திங்கள், 10 ஜூலை, 2023

"திங்கக்"கிழமை :   ஜீரா போளி     - கீதா சாம்பசிவம் ரெஸிப்பி 

 வல்லி பதிவிலே ஸ்ரீராம் ஜீரா போளி சாப்பிட்டதில்லைனு சொல்லி இருக்கார். எங்க வீட்டிலே(புகுந்த வீடு)  இது சர்வ சாதாரணமாப்பண்ணிட்டே இருப்போம்/ இருந்தோம்.  

இப்போத் தான் நோ ஸ்வீட் ஆச்சே! :( இருந்தாலும் இந்த ஜீரா போளி பண்ணற அன்னிக்குத் தான் படம் எடுக்க முடியும்.  எப்போப்பண்ணுவேன்னு தெரியலை.  அதனாலே ஓசியிலே படம் வாங்கிப் போட்டிருக்கேன்.


படத்துக்கு நன்றி கூகிளார்

இது கலர் போட்டிருக்கு.  கலர் போடாமலும் பண்ணலாம்.  தேவையான பொருட்களை முதல்லே சொல்லறேன்.  

தேவையான பொருட்கள்:-

பொடி ரவை, பேணி ரவைனு சொல்லுவாங்க அது கால் கிலோ (இந்த அளவில் சுமாராக பதினைந்து போளி வரை பண்ணலாம்.)  மைதா ஒரு சின்னக் கிண்ணம்.  அரிசி மாவு ஐம்பது கிராம், அதைக் குழைக்க நெய் அல்லது வெண்ணெய் ஐம்பது கிராமிலிருந்து நூறு கிராமுக்குள்ளாக.  உப்பு சிறிதளவு.  மாவு பிசைய கால் டீஸ்பூனும் அரிசிமாவில் போட்டுக் குழைக்க ஒரு சிட்டிகையும் தேவைப்படும்.  மாவு பிசைய நீர் தேவையான அளவு அல்லது அரைக்கிண்ணம் பாலும் மீதிக்கு நீருமாக.  பால் சேர்த்தால் போளியை அதிக நாட்கள் வைக்காமல் உடனடியாகச் செலவு செய்து விட வேண்டும்.  பொரிக்க நெய் அல்லது சமையல் எண்ணெய்

பாகு வைக்க சர்க்கரை முக்கால் கிலோ.  எசென்ஸ் வாசனை பிடித்தால் ரோஸ் எசென்ஸ், கலர் வேண்டுமெனில் பிடித்த கலர் ஒரு சிட்டிகை, ஏலக்காய்த் தூள்.  மேலே தூவ தேங்காய்ப் பூ, முந்திரி, பாதாம், பொடியாகச் சீவியது.(விருப்பமிருந்தால்)

முதலில் மாவு பிசைந்து ஊற வைச்சுடணும்.  பொடி ரவை என்பதால் சீக்கிரமே ஊறும்.  ரவையை வறுத்து மிக்சியிலோ மிஷினிலோ கொடுத்து மாவாகவும் ஆக்கிக் கொள்ளலாம்.  மாவாக ஆக்கிய ரவைக்கு மைதா மாவு தேவையில்லை.  அப்படியே உப்புச் சேர்த்து நீர் விட்டுப் பிசையலாம். மாவாக ஆக்காத ரவை எனில் ரவை,மைதா, உப்பை ஒன்றாகக் கலந்து கொண்டு பின்னர் நீரை விட்டுப் பிசையவும்.  பொடி ரவை எனில் உடனடியாகச் சேர்ந்தாற்போல் வரும்.  இல்லாவிட்டால் ரவை சேராமல் உதிராக வரும்.  அப்போது இன்னும் கொஞ்சம் நீர் விட்டு நன்கு அழுத்திப் பிசையவும்.  ஒரு பாத்திரத்தில் எண்ணெய் தடவி பிசைந்த மாவை இரண்டு மணி நேரமாவது ஊற வைக்கவும்.

மாவு நன்கு ஊறியதும் நன்கு சேர்ந்து காணப்படும்.  மீண்டும் அழுத்திப் பிசைந்து கொள்ளவும்.  நிதானமான உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.  அரிசிமாவில் வெண்ணெய் அல்லது நெய்யைச் சேர்த்து நன்கு ஒரு விரலால் குழைக்கவும்.  நுரை வரும்படி குழைத்து வைக்கவும்.  இப்போது அடுப்பில் ஒரு அடி கனமான பாத்திரத்தில் சர்க்கரையைப்போட்டு நீர் ஊற்றிப் பாகு வைக்கவும்.  பாகு இரட்டைக் கம்பிப் பதம் வர வேண்டும்.  அப்போது நிறுத்தவும்.  அடுப்பிலேயே பாகு இருக்கட்டும்.  இப்போது அடுப்பின் இன்னொரு பக்கம் வாணலியில் எண்ணெய் அல்லது நெய்யைக் காய வைக்க வேண்டும். புகை வர ஆரம்பித்ததும் அடுப்பைத் தணிக்கவும்.  உருட்டி வைத்த உருண்டைகளில் ஒன்றைச் சப்பாத்தி போல் இட்டு மேலே அரிசிமாவுக் கலவையை  விரலால் எடுத்து நன்கு பரத்தவும்.  அதன் மேல் இன்னொரு சப்பாத்தியை இட்டுப் போடவும்.  மேலே போட்டதன் மேலேயும் அரிசிமாவுக் கலவையைப் பரத்தவும்.  அப்படியே சுருட்டவும்.  சுருட்டிய பாகம் நீளமாக இருக்கும்.  அதை அப்படியே மேலும் கீழுமாக வைத்து  அழுத்தி விட்டுஅப்பளம் இடவும்.

இதையும் நன்கு மடித்து முக்கோணமாக அல்லது வட்டமாக வேண்டுமெனில் வட்டமாகப் பூரியாக இடவும்.  காய்ந்த எண்ணெயில் போட்டுப் பொரிக்கவும்.  குத்தி விடவும். நன்கு உப்பி வரும். திருப்பி விட்டு  நன்கு வெந்ததும் அப்படியே பக்கத்தில் உள்ள ஜீராவில் போட்டு நனைக்கவும்.  நனைத்ததும் உடனே வெளியே எடுத்து ஒரு அகலமான தட்டில் போடவும்.  இப்படியே எல்லாவற்றையும் செய்து எண்ணெயில் பொரித்து ஜீராவில் போட்டு எடுத்து வைக்கவும்.  இதுக்கு எங்க வீட்டில் கலர் சேர்ப்பது இல்லை.  வெள்ளையாகவே இருக்கும். வேண்டுமானால் பாலை நன்கு சுண்டக் காய்ச்சி ஏலப்பொடி சேர்த்து  அதன் மேல் சூடாக ஊற்றி ஊற வைத்துப் பால் போளி மாதிரியும் சாப்பிடலாம்.  ஜீராவில் போளிகள் நன்கு முங்க வேண்டும். இரு பக்கமும் ஜீரா உள்ளே போகும்படியாக திருப்பிப் போட்டுப் பின்னரே எடுக்கணும்.

54 கருத்துகள்:

  1. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருப்பார். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆண்டவன் அனைவருக்கும் அருள் புரிவார் கமலா ஹரிஹரன். நன்றி.

      நீக்கு
  2. இனிப்பு எண்ணெய் இரண்டிற்கும் தடா!! பார்த்து ரசிக்கலாம். அது என்ன அமெரிக்காவில் செய்த பதர்ப்பேணி படம் போட்டிருக்கிறீர்கள்??
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது அம்பேரிக்காவில் செய்ததா? தெரியாதே!

      நீக்கு
    2. பக்கத்தில் படம் pine cones இருப்பது தெரிய வில்லையா?

      நீக்கு
  3. வணக்கம் சகோதரரே

    இன்றைய திங்கள் பதிவில் சகோதரி கீதா சாம்பசிவம் அவர்களின் ரெசிபியாகிய ஜீரா போளி செய்முறைகள், விபரமான பக்குவங்கள் அனைத்தும் அருமையாக உள்ளது. முன்பு எப்போதோ இதை செய்ததாக ஞாபகம். (ஞாபகந்தான்... அடிக்கடி செய்தால்தான் நினைவில் இருக்கும்:)))) ) சாதாரண தேங்காய் பருப்பு போளியே இப்போதெல்லாம் எப்போதோ என ஆகி விட்டது.

    படங்களில் போளிகளை பார்க்கும் போதும், சகோதரியின் செய்முறைகளின்படி அதை உணரும் போதும், உடனே சாப்பிடும் ஆவல் தோன்றுகிறது. சாப்பிட கூடாது என்ற போதிலும், ஒன்றை மட்டும் கண்களால் சாப்பிட்டேன். போளியின் தயாரிப்பை நன்றாக விபரமாக கூறியிருக்கும் சகோதரிக்கு என் அன்பான நன்றி. பகிர்வுக்கு உங்களுக்கும் மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கமலா ஹரிஹரன். இதை அரை மணி நேரத்தில் மாவை நன்கு தேய்த்துக் கொண்டு செய்து விடலாம். திடீர் விருந்தாளிகள், மாப்பிள்ளை, சம்பந்தி போன்றோர் வந்தால் செய்ய எளிது.

      நீக்கு
  4. ஜீரா போளி தயாரிப்பை விவரமாகச் சொல்லியிருக்கீங்க.

    எனக்கு மிகவும் பிடித்தது இது. பால் போளியும் யம்மியாக இருக்கும்.

    நேற்றுத்தான் ஃபுல் செக்கப் செய்ததில், இனிப்புகளை ஆசை தீருமட்டும் சாப்பிடுடா என்று ரிப்போர்ட் சொல்லிற்று. பண்ணிப்பார்த்துவிட வேண்டியதுதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தொடர்ந்து உங்கள் உடல்நிலை இனிப்புக்களை எப்போதும் சாப்பிட்டு வரும்படியாக இருக்கட்டும் எனப் பிரார்த்தித்துக் கொள்கிறேன். சர்க்கரை இல்லை என்பது ஒரு வரம்.

      நீக்கு
    2. சூப்பர் நல்ல விஷயம்....நெல்லை எனக்கும் சேர்த்துச் சாப்பிடுங்க.

      கீதா

      நீக்கு
  5. படங்கள் இரண்டுமே அழகு. உடனேயே சாப்பிடும் ஆசை தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
  6. பதில்கள்
    1. ஶ்ரீராமிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். வாழ்வு சந்தோஷமாக இருக்கட்டும்.

      நீக்கு
    2. ​நன்றி கீதா அக்கா, நன்றி நெல்லை.

      நீக்கு
  7. ஸ்ரீராம் பிறந்த நாள் ஸ்பெஷல் ஸ்வீட். நன்றி!!

    பதிலளிநீக்கு
  8. காக்க காக்க
    கனக வேல் காக்க..
    பார்க்க பார்க்க
    பாவம் பொடிபட..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்வரவு தம்பி. முருகன் அருள் முன்னின்று அனைவரையும் காத்து அருளட்டும்.

      நீக்கு
  9. என்றென்றும் அனைத்து வளங்களுடன் மகிழ்ந்திருக்க இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சகோதரர் ஸ்ரீராம்!!

    பதிலளிநீக்கு
  10. அருமையான நாவூறும் குறிப்பு கீதா சாம்பசிவம்! ரொம்பவும் தெளிவாக எழுதியிருக்கிறீர்கள்! கிட்டத்தட்ட பதர்பேணி குறிப்பு தான்!
    அதில் எல்லா சப்பாத்திகளையும் ஒன்றின் மேல் ஒன்றாக நெய் அரிசி மாவு விழுது தடவி மூடி வெட்டி சின்ன சின்னதாய் மெதுவாக சப்பாத்தி இட்டு நெய்யில் பொரிப்பார்கள். மேல் மாவு பெரும்பாலும் மைதாவாக இருக்கும். அல்லது கொஞ்சமாக மைதாவில் ரவா சேர்ப்பார்கள். என் சினேகிதி அதை முதிர்ப்பாகில் தோய்த்து எடுத்து அடுக்குவது பார்க்க அத்தனை அழகாய் இருக்கும். சிலர் கம்பிப்பாகிலேயே தோய்த்து எடுப்பார்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி மனோசாமிநாதன். பதிர் பேணி குறிப்புகள் தாம். இதுக்கும் பதிர் போட்டுத்தானே பூரி பொரிக்கிறோம். பாராட்டுகளுக்கு மனமார்ந்த நன்றி.

      நீக்கு
  11. ஆஹா கீதாக்கா, ஸ்பெஷல் ஸ்வீட் ஸ்ரீராமுக்கு! இன்று.

    முதல்ல பிறந்தநாள் நல் வாழ்த்துகள் ஸ்ரீராம்! ஆரோக்கியத்துடன் நீடுழி வாழ்ந்திட எல்லாம் வல்ல இறைவன் ஆசிர்வதித்திடட்டும்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க தி/கீதா, ஸ்ரீராம் ஏற்கெனவே இதைத் தான் சாப்பிட்டதில்லை எனச் சொல்லி இருந்தார். இதை நான் அனுப்பியதுமே இன்றைய தேதிக்கு ஷெட்யூல் பண்ணித் தன் பிறந்த நாள் பரிசு எனவும் சொல்லி இருந்தார். ரொம்ப பிசி போல இருக்கு. ஆளைக் காணோமே!

      நீக்கு
    2. வருவார் கீதாக்கா...மெதுவாக வருவார்!!!

      கீதா

      நீக்கு
    3. ​நன்றி கீதா.. நீங்கள் சொல்லி உள்ளபடி மெதுவாத்தான் வர முடிஞ்சிருக்கு!​

      நீக்கு
  12. சூப்பர் ரெசிப்பி கீதாக்கா....எனக்கு ரொம்பப் பிடிக்கும் ஆனா சாப்பிட முடியாது...

    என் மாமியார் சரஸ்வதி பூஜை அன்று செய்வாங்க...இது ஜீரா போளின்னு. இன்னொன்றும் இதுல இப்படி நெய், அரிசி மாவு தடவாமல் வெறும் மைதாவில் கொஞ்சமாக ரவை சேர்த்து செய்து இப்படித்தான் மற்றவை எல்லாம். பால் போளின்னு சொல்வாங்க.

    நானும் செய்வதுண்டு....இப்பதான் செய்வதே இல்லை.. இந்த இரு வகையும்...

    கூடவே சிரோட்டி - கர்நாடகா ஸ்பெஷல்....

    நீங்க இங்க கொடுத்திருப்பது போல வே சிரோட்டி ரவையில் (சிரோட்டி செய்ய பயன்படுத்துவதாலேயே அதை சிரோட்டி ரவைன்னு) அதான் பொடி ரவை...அதில் மைதா எதுவும் சேர்க்காமலேயே தண்ணீர் விட்டு நல்லா பிசைந்தா மாவு போல ஆகிவிடுகிறது.

    அதை இப்படி நடுவில் அரிசி மாவு நெய் கலந்து நல்லா நுரைக்க அடித்து அதை நடுவில் தடவி அப்படி 4, 5 பூரிகளை அடுக்கி சுருட்டி குறுக்கில் கட் பண்ணி பூரி போல் ரொம்ப அழுத்தாமல் தேய்த்து பொரித்து வைத்துக்கொண்டு பரிமாறும் போது, ஜீனிப் பொடி தூவி மணமூட்டிய பால்...சேர்த்து...

    இதை மின் நிலாவுக்கு அனுப்பி வந்த நினைவு.....அல்லது எபியிலா?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பொரித்து பாகில் போட்டு எடுத்து வைத்துக் கொள்வதும் உண்டு. பரிமாறும் போது ஏலப்பொடி சர்க்கரைப் பொடி போட்டு...

      இதுவே ரொம்பவே பொடி யாக ஓமப்போடி போல நிறைய நெய்யில் மாவைத் தோய்த்து பிரிச்சு பெரிய ப்ராஸஸ் மெல்லிசா ஓமப்பொடி போல ஆக்கி அப்புறம் பிழிவது அது ஒரு தனி ப்ராஸஸ். அதை அப்படியே வைத்து பரிமாறும் போது மேலே சர்க்கரைப் பாகு ஊற்றி இப்படியான மணமூட்டிய பால் விட்டு பரிமாறுவது பதர்ப்பேணி.

      கீதா

      நீக்கு
    2. பதர் பேணி மைதாவில் செய்வது

      கீதா

      நீக்கு
    3. இதுக்கும் மைதா, ரவை இரண்டும் தேவை தி/கீதா. அதனாலேயே இப்போதெல்லாம் பண்ணுவதில்லை என்பதோடு இனிப்புக் கட்டுப்பாடும் ஒரு காரணம்.. இப்போதெல்லாம் கல்யாணங்களில் கல்யாணத்தன்று மதிய விருந்தில் பதிர்பேணி இல்லாமல் இருப்பதில்லை.

      நீக்கு
    4. //பிடிக்கும் ஆனா சாப்பிட முடியாது...// வீட்டுல மத்தவங்களும் சாப்பிட முடியாதா? இல்லை என்னைப்போல் விருந்தினர்களுக்குப் பண்ணிக் கொடுக்கக்கூடாதா?

      நீக்கு
  13. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  14. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் வாழ்க வளமுடன் ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  15. ஜீரா போளி செய்முறை நன்றாக இருக்கிறது. படங்களும் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  16. ஜீரா போளி செய்முறை குறிப்பு நன்று. அடுத்த முறை தமிழகம் வரும்போது தான் சாப்பிட முடியும் என்று தோன்றுகிறது! :) இதை இங்கே செய்வதற்கு பொறுமை இல்லை.

    பதிலளிநீக்கு
  17. வணக்கம் ஸ்ரீராம் சகோதரரே

    இன்று பிறந்த நாள் காணும் தங்களுக்கு என் மனமுவந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். வாழ்வில் எல்லா நலன்களும் என்றென்றும் அமைய இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன். நன்றி.

    அன்புடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  18. ஸ்ரீராமுக்கு தித்திப்பான ஜீரா போளி வாழ்த்துக்கள், உங்களது இனிய பிறந்தநாளில் !

    பதிலளிநீக்கு
  19. போளி, போலித்தனம் இல்லாமல் அழகாக இருக்கிறது

    ஸ்ரீராம்ஜி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  20. ஸ்ரீராம் அவர்களுக்கு அன்பின் நல் வாழ்த்துக்கள்!..

    வாழ்க பல்லாண்டு..

    பதிலளிநீக்கு
  21. தித்திப்பான ஜீரா போளி அருமை..

    இந்த நினைப்புடன் ஆறுதல் கொள்ள வேண்டியது தான்..

    இனிப்பு சாப்பிடுவது உடலுக்கு ஒத்துக் கொள்வதில்லை..

    பதிலளிநீக்கு
  22. என் அம்மா அடிக்கடி செய்வார். எங்கள் பெரிய அக்கா, இரண்டாவது அக்கா திருமணங்களில் மாப்பிள்ளை அழைப்பின் பொழுது இதுதான் இலைக்கு போடப்பட்ட இனிப்பு. அதற்குப் பிறகு மங்களூர் போளி என்று மாறி விட்டது.

    பதிலளிநீக்கு
  23. இதற்கு ஜீரா என்ன பதம் என்ரு சொல்லவில்லையே? பிசுக்கு பதம்தானே?

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!