அவருக்கு 70 வயதுக்கு மேல் இருக்கும். வயதானால் வரும் பருமனான உடல் அமைப்பு இல்லாதவர். காரணம் அவர் நிலை.
அவர் வீட்டிலும் சரி, மற்ற நண்பர்கள், உறவினர் வீட்டுக்குச் சென்றாலும் சரி அவர் சுறுசுறுப்பைப் பார்க்க வேண்டும். ஐந்து நிமிடம் ஒரு இடத்தில உட்கார மாட்டார். ஏதாவது ஒரு வேலையை இழுத்துப் போட்டு செய்து கொண்டே இருப்பார்.கறிகாய் நறுக்கித் தருவதும், துவைத்த துணிகளை உதறி காயப்போடுவதும், காய்ந்த துணிகளை நீவி மடித்து வைப்பதும், பாத்திரங்களைத் தேய்க்க பரபரப்பதும்..
'நான் வேணா ரசம் வைக்கவா? நல்லா ரசம் வைப்பேன். என் வீட்டுக்காரர் ஏந்தி ஏந்தி குடிப்பார்"
முழு சமையல் செய்து கொடுக்கவும் ரெடி.
"அதைக் கொடு நான் செய்யிறேன்... நீ அடுப்பை கவனி" செய்து கொண்டிருக்கும் வேலையைப் பிடுங்கி கொள்வார். திடீரென பார்த்தால் வீட்டைப் பெருக்கிக் கொண்டிருப்பார்.
வீட்டில் உபயோகமில்லாமல் எதையாவது நீண்ட நாள் போட்டு வைத்திருந்தோமானால் அதைப் பார்த்து வைத்துக் கொள்வார். ஓரிரு முறைகள் வந்த பிறகு மெதுவாக அதைக் கேட்டுப் பார்ப்பார். கொடுத்தால் எடுத்துச் செல்வார்.
சென்ற வாரம் சொன்ன 'ஹலோ டைப்'பில் இவர் சசடபடசடபடசடபட டபடசடபடசடபட டொக் ரகம்! ஆனால் இவருடனான உரையாடல்கள் 'எரிவாயு உருளைப் பதிவு' போல பெரும்பாலும் ஒரு நிமிடத்தைத் தாண்டாது!
சில உறவுகளுக்கு அவர் வந்தால் ஒரு ரிலீஃபாக இருக்கும். சில உறவுகளுக்கு கஷ்டமாக இருக்கும். "பாட்டி.. நீங்க கொஞ்ச நேரம் உட்காருங்க... நான் செய்யிறேன்... இந்த வயசுல ஏன் கஷ்டப்படறீங்க"
"என்னால முடியறதை செய்யறேன். எனக்கு ஒருவேளை முடியாமப்போனா நீங்களெல்லாம் செய்ய மாட்டீங்களா என்ன..."
இந்த வார்த்தைதான் சோகமானது. எழுபதைத் தாண்டிய அவருக்கும், எண்பதை நெருங்கும் அவர் கணவருக்கும் வாரிசு கிடையாது. வருமானமும் இல்லை. இருந்த ஒரு மகன் கல்லூரி படிக்கும் வயதில் அல்பாயுசில் ஆறுநாள் காய்ச்சலில் போய்விட்டான். கணவர் தனியார் நிறுவனத்தில் குறைந்த சம்பளத்தில் பணியிலிருந்தார். இவர்கள் வாழ்க்கை நிலையைக் கருதி அவரையும் வயதுக்கு மீறி பணியில் வைத்திருந்தார் அவர் முதலாளி. அவ்வப்போது கீழே விழுந்து கை, கால், இடுப்பு என ஒடித்துக்கொண்டு சிகிச்சை செய்து கொண்டு, ஒரு நிலையில் நகரக்கூட சிரமப்படும் நிலையில் ஒன்றுமே இனி வேலை செய்ய இயலாது என்று ஆனபின் தான் வீட்டோடு இருக்கிறார் அவர்.
'என்னால முடியறதச் செயயறேன்' என்று சொல்லும் அவர் இதுவரை எந்த வேலையையும் இது என்னால் முடியாது என்று சொல்லி யாரும் பார்த்ததில்லை. தெரியாத விஷயங்களையும் வெகு விரைவில் கற்றுக் கொண்டு விடுவார்.
சொற்ப அளவில் கையிருப்பு. "அதிலிருந்து இப்போ எடுக்க வேணாம்ங்க.. சமாளிப்போம்.. எமெர்ஜன்ஸிக்கு தேவைப்படும்"
உதவும் உள்ளங்கள் உண்டு என்றாலும் கிழவரின் வாய் அவ்வப்போது உதவுபவர்களை தூர நிற்கவைக்கும்.
"அது கிடக்கு கிழம்... அது பேச்சை பெரிசா எடுக்காதீங்க... நீங்கள் எல்லாம் இல்லாட்டா யாரிருக்கா எனக்கு?" இவர் என்னவோ சிறு பெண் மாதிரி! ஒரு காலத்தில் டெரராய் இருந்த துணை இப்போது கிழம்!
"யார் முன்னாடி போவோமோ... நான் போயி அவர் இருந்தா ரொம்ப கஷ்டப்படுவார்... தானா எதுவும் செஞ்சுக்க உடம்பில வலு இல்ல.. பார்த்துக்க ஆளும் இல்ல...கையில காசும் இல்ல.."
வயதான இருவரில் யார் போனாலும் இன்னொருவருக்கு கஷ்டம்தான்.
உடம்பு செயலாய் இருந்த காலத்திலேயே கொஞ்சம் நெருங்கி இருந்த ஒரு சில உறவுகளையும் தன் வாயால் தள்ளி வைத்திருந்தார் அவர்! நெருங்கி வந்தால் பொறுப்பு எடுத்துக் கொள்ள வேண்டி வருமோ என்று அவர்களும் கண்(டும்) காணாதே இருந்தனர்..
"இனி யாரோடும் சண்டை போடக்கூடாது... இருக்கற ஒண்ணு ரெண்டு பேரையும் பகைச்சுண்டா தூக்கிப்போட கூட ஆளிருக்காது" சுய வியாக்கியானம்.
ஒருவர் போய் ஒருவர் இருந்தால் அந்த இன்னொருவருக்கு யார் வீட்டில் இடம் கொடுப்பது, பார்த்துக்கொள்வது, என்கிற கவலை தனி! நெருங்கிய உறவுகள் யாரும் நெருங்குவதில்லை. நாளை 'ஏதாவது' ஆனபின் பொல்லாப்பு வந்தால்? என்கிற கவலை அருகில் உள்ளோருக்கு.
இந்த வயதிலும் ஒரு பள்ளியில் அவர் ஆசிரியையாக பணிபுரிகிறார். அவர் நிலை அறிந்து அவருக்காக அந்த வேலையை வைத்திருக்கிறார்கள் பள்ளி நிர்வாகத்தினர். குறைந்த, மிகக் குறைந்த வருமானம்தான் அதில் கிடைக்கும்.
ஆனால் வாழ்க்கையை ஓட்டவேண்டுமே.. வீட்டு வாடகை, மாதாந்திர மளிகை, மருத்துவ செலவுகள், அலைபேசி டாப்பப்புகள்.. கண் அறுவை சிகிச்சையை எங்கோ இலவசமாகச் செய்கிறார்கள் என்று தெரிந்து அங்கு சென்று செய்துகொண்டு வந்து விட்டார்.
சில வாண்டுகளுக்கு டியூஷனும் எடுப்பார். அதென்னவோ அந்த வாண்டுகளின் பெற்றோர் வாண்டுகளின் தொல்லையிலிருந்து கொஞ்ச நேரம் விடுதலை, மாமிக்கும் உதவி என்று நினைப்பதாகவே தோன்றும்.
ஆஞ்சநேயர் மேல் அபார பக்தி. அதற்கு முன்பு பாபா மேலும், அதற்கும் முன்பு ஏதோ ஒரு அம்மன் மேலும் ப்ரீத்தியாய் இருந்தார்.
"எதுவா இருந்தாலும் ஒரு சீட்டுல எழுத அவர் காலடியில வச்சுடுவேன்.. உடனே நடந்துடும்... நடக்காம இருக்கவே இருக்காது.. உங்களுக்கும் எழுதி வைக்கறேன்" என்பார். மாறி நடந்தாலும் அது ஆஞ்சநேயர் அருள்தான்! அதுவும் அவர் வீட்டில் காலண்டரில் மாட்டியிருக்கும் அந்தப் பழைய ஆஞ்சநேயர்தான்!
பஸ் கிடைப்பதிலிருந்து பல்லாங்குழி வரை ஆஞ்சி அருள்! அவர் எழுதி வைத்தும் நடக்காத பிரார்த்தனைகள் பற்றி பேச்சு வரும்.
"எனக்கு நடக்கறதே.." அவர் வீட்டுக்கருகில் இவர் வேண்டுதல்/தேவை அறிந்த ஏகப்பட்ட அம்மன்கள், ஆஞ்சநேயர், பாபாக்கள் இருக்கிறார்கள் என்று தெரியும்! எல்லார் வீட்டிலும் ஏதாவது ஒரு காரியம் அல்லது உதவி இவர் கையால் அவ்வப்போது நிகழ்ந்து கொண்டிருக்கும்.
உறவினர் என்றும் அதிகம் கிடையாது. இரண்டே பேர்.. இவர் அவர்கள் வீட்டுக்குச் செல்லும்போது அவர்களுக்குத் தேவையானது ஏதும் இருக்கிறதா என்று கேட்டு, "இந்த வாட்டி அலைய வேணாம்.. காபிப் பொடியா, வெண்ணெயா? நான் வாங்கிட்டு வந்துர்றேன்.. வந்து காசு வாங்கிக்கறேன்... கத்தரிக்கா பளபளன்னு இளசா சிறுசா இருக்கு.. கால் கிலோ வாங்கி வரவா?"
வாங்கி கொண்டு வந்து விட்டு காசு வாங்கிக்கொண்டு விடுவார்.
"மாமி அதுல கமிஷன் அடிக்கறா?"
"நிச்சயம் மாட்டா... அப்படியே இருந்தாலும் போகட்டுமே... எவ்வளவு அடிப்பா.. பத்து ரூபா? இருபது ரூபா? நீ போயிட்டு வந்திருந்தா அலைச்சலுக்கே நூத்தம்பது ரூபா ஆகும்.. விடு"
ஒருமுறை அவரை கேவலமாக, மரியாதைக்குறைவாக பேசிவிட்டாராம் அவர் தெருவில் ஒருவர். 'அப்படிச் சொல்லாதீங்கோ' என்று மட்டும் சொல்லி விட்டு வந்தாராம்.
அந்த ஒரே ஒரு முறை ஒருதுளி கண்ணீரை அவர் கண்ணில் பார்க்க முடிந்தது. ஜலம் தளும்பிய கண்கள். அந்த ஒரு சொட்டு கூட வெளியில் இறங்கவில்லை.
"பின்னே? ரோஷப்பட்டு சண்டை போட்டுட்டா, எனக்கு யார் இருக்கா? அவங்களுக்கு ஆதரவா இன்னும் நாலுபேர் என்னை முறைப்பா... போதும், முன்னால ரோஷப்பட்டு பேசியதுல விலகி நிற்கற உறவுகள். 'அம்மா.. நீ அவங்க வீட்டுக்கெல்லாம் போகாத.. நான் பார்த்துக்கறேன்னு சொல்ல எங்களுக்கு ஒரு பிள்ளை கிடையாது.. என்னை எப்போ வேலையிலிருந்து எடுப்பாங்களோ.. எனக்கு ஆள் வேணுமே... அவங்க, உங்க ஆதரவு.. எல்லாம் வேணுமே.... யார் இருக்கா சொல்லு..."
=======================================================================================
இலக்கிய சர்ச்சை, இலக்கிய சர்ச்சை என்கிறார்களே... என்ன சர்ச்சை செய்வார்கள் என்று எண்ணியதுண்டு...! இங்கு இவர் ஜெயகாந்தனை கடிக்கிறார்!
.... இவ்வாறாக படைப்பு இலக்கியத்திற்கு ஒரு நெருக்கடி நிலைமையை ஏற்படுத்த துணிந்த எழுத்தாளர்களும் எழுத்தாளிகளும் அடங்கிய அந்த நாசகார கும்பல் 4 பேர்வழிகளை தட்டிக்கேட்க நேற்று வரையிலும் கூட சமூகப் பிரக்ஞையும் சமூக வளர்ச்சியில் நாட்டம் கொண்ட யாருமே முன்வரவில்லை முன்னே வரத் துணியவும் இல்லை. ஏன் இலக்கியத்தை அந்தக் காலத்திலே அவ்வப்போது நிறுவை செய்தும் அளவை செய்தும் விமர்சனம் செய்து வந்த கா நா சுவையும் காணவில்லையே...
திருப்பாற் கடலிலே ஆலம் - நஞ்சு கலந்து விட்டது. அந்த நஞ்சை கண்டத்திலேயே தாங்கி திருப்பாற்கடலை மீண்டும் புனிதம் உடையதாகவும் மிகவும் பொற்பு மிக்கதாகவும் ஆக்கும் பொறுப்பை எனக்கு நானே ஏற்றுக் கொள்ளவும் வேண்டியவன் ஆனேன். நஞ்சை களைந்து போக்க வேண்டுமேயானால் அமிர்தத்தின் பெருமையை உணர வேண்டும் உணர்த்தவும் வேண்டும். அப்போதுதான் அமுதத்தின் திருச் சன்னிதானத்திலே, நஞ்சு தலைகுனிய வாய்ப்பு கிட்ட முடியும்? அந்த சமுதாய துரோகிகள் நால்வரையும் சமூகத்தில் குற்றவாளி கூண்டில் நிறுத்தி சாங்கோபாங்கம் இலக்கிய விசாரணையை நடத்திக் காட்டவே 'சுதந்திரம்' என்னும் வார இதழில் 'பூவையின் பக்கங்கள்' என்னும் சூடும் சுவையும் நிறைந்த பகுதி ஒன்றை உருவாக்கி இன்றைய தமிழிலே படைப்பிலக்கியம் எங்கே போய்க்கொண்டிருக்கிறது என்பது பற்றிய தீரத்தெளிய ஆராயத் தொடங்கினேன்.....
இப்படிப்பட்டதொரு சோதனையான கட்டத்திலேதான் இலக்கியத்தை, நாவல் இலக்கியத்தை, புதிய அலை எனும் பெயரால் சோதிக்கத் துணிந்த அந்த சுஜாதா, இந்துமதி, புஷ்பா தங்கதுரை, சிவசங்கரி ஆகிய 4 பேரையும் அக்குவேறு ஆணிவேறாக சோதிக்கவும் தலைப்பட்டேன். என்னுடைய இப்பரிசோதனையில், நீதி விசாரணையில் கையும் களவுமாக பிடிபட்ட காயத்ரி, மணல் வீடுகள், ஒரு சிங்கம் முயல் ஆகிறது, ஒரு ஊதாப்பூ கண்சிமிட்டுகிறது போன்ற நாவல்கள் தமிழ்ச் சமுதாயத்திற்கு இழைத்த பண்பாடு தவறிய, மனிதாபிமானம் இழந்த, தருமம் சிதைந்த, அநீதியையும், அநியாயத்தையும் பாவத்தையும் பாரம்பரியப் பெருமை பூண்ட நமது அருமை தமிழ்ச் சமூகத்தின் முன்னிலையிலேயே அம்பலப்படுத்தவும் செய்தேன்.
எச்சில் புத்தியும் ஈனத்தனமும் படைத்த மஞ்சள் இலக்கியத்தின் முடிசூடா மன்னர்களையும் முடிசூடிய மன்னிகளையும், எழுத்து சமூகத்தின் புல்லுருவிகள் என இனம் காட்டி, அவர்களுடைய உண்மையான சுயரூபத்தை இந்த தமிழ் சாதி உண்மையாக அறிந்து உணரவும், உணர்த்தவும் தங்கமானதொரு சந்தர்ப்பம் உண்டாகவும் செய்தேன்.
அசலான இலக்கிய விமர்சகர் தானேதான் என்பதாக அந்நாளில் தம்பட்டம் அடித்து திரிந்த க நா சுவை க நநா சுவின் வாதத்தை - புதினத் துறையில் தேக்கம் ஏற்பட்டு விட்டதாக புரளி கிளப்பி விட்டகா நா சுவின் இந்தக்கூற்றை பொய் என்று மெய்ப்பிக்க வேண்டிய கடமை பொறுப்பை உணர்ந்த நான், அந்த கானா சுவையே ஒரு பிரச்சினையாக்கி 'க நா சு பிரச்சனை 'என்ற புதிய பகுதி ஒன்றையும் நான் ஆசிரியப் பொறுப்பேற்றிருந்த 'உமா' ஏட்டில் ஆரம்பித்து அவ்வரிசையில் தமிழ்ப் புதின இலக்கியத்திற்கு புரட்சி மிக்க வாழ்வையும் புதுமை மிகுந்த வளப்பத்தையும் நல்கிய - நல்கி வந்த நாவலாசிரியர்கள் பற்றிய திறனாய்வையும் ஆரம்பித்தேன். ............................
அவ்வரிசையில் தமிழ் புது நிலையத்திற்கு புரட்சி வைக்க வாழ்வையும் இந்த இலக்கிய திறனாய்வு கட்டுரைத் தொடரின் முதல் பகுதிதான் பின்னர் 1964 ஆம் ஆண்டில் கல்கி முதல் அகிலன் வரை என்னும் பெயரில் நூல்வடிவம் பெற்றது.
.................................................................................................................................................................................................................
................... சும்மா சொல்லக்கூடாது பிரபு என்றால் பிரபுதான். பிரபு யார்? அசல் ஆண்பிள்ளை. சாண் பிள்ளையானாலும் ஆண் பிள்ளை ரகம். உயர் மட்டம். உயரம்... ஒருவேளை கங்காவுக்கு இது தெரிந்திருக்கக் கூடும்.
பிரபுவை இந்த கங்கா எப்படி இனம் கண்டாள்? காலங்கடந்து - 12 ஆண்டுகளையும் கடந்து, ஆனால் உயிரை மட்டும் கடக்க மாட்டாமல் - இல்லை இல்லை, கடக்க ஒப்பாமல், இந்த பிரபுவை அந்த தங்களை அடையாளம் கண்டு கொள்ள முடிந்திருக்கிறது என்றால் அது ஒரு அதிசயம்தான் அவளே சொல்கிறாள். "அவன் (பிரபு) கண் பாம்பு மாதிரியோ மயில் மாதிரியோ பக்கவாட்டில் இருந்து பார்க்கறச்சே அன்னிக்கி அந்த இருட்டிலே, மங்கின வெளிச்சத்திலே தெரிஞ்சதே, அது அப்படியே இப்ப என் மனசுல தெரியறது." பிரபுவின் கம்பெனி சம்பந்தப்பட்ட ஆண்டு மலர் ஒன்றில் அவனுடைய பெயர், படம் எல்லாம் வெளிப்படுத்தப்பட்டிருந்ததை கங்கா காண நேர்ந்த வகையில் அவள் கெட்டிக்காரி. " இந்தப் பெயரை படிச்சோ இந்த படத்தை பார்த்தோ நான் இவனை கண்டுபிடிச்சுடலே. இது அவன் தான் தெரிஞ்ச பிறகு அந்த கண்ணுல சர்ப்பம் தெரியறதே... கங்கைப் பிரவாகமாக பின்காவின் நெஞ்சம் பொங்குகிறது
கங்கா இப்போது தனக்குத்தானாகவும் தன்னில் தானாகவும் பேசிக் கொள்கிறாள். பெருமையோடு பேசிக் கொள்ளுகிறாள். பெருமிதத்தோடும் பேசிக்கொண்டு இருப்பாள் போலிருக்கிறது! அவள் என்ன பேசிக் கொள்கிறாள் தெரியுமா" "இப்ப நான் ரொம்ப ஜாக்கிரதையா இருக்கேன். நான் அப்போ மாதிரி அசடு இல்லே... நான் இப்போ ரொம்ப ரொம்ப சமத்து"
அடிப்பாவி கங்கா! நல்ல மனித நாடகம்... ஆனால்? மனிதத் தன்மை மிக்க நாடகம் தானா? ஊஹூம்... இந்த நாடகத்திலே: மனிதத்தன்மை காவு கொடுக்கப்பட்டிருக்கிறது! குற்றவாளிகள் : கங்கா * பிரபு.
சமுதாய குற்றவாளிகள். சமுதாயத்தின் குற்றவாளிகள் இவர்கள். கங்கா தனது கற்பை பறி கொடுத்து இருக்கிறாள். பிரபு இந்த கங்காவின் கற்பை பறித்துக் கொண்டிருக்கிறான்.. சமுதாயத்தில் அங்கம் வகிக்கும் மனிதர்கள் தங்களுடைய ஒழுக்கத்தையும் ஒழுங்கையும் பேணிப் பாதுகாக்கும் போதுதான், சமுதாயத்தின் மனிதர்கள் மேன்மை பெறவும், அதன் விளைவாகவும் விளைபலனாகவும் சமுதாயம் மேம்பாடு அடையவும் வாய்ப்பு, வசதி ஏற்படும்.
சமுதாய நீதி இது. சமுதாய நிலையும் இதுதான்.
இந்த நியதியும் இந்த விதியும் மாறினால், அல்லது மாற்றப்பட்டால் சமுதாயத்தின் மனசாட்சித் தோற்றம் பாழ்படுவதுடன், அல்லது பாழ்படுத்தப்படுவதுடன், சமுதாயம் சார்ந்த மனிதர்களின் குணநலப்பொலிவுகளும் பாழ்படுகின்றன, அல்லது பாழ்படுத்தப்படுகின்றன.
ஆகவேதான் இங்கே இப்போது கங்காவும் பிரபுவும் குற்றவாளி கூண்டில் நிறுத்தப்பட்டு இருக்கிறார்கள்.
நெருக்கடியான இந்த நேரத்தில் யாரோ குரல் கொடுக்கிறார்கள். பின்னணி குரல்! ஓ! ஜெயகாந்தன்!
"காலங்கள் மாறும் போது மனிதர்களும் மாறித்தான் ஆகவேண்டும். மாறிய மனிதர்களை காலத்தின் மாற்றமே காண வைக்கிறது. பல மாற்றங்கள், சமுதாய வாழ்வில் புதுமையானவையாக இருந்தாலும், தனி மனிதர்கள் வாழ்வில் காலங்கடந்த மாற்றங்களாகவே நிராசைகளின் நிலைத்த சித்திரங்களாகவே உயிரிழந்து வந்து நிற்கின்றன. அப்படிப்பட்ட ஒரு தனிமனித பிரதிநிதிதான் கங்கா! அவளது இறந்த கால - நிகழ்கால - எதிர்கால மாற்றங்கள் முன்னும் பின்னும் குழம்பி, காலப் பிரக்ஞையை மறுத்த நிகழ்ச்சிகளின், எண்ணங்களின், ஏக்கங்களின் முறையாக தொகுக்கப்படாத வார்ப்பே கங்கா! காலத்தின் அலைகளால் எற்றுண்ட, மோதி மூழ்கிய, போக்கில் மிதந்த, எதிர்த்து ஓய்ந்த ஒரு ஆத்மாவின் கதை இது!
கங்கா குற்றவாளி! அவள் செய்த குற்றங்கள் : 1. காலப் பிரஞையை மறுத்தாள். 2) சமூகப் பிரஞையை மறந்தாள். 3( கற்பு நிலையைத் துறந்தாள். 4) உயிரை மறுக்கவில்லை, மறக்கவில்லை, துறக்கவில்லை..காலங்கள் மாறலாம் ஆனால் முரண்படலாமா? காலங்கள் முரண்பட நேர்ந்தால் தர்மம் அழிந்து விடாதா என்ன?...............................
ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை - பூவை எஸ் ஆறுமுகம்
=====================================================================================
மூடிய கதவிற்குள்ளிருந்து
முட்டாள் வீரம்.
கதவைத்திறந்தாலோ
காணாமல்போகும்,
காலடியில் சுருண்டுவிடும்.
முன்னால் யாருமில்லா துணிவில்
கண்ணாடி வீட்டுக்குள்ளிருந்து
கல்லெறிகிறோம்.
கண்ணாடிப்பசை நூலில்
கைகால்களை இறுக்கிக் கொள்கிறோம்.
இணையம் தரும் தூரம்; அதனால்
எல்லையில்லா வீரம்.
என்றோ ஒருநாள் சூழப்படும்போது
எதிரியே கருணை காட்டினால்தானுண்டு.
நண்பர்கள் நாற்புறமும்
சிதறி மறைவார்கள்.
ஆண்டவன் கொடுத்த நாக்கு
ஆபாசச் சொற்களால் அர்ச்சிக்க அல்ல.
நல்லவார்த்தை பேசுவது நா நயம், நாணயம்.
=======================================================================================================
ரசிக்கவைக்கும் படம்..
ஹலோ டாக்டர்..
========================================================================================================
ஓகே... பை.. அடுத்த வாரம் பார்ப்போம்...
சொல்லுக சொல்லின் பயனுடைய சொல்லற்க
பதிலளிநீக்குசொல்லின் பயனிலாச் சொல்..
குறள் நெறி வாழ்க..
வாழ்க
நீக்குநட்பின் நன்மலர்கள் அனைவருக்கும் அன்பின் வணக்கம் ...
பதிலளிநீக்குஇனிய சொற்களே உறவாக
இறையருள் சூழ்க எங்கும்..
வாழ்க நலம்..
வாழ்க தமிழ்..
வாழ்க வாழ்க
நீக்குவாங்க துரை செல்வராஜூ ஸார்.. வணக்கம், வேண்டுவோம்.
யார் இருக்கா சொல்லு...
பதிலளிநீக்குஎழுபதுகளில் இப்படி என்று ஞாபகம்!..
ஏன் இப்படி?..
இப்பவும் இப்படி ஆங்காங்கு இருப்பார்கள்தான்!
நீக்குஅனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
பதிலளிநீக்குவாழ்வில் ஆரோக்கியம் , அமைதி தொடர இறைவன் அருள வேண்டும்.
வாங்க வல்லிம்மா.. வணக்கம். பிரார்த்திப்போம்.
நீக்குபடி தாண்டாத டாக்டர்:)
பதிலளிநீக்குசாம்பல் தின்னும் கணவன்.
ஊசிக்கு நடுங்கும் பேஷண்ட்.
ஹீஹிஹீ. அசத்தல் நகைச்சுவை.
ஊசிக்கு எனக்கும் அந்த பயம் உண்டு அம்மா. ஹிஹிஹி...
நீக்குடெடியும் நாய்க்குட்டியும்
பதிலளிநீக்குசூப்பர் ஷாட்.
அதையும் ஒரு ஜீவன் என்றெண்ணி, நட்பாக ஆசுவாசமாக அதனோடு ஒட்டி உறங்குகிறது செல்லக்குட்டி!
நீக்குவயதான, குழந்தையில்லா தம்பதியினரின் மனநிலை.... நன்றாக எழுதியிருக்கீங்க. ஒவ்வொருவருக்கும் ஒரு வழி இல்லாமலா போய்விடும்?
பதிலளிநீக்குவழி இருக்கும். அதைத் தக்க வைத்துக் கொள்ள போராடுவார்கள். வசைபாடியவரை மனதார எதிர்த்து நிற்க முடியாத நிலை.
நீக்கு//வசைபாடியவரை மனதார எதிர்த்து நிற்க// - ஆபீஸில் எத்தனை வித பிரச்சனைகளை நம் மேலதிகாரிகளிடமிருந்து சந்தித்திருப்போம். அப்போல்லாம் வாயை மூடிக்கொண்டு, மனதில் கசப்பு இருந்தாலும் முகத்தில் சிரிப்புடன் வளையவந்திருக்கிறோம். இதில் வயதானதானதால் புறக்கணிப்புக்கு அஞ்சி கசப்பை விழுங்கவேண்டியிருக்கு
நீக்குஆம். அதுதான் பெரிய ஸ்ட்ரெஸ். என்றாவது ஒருநாள் வெடித்தால் அணுகுண்டாய் இருக்கும்!
நீக்குகவிதை ரசிக்க வைத்தது. இணையப் பதிவுகளில், அதிலும் அரசியல் பதிவுகளில் கருத்து எழுதுபவர்களுக்குப் பொருத்தமானதோ?
பதிலளிநீக்குமிகச்சரி... மிகமிகச்சரி.. அபப்டி ஒருமுறை எழுதப்பட்டு வெளியிடாமல் நிறுத்தி வைக்கப்பட்டதுதான் இது.
நீக்குஎழுபது வயது எண்பது வயது , புத்திர பாக்கியம் இல்லாத
பதிலளிநீக்குதம்பதியரின் கதை மனம் கசிய வைக்கிறது.
தாழ்ந்தே நடப்பார்கள். இத்தனை நன்மைகள் செய்து
சில கசப்பு வார்த்தைகளும் வாங்கிக்
கொண்டு அச்சோ பாவமே.
எங்கள் வீட்டில் சமையல் செய்த ராதா மாமியும்
இப்படித்தான் இருந்தார்.
ஆனால் அவர்களுக்கு இரண்டு மகள்களும் ஒரு பையனும் இருந்தார்கள்.
இருந்தும் தனியாகத் தான் இருக்கிறார்.
இன்னும் மூன்று வீடுகளில் சமைத்துக் கொண்டிருந்தார்.
இறைவன் எங்கேயோ சில உயிர்களைத் தவிக்க
வைக்கிறான். சில உயிர்களுக்குத் தகுந்த
ஆதாரத்தையும் கொடுக்கிறான்.
உண்மை. இப்படிப்பட்ட ஜீவன்களின் பாடு மிகவும் வருந்தத்தக்கது. அவர்கள் நிலை அறிந்தாலும், உதவ நமக்கும் ஒரு எல்லை இருக்கிறது. கைக்கட்டுகளும் இருக்கிறது! :(
நீக்குரசிக்கவைத்த நகைச்சுவை.
பதிலளிநீக்குநன்றி நெல்லை.
நீக்குஇணையத்தின் சோதனைக் காலம்.
பதிலளிநீக்குஅருமையான கவிதை.
அன்பு வாழ்த்துகள் ஸ்ரீராம்.
'''''நண்பர்கள் நாற்புறமும்
சிதறி மறைவார்கள்.
ஆண்டவன் கொடுத்த நாக்கு
ஆபாசச் சொற்களால் அர்ச்சிக்க அல்ல.
நல்லவார்த்தை பேசுவது நா நயம், நாணயம்.''
நன்றி அம்மா.
நீக்குஅறிவியல் வளர்ச்சியாலும் சுத்தம் சுகாதாரம் பற்றிய அக்கறையாலும் மக்களின் ஆயுள் அதிகரித்துக்கொண்டே போகிறது. இதனால் கணவன் மனைவி இருவரில் ருவர் மறைந்த பிறகு மற்றவர் அதிக ஆண்டுகள் தனிமையில் கழிக்கவேண்டிய அவசியம் ஏற்படுகிறது. குழந்தைகள் இல்லாதவர்கள் பாடு சிரமம் என்றாலும், குழந்தைகள் தூரதேசத்தில் இருக்கும் தனிமைப் பெற்றோரின் நிலையும் அதேபோல் சிரமமானதே . பணம் கட்டித் தங்கும் முதியோர் இல்லங்களை அதிக அளவில் ஏற்படுத்துவதுதான் ஒரே வழி.
பதிலளிநீக்குஅதற்கு முன்னால், அதற்கான மனநிலையை வளர்த்துக்கொள்ளவேண்டும். குறை சொல்லாத் தன்மை, அட்ஜஸ்ட்மென்ட், இதைத்தான் சாப்பிடுவேன், இப்படித்தான் இருப்பேன் என்றில்லாமலிருப்பது.... இன்னும் நிறைய இருக்கிறது. அதைவிட முக்கியம் சேவை மனப்பான்மையில் இயங்கும் இடத்தைக் கண்டுபிடிப்பது (காசு வாங்கிக்கொண்டாலும்)
நீக்குஆமாம் உண்மை.
நீக்குநீங்கள் சொல்வது சரி. குழந்தைகள் தூரதேசத்தில் இருப்பதை விரும்பி ஏற்றுக்கொண்டவர்களும் உண்டு. மனத்தாங்கல் உள்ளவர்களும் உண்டு. இந்நிலையில் அவர்கள் வறுமை, இயலாமையும் சேர்த்துப் பார்த்தால் இன்னும் கடினம்தான்.
நீக்குஅன்புள்ள பெயரில்லா... (நெல்லைதானோ?)
நீக்குஅந்த மனநிலை அமைவது மிகவும் கடினம். எல்லோருக்கும் வாய்க்காது.
எதற்கெடுத்தாலும் 'பெயரில்லா' வந்துவிடுகிறது. புதிய கருத்துப்பெட்டி யோசிக்காமல் கூகுள் செய்த மாற்றம். இந்த மாதிரி வெட்டியாக இம்ப்ரூவ்மெண்ட் கொண்டுவரும் யோசைனை செய்யாத ஆட்களைக் கண்டால் எரிச்சல்தான்.
நீக்குநேற்று பெயரில்லாமல் கேள்வி கேட்டதும் நீங்கள்தானே!
நீக்குஇருக்கும்!!
நீக்குயார் இந்த பூவை ஆறுமுகம்?
பதிலளிநீக்குபாடெழுதுபவரோ ?
எல்லோரையும் கடித்து உதற எப்படி அவருக்கு முடிகிறது?
ஒரே மாதிரிப் போய்க் கொண்டிருந்த கதைகளிலிருந்து சற்றே
மாறுபட்ட வாசக பரம்பரையைக் கொண்டு வந்தவர்கள்
புஷ்பா தங்கதுரை, சுஜாதா, சிவசங்கரி இந்துமதி மற்றும்
ஜெயகாந்தன்.
அதில் ஒன்றும் தவறில்லையே .
எங்கள் எல்லோருக்கும் மணியன்,அகிலன், மாயாவி,சாவி,ரங்கராஜன் ரா கி,வாசந்தி,
உமா சந்திரன்,எல்லார்வி, ஆர்வி,பாக்கியம் ராமசாமி இன்னும்
வீட்டுப் போன பலரும்
எழுத்துலக ஆதர்ச நண்பர்கள் ஆனார்கள்.
ஹா.. ஹா.. ஹா... அவரும் ஒரு எழுத்தாளர் அம்மா. தனிப்பத்திரிகை ஆசிரியராகவும் இருந்திருக்கிறார். பிரபல்யம் அடைய இது மாதிரியும் வழிகள் உண்டு என்று தோன்றுகிறது. அல்லது அவர் கருத்து அதுவாக இருக்கலாம். இப்படியும் ஒரு கருத்து இருந்திருக்கிறது என்று காட்டவே அதைப் பகிர்ந்தேன். நிறைய எழுதி இருக்கிறார். இது மாதிரி இரண்டு புத்தகங்கள் வெளியிட்டிருக்கிறார்.
நீக்குஎழுபது வயதில் பிள்ளை இறந்து விட்டதால் துணை இல்லை என்கிறீர்கள்.
பதிலளிநீக்குபிள்ளைகள் இருந்தும் பெற்றோரை கவனிக்காதவர்கள் உண்டே என்ன செய்வது ?
நானும்கூட இந்நிலைதான் நாளை ? இவைகளை படிக்கும்போது பயமாக இருக்கிறது. இறையே துணை.
பிள்ளையை முன்னரே இழந்து விட்டார். ஆனால் ஜி. நீங்கள் சொல்லி இருக்கும் நிலையம் வருந்தத்தக்கதே... இதில் நிறைய நிலைகள் இருக்கின்றன. 'இறைவன் இருக்கின்றானா... மனிதன் கேட்கிறான்.. அவன் இருந்தால் உலகத்திலே எங்கே வாழ்கிறான்? என்று பாடத்தோன்றும் சம்பவங்கள்.
நீக்குநம் அளவில் நம் கடமையை ஒழுங்காகச் செய்துகொண்டு மனசாட்சிப்படி வாழ்பவர்களுக்கு பெரும்பாலும் பிரச்சனை (இறக்கும் தருவாயில்) வராது. நாம் போனபின் நடப்பதைப் பற்றி நமக்கென்ன கவலை?
நீக்குஎங்கள் கிராமத்தில் பசங்கள்லாம் இருக்கும் ஒரு 70 வயதானவர் இறந்துபோனார். அவரை எரித்துவிட்டு வீடு வந்தால், அவர் மனைவியும் இறந்துபோனார், மாரடைப்பால். அதனால் எது எது எப்போது எப்படி நடக்கணுமோ அப்படி நடந்துவிடும். அதனால் நாம் கவலைப்படவேண்டிய அவசியம் இல்லை.
நீக்கு// நம் அளவில் நம் கடமையை ஒழுங்காகச் செய்துகொண்டு மனசாட்சிப்படி //
நீக்குஅதுசரி, நமக்கும் மனதில் சில எதிர்பார்ப்புகள் இருக்கும் அல்லவா?
உண்மை. நமக்கும் ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். ஆனால் அதை நாம் பெரிதாக நினைக்கக்கூடாது. ரியாலிட்டி தெரிகிறதே. எதற்கு வீண் எதிர்பார்ப்பு. எல்லோரும் சேர்ந்திருந்தால் சந்தோஷம் (கடைசி காலத்திலாவது). இல்லையென்றால், அதனாலென்ன.
நீக்குபாவம் இந்த மாமி.:(((((
பதிலளிநீக்கு''ஆஞ்சநேயர் மேல் அபார பக்தி. அதற்கு முன்பு பாபா மேலும், அதற்கும் முன்பு ஏதோ ஒரு அம்மன் மேலும் ப்ரீத்தியாய் இருந்தார்.
"எதுவா இருந்தாலும் ஒரு சீட்டுல எழுத அவர் காலடியில வச்சுடுவேன்.. உடனே நடந்துடும்... நடக்காம இருக்கவே இருக்காது.. உங்களுக்கும் எழுதி வைக்கறேன்" என்பார். மாறி நடந்தாலும் அது ஆஞ்சநேயர் அருள்தான்! அதுவும் அவர் வீட்டில் காலண்டரில் மாட்டியிருக்கும் அந்தப் பழைய ஆஞ்சநேயர்தான்!''
நம்மில் எத்தனையோ பேர் இப்படிப்பட்ட பக்தியோடு தான் இருக்கிறோம்.
இந்த வாரம் மிக மிக அருமை அன்பு ஸ்ரீராம்.
ஆமாம் அம்மா. பக்தி என்பது இங்கே பற்றுக்கோலாக உடன் நின்று உதவுகிறது.
நீக்குபரோபகார பாட்டியின் கதை பரிதாபம். காந்திய வழியில் ஏச்சுகளையும் ஒதுக்கி தணியும் பெருந்தன்மை வியக்க வைக்கிறது.
பதிலளிநீக்குபாட்டுக்கு பாட்டு.
மூடிய கதவாயினும்
முழு உலகமும்
கண் முன் விரிந்தது.
எல்லையில்லா சுதந்திரம்
இல்லை ஒரு தயக்கம்
என்றே வாய் திறந்தால்
எதிர் முழக்கம் துளைக்கும்
அவை அடக்கத்தில் அடங்குவதே
மன அடக்கமும் என்றுணர்ந்து
ஆய்ந்து எழுதுவீர் எப்போதும்
இணையம் ஆயினும் .
ஜெயகாந்தனைத் தூக்கி வைக்கட்டும். ஆனால் மற்றவர்களை வசை பாடவேண்டிய அவசியம் ,தகுதி பூவை ஆறுமுகம் அவர்களுக்கு உண்டோ என்பது சந்தேத்துற்குரியது. கங்கா செய்தது தவறு என்று வாதிக்கட்டும் பொறுத்துக் கொள்ளலாம். . மற்ற நான்கு எழுத்தாளர்களையும் க நா சு வையும் வசை பாடுவது பிராமண வெறுப்பு என்றல்லாது அவர்களுடைய படைப்புகளின் அடிப்படையில் அல்ல. இதை பற்றி ஒரு கட்டுரையே எழுத முடியும். சிலர் எதிர் மறை விமரிசனங்களால் பிரபலம் அடைய முயற்சி செய்வர். இவரும் ஒருவர்.
முதல் ஜோக் பிரமாதம். (பெண்டாட்டி தான் பயப்படுறா!)
Jayakumar
//ஏச்சுகளையும் ஒதுக்கி தணியும் பெருந்தன்மை //
நீக்குசர்வைவல்....!
எதிர்க்கவிதையும் ஒத்தகருத்தில் இருப்பது மகிழ்ச்சி.
ஜெயகாந்தனை அவர் தூக்கி வைக்கவில்லை. அவருக்கும் வசைதான்!
//முதல் ஜோக் பிரமாதம். (பெண்டாட்டி தான் பயப்படுறா!) //
மதன்!
எனக்கு யார் இருக்கா சொல்லு...... வேதனை அளித்தது. இப்படியான சிலருடன் பழகி இருக்கிறேன். இதற்கு நேர் எதிரான சிலரையும் சந்தித்து இருக்கிறேன்.
பதிலளிநீக்குஆமாம், இரு நிலைகளிலும் மனிதர்கள் உண்டு.
நீக்குஅனைவருக்கும் வணக்கம் ! வாழ்க வளமுடன்!
பதிலளிநீக்குவாங்க கோமதி அக்கா.. வணக்கம்.
நீக்கு"எனக்கு யார் இருக்கா " என்று நிறைய பேர் சொல்லி கேட்டு இருக்கிறேன். ஒவ்வொருவரும் வேறு வேறு காரணத்திற்காக சொல்லி இருக்கிறார்கள்.
பதிலளிநீக்குஉறவுகள், நட்புகள் வேண்டும்தான்
//எனக்கு ஆள் வேணுமே... அவங்க, உங்க ஆதரவு.. எல்லாம் வேணுமே.... யார் இருக்கா சொல்லு..."//
இறைவன் ஏதாவது வழி வைத்து இருப்பார்.
.... என்று நம்புவோம்!
நீக்குநல்லவார்த்தை பேசுவது நா நயம், நாணயம்.//
பதிலளிநீக்குஅருமை.
நன்றி கோமதி அக்கா.
நீக்குரசிக்கவைத்த படம் மிக அருமை.
பதிலளிநீக்குநகைச்சுவை எல்லாம் நன்றாக இருக்கிறது.
நன்றி கோமதி அக்கா.
நீக்குஎனக்கு யார் இருக்கா - மனம் ரொம்ப வருத்தமாகிவிட்டது. இப்படி எத்தனையோ பேர். இப்படியான முதிய நிலை வாழ்க்கையை எதிர்கொள்வதில் ஒவ்வொருவரின் அணுகுமுறையும் ஒவ்வொரு விதமாய்...இதையும்விட மோசமான நிலையில் என்று பார்க்கவும் முடிகிறது.
பதிலளிநீக்குகீதா
வாங்க கீதா... இந்நிலையில் இருப்பவர்கள் ஆரம்ப நிலையில் சந்திக்கும் அனுபவங்களால் பக்குவப்பட்டு இந்நிலைக்கு வருகிறார்கள்!
நீக்குஸ்ரீராம், இந்த பூவை எஸ் ஆறுமுகம் - 12 -13 எழுத்தாளர்கள் சேர்ந்து எழுதிய "ஆடும் தீபங்கள்" என்ற நாவலில் இவரும் ஒருவர். பரிவை சே குமார் அனுப்பி வாசித்திருக்கிறேன். அவர் தளத்திலும் இந்த நாவலைக் குறித்து எழுதியிருந்தார். அது ஓகே நாவல்தான். பெரிதாகச் சொல்ல ஒன்றுமில்லை. இவர் பகுதி உட்பட!!!! தூய தமிழில் எழுதியிருந்தார்.
பதிலளிநீக்குஇந்த நாவலில் இவரது பெயர் புதியதாய் இருந்ததால் கூகுளில் தேடினேன். அப்போது, இவரைப் பற்றி எம் வி வெங்கட்ராம் புகழ்ந்து எழுதியிருந்ததை வாசித்த நினைவு வருகிறது.
இலக்கிய இலக்கண மரபை ஒட்டி யார் மனதையும் புண்படுத்தாமல் ????? கதைகள் எழுதியவர் என்று எழுத்தாளர் விந்தன் சொல்லியிருந்ததும் நினைவுக்கு வருகிறது. லிங்க் தேடுகிறேன் எதில் வாசித்தேன் என்று. கிடைத்ததும் பகிர்கிறேன்.
இப்போது பூவை எழுதியிருந்ததை வாசித்ததும் சிரித்துவிட்டேன். அவர் எந்த வருடம் இதை எழுதியிருந்தாரோ அந்த வருடத்துச் சிறந்த நகைச்சுவை. நன்றாக எழுதுபவர் என்று சொல்லப்பட்டவர் எதற்காக இப்படிப் பிற எழுத்தாளர்களைச் சாட வேண்டும் என்று தெரியவில்லை. இதில் இலக்கியச் சர்ச்சை எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. தனிமனிதத் தாக்குதல்/குழு தாக்குதலாகவே தெரிகிறது. ரொம்பவே ஓவராகத் தெரிகிறது.
இது நல்ல எழுத்தாளருக்கான அடையாளமாகத் தெரியவில்லை. ஒரு வேளை இவருக்கு அவர் எதிர்பார்த்த அங்கீகாரம் கிடைக்கவில்லை என்பதால் இப்படி வசை பாடியிருக்கிறாராய் இருக்கலாம்.
கீதா
குமார் அனுப்பியிருந்தது ஆடும் தீபமா என்ற சந்தேகம் திடீரென்று எழுதுவிட்டது. வாசிப்பது பல தலைப்புகள் மறைந்துவிடுகிறது. ஒரு வேளை அந்த நாவல் அவ்வளவாக ஈர்க்கவில்லை என்பதாலோ என்னவோ...ஆனால் 12-13 பேர் எழுதிய கதையில் இவர் உண்டு.
நீக்குஅப்போது தேடி வாசித்த லிங்க் இதோ
http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=13444
கீதா
ஹப்பா என் நினைவுக்கு நானே ஒரு ஷொட்டு போட்டுக் கொள்கிறேன்!!! ஹாஹாஹா. ஆடும் தீபம் தான். 11 பேர். இவர்தான் இந்தக் கூட்டு முயற்சிக்கு ஐடியா கொடுத்தவர். கதைக்கரு என்று யாரும் ஒருவரோடு ஒருவர் கலந்து பேசிக் கொள்ளாமல், ஒருவர் தொடங்கி வைக்க அடுத்த பகுதியை வேறொரு எழுத்தாளர் எழுதிட என்று 11 பேர்(கடைசி சாப்டர் எழுதி முடிவு செய்பவர் பூவை)
நீக்குசி சு செல்லப்பா, பி வி ஆர், எல்லார்வி, வல்லிக்கண்ணன் இவர்களும் உண்டு.
கீதா
இவரது நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டவை. இச்சுட்டியில் அவரது கதைகள் இருக்கின்றன.
நீக்குhttps://commons.wikimedia.org/wiki/Category:%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B5%E0%AF%88._%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D._%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
கீதா
அடடே.. கீதா.. பூவை பற்றி நிறைய தெரிந்து வைத்திருக்கிறீர்களே.. நீங்கள் கொடுத்துள்ள சுட்டியில் இருப்பவர்தான் பூவையா? முன்னரே பார்த்திருந்தால் அவர் புகைப்படம் ஒன்றையும் பதிவில் இணைத்திருப்பேன். அவர் முகம் நான் வேறு மாதிரி கற்பனை செய்து வைத்திருந்தேன்!
நீக்குகோழையான வீரம். கவிதை அருமை ஸ்ரீராம். இப்படித்தான் நம் வீரம் எதையேனும் தைரியமாகச் சொல்ல முடிகிறதோ? எல்லா இடங்களிலும்தான் வீட்டிலும் வெளியிலும்தான்!! நானும் ரௌடிதான் வடிவேலு நினைவுக்கு வந்தார்.
பதிலளிநீக்குகவிதை முதல்பகுதி அந்தப் பாட்டிக்கும் பொருந்திப் போகிறது.
முதல் பகுதியும் ரொம்ப அழகாகக் கதை போல எழுதியிருக்கீங்க ஸ்ரீராம். கதையாகவே இருக்கிறது.
கீதா
கவிதையை பாட்டியோடு பொருத்திப் பார்த்திருப்பபது ஆச்சர்யம். ஓரிடத்தில் நான் அவரை பாட்டி என்று குறிப்பிட்டிருந்தாலும் யாரும் அவரை அப்படி அழைக்க மாட்டார்கள். டீச்சர் என்றோ, மாமி என்றோதான் அழைப்பார்கள்!
நீக்குரசிக்க வைக்கும் படம் - மிகவும் ரசித்தேன். நிம்மதியான தூக்கம். என் செல்லப் பெண்கள் இருவருமே ஒரு காலத்தில் அவர்களின் சிறுவயதில் இப்படித்தான் தூங்கினார்கள் கூட ஒரு பொம்மையுடன். இப்போது மேலே
பதிலளிநீக்குகீதா
ஆமாம். பொதுவாக தெருவில் தூங்கும் செல்லங்கள் அவ்வப்போது கண்திறந்து பார்த்துக் கொண்டு ஒரு அமைதியற்ற உறக்கத்தில் இருக்கும். இது என்ன ஆனந்தமாய் உறங்குகிறது?
நீக்கு70 வயது ஆனாலும் என்னவொரு திடமான மனம்...!
பதிலளிநீக்குவேறு வழி?
நீக்குமுதல் ஜோக் சிரித்துவிட்டேன். மதன்?
பதிலளிநீக்குகீதா
ஆம்.
நீக்குஆண்டவன் கொடுத்த நாக்கு
பதிலளிநீக்குஆபாசச் சொற்களால் அர்ச்சிக்க அல்ல.
நல்லவார்த்தை பேசுவது நா நயம், நாணயம்.//
சூப்பர் ஸ்ரீராம். இது எல்லோருக்கும் பொருந்தும். இந்த வரிகளை ரசித்தேன். இதைப் பார்த்ததும்தான் அந்தப் பாட்டிக்குப் சொல்லியிருப்பது...பொருத்தமானது என்று நினைத்தேன் அங்கு இதை போடவிட்டுப் போய்விட்டது.
கீதா
ஓஹோ... நன்றி கீதா.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான மதிய வணக்கங்களுடன் அனைவரும் ஆரோக்கியமாக இருக்க அந்த ஆண்டவனை மனதாற பிரார்த்தித்து கொள்கிறேன்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா அக்கா. வணக்கம். பிரார்த்திப்போம்.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய வியாழன் கதம்பம் எப்போதும் போல் அருமையாக உள்ளது.
எழுபது வயது பெண்ணின் மனத்திடம் வியக்க வைக்கிறது. எல்லோராலும் இப்படி இருக்க முடியுமா என்பது சந்தேகமே... . இதுவும் ஆண்டவனின் அருள்தான். வேறு என்ன சொல்ல?..
கவிதை அருமை. முதல் பகுதியில் திடமான மனதுடைய அந்தப் பெண்ணிற்கும் கவிதையின் சில வரிகள் ஒத்து வருகின்றன.
ஜோக்குகள் அனைத்தும் நன்றாக உள்ளது. ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நன்றி கமலா அக்கா.
நீக்குதனியே இருக்கும் வயதானவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைதான் அவர்கள் நிலையில் இருந்து பார்த்தால் பரிதாபம்.
பதிலளிநீக்குஜோக்ஸ் அனைத்தும் ரசனை மனைவி அழைத்தும் வராத டாக்டர் சிரித்துவிட்டேன்.
செல்லம் பொம்மை துணையுடன் குழந்தைகள்போல அணைத்துக் கொண்டு அதற்கும் ஆறுதல்.
கவிதை நன்று.
நன்றி மாதேவி.
நீக்கு//அவ்வரிசையில் தமிழ் புது நிலையத்திற்கு புரட்சி வைக்க வாழ்வையும் இந்த இலக்கிய திறனாய்வு கட்டுரைத் தொடரின் முதல் பகுதிதான் // இங்கே வாக்கியத்தில் ஏதோ விடுபட்டிருக்கோ?
பதிலளிநீக்கு//கங்கைப் பிரவாகமாக பின்காவின் நெஞ்சம் பொங்குகிறது// கங்காவின்?
பதிலளிநீக்குமுதலில் சொல்லி இருக்கும் மாமி மாதிரிப் பலர் உண்டு. எனக்குத் தெரிந்து என் அப்பாவின் அத்தங்கா ஒருத்தர் குழந்தைகள் இருந்தும் இப்படித் தான் வாழ்ந்தார். என்னோட இரண்டாவது பிரசவத்துக்குக் கூட அவர் தான் வந்து உதவினார்.
பதிலளிநீக்கு