செவ்வாய், 16 நவம்பர், 2021

அப்பாதுரை - மறக்கவியலா சிறுகதை - முக்தி 2/2

 

முக்தி

2

   முந்தைய பகுதியைப் படிக்க...

"ரெண்டு பேரும் ஒரு வாய் பால் சாப்பிடுறிங்களா?" என்றான் தாமு. "எங்க வந்திங்க? சின்னா உன் பழைய நிலத்தை நான் இப்ப குத்தகைக்கு எடுத்திருக்கேன்.. நீ கடன் கட்ட முடியாம போன காணியையும் ஏலத்துல எடுத்துட்டேன்.. தப்பா நினைக்காதே.. நிலம் தரிசாயிடக்கூடாதில்ல? முதல் விளச்சல்ல ரெண்டு மூடை நெல்லு உனக்கு தானமாத் தரணும்னு நினைச்சிட்டிருக்கேன்.. அந்தக் கருப்பசாமி மனசு வக்கணும்" என்று கைகளை உயர்த்தினான்.
   "கருப்பன் மனசு வச்சு உனக்கு எல்லாம் அமோகமா வரும் தாமு" என்றான் சின்னன்.
   "நல்ல மனசுப்பா உனக்கு.. உன்னை இப்படிப் பாக்க எனக்கு தாளலே சின்னா.." என்ற தாமு கருப்பனைப் பார்த்து "என்ன சொல்றிங்க கருப்பண்ணே? சின்னன் பாடு யாருக்கும் வரக்கூடாது... ஆமா, எங்க வந்திங்க ரெண்டு பேரும்?" என்றான்.
   "தாமு" என்று தயங்கினான் சின்னன். "தெனம் அணக்கட்டு வேலிக்கு போயிடறேன்.. பொன்னியும் இப்ப கெர்ப்பம்.. மேச்சலுக்கு அனுப்ப முடியாம தீனியும் வக்க முடியாம திண்டாடுறேன்.. கன்னை விக்கலாம்னு கருப்பன் கிட்டே போனேன்.. அவன் பணமில்லேனு சொல்றான்... அதான் உங்கிட்ட விக்கலாம்னு சாட்சியா வரச் சொன்னேன்..."
   "இப்ப எனக்கு மாடு தேவையில்லையே சின்னா? அதும் கிடைக்கன்னு... இப்பத்தான் புல்லு தின்னுதுன்றே... மாடு மேய்க்கிறது மாட்டுக்கிடை போடுறதை நிறுத்திட்டேன் சின்னா.. திருடிட்டுப் போயிடறாங்க.. கறவைப்பசு மட்டுந்தான் வச்சிருக்கேன்.. கொட்டில்ல கவனமா வச்சிருக்கலாம் பாரு?"
   "ஒரு ஆறு மாசம் அடகுனு வச்சுக்க தாமு.." என்றான் சின்னன். "ஆமா தாமு, அடுத்த அறுவடைல பணம் வந்ததும் நான் எம்பேத்துக்கு மீட்டுக்குறேன்.. உனக்கு சந்தேகமுனா இப்பவே சின்னன் சாட்சியோட விலை பேசிடுவோம்" என்றான் கருப்பன். 'சின்னன் சொன்னது போலவே நடக்கிறதே!' என்று நினைத்துக் கொண்டான்.
   "ம்ம்ம்.. இத்தனை முடைனு தெரிஞ்சும் உதவி செய்யலனா நான் என்ன மனுசன்.. சரி, ரொம்ப கேப்பியா?"
   "முப்பது ரூவா கொடுத்து வாங்கினேன் தாமு.. நீ தரதை வாங்கிக்குறேன்.." என்றான் சின்னன்.
   "ஆறு மாசத்துல கருப்பண்ணே மீட்டு வாங்குறதா சொல்றாரு அதனால இப்பத்தைக்கு வாங்கிக்கிறேன் சின்னா.. கருப்பண்ணே.. ஆறு மாசத்துல நீரு நாப்பது ரூவாய்க்கு வாங்கிக்கணும்.. சின்னா நீ சாட்சி.. அப்படி கருப்பண்ணன் வாங்கிட்டாருனா, உன் மாட்டுக்குத் தீவனச்செலவு போக இன்னொரு அஞ்சு ரூவா உனக்கு தரேன் சின்னா.. உன் நஷ்டத்துல லாவம் பாக்குறவனில்ல நானு" என்றபடி பணம் கொடுத்தான் தாமு. "கஷ்டத்துல உதவுனா தான் மனுசன்".
   தாமு கொடுத்த பணத்தை எண்ணி "பத்து ரூவாயா? என்ன தாமு இது.." என்று தொடங்கிய சின்னனைத் தடுத்தான் தாமு. "இப்ப இதான் முடியும்.. ஆறு மாசம் உன் கிடைமாட்டை நான் தீனி போட்டு வளக்கணும்ல.. அதும் கருப்பண்ணே வாங்கலினா நட்டமாச்சே?" என்றான்.
   அமைதியான சின்னன், "தாமு.. இது முரட்டுக்காள.. அடுத்த விரட்டுக்குத் தயாராயிடும் பாரு.. நீ புது வீடு கட்டுறதா வேறே சொன்னான் கருப்பன்.. ராசியா வரும் பாரு" என்றான்.
   தாமுவுக்குப் பெருமையும் கர்வமும் பிடிபடவில்லை. "எல்லாம் அந்தப் பெரியகருப்பன் தயவு" என்று கைகளை உயர்த்தினான். "சேத்து வச்சது கடன் வாங்குனது எல்லாம் போட்டு கட்டிடம் எழுப்பிட்டேன்.. வெறும் சாந்தில்லே.. வெள்ளக்காரன் மாதிரி சிமெண்டு கலந்திருக்கேன்.. கூரை போட்டு அடுத்த மாசம் முடிஞ்சிரும்.. சாமிமாருங்களைக் கூட்டி குடியேத்த பூஜை வச்சிருக்கேன்.. நீயும் பொன்னியும் வந்து விருந்து சாப்பிடணும்.. நீங்களும் தான் கருப்பண்ணே" என்றபடி இன்னொரு ஐந்து ரூபாய் கொடுத்தான். "வாங்கிக்க தாமு.. பாத்தியா புது ரூவா.. ஜார்ஜு ராஜா படம் போட்டிருக்கு பாரு".
   பணத்தை வாங்கிக்கொண்டு "நீங்க நல்லாருக்கணும் மொதலாளி" என்றான் சின்னன். முதலாளியை அழுத்தினான்.
   "அட நீ வேறே.. மறக்காம பூஜக்கு வந்திருங்க ரெண்டு பேரும்" என்று சிரித்த தாமுவை உள்ளூர வெறுத்தபடி வெளியேறினார்கள். "உனக்கு பதினஞ்சு தந்திட்டு எங்கிட்ட நாப்பது கேக்குறான் பாரு நாசமாப் போறவன்" என்று பொறுமிய கருப்பனை அடக்கினான் சின்னன்.
**
   "நீ ஏதோ திட்டத்தோட தான் தாமுவை அடிக்கடி பாக்குறே" என்றாள் பொன்னி.
   "ஒரு திட்டமும் இல்லே.. கடன் கொடுக்க இப்ப கிராமத்துல அவன் மட்டும் தானே இருக்கான் பொன்னி? சரி தானே கருப்பா?"
  "ஆமாக்கா.. என் கிட்டே தான் சின்னன் வந்தான்.. ஆனா இப்ப எங்கிட்டே பணம் இல்லே.. அதான் தாமுட்ட போனோம்... நான் வரட்டா?" என்றபடி வெளியேறினான் கருப்பன். அவன் தொலையும் வரை காத்திருந்த பொன்னி, சின்னனின் தோள்களை அழுத்தி மென்மையாகப் பாடினாள்:

       தாந்திமித்திமி தந்தக்கோனாரே தீந்திமித்திமி திந்தக்கோனாரே ஆனந்தக் கோனாரே அருளானந்தக் கோனாரே
       ஒடம்பொறந்த அஞ்சாட்டை தாண்டவக்கோனே யோகவெளிக்குள்ளே எய்யாமலோட்டினேன் பெரும் ஆசைக்காட்டுக்குள்ளே அடங்காமலோட்டினேன்
       தடம்புரண்ட மனமாடு தானேயடங்க தாண்டவக்கோனே முத்தி வாய்த்ததென எண்ணிக்கோடா தாண்டவக்கோனே
       சினமென்னும் பாம்பிறந்தா தாண்டவக்கோனே யாவும் சித்தியென்னே நினைச்சிக்கடா தாண்டவக்கோனே...
  
சட்டென்று திரும்பித் தன் கர்ப்பிணி மனைவியின் முகத்தை ஏந்திய சின்னன் எதிர்பாட்டு பாடினான்:
       முட்டாப் ப‌ய‌லையெல்லாம் தாண்ட‌வ‌க்கோனே பணம் முத‌லாளியாக்கிடுச்சே தாண்ட‌வ‌க்கோனே
      எட்டாக்கனவான என்வாழ்க்கை இனியெப்போ கட்டாக்கட்டிவரும் தாண்டவக்கோனே..."
   கேலியுடன் விலக முனைந்த சின்னனின் கைகளை இழுத்துத் தன் வயிற்றில் வைத்தாள் பொன்னி. "சின்னா.. உன் மப்பும் ஆத்திரமும் தான் இந்த நிலக்கு நம்மள தள்ளிடுச்சு.. வன்மத்தையும் சேர்த்துடாதே.. வெளங்கவே மாட்டோம்.. இதா இந்த நம்ம புள்ள மேலே சத்தியமா சொல்லு.. நீ எதும் பழி வாங்குறியா தாமு அண்ணனை?"
   சட்டென்று கடுங்கோபம் வந்து விட்டது சின்னனுக்கு. "யாருடி அண்ணண்? நம்ம நிலத்தை சுட்டுப் பொசுக்கி என் மில் வேலையக் கெடுத்து எனக்கு எவனும் கடன் தர முடியாம கட்டுப்படுத்தி.. அணைக்கட்டுல இப்படி கை நோக கட்டிட வேலை பாக்க வச்சவனா உனக்கு அண்ணன்?" என்று விருட்டென்று எழுந்தான்.
   "அண்ணனு ஒரு பேச்சுக்கு சொன்னேன்.. அது முக்கியமில்லே.. ஆத்திரப்படாதே.. உனக்கு துரோகி எனக்கும் விரோதி தான்.. ஆனா பழி வாங்க நினைக்க மாட்டேன்.. நம்ம வம்சம் வெளங்கணும்.. அதான் சின்னா.. சத்தியம் செய்யு புள்ள மேலே.. கோவம் விதச்சா பாவம் பயிருனு சொல்வாங்க சின்னா.. எங்க போறே? சின்னா.. கோவம் வேணாம்.. புள்ள வெளங்கணும் சின்னா.. வெளங்கணும்.." என்று அவனைத் தொடர்ந்த பொன்னி, அவசரத்தில் கால் தடுக்கித் தடுமாறி விழுந்து உருண்டாள்.
**
   தாமுவின் புது வீட்டில் பூஜை தொடங்க அரை மணி முன்பே வந்து விட்டான் சின்னன். வரவேற்ற தாமு வருந்தி விசாரித்தான். "பொன்னிக்கு இப்ப எப்படி இருக்கு?"
  "பிழைச்சுட்டா"
  "உன் கஷ்டம் யாருக்கும் வரக்கூடாது சின்னா.. தலைக்கரு கலைஞ்சு பெண்டாட்டி ஒரு மாசமா ஆஸ்பத்திரில கிடக்கா.. நீ என் வீட்டு பூஜைக்கு வந்திருக்கே.." என்று தயங்கினாற் போல் நின்ற தாமு தன் வரவில் சகுனம் பார்க்கிறான் என்பதைப் புரிந்து கொண்ட சின்னன், "நான் இன்னொரு நாள் வரேன்" என்று தாமுவின் கர்வத்தைத் தொட்டான். "அட.. எனக்கொண்ணும் ஆவாது வா.. வந்து என் பக்கத்துல உக்காந்துக்க.." என்று சின்னன் கைகளைப் பிடித்து பூஜை மணைக்கு அருகில் உட்கார வைத்தான் தாமு. தன் ஆடம்பர பூஜையை பார்க்காமல் விடமாட்டான் என்பது புரிந்த சின்னன் அமைதியாக உட்கார்ந்தான்.
   தாமுவின் கொட்டிலிலிருந்து ஒரு பசுவும் கன்றும் உள்ளே கொண்டு வந்து கட்டியிருந்தார்கள். வழக்கத்துக்கு மாறாக நான்கு பிராமணர்களை அழைத்து வந்திருந்தார் தலைப் பிராமணர். வந்திருந்த பிராமணர்களுக்கு வேட்டி துண்டு வெள்ளிக்காசு என்று அடுக்கி வைத்திருந்ததை சின்னனிடம் ஜாடையாகக் காட்டினான் தாமு. சின்னன் தலையாட்டி நன்று எனச் சைகை காட்டினான். பசு பூஜை முடித்து கிரகப்பிரவேச பூஜைகள் தொடங்கின. கணபதி ஹோமம் களைகட்டிய நேரத்தில் திடுப்பென்று உள்ளே நுழைந்த கருப்பன் படபடப்புடன் கத்தினான்... "என்னங்க இது அக்கிரமம்... அங்கே பசுங்கன்னு செத்துக்கிட்டிருக்கு... இங்கே ஆடம்பரமா கோபூஜை நடக்குது! சின்னா.. சாவக்கிடக்குறது உன் மாடுபா"
   திடுக்கிட்ட பிராமணர்கள் சிலையாக, தாமு துடித்து எழுந்தான். "என்ன கருப்பண்ணே சொல்றிங்க?"
   " நான் தான் இங்கிட்டு வரப்ப என்னவோ உன் கொட்டில்ல எரச்சல் கேக்குதுனு நின்னா நாயுங்க ரெண்டு உன் மாட்டை சுத்தி சுத்தி வந்து கடிக்குது.. வெரட்டி அடிச்சுட்டு உடனே ஊர்வரப்பு மாட்டு வைத்தியரைக் கூட்டி வந்து காட்டினேன்.. சேதி சொல்ல ஓடி வந்தேன்.. முதல்ல மாட்டைக் கவனிங்க" என்று சொல்லும் பொழுதே இருவர் உள்ளே வந்தனர். "என்ன வைத்தியரய்யா?" என்றான் கருப்பன். "பசு மாடு செத்திருச்சு" என்றார் வைத்தியர். "தீவனத் தொட்டியிலே நாய்க்குட்டி செத்துக் கிடக்கப்பா... மாட்டுத் தீவனத்துல நாய் மாமிசம் கலக்கலாமா?"
   "என்னப்பா இது.. சின்னன் கிட்ட வாங்கின பசுங்கன்னை கயிறு கட்டி வச்சிருக்கே.. அது தீவனத்துல எதையோ தின்னு ரத்த வாந்தியெடுத்து துடிச்சு செத்துட்டுதே.. நீ மாட்டைக் கட்டினப்பவே சொல்ல நினைச்சேன்"
   "என்ன சொல்றே கருப்பா.." தாமுவுக்கு ஆத்திரம் வந்தது. "நான் என் மாடுங்க எதையும் கட்டிப் போடுறதில்லே.. பக்கத்துல நின்னு நீ பாத்த மாதிரி பேசுறே?"
   "தாமு.. இப்ப அதுவா முக்கியம்? மாட்டை நீ கட்டி வக்கலின்னா யாருனா வச்சிருப்பாங்க.." என்ற சின்னனை அடக்கினார் தலை பிராமணர். நெளிந்தார். "இப்படி அசம்பாவிதம் நடந்திடுச்சே தாமு" என்றார். உடன் இருந்த ஒரு பிராமணர் "பசுவதை மகாபாவம்" என்றார். பிற பிராமணர்கள் "கோஹத்தி!" என்று அவசரமாக எழுந்தனர். "உன் பாவம் எங்களையும் இல்லே பிடிச்சிக்கும்?" என்று விலகியவர்களை நிறுத்திய தலை பிராமணர், "தாமு.. இது மஹா பாவம் ஐயா.. பசுவதை புத்ர நாசம் மித்ர நாசம் கோத்ர நாசம் குல நாசம்" என்று அடுக்கி தாமுவை ஆத்திரத்துடன் பார்த்தார். "ஊருக்கே நாசம் கொண்டுவந்துட்டியே!" என்றார் உரக்க. கூடியிருந்த ஊரார், "இவனுக்கு ஏதாவது கடுமையான தண்டனை சொல்லுங்க சாமி.. வெள்ளாமை பாக்குறவன் தன் வீட்டுப் பசுவைக் கொல்றதாவது? சண்டாளப் பாவி" என்றனர். "இவன் வீட்டைக் கொளுத்துங்கடா" என்றான் ஒருவன். "இவனையும் கட்டி வச்சு வெறி நாயுங்களை ஏவுங்க சொல்றேன்" என்றாள் ஒருத்தி.
  "ஐயோ சாமி.. எனக்கு எதுவுமே தெரியாது.." என்று கை கூப்பிய தாமு தன் நிலமை மோசமாவதை உணர்ந்தான். சின்னன் தலையிட்டு, "சாமி.. நான் அப்பலந்து இங்க தான் இருக்கேன்.. தாமு இதை செய்யலினு சொல்வேன்.. அப்படியே செஞ்சிருந்தாலும் நல்ல மனுசன்.. தண்டனை இல்லாம எளிய பரிகாரமா எதுனா சொல்லிடுங்க" என்றான். தாமுவை ஆதரவாகத் தட்டினான். அதில் எந்த வித ஆதரவும் இல்லை என்பது தாமுவுக்கு உறைத்தது.
   கொதித்துக் கொண்டிருந்த கூட்டத்தை அடக்கிய தலை பிராமணர் "தாமு.. பசுவதைக்கு பரிகாரமே கிடையாது.. இருந்தாலும் உன் பாவச் சுமையை குறைக்க நீ சில காரியங்கள் செய்யலாம்.. உன் ஆடு மாடுகளை கோவிலுக்கு தானம் கொடுக்கணும்.. உன் நிலத்துல பாதியை கோவிலுக்கு எழுதி வக்கணும்... முக்காடு போட்டு நீ ஆறு மாசம் நடுத்தெருவுல உன் பாவத்தை உரக்கச் சொல்லி பிச்சை எடுக்கணும்.. ஒரு வேளை மட்டும் சாப்பிட்டு மிச்சம் எடுத்த பிச்சையை ஊர்க்குளத்துல கரைச்சிடணும்.. தினம் ஊர்க்குளத்தடி மரத்துலதான் படுக்கணும்.."
  "ஐயோ சாமி.. அது கொடூரம்" என்றான் சின்னன். "தயவு பண்ணுங்க.. முதலாளி வீட்டுல இப்பத்தான் முழுகாம இருக்காங்க.. ஏதாவது எளிய பரிகாரமா சொல்லுங்க.. தெரியாம நடந்துடுச்சு தப்பு". சின்னன் 'முதலாளி'யை அழுத்திச் சொல்வது போல் தாமுவுக்குத் தோன்றியது. குருவிக்கூடாய்க் கட்டிவைத்த தன் வாழ்க்கை நொடிகளில் பருத்திக்காயாக வெடித்துச் சிதறியதை உணர்ந்தான்.
**
  "சீக்கிரம் கொண்டா" என்று இரைந்து கொண்டிருந்த அணைக்கட்டு சின்ன மேஸ்திரியைப் பொருட்படுத்தாமல் சிமென்டு மூட்டை, செங்கல் அடுக்கு, மணல் என்று தள்ளிக்கொண்டு வரிசையாக வந்த பணியாட்கள் வெயில் பொறுக்காமல் அவ்வபோது கைத்துண்டால் முகத்தைத் துடைத்துக் கொண்டு நின்றனர். இரண்டு வாரங்களாக அணைக்கட்டுப் பரியாரிகள் யாரும் வேலைக்கு வரவில்லை. சிரைக்க ஆளில்லாமல் வளர்ந்திருந்த தாடியைச் சொறிந்தபடி சின்னன் நிற்க பின்னால் வந்தவன் கவனிக்காமல் அவனை இடித்துத் தள்ளினான். விழுந்து புரண்ட சின்னனை "மன்னிச்சுங்கண்ணா.. கவனிக்கலே.. வெக்கைல கண்ணு மறச்சிடுச்சு" என்று கைகொடுத்து எழுப்பினான். தடுமாறி விழுந்த சின்னனின் கை கால்களில் பலமாய் சிராய்த்திருந்தது. "அய்யோ.. அடி பட்டிருச்சே!" என்று பதறியவனை சின்னன் நிறுத்தி "பரவாயில்லப்பா.." என்றான். இருவரும் ஒருவரை ஒருவர் நன்றாகக் கவனிக்க... "தாமு.." என்றான் சின்னன்.
  மாலையில் வாரக்கூலியை வாங்கிக்கொண்டு கூலியாட்களுக்கான கொட்டகையில் இருவரும் சந்தித்தனர். "ரெண்டு வருசம் இருக்குமா கடைசியா பாத்து... இங்க எப்ப வந்தே தாமு?"
  "ஊர்ல எல்லாம் போச்சு சின்னா... வீடு போச்சு.. பாவப்பட்டவன்னு யாரும் பழகலே.. பெண்டாட்டியும் வராதனு சொல்லிட்டா.. அங்க இங்க அலஞ்சு கடைசில கட்டிட வேலைல சேந்துட்டேன்.. கொலகாரன்னு யாரும் சொல்லலே.. காலம் போவுது.. நீ எப்படி இருக்கே சின்னா? பொன்னிக்கா..?"
   "உன் தண்டனைக்கு நான் தான் காரணமுன்னு சொல்லி பொன்னி என்னை விட்டுப் போயிட்டா... பழி வாங்குற மனுசனோட பழகினா பாவம்னு விலகிட்டா.."
   "என் பாவத்துக்கு நீ என்ன செய்வே சின்னா..?"
   தாமுவை நிதானமாகப் பார்த்தான் சின்னன். "எல்லாமே என் தப்பு தான் தாமு.. அன்னைக்கு நீ ஆடு மேச்சுக்கிட்டு போனு சொல்லியிருக்கலாம்.. என் மப்பு.."
   "இல்ல சின்னா.. அறிவில்லாம உன் நிலத்துல தீ வச்சு உன் மனசுல வன்மத்தைத் தூண்டுனது என்னோட வினை.. உனக்கு தண்டனை தரணும்னு நான் நினைச்சேன்.."
   சின்னன் பேசவில்லை. தாமு தொடர்ந்தான். "பிறகு உன்னை மானத்தோட வெள்ளாமை பழகி வாழ விடாம செஞ்சதும் நான் தான்.. கரனூர் மில் முதலாளி கிட்டே உன் பேர்ல பிராது கொடுத்தேன்.. உன்னை அவமானப்படுத்திக் கிட்டே இருந்தேன்.."
   மெள்ளத் தாழ்ந்து தாமுவின் கால்களைப் பற்றினான் சின்னன். "தாமு.. உன் மாட்டை நானும் கருப்பனும்.. இல்லை.. நான் திட்டம் போட்டு கொன்னேன்.. உன்னை நாசம் செய்யுற வேகத்துல.."
   "தெரியும் சின்னா" என்று தாமுவும் தாழ்ந்து சின்னனின் கைகளைத் தன் கால்களிலிருந்து அகற்றினான். அருகில் அமர்ந்து கொண்டான்.
   இருவரும் மௌனமாக இருந்தார்கள். இருட்டத் தொடங்கியிருந்தது. செவ்வானத்தில் நட்சத்திரங்கள் சிரிக்கத் தொடங்கின. அணைக்கட்டுக் கொட்டகையில் ஒவ்வொரு தீவிளக்காக ஏற்றிக் கொண்டிருந்தார்கள். சற்று தொலைவில் ஒரு சிறுவன் சில ஆடு மாடுகளை மேய்ச்சல் முடிந்து கொட்டிலுக்கு தள்ளும் பணியில் இவர்கள் பாதையில் வந்து கொண்டிருந்தான். தாமு சின்னனின் தோள்களை அழுத்தினான். சின்னன் தலையசைப்பில் ஆயிரம் சொற்கள். சிறுவன் பாடியபடி துரட்டியைத் தரையில் தட்டிக்கொண்டே இவர்களைக் கடந்து சென்றான்:
      ஆடும் வயித்துக்கு மேஞ்சிருச்சு பசு மாடும் வயித்துக்கு மேஞ்சிருச்சு
      ஆட்டையும் மாட்டையும் மேச்சவன் வயிறோ ஆலிலை போலே காஞ்சிருச்சு..
      உப்பழி தீக்குற கருப்பசாமி இனி உன் பழி தீக்குறதெவன் சாமி..


சின்னனும் தாமுவும் அர்த்தமில்லாமல் உரக்கச் சிரித்தார்கள். அர்த்தத்தோடும் சிரித்திருக்கலாம்.

கடை
     நான் என் பாணியில் இரண்டு வாரங்களாகத் தந்திருப்பது திரு.ப்ரேம்சந்த் எழுதி 1922ல் வெளிவந்த "முக்தி மார்க்" என்ற கதை. சின்ன பப்பாக்களை முக்திப் பாதையில் இழுத்து வருவது அப்பப்பாக்களின் கடமையென்ற தெளியா உணர்வில் எழுதப்பட்ட இந்தக் கதை, தெளியா உணர்வுக்கும் தெளிவிலா உணர்வுக்குமான வேறுபாட்டையும் சொல்லிப் போவதாக நினைக்கிறேன். கதையில் பப்பாவைப் பார்ப்பது எளிது, அப்பப்பாவை அறிய முடியவில்லை எனில் அது என் குறையேயன்றி கதாசிரியர் குறையல்ல.
     பின்னெழுபதுகளில் எம்ஜிஆரிலிருந்து ரஜினிகாந்துக்கு மெள்ள மாறிக்கொண்டிருந்த காலம். பொதுவாக விசிலடிச்சான் குஞ்சான என் வட்டத்தில் திடீரென்று கலையார்வம் தலைதூக்கும். சில நாட்களுக்கு ஜுரம் வந்தாற்போல் கலையார்வத்துடன் திரிவோம். வாடகை ஜேகே புத்தகத்தைக் கையில் வைத்தபடி குமுதம் படிப்பவர்களைக் கீழ்ப்பார்வை பார்ப்போம். சத்யஜித் ரே, ம்ருனால் சென், ராமு காரியத் என்று புரியாத இயக்குனர்கள் தந்த புரியாத மொழியின் புரியாத படங்கள் பார்ப்போம். தூர்தர்ஷனின் மனங்கவர் கறுவெண் ஒளிபரப்பில் நண்பன் வீட்டு டைனோரா டிவியில் தெள்ளெனத் தெரிந்த ஷ்த்ரஞ்ச் கெ கிலாரி மற்றும் ஒக ஊரின கதா என இரண்டு அவார்டு "ஆர்ட்" படங்களை துரித இடைவெளியில் பார்த்ததும் சட்டென்று என் மனதில் ஒரு திரி பற்றியது. இரண்டு படங்களும் ப்ரேம்சந்தின் கதைகள் என்பதே. இந்தி ப்ரசார் சபா தேர்வுகள் ஒன்றில் இவருடைய கதையை மனப்பாடம் செய்து அப்படியே கொட்டியது நினைவுக்கு வந்தாலும் முதல் முறையாக எழுந்து உட்கார்ந்தது மேற்சொன்ன படங்களைப் பார்த்த பின்னரே. கல்லூரியில் என் இந்தி பேராசிரியர் ப்ரேம்சந்தின் எழுத்து, காந்தீயம், சோஷலிச நம்பிக்கைகள் என்று பல பேசுவார். அந்த நாட்களில் நானும் அறிவிழந்து பொதுவுடமை பேசியதால் ப்ரேம்சந்தின் ஏழை படும் பாடு பாணிக் கதைகள் ஒட்டிக்கொண்டன. அப்போது ஏற்பட்ட ஈர்ப்பு சற்று மீதம் இருக்கிறது என்பேன்.
     எளியோரை ஆட்டி வைத்து அடிமையாக்கி அடிமட்டத்திலேயே உழலவைக்க வலியோர் பயன்படுத்தும் ஆயுதங்களே சாதி, மதம், தெய்வம், சடங்கு போன்றவை என்ற ப்ரேம்சந்தின் நம்பிக்கை அவருடைய பல கதைகளில் உள்ளங்கை பலாக்கனியாக வெளிப்பட்டன என்றால் அது மிகையல்ல. (மிகையல்ல என்று எழுதி வருடக்கணக்கிலாகிறது!). பெண் சிசுக்கொலை, சிறார் பிச்சை, விதவை அவலம், கள்ளக்காதல், நாட்டாமை அக்கிரமம், அரசின் கண்மூடித்தனம், வரதட்சணை, பொன்பித்து, வேசித்தாய், கலப்பு மணம் என்று கீழ்த்தட்டு மக்களின் அன்றாட வறுமை கோட்டுச் சிக்கல்களை மண்மணத்துடன் அதிகமாக எடுத்துச் சொன்ன இந்திய எழுத்தாளர்களில் ப்ரேம்சந்த் முக்கியமானவராக இருப்பார் என்று நினைக்கிறேன். இந்திய மக்களின் சிக்கல்கள் அத்தனைக்கும் காரணம் ஆங்கிலேய ஆதிக்கம் என்று தன் கதைகளில் மறைவாக இழை கூட்டியிருந்தது அவருடைய காந்திய விசுவாசம் என்று நினைக்கிறேன். இவர் எழுத்தை சுதந்திர இந்தியாவின் இலக்கிய ஆர்வலர்கள் இன்னும் சிறப்பாக முன்னிறுத்தியிருக்கலாம். கேவலமான எழுத்தை இலக்கியம் என்று வியாபாரம் செய்யும் அகங்காரம் பிடித்த போலி எழுத்தாளர்கள் பலருக்கு ஞானபீட அங்கீகாரம் தருகிறார்கள்!
     இந்தி புரிந்தால் ப்ரேம்சந்தை நிறைய ரசிக்கலாம். அவர் கதைகளின் முன்னிருபதாம் நூற்றாண்டு வாடை இந்நாளில் சுளித்தாலும் அவருடைய எழுத்தின் நயம் வாசகரைச் சற்றேனும் உலுக்கிக் கட்டிப்போடும் தன்மையது.   

सिपाही को अपनी लाल पगड़ी पर...
'தான் கட்டியிருக்கும் சிவப்பு முண்டாசில் ஒரு சிப்பாயக்கும், தான் அணிந்திருக்கும் நகைகளில் ஒரு அழகிக்கும், தன் முகப்பில் காத்திருக்கும் நோயாளிகளின் எண்ணிக்கையில் ஒரு மருத்துவருக்கும் தோன்றும் பெருமித இறுமாப்பு, செழித்து வளர்ந்த தன் பயிர்கள் காற்றில் ஆடுவதைப் பார்க்கும் பொழுது ஒரு விவசாயிக்கு ஏற்படுகிறது' என்று தொடங்கும் அழகு சொட்டும் முதல் வரிகளே முழுக்கதையையும் படிக்க வைத்தன என்றால் அது (மறுபடி) மிகையல்ல.
     நான் படித்த மறக்கவியலாத சிறுகதை #6.
  இதற்கு முந்தைய நா ப ம சி:  5  4  3  2  1

48 கருத்துகள்:

 1. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம்.

  பதிலளிநீக்கு
 2. மூலக்கதையை எவ்வளவு ஆழ்ந்து படித்து, உள் வாங்கிக் கொண்டிருக்கிறர்கள் என்பது புரிகிறது. கதைக்கு இடையே வரும் நாட்டுப் பாடல்கள் அருமை. அவையும் உங்கள் படைப்புதானா? மிகத் திறமையான எழுத்தாக்கம். பாராட்டுகள்!

  பதிலளிநீக்கு
 3. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம். நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். அனைவர் வாழ்விலும் சுபிக்ஷமும் மன அமைதியும் ஆரோக்கியமும் மேலோங்கப் பிரார்த்தனைகள்.

  பதிலளிநீக்கு
 4. அருமையான கதை. ப்ரேம்சந்தின் கதைத் தொகுப்பில் இந்தக் கதை படிச்சிருக்கேனா என்பது நினைவில் இல்லை. அப்பாதுரை தேர்ந்தெடுத்துப் படித்துப் பகிரவும் செய்கிறார். அவருடைய மற்றக் கதைகளையும் போய்ப் பார்த்துட்டு வந்தேன். சில கதைகள் முன்னாட்களில் தூர்தர்ஷன் மட்டும் இருந்தப்போத் தொடராகவும் வந்திருக்கின்றன. நமக் கா தாரோஹா மிகப் பிரபலமான கதை. அநேகமாக அனைவருக்கும் ஹிந்தி படிக்கையில் பாடத்தில் வந்திருக்கும்.

  பதிலளிநீக்கு
 5. அனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்

  பதிலளிநீக்கு
 6. கதை அருமை.

  //ஆடும் வயித்துக்கு மேஞ்சிருச்சு பசு மாடும் வயித்துக்கு மேஞ்சிருச்சு
  ஆட்டையும் மாட்டையும் மேச்சவன் வயிறோ ஆலிலை போலே காஞ்சிருச்சு..
  உப்பழி தீக்குற கருப்பசாமி இனி உன் பழி தீக்குறதெவன் சாமி..//

  ஆடு மேய்க்கும் சிறுவன் பாட்டுகேட்டு, சின்னனும் தாமுவும் அர்த்தம் தெரிந்துதான் சிரித்து இருக்கிறார்கள்.

  பழி வாங்கும் என்னம் இருக்க கூடாது என்று சொல்லும் அருமையான கதை.

  கதைக்கு பொருத்தமான படம் மாலை நேர வானம், ஆடுகள், ஆடுமேய்க்கும் சிறுவன், சின்னான், தாமு படம் அருமை.

  பதிலளிநீக்கு
 7. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
  அனைவரும் ஆரோக்கியம், அமைதி உடன் வாழ்வு
  பெற இறைவன் அருள வேண்டும்.

  பதிலளிநீக்கு
 8. துரை சொல்லி இருக்கும் படங்களை தூர்தர்ஷன்

  பழைய காலங்களில் பார்த்திருக்கிறேன்.

  கதைக்குக் கொடுத்திருக்கும் படம் அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இடைக்காட்டு சித்தர் தாண்டவக்கோனே பாடல்களின் ஊற்று.
   சில தாண்டவக்கோனே வரிகளையும் ஏற்றப்பாடல் வரிகளையும் சாம்பார் செய்து வழங்கினேன்.

   எதையும் சும்மா விட்டு வைக்க கூடாது என்று சில பேர் இருக்கிறார்கள் உலகத்தில்.

   நீக்கு
 9. ஆரியக் கூதாடினாலௌம் தாண்டவக் கோனே
  பாடலைப் பராசக்தி படத்தில் கேட்டிருக்கிறேன்.
  சித்தர் பாடலோ?

  பழி பாவங்களுக்கு அஞ்சிய வாழ்க்கை
  வாழச் சொல்ல வந்த கதை,.
  மிக அருமையாகச் சொல்லி இருக்கிறார்.

  வங்காளக் கதைகள் வறுமையில் தோய்ந்து
  வரும். .
  அதன் சாரம் தமிழில் மிகச் சிறப்பாகக்
  கொடுத்திருக்கிறார்.
  அதுவும் தமிழ்ப் பொன்னியும் சின்னானும்
  படும் கொடுமைகளைச் சித்தரிக்கும் விதமும் அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வங்காளம்.. இந்தி.. சமான சமான

   நீக்கு
  2. முன்ஷி ப்ரேம்சந்த் அவர்கள் ஹிந்தி/உருது ஆகிய இரண்டு மொழிகளிலும் கதை எழுதி இருக்கிறார். வாரணாசியில் வசித்தவர். அந்தக் காலத்திலேயே விதவைத் திருமணம் செய்து கொண்டார். உத்திரப் பிரதேசத்தில் தான் கிழக்குப் பகுதியின் பள்ளிகளில் ஆசிரியராக வேலை பார்த்தார். மரணம் அடைந்ததும் காசிதான் என நினைவு. வங்காள மொழி ஆசிரியரான சரத் சந்திரர் இவர் காலத்தவர். ஹிந்தியில் கதைகளை/சிறுகதைகளை உபந்நியாசம் என்பார்கள்/ தமிழில் உபந்நியாசம் என்றால் அர்த்தமே வேறே. சரத் சந்திரர் முன்ஷி ப்ரேம்சந்தை "உபந்நியாஸ் சாம்ராட்" என்ற பட்டமளித்துக் கௌரவித்திருக்கிறார்.

   ஹிஹிஹி, ஹிந்தி படிக்கையில் படிச்சது. பரிக்ஷையில் ப்ரேம்சந்தைப் பற்றிச் சிறு குறிப்பு எழுதச் சொல்லுவாங்க. அது நினைவுக்கு வந்து எழுதிட்டேன். பாஸா? இந்தக் கதையும் ஹிந்தி தான். வங்காளம் இல்லை.

   நீக்கு
  3. ''வங்காளக் கதையா !"வங்காளத்தில் உருவான என்று நான் நினைத்தேன். உங்களை எல்லோரையும் போலப்
   பன்மொழி வித்தகி நான் இல்லை. வெறும் தொலைக்காட்சி தூர்தர்ஷன்
   பார்வையாளர்.

   ரே கதை வங்காளப் பின்புலம் என்று தெரியும்.
   நான் பிரேம்சந்த் முன்ஷி படித்ததில்லை.
   அது பவான்ஸ் ஜர்னலில் வந்திருந்தால் தெரிந்திருக்கும்.

   அறியாமைக்கு மன்னிக்கவும்.பல பல இரவு ஜந்துகள் coyotes அதிக சத்தம் இடுவதால்
   தூக்கம் கெடுகிறது.
   காலையில் கதை படிக்கும் போது

   பலவற்றை உள்வாங்குவதில்லை.
   உள் வாங்காமல் பின்னூட்டம் இட்டால்
   வழுக்கி விடுகிறது:))))

   நீக்கு
 10. கூத்தாடினாலும் என்று வந்திருக்க வேண்டும்.

  பதிலளிநீக்கு
 11. ப்ரேம் சந்த் நினைவுகளை மீட்டதற்கு நன்றி. மிக நன்றாக ’தமிழ்ப்படுத்தி’ இருப்பதால் நம்ப பின்புலத்தை மனதில் இருத்தி வாசிக்க, ரசிக்க முடிந்தது.

  ஒரு மாதமுன்பு ப்ரேம்சந்தின் ‘Kafan' போன்ற கதைகளைப் படிக்க நேரிட்டது. ஆங்கில மொழிபெயர்ப்பைப் படித்துக்கொண்டு அவ்வப்போது ஹிந்தி ஒரிஜினலையும் கவனித்துக்கொண்டிருந்தேன். கதைச்சூழல், சொல்லும் நேர்த்தியின் தாக்கத்தால் அவரைப்பற்றி நான் கதை கட்டலானேன் -அதாவது ஒரு கட்டுரையை எழுத ஆரம்பித்தேன். எழுதி இன்னும் முடியவில்லை. இடையிடையே டெல்லி பயணம் , பெங்களூர் திரும்பல் என ஏதேதோ குறுக்கிடல்களில் ப்ரேம்சந்த்தை தொடரமுடியவில்லை. அதற்கான மனநிலை சரியாக வராமல், நான் எதையும் எழுத்தில் கொணர முயல்வதில்லை. அது அங்கேயே நிற்க -

  ஷத்ரஞ் கே கிலாடி (-Shatranj ke Khilari-என ஆங்கிலத்தில் எழுதினாலும், Khilari-யின் ஹிந்தி உச்சரிப்பு ‘கிலாடி’தான்!) படத்தை டெல்லியில் ஒரு சர்வதேசத் திரைவிழாவில் ’இந்திய இயக்குனர்கள் பிரி’வில் 80-களில் பார்த்தேன். (இதையெல்லாம் கூட இருந்து ரசிக்க ஒரு அருமையான மலையாள நண்பனும் இருந்தான் எங்கள் மினிஸ்ட்ரியில் அப்போது.) மூலக்கதையெழுதியிருந்த ப்ரேம்சந்தை சரியாகக் கவனிக்காமல், சத்யஜித் ரேயின் இயக்க நுட்பத்தில் ஆழ்ந்திருந்தேன்! அந்த மனநிலையில் பல நல்ல கலைப்படங்களை (மிருணாள் சென், அரவிந்தன், ஷ்யாம் பெனகல், ஆடூர் கோபாலகிருஷ்ணன்) அப்போது விரட்டி, விரட்டிப் பார்த்திருக்கிறேன். கொஞ்சம் நினைவிலிருந்து மீட்டு அதுபற்றியும் எழுதவேண்டும் என நினைப்பதுண்டு.

  பதிலளிநீக்கு
 12. காலை வணக்கம் சகோதரரே

  அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 13. கதையைத் தொடர்ந்து படித்ததற்கும் கருத்துக்களுக்கும் நன்றி.

  பிரபலமான கதை எழுத்தாளர்கள் பலரின் கதைக்கரு பலவீனமானதாகவே இருக்கும் - எழுத்து நடையிலும் சொல் தேர்விலும் சாகசம் கட்டி அந்த பலவீனத்தை பூசி விடுவார்கள். எழுத்தின சாகசம் நினைவில் நிற்குமே தவிர 'இந்தாளு உருப்படியா என்ன கதை எழுதினாரு'னு யோசிச்சா யோசிச்சுக்கிட்டே இருக்க வச்சுரும்.

  பிரேமசந்த் கதைக்கருக்களின் கனம் அவர் எழுத்து நடையை பல சமயம் மிஞ்சும். தமிழ் பிரபலங்களில் சட்டென்று நினைவுக்கு வருவோர் புதுமைபித்தன், சுந்தர ராமசாமி, அசோகமித்திரன்.

  kgg excels. சரியான தருணத்தை தேர்வு செய்து சித்திரமாக்கி இருக்கிறார். silhoutteன் நேர்த்தியை ரசித்தேன் (துரட்டிக்கழியின் நிழல் nice touch).

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //பிரபலமான கதை எழுத்தாளர்கள் பலரின் கதைக்கரு பலவீனமானதாகவே இருக்கும் - எழுத்து நடையிலும் சொல் தேர்விலும் சாகசம் கட்டி அந்த பலவீனத்தை பூசி விடுவார்கள்.// உண்மைதான். தி.ஜானகிராமன் கூட அப்படித்தான்.

   நீக்கு
 14. ஏற்றப்பாடல்களின் மூலம் சொந்த சரக்கில்லை. சுட்ட சரக்கு. கதையைப் போலவே இங்கேயும் கைவரிசையைக் காட்டியிருக்கிறேன். பிழைகளுக்கு நானே பொறுப்பு.

  பிரேம்சந்தின் கதையில் இப்படி ஏதாவது சேர்த்திருக்கலாம் என்று நினைத்ததுண்டு. வசமாக சிக்கியது (சிக்கினீர்கள்).

  விவசாயப் பாடல்கள், ஏற்றப் பாடல்கள் என்று தேடினால் இணையத்தில் கிடைக்கும்.

  முனைவர் அர.மீனாவின் blog முருகியல். கல்லூரி மாணவர்களுக்காகப் பொதுத் தமிழ்ப் பாட விளக்கங்கள் தர படாத பாடு பாடுகிறார். நமக்குத தான் ஜாலி. நிறைய நாட்டுப்பாடல், ஏற்றப்பாடல், கூத்துப்பாடல், நடவுப்பாடல், தெம்மாங்கு.. என்று மறந்தே போனவற்றை நினைவூட்டுகிறார். வருங்காலம் அவரை வணங்கட்டும்.

  இந்தக் கதையில் நான் கையாண்ட (இலக்கிய போலீஸ் என்னைப் பிடிக்காதிருக்கட்டும்) ஏற்றப்பாடல்களின் மூல வரிகளை முனைவர் மீனா அவர்களின் இந்தப் பதிவில் படிக்கலாம் :
  https://arangameena.blogspot.com/2020/12/blog-post_48.html

  பதிலளிநீக்கு
 15. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
  இறையருள் சூழ்க எங்கெங்கும்..

  வாழ்க வையகம்..
  வாழ்க வளமுடன்..

  பதிலளிநீக்கு
 16. முக்தி மார்க் கதை - அப்பாதுரை அவர்களின் நடையில். படித்தேன். ரசித்தேன். ஓவியமும் நன்று.

  பதிலளிநீக்கு
 17. // வலியோர் பயன்படுத்தும் ஆயுதங்கள் //

  இன்றளவும்...

  அருமையான எழுத்தாளர்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் சார்.. வாழ்வியல் சிக்கல்களைச் சொல்லும் மண்மண எழுத்து என்றால் பிரேமசந்த் உடனே நினைவுக்கு வருகிறார். அவருடைய வர்ணனைகள் கருக்கள் பலவற்றை பிரபல தமிழ் எழுத்தாளர்கள் அப்படியே சுவாகா செய்து பரிசும் புகழும் பெற்று இருக்கிறார்கள்.

   நீக்கு
 18. வணக்கம் சகோதரரே

  கதை நன்றாக இருந்தது. இடையிடையே தந்த பாடல்களும் அருமை. எ.பியில் ஏற்கனவே வந்த சகோதரர் அப்பாத்துரையின் மறக்கவியலாத கதைகளை நல்ல எழுத்து நடையுடன் படித்து மிகவும் ரசித்திருக்கிறேன். நல்ல கதைகளை இப்படி தேடித் தரும் அவருக்கு எனது மனம் நிறைவான நன்றிகள்.

  இந்த கதைக்கு மிகப் பொருத்தமாக ஓவியம் வரைந்த சகோதரர் கௌதமன் அவர்களின் திறமை கண்டு வியக்கிறேன். மனமார்ந்த பாராட்டுக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 19. //கோவம் விதச்சா பாவம் பயிருனு சொல்வாங்க//

  அருமை சிந்திக்க வேண்டிய விஷயம்.

  பதிலளிநீக்கு
 20. திரு கௌதமன் கதையின் சரியான பகுதியைத் தேர்ந்தெடுத்துப் படம் வரைந்திருக்கிறார். பாராட்டுகள். அப்பாதுரை கொடுத்திருக்கும் மற்றச் சுட்டிகளையும் மறுபடி போய்ப் பார்த்து நினைவூட்டிக் கொண்டேன். எல்லாமே அருமையான தேர்வு.

  பதிலளிநீக்கு
 21. ஆடுகள் மேலேற, சூர்யன் கீழிறங்க, மேய்ப்பன் அரிவாள் செருகிய கழியைத் தோளில்
  வைத்தவாறு .. கேஜிஜி கதைக்காட்சி ஒன்றை அழகாகக் கண்முன்னே வைத்துவிட்டார்!

  பதிலளிநீக்கு
 22. மனித மனங்களின் வக்கிரங்களைக் கண்ணாடியாகக் காட்டுகின்றது கதை..

  கிராமங்களில் அவ்வப்போது இப்படியான நிகழ்வுகளும் இருக்கின்றன..

  பொன்னிக்கு நேர்ந்தது தான் மிகவும் வருத்தம்...

  பதிலளிநீக்கு
 23. திரு KGG அவர்களது சித்திரம் அருமை.. அழகு..

  பதிலளிநீக்கு
 24. அருமையாக சொல்லியுள்ளார்.
  தீங்கு செய்தல் கூடாது என்பதை எடுத்துச் சொல்கிறது பின்பு தவறை உணர்ந்துகொள்கிறார்கள்.
  படமும் நன்று.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!