காக அடுப்பில் ஏதோ கிளறிக்கொண்டே இருப்பேன், விருந்தினர்கள் வந்து விடுவார்கள் என்பது போல கனவு வரும். இப்போது சமீப காலங்களில் விமான நிலையத்தில் செக்யூரிடி, முடித்து, விமானத்தில் ஏறப் போகும் சமயம் என்னவோ பிரச்சனை என்பது போல கனவு வருகிறது.

      நீக்கு
    2. உங்கள் ஆழ்மனம் கனடாவில் இருக்கும் பெண்ணைப் பற்றியே நினைக்கிறது. அங்கு செல்ல முடியாத வருத்தம் ஆழ்மனதில் பதிந்திருக்கலாம். அதான் விமானம் ஏறும் சமயம் பிரச்னை என்றெல்லாம் தோன்றுகிறதோ? விரைவில் எல்லாம் சரியாகி உங்கள் மகள், மாப்பிள்ளை, பேத்திகளை நீங்கள் கண்டு மகிழப் பிரார்த்திக்கிறென். இது மனதை எவ்வளவு வருத்தும் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.

      நீக்கு
  30. அமாவாசை அன்று தீர்த்தம் கொடுக்கும் போது என் தந்தையை ஒளி ஊடுருவும் வடிவினராகக் கண்டிருக்கின்றேன்... இந்த மாதிரி வீடின் பெரியோர்களையும் பார்த்திருக்கின்றேன்..

    பதிலளிநீக்கு
  31. எனது தாத்தா அவர்களை கற்படிமமாகத் தரிசனம் செய்திருக்கிறேன்... இத்தனைக்கும் அவர் எனது தந்தை மூன்று மாதக் குழந்தையாக இருந்தபோது இறைவனடி சேர்ந்தவர்...

    பதிலளிநீக்கு
  32. வணக்கம் சகோதரரே

    இன்றைய கேள்வி பதில்கள் அனைத்தும் அருமை. கேள்விகளை கேட்டவர்களுக்கும், பதில்கள் அளித்தவர்களுக்கும் என் பாராட்டுக்கள். நன்றிகள்.

    கனவுகள் அதிகமாக உறங்கி எழுந்தவுடன் கலைந்து விடும். கலையாத கனவுகள் எனக்குண்டு. என் தந்தை மறைவுக்கு ஒரு வாரம் முன்பு அவர் தவறி விட்டதாக வந்த செய்தி போல் கனவு வந்து அதற்கடுத்த இரு தினங்கள் மிகவும் மனம் வேதனையாக இருந்தது. அடுத்த வாரத்தில் நன்றாக இருந்தவர் இறைவனடி சேர்ந்து விட்டதாக எனக்கு உண்மையிலேயே செய்தி வந்ததும் அதிர்ந்து விட்டேன்.இதை முன்னரே சொல்லியுள்ளேன். இப்படி கனவுகள் சில சமயம் பலித்தும் விடுகிறது. கனவுகள் இல்லாத நல்ல தூக்கத்திற்கும் இறைவனிடம் விண்ணப்பந்தான் தினமும் வைக்கிறேன்.

    நிவேதனத்தைப் பற்றிய பதில் கதை சுவாரஸ்யமாக இருந்தது. படங்கள் இரண்டும் ஒவ்வொரு கதை சொல்கிறது. அத்தனை பதில்களுக்கும், பகிர்வுக்கும் மிக்க நன்றிகள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  33. அன்புள்ள எபி ஆசிரியருக்கு,

    திருமதி கீதா சாம்பசிவம் அவர்கள் உண்மைக் கதை என்று எபியில் பகிர்ந்து கொண்டதின் தொடர்ச்சியாக
    நேற்று நான் எழுதியிருந்த கற்பனைக் கதையை வெளியிட்டிருந்தீர்கள்.
    எனது அந்தக் கதைத் தொடர்ச்சி திருமதி கீதா சாம்பசிவம் அவர்களுக்கு மன வருத்தம் அளித்ததாக அவர் பின்னூட்டங்கள் மூலம் நமக்குத் தெரிய வந்தது.

    கற்பனைக் கதை தான். இருந்தாலும்
    இந்த நிலையில் அந்தக் கதையின் இரண்டாம் பகுதியை வெளியிடுவது
    கேள்விக் குறியாகிறது. அதனால் அவர் சம்மதம் பெற்று இரண்டாம் பகுதியை வெளியிட வேண்டுகிறேன். அவருக்கு சம்மதம் இல்லையெனில் வெளியிட வேண்டாம். இதுவே என் வேண்டுகோள்.
    எபி ஆசிரியர் குழாமையும் வாசகர்களையும் இந்த விஷயத்தில் சிரமப்படுத்தியத்திற்கு மன்னிக்க வேண்டுகிறேன்.

    தங்கள் அன்புடன்,

    ஜீவி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்ன மன வருத்தம் அவருக்கு? எல்லா பகிர்வுகளுமே ஏதோ சில சம்பவங்களின், நடப்புகளின் தாக்கம்தானே ! கதைகள் குறித்து யாரும் மன வருத்தம் எதுவும் அடைய வேண்டாம் என்று எ பி ஆசிரியர்கள் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.

      நீக்கு
    2. //கதைகள் குறித்து யாரும் மன வருத்தம் எதுவும் அடைய வேண்டாம் என்று எ பி ஆசிரியர்கள் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.// இதை நேற்றே சொல்லியிருக்கலாமோ?

      நீக்கு
    3. யாரிடம் எப்போது எங்கே என்ன சொன்னேன்? கருத்துகளுக்கு பதில் சொல்லி இருக்கேன். ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு கருத்து. அவரவர் கருத்து அவரவருக்கு. இதில் மற்றவர் கருத்துக்கு மதிப்பு அளிக்கலாமே தவிர்த்து வருந்த என்ன இருக்கிறது? நான் என்றைக்குமே மாறுபட்ட கருத்துக்களை என்னோட பதிவுகளில் கூட (பல சமயங்கள் கடுமையான கண்டனங்களையும்) வரவேற்றிருக்கிறேன். என் கணவரைக் கலந்து கொண்டு பதிலும் அளித்திருக்கிறேன். இது நான் சிதம்பர ரகசியம் தொடர் எழுதும்போதும் ராமாயணம் எழுதும்போதும் அடிக்கடி நடந்த நிகழ்வு. கண்ணன் கதைகள் எழுதும்போதும் ஒருத்தர் வந்து தொந்திரவு கொடுத்திருக்கார். எல்லாவற்றையும் கடந்து தான் பதினைந்து வருஷங்களுக்கும் மேலாகத் தொடர்ந்து இணையத்தில் இருக்கேன்.

      நீக்கு
    4. //கதைகள் குறித்து யாரும் மன வருத்தம் எதுவும் அடைய வேண்டாம் என்று எ பி ஆசிரியர்கள் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.// எனக்கு மன வருத்தமெல்லாம் எதுவும் இல்லை. ஆனால் உண்மை கசக்கத்தான் செய்யும். அதற்காக அதை மாற்றிச் சொல்லவோ எழுதவோ முடியாது.

      நீக்கு
    5. //அவரவர் கருத்து அவரவருக்கு// - கீதா சாம்பசிவம் மேடத்தின் இந்தக் குணம் மிக அபூர்வமானது. நான் நிறைய தடவை கவனித்திருக்கிறேன். பாராட்டுகள் கீசா மேடம்

      நீக்கு
    6. // //கதைகள் குறித்து யாரும் மன வருத்தம் எதுவும் அடைய வேண்டாம் என்று எ பி ஆசிரியர்கள் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.// இதை நேற்றே சொல்லியிருக்கலாமோ?// இதில் ஏதோ controversy விவாதங்கள் இருந்தன என்பதை நேற்று நான் கவனிக்கவில்லை. பதிவாசிரியர், பதிவு பற்றிய விவாதங்களுக்கு பதில் அளிக்கட்டும் என்று விட்டுவிட்டேன்.

      நீக்கு
  34. நெல்லை.. அடுத்த செவ்வாய் பார்க்கப் போகிறேனே! நேற்று தேடு தேடுன்னு உங்களைத் தேடினேன்.. ஆளையே காணோமே?

    பதிலளிநீக்கு
  35. கேள்வி பதில்கள் நன்று.

    இரண்டாவது படம் - அவர் தள்ளிக்கொண்டு போவது அவருடையது தானா என்ற சந்தேகம் வருகிறது! அலைபேசியில் ஆழ்ந்து போய், வேறு யாருடையதையோ தள்ளிக் கொண்டு போகிறார் போல!

    பதிலளிநீக்கு
  36. எனக்கு நிறைய கனவுகள் பலித்திருகின்றன. அவற்றை பதிவாக என்னுடைய தளத்தில் பகிர்ந்து கொண்டிருகிறேன். அதற்காக பெருமை படவோ, சந்தோஷப்படவோ எதுவும் இல்லை. சில சமயங்களில் பெரும் அவஸ்தை!

    பதிலளிநீக்கு
  37. 1. நீங்கள் பார்த்த முதல் திரைப்படம் நினைவில் இருக்கா? எந்த வயசில் பார்த்தீங்க?

    2. படம் வெளி வந்த அன்றே திரைப்படத்தைப் பார்ப்பவர்கள் பற்றி உங்கள் கருத்து என்ன?
    3. திரைப்படத்தைப் பார்த்து அந்தக் கதையம்சத்தில் ஆழ்ந்து போய் மனம் வருந்தி அழுதது உண்டா?
    4. நடிகர்களை தெய்வமாய்க் கொண்டாடும் ரசிகரா நீங்கள்? எனில் எந்த நடிகரை?
    5. திரைப்படங்களால் சமூகத்துக்கு ஏதேனும் நல்லது கிடைக்கின்றனவா? திரைப்படங்களைப் பார்த்துத் திருந்தியவர்கள் உண்டா?
    6. நடிகர்களின் கட் அவுட்டுக்குப் பாலபிஷேஹம் பண்ணுவது பற்றி உங்கள் கருத்து என்ன? (முன்னாடியே கேட்டேனோ? ஜந்தேகமா இருக்கே)
    7. பாசமலர்/பாலும் பழமும் போன்ற படங்களைப் பார்த்துவிட்டு அதில் மூழ்கி மனதில் தாக்கங்கள் ஏற்பட்டிருக்கின்றனவா?
    8. படங்களைப் படமாகப் பார்க்க வேண்டும். அதோடு நாம் ஒன்றிப் போகக் கூடாது என்பது என் தனிப்பட்ட கருத்து! இது சரியா?
    9. நீங்கள் மிகவும் பார்க்க விரும்பிப் பார்க்க முடியாமல் போன படம் எது?
    10. இப்போது வரும் படங்களில் நல்ல கதையம்சம் உள்ளதா? காலத்துக்கும்/நடிகர்களுக்கும் ஏற்றாற்போல் படக்கதைகள் மாறுவது சரியா?
    11. வன்முறைச் சம்பவங்களைத் திரைப்படங்களில் காட்டுவது சரியல்ல என்பது என் கருத்து! உங்கள் கருத்து என்ன?

    பதிலளிநீக்கு
  38. 12. வெளிநாடுகளில் கிரஹணம் போன்றவைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை. நம்மைப் போல் கிரஹணத்தன்று அந்தச் சமயங்களில் சாப்பிடக் கூடாது என்பதை எல்லாம் அவர்கள் கடைப்பிடிப்பது இல்லை. இது அவர்களையும் பாதிக்காதா?
    13. கிரஹண சமயங்களில் ஏதேனும் வேலை செய்தால்/சாப்பிட்டால் வயிறு, மனம் பாதிக்கப்படும், அந்த நேரம் ஜபம் செய்ய மட்டுமே என்பதில் உங்களுக்கு உடன்பாடு உண்டா?
    14. கர்ப்பிணிகளைக் கிரஹணத்தின் போது மறைந்திருக்கச் சொல்லுவது உண்டு. அது சரியா? வெளிநாட்டுக் கர்ப்பிணிகள் அப்படி மறைந்திருப்பதில்லை. அவர்களுக்குப் பாதிப்பு உண்டாகாதா?
    15. இந்தியா கர்மபூமி எனச் சொல்லுவதால் இங்கே மட்டும் தான் இந்தச் சட்டதிட்டங்கள் செல்லும் என்பது உண்மையா? வெளிநாட்டு வாழ் மக்கள் எதையும் கடைப்பிடிப்பதில்லை என்பது உண்மையா? அவர்களுக்கெனத் தனியான விதிகள் உண்டா?

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!